Showing posts with label காணாமல் போனோர். Show all posts
Showing posts with label காணாமல் போனோர். Show all posts

Saturday, September 03, 2016

ஈழப்போரின் உந்துசக்தி வர்க்கப் போராட்டமும், ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வும் தான்



மன்னிக்கவும், இதைச் சொன்னவர் "சர்வதேச சமூகத்தை சண்டைக்கு இழுக்கும் இடதுசாரி ஈழப் புரட்சியாளர்" அல்ல. இறுதிப் போரில் தமிழினத்தை அழித்த ஏகாதிபத்தியத்தை எதிர்க்கத் தைரியமற்ற தமிழ்த் தேசியவாதி:

 //தமிழினம் அழிக்கப்பட்டபோது தடுக்க
 திராணியற்றிருந்த பான் கீ மூன் - இன்று தன்னிலை மறந்து வந்து கைகூப்புகின்றார்... 
நாங்கள் கடவுள்கள் அல்லவே 
 உங்களை மன்னிக்க...//

பிற்குறிப்பு: இப்படிச் சொன்னதற்காக தமிழர்கள் எல்லோரும் "இடதுசாரி புரட்சியாளர்கள்" என்று தவறாக நினைத்து விடாதீர்கள், பான் கீ மூன் அவர்களே! மீண்டும் சர்வதேச விசாரணை கோரி ஐ.நா. விடம், அதாவது உங்கள் காலில் வந்து விழுவோம். மீண்டும் ஜெனீவாவை நோக்கி ஊர்வலம் நடத்துவோம்.

ஏகாதிப‌த்திய‌த்தின் சுய‌ரூப‌ம் இப்போது தானா தெரிந்த‌து த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளே? ஈழப் போர் கூட ப‌ரிசோத‌னைக் க‌ள‌மாக‌, ஆயுத நிறுவனங்களின் இலாபத்திற்காக நடந்தது. க‌ட‌ன் கொடுக்கும் உல‌க‌ வங்கிகளுக்கும் சம்பந்தம் உண்டு. இது தெரியாம‌ல் இன்றைக்கும் "ச‌ர்வ‌தேச‌ம் த‌லையிட்டு த‌மிழீழ‌ம் வாங்கித் த‌ரும்" என்று காத்திருக்கும் முட்டாள்க‌ளைப் ப‌ற்றி, என்ன‌த்த‌ சொல்ல‌? ஈழப்போர் ஓர் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர் மட்டுமல்ல, அது ஒரு வர்க்கப் போராட்டமும் தான்.

ஐ.நா. செயலாளர் பான் கீ மூன், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து, யாழ் நூலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வெளியில் காணாமல் போனோரின் தாய்மார் கூடி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் சம்பந்தர், சுமந்திரனுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப் பட்டன. எதிர்க் கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், தமது அரசியல் ஆதாயங்களுக்காக சம்பந்தர், சுமந்திரனை திட்டுவதுண்டு. ஆனால், அவர்கள் ஏகாதிபத்தியத்திற்கு (இந்த இடத்தில் பான் கீ மூன்) எதிராக முணுமுணுக்கவும் மாட்டார்கள்.

அது ஒரு புறமிருக்கட்டும். அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட, காணாமல் போனவரின் தாய் ஒருவர் அங்கு நின்ற சிங்களப் பொலிசாருடன் வாக்குவாதப் பட்டுக் கொண்டிருந்தார். அதுவும் வீடியோவில் பதிவாகியுள்ளது. (பார்க்க: https://www.youtube.com/watch?v=kJeblNa2Pz4) அவர் அந்தப் போலிஸ்காரரிடம் கூறுகின்றார்:"காசுள்ளவனிடம் காசு வாங்கிக் கொண்டு அவர்களது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு போக விடுகிறீர்கள். ஆனால், ஏழைப் பிள்ளைகளை (சிறைகளில்) அடைத்து வைத்திருக்கிறீர்கள்!"

ஈழப்போர் நடந்த காலத்தில் வர்க்கப் பிரச்சினை இருக்கவில்லை என்று பாசாங்கு செய்வோரின் கவனத்திற்கு: இதோ ஒரு நேரடி சாட்சியம். இந்த வீடியோவில் காணாமல்போன பிள்ளையின் தாய் சொல்வதைக் கேளுங்கள். இதை நாங்கள் சொன்னால் "இடதுசாரி" என்று திட்டுவார்கள். தேசிய உணர்வை உடைப்பதாக தமிழ்த் தேசியவாதிகள் சண்டைக்கு வருவார்கள். ஆனால், ஈழத்தின் யதார்த்தம் அவர்களது கனவுலகிற்கு முரணாகவே உள்ளது.

ஈழப் போர் நடந்த காலம் முழுவதும், ஏழைகளே அதிகளவில் பாதிக்கப் பட்டனர். வசதிபடைத்தோரும், பணக்காரர்களும், வெளிநாடுகளுக்கு சென்று விட்டார்கள்.  காணி, பூமி வைத்திருந்தவர்கள் அவற்றை விற்று, அல்லது அடகு வைத்து விட்டு சென்றார்கள். வெளிநாடு செல்ல முடியாதவர்கள், கொழும்பு நகரில்  அல்லது தமிழ் நாட்டில் பாதுகாப்பாக தங்கியிருந்தார்கள்.

ஈழத்தில் எஞ்சியிருந்த, நிலமற்ற, சொத்துக்கள் ஏதுமற்ற ஏழைகள் தான் போராடச் சென்றனர். ஏனென்றால், ஏழைகள் தான் போரினால் பெருமளவில் பாதிக்கப் பட்டனர். அவர்கள் தம்மிடம் இருந்த அனைத்தையும் இழந்து நின்றனர். "இதற்கு மேல் இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலைமையில் உள்ள பாட்டாளி வர்க்கத்தினர்  தான் போராட முன்வருவார்கள்." என்று கார்ல் மார்க்ஸ் சொன்ன பொன்மொழி ஈழப்போரிலும் நிரூபிக்கப் பட்டது. 

பணம் என்றால் பிணமும் வாய் திறக்குமாம்! சிங்கள அரசும், சிங்கள இராணுவமும், எந்தளவு கொடூரமான இனவெறியர்களாக இருந்தாலும், காசைக் காட்டி மயக்க முடிந்தது. அதனால் பல பணக்காரத் தமிழர்கள், பண பலத்தால் தப்பியிருக்கிறார்கள். இறுதிப் போரில் தப்பிய புலிகளின் முக்கிய உறுப்பினர்களை கூட, காசு வாங்கிக் கொண்டு விடுதலை செய்திருக்கிறார்கள். இராணுவ அதிகாரிகளே, விமான நிலையம் வரை கூட்டிச் சென்று வழி அனுப்பி வைத்திருக்கிறார்கள். 

பணக்கார வீட்டுப் பிள்ளைகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டாலும், சில நாட்களில் பெருந்தொகைப் பணம் கொடுத்து வெளியே வந்தார்கள். சிறிலங்கா இராணுவம், காவல்துறைக்கு இலஞ்சம் கொடுக்க வசதியில்லாத ஏழைகளின் பிள்ளைகள், இன்று வரைக்கும் சிறை வைக்கப் பட்டுள்ளனர். கடுமையான சித்திரவதைகளை அனுபவிப்போராக உள்ளனர். பலர் கொல்லப் பட்டு விட்டனர் அல்லது காணாமல் போகச் செய்யப் பட்டுள்ளனர்.

"அப்படி அல்ல, ஈழத் தமிழ் சமூகத்தில் அனைத்து வர்க்கத்தினரும் வெளிநாடுகளுக்கு போனார்கள். பணமில்லாதவர்கள் கடன் வாங்கிச் சென்றனர்." என்று சிலர் வாதாடலாம். அது விதண்டாவாதம். ஏனெனில், கடன் வாங்க முடியாத தமிழர்களும் ஈழத்தில் வாழ்கின்றனர். பெருந்தொகைப் பணம் கடனாக எடுப்பதென்றால் நகைகள் அல்லது காணி அடகு வைக்க வேண்டும். அது கூட இல்லாத ஏழைகள் ஏராளம்.

மேலும், ஈழப் பிரதேசத்தில் எல்லா இடங்களிலும் இருந்து சம அளவில் புலம்பெயரவில்லை. பணக்காரர்கள், வசதிபடைத்தோர் பெருமளவில் வாழும் யாழ் மாவட்டத்தில் இருந்து தான் பெருமளவில் புலம்பெயர்ந்தனர். அதிலும் குறிப்பாக யாழ் நகரத்தை அண்டிய பிரதேசம், வலிகாமம் போன்ற இடங்களில் தான் செல்வந்தர்கள் செறிவாக வாழ்ந்து வந்தனர். மேலும் தீவுப் பிரதேசங்களை சேர்ந்தோர், போர் தொடங்குவதற்கு முன்னர் தென்னிலங்கையில் வர்த்தகம் செய்து வந்தனர். இன்று மேற்கத்திய நாடுகளில் வாழும் ஈழத் தமிழரில் கணிசமான அளவினர், மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் இருந்து சென்றவர்களே.

இந்தியா மாதிரி ஈழத்திலும் வர்க்கமும், சாதியும், ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டுள்ளன. சரியான புள்ளிவிபரம் எடுக்கப் படுமாக இருந்தால், மேட்டுக்குடி அல்லது உயர் மத்திய தர வர்க்கத்தை சேர்ந்தவர்களில் பெரும்பான்மை உயர்த்தப் பட்ட சாதிகளில் இருந்து வந்திருப்பார்கள். அதற்கு மாறாக, ஏழைகளும், வசதியற்றவர்களும் பெரும்பாலும் தாழ்த்தப் பட்ட சாதியினராக இருப்பார்கள். இது குறித்து ஆய்வு செய்த பரம்சோதி தங்கேஸ், மல்லாகம் கிராமத்தில் இருந்த இடம்பெயர்ந்தோர் அகதிமுகாம்களை உதாரணமாகக் காட்டுகின்றார்.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த காங்கேசன்துறை, பலாலி முகாம்களை விஸ்தரிக்கும் நோக்கில், சிறிலங்கா இராணுவம் சுற்றியிருந்த கிராமங்களை ஆக்கிரமித்து வைத்திருந்தது. வசாவிளான், மயிலிட்டி போன்ற பல ஆக்கிரமிக்கப் பட்ட கிராமங்கள், போர் முடிந்து ஆறு வருடங்களுக்குப் பின்னர் தான் விடுவிக்கப் பட்டன. அந்தப் பிரதேச மக்கள் தொண்ணூறுகளில் இருந்து இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

இடம்பெயர்ந்து சென்ற உயர்த்தப் பட்ட சாதியினர் ஒன்றில் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர், அல்லது உறவினர்கள் வீடுகளில் தங்கிக் கொண்டனர். அவர்களிடம் அந்தளவு வசதி இருந்திருக்கிறது. ஆனால், தாழ்த்தப் பட்ட சாதிய சமூகத்தினர் தசாப்த காலமாக அகதி முகாம்களில் தங்கியிருந்தனர். அவர்களிடம் எந்த வசதியும் இல்லாத படியால், அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் வழங்கிய நிவாரணப் பொருட்களில் உயிர்பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது மாதிரி, இந்தத் தகவல் ஒரு சிறு உதாரணம் மட்டுமே.

*****


வீடியோ: "காசுள்ளவனிடம் காசு வாங்கிக் கொண்டு அவர்களது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு போக விடுகிறீர்கள். ஆனால், ஏழைப் பிள்ளைகளை (சிறைகளில்) அடைத்து வைத்திருக்கிறீர்கள்!" 
UN Secretary General, Ban Ki-Moon Visit to Jaffna

Wednesday, January 13, 2016

முள்ளிவாய்க்காலில் காணாமல்போனவர் சனல் 4 வீடியோவில் கண்டுபிடிக்கப் பட்டார்


ஈழப்போர் முடிவடைந்த முள்ளிவாய்க்கால் பகுதியில், குண்டுகளுக்கு பலியாகாமல் உயிர் தப்பிய இளைஞர்கள் பலர், சிறிலங்கா இராணுவத்தினால் கைது செய்யப் பட்டு தடுத்து வைக்கப் பட்டனர். நீண்ட காலமாக அவர்களைப் பற்றிய விபரங்கள் தெரியாமல் இருந்தன. அந்த சம்பவத்தில் காணாமல்போன தன் மகன் திரும்பி வருவானா என்ற ஏக்கத்துடன் காத்திருக்கும் தாய் ஒருவரின் உருக்கமான கடிதம் எனக்குக் கிடைத்தது. அவரது வேண்டுகோளுக்கிணங்க அவரது காணாமல்போன புதல்வன் பற்றிய தகவல்களை இங்கே பிரசுரிக்கிறேன்.


(இடது பக்க மூலையில் இருப்பவர்) 

அண்மையில் யாழ் குடாநாட்டில் காணாமல்போனவர்களை பற்றி விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணைகள் நடைபெற்றன. அதில் சமூகமளித்த பல பெற்றோர், தமது பிள்ளைகள் எத்தகைய சந்தர்ப்பத்தில் எவ்வாறு காணாமல்போனார்கள் என்ற விபரங்களை தெரிவித்தார்கள். எனக்கு இந்தக் கடிதத்தை அனுப்பிய தாய், குறிப்பிட்ட விசாரணைகளுக்கு சமூகமளிக்க முடியவில்லை. அவரது மகனின் கதை, இன்னொரு விதத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது. 

இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில், பிரிட்டிஷ் சனல் 4 தொலைக்காட்சி ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டது பலருக்கும் நினைவிருக்கும். அதில் ஒரு காட்சி வாரும். அரை நிர்வாணமாக்கப் பட்ட நிலையில், சில இளைஞர்கள் மணலில் இருத்தி வைக்கப் பட்டிருப்பார்கள். அவர்களது கைகள் முதுகுப் புறமாக கட்டப் பட்டிருக்கும். அவர்களது பார்வைகள் வெறிச்சோடிப் போயிருக்கும். அருகில் இருந்த இராணுவத்தினர் பிற கைதிகளை சுட்டுக் கொல்லும் கொடிய நிகழ்வை கண்முன்னால் பார்ப்பது போன்றிருக்கும். இலங்கையின் இறுதிப்போரில் நடந்த போர்க்குற்றங்களை உறுதிப்படுத்தும் ஆதாரமாக அது உள்ளது.

சனல் 4 ஆவணப்படத்தில், உயிருடன் இருப்பதாக காட்டிய காட்சியில், தனது மகனைக் கண்டதாக இந்தத் தாய் என்னிடம் தெரிவித்தார். (இங்கேயுள்ள படத்தில் இசைப்பிரியாவுக்கு அருகில் அமர்ந்திருப்பவர்.) அந்த வீடியோவில் தனது மகனை இனம் காட்டும் படங்களையும் அனுப்பி வைத்துள்ளார். அவற்றை இங்கே பதிவிட்டுள்ளேன். 

சனல் 4 காட்டிய படியால் சிலநேரம் தனது மகன் இன்னமும் உயிருடன் இருக்கலாம் என்ற நப்பாசையில் இந்தத் தகவல் வெளிவர வேண்டுமென்று விரும்புகின்றார். மேற்கொண்டு தேவையான விபரங்களை, காணாமல்போனோர் தொடர்பான விசாரணைக்குழு முன்பு சாட்சியமளிக்க தயாராக உள்ளார்.

மல்லாவி மகாவித்தியாலயத்தில் படித்துக் கொண்டிருந்த தம் மகன், இறுதி யுத்த காலகட்டத்தில் புலிகளால் கட்டாய இராணுவ சேவைக்கு பிடித்துச் செல்லப் பட்டதை பெற்றோர் கண்டுள்ளனர். இராணுவம் புதுமாத்தளன் வரை முன்னேறி வந்த போது, பெற்றோர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கிச் சென்றார்கள். ஆனால் காணமல்போன புதல்வனும் இன்னும் பல இளைஞர்களும் அவர்களோடு செல்ல முடியாத நிர்ப்பந்தத்தில் முள்ளிவாய்க்காலுக்கு சென்றனர்.

முள்ளிவாய்க்காலில் காணாமல்போன மகன் பற்றிய விபரங்களை அவரது தாய் அனுப்பிய கடிதத்தில் உள்ள படியே இங்கே தருகின்றேன்:


"எனது மகன் புஸ்பராசா அஜிந்தன் இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் காணாமல்போயுள்ளார். இவரை 20.04.2009 கடைசியாகக் கண்டேன். எனது பிள்ளை மல்லாவி மத்திய கல்லூரியில் உயர்தரக் கலைப்பிரிவில் படித்துக் கொண்டிருந்தார். இவரது கையில் பட்டம் இருக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால், கடைசியில் மகன் விலங்கிடப் பட்ட நிலையில் உள்ள படத்தை தான் காண முடிந்தது.
இடது பக்க மூலையில் இருப்பவர் 

சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தின் சில காட்சிகளை, 15.03.2013 யாழ்ப்பாணத்தில் வெளியாகும் உதயன் மற்றும் வலம்புரி பத்திரிகைகள் பிரசுரித்திருந்தன. அப்போது தான் எனது மகனும் அந்தப் படங்களில் இருப்பதை கண்டுபிடித்தேன். அப்போது பாதுகாப்பின்மை காரணமாக அடையாளம் காட்ட முன்வரவில்லை. அந்த வீடியோக் காட்சிகளின் படி, எனது மகன் இன்னமும் உயிரோடு இருப்பதாக நினைக்கிறேன். எனது மகனைத் தேடித் தருமாறு உரியவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்."

Thursday, July 03, 2014

"பாபிலோனின் புதல்வன்" : ஈழத்தின் துயரத்தை நினைவுபடுத்தும் ஈராக் திரைப்படம்


ஹாலிவூட்டில் செட் போட்டு, ஈராக் பற்றி செயற்கையான காட்சிப் படுத்தல்களுடன் தயாரிக்கப் படும் அமெரிக்கத் திரைப் படங்களுக்கு மத்தியில், ஓர் உண்மையான ஈராக் திரைப்படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நெதர்லாந்தில் வாழும் ஈராக்கிய இயக்குனர் Mohamed Al Daradji தயாரித்து, 2009 ம் ஆண்டு வெளியான "பாபிலோனின் புதல்வன்" (Son of Babylon) திரைப்படம், பல சர்வதேச பரிசுகளை வென்றுள்ளது. 

"பாபிலோனின் புதல்வன்", ஈராக்கில் நடந்த சம்பவங்களை வைத்து பின்னப் பட்ட கதை என்றாலும், ஈழப் போரில் நடந்த சம்பவங்களுடனும் அது பொருந்துகின்றது.

நாம் வாழும் நாடுகளும், பேசும் மொழிகளும் மட்டுமே வேறு வேறு. உலகம் முழுவதும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் கதைகளும், அனுபவங்களும் ஒன்று தான். 

தமிழகத்தில், ஏராளமான ஹாலிவூட் குப்பைகளை டப் பண்ணி வெளியிடும் நேரத்தில், இது போன்ற நல்ல படங்களை தமிழில் டப் பண்ணி வெளியிட்டால், தமிழ் மக்களுக்கு பிரயோசனமாக இருக்கும். ஒரு சினிமாவினால் சமூக விழிப்புணர்வை உண்டாக்கிய திருப்தியும் கிடைத்திருக்கும். கோடம்பாக்கம் சினிமாத் துறையினருக்கு இதை ஒரு கோரிக்கையாக வைக்கிறேன்.

Son of Babylon படத்தின் கதை இது தான்:

2003 ம் ஆண்டு, ஈராக்கில் சதாமின் ஆட்சி கவிழ்ந்து அமெரிக்க ஆக்கிரமிப்பு தொடங்கிய சில வாரங்களில் இந்தக் கதை நடக்கிறது. அஹ்மத் என்ற 12 வயது சிறுவன், தனது பாட்டியுடன் காணாமல் போன தந்தையை தேடிப் பயணத்தை தொடங்குகிறான். பயணத்தின் நடுவில் சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்குகின்றனர்.

ஈராக்கின் வடக்கே உள்ள குர்திஸ்தானில் இருந்து, தெற்கே சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள நஸ்ரியாவை நோக்கி, அவர்களதுஆரம்பமாகின்றது.  அஹ்மத்தின் தாய் இறந்து விட்டாள். பாட்டியின் மகன் தான், அவனது தந்தை. மகனைத் தேடும் தாயினதும், தந்தையைத் தேடும் மகனினதும் உணர்வுகளுடன் நாங்களும் ஒன்று கலக்க முடிகின்றது.

1991 ம் ஆண்டு, குர்திஸ்தான் மீது தாக்குதல் நடத்திய சதாமின் ஈராக் இராணுவம், அஹ்மத்தின் தந்தையை கைது செய்து கொண்டு சென்றுள்ளது. அதற்குப் பிறகு அவர் காணாமல்போயுள்ளார். வட இலங்கையில் நடந்ததைப் போன்று, வட ஈராக்கில் வாழும் குர்து மொழி பேசும் சிறுபான்மை இன மக்கள், குர்திஸ்தான் விடுதலைப் போராட்டம் நடத்திய காலகட்டம் அது. அன்றைய ஈராக்கிய சர்வாதிகாரி சதாம் ஹுசைனின் இராணுவம், அரபு மொழி பேசும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த படையினரைக் கொண்டிருந்தது. 

ஈராக் இராணுவத்தின் அடக்குமுறை காரணமாக, பெண்களும், குழந்தைகளுமாக பல ஆயிரம் குர்திஷ் மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். அதைவிட பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் கைது செய்யப் பட்டு, தெற்கு ஈராக்கிய சிறைகளில் அடைக்கப் பட்டனர். அவர்களில் பலர் காணாமல்போயினர். அதாவது, இரகசியப் புதைகுழிகளுக்குள் கொன்று புதைக்கப் பட்டனர்.

ஈழப் போரிலும், அதே போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை, நான் இங்கே குறிப்பிடத் தேவையில்லை. வட இலங்கையில் கைது செய்யப் பட்டு கொண்டு செல்லப்பட்ட ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்கள், தென்னிலங்கையில் பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப் பட்டனர். சிறி லங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல்போய், பின்னர் புதைகுழிகளுக்குள் கண்டெடுக்கப் பட்ட இளைஞர்கள் ஏராளம்.

இப்போது மீண்டும் படத்திற்கு வருவோம். அஹ்மத்தின் பாட்டி, நஸ்ரியாவில் உள்ள சிறையில் தனது மகன் தடுத்து வைக்கப் பட்டிருப்பதாக கேள்விப் பட்டு, பேரனையும் அழைத்துக் கொண்டு அங்கே செல்கிறாள். அவர்கள் வடக்கே குர்திஸ்தானில் வாழும், குர்திய சிறுபான்மை இனத்தவர்கள். பாட்டிக்கு குர்து மொழி மட்டுமே தெரியும். பெரும்பான்மை அரபி மொழி பேசும் பிரதேசத்தில் மொழி தெரியாது தவிக்கிறாள். அந்த நேரத்தில், அரபி பேசத் தெரிந்த சிறுவன் அஹ்மட் உதவுகிறான். 

அந்தக் காட்சிகள், வட இலங்கையில் வாழும் தமிழர்கள், தென்னிலங்கைக்கு சிறைப் பிடித்து கொண்டு செல்லப்பட்ட உறவுகளை தேடிச் செல்வதை நினைவு படுத்துகின்றன. அவர்களும் சிங்களம் மட்டும் பேசும் பிரதேசங்களில் மொழி தெரியாமல் தவிப்பதுண்டு. ஈராக்கில் அரேபியருக்கு குர்து மொழி தெரியாத மாதிரி, இலங்கையில் சிங்களவர்களுக்கு தமிழ் பேசத் தெரியாது. உலகின் எல்லா நாடுகளிலும் பெரும்பான்மை இனத்தவர்கள் ஒரே மாதிரி தான் நடந்து கொள்கின்றனர். இவ்வாறு திரைப்படக் காட்சிகள் முழுவதும், ஈழத் தமிழரின் இன்னல்களையும் நமது மனக் கண் முன்னால் கொண்டு வருகின்றது.

அஹ்மத்தும் பாட்டியும் பாக்தாத் செல்லும் வழியில், அமெரிக்கப் படையினரின் சோதனைச் சாவடியை கடந்து செல்ல வேண்டியுள்ளது. வழி நெடுகிலும் புகை மண்டலமும், இடிந்த கட்டிடங்களும் போர் இன்னும் ஓயவில்லை என்பதைக் காட்டுகின்றது. பாக்தாத் நகரில், ஒரு தனியார் பஸ் வண்டியை பிடித்து, நஸ்ரியா நோக்கிச் செல்கின்றனர். 

நீண்ட பயணத்திற்குப் பின்னர், நஸ்ரியா நகரை வந்தடையும் அஹ்மட்டும், பாட்டியும், அங்கேயிருந்த சிறைச்சாலை வெறுமையாக இருப்பதைக் காண்கின்றனர். ஒரு சில அதிகாரிகள் மட்டும் காணாமல்போனவர்களின் பட்டியலுடன் காத்திருக்கின்றனர். அந்த இடத்தில் அவர்களைப் போன்று, இன்னும் பல பெண்கள் தமது காணாமல்போன உறவுகளைத் தேடி வந்திருப்பதைக் காண்கின்றனர்.

காணாமல்போனவர்களை தேடி வரும் உறவினர்களுக்கு, அதிகாரிகள் தமது பட்டியலில் இல்லாத பெயர்கள், மனிதப் புதைகுழிகளுக்குள் புதைக்கப் பட்டிருக்கலாம் என அறிவுறுத்துகின்றனர். சதாம் ஆட்சிக் காலத்தில் கொன்று புதைக்கப் பட்டவர்களின் புதைகுழிகள் தற்போது தோண்டப் பட்டு வருகின்றன. 

அஹ்மத்தும், பாட்டியும், வழியில் கண்ட மற்றவர்களுடன், மனிதப் புதைகுழிகளை தேடிச் செல்கின்றனர். தமது கணவன் மாரை இழந்த பெண்கள், மகன் மாரை  இழந்த பெண்கள், இவ்வாறு ஒவ்வொருவருக்கும் பின்னால் ஒரு துயரக் கதை ஒளிந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக சிலர் தமது உறவுகளின் சடலங்களை கண்டெடுக்கிறார்கள். மற்றவர்கள் அடுத்த புதைகுழியை தேடிச் செல்கிறார்கள்.

இதற்கிடையே பயணத்தின் போது சந்திக்கும் ஓர் அந்நிய வாலிபன், வழியில் அஹ்மட்டுடன் நட்பு கொள்கிறான். அவனது தந்தையை கண்டுபிடிப்பதற்கு, புதைகுழிகள் இருக்குமிடத்தை கூட்டிக் கொண்டு சென்று காட்டுவதற்கு, தானாகவே உதவி செய்ய முன்வருகிறான். அந்த நண்பருக்கு கொஞ்சம் குர்து மொழி பேசத் தெரிந்திருக்கிறது. அவனுக்கு எப்படி குர்து தெரியும் என்று பாட்டி கேட்கிறாள்.

அதற்கு அவன், குர்திஸ்தானில் நடந்த போரில், சதாமின் இராணுவத்தில் பணியாற்றிய அனுபவத்தை சொல்கிறான். உடனே துணுக்குற்ற பாட்டி, அவன் குர்திஷ் மக்களை கொன்று குவித்த முன்னாள் போர்வீரன் என்பதை அறிந்து கொண்டு வெறுக்கிறாள். அஹ்மத்தையும் அவனோடு பேச வேண்டாம் என்று தடுக்கிறாள். ஆனால், அரசியலை விட அந்த அந்நிய ஆடவனின் தன்னலம் கருதாத உதவி, 12 வயது சிறுவனான அஹ்மத்தை பெரிதும் கவர்ந்து விடுகின்றது.

கடந்த கால இனக் குரோத போரினால் பாதிக்கப்பட்ட ஒருவரும், அடக்குமுறைக் கருவியாக செயற்பட்ட ஒருவரும், சந்திக்க நேரும் சந்தர்ப்பம், ஈராக்கில் மட்டுமல்ல, உலகின் பிற பகுதிகளிலும் நடக்கலாம். ஒரு காலத்தில், தன்னால் ஈவிரக்கமின்றி ஒடுக்கப்பட்ட மக்களின் வேதனையை, தற்போது சாதாரண மனிதனாக மாறியிருக்கும் முன்னாள் போர்வீரன் உணர்ந்து கொள்கிறான். "உண்மையில் குர்து மக்களை கொல்வதற்கு தான் மேலிடத்தால் நிர்ப்பந்திக்கப் பட்டதாகவும், போரில் நடந்த குற்றங்களுக்காக வருந்துவதாகவும்," அந்த முன்னாள் போர்வீரன் நடந்த தவறுகளுக்காக மன்னிப்புக் கோருகிறான். ஆரம்பத்தில், அவனது மன்னிப்பை ஏற்றுக் கொள்ள அஹ்மத்தின் பாட்டி மறுக்கிறாள். 

ஆயினும், எதிர்பாராமல் சந்தித்த அரபி நண்பனின் உதவியால் தான், அவர்களால் புதைகுழிகள் இருக்குமிடத்திற்கு செல்ல முடிகின்றது. படத்தின் முடிவில் அவன் செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் பாட்டி, போர் நடந்த காலத்தில் கட்டாயப் படுத்தப் பட்டதன் காரணமாக தவறிழைத்த முன்னாள் போர்வீரனை பெருந்தன்மையுடன் மன்னித்து விடுவதாக கூறுகின்றாள். அந்த முன்னாள் அரபுப் படைவீரனின் இடத்தில், ஒரு சிங்கள படையினனை ஒப்பிட்டுப் பார்க்கலாம். அந்த குர்து மூதாட்டியின் இடத்தில், ஒரு ஈழத் தமிழ் மூதாட்டியை ஒப்பிட்டுப் பார்க்கலாம். அங்கே குர்திஸ்தான், இங்கே ஈழம். நாடுகள் தான் வேறு, கதை ஒன்று தான்.

காணாமல்போன உறவு தற்போது உயிருடன் இல்லை என்ற உண்மையை உணர்ந்து கொண்ட அஹ்மத்தும், பாட்டியும் ஊருக்கு திரும்பிச் செல்கின்றனர். அத்துடன் படம் முடிகின்றது. ஈராக்கில் கடந்த நாற்பது வருடங்களில் ஒரு மில்லியன் பேரளவில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. நாடு முழுவதும் சுமார் 250 மனிதப் புதைகுழிகள் உள்ளன. பலரது சடலங்கள் அடையாளம் காணப் பட்டுள்ளன. இன்னமும் பலர் காணாமல் போனவர்களாக உள்ளனர்.

"பாபிலோனின் புதல்வன்" (Son of Babylon)படத்தின் வீடியோ:

Tuesday, January 24, 2012

சிவப்பு அபாயம்! வர்க்கப் புரட்சி; சிறிலங்கா அரசு மிரட்சி


"பிரபாகரன் தலைமையில் ஐந்தாம் கட்ட ஈழப்போர் தொடங்கப் போகிறது" என்று அறிக்கை விடுவார்கள். அந்த அறிக்கை வெளி வந்த சில நாட்களில், "சிங்களம் பீதியில் உறைந்து போயுள்ளது." என்று செய்தி வாசிப்பார்கள். சிறிலங்கா அரசில் உள்ள "பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி" அந்த தகவலை தந்ததாக சொல்வார்கள். இந்த அக்கப்போர்களுக்கு அப்பால், சிறிலங்கா அரசு உண்மையிலேயே கிலி கொண்டு தெரிவிக்கும் செய்திகள், எந்தவொரு தமிழ் ஊடகத்திலும் வராது. இனவாத அமைப்புகளின் சுயரூபம் வெளிப்படும் தருணம் ஒன்றுண்டு. ஒரு நாட்டில், என்றைக்கு வர்க்கப் பிரச்சினை மேலெழுந்து வருகின்றதோ, அன்றைக்கு அனைத்து இனவாதிகளும் ஒரே அணியில் சேர்ந்து நிற்பார்கள். இதுவரை காலமும், ஜென்ம விரோதிகளாக பாவனை செய்து வந்த சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும், இன்று ஒரே நோக்கத்துடன் செயற்பட்டு வருவதைக் கண்கூடாகக் காணலாம். வர்க்கப் பிரச்சினை என்ற ஒன்று இருப்பதை மறுப்பது மட்டுமல்ல, அதனை அடக்குவதிலும் ஒற்றுமையாக செயற்படுகின்றனர். சிங்கள இனவாதிகளுக்கும், தமிழ் இனவாதிகளுக்கும் பொதுவான எதிரி இடதுசாரிகள் என்பதால், அவர்கள் சிறிலங்கா அரசின் இருப்பை காப்பாற்றுவதற்காக பாடுபடுவார்கள். எந்தவொரு தமிழ் இனவாதிக்கும், சிறிலங்கா அரசை கவிழ்க்கும் எண்ணம் அறவே கிடையாது. இதனை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

டிசம்பர் மாதம், யாழ்ப்பாணத்தில் லலித், குகன் என்ற இரண்டு சமூக ஆர்வலர்கள் காணாமல் போனார்கள். லலித் சிங்கள இனத்தையும், குகன் தமிழ் இனத்தையும் சேர்ந்தவர்கள். போர் நடந்த காலத்தில் காணாமல்போன மக்களை மீட்டுத் தருமாறு, யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. லலித், குகன் ஆகியோர் அந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு படுத்தியவர்கள். கானாமல்போனோருக்காக போராடியவர்கள் காணாமல் போகும் அதிசயம் இலங்கையில் மட்டுமே நடக்கின்றது. யாழ் குடாநாடு சிறிலங்கா படையினரின் இரும்புப் பிடிக்குள் இருக்கிறது. இராணுவ அதிகாரத்தை மீறி, ஈ,எறும்பு கூட நுழைய முடியாது. அவ்வாறான இடத்தில் காணாமல் போனவர்களை மாதக் கணக்காக கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அதற்கு இராணுவமே பொறுப்பு. அந்த ஆர்வலர்கள் இருவரும் காணாமல் போகவில்லை. கடத்தப் பட்டுள்ளனர், என்றே மக்கள் சந்தேகிக்கின்றனர். இது குறித்து பாராளுமன்றத்திலும் கேள்வி எழுப்பப் பட்டது.

நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு, சமாதானம் நிலவுவதாக, அரசு கூறி வரும் வேளையில், நிராயுதபாணிகளான இரண்டு ஆர்வலர்கள் கடத்தப் பட வேண்டிய காரணம் என்ன? அரசு இப்போது யாரைக் கண்டு அஞ்சுகின்றது? வைகோ அறிவித்தது போன்று, "ஐந்தாம் கட்ட ஈழப்போர்" ஆரம்பமாகி விட்டதா? காணாமல் போனோர் விவகாரத்தில் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் காட்டி வரும் அலட்சியப் போக்கு, அந்த சாத்தியப் பாட்டை நிராகரிக்கின்றது. மேலும் "ஐந்தாம் கட்ட ஈழப்போர்" என்பது, தமிழ் உணர்வாளர்களை கிளர்ச்சியடைய வைத்து ஆதாயம் தேடும் மலின அரசியல் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். போரின் இறுதிக் கட்டத்தில், காங்கிரஸ் அரசு சற்றே இறங்கி வந்ததாக நோர்வே கூறுகின்றது. அந்த நேரத்தில் காங்கிரஸ் அரசுடன் பேச வேண்டாமென்றும், அப்போது நடந்த பொதுத் தேர்தலில் பாஜக வெல்லும் வாய்ப்பு இருக்கிறதென்றும், வைகோ தூது அனுப்பினார். வைகோவின் ஆலோசனைக்கு செவி மடுத்த புலித் தலைவர்கள், இறுதி வரை இந்திய அரசின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதி யுத்தத்தின் போது, "பிரபாகரன் ஆகிய புலித் தலைவர்களை தப்ப விடாமல் தடுத்து பலி கொடுத்த," வைகோவின் துரோகம் குறித்து தமிழ் உணர்வாளர்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால், பேச்சுவார்த்தைக் காலகட்டத்தில் அனுசரணையாளராக செயற்பட்ட நோர்வேயின் அறிக்கை அதனை வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தது. "ஐந்தாம் கட்ட ஈழப்போர்" பற்றிய வைகோவின் அறிவிப்பு, அவர் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடும் முயற்சியே தவிர வேறில்லை. ஆகவே, வட இலங்கையில், தமிழ் தேசியம் தவிர, வேறொரு சக்தி, சிறிலங்கா அரசை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. அந்த சக்தி எது? எதற்காக தமிழ் ஊடகங்கள் அந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் புறக்கணிக்கின்றன?

"வட பகுதி மக்கள், நீண்ட காலமாக இடதுசாரி அரசியலை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டாதவர்கள். தமிழரின் உரிமைப் போராட்டத்தை, வர்க்கப் போராட்டத்துடன் இணைத்து முன்னெடுக்க விரும்புகிறோம்." - ஜேவிபி யில் இருந்து பிரிந்த மத்திய குழு உறுப்பினர் உதுல் பிரேமரட்ண, சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றின் போது தெரிவித்தார். "இலங்கையில் வர்க்கப் போராட்டம் சாத்தியமேயில்லை, தமிழர்களுக்கு தேசிய விடுதலை தவிர வேறெந்த அரசியல் குறித்தும் அக்கறை அற்றவர்கள்." தமிழ் தேசியவாதிகளைக் கேட்டால் அப்படித் தான் சொல்வார்கள். ஒவ்வொருவரும் தங்கள் அரசியல் கொள்கை சிறந்தது என்று கூறுவதில் தவறில்லை. ஆனால், மக்களின் பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் புறக்கணிப்பது ஆபத்தானது. தமிழ் தேசிய உணர்வை விட, தமிழ் மக்களின் வர்க்கப் பிரச்சினை, புலிகளின் முப்பதாண்டு கால ஈழப்போருக்கு உறுதுணையாக இருந்தது. வசதி படைத்தோர் அதிகமாக வாழும் யாழ் மாவட்டத்தை விட, பொருளாதாரத்தால் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் தான் பெருமளவில் போராளிகளானார்கள். வசதி படைத்த மக்கள், வெளிநாடுகளுக்கு சென்று, யுத்த செலவுகளுக்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். யுத்தம் முடிந்த பின்னர், வெளிநாட்டு பணவரவும் நின்று விட்டது. புலிகள் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள், ஒன்றில் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டார்கள், அல்லது இராணுவ புலனாய்வுத் துறையில் பணியாற்றுகின்றனர். உண்மையில், அதிகமாக பாதிக்கப் பட்டவர்கள், ஆயிரக் கணக்கான சாதாரண போராளிகள் தான். இராணுவத்திடம் சரணடைந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், வேலை வாய்ப்பின்றி கஷ்டப் பட்டார்கள். அவர்கள் வறுமையான குடும்பப் பின்னணியை கொண்டவர்கள் என்பதால், பெற்றோராலும் உதவி செய்ய முடியாத நிலைமை.

புலிகள் அமைப்பும் அழிந்து விட்ட பிறகு, புலம்பெயர்ந்த தமிழ் சகோதரர்களால் கைவிடப் பட்ட நிலையில், முன்னாள் போராளிகளின் எதிர்காலம் குறித்து யாரும் சிந்திக்கவில்லை. சிறிலங்கா அரசு, மேற்குலக நிதியில் நடக்கும் புனர்வாழ்வு நிலையங்களில் சில காலம் வைத்திருந்து, ஏதாவது தொழிற்பயிற்சியை கற்பித்து விட்டு விடுவித்து விடுகின்றது. சிறு தொகையினருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பும், அரசாங்க வேலைகளும் வழங்கப் பட்டன. பெரும்பான்மையான முன்னாள் போராளிகள் தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். முன்னாள் போராளிகளில் சிலர் அரச இராணுவத்தின் வீரர்களாக சேர்ந்துள்ளனர். ஆனால், ஒரு காலத்தில் எதிரியாக கருதி போரிட்ட சிறிலங்கா இராணுவத்தில் எல்லோரும் போய்ச் சேர மாட்டார்கள். சிறிலங்கா படையினரின் மிலேச்சத்தனமான அடக்குமுறை காரணமாக, தாமாகவே புலிகள் அமைப்பில் சேர்ந்த போராளிகள் பலருள்ளனர். அவர்கள், சிறிலங்கா பேரினவாத அரசின் கோர முகத்தையும், அதன் அடக்குமுறைக் கருவியான இராணுவத்தையும் மிகச் சரியாக இனங் கண்டவர்கள்.

ஒரு காலத்தில், இலங்கை முழுவதும் ஒரே அரசியல் கட்சிகள் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தின. தமிழ்க் காங்கிரஸ் என்ற பிராந்தியக் கட்சி தோன்றிய காலத்திலும், அது "அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்" என்று தான் பெயரிட்டுக் கொண்டது. தமிழீழத் தமிழர்கள் என்பதை விட, அகில இலங்கைத் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாக கூறிக் கொண்டது. பிற்காலத்தில் வடக்கு, கிழக்கு தமிழர்களை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்திய தமிழரசுக் கட்சியின் தோற்றமும், அவர்களின் தமிழீழ கோரிக்கையும் ஈழப்போர் வரை செல்வாக்கு செலுத்தியது. கடந்த முப்பதாண்டு காலமாக, இடதுசாரிக் கட்சிகளை ஓரங் கட்டுவதிலே தான், தமிழ் தேசியக் கட்சிகள் குறியாக இருந்தன. அதற்கு அவர்கள் கூறிய காரணம், "தமிழ் தேசியக் கோட்பாடு புனிதமானது, அதற்கு இடதுசாரிகள் உடன்படுகிறார்கள் இல்லை." என்பது தான். "தமிழீழம் சாத்தியமா? இல்லையா?" என்பது குறித்து, யாழ்ப்பாணத்தில் பொதுக் கூட்டங்களில் இடதுசாரிகளுடன் விவாதங்கள் நடந்தன. இதற்கிடையில், தெற்கில் ரோகன விஜேவீர தலைமையில் குட்டி-பூர்ஷுவா இளைஞர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து சென்றனர். அவர்களது மார்க்சியமும்- சிங்கள தேசியவாதமும் கலந்த புதிய இயக்கமான ஜேவிபியில் தமிழ் மக்களுக்கு இடம் இருக்கவில்லை. தோல்வியுற்ற 1971 கிளர்ச்சியின் பின்னர், ஜேவிபியில் இருந்து பிரிந்து சென்ற சிலர் தமிழர் உரிமைப் பிரச்சினை குறித்து கவனம் எடுத்தனர். அவ்வாறு சென்றவர்களில் லயனல் போபகே போன்ற சிலரைக் குறிப்பிடலாம்.

1988 -1989 காலத்திய, ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சியும் தோல்வியடைந்த பின்னர், மேலும் சிலர் பிரிந்து சென்றனர். சுனந்த தேசப்பிரிய போன்ற ஊடகவியலாளர்கள் அத்தகையோரில் முக்கியமானவர்கள். லயனல் போபகே, சுனந்த தேசப்பிரிய போன்றோர், புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு சிறிலங்கா அரசையும், ஜேவிபி யையும் எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றனர். ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்த ஜேவிபி, பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளை கவர்வதற்காக, இனவாத அரசியல் பேசி வந்தது. மகிந்த ராஜபக்ச அதிகாரத்தை கைப்பற்றிய நாளில் இருந்து, ஜேவிபியின் தனித்துவமான இனவாத கொள்கைகளை நடைமுறைப் படுத்தினார். அதனால், ஜேவிபிக்கு ஆதரவளித்த இனவாத சிங்கள வாக்காளர்கள், ராஜபக்ச பக்கம் திரும்பி விட்டனர். விமல் வீரவன்ச தலைமையில் ஒரு குழு, ஜேவிபி யில் இருந்து பிரிந்து சென்று ஆளும் கட்சியுடன் இணைந்தது. அதற்கும் ராஜபக்சவின் சாணக்கியம் (சூழ்ச்சி) காரணம் என்று நம்பப் படுகின்றது. ஒரு காலத்தில், மூன்றாவது அரசியல் சக்தியாக கருதப்பட்ட ஜேவிபி, இன்று மிகவும் பலவீனமடைந்து காணப் படுகின்றது. அந்த நிலையில், அண்மையில் மேலும் ஒரு பிளவு. இந்த முறை கட்சி இரண்டாக உடைந்தது. மத்திய குழு உறுப்பினர்கள் இரண்டு பக்கமும் சம அளவில் பிரிந்து சென்றனர்.

நீண்ட காலமாக, ஜேவிபியின் வெளிநாட்டு தொடர்பாளராகவும், நிதி சேகரிப்புக்கு பொறுப்பாகவும் செயற்பட்டவர் பிரேம்குமார் குணரத்தினம். புலிகள் இயக்கத்தின் ஆயுத, நிதி விநியோகத்தை நெறிப் படுத்திய கேபி போன்று, ஜேவிபிக்கு குணரத்தினம் இருந்தார். இவர் ஒரு மேற்கிலங்கைத் தமிழர். சிங்கள மொழியில் கல்வி கற்றதால், தமிழ் எழுதத் தெரியாது. ஜேவிபி கிளர்ச்சிக் காலத்தில் திருகோணமலையில் செயற்பட்ட நேரம், சில தமிழ் தேசிய போராளிகளுடனும் தொடர்பு வைத்திருந்தார். இதனால், வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த புலி ஆதரவு அமைப்புகளுக்கும், குனரத்தினத்திற்கும் தொடர்பிருக்கலாம் என இலங்கை அரசு சந்தேகப் படுகின்றது. அதனை உறுதிப் படுத்தும் சான்றுகள் எதுவும் இல்லை. எனினும், குணரத்தினம் பற்றிய விபரங்கள், ஜேவிபி யில் மிக இரகசியமாக வைக்கப் பட்டிருந்தன. இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தை சொல்ல வேண்டும். ஜேவிபி, இரண்டு சமாந்தரமான அமைப்புகளாக செயற்படுகின்றது. ஒன்று, வெளிப்படையாக மக்கள் மத்தியில் வேலை செய்யும் உறுப்பினர்கள். இரண்டு, மத்திய குழு உறுப்பினர்களுக்கு கூட தெரியாமல் தலைமறைவாக இயங்கும் உறுப்பினர்கள். உண்மையில், தலைமறைவு உறுப்பினர்