Showing posts with label பெண்ணியம். Show all posts
Showing posts with label பெண்ணியம். Show all posts

Wednesday, September 11, 2019

செனோத்டெல் : சோவிய‌த் பெண்களுக்கான ஒரு பெண்ணிய‌க் க‌ட்சி

செனோத்டெல் (Zhenotdel): சோவிய‌த் யூனிய‌னில் இய‌ங்கிய‌ ஒரு க‌ம்யூனிஸ்ட் - பெண்ணிய‌க் க‌ட்சி. அது பற்றிய சில குறிப்புகள்.


1917 அக்டோப‌ர் சோஷலிச‌ப் புர‌ட்சியின் நோக்க‌ங்க‌ளில் ஒன்றாக‌ பெண்க‌ளின் விடுத‌லையும் அட‌ங்கி இருந்த‌து. சார் ம‌ன்ன‌ன் ஆட்சிக் கால‌த்தில் பெரும்பால‌ன‌ பெண்க‌ள் எழுத்த‌றிவ‌ற்ற‌வ‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர். மேல் த‌ட்டு வ‌ர்க்க‌ப் பெண்க‌ள் ம‌ட்டுமே க‌ல்விய‌றிவு பெற்றிருந்த‌ன‌ர். ஆக‌வே பெண்க‌ளை வீட்டு வேலைக‌ளில் இருந்து விடுத‌லையாக்கி, க‌ல்வி க‌ற்க‌ வைத்து, வேலைக்கும் அனுப்புவ‌தே புர‌ட்சியை ந‌ட‌த்திய‌வ‌ர்க‌ளின் நோக்க‌மாக‌ இருந்த‌து.

இத‌ற்காக‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சியின் த‌லைமைப் பொறுப்புக‌ளில் இருந்த‌ (லெனினின் ம‌னைவி) ந‌டாஷா குருப்ஸ்க‌யா, இனேசா ஆர்ம‌ன்ட், ம‌ற்றும் அலெக்ஸான்ட்ரா கொல‌ந்தை ஆகியோர் இணைந்து பெண்க‌ளுக்கான‌ க‌ட்சியை உருவாக்கினார்க‌ள். செனோத்டெல் என்ற‌ அந்த‌ இய‌க்க‌ம் க‌ம்யூனிஸ்ட் க‌ட்சியின் அமைப்பு வ‌டிவ‌ம் கொண்டிருந்த‌து. ஆனால், கட்சிக்கு வெளியே சுத‌ந்திர‌மாக‌ இய‌ங்கிய‌து. சுருக்க‌மாக‌, அது முழுக்க‌ முழுக்க‌ பெண்க‌ளுக்காக‌ பெண்க‌ளால் ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ க‌ட்சி.

சோவிய‌த் யூனிய‌ன் முழுவ‌வதும் க‌ல்வி க‌ற்கும், வேலைக்கு செல்லும் பெண்க‌ளின் எண்ணிக்கை அதிக‌ரித்த‌மைக்கு செனோத்டெல் இய‌க்க‌த்தின் பர‌ப்புரைக‌ளும், செய‌ற்திட்ட‌ங்க‌ளும் முக்கிய‌ கார‌ணிக‌ளாக‌ இருந்த‌ன‌. அது ம‌ட்டும‌ல்லாது அர‌ச‌ செல‌வில் பிள்ளை ப‌ராம‌ரிப்பு, க‌ர்ப்பிணிப் பெண் தொழிலாள‌ர்க‌ளுக்கான‌ ச‌ம்ப‌ள‌த்துட‌ன் கூடிய‌ விடுமுறை போன்ற‌ ப‌ல‌ உரிமைக‌ளையும் பெற்றுக் கொடுத்த‌து.

அன்றைய‌ மேற்கைரோப்பாவில் வாழ்ந்த‌ பெண்க‌ள் இதையெல்லாம் நினைத்துக் கூட‌ பார்க்க‌ முடியாத நிலைமை இருந்த‌து. அந்த‌ வ‌கையில் பெண்ணிய‌ வ‌ர‌லாற்றில் செனோத்டெல் இய‌க்க‌ம் வ‌கித்த‌ ப‌ங்க‌ளிப்பு (க‌ம்யூனிச‌) எதிரிக‌ளாலும் இன்று வ‌ரை போற்ற‌ப் ப‌டுகின்ற‌து.

ப‌தினொரு வ‌ருட‌ங்க‌ளாக‌ இய‌ங்கிய‌ செனோத்டெல் அமைப்பு, 1930 ம் ஆண்டு ஸ்டாலினால் க‌லைக்க‌ப் ப‌ட்ட‌து. அத‌ன் நோக்க‌ங்க‌ள் பூர்த்திய‌டைந்து விட்ட‌ன‌ என‌ அப்போது அறிவிக்க‌ப் ப‌ட்ட‌து. ஆனால் ஏற்க‌ன‌வே அமைப்பின் உள்ளே விரிச‌ல்க‌ள் ஆர‌ம்பித்து விட்ட‌ன‌.

அலெக்ஸான்ட்ரா கொல‌ந்தை முன்மொழிந்த‌ குடும்ப‌ங்க‌ளை ம‌றுசீரமைக்கும் கொள்கைக்கு பெரும‌ள‌வு ஆத‌ர‌வு கிடைக்க‌வில்லை. பெரும்பாலான‌ பெண்க‌ள் க‌ல்வி க‌ற்ப‌தையும், வேலைக்கு போவ‌தையும் த‌ம‌து உரிமைக‌ளாக‌ க‌ருதினாலும் பார‌ம்ப‌ரிய‌ குடும்ப‌க் க‌ட‌மைக‌ளை மாற்றிக் கொள்ள‌ ம‌றுத்த‌னர்.

அதாவ‌து புரட்சியின் விளைவாக அளவுகடந்த சுத‌ந்திர‌ம் கிடைத்தாலும் பெண்களால் சில‌ ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்க‌ளை ஒரே நாளில் மாற்ற‌ முடியாமல் இருந்தது. உதாரணத்திற்கு, சமைப்பது, பிள்ளை பராமரிப்பது போன்ற வீட்டு வேலைகளை பல பெண்கள் விட்டுக் கொடுக்க தயாராக இருக்கவில்லை. இத‌ற்கு க‌ட்சி உறுப்பின‌ர்க‌ளும் விதிவில‌க்க‌ல்ல‌. மேலும் மதப் ப‌ழ‌மைவாத‌த்தில் ஊறிய‌ ம‌த்திய‌ ஆசியப் பகுதிகளில் ப‌ல‌ எதிர்ம‌றையான‌ விளைவுக‌ள் ஏற்ப‌ட்ட‌ன‌. குறிப்பாக‌, பொது இட‌ங்க‌ளில் பூர்காவை க‌ழ‌ற்றி வீசிய‌ முஸ்லிம் பெண்க‌ளுக்கு ப‌ழ‌மைவாதிக‌ளால் உயிர‌ச்சுறுத்த‌ல் விடுக்க‌ப் ப‌ட்ட‌து. சில‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

செனோத்டெல் பெண்ணிய‌த்தை ம‌ட்டும‌ல்லாது, க‌ம்யூனிச‌த்தையும் உய‌ர்த்திப் பிடித்த‌து. பெண்க‌ளே மாற்ற‌த்திற்கான‌ உந்து ச‌க்தி என்ற‌து. பெண்க‌ளின் விடுத‌லை மூல‌மே உண்மையான‌ சோஷ‌லிச‌ ச‌முதாய‌த்தை க‌ட்டியெழுப்ப‌ முடியும் என‌ ந‌ம்பிய‌து. சோவிய‌த் யூனிய‌ன் மீது ஆயிர‌ம் விம‌ர்ச‌ன‌ங்க‌ள் இருந்தாலும் அது அனைத்துல‌க‌ பெண்க‌ளின் விடுத‌லைக்கு முன்னோடியாக‌ இருந்த‌து என்ற‌ உண்மையை யாராலும் ம‌றுக்க‌ முடியாது.

Monday, October 14, 2013

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஒரு திறந்த மடல்


மேன்மை தங்கிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு,

தாங்கள் முதலமைச்சராக பதவியேற்ற தருணம் பார்த்து, வட மாகாண தமிழ்ப் பெண்களின் அவல நிலை குறித்த அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. (Turning to sex work in Sri Lanka’s north; http://www.irinnews.org/report/98919/turning-to-sex-work-in-sri-lanka-s-north) அதனை தொகுத்து வெளியிட்ட அரசு சாரா தொண்டு நிறுவனம், முதலமைச்சரான தங்கள் கடமையை உணர்த்துவதற்காகவே, தக்க தருணம் பார்த்து வெளியிட்டிருப்பதாகத் தெரிகின்றது. இன்று வட மாகாணத்தில் வாழும் ஆயிரக் கணக்கான இளம் பெண்கள், குடும்ப வறுமை காரணமாக பாலியல் தொழில் செய்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

"சமூகத்தில் இழிவாக கருதப் படும்", பாலியல் தொழில் செய்வோரின் எண்ணிக்கை பெருகுவதற்காக, அந்த சமூகம் தான் வெட்கப் பட வேண்டும். மாறாக, அபலைப் பெண்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியாது. ஈழத்தில் கடந்த முப்பதாண்டு காலமாக நடந்த போரின் விளைவாக, பல்லாயிரக் கணக்கான பெண்கள் விதவைகளாகி உள்ளனர். அதனால், பல சமூகப் பிரச்சினைகள் எழுவது இயல்பு. உள்நாட்டுப் போர் நடந்த அனைத்து உலக நாடுகளுக்கும் பொதுவான பிரச்சினை அது. ஈழப்போர் முடிந்த பின்னர் நடைபெறும் வட மாகாண சபைத் தேர்தலில், தங்களையும், தங்கள் கட்சியையும் வாக்காளப் பெருமக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவு செய்துள்ளனர். அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை தாங்கள் காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.

