Monday, October 14, 2013

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஒரு திறந்த மடல்


மேன்மை தங்கிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு,

தாங்கள் முதலமைச்சராக பதவியேற்ற தருணம் பார்த்து, வட மாகாண தமிழ்ப் பெண்களின் அவல நிலை குறித்த அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. (Turning to sex work in Sri Lanka’s north; http://www.irinnews.org/report/98919/turning-to-sex-work-in-sri-lanka-s-north) அதனை தொகுத்து வெளியிட்ட அரசு சாரா தொண்டு நிறுவனம், முதலமைச்சரான தங்கள் கடமையை உணர்த்துவதற்காகவே, தக்க தருணம் பார்த்து வெளியிட்டிருப்பதாகத் தெரிகின்றது. இன்று வட மாகாணத்தில் வாழும் ஆயிரக் கணக்கான இளம் பெண்கள், குடும்ப வறுமை காரணமாக பாலியல் தொழில் செய்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

"சமூகத்தில் இழிவாக கருதப் படும்", பாலியல் தொழில் செய்வோரின் எண்ணிக்கை பெருகுவதற்காக, அந்த சமூகம் தான் வெட்கப் பட வேண்டும். மாறாக, அபலைப் பெண்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியாது. ஈழத்தில் கடந்த முப்பதாண்டு காலமாக நடந்த போரின் விளைவாக, பல்லாயிரக் கணக்கான பெண்கள் விதவைகளாகி உள்ளனர். அதனால், பல சமூகப் பிரச்சினைகள் எழுவது இயல்பு. உள்நாட்டுப் போர் நடந்த அனைத்து உலக நாடுகளுக்கும் பொதுவான பிரச்சினை அது. ஈழப்போர் முடிந்த பின்னர் நடைபெறும் வட மாகாண சபைத் தேர்தலில், தங்களையும், தங்கள் கட்சியையும் வாக்காளப் பெருமக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவு செய்துள்ளனர். அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை தாங்கள் காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.

தங்களது மாகாண சபையில், ஆனந்தி சசிதரன் என்ற பெண் உறுப்பினரும் இடம்பெற்றுள்ளார். போரினால் பாதிக்கப் பட்ட பெண்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக, "பெண்கள் நலத்துறை அமைச்சு" ஒன்றை ஏற்படுத்தி, அதற்கு ஆனந்தியை அமைச்சராக்கலாம். ஆனந்தி கூட போரினால் பாதிக்கப் பட்ட ஒருவர் என்பது கூடுதல் தகுதியாக கொள்ளப்படும். அதன் மூலம், வட மாகாணப் பெண்களை பாலியல் தொழில் என்ற நரகத்தில் இருந்து மீட்டெடுக்கும் வழி வகைகளை ஆராயலாம். கொடூரமான போர் காரணமாக, கணவரை, அல்லது தகப்பனை இழந்த பெண்களே, குடும்பச் சுமையை தாங்க முடியாமல் பாலியல் தொழிலுக்கு செல்கின்றனர்.

யாழ்ப்பாண பழைமைவாத சமூகத்தில், பொதுவாக ஒரு ஆண் தான் வேலைக்கு சென்று குடும்ப பாரத்தை சுமப்பது வழக்கம் என்பது தாங்கள் அறிந்ததே. குடும்பத்திற்காக உழைத்து வருமானத்தை ஈட்டித் தந்த, ஆண் துணையை இழந்த பெண்கள், குழந்தைகளை பராமரிக்க வசதியின்றி, பாலியல் தொழில் செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். கணவன் போரில் மரணமடைந்ததால், அல்லது கானாமல்போனதால் பல பெண்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். வறுமையும், குழந்தைகளை பராமரிக்க வேண்டிய பொறுப்பும், அவர்கள் பாலியல் தொழிலை தெரிவு செய்யத் தூண்டிய காரணிகளாக உள்ளன.

வட மாகாணத்தில் நிலவும், அரை நிலப்பிரபுத்துவ, அரை முதலாளிய சமுதாயம், ஆண்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் முனைப்புக் காட்டுகின்றது. அது சமூகத்தில் அரைவாசிப் பங்கினரான பெண்களை அடுப்படிக்குள் தள்ளுகின்றது. பெண்கள் வேலைக்கு போவதை தடுத்து, அவர்கள் வீட்டில் இருந்து குடும்பத்தை பராமரிப்பதற்காக படைக்கப் பட்டவர்களென போதிக்கின்றது. பெண்ணை வேலைக்கு அனுப்பாத மரபு, இன்றைக்கும் ஒரு சிறந்த சமூக விழுமியமாக பின்பற்றப் படுகின்றது. ஆகவே, தாங்கள் அமைக்கப் போகும் பெண்கள் நலத்துறை அமைச்சு இது போன்ற தடைகளை தகர்த்தெறியும் என்று நம்புகிறேன்.

மேலும், ஊருக்கு ஊர் முகாம்களை போட்டு தங்கியுள்ள சிங்கள படையினர், வட மாகாணத்தில் பாலியல் தொழிலை ஊக்குவிக்கும் காரணியாக உள்ளனர். அதனை அம்பலப் படுத்துவதன் மூலம், படை முகாம்களை அகற்றுமாறு அரசை நிர்ப்பந்திக்க முடியும். வட மாகாணத்தில் இருந்து இராணுவத்தை அகற்றுவது, உங்களது குறிக்கோளாக இருந்ததை தேர்தல் கால பிரச்சாரங்களின் போது அறிய முடிந்தது. கூடவே, "இராஜதந்திர போர்" பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள். நல்லது. உலகில் பிற நாடுகளில், அன்னிய நாட்டுப் படைகள் முகாமிட்டிருப்பதால், பாதிக்கப் பட்டிருக்கும் மக்களுடன் ஒன்று சேர்ந்து, தங்களது இராஜதந்திரப் போரை முன்னெடுக்கலாம். அதனால் தமிழர்களின் உரிமைப் போர் சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லப் படும் வாய்ப்புண்டு.

உதாரணத்திற்கு, ஜப்பானில் ஒகினாவா தீவில் இருக்கும் அமெரிக்க படையினரின் முகாம், அந்தத் தீவின் கலாச்சார-பொருளாதார சீர்கேடுகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்பாக, ஈழத்திற்கும், ஜப்பானுக்கும் இடையிலான தொடர்பை பயன்படுத்திக் கொள்ளலாம். ஜப்பானில், இரண்டாம் உலகப் போர் முடிந்து அறுபதாண்டுகள் ஆகியும், அந்த நாட்டை ஆக்கிரமித்த அமெரிக்கப் படைகள், இன்னமும் அங்கு நிலை கொண்டுள்ளன. குறிப்பாக, ஒக்கினாவா தீவு அமெரிக்க படைகளின் மேலாண்மையின் கீழ் உள்ளது. அங்கிருக்கும் அமெரிக்கப் படை முகாமை அகற்ற வேண்டுமென்று கோரி, ஒக்கினாவா தீவு மக்கள் பல வருடங்களாக போராடி வருகின்றனர். ஜப்பான், இலங்கைக்கு கொடை வழங்கும் முக்கிய நாடென்பதால், தங்களது இராஜதந்திரப் போரை ஜப்பானில் இருந்து ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும். ஏற்கனவே பல தடவைகள், ஜப்பான் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தமையும், தங்களுக்கு நினைவிருக்கலாம்.

வட மாகாணத்தில், முன்னொருபோதும் இல்லாத அளவு கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. அதற்காக தென்னிலங்கையில் இருந்து பெருமளவு சிங்களத் தொழிலாளர்கள் அழைத்து வரப் படுகின்றனர். இந்தத் தொழிலாளர்களும், பாலியல் தொழில் சந்தையில் நுகர்வோராக இருப்பதாக, தொண்டு நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. மாகாண சபை அதிகாரத்தை கைப்பற்றியவுடன், தொழில் முனைவோரை கட்டுப்படுத்தும் சட்டங்கள் கொண்டு வரலாம். அந்நிய அல்லது தென்னிலங்கை நிறுவனங்கள், குறிப்பிட்டளவு வட மாகாணத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றலாம். இதன் மூலம், வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதுடன், பாலியல் தொழிலும் நலிவடையும்.

வட மாகாணத்தில் நிலை கொண்டுள்ள படையினரும், கட்டுமானத் தொழிலாளர்களும் சிங்களவர்கள் தான். அதை சுட்டிக் காட்டி,  "சிங்களவர்கள் எமது மண்ணை சுரண்டி, எமது மக்களை நாசமாக்குகிறார்கள்..." என்று இனவாதம் பேசலாம். ஆனால், பிரச்சினை அத்தோடு முடியப் போவதில்லை. கருப்பு-வெள்ளை அரசியல் தேர்தலில் வாக்குகளை பெற்றுக் கொடுக்கலாம். ஆனால், மக்களுக்கு எந்தத் தீர்வையும் கொண்டு வராது. புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து விடுமுறையை கழிக்க வரும் தமிழர்களும், வட மாகாணத்தில் பாலியல் தொழில் அதிகரிப்பதற்கு காரணம் என்று சொல்லப் படுகின்றது. துரதிர்ஷ்டவசமாக, எமது இனவாத கோஷங்களை அவர்களுக்கு எதிராக திருப்பி விட முடியாது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் பெரும்பாலும் தமிழ் தேசியத்தில் தளராத பற்றுக் கொண்டவர்கள். தாங்கள் உறுப்பினராக உள்ள தமிழரசுக் கட்சியின் கொள்கைகளை ஆதரிப்பவர்கள். ஆகவே, "வழிதவறிய ஆடுகளை வழிக்கு கொண்டு வருவது" கடினமான காரியமல்ல. புலம்பெயர் தமிழர்களின் பணம் பாலியல் தொழிலை வளர்ப்பதற்குப் பதிலாக, ஆக்கபூர்வமான முயற்சிகளில் செலவிட வைக்கலாம். அவர்கள் தமது பணத்தை, வட மாகாணத்தில் பல்வேறு தொழிற்துறைகளில் முதலிட வேண்டும் என்று ஊக்குவிக்கலாம். புலம்பெயர் தமிழர்களின் முதலீட்டுக்கு, குறிப்பாக பெண்களை பணிக்கமர்த்தும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிக்கலாம். மாகாண சபையால் இடம் ஒதுக்கிக் கொடுக்கலாம். இது போன்ற ஆக்கபூர்வமான முயற்சிகளின் மூலம், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை பெருமளவு குறையும்.

வட மாகாண சபையில், கல்விக்கென ஒரு அமைச்சு உருவாக்கப் பட்டுள்ளதாக அறிகிறேன். யாழ்ப்பாணத்தில் புரையோடிப் போயுள்ள பழமைவாத சிந்தனைகளை, கல்வி அறிவு புகட்டுவதன் மூலம் களைய முடியும். "தமிழர் கலாச்சாரம்" என்ற பெயரில், பழைமைவாத பெருச்சாளிகளின் "தாலிபான் கலாச்சாரம்" கோலோச்சுவதை, உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

பெண் கல்வி ஊக்குவிக்கப் பட வேண்டும். விசேடமாக பெண்களுக்கென தொழிற்கல்வி வழங்கும் நிறுவனங்களை மாகாண சபையே உருவாக்கலாம். அதைத் தவிர, விதவைகள் மறுமணம் செய்து கொள்வதும் ஊக்குவிக்கப் பட வேண்டும். அதற்காக பொருளாதார கட்டமைப்பிலும், பண்பாட்டுத் தளத்திலும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். காணி, பொலிஸ் அதிகாரம் என்று, கிடைக்காத உரிமைகளுக்காக ஏங்குவதை விட, கையில் இருக்கும் அதிகாரங்களை சரிவர பயன்படுத்துவது சாலச் சிறந்தது. அந்த சாதனையை விக்னேஸ்வரன் தலைமை தாங்கும் வட மாகாண சபை நிகழ்த்திக் காட்டும் என்று நம்புவோமாக.

இப்படிக்கு, 
- ஒரு வட மாகாண வாக்காளர்

*****************************

வட மாகாண சபை, முதலைமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பான முன்னைய பதிவுகள்:
5."தமிழ் மேட்டுக்குடி தேசியக் கூட்டமைப்பு" விக்னேஸ்வரனின் உரை
4.விக்னேஸ்வரனின் வர்க்கப் புத்தி, தோற்றுப் போன தமிழர்கள் விரக்தி
3.தேர்தலில் மலர்ந்த "தமிழர் அரசு"! - ஓர் ஆய்வு
2.மாகாண சபைத் தேர்தல் : வடக்கே வீசும் புயல்
1.வட மாகாண சபைத் தேர்தல் - ஒரு முன்னோட்டம்

No comments: