Monday, January 05, 2015

தேசியவாதம் சோறு போடாது! "பிரதிநிதித்துவம்" ஒரு முதலாளித்துவ கொள்கை!!


தேசியவாதம் சோறு போடாது. தெரிஞ்சுக்கோங்க மக்களே!

1991 ம் ஆண்டு, பல்லாயிரம் மக்களை பலி கொண்ட தேசிய இன விடுதலைப் போரின் பின்னர், யூகோஸ்லேவியாவில் இருந்து பிரிந்து சென்று தனி நாடான குரோவாசியாவின் இன்றைய நிலைமை இது. குரோவாசியா மக்கள், இன்று தேசியவாதத்தை குப்பைத் தொட்டிக்குள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். முன்னர் தேசியவாதம் பேசிய நடுத்தரவர்க்கத்தினர் மட்டும், இன்றைக்கு பணக்காரர்களாக தங்களது குடும்ப நலன்களை மட்டும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

யூகோஸ்லேவியா முன்னர் சோஷலிச நாடாக இருந்த காலத்தில், பிரஜைகள் எல்லோருக்கும் போதுமான உணவு, வசிக்க வீடு, நல்ல வருமானம் தரும் வேலைவாய்ப்பு எல்லாம் தாராளமாக கிடைத்து வந்தன. அது வேண்டாம் என்று சொல்லித் தான், குரோவாசிய தேசியவாதிகள் போரிட்டு தனி நாடாக பிரிந்து சென்றார்கள்.

சோஷலிசம், இடதுசாரியம் மக்களுக்கு சோறு போடுவதாக கூறிக் கொள்கிறது. ஆனால், தேசியவாதம் வெறும் பாசாங்குக்காக கூட அப்படி எதுவும் சொல்வதில்லை. குறைந்த பட்சம் பொருளாதாரம் பற்றிக் கூட எந்தக் கருத்தும் இருக்காது. தூய தேசியவாதம் மட்டும் பேசி, தனி நாடாக பிரிந்து சென்ற எல்லா நாடுகளிலும் இது தான் நடக்கிறது. ஆகவே, குறைந்த பட்சம் சோஷலிசம், இடதுசாரியம் பேசாத எந்தவொரு தேசியவாதியையும் நம்பாதீர்கள் மக்களே!

மீண்டும் மீண்டும் ஓர் உண்மையை, இங்கே பதிவு செய்ய வேண்டியுள்ளது. "தமிழ் அல்லது சிங்கள தேசியவாதிகள், புலி ஆதரவாளர்கள் அல்லது எதிர்ப்பாளர்கள், ராஜபக்ச ஆதரவாளர்கள் அல்லது எதிப்பாளர்கள், இந்து - கிறிஸ்தவ - இஸ்லாமிய மதவாதிகள்..." இவர்கள் எல்லோரும் ஒன்றிணையும் புள்ளி ஒன்றுள்ளது. அது தான் கம்யூனிசத்தின் மேலான வெறுப்புணர்வு.

இதனை நிரூபிப்பதற்கு அதிகம் சிரமப் படத் தேவையில்லை. சமூக வலைத் தளங்களில், கம்யூனிசத்தை எதிர்த்து விவாதிப்பவர்களின் அரசியல் பின்னணியை தெரிந்து கொண்டாலே போதும். தமது வழமையான கொள்கை வேறுபாடுகளை மூட்டை கட்டி வைத்து விட்டு, வரிந்து கட்டிக் கொண்டு கம்யூனிசத்தை எதிர்த்துப் பேச வந்து விடுவார்கள். தாங்கள் இப்படி ஓரணியில் சேர்ந்து நின்றால், மக்கள் மத்தியில் அம்பலப் பட்டு விடுவோமே என்ற எந்தப் பயமும் அவர்களிடம் கிடையாது.

கம்யூனிச வெறுப்பு என்பது, அவர்களது மத்தியதர வர்க்க குணாம்சம். பெரும்பான்மை உழைக்கும் மக்களை அடக்கி வைத்திருப்பதற்காகவும், அவர்களிடம் சுரண்டும் பணத்தில் சொகுசான வாழ்க்கை வசதிகளை அனுபவிப்பதற்காகவும் முதலாளிய வர்க்கத்தை ஆதரிக்கிறார்கள். மக்களுக்கு இந்த உண்மை தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, வர்ண மயமான முகமூடிகளை அணிந்து கொள்கிறார். 

ஒருவர் புலி ஆதரவாளராம்... மற்றவர் ராஜபக்சே ஆதரவாளராம்... இன்னொருவர் இஸ்லாமிய மதப் பற்றாளராம்.... மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள்? இப்படி ஆளுக்காள் தங்களுக்கு வாய்த்த முகமூடியை அணிந்து கொண்டாலும், அவர்களின் அடி மனதில் இருக்கும், உழைக்கும் மக்களுக்கு எதிரான துவேஷம் மட்டும் மாறுவதில்லை. அவர்கள் தமக்குள் முரண்பட்டு பிரிந்து நிற்பதாக காட்டிக் கொண்டாலும், கம்யூனிசத்தை எதிர்ப்பதற்கு மட்டும் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.

உலகம் முழுவதும், கடந்த நூறாண்டு காலமாக இது தான் நடந்து கொண்டிருக்கிறது. 19 ம் நூற்றாண்டில், கீரியும் பாம்புமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த, பிரான்சும், ஜெர்மனியும், பாரிஸ் கம்யூனை அழிப்பதற்காக ஒன்று சேர்ந்தன. 20 ம் நூற்றாண்டில், ரஷ்யாவில் தோன்றிய போல்ஷெவிக் புரட்சியை நசுக்குவதற்காக, ஐரோப்பிய நாடுகள் எல்லாம் தமது பகைமையை மறந்து கூட்டுச் சேர்ந்தன. உலகில் உள்ள "முஸ்லிம் நாடுகளில்" எல்லாம், மக்கள் சோஷலிசத்தை ஆதரித்த காலங்களில், இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்தார்கள். இப்படிப் பல உதாரணங்களை, வரலாறு நமக்குப் படிப்பினையாக விட்டுச் சென்றுள்ளது.

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம். தாம் தமிழ் மக்களுக்கு மேலே இருப்பதாக கருதிக் கொள்பவர்கள், "ஒட்டு மொத்த உலகத் தமிழினத்தின் பிரதிநிதிகள்" என்று கூறிக் கொள்கிறார்கள். அப்படி தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்களைப் பார்த்தால், அந்தப் பழமொழி தான் ஞாபகத்திற்கு வரும்.

குறைந்த பட்ச ஜனநாயகத்தில் கூட, மக்கள் எல்லோரும் சமமானவர்களாக கருதப் பட வேண்டும். ஆனால், யதார்த்தம் அதற்கு முரணாக உள்ளது. ஒரு சிலர், தாங்கள் மக்களிடம் இருந்து அந்நியப்பட்ட, ஒரு தனித்துவமான வர்க்கமாக கருதிக் கொள்கிறார்கள். தங்களால் மட்டுமே எல்லாம் முடியும் என்று இறுமாப்புடன் பேசுகிறார்கள்.

"மக்களின் பிரதிநிதிகள்" என்பது முதலாளித்துவ அரசியல் அமைப்பின் அடிப்படைக் கொள்கை. மக்களுக்கு அரசியல் தெரியாது. எல்லோரும் அரசியலில் பங்கெடுக்க முடியாது. அதற்காக அரசியல் பயிற்சி பெற்ற சில பிரதிநிதிகள் இருக்கிறார்கள். இப்படி சொல்லிச் சொல்லியே, மக்களை அரசியல் தெரியாத ஞானசூனியங்களாக வைத்திருக்கிறார்கள். மக்களை ஆட்டு மந்தைகளாக மேய்ப்பது தான் ஒரு சிலரின் நோக்கமாக உள்ளது.

ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் தங்களது பிரதிநிதிகளை தெரிவு செய்ய வாய்ப்புக் கொடுக்கப் படும். இந்த "பிரதிநிதி அரசியல்" படித்த மத்தியதர வர்க்கத்திற்கு சாதகமானது. அவர்கள் மக்களின் பெயரில் தங்களது வர்க்கத்தின் நலன்களுக்கான அரசியலை நடத்த முடிகின்றது.

இதைத் தான் நாங்கள் முதலாளித்துவ ஜனநாயகம் என்று சொல்கிறோம். முதலாளித்துவ அறிவுஜீவிகள் அதனை "பிரதிநிதித்துவ ஜனநாயகம்" என்று கூறிக் கொள்கிறார்கள். அதற்குப் பதிலாக, மக்கள் நேரடியாக பங்கெடுக்கும் ஜனநாயகத்தை தோற்றுவிப்பது எமது கடமை ஆகும். மக்களுக்கு பிரதிநிதிகள் தேவையில்லை. அவர்கள் தங்களைத் தாங்களே பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்பு முறை வேண்டும். அது தான் உண்மையான ஜனநாயகம்.

2 comments:

vimmy said...

"மக்கள் நேரடியாக பங்கெடுக்கும் ஜனநாயகத்தை தோற்றுவிப்பது எமது கடமை ஆகும். மக்களுக்கு பிரதிநிதிகள் தேவையில்லை. அவர்கள் தங்களைத் தாங்களே பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்பு முறை வேண்டும். அது தான் உண்மையான ஜனநாயகம்"//அண்ணா கொஞ்சம் புரியும்படி விளக்கவும்

Kalaiyarasan said...

மக்கள் நேரடியாக பங்குபற்றும் ஜனநாயக அமைப்பு என்பது, சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு அமைப்பிற்கும் தேர்தல் நடத்தப் பட வேண்டும். சிறிய அளவில் உள்ளூராட்சி சபைகள் மட்டுமல்ல, பாடசாலைகள், கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள் எல்லாவற்றிலும் தேர்தல்கள் இடம்பெற வேண்டும். ஒரு பாடசாலை/கல்லூரி நிர்வாகத்தில் மாணவர்கள் பங்களிக்க வேண்டும். ஒரு தொழிற்சாலை நிர்வாகத்தில் தொழிலாளர்கள் பங்களிக்க வேண்டும். அவற்றிற்கு தேர்தல் நடக்க வேண்டும்.