Showing posts with label இலங்கைப் பொருளாதாரம். Show all posts
Showing posts with label இலங்கைப் பொருளாதாரம். Show all posts

Thursday, April 21, 2022

சிங்கள ராஜபக்சேக்களும் தமிழ் முதலாளிகளும்- திருடர்களின் கூட்டணி

 
ராஜபக்சே குடும்பத்தினர் கொள்ளையடித்த சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்குவதற்கு இரண்டு தமிழ் கோடீஸ்வர தொழிலதிபர்கள் உதவி இருக்கிறார்கள். ஒருவர் முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்சேயின் கணவர் திருக்குமரன் நடேசன். மற்றவர் புலம்பெயர்ந்த தமிழ் தொழிலதிபர் வேலுப்பிள்ளை கணநாதன்.

இறுதிப்போர் முடிவில், தமிழர்களுக்காக போராடுவதாக சொல்லிக் கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கம் வைத்திருந்த ஏராளமான நகைகள், மில்லியன் கணக்கான இலங்கை ரூபாய்கள், மற்றும் பல்லாயிரம் டாலர்கள் அனைத்தையும் அரசுடமையாக்காமல் ராஜபக்சே குடும்பத்தினரே சொந்தமாக்கிக் கொண்டார்கள். இவற்றை ஹெலிகாப்டரில் கொண்டு சென்று ராஜபக்சேவிடம் ஒப்படைத்த பைலட் பின்னர் மர்மமான முறையில் கொல்லப் பட்டுள்ளார். 
 
அத்துடன் மகிந்த ராஜபக்சேயின் பதவிக்காலத்தில் லஞ்சமாகவும், வேறு முறைகேடான வழிகளிலும் பெற்றுக் கொண்ட பணம் ஏராளம் இருக்கும். இந்தப் பணம் யாவும் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளன. அங்கு பல அசையும், அசையா சொத்துக்களில் முதலிட்டுள்ளனர். போலி நிறுவனங்களின் பெயரில் வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளனர்.

இதற்கு நிருபமாவும் அவர் கணவர் திருக்குமரனும் உதவி இருக்கிறார்கள். மகிந்த ராஜபக்சேயின் நெருங்கிய உறவினரான நிருபமா, யுத்தம் முடிந்த பின்னரான காலத்தில் பிரதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். இவர் தமது அரசாங்க பொறுப்புகளை துஸ்பிரயோகம் செய்து தான், கறுப்புப் பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல உதவியிருக்கிறார்.  
 
திருக்குமரன், நிருபமா தம்பதியினர் லண்டன் நகர மத்தியில் ஆடம்பர வீடுகள் வாங்கி வாடகைக்கு விட்டிருக்கிறார்கள்.  இவர்கள் மேற்கு ஐரோப்பா, அவுஸ்திரேலியாவிலும் ரியல் எஸ்டேட்டில் முதலிட்டு உள்ளனர். இவற்றின் பெறுமதி பல மில்லியன் டாலர்கள். அதை விட பல மில்லியன் டாலர்கள் பணமாக துபாய், சீஷெல்ஸ், மற்றும் பல நாடுகளில் உள்ள வங்கிகளில் வைப்பிலிடப் பட்டுள்ளன.
 
உலகில் எந்த முதலாளிக்கும் தேசப்பற்று, இனப்பற்று அறவே கிடையாது. இலங்கையில் ஒரு பிரதி அமைச்சராக பதவி வகித்தவரே தனது தனது நாட்டு மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை கொண்டு சென்று பணக்கார நாடுகளில் முதலிட்டிருக்கிறார். குறைந்த பட்சம் அவற்றை தாய்நாட்டில் முதலிட்டிருந்தாலாவது ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.
 
நிருபமாவின் கணவர் திருக்குமரன் ஒரு கோடீஸ்வர தொழிலதிபர் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம். இவர் தனது வணிகத் தொடர்புகளை பயன்படுத்தில் பல்வேறு போலி நிறுவனங்கள், அறக்கட்டளைகளை உருவாக்கி மேற்கத்திய பணக்கார நாடுகளில் முதலிட்டுள்ளார். இவற்றின் மொத்த மதிப்பு பதினெட்டு மில்லியன் அமெரிக்க டாலர்கள். இலங்கையில் ஒரு தனி மனிதனின் சராசரி வருட வருமானம் நாலாயிரம் டாலர்கள்.

திருக்குமரன் நடேசன் ஆரம்பத்தில் இருந்தே "அரசியலில் ஈடுபடாத" வணிகத்தை மட்டுமே கவனித்து வந்த தொழிலதிபராக தன்னைக் காட்டி வந்துள்ளார். அத்துடன் இலங்கையில் பல இந்துக் கோயில்களுக்கு வாரி வழங்கி தன்னை ஒரு கொடை வள்ளலாக காட்டிக் கொண்டார். ஈழப்போர் தீவிரமடைந்த தொண்ணூறுகளில் தான் இவரது வணிகமும் கொடிகட்டிப் பறந்துள்ளது. 
 
திருக்குமரன் நடேசன், இலங்கையில் முதலிடுவோருக்கு ஆலோசனை வழங்குவதாக சொல்லி Pacific Commodities Ltd என்ற பெயரில் ஒரு போலி நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வந்தார். Pacific Commodities Ltd, வரியில்லா சொர்க்கம் என்று அழைக்கப்படும் பிரித்தானியாவுக்கு சொந்தமான சேனல் மற்றும் ஜெர்சி தீவுகளில் பதிவுசெய்யப் பட்டது. அதனால் எவ்வளவு பணம் இலங்கையை விட்டு வெளியே சென்றுள்ளது என்ற விபரம் தெரிய வராது.

அத்துடன் நடேசன் அப்போதே கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹில்டன் ஹோட்டலின் உரிமையாளராகி விட்டார். கடந்த இருபத்தைந்து வருடங்களாக ஹோட்டல் நிர்வாகக் குழுவின் (board of directors, Hotel Developers Ltd) தலைவராக இருந்து வருகிறார். இவரது மாதச் சம்பளம் அப்போதே நான்கு இலட்சம் (Rs 400,000) இலங்கை ரூபாய்கள். அவரது மனைவி நிருபமா அப்போது அரசியலில் ஈடுபடவில்லை.

இங்கே குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவெனில், தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தற்போது எதிர்க்கட்சியாக உள்ள யு.என்.பி. ஆட்சியில் இருந்தது. ராஜபக்சே குடும்பத்திற்கு நெருக்கமான தொழிலதிபர் இலங்கையில் ஒரு மிகப்பெரிய முதலீட்டாளராக இருப்பதை அவர்களும் தடுக்கவில்லை. அதுவும் இனப்பிரச்சினை காரணமாக எழுந்த போர் உச்சத்தில் இருந்த காலத்தில் ஒரு தமிழ் தொழிலதிபரை யாரும் கண்டுகொள்ளவில்லை. 
 
இலங்கையில் அப்போதும் இப்போதும் இன உணர்வை விட பண உணர்வே பிரதானமானது. இனப்பற்று, தேசப் பற்று எல்லாம் அப்பாவி உழைக்கும் வர்க்க மக்களை ஏமாற்றுவதற்கான வார்த்தை ஜாலங்கள். ராஜபக்சே குடும்பத்தினர் பூர்வீகத்தில் கிறிஸ்தவர்களாக இருந்தவர்கள். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒரு நிலவுடைமைப் பரம்பரையை சேர்ந்தவர்கள். ஒரு காலத்தில் பல ஏக்கர் கணக்கிலான வயல் காணிகளும், தென்னந் தோப்புகளும் இவர்களுக்கு சொந்தமாக இருந்துள்ளன. 

*****

மகிந்த ராஜபக்சே ஜனாதிபதி பதவியில் இருந்த காலத்திலும் அதற்குப் பின்னரும் அடிக்கடி திருப்பதிக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்த பயணச் செலவை பொறுப்பெடுத்து, தனியார் விமானத்தில் அனுப்பி வைத்தவர் கணநாதன் என்ற ஒரு தமிழ் தொழிலதிபர். மகிந்த திருப்பதிக்கு சென்ற காரணம் சாமி கும்பிடுவதற்காக அல்ல. அனேகமாக வெளிநாடுகளில் உள்ள வணிக முதலீடுகளை மேற்பார்வை செய்வதற்கான பயணங்களாக அவை இருக்க வேண்டும்.

யார் இந்த கணநாதன்? இவரைப் பற்றிய தகவல்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. பெரும்பாலும் முன்பு புலம்பெயர்ந்த நாடுகளில் புலிகளின் சொத்துக்களை மேற்பார்வை செய்த பினாமியாக இருந்திருக்க வாய்ப்புண்டு. போர் முடிந்த பின்னர் பல முன்னாள் பினாமிகள் புலிகளின் சொத்துக்களை சொந்தமாக்கிக் கொண்டார்கள். அவர்களில் பலர் தற்போது ராஜபக்சே குடும்பத்தினருடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வருகிறார்கள். கணநாதனும் அவர்களில் ஒருவராக இருந்தால் அதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

வேலுப்பிள்ளை கணநாதன் ஏற்கனவே உகண்டாவில் இலங்கைக்கான உயர் ஸ்தானிகராக நியமிக்கப் பட்டிருந்தார். கோத்தபாய ராஜபக்சேயின் ஆட்சிக் காலத்தில் இந்த நியமனம் வழங்கப் பட்டுள்ளது. கடந்த வருடம், அதாவது 2021 ம் ஆண்டில் இருந்து தான், உகண்டாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான வணிகத் தொடர்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. இலங்கையை சேர்ந்த நிறுவனங்கள் உகண்டாவில் முதலிடத் தொடங்கின. இந்த நிறுவனங்கள் யாவும் ராஜபக்சே குடும்பத்தினருக்கு சொந்தமான பினாமி நிறுவனங்கள் என்றே கருதப் படுகின்றன. இவற்றை எல்லாம் மேற்பார்வை செய்யும் பொறுப்பு ஒரு புலம்பெயர்ந்த தமிழ் முதலாளியான கணநாதனிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

பெரும்பான்மை தமிழர்களிடம் ராஜபக்சே சகோதரர்கள் பற்றிக் கருத்துக் கேட்டால் "அவர்கள் சிங்கள இனவாதிகள் அல்லது சிங்கள பௌத்த பேரினவாதிகள்" என்று பதில் கூறுவார்கள். அதே மாதிரி பெரும்பான்மை சிங்களவர்களிடம் கேட்டால் "அவர்கள் சிங்களத் தேசியவாதிகள் அல்லது இலங்கை தேசப் பற்றாளர்கள்" என்று பதில் கூறுவார்கள். (பொருளாதார நெருக்கடி, மக்கள் எழுச்சிக்கு முன்னரான நிலைமை.) இரண்டு பக்கமும் உள்ள "தேசியவாதிகள்" (அல்லது இனவாதிகள், ஏதோ ஒன்று) இப்படியான அரசியலை தான் கட்டமைத்துள்ளனர். இனப்பிரச்சினை நிலவும் நாட்டில், குறிப்பிட்ட ஒரு இனத்தவர் தாம் பேசுவது தேசியவாதம் என்றும், எதிரி இனத்தவர் பேசுவது இனவாதம் என்றும் பொதுவாக பேசிக் கொள்வார்கள்.

அந்தந்த இனத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் தலைவர்கள் தாமே சிறந்த தேசியவாதிகள் என்பது மாதிரி காட்டிக் கொள்வார்கள். ஆகவே, ராஜபக்சே சகோதரர்களும் தாமே தலைசிறந்த தேசியவாதிகள், இனப்பற்றாளர்கள், தேசப் பற்றாளர்கள் என்பது மாதிரியான பிம்பத்தை சிங்கள மக்கள் மத்தியில் கட்டமைத்து வைத்திருந்தார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அந்த விம்பத்தை உடைத்தெறிந்து விட்டது. 
 
ஒரு காலத்தில் தேசியத் தலைவர்கள் என்று போற்றிய அதே மக்கள் இன்று தேசத் திருடர்கள் என்று தூற்றிக் கொண்டிருக்கிறார்கள். ராஜபக்சே சகோதரர்கள், இனிமேலும் தேசியவாதம், இனவாதத்தை மட்டுமே நம்பி ஆட்சி நடத்த முடியாத நையறு நிலையில் உள்ளனர். இது தேசியவாதம் பேசும் அத்தனை பேருக்கும் படிப்பினையாக அமைய வேண்டும்.

Wednesday, December 28, 2016

எழுபதுகளில் பொருளாதாரப் பிரச்சினை, எழுந்தது ஈழக் கோரிக்கை!

[வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!] 
(ஏழாம் பாகம்)

கடந்த முப்பதாண்டு கால இலங்கை வரலாற்றில், தேசியவாத, இனவாத, மதவாதக் கருத்துக்கள் முன் எப்போதும் இருந்ததை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் அதிகமாகக் காணப் படுகின்றது. அதே நேரம், இலங்கையின் பொருளாதாரம் முதலாளித்துவத்தை, குறிப்பாக நவ தாராளவாத கொள்கையை சிறப்பாக நடைமுறைப் படுத்தி வருவதையும் காணலாம். இவ்விரண்டு போக்குகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எனது கடந்த கால வாழ்க்கை அனுபவத்தைக் கொண்டு, அதை இங்கு ஆராய்கிறேன்.

இலங்கையில் இன்று தீவிரமாக தமிழ்த் தேசியம் பேசுவோர் எப்போதும் ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினராக இருப்பார்கள். அதாவது, மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த பூர்ஷுவா மனப்பான்மை கொண்டவர்கள் என்பதை இலகுவாக நிரூபிக்கலாம். அவர்களில் தொண்ணூறு சதவீதமானோர் முதலாளித்துவத்தை ஆதரிக்கிறார்கள். அதனால் கிடைத்த நன்மைகளை அனுபவிக்கிறார்கள். அதாவது, படித்து பட்டம் பெற்று, ஏதாவதொரு உத்தியோகம் பார்ப்பவர்களாக அல்லது வணிகத் துறையில் இருப்பார்கள்.

இது ஒன்றும் இரகசியம் அல்ல. அவர்களாகவே ஒத்துக் கொள்ளும் உண்மை. சிங்களத் தேசியவாதிகள், முஸ்லிம் தேசியவாதிகள் யாரென்று பார்த்தால், அவர்களும் மேற்படி வர்க்கத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் எல்லோருக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன.
- சமூகத்தில் மேன்நிலை அந்தஸ்தில் இருப்பவர்கள்.
- வசதியான வாழ்க்கை வாழ்பவர்கள்.
- முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள்.
- கம்யூனிசத்தை, இடதுசாரியத்தை வெறுப்பவர்கள்.

சிங்கள-தமிழ்-முஸ்லிம் எந்த சமூகத்தை சேர்ந்த தேசியவாதியாக இருந்தாலும், மேற்படி அரசியல் கொள்கைகளையும் பின்பற்றுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் நவ தாராளவாத பொருளாதாரத்தின் குழந்தைகள். எண்பதுகளுக்குப் பிறகு பிறந்தவர்கள் தான் இந்த இளைய தலைமுறையினர். அதே காலகட்டத்தில் தான் இலங்கையில் முதலாளித்துவம் வளர்ச்சி பெற்றிருந்தது. முதலாளித்துவத்திற்கு சேவை செய்பவர்களை உருவாக்குவதற்காக, பாடத் திட்டங்களில் கூட மாற்றங்கள் செய்யப் பட்டிருந்தன.

முப்பது வருடங்களுக்கு முன்னர், இலங்கை ஒரு அரை நிலப்பிரபுத்துவ, அரை முதலாளித்துவ நாடாக இருந்த படியால், நிலப்பிரபுத்துவ எச்சங்களும் பரவலாக காணப் பட்டன. குறிப்பாக எழுபதுகளில் கூட, யாழ்ப்பாண தமிழ்ச் சமூகம் சாதிய கட்டுமானங்களை கைவிட்டிருக்கவில்லை. அதனால் தான் தேசியவாதம் அங்கு காலூன்றுவதற்கு சிறிது காலம் எடுத்தது. தெற்கில் சிங்களத் தேசியவாதம் தோன்றி பல தசாப்தங்களுக்கு பிறகு தான், வடக்கில் தமிழ்த் தேசியவாதம் நிலை கொண்டது. அதற்கான காரணம் என்ன?

அப்போது வட மாகாணத்தில் முதலாளித்துவம் வளர்ச்சி அடைந்திருக்கவில்லை என்பதும் ஒரு முக்கிய காரணம். இலங்கையின் தொழிற்துறை முழுவதும் தெற்கில் தான் காணப்பட்டன. கொழும்புத் துறைமுகம் பெருமளவு தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்தது. இந்தியாவில் இருந்து கூட தொழிலாளர்கள் வந்து வேலை செய்தார்கள். ஆனால், வடக்கில் எந்த அபிவிருத்தியும் நடக்கவில்லை. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை தவிர வேறெந்த தொழிற்துறையும் அங்கே இருக்கவில்லை.

முதலாளித்துவம் வரும் போதே தன்னோடு சேர்த்து வர்க்கங்களையும் அழைத்துக் கொண்டு வரும். அதாவது, ஒரு நாட்டில் முதலாளித்துவ உற்பத்திகள் அதிகரிக்கும் பொழுது, ஒரு பக்கம் முதலாளிய- பூர்ஷுவா வர்க்கமும், மறுபக்கம் உழைக்கும்- பாட்டாளி வர்க்கமும் உருவாகும். அது பழைய நிலப்பிரபுத்துவ சமூக உறவுகளை சீர்குலைப்பதால், சாதிய முரண்பாடுகளும் மறைந்து போகின்றன. தென்னிலங்கையில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அந்த மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. அதனால், சுதந்திரத்திற்கு முன்பிருந்தே அங்கே சிங்களத் தேசியவாதம் இருந்து வருவதில் ஆச்சரியப் பட எதுவுமில்லை.

ஒரு நாட்டில் தொழிற்துறையும், அதை சார்ந்த தொழிலாளர்களும் அதிகரிக்கும் நேரம், அங்கே இடதுசாரிக் கட்சிகள் பலம் பெறுவதையும் தவிர்க்க முடியாது. அது இலங்கையிலும் நடந்தது. எமது வீட்டில் நடக்கும் அரசியல் கலந்துரையாடல்களில், தவிர்க்கமுடியாமல் இடதுசாரிகள் பற்றிய கதைகளும் அடிபடும். அதற்குக் காரணம் இருக்கிறது. ஐம்பதுகள், அறுபதுகளில் கொழும்பில் அடிக்கடி வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெறும்.

பாலா தம்பு என்ற தமிழ் இடதுசாரி தொழிற்சங்கத் தலைவர் பற்றி, எமது வீட்டில் அப்பாவும், அவர்களது நண்பர்களும் அடிக்கடி பேசுவார்கள். அன்று அவர்கள் மிகவும் மதித்த அரசியல் தலைவர்களில் பாலா தம்புவும் ஒருவர். அப்போது நான் சிறுவனாக இருந்த படியால், பல விடயங்களை புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கவில்லை. இருப்பினும் தொழிலாளர்களின் போராட்டங்கள் பற்றிப் பேசும் பொழுது, அது பற்றித் தெரியாமல் இருக்க முடியாது.

அன்றைய காலகட்டத்தில் மத்தியதர வர்க்கத்தினர் எல்லோரும் பூர்ஷுவா மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கவில்லை. தமக்குக் கீழே இருந்த பாட்டாளி வர்க்கத்துடன் தங்களையும் சேர்த்து ஒரே உழைக்கும் வர்க்கம் என்ற எண்ணம் இருந்தது. எனது பெற்றோரின் தனிப்பட்ட கருத்துக்களும் அப்படித் தான் இருந்தன. அதனால், அன்று நடந்த வேலைநிறுத்த போராட்டங்களுக்கு அவர்கள் ஆதரவளித்தனர். அப்போதெல்லாம் அரச ஊழியர்களும் பங்கெடுத்த நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றன.

அரசியல் ரீதியாக எனது அப்பாவும் ஒரு வலதுசாரி தான். தமிழ்த் தேசியவாதி தான். இதை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். இருப்பினும், அவர் எதையும் பிரச்சார நோக்கில் பேசவில்லை. நியாயம் எங்கே இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்டவராக இருந்தார். தற்போதுள்ள வலதுசாரி தமிழ் தேசியவாதிகள் மாதிரி, "தமிழரின் சுய நிர்ணயத்தை ஏற்றுக் கொள்ளாத இடதுசாரிகள் நாசமாகப் போகட்டும்!" என்று சாபம் போடவில்லை. அவரவர் அரசியல் நிலைப்பாட்டுக்கு மதிப்புக் கொடுப்பதும், அவர்கள் பக்க நியாயங்களை ஏற்றுக் கொள்வதும் அவசியம் என்றுரைத்தார்.

உண்மையில், முதன்முதலாக ஜேவிபி யை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததும் என் தந்தை தான். அவர் வேலை செய்த இடத்தில் ஜேவிபி ஆதரவாளர்கள் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள் மூலம் கிடைத்த ஜேவிபியின் தமிழ்ப் பிரசுரங்களையும் எனக்கு வாசிக்கத் தந்தார். இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய ஒரு பிரசுரமும் அவற்றில் இருந்தது. அது இப்போதும் என் ஞாபகத்தில் உள்ளது. அப்போது அதைப் புரட்டி வாசித்திருக்கிறேன். ஆனால், அதைப் புரிந்து கொள்ளுமளவிற்கு அரசியல் அறிவு போதுமானதாக இருக்கவில்லை.

அதற்காக, அப்பா அன்று ஜேவிபியை ஆதரித்தார் என்று யாரும் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அன்றிருந்த நிலைமை வேறு. பிற்காலத்தில் எவ்வாறு தமிழ் மக்கள் புலிகளின் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு வழங்கினர் என்பதை நான் இங்கு குறிப்பிடத் தேவையில்லை. அதே மாதிரியான நிலைப்பாடு தான் அன்று ஜேவிபி தொடர்பாகவும் இருந்தது. கணிசமான அளவு சிங்கள மக்கள் மட்டுமல்ல, தமிழ் மக்களும், மறைமுகமாக ஜேவிபிக்கு தமது தார்மீக ஆதரவை வழங்கி இருந்தனர். அதற்குக் காரணம், அரச இயந்திரத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருந்தார்கள். அரசின் மீது எல்லோருக்கும் விமர்சனம் இருந்தது. அவர்கள் ஜேவிபி வடிவில் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்தார்கள்.

மேலும் ஜேவிபி குட்டி முதலாளிய வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தியது. தாய்மொழியில் கல்வி கற்ற, கீழ் மத்தியதர வர்க்க இளைஞர்களை கவர்ந்திருந்தது. அப்போதிருந்த சிறிமாவோ அரசும் சோஷலிசத்தை ஆதரிப்பதாக சொல்லிக் கொண்டது. சோவியத் யூனியன், சீனா போன்ற சோஷலிச நாடுகளுடன் நெருங்கிய தொடர்புகள் வைத்திருந்தது. ஜேவிபி சோஷலிச இலங்கைக்காக ஆயுதமேந்திப் போராடுவதாக அறிவித்த நேரம், அந்த நாடுகள் எதுவும் ஆதரவு வழங்கவில்லை. மாறாக, ஜேவிபி கிளர்ச்சியை மூர்க்கமாக ஒடுக்கிய சிறிலங்கா அரசை ஆதரித்தன. ஆயுதங்களும் கொடுத்துதவின.

உலகில் எந்த நாட்டினதும் ஆதரவு கிடைக்காத நிலையில், அல்லது அப்படி எதையும் எதிர்பார்க்காத காரணத்தால், ஜேவிபி "மண்ணுக்கேற்ற மார்க்சியம்" ஒன்றை உருவாக்கி இருந்தது. அதில் தேசியவாதத்தின் கூறுகளும் அடங்கி இருந்தன. சர்வதேச அளவில், வட கொரியாவும், கம்பூச்சியாவும் இது போன்ற மாற்றங்களுக்கு உள்ளாகி இருந்தன. வட கொரியாவில் கிம் இல் சுங், கம்பூச்சியாவில் பொல் பொட் ஆகியோரைப் பின்பற்றி, இலங்கையில் ரோகன விஜேவீர புதிய சித்தாந்தம் ஒன்றை உருவாக்கி இருந்தார்.

எழுபதுகளில் ஒரு குழப்ப நிலை இருந்தது. பலருக்கு சரியான அரசியல் பாதை எதுவென தெரிவு செய்ய முடியாமல் இருந்தது. அன்றைய இலங்கையின் சமூக பொருளாதாரமும் அதற்கான முக்கிய காரணம். அந்நிய நாட்டு இறக்குமதி பெருமளவு குறைக்கப் பட்டது. இலங்கை தற்காப்புப் பொருளாதாரத்தை பின்பற்றியது. பெரிய நிறுவனங்கள் எல்லாம் அரசால் தேசியமயமாக்கப் பட்டிருந்தன. அரசு தான் நாட்டில் மிகப் பெரிய தொழில் வழங்குனராக இருந்தது. பெரும்பான்மையான மத்திய தர வர்க்கத்தினர் அரச ஊழியர்களாக இருந்தனர்.

அன்று பங்குச் சந்தை என்ற சொல்லையே யாரும் கேள்விப் பட்டிருக்கவில்லை. அப்படி எதுவும் இருக்கவில்லை. 1977 ம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சிக்கு வந்த பின்னர் தான் தனியார்மயம் புகுத்தப் பட்டு பங்குச் சந்தை உருவானது. அப்போது பல பெரிய நிறுவனங்களின் மதிப்பு பங்குகளாக பிரிக்கப் பட்டு, பொது மக்களுக்கும் விற்பனை செய்யப் பட்டது. எனது அப்பாவும் சில பங்குகள் வாங்கி இருந்தார். அந்தக் காலத்தில் இதெல்லாம் ஒரு விளையாட்டுப் போன்றிருந்தது. எதிர்கால பொருளாதாரத்தில் பங்குச் சந்தை வகிக்கப் போகும் பிரதானமான பாத்திரம் குறித்து அன்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

இலங்கையில் வாழும் மக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு, "சோஷலிசம் அல்லது இடதுசாரியம் பிடிக்காது" என்பதாக இன்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. அன்றும் முதலாளித்துவத்தை ஆதரித்த லிபரல்வாதிகள் பலர் இருந்தனர். அவர்கள் யாரென்று பார்த்தால், சமூகத்தில் உயர்ந்த இடத்தில் வாழும் மேட்டுக்குடியினராக இருப்பார்கள். அப்படியானவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. மொத்த சனத்தொகையில் அதிக பட்சம் ஒரு சதவீதம் கூட இருக்காது. அன்று அவர்களது குரல் பெரிதாகக் கேட்கவில்லை.

நான் முன்னர் குறிப்பிட்டது போன்று, ஒரு வலதுசாரி, முதலாளிய ஆதரவாளரான என் தந்தையே சோஷலிசத்தையும் ஆதரித்தார்! அதற்குக் காரணம் என்ன தான் முதலாளித்துவத்தின் மீது பற்று இருந்தாலும், சோஷலிசம் தவிர்க்க முடியாதது என நம்பினார். உதாரணத்திற்கு, சிறிமாவோ காலம் பற்றிய அப்பாவின் விமர்சனங்களை எடுத்துக் காட்டலாம்.

பொதுத் தேர்தலில் சிறிமாவோ ஆட்சியில் இருந்து அகற்றப் பட்டு, ஜே.ஆர். தாராளமயம் கொண்டு வந்த காலத்தில் தான், அப்பா அந்த விமர்சனத்தை முன்வைத்தார். பொருளாதார விடயத்தில் அந்த அரசாங்கத்தின் குறிக்கோள் நல்லது தான். மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியது தான். சிலவேளை, இன்னும் சில வருடங்கள் போயிருந்தால் அதன் பலன் கிடைத்திருக்கலாம். ஆனால், நடைமுறையில் மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு நிலைமை இருந்தது. மக்கள் கஷ்டத்திற்கு மேல் கஷ்டத்தை அனுபவித்து விட்டார்கள். இதற்கு மேலும் சகிக்க முடியாது என்ற நிலைமையில் தான் தேர்தலில் தோற்கடிக்க வைத்தனர்.

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்துவதற்கு கால அவகாசம் தேவை என்று சொல்லி, சிறிமாவோ அரசாங்கம் சட்டத்திற்கு மாறாக ஏழாண்டுகள் ஆட்சி நடத்தியது. வெளிநாட்டு இறக்குமதி நிறுத்தப் பட்டு, உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிக்கப் பட்டது. ஐந்தாண்டு, பத்தாண்டுத் திட்டம் என்ற பெயரில் அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப் பட்டன. விவசாயம் அதன் மையப் பொருளாக இருந்தது. அரசு மானியங்கள் வழங்கி விவசாயிகளை ஊக்குவித்தது.

எங்கும், எப்போதும் விவசாயம் பற்றிய பேச்சாக இருந்தது. அன்று மத்திய தர வர்க்கத்தை சேர்ந்த பலர் விவசாயிகளாக மாறி இருந்ததை, இங்கே முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். ஒரு சாதாரணமான ஆசிரியர் கூட, மாதாந்த சம்பளப் பணத்தில் இருந்து சேமித்த தொகையில், ஒரு துண்டு நிலம் வாங்கி விவசாயம் செய்தார். வன்னியில் நிலம் இன்னும் மலிவாகக் கிடைத்தது. படித்த வாலிபர் திட்டத்தின் கீழ் அரசு இலவசமாகவும் நிலம் கொடுத்தது.

மத்திய தர வர்க்க உத்தியோகம் பார்த்தவர்கள், விவசாயத்தை ஒரு பகுதி நேரத் தொழிலாக செய்து வந்தனர். அதன் மூலம் இரட்டிப்பு வருமானம் கிடைத்தது. அதனால் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டவர்கள் பலருண்டு. எனது பெற்றோரும் அவர்களில் அடக்கம். எனது அப்பாவும் அடிக்கடி வன்னிக்கு சென்று விவசாயம் செய்து விட்டு வருவார்.

அந்தக் காலத்தில் "கமத்தொழில் விளக்கம்" என்ற சஞ்சிகை பிரபலமாக இருந்தது. பயிர்ச் செய்கை, கால்நடை வளர்ப்பு பற்றிய கட்டுரைகள், படங்களுடன் பிரசுரிக்கப் பட்டிருந்தது. எல்லோருக்கும் புரியக் கூடிய மொழிநடையில் எழுதப் பட்டிருக்கும். எங்கள் வீட்டில் அது கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப் பட்டு இருந்தது. அவற்றை வாசித்து எனது விவசாய அறிவையும் பெருக்கிக் கொண்டேன். பாடசாலையில் தொழிற்கல்வி ஒன்றை தெரிவு செய்ய வேண்டும் என்ற நிலைமை வந்த நேரம், நான் விவசாய பாடம் தெரிவு செய்து படித்தேன். என்னைப் பொறுத்தவரையில், மிகவும் இலகுவான பாடங்களில் அதுவும் ஒன்று.

மேற்குறிப்பிட்ட காலப் பின்னணியை வைத்துப் பார்க்கும் பொழுது, அன்றிருந்த மக்கள் சோஷலிசத்தை சிறந்ததாக நினைத்ததில் தவறேதும் இல்லை என்பது தெளிவாகும். சிறிமாவோ காலத்தில் உணவுப் பொருட்கள், உடைகள், பாவனைப் பொருட்களுக்கு பற்றாக்குறை இருந்தது. அதனால் ஏராளமான மக்கள் கஷ்டப் பட்டனர். இதற்கிடையே, ஓரிரு வருடங்கள் பருவ மழை பெய்யாத படியால் வரட்சி நிலவியது. அரசு செயற்கை மழை உருவாக்க எத்தனித்தும், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

எழுபதுகளில் ஏற்பட்ட காலநிலை மாற்றமும் இலங்கைப் பொருளாதாரத்தில் பெரியளவு தாக்கம் செலுத்தியது. அது சமூக அரசியலும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. மழை வீழ்ச்சி குறைந்த படியால் விவசாயம் பாதிக்கப் பட்டது. பஞ்சம் ஏற்பட்டது. இறக்குமதிக்கு எதிரான சிறிமாவோ அரசாங்கமே அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இப்படியான பொருளாதாரப் பிரச்சினைகளால் ஏற்பட்ட மக்களின் மனக்குமுறல் அரசியலில் எதிரொலித்தது.

பொதுத் தேர்தலில் சிறிமாவோவின் சுதந்திரக் கட்சிக்கு படுதோல்வி கிட்டியது. எதிர்பாராத விதமாக வடக்கு, கிழக்கில் அத்தனை ஆசனங்களையும் கைப்பற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்கட்சியாக வந்தது. அது முன்வைத்த தமிழீழக் கோரிக்கை பிரபலமடைந்தது. அதைத் தொடர்ந்து தமிழீழத்திற்காக ஆயுதமேந்திப் போராடுவதாக சொன்ன விடுதலைப் புலிகள் போன்ற இயக்கங்களின் தாக்குதல்களும் அதிகரித்தன.

ஆகவே, இதிலே முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் ஒன்றுள்ளது. தமிழ்த் தேசியவாதிகள் பிரச்சாரம் செய்வது போன்று, "ஒன்றுபட்ட தமிழ் இன உணர்வும், தமிழீழத்திற்கான வேட்கையும்" ஈழபோருக்கான உந்துசக்திகளாக இருக்கவில்லை. அதற்கான சமூகப் பொருளாதார காரணிகளை யாரும் ஆராய்வதில்லை. இலங்கையில் சிறிமாவோ அரசும், இந்தியாவில் இந்திராகாந்தி அரசும், இறக்குமதியை தடுத்து உள்ளூர் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்தன.

அந்தக் காலத்தில் இரு நாடுகளிலும் வெவ்வேறு பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவியது. இது கடத்தல்காரர்களுக்கு வாய்ப்பாகப் போனது. வல்வெட்டித்துறையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தினசரி கடத்தல் படகுகள் சென்று வந்தன. அது ஒரு சட்டவிரோத பொருளாதாரமாக வளர்ந்து கொண்டிருந்தது. குட்டிமணி போன்ற கடத்தல்தொழிலில் ஈடுபட்ட சிலர், துப்பாக்கிகள் வைத்திருந்தனர். அவர்கள் அரசியல் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருந்தனர்.

தமிழ்நாட்டுடன் கடத்தல் வியாபாரம் செய்து வந்த அரசியல் ஆர்வலர்கள், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சிலரை கைக்குள் வைத்திருந்தார்கள். ஒரு இரகசியமான ஆயுதக் குழுவின் உருவாக்கத்திற்கு அவை போதும். ஒரு காலத்தில் TELO "முதன் முதலாக தோன்றிய இயக்கம்" என்று பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தது. குட்டிமணி, தங்கத்துரையை தலைவர்களாகக் கொண்ட TELO இயக்கம் பற்றி நான் இங்கே குறிப்பிடத் தேவையில்லை. குறிப்பிட்ட காலம் பிரபாகரனும் அதில் இருந்தார். 1983 வெலிக்கடை சிறைப் படுகொலைகளில், குட்டிமணி, தங்கத்துரை கொல்லப் பட்டதும், இயல்பாகவே ஈழ விடுதலை இயக்கங்களுக்கு தமிழ் மக்களின் ஆதரவு பெருகியது.

அதை விட, எழுபதுகளில் மழைவீழ்ச்சி குறைந்த படியால், விவசாயம் பாதிக்கப் பட்டதும் மக்களை வேறு திசையில் சிந்திக்க வைத்திருந்தது. அதுவே கூட்டணி தமிழீழத்தை முன்மொழிந்த வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான ஆதரவாகவும் மாறி இருந்தது. தென்னிலங்கையில் சிங்கள வாக்காளர்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து யு.என்.பி. க்கு வாக்களித்தனர். அதே தான் வட இலங்கையிலும் நடந்தது. தமிழ் வாக்காளர்களும் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து தான், த.வி.கூ. க்கு வாக்களித்தனர். அன்று இலங்கையில் நடந்த மாற்றம் ஒன்று தான். ஆனால், காலப்போக்கில், சிங்களவர்களும், தமிழர்களும், அதனை இன முனைப்புக் கொண்ட அரசியலாக மொழிபெயர்த்துக் கொண்டனர்.

(தொடரும்) 

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1. வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை! 
2. வேற்றுக் கிரக வாசிகளான தமிழினத்தில் வர்க்க வேற்றுமை கிடையாது! 
3.தமிழனின் உழைப்பை சுரண்டிய பணத்தில் நல்லூர்க் கோயிலில் அன்ன தானம்! 
4. ஒரு பிச்சைக்காரனுக்கு உணவிட முடியாத கடவுளால் என்ன பிரயோசனம்? 
5. ஜேவிபி, புலிகளுக்கு இடையிலான ஐக்கியத்தை வலியுறுத்திய தமிழர்கள்!
6. தேர்தல் பாதை திருடர் பாதை ஈழப் புரட்சி ஒரு சர்வதேசப் புரட்சி

Friday, February 13, 2015

சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினை : மீண்டும் சூடு பிடிக்கும் தண்ணீருக்கான போராட்டம்


யாழ்ப்பாணம் சுன்னாகம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில், நிலத்தடி நீர் மாசடைவதால் யாழ்ப்பாணத் தமிழர்கள் பலர் தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர். அவர்களது போராட்டக் குணாம்சம் பாராட்டத் தக்கது.

தமிழீழப் போராட்டம், தேசியவாத கருத்தியல் சார்ந்தது  என்பதால், அதற்கும் ஏகாதிபத்தியத்திற்கும், அல்லது பொருளாதாரத்திற்கும் தொடர்பில்லை என்று கடந்த முப்பதாண்டுகளாக புளுகிக் கொண்டு திரிந்தார்கள். அநேகமாக கம்யூனிச எதிர்ப்பாளர்கள், முதலாளித்துவ ஆதரவாளர்கள், தூய தேசியவாதம் பேசி, தமிழ் மக்களின் பிரச்சனைகளை மூடி மறைத்தார்கள். தற்போது சிலர் மீண்டும், அதே தவறைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள். 

யாழ்ப்பாணத்திற்கான மின்சார விநியோகம் செய்வதற்காக, சுன்னாகத்தில் மின் பிறப்பாக்கிகள் பொருத்தப் பட்டன. அதன் மூலம் ஒரு காலத்தில், யாழ் நகரமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும், வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு ஆகிய யாழ் குடா நாட்டின் மேற்குப் பகுதிகளுக்கு மட்டும் மின்சாரம் கிடைத்து வந்தது. அதற்கு காரணம் உள்ளது. அந்தப் பகுதிகளில் தான் சன நெருக்கம் அதிகம். பெரும்பாலான யாழ் உயர் சாதியினர், மேட்டுக்குடியினர் அங்கே தான் வசிக்கின்றனர்.

யாழ் குடாநாட்டின் ஏனைய பகுதிகளான வட மராட்சி, தென் மராட்சி பகுதிகளுக்கு எண்பதுகளின் இறுதிப் பகுதியில், தெற்கில் இருந்து கொண்டு வரப் பட்ட லக்சபான மின்சாரம் வழங்கப் பட்டது. சுன்னாகத்தில் உற்பத்தி செய்யப் படுவது அசுத்தமான அனல் மின்சாரம். அதே நேரத்தில், தென்னிலங்கை லக்சபான நீர்த்தேக்கத்தில் இருந்து வந்தது சுத்தமான மின்சாரம். ஈழப் போர் தீவிரமடைந்த காலத்தில், லக்சபான மின்சாரம் துண்டிக்கப் பட்டாலும், சுன்னாகம் அனல் மின் நிலையம், சில குறைபாடுகளுடன் இடைக்கிடை இயங்கிக் கொண்டிருந்தது.

ஈழப்போர் தொடங்கிய எண்பதுகள் வரையில், இலங்கை முழுவதும் பெரும் தொழிற்துறைகள் தேசியமயமாக்கப் பட்டிருந்தன. அதனால், சுன்னாகம் அனல் மின்சார நிலையமும் அரசுடைமையாக இருந்தது. அப்போதெல்லாம் நிலத்தடி நீர் மாசடைவது தொடர்பான பிரச்சினைகள் எதுவும் எழவில்லை. ஈழப்போரின் இறுதியில், இலங்கையின் பொருளாதாரமும் உலகமயமாக்கலின் கீழ் கொண்டு வரப் பட்டது. பல வெளிநாட்டு நிறுவனங்கள், இலங்கையில் முதலீடு செய்வதற்கு அனுமதிக்கப் பட்டது. அதனால் வந்தது வினை.


ஒரு மலேசிய பன்னாட்டு நிறுவனம், "நொதேர்ன் பவர்" என்ற பெயரில் சுன்னாகம் அனல் மின்சார நிலையத்தை வாங்கி நடத்தியது. உலகில் எந்த நாட்டிலும், பன்னாட்டு நிறுவனங்கள் சுற்றுச் சூழல் தொடர்பாக அக்கறை காட்டுவதில்லை. யாழ்ப்பாணத்திலும் அது தான் நடந்தது. நொதேர்ன் பவர் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு பாவித்த கழிவு எண்ணையை, நிலத்தடி நீர் நிலைகளில் கலக்க விட்டது. 

தொழிற்சாலைக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன. மேற்கத்திய நாடுகளில் அது கறாராக நடைமுறைப் படுத்துவதால், அங்கே உற்பத்திச் செலவுகள் அதிகம். ஆனால், இலங்கை போன்ற வறிய நாடுகளின் அரசாங்கங்களை பண பலத்தின் மூலம் பணிய வைக்கும் நிறுவனங்கள், அந்த விதி முறைகளை பின்பற்றுவதில்லை. சுன்னாகத்திலும் அது தான் நடந்தது.

சுன்னாகம் மட்டுமல்ல, தென்னிலங்கையில் வெலிவாரியா, கேரளாவில் பிளாச்சி மாடா, மற்றும் பல ஆசிய, ஆபிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் சுற்றுச் சூழலை மாசடையைச் செய்கின்றன. பிளாச்சி மாடாவில் கொக்கோ கோலா கம்பனி நிலத்தடி நீரை உறிஞ்சி மாசடைய வைத்ததால் அங்கே பெரும் போராட்டம் நடந்தது. 

"கத்தி" எனும் சினிமாப் படத்தின் கதை, அதனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பாட்டது. அப்போது, "கத்தி ஒரு கம்யூனிசப் படமா?" என்று நக்கல் அடித்த ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் கூட, இன்று இந்த யாழ்ப்பாண நீர் மாசடைவதற்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அத்தகைய இரட்டை வேடம், யாழ்ப்பாண மக்களால் கண்டிக்கப் பட வேண்டும். இன்று சுன்னாகம் நீர்ப் பிரச்சினைக்காக போராடுவதற்காக மட்டும் முன்னுக்கு வரும் இவர்கள், பிளாச்சிமாடா, வெலிவாரியா பிரச்சினைகள் நடந்த நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். அவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று சொல்ல வரவில்லை. ஆனால், இப்போதாவது தமது கடந்த கால தவறுகளை உணர்ந்து, தம்மை சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடையும் பிரச்சினைக்காக, கொழும்பில் கூட கவன ஈர்ப்பு போராட்டம் நடந்துள்ளது. பாராட்ட வேண்டிய நல்ல விடயம். ஆனால், அதற்குள்ளும் சிலரது (யாழ் மத்தியதர வர்க்க) சுயநலம் ஒளிந்திருப்பதை மறுக்க முடியாது. கொழும்பில் வாழும் பெரும்பாலான யாழ்ப்பாணத் தமிழர்களின் பூர்வீகம் வலிகாமம் பகுதியாக இருக்கும். அதனால் தமது ஊர், தமது உறவினர்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்ற காரணத்தினாலும், அவர்களில் பலர் போராட்டத்திற்கு முன்வந்துள்ளனர்.

உண்மையில், யாழ்ப்பாணம் ஒரு வறண்ட பிரதேசம். அதனை சோமாலியாவுடன் ஒப்பிடலாம். சோமாலியாவில் உள்ள சில பகுதிகளும், யாழ் மாவட்டமும் புவியியல் அமைப்பில் ஒரே மாதிரியாக உள்ளன. அதனால் பிரச்சினைகளும் ஒரே மாதிரித் தான் அமைந்துள்ளன. சோமாலியாவில் தோன்றிய தண்ணீர்ப் பிரச்சினை, வரட்சி காரணமாக அங்கே நீண்ட காலமாக உள்நாட்டுப் போர் நடந்தது. 

யாழ்ப்பாணத்தில் ஈழப் போர் தொடங்குவதற்கும் எழுபதுகளில் ஏற்பட்ட வரட்சி, தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாக இருந்தது. ஈழப் போராட்டக் குழுக்களும், சோமாலியா போராளிக் குழுக்களும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நடத்தைகளை கொண்டிருந்தன என்பது இன்னும் விசேஷம்.  அந்த நாட்டிலும் சாதிப் பாகுபாடுகள் உள்ளன. இவை எல்லாம் சோமாலியா நாட்டு அகதிகளுடன் உரையாடிய நேரம் அறிந்து கொண்ட விடயங்கள். ஆனால், அதைப் பற்றி எழுதினால், கட்டுரையின் நோக்கம் திசை திருப்பப் பட்டு விடும் என்பதால், அது பற்றி நான் இங்கே ஆராய விரும்பவில்லை.

ஒரு காலத்தில், யாழ்ப்பாணத்தில் சாதிப் பிரச்சினை மிகவும் தீவிரமாக இருந்தது. உண்மையில், ஈழத் தமிழர்கள் வாழும் கிழக்கு மாகாணம், வன்னி ஆகிய பகுதிகளை விட யாழ்ப்பாணத்தில் சாதிப் பாகுபாடு அதிகமாக இருந்துள்ளது. அதற்குக் காரணமும், நிலத்தடி நீர்ப் பிரச்சினை தான்.

யாழ்ப்பாண குடாநாட்டில் ஆறுகள் எதுவும் கிடையாது. மன்னர் காலத்தில் தோண்டப்பட்ட தொண்டமானாறு கடல் நீரையே கொண்டுள்ளதால், அது பயிர்ச் செய்கைக்கு ஏற்றது அல்ல. வன்னியில் உள்ளதைப் போல பெரிய குளங்களும் அங்கே இல்லை. வருடாந்த மழை வீழ்ச்சியும் குறைவு. அதனால், நிலத்தடி நீர் தான் பிரதானமானது.

யாழ் குடாநாட்டில் நிலத்தடி நீர் எல்லா இடங்களிலும் குடிப்பதற்கான நன்னீராக இருப்பதில்லை. பெரும்பாலான இடங்களில் உவர் நீர் தான் கிடைக்கும். யாழ்ப்பாண புவியியல் அமைப்பை அறிந்தவர்களுக்கு தெரிந்த உண்மை இது. நன்னீர் கிடைக்கும் கிணறுகள், ஒன்றில் கோயில்களுக்கு அருகில், அல்லது உயர் சாதியினரின் நிலங்களில் தான் இருக்கும். 

தாழ்த்தப் பட்ட சாதியினர் வாழும் இடங்களில் உள்ள கிணறுகளில் பெரும்பாலும் உவர் தண்ணீர் தான் கிடைக்கும். தாழ்த்தப் பட்ட சாதியினர், தமது குடி தண்ணீர் தேவைக்காக, கோயில் கிணறுகளில், அல்லது உயர் சாதியினரின் வீடுகளில் தான் தண்ணீர் அள்ளிக் கொண்டு வருவார்கள். அதுவும் அவர்களாக அள்ளிக் கொள்ள முடியாது. உயர் சாதி நபர் ஒருவர் கிணற்றில் அள்ளி குடத்தில் ஊற்றிக் கொடுக்க வேண்டும்.

எங்கள் ஊருக்கு அருகில் இருந்த கோயிலின் நல்ல தண்ணீர்க் கிணற்றில், ஒரு தடவை தாழ்த்தப் பட்ட சாதி இளைஞர்கள் தாமாகவே தண்ணீர் அள்ளி விட்டார்கள். அதனால், "கிணறு தீட்டுப் பட்டு விட்டது" என்று சொல்லிய உயர் சாதியினர், அங்கே கழிவு எண்ணையை கொண்டு வந்து கொட்டினார்கள். அதற்குப் பிறகு கிணற்று நீர் முழுவதையும் வாரி இறைத்து விட்டு தான் பயன்படுத்த வேண்டி இருந்தது. ஈழப் போர் தொடங்கிய 1982 ம் ஆண்டளவில் நடந்த சம்பவம் இது. யாழ் குடாநாடு முழுவதும் இது போன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன.

மேற்குறிப்பிட்ட உண்மைகள், இன்றைக்கு சுன்னாகம் நீருக்காக போராடும் உயர் சாதியை சேர்ந்த இளைய தலைமுறையினருக்கு தெரியாது. அதனைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமும் இல்லை. தங்களது வீட்டுக் கிணற்றுக்குள் ஒரு பன்னாட்டு நிறுவனம் கொட்டிய கழிவு எண்ணைக்காக போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களிடம் கேட்டால், யாழ்ப்பாணத்தில் சாதிப் பிரச்சினையே கிடையாது என்று பூசி மெழுகுவார்கள்.

தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்று அடிக்குமாம். முன்னொரு காலத்தில், உயர் சாதி யாழ்ப்பாண மத்தியதர வர்க்கம் தரப்படுத்தலால் பாதிக்கப் பட்ட காரணத்தினால் ஈழப் போராட்டம் நடந்தது போன்று, தற்போதும் அதே வர்க்கத்தை சேர்ந்த இளைய தலைமுறையினர் தான் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இதற்கிடையே, "சுயநிர்ணய உரிமை கேட்ட தமிழர்கள், கடைசியில் நிலத்தடி நீர் உரிமைக்காக போராட வேண்டிய அவலம் நேர்ந்து விட்டது..." என்று தமிழ்த் தேசியவாதிகள் புலம்பித் திரிகிறார்கள். அது அவர்களது அரசியல் அறிவின் போதாமையை வெளிப்படுத்துகிறது. சுயநிர்ணய உரிமை என்பது நிலத்தடி நீரையும் உள்ளடக்கியது தான். தண்ணீரும் ஓர் அத்தியாவசியப் பொருள் என்பதால், அதை அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும். தமிழீழம் கிடைத்தால் அதைச் செய்ய மாட்டார்களா? 

அது மட்டுமல்ல, தமிழீழம் கிடைத்தால் "திறந்த சந்தைப் பொருளாதாரம்" என்று சொல்லிக் கொண்டு, நொதேர்ன் பவர் போன்ற பன்னாட்டு கம்பனிகள் முதலிடுவதை அனுமதிப்பார்களா? "ஆம்" என்றால், அவர்களும் யாழ்ப்பாண மக்களின் எதிரிகள் தான். யாழ்ப்பாணத் தமிழ் மக்கள், சிறிலங்கா அரசுக்கு எதிராக மட்டும் போராடினால் போதாது. ஏகாதிபத்தியம், முதலாளித்துவம், வலதுசாரித் தேசியவாதத்திற்கும் எதிராக தமது போராட்டத்தை விரிவு படுத்த வேண்டிய நேரம் இது.


இதனுடன் தொடர்பான முன்னைய பதிவுகள்:

Saturday, January 31, 2015

மைத்திரி ஆதரவாளர்களே, மக்களின் கோரிக்கைகளுக்காகவும் போராடுங்களேன்!


இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள மைத்திரி அரசு, பல அத்தியாவசிய பாவனைப் பொருட்களின் விலைகளை அதிரடியாக குறைத்துள்ளது. இதனால், சாதாரண உழைக்கும் வர்க்க மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பலர் இதனை "பொருட்களின் விலைகுறைப்பு" (விற்பனை விலை) என்று தான் புரிந்து கொள்கின்றனர். ஆனால், உண்மையில் இவ்வளவு காலமும், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீதும், அரசு அறவிட்டு வந்த வரிகள் தான் குறைக்கப் பட்டுள்ளன!

இதனால், இந்த வருடம் அரசுக்கு வர வேண்டிய, 92.4 பில்லியன் வருமானம் இழக்கப் படும். அதன் காரணமாக, பட்ஜெட்டில் துண்டு விழும் தொகையை ஈடுகட்டுவதற்காக, வேறொரு இடத்தில் இருந்து வருமானத்தை எடுக்க வேண்டி இருக்கும். அது எந்த இடம் என்பதையும் மைத்திரி அரசு ஏற்கனவே அறிவித்து விட்டது.

பணக்காரர்களின் சூதாட்டவிடுதிகளான, காசினோக்கள் பெருந்தொகை ஒன்றை, அதாவது ஒரு பில்லியன் ரூபாய்கள் வரியாக செலுத்த வேண்டும். அதுவும் ஒரு தடவை தானாம். இலட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கொண்ட, விளையாட்டு சேனல்கள் கூட ஒரு பில்லியன் வரி கட்ட வேண்டும். இதனால், மகிந்த ராஜபக்சவின் புதல்வனுக்கு சொந்தமான சேனல் ஒன்றும் பாதிக்கப் படும். 

அதே மாதிரி, சாட்டலைட் தொலைக்காட்சிகளும் ஒரு தடவை ஒரு பில்லியன் ரூபாய் கட்ட வேண்டும். எனக்குத் தெரிந்த வரையில், இலங்கையில் பெரும்பாலும் தமிழர்கள் தான் சாட்டலைட் தொலைக்காட்சி சேனல்களை அதிகம் பார்வையிடுகின்றனர். மேலும், மொபைல் தொலைபேசி நிறுவனங்களும் ஒரு பில்லியன் வரி கட்ட வேண்டும்.

இது ஒரு வகையில் "ராபின் ஹூட் வரி" என்று முதலாளித்துவ ஊடகங்களே தெரிவிக்கின்றன. அதாவது, மைத்திரி அரசு பணக்காரர்களிடம் வரி அறவிட்டு, ஏழைகளுக்கு உதவுகிறது. உள்ளூர் கமக்காரர்களுக்கு உதவும் வகையில், அவர்களிடம் இருந்து வாங்கும் பாலுக்கான விலை பல மடங்கு உயர்த்தப் பட்டுள்ளது. இதனால், உள்ளூர் விவசாயிகளும் ஊக்குவிக்கப் படுவர் என்று நினைத்துக் கொள்ளலாம்.

இங்கே எழும் கேள்வி என்னவெனில், இந்த "ராபின் ஹூட் வரி" இன்னும் எத்தனை வருடங்களுக்கு நடைமுறைப் படுத்தப் படும்? காஸினோக்கள், சாட்டலைட், மொபைல் நிறுவனங்கள் மீதான ஒரு பில்லியன் வரி, ஒரு தடவை மாத்திரமே அறவிடப்படும் என்பது சந்தேகத்தை எழுப்புகின்றது. ஆகையினால், அடுத்த வருடத்தில் இருந்து, பழைய குருடி கதவைத் திறடி என்ற கதையாக, பொருட்களின் விலைகள் மீண்டும் ஏற்றப் படலாம்.

பிரேசில் நாட்டில் வரிகளற்ற சமுதாயம் ஒன்றிற்காக, அங்குள்ள மக்கள் போராடி வருகின்றனர். உலகில் எல்லா நாடுகளிலும், குறைந்தளவு வருமானம் ஈட்டுவோர் தான், அதிகளவு வரி கட்டி வருகின்றனர். இந்த நிலைமை மாற வேண்டும்.

இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள மைத்திரி அரசு, அத்தியாவசிய பாவனைப் பொருட்களுக்கான வரிகளை குறைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அரசு இனிமேல் உழைக்கும் வர்க்க மக்களிடம் இருந்து வரியே அறவிடக் கூடாது என்று கோரிக்கை வைக்க வேண்டும்.

பாவனைப் பொருட்கள் மீதான வரிகள், அநேகமாக இடைக்காலத்தில் வந்த மதிப்புக் கூட்டு வரி (VAT) ஆக இருக்க வேண்டும். பொதுவாக, வர்த்தகர்கள் தான் அதனை பாவனையாளர்களிடம் அறவிட்டு, அரசாங்கத்திற்கு கட்டி வருகின்றனர். இதில் நடக்கும் முறைகேடுகள் காரணமாக, வரிப் பணம் ஒழுங்காக அரசுக்கு போய்ச் சேர்வதில்லை.

இடையில் உள்ள வர்த்தகர்கள் விழுங்கி ஏப்பம் விடும் வரியை இரத்து செய்வதால், அரசுக்கு என்ன குறை வந்து விடப் போகின்றது? இதனால், பொது மக்களுக்கு தான் அதிக நன்மை உண்டாகும். பாவனைப் பொருட்களின் விலை நிரந்தரமாக குறையும்.

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்கு வோட்டுப் போட்ட தமிழ் வாக்காளர்கள், மைத்திரிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த தமிழ் நடுத்தர வர்க்கத்தினர், இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பார்கள் என்று நம்புகிறேன். தமிழ் தேசியவாத தலைவர்களில் ஒருவரான மனோ கணேசன் "இது நமது அரசாங்கம்" என்று கூறியுள்ளார். "நமது அரசாங்கம்" என்றால், நமது மக்கள் சொல்வதைக் கேட்க வேண்டுமல்லவா?

**********

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடந்த அதே காலத்தில் தான் கிரீசிலும் பொதுத் தேர்தல் நடந்தது. கிரேக்க நாட்டில் பதவியேற்றுள்ள, சீரிசா எனும் இடதுசாரிக் கட்சி, நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பின்வரும் திட்டங்களை செயற்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
இலங்கையில் மைத்திரி அரசும், மக்களின் நன்மை கருதி அதே மாதிரியான திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று, அவரை ஆதரித்து ஓட்டுப் போட்ட தமிழ் மக்கள் அழுத்தம் கொடுப்பார்கள் என்று நம்புவோமாக. 

Saturday, October 18, 2014

புதுக்குடியிருப்பில் தரகு முதலாளிய இராணுவத்தின் ஆடைத் தொழிற்சாலை

தமிழினப் படுகொலை நடந்த புதுக்குடியிருப்பில், ஏகாதிபத்திய தரகு முதலாளிகளின் சுரண்டல் ஆரம்பம். தமிழ்ப் பெண் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி, அமெரிக்கர்களின் பாவனைக்கான மலிவு விலை ஆடைகளை தயாரிப்பதற்கு, வன்னியை ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவம் உதவி வருகின்றது.

தமிழர்களுக்கு எதிரான, சிங்கள பேரினவாத அடக்குமுறைக்கும், தரகு முதலாளித்துவத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் என்ன தொடர்பு? "இலங்கையில் இருப்பது இனப் பிரச்சினை மட்டுமே.... முதலாளித்துவ/ஏகாதிபத்திய பிரச்சினை அல்ல..." என்று பல படித்த மேதாவிகள் கூட நம்புகிறார்கள். அவர்கள் தேசியவாதம் என்ற வரட்டு சூத்திரத்தை நம்பி, தாங்களும் ஏமாந்து, மக்களையும் ஏமாற்றி வருகின்றனர்.

ஹிர்டாரமணி குரூப் (The Hirdaramani Group), இலங்கையின் மூன்றாவது பெரிய ஆயத்த ஆடைத் தயாரிப்பு நிறுவனம். கடந்த பல தசாப்தங்களாக, மலிவு விலை ஆடைகளை தயாரித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது. இது வரை காலமும் தென்னிலங்கை தொழிலாளர்களை சுரண்டிக் கொழுத்த தரகு முதலாளிய நிறுவனம், ஈழப் போர் முடிவுக்குப் பின்னர் வட இலங்கைத் தொழிலாளர்களையும் சுரண்டத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே வவுனியாவில் போட்டுள்ள தொழிற்சாலை இயங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது புதுக்குடியிருப்பில் புதிதாக இன்னொரு தொழிற்சாலையை கட்டவுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் உண்மையான ஆட்சியாளர்களான இராணுவ அதிகாரிகளே, புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி உள்ளனர்.

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை, அடுத்த வருடம் அளவில் இயங்கத் தொடங்கும் என்று தெரிவிக்கப் படுகின்றது. முதற் கட்டமாக, 450 தமிழ்ப் பெண்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும். அடுத்த சில வருடங்களில், ஆயிரக் கணக்கான தமிழ் யுவதிகள் அங்கே வேலை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. ஹிர்டாரமணி குரூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும் டோனி நடராஜா என்ற ஒரு தமிழர் தான் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

முல்லைத்தீவில், சிங்கள இராணுவத்தின் மேற்பார்வையின் கீழ், புதிய தொழிலாளர்களுக்கான தொழிற்பயிற்சி இப்போதே ஆரம்பமாகி விட்டது. வெகு விரைவில், ஈழத் தமிழ்ப் பெண்களிடம் சுரண்டப் பட்ட உழைப்பு, அமெரிக்கக் கடைகளில் மலிவுவிலை ஆடைகளாக விற்பனை செய்யப் படும்.

ஈழப் போர் - சிங்கள பேரினவாதம் - அமெரிக்க ஏகாதிபத்தியம், இவற்றுக்கு இடையிலான தொடர்பை அறிந்து கொள்ள விரும்பாதவர்கள், கண்களை மூடிக் கொண்டிருக்கலாம். "ஏகாதிபத்தியம் எங்கே இருக்கிறது? இலங்கையில் இருப்பது இனப் பிரச்சினை மட்டும் தான்..." என்று ஒரே பல்லவியை திரும்ப திரும்ப பாடிக் கொண்டிருக்கலாம்.

எதற்காக மூலதனமும், தரகு முதலாளிய நிறுவனங்களும் வன்னியை தேர்ந்தெடுத்தன? சீனாவில் உள்ள ஆடை ஏற்றுமதித் தொழிற்துறைக்கு அமெரிக்கா விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக, வட இலங்கைக்கு அந்த வாய்ப்புக் கிட்டியது. தென்னிலங்கையில், கடந்த மூன்று தசாப்தங்களாக ஆயத்த ஆடைத் தொழிலகங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தும் இடதுசாரிக் கட்சிகளின் தூண்டுதல் காரணமாக, சிங்களத் தொழிலாளர்கள் தமது உரிமைகளை கேட்டுப் போராடி வருகின்றனர். தொழிற்சங்கம் அமைப்பதற்கான உரிமைகளை அரசே மறுத்து வந்த போதிலும், தொழிலாளர்களின் இடையறாத போராட்டம் காரணமாக உத்தியோகபூர்வமற்ற தொழிற்சங்கங்கள் உருவாகத் தொடங்கின.

வட இலங்கையில் இடதுசாரிகளின் தொல்லை கிடையாது. தமிழ்த் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் அவசியத்தை உணர்ந்து கொள்வதற்கு, இன்னும் பல வருடங்கள் எடுக்கலாம். மேலும், முதலாளியத்திற்கு ஆதரவான போலித் தமிழ் தேசியவாதிகள், தமிழ் மக்கள் தேசியவாத மாயைக்குள் கட்டுண்டு கிடக்க உதவுகின்றனர். இது போன்ற அரசியல் நிலைமை, ஏகாதிபத்தியத்திற்கும், சிங்கள தரகு முதலாளித்துவத்திற்கும் மிகவும் உகந்தது. 

தமிழினப் படுகொலை நடந்த வன்னிப் பிரதேசம், வருங்காலத்தில்  தரகு முதலாளிகளின் சொர்க்கபுரியாக மாறப் போகின்றது. அன்று நடந்தது தமிழினப் படுகொலை, இனிமேல் நடக்கப் போவது தமிழின சுரண்டல். புதுக்குடியிருப்பில் மட்டுமல்லாது, கிளிநொச்சியிலும் ஆயத்த ஆடைத் தொழிலகங்கள் உருவாகி வருகின்றன. அதற்கான கட்டுமானப் பணிகள் ஏற்கனவே பூர்த்தியடைந்து விட்டன. 

வன்னியில் தரகு முதலாளிகளின் ஊடுருவல் காரணமாக தொழிற்துறை வளர்ச்சி அடையும் பொழுது, அங்கே தமிழ் பேசும் தொழிலாளர் வர்க்கமும் பெருகும். காலப்போக்கில், தமிழ்த் தொழிலாளர்களும் தமது உரிமைகளை கேட்டுப் போராடுவார்கள். அப்போது அந்த உரிமைப் போராட்டத்தை நசுக்குவதற்கு தயாராக, அருகிலேயே இராணுவ முகாம்கள் இருக்கின்றன. ஈழப் போரின் முடிவில், வட இலங்கையை ஆக்கிரமித்த சிங்கள இராணுவம் வெளியேற்றப் பட வேண்டும் என்று, ஏகாதிபத்தியம் பாசாங்குக்கு கூட முணுமுணுக்காத காரணமும் அது தான்.

மேலதிக தகவல்களுக்கு: 


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 

Sunday, January 10, 2010

இலங்கையின் பெண்கள் பொருளாதாரத்தின் தூண்கள்

நெதர்லாந்தில், புதிதாக வதிவிட அனுமதி பெற்றவர்கள், அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கென குடியுரிமைப் பாடங்களை கற்பிக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப் படுகின்றன. உள்நாட்டு வேலையற்ற பட்டதாரிகளை தொண்டர் ஆசிரியர்களாக நியமித்து அரசு நடத்தும் பள்ளி அது. பன்னாட்டு குடியேறிகளுடன் நானும் ஒருவனாக அந்த வகுப்புகளில் கலந்து கொண்டிருக்கிறேன். கூடப் படித்த மாணவர்களில் சில ஈழத் தமிழ்ப் பெண்களும் இருந்தனர். ஒரு நாள், எம்முடைய ஆசிரியை ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் பெண்களின் நிலை குறித்து அறிய விரும்பினார். வகுப்பில் இருந்த பல தேசங்களை பிரதிநித்துவப் படுத்தியவர்கள் தத்தமது நாடுகளில் பெண்களின் நிலை பற்றி எடுத்துக் கூறிக் கொண்டிருந்தனர்.

இலங்கையின் முறை வந்தது. அங்கிருந்த தமிழ்ப் பெண்கள் பேசவாரம்பித்தனர். "எமது நாட்டில் வழக்கமாக பெண்கள் வெளியே வேலைக்குப் போவதில்லை. வீட்டு வேலைகள் மட்டுமே செய்வார்கள். அது எமது கலாச்சாரம்." என்றனர். அதனை மறுதலித்த நான், "படித்த பெண்கள் வேலைக்குப் போவதும், ஏழைக் குடும்பப் பெண்கள் கூலி வேலைக்குப் போவதும், எமது நாடுகளில் வழக்கம்." என்றேன். வகுப்பில் இருந்த தமிழ் பெண்கள், இதனை ஏற்க மறுத்து வாதிட்டனர். யார் சொல்வதை நம்புவது என்ற குழப்பம், வகுப்பில் இருந்தவர்கள் முகங்களில் காணப்பட்டது. "தமிழ்க் கலாச்சாரத்தின் சிறப்பை" அன்னியருக்கு பறைசாற்ற விடாமல் குறுக்கீடு செய்த கோபம், தமிழ்ப் பெண்களின் குரலில் தெரித்தது. அன்று என்னோடு வாதம் செய்த அதே பெண்கள், பின்னர் வேலைக்கு சென்று வந்ததையும் கண்டேன். கணவனுடன் சேர்ந்து மேலதிகமாக சில நூறு யூரோக்களை சேகரிக்கும் கடமையுணர்வு, கலாச்சாரத்திற்கு களங்கமாக அவர்களுக்கு தெரியவில்லை.

கனடாவுக்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களில் யாழ்-வேளாள மேட்டுக்குடி சிந்தனை கொண்டவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஊரில் பேணிய பழமைவாத கலாச்சாரத்தை உலகம் முழுக்க காவித் திரிந்தவர்கள். அதனால் தான் ஆண்டாண்டு காலம் உழைக்கும் வர்க்கப் பெண்களைக் கொண்ட தமிழ் சமூகம் அவர்கள் கண்களுக்கு அகப்படவில்லை. தமதூர் வயல்களில் கூலியாட்களாக ஆண்களை விட குறைவான சம்பளம் பெறும் பெண்களைப் பற்றியும் அறிந்திருக்கவில்லை. அவர்களது நடுத்தர வர்க்கப் பின்னணி, உழைக்கும் வர்க்க பெண்களை உதாசீனம் செய்ய வைக்கின்றது.

இலங்கையின் பொருளாதாரம் பெண்களின் உழைப்பை ஆதாரமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. தெற்காசியாவிலேயே இது தனித்துவமானது. "ஆசியாக் கண்டத்திலேயே பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்த முதலாவது நாடு." "உலகிலேயே முதலாவது பெண் பிரதமரை தெரிவு செய்த நாடு." இலங்கைக்கு கிடைத்த இது போன்ற பெருமைகளால் கூட, பெண்களின் நிலை அரசியல் அரங்கில் மாறி விடவில்லை. தங்கள் சக்தி என்னவென்று அறியாத சாதாரண உழைக்கும் வர்க்க பெண்கள். தேசத்தின் பொருளாதாரத்தில் தமது பங்கு என்னவென புரிந்து கொள்ளுமளவு படித்தவர்களுமல்ல. இருப்பினும் இலவச கல்வியினால் நன்மையடைந்த பெண் பிரஜைகளை அந்நிய நிறுவனங்கள் கண்டு கொண்டன. 1978 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட, "கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலையம்" இலங்கைப் பெண்களின் உழைப்பை, மலிவு விலை ஆடைகளாக ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது.

கிராமப்புறங்களில் விவசாயக் குடும்பங்களை சேர்ந்த பெண்கள், பழமைவாத கட்டுக்களை உடைப்பதற்கு சுதந்திர வர்த்தக வலையம் உதவியது. விவசாயத் தொழிலில் கிடைக்கும் வருமானத்தை விட பல மடங்கு அதிகமாகவே கிடைத்ததால், பலர் நகரத்தை நோக்கி ஈர்க்கப்பட்டனர். கொழும்பு மாநகரத்திற்கு அருகில், விமான நிலைய ஓரமாக கட்டப்பட்ட தொழிற்சாலைகள், பெண்களை மட்டும் வேலைக்கு அமர்த்தின. ஏன் பெண் தொழிலாளிகளை மட்டும் வேலைக்கு சேர்க்கிறார்கள்? "பெண்கள் மிக நேர்த்தியாக வேலை செய்வார்கள்." என்கின்றனர் முதலாளிகள். ஆனால் குறைந்த கூலி வழங்குவதற்காகவும், மிரட்டி வேலை வாங்குவதற்கும் பெண் தொழிலாளிகளே வசதியானவர்கள். மேலதிக நேரம் வேலை செய்ய மாட்டார்கள் என்பதால், திருமணமான பெண்களை பணிக்கு அமர்த்துவதில்லை.

கிராமங்களில் விவசாயக் கூலியாக வேலை செய்வதை விட, சுதந்திர வர்த்தக வலையத்தில் வேலை செய்து பெறும் ஊதியம் அதிகம் தான். இருப்பினும் அது கொழும்பு மாநகரில் கொடுக்கப்படும் சராசரி சம்பளத்தை விடக் குறைவு. தினசரி 12 மணி நேரம் கடின வேலை செய்தாலும், மாதச் சம்பளம் நூறு டாலர்களும் இல்லை. வேலை நேரங்களில் சிறுநீர் கழிப்பதற்கு கூட இடைவேளை விடாமல் சுரண்டும் தொழிற்சாலை நிர்வாகம். தொழிற்சங்கம் வைத்துக் கொள்ளவோ, வேலை நிறுத்தம் செய்யவோ அனுமதிப்பதில்லை. இருப்பினும் கடுமையான அடக்குமுறை காரணமாக, வேலைநிறுத்தப் போராட்டங்கள் தானாகவே வெடிக்கின்றன.

எத்தனை கஷ்டம் இருந்தாலும், சுதந்திர வர்த்தக வலையப் பெண்கள் பல்லைக் கடித்துக் கொண்டு ஐந்து ஆண்டுகள் நின்று பிடிக்கின்றனர். ஒரே கம்பனியில் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக வேலை செய்யும் ஒருவருக்கு போனஸ் வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் இருப்பதே அதற்குக் காரணம். வாழ்க்கை நரகமாக மாறிவிட்டாலும், பலருக்கு ஊர் திரும்ப விருப்பமில்லை. சுதந்திர வர்த்தக வலயத்தில் உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை அவர்கள் தமது ஊரில் சொல்வதில். அப்படி சொன்னால், எந்தவொரு பெற்றோரும் தமது பெண் பிள்ளைகளை வேலைக்கு அனுப்ப மாட்டார்கள் என்ற அச்சம் காரணம். சமூகத்தில் நிலவும் இறுக்கமான கட்டுப்பாடுகள் காரணமாக, ஒரு பெண் ஆண் துணை இன்றி வெளியே செல்ல முடியாது. (சிங்கள சமூகம் கூட விதிவிலக்கல்ல) இதனால் கிராமங்களில் சமூகக் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்த பெண்களுக்கு, சுதந்திர வர்த்தக வலய வேலைவாய்ப்பு, வேண்டிய சுதந்திரம் வழங்குகின்றது. ஒரு தொகைப் பணத்தை வீட்டுக்கு அனுப்புவது போக, மிகுதியை உடைகளுக்கும், அலங்கார சாதனங்களுக்கும் செலவிட முடிகின்றது.

ஒரு காலத்தில், இலங்கைக்கு ஏற்றுமதி வருமானத்தை ஈட்டித்தந்த பெருந்தோட்டப் பயிர்செய்கை பிற்காலத்தில் நலிவடைந்தது. முதலில் ரப்பர், பின்னர் தேயிலை விலைகள் உலக சந்தையில் வீழ்ச்சியுற்றது. இதற்கிடையே 1977 ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த யு.ஏன்.பி. தாராளவாதப் பொருளாதாரக் கொள்கையை மும்முரமாக அமுல்படுத்தியது. உலகவங்கி, ஐ.எம்.எப். என்பன அவர்களுக்கு பின்னால் நின்று ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது தோன்றியவை தான் சுதந்திர வர்த்தக வலையங்கள். மத்திய கிழக்குக்கு பணிப்பெண் ஏற்றுமதியும், மேற்படி பொருளாதாரக் கொள்கையின் பெறுபேறு தான். இது பற்றி பின்னர் பார்ப்போம்.

இன்று ஆயத்த ஆடை ஏற்றுமதி இலங்கையின் முக்கிய வருமானங்களில் ஒன்று. பணக்கார நாடுகில் மலிவுவிலையில் விற்கப்படும் உடுப்புகள், சுதந்திர வர்த்தக வலைய பெண்களின் உழைப்பால் உருவானவை. பருத்தி போன்ற மூலப் பொருட்கள் பிற நாடுகளில் இருந்து தருவிக்கப் பட்டாலும், அவற்றை முழு ஆடைகளாக தைத்து அனுப்புவது இலங்கைப் பெண்கள் தான். இதற்குத் தான் ஐரோப்பிய நாடுகள் GPS Plus சலுகைத் திட்டத்தை கொண்டுவந்தன. 2005 ம் ஆண்டு, அறிமுகப்படுத்தப் பட்ட சலுகைத் திட்டம், ஆசியாவில் இலங்கைக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அனேகமாக சுனாமிக்கு பின்னரான ஐரோப்பிய உதவியின் ஓர் அங்கமாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது. தற்போது மனித உரிமைக் குற்றச்சாட்டில் GPS சலுகை மீளப் பெறப்படப் போவதாக கூறப்படுகின்றது. இதனால் லட்சக்கணக்கான பெண் தொழிலாளிகள் வேலை இழக்கும் அபாயம் தோன்றியுள்ளது.

GPS சலுகையை நம்பி சுதந்திர வர்த்தக வலையங்கள் திறக்கப்படவில்லை. சலுகையினால் சேமிக்கப்படும் பணம், அபிவிருத்தியில் உள்ள சில தடைகளை அகற்றும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியது. ஐரோப்பிய நாடுகளில் எதையாவது இறக்குமதி செய்ய விரும்புவோர் அதிக வரி செலுத்த வேண்டும். அத்தகைய வரியில் வழங்கப்பட்ட சலுகை சுதந்திர வர்த்தக வலைய முதலாளிகளுக்கு லாபமாகப் போய்ச் சேர்ந்தது. அல்லது ஐரோப்பிய சுப்பர் மார்க்கட்களில் மலிவு விலை உடைகளாக விற்கப்பட்டன. தற்போது வரிச் சலுகையை இரத்து செய்வதற்கு, பொருளாதார நெருக்கடி காரணமாகவும் இருக்கலாம். ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் மனித உரிமைகள் குறித்து முதலைக் கண்ணீர் வடிப்பதை பின்வரும் சம்பவங்கள் நிரூபிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் GPS வரிச்சலுகையை இரத்து செய்யப் போவதாக தடாலடியாக அறிவித்த அதே கணம், கிழக்கிலங்கையில் ஒரு பாடசாலை திறந்து வைக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றிய நிதியில் கட்டப்பட்ட அந்தப் பாடசாலையை, அவர்களின் பிரதிநிதி ஜனாதிபதி மகிந்தவுடன் சேர்ந்து திறந்து வைத்தார். அதைவிட வடக்கு- கிழக்கு மாகாணங்களில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்க உள்ளது.

சுதந்திர வர்த்தக வலைய வேலை பறி போனால், வெளிநாடு சென்று உழைப்பது பற்றி அந்தப் பெண்கள் சிந்திக்கிறார்கள். வளைகுடா நாடுகள், கிரீஸ் போன்ற நாடுகளில் பனிப் பெண்களாக வேலை செய்யும் பெண்கள் பலர் முன்னாள் சுதந்திர வர்த்தக வலய தொழிலாளிகள். உண்மையில், தேயிலை போன்ற பாரம்பரிய ஏற்றுமதி வருமானத்திற்கு சமமாக, சுதந்திர வர்த்தக வலயங்களிலும், வெளிநாடுகளிலும் பணி புரியும் பெண்கள் ஈட்டித் தருகின்றனர். பிலிப்பைன்சுடன் போட்டி போட்டுக் கொண்டு, இலங்கை வீட்டுப் பணிப் பெண்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கின்றது. அவர்கள் மாதாமாதம் அனுப்பிவைக்கும் அந்நிய செலாவணி, இலங்கைப் பொருளாதாரத்தை வளர்க்கின்றது.

வெளிநாடுகளில் பணிப் பெண்களாக வேலை செய்யும் பெண்கள் எல்லோரும் வறுமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்கள். ஒரு பெண்ணின் சம்பாத்தியத்தில் வாழும் குடும்பங்கள் இலங்கையில் ஏராளம். தமது பிள்ளைகளை பராமரித்து, சிறந்த பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி படிக்க வைக்கின்றனர். குடும்பத்தின் செலவை பொறுப்பு எடுப்பதோடு மட்டும் நில்லாது, நிலம் வாங்கி, சொந்தமாக கல் வீடு கட்டிக் கொள்ள விரும்புகின்றனர். இலங்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாவட்டங்களை சேர்ந்த பெண்களே அனேகமாக வெளிநாடு செல்கின்றனர். எனது சக்திக்குட்பட்ட ஆய்வின் படி, கொழும்பு போன்ற முன்னேறிய மாவட்டங்களில் இருந்து மிகக் குறைந்தளவு பணிப்பெண்களே செல்கின்றனர். அதற்கு மாறாக, குருநாகல், அம்பாந்தோட்டை போன்ற அபிவிருத்தி குறைந்த மாவட்ட மக்களே பெரும்பான்மையாக உள்ளனர்.

கணிசமான தமிழ், முஸ்லிம் பெண்களும் பணிப்பெண்களாக செல்கின்றனர். இவர்களும் பெரும்பாலும் பின்தங்கிய மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். வெளிநாடுகளில் தொழில் புரியும் பணிப்பெண்களில், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களை காண்பதரிது. அதற்கு மாறாக, வவுனியா, மட்டக்களப்பில் இருந்து பெருந்தொகை தமிழ், முஸ்லிம் பெண்கள் வெளிநாடுகளில் பணிப்பெண்களாக வேலை செய்கின்றனர். யாழ் குடாநாட்டோடு ஒப்பிடும் போது, மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் வறிய மக்கள் அதிகம். சுதந்திர வர்த்தக வலையத்திலும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் பெண்கள் பலர் வேலை செய்வது இங்கே குறிப்பிடத் தக்கது.

மலையகத்தை சேர்ந்த தமிழ் பெண்களும், வெளிநாடு சென்று பணிப் பெண்களாகவோ, அல்லது உள்நாட்டில் சுதந்திர வர்த்தக வலையத்திலோ வேலை செய்கின்றனர். ஆனால் அந்த துறைகளில் மலையகத் தமிழ்ப் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவு. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இலங்கையில் மிகக் குறைந்த ஊதியம் பெரும் தொழிலாளர் வர்க்கம் மத்திய மலை நாட்டில் உள்ளது. முதன்மையான ஏற்றுமதியான தேயிலை, இன்றைக்கும் இலங்கைக்கு பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டித் தருகின்றது. "தேயிலைத் தமிழர்கள்" என்று அழைக்கப்படும், பெருந்தோட்டத் தமிழர்களின் வாழ்வு மலையகத்தின் உள்ளேயே முடங்கி விடுகின்றது. பிரிட்டிஷ் காலத்தில் கூலிகளாக அழைத்து வரப்பட்ட மலையகத் தமிழர்கள், இன்றைக்கும் தேயிலைக் கம்பனிகளின் தயவிலேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தம். பெருந்தோட்ட தமிழர்களின் குழந்தைப் பராமரிப்பு, ஆரம்ப பாடசாலைகள் என்று எல்லாமே சம்பந்தப்பட்ட கம்பனியின் பொறுப்பில் உள்ளன.

தேயிலத் தோட்டங்களில் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்கள் எல்லோருமே பெண்கள் தான். ஆண்கள் தேயிலை பதனிடும் தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். பெண்கள் என்பதால் குறைந்த கூலி கொடுத்து, (ஒரு நாளைக்கு 5 டாலர்) சுரண்ட முடிகிறது. அனேகமாக ஒரு மலைநாட்டுத் தமிழ்ப் பெண், தனது 15 வது வயதிலேயே தேயிலைக் கொழுந்து பறிக்க கிளம்பி விடுவாள். பெருந்தோட்டத் தமிழர்கள் ஆரம்பப் பாடசாலைக் கல்விக்கு அப்பால் கல்வியைத் தொடருவதை, முதலாளிகளும் விரும்புவதில்லை. தொழிலாளரின் குடியிருப்புகள் "லயன்கள்" என அழைக்கப்படும் சங்கிலித் தொடர் வீடுகளாக உள்ளன. பிரிட்டிஷ் காலனிய சின்னங்களான லயன்கள் இன்றும் 19 ம் நூற்றாண்டிலேயே உள்ளன. நவீன அடிமைகளின் தடுப்பு முகாம்களான லயன்களில் இருந்து வெளியூர் செல்லுமளவிற்கு அவர்களிடம் வசதியும் இல்லை, தொடர்புகளும் கிடையாது. மலையகப் பெண்கள் தோட்டங்களை விட்டு வெளியேறினாலும், பெரு நகரங்களில் கூலி வேலை மட்டுமே செய்ய முடியும். கொழும்பு நகரில் பணக்கார வீடுகளில், வேலைக்காரிகளாக பல மலையகச் சிறுமிகள் சுரண்டப்படுகின்றனர்.

இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஆதாரமாக உழைக்கும் வர்க்கப் பெண்கள் இருந்த போதிலும், அதைப் பற்றி யாரும் அதிகம் பேசுவதில்லை. நிறுவனமயப் படுத்த முடியாத அளவுக்கு, அவர்களின் உள்மன அச்சமும், ஆதரவற்ற சூழ்நிலையும் தடுக்கின்றன. அடித்தட்டு மக்கள் திரளுக்குள், அவர்கள் பெண்கள் என மேலும் ஒடுக்கப்படுகின்றனர். சுதந்திர வர்த்தக வலையத்தில் தொழிற்சங்கம் அமைக்க அரசு ஆதரவளிப்பதில்லை. அந்நிய தேசத்தில், அடிமையாக வதை பட்டாலும், அதிக பட்சம் தூதுவராலயத்தில் அடைக்கலம் கோரத் தான் முடியும். இலங்கைப் பெண்கள் கடின உழைப்பாளிகள் என்ற நற்பெயரை விட பெரிதாக எந்த வெகுமதியும் கிடைப்பதில்லை.

ஒரு பணிப் பெண் தன்னை வருத்திக் கொண்டு அனுப்பும் பணம், அவரின் குடும்பத்தின் ஊதாரித்தனமான செலவால் கரைந்து போகின்றது. இதனால் ஊர் திரும்பும் பணிப் பெண், மீண்டும் விமானமேறி எங்கோ ஒரு நாட்டில் தனது வேலையை தொடர்கிறாள். மணமான பெண்களாயின், சில நேரம் பிள்ளைகளை தனியே வளர்க்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. மனைவியின் பணத்தில் குடித்து, கும்மாளமடிக்கும் கணவன்மாரால் பல குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன. பொதுவாகவே உழைக்கும் வர்க்கப் பெண்கள் மத்தியில், பாலியல் சுதந்திரம் அதிகமாக காணப்படுகின்றது. ஊதாரியான கணவனை விவாகரத்து வாங்கி விட்டு, காதலனுடன் வாழும் பெண்கள் பலர் உண்டு. அதற்காக இந்தக் கலாச்சார மாற்றத்தை நமது சமூகம் ஏற்றுக் கொண்டு விட்டது என்று அர்த்தமில்லை. இலங்கையின் உழைக்கும் வர்க்கப் பெண்கள் தலை நிமிர்ந்து வாழ்வதற்காக ஒவ்வொரு நாளும் போராடுகின்றார்கள். உழைப்பு எனும் மெழுகுதிரியாக உருகி நாட்டின் பொருளாதாரத்தை ஒளிர வைக்கிறார்கள்.


********************************************************

பெண் தொழிலாளர் பிரச்சினை பற்றிய முன்னைய பதிவுகள்: