Tuesday, April 05, 2011

டென்மார்க்கினுள் ஒரு பொதுவுடைமை சமுதாயம்


டென்மார்க் தலைநகரமான கோபென்ஹெகன் நகரில், உல்லாசப் பிரயாணிகளை கவரும் இடங்களில் அதுவுமொன்று. பொதுவுடைமை சமூக கட்டமைப்பைக் கொண்ட "கிறிஸ்தியானா" தன்னை தனியான சுதந்திர தேசமாக கருதிக் கொள்கின்றது. (Freetown_Christiania) 1971ல், நகர மத்தியின் அருகில் உள்ள, கைவிடப்பட்ட கடற்படை முகாம், ஹிப்பிகளின் வதிவிடமானது. அறுபதுகளில் அமெரிக்காவின் வியட்னாம் போரை எதிர்த்த ஹிப்பிகள், முதலாளித்துவ சமூக அமைப்பை வெறுத்தனர். எதிர்க் கலாச்சாரமாக பின்பற்றிய கஞ்சா (மரிஹுவானா) பாவனை, மனோவியல் சுதந்திரத்தைக் கொடுத்தது. டென்மார்க்கில் ஒரு சில ஆக்கபூர்வமான ஹிப்பிகளின் கடின உழைப்பால், கிறிஸ்தியானா என்ற தனிமைப் படுத்தப் பட்ட சமூகம் தோன்றியது. சமூக உறுப்பினர்கள், கூடிய பட்சம் அரசையும், முதலாளித்துவ நிறுவனங்களையும் தவிர்த்தனர். தமக்கு தேவையானவற்றை, கூட்டுறவுப் பண்ணையில் உற்பத்தி செய்து கொண்டனர். முழு ஐரோப்பாவிலும் இன்றும் நிலைத்திருக்கும் ஹிப்பி சமூகம், கிறிஸ்தியானா மட்டும் தான். வருடம் தோறும் சுமார் ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். மாற்றுக் கலாச்சாரத்தை கண்டு களிப்பதற்காக மட்டுமல்லாது, கஞ்சா வாங்குவதற்கும் வருகை தருகின்றனர்.தன்னைத் தானே சுதந்திர தேசமாக அறிவித்துக் கொண்ட, ஆனால் டென்மார்க் அரசால் அங்கீகரிக்கப் படாத, "கிறிஸ்தியானா" தனக்கென தேசிய கீதம் ஒன்றைக் கொண்டுள்ளது. எதிர்க் கலாச்சார பாப்பிசைப் பாடலான "I kan ikke slå os ihjel " (நீங்கள் எங்களைக் கொல்ல முடியாது) தேசியகீதமாக இசைக்கப் படுகின்றது. தேசத்திற்கு தனியான கொடி உண்டு. சிவப்பு பின்னணியில் மூன்று மஞ்சள் நிற வட்டங்களைக் கொண்ட கொடி. டேனிஷ் குரோனருக்கு பதிலாக, சிறப்பு நாணயம் ஒன்று புழக்கத்தில் உள்ளது. உண்மையில் கிறிஸ்தியானா சமூகத்தின் பொருளாதாரம் காசை அடிப்படையாகக் கொண்டதல்ல. ஆனால், உழைப்பின் பெறுமதியை அளப்பதற்கு தனியான நாணயத்தை பயன்படுத்துகிறார்கள். அடிப்படையில் பண்டமாற்று பொருளாதாரத்தை கொண்டுள்ளதால், சமூக உறுப்பினர்கள் நாணய நோட்டுகளுக்கு பதிலாக உழைப்பை பரிமாறிக் கொள்கின்றனர்.சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்காக, கிறிஸ்தியானா நகரினுள் வாகனங்கள் தடை செய்யப் பட்டுள்ளன. சமூக உறுப்பினர்கள் தமது கார்களை எல்லையில் நிறுத்தி விட்டு வருவார்கள். ஹிப்பிகளின் தேசத்திற்கு என்று தனியான சட்டங்கள், நெறிமுறைகள் உள்ளன. சில விசித்திரமானவை. உதாரணத்திற்கு, ஓடுவது தடை செய்யப் பட்டுள்ளது. (திருடன் மட்டுமே ஓடுவான்.) பொதுவுடைமை பொருளாதாரத்தைக் கொண்டிருப்பதால், மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்கின்றனர். "நான்" என்ற தன்முனைப்பு வாதம் கிடையாது. "நாங்கள்" என்ற கூட்டு மனப்பான்மை கட்டாயமாக்கப் பட்டுள்ளது. சமூக உறுப்பினர்கள் ஒருவரில் மற்றவர் தங்கியிருக்கின்றனர். வெளியில் இருந்து எந்த உதவியும் எதிர்பார்ப்பதில்லை. இத்தகைய அரசு சாராத தன்னாட்சி அதிகாரத்திற்கு, தற்போது ஆபத்து வந்துள்ளது. ஆட்சியில் உள்ள வலதுசாரி அரசு, கிறிஸ்தியானா நகரை கலைப்பதற்கு நீதிமன்ற உத்தரவு வாங்கியுள்ளது.மொத்தம் 850 வதிவிடப் பிரஜைகளைக் கொண்ட, 35 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள கிறிஸ்தியானா நகரம், முந்திய இடதுசாரி அரசு காலத்தில் கண்டும் காணாது விடப்பட்டது. 2004 ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ராஸ்முஸ்சன் (இன்று நேட்டோ தலைவர்) தலைமையிலான அரசு, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வருடம் வரை இழுத்துக் கொண்டிருந்த வழக்கின் இறுதியில், அரசுக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. அதன் பிரகாரம், முதற்கட்டமாக கிறிஸ்தியானா நகரில் கட்டப்பட்ட சட்டவிரோத குடியிருப்புகள் அகற்றப்படும். கஞ்சா போன்ற மென் போதைவஸ்துகள் தடை செய்யப்படும். மேற்கொண்டு முழுப் பிரதேசமும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்கப்படும். நீதிமன்ற தீர்ப்பின் பின்னர், கிறிஸ்தியானா உறுப்பினர்கள், தமது எதிர்காலம் குறித்து அரசுடன் பேச வேண்டிய நிலையில் உள்ளனர். அவர்களே நிதி சேகரித்து அந்த இடத்தை வாங்கும் தெரிவும் உள்ளது. அடுத்த பொதுத் தேர்தலில் இடதுசாரி சமூக- ஜனநாயகக் கட்சி வென்றால், தமது இருப்புக்கு எந்தப் பிரச்சினையும் வராது என்று நம்புகின்றனர்.


கிறிஸ்தியானா சுதந்திர தேசம் பற்றி எழுதிய முன்னைய பதிவு: டென் மார்க், கோபென்ஹெகன் நகரம் தீப்பிடித்தது

No comments: