Sunday, November 20, 2011

அரசியல் படுகொலையும், அமெரிக்க கழுகின் வருகையும்


[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : பதின்மூன்று)


இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி, இது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள், ஆய்வுகள் வெளி வந்து விட்டன. சிங்கள, தமிழ் இனங்களுக்கு இடையிலான பிரச்சினையை மிக நுணுக்கமாக ஆராய்பவர்கள், காலனிய ஆட்சி ஏற்படுத்திய தாக்கத்தை அலட்சியப் படுத்துகின்றனர். குறிப்பாக, 1972 ம் ஆண்டு வரையில், ஆளுநர் என்னும் ஒருவர் பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதியாக அதியுயர் ஸ்தானத்தில் இருந்ததை மறந்து விடுகின்றனர். சுதந்திரத்திற்கு பின்னரான ஆளுநர் பதவியை, அதிகாரமற்ற ஜனாதிபதி பதவியுடன் ஒப்பிட்டுப் பேசுகின்றனர். அவ்வாறு ஒப்பிட்டுப் பார்ப்பது தவறானது. இலங்கையரால் ஆளப்படும் அரசு, பிரிட்டிஷ் காலனிய நலன்களை மீறாத வண்ணம் பார்த்துக் கொள்வதே ஆளுநரின் பொறுப்பு. அடுத்த பிரதமராக யார் வர வேண்டும், என்பதை தீர்மானிப்பதிலும், ஆளுநரின் பங்கு குறைத்து மதிக்கத் தக்கதல்ல. உதாரணத்திற்கு, முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயகாவின் மறைவின் பின்னர், சேர். ஜோன் கொத்தலாவல ஆட்சியைப் பிடிக்க பகீரதப் பிரயத்தனம் செய்தார். ஆனால், டி.எஸ். சேனநாயக்கவின் மகன் டட்லி ஆளுனரால் பிரதமராக்கப் பட்டார். இத்தனை செல்வாக்குப் பெற்ற ஆளுனரால், இனப்பிரச்சினையை தீர்க்க முடியாமல் போனது ஆச்சரியத்திற்கு உரியது.

டி.எஸ். சேனநாயக்க காலத்தில் நடந்த சிங்களக் குடியேற்றம். பண்டாரநாயக்க காலத்தில் கொண்டு வரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டம், மற்றும் முதலாவது இனக்கலவரம். எதிர்வரும் காலங்களில் பெரும் இரத்தக்களரியை ஏற்படுத்தப் போகும், இனப்பிரச்சினை குறித்து ஆளுநர் எத்தகைய கருத்தைக் கொண்டிருந்தார்? ஆளுநர் மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரசு கூட இவற்றைப் பற்றி எந்தக் கருத்தையும் தெரிவித்தாக நாம் அறியவில்லை. "இலங்கை அமைதிப் பூங்காவாக காட்சியளித்த" அதே காலத்தில், உலகில் பிற பாகங்களில் இருந்த பிரிட்டிஷ் காலனிகள் கொந்தளித்துக் கொண்டிருந்தன. மலேசியா, கென்யா, யேமன் போன்ற பிரிட்டிஷ் காலனிகளை சேர்ந்த மக்கள், சுதந்திரத்திற்காக இரத்தம் சிந்திப் போராட வேண்டியிருந்தது. பிரிட்டிஷ் இராணுவம், என்ன விலை கொடுத்தேனும், காலனிய எதிர்ப்பு சக்திகள் ஆட்சியைப் பிடிப்பதை தடுக்க நினைத்தது. இலங்கையிலும், சிங்களப் பேரினவாதிகள் தமக்கு எதிரானவர்கள் என்று, பிரிட்டிஷார் கருதியிருந்தால், எப்பாடு பட்டாகிலும் அவர்கள் ஆட்சிக்கு வருவதை தடுத்திருப்பார்கள். சிங்கள பேரினவாதத்தை தன்னோடு முரண் பட்ட சக்தியாக, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என்றைக்குமே கருதியது கிடையாது.

காலனிய காலத்திற்குப் பின்னரான சுதந்திர இலங்கையில், மதப் பழமைவாதிகளின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப் படவில்லை. மாறாக அது ஊக்குவிக்கப் பட்டது. இலங்கை அரசியலில், புத்த மதப் பிக்குகளின் செல்வாக்கு குறித்து, தமிழர்கள் அதிகமாகவே அறிந்து வைத்துள்ளனர். "இலங்கையில் பௌத்த மதமும், புத்த பிக்குகளும் தமிழரை அழிப்பதற்காக இனவெறி கொண்டு அலைவதாக," பாமரத் தமிழனும் கூறுகின்றான். இது சற்றே மிகைப் படுத்திய கூற்றாக இருந்த போதிலும், "ஒரு நாட்டில் மத-இனவாதத்திற்கும் அரசியல்- பொருளாதாரத்திற்கும் இடையிலான உறவு" குறித்து படித்த தமிழன் கூட பேசுவதில்லை. "சிங்களம் மட்டும் நாயகன்" பண்டாரநாயக்க கொலை செய்யப்பட்ட சம்பவத்தை, பௌத்த மதவெறியர்களின் செயலாக மட்டுமே பார்க்கின்றனர். பண்டாரநாயக்க கொலை குறித்து நடந்த விசாரணைகள் வேறொரு கோணத்தில் செல்கின்றன.

முதலில், அனைவராலும் ஊகிக்கப் பட்ட வெளிப்படையான காரணம் எதுவெனப் பார்ப்போம். பண்டாரநாயக்க பதவிக்கு வந்த பின்னர், பௌத்த மத சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. இதனால், ஒரு காலத்தில் பண்டாரநாயக்கவின் தேர்தல் வெற்றிக்கு உழைத்த பௌத்த சங்கங்கள், இப்போது அவரை "துரோகியாகப்" பார்த்தார்கள். பண்டாரநாயக்கவை சுட்டுக் கொன்ற புத்த பிக்கு கூட, "துரோகி அரசியலால்" மூளைச் சலவை செய்யப்பட்ட ஒருவர் தான். "துரோகியின் மரணமானது, கொள்கைப் படி நியாயமான ஒன்றாகவே" அவர் மனதிற்கு தோன்றியது. கொலைக் கருவியாக பயன்படுத்தப் பட்ட பிக்கு, அரசியல் தலையீடு காரணமாக விடுதலை செய்யப் பட்டு விடலாம் என்றே நம்பப் பட்டது. கொலைக் கருவியை அனுப்பிய சதிகாரர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன?

களனி, கொழும்பு நகருக்கு அருகில் உள்ளது. அங்குள்ள பௌத்த விகாரை, இலங்கை அரசியலில் கணிசமான செல்வாக்கை செலுத்துகின்றது. களனிய விகாரையின் தலைமை பீடாதிபதி மபித்தாகம புத்தராகித்த, காஞ்சி இந்து மத பீடாதிபதி சங்கராச்சாரியருடன் ஒப்பிடத் தக்கவர். இருவருக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் காணப் படுகின்றன. மத நம்பிக்கையாளர்கள் மத்தியில் நடமாடும் தெய்வமாக காட்டிக் கொள்வார்கள். பணம், பொருள், மங்கையர் தொடர்பு போன்ற இல்லற சுகங்களை இழக்க விரும்பாத "துறவிகள்". ஆட்சியாளர்களும் பாதத்தில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குமளவு அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள்.

களனி பீடாதிபதி புத்தராக்கித்த, வெளிப்படையாகவே முதலாளித்துவத்திற்கு சார்பாக வலதுசாரி அரசியல் பேசுவார். அவருடைய சொந்த நலன்களும் அதற்கு காரணம். பண்டாரநாயக்கவின் கட்சிக்கான ஆதரவை, பொருளாதார ஒப்பந்தங்களுக்கான நிபந்தனையாக பயன்படுத்திக் கொண்டார். அதிக வருமானம் தரும், கப்பல் போக்குவரத்து ஒன்றுக்கான ஏகபோக உரிமையை பெற்றுக் கொள்வதில் நாட்டம் காட்டினார். ஆனால், பண்டாரநாயக்க அதற்கு சம்மதிக்கவில்லை. இடதுசாரி அமைச்சர் பிலிப் குணவர்த்தன கொண்டு வந்த நில உச்சவரம்பு சட்டம் வேறு, மதவாதிகளின் ஆத்திரத்தை அதிகப் படுத்தியது. ஏனெனில், களனி விகாரைக்கு சொந்தமான பல காணிகள் அரசால் பறிக்கப் பட்டன.

களனி பீடாதிபதி, "வணக்கத்திற்குரிய" புத்தராக்கித்த, இலங்கை அரசாங்கத்தின் முடிவெடுக்கும் அதிகாரத்தில் பங்கு தருமாறு கேட்டுள்ளார். பண்டாரநாயக்க உட்பட பல அமைச்சர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அதே நேரத்தில், புத்தராக்கித்தவுக்கு அமைச்சர் ஒருவருடன் தொடர்பிருந்தது. பெண் அமைச்சர் விமலா விஜெரத்னவுக்கும், புத்தராக்கித்தவுக்கும் இடையில் நெருக்கமான, உடல் ரீதியான உறவு இருந்ததாக சந்தேகிக்கப் பட்டது. களனிய பீடாதிபதிக்கும், அமைச்சருக்கும் இடையிலான கள்ள உறவை அம்பலப் படுத்தும் துண்டுப் பிரசுரங்கள், மக்கள் மத்தியில் விநியோகிக்கப் பட்டன. அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, விமலா விஜேவர்த்தன, பண்டாரநாயக்கவை கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்து விட்டதாகவும் தெரிகின்றது. அதற்கு பழிவாங்குவதற்காக பண்டாரநாயக்க குடும்பம் பற்றிய அவதூறுகள் பரப்பப் பட்டன. அவை எல்லாம், விமலா- புத்தராகித்த கூட்டில் உருவான சதிகள் என்று நிரூபிக்கப் பட்டது மட்டுமல்ல, பாராளுமன்றத்திலும் விவாதிக்கப் பட்டது. இறுதியில் மூக்குடைபட்ட விமலா அவமானத்தில் வெளியேறினார். ஆகவே, தனிப்பட்ட குரோதம் காரணமாக, விமலாவும், புத்தராக்கித்தவும் கூட்டுச் சேர்ந்து, பண்டாரநாயக்கவை கொலை செய்ததாக விசாரணைக்குழு கண்டறிந்தது.

பண்டாரநாயக்கவின் கொலையில் சி.ஐ.ஏ. சம்பந்தப் பட்டிருப்பட்டிருந்ததாக, முன்னாள் அமெரிக்க உளவாளி எழுதிய நூலில் தெரிவித்துள்ளார். தெற்காசியாவில் சி.ஐ.ஏ. யினால் நெறிப்படுத்தப் பட்ட முதலாவது அரசியல் படுகொலை அதுவாக இருக்கலாம். பண்டாரநாயக்க கொலையில் சி.ஐ.ஏ. சம்பந்தப் பட்டிருப்பதற்கான காரணம் என்ன? பிரிட்டிஷாரால் சுதந்திரம் வழங்கப் பட்ட பின்னரும், காலனிய காலப் பொருளாதாரம் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்ததை முன்னர் பார்த்தோம். பண்டாரநாயக்க அரசாங்கத்தில் பல நிறுவனங்கள் தேசியமயமாக்கப் பட்டன. மேலும், இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையிலும் பெருமளவு மாற்றம் ஏற்பட்டது. பிரிட்டனிலும், அமெரிக்காவில் தங்கியிருந்த மேற்கத்திய சார்பு நாடான இலங்கை, பிற நண்பர்களை தேடத் தொடங்கியது. பனிப்போர் எதிராளிகளான ரஷ்யா, சீனா மற்றும் பல சோஷலிச நாடுகளுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டது. பண்டாரநாயக்கவை சி.ஐ.ஏ. குறி வைப்பதற்கு இவ்வளவு காரணங்கள் போதுமே.

சர்வதேச அரங்கில் ஏற்படும் மாற்றங்களும், இலங்கையை பாதித்து வந்துள்ளன. பண்டரநாயக்காவின் மறைவுக்குப் பின்னர், அவரது விதவை சிறிமாவோ பிரதமரானார். சிறிமாவின் அரசாங்கத்திற்கு இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு அளித்ததால், இலங்கை மென்மேலும் ரஷ்யா, சீனா நோக்கி நகர்ந்தது. இந்தியாவில் நேருவும், அவரது புதல்வி இந்திராவும் அணிசேரா கொள்கைகளுடன் ஆட்சி நடத்தியதால், இந்தியாவுடனும் நெருக்கம் அதிகரித்தது. சுருங்கக் கூறின், பனிப்போர் காலகட்டத்தில், இந்தியாவும், இலங்கையும் சோவியத் யூனியன் பக்கம் நின்றன. இந்த நெருக்கம் காரணமாக, புதிய அரசியல் நிர்ணய சட்டம் இயற்றப் பட்டு, இலங்கை குடியரசானது. எஞ்சியிருந்த பிரிட்டனின் காலனிய ஆதிக்கமும் முடிவுக்கு வந்தது.

1977 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல், இலங்கை வரலாற்றில் மீண்டும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள், சிங்கள பேரினவாதக் கருத்துகளை உதிர்ப்பதில் பண்டாரநாயக்கவுடன் போட்டி போட்ட, ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சியைக் கைப்பற்றினார். அவர் இலங்கையை மீண்டும் மேற்குலக சார்பான நாடாக மாற்றினார். இந்திய கரையோரமாக, சிலாபத்தில் "வொய்ஸ் ஒப் அமெரிக்கா" தொலைத் தொடர்பு நிலையம் அமைப்பதற்கு இடம் கொடுத்தார். இன்றைக்கு இலங்கையில் சீனாவின் பிரசன்னம், இந்தியாவில் அதிர்வலைகளை தொற்றுவிப்பதைப் போன்று தான் அன்றைக்கும் நடந்தது. (சோவியத் சார்பு) இந்தியாவை உளவு பார்ப்பதற்காக, அமெரிக்கா அந்த தொலைத் தொடர்பு நிலையம் அமைப்பதாக சந்தேகங்கள் எழுப்பப் பட்டன.

ஒரு சில வருடங்களின் பின்னர், பனிப்போரின் பதிலிப் போர் ஒன்று இலங்கையில் ஆரம்பமாகியது. "தமிழீழம் அடைவதற்காக ஆயுதப்போராட்டம் நடத்துகிறோம்," என்று கூறிய தமிழ் இயக்கங்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப் பட்டது. அமெரிக்க சார்பான ஜே.ஆர். அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி, இந்தியா பக்கம் இழுக்கும் நோக்குடன், தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு இந்தியா உதவி செய்தது. அவர்களுக்கு தேவையான நிதியும், ஆயுதங்களும் தாராளமாகக் கிடைத்தன. 1977 ல், ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்., "போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம்." என்று கூவி, தமிழரை போருக்கு அழைத்திருந்தார். அதுவரை காலமும் நேரடிப் போரில் ஈடுபட்டிராத இலங்கை இராணுவத்திற்கு,SAS என்ற பிரிட்டிஷ் கூலிப்படையினர் பயிற்சி கொடுத்தனர். ஜே.ஆரின் மகன் தலைமையில், பிரிட்டனில் இருப்பதைப் போன்ற சிறப்புப் படையணியும் (STF) உருவாக்கப் பட்டது.

அமெரிக்காவின் ஆசியுடன், இஸ்ரேல் இராணுவ ஆலோசனைகளை வழங்கியது. "பத்து தமிழர்களைக் கொன்றால், அதில் ஒருவன் போராளியாக இருப்பான்." என்று இஸ்ரேல் வழங்கிய ஆலோசனை பிரபலமானது. அதாவது, "தமிழர்களை இனப்படுகொலை செய்தாகிலும், போராளிக் குழுக்களை அழித்து விடுமாறு...", புதிதாக இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய இஸ்ரேல் அப்போதே போதித்திருந்தது. சிங்கள பேரினவாதிகளுக்கும், காலனிய ஆதிக்கவாதிகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவு, குறைந்தது ஒரு இலட்சம் தமிழ் மக்களின் உயிர்களைப் பறித்து விட்டது. இருந்த போதிலும், இன்றைக்கும் தமிழர்கள் மேற்கத்திய நாடுகளை மீட்பர்களாக கருதிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஈன்றெடுத்த இரட்டைக் குழந்தைகளான, சிங்களப் பேரினவாதமும், தமிழ் குறுந் தேசியவாதமும் மக்களை வேறெப்படி வழி நடத்திச் செல்வார்கள்?

(முற்றும்)



இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
12. 1958 இனக்கலவரம் - இனப் பிரிவினையின் ஆரம்பம்
11. "ஸ்ரீ" : இன முரண்பாட்டுக்கு காரணமான ஓர் எழுத்து!
10. இலங்கையின் "இனப் பிரபுத்துவ" சமுதாயக் கட்டமைப்பு
9. "சிங்கள-தமிழ் தேசியவாதம்" அல்லது "பண்டா-செல்வா சித்தாந்தம்"
8. கம்யூனிசத்தை கருவறுத்த சிங்கள மறுமலர்ச்சி
7. அரிசி வேண்டுமா? அல்லது "சிங்களம் மட்டும்" வேண்டுமா?
6. ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு
5. ஆங்கிலேயர் புறக்கணித்த "சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"
4. மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி
3. உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி
2. பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்
1. சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்

5 comments:

அம்பலத்தார் said...

வணக்கம், எமது நாட்டின் வரலாற்றை மறைக்கப்பட்ட விடயங்களையும் மறைக்காமல் பதிவிட்டதற்கு நன்றிகள்.

Mohamed Faaique said...

சிரீமா பண்டாரனாயக்க காலத்தில் மிகப் பெரிய பஞ்சம் வந்ததும், மக்கள் உண்ண உணவில்லாமல் அவதிப்பட்டதையும் ஏன் சொல்லவில்லை. சின்ன வயசில் அரசல் புரசலாக கேள்விப் பட்டு இருக்கிறேன். உங்களிடமிருந்து விரிவான செய்திகளை எதிர் பார்த்திருந்தேன்.

Kalaiyarasan said...

//சிரீமா பண்டாரனாயக்க காலத்தில் மிகப் பெரிய பஞ்சம் வந்ததும், மக்கள் உண்ண உணவில்லாமல் அவதிப்பட்டதையும் ஏன் சொல்லவில்லை.//

இந்தக் கட்டுரையின் நோக்கம் சிறிமா காலத்தை ஆய்வு செய்வதல்ல. பிரிட்டிஷ் காலனியாகவிருந்த இலங்கையில் ஏற்பட்ட மாற்றங்கள். அவற்றை உள்ளூர் ஆளும் வர்க்கமும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் எவ்வாறு எதிர்கொண்டன, என்பதைப் பேசுவது தான் கட்டுரையின் குறிக்கோள்.

naren said...

இந்த பதிமூன்று பகுதி, செய்திகள், சம்பவங்களை நேர்த்தியாக முன்வைத்து அது ஏன் எதற்காக நடந்தது அதன் தாக்கங்களை புரியவைத்தது.

தமிழ் நாட்டில் இதற்கு முன் வெகுஜன பத்திரிக்கைகளில் வந்த தொடர்கள், இப்பொழுது செய்யும் பிரச்சாரங்கள் எல்லாம், பிரச்சனகளை கருப்பு வெள்ளையாக காட்ட முயற்ச்சிக்கின்றன. நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற முறையில்.

இந்த தொடர் இலங்கை பிரச்சனையை தெளிவுப்படுத்தும். அந்த பிரச்சனையில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் படித்து சிந்தித்து செயலாற்ற வேண்டிய உதவிக்கு வரும் தொடர்.

தொடர் பதிவிற்கு நன்றி.

ashok said...

eye opening post..