Showing posts with label விடுதலைப் போராட்டம். Show all posts
Showing posts with label விடுதலைப் போராட்டம். Show all posts

Friday, May 15, 2020

மியான்மர் காரென் தேசிய இன விடுதலைப் போராட்டம்

தமிழீழம் சாத்தியமில்லை என்று சொன்னால் பலர் இப்போது சண்டைக்கு வருவார்கள். அவர்கள் உலக நடப்புகள் எதையும் அறியாமல் இருக்கின்றனர். உலகில் பிற நாடுகளிலும் தனிநாட்டுக்கான விடுதலைப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அந்த இயக்கங்கள் ஒரு கட்டத்தில் தனிநாடு சாத்தியமில்லை என்பதை உணர்ந்து சமஷ்டி உரிமைகளுக்காக ஆயுதப்போராட்டம் நடத்துகின்றன. அவற்றில் ஒன்று மியான்மரில் காரென் தனிநாடு கோரும் காரென் தேசிய விடுதலை இராணுவம்.

அவுஸ்திரேலிய எழுத்தாளர் Phil Thornton எழுதிய Restless Souls என்ற நூல் பற்றிய அறிமுகம். இப்படியான நூல்கள் மிகவும் அரிதாகவே வாசிக்கக் கிடைக்கின்றன. நானும் இதை ஒரு பழைய புத்தகங்கள் விற்கும் கடையில் தான் வாங்கினேன். இந்த நூலில் மியான்மரில் தனிநாடு கோரிப் போராடும் காரென் இன மக்களின் போராட்டம் பற்றிய பல அரிய தகவல்களை வாசித்து அறிந்து கொள்ள முடிகின்றது. இந்த எழுத்தாளர் தாய்லாந்தில் உள்ள மியான்மர் எல்லோயோர நகரமான Mae Sot எனும் இடத்தில் பல மாதங்கள் தங்கியிருந்து, அங்கு வாழ்ந்த காரென் அகதிகள், போராளிகளுடன் பழகிய அனுபவக் கதைகளை இதில் பகிர்ந்து கொள்கிறார்.

எந்தப் போரும் புனிதமானவை அல்ல. பர்மிய இராணுவம் காரென் பிரதேசத்தில் நடத்திய வெறியாட்டம் இந்த நூலில் விபரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அகதிகள் தமக்கு நடந்த கொடுமைகளை விபரிக்கிறார்கள். வீடுகளை தீயிட்டுக் கொளுத்துவது, கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்வது, பெண்களை வன்புணர்ச்சி செய்வது, இவற்றில் பர்மிய இராணுவமும் சளைத்தது அல்ல. சில இடங்களில் மனித மாமிசம் உண்ட கதைகளும் வதந்திகளாக உலாவுகின்றன. மியான்மர் இராணுவம் எத்தகைய கொடூரச் செயலுக்கும் தயங்குவதில்லை.

மியான்மரில் நடக்கும் போர் அவலங்களில் இருந்து தப்பி தாய்லாந்தில் தஞ்சம் புகுந்த காரென் அகதிகளை தாய்லாந்து அரசும் பாராமுகமாக நடத்துகிறது. தாய்லாந்து மக்களும் ஆதரிப்பதில்லை. அவர்கள் வேண்டாத விருந்தாளிகளாக நடத்தப் படுகின்றனர். இருப்பினும், தாய்லாந்துக்குள் அமைந்துள்ள காரென் அகதி முகாம்களையும், KNLA இயக்க அலுவலகங்களையும் தாய்லாந்து அரசு பொறுத்துக் கொள்கிறது. அதாவது, மியான்மருடன் வர்த்தக தொடர்புகளை புதுப்பிக்கும் வரை அழுத்தம் கொடுப்பதற்கு காரென் மக்களை பயன்படுத்திக் கொள்கிறது.

தாய்லாந்து பணக்காரர்கள் மியான்மர் அகதிகளை மலிவுவிலைக் கூலிகளாக நடத்துகின்றனர். சில இடங்களில் கூலியே கொடுப்பதில்லை. தாய்லாந்து தொழில் வழங்குனர் வாக்குறுதி அளித்த கூலியை குறைத்துக் கொடுப்பதும், சிலநேரம் கூலியே கொடுக்காமல் ஏமாற்றுவதும் சர்வசாதாரணம். வேலை செய்த கூலியை கேட்ட பலர் ஆள் வைத்து கொல்லப் பட்டுள்ளனர். தாய்லாந்தில் மியான்மர் அகதிகளை மனிதர்களாக மதிப்பதில்லை.

மியான்மர் நாட்டில் பர்மிய மொழி பேசுவோர் எழுபது சதவீத பெரும்பான்மையை கொண்டுள்ளனர். அவர்களைத் தவிர பல மொழிகளைப் பேசும் பல்லின மக்கள் தமக்குரிய பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு இனமும் தனக்கென தனிநாடு கோரி ஆயுதப்போராட்டம் நடத்தி வந்துள்ளது. இந்த நூல் காரென் மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றி மட்டுமே அதிக கவனம் குவிக்கிறது.

காரென் இனத்தவரின் போராட்டம் சர்வதேச நாடுகளின் கவனத்தை பெற்றிருந்தது. அதற்குக் காரணம் காரென் இனத்தவரில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பது மட்டுமல்ல. இரண்டாம் உலகப்போர் காலத்தில் பர்மா ஜப்பானியரின் ஆக்கிரமிப்பில் இருந்த காலத்தில், காரென் இராணுவம் பிரிட்டிஷ் இராணுவத்துடன் இணைந்து பர்மாவை விடுதலை செய்ய போராடியது. அப்போது யுத்தம் முடிந்த பின்னர் காரென் தேசத்திற்கு சுதந்திரம் தருவதாக பிரிட்டிஷார் வாக்குறுதி அளித்தனர். ஆனால் போர் முடிந்த பின்னர் ஏமாற்றி விட்டனர். பர்மிய ஆட்சியாளர்கள் கையில் பொறுப்பை ஒப்படைத்து விட்டு பிரிட்டிஷார் வெளியேறி விட்டனர்.

அன்று பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் செய்த துரோகத்தை மறக்க வைப்பதற்காக, பிற்காலத்தில் அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் காரென் விடுதலைப் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு வழங்கின. பிரிட்டன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளை சேர்ந்த கூலிப் படையினர் காரென் தேசிய விடுதலை இராணுவத்திற்கு (KNLA) பயிற்சி வழங்கினார்கள். இந்த நூலை எழுதிய எழுத்தாளர் காரென் தளபதிகளை மட்டுமல்லாது, வெளிநாட்டு கூலிப்படையினரையும் சந்தித்து உரையாடி இருக்கிறார்.

காரென் பிரதேசத்தில் உள்ள கூலிப்படையினரில் ஒரு சிலர் வியட்நாம் யுத்தம் முடிந்த பின்னர் இராணுவ சாகசம் செய்வதற்காக வந்தவர்கள். வேறு சிலர் கிறிஸ்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தவர்கள். மேலும் காரென் மக்கள் மேற்குலக சார்பானவர்களாக வைத்திருப்பதற்கு இது போன்ற தொடர்புகள் உதவுகின்றன. ஏராளமான மேற்கத்திய NGO க்கள் காரென் அகதிகளுக்கு உதவுவதற்கு வந்து முகாமிட்டுள்ளன. அவற்றில் சில KNLA க்கு ஆயுதங்கள் கடத்தி வருவதும் இரகசியம் அல்ல.

பல தசாப்த காலமாக KNLA கட்டுப்பாட்டில் இருந்த காரென் பிரதேசத்தை பர்மிய இராணுவம் கைப்பற்ற முடியவில்லை. அரச படைகள் அடுத்தடுத்து எடுத்த பல இராணுவ நடவடிக்கைகள் தோல்வியைத் தழுவின. இறுதியில் காரென் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி மூலமே வெற்றி பெற முடிந்தது.

காரென் இனத்தவரில் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவோர் பெரும்பான்மையாக இருந்தாலும், கணிசமான அளவினர் பௌத்த மதத்தை பின்பற்றுகின்றனர். பெரும்பான்மை பர்மியர்களும் பௌத்தர்கள் என்பதால், மியான்மர் அரசு காரென் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் வேலையில் இறங்கியது. அந்த சூழ்ச்சி வெற்றி பெற்றது. ஒரு சில பௌத்த காரென் இனத்தவர் காட்டிக் கொடுத்த படியால் தான் மியான்மர் இராணுவம் படையெடுத்து, KNLA கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை இலகுவாகக் கைப்பற்ற முடிந்தது.

காரென் பிரதேசம் முழுவதையும் மியான்மர் இராணுவம் கைப்பற்றிய பின்னர், DKBA என்ற துணைப்படையை உருவாக்கியது. காரென் ஜனநாயக பௌத்த இராணுவம் என்ற அந்த துணைப்படையினர் இன்று வரையில் மியான்மர் இராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுகின்றனர். KNLA க்கும், DKBA க்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் இடம்பெற்றுள்ளன. சிலநேரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களில் ஒருவர் KNLA இலும், இன்னொருவர் DKBA இலும் இருப்பார்கள். யுத்தம் நடக்கும் போது சகோதரர்கள் எதிரெதிர் அணியில் நின்று சுட வேண்டிய சந்தர்ப்பங்களும் வந்துள்ளன.

இந்த நூல் எழுதப் பட்ட 2004 ம் ஆண்டளவில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தன. (இந்த நூல் 2006 ம் ஆண்டு தாய்லாந்தில் வெளியிடப் பட்டுள்ளது.) அது பற்றிய விபரங்களும் வருகின்றன. அந்த நேரம் மியான்மர் ஜனநாயக வழிக்கு திரும்பும் அறிகுறிகள் தெரிந்த படியால், மேற்கத்திய நாடுகளும், NGO க்களும் மியான்மர் அரசை திருப்திப்படுத்துவதற்காக காரென் விடுதலை போராட்டத்திற்கான ஆதரவை விலக்கிக் கொண்டன.

NGO காரர்களின் இரட்டை வேடம் குறித்து காரென் மக்களும் அறிந்து வைத்திருக்கிறார்கள். இது குறித்து உள்ளூர் மனித உரிமைகள் நிறுவன ஆர்வலர் ஒருவர் நூலாசிரியருக்கு பின்வருமாறு கூறுகிறார்: "அவர்களுக்கு தேவையானதெல்லாம் எங்களது அவலக் கதைகள் தான். அவற்றை அறிக்கைகளாக எழுதி தமக்கென ஒதுக்கிய நிதியை செலவிடுகிறார்கள். ஆடம்பர ஹோட்டல்களில், உணவுவிடுதிகளில் கூட்டம் நடத்துகிறார்கள். ஆரம்பத்தில் இவர்கள் எமக்கு உதவ வந்திருக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் போகப் போக இவர்களது சுயரூபம் தெரிந்து விட்டது." அதே போன்று வருடமொருமுறை தலைகாட்டும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் போர்க்கள சாகசக் காட்சிகளை நேரில் காண முடியாமல் ஏமாற்றமடைகின்றனர். ஒரு சிலர் போலி மோதல் காட்சிகளை, போலி மரணங்களை படமாக்கிக் கொண்டு செல்கிறார்கள்.

சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் அமெரிக்கா குறிப்பிட்ட அளவு காரென் அகதிகளை ஏற்றுக் கொள்ள முன்வந்தது. தாய்லாந்தில் உள்ள காரென் அகதிகள் UNHCR மூலம் அமெரிக்க தஞ்சக் கோரிக்கைக்கு விண்ணப்பித்தனர். பெரும்பாலும் மருத்துவர்கள், ஆசிரியர்கள், போன்ற அறிவுஜீவிகளை அமெரிக்கா அகதி அந்தஸ்து கொடுத்து அழைத்துக் கொண்டது. இது குறித்து காரென் அரசியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர். காரென் பிரதேசத்தில் மருத்துவராக வேலை செய்தவர்கள் அமெரிக்காவுக்கு சென்று ரெஸ்டாரன்ட்களில் கோப்பை கழுவி பிழைக்கிறார்கள். அவர்களது தாயகத்தில் காரென் மக்களுக்கு சேவையாற்ற மருத்துவர்கள் இல்லாமல் பற்றாக்குறை நிலவுகிறது.

நூலின் இறுதிப் பகுதியில் ஐ.நா.வில் வேலை செய்யும் இராஜதந்திரி உண்மையை போட்டுடைக்கிறார். எக்காரணம் கொண்டும் மியான்மர் பல துண்டுகளாக உடைவதை சர்வதேச சமூகம் விரும்பவில்லை. மியான்மர் ஒரே நாடாக இருந்தால் தொடர்புகளை பேணுவது இலகு என நினைக்கிறார்கள். காரென் மக்கள் மீண்டுமொருமுறை ஏமாற்றப் பட்டுள்ளனர். அன்று பிரித்தனியா, இன்று அமெரிக்கா. இரண்டு தடவையும் மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் காரென் மக்களின் முதுகில் குத்தியுள்ளன. காரென் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இருந்து தமிழ் மக்களும் பாடம் படிக்க வேண்டும்.

Monday, January 19, 2015

ஹார்கிஸ் : பிரெஞ்சு அடிவருடிகளான அல்ஜீரிய ஒட்டுக் குழுவினரின் கதை


"ஹார்கிஸ்": இவர்கள் யார் என்று தெரியுமா? தெரியாவிட்டால் ஒரு புலி ஆதரவாளரிடம் கேட்டுப் பாருங்கள். "ஒட்டுக்குழு" என்று பதில் சொல்வார். அல்ஜீரிய விடுதலைப் போரை நசுக்குவதற்காக, பிரெஞ்சு பேரினவாத அரசு பயன்படுத்திய துணைப் படையின் பெயர் தான் ஹார்கிஸ். அல்ஜீரியாவில் அவர்களின் பெயர் "ஒட்டுக் குழு!" 

அதாவது, எஜமான விசுவாசம் காரணமாக பிரான்சுக்கு சேவை செய்த அல்ஜீரிய துணைப் படையினர். விடுதலைக்காக போராடிய அல்ஜீரிய மக்களின் பார்வையில்: "இனத் துரோகிகள்". பிரெஞ்சு இராணுவம், தமது சொந்த இன மக்களை இலட்சக் கணக்கில் இனப்படுகொலை செய்த நேரத்திலும், ஹார்கி ஒட்டுக் குழுவினர் எஜமானனின் காலை நக்கிக் கொண்டிருந்தனர்.

சார்லி எப்டோ தாக்குதலுக்குப் பின்னர், பிரான்ஸில், பிரெஞ்சு பேரினவாத அரசுக்கு அடிவருடும் தமிழ் ஒட்டுக் குழுக்கள் பெருகி விட்டன. பிரெஞ்சு ஏகாதிபத்திய எஜமான் வீசும் எலும்புத் துண்டுகளுக்காக, தாங்களும் வெள்ளையர்கள் போன்று பாவனை செய்து கொள்கின்றனர். 

"பிரெஞ்சுக் கனவான்கள் தமிழர்களின் "உண்மையான" நண்பர்கள்... பிரான்சில் வாழும் தமிழர்கள் பிரெஞ்சு மொழியை சரளமாக பேசி, பிரெஞ்சு சமுதாயத்தில் ஒன்று கலக்க வேண்டும்... பிரெஞ்சு அரசுக்கு விசுவாசமாக சேவை செய்து நற்பெயரை சம்பாதிக்க வேண்டும்..." என்று, அடிமைகள் போன்று எஜமான விசுவாசம் காட்டும் இவர்கள், ஹார்கிஸ் ஒட்டுக் குழுவின் வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

சிறிலங்காவும், ஈழமும் தமிழ் தேசியவாதிகளினால் இரண்டு தேசங்களாக கருதப் படுகின்றன. "சிங்கள சிறிலங்கா, தமிழீழப் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கிறது..." என்று அவர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அல்ஜீரியா உண்மையிலேயே, நூறு வருடங்களுக்கும் மேலாக, பிரான்சின் ஒரு மாகாணமாக ஆளப் பட்டு வந்தது. 

அதன் அர்த்தம், குறைந்த பட்சம் காகிதத்திலாவது, அல்ஜீரியர்களும் பிரெஞ்சுப் பிரஜைகளாக கருதப் பட்டனர். ஆனால், இரண்டாந்தர பிரஜைகளாக உரிமைகள் இன்றி அடக்கப் பட்டனர். "பிரான்சில் வாழும் தமிழர்கள் பிரெஞ்சு மொழியை சரளமாக பேசி, பிரெஞ்சு சமுதாயத்தில் ஒன்று கலக்க வேண்டும்" என்று, இன்றைக்கு நேற்று பிரான்சுக்கு வந்த தமிழ் அடிவருடிகள் கனவு காண்கின்றனர். பிரான்சில் வாழும் அல்ஜீரியர்கள், கடந்த 150 வருடங்களாக, பிரெஞ்சு மொழியை சரளமாகப் பேசிக் கொண்டிருக்கும், பிரெஞ்சு பிரஜைகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.

அல்ஜீரிய- முஸ்லிம் போர் வீரர்கள், பிரெஞ்சு இராணுவத்தில் சேவை செய்வது, ஏற்கனவே பல வருட காலமாக நடந்து வந்துள்ளது. பிரான்சின் காலனியப் போர்களிலும், அல்ஜீரிய வீரர்கள் போரிட்டுள்ளனர். ஆசியாவில் பிரெஞ்சுச் காலனியாகவிருந்த, வியட்நாம், கம்போடியாவில் நடந்த போர்களிலும் ஏராளமான அல்ஜீரிய வீரர்கள் பலியானார்கள்.

ஐரோப்பாவில் நடந்த முதலாம் உலகப் போரில் மட்டும், கிட்டத் தட்ட ஒரு இலட்சம் அல்ஜீரிய வீரர்கள் பலியானார்கள். இரண்டாம் உலகப் போரிலும் பல்லாயிரக் கணக்கான அல்ஜீரிய வீரர்கள், பிரான்சின் விடுதலைக்காக மரணத்தை தழுவியுள்ளனர். உண்மையில், பல இலட்சம் அல்ஜீரிய படையினரின் உயிர்த் தியாகம், இரண்டு உலகப் போர்களிலும் பிரான்சின் வெற்றியை தீர்மானித்தது.

தமிழீழம் போன்று, அல்ஜீரியா பிரான்சில் இருந்து பிரிந்து தனி நாடாக வேண்டுமென்று கோரிக்கை எழுந்த பின்னர் தான், ஹார்கிஸ் ஒட்டுக்குழு உருவானது. ஏனெனில், அல்ஜீரிய விடுதலைப் போராட்டம் ஆரம்பமானதும், அல்ஜீரிய வீரர்கள் ஏதாவது ஒரு பக்கத்தை தெரிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பல முன்னாள் பிரஞ்சுப் படை வீரர்கள், FLN விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டனர். 

FLN (Front de Liberation Nationale) தமிழீழம் கோரிப் போராடிய விடுதலைப் புலிகள் போன்று ஒரு தேசிய விடுதலை இயக்கம் ஆகும். ஈழத்தில் தோன்றிய தமிழ் தேசிய அலை காரணமாக, தமிழர்கள் புலிகளை ஆதரித்தது போன்று, அல்ஜீரியாவில் உருவான அல்ஜீரிய தேசிய அலை காரணமாக, அரேபியர்கள் FLN இயக்கத்தை பெருமளவில் ஆதரித்தனர்.

அதனால், பிரான்ஸ் தனக்கு விசுவாசமான ஒட்டுக்குழுவை உருவாக்க வேண்டிய தேவை எழுந்தது. அது தான் ஹார்கிஸ். ஆரம்பத்தில், பிரான்சுக்கு விசுவாசமான ஊர்க்காவல் படையாக அது தோன்றியது. பின்னர், பிரெஞ்சு ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துணைப் படை ஆகியது.

இன்றைக்கு பிரான்சில் வாழும் பல தமிழர்கள் தம்மையும், பிரெஞ்சு வெள்ளையராக பாவனை செய்து கொள்வதைப் போன்று, அன்றைக்கு பல அல்ஜீரியர்கள் தம்மையும் பிரெஞ்சு வெள்ளையர் என்று கருதிக் கொண்டனர். அப்படியானவர்கள் எஜமான விசுவாசம் காரணமாக ஹார்கிஸ் படையில் சேர்ந்து கொண்டனர்.

ஹார்கி வீரர்கள் பல தரப் பட்ட சமூகப் பின்னணி கொண்டவர்கள். பலர் பரம்பரை பரம்பரையாக பிரெஞ்சு எஜமானுக்கு சேவை செய்து சலுகைகளை அனுபவித்த குடும்பங்களை சேர்ந்தவர்கள். இருப்பினும், FLN பழிவாங்கல் நடவடிக்கைகளினால் பாதிக்கப் பட்டவர்கள் (ஈபிடிபி போன்றவர்கள்), FLN இயக்கத்தினுள் முரண்பட்டு பிரிந்தவர்கள்(கருணா குழு போன்றவர்கள்), போன்றவர்களும் ஹார்கிஸ் ஒட்டுக் குழுவில் சேர்ந்து கொண்டனர்.

பிரான்சில் இருந்து அல்ஜீரியா சுதந்திரம் அடைந்ததும், பிரெஞ்சு அரசுக்கு ஹார்கிஸ் ஒட்டுக் குழுவின் தேவை இருக்கவில்லை. அதனால், பிரெஞ்சு இராணுவத் தளபதிகள் ஹார்கிஸ் படையினரிடம் இருந்த ஆயுதங்களை திருப்பி வாங்கிக் கொண்டு, அல்ஜீரியாவில் தவிக்க விட்டு ஓடி விட்டனர். அல்ஜீரியாவில் முன்பிருந்த பிரெஞ்சு குடியேற்றங்களில் (ஈழத்தில் சிங்களக் குடியேற்றம் மாதிரி) இருந்து வெளியேறிய பல இலட்சம் வெள்ளையின பிரெஞ்சுக் காரர்கள் மட்டுமே பிரான்சினுள் அனுமதிக்கப் பட்டனர். 

தங்களையும் நாயகர்கள் போன்று வரவேற்பார்கள் என்றெண்ணி, பிரான்சுக்கு சென்ற ஹார்கிஸ் ஒட்டுக் குழுவினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே அவர்களை வரவேற்க யாரும் இருக்கவில்லை என்பது மட்டுமல்ல, வருடக் கணக்காக தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப் பட்டனர். அவர்கள் பிரஞ்சு அரசினால் புறக்கணிக்கப் பட்டார்கள். தற்போது, பிரெஞ்சு சமூகத்தில் ஒன்று கலந்து வாழ்ந்த போதிலும், பிரெஞ்சு தேசத்திற்காக அவர்கள் புரிந்த தியாகம் உதாசீனப் படுத்தப் படுகின்றது.

அதே நேரம், அல்ஜீரியாவில் தங்கி விட்ட ஹார்கிஸ் ஒட்டுக் குழுவினர், மற்றும் அவர்களது குடும்பத்தினர், வெற்றி மமதையில் இருந்த FLN போராளிகளினால் கொல்லப் பட்டனர். மக்களுக்கு முன்னிலையில் மானபங்கப் படுத்தப் பட்டனர். சித்திரவதை செய்யப் பட்டனர். சில இடங்களில், பிரெஞ்சு அடக்குமுறையினால் ஆத்திரமுற்ற பொது மக்களே, முன்னாள் ஹார்கிகளை அடித்துக் கொன்றனர். 

ஆயிரக் கணக்கான ஹார்கி படையினர், முன்பு பிரெஞ்சு அரசு அவர்களுக்கு வழங்கி இருந்த, வீரப் பதங்கங்களை விழுங்கி தற்கொலை செய்து கொண்டனர். அல்ஜீரியா முழுவதும், மொத்தம் ஒரு இலட்சம் ஹார்கிஸ் ஒட்டுக் குழுவினர், மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப் பட்டிருக்கலாம் எனக் கணக்கிடப் படுகின்றது.

அல்ஜீரியா விடுதலைப் போராட்ட கால கட்டத்தின் போது, பிரெஞ்சுப் படையினரால் கொல்லப் பட்ட அல்ஜீரிய மக்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்திற்கும் அதிகமாகும். ஹார்கி அல்ஜீரியர்களே, தமது சொந்த இனத்தவரை கொன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. சித்திரவதைகள் போன்ற மனித உரிமை மீறல்களிலும், போர்க் குற்றங்களிலும், பிரெஞ்சுப் படையினருடன் ஹார்க்கி ஒட்டுக்குழுவினரும் பங்கெடுத்துள்ளனர். 

அன்று அல்ஜீரியாவில் நடந்த போரில், பல இடங்களில் நடந்த சம்பவங்கள், போர்க் குற்றங்கள் அல்லது இனப்படுகொலை என்று நிரூபிக்கத் தக்கன. அந்த நேரம், ஐ.நா. மன்றம் அவற்றை விசாரிக்கவில்லை. ஏனென்றால், பிரான்ஸ் ஐ.நா. பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட மேற்கத்திய வல்லரசு நாடு.

இன்றைக்கு, பிரெஞ்சு பேரினவாத அடக்குமுறைகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும், தமிழ் ஒட்டுக் குழுவினர், ஹார்கி ஒட்டுக்குழுவின் வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஒரு காலத்தில் தமிழ் மக்கள் அவர்களை துரோகிகள் என்று ஒதுக்கும் பொழுது, அல்லது பிரெஞ்சு அரசு தனது தேவை முடிந்தவுடன் கை விடும் நேரத்தில், அவர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.


மேலதிக தகவல்களுக்கு:

Monday, April 02, 2012

சஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை

உலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து கொள்கின்றன. ஆப்பிரிக்காவில், மாலி நாட்டில், அசாவாத் (Azawad ) என்ற தனி நாடு கோரும், துவாரக் இனத்தவர் பற்றி, நம்மில் எத்தனை பேர் கேள்விப் பட்டிருப்பார்கள்? இத்தனைக்கும் அந்த விடுதலைப் போராட்டம், தொன்னூறுகளில் ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இடையில் சில வருடங்கள், அமைதி உடன்படிக்கை ஏற்பட்டு, சமாதானம் நிலவுவது போலக் காணப் பட்டது. இருப்பினும், அயல் நாடான லிபியாவில், கடாபியின் வீழ்ச்சி, இரண்டாவது அசாவாத் போரை தூண்டி விட்டுள்ளது. இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், வட மாலியின் முக்கிய நகரங்களில் ஒன்றான கவோ (Gao), விடுதலைப் போராளிகளால் கைப்பற்றப் பட்டுள்ளது. நகரில் இருந்த மிகப் பெரிய இராணுவ முகாம், போராளிகளின் தாக்குதலால் நிர்மூலமாக்கப் பட்டது. அசாவாத் விடுதலைக்கான மக்கள் இயக்கம் (Mouvement Populaire de Libération de l'Azawad, MPLA) கவோ நகரை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது. யார் இந்த அசாவாத் விடுதலைப் படை? அவர்களது குறிக்கோள் என்ன? துவாரக் இனத்தவரின் பிரச்சினை என்ன? எதற்காக, சர்வதேச சமூகம் அவர்களை புறக்கணிக்கின்றது?

"துவாரக் இன மக்கள் குறைந்தது ஐந்து ஆப்பிரிக்க நாடுகளில் பரந்து வாழ்கின்றனர். ஆனால், அவர்களுக்கு என்றொரு நாடில்லை." ஆப்பிரிக்காவில் அனைத்து மக்களும் ஒரே இனத்தை (race) சேர்ந்தவர்களாக கருதுவது தவறு. வட ஆப்பிரிக்காவில் வாழும் அரேபியர்கள், பெர்பர்கள் மட்டுமல்ல, துவாரக் இனத்தவர்களும் தம்மை பிற ஆப்பிரிக்க இனங்களில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கின்றனர். அவர்களது தோற்றமும் நிறமும் கூட வித்தியாசமாக இருக்கும். சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர், நான் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த காலத்தில், என்னோடு ஒரு மாலி நாட்டு அகதி தங்கியிருந்தார். "இந்தியர்களைப் போன்ற தோற்றமுடைய இனம் ஒன்று மாலி நாட்டில் இருப்பதாக," அவர் என்னைப் பார்த்து கூறினார். "ஆப்பிரிக்காவில் இந்தியர்களைப் போன்ற தோல் நிறம், முகத் தோற்றம் கொண்ட மக்கள்" என்ற தகவல், அன்று எனக்கும் புதிதாக இருந்தது. அது குறித்து துருவித் துருவிக் கேட்டதில், துவாரக் மக்களின் விடுதலைப் போராட்டம் எனக்கு அறிமுகமானது. என்னோடு தங்கியிருந்த நண்பர், தென் மாலியை சேர்ந்த பம்பாரா மொழி பேசும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர். வழமையான ஆப்பிரிக்கர்களைப் போன்ற தோற்றம் கொண்டவர்.

ஆப்பிரிக்கா கண்டத்தில், ஏறக்குறைய அனைத்து நாட்டு எல்லைகளும், ஐரோப்பிய காலனிய ஆட்சியாளர்களால் கீறப் பட்டவை தான். ஆமாம், ஆப்பிரிக்க வரைபடத்தை மேசையில் வைத்து, அடிமட்டத்தால் அளந்து கோடு கீறப் பட்டவை தான், ஆப்பிரிக்க நாடுகளின் எல்லைகள். அந்த எல்லைகளுக்குள், ஒரே மொழி பேசும் மக்களின் வாழ்விடங்கள் துண்டாடப் பட்டன. வேற்றினத்தவர்களுடன் ஒன்று சேர்த்து வைக்கப் பட்டனர். அவ்வாறு தான், மாலியின் வடக்கே வாழும் துவாரக் இன மக்கள், தெற்கே வாழும் பம்பாரா இன மக்களுடன் சேர்த்து வைக்கப் பட்டனர். பிரெஞ்சு காலனியாதிக்கவாதிகளின் நிர்வாக எல்லைக்குட்பட்ட அந்தப் பிரதேசம் தான் இன்றைய மாலி குடியரசு.

நாற்பதுக்கும் அதிகமான மொழிகளை பேசும் இனங்கள் வாழ்ந்தாலும், பம்பாரா மொழியை இரண்டாம் மொழியாக பேசக் கற்றுக் கொண்டுள்ளனர். அதனால், காலனிய கால பிரெஞ்சு மொழி, படித்தவர்கள் மட்டத்தில் மட்டுமே பேசப் பட்டு வருகின்றது. பல்வேறு இனங்களை சேர்ந்த மக்களில், 90 வீதமானோர் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டவர்கள். மாலி ஒரு காலத்தில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் பெரிய இஸ்லாமிய சாம்ராஜ்யமாக திகழ்ந்தது. அதன் தலைநகரான திம்புக்டுவில், ஆயிரம் ஆண்டு கால பழமையான பல்கலைக்கழகமும், நூலகமும் இன்றைக்கும் உள்ளன. அந்தக் காலத்தில், ஐரோப்பாக் கண்டத்தில், எந்தவொரு நாட்டிலும், பல்கலைக்கழகமோ அல்லது நூலகமோ இருக்கவில்லை!

பண்டைய திம்புக்டு நகரம் அமைந்துள்ள, மாலியின் வட பகுதி தான், உள்நாட்டு யுத்தத்தால் அதிகமாகப் பாதிக்கப் பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பெரும்பான்மையாக வாழும் துவாரக் இன மக்கள், அந்தப் பிரதேசத்தில் அசாவாத் என்ற தனி நாடு அமைக்க விரும்புகின்றனர். அதே வட பிராந்தியத்தில் வாழும் சொங்கை என்ற இன மக்களுக்கும், துவாரக் இனத்தவர்களுக்கும் ஒத்துப் போகாது. சொங்கை என்பது தனியான மொழி பேசும் மக்களை குறிக்கும் சொல் அல்ல. அவர்கள் பண்டைய சாம்ராஜ்யம் ஒன்றை ஆண்ட மக்கட் பிரிவினர்.

"ஆண்ட பரம்பரைக் கனவு" அவர்கள் மனதில் ஆழப் பதிந்துள்ளது. பிரிந்து செல்லும் தனி நாடொன்றில், "நாடோடிக் கூட்டமான" துவாரக் இனத்தவரால் ஆளப் படுவதை வெறுக்கின்றனர். இலங்கையின் வட-கிழக்கு பிராந்தியத்தில் ஈழம் கோரும் தமிழர்களுக்கும், அதே பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் போன்றது அது. மாலி அரசும், துவாரக் மக்களின் போராட்டத்தை அடக்குவதற்காக, சொங்கை ஆயுதக் குழுக்களை பயன்படுத்தியது. தற்பொழுது மாலியில், இராணுவ சதிப்புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் அது போன்ற உள்நாட்டுப் போர் வெடிக்கும் அபாயம் தோன்றியுள்ளது.

துவாரக் இனத்தவர்கள், தமக்கென தனியான கலாச்சாரங்களை கொண்டுள்ளனர். சுருக்கமாக அவர்களை பாலைவன மக்கள் என்று அழைக்கலாம். சஹாரா பாலைவனப் பிரதேசம் தான் அவர்களது வாழ்விடம். துவாரக் இன மக்கள் மாலியில் மட்டுமல்லாது, நைஜர், லிபியா, அல்ஜீரியா, மொரிட்டானியா, பூர்கினா பாசோ, ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். ஆதி காலத்தில் இருந்தே, சஹாரா பாலைவனத்தின் ஊடான வர்த்தகம் தான் அவர்களது முக்கிய தொழில் என்பதால், அவர்கள் ஒரு நாடோடி சமூகமாகவே வாழ்ந்து வந்துள்ளனர். ஒட்டகங்களில் பொதிகளை சுமந்த படி, பாலைவனத்தை ஊடறுத்து ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து சென்று வர்த்தகம் செய்யும் துவாரக் மக்களை, இன்றைய வணிக கப்பல் போக்குவரத்து கம்பெனிகளோடு ஒப்பிடலாம். ஐரோப்பியரின் வருகையினால், பாலைவன வர்த்தகம் தடைப்பட்டது மட்டுமல்ல, நிரந்தரமாக ஒரு நாட்டில் தங்க வேண்டியேற்பட்டது. துவாரக் இனத்தவர்கள், வட ஆப்பிரிக்க பேர்பர் இனத்திற்கு நெருக்கமானவர்கள். ஆனால் இவர்களின் தோல் நிறம் கறுத்திருக்கும். பெர்பர்கள் பேசும் தமாஷிக் மொழியுடன், அரபியும் பேசுகின்றனர். அநேகமாக, அனைத்து துவாரக் மக்களும் இஸ்லாமிய மதத்தவர்கள்.

லிபியாவில் கடாபி ஆட்சிக்கு வந்த பின்னர் தான், துவாரக் இனத்தவரின் ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகியது. தீவிரமான அரபு தேசியவாதியாகவிருந்த கடாபி, பிற அரபு நாடுகளின் ஒத்துழைப்பு கிட்டாததால், அரபு தேசியத்தை கைவிட்டார். அதன் பிறகு ஆப்பிரிக்க தேசியத்தை கையில் எடுத்தார். அதிலும் கடாபி ஒரு இஸ்லாமியவாதியாகவும் இருந்ததால், கணிசமான தொகை முஸ்லிம்கள் வாழ்ந்த ஆப்பிரிக்க நாடுகளின் அரசியல் விவகாரம் அவருக்கு உவப்பானதாக இருந்தது. மாலியில் அவாசாத் என்ற தனி நாடொன்றை உருவாக்கும் கனவை நனவாக்க காத்திருந்தவர்கள், கடாபியின் உதவியைப் பெற முடிந்தது. லிபியாவிலும் துவாரக் இன மக்கள் வாழ்ந்தததினால், இந்த தொடர்பு இலகுவாக ஏற்பட்டது.

லிபிய இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய, ஆப்பிரிக்கர்களின் துணைப் படையிலும், துவாரக் போராளிகளே அதிகமாக காணப்பட்டனர். மாலியில் தொன்னூறுகளில் வெடித்த அசாவத் விடுதலைப் போரிலும், லிபியாவில் பயிற்சி பெற்ற துவாரக் போராளிகளே பங்குபற்றினார்கள். அவர்களுக்கு தேவையான ஆயுதங்களை, அன்று கடாபி அனுப்பிக் கொண்டிருந்தார். சில வருடங்களின் பின்னர், போராளிக் குழுக்களுக்கும், மாலி அரசாங்கத்திற்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதற்கும் லிபியா மத்தியஸ்தம் வகித்தது! இலங்கையில் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதம் கொடுத்து உதவிய இந்தியா, பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் அனுசரணையாளராக செயற்பட்டமை உங்களுக்கு நினைவுக்கு வரலாம். வீட்டுக்கு வீடு வாசற்படி இருந்தால், நாட்டுக்கு நாடு இருக்காதா?

மாலியில் மீண்டும் ஏற்பட்டுள்ள யுத்தத்திற்கும், லிபியாவில் நடந்த ஆட்சி மாற்றத்திற்கும் நேரடித் தொடர்புண்டு. லிபியாவில் கடாபி இருக்கும் வரையில், துவாரக் போராளிகளுக்கு புகலிடம் கிடைத்து வந்தது. கடாபிக்கு எதிராக கிளர்ச்சி செய்து ஆட்சியைப் பிடித்த லிபியர்கள், (கறுப்பின) ஆப்பிக்கர்களை வெறுக்கும் இனவெறியர்கள். இதனால், துவாரக் போராளிகள், கடாபியின் இராணுவத்துடன் சேர்ந்து போரிடுவதைத் தவிர வேறு தெரிவு இருக்கவில்லை. நேட்டோ விமானக் குண்டுவீச்சின் பின்னர், கடாபியின் இராணுவம் பின்வாங்கி ஓடிக் கொண்டிருந்தது.

அதே நேரத்தில், லிபியாவில் தங்கியிருந்த துவாரக் போராளிகள், தமது தாயகமான மாலிக்கு திரும்பினார்கள். அவர்கள் போகும் பொழுது, வெறுங் கையை வீசிக் கொண்டு செல்லவில்லை. லிபிய இராணுவத்தின் ஆயுதக் கிடங்குகளை கொள்ளையடித்து, நவீன ஆயுதங்களை திரட்டிக் கொண்டு ஓடினார்கள். போகும் வழியில், அதிர்ஷ்டம் ஆகாயத்தில் இருந்து விழுந்தது! லிபிய கிளர்ச்சியாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக, நேட்டோ விமானங்கள் ஆயுதங்களை பாரசூட் மூலம் போட்டனர். இவ்வாறு போடப்பட்ட நேட்டோ ஆயுதங்களில் சில துவாரக் போராளிகளின் வசம் சிக்கின. அவர்கள் அதையும் சேகரித்துக் கொண்டு, மாலியில் குவித்து வைத்திருந்தனர்.

சில தினங்களுக்கு முன்னர், கவோ நகர இராணுவ முகாம் மீதான தாக்குதலில் பல்குழல் எறிகணைகளை ஏவும் பீரங்கிகள் பாவிக்கப் பட்டுள்ளன. நவீன ஆயுதங்களை கொண்டு தாக்கிய துவாரக் போராளிகளின் தாக்குதகளை சமாளிக்க முடியாத மாலி இராணுவம் நிலைகுலைந்தது. ஏற்கனவே, கிடால் மாகாணம் போராளிகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. துவாரக் இனத்தவர் தனி நாடு கோரும் அவாசாத் மாநிலத்தில், அரைவாசிப் பகுதி அவர்கள் கட்டுப்பாடுக்குள் இருக்கிறது. இனி, திம்புக்டு மாகாணம் மட்டுமே மிச்சம் இருக்கின்றது. அதையும் கைப்பற்றி விட்டால், வட பிராந்தியம், மாலியுடன் துண்டிக்கப் பட்டு விடும்.

துவாரக் விடுதலை இயக்கங்களுடன், இஸ்லாமியவாத இயக்கங்களும் சேர்ந்து போரிடுகின்றன. இதனால், சஹாரா பாலைவனத்தில் உருவாகும் தனி நாடு, சர்வதேச இஸ்லாமியவாத சக்திகளுக்கு தளமாக அமையலாம் என்று மேற்குலகம் அஞ்சுகின்றது. ஆப்கானிஸ்தானில் மேற்குலகின் தலையீடானது, மத்திய ஆசிய நாடுகளில் இஸ்லாமியவாத சக்திகளை ஊக்குவித்தது போன்று தான் இங்கேயும் நடக்கின்றது. லிபியாவில் கடாபி கொல்லப்பட்ட பின்னர், கடாபியின் ஆவி வட ஆப்பிரிக்காவை அச்சுறுத்துகின்றது. ஏற்கனவே துவாரக் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட நைஜர், நைஜீரியா போன்ற நாடுகளிலும் ஆயுத வன்முறை ஆங்காங்கே தலைகாட்டி வருகின்றது.

மாலியில் இராணுவத்தில் ஒரு பிரிவினர் சதிப்புரட்சி செய்து, மாலியின் ஆட்சியைப் பிடித்துள்ளனர். ஜனாதிபதி அமடு துமானி துரே, பிரிவினைவாத இயக்கத்தை அடக்க முடியவில்லை என்று காரணம் காட்டியே சதிப்புரட்சி இடம்பெற்றுள்ளது. இதனை அவர்கள் "அன்னையர் எழுச்சி"யின் விளைவு என்றும் கூறுகின்றனர். அதாவது, போதுமான அளவு பயிற்சியற்ற மாலி இராணுவ வீரர்கள், வடக்கே சென்று சவப் பெட்டிகளில் திரும்பி வருகின்றனர். நாளாந்தம் பலியாகிக் கொண்டிருக்கும் இராணுவ தரப்பிலான இழப்புகளினால், தென் மாலி மக்களின் அரசின் மீதான வெறுப்பு அதிகரித்தது. தமது பிள்ளைகளை போர்க்களத்திற்கு அனுப்பிய தாய்மார், தலைநகர் பமாகொவில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இராணுவத்திற்குள் இருந்த கடும்போக்காளர்கள், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆட்சிக் கவிழ்ப்புக்கு மக்கள் ஆதரவை பெற்றுக் கொண்டனர். சதிப்புரட்சிக்கு தலைமை தாங்கும் கேப்டன் அமடு சனக்கோ, அமெரிக்காவில் பயிற்சி பெற்றவர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. வருங்காலத்தில் நிலைமை எப்படி மாறும் என்பதை இப்பொழுது கணிக்க முடியாமல் உள்ளது. எனினும், இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னரே, கவோ நகரம் துவாரக் கிளர்ச்சிப் படைகளால் கைப்பற்றப் பட்டது. இதனால், மாலி இராணுவத்தில் உள்ள கடும்போக்காளர்களால் அசாவாத் விடுதலைப் போராட்டத்தை அடக்க முடியுமா, எனது கேள்விக்குறி தான். நிலைமை மோசமடைந்தால், மேற்கத்திய நாடுகளின், குறிப்பாக பிரான்சின், நேரடித் தலையீடு இடம்பெறலாம். கடாபி இறந்த பின்னரும், கடாபியின் ஆவி வந்து தொல்லை கொடுக்கும் என்று யார் நினைத்திருப்பார்கள்?
************************************************


மேலதிக தகவல்களுக்கு:
அசாவாத் விடுதலைக்கான மக்கள் இயக்கம் அனுப்பிய ஊடகங்களுக்கான அறிக்கையும் (பிரெஞ்சு மொழி) சில வீடியோக்களும்
Tuareg rebellion (2007–2009)
Tuareg people
Libya Spillover Leads to Mali Coup

Friday, December 24, 2010

பாலஸ்தீனப் பாதையில் ஈழ விடுதலைப் போராட்டம்


[தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?](பகுதி : பத்து)

1982 ல், ஈழ - பாலஸ்தீன ஆதரவு துண்டுப்பிரசுரங்கள், "ஈழப் புரட்சி அமைப்பினரால்" வெளியிடப்பட்டன. அந்த வருடம் லெபனானில் ஷப்ரா, ஷட்டிலா என்ற இரு பாலஸ்தீன அகதி முகாம்களில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு ஈழத்தமிழர் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஈழத்தில் மெல்ல மெல்ல ஆயுதப் போராட்டம் துளிர் விட்டுக் கொண்டிருந்த காலம் அது. பிற்காலத்தில் இஸ்ரேலிய இராணுவத்தின் கொலைவெறிக்கு சற்றும் சளைக்காமல், சிங்கள இராணுவம் படுகொலைகளை செய்தது. இருப்பினும் அந்த வருடம் (1982) இஸ்ரேலியரின் பாலஸ்தீன இனப்படுகொலை ஈழத்திலும் அனுதாப அலையை தோற்றுவித்தது.

ஷப்ரா, ஷட்டிலா படுகொலையில் நேரடியாக ஈடுபட்டவர்கள் லெபனான் பாசிஸ்ட்களான பலாங்கிஸ்ட்கள். இருப்பினும் இஸ்ரேலும் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தது. இஸ்ரேலிய படையினரால் சுற்றி வளைக்கப்பட்ட அகதி முகாம்களில், தொடர்ந்து மூன்று நாட்கள் படுகொலை இடம்பெற்றது. கசாப்புக் கடையில் ஆடு வெட்டுவதைப் போல, கொலைஞர்கள் சாவகாசமாக ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்தனர். அன்று அந்த இனப்படுகொலையை அரங்கேற்றிய இஸ்ரேலிய படைத் தளபதி ஷரோன், பின்னாளில் இஸ்ரேலின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது ஷரோனுக்கு எதிராக பெல்ஜியத்தில் போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இருந்தாலும் என்ன, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவு இருந்தால், எந்தவொரு போர்க்குற்றவாளியும் விசாரணைக்கு அஞ்சத் தேவையில்லை.

லெபனானில் இஸ்ரேலிய படையெடுப்பின் பின்னர், பாலஸ்தீன விடுதலை இயக்கங்களுக்கு பாதுகாப்பான பின்தளம் என்று கூறக் கூடிய நாடு எதுவும் இருக்கவில்லை. ஏற்கனவே ஜோர்டானில் விரட்டப்பட்டு தான் லெபனான் வந்தார்கள். லெபனானிலும் அவர்களுக்கு வரவேற்புக் கிட்டவில்லை. வேண்டா விருந்தாளிகளாக நடத்தப் பட்டார்கள். எண்பதுகளில் லெபனானில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக, PLO வேறு வழியின்றி பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டது. அன்று PLO உலகில் "பணக்கார இயக்கம்" என்று பேசப்பட்டது. அனைத்து அரபு நாடுகளும் அளித்த தானங்கள், அவர்களது பணப்பெட்டியை நிரப்பின. யாசிர் அரபாத் வெளிநாட்டுப் பயணங்களுக்கு என தனியான விமானம் வைத்திருந்தார். உலகில் முதன்முதலாக விமானம் வாங்கிய விடுதலை இயக்கம் என்ற பெயரும் PLO வுக்கு இருந்தது. அந்நிய நாடுகளில் அளவுக்கதிகமாக தங்கியிருந்தால் விடுதலையைப் பெற முடியாது என்பதை, பாலஸ்தீனர்கள் காலந் தாழ்த்திப் புரிந்து கொண்டனர். இஸ்ரேலிய இராணுவம் பலமாக இருந்ததால், PLO வின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்று எதுவும் இருக்கவில்லை. அதனால், இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் யாவும், அயல் நாடுகளில் இருந்தே நெறிப் படுத்தப் பட்டன.

1967 ம் ஆண்டு யுத்தத்தின் பின்னரே, ஆயுதமேந்திய பாலஸ்தீன அமைப்புகள் வளர்ச்சி அடைந்தன. ஜெருசலேம், மேற்குக் கரை, காஸா பிரதேசங்களை, இஸ்ரேல் போரில் கைப்பற்றியது. ஜோர்டானின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மேற்குக்கரை (ஜெருசலேம் உட்பட), எகிப்தின் கட்டுப்பாட்டில் இருந்த காஸா என்பன, பாலஸ்தீனரின் புகலிடமாக விளங்கியது. அதாவது 1948 ல் இஸ்ரேல் உருவானதால் வெளியேற்றப் பட்ட பாலஸ்தீன அகதிகள், அந்தப் பிரதேசங்களில் அடைக்கலம் கோரி இருந்தனர். 1967 போரின் பின்னர், மில்லியன் கணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் வாழ வேண்டிய நிலை வந்தது. ஆக்கிரமிப்பின் கீழ் வாழ்வதென்பது, ஒவ்வொரு தனி மனிதனையும் பாதிக்கும் இடர். அதாவது ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தை சேர்ந்த பாலஸ்தீனர்களுக்கு பிரஜாவுரிமை கிடையாது. அதனால் கடவுச் சீட்டும் எடுக்க முடியாது. வாக்குரிமை கிடையாது. அதனால் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைக்க முடியாது. வீடு, காணி சொந்தமாக வைத்திருக்கும் உரிமை கிடையாது. அதனால் அவர்களது வீடுகள் இடிக்கப்படுகின்றன. நிலங்கள் பறிமுதலாகின்றன. நிச்சயமாக அத்தகைய சூழ்நிலையில் மக்கள் ஆயுதப் போராட்டத்தை முழு மனதுடன் ஆதரிப்பார்கள். 1967 ம் ஆண்டின் பின்னர், விடுதலை இயக்கங்கள் தோன்றுவதற்கு ஏதுவான சமூகக் காரணி அங்கே காணப்பட்டது.

இலங்கையில் ஆயுதப்போராட்டம் குறித்த அவா, சில இளைஞர்களிடம் காணப்பட்ட போதிக்கும், அது வளர்ச்சி அடைய ஒரு உந்துசக்தி தேவைப்பட்டது. இஸ்ரேலில் 1967 யுத்தம், ஆயிரக்கணக்கான பாலஸ்தீன இளைஞர்களை விடுதலை இயக்கங்களில் சேரத் தூண்டியது. அதே போல, இலங்கையில் 1983 இனக்கலவரம், ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்களை விடுதலை இயக்கங்களில் சேர்த்து விட்டது. அன்று ஈழத்தில் இயக்கங்களில் புதிதாக சேர்ந்த இளைஞர்கள், பயிற்சிக்காக இந்தியா சென்றார்கள். ஏனென்றால், அனைத்து இயக்கங்களும், இந்தியாவில், தமிழ் நாட்டில் தான், பயிற்சி முகாம்களை கொண்டிருந்தன. அதே போல அன்று பாலஸ்தீன இயக்கங்கள் யாவும், ஜோர்டானில் நிலை கொண்டிருந்தன. இஸ்ரேலின் எல்லையான ஜோர்டான் நதிக்கரை அருகில், பயிற்சி முகாம்கள் அமைந்திருந்தன. ஈழ விடுதலை அமைப்புகளின் தலைமையகங்கள் சென்னையில் இருந்ததைப் போல, பாலஸ்தீன இயக்கங்கள் ஜோர்டானின் தலைநகர் அம்மானில் தலைமையகங்களை கொண்டிருந்தன. அன்று தமிழ் நாட்டில் ஈழப் போராளிக் குழுக்கள் ஆயுதங்களுடன் நடமாடுமளவிற்கு சுதந்திரம் இருந்தது. இந்திய அரசு, தமிழ்நாடு மாநில அரசு ஆகியனவற்றின் செல்வாக்கு அவர்களுக்கு இருந்தது.

ஆரம்ப காலத்தில் முப்பதுக்கும் குறையாத ஈழ விடுதலை அமைப்புகள் தோன்றியிருந்தன. ஒரு சில, நாலைந்து உறுப்பினர்களை மட்டுமே கொண்ட சிறிய இயக்கங்களாக இருந்தன. அன்று ஜோர்டானிலும் ஐம்பதுக்கும் குறையாத பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் தோன்றின. அரபு நாடுகளில் இருந்து பணம் வருகின்றது என்பதற்காக இயக்கம் தொடங்கியவர்களும் உண்டு. பதா போன்ற தேசியவாத அமைப்புகளும், PFLP போன்ற மார்க்சிய அமைப்புக்களுமாக அவர்களுக்கிடையில் கொள்கை வேறுபாடு காணப்பட்டது. அதே போன்று ஈழ விடுதலை அமைப்புகளிலும், ஒரு சில தேசியவாதத்தையும், வேறு சில மார்க்சியத்தையும் தமது கொள்கைகளாக கொண்டிருந்தன. 1984 ம் ஆண்டு யாழ் குடாநாடு போராளிக் குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அந்தக் காலத்தில் A .K . 47 துப்பாக்கிகளை ஏந்திய இயக்க உறுப்பினர்கள், "பிக்-அப்" வாகனத்தில் பவனி வருவார்கள். அதே போன்ற காட்சிகளை அன்று ஜோர்டானில் இருந்தவர்கள் கண்டிருப்பார்கள். ஆமாம், அதே A .K . 47, அதே பிக் அப் வண்டி, போராளிகளின் தோற்றமும் ஒரே மாதிரித் தான் இருக்கும். (வெளியே இழுத்து விடப்பட்ட சட்டை. மார்பில் சன்னக் கூடுகளை வைக்கும் "ஹோல்சர்" பை. இத்தியாதி.)
ஒரு காலத்தில், தமிழக மக்களுக்கு ஈழப் போராளிகள் மீது மதிப்பும், மரியாதையும் இருந்தது. பின்னர் சில துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் அது இறங்குமுகமாகியது. ஜோர்டானிலும் அதே போன்ற நிலை காணப்பட்டது. உதாரணத்திற்கு குற்றச் செயலில் ஈடுபட்ட ஒரு பாலஸ்தீன போராளியை ஜோர்டான் போலீசார் கைது செய்திருந்தனர். கைதியை விடுவிக்குமாறு, சம்பந்தப் பட்ட போராளியின் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போலிஸ் நிலையம் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இது போல நிறைய சம்வங்கள் இடம்பெற்றன. தமிழகத்தில் போராளிக் குழுக்கள் தமக்குள் மோதிக் கொண்ட "பர்மா பஜார் சம்பவம்" போன்ற பல ஜோர்டானிலும் இடம்பெற்றன.

அன்று ஈழ விடுதலை அமைப்புகள் தமிழகத்தை பின்தளமாக பயன்படுத்துவதற்கு சில குருட்டு நம்பிக்கைகள் காரணமாக இருந்தன. "இந்தியாவிலும் தமிழர்கள் பெருமளவில் வாழ்கின்றனர். அதனால் இந்திய அரசு எப்போதும் ஈழத்தமிழருக்கு சார்பாகவே நடக்கும். ஒரு போதும் ஈழ விடுதலை அமைப்புகளை அடக்க துணியாது. அது தமிழகத்தில் கிளர்ச்சியை தோற்றுவிக்கும்...." இவ்வாறு அந்த நம்பிக்கை அமைந்திருந்தது. ஜோர்டானில் தளம் அமைத்திருந்த பாலஸ்தீன விடுதலை அமைப்புகளும் அதே போன்ற குருட்டு நம்பிக்கையுடன் செயற்பட்டார்கள். "ஜோர்டானில் பெருமளவு பாலஸ்தீனர்கள் வாழ்கின்றனர். (1948 ல் இஸ்ரேலை விட்டு வெளியேறிய பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் குடியுரிமை வழங்கப்பட்டது.) அதனால் ஜோர்டான் அரசு விடுதலை அமைப்புகளை அடக்குமாகில், பாலஸ்தீன பிரஜைகள் கிளர்ந்தெழுவார்கள்..." 1970 ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் அந்த நம்பிக்கை தவிடுபொடியாகியது.

பேசும் மொழி ஒன்றாகிலும், பாலஸ்தீன, ஜோர்டானிய மக்கள் மத்தியில் கலாச்சார வேறுபாடுகள் உண்டு. பாலஸ்தீனர்கள் நகர்ப்புற கலாச்சாரத்தை கொண்டவர்கள். மேலைத்தேய கல்விகற்ற மத்தியதர வர்க்கத்தைக் கொண்டிருந்தது. அதற்கு மாறாக ஜோர்டானியர்கள் "பெதூயின்" என்ற நாடோடி சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்களது கலாச்சாரமும் நாட்டுப்புறம் சார்ந்தது. மன்னர் ஹுசைன் ஹஷமித் குலத்தை சேர்ந்தவர். மன்னரின் குல விசுவாசம், பெதூயின் படைவீரர்களின் விசுவாசம் என்பன, பாலஸ்தீனருக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு உதவின.
மன்னர் ஹுசைனுக்கு விசுவாசமான ஜோர்டானிய படைகள், பாலஸ்தீன ஆயுதபாணி இயக்கங்கள் மீது யுத்தம் தொடுத்தது. "கறுப்பு செப்டம்பர்" என்று அழைக்கப்படும் அந்தப் போரின் பின்னர், ஒரு பாலஸ்தீன போராளியை கூட ஜோர்டானில் விட்டு வைக்கவில்லை. போராளிகள் மத்தியில் இழப்பு அதிகமாக காணப்பட்டது. அனைத்து பாலஸ்தீன விடுதலை இயக்கங்களும் ஜோர்டானை விட்டு வெளியேறி, லெபனானில் தளம் அமைத்தன.

1983 ம் ஆண்டு, இந்தியா ஆயுதம் கொடுக்கிறது, பயிற்சி கொடுக்கிறது என்று, அனைத்து ஈழ விடுதலை அமைப்புகளும் இந்தியாவில் தளமமைத்தன. இருந்தாலும் அன்று சில மார்க்சிய அமைப்புகள் இந்தியாவை "பிராந்திய வல்லரசு" என்றன. பங்களாதேஷில் இந்திய தலையீட்டை விளக்கும், "வங்கம் தந்த பாடம்" என்று ஒரு நூல் கூட வெளிவந்தது. "முதலாளித்துவ நாடுகளுக்கு எதிரான புரட்சி என்ற கொள்கை, இந்திய முதலாளித்துவ அரசுக்கும் எதிரானது தான்." என்பதை ஒத்துக் கொண்டன. அதெல்லாம் சொல்லில் மட்டுமே, செயலில் காட்ட தயங்கினார்கள். ஆனால் ஜோர்டானில் நிலைமை வேறாக இருந்தது. மார்க்சிய PLFP ஜோர்டானிய தொழிற் சங்கங்களுக்குள் ஊடுருவியது. பொதுவுடைமை புரட்சிக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் தலைநகர் அம்மானில் கூட காணப்பட்டன. PFLP உறுப்பினர்கள் மசூதிகளையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளில் தொழுகைக்கு அழைப்பு விடுப்பதற்கு பதிலாக, கார்ல் மார்க்சின் மேற்கோள்கள் ஒலிபரப்பாகின. பிற்காலத்தில் ஒரு நேர்காணலின் போது, "மார்க்சிஸ்ட்கள் ஜோர்டானில் குட்டையை குழப்பியதாக...." யாசிர் அரபாத் தெரிவித்தார். இருப்பினும் சில சம்பவங்கள், அமெரிக்கா, ஜோர்டான் அரசு மீது அழுத்தம் பிரயோகிக்க காரணமாக இருந்தது உண்மை தான். அது வேறொன்றுமில்லை. PFLP, சில மேற்குலக நாடுகளின் விமானங்களை வெற்றிகரமாக கடத்தி, ஜோர்டானுக்குள் கொண்டு வந்து விட்டது!

இந்தியாவுக்கும், ஈழத்திற்கும் நடுவில் 20 மைல் கடற்பரப்பு இருந்தது. ஆரம்ப காலங்களில், ஈழப் போராளிகள் இந்தியாவில் இருந்து இலங்கை சென்று தாக்குதல் நடத்தி விட்டு திரும்பிச் சென்றனர். அதே போல, பாலஸ்தீன போராளிகளும் ஜோர்டானில் இருந்து இஸ்ரேலுக்குள் சென்று தாக்குதல் நடத்தி விட்டு திரும்பி விடுவார்கள். ஜோர்டான், இஸ்ரேலிய எல்லையான ஜோர்டான் நதி எல்லை தாண்டுவதற்கு இலகுவானது. பாலஸ்தீன போராளிகளின் தாக்குதலால், இஸ்ரேலிய அரசுக்கும், ஜோர்டானிய அரசுக்கும் இடையில் முறுகல் நிலை இருந்தது. ஈழப் போராளிகளின் தாக்குதலால், இலங்கை, இந்திய அரசுகள் ஒன்றையொன்று பகைத்துக் கொண்டன. ஆனால் அந்தப் பகைமை எல்லாம் இந்திய - இலங்கை ஒப்பந்தம் வரையில் தான். அதன் பிறகு இந்திய இராணுவமே ஈழப் போராளிகளை எதிர்த்துப் போரிட்டது. 1970 கறுப்பு செப்டம்பரும், அதே போன்ற அரசியல் மாற்றத்தின் விளைவாகும். இஸ்ரேலிய அரசுக்கும், ஜோர்டான் அரசுக்கும் இடையில் இரகசியமாக நட்புறவு ஏற்பட்டது. ஜோர்டான் மன்னர் ஹுசைன் ஒரு சி.ஐ.ஏ. ஏஜென்ட் என்பது பின்னர் பகிரங்கமாகியது. மார்க்சிய PFLP கூட அதைக் காரணமாக காட்டி ஹுசைன் எதிர்ப்பு பிரச்சாரம் செய்து வந்தது. ஆனால் அன்று அயலில் இருந்த அரபு நாடுகள், ஹுசைன் அரசு கவிழ்வதை விரும்பவில்லை என்பது யதார்த்தம்.

பாலஸ்தீன விடுதலை அமைப்புகளை ஜோர்டான் தனது நலன்களுக்காக பயன்படுத்தியது. மேற்குக்கரை, காஸா போன்ற பகுதிகளில் செல்வாக்கு செலுத்துவது ஜோர்டானின் உள்நோக்கம். அதற்கு இஸ்ரேலின் ஒத்துழைப்பு கிட்டியதும் பாலஸ்தீன விடுதலை அமைப்புகளை கைவிட்டது. ஈழ விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவின் பங்கும் அதே போன்றதே. இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களை தனது ஆதிக்கத்திற்கு உட்படுத்துவதே இந்தியாவின் நோக்கமாக இருந்தது. இலங்கை அரசு அதற்கு விட்டுக் கொடுத்ததும், ஈழ விடுதலை அமைப்புகள் இந்தியாவுக்கு தேவைப் படவில்லை. பாலஸ்தீன-ஈழப் பிரச்சினைகள் தொடர்பாக சர்வதேச சமூகமும் ஒரே முடிவைத் தான் கொண்டிருந்தது. இஸ்ரேலிய அரசு, பாலஸ்தீன விடுதலை இயக்க சமாதான பேச்சுவார்த்தைக்கு அனுசரணையாளராக இருந்தது நோர்வே. இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் சமாதான பேச்சுவார்த்தைக்கும் நோர்வே தான் அனுசரணையாளர். இந்த உதாரணம் ஒன்றே போதும், பாலஸ்தீனரும், ஈழத் தமிழரும் ஒரே விதியை கொண்ட சகோதர இனங்கள் என்பதை நிரூபிக்க.

(தொடரும்)

தொடரின் முன்னைய பகுதிகளை வாசிக்க:

9.தமிழீழ - பாலஸ்தீன சகோதரத்துவம் : ஒரு மீள் பார்வை
8. "தமிழர்கள்" ஒப்பிட விரும்பாத கம்யூனிச யூதர்கள்
7.பிரிட்டிஷ் பாலஸ்தீனம், யூத இஸ்ரேலான வரலாறு

6.இஸ்ரேலின் வாகரையும், இலங்கையின் காஸாவும்
5.
சியோனிஸம்: ஏகாதிபத்தியத்தின் நவ காலனிய முகம்
4.யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்
3.அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்
2.
இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்
1.
தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?

Tuesday, November 09, 2010

"மேற்கு சஹாரா" மக்களின் போராட்டம் நசுக்கப் படுகின்றது

மொரோக்கோவில் தனி நாடு கேட்டுப் போராடும், "மேற்கு சஹாரா" மக்களின் போராட்டம், மீண்டும் ஒரு முறை மொரோக்கோ இராணுவத்தினால் நசுக்கப் பட்டுள்ளது. மொரோக்கோவின் தென் மாநிலமான மேற்கு சஹாரா ஸ்பானிய காலனியாக இருந்தது. 1975 ல், ஸ்பெயின் தனது காலனியை விட்டு வெளியேறிய உடனேயே, அந்தப் பிரதேசம் மொரோக்கோவினால் ஆக்கிரமிக்கப்பட்டது. "காஷ்மீர் பிரச்சினை" போல, மேற்கு சஹாரா மக்களிடம் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென ஐ.நா. அவை தீர்மானித்தது. இருப்பினும் மொரோக்கோ அரசின் அமெரிக்க சார்பு நிலைப்பாடு காரணமாக, அந்த கருத்துக் கணிப்பு இன்று வரை நடத்தப் படவில்லை. மேற்கு சஹாரா மீதான மொரோக்கோ ஆக்கிரமிப்பு தொடர்கின்றது.

மேற்கு சஹாரா பிரதேச மக்கள் அரபு மொழி பேசிய போதிலும், இனரீதியாக பெரும்பான்மை மொரோக்கோ மக்களிடம் இருந்து வேறுபடுகின்றனர். POLISARIO என்ற அமைப்பு, மொரோக்கோ ஆக்கிரமிப்புக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தது. அயல் நாடான அல்ஜீரியா POLISARIO அமைப்பிற்கு ஆதரவு வழங்கியது. இருந்த போதிலும், மொரோக்கோ இராணுவத்தின் கண்மூடித்தனமான விமானக் குண்டு வீச்சுகள் காரணமாக, மேற்கு சஹாரா மக்கள் எல்லை கடந்து அல்ஜீரியாவினுள் தஞ்சம் கோரினார்கள். மொரோக்கோ, அல்ஜீரிய எல்லையில் சிறிய பிரதேசம் POLISARIO கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. கட்டுப்பாடு எல்லையோரமாக மொரோக்கோ நீளமான பாதுகாப்பு மதில் கட்டியுள்ளதால், மேலதிக அகதிகள் வெளியேற்றம் தடுக்கப்பட்டது.

கடந்த மாதம், மேற்கு சகாராவில் வேறெந்த நாட்டிலும் காணப்படாத மக்கள் எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. மொரோக்கோ இராணுவத்தின் அடக்குமுறையை பொறுக்க முடியாத மக்கள், தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்து, மாநிலத் தலைநகரமான லாயூன் (Laayoune) விட்டு வெளியேறினார்கள். பாலைவனத்தில் கூடாரங்களை அமைத்து தங்கினார்கள். மக்கள் எழுச்சியை சிறிது காலம் பொறுத்துக் கொண்ட மொரோக்கோ இராணுவம், இறுதியில் தனது கோர முகத்தைக் காட்டியது. பாலைவன கூடார முகாம்கள் ஹெலிகாப்டர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதலில் சிக்கி மூன்று பேர் கொல்லப்பட்டனர். கீழேயுள்ள வீடியோ, களத்தில் இருந்து பிரத்தியேகமாக அனுப்பப்பட்டது. முகாம்கள் மீது ஹெலிகாப்டர் தாக்குதல் நடப்பதையும், மக்கள் சிதறி ஓடுவதையும் வீடியோவில் பார்க்கலாம்.
சம்பவம் குறித்து BBC இணையத்தளம் வழங்கிய செய்திக் குறிப்புக்கான சுட்டியை சொடுக்குவதன் மூலம் மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.Three dead as Morocco breaks up Western Sahara camp