Sunday, October 06, 2013

போர்க்குற்றவாளிகளை காப்பாற்றும் "சர்வதேச சமூகம்" பற்றிய திரைப்படம்


அண்மையில், தொலைக்காட்சியில் "The Hunting Party" என்ற திரைப்படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. போர்க்குற்றவாளிகளை பிடிப்பதில் மேற்கத்திய நாடுகள் காட்டி வரும் மெத்தனப் போக்கு, அதற்குப் பின்னால் உள்ள அரசியல் நோக்கங்களை தோலுரித்துக் காட்டும் படம். பொஸ்னியாவில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து, கற்பனையான திரைக்கதை எழுதி இருக்கிறார்கள். இந்தப் படம் சொல்ல வரும் செய்தி தான் முக்கியமானது. "போர்குற்ற விசாரணைகள் என்பன எல்லாம் மேற்கத்திய நாடுகளின் நாடகங்கள். உண்மையில், ஐ.நா., சர்வதேச நீதிமன்றம், அமெரிக்கா போன்றவற்றிற்கு, போர்க்குற்றவாளிகளை பிடித்து தண்டிக்கும் எந்த நோக்கமும் கிடையாது. சில நேரங்களில், இந்த "மரியாதைக்குரியவர்கள்" போர்க்குற்றவாளிகளை பாதுகாக்கும் கடமையையும் செய்து வருகின்றனர்." 

Simon Hunt, Duck இருவரும் நண்பர்கள். அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்காக, போர் நடக்கும் நாடுகளுக்கு சென்று செய்தி சேகரிப்பது அவர்களது பணி. எல் சல்வடோர், பொஸ்னியா என்று கடுமையான யுத்தம் நடக்கும் பிரதேசங்களில் உயிரை துச்சமாக மதித்து வேலை செய்கின்றனர். பொஸ்னிய யுத்த களத்தில் இருந்து அமெரிக்க தொலைக்காட்சிக்கு நேர்முக வர்ணனை செய்யும் சைமன், ஐ.நா. மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றார். இதனால் சங்கடத்திற்குள்ளாகும் தொலைக்காட்சி நிலையம் தொடர்பை துண்டித்து விடுகின்றது. அதற்குப் பிறகு, பிரபல செய்தியாளர் சைமனுக்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. அவர் போர்க்களத்தில் கொல்லப் பட்டிருக்கலாம் என்றே எல்லோரும் நினைக்கின்றனர்.  

ஐந்து வருடங்களுக்குப் பின்னர், டக் இன்னொரு இளம் ஊடகவியலாளருடன் பொஸ்னியா திரும்புகின்றார். தற்போது பொஸ்னியாவில் யுத்தம் முடிந்து, சமாதானம் நிலவுகின்றது. ஆனால், "போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதே தனது கடமை" என்று, சர்வதேச சமூகம் புளுகிக் கொண்டு திரிகின்றது. பொஸ்னியா திரும்பும் ஊடகவியலாளர்கள், நேட்டோப் படைகளால் தேடப்படும் "நரி" என்ற பட்டப் பெயர் கொண்ட, Radoslav Bogdanović என்ற செர்பிய போர்க்குற்றவாளியை கண்டு பேட்டி எடுக்க வேண்டும் என நினைக்கின்றனர். எதிர்பாராத விதமாக, காணாமல்போன பழைய நண்பன் சைமனை சந்திக்கின்றனர். நரி இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என்று கூறும் சைமன், அவர்களை தன்னுடன் வருமாறு கூறுகின்றான். சைமன் போகும் வழியில், அந்தப் போர்க்குற்றவாளியை பிடித்துக் கொடுத்து சன்மானம் பெற விரும்புவதாக நண்பர்களிடம் தெரிவிக்கின்றான். இதனால் வழியில் பல ஆபத்துக்களை சந்திக்கின்றனர். 

Radoslav Bogdanović  போர் நடந்த காலத்தில், பல்லாயிரம் பொஸ்னிய முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த, பெண்களை வல்லுறவு செய்த குற்றங்களுக்கு காரணமானவன். (கராச்சிச் என்ற செர்பிய படைத் தலைவனை மனதில் வைத்து பாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.) சைமன் "நரி" யை கண்டுபிடிப்பதற்கு, ஒரு தனிப்பட்ட காரணம் உள்ளது. அவனது பொஸ்னிய முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த காதலி, அவளது ஊருக்கு சென்றிருந்த நேரம், நரியின் படையினரால் சுட்டுக் கொல்லப் படுகின்றாள். அப்போது அவள் நிறைமாதக் கர்ப்பிணி. அந்தத் தருணத்தில் கோபத்தை அடக்கும் சைமன், தற்போது கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நரியை பிடித்துக் கொடுக்க நினைக்கிறான். 

பொஸ்னியாவில் நிலை கொண்டுள்ள சர்வதேச பொலிஸ், நேட்டோ படையணி போன்றவற்றிடம், போர்க்குற்றவாளிகள் பற்றிய விபரங்களை விசாரிக்கின்றனர். அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, சர்வதேச படைகளிடம் போர்க்குற்றவாளிகள் சம்பந்தமான எந்த ஆவணமும் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகின்றனர். அது மட்டுமல்ல, போர்க்குற்றவாளிகளை பிடிப்பதற்கான எந்த நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபடவில்லை. பொஸ்னிய போரின் பின்னர் சமாதானத்தை நிலைநாட்டும் கடமையில் ஈடுபட்டுள்ள சர்வதேச படையினர், ஊடகவியலாளருடன் ஒத்துழைக்க மறுக்கின்றனர்.

சைமனும் நண்பர்களும், தமக்குத் தெரிந்த வழியில் போர்க் குற்றவாளிகளை பிடிக்கக் கிளம்புகின்றனர். வழியில் அவர்களுக்கு பல இன்னல்கள் ஏற்படுகின்றன. செர்பிய பொதுமக்கள் தமது நாயகனை காட்டிக் கொடுக்க மறுக்கின்றனர். இறுதியில், இரகசியமாக தகவல் கொடுப்போரிடம், சி.ஐ.ஏ. என்று பொய் சொல்லி, "நரி" யின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கின்றனர். ஆனால், சி.ஐ.ஏ. என்ற அடையாளம், அவர்களை ஆபத்தில் மாட்டி விடுகின்றது. அதற்காகவே, நரியின் ஆட்கள் அவர்களை கடத்திச் சென்று சித்திரவதை செய்கின்றனர்.  

 "நரி" யின் மறைவிடத்தில் கட்டி வைக்கப் பட்டிருந்த, ஊடகவியலாளர்களின் உயிர் ஊசலாடும் தருணத்தில், அங்கு திடீரென வந்திறங்கும் அமெரிக்க-நேட்டோப் படையினர், அவர்களை விடுவித்து அழைத்துச் செல்கின்றனர். நேட்டோ கமாண்டோக்களின் அதிகாரி, அவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடுகின்றனர். இதிலே வேடிக்கை என்னவென்றால், அந்தச் சந்தர்ப்பத்தில் கைக்கெட்டிய தூரத்தில் நின்ற போர்க்குற்றவாளியை, படையினர் (வேண்டுமென்றே) பிடிக்காமல் வாயைப் பிளந்து கொண்டு நிற்கின்றனர். அதை சைமன் நேரடியாகவே கேட்டு விடுகின்றான். "நீங்கள் ஐந்து வருடங்களாக தேடியும் கிடைக்காத போர்க்குற்றவாளியை, நாங்கள் இரண்டே நாட்களில் கண்டுபிடித்தது எப்படி? எதற்காக இத்தனை படைபலம் இருந்தும் போர்க்குற்றவாளியை தப்ப விட்டீர்கள்?"  ஆனால், அந்தக் கேள்விக்கு பதிலளிக்காமல், "சி.ஐ.ஏ. போன்று நடித்ததற்காக உங்கள் மேல் வழக்குப் போட்டு உள்ளே தள்ளுவேன்" என்று மிரட்டும் அமெரிக்க படையதிகாரி, அவர்கள் உடனடியாக ஊர் திரும்புவதே புத்திசாலித்தனம் என்று எச்சரிக்கிறான். 

மூன்று ஊடகவியலாளர்களும், நேட்டோ படை அதிகாரியின் உத்தரவுக்கிணங்க நாட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை. தாங்கள் மூவரும் நினைத்தால், போர்க்குற்றவாளியை சுலபமாக பிடித்து விடலாம் என்று எண்ணுகின்றனர். "நரி" காட்டுக்குள் வேட்டையாடச் செல்லும் பொழுது, கூடவே நிறைய மெய்ப்பாதுகாவலர்களை அழைத்துச் செல்ல வாய்ப்பில்லை. அதனால் தனியாக நிற்கும் போர்க்குற்றவாளியை பிடிப்பது இலகு என்று திட்டம் போடுகின்றனர். போட்ட திட்டம் நிறைவேறி, மூன்று நண்பர்களும் சேர்ந்து போர்க்குற்றவாளியை பிடிக்கின்றனர். அந்தத் தருணத்திலும் கலங்காமல், "சர்வதேச சமூகம்" தன்னை காப்பாற்றும் என்று நரி கூறுகின்றான். "என்னை பிடித்துக் கொடுத்ததற்காக, உங்களுக்கு சன்மானம் கிடைக்கலாம். ஆனால், அதற்குப் பிறகு சர்வதேச சமூகம் எப்படி நடந்து கொள்ளும் என்பது உங்களுக்குத் தெரியாது. ஏனென்றால், அவர்கள் தான் எனக்காக அஞ்சுகின்றார்கள்." ஏற்கனவே அந்தப் பதிலை எதிர்பார்த்த சைமன் கூறுகின்றான்: "அது தெரிந்து தான் நாங்கள் சட்டத்தை மாற்றி விட்டோம்..." 

அதாவது, ஒரு போர்க்குற்றவாளியை ஐ.நா.விடமோ, அமெரிக்காவிடமோ ஒப்படைப்பதால் எந்தப் பிரயோசனமும் இல்லை. அதற்குப் பதிலாக, "நரி" யின் கொலைவெறியாட்டத்திற்கு பலியான பொஸ்னிய முஸ்லிம்கள், அவனுக்கு தகுந்த தண்டனை கொடுப்பார்கள் என்று முடிவெடுக்கின்றனர். கைகள் கட்டப்பட்ட "நரி"யை, சைமனின் காதலியின் ஊருக்குள் கொண்டு சென்று இறக்கி விடுகின்றனர். இனி, ஒரு போர்க்குற்றவாளிக்கு என்ன தண்டனை கொடுப்பது என்பது, அவனால் பாதிக்கப்பட்ட பொஸ்னிய முஸ்லிம்களின் பொறுப்பு. 

படத்தின் முடிவில், பார்வையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி தெரிவிக்கப் படுகின்றது. "ஒருநாளும், மேற்கத்திய நாடுகள் போர்க்குற்றவாளிகளை தண்டிப்பதில்லை. அந்த அக்கறையும் அவர்களுக்கு கிடையாது. பாதிக்கப்பட்ட மக்களே அந்தக் கடமையை செய்ய வேண்டும்," என்ற உண்மையை திரைப்படம் வலியுறுத்துகின்றது. இதையே நாங்கள் "மேற்கத்திய நாடுகளிடம் நீதியை எதிர்பார்த்து காத்திருக்கும்" தமிழ் மக்களுக்கும் கூறி வருகின்றோம். 

அமெரிக்கா, மற்றும் ஐ.நா. பொஸ்னிய போர்க்குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டிய காரணம் என்ன? பொஸ்னிய யுத்தம் நடந்த காலங்களில், கிறிஸ்தவ செர்பிய படைகள், பெருமளவு பொஸ்னிய முஸ்லிம் மக்களை இனப்படுகொலை செய்தன. அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் முஸ்லிம்கள் அழிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. ஐரோப்பிய, அதாவது பொஸ்னிய முஸ்லிகள் இனவழிப்பு செய்யப்படுவது அவர்களுக்கு உவப்பானதாக இருந்திருக்கலாம். ஆனால், ஊடகங்களில் பொஸ்னிய முஸ்லிம் மக்களை எண்ணி இரக்கப் படுவதாக முதலைக் கண்ணீர் வடித்தார்கள். அமெரிக்கா, செர்பிய படைத் தலைவர்களுடன் எட்டப் பட்ட உடன்பாட்டின் பின்னர் தான், பொஸ்னிய போர் முடிவுக்கு வந்தது. செர்பிய போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப் பட மாட்டார்கள் என்பதும், உடன்படிக்கையில் இருந்திருக்கலாம்.  

அமெரிக்கா "செர்பிய போர்க்குற்றவாளிகளை தேடுவதாக", ஒரு முழுப் பக்க விளம்பரம் செர்பிய பத்திரிகைகள் எல்லாவற்றிலும் பிரசுரமானது. அமெரிக்கா அதனை படமெடுத்து ஊடகங்களுக்கு கொடுத்தது. அதாவது, அமெரிக்கர்கள் மிகத் தீவிரமாக போர்க் குற்றவாளிகளை தேடிக் கொண்டிருக்கிறார்களாம். அதனை உலகம் நம்ப வேண்டுமாம். அன்றைய வருடத்தின் சிறந்த நகைச்சுவை அதுவாகத் தான் இருக்கும். பொஸ்னிய பத்திரிகைகளில் வெளியான விளம்பரத்தில், போர்க்குற்றவாளிகளை பிடிப்பதற்கான தகவல் தெரிந்தோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் ஒன்று கொடுக்கப் பட்டிருந்தது. ஆனால், அந்த தொலைபேசி இலக்கம் அமெரிக்க நாட்டு எல்லைக்குள் மட்டுமே செயற்படும்!

பொஸ்னியா தொடர்பான முன்னைய பதிவு:
பொஸ்னியா: வல்லரசுகள் அரங்கேற்றிய துன்பியல் நாடகம்

No comments: