Thursday, April 07, 2011

யாழ் குடாநாடெங்கும் ஆயுதப் புதையல்கள்

[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 11)

பிற்பகலில் கைது செய்யப்பட்டு முகாமுக்கு கொண்டு செல்லும் வரையில் மயக்கமாகக் கிடந்திருக்கிறேன். கண்ணைக் கட்டி விட்டிருந்ததால், எல்லாமே இருட்டாகத் தான் இருந்தது. கைகளைக் கட்ட பயன்படுத்தப் பட்ட பிளாஸ்டிக் கயிறு நூதனமானது. கையை சிறிது அசைத்தால் போதும், இறுக்கிக் கொண்டே போகும். அதனால் கையை ஆடாமல், அசையாமல் அப்படியே வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம். முகாம் சிறைக்குள் விட்ட பின்னர் தான், கைக்கட்டையும், கண்கட்டையும் அவிழ்த்து விட்டார்கள். கண் விழித்துப் பார்த்த பொழுது நான்கு சுவர்களுக்குள் சிறை வைக்கப் பட்டிருப்பதை உணர்ந்தேன். மேலே ஒரு மின்குமிழ் கண்ணைப் பறிக்கும் ஒளியைப் பாய்ச்சிக் கொண்டிருந்தது. அந்த அறைக்குள் என்னைப் போன்ற பல துரதிர்ஷ்டசாலிகள் ஆளுக்கொரு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடம்பெல்லாம் வலித்தது. கையில் மசமசவென்று ஏதோ ஒட்டியது. என்னவென்று பார்த்தால், காயங்களில் இருந்து இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. அடித்த அடியில் வலப்பக்க காது வெடித்து விட்டது. தலையில் விண் விண் என்று வலித்தது. சுய நினைவு வந்த பின்னர் தான் வலி தெரிந்தது. எழும்பி உட்காரவும் முடியவில்லை. படுக்கவும் முடியவில்லை.

அங்கிருந்த யாரும் யாருடனும் பேச்சுக் கொடுக்கவில்லை. எழுவதற்கு, இருப்பதற்கு என சிறு உதவிகள் மட்டுமே செய்தார்கள். கைதிகள் படையினரின் கண்காணிப்புக்குள் இருந்ததால் எல்லோரும் மௌனமாகவே இருந்தனர். அன்றும் அடுத்த நாளும் பட்டினி கிடக்க வைத்தார்கள். தண்ணீரைத் தவிர வேறு எதையும் ஆகாரமாகத் தரவில்லை. எனது காயங்களில் இருந்து வடிந்து கொண்டிருந்த குருதி தானாகவே காய்ந்து போனது. அப்படி இருந்தும் காயம் ஆறவில்லை. அவற்றிற்கு மருந்து கட்டும் அக்கறையே அவர்களுக்கு இருக்கவில்லை. மலசல கூடம் செல்லும் போதும் ஒரு சிப்பாய் துப்பாக்கியுடன் கூட வந்தான். ஐந்து நிமிடங்களுக்கு மேல் தாமதித்தால் அவசரப்படுத்தி கூட்டிச் சென்றான். சிறையில் அடைக்கப்பட்டு இரண்டு நாட்கள் கடந்த பின்னர் தான் உணவென்ற பெயரில் ஏதோ தந்தார்கள். எமக்கு கிடைத்த காய்ந்து போன சப்பாத்தியை நாய்க்கு போட்டாலும் சாப்பிடாது. ஊற்றிய சாம்பாரில் நீச்சலடித்துப் பார்த்தாலும் ஒன்றும் கிடைக்காது.

நான் சிறையிருந்த நாட்களில், எனைப் பற்றி தீர விசாரித்திருக்கிறார்கள். இந்த தடவையும் அதிர்ஷ்டம் கைகொடுத்தது. எனது சொந்தக் கிராமத்திலேயே கைது செய்யப் பட்டதால், படையினர் என்னைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு அதிக சிரமப் படவில்லை. ஊர்ப் பெரியவர்களும் சாட்சியமளித்தார்கள். ஒரு வாரத்திற்குப் பின்னர் என்னை விடுதலை செய்வதாக அறிவித்தார்கள். அன்று மட்டும் எனது காயங்களுக்கு மருந்து கட்டினார்கள். என்னை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர், ஊர்ப் பெரியவர்களிடம் முகாம் கமாண்டர் என்னை ஒப்படைத்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கமாண்டர் ஒரு நீண்ட விரிவுரை ஆற்றினார். "தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கும், அவர்களை பாதுகாக்கவும் இந்திய அரசு எம்மை அனுப்பியது. எல்.டி.டி.யினர் மட்டும் குழப்புகிறார்கள்...." என்று கூறிச் சென்றார். புலி உறுப்பினர்களை கைது செய்த நிகழ்வில் சயனைட் கடித்து இறந்த மாணவன் குறித்தும் விசனப் படுவது போலப் பேசினார். "நன்றாகப் படித்து உத்தியோகம் பார்க்க வேண்டியவன் அநியாயமாக உயிரை மாய்த்துக் கொண்டான்...ச்சோ...ச்சோ..."

போர் தொடங்கிய நாளில் இருந்து இந்திய இராணுவத்திற்கு புலிகள் மீது அளவு கடந்த வெறுப்பிருந்தது. அகப்பட்ட உறுப்பினர்கள் சிறுவர்களாக இருந்தாலும் ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்தார்கள். சம்பவ தினத்தன்று என்னோடு பிடிபட்ட இரண்டு புலி உறுப்பினர்களுக்கும் வயது 15 இருக்கும். அப்போது தான் புதிதாக இயக்கத்தில் சேர்ந்திருந்தனர். அவர்களை தனியாக அழைத்துச் சென்று சித்திரவதை செய்தார்கள். சித்திரவதை நடந்த இடம் என்னை சிறை வைத்திருந்த அறைக்கு அருகில் இருந்திருக்க வேண்டும். "ஐயோ... அம்மா..." என்று அலறும் சத்தம் பக்கத்தில் இருந்து வருவதைப் போலக் கேட்டது. பிடிபட்ட அன்று இரவிரவாக, அடுத்த நாளும் சித்திரவதை தொடர்ந்தது. எமக்கு ஒரு பக்கம் உறங்க முடியாத தடங்கல் ஏற்பட்ட போதிலும், மறுபக்கம் அவர்களின் நிலையெண்ணி பரிதாபப் பட வைத்தது. அடுத்தடுத்த நாட்கள் அடியால் அலறும் சத்தம் கேட்கவில்லை. வேறு இடத்திற்கு மாற்றி விட்டதாக நினைத்தோம். ஆனால் அதற்குப் பிறகு நடந்த விஷயங்களை வீட்டுக்கு வந்த பின்னர், ஊரார் சொல்லித் தெரிந்து கொண்டேன்.

போர் நிறுத்த ஒப்பந்தப் படி, இந்திய இராணுவத்திடம் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டியிருந்தது. புதிய ஆயுதங்களை ஒளித்து வைத்து விட்டு, பழைய, அல்லது பாவிக்க முடியாத ஆயுதங்களை ஒப்படைப்பதாக போக்குக் காட்டினார்கள். பின்னொரு காலத்தில் பாவிக்க தேவையான ஆயுதங்களை, தண்ணீர் புக முடியாத படி பொலித்தீன் பைகளால் கட்டி, நிலத்தின் கீழ் புதைத்து வைத்தார்கள். காட்டுப்பகுதி, யாரும் நடமாடாத தரிசான நிலம், இப்படியான இடங்களில் புதைத்து வைத்தார்கள். இந்த விடயம் இந்திய இராணுவத்திற்கும் தெரியும். அதனால் போர் மூண்ட பின்னர், புலிகள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்வதில் குறியாகவிருந்தனர். பிடிபடும் புலி உறுப்பினர்களை சித்திரவதை செய்து விசாரிப்பது, அதற்கு ஒரே வழி.

அன்றைய தினம் சித்திரவதை செய்யப்பட்ட புலி உறுப்பினர்கள், தாம் புதைத்து வைத்த ஆயுதங்களை படையினருக்கு காட்டிக் கொடுத்தனர். ஊருக்கு ஒதுக்குப் புறமாக காட்டுப் பகுதியில் ஆயுதங்களை படையினர் கிண்டி எடுத்தனர். எல்லாவற்றையும் கொண்டு செல்ல இரண்டு டிரக் வண்டிகள் வந்ததாக, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் விபரித்தனர். அந்தளவு ஆயுதங்கள் நிலத்தின் கீழ் மறைந்திருந்தன. ஆயுதங்களின் மறைவிடங்களை இரகசியமாக வைத்திருப்பதற்காக, மிகக் குறைந்தளவு உறுப்பினர்களிடமே பொறுப்பை ஒப்படைத்திருந்தனர். பிற உறுப்பினர்களுக்கு அது தெரியாது. சில இடங்களில் தனியார் நிலங்களில், காணிச் சொந்தக்காரருக்கு அறிவிக்காமலே புதைத்து வைத்தார்கள். அவ்வாறு புதைக்கப்பட்ட ஆயுதங்கள், காணிச் சொந்தக்காரர்களின் கண்களில் அகப்பட்டால், அவர்கள் இராணுவத்திற்கு தகவல் வழங்கினார்கள். அத்தகைய சந்தர்ப்பங்கள், சில நேரம் அவர்களுக்கே ஆபத்தாக முடிந்துள்ளது. இராணுவம் தானாகவே ஆயுதங்களை கண்டுபிடித்தால், காணிச் சொந்தக்காரரும் உடந்தை எனக் கருதி கைது செய்வார்கள். அதே நேரம், ஆயுதங்களை இராணுவத்திற்கு காட்டிக் கொடுத்தால், புலிகளின் கொலைப் பட்டியலில் இடம்பெற வேண்டியேற்படும்.

அன்றைய காலகட்டத்தில், அங்கிருந்த மக்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். (1)புலிகளுக்கு ஆதரவானவர்கள். (2)இராணுவத்திற்கு ஆதரவானவர்கள். (3)இரண்டு பக்கமும் சாராமல் ஒதுங்கி இருப்பவர்கள். உண்மையில் எந்தப் பக்கமும் சாயாது ஒதுங்கி வாழ்ந்தவர்களே அதிகம். அன்றைய சூழ்நிலை அமைதியாக தோன்றினாலும், மிகவும் ஆபத்தானது. தினசரி வேலைக்குப் போய் வரும் மக்கள் இராணுவக் காவலரண்களைக் கடந்து செல்ல வேண்டும். இதனால் அடிக்கடி சந்திக்கும் நபர்களுடன், காவலுக்கு நின்ற இராணுவத்தினர் நட்புடன் பழகினார்கள். அவ்வாறு யாராவது காவலரணில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தால், அந்தச் செய்தி புலிகளின் காதுகளுக்கு எட்டி விடும். அதே போல, யாருடைய வீட்டிற்காவது புலிகள் வந்து சென்றால், அந்தச் செய்தி இராணுவத்திற்கு போய் விடும். இரண்டு பக்கமும் புதினம் காவித் திரிவதற்கு ஆட்கள் இருந்தார்கள். அதனால், நமக்கேன் வம்பு என்று, இரண்டு பக்கமும் சாராமல் ஒதுங்கியிருந்த மக்களே அதிகம்.

ஆயுதப் புதையல்கள் பல அடுத்தடுத்து கண்டுபிடிக்கப் பட்டதால், புலிகளின் முதுகெலும்பை உடைத்து விட்டதாக இந்திய இராணுவம் நம்பியது. இறுதியான ஈழப்போர் காலத்தில் இருந்தளவு ஆட்பலம், அன்றிருந்த புலிகள் அமைப்பில் இருக்கவில்லை. அதனால் வெகு விரைவில் புலிகளை அழித்து விடுவோம் என்று இந்திய இராணுவம் கருதியது. இந்திய இராணுவம் உண்மையிலேயே புலிகளை அழிக்க விரும்பியதா என்பது கேள்விக்குறி தான். பல வருடங்களின் பின்னர் வெளிநாடொன்றில் தற்செயலாக சந்தித்த, தமிழகத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர் இவ்வாறு கூறினார். "ஈழத்தில் நிலை கொண்டிருந்த இந்திய இராணுவம் ஒரு கையை பின்னால் கட்டிக் கொண்டு யுத்தம் செய்ய வேண்டியிருந்தது. வன்னிக் காட்டினுள் இரண்டு தடவைகள் பிரபாகரனை பிடிக்கும் சந்தர்ப்பம் வாய்த்த போதிலும், மேலிடத்து உத்தரவு காரணமாக பின் வாங்கினோம்." அவரது கூற்று மிகைப் படுத்தப் பட்டதாக தோன்றியது. இதே போன்ற கருத்துப் பட, வேறு பலரும் கூறியுள்ளனர். இந்திய இராணுவத்துடனான யுத்தம் பல மர்ம முடிச்சுகளைக் கொண்டது. பல கேள்விகளுக்கான விடைகள் இன்று வரை வெளிவரவில்லை.

(தொடரும்...) தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
10.ஈழத் தமிழருக்கு இந்தியர்களும் அடக்குமுறையாளர்கள்
9.அந்நிய இராணுவத்தின் முற்றுகைக்குள் யாழ் குடாநாடு
8.ஆக்கிரமிப்புப் படையாக மாறிய அமைதிப் படை
7.ஆயுதக் குழுக்களுடன் அமைதி காத்த இந்திய இராணுவம்
6.இந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்
5.யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய இந்தியப் படைகள்
4.சென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்
3.தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை
2.ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா
1.இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்

3 comments:

நண்பன் said...

manathai rombavum kavalai alikka sethuvittathu padiththavudan.

எஸ் சக்திவேல் said...

87 ம் ஆண்டு காலப் பகுதியை அப்படியே கொண்டுவருகிறீர்கள். நான் அப்ப யாழ்ப்பாணத்தில்தான். மிக இளைஞனாக இருந்தபடியாலோ என்னவோ ஒன்றும் மறக்கவில்லை. எனக்குத் தெரிந்தவகையில் உங்கள் பதிவு அப்படியே உண்மையைக் கொண்டுவருது.

Kalaiyarasan said...

நன்றி, சக்திவேல். கட்டுரையில் வரும் சம்பவங்களை தமிழகத் தமிழர்கள் சிலர், இப்போது தான் புதிதாக கேள்விப் படுகிறார்களாம். ஒருவர் கட்டுரையின் நம்பகத் தன்மை குறித்து கேள்வியெழுப்பி, முகநூலில் பகிரங்க விவாதத்திற்கு அழைத்திருந்தார். வந்த வேகத்திலேயே விவாதத்தில் இருந்து பின்வாங்கி விட்டார்.