Showing posts with label மக்கள் எழுச்சி. Show all posts
Showing posts with label மக்கள் எழுச்சி. Show all posts

Wednesday, October 23, 2019

சிலி மக்க‌ள் புர‌ட்சி - க‌ம்யூனிச‌ம் 2.0


தென் அமெரிக்காவில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் பொருளாதார‌த்தையும், பெரும‌ள‌வு ப‌டித்த‌ ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ இள‌ம் த‌லைமுறையின‌ரையும் கொண்டுள்ள சிலி, முன்னொருபோதும் இல்லாத‌வாறு க‌ல‌வ‌ர‌ பூமியாக காட்சிய‌ளிக்கிற‌து. ஒரு மெட்ரோ ர‌யில், 16 பேருந்து வ‌ண்டிக‌ள் கொழுந்து விட்டு எரிந்த‌ன‌. ப‌த்துக்கும் குறையாத‌ சூப்ப‌ர் மார்க்கெட்க‌ள், ம‌ருந்துக் க‌டைக‌ள் சூறையாட‌ப் ப‌ட்ட‌ன‌. க‌ல‌வ‌ர‌த்திற்குள் அக‌ப்ப‌ட்டு ப‌தினொரு பேர் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

சிலி ஜ‌னாதிப‌தி செப‌ஸ்டியான் பிஞேரா "நாம் ஒரு யுத்த‌த்தில் ஈடுப‌ட்டிருக்கிறோம்" என‌ அறிவித்துள்ளார். "ஒரு ப‌ல‌மான‌, இண‌க்க‌மாக‌ போக‌ முடியாத‌, எவ‌ரையும் மதிக்காத‌, வ‌ன்முறை பிர‌யோகிக்க‌த் த‌ய‌ங்காத‌ எதிரியுட‌ன்" இந்த‌ யுத்த‌ம் நட‌ப்ப‌தாக‌ தெரிவித்துள்ளார்.

சிலியில் ந‌ட‌ந்த இராணுவ‌ ச‌ர்வாதிகார‌ கால‌க‌ட்ட‌த்திற்குப் (1973 - 1990) பின்ன‌ர், முத‌ல் த‌ட‌வையாக‌ இராணுவ‌ம் வீதிக‌ளில் ரோந்து சுற்றுகிற‌து. த‌லைந‌க‌ர் சான்டியாகோ உட்ப‌ட‌ எட்டு ந‌க‌ர‌ங்க‌ளில் ஊர‌ட‌ங்கு ச‌ட்ட‌ம் பிற‌ப்பிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. இது வ‌ரை 1500 பேர் கைது செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர்.

யார் இந்த‌ பிஞேரா? எழுப‌துக‌ளில், ச‌ர்வாதிகாரி பினோச்சேயின் ஆட்சிக் கால‌த்தில் சிலியில் கிரெடிட் கார்ட் முறையை அறிமுக‌ப் ப‌டுத்திய‌த‌ன் மூல‌ம் கோடி கோடியாக‌ ப‌ண‌ம் ச‌ம்பாதித்த‌வ‌ர். அதாவ‌து, பினோச்சே கால‌த்தில் வ‌ந்த‌ ந‌வ‌- தாராள‌வாத‌ பொருளாதார‌க் கொள்கையால் ப‌ல‌ன‌டைந்த‌ கோடீஸ்வ‌ர‌ன். அப்ப‌டியான‌ ஒருவ‌ர் சொந்த‌ நாட்டு ம‌க்க‌ள் மீதே யுத்தப் பிர‌க‌ட‌ன‌ம் செய்த‌தில் என்ன‌ ஆச்ச‌ரிய‌ம் இருக்கிற‌து? ஜ‌ன‌நாய‌க‌ ஆட்சி ந‌ட‌ந்தாலும், பாசிச‌ சர்வாதிகார‌ ஆட்சி ந‌ட‌ந்தாலும் ப‌ண‌க்கார‌ வ‌ர்க்க‌த்தின் ந‌ல‌னுக்காக‌வே அர‌சு இய‌ங்குகிற‌து.

இந்த‌ ம‌க்க‌ள் எழுச்சிக்கு நேர‌டிக் கார‌ண‌ம், அரசு கொண்டு வ‌ந்த‌ மெட்ரோ ர‌யில் டிக்க‌ட் விலை அதிக‌ரிப்பு. பிற‌ தென் அமெரிக்க‌ நாடுக‌ளுட‌ன் ஒப்பிடும் பொழுது சிலியில் மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் அதிக‌ம். ஆனால் மாத‌ வ‌ருமான‌த்தில் ஐந்தில் ஒரு ப‌ங்கு போக்குவ‌ர‌த்து செல‌வுக‌ளுக்கு சென்று விடுகிற‌து.

குறிப்பாக‌ பொதுப் போக்குவ‌ர‌த்தை ந‌ம்பியிருக்கும் மாண‌வ‌ர்க‌ள் வெகுண்டெழுந்து இல‌வ‌ச‌மாக‌ ப‌ய‌ண‌ம் செய்ய‌த் தொட‌ங்கினார்க‌ள். மெட்ரோ நிலைய‌ டிக்க‌ட் மெஷின், த‌டைக் க‌ம்ப‌ங்க‌ளை அடித்து நொறுக்கினார்க‌ள்.

மெட்ரோ டிக்க‌ட் விலை உய‌ர்வை மீள‌ப் பெறுவ‌தாக‌ ஜ‌னாதிப‌தி பிஞேரா அறிவித்தும் க‌ல‌வ‌ர‌ம் அட‌ங்க‌வில்லை. அத‌ற்குக் கார‌ண‌ம் ப‌ண‌க்கார‌ர்க‌ளுக்கும் ஏழைக‌ளுக்கும் இடையிலான‌ ஏற்ற‌த்தாழ்வு ம‌ட்டும‌ல்ல‌. மிகப் ப‌ல‌மான‌ இட‌துசாரி க‌ட்சிக‌ளால், ந‌ன்றாக‌ அர‌சிய‌ல்ம‌ய‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌ இள‌ம் த‌லைமுறையின‌ர் எந்த‌ வித‌ ச‌ம‌ர‌ச‌த்திற்கும் த‌யாராக‌ இல்லை.

நிச்ச‌ய‌மாக‌, சிலி அர‌சுக்கு இது ஒரு இக்க‌ட்டான‌ கால‌ க‌ட்ட‌ம். அடுத்த‌ மாத‌ம் Apec நாடுக‌ளின் உச்சி ம‌காநாடு ந‌ட‌க்க‌வுள்ள‌து. அமெரிக்க‌ அதிப‌ர் டிர‌ம்ப், சீன‌ அதிப‌ர் ஸிஜின்பிங் உட்ப‌ட‌ ப‌ல‌ உல‌க‌ நாடுக‌ளின் த‌லைவ‌ர்க‌ள் சிலிக்கு வ‌ர‌ இருக்கிறார்க‌ள். அத‌ற்குள் நிலைமையை க‌ட்டுப்பாட்டுக்குள் கொண்டு வ‌ருவ‌து முடியாத காரியம். ஏனெனில் இது ஒரு தெளிவான இலட்சியத்துடன் தானாக சேர்ந்த கூட்டம். 

எத‌ற்காக‌ இழ‌ப்ப‌த‌ற்கு எதுவும‌ற்ற‌ ஏழைக‌ள் ம‌ட்டும‌ல்லாது, ஓர‌ள‌வு வச‌தியான‌ ம‌த்திய‌த‌ர‌வ‌ர்க்க‌ இளைஞ‌ர்க‌ளும் வ‌ன்முறைப் போராட்ட‌ங்க‌ளில் ஈடுப‌டுகிறார்க‌ள்?

1973 ல் நட‌ந்த‌ இராணுவ‌ ச‌திப்புர‌ட்சிக்குப் பின்ன‌ர் சிலி ந‌வ‌- தாராள‌வாத பொருளாதார‌க் கொள்கையின் ப‌ரிசோத‌னைச் சாலையாக‌ க‌ருத‌ப் ப‌ட்ட‌து. பொருளாதார‌ம் நூறு ச‌த‌வீத‌ம் த‌னியார்ம‌ய‌ப் படுத்த‌ப் ப‌ட்ட‌து. பொருட்க‌ளின் விலைக‌ள் மிக‌ அதிக‌ம். ஆனால் செல‌விடுவ‌த‌ற்காக‌ ம‌க்க‌ளின் கையிருப்பில் ப‌ண‌ம் இல்லை. சுருக்கமாக, வாழ்க்கைத்தரம் உயர்ந்து இருந்தாலும், மக்களின் வாங்கும் திறன் குறைவு. க‌ல்வி, ம‌ருத்துவ‌ செல‌வுக‌ள் ஏழைக‌ளால் நினைத்துப் பார்க்க‌ முடியாத‌ அள‌வு அதிக‌ம். வ‌ச‌தி இல்லாத‌வ‌ர்க‌ள் க‌ட‌ன் வாங்க‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம்.

ந‌வ‌- தாராள‌வாத‌ ப‌ரிசோத‌னைச் சாலையில் பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் தான் இன்று முத‌லாளித்துவ‌த்திற்கு எதிராக‌ திரும்பி உள்ள‌ன‌ர். இந்த‌ இளைஞ‌ர்க‌ள் ம‌த்தியில் ந‌வ‌- தாராள‌வாத‌ம் என்ற‌ சொல் ஒரு கெட்ட‌ வார்த்தை போன்று க‌ருத‌ப் ப‌டுகின்ற‌து.

முன்பு இராணுவ‌ ச‌ர்வாதிகார‌ ஆட்சியில் ந‌ட‌ந்த‌ இன‌ப்ப‌டுகொலையில், க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி உறுப்பினர்க‌ள், ஆத‌ர‌வாள‌ர்க‌ள் அனைவ‌ரும் ஒருவ‌ர் விடாம‌ல் தேடி அழிக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். பாசிச‌ ஆட்சியாள‌ர்க‌ள் கம்யூனிச‌த்தை வேரோடு பிடுங்கி அழித்து விட்ட‌தாக‌ இறுமாப்புட‌ன் இருந்த‌ன‌ர்.

ப‌னிப்போர் முடிவில், "க‌ம்யூனிச‌ம் இற‌ந்து விட்ட‌து" என்ற‌ ந‌ம்பிக்கை ஏற்ப‌ட்ட‌ பின்ன‌ர், 1990 ம் ஆண்டு ஜ‌ன‌நாய‌க‌ம் மீட்க‌ப் ப‌ட்ட‌து. அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் இய‌ங்க‌ அனும‌திக்க‌ப் ப‌ட்ட‌து. பொதுத் தேர்த‌ல் ந‌ட‌ந்த‌ன‌. அதே நேர‌ம், சாம்ப‌லில் இருந்து உயிர்த்தெழுந்த‌ பீனிக்ஸ் ப‌ற‌வை போல‌ புதிய‌ த‌லைமுறை க‌ம்யூனிஸ்டுக‌ள் தோன்றினார்க‌ள்.

புதிய‌ சிலி க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி உருவாகி சில‌ வ‌ருட‌ங்க‌ளில் பாராளும‌ன்ற‌த்தில் ஒரு ப‌ல‌மான‌ எதிர்க்க‌ட்சியாகிய‌து. அத்துட‌ன், அனார்க்கிஸ்டுக‌ள், ட்ராக்கிஸ்டுக‌ள், இன்னும் ப‌ல‌ சோஷ‌லிச‌ அமைப்புக‌ளும் உருவாகின‌. குறிப்பாக‌ அனார்க்கிஸ்டுக‌ள் முத‌லாளித்துவ‌த்தை ம‌ட்டும‌ல்லாது, அர‌சு என்ற‌ க‌ட்ட‌மைப்பையே எதிர்ப்ப‌வ‌ர்க‌ள்.
க‌ம்யூனிச‌, இட‌துசாரிக் க‌ட்சிக‌ளுக்கு மாண‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் ந‌ல்ல செல்வாக்கு இருந்த‌து. ஆர‌ம்ப‌த்தில் இல‌வ‌ச‌க் க‌ல்வி உரிமைக்காக‌ போராடிய‌ மாண‌வ‌ர்க‌ள், கூட‌வே நியோ லிப‌ர‌ல் சிஸ்ட‌த்தையும் எதிர்க்க‌க் க‌ற்றுக் கொண்டனர். த‌ற்போது முத‌லாளித்துவ‌த்தை வீழ்த்தி விட்டுத் தான் ம‌று வேலை பார்ப்ப‌து என்று கிள‌ம்பி விட்டார்க‌ள்.

க‌ம்யூனிஸ்டுக‌ள் வேறு யாரும் அல்ல‌. அவ‌ர்க‌ளும் முத‌லாளித்துவ‌ம் வ‌ள‌ர்த்து விட்ட‌ பிள்ளைக‌ள் தான். சிலியில் முத‌லாளித்துவ‌ம் த‌ன‌து ச‌வ‌க்குழியையை தானே தோண்டி விட்டுள்ள‌து. மீண்டும் உலகெங்கும் செம்புரட்சிகள் உங்களை வரவேற்கின்றன. இது "கம்யூனிசம் 2.0"!

Monday, December 24, 2018

மஞ்சள் சீருடை - புதியதோர் பிரெஞ்சுப் புரட்சிக்கான அறிகுறி


17 நவம்பர் 2018, மஞ்சள் மேலங்கி அணிந்த சிலர் குழுவாக திரண்டு, பிரான்ஸின் பிரதான சாலைகளை வழிமறித்து போராட்டம் நடத்தினார்கள். அந்நாட்டில் இது போன்ற போராட்டங்கள் அடிக்கடி நடப்பதுண்டு. சில வருடங்களுக்கு முன்னர், விவசாயிகள் பால் மற்றும் விவசாய விளைபொருட்களை தெருக்களில் கொட்டி போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். அன்று உண்மையிலேயே பாலாறு ஓடியது. தம்மிடம் கொள்வனவு செய்யும் சூப்பர் மார்க்கெட் நிறுவனங்கள், மிகக் குறைந்த விலை கொடுக்கின்றன என்பது விவசாயிகளின் கோபத்திற்குக் காரணம்.

இந்த தடவை, மஞ்சள் மேலங்கியுடன் வீதிகளை மறித்து போராடியவர்கள், பெரும்பாலும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக பாதிக்கப்பட்ட வாகன சாரதிகள். பார ஊர்திகளின் சாரதிகள் மட்டுமல்லாது, வேலைக்கு காரில் சென்று வருவோரும் எரிபொருள் செலவு குறித்து அதிருப்தி கொண்டிருந்தனர். இதைத் தவிர, நலிவடைந்த பிரிவினரான சிறு வணிகர்களும் இந்த இயக்கத்தில் இருந்தனர்.

கடலில் பெரிய மீன்கள் சின்ன மீன்களை சாப்பிடுவது போல, மேற்கு ஐரோப்பிய நாடுகள் எங்கும் பெரும் முதலாளிகளின் நிறுவனங்கள் சிறு வணிகர்களின் கடைகளை இல்லாதொழித்து விட்டது. அதைத் தவிர முன்னொரு காலத்தில் அரசு வழங்கிய சலுகைகள் குறைத்து, வேலைப்பளுவையும் கூட்டி விட்டதால் கஷ்டப்படும் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் போன்ற நடுத்தர வர்க்கத்தினரின் பாடு இன்று திண்டாட்டமாக உள்ளது. அதனால், அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தினர் மட்டுமல்லாது, பெரும்பாலான பிரெஞ்சு கீழ் மத்திய தர வர்க்கத்தினர் கூட, இன்றைய சமூகத்தில் நலிவடைந்த பிரிவினராக கருதப் படுகின்றனர்.

மார்க்சிய சொல்லாடலில் "குட்டி முதலாளித்துவ வர்க்கம்" என அழைக்கப்படும், கீழ் மத்தியதர வர்க்கத்தினர் தான் மஞ்சள் சட்டைப் போராட்டத்தை தொடக்கியவர்கள். ஏனெனில் முப்பது வருடங்களுக்கு முன்னர் வசதியாக வாழ்ந்தவர்கள், இன்று ஏழ்மை நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். பிரெஞ்சு சனத்தொகையில் ஒரு சதவீதமான பணக்காரர்கள் மென்மேலும் செல்வம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரம் ஏழைகள் மென்மேலும் வறுமைக்குள் தள்ளப் படுகின்றனர். 

அதனால், பெட்ரோல் விலையேற்றம் மட்டும் தான் போராட்டத்திற்கு காரணம் என்று நினைப்பது தவறாகும். பல ஊடகங்கள் இந்தத் தவறை திரும்பத் திரும்ப செய்து கொண்டிருந்தன. கடந்த பல வருடங்களாக, பிரெஞ்சு உழைக்கும் மக்களின் வருமானம் குறைந்து கொண்டே செல்கின்றது. ஒருபக்கம் விலைவாசி ஏறிக் கொண்டிருக்கையில், மறுபக்கம் சம்பளம் குறைந்து கொண்டு செல்கிறது. நாட்டில் நிலவும் பணவீக்கத்திற்கு ஏற்றவாறு சம்பளம் கூடுவதில்லை. இதெல்லாம் மக்களை போராடத் தூண்டி விட்டன. இதற்கு மேலே பொறுக்க முடியாது என்ற நிலைமையில் தான் அவர்களை வீதியில் இறங்க வைத்தது.
போராட்டக்காரர்கள் மஞ்சள் மேலங்கி அணிந்து கொண்டமை ஒரு புத்திசாலித்தனமான தெரிவு எனலாம். பிரான்சில் வீதி வேலை செய்பவர்களும், போக்குவரத்து கண்காணிப்பாளர்களும், இரவிலும் ஒளியை பிரதிபலிக்கும் மஞ்சள் மேலங்கி அணிந்திருக்க வேண்டியது கட்டாயம். வாகன சாரதிகளும் வைத்திருக்க வேண்டும். மஞ்சள் மேலங்கி எனும் ஒரு சாதாரண பாதுகாப்புக் கவசம், இன்று மக்கள் எழுச்சியின் குறியீடாக மாறிவிட்டது.

இந்தப் போராட்டம் பல நாட்களாக தொடர்ந்தது. ஆரம்பத்தில் அஹிம்சை முறையில் தான் போராட்டம் நடந்தது. கலவரத் தடுப்பு போலிஸ் படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசி கலைக்கப் பார்த்தது. அரச வன்முறைக்கு எதிரான மக்களின் பதில் வன்முறை என்று நிலைமை மோசமடைந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப் பட்டனர்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் ஆர்ப்பாட்டக்காரர் போன்று மாறுவேடமிட்ட போலீஸ்காரர்கள் சிலரும் கலவரத்தை ஏற்படுத்துவார்கள். இது பிரான்சில் ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட விடயம். ஏனெனில் அஹிம்சாவழிப் போராட்டம் வன்முறைப் பாதைக்கு மாறினால் பொது மக்கள் எதிர்க்கத் தொடங்கி விடுவார்கள் என்பது அரசின் எண்ணம். ஆனால், இந்தத் தடவை அந்தத் தந்திரம் பலிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த தடவை, வன்முறைகள் நடந்த போதிலும் பெரும்பான்மை மக்கள் மஞ்சள் சட்டைப் போராட்டத்தை ஆதரித்தனர். அங்கு ஓர் உள்நாட்டு யுத்தம் நடக்காத குறை. பாரிஸ் நகரில் வீதியில் நின்ற கார்கள் எரிக்கப் பட்டன. அவற்றில் போலிஸ் காரும் ஒன்று. ஆடம்பர பொருட்களை விற்கும் கடைகள் சூறையாடப் பட்டன. சில இடங்களில் கட்டிடங்களும் எரிக்கப் பட்டன. சுற்றுலாப் பயணிகளை கவரும் Arc de Triomphe நினைவகத்தில் கூட அரசியல் கோஷங்கள் எழுதப் பட்டிருந்தன. காவல்துறையில் இருந்தவர்களின் லீவுகள் இரத்து செய்யப் பட்டு, ஆயிரக் கணக்கான போலீசார் குவிக்கப் பட்டனர். மொத்தத்தில் பாரிஸ் நகரம் ஒரு யுத்த களம் போன்று காட்சியளித்தது.

இதனால் பிரான்சில் நடக்கும் நிகழ்வுகள் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைக் கவர்ந்து விட்டன. அதன் விளைவாக, பிற நாடுகளிலும் மஞ்சள் மேலங்கி அரச எதிர்ப்புப் போராட்டத்தின் குறியீடாக மாறியது. மஞ்சள் சட்டைப் போராட்டம் சர்வதேசமயமாகியது. முதலில் அயல்நாடான பெல்ஜியத்திற்கு போராட்டம் பரவியது. அங்கும் எரிபொருள் விலை உயர்வை எதிர்ப்பது என்ற பெயரில் தான் தொடங்கியது. ஒரு கட்டத்தில் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் இல்லை என்று மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பெல்ஜியத்திலும் போராட்டம் கலவரத்தில் முடிந்தது. நெதர்லாந்திலும் சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. ஈராக்கில் பஸ்ரா நகரில் போராட்டத்தில் குதித்த தொழிலாளர்கள் மஞ்சள் மேலங்கி அணிந்திருந்தனர். எகிப்தில் மஞ்சள் சீருடை விற்பனையை அரசு தடை செய்தது. 

மஞ்சள் சட்டைப் போராட்டம் எந்தவொரு அரசியல் கட்சியினதும் பின்புலம் இல்லாமல் தொடங்கியது. அதற்கென குறிப்பிட்ட அரசியல் இலக்கு இருக்கவில்லை. உண்மையில் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்பு கொண்ட சாதாரண மக்கள் தான் போராட்டத்தில் குதித்தனர். அவர்களில் பலர் இவ்வளவு காலமும் அரசியலில் ஈடுபட்டிராத சாமானியர்கள். கணிசமான அளவினர், பிற்போக்குத்தனமான கருத்துக்களை கொண்டவர்கள். சிலர் பிரெஞ்சு இனவாதிகளாகவும் இருந்தனர். ஓரிடத்தில் வீதித் தடைகளை ஏற்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், வாகனம் ஒன்றில் மறைந்திருந்த அகதிகளை கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்திருந்தனர். அரசியல் உணர்வற்ற மக்கள் போராட வந்தால், இது போன்ற சம்பவங்கள் நடப்பதையும் தவிர்க்க முடியாது.

நான் முன்னர் குறிப்பிட்ட நலிவடைந்த பிரிவினரான கீழ் மத்தியதர வர்க்கத்தினர் பெரும்பாலும் FN எனும் இனவாதக் கட்சிக்கு ஆதரவாகவும் உள்ளனர். "நாட்டில் வேலையில்லாப் பிரச்சினைக்கு காரணம், பிரெஞ்சுக்காரரின் வேலைகளை வெளிநாட்டவர் செய்வது தான்..." என்று பொருளாதாரப் பிரச்சினையை இனவாதக் கண்ணோட்டத்துடன் குறுக்கிப் பார்ப்பதால், அது ஒரு தீவிர வலதுசாரிக் கட்சியாகவும் உள்ளது..

பிரெஞ்சு இனவாதிகள், பூர்வீக வெள்ளையினத்தவர் மத்தியில் உள்ள வறுமையை மட்டுமே கவனத்தில் எடுக்கிறார்கள். குடியேறிகள் சமூகங்களில் வறுமையும், வேலையில்லாப் பிரச்சினையும் பல மடங்கு அதிகம். ஆனால், பிரான்சில் வாழும் வெளிநாட்டுக் குடியேறிகளும், அகதிகளும் இலகுவில் போராட முன் வர மாட்டார்கள். கிடைப்பதை வைத்து திருப்திப் படுபவர்கள். அதே நேரம், அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தால் நாட்டை விட்டு வெளியேற்றி விடுவார்களோ என்றும் அஞ்சுவார்கள்.

பிரெஞ்சு அரசும், நாட்டில் உள்ள இனப் பிரச்சினையை பயன்படுத்திக் கொள்ள நினைத்தது. தீவிர வலதுசாரிக் கட்சியினர் குழப்பம் விளைவித்து அரசைக் கவிழ்க்கப் பார்க்கின்றனர் என்று பிரச்சாரம் செய்தது. ஆனால் அந்தப் பிரச்சாரம் எடுபடவில்லை. மஞ்சள் அங்கிப் போராட்டத்தில் தீவிர வலதுசாரிகள் கலந்து கொண்டதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது பாதி உண்மை மட்டுமே. தீவிர இடதுசாரிகளும் போராட்டக் களத்தில் நின்றனர். மிகச் சிறிய இயக்கமான மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மூடப்பட்ட கடை ஜன்னல்களில் எழுதப்பட்ட அரசியல் சுலோகங்கள் மூலம் தனது இருப்பை வெளிப்படுத்தி இருந்தது. அதன் உறுப்பினர்கள் கம்யூனிச சின்னம் பொறித்த மஞ்சள் மேலங்கியுடன் முகத்தை மூடிய படி ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர். ஒரு பிரெஞ்சு அரச தொலைக்காட்சியான TF1, மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி தனது செய்தி அறிக்கையில் தெரிவித்தது.

இன்று வரையில் நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கையில் இதை ஒரு புரட்சி என்று கூற முடியாது. ஆனால், புரட்சிக்கு முந்திய ஆரம்ப காலகட்டம் என்று கூறலாம். அதற்காக அடுத்த மாதமே புரட்சி வெடிக்கும் என்று அர்த்தம் அல்ல. அதற்கு இன்னும் சில வருடங்கள் செல்ல வேண்டி இருக்கலாம். உலக வரலாற்றில் நடந்த புரட்சிகள் எல்லாவற்றுக்கும் "புரட்சிக்கு முந்திய காலகட்டம்" என்ற ஒன்று இருந்திருக்கும்.

மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெறுவதற்கும் குறிப்பிட்ட காலம் தேவை. அதே நேரம், பல்வேறு பட்ட அரசியல் கருத்துக்களை கொண்டவர்களும் ஒரே குறிக்கோளுடன் இணைந்து கொள்வார்கள். பிரான்ஸ் நிலைமையை பொறுத்தவரையில், ஜனாதிபதி மக்ரோன் பதவி விலக வேண்டும் என்பது ஒரு பொதுவான குறிக்கோள். அவர் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கூலி என்பதே போராட்டக்காரர்களின் பொதுக் கருத்தாக உள்ளது. இந்த விடயத்தில், முரண்பாடான அரசியல் கொள்கைகளை பின்பற்றும் தீவிர வலதுசாரிகளும், தீவிர இடதுசாரிகளும் ஒரே முனைப்போடு உள்ளனர்.

ஒரு நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகள் மக்களை புரட்சியை நோக்கி தள்ளிவிடுகின்றன. மேற்கு ஐரோப்பாவில் முன்னொரு காலத்தில் இருந்த, பொது மக்களின் வசதிகளை உயர்த்துவதற்காக பணத்தை செலவிடும் "நலன்புரி அரசுகள்" இப்போது இல்லை. தற்போது எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் மக்களிடம் பணம் பறிக்கும் அரசுக்களாக உள்ளன. வலதுசாரிக் கட்சியாக இருந்தாலும், இடதுசாரிக் கட்சியாக இருந்தாலும், தேர்தலில் வென்ற பின்னர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காற்றோடு பறக்க விடுகின்றன. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பெரும் முதலாளிகளுக்கு சேவை செய்வதை மட்டும் நோக்கமாக கொண்டுள்ளது. வாக்காளர்களும் ஊழல்மயக் கட்சிகளுக்கு மாறி மாறி வோட்டு போட்டு களைத்து விட்டார்கள். அதாவது, ஜனநாயக தேர்தல் முறையில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்.

ஆரம்ப நாட்களில் போராட்டம் எந்தவித அரசியலுக்கும் கட்டுப்படாமல் ஓர் இலக்கின்றி சென்று கொண்டிருந்தது. பாதிக்கப்பட்ட மக்களின் கோபம், அரசுக்கு எதிராக திரும்பி இருந்தது. அரசு நினைத்தால் பிரச்சினையை தீர்க்கலாம் என நம்பினார்கள். இறுதியில் மஞ்சள் சட்டைப் போராட்டத்திற்கு அடிபணிந்த ஜனாதிபதி மக்ரோன், அடுத்த ஆறு மாதங்களுக்கு எரிபொருள் விலை உயராது என்று வாக்குறுதி அளித்ததுடன், அடிப்படைச் சம்பளம் நூறு யூரோவால் அதிகரிக்கப்படும் என்று அறிவித்தார்.

மக்ரோனின் அறிவிப்பானது யானைப்பசிக்கு சோளப்பொரி மாதிரியான அற்ப சலுகைகளை மட்டுமே வழங்கியது. இதனால் மஞ்சள் சட்டைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்று மக்ரோன் நினைத்தால் ஏமாந்து போவார். சீசாவுக்குள் இருந்து கிளம்பிய பூதத்தை பிடித்து திரும்பவும் அடைப்பது இலகுவான விடயம் அல்ல. அரசியல் வழிகாட்டுதல் இல்லாத இயக்கமாக இருந்த படியால் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தவுடன் கலைந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்திருக்கலாம்.

ஒரு வெகுஜன அமைப்பாக தொடங்கிய மஞ்சள் சட்டைப் போராட்டத்தின் இடையில் வந்து சேர்ந்து கொண்ட தீவிர இடதுசாரிகள் மெல்ல மெல்ல அரசியல் மயப்படுத்தி வருகின்றனர். அதன் ஆரம்பம் பாரிஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த சம்பவம் ஆகும். அந்தப் பாடசாலைக்கு சென்ற போலீசார், மாணவர்களை தடுத்து வைத்து மோசமாக நடத்தியது. மாணவர்கள் கைகளை உயர்த்தி தலைக்கு பின்னால் வைத்துக் கொண்டு, முழங்காலில் நிற்க நிர்ப்பந்திக்கப் பட்டனர். போலிஸ் அதை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பரவ விட்டது.

மாணவர்களை பயமுறுத்தி எச்சரிக்கை செய்வதற்காக, போலிஸ் அவ்வாறு நடந்து கொண்டது. ஆனால், போலிஸ் எதிர்பார்த்தமைக்கு மாறாக, அது மாணவர்களை தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபடத் தூண்டியது. அடுத்த நாளே அந்தப் பாடசாலையில் செங்கொடி ஏற்றப் பட்டது. மாணவர்கள் கம்யூனிச சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை பிடித்துக் கொண்டு தெருவில் இறங்கிப் போராடினார்கள். பாடசாலை மாணவர்கள் போராட்டத்தில் குதித்தவுடன், மிகப்பெரிய தொழிற்சங்கமான CGT ஆதரவு வழங்கத் தொடங்கியது.

ஒரு பக்கம் மாணவர்கள் கல்விக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். மறுபக்கம் தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக போராடுகின்றனர். ஒரு சமூகத்தில் போர்க்குணாம்சம் மிக்க மாணவர்களையும், தொழிலாளர்களையும் ஒன்று சேர்த்த பெருமை இடதுசாரிகளை சாரும். அதே நேரம், அரேபியர், ஆபிரிக்கர் போன்ற சிறுபான்மையின சமூகங்களையும் இடதுசாரிகளே பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். தற்போது அவர்களும் பெருமளவில் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.

"மக்ரோன் பதவி விலகு!" என்ற ஒற்றைக் கோஷத்துடன் தொடங்கிய மஞ்சள் சட்டைப் போராட்டத்தில் தற்போது முதலாளித்துவ எதிர்ப்பு முழக்கங்கள் கேட்கின்றன. புதிய அரசமைப்பு சட்டம் உருவாக்கப் பட வேண்டும். பணக்காரர்களுக்கு அதிக வரி அறவிடப் பட வேண்டும் என்பன போன்ற முற்போக்கான அரசியல் கோரிக்கைகள் முன்வைக்கப் படுகின்றன. ஏற்கனவே பல புரட்சிகளை கண்டுவிட்ட பிரான்ஸ், மீண்டும் ஒரு புரட்சியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. 


- கலையரசன் -

Thursday, April 09, 2015

மாசுபடுத்தும் சீமெந்து தொழிற்சாலையை மூட வைத்த சீன மக்களின் போராட்டம்


சீனா ஒரு முதலாளித்துவ நாடான பின்னர், அங்கு பல மக்கள் போராட்டங்கள் நடந்துள்ளன. இலாப நோக்கை மட்டும் கருத்தில் கொண்டு செயற்படும், பெரும் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள், மேற்கத்திய ஊடகங்களில் வெளிவருவதில்லை.

குவாங்டோங் (Guangdong) நகரில் உள்ள பொலிஸ் நிலையமும், பொலிஸ் கார்களும் மக்களால் அடித்து சேதப் படுத்தப் பட்டன. 

"சீனாவில் சுதந்திரம் இல்லை, சர்வாதிகார ஆட்சி நடக்கிறது" என்றெல்லாம் எமக்குப் போதிக்கும் மேற்கத்திய ஊடகங்கள், இது போன்ற தகவல்களை தெரிவிக்காமல் மறைக்கும் காரணம் என்ன? தங்கள் நாட்டு மக்களும் முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்து விடுவார்கள் என்ற அச்சமா?


குவாங்டொங் நகர சபை அனுமதியுடன், அங்கு ஒரு கழிவுப் பொருட்களை எரிப்பதற்கான உலை (incinerator) கட்டுவதற்கு தீர்மானிக்கப் பட்டிருந்தது. அயலில் உள்ள லங்க்தாங் (Langtang) நகர சபை "China Resources Cement Holdings" நிறுவனத்துடன் அதற்கான ஒப்பந்தம் செய்திருந்தது. சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இருபதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். 

குறிப்பாக, லங்க்தாங் நகரவாசிகள், தமது குடியிருப்புகளுக்கு மிக அண்மையாக, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஆலை கட்டப் படுவதை விரும்பவில்லை. ஏற்கனவே அங்குள்ள சீமெந்து தொழிற்சாலை சுற்றுச் சூழலை மாசடைய வைத்துள்ளது. அதற்கும் மேலாக புதிய உலை சூழலை இன்னும் அதிகமாக மாசு படுத்தும் என்று நம்பினார்கள்.


அயலில் உள்ள இன்னொரு நகரமான லுவோடிங் (Luoding) வாசிகள், உள்ளூர் பாடசாலைகளோடு சேர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களும் சீமெந்து ஆலை ஏற்கனவே தமது நீர் நிலைகளையும், வளிமண்டலத்தையும் மாசு படுத்தி விட்டதாக குறைப்பட்டுள்ளனர். இதற்கு மேலும் கழிவுப் பொருட்களை எரிக்கும் உலை வந்தால், அதனால் தமது குடும்பத்தினரின் ஆரோக்கியம் பாதிக்கப் படும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். 

ஏப்ரல் 6 ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில், பொலிஸ் அடக்குமுறை பிரயோகித்துள்ளது. கவச உடை அணிந்த பொலிஸ் படையினர், தடியடிப் பிரயோகம் செய்து கலைத்ததுடன், இருபது பேரை கைது செய்துமுள்ளனர். அஹிம்சை வழிப் போராட்டத்தில், பொலிசார் வன்முறை பிரயோகித்த செயலானது பொது மக்களை ஆத்திரமடைய வைத்தது. பொலிஸ் தடியடிப் பிரயோகத்தில் சிறுவர்களும் பாதிக்கப் பட்டனர்.

முதலாளிய நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ள பொலிஸ் நடவடிக்கை, தமது நியாயமான போராட்டத்தை உதாசீனப் படுத்தியதை கண்டு பொறுக்க முடியாத மக்கள் கிளர்ந்தெழுந்து, பொலிஸ் வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள். பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து கண்ணில் கண்ட பொருட்களை அடித்து நிர்மூலமாக்கினார்கள்.

மக்கள் எழுச்சி காரணமாக, தொழிற்சாலை அமைக்கும் திட்டம் கைவிடப் பட்டுள்ளது. இது மக்களின் ஒன்று திரண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதப் பட வேண்டும்.

அங்கு நடந்த சம்பவம் தொடர்பாக, சீன சமூக வலைத் தளங்களில் பிரசுரமான படங்களை இங்கே இணைத்துள்ளேன்.




Sunday, November 02, 2014

பூர்கினா பாசோ: மக்கள் எதிர்த்து நின்றால், ஏகாதிபத்தியம் நடு நடுங்கும்!

"மக்கள் எதிர்த்து நின்றால், ஏகாதிபத்தியம் நடு நடுங்கும்." - தோமஸ் சங்கரா


பூர்கினா பாசோவில் மக்கள் எழுச்சி. ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு சென்று பாராளுமன்றத்தை தீக்கிரையாக்கினார்கள். ஆப்பிரிக்க நாடான பூர்கினா பாசோவில், இப்போது நடந்து கொண்டிருக்கும் மக்கள் எழுச்சி பற்றி, பெரும்பாலான ஊடகங்கள் எதுவும் கூறாமல் கள்ள மௌனம் சாதிக்கின்றன. ஏனென்றால், அங்கே கடந்த 27 வருடங்களுகளாக அதிகாரத்தில் இருந்தவர், ஒரு மேற்குலக நாடுகளின் பொம்மை ஆட்சியாளர்.

முன்னாள் கம்யூனிச ஜனாதிபதி தோமஸ் சங்கராவை படுகொலை செய்து விட்டு, இராணுவ சதிப்புரட்சி ஒன்றின் மூலம் ஆட்சியைப் பிடித்தவர் தான், இந்நாள் சர்வாதிகாரி Blaise Compaore. பிரான்ஸ் மற்றும் மேற்குலக நாடுகளின் ஆசீர்வாதத்துடன், கடந்த முப்பது வருடங்களாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்தார்.

பிளேஸ் கொம்பாரே, தனது பதவிக் காலத்தை நீடிக்க விரும்பிய பொழுது, பொறுத்தது போதும் என்ற மனநிலையில் இருந்த மக்கள் கிளர்ச்சி செய்தனர். இலட்சக் கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர். பூர்கினா பாசொவை ஒரு சோஷலிச நாடாக ஆட்சி செய்த தோமஸ் சங்கராவின் உருவப் படங்கள், பேரணிகளில் பரவலாகக் காணப் பட்டன. புரட்சியாளர்களை மக்கள் மறப்பதில்லை என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. மக்கள் தலைவன் தோமஸ் சங்கராவை படுகொலை செய்தவர்களுக்கு, இன்று மக்கள் தண்டனை வழங்கியுள்ளனர்.

தலைநகரில் கூடிய ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக, ஹெலிகாப்டரில் இருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்யப் பட்டது. அதனால் கலைந்து ஓடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், பாராளுமன்றத்திற்குள் புகுந்தனர். இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி, பிளேஸ் கொம்பாரேயின் பதவிக் காலத்தை நீடிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க இருந்தனர். அதனால் சீற்றம் கொண்ட மக்கள் பாராளுமன்றத்தை முற்றாக எரித்து நாசமாக்கியுள்ளனர். அந்தச் சம்மபவம் நடந்த நேரம், அங்கே எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் சமூகமளித்திருக்கவில்லை.

அதே நேரம், பிற அரசு அலுவலகங்களும் தாக்கப் பட்டுள்ளன. தொலைக்காட்சி நிலையம் கூட மக்களால் ஆக்கிரமிக்கப் பட்டது. தற்போதைய ஆட்சியாளர் சர்வாதிகாரி பிளேஸ் கொம்பாரேயின் சிலைகள் உடைத்து நொறுக்கப் பட்டுள்ளன.அதே நேரம், அதற்கு அருகில் இருந்த கடாபியின் சிலையை சேதப் படுத்தாமல் விட்டு வைத்தார்கள். பூர்கினா பாசோ மக்கள், தமது ஏகாதிபத்திய அடிவருடியான கொம்பாரேயை எந்தளவு தூரம் வெறுத்தார்கள் என்பதும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளரான கடாபியை எந்தளவு விரும்பினார்கள் என்பதும் இதிலிருந்து புலனாகும்.

பிளேஸ் கொம்பாரே நாட்டை விட்டு வெளியேறி விட்டார். அதற்குப் பின்னர், அவரது பதவிக் கால நீடிப்பு செல்லுபடியாகாது என்று, "பாராளுமன்றம்" (அப்படி ஒன்று இருக்கிறதா?) அறிவித்தமை தான் உச்சகட்ட நகைச்சுவை. தற்போது இராணுவம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. தலைநகர் உகாடுகுவில் உள்ள அமெரிக்க, பிரெஞ்சு தூதுவர்கள் எதிர்கால ஆட்சியாளர் தமக்கேற்ற ஒருவராக இருக்க வேண்டும் என்றே எத்ரிபார்ப்பார்கள். அதனால், இராணுவ ஆட்சி நடந்தாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால், பூர்கினா பாசோ மக்கள் அதற்கு அடிபணிந்து போகும் நிலையில் இல்லை. தற்போதைய இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் அறிவிக்கப் பட்டு வருகின்றன.

"நீங்கள் தனி மனிதர்களான புரட்சியாளர்களை கொலை செய்யலாம். ஆனால் உங்களால் சித்தாந்தங்களை கொல்ல முடியாது." - தோமஸ் சங்கரா ஏகாதிபத்திய கைக்கூலிகளினால் படுகொலை செய்யப்பட்ட மார்க்சிய புரட்சியாளர் தோமஸ் சங்கராவின் ஆவி, 27 வருடங்களுக்குப் பின்னர் திரும்பி வந்துள்ளது. பூர்கினா பாசோவில் தோமஸ் சங்கரா விதைத்த புரட்சி விதைகள், இன்று மாபெரும் மக்கள் எழுச்சியாக மாறியுள்ளது. தலைநகர் உகாடுகுவில் ஆர்ப்பாட்டம் செய்த மக்களின் கைகளில் காணப் பட்ட ஒரு வாசகம்: "தோமஸ் சங்கரா, உனது புதல்வர்களைப் பார்! நாங்கள் உனது போராட்டத்தை முன்னெடுக்கிறோம்."

மார்க்சியப் புரட்சியாளர் தோமஸ் சங்கராவின் ஏகாதிபத்திய எதிர்ப்புவாதமும், அவரது ஆட்சியின் கீழான நான்காண்டு சோஷலிச பொற்காலம் பற்றிய ஏக்கமும், பூர்கினா பாசோ இளந் தலைமுறையினரை போராடத் தூண்டிய காரணங்களாக இருந்துள்ளன. "இருபதாம் நூற்றாண்டில் கம்யூனிசம் செத்து விட்டது. இன்றைய இளந்தலைமுறையினர் முதலாளித்துவத்தை ஆராதிக்கிறார்கள்..." எனும் அறியாமை இருளில் இருப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை: 
Spirit of ‘Africa’s Che Guevara’ found in Burkina Faso uprising  http://america.aljazeera.com/articles/2014/10/31/burkina-faso-explainer.html

பூர்கினா பாசோவில், புரட்சியை பாதுகாக்கும் மக்கள் கமிட்டிகள் அமைப்பது தொடர்பாக சங்கரிஸ்ட் கட்சி ஆராய்ந்து வருகின்றது. ஆபிரிக்காவின் 21 ம் நூற்றாண்டின் இளம் மார்க்சிஸ்டுகள், மறைந்த கம்யூனிச தலைவர் தோமஸ் சங்கராவை பின்பற்றி, தங்களை "சங்கிரிஸ்டுகள்" என்று அழைத்துக் கொள்கின்றனர். தென் ஆப்பிரிக்காவின் "பொருளாதார விடுதலைப் போராளிகள்" (EFF) கட்சியினரும் தங்களை சங்கிரிஸ்டுகள் என்றே அழைத்துக் கொள்கிறார்கள்.

ஆப்பிரிக்க நாடுகளில், தற்போது இது ஒரு புதிய அரசியல் கலாச்சாரமாக பரவி வருகிறது. உதாரணத்திற்கு, கொங்கோவில் பட்ரிஸ் லுமும்பாவை பின்பற்றுவோர் தம்மை, "லுமும்பிஸ்ட்" என்று அழைத்துக் கொள்கின்றனர். பெயர் எப்படி இருந்தாலும், சித்தாந்தம் எதுவென்பது தான் முக்கியம். தென் ஆப்பிரிக்காவில் EFF கட்சியினர், ஒவ்வொரு தடவையும் தோமஸ் சங்கரா மீது உறுதிமொழி எடுக்கின்றனர். அதே நேரம், உறுப்பினர்களுக்கு மார்க்சிய லெனினிச வகுப்புகளை நடத்துகிறார்கள். 

பூர்கினா பாசோ நாட்டை சேர்ந்த சங்கிரிஸ்ட்கள் பற்றி எமக்கு தெரிந்தவை மிகச் சொற்பமே. சில நேரம், பிளேஸ் கொம்பாரேயின் 27 வருட கால சர்வாதிகார ஆட்சி காரணமாக அரசியல் பேசாமல் ஒதுங்கி இருந்திருக்கலாம். இனி வருங்காலங்களில் அவர்களது அரசியல் நடவடிக்கை என்ன என்று தெரிந்து விடும்.

"அனைத்து அதிகாரங்களும் மக்களுக்கே!"


இது தொடர்பான முன்னைய பதிவு: 

Sunday, May 25, 2014

துருக்கியில் கம்யூனிசப் போராளிகள், இனிமேல் ஆயுதங்கள் பேசும்

துருக்கியில் கம்யூனிசப் போராளிகள். 
 அமைதி வழி ஆர்ப்பாட்டம் அடக்கப் பட்டால், ஆயுதங்கள் பேசும் 



துருக்கி, இஸ்தான்புல் நகரின் ஒரு பகுதியான Okmeydani எனும் இடத்தில், சில ஆயுதபாணி இளைஞர்களின் நடமாட்டம் காரணமாக, அங்கு மின்சாரம் துண்டிக்கப் பட்டுள்ளது. அந்த இடத்தை காவல்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர். தலைமறைவாக இயங்கும், DHKP எனும் கம்யூனிச கெரில்லா இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்களே, ஆயுதங்களுடன் நடமாடுவதாக சந்தேகிக்கப் படுகின்றது. துருக்கியில் ஓர் உள்நாட்டு யுத்தம் தொடங்குவதற்கான அறிகுறி?
இஸ்தான்புல் நகரின் Sarigazi பகுதியும், ஆயுதபாணி இளைஞர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அந்தப் பகுதியில், துருக்கி மாவோயிஸ்ட் கட்சியான TKP/ML உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் நடமாடுகின்றனர். பொலிஸ் தாக்குதல்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக, ஆயுதமேந்தியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 
Footage from last night's clashes in Sarigazi.














"பொலிஸ் மக்களின் நண்பன் அல்ல. அது மேட்டுக்குடியினரின் அடியாட் படை," என்பதற்கு இந்தப் படமே சான்று. இஸ்தான்புல் நகரில், சோமா நிலக்கரிச் சுரங்க விபத்து தொடர்பாக, துருக்கி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த ஒருவரை, துருக்கி போலீசார் தெருவில் போட்டு அடிக்கின்றனர். பொலிஸ் பக்கத்தில் நின்று கொண்டு, அகப்பட்ட ஆர்வலரை காலால் உதைக்கும், இந்த கோட்டு சூட்டு போட்ட ஆசாமி யார் தெரியுமா? துருக்கி பிரதமர் எர்டோகானின் அந்தரங்க ஆலோசகர். இந்தப் படம் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி உலகெங்கும் பிரபலமாகி விட்டது. அதனால், ஏற்டோகனின் ஆலோசகர் பொது மக்களின் வெறுப்பை சம்பாதித்திருந்தார். அவர் அன்றே ஒரு வேலை செய்தார். "உதைத்ததால் கால் வலிக்கிறது" என்று சொல்லி, மருத்துவச் சான்றிதழ் எடுத்துக் கொண்டு, வேலைக்கு செல்லாமல் வீட்டில் தங்கி விட்டார். 

Turkish PM’s adviser goes on sick leave for injury to leg used to kick Soma protester http://www.hurriyetdailynews.com/Default.aspx?pageID=238&nID=66658&NewsCatID=338




துருக்கியில், எட்டாண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த, இடதுசாரி பெண் ஊடகவியலாளர் Füsun Erdogan, திடீரென விடுதலை செய்யப் பட்டுள்ளார். நெதர்லாந்து குடியுரிமை பெற்ற Füsun Erdogan, இஸ்தான்புல் நகரில் Özgür Radyo (சுதந்திர வானொலி) என்ற வானொலி நிலையத்தை நடத்தி வந்தார்.

இலட்சக் கணக்கான மக்கள் வாழும் இஸ்தான்புல் நகரத்தில், பொதுவுடமைக் கருத்துக்களை பரப்பி வந்தது. செய்திகள், நேர்காணல்கள், புரட்சிப் பாடல்கள் என்று, வழமையான வர்த்தக வானொலிகளில் இருந்து மாறுபட்டு இயங்கிக் கொண்டிருந்தது.

துருக்கியில் ஒரு மகாநாட்டிற்கு கலந்து கொள்ள சென்றிருந்த நேரம், Füsun Erdogan னை நேரில் கண்டு பேசியிருக்கிறேன். Özgür Radyo வானொலியில் எனது நேர்காணலும் நேரடி ஒலிபரப்புச் செய்யப் பட்டது. இது நடந்தது 2006 ம் ஆண்டு. மகாநாடு முடிந்து சில மாதங்களின் பின்னர், Özgür Radyo வானொலி நிலையம் மூடப் பட்டது. Füsun மற்றும் சில அரசியல்- சமூக ஆர்வலர்கள் கைது செய்யப் பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

Füsun இரட்டைக் குடியுரிமை பெற்றவர். அவரது கைது தொடர்பாக, நெதர்லாந்து வெளிவிவகார அமைச்சிற்கு அறிவிக்கப் பட்டது. இருப்பினும், துருக்கி குடியுரிமையும் வைத்திருந்த காரணத்தால், அரசு அவரை விடுதலை செய்ய மறுத்து விட்டது. இருப்பினும், நெதர்லாந்து ஊடகவியலாளர்கள் சங்கம் (NVJ), ஐரோப்பிய ஊடகவியலாளர்கள் சங்கம் (EFJ) ஆகியன, அவரது விடுதலைக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்தன.

Füsun இன் மகன் Aktas Erdogan, கடந்த இரண்டு வருடங்களாக, தாயின் விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்தார். சங்கீதக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவனான Aktas ஒரு கிட்டார் இசைக் கலைஞன். ஐரோப்பிய ஊடகவியலாளர்களை தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்ததில் அவரது பங்கு அளப்பரியது.

துருக்கியில் அண்மையில் சில சட்டங்கள் திருத்தப் பட்டன. சில குற்றங்களுக்கான தண்டனைக் காலம் குறைக்கப் பட்டது. அதனால் தான், ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப் பட்ட Füsun, திடீரென விடுதலை செய்யப் பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. "ஒரு இடதுசாரி பயங்கரவாத இயக்கத்தை தலைமை தாங்கியதாக" அவர் மீது குற்றம் சுமத்தப் பட்டது. MLKP என்ற கம்யூனிஸ்ட் கட்சியைத் தான், அரசு அவ்வாறு குறிப்பிடுகின்றது.

துருக்கியில் எந்தவொரு கம்யூனிஸ்ட் கட்சியையும், சட்டப் படி இயங்க அனுமதிப்பதில்லை. ஏதாவதொரு காரணம் சொல்லித் தடைசெயவார்கள். அவ்வாறு தான், MLKP தடை செய்யப் பட்டிருந்தது.

குறைந்த பட்ச ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி, MLKP வேறு பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அது எந்த ஆயுதபாணி நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இருப்பினும், கம்யூனிஸ்டுகள் என்றால், ஏதாவதொரு பொய்க் குற்றம் சுமத்தி சிறையில் அடைப்பது துருக்கியில் வாடிக்கையாக நடந்து கொண்டிருக்கிறது.

Füsun இனை பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு படுத்துவதற்காக, பொலிஸ் தயாரித்த ஆவணங்களில் பல குளறுபடிகள் இருந்ததும் நீதிமன்ற விசாரணையில் கண்டுபிடிக்கப் பட்டது. எட்டு வருடங்களுக்கு பின்னர், திடீரென விடுதலை செய்யப் பட்டதற்கு, அதுவும் காரணமாக இருக்கலாம். இருப்பினும், தற்போது விடுதலையாகி உள்ள Füsun, துருக்கியை விட்டு வெளியேறக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப் பட்டுள்ளது. விரைவில் அவர் நெதர்லாந்து வருவார் என்று எதிர்பார்ப்போம்.

Thursday, May 08, 2014

நவ- நாஸி அரசுக்கு எதிரான உக்ரைனிய மக்கள் எழுச்சி



  


இந்தச் சிறுவனின் வயது 17 மட்டுமே. உக்ரைனில், ஒடெஸ்ஸா நகரில், உக்ரைனிய- பாசிஸ்டுகளினால் தொழிற்சங்க கட்டிடத்திற்குள் நெருப்பு வைத்து படுகொலை செய்யப் பட்ட 40 அப்பாவி மக்களில், இவனும் ஒருவன். 
நவ- நாஸி கொலைகாரர்களுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும் மேற்கத்திய நாடுகளும், அமெரிக்க விசுவாசிகளும், பாசிசத்தை எதிர்த்துப் போராடும் உக்ரைனிய பொது மக்களை, "பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், ரஷ்ய- ஆதரவாளர்கள்" என்று தொடர்ந்தும் கொச்சைப் படுத்தி வருகின்றனர்.


உக்ரைனில் ஏற்பட்ட பாசிஸ சதிப்புரட்சியின் எதிர்விளைவாக, கிழக்கு உக்ரைனில் ஒரு மக்கள் எழுச்சி தோன்றியது. முதலில் டொனியேட்ஸ்க் நகரம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதைத் தொடர்ந்து பிற நகரங்களும் சேர்ந்து கொள்ள, டொனியேட்ஸ்க் மக்கள் குடியரசு பிரகடனப் படுத்தப் பட்டது.

உக்ரைன் தலைநகர் கீவில் இருக்கும் பாசிஸ ஆட்சியாளர்களும், அவர்களை ஆதரிக்கும் மேற்கத்திய நாடுகளும், மக்கள் எழுச்சியை கொச்சைப் படுத்தும் விதத்தில் பிரச்சாரம் செய்தன. "பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், ரஷ்ய ஆதரவாளர்கள்" என்று உண்மைக்கு மாறான கட்டுக்கதைகளை பரப்பி விட்டன. மேற்கத்திய ஊடகங்கள் பொய்யைச் சொன்னாலும், அதனை கண்ணை மூடிக் கொண்டு நம்பும் தமிழ் ஊடகங்களும் அப்படியே ஒப்புவித்தன.

டொனியேட்ஸ்க் நகரில் மக்கள் எழுச்சி ஏற்படக் காரணம் என்ன?

கிழக்கு உக்ரைனில் பாசிஸ அரசை எதிர்த்துப் போராடும் மக்களை, "ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள்" என்று கூறுவது போன்ற அபத்தம் வேறெதுவும் இருக்க முடியாது. பலர் அறியாமை காரணமாக, மேற்கத்திய பொய்ப் பிரச்சாரத்தை உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். முதல் தடவையாக மக்கள் எழுச்சி ஏற்பட்ட டொனியேட்ஸ்க் நகரம், "ஒரு ரஷ்ய நகரம்" அல்ல. அங்கு வாழும் எல்லோரும் "ரஷ்ய இனத்தவர்களும்" அல்ல!

உலகின் பல பாகங்களில் இருந்தும் புலம்பெயர்ந்து சென்றவர்களின் வம்சாவளியினர் தான் டொனியேட்ஸ்க் நகரில் செறிந்து வாழ்கின்றார்கள். பின்லாந்து, எஸ்தோனியா, கிரேக்கம், தாஜிகிஸ்தான் போன்ற பல தேசத்தவரும், யூரல் மலைத் தொடரில் இருந்து, அட்லாண்டிக் சமுத்திரம் வரையிலான ரஷ்யாவின் பல நகரங்களில் இருந்தும், தொழில் வாய்ப்பு தேடி டொனியேட்ஸ்க் நகரத்தில் வந்து குடியேறினார்கள். (NRC Handelsblad, 7-5-2014) 

உண்மையில், டொனியேட்ஸ்க் நகரம் பல்லின குடியேறிகளினால் உருவாக்கப் பட்டது. அவர்கள் எல்லோருக்கும், ரஷ்ய மொழி பிரதானமான தொடர்பாடல் மொழியாக இருந்தது.  இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினருக்கு அதுவே தாய்மொழியாகி விட்டது. இதனை லண்டன் நகரில் வாழும், பல்லின மக்களோடு ஒப்பிடலாம். லண்டனில் வசிக்கும், ஆசிய, ஆப்பிரிக்க குடியேறிகளின் இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டிருக்கலாம். அதற்காக, அவர்களை "ஆங்கிலேயர்கள்" என்று அழைப்பது அபத்தமானது.

மேற்கத்திய பிரச்சாரகர்களுக்கும், மேலைத்தேய அடிவருடிகளுக்கும் வரலாறு தெரிவதில்லை. டொனியேட்ஸ்க் நகரத்தை வடிவமைத்து உருவாக்கியவர் ஒரு பிரிட்டிஷ்காரர்! வேல்ஸ் மாகாணத்தை சேர்ந்த John Hughes என்ற தொழிலதிபர், 1869 ம் ஆண்டு, அந்த நகரை ஸ்தாபித்தார். சோவியத் காலத்தில், அது ஒரு முக்கியமான தொழிற்துறை நகரமாக உருவானது. அந்த நகரத்தில் தனிநபர் வருமானம் அதிகமாக இருந்தது.

டொனியேட்ஸ்க் நகரில் கல்வியறிவு பெற்றவர்களின் விகிதாசாரம் அதிகம். உக்ரைனின் பிற நகரங்களுடன் ஒப்பிட்டால், அது ஒரு "படித்தவர்களின் நகரம்" ஆகும். நாற்பது வயதிற்குட்பட்ட அனைவரும், ஏதாவது ஒரு தொழிற்கல்வியை, அல்லது உயர்கல்வியை முடித்துள்ளனர். ஓய்வூதியம் பெறும் வயோதிபர்கள் மத்தியில் கூட, கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக உள்ளது. "படியுங்கள்... படியுங்கள்... மேலும் மேலும் படியுங்கள்..." என்பது லெனினின் மேற்கோள். சோவியத் காலத்தில், டொனியேட்ஸ்க் நகர நிர்வாகம், கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தது. 

சோவியத் யூனியன் உடையும் வரையில், டொனியேட்ஸ்க் உக்ரைனின் பணக்கார நகரமாக இருந்தது. அதற்குக் காரணம், அங்கு வளர்ந்து வந்த சுரங்கத் தொழில் மற்றும் அதனோடு சேர்ந்த பிற தொழிற்துறைகள்.  இன்று, IMF, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன சுரங்கத் தொழிலுக்கு ஆப்பு வைக்க வந்துள்ளன. அவை சுரங்கங்களை மூடி விட விரும்புகின்றன. டொனியேட்ஸ்க் நகரில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு, அதுவே முக்கிய காரணம் ஆகும். (NRC Handelsblad, 7-5-2014) 

********

உலகில், பல "தேசியவாதிகள்", உண்மையான தேசியவாதிகள் அல்லர். உக்ரைனிய தேசியவாதிகளும் அதற்கு விதிவிலக்கு அல்ல. சில மாதங்களுக்கு முன்னர், கீவ் நகரில் கிளர்ச்சி செய்து ஆட்சியை கைப்பற்றிய உக்ரைனிய தேசியவாதிகள், குறிப்பாக தலைநகர் கீவ், மற்றும் மேற்கு உக்ரைன் நகரங்களில் இருந்த லெனின் சிலைகளை அடித்து நொறுக்கினார்கள்.

"லெனின் சிலைகள், உக்ரைனிய தேசியவாதிகளால் ரஷ்ய ஏகாதிபத்தியத்தின் சின்னமாக கருதி வெறுக்கப் பட்டதால், அவற்றை உடைத்தனர்..." என்று மேற்கத்திய நாடுகளிலும் காரணம் கூறப் பட்டது. உண்மையில், உக்ரைனில் முன்பிருந்த ஸ்டாலின் சிலைகள் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் தான் லெனின் சிலைகள் வைக்கப் பட்டன. ஸ்டாலினுக்குப் பின்னர் பதவியேற்ற, ஒரு உக்ரைனியரான குருஷேவ் காலத்தில் தான் அவை நிறுவப் பட்டன.

ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சி ஏற்படும் வரையில், உலக வரைபடத்தில் உக்ரைன் என்ற ஒரு நாடு இருக்கவில்லை. வரலாற்றில் என்றுமே இருக்கவில்லை என்றும் கூறலாம். "உக்ரைன்" என்றால், அதன் அர்த்தம்: எல்லைப் புற நாடு. சார் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், இன்றைய கிழக்கு உக்ரைன் "நோவோ ருசியா"(புதிய ரஷ்யா) என்று அழைக்கப் பட்டது. இன்றைய உக்ரைனின் மேற்குப் பகுதி, முன்பு ஆஸ்திரியா- ஹங்கேரி சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருந்தது.

லெனின் தலைமையிலான, போல்ஷெவிக் கம்யூனிச புரட்சியாளர்கள், இரண்டையும் இணைத்து உக்ரைன் என்ற புதிய நாட்டை உருவாக்கினார்கள். உக்ரைனியர்கள் என்ற தனியான கலாச்சார அடையாளத்தை, அவர்களே வளர்த்து விட்டார்கள். சோவியத் ஒன்றியத்தில் தேசியங்களை வரையறுத்த ஸ்டாலின், உக்ரைனை தனியான தேசியமாக அங்கீகரித்திருந்தார்.

உண்மையில், போல்ஷெவிக் புரட்சி ஏற்பட்டிருக்கா விட்டால், உக்ரைன் என்ற தேசம் உருவாகி இருக்க மாட்டாது. அதனால் தான், தொலைக்காட்சியில் உக்ரைன் பிரச்சினை தொடர்பாக உரையாடும் பொழுது, புட்டின் போல்ஷெவிக் புரட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து இருந்தார். கிழக்கு உக்ரைனிய பகுதிகளை குறிப்பதற்கு, "நோவோ ருசியா" என்ற சொற்பதத்தை பாவித்தார்.

உக்ரைனிய தேசியவாதிகள் உண்மையான தேசியவாதிகளாக இருந்திருந்தால், அவர்கள் உக்ரைனிய தேசியத்தை உருவாக்கியதற்காக லெனினுக்கு மதிப்புக் கொடுத்திருப்பார்கள். அதற்கு மாறாக, லெனின் சிலைகளை உடைத்தமைக்கு "மத்திய கால ஐரோப்பிய ராஜ்ஜியங்கள் பற்றிய பிரமையும், வலதுசாரிகளின் கம்யூனிச வெறுப்பும்" பிரதான காரணங்களாக உள்ளன. அதனால் அவர்களை "உக்ரைனிய தேசியவாதிகள்" என்று அழைப்பதை விட, "உக்ரைனிய பாசிஸ்டுகள்" என்று அழைப்பதே பொருத்தமானது.




பாசிஸ கொடுங்கோலர்களை எதிர்த்துப் போராடுவதற்காக, ஆயுதமேந்தியுள்ள வீரப் பெண்மணி. தென் கிழக்கு உக்ரைனிய மக்களின் எழுச்சி, தற்போது நவ- நாஸிகளுக்கு எதிரான மக்கள் யுத்தமாக பரிணமித்துக் கொண்டிருக்கிறது. பாசிஸ ஆக்கிரமிப்புப் படைகளிடமிருந்து தமது பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக, பல சாதாரண குடும்பத் தலைவிகள் கூட தற்பாதுகாப்புக்காக ஆயுதமேந்தியுள்ளனர்.


வீடியோ: 
உக்ரைனில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியுள்ள நவ- நாஸிகள். இவர்களைத் தான், மேற்குலக நாடுகள் "ஜனநாயகவாதிகள்" என்று கூறி ஆதரிக்கின்றன. 

 Ukraine Crisis Today: Democracy caught on camera 
(This will never be shown on mainstream media) 






உக்ரைன் தொடர்பான முன்னைய பதிவுகள்:


Monday, February 10, 2014

தேசியவாத போதை தெளிந்தது! பொஸ்னியா எரிகின்றது!

பொஸ்னியாவில் வர்க்கப் போராட்டம்! பொஸ்னியா எரிகின்றது!!

இந்த செய்திகளை, உங்களுக்கு தெரிந்த எந்தவொரு ஊடகமும் வெளியிட்டிருக்காது. பதினைந்து வருடங்களுக்கு முன்னர், பொஸ்னியாவில் வாழும் மூவின மக்கள், தேசியவெறி கொண்டு, ஒருவரையொருவர் கொன்று குவித்துக் கொண்டிருந்தனர். சர்வதேச ஊடகங்கள் எல்லாம், பொஸ்னியாவில் முகாமிட்டு, அங்கு நடந்த போரை, இனப் படுகொலைகளை, உலகம் முழுவதும் அறிவித்துக் கொண்டிருந்தன. "பொஸ்னிய போருக்கு காரணம் என்ன? தேசியவாதமா? இனவாதமா? மதவாதமா?" - மேலைத்தேய அறிவுஜீவிகள், இப்படி எல்லாம் மயிர் பிளக்கும் விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். 

கடந்த மூன்று நாட்களாக, பொஸ்னியாவில் மக்கள் எழுச்சி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. பொஸ்னியாவில் உள்ள சிறிய, பெரிய நகரங்களில் எல்லாம் கலவரம் பரவியது. அங்குள்ள அரசாங்கக் கட்டிடங்கள் எரிக்கப் பட்டன. ஆனால், சர்வதேச ஊடகங்கள் எங்கே? போர் நடந்த காலத்தில், குண்டுவெடித்து ஒருவர் பலியானலே, அழுது வடித்த ஊடகவியலாளர்கள், எங்கே தொலைந்து போனார்கள்? இரவு பகலாக மண்டையை பிசைந்து, பொஸ்னிய இனப் பிரச்சினைக்கு தீர்வு கண்ட, மேற்கத்திய நாடுகளின் தலைவர்களிடம் இப்போது கேட்டால், "பொஸ்னியாவா? அது எங்கே இருக்கிறது?" என்று கேட்பார்கள். 

இங்கே எழும் கேள்விகளுக்கெல்லாம் விடை ஒன்று தான். வர்க்கப் போராட்டம் என்றைக்குமே ஒளிபரப்பப்படுவதில்லை. இனக் குரோதங்களால் நடக்கும் போர்கள் மட்டுமே, உலகின் கவனத்தைக் கவருகின்றன. ஏனென்றால், "ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்." மக்களை இனவாரியாக பிரித்து வைத்தால், அவர்களை ஆள்வது இலகு. இது காலனிய காலத்தில் இருந்து தொடரும் அரசியல் நிர்வாகத்தின் அடிப்படை.

"தேசியவாதத்தை தடுத்து நிறுத்து! பொஸ்னிய மக்களைப் பிரிக்காதே!" - எரிந்து கொண்டிருக்கும் அரசாங்க கட்டிடம் ஒன்றின் சுவரில் எழுதப் பட்ட வாசகம். 

தேசியவாதம், இனவாதம், மதவாதம் என்பன, உலகிலேயே மிகவும் மோசமான போதைவஸ்துகள். மக்கள் தமது பிரச்சனைகளை மறந்து மயக்கத்தில் ஆழ்த்துவதற்காக, ஆளும் வர்க்கத்தால் இலவசமாக விநியோகிக்கப் பட்டு வருகின்றன. ஆனால், எத்தனை வருடங்களுக்குத் தான், மக்களை தொடர்ந்தும் போதையில் ஆழ்த்தி வைத்திருக்க முடியும்? முந்திய காலங்களில், இந்தியாவில் சில இடங்களில், உணவின்றி பட்டினி கிடக்கும் ஏழைகள், கொஞ்சம் அபின் உட்கொண்டு விட்டு, சில மணிநேரத்திற்கு பசி தெரியாமல் சந்தோஷமாக  இருப்பார்கள். தேசியவாதமும் அவ்வாறானது தான். 

ஏழைகள் மனதில், "தேசிய இன உணர்வு" எனும் போதையை ஏற்றி விட்டால், அவர்கள் சில காலத்திற்கு, பசியும், பிணியும், தெரியாமல் வாழ்வார்கள். உலகம் முழுவதும், மேட்டுக்குடியினரும், மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளும், "தீவிரமான தேசியவாதிகளாக" இருப்பது, ஒரு தற்செயல் நிகழ்வல்ல. அப்போது தான், அவர்களால் ஒரு போலியான வர்க்க ஒற்றுமையை கட்டிக் காப்பாற்ற முடியும்.


" ஏழைகள், செல்வந்தர்களை கொன்று விடாமல் தடுப்பதற்கு, மதம் உதவுகின்றது."   என்று சொன்னான் நெப்போலியன். 19 நூற்றாண்டில் மதம் பிரதானமாக இருந்தது. இன்று மதத்தின் இடத்தை, தேசியவாதம் பிடித்துள்ளது. முரண்நகையாக, நெப்போலியனின் போர்கள் தான், தேசியவாதம் என்ற சித்தாந்தத்தை உலகிற்கு அறிமுகப் படுத்தியது. 

பதினைந்து வருடங்களுக்கு முன்னர், பொஸ்னியாவின் உள்நாட்டுப் போர், மேற்கத்திய நாடுகளின் தலையீட்டினால் முடிவுக்கு வந்தது. அப்போது, மேற்கத்திய நாடுகள், தமது தலைசிறந்த இராஜதந்திரிகளை அனுப்பி, "இனப்பிரச்சினைக்கு அனைவரும் ஏற்கக் கூடிய தீர்வொன்றைக்" கண்டன. பொஸ்னியாவில் உள்ள மூன்று தேசிய இனங்களுக்கும், தனித் தனியான சுயாட்சிப் பிரதேசங்கள், தனித் தனியான அரசாங்கங்கள் அமைத்துக் கொடுத்தன. அதாவது, ஒவ்வொரு இனத்திற்கும் தனியாக ஒரு நாடு பிரித்துக் கொடுத்து விட்டால், பிரச்சினை தீர்ந்து விடும். அது அவ்வளவு சுலபமில்லை. 

இனப் பிரச்சினைக்கு தீர்வாக, தனி நாடு பிரித்துக் கொடுத்த அறிவாளிகள், மெத்தப் படித்தவர்கள் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், ஒரு சின்ன விஷயத்தில் கோட்டை விட்டு விட்டார்கள். "ஒவ்வொரு தேசிய இனத்திற்கும், ஒரு தேசிய அரசு அமைத்துக் கொடுத்து விட்டால் போதுமா? அங்கு வாழும் மக்களுக்கு யார் வேலை கொடுப்பார்கள்? யார் உணவு கொடுப்பார்கள்? அவர்களின் வறுமையை போக்குவதற்கு என்ன வழி?" அதைப் பற்றியெல்லாம், அன்று யாருமே கவலைப் படவில்லை. உள்ளூர் அரசியல்வாதிகள், அன்று விட்ட தவறின்  விளைவை இன்று அனுபவிக்கிறார்கள். 

தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு கண்ட பதினைந்து வருடங்களில், பொஸ்னிய பொருளாதாரம் ஆஹா, ஓஹோ என்று வளர்ந்து சாதனை படைக்கவில்லை. மாறாக மூவினங்களையும் சேர்ந்த மேட்டுக்குடியினர் மட்டுமே நன்மை அடைந்தார்கள். ஒரு காலத்தில், சாதாரண மக்களுக்கு தேசிய வெறியூட்டி போருக்கு தள்ளியவர்கள், இன்று தமக்கும், தமது குடும்பத்திற்கும் மட்டும் செல்வம் சேர்ப்பதில் குறியாக இருக்கின்றனர். அவர்களால் யுத்த களத்தில் பலி கொடுக்கப் பட்ட மக்கள், இன்று தொழில் இன்றி, வருமானம் இன்றி, வீடின்றி பல்வேறு இன்னல்களை அனுபவிக்கிறார்கள். 

பொஸ்னியாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 40% க்கும் அதிகம். இது அரசாங்க கணக்கு. பட்டப் படிப்பு படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள், ரொக்கமாக பணம் கொடுத்து வேலை வாங்க வேண்டிய அவல நிலை. ஊழலுக்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது. வறுமையை பற்றி இங்கே சொல்லத் தேவையில்லை. எழுபது சதவீதமானோர் வறுமைக் கோட்டை தாண்டுவார்களா என்பதே கேள்விக்குறி. 
சரயேவோ நகரில், ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் ஒரு அரசாங்க கட்டிடத்தை எரிக்கின்றனர்.

இந்த நிலைமையில், மக்கள் மனதில் தணலாய்க் கிடந்த தார்மீக சீற்றம், ஒரு நாள் எரிமலையாக வெடித்தது. துஸ்லா நகரில், மூன்று அரச தொழிற்சாலைகளை தனியாருக்கு விற்றதன் காரணமாக, அங்கே கலவரம் வெடித்தது. ஊழல் மலிந்த அரசாங்கம், அந்த தொழிற்சாலைகளை, தனியாருக்கு சிறு தொகைப் பணத்திற்கு விற்றிருந்தது. புதிதாக பொறுப்பேற்ற தனியார் கம்பனி ஒன்றின் நிர்வாகம், தொழிலாளர்களுக்கு சம்பளப் பாக்கி கொடுக்காமல் வைத்திருந்தது மட்டுமல்லாமல், அவர்களை ஒட்டுமொத்தமாக பணி நீக்கம் செய்திருந்தது. 

வேலையிழந்த  தொழிலாளர்களுடன், வேலையில்லாதவர்களும், மாணவர்களும் கைகோர்த்துக் கொண்டனர். வீதியில் அமைதியாக நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது, பொலிசார் வன்முறை பிரயோகித்தமையினால், மக்களின் பொறுமை எல்லை கடந்தது. மக்கள் எல்லோரும் ஒன்று திரண்டு சென்று, துஸ்லா நகராட்சி சபையின் கட்டிடத்திற்கு தீ வைத்தார்கள். அதைத் தொடர்ந்து பிற அரசாங்கக் கட்டிடங்களும் தாக்கி எரிக்கப் பட்டன. (அதைக் காட்டும் வீடியோ பதிவு கீழே உள்ளது:)



துஸ்லா நகரில் நடந்த கலவரத்தின் எதிரொலி, பிற பொஸ்னிய நகரங்களிலும் கேட்டது. ஒரே நாளில், ஒரு டசினுக்கும் குறையாத நகரங்களில் மக்கள் எழுச்சி உருவானது. தேசியவாத மேட்டுக்குடியினரால், "இணையப் போராளிகள்" என்று பரிகசிக்கப் படும், சோஷலிச இளைஞர்கள், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களை அணிதிரட்டினார்கள். அரச எதிர்ப்புக் கலவரம், பொஸ்னியா முழுவதும் காட்டுத் தீ போலப் பரவியது. 

பொஸ்னிய மக்கள் எழுச்சியில், சில குறிப்பிடத் தக்க முற்போக்கான அம்சங்கள் உள்ளன. அது ஒரு வர்க்கப் போராட்டம். இன்று அங்கு போராடும் மக்களின் மனதில், வர்க்க உணர்வு மேலோங்கிக் காணப்படுகின்றது. இதே மக்கள் தான், பதினைந்து வருடங்களுக்கு முன்னர், தேசியவெறியுடன் ஒருவரை கொன்று, இரத்தம் குடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு காலத்தில், ஜென்மப் பகைவர்களாக போரிட்ட இனங்கள், இன்று சகோதரத்துவ உணர்வுடன் ஆட்சியாளர்களை எதிர்த்து நிற்கின்றனர். 

"மக்கள் அரசாங்கத்திற்கு அஞ்சக் கூடாது. அரசாங்கம் தான் மக்களுக்கு அஞ்ச வேண்டும்." அது தான் உண்மையான ஜனநாயகம். ஆட்சியாளர்கள் தங்களது பணப் பைகளை நிரப்பிக் கொள்வதற்காக, தங்கள் மனதில் தேசியவாத வெறியை ஊட்டி வந்தார்கள் என்ற உண்மையை, இன்று பொஸ்னிய மக்கள் நன்றாக உணர்ந்து கொண்டார்கள். எரிக்கப் பட்ட அரசாங்க கட்டிடங்களின், சுவர்களில் எழுதப் பட்டுள்ள கோஷங்களில் இருந்தே, அதனைப் புரிந்து கொள்ளலாம். 
"தேசியவாதம் ஒழிக!" பொஸ்னியாவில் எரிக்கப் பட்ட அரசாங்க கட்டிடம் ஒன்றின் சுவரில் எழுதப் பட்ட வாசகம். 


அரசாங்கக் கடிதங்களை தீயிட்டுக் கொளுத்திய மக்கள், அங்கே தமது மனதில் உள்ளதை சுவரில் கிறுக்கி விட்டு சென்றுள்ளனர்.
"  தேசியவாதம் ஒழிக!"
"  பொஸ்னிய மக்களை பிரிக்காதே! தேசியவாதத்தை தடுத்து நிறுத்து!"
இது போன்ற தேசியவாத எதிர்ப்பு வாசகங்கள், சாதாரண மக்களின் அரசியல் விழிப்புணர்வை எடுத்துக் காட்டுகின்றன. 

பொஸ்னியாவில் உள்நாட்டுப் போர் நடந்த காலங்களில், "பொஸ்னியாவில் நடந்த அரசியல் படுகொலை ஒன்று, முதலாம் உலகப் போருக்கு மூல காரணியாக இருந்தது."  என்று மேற்கத்திய ஊடகங்கள் எமக்கு வரலாற்றுப் பாடம் நடத்தின. சில நேரம், இன்று பொஸ்னியாவில் ஏற்பட்டுள்ள வர்க்கப் போராட்டம், பிற ஐரோப்பிய நாடுகளிலும் வர்க்கப் போரை உண்டாக்கி விடும் என்று அஞ்சுகிறார்கள் போலத் தெரிகின்றது. அதனால் தான், இன்று எல்லா சர்வதேச ஊடகங்களும், பொஸ்னியாவில் நடக்கும் மக்கள் எழுச்சியை, ஒட்டுமொத்தமாக புறக்கணித்து வருகின்றன. 

(பொஸ்னிய மக்கள் எழுச்சியினை காட்டும் படங்களையும், வீடியோக்களையும் இங்கே இணைத்துள்ளேன்.)





பொஸ்னியா தொடர்பான முன்னைய பதிவுகள்:

Monday, June 10, 2013

"தாக்சிம் மக்கள் குடியரசு" : துருக்கியில் தோன்றிய புரட்சி

"கல்லைக் கண்டால் பொலிசைக் காணோம்! பொலிசைக் கண்டால் கல்லைக் காணோம்!! " - புரட்சி மொழி 
("இஸ்லாமிய - முதலாளியத்திற்கு எதிரான துருக்கி மக்களின் எழுச்சி" -   இரண்டாம் பாகம்)

"துருக்கி என்று பெயரிடுவதன் மூலம், அந்த நாட்டை இதற்கு மேலும் அவமதிக்க முடியாது." துருக்கி மொழி பேசாத பிற சிறுபான்மை இனங்களின் மனக்குமுறல் இது. மகாகவி பாரதியார், இலங்கையை "சிங்களத் தீவு" என்று விளித்து பாடியதற்காக மனம் நொந்த தமிழர்கள் பலர் உண்டு. இலங்கையை சிங்களம் என்று அழைப்பதால் என்ன அரசியல் விளைவு ஏற்படுமோ, அதே போன்று தான் துருக்கி என்ற நாட்டின் பெயரும் உண்டாக்குகின்றது. 

ஓட்டோமான் சக்கரவர்த்தியின் ஆட்சிக் காலத்தில், "துருக்கியர்" என்று அழைப்பது ஒரு இழி சொல்லாக கருதப் பட்டது. பெரும்பான்மையினர் பேசிய மொழியாக இருந்த போதிலும், அதற்கு சமூக அந்தஸ்து இருக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டில், பல உலக நாடுகளிலும் பரவிய "தேசியவாதம்" என்ற தொற்று நோய் துருக்கியையும் பிடித்தாட்டியது. துருக்கி தேசியவாதிகள், அவர்களது தேசியத் தலைவர் அட்டாதுர்க் தலைமையில் ஒரு தேசிய அரசை உருவாக்கினார்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அங்கு வாழ்ந்த கிரேக்கர்களையும், ஆர்மேனியர்களையும் வெளியேற்றினார்கள். பிற சிறுபான்மை இனங்களான, அரபி, குர்து மக்கள் மேல், பலவந்தமாக துருக்கி மொழியை திணித்தார்கள்.

துருக்கியை ஒரு இஸ்லாமிய நாடாக பார்ப்பதும், யதார்த்தத்திற்கு முரணானது. கிரேக்கர்கள், ஆர்மேனியர்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றினார்கள். முஸ்லிம்களிலும் அலாவி பிரிவினர் ஒதுக்கப் பட்டனர். அவர்களை முஸ்லிம்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. அலாவி முஸ்லிம்கள் துருக்கியில் மட்டுமல்லாது, சிரியா, லெபனான், போன்ற நாடுகளிலும் கணிசமான தொகையில் வாழ்கின்றனர். அலாவி முஸ்லிம்களின் மதக் கொள்கைகள் பல, இருபதாம் நூற்றாண்டு சோஷலிச தத்துவத்துடன் பெருமளவு ஒத்துப் போகின்றன. அதனால், பெரும்பாலான துருக்கி கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள் அலாவி முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் என்பது தற்செயல் அல்ல.

அலாவி முஸ்லிம்களும், துருக்கி தேசியவாதிகளும் மேற்கத்திய கலாச்சார விழுமியங்களுடன் பெரிதும் ஒத்துப் போகக் கூடியவர்கள். இதைவிட பெரும்பாலான துருக்கியர்கள் மத்தியில், தாம் ஒரு ஐரோப்பிய நாட்டவர் என்ற எண்ணமும் நிலை கொண்டுள்ளது. துருக்கியின் வட - கிழக்கு எல்லையில் அமைந்திருக்கும் ஆர்மேனியாவை ஒரு ஐரோப்பிய நாடாக ஏற்றுக் கொள்ள முன்வருபவர்கள், துருக்கியை நிராகரிப்பது முரண்நகையானது. இதற்கு "கிறிஸ்தவம், இஸ்லாம்" என்ற மதப் பிரிவினையை தவிர வேறெந்த காரணத்தையும் சாட்டாக கூற முடியாது. எது எப்படி இருப்பினும், கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இருக்கும், இஸ்லாமியவாத AKP, மதம் காரணமாக அரபு-இஸ்லாமிய உலகுடன் தன்னை இனம் காட்டிக் கொள்ள விரும்புகின்றது.

AK கட்சி, "இஸ்லாமிய - முதலாளியம்" என்ற புதிய அரசியல் - பொருளாதார கொள்கையை நடைமுறைப் படுத்தி வருகின்றது. அதன் படி, நாடு முழுவதும் புதிய மசூதிகள் கட்டப் படுகின்றன. அதற்கு அருகில் புதிய கடைத் தொகுதிகள் கட்டப் படுகின்றன. AK கட்சியுடன் தொடர்புடைய வர்த்தகர்கள் இதனால் இலாபமடைந்துள்ளனர். இந்தப் புதிய அரசியல் - பொருளாதார கொள்கை, துருக்கியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றதை மறுக்க முடியாது. அயலில் உள்ள ஐரோப்பிய நாடுகள் எல்லாம், பொருளாதார தேக்கத்தால் கஷ்டப் படும் நேரம், துருக்கியின் பொருளாதாரம் வளர்ந்து வருகின்றது. ஆனால், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அந்த நாட்டின் மக்கள் அனைவருக்கும் பயனளிக்குமா? உதாரணத்திற்கு, சமீபத்திய இந்திய, இலங்கை பொருளாதார வளர்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது, ஒரு சிறிய மத்தியதர வர்க்கம் மட்டுமே நன்மை அடைந்தது, அல்லது அந்த வர்க்கத்தின் எண்ணிக்கை மட்டுமே பெருகியது. ஆனால், பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நிலைமை மாறாமல் அப்படியே உள்ளது.

AKP யின் பத்தாண்டு ஆட்சிக் காலத்தில், நாடு துரிதகதியில் இஸ்லாமிய மயமாகிக் கொண்டிருந்தது. பெண்கள் முக்காடு போடுவது ஊக்குவிக்கப் பட்டது. முக்காடு போடாத பெண்கள், பொது இடங்களில் பயமுறுத்தப் பட்டனர். காதலர்கள் கையோடு கை கோர்த்துக் கொண்டு திரிவதும், பொது இடங்களில் முத்தமிடுவதும் கலாச்சார சீர்கேடாக கருதப் பட்டது. தற்போது ஒரு சராசரி மேற்கு ஐரோப்பிய நாடு போன்று காட்சியளிக்கும் துருக்கி, வெகு விரைவில் சவூதி அரேபியா போன்று மாறிவிடும் என்ற அச்சம் பல மதச் சார்பற்ற துருக்கியர் மனதில் எழுந்தது. அவர்களின் உள்ளக் குமுறல், சமீபத்திய மக்கள் எழுச்சியில் எதிரொலித்தது. மேற்குக் கரையோரம் அமைந்திருக்கும் அழகிய இஸ்மீர் நகரம், பார்ப்பதற்கு பாரிஸ், லண்டன் போல மேற்குலகமயமாக காட்சியளிக்கும். வழமையாக அந்த இடத்தில் AKP க்கு ஓட்டுப் போடுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. மக்கள் எழுச்சி தொடங்கிய அடுத்த நாளே, இஸ்மீரில் இருந்த AKP கட்சி அலுவலகம் எரிக்கப் பட்டது.


உலகம் முழுவதும், புரட்சி என்றதும், பலர் கம்யூனிஸ்டுகளை தான் நினைப்பார்கள். கம்யூனிஸ்டுகள் மட்டுமே புரட்சிக்கு ஏகபோக உரிமை கோர முடியாது. அராஜகவாதிகள் (அனார்கிஸ்டுகள்), சோஷலிஸ்டுகள், இடதுசாரி லிபரல்கள் மட்டுமல்ல, இஸ்லாமியவாதிகள் கூட புரட்சிக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இதற்கு உலகில் பல உதாரணங்களை காட்டலாம். புரட்சி என்பதை "ஜனநாயகமயப்படுத்தல், மக்கள் மயப் படுத்தல்" என்றும் வேறுவிதமாக அழைக்கலாம். 

அறுபதுகளில், மேற்கு ஐரோப்பிய மாணவர்கள், புரட்சியில் புதியதொரு பரிமாணத்தை அறிமுகப் படுத்தினார்கள். ஆங்கிலத்தில் "Occupy" என்று அழைக்கப் படும், பொது இடங்களை ஆக்கிரமிக்கும் போராட்டம் அது. அது ஒரு மக்கள் அரசாங்கம். மாணவர்கள் கல்வி நிலையங்களை ஆக்கிரமித்து, கல்விக் கொள்கைகளை தீர்மானிப்பார்கள். தொழிலாளர்கள் தொழிற்சாலைகளை ஆக்கிரமித்து உற்பத்தியை தீர்மானிப்பார்கள். அது மக்கள் தங்களைத் தாங்களே ஆளும் உண்மையான ஜனநாயகம். அதனை மக்கள் கற்றுக் கொள்வதற்கு, பல நாடுகளில் நடக்கும் Occupy போராட்டம் உதவுகின்றது.

இஸ்தான்புல் நகரில், கேசி பூங்காவில் சுமார் நூற்றுக் கணக்கான ஆர்வலர்கள் Occupy பாணியில் ஒன்று கூடினார்கள். அங்கேயே கூடாரம் அடித்து தங்கினார்கள். ஒரு வகையில் அது விடுதலை செய்யப் பட்ட பிரதேசமாக இயங்கியது. ஆரம்பத்தில் காவல்துறையினர், கண்ணீர்புகைக் குண்டுகள், ஒரெஞ்ச் நச்சு வாயுக்களை அடித்து, போராடிய மக்களை கலைக்க முயற்சித்தனர். வெகுஜன ஊடகங்களும், பொலிஸ் அராஜகத்தை கண்டுகொள்ளவில்லை. துருக்கி மொழியில் ஒளிபரப்பாகும் அமெரிக்கர்களின் CNN கூட, அன்றைய தினம் பென்குயின்கள் பற்றிய விவரணப் படத்தை ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. அப்படியானால், பிற அரசு சார்பான ஊடகங்களை பற்றி இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

"இன்று பெரும்பாலான மக்கள், மரபு வழி ஊடகங்களில் நம்பிக்கை இழந்து விட்டனர். உண்மைத் தகவல்களை அறிந்து கொள்வதற்கு டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களை பயன்படுத்துகின்றனர்." - துருக்கி அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் ஆர்வலர்கள் பலர் தெரிவித்த கருத்து. துருக்கி ஊடகங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இஸ்தான்புல் நகரில் ஆர்ப்பாட்டம் செய்த மக்களை போலிஸ் ஒடுக்கிய சம்பவத்தை அறிவிக்காமல் அமைதி காத்தன. "தாங்கள் அறிவிக்கா விட்டால், நாட்டின் பிற பகுதிகளில் வாழும் மக்களுக்கு தகவல் போய்ச் சேராது, ஒரு சில நாட்களில் அப்படி ஒரு சம்பவம் நடந்த சுவடே இல்லாமல் மறக்கப் பட்டு விடும்..." என்று ஊடக நிறுவனங்கள் நினைத்திருந்தன. 

ஆனால், சமூக வலைத் தளங்களின் மூலம் தகவல்கள் நாடு முழுவதும் பரவியது. அதற்குப் பிறகு தமது தவறை உணர்ந்து கொண்ட ஊடகங்கள், போராட்டம் குறித்த செய்திகளை அறிவிக்கத் தொடங்கன. அரச சார்பு தொலைக்காட்சியான NTV யின் தலைமை நிர்வாகி, நடந்த தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார். அப்படி இருந்தும், போராடும் மக்களின் ஆத்திரம் அடங்கவில்லை. தங்களின் போராட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய வந்த NTV நிறுவனத்தின் வாகனத்தை அடித்து நொறுக்கினார்கள். டிவிட்டர், பேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்தும் சாதாரண மக்களின் சக்தி எத்தகைய தாக்கத்தை உண்டாக்க வல்லது என்பதை, இன்று அதிகார வர்க்கம் உணர்ந்துள்ளது.

ஆயுதம் வைத்திருப்பவர்கள் மட்டுமே போராளிகள் என்ற தவறான எண்ணம் கொண்டவர்கள், சமூக ஆர்வலர்களை "இணையப் போராளிகள்" என்று நையாண்டி செய்து வருகின்றனர். பெரும் முதலாளிகளின் நிதியில் இயங்கும் ஊடகங்கள், மக்களுக்கு தெரிவிக்காத செய்திகளை, சமூக வலைத்தளங்களை பாவிக்கும் இணையப் போராளிகள் தெரிவித்து வருகின்றனர். துருக்கி மக்கள் எழுச்சி பற்றி வெகுஜன ஊடகங்கள் செய்தி அறிவிக்காது புறக்கணித்து வந்தன. சமூக வலைத் தளங்களின் ஊடாக தகவல்கள் பரவிய பின்னர் தான், திடீரென விழித்துக் கொண்டது போல பாசாங்கு செய்தன. துருக்கியில் டிவிட்டர் பயன்படுத்திய 23 இளைஞர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர் என்பதில் இருந்தே, அரசாங்கம் எந்தளவு தூரம் "இணையப் போராளிகளை" நினைத்து அஞ்சுகின்றது என்பது தெரிய வரும். 

பெரும் முதலாளிகளிடம் சம்பளம் என்ற பெயரில் கையூட்டு வாங்கும் தொழில்முறை ஊடகவியலாளர்களை விட, மக்கள் மத்தியில் இருந்து தோன்றும் ஊடகவியலாளர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர். இஸ்தான்புல் நகரில் ஒரு தற்காலிக ஊடக மையத்தை உருவாக்கிய சமூக ஆர்வலர்கள், அங்கு நடக்கும் புரட்சியை உலகிற்கு அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். கணணியும், இணையமும், சமூக வலைத்தளங்களும் மட்டுமே அவர்கள் கையில் உள்ள ஆயுதங்கள். புரட்சி நடக்கும் களத்தில் நின்று பணியாற்ற வேண்டியிருப்பதால், கண்ணீர்ப் புகையில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு, பாதுகாப்பு முகமூடி அணிந்திருக்கின்றனர். புரட்சி என்பது இரண்டு ஆயுதக் குழுக்களின் மோதல் அல்ல. அது மக்கள் தாமாகவே உருவாக்கிக் கொள்ளும் சமுதாய மாற்றம்.

 "இவர்கள் புத்தகம் ஏந்திய பயங்கரவாதிகள்!" 
பொது மக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதும், இலக்கற்ற வன்முறையில் இறங்குவதும் புரட்சி அல்ல. தெருக்களை ஆக்கிரமிப்பதும், அங்கு புத்தகங்களை கொண்டு வந்து வாசிப்பதும், தான் கற்றவற்றை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதும் புரட்சியின் ஒரு அங்கம் தான். "இவர்கள் புத்தகம் ஏந்திய பயங்கரவாதிகள்!"

ஒரு மருத்துவரின் முன் முயற்சியினால், கேசி பூங்காவில் ஒரு நூலகம் கட்டப் பட்டது. செங்கற்களால் தூண்களைப் போல கட்டி, அவற்றின் நடுவில் பலகைகளை வைத்து, புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள். நிச்சயமாக, மார்க்ஸ் முதல் மாவோ வரை எழுதிய நூல்கள் அங்கே கிடைக்கும். அவற்றோடு பல இடதுசாரி எழுத்தாளர்கள் எழுதிய நூல்களும், நாவல்களும் வைக்கப் பட்டுள்ளன. அவற்றை இரவல் எடுத்து வாசிப்பதற்கு கட்டணம் கிடையாது. ஆனால், வாசித்து முடித்த பின்னர் நூலை திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.



புரட்சியாளர்களின் "அதி பயங்கரமான ஆயுதக் களஞ்சியம்!" பூங்காவின் மத்தியில் இயங்கும் தற்காலிக நூலகம். மார்க்ஸ் முதல் மாவோ வரை அனைத்து இடதுசாரி இலக்கியங்களையும் இரவல் வாங்கலாம். 


கேசி பூங்காவில் தினசரி உடற்பயிற்சி அப்பியாசங்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள். யோகா பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு இலவச உணவு கிடைக்கிறது. பகலில் வேலை செய்து விட்டு வருபவர்கள், பூங்காவில் கிடைக்கும் உணவை சாப்பிட்டு விட்டு, அங்கே படுத்து உறங்குகிறார்கள். இலவச உணவு, எந்த வணிக நிறுவனமும் தனது பெயரில் கொடுத்த "நன்கொடை" அல்ல. மக்கள் தம்மிடம் உள்ள உணவை கொண்டு வந்து பகிர்ந்து உண்கிறார்கள். மக்கள் ஒருவருக்கொருவர் உதவுவதன் மூலம், புதிய உலகத்தையே உருவாக்கலாம் என்பதை புரிந்து கொள்கிறார்கள். பொலிஸ் படையுடன் மோதியதால் காயமுற்ற போராட்டக் காரர்களுக்கு இலவச மருத்துவம் செய்வதற்கு மருத்துவ மாணவர்கள் வருகிறார்கள். அதை விட, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் போராளிகளுக்கு இலவச சட்ட ஆலோசனை கிடைக்கிறது. அதற்கென வழக்கறிஞர்களின் குழு ஒன்று, அல்லும் பகலும் தயாராக இருக்கிறது.

இஸ்தான்புல் நகரின் மத்தியில் உள்ள Taksim சதுக்கத்தில் முதன் முதலாக மக்கள் எழுச்சி ஆரம்பமாகியது. அங்கு குழுமியிருந்த போராட்டக்காரர்களை பொலிஸ் கண்ணீர்ப்புகை குண்டு வீசி அடித்து விரட்டியது. அந்த பொலிஸ் வன்முறை, நாடு முழுவதும் மக்கள் எழுச்சி ஏற்படக் காரணமாக அமைந்தது. தற்போது தாக்சிம் சதுக்கத்தில் இருந்து பொலிஸ் வெளியேறி விட்டது. அந்த இடம் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அவர்கள் அதனை "தாக்சிம் மக்கள் குடியரசு" என்று அழைக்கின்றனர். அந்தப் பகுதியை சுற்றிலும், பொலிஸ் வர விடாமல் தடையரண்கள் போடப்பட்டுள்ளன. விடுதலை செய்யப் பட்ட "தாக்சிம் குடியரசில்" ஒரு மக்கள் அரசாங்கம் நடக்கின்றது. அதன் "பிரஜைகளின்" கடமைகள் என்னவென்று கூறும் அறிவிப்புகள் சுவர்களில் ஓட்டப் பட்டுள்ளன. எல்லோரும் சேர்ந்து, அங்கிருக்கும் குப்பை கூளங்களை அகற்றி சுத்தமாக வைத்திருக்கிறார்கள்.

போராட்டக் காரர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்ட போதிலும், பிரதமர் எர்டோகன் அவர்களை  "சூறையாடிகள்" என்று அழைத்தார். அதனைக் குறிக்கும் "çapulcu" (ஷப்புல்சு)  என்ற துருக்கிச் சொல், இன்று போராட்டக்காரர்களின் விருப்பத்திற்குரிய சொல்லாக மாறி விட்டது. போராட்ட செய்திகளை அறிவிக்கும் இணைய ஆர்வலர்கள், தமது பெயருடன் çapulcu என்று சேர்த்துக் கொள்கிறார்கள்.  இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யும் வலைத்தளத்திற்கு Çapul TV என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.  ஆங்கிலமயமாக்கப் பட்ட, Chapulling  என்ற சொல் கூட சர்வதேச அளவில் பிரபலமாகி விட்டது.  "Chapulling என்றால் உரிமைக்காக போராடுதல்" என்ற அர்த்தம் உருவாகி விட்டது. நாளை அந்தச் சொல் அகராதியில் சேர்க்கப் பட்டாலும் ஆச்சரியப் பட எதுவுமில்லை.

நாளை துருக்கி மக்களின் எழுச்சி நசுக்கப் படலாம், அல்லது இலக்கை எட்ட முடியாமல் தோற்றுப் போகலாம். ஆனால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் கலந்து கொண்ட திருப்தியை அது உண்டாக்கும். ஜனநாயகம் என்ற குழந்தையை பெற்றெடுத்த மகிழ்ச்சியில் அவர்கள் திளைக்கிறார்கள். அதனை வளர்த்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். அதிகாரவர்க்கத்திற்கு நாங்கள் அஞ்சத் தேவையில்லை என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். மக்கள் அரசாங்கத்திற்கு அஞ்சும் நிலைமை மாற வேண்டும். அரசாங்கம் மக்களுக்கு அஞ்சும் காலம் வர வேண்டும். அது தான் புரட்சி.

(முற்றும்)
**********


துருக்கி மக்கள் எழுச்சி தொடர்பான முன்னைய பதிவுகள்:


2. இஸ்லாமிய - முதலாளியத்திற்கு எதிரான துருக்கி மக்களின் எழுச்சி
1. "துருக்கி வசந்தம்" : முதலாளியத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி

மேலேயுள்ள படங்கள்: புரட்சியாளர்களின் அன்றாட செயற்பாடுகளை காட்டுகின்றன.
கீழேயுள்ள படங்கள் : அரச படைகளின் அடக்குமுறை 
இதிலே யார் வன்முறையாளர்கள் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.