Thursday, October 24, 2013

பொருளாதார நெருக்கடியால் தோற்றுப் போனவர்களின் குமுறல்கள்

நெதர்லாந்தில் நீடிக்கும் பொருளாதார மந்த நிலை காரணமாக, அடிக்கடி பலருக்கு வேலை பறிபோகின்றது. அதனால் மீண்டும் வேலையிழந்தவர் எண்ணிக்கை (கவனிக்க: "வேலையில்லாதவர்" என்ற சொல் எல்லா சந்தர்ப்பத்திற்கும் பொருத்தமானது அல்ல.) அதிகரித்து வருகின்றது. அப்படியான "தோற்றுப் போனவர்கள்" பட்டியலில் எனது பெயரும் இடம்பெற்றுள்ளது. "தோற்றுப் போனவர்களை" பொறுப்பேற்றுள்ள நகரசபை, வேலையிழந்தவர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்றை ஒழுங்கு படுத்தியிருந்தது. கடந்த வருடம், அதில் நானும் கலந்து கொண்டிருந்தேன். அங்கு எனக்குக் கிடைத்த அனுபவத்தை, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

"வேலை தேடும் பயிற்சிக்கு" சமூகமளித்தவர்களில், 90% மானோர் மூன்றாமுலக நாடுகளில் இருந்து வந்த, வந்தேறிகுடிகள் சமூகங்களை பிரதிநிதித்துவப் படுத்தினார்கள். மிகுதியாக உள்ள டச்சு பூர்வீக வெள்ளையினத்தவர்கள் அனைவரும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் 10 - 30 வருடங்கள் வேலை செய்த பின்னர் பணிநீக்கம் செய்யப் பட்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. 

மேற்கத்திய நாடுகளில் பொருளாதார பிரச்சினை ஏற்படும் போது, வந்தேறுகுடிகளும், வயதானவர்களும், அங்கவீனர்களும் அதிகமாக பாதிக்கப் படுகின்றனர். முதலாளிகளால் பாகுபாடு காட்டப் படுகின்றனர். (இந்த உண்மையை பயிற்சியளிக்க வந்த அதிகாரிகளே ஒத்துக் கொள்கின்றனர்.) சில வருடங்களுக்கு முன்னர், இப்படியான பலவீனமான சமூகப் பிரிவினரை பணியில் அமர்த்தும் நிறுவனத்திற்கு, அரசு மானியம் அளித்தது. அதனால், முதலாளிகளும் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். தற்போது அந்த அரசு மானியங்கள் நிறுத்தப் பட்டு விட்டன. அதனால், சமூகத்தில் நலிவடைந்த பிரிவினர் மத்தியில் வேலையற்றவர் எண்ணிக்கை அதிகம். 

ஒரு முதலாளித்துவ சமூகத்தில் வேலையிழந்தவர்கள், தம்மை   "தோற்றுப்போனவர்கள்" என்று நினைத்துக் கொண்டிருக்கும், "வெற்றி பெற்றவர்களின்" மமதையை வெறுக்கின்றனர்.  அரசு, முதலாளிகள் மீதான தார்மீக கோபம் பல தருணங்களில் வெளிப்படுகின்றது. அப்போதெல்லாம், "மரியாதையாக பேசுமாறு" அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். உண்மையில் தம்மிடமும் அதிகாரம் இல்லை என்பதை உணர்ந்த, பயிற்சியளிக்கும் அதிகாரிகள், சொல்வதற்கு எல்லாம் தலையாட்டுகின்றனர்.

வேலையிழந்த மக்களுக்கு அரசு கொடுக்கும் உதவித் தொகையும், அவர்களின் கோபாவேச உணர்வுகளை ஆற்றுப் படுத்த உதவுகின்றது. இல்லாவிட்டால், இந்த நாடுகளில் எப்போதோ வர்க்கப் புரட்சி வெடித்திருக்கும். மேலும் அந்த உதவித் தொகை, வேலை செய்யும் காலத்தில் நாங்கள் சேமிக்கும் காப்புறுதி பணமாகும். இதனை பெறுவதற்கு, ஒருவர் குறிப்பிட்ட காலம் வேலை செய்திருப்பது அவசியம். உதாரணத்திற்கு, 18 வயதான நபர் படித்து முடித்த பின்னர் வேலையில்லாமல் இருந்தால், அவருக்கு இந்த உதவித் தொகை கிடைக்காது. அப்படியானவர்கள் பெற்றோருடன் தங்கிக் கொள்கின்றனர். 

மேற்கத்திய நாடுகளில் பாலும், தேனும் ஆறாக ஓடுவதாக, தெற்காசிய நாடுகளில் வசிப்போர் நினைத்துக் கொள்கின்றனர். மேற்கத்திய நாடுகளில், உழைக்கும் வர்க்கம் கொடுத்த, கொடுத்துக் கொண்டிருக்கும் விலை பற்றிய அறிவு பூஜ்ஜியமாக உள்ளது. வணிக நோக்கம் கொண்ட தமிழ் ஊடகங்களும் அவற்றில் கவனம் செலுத்துவதில்லை. அதனால், மேலைத்தேய நாடுகளில் வாழும் உழைக்கும் வர்க்க மக்கள், சமூக வலைத் தளங்களில் மட்டுமே, தமது கருத்துக்களை வெளிப்படுத்த முடிகின்றது.

இந்த வருடம் நெதர்லாந்து நாட்டு பொருளாதாரம் வளர்ச்சி அடையாமல் மந்த நிலையில் உள்ளதாக அறிவிக்கப் படுகின்றது. சாதாரண பொது மக்களும் அதனை உணர்கின்றனர். இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர், வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினசரி ஏதாவது ஒரு நிறுவனம் தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றது. மறுபக்கத்தில் அரசு வழங்கி வந்த மானியங்கள் வெட்டப் படுகின்றன. இதனால் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கின்றது.

சாதாரண மக்கள் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, முதலாளிகளின் வருமானம் உயர்ந்து கொண்டு செல்கின்றது. இன்றைய காலங்களில், பெரிய நிறுவனங்களை தலைமை நிர்வாகிகளை கொண்ட சிறு குழுக்களே நிர்வகிக்கின்றன. இந்த தலைமை நிர்வாகிகளின் சம்பளம் (?), அந்த நிறுவனத்தில் பிற ஊழியர்களுக்கு கிடைப்பதை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. சில இடங்களில், இருபது மடங்கு, அல்லது முப்பது மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார்கள்.

தலைமை நிர்வாகிகளின் வருமானம், வெறும் சம்பளத்தில் மட்டும் தங்கியிருக்கவில்லை. அதே நிறுவனத்தில் அவர்களும் பங்குதாரராக இருக்கின்றனர். பங்குகளின் பெறுமதி உயர்வதால் கிடைக்கும் இலாபத் தொகை தனியானது. சாதாரண ஊழியர்களுக்கு அப்படியான வருமானம் எதுவும் கிடையாது. அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பிற ஊழியர்கள், வேலை போய் விடும் என்ற பயத்தில், குறைந்த சம்பளம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறார்கள்.

"ஐயா, நாம் வேலை செய்யும் நிறுவனம் அதிக இலாபம் சம்பாதிப்பதால், எங்களுடைய சம்பளத்தை கூட்டித் தாருங்கள். அல்லது பெரிய மனது வைத்து, உங்களுடைய சம்பளத்தை குறைத்துக் கொள்ளுங்கள்." இவ்வாறு தலைமை நிர்வாகிகளை பார்த்து கேள்வி கேட்கும் தைரியம் யாருக்கும் கிடையாது. அதனால், இந்த அநியாயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நெதர்லாந்து பொருளாதாரம் பற்றி, அந்த நாட்டு பிரஜைகள் என்ன நினைக்கிறார்கள் என்ற கருத்துக் கணிப்பொன்று அண்மையில் எடுக்கப் பட்டது. அதன் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன.

  • 52% பொருளாதாரம் மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கிறார்கள். 
  • 45% தற்போதுள்ள இதே நிலைமை தொடரும் என்று எதிர்பார்க்கிறார்கள். 
  •  3% மட்டுமே, பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்று நம்புகிறார்கள். 

கடந்த பல வருடங்களாக ஆட்சியில் அமர்ந்துள்ள, சமூக ஜனநாயக, லிபரல் கட்சிகளின் கூட்டணி, பொருளாதாரத்தை மிகவும் மோசமாக கையாள்வதாக மக்கள் நம்புகின்றனர். மிகப் பெரும்பான்மையான 74% மானோர், இந்த அரசாங்கம் மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தி உள்ளனர். அதாவது, பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை இழந்து விட்ட ஒரு அரசாங்கம் ஆட்சி நடத்துகின்றது. இதற்குப் பெயர் ஜனநாயகமாம்!

வெளிநாட்டு ஊடகங்கள் அதிக கவனம் செலுத்தா விட்டாலும், நெதர்லாந்து நாட்டின் பொருளாதாரம், மோசமடைந்து வருகின்ற உண்மையை யாரும் மறைத்து விட முடியாது. 2008 ல் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையில் இருந்து, நெதர்லாந்து இன்னமும் மீளவில்லை. இந்த வருடம், வேலையற்றோர் எண்ணிக்கை 8 சத வீதமாக அதிகரித்துள்ளது.

நெதர்லாந்து போன்ற "பணக்கார நாட்டை" பொறுத்தவரையில் இது ஒரு பெரிய தொகை தான். இன்னொருவரில் தங்கியிருக்கும் குடும்ப உறுப்பினர்களும், வாரத்திற்கு குறிப்பிட்டளவு மணிநேரம், பகுதிநேர வேலை செய்பவர்களும் வேலையற்றோர் பதிவேட்டில் பதிவு செய்யப் படுவதில்லை. இதனால், உண்மையான வேலையற்றோர் எண்ணிக்கை இரு மடங்காக இருக்கலாம்.

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

No comments: