Saturday, January 31, 2015

மைத்திரி ஆதரவாளர்களே, மக்களின் கோரிக்கைகளுக்காகவும் போராடுங்களேன்!


இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள மைத்திரி அரசு, பல அத்தியாவசிய பாவனைப் பொருட்களின் விலைகளை அதிரடியாக குறைத்துள்ளது. இதனால், சாதாரண உழைக்கும் வர்க்க மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பலர் இதனை "பொருட்களின் விலைகுறைப்பு" (விற்பனை விலை) என்று தான் புரிந்து கொள்கின்றனர். ஆனால், உண்மையில் இவ்வளவு காலமும், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீதும், அரசு அறவிட்டு வந்த வரிகள் தான் குறைக்கப் பட்டுள்ளன!

இதனால், இந்த வருடம் அரசுக்கு வர வேண்டிய, 92.4 பில்லியன் வருமானம் இழக்கப் படும். அதன் காரணமாக, பட்ஜெட்டில் துண்டு விழும் தொகையை ஈடுகட்டுவதற்காக, வேறொரு இடத்தில் இருந்து வருமானத்தை எடுக்க வேண்டி இருக்கும். அது எந்த இடம் என்பதையும் மைத்திரி அரசு ஏற்கனவே அறிவித்து விட்டது.

பணக்காரர்களின் சூதாட்டவிடுதிகளான, காசினோக்கள் பெருந்தொகை ஒன்றை, அதாவது ஒரு பில்லியன் ரூபாய்கள் வரியாக செலுத்த வேண்டும். அதுவும் ஒரு தடவை தானாம். இலட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கொண்ட, விளையாட்டு சேனல்கள் கூட ஒரு பில்லியன் வரி கட்ட வேண்டும். இதனால், மகிந்த ராஜபக்சவின் புதல்வனுக்கு சொந்தமான சேனல் ஒன்றும் பாதிக்கப் படும். 

அதே மாதிரி, சாட்டலைட் தொலைக்காட்சிகளும் ஒரு தடவை ஒரு பில்லியன் ரூபாய் கட்ட வேண்டும். எனக்குத் தெரிந்த வரையில், இலங்கையில் பெரும்பாலும் தமிழர்கள் தான் சாட்டலைட் தொலைக்காட்சி சேனல்களை அதிகம் பார்வையிடுகின்றனர். மேலும், மொபைல் தொலைபேசி நிறுவனங்களும் ஒரு பில்லியன் வரி கட்ட வேண்டும்.

இது ஒரு வகையில் "ராபின் ஹூட் வரி" என்று முதலாளித்துவ ஊடகங்களே தெரிவிக்கின்றன. அதாவது, மைத்திரி அரசு பணக்காரர்களிடம் வரி அறவிட்டு, ஏழைகளுக்கு உதவுகிறது. உள்ளூர் கமக்காரர்களுக்கு உதவும் வகையில், அவர்களிடம் இருந்து வாங்கும் பாலுக்கான விலை பல மடங்கு உயர்த்தப் பட்டுள்ளது. இதனால், உள்ளூர் விவசாயிகளும் ஊக்குவிக்கப் படுவர் என்று நினைத்துக் கொள்ளலாம்.

இங்கே எழும் கேள்வி என்னவெனில், இந்த "ராபின் ஹூட் வரி" இன்னும் எத்தனை வருடங்களுக்கு நடைமுறைப் படுத்தப் படும்? காஸினோக்கள், சாட்டலைட், மொபைல் நிறுவனங்கள் மீதான ஒரு பில்லியன் வரி, ஒரு தடவை மாத்திரமே அறவிடப்படும் என்பது சந்தேகத்தை எழுப்புகின்றது. ஆகையினால், அடுத்த வருடத்தில் இருந்து, பழைய குருடி கதவைத் திறடி என்ற கதையாக, பொருட்களின் விலைகள் மீண்டும் ஏற்றப் படலாம்.

பிரேசில் நாட்டில் வரிகளற்ற சமுதாயம் ஒன்றிற்காக, அங்குள்ள மக்கள் போராடி வருகின்றனர். உலகில் எல்லா நாடுகளிலும், குறைந்தளவு வருமானம் ஈட்டுவோர் தான், அதிகளவு வரி கட்டி வருகின்றனர். இந்த நிலைமை மாற வேண்டும்.

இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள மைத்திரி அரசு, அத்தியாவசிய பாவனைப் பொருட்களுக்கான வரிகளை குறைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அரசு இனிமேல் உழைக்கும் வர்க்க மக்களிடம் இருந்து வரியே அறவிடக் கூடாது என்று கோரிக்கை வைக்க வேண்டும்.

பாவனைப் பொருட்கள் மீதான வரிகள், அநேகமாக இடைக்காலத்தில் வந்த மதிப்புக் கூட்டு வரி (VAT) ஆக இருக்க வேண்டும். பொதுவாக, வர்த்தகர்கள் தான் அதனை பாவனையாளர்களிடம் அறவிட்டு, அரசாங்கத்திற்கு கட்டி வருகின்றனர். இதில் நடக்கும் முறைகேடுகள் காரணமாக, வரிப் பணம் ஒழுங்காக அரசுக்கு போய்ச் சேர்வதில்லை.

இடையில் உள்ள வர்த்தகர்கள் விழுங்கி ஏப்பம் விடும் வரியை இரத்து செய்வதால், அரசுக்கு என்ன குறை வந்து விடப் போகின்றது? இதனால், பொது மக்களுக்கு தான் அதிக நன்மை உண்டாகும். பாவனைப் பொருட்களின் விலை நிரந்தரமாக குறையும்.

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்கு வோட்டுப் போட்ட தமிழ் வாக்காளர்கள், மைத்திரிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த தமிழ் நடுத்தர வர்க்கத்தினர், இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பார்கள் என்று நம்புகிறேன். தமிழ் தேசியவாத தலைவர்களில் ஒருவரான மனோ கணேசன் "இது நமது அரசாங்கம்" என்று கூறியுள்ளார். "நமது அரசாங்கம்" என்றால், நமது மக்கள் சொல்வதைக் கேட்க வேண்டுமல்லவா?

**********

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடந்த அதே காலத்தில் தான் கிரீசிலும் பொதுத் தேர்தல் நடந்தது. கிரேக்க நாட்டில் பதவியேற்றுள்ள, சீரிசா எனும் இடதுசாரிக் கட்சி, நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பின்வரும் திட்டங்களை செயற்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
இலங்கையில் மைத்திரி அரசும், மக்களின் நன்மை கருதி அதே மாதிரியான திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று, அவரை ஆதரித்து ஓட்டுப் போட்ட தமிழ் மக்கள் அழுத்தம் கொடுப்பார்கள் என்று நம்புவோமாக. 

No comments: