Sunday, March 06, 2011

சென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்

இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்]
(பகுதி - 4)

-[ஓர் ஈழ அகதியின் அனுபவத் தொடர்]-
அகதிகளிலும் "ஏழை அகதிகள், பணக்கார அகதிகள்" என்று இரண்டு வகை உண்டு. ஒருவர் ஈழத்தில் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர் என்பது, இந்திய அகதி வாழ்க்கையிலும் தீர்மானிக்கப்படுகின்றது. ஈழத்தில் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த அகதிகள், இந்தியாவில் அகதி முகாம்களிலேயே வருடக்கணக்காக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். அதற்கு மாறாக, மத்திய தர வர்க்க அகதிகள், கூடிய சீக்கிரத்தில் அகதி முகாமை விட்டு வெளியேறவே விரும்புவார்கள். அவர்கள் தங்களை இந்தியாவில் அகதியாக பதிந்து கொள்வார்கள், ஆனால் முகாமில் வாழ மாட்டார்கள். சென்னை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் சென்று வாடகை வீடு எடுத்து வாழ்வார்கள். பராமரிக்க வேண்டிய அகதிகளின் தொகை குறைகின்றது, என்ற சந்தோஷத்தில் மாநில அரசும் அது குறித்து அலட்டிக் கொள்ளவில்லை.

பெரு நகரங்களில் வீடு வாடகைக்கு எடுத்து வாழ்வதற்கு மாதாந்த வருமானம் வேண்டும். பெரும்பாலும் வெளிநாடுகளில் வாழும் உறவினர்கள் அந்த செலவை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்த மேட்டுக்குடி மக்கள் மட்டும் அகதியாக பதியாமல், நேரடியாக இந்தியாவில் குடியேறினார்கள். ஏற்கனவே அவர்களது செலவை ஈடுகட்டும் பணத்தை கையிருப்பில் வைத்திருப்பார்கள். ஈழப்போர் காலகட்டத்திற்கு முன்பிருந்தே இந்தியாவில் வாழும் மேட்டுக்குடி தமிழர் குறித்து இங்கே பேசத் தேவையில்லை. வெளிநாட்டுச் செலவில் வாழ்பவர்கள் எல்லோரும் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் அல்ல. யாழ்ப்பாணத்தில் ஒரு ஏழை விவசாயிக்கும் நிலம் சொந்தமாக இருக்கும். செறிவான மக்கட்தொகை கொண்ட யாழ்ப்பணத்தில் ஒரு பரப்பு காணியின் விலை பிற மாகாணங்களை விட அதிகம். இதனால் காணி விற்று அனுப்பிய பிள்ளை, வெளிநாடு சென்று உழைத்து அனுப்பினால், அந்தக் குடும்பம் வசதிகளைப் பெருக்கிக் கொண்டது. சில வருடங்களில், புதுப் பணக்கார மிடுக்கு அவர்களிடம் மத்தியதர வர்க்க மனோபாவத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

சென்னை மாநகரின் பகுதியான அண்ணா நகர், அப்போது தான் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. ஈழத்தமிழரின் "குடியேற்றம்" இடம்பெற்ற அண்ணா நகர் பகுதியில் வாடகைக்கு வீடெடுப்பது கடினமாகவிருந்தது. வீட்டு வாடகை உயர்ந்து கொண்டே சென்றமை, இலங்கை- இந்தியத் தமிழ் முரண்பாட்டை விதைத்தது. பேராசை கொண்ட வீட்டு உரிமையாளரும், வெளிநாட்டுப் பணத்தை தண்ணீராக செலவழித்த ஈழத் தமிழரும் சமூக முரண்பாடுகளை கணக்கில் எடுக்கவில்லை. இதே போன்ற நிலைமை இதே காலகட்டத்தில் கொழும்பில் தோன்றியது. வட மாகாணத் தமிழர்கள், போர்ச் சூழலில் இருந்து தப்புவதற்காக, போர் நடக்காத கொழும்பில் சென்று பாதுகாப்பாக வாழ விரும்பினார்கள். இந்தியாவில் இருந்து போவதை விட, கொழும்பில் இருந்து வெளிநாடு செல்வது இலகுவாக இருந்தது. வெளிநாடு போகா விட்டாலும், வெளிநாட்டில் இருந்து உறவினர் அனுப்பும் பணத்தில் கொழும்பில் வசதியாக வாழ விரும்பினார்கள்.

தமிழர்கள் கொட்டும் வெளிநாட்டுப் பணத்துக்கு பேராசை கொண்ட சிங்கள வீட்டு உரிமையாளர்களும், வீட்டு வாடகையை உயர்த்திக் கொண்டே சென்றனர். இதனால் கொழும்பு வாழ் சிங்கள, தமிழ் மக்களுடன் முறுகல் நிலை ஏற்பட்டது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், கொழும்பு நகரில் யாழ்ப்பாணத் தமிழரின் தொகை பெருகிக் கொண்டிருந்தது. கொழும்பில் வாழ்வதற்கும், சென்னையில் வாழ்வதற்கும் இடையில் வேறுபாடு இருந்தது. யுத்தம் கொழும்பை நோக்கி புலம்பெயர்ந்தது. குண்டுவெடிப்புகள், அதையொட்டிய கைதுகள், நெருக்கடிகள் போன்றன அங்கேயும் பாதுகாப்பற்ற சூழலை தோற்றுவித்தது. சென்னையிலோ, திருச்சியிலோ அந்தப் பிரச்சினை இருக்கவில்லை. ராஜீவ் காந்தி கொலை மட்டும் அவர்களின் சீரான வாழ்க்கையில் நெருக்கடியைக் கொண்டு வந்தது.

சென்னையில் சில நண்பர்கள் வசித்ததால், அவர்களின் தொடர்பு கிடைத்து நானும் சென்னை நோக்கிப் புறப்பட்டேன். அப்போதெல்லாம் தனியார் நடத்தும் விரைவு பேரூந்து சேவைகள் கிடையாது. போக்குவரத்து சபை முழுக்க முழுக்க மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. நகரங்களுக்கு இடையில் "திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம்" சேவையில் ஈடுபட்டிருந்தது. நானும், அகதி முகாமில் சந்தித்த நண்பருமாக சென்னை நோக்கி பஸ் பயணம் மேற்கொண்டோம். சென்னை நகரின் பிரமாண்டம் வியக்க வைத்தது. அதே நேரம், இந்தளவு நெருக்கமான குடிசனப் பரம்பலை இலங்கையில் எங்கேயும் காணவில்லை.

ஒவ்வொரு வீடும் ஒன்றுடன் ஒன்று சேர்த்துக் கட்டப் பட்டிருந்தது. கூரைக்கு பதிலாக மொட்டை மாடி வைத்துக் கட்டியிருந்தார்கள். பிறகொரு தருணத்தில், அப்படியான வீடுகளை வெப்ப வலைய நாடுகளில் எல்லாம் காண முடிந்தது. நான் சென்னையில் தங்கியிருந்த நாட்களில், கோடை காலமென்பதால் எல்லோரும் மொட்டை மாடியில் தான் படுப்போம். அந்தக் காலத்தில் காற்றாடி பாவிப்பது ஆடம்பரமானது. இலங்கையில் சில வசதியானவர்களைத் தவிர மற்றவர்கள் மின்சாரக் காற்றாடி பாவிக்கவில்லை. (என்பதுகளுக்கு பிறகு தான் எமது ஊருக்கு மின்சாரம் வந்தது.) ஆனாலும், கோடை காலத்து வெம்மையை தாங்கிக் கொள்ள முடிந்தது. சென்னையில் கோடை காலத்தில் வீட்டுக்குள் முடங்கிக் கொள்வது சித்திரவதை அனுபவிப்பதற்கு சமமானது. ஆகவே மொட்டை மாடியின் மகிமையை, சென்னை சென்று ஒரு சில நாட்களிலேயே உணர்ந்து கொண்டேன்.

நான் தங்கியிருந்த வீட்டில் வசித்த எல்லோரும் 25 வயதுக்கு மேற்படாத வாலிபர்கள். அனைவரது நோக்கமும் வெளிநாடு போவதாகவே இருந்தது. தாங்கள் எத்தனை மாதங்களாக காத்திருக்கிறோம், என்பதை ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப் படுத்தும் போதே கூறிக் கொண்டனர். புதிதாக சென்ற என்னை, "தங்களோடு சேர்ந்து வருந்த வந்திருக்கும் பாவப்பட்ட ஜீவன்," போல சேர்த்துக் கொண்டார்கள். அங்கேயிருந்த சிலர் வெளிநாட்டுப் பயணத்திற்கான முயற்சியில் தோல்வியடைந்தவர்கள். சிலர் பணம் போதாமையால் இன்னும் விமான நிலையத்தை தரிசிக்காதவர்கள். இந்திய கடவுச்சீட்டில் படம் மாற்றி, டெல்லி விமான நிலையம் சென்று பிடிபட்டு திரும்பி வந்தவர்கள். நடுங்கும் இமாலயக் குளிரில் நேபாளம் வரை சென்று திரும்பியர்கள். இவ்வாறு பல சோகக் ககதைகளை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

வெளிநாடு அனுப்பி வைக்கும் முகவர் ஒருவர் மட்டும், இருந்திட்டு எப்போதாவது வந்து எட்டிப் பார்த்து விட்டுச் செல்வார். தனது "வாடிக்கையாளர்களுக்கு" செலவுக்கு பணம் கொடுத்து விட்டுச் செல்வார். வீட்டு உரிமையாளரின் குடும்பம் கீழ் வீட்டில் வசித்து வந்தது. இவர்களைத் தவிர வேறு வெளியுலகத் தொடர்புகள் இல்லை. கொஞ்சம் பணம் இருந்தால், சினிமா பார்த்து விட்டு வருவதைத் தவிர வேறு பொழுதுபோக்கு இருக்கவில்லை. ஒரு புதுப்படம், தமிழகத்தில் ரிலீசாகி மாதக் கணக்கான பின்னர் தான் யாழ்ப்பாண திரையரங்குகளில் வெளியிடுவார்கள். அதனால் சென்னையில் புதுப்படத்தை உடனுக்குடன் பார்க்கும் வசதி, ரசிகர்களுக்கு ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவம்.

ஒரு வகையில் நாம் தங்கியிருந்த வீடு இன்னொரு வகை "அகதி முகாம்." இது போன்ற பல உத்தியோகபூர்வமற்ற முகாம்கள் சென்னை நகர வீடுகள் பலவற்றில் இருந்தன. பொதுவாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் முகவர்களால் குறைந்த விலைக்கு வாடகைக்கு எடுக்கப் பட்டிருந்தன. இந்த வீடுகளில் பலதரப்பட்ட பின்னணியைக் கொண்ட இளைஞர்கள் வசித்தனர். எல்லோருடைய நோக்கமும் மேற்கு ஐரோப்பா, அல்லது கனடா போவதாக இருந்தது. நான் சந்தித்த சில இளைஞர்கள் ஈழ விடுதலை இயக்கங்களில் செயற்பட்டு, பின்னர் விட்டு விட்டு வந்திருந்தார்கள். ஈழத்திலும், தமிழகத்திலும் அந்த இயக்கங்கள் ஒன்றையொன்று பகைவர்களாக கருதிக் கொண்டிருந்த நேரம். ஆனால் இந்த முன்னாள் போராளிகள் மட்டும் நட்புடன் பழகினார்கள்.

ஒரு சில நேரம், அரசியல் பேச்சுகள் தர்க்கத்தில் முடிந்தாலும், அவர்களது நட்பு முறியவில்லை. அவர்களைப் பொறுத்த வரையில், அரசியல் வாழ்வு அஸ்தமித்து விட்டது. இனிமேல் வெளிநாடு சென்று சம்பாதித்து சொந்தக் குடும்பத்தை பார்த்தால் போதும் என்று நினைத்தார்கள். முன்னர் இயக்க உறுப்பினர்களாக பொது வாழ்வில் இருந்த காலங்களில் குடும்ப உறவை துண்டித்திருந்தார்கள். தற்போது மீண்டும் உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டார்கள். பெற்றோரும் "காணாமல் போன ஆட்டுக்குட்டி திரும்பி வந்த குதூகலத்தில்" திளைத்தார்கள். "ஈழத்திற்காக வேறு யாராவது போராடட்டும். தனது பிள்ளை வெளிநாடு சென்று நலவாழ்வு வாழ வேண்டும்," என்று நினைத்தார்கள். அதனால் எத்தனை லட்சம் கொடுத்தேனும் வெளிநாடு அனுப்பி விடத் துடித்தார்கள்.

முன்னாள் இயக்க உறுப்பினர்களின் மூலம், தமிழகத்தில் ஈழ அரசியல் செல்வாக்கு குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. முக்கியமான ஐந்து ஈழ விடுதலை இயக்கங்கள் இந்தியாவில், சென்னையில் தலைமை அலுவலகங்களை வைத்திருந்தன. ஈழத்தில் இயக்க நடவடிக்கைகள் யாவும் அங்கிருந்த படி நெறிப்படுத்தப் பட்டன. ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இந்தியா பூரண ஆதரவு வழங்கியதாக நம்பினார்கள். "இந்தியா இராணுவத்தை அனுப்பி தமிழீழம் எடுத்து தங்கள் கையில் தந்து விட்டுப் போகும்," என்று விடுதலை இயக்கப் போராளிகள் கூட அப்போதும் நம்பிக் கொண்டிருந்தனர். 1983 இனக்கலவரத்திற்குப் பின்னர், தமிழகம் முழுவதும் ஈழ ஆதரவு அலை வீசிக் கொண்டிருந்தது.

அன்று முதலமைச்சராக இருந்த MGR உம், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியும், யார் அதிகம் ஆதரவளிப்பது என்பதில் போட்டி நிலவியது. MGR புலிகள் அமைப்பிற்கு நெருக்கமானவராக இருந்தார். வேண்டிய நேரமெல்லாம் பணமும், அரச உதவிகளையும் வழங்கி வந்தார். கருணாநிதி பிற கட்சிகளை சேர்த்துக் கொண்டு TESO (தமிழீழ பாதுகாப்பு அமைப்பு) என்ற அமைப்பை உருவாக்கினார். அதன் மூலம் அனைத்து விடுதலை இயக்கங்களுக்கும் நிதி வழங்கினார். அன்று புலிகள் மட்டும் அந்த உதவியைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். அதற்கு முன்னர் இந்திய மத்திய அரசின் நேரடித் தொடர்பில் இருந்த டெலோ இயக்கத்திற்கு கருணாநிதி ஆதரவளித்து வந்தார். MGR ஆயினும், கருணாநிதி ஆயினும், இந்திய மத்திய அரசின் அனுமதி இன்றி அவ்வாறு நடந்து கொண்டிருக்க முடியாது, என்று முன்னாள் போராளிகள் தெரிவித்தனர். இந்தியா வேண்டிய நேரத்தில் தலையிட்டு, யார் எஜமான் என்பதை நிரூபிக்கும், என்றும் கூறினார்கள். அதனை மெய்ப்பிப்பது போல சில சம்பவங்கள் நடந்தன.

இந்தியாவின் அனுசரணையின் பேரில், பூட்டானில் நடைபெற்ற திம்புப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன. மிதவாத தமிழர் விடுதலைக் கூட்டணியையும் சேர்த்து, ஐந்து ஈழ விடுதலை இயக்கங்கள் கூட்டாக தமது தீர்வுகளை முன்வைத்திருந்தன. அதற்குப் பின்னர், புலிகள், டெலோ, ஈபிஆர்எல்ப், ஈரோஸ் போன்ற நான்கு இயக்கங்கள் தமக்குள்ள ஐக்கியம் கண்டன. "ஈழ தேசிய விடுதலை முன்னணி" என்ற பெயரின் கீழ் கூட்டாக அறிக்கை விட்டன. இந்தியா, ஈழ விடுதலை இயக்கங்களிடையே அத்தகைய ஐக்கியத்தை எதிர்பார்க்கவில்லை. திடீர் நடவடிக்கையாக டெலோ அமைப்பின் அரசியல் ஆலோசகர் சத்தியேந்திரா, புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், ஆகியோரை நாடு கடத்தியது.

அதை விட, இன்னொரு சம்பவம் ஈழ விடுதலை அமைப்புகளின் சுதந்திரம் எந்தளவு மட்டுப்படுத்தப் பட்டது என்பதை நிரூபித்தது. ஒரு நாள் சொல்லி வைத்தாற் போல, அனைத்து இயக்கங்களினதும் தலைமை அலுவலகங்கள் சோதனையிடப்பட்டன. திடீரென புகுந்த போலிசும், புலனாய்வுத்துறை அதிகாரிகளும், அங்கிருந்த ஆயுதங்கள், ஆவணங்கள் அனைத்தையும் அபகரித்துச் சென்றனர். போலீசார் எவ்வாறு மூலை முடுக்கெல்லாம் சல்லடை போட்டுத் தேடினார்கள், என்று இயக்க அலுவலகம் ஒன்றில் பணியாற்றிய ஒரு நண்பர் தெரிவித்தார். சிறிலங்கா போலிஸ் மட்டுமே அத்தகைய அடக்குமுறையில் ஈடுபடும் என்று நம்பிக் கொண்டிருந்த நண்பருக்கு, அந்தச் சம்பவம் மீள முடியாத அதிர்ச்சியைக் கொடுத்தது. திடீர் சோதனை நடவடிக்கைக்கு, இந்திய அரசு உத்தியோகபூர்வ விளக்கம் கொடுத்ததாக நினைவில்லை.

சிறிது காலம் யாழ் குடாநாட்டில் சிறிலங்கா இராணுவம் முன்னேறுவதற்கான எந்த அறிகுறியையும் காணவில்லை. வடமராட்சியை கைப்பற்றிய இராணுவ நடவடிக்கையின் பின்னர், படை நகர்வில் தேக்க நிலை காணப்பட்டது. புலிகள் திருப்பித் தாக்கத் தொடங்கியிருந்தனர். விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை பாதுகாப்பார்கள் என்று, அவர்களது பலத்தில் நம்பிக்கை கொண்ட அகதிகள் பலர் ஊர் திரும்பினார்கள். மீண்டும் ஒரு தடவை நண்பர்களுடன் இராமேஸ்வரம் சென்றிருந்த பொழுது, சில படகுகள் புறப்பட இருப்பதாக செய்தி வந்தது. நண்பர்களுக்கு தெரிந்தவர்கள் என்பதால், இலவசமாக ஏற்றிச் செல்ல முன்வந்தார்கள்.

சென்னையில் வசித்த நண்பர்களைப் போல, வெளிநாடு செல்லும் நோக்கம் எதுவும் எனக்கு அப்போது இருக்கவில்லை. இந்திய மண்ணில் அகதியானது போல, எங்கோ ஒரு ஐரோப்பிய நாட்டில் அகதியாக அலைய மனம் ஒப்பவில்லை. எனது குடும்பத்தை சேர்ந்தவர்களும், அந்நிய மண்ணில் அடிமையாக வாழ்வதை விட, சொந்த மண்ணில் வாழ்வதே சுதந்திரம் என்று கருதுபவர்கள். அதனால் இலங்கை செல்லும் படகில் கால் வைத்த பொழுது, ஒரு தவறைச் செய்கிறோம் என்று நினைக்கவில்லை. அன்று என்னைப் போல பலரும் ஊர் திரும்பிக் கொண்டிருந்ததது சாதாரண நிகழ்வு. ஆனால் ஒரு சில மாதங்களின் பின்னர், என்னோடு அகதி முகாமில் வசித்த ஈழ அகதிகள் அனைவரும் கப்பலில் வந்திறங்குவார்கள், என்று கனவிலும் நினைக்கவில்லை. இந்தியாவில் இருந்து சென்ற எம்மை, இந்தியாவின் நிழல் தொடரப் போகின்றது என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.

(தொடரும்)
தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
3.
தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை
2.
ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா
1.
இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்

1 comment:

ADMIN said...

ஓ..! ஒற்றை வார்த்தையில் கருத்து..?! வேறென்ன சொல்ல..!