Wednesday, October 09, 2019

ஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்


புதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம், நெதர்லாந்தில் சைஸ்ட் (Zeist) எனும் இடத்தில், 5-10-2019 அன்று திரையிடப் பட்டது. கிட்டத்தட்ட ஐம்பது பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். படம் அனைவரையும் கவர்ந்தது. பார்த்தவர்கள் பாராட்டினார்கள். இது போன்ற திரைப்படம் இதற்கு முன்னர் வந்ததில்லை என்பதே எல்லோருடைய கருத்துமாக இருந்தது. குறிப்பாக கதாநாயகனாக வரும் புதியவன் ராசையா, தனது அபாரமான நடிப்பாற்றல் மூலம் சுந்தரம் என்ற பாத்திரமாகவே மாறிவிட்டிருந்தார்.


2009 ம் ஆண்டு இறுதிப் போரின் முடிவுடன் படம் தொடங்குகிறது. ஒரு போர்க்களத்தில் புலிகள் இயக்க போராளிகள் கொல்லப் பட்ட பின்னர் தனித்து நிற்கும் கஸ்தூரி எனும் பெண் போராளியுடன் கதை தொடங்குகிறது. தற்செயலாக அந்த இடத்திற்கு வரும் சுந்தரம் (புதியவன் ராசையா) அவரை தனது மனைவி என்று சொல்லி கூட்டிச் சென்று இராணுவத்திடம் சரணடைகின்றனர். கூடவே அஜாதிக்கா என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளை்யை சுந்தரம் தனது மகள் என்று சொல்லி கூட்டிக் கொண்டு வருகிறார். (படத்தில் அஜாதிக்கா பாத்திரத்தில் நடித்திருப்பவர் டைரக்டரின் சொந்த மகள்.) இந்த மூவரும் ஒரே குடும்பமாக புனர்வாழ்வு முகாமில் இருந்து வெளியே வருகிறார்கள்.

இந்தத் தொடக்கக் காட்சிகள், முன்னர் வெளிவந்த தீபன் திரைப்படத்தை நினைவுபடுத்தின. அதுவும் போரினால் பாதிக்கப்பட்ட முன்பின் தெரியாத மூன்று மனிதர்கள் குடும்பமாக ஒன்று சேரும் கதை தான். ஆனால், இரண்டுக்கும் இடையில் வித்தியாசமும் உள்ளது. தீபன் திரைப்படம் ஐரோப்பிய அகதி வாழ்வின் அவலத்தை பேசுகின்றது. அதற்கு மாறாக ஒற்றைப் பனைமரம் வன்னியில் தங்கிவிட்ட அகதிகளின் வாழ்வில் நடக்கும் அவலங்களை பற்றிப் பேசுகின்றது.

போர் முடிந்த பின்னர், யாழ்ப்பாண சமூகத்தில் முன்னாள் போராளிகள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு ஒற்றைப் பனைமரம் முக்கியத்துவம் கொடுக்கிறது. இது அங்குள்ள சமூக யதார்த்தம். இந்த உண்மை பலரது முகத்தில் அறைந்து முகமூடிகளை கிழித்துள்ளது. இல்லாவிட்டால் இந்தத் திரைப்படத்திற்கு நிறைய இடங்களில் இருந்து எதிர்ப்புக் கிளம்பி இருக்குமா?

நெதர்லாந்திலும் இந்தப் படம் திரையிடப் படுவதை சிலர் தடுத்தார்கள். "தேசியத்திற்கு எதிரான படம்" என்று காரணம் சொன்னார்கள். ஆனால், படத்தில் அப்படி எந்த "தேசிய எதிர்ப்பையும்" காணவில்லை. படத்தில் சொல்லப் படும் உண்மைகள் சிலருக்கு கசப்பானதாக இருக்கலாம். சம்பவங்கள், பாத்திரங்கள், காட்சிகள், வசனங்கள் எதுவுமே கற்பனை அல்ல. நிஜத்தில் நடந்தவை தான். ஒருவேளை கொஞ்சம் பிசகினாலும் ஆவணப்படமாக வந்திருக்கும். அப்படி நடக்காமல், எல்லோரும் பார்த்து இரசிக்கும் வகையில் படத்தை தயாரித்து வெளியிட்ட டைரக்டருக்கு பாராட்டுக்கள்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரையில், முன்னாள் போராளிகளின் அவலங்களும், வறுமையின் கொடுமையும் சிறப்பாக எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. ஏழை, எளியவர்களை சுற்றியே கதை பின்னப் பட்டுள்ளது. உதாரணமாக, தனது இரண்டு பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் பாலியல் தொழிலுக்கு சம்மதிக்கும் விமலா என்ற இளம் தாய். லண்டனில் இருந்து வந்த தமிழ்ப் பணக்காரனின் காமவெறிக்கு பலியாகி தற்கொலை செய்து கொள்ள சென்ற அவலம். இவை இரக்கமற்ற வர்க்க பேதமுள்ள சமூகத்தில் நடக்கும் கொடுமைகள்.

விமலா போன்ற அபலைகள் வாழ்வதைக் கூட ஏற்றுக் கொள்ள விரும்பாத அயோக்கியர்கள் எம்மத்தியில் உள்ளனர். அப்படியானவர்கள், படத்தில் அந்த இளம் பெண்ணை சீரழித்த லண்டன் பணக்காரன் போன்ற கொடியவர்களை மறைத்து வைப்பார்கள். ஒற்றைப் பனைமரம் திரைப்படம் இது போன்ற அயோக்கியர்களின் இரட்டை வேடங்களை தோலுரித்துக் காட்டுகின்றது. அதே நேரம், நிஜ உலகில் இந்தத் திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டத்தினரும் அப்படியான மனிதர்கள் தான்.

திரைப்படம் பேசும் அரசியல் மிக முக்கியமானது. சுருக்கமாக சொன்னால், இதுவும் ஒரு விடுதலைப் போராட்டக் கதை தான். கடந்த கால போராட்டத்தில் நடந்த தவறுகளை திருத்தி, சரியான வழியில் கொண்டு செல்வதைப் பற்றிப் பேசுகின்றது. இந்தத் திரைப்படத்தில் கடந்த கால அரசியல் விமர்சிக்கப் படுகிறது. அதே நேரம் நிகழ்கால அரசியல் பிரச்சினைகளையும், அவற்றிற்கான தீர்வுகளையும் ஆணித்தரமாக முன்வைக்கிறது. எதிர்கால அரசியலை தீர்மானிப்பது பார்வையாளர்களான எமது கைகளில் உள்ளது.

இந்தத் திரைப்படம் ஈழப்போரில் சம்பந்தப் பட்ட அனைத்து தரப்பினரையும் விமர்சிக்கிறது. அந்த விமர்சனம் ஊடாக தீர்வுகளை தேடுகிறது. உதாரணத்திற்கு, தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகள் முஸ்லிம் மக்களை வெளியேற்றிய வரலாறு ஒரு சில காட்சிகளில் நிகழ்த்திக் காண்பிக்கப் படுகிறது. அதை முன்னாள் புலிப் போராளியான கஸ்தூரிக்கு, அவளது இஸ்லாமிய நண்பி சொல்வதைப் போன்று காட்சி அமைக்கப் பட்டுள்ளது. அதைக் கேட்டு வருத்தப்படும் கஸ்தூரி மன்னிப்புக் கோருகிறாள். இன்னொரு காட்சியில், மாற்று இயக்கம் ஒன்றை சேர்ந்த சுந்தரம் புலிகளால் சித்திரவதை செய்யப் பட்ட கதையை கஸ்தூரி வாயால் சொல்ல வைக்கிறது.

இறுதிப்போருக்கு முன்பிருந்த, புலிகள், மாற்று இயக்கத்தினர், முஸ்லிம்கள் போன்ற அடையாளங்கள் இங்கே களையப் படுகின்றன. தற்போது அவர்கள் ஒரே வர்க்கமாக ஒன்று சேர்ந்து புதிய அடையாளத்தை தேடுகிறார்கள். இது தான் படக் கதை கூறும் அரசியலின் சாராம்சம். வர்க்க அரசியலின் தாக்கம் பல காட்சிகளில் பிரதிபலிக்கிறது.

பிரான்சில் இருந்து வந்தவர் முன்னாள் போராளிக்கு உதவி செய்வதாக காட்டி போட்டோ எடுக்க முயற்சிக்கிறார். இதைக் கண்டவுடன் அந்த உதவியை மறுக்கும் முன்னாள் போராளியான கஸ்தூரி, ஏழைகளாக இருந்தாலும் தன்மானம் உள்ளவர்கள் என்பதை நிரூபிக்கிறார். அதே மாதிரி, முன்னாள் போராளி என்ற ஒரே காரணத்திற்காக வேலைக்கு சேர்க்க மறுக்கும் புடவைக்கடை உரிமையாளர் உதவிக்கு கொடுத்த பணத்தையும் வாங்க மறுக்கிறாள்.

ஒரு மலையகத் தமிழ்ப் பெண்ணான கஸ்தூரியின் குடும்பத்தினர், லண்டன் பணக்காரனின் காணிக்குள் கொட்டில் கட்டி வாழ்ந்தவர்கள். தற்போது லண்டனில் இருந்து திரும்பி வந்து வீட்டை விட்டு வெளியேறச் சொல்லும் உரிமையாளரை "வெளியே போடா!" என்று சொல்லும் தைரியம் வரக் காரணம், கஸ்தூரியின் கடந்த கால போராளி வாழ்க்கை தான். அன்று நடந்தது வெறுமனே தமிழீழத்திற்கான போராட்டம் மட்டுமல்ல. ஏழைக் குடும்பங்களில் இருந்து சென்ற போராளிகளுக்கு, அதுவே வர்க்கப் போராட்டமாகவும் இருந்துள்ளது.

முன்னாள் போராளிகள் சிலர் பணக்காரர்களின் அடியாட்களாக வேலை செய்கிறார்கள். லண்டனில் இருந்து வந்த பணக்காரனின் வீட்டில் தான் முன்னாள் போராளி கஸ்தூரி குடியிருக்கிறாள். அவளை வெளியேற்ற அனுப்பிய அடியாட்கள் கஸ்தூரியின் பேச்சால் மனம் திருந்தி சுந்தரத்தின் அரசியலை ஏற்றுக் கொள்கிறார்கள். கஸ்தூரி அவர்களை புலிகள் இயக்கத்தின் நற்பண்புகளை சொல்லி திருத்துவதாக காட்சி அமைந்துள்ளது. ஆனால், சுந்தரத்தின் அரசியலுடன் ஒன்று சேர்வதற்கு வர்க்க உணர்வு அவசியம்.

லண்டனில் புலிகளுக்காக காசு சேர்த்து பணத்தை பதுக்கியவர், இலங்கை வந்த நேரம் தனது சொந்த நலனுக்காக சிங்களப் புலனாய்வுத் துறையினருடன் கூட்டுச் சேர்கிறார். பணம் இனபேதம் பார்ப்பதில்லை. பணம் இருக்கும் இடத்தில் அதிகாரமும் கூட்டுச் சேரும். கள்ளுக் கடையில் அரசியல் பேசிய சுந்தரத்தை சிறிலங்கா அரச புலனாய்வுத்துறையினர் கடத்திச் சென்று சித்திரவதை செய்ய வேண்டிய காரணம் என்ன?

ஈழத்தில் இப்போதும் ஒரு விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. வர்க்க அடிப்படையில் புதிய நண்பர்கள் கூட்டுச் சேர்கிறார்கள். புதிய எதிரிகள் உருவாகிறார்கள். கூடவே துரோகிகளும் இருக்கிறார்கள். ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்பது பற்றி இந்த சமூகம் அக்கறை படுவதில்லை. அவர்கள் முன்னாள் புலிப் போராளிகளாக இருந்தாலும் கழிவிரக்கம் கொள்வதில்லை.

படத்தின் தொடக்கத்தில் கஸ்தூரி கேட்கிறாள்: "எம்மைப் பற்றி சனம் கேவலமாக பேசுவதை கேட்கும் பொழுது, இந்த மக்களுக்காகவா இவ்வளவு காலமும் போராடினோம் என்ற வெறுப்பு ஏற்படுகிறது." அதே கஸ்தூரி படத்தின் முடிவில் சொல்கிறாள்: "சாப்பிடுவதற்கு மட்டும் தான் வாய் திறக்க வேண்டும் என்றால், எங்களுக்கும் மாடுகளுக்கும் என்ன வித்தியாசம்?" திரைப்படத்தில் பேசப்படும் வசனங்கள் கூரான அம்புகளாக இதயத்தை துளைக்கின்றன.

எந்தத் தலைமையையும் எதிர்பாராமல் மக்கள் தங்களது பிரச்சினைகளுக்காக ஒன்று திரண்டு போராடக் கிளம்பினால்....? ஒற்றைப் பனைமரம் தோப்பாகுமா? இது ஒரு பொழுதுபோக்கு திரைப் படம் அல்ல. இந்தத் திரைப்படம் பன்முகத்தன்மை கொண்ட விமர்சனங்களுக்கு உட்படுத்தப் பட வேண்டும். அதற்கு முதலில் ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்ட அரசியல், சமூக ஆர்வலர்கள் அனைவரும் இந்தத் திரைப் படத்தைப் பார்க்க வேண்டும்.

1 comment:

Prithiviraj kulasinghan said...

நான் இந்தப் படத்தை இன்னமும் பார்க்கவில்லை.
உங்கள் குறிப்பிலிருந்து பதில்

படத்தின் தொடக்கத்தில் கஸ்தூரி கேட்கிறாள்: "எம்மைப் பற்றி சனம் கேவலமாக பேசுவதை கேட்கும் பொழுது, இந்த மக்களுக்காகவா இவ்வளவு காலமும் போராடினோம் என்ற வெறுப்பு ஏற்படுகிறது."

கஸ்தூரி என்ன உணர்வுடன் போராடினார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் போராட்டத் தலைமை மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கவில்லை. மக்கள் மந்தைகளாகவே நடத்தப்பட்டார்கள். என்வே யுத்த முடிவில் புலிகளின் ஆயுதம் மௌனிக்கப்பட்ட போது மக்கள் தம் மீது இருத்தப்பட்ட அடக்குமுறைக்குப் பதில் சொன்னார்கள். துரதிஷ்ட வசமாக தலைமை இல்லாத நிலையில் கஸ்தூரி மக்களின் கோபத்தை சந்திப்பவராக இருந்தார். (பின்னர் அரசின் நடவடிக்கைகளால் புலிகளே பரவாயில்லை என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டது வேறு கதை)


அதே கஸ்தூரி படத்தின் முடிவில் சொல்கிறாள்: "சாப்பிடுவதற்கு மட்டும் தான் வாய் திறக்க வேண்டும் என்றால், எங்களுக்கும் மாடுகளுக்கும் என்ன வித்தியாசம்?" திரைப்படத்தில் பேசப்படும் வசனங்கள் கூரான அம்புகளாக இதயத்தை துளைக்கின்றன.

1986ல் (அதற்கு முன்னரே இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து விட்டது.) மாற்று இயக்கங்கள் மௌனிக்க வைக்கப்பட்ட போது அவர்களுடன் சேர்ந்து மாற்றுக் கருத்துகளும் மௌனிக்க வைக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் (விஜிதரன் போராட்டம் என்றழைக்கப்பட்ட) போராட்டமும் அதன் முடிவும், அதில் ஈடுபட்ட தலைவர்கள் தலைமறைவாகவேண்டிய சூழல், பின்னர் ராஜினி திராணகம உட்பட பலர் கொல்லப்பட்டமை, புத்தகக் கடை மணியம், இடதுசாரிகளாக அண்ணாமலை, விஜயரத்தினம், கவிஞர் செல்வி ஆகியோருக்கு நடந்தவை, வடமராட்சியில் இயங்கிய அரசியல் சாராத ஒடுக்கப்பட்ட மக்களின் குரலான அநீதி ஒழிப்பு ஒன்றியம் மீதான தடை, பத்திரிகைகள் மீது புலிகள் விதித்த கெடுபிடிகள் என்பன இவற்றில் சில. அந்தக் காலத்தில் புலிகளால் சொல்லப்பட்ட சில வார்த்தைகளில் ஒன்று: "உங்களுக்கு வாய் இருப்பது சாப்பிடுவதற்கு" இப்போது அவர்கள் வளர்த்த அரசியல் கலாச்சாரத்திற்கு அவர்களே பலியாக நேர்ந்துள்ளது.

இயக்கத்தில் இருந்து வந்தவர்களில் பலர் தற்கொலை செய்ய நேர்ந்ததற்கும் தமது வாழ்வை மீளத் தொடங்குவதில் ஏற்பட்ட கஷ்டங்களிற்கும், மக்கள் அவர்கள் மீது அனுதாபமாக நடந்து கொள்ளாத தன்மைக்கும் இதுவும் ஒரு காரணம்.

இதை நான் எழுதுவது புலிகள் மீதான காழ்ப்புணர்வாலோ, அல்லது அவர்கள் துன்பமனுபவிக்கையில் அதில் சந்தோஷப்படும் மன நோயாலோ அல்ல. இது போன்ற ஒரு படிப்பினை உலகம் முழுவதற்கும் அவசியம் என்பதால்.