தங்களது மாகாண சபையில், ஆனந்தி சசிதரன் என்ற பெண் உறுப்பினரும் இடம்பெற்றுள்ளார். போரினால் பாதிக்கப் பட்ட பெண்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக, "பெண்கள் நலத்துறை அமைச்சு" ஒன்றை ஏற்படுத்தி, அதற்கு ஆனந்தியை அமைச்சராக்கலாம். ஆனந்தி கூட போரினால் பாதிக்கப் பட்ட ஒருவர் என்பது கூடுதல் தகுதியாக கொள்ளப்படும். அதன் மூலம், வட மாகாணப் பெண்களை பாலியல் தொழில் என்ற நரகத்தில் இருந்து மீட்டெடுக்கும் வழி வகைகளை ஆராயலாம். கொடூரமான போர் காரணமாக, கணவரை, அல்லது தகப்பனை இழந்த பெண்களே, குடும்பச் சுமையை தாங்க முடியாமல் பாலியல் தொழிலுக்கு செல்கின்றனர்.

யாழ்ப்பாண பழைமைவாத சமூகத்தில், பொதுவாக ஒரு ஆண் தான் வேலைக்கு சென்று குடும்ப பாரத்தை சுமப்பது வழக்கம் என்பது தாங்கள் அறிந்ததே. குடும்பத்திற்காக உழைத்து வருமானத்தை ஈட்டித் தந்த, ஆண் துணையை இழந்த பெண்கள், குழந்தைகளை பராமரிக்க வசதியின்றி, பாலியல் தொழில் செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். கணவன் போரில் மரணமடைந்ததால், அல்லது கானாமல்போனதால் பல பெண்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். வறுமையும், குழந்தைகளை பராமரிக்க வேண்டிய பொறுப்பும், அவர்கள் பாலியல் தொழிலை தெரிவு செய்யத் தூண்டிய காரணிகளாக உள்ளன.

வட மாகாணத்தில் நிலவும், அரை நிலப்பிரபுத்துவ, அரை முதலாளிய சமுதாயம், ஆண்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் முனைப்புக் காட்டுகின்றது. அது சமூகத்தில் அரைவாசிப் பங்கினரான பெண்களை அடுப்படிக்குள் தள்ளுகின்றது. பெண்கள் வேலைக்கு போவதை தடுத்து, அவர்கள் வீட்டில் இருந்து குடும்பத்தை பராமரிப்பதற்காக படைக்கப் பட்டவர்களென போதிக்கின்றது. பெண்ணை வேலைக்கு அனுப்பாத மரபு, இன்றைக்கும் ஒரு சிறந்த சமூக விழுமியமாக பின்பற்றப் படுகின்றது. ஆகவே, தாங்கள் அமைக்கப் போகும் பெண்கள் நலத்துறை அமைச்சு இது போன்ற தடைகளை தகர்த்தெறியும் என்று நம்புகிறேன்.

மேலும், ஊருக்கு ஊர் முகாம்களை போட்டு தங்கியுள்ள சிங்கள படையினர், வட மாகாணத்தில் பாலியல் தொழிலை ஊக்குவிக்கும் காரணியாக உள்ளனர். அதனை அம்பலப் படுத்துவதன் மூலம், படை முகாம்களை அகற்றுமாறு அரசை நிர்ப்பந்திக்க முடியும். வட மாகாணத்தில் இருந்து இராணுவத்தை அகற்றுவது, உங்களது குறிக்கோளாக இருந்ததை தேர்தல் கால பிரச்சாரங்களின் போது அறிய முடிந்தது. கூடவே, "இராஜதந்திர போர்" பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள். நல்லது. உலகில் பிற நாடுகளில், அன்னிய நாட்டுப் படைகள் முகாமிட்டிருப்பதால், பாதிக்கப் பட்டிருக்கும் மக்களுடன் ஒன்று சேர்ந்து, தங்களது இராஜதந்திரப் போரை முன்னெடுக்கலாம். அதனால் தமிழர்களின் உரிமைப் போர் சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லப் படும் வாய்ப்புண்டு.

உதாரணத்திற்கு, ஜப்பானில் ஒகினாவா தீவில் இருக்கும் அமெரிக்க படையினரின் முகாம், அந்தத் தீவின் கலாச்சார-பொருளாதார சீர்கேடுகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்பாக, ஈழத்திற்கும், ஜப்பானுக்கும் இடையிலான தொடர்பை பயன்படுத்திக் கொள்ளலாம். ஜப்பானில், இரண்டாம் உலகப் போர் முடிந்து அறுபதாண்டுகள் ஆகியும், அந்த நாட்டை ஆக்கிரமித்த அமெரிக்கப் படைகள், இன்னமும் அங்கு நிலை கொண்டுள்ளன. குறிப்பாக, ஒக்கினாவா தீவு அமெரிக்க படைகளின் மேலாண்மையின் கீழ் உள்ளது. அங்கிருக்கும் அமெரிக்கப் படை முகாமை அகற்ற வேண்டுமென்று கோரி, ஒக்கினாவா தீவு மக்கள் பல வருடங்களாக போராடி வருகின்றனர். ஜப்பான், இலங்கைக்கு கொடை வழங்கும் முக்கிய நாடென்பதால், தங்களது இராஜதந்திரப் போரை ஜப்பானில் இருந்து ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும். ஏற்கனவே பல தடவைகள், ஜப்பான் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தமையும், தங்களுக்கு நினைவிருக்கலாம்.

வட மாகாணத்தில், முன்னொருபோதும் இல்லாத அளவு கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. அதற்காக தென்னிலங்கையில் இருந்து பெருமளவு சிங்களத் தொழிலாளர்கள் அழைத்து வரப் படுகின்றனர். இந்தத் தொழிலாளர்களும், பாலியல் தொழில் சந்தையில் நுகர்வோராக இருப்பதாக, தொண்டு நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. மாகாண சபை அதிகாரத்தை கைப்பற்றியவுடன், தொழில் முனைவோரை கட்டுப்படுத்தும் சட்டங்கள் கொண்டு வரலாம். அந்நிய அல்லது தென்னிலங்கை நிறுவனங்கள், குறிப்பிட்டளவு வட மாகாணத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றலாம். இதன் மூலம், வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதுடன், பாலியல் தொழிலும் நலிவடையும்.

வட மாகாணத்தில் நிலை கொண்டுள்ள படையினரும், கட்டுமானத் தொழிலாளர்களும் சிங்களவர்கள் தான். அதை சுட்டிக் காட்டி,  "சிங்களவர்கள் எமது மண்ணை சுரண்டி, எமது மக்களை நாசமாக்குகிறார்கள்..." என்று இனவாதம் பேசலாம். ஆனால், பிரச்சினை அத்தோடு முடியப் போவதில்லை. கருப்பு-வெள்ளை அரசியல் தேர்தலில் வாக்குகளை பெற்றுக் கொடுக்கலாம். ஆனால், மக்களுக்கு எந்தத் தீர்வையும் கொண்டு வராது. புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து விடுமுறையை கழிக்க வரும் தமிழர்களும், வட மாகாணத்தில் பாலியல் தொழில் அதிகரிப்பதற்கு காரணம் என்று சொல்லப் படுகின்றது. துரதிர்ஷ்டவசமாக, எமது இனவாத கோஷங்களை அவர்களுக்கு எதிராக திருப்பி விட முடியாது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் பெரும்பாலும் தமிழ் தேசியத்தில் தளராத பற்றுக் கொண்டவர்கள். தாங்கள் உறுப்பினராக உள்ள தமிழரசுக் கட்சியின் கொள்கைகளை ஆதரிப்பவர்கள். ஆகவே, "வழிதவறிய ஆடுகளை வழிக்கு கொண்டு வருவது" கடினமான காரியமல்ல. புலம்பெயர் தமிழர்களின் பணம் பாலியல் தொழிலை வளர்ப்பதற்குப் பதிலாக, ஆக்கபூர்வமான முயற்சிகளில் செலவிட வைக்கலாம். அவர்கள் தமது பணத்தை, வட மாகாணத்தில் பல்வேறு தொழிற்துறைகளில் முதலிட வேண்டும் என்று ஊக்குவிக்கலாம். புலம்பெயர் தமிழர்களின் முதலீட்டுக்கு, குறிப்பாக பெண்களை பணிக்கமர்த்தும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிக்கலாம். மாகாண சபையால் இடம் ஒதுக்கிக் கொடுக்கலாம். இது போன்ற ஆக்கபூர்வமான முயற்சிகளின் மூலம், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை பெருமளவு குறையும்.

வட மாகாண சபையில், கல்விக்கென ஒரு அமைச்சு உருவாக்கப் பட்டுள்ளதாக அறிகிறேன். யாழ்ப்பாணத்தில் புரையோடிப் போயுள்ள பழமைவாத சிந்தனைகளை, கல்வி அறிவு புகட்டுவதன் மூலம் களைய முடியும். "தமிழர் கலாச்சாரம்" என்ற பெயரில், பழைமைவாத பெருச்சாளிகளின் "தாலிபான் கலாச்சாரம்" கோலோச்சுவதை, உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

பெண் கல்வி ஊக்குவிக்கப் பட வேண்டும். விசேடமாக பெண்களுக்கென தொழிற்கல்வி வழங்கும் நிறுவனங்களை மாகாண சபையே உருவாக்கலாம். அதைத் தவிர, விதவைகள் மறுமணம் செய்து கொள்வதும் ஊக்குவிக்கப் பட வேண்டும். அதற்காக பொருளாதார கட்டமைப்பிலும், பண்பாட்டுத் தளத்திலும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். காணி, பொலிஸ் அதிகாரம் என்று, கிடைக்காத உரிமைகளுக்காக ஏங்குவதை விட, கையில் இருக்கும் அதிகாரங்களை சரிவர பயன்படுத்துவது சாலச் சிறந்தது. அந்த சாதனையை விக்னேஸ்வரன் தலைமை தாங்கும் வட மாகாண சபை நிகழ்த்திக் காட்டும் என்று நம்புவோமாக.

இப்படிக்கு, 
- ஒரு வட மாகாண வாக்காளர்

*****************************

வட மாகாண சபை, முதலைமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பான முன்னைய பதிவுகள்:
5."தமிழ் மேட்டுக்குடி தேசியக் கூட்டமைப்பு" விக்னேஸ்வரனின் உரை
4.விக்னேஸ்வரனின் வர்க்கப் புத்தி, தோற்றுப் போன தமிழர்கள் விரக்தி
3.தேர்தலில் மலர்ந்த "தமிழர் அரசு"! - ஓர் ஆய்வு
2.மாகாண சபைத் தேர்தல் : வடக்கே வீசும் புயல்
1.வட மாகாண சபைத் தேர்தல் - ஒரு முன்னோட்டம்

Friday, August 20, 2010

மேற்குலகின் இஸ்லாமிய எதிர்ப்பு பெண்ணியம்

ஆம்ஸ்டர்டாம் நகரில் வெளிநாட்டுப் பிள்ளைகள் கல்வி கற்கும் இடைநிலை தொழில்நுட்பக் கல்லூரி. சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் நான் அங்கே அலுவலகப் பணியாளராக வேலை செய்து கொண்டிருந்தேன். ஒரு நாள் வேலைக்கு வரும் போது வாசலில் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஒரு பாடசாலைக்கு போலிஸ் பாதுகாப்பளிப்பதை அப்போது தான் பார்க்கிறேன். கல்லூரியின் பெண் நிர்வாகிக்கு தொலைபேசி மிரட்டல்கள் விடுக்கப்பட்டதால், அந்த ஏற்பாடு என்று பின்னர் அறிந்து கொண்டேன். மிரட்டல்களுக்கு காரணம் இரண்டு மாணவிகளின் தற்காலிக இடைநிறுத்தம். அந்த மாணவிகள் செய்த குற்றம், பாடசாலைக்கு முகத்தை மூடும் பர்தா அணிந்து வந்தது தான். விடுமுறைக்கு மொரோக்கோ சென்ற இஸ்லாமிய மதப்பற்றுள்ள மாணவிகள், பாடசாலை தொடங்கிய போது "விசித்திரமான கருப்பு ஆடை" அணிந்து வந்தார்கள்.

ஆம்ஸ்டர்டாம்வாசிகள் பலருக்கு கூட எமது கல்லூரியின் பெயர் தெரியாது. ஆனால் பர்தா விவகாரம் நாடு முழுவதும் பேச வைத்தது. "பொது இடங்களில், பாடசாலையில் பர்தா அணிய அனுமதிக்கலாமா?" என்று ஊடகங்கள் அனல் பறக்கும் விவாதம் செய்து கொண்டிருந்தன. எமது அலுவலகத்தின் உள்ளேயும் அது குறித்த பேச்சு அடிபட்டது. மதிய உணவு இடைவேளையின் பொழுது, பர்தா அணிவதன் சாதக,பாதகங்கள் குறித்து விவாதித்தார்கள். எனது சக - ஊழியர்களில் பெரும்பான்மையானோர் வெளிநாட்டவர்கள். லத்தீன் அமெரிக்காவை சேர்ந்த கறுப்பினப் பெண்மணி, "பர்தா மாணவிகள்" ஆரம்ப வகுப்பு ஆசிரியைகளாக பயிற்சி எடுப்பதை குறிப்பிட்டு விமர்சித்தார். "இவர்கள் நாளை ஒரு ஆரம்ப பாடசாலையில் வேலைக்கு சேர்ந்தால், குழந்தைகள் பேயைக் கண்டவர்களாக அலறித் துடித்து ஓடுவார்கள்" என்றார். எமது குழுவில் இருந்த மொரோக்கோ, துருக்கியை சேர்ந்த முஸ்லிம் ஊழியர்களும், சம்பந்தப்பட்ட மாணவிகளுக்கு மூளைக் கோளாறு என்றனர். இதற்கிடையில் சர்ச்சையை தோற்றுவித்த மாணவிகள் சில நாட்களில் தோற்றுப்போன நீதிமன்ற வழக்கின் பின்னர், வழமையான உடையில் பாடசாலைக்கு வந்தார்கள்.

2001 செப்டம்பர் 11 க்குப் பிறகு, நெதர்லாந்திலும் இஸ்லாம் ஒரு முக்கிய பிரச்சினை. கடைசியாக நடந்த தேர்தலில் அதிக ஆசனங்களை வென்ற கட்சி ஒன்று (PVV ), முஸ்லிம் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு குடியேற அனுமதி வழங்கக் கூடாது என்று கூறி வருகின்றது. இருபது வருடங்களுக்கு முன்னர் இது போன்ற கருத்துகளை கூறுபவர்கள் இனவெறியர்களாக முத்திரை குத்தப்பட்டனர். ஆனால் இன்று அவை சாதாரண கருத்துச் சுதந்திரமாக பார்க்கப்படுகின்றது. PVV என்ற இஸ்லாமிய எதிர்ப்பு கட்சியின் வெற்றிக்கு ஊடகங்களும் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளன. அந்தக் கட்சியின் தலைவர் வில்டர்ஸ் பெரும்பான்மை (வெள்ளையின) நெதர்லாந்துக்காரரின் மனக்குமுறலை பிரதிபலிப்பதாக போற்றப்படுகின்றார்.

உண்மையில் ஐரோப்பாவில் இஸ்லாமிய எதிர்ப்பு, அந்நிய நாட்டு தொழிலாளரின் வருகையோடு தொடங்குகின்றது. ஐம்பதுகளில், அறுபதுகளில் லட்சக்கணக்கான முஸ்லிம் தொழிலாளர்கள் கட்டுமானப் பணிகளுக்காக தருவிக்கப்பட்டனர். இன்று வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் தெற்காசிய தொழிலாளர்களின் நிலையுடன் ஒப்பிடத்தக்கது. ஆனால் ஐரோப்பாவில், காலப்போக்கில் தொழிலாளர்களின் குடும்பங்களை கூட்டி வர அனுமதிக்கப்பட்டது. அவர்கள் வரும் பொழுது தங்களுடன் மதத்தையும், கலாச்சாரத்தையும் எடுத்துக் கொண்டு வந்தார்கள். இதனால் ஐரோப்பியரிடம் இருந்து அந்நியப்பட்ட மக்கள் குழுவொன்று இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றது. தமிழ் கலாச்சாரக் காவலர்களைப் போலவே, முஸ்லிம்களும் தமது பெண்களை கலாச்சாரக் காவிகளாக வைத்திருக்க விரும்புகின்றனர். ஐரோப்பியர்கள் அதனை வேறு விதமாக புரிந்து கொள்கின்றனர். "முஸ்லிம் குடும்பங்களில் ஆண்கள் பெண்களை அடக்கி வைத்திருப்பதன் வெளிப்பாடு தான் முக்காடு." முஸ்லிம் பெண்கள் அணியும் தலையை மூடும் முக்காடு பற்றிய சராசரி ஐரோப்பியரின் புரிதல் அது.

ஐரோப்பாவில் இப்போதெல்லாம் முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமை வழங்குவது குறித்து அதிகம் பேசுகிறார்கள். இந்த "நவீன பெண்ணிய" சிந்தனை, பல வெள்ளையின ஆண்களையும் ஆட்கொண்டுள்ளது. ஐரோப்பிய பெண்கள் எப்போதோ சம உரிமை பெற்று விட்டதாகவும், தாம் இப்போது முஸ்லிம் பெண்களின் உரிமைக்காக போராடுவதாகவும் நினைத்துக் கொள்கின்றனர். முஸ்லிம் குடும்பங்களில் கணவன்மார் தமது மனைவிகளை அடித்து வதைப்பதாக தொலைக்காட்சியில் தனியான நிகழ்ச்சி ஒளிபரப்புகிறார்கள். அதே நேரம், வெள்ளையின குடும்பங்களுக்குள்ளும் கணவன் மனைவியை அடிக்கும் பிரச்சினை இருப்பது குறித்து பேசப்படுவதில்லை. அதே போலத் தான், சமபாலுறவுக்காரரின் உரிமைகள் பற்றிய கதையாடல். முஸ்லிம் சமூகத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் தாக்கப்பட்டால் அது செய்தி. அதற்காக வெள்ளையினத்தவர்கள் எல்லோரும் அவர்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. இன்றைக்கும் ஓரினச்சேர்க்கையாளரை வெறுக்கும் வெள்ளையர்கள் சந்தர்ப்பம் கிடைத்தால் தாக்குகிறார்கள். கிறிஸ்தவ பாடசாலைகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் அவமதிக்கப்படுகினறனர். மேலும் இது போன்ற பிரச்சினைகள், இங்கு வாழும் இந்து, பௌத்த மதங்களை பின்பற்றும் சமூகங்களிலும் காணப்படுகின்றன. ஆனால் அதைப் பற்றி எந்த ஊடகத்திற்கும் அக்கறை இல்லை.

அதி உன்னத நாகரிக வளர்ச்சியடைந்த நெதர்லாந்தில் SGP என்றொரு கிறிஸ்தவ கட்சி இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் வரை அந்தக் கட்சியில் பெண்கள் உறுப்பினராக சேர முடியாது என்ற விதி இருந்தது. தற்போது அதனை தளர்த்திய போதிலும், தேர்தலில் பெண்கள் வேட்பாளராக நிற்க தடை உள்ளது. "ஏனெனில் பெண்கள் அரசியலுக்கு லாயக்கற்றவர்கள். கணவனுக்கு பணிவிடை செய்வதும், பிள்ளை பராமரிப்பதும் ஒரு நல்ல கிறிஸ்தவ பெண்மணியின் கடமை." இவ்வாறு தான் SGP தலைமை பிற்போக்காக சிந்திக்கிறது. இந்த நாட்டில் முஸ்லிம் பெண்கள், துப்பரவுப் பணியாளர்களாக குறைந்த ஊதியம் பெறும் தொழில் செய்கிறார்கள். அவர்களது ஊதிய உயர்வுக்காக பெண்ணியவாதிகள் போராட மாட்டார்கள். கணவனால் துன்புறுத்தப்பட்ட முஸ்லிம் பெண்கள் அடைக்கலம் கிடைக்காமல் அல்லல் படுகின்றனர். அரசு அதற்கான நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யவில்லை. ஆனால் பெண்ணியம் பேசும் இஸ்லாமிய எதிர்ப்பு வலதுசாரி அரசியல்வாதிகள், முஸ்லிம் பெண்களின் முக்காடுகளையும், பர்தாக்களையும் கழற்றுவதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர்.

Thursday, May 14, 2009

பெண்ணடிமைத்தனமும் மதவாத சட்டங்களும்

மத அடிப்படைவாதம்: ஒரு மேலைத்தேய இறக்குமதி - 3
இதுவரை இஸ்லாமிய உலகில் மத அடிப்படைவாதத்தை தோற்றுவித்த சக்திகளைப் பார்த்தோம். இனி அவர்களின் தத்துவார்த்த கொள்கை விளக்கங்களை பார்ப்போம். முதலில் மத அடிப்படியாவாதம் என்றால் என்ன என்பதற்கு சரியான வரைவிலக்கணம் கொடுக்கப்படுவது அவசியம். நடைமுறையில் இருக்கும் பல சொற்களின் அர்த்தம் தெரிந்து பயன்படுத்துவது சிறந்தது.
1. பழமைவாதிகள்: சமயச் சடங்குகளை, ஆச்சாரங்களை வழுவுறா வண்ணம் பின்பற்றுவபவர்கள். தம்மைத் தாமே சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளும் இவர்கள் பொதுவாக அரசியலில் ஈடுபடுவதில்லை.
2. இஸ்லாமியவாதிகள்: இஸ்லாம் என்ற மதத்தின் பெயரால் அரசியல் நடத்துபவர்கள். பாராளுமன்ற கட்சி அரசியல் நடத்துபவர்கள் முதல், ஆயதப் போராட்டத்தில் நம்பிக்கை உள்ள தீவிரவாதிகள் வரை.
3. மத அடிப்படைவாதிகள்: சாத்வீக வழியிலேயோ, அல்லது வன்முறைப் போராட்டம் மூலமோ இஸ்லாமியப் புரட்சியை ஏற்படுத்த விரும்புபவர்கள். புனித நூல் சட்டமாகும். அனைவரும் மத நெறிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுவர்.
இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், மேற்கே மொரோக்கோ முதல் கிழக்கே சீனா வரையிலான பரந்த இஸ்லாமிய சாம்ராஜ்யம் ஒன்றை அமைக்க கனவு காண்கின்றனர். மேற்குறிப்பிட்ட விளக்கங்கள் பிற மதங்களை சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், அவர்கள் எல்லோரும் தத்துவார்த்த ரீதியாக ஒன்று படுகின்றனர். முதலில் மேற்குலக நாடுகளால் முஸ்லிம்கள் அடக்கப்படுவதாகவும், அதற்கு தமக்கிடையே ஒற்றுமையின்மையால் முஸ்லிம்கள் பலவீனமாக இருப்பதாகவும், மதப்பற்று குறைந்ததுமே காரணம் என்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் என அழைத்துக் கொள்பவர்கள் எல்லோரும் முஸ்லிம்கள் அல்ல. இஸ்லாமிய புனித நூலின் சட்டங்களுக்கு அமைய வாழ்பவர்கள் மட்டுமே உண்மையான முஸ்லிம்கள். இதேநேரம், சட்டங்கள் பலவிதமாக மொழிபெயர்க்கப் படுவதால் வரும் குழப்பங்கள் இன்னும் தீரவில்லை.

"மத ஒற்றுமை" என்றால் என்னவென்று விரிவாகப் பார்ப்போம். பத்திற்கும் குறையாத மதப்பிரிவுகள் ஒன்று சேருதல். வர்க்கங்கள் மோதல் இன்றி சமரசம் செய்து கொள்தல். தேசியம் என்பது மேலைத்தேய கற்பிதம் என்பதால், "முஸ்லிம்" என்பது மட்டுமே ஒரேயொரு தேசிய அடையாளம். தற்காலத்தில் நமக்குத் தெரிந்த சில நாடுகளை, "முஸ்லிம் நாடுகள்" என அழைக்கபடுவதை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு நாடு முதலாளித்துவ அல்லது சோஷலிச கொள்கைகளை பின்பற்றினால், அவையெல்லாம் மேலைத்தேய சித்தாந்தங்கள் என்று நிராகரிக்கின்றனர். மதத்தை பின்பற்றாத மிதவாதிகளை அல்லது மதச்சார்பற்றவர்களை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. "எம்மதமும் சம்மதம்" என்று கூறுவதை பிழையான நிலைப்பாடாக கருதுகின்றனர். அவர்களின் உலகில் நாஸ்திகர்கள் என்று யாரும் இருக்க முடியாது, எல்லோரும் எதோ ஒரு மதத்தை சேர்ந்தவர்கள். ஒரே மதம்: இஸ்லாம், ஒரே மொழி: அரபு, ஒரே இனம்: முஸ்லிம் என்பது, இஸ்லாமியக் குடியரசின் தாரக மந்திரம்.

மேலைத்தேய நாகரீகம் தமது தொன்மையான கலாச்சாரத்தை பாதிக்கின்றது என குறைப்படுகின்றனர். ஆபாசப்படங்கள், போதைப்பொருட்கள், அரைகுறை ஆடை அணிதல், கண்டவனுடன் திரியும் சுதந்திரப்போக்கு, போன்ற மேலைநாட்டு கலாச்சார சீரழிவு தமது பிள்ளைகளை கெடுத்து விடும் என அஞ்சுகின்றனர். பழமைவாத பிற்போக்குத்தனங்களில் ஊறிய மக்களை, "கலாச்சார அழிவு" பற்றிய பீதியூட்டி, அதனை மேற்குலகிற்கு எதிரான வெறுப்பாக வளர்க்கின்றனர். "ஐரோப்பியர்கள் கலாச்சாரமற்றவர்கள். நாம் பழம்பெருமை வாய்ந்த கலாச்சாரத்தை கட்டிக்காப்பவர்கள்." என்ற கூற்று இன அடிப்படையில் தான் முன்வைக்கப்படுகின்றது. மேலைத்தேய கலாச்சார ஆதிக்கத்தை எதிர்க்கும் மத அடிப்படைவாதிகள், மேலை நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பாவனைப்பொருட்களை எதிர்ப்பதில்லை. அதியுயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட மேற்குலக உற்பத்திப் பொருட்கள், குறிப்பாக ஆயுதங்கள் இன்றி அவர்களது இஸ்லாமியக் குடியரசு நிலைக்க முடியாது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வட மாநிலங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். பல தசாப்தங்களாக நாட்டை இரும்புப்பிடியில் வைத்திருந்த சர்வாதிகாரம் மறைந்து, ஜனநாயகம் வந்த போது, முஸ்லிகள் தமக்கு ஷரியா சட்டம் வேண்டும் எனக் கோரினர். இதை அடுத்து ஏற்பட்ட கிறிஸ்தவ-முஸ்லிம் கலவரத்தால், இறுதியில் ஷரியா சட்டம் கொண்டுவர அரசு இணங்கியது. இது நடைமுறைக்கு வந்த பின்னர் தான், வதந்திகள் எவ்வளவு தூரம் ஆபத்தானவை என தெரிய வந்தது. அரசியல் சட்டப்படி, ஷரியா சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இரண்டு வகை நீதிமன்றங்கள் இருக்கின்றன. முஸ்லிம் அல்லாதவர்கள் தமக்கு விரும்பிய நீதி மன்றத்தில் நீதி கோரலாம். ஆனால் ஷரியா சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பாதிப்பான கொடுங்கோல் சட்டம் என்பது போல பரப்பட்ட வதந்தி பல உயிர்களை காவு கொண்டிருந்தது.

இஸ்லாமிய சட்டம் என பொதுவாக அறியப்பட்ட ஷரியா (பாதை) பற்றிய பரந்த அறிவு பலரிடம் இல்லை. பைபிளில் (பழைய ஏற்பாடு) மோசசிற்கு ஆண்டவன் அளித்த பத்துக் கட்டளைகள் தான் நவீன சட்டங்களின் மூலமாக கருதப்படுகின்றது. பழைய ஏற்பாட்டில் காணப்படும் பல சட்டங்கள், குர் ஆனிலும் இருக்கின்றன. அதே நேரம் அரேபிய குடாநாட்டின் பாரம்பரிய சட்டங்களும் சேர்ந்திருக்க வாய்ப்புண்டு. இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படை குர் ஆனாக இருந்த போதிலும், 12 ம் நூற்றாண்டில் தான் சட்டவாக்கம் முழுமை பெற்றது. அந்தக் கால கட்டத்தில் நான்கு சட்டக்கல்லூரிகள் நிறுவப்பட்டு, சட்டக் படிப்பில் புலமை பெற்றவர்களைக் கொண்டு ஆராய்ச்சிகள் நடந்தன. நான்கு கல்லூரிகளும் அதனை நிறுவிய அறிஞர்களின் பெயர்களால் அறியப்படுகின்றன. இஸ்லாமிய சட்டம் பற்றிய இந்த நான்கு கல்லூரிகளின் பார்வையும், கொடுக்கும் விளக்கங்களும் சில நேரம் வேறுபடுகின்றன. "ஹனாபி கல்லூரி" மிதவாத போக்குடையது. அதற்கு மாறாக "மாலிக் கல்லூரி" கடும்போக்கு பழமைவாதிகளை கொண்டது. "ஷாபி கல்லூரி" இவையிரண்டுக்கும் இடைப்பட்ட போக்குடையது. "ஹன்பலி கல்லூரி" வஹாபியரின் கோட்டை. இவை நான்கும் சவூதி அரேபியாவில் அமைந்திருந்தன. ஒரு காலத்தில் இஸ்லாமியப் பேரரசின் தலைநகராக இருந்த பாக்தாதில் "கானூன்" என்ற பெயரில், மிகவும் மாறுபட்ட மதச்சார்பற்ற சிவில் சட்டம் ஏற்படுத்தப்பட்டது. இது பெரும்பாலும் இன்று நடைமுறையில் உள்ள மேற்கத்திய நவீன சட்டத்தை போன்றது.

இதிலிருந்து இஸ்லாமிய ஷரியா சட்டம், எந்தக் கல்லூரியால் முன்மொழியப்பட்டது என்பதைப் பார்ப்பதும் அவசியம். திருட்டுக் குற்றத்திற்கு கையை வெட்டுவது போன்ற சரத்துகள் உள்ளன தான். ஆயினும் இது கடும்போக்காளரின் கல்லூரியில் மட்டுமே போதிக்கப்படுகின்றது. இத்தகைய கொடூரமான தண்டனைகளுக்கு மாற்றாக, மென்மையான தண்டனைகளை வழங்கும் நீதிமன்றங்களும் உண்டு. உதாரணத்திற்கு பாகிஸ்தானில் அமுலில் உள்ள ஷரியா சட்டம் அது கை வெட்டுவது போன்ற தண்டனைகளை வழங்குவதில்லை. மேலும் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்திருக்கும் காலகட்டத்தில் மட்டுமே கடுமையான சட்டங்களை குர் ஆன் முன்மொழிகின்றது. இதே நேரம் இறைத்தூதர் முகமது வாழ்ந்த காலத்தையும், அப்போதிருந்த அரேபிய சமூகத்தையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

அன்றைய சமூக கட்டுப்பாடுகள் எந்த அளவிற்கு மோசமாக இருந்தது, என்பதை ஒற்றியே இது போன்ற சட்டங்கள் உருவாக்கப்பட்டன. உதாரணத்திற்கு மாற்றானுடன் தகாத உறவு வைத்திருந்த பெண்ணை கல்லால் எறிந்து கொல்லும் தண்டனை பற்றி குர் ஆன் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், தகாத உறவைக் கண்ட நான்கு சாட்சிகள் தேவை. இப்படியான சம்பவங்களை நேரில் கண்ட நான்கு சாட்சிகளை தேடிப்பிடிப்பது இலகுவான காரியமல்ல. வதந்திகளை கேள்விப்பட்டே குற்றஞ் சாட்டப்பட்ட பெண்ணை கல் வீசிக் கொன்று கொண்டிருந்த சமூகத்தில், சாட்சிகளை விசாரித்த பிறகு தண்டனையை நிறைவேற்றுமாறு குர் ஆன் சட்டம் கொண்டு வந்தது. அன்றிருந்த பெண்களின் கையறு நிலையுடன் ஒப்பிடும் போது, இந்த சட்டம் பெண்ணுக்கு சில உரிமைகளை வழங்கியது. இயேசு வாழ்ந்த யூத சமூகத்திலும் அத்தகைய வழக்கம் இருந்ததை பைபிள் கதை ஒன்று எடுத்துக் காட்டுகின்றது.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர், இஸ்லாமிய மதத்தை நிந்தித்தற்காக சல்மான் ருஷ்டி என்ற எழுத்தாளருக்கு ஆயத்துல்லா கொமெய்னி வழங்கிய மரண தண்டனை தீர்ப்பிற்கு பின்னர், பத்வா என்ற சொல் உலகப்பிரசித்தி பெற்றது. அதிலிருந்து பலர் பத்வா என்றால் மரண தண்டனை என அர்த்தப்படுத்திக் கொண்டனர். ஆனால் அந்த சொல்லின் உண்மையான அர்த்தம் வேறு. ஒரு வழக்கறிஞர் தன்னிடம் சட்ட உதவி கேட்டு வருபவரிடம், சட்டப் புத்தகங்களை புரட்டி வழக்கு சார்பான விளக்கம் கொடுப்பார். அதை அடிப்படையாக கொண்டு நீதிபதி தீர்ப்பு சொல்வார். அதற்கு தான் பத்வா என்று பெயர். ஆனால் கொமெய்னி வழங்கிய பத்வா வேறு. அது அரசியல் நோக்கத்திற்காக மதத்தையும், சட்டத்தையும் திரித்த பத்வா. நமது காலத்து மத அடிப்படைவாதிகள் எல்லாம் இப்படி மதப்போர்வை போர்த்திய அரசியல்வாதிகள் தாம். பிற்போக்குவாதிகளின் விவேகமற்ற செயல்கள், பலரது கவனத்தை ஈர்க்கின்றன.

முஸ்லிம் பெண்கள் தலையில் இருந்து பாதம் வரை மூடும் "நிகாப்", அல்லது "பூர்க்கா", அல்லது "ஷடோர்" என்ற ஆடை அணிவது பற்றி உலகம் முழுவதும் பலவாறாக விவாதிக்கப் படுகின்றது. இந்த ஆடையின் பூர்வீகம் ஈரான். அங்கே ஷடோர் என அழைக்கப்படும் இந்த ஆடை, இஸ்லாமிற்கு முந்திய கலாச்சாரத்தை சேர்ந்தது. குர் ஆன் தோன்றிய காலத்தில், அரேபியாவில் இந்தப் பழக்கம் இருந்ததற்கான ஆதாரம் இல்லை. புனித நூல் இது பற்றி தெளிவாக எங்குமே குறிப்பிடவில்லை. இறைத்தூதர் முகமதுவை பின்பற்றிய பெண்களுடன், அமைப்பை சேர்ந்த ஆண்கள் திரைக்கு பின்னால் இருந்தே பேச வேண்டும் என்று ஒரு வாசகம் உண்டு. மேலும் தம்மை வேறுபடுத்திக் காட்ட முஸ்லிம் பெண்கள் அடக்கமான ஆடை அணிய வேண்டும் என்றும் சொல்லப்படுகின்றது. அனேகமாக திரை என்ற பொருள்படும் "ஹிஜாப்" என்ற அரபுச் சொல், உடலை மூடும் ஆடை என மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம். ஒரு வீட்டிற்கு ஆண்கள் விருந்தினராக செல்லும் நேரம், அந்த வீட்டு பெண்கள் திரை மறைவில் இருப்பர். இந்தக் குறிப்பு பைபிளிலும் வருகின்றது. இப்போதும் எமது நாடுகளிலும் சில பழமைவாதம் பேணும் குடும்ப பெண்கள், வீட்டிற்கு அந்நிய ஆண்கள் வந்தால் சமையலறைக்குள் சென்று விடும் பழக்கம் இங்கே நினைவுகூரத்தக்கது.

இஸ்லாமிய அரசர்கள் ஆண்ட காலத்தில், அவர்களின் அரண்மனையில் ஹாரம் (அந்தப்புரம்) என்ற பெண்களுக்கு தனியே ஒதுக்கப்பட்ட பகுதி இருந்தது. அந்தப்புரத்தில் இருந்த பெண்கள், வெளியுலகம் காணாது, சுதந்திரமின்றி அடைந்து கிடந்தனர். நாட்டுப்புறங்களில் ஏழைக் குடியானவன், தனது வீட்டில் தனியான அந்தப்புரம் வைத்திருக்க வசதியற்றவன். அதனாலும் தனது வீட்டுப் பெண்கள் உடலை மூடும் ஆடை அணிந்து வெளியே செல்லுமாறு கட்டுப்படுத்தி இருக்கலாம். நாட்டுப்புற பெண்கள், வயலில் சேலை செய்ய வேண்டி இருந்தது, அல்லது சந்தைக்கு சென்று வர வேண்டி இருந்தது. ஆகவே அந்தப்புரமாக இருந்தால் என்ன, உடலை மூடும் ஆடையாக இருந்தால் என்ன, பெண் அடக்குமுறையை நெறிப்படுத்தவே கொண்டுவரப்பட்டன. மத அடிப்படைவாதிகள் பூர்க்கா அணிவது பெண்களுக்கு பாதுகாப்பானது என புதிய வியாக்கியானம் சொல்கின்றனர். அப்படியானால் இன்றைய சமூகம் பாதுகாப்பற்றது என்பதை ஒப்புக் கொள்கின்றனர். சமூகக் குறைபாடுகளை களையாமல், பெண்களே உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் எனக் கூறுவது, ஒரு பிரச்சினைக்கான தற்காலிக தீர்வு மட்டுமே. இன்றைய முஸ்லிம் பெண்கள் தம்மை கட்டுப்பாடான மதப்பற்றாளர்கள் எனக் காட்ட, தலையை மூடி முக்காடு போரடுவது வேறு விடயம். 19 நூற்றாண்டு ஐரோப்பாவில், கத்தோலிக்க தேவாலயத்தினுள் பிரார்த்தனைக்கு போகும் கிறிஸ்தவ பெண்களும் முக்காடு அணிந்திருந்தனர்.

இஸ்லாமிய மதம் மட்டுமல்ல, கிறிஸ்தவ, யூத மதங்கள் கூட ஆணாதிக்க சமுதாயத்தில் உருவானவை தான். சமநிலையற்ற சமுதாயம் பற்றி குறிப்பட்ட மதங்கள் கேள்வி எழுப்பாததுடன், அதை சாதாரண தோற்றப்பாடாக ஏற்றுக் கொள்கின்றன. இஸ்லாமிய மதம் தோன்றிய முகமதுவின் காலத்தில் பெண்களின் நிலை வேறு விதமாக இருந்தது. முகமது தலைமையிலான இஸ்லாமியப்படையில் பெண் வீராங்கனைகளும் இருந்தனர். பண்டைய அரேபிய சமுதாயத்தில் இஸ்லாம் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டாலும், சீர்த்திருத்தியது. இறைத்தூதர் முகமதுவே ஒரு விதவையை மணந்து கொண்ட விடயம் குறிப்பிடத்தக்கது. விதவைகள் மறுமணம் அப்போதே ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெண்களுக்கான சொத்துரிமையை குர் ஆண் அங்கீகரித்தது. இருப்பினும் தற்கால மத அடிப்படைவாதிகள் கொண்டுவர விரும்பும் சொத்துரிமைச் சட்டங்கள், பெண்களை ஆண்களில் தங்கி இருக்கச் செய்யும் நோக்கம் கொண்டவை. ஜோர்டான், வளைகுடா நாடுகள், (தாலிபானின்) ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில், "மனைவி தனது சொத்தை விற்க கணவனின் அனுமதி பெற வேண்டும்" என்ற சட்டம் உள்ளது. இதே சட்டம் "தேச வழமைச் சட்டம்" என்ற பெயரில் இலங்கையில் யாழ் குடாநாட்டில் அமுலில் உள்ளது. அங்கே இந்த சட்டத்தை கொண்டுவந்தவர்கள், சைவ மதத்தை சேர்ந்த தமிழ் பழமைவாதிகள்.
---(தொடரும்)---

Thursday, March 19, 2009

வாக்குரிமைக்காக போராடிய பெண்ணிய தீவிரவாதிகள்



பெண்களின் வாக்குரிமை சில "பயங்கரவாதிகளின்" போராட்டத்தினால் கிடைத்த பலன் என்பது, இன்று தேர்தல் காலங்களில் வாக்களிக்கும், அல்லது வாக்களிக்காத பெண்கள் பலருக்கு இன்னமும் தெரியாத உண்மை.

 பாராளுமன்ற ஜனநாயகம் தோன்றிய ஐரோப்பாவில், 19 ம் நூற்றாண்டு வரை தேர்தலில் வாக்களிப்பது ஆண்களின் ஏகபோக உரிமையாக இருந்தது. வீட்டுவேலை செய்வதே பெண்களுக்கு விதிக்கப்பட்ட கடமை, என்ற சிந்தனை கோலோச்சிய காலத்தில், பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்ற விடயத்தை ஆணாதிக்கம் நிலவிய ஆளும்வர்க்கமும், மத நிறுவனங்களும் நினைத்தே பார்க்கவில்லை. 1901 ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து சில வருடங்களுக்கு, வாக்குரிமை கோரிப் போராடிய பெண்ணிய அமைப்பொன்று வன்முறை பிரயோகித்த போது, அரசாங்கத்தால் "பயங்கரவாதிகள்" என அடக்கப்பட்டனர்.

இங்கிலாந்தில் 1903 ம் ஆண்டு, மகளிர் சமூக அரசியல் ஒன்றியம் (WSPU) ஸ்தாபிக்கப்பட்டத்தில் இருந்து, தமது இலக்கை அடைவதற்காக, தீவிரவாத பாதையை தேர்ந்தெடுத்திருந்தனர். ஒரு பக்கம் பெண்கள் மத்தியில் பெண்கள் மத்தியில் கருத்தரங்குகளை நடத்தி, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வந்தனர். மறு பக்கம், பெண்விடுதலைக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட சில உறுப்பினர்கள், தலைமறைவாக இருந்து கொண்டு அரசியல் வன்முறைகளில் ஈடுபட்டனர். அரசாங்க கட்டடங்களின் ஜன்னல்களை உடைக்கும் போராட்டம் தீவிரமடைந்து, ஸ்கொட்லாந்தில் மன்னரின் வாகனத்தை தாக்கும் அளவிற்கு தீவிரமடைந்தது. அதனை அரச குடும்பத்தின் மீதான தாக்குதலாக கண்ட பொது மக்கள் அப்போது கொதிப்படைந்திருந்தனர். போலீசார் கைது செய்யப்பட்ட உறுப்பினரை மக்களின் கோபாவேசத்திலிருந்து பாதுகாக்க வேண்டியிருந்தது. கிறிஸ்தவ திருச்சபையும் பெண்களின் வாக்குரிமையை எதிர்த்து வந்ததால், சில தேவாலயங்களும் எரிக்கப்பட்டன.

WSPU உறுப்பினர்கள், "The Suffragettes" என அழைக்கப்பட்டனர். 1910 ம் ஆண்டிற்குப் பிறகு Suffragettes போராட்டம் தீவிரமடைந்தது. அரச கட்டடங்களை எரிப்பது, குண்டுகள் வைப்பது பரவலாக நடந்தது. அவர்களின் கட்சிப்பத்திரிகையான The Suffragettes, இதுவரை 337 தாக்குதல்களுக்கு உரிமை கோரியது. குண்டுகள் பல அடிப்படைத் தரம் வாய்ந்ததாக இருந்த போதிலும், சில கட்டடங்களை தகர்க்கும் அளவு பாரிய சேதம் விளைவிக்கும் வெடிபொருட்களை (Chlorate based high explosive) கொண்டிருந்தன. எந்தவொரு வெடிகுண்டுத் தாக்குதலும் ஆளரவம் இல்லாத தருணத்திலேயே வெடிக்க வைக்கப்பட்டதால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. அரசாங்கத்தால் பயங்கரவாதம் என முத்திரை குத்தப்பட்ட இத்தகைய நடவடிக்கைகள் பொது மக்கள் மத்தியில் பெருமளவு மாற்றத்தை உருவாக்கா விட்டாலும், அரசின் பிடி தளர்ந்தது.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட WSPU உறுப்பினர்கள், சிறையில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டதும், கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தை அடக்க வலுக்கட்டாயமாக உணவு ஊட்டப்பட்ட சம்பவங்களும், பொது மக்கள் மத்தியில் Suffragettes மீது அனுதாப லையை தோற்றுவித்தது. அதைப் பயன்படுத்தி பெண்ணியவாதிகள் மக்களை அரசியல்மயப்படுத்தும் வேலையில் ஈடுபட்டனர். தமது போராட்ட தந்திரோபாயத்தை மாற்றிக் கொண்டனர்.

லண்டன் நகர தெருக்களில், அரச பவனி வரும் வீதியோர மாடி வீடுகளை ஏற்கனவே வாடகைக்கு எடுத்து வைத்திருப்பர். அரசரை வரவேற்க மக்கள் குழுமியிருக்கும் தருணம், மேலே இருந்து துண்டுப் பிரசுரங்களை வீசுவர். ஜூன் 1913 ம் ஆண்டு, மன்னரின் குதிரை வண்டிக்கு குறுக்காக ஓடிய WSPU உறுப்பினர் ஒருவர், ஸ்தலத்திலேயே கொல்லப்பட்ட துயர சம்பவம், போராட்ட வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. அதற்குப் பின் பெருமளவு மக்கள் பெண்களின் வாக்குரிமைக்கு ஆதரவளித்தனர். ஆளும் லிபரல் கட்சியும் மெல்ல மெல்ல வாக்குரிமைச் சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் துணிவைப் பெற்றது.

பிரித்தானியாவில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்றுத்தந்த WSPU அமைப்பினதும், அதன் தலைவி Emmelinne Pankhurst இனதும் பங்களிப்பு வரலாற்றில் பொன் எழுத்துகளால் பதிக்கத்தக்கவை. பிரிட்டிஷ் பாராளுமன்ற முன்றலில் Emmelinne க்கு சிலை வைப்பதற்கு இன்னும் சில வருடங்கள் எடுத்தன. அனைத்துலக பெண்களும் நன்றியுடன் நினைவு கூற வேண்டிய Emmelinne யார்? அவரும் ஒரு காலத்தில் வெளி உலகம் தெரியாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்த பெண் தான். ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு ஆண் இருக்கிறான், என்றும் சொல்லலாம். Emmelinne திருமணம் முடித்த, "சிவப்பு டாக்டர்" என அழைக்கப்பட்ட Richard Marsden Pankhurst தான் அந்த பெருமைக்குரிய ஆண்.

கருத்துரிமைக்காக, அரசியலில் மதத்தின் தலையீட்டை எதிர்த்து, பிரபுக்கள் சபையின் அதிகாரத்திற்கு எதிராக, அயர்லாந்தின் சுயநிர்ணய உரிமைக்காக, இந்தியாவின் சுதந்திரத்திற்காக சளைக்காமல் போராடியவர். ஒரு சோஷலிஸ்ட்டான Richard தனது முற்போக்கு கருத்துகளை ஊருக்கு உபதேசம் செய்வதுடன் நின்றுவிடவில்லை. வீட்டிலும் அதனை நடைமுறைப்படுத்தினார். தனது இளம் மனைவி பிற பெண்களைப் போல வீட்டு வேலை செய்யும் இயந்திரமாக இருப்பதை அவர் விரும்பவில்லை. தனது அரசியல் கருத்துகளை மனைவியுடன் பகிர்ந்து கொண்டார். பெண்ணுரிமைக்காக பெண்களே போராட வேண்டும் என்ற கருத்தை விதைத்தார். அதன் பலனாக அவரது மனைவி Emmelinne ம், மகள் Christabel ம் சேர்ந்து பெண்களின் வாக்குரிமைக்காக போராடும் Women's Political and Social Union என்ற அமைப்பை கட்டி எழுப்பினர். அன்று பெண் விடுதலைக்காக போராடியவர்களை பற்றி, இன்றைய பெண்கள் அறியாதவாறு வரலாறு மறைக்கப்படுகின்றது.



Books:
1. The Act of Militancy: Violence and the  Suffragettes - by Brian Harrison
2. The Women's Suffrage Movement in 
Scotland - By Leah Leneman
3. Emmeline Pankhurst: a Biography - by June Purvis

Web Site:
The Women's Library

Friday, August 08, 2008

சைப்பிரசில் இலங்கைப் பெண்களின் அவலம்


லர்னகா விமான நிலையத்தில் வந்திறங்கும் இலங்கையைச் சேர்ந்த இளம் பெண்கள், கண்கள் நிறைய கனவுகளுடன் வருகின்றனர். தாயகத்தில் அவர்களின் வறுமையான குடும்ப பின்னணி, அவர்களை சைப்ரஸ் சென்றாவது திரவியம் தேடி வருமாறு நிர்ப்பந்தித்து இருக்கா விட்டால், “சைப்ரஸ்” என்ற நாட்டின் பெயரையே வாழ்க்கையில் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இலங்கையில் தேசத்தின் பொருளாதாரத்தை உலகமயமாக்கியதன் விளைவு; ஆயிரக்கணக்கான பணிப்பெண்கள் வளைகுடா நாடுகளுக்கும், பின்னர் சைப்பிரசுக்கும் ஏற்றுமதியானர்கள். சைப்பிரசின் நாணயமான பவுணின் உயர்ந்த பெறுமதியை, இலங்கை ரூபாய்க்கு பெருக்கி பார்த்து, அதனால் தாம் சம்பதிக்கப் போகும் தொகையை மனதுக்குள் நினைத்து பார்த்து மகிழும் பணிபெண்கள், தாம் சர்வதேச உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாவதை மட்டும் வசதியாக மறந்து விடுகின்றனர்.

இலங்கை பெண்களை பணிக்கமர்த்தும் குடும்பங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று: சிறு பிள்ளைகள் உள்ள குடும்பங்கள். இரண்டு: வயோதிப ஆண்கள்,பெண்கள். எப்படியான குடும்பமாக இருப்பினும், இவர்களின் பணி தினசரி அதிகாலையே ஆரம்பமாகி, இரவில் முடிகின்றது. சிறு பிள்ளைகள் இருக்கும் குடும்பமாயின், அந்தப் பிள்ளைகளை பராமரித்தல், அல்லது வயோதிபர்களை பராமரித்தல் போன்றன இவர்களின் கடமை. பிள்ளைகளை பராமரிக்கும் பணிப்பெண்கள் குடும்பத்தலைவிக்கு சமையலில் உதவி செய்தல் வேண்டும், வயோதிபர்களை பராமரிப்போர் அவர்களுக்கு சமைத்தும் கொடுக்க வேண்டும். சைப்ரஸ் உணவையே சமைப்பதால், அதையே அன்றாடம் சாப்பிடும் பணிபெண்கள், தமக்கு விடுமுறை கிடைக்கும் ஞாயிற்று கிழமை மட்டும், இலங்கை உணவை ருசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

குறிப்பிட்ட அளவு நேரம் தாய்மார்கள் பொறுப்பு எடுப்பதால், சிறு பிள்ளைகளை பராமரிக்கும் பெண்களின் நிலை பரவாயில்லை. ஆனால் வயோதிபர்களை பராமரிப்பவர்களின் நிலைமை பெரும்பாலும் பரிதாபகரமானது. தமக்கு ஓய்வு நேரம் கிடைப்பது அரிது என்றும், அப்படியே கிடைத்தாலும், பொழுதுபோக்காக தொலைக்காட்சி பார்க்க கூட அனுமதிக்காது, தங்களை கவனிக்கும் படி வயோதிபர்கள் நச்சரிப்பதாக சில பெண்கள் தெரிவித்தனர். உண்மையில் அதிக கவனிப்பு தேவைப்படும் குழந்தைகள், வயோதிபர்கள் ஆகியோரை பராமரிப்பதில் ஏற்படும் மன உளைச்சல்களில் இருந்து தப்பிக்கொள்ளவும், பல சைப்ரஸ்காரர்கள் பணிப்பெண்களை வைத்துக் கொள்கின்றனர்.

சைப்ரசில் வயோதிபமடங்கள் உள்ள போதிலும், சம்பிரதாயப்படி பல பிள்ளைகள் வீட்டில் வைத்து பார்க்கவே விரும்புகின்றனர். இருப்பினும் பிள்ளைகள் தொழில் காரணமாக வேறு இடங்களில் வாழ்ந்து வருவதால், அல்லது அதே வீட்டில் இருப்பினும் செல்வச்செழிப்பு காரணமாக, தமது பெற்றோரை பார்த்துக்கொள்ள பணிபெண்களை வேலைக்கு அமர்த்துகின்றனர். “வயோதிபர் பராமரிப்பு” என்ற பொதுப்பணித்துறையை அரசாங்கம் தனியார்மயமாக்கியுள்ளதால், வசதி குறைந்த சைப்ரஸ் குடும்பமாகவிருந்தாலும், பிள்ளைகள் பணம் சேர்த்து பணிப்பெண்களின் மாதசம்பளத்தை கொடுக்கின்றனர். மேற்கு ஐரோப்பிய தரத்துக்கு வளர்ச்சியடைந்த சைப்ரஸ் பொருளாதாரம், சாதாரண தொழிலாளியையும், வீட்டில் வேலைக்காரி வைத்துக் கொள்ளுமளவிற்கு பணவசதி படைத்துள்ளவர்களாக மாற்றியுள்ளது. ஒரு காலத்தில், அதாவது சுதந்திரத்திற்கு பின்னான அறுபதுகளில், பொருளாதார பின்னடைவு காரணமாக, பெருமளவு வசதியற்ற சைப்ரஸ் மக்கள் வேலை தேடி இங்கிலாந்து சென்றனர். இன்று நிலைமை தலைகீழாக மாறி விட்டது.

ஏற்கனவே ஒரு முகவர் மூலம் இந்தப் பணிப்பெண்களை வேலைக்கமர்த்தும் சைப்ரஸ் குடும்பம், அந்தப் பெண்களுக்கு தமது வீட்டிலேயே உணவும், இருப்பிடமும் வழங்குவதற்கு கடமைப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் இந்த கடமை குறிப்பிடப்பட்டிருப்பினும், பெரும்பாலான தொழில் வழங்குனர்கள் தனியான அறை ஒதுக்கிய போதும், சில வீடுகளில் வரவேற்பறையில் உள்ள சோபாவில் படுக்கும் நிர்ப்பந்தம் நிலவுகிறது. பெரும்பாலும் வேலைக்கு வைத்திருக்கும் எசமானர்களே ஒப்பந்தத்தை மீறுவது வழமை. பல தொழில் வழங்குனர்கள், சட்டத்திற்கு மாறாக, பணிப்பெண்களின் கடவுச்சீட்டு, மற்றும் வதிவிட அனுமதிப்பத்திரம், வெளிநாட்டவர் பதிவுக் கையேடு போன்ற மிக முக்கியமான பத்திரங்களை கூட வாங்கி வைத்துக் கொள்கின்றனர். மேலும் அதிக நேரம் வேலை வாங்கி விட்டு, சம்பளம் கொடுக்காதது, ஒப்பந்தத்தில் இல்லாத வேலையும் செய்யுமாறு கட்டாயப்படுத்தல் என்பன தாராளமாக நடக்கும் சட்ட மீறல்கள். பணிப்பெண்களுக்கான வதிவிட அனுமதி அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் என்று இருப்பதால், நீடிக்கப்படும் ஆண்டுகளுக்கு விசாவை புதிப்பிக்காமல் வைத்திருப்பதும், அது பின்னர் சம்பத்தப்பட்ட பணிப்பெண்களுக்கே பாதகமாக அமைவதும் உண்டு. தொழில் வழங்குனர்களின் மீது புகார் கூற துணியும் பெண்கள் மீது, “நடத்தை சரியில்லை” என்று குற்றம் சாட்டப்படுகிறது. அந்தப்பெண்ணுக்கு ஒரு காதலன் இருந்தால், “துரதிர்ஷ்டவசமாக” கர்ப்பமடைந்தால், அது கூட “தகாத நடத்தையாக” கணிக்கப்பட்டு, சில நேரம் ஒப்பந்தத்தை முறித்து, நாடு கடத்தலில் கொண்டு போய் விடும்.

செல்வச்செழிப்பு அகம்பாவத்தையும் கூடவே கொண்டுவரும். சைப்ரஸ் சமூகத்தில் அடிமட்டத் தொழிலாக கருதப்படும் துப்பரவாக்கும் பணியை, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வருவோர் செய்வதால், இலங்கையரை தரக்குறைவாக கருதும் பழக்கம் உள்ளது. மேலும் சிறு பிள்ளைகள் கூட, “மவ்று”(கிரேக்க மொழியில், கருப்பு) என்று இகழும் அளவிற்கு இனவாதம் வளர்ந்துள்ளது. இனவாதம் வெளிப்படையாக காட்டப்படா விட்டாலும், அது சைப்ரஸ் சமூகத்தினருக்குள்ளே மட்டுமுள்ள பேசு பொருளாகும். உதாரணத்திற்கு “ரகசிய உறவின்” மூலம் குழந்தை பெறும் இலங்கைப்பெண்கள் அந்தக் குழந்தையை கைவிடும் சம்பவங்கள், சைப்ரஸ் ஊடகங்கள் மூலம் பூதாகரமாக காட்டப்படும். அது போன்ற செய்திகளை பார்க்கும் சைப்ரஸ் மக்கள், இலங்கையரை பற்றி இனவாதக் கண்ணோட்டத்தில் தரக்குறைவாக கதைக்க பயன்படுத்துகின்றனர். வலதுசாரி அரசியல் சக்திகள் இந்த உதாரணங்களை காட்டி, “வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறும் புற்றுநோய் கிருமிகள்” நாட்டை பாழ்படுத்தும் அபாயம் பற்றி அடிக்கடி பேசுகின்றனர். இலங்கையருக்கும் சைப்ரஸ் மக்களுக்குமிடையிலான தொடர்பு வெறும் தொழில்முறை சார்ந்தது என்பதால், இனவாத தப்பபிப்பிராயங்கள் மிக அதிகம்.

வழக்கம் போலவே இலங்கைப் பெண்களின் உழைப்பு சுரண்டப்படுவதன் மூலம் கிடைக்கும் பணம் சைப்ரசை செல்வந்த நாடாக வைத்திருக்கும் உண்மை பற்றி பேசுவோர் மிகக்குறைவு. அதற்கு காரணம் தொழில் ஒப்பந்தம் பெற்று வரும் பணிப்பெண்கள், சைப்ரஸ் சமூகத்துடன் தாமரை இல்லை தண்ணீர் போல ஒட்டாமல் வாழ்வது தான். இந்த அரசியல் அறிவு, பாதிக்கப்படும் இலங்கைப் பணிப்பெண்களிடமும் இல்லை என்பது பெரிய குறை தான். முடிந்த அளவு பணம் சம்பாதித்துக் கொண்டு, இலங்கை திரும்ப வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு இருக்கும் இவர்கள், மனதளவில் இலங்கையில் வாழ்கின்றனர். அவர்களது சமூக தொடர்பு பிற இலங்கையருடன் மட்டுமே உள்ளது. கிரேக்க மொழி தெரிந்த பெண்கள் கூட, தமது தொழில், மற்றும் தனிப்பட்ட பிரச்சினை குறித்து மட்டுமே சம்பாஷனைகளை குறுக்கிக் கொள்வதால், தாம் வாழும் நாட்டைப் பற்றி எதுவும் அறியாது வாழ்கின்றனர்.

சைப்ரசிற்கு இலங்கையைச் சேர்ந்த ஆண்களும் பெருமளவு வருகின்றனர். ஆனால் பெரும்பாலும் இவர்கள் கல்லூரிகளில் படிக்க என்று வந்து, பின்னர் ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாம் என்று தங்கி விட்டவர்கள். இலங்கையில் ஏழ்மையான பின்னணியில், உழைக்கும் வர்க்கத்தில் இருந்து வரும் பணிப்பெண்களைப் போலன்றி, இந்த வாலிபர்கள் ஓரளவு வசதியான (கீழ்) மத்தியதர வர்க்கத்தில் இருந்து வருபவர்கள். கல்லூரி மாணவர்களாக வந்த இலங்கை வாலிபர்களுக்கும், வீட்டுப் பணிப்பெண்களாக வந்த இலங்கை யுவதிகளுக்கும் இடையே ஆன உறவு, சில நேரம் வர்க்க முரண்பாடுகளையும் தோற்றுவிக்கின்றது. சைப்ரசில் பொதுப் போக்குவரத்து சேவை அரிதாகவே கிடைப்பதால், சில இளைஞர்கள் சட்டவிரோத “டாக்ஸி” ஓடுகின்றனர். இவர்களின் ஜீவனம், பெரும்பாலும் பணிப்பெண்களை நம்பியே உள்ளது. பணிப்பெண்களின் (சட்டபூர்வ) மாத வருமானம் 300 யூரோவை தாண்டாத போது, இந்த டாக்ஸி சாரதிகளின் (சட்டவிரோத) வருமானம் மாதம் 1000 யூரோவை தாண்டுவது முரண்நகை.

இலங்கையில் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த பணிப்பெண்களின் சமூக பின்னணி, ஓரளவு வசதியான கீழ் மத்தியதர வர்க்கத்தை(குட்டி பூர்ஷுவா) சேர்ந்த இளைஞர்களிடம் தங்கியிருக்க வைப்பதால்; காதலித்து நடித்து ஏமாற்றும் ஆண்களும், நம்பி ஏமாறும் பெண்களுமாக இலங்கையர் சமூகம் உள்ளது. சில பெண்களின் மோசமான நடத்தையை சுட்டிக்காடும் ஆண்கள், “எல்லா பெண்களும் அப்படி” என்ற கருத்தை முன்வைக்கின்றனர். இந்தப் பிரச்சினையை கூட சிலர் ஆணாதிக்க பார்வையுடன் அணுகுகின்றனர். சில “நடத்தை தவறும்”(லாப நோக்கோடு செயற்படும்) பெண்கள், பல காதலர்களுடன் தொடர்பு கொண்டு பணம் கறப்பதை சுட்டிக்காட்டும் அதே வேளை, பல அப்பாவி யுவதிகள் தம்மால் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாவதை பல ஆண்கள் நியாயப் படுத்துகின்றனர். சில சம்பவங்கள் பாலியல் சுதந்திரம் சம்பத்தப் பட்டதாயினும், வறுமையான சமூகப் பின்னணியும் இத்தகைய பெண்கள் தடம் மாறும் காரணங்களாகும். அதேவேளை நன்னடத்தையுள்ள பெண்களை கூட தனது வாழ்க்கைத்துணையாக சில ஆண்கள் ஏற்க மறுப்பதற்கு, இலங்கையில் அவர்களது வேறுபட்ட சமூகப் பின்னணி தான் காரணமாக இருக்க முடியும். வெளிப்பார்வைக்கு ஆண்-பெண் முரண்பாடாகவோ, இன, மத முரண்பாடுகளாகவோ புரிந்து கொள்ளப்படும் பல சம்பவங்கள், வர்க்க அடிப்படையை கொண்டதாக உள்ளன. இலங்கை திரும்பியதும், “நல்ல பிள்ளையாக” தமது பெற்றோர் நிச்சயிக்கும் பெண்ணை மணக்க நினைக்கும் ஆண்கள், தமது தற்காலிக சுகத்திற்காக மட்டுமே சைப்ரஸ் காதலிகளை பயன்படுத்திக் கொள்கின்றனர். “காதல்” என்ற முகமூடி மட்டும் இல்லையென்றால், வர்க்க வேறுபாடு அம்பலமாகி இருக்கும். விதிவிலக்காக சில காதல்கள் திருமணங்களில் முடிந்துள்ளதையும் மறுப்பதற்கில்லை.

ஐரோப்பிய யூனியனில் சைப்ரஸ் சேர்ந்த பின்னர் இலங்கையில் இருந்து பணிப்பெண்களை தருவிப்பது குறைந்து வருகின்றது. தொழில்கள் யாவும் ஐரோப்பிய யூனியன் அங்கத்துவ நாட்டு பிரசைகளுக்கே வழங்க வேண்டும் என்ற சட்டம் இருப்பதால், தற்போது பல்கேரிய, ருமேனிய பணிப்பெண்கள் வேலைக்கு வருகின்றனர். இலங்கை அரசாங்கமும் முன்பு போல பணிப்பெண்களை ஏற்றுமதி செய்ய விரும்பவில்லை. வளைகுடா நாடுகளில் நடந்த, சர்வதேச மட்டத்தில் அறியப்பட்ட, இலங்கைப்பெண்கள் மீதான வன்முறைகள், பிற மோசமான ஒப்பந்த மீறல்கள் என்பன, இலங்கை அரசு இந்த முடிவை எடுக்க வைத்துள்ளது.

முன்னைய பதிவு :


ஐரோப்பிய தீவின் நவீன அடிமைகள்
_____________________________________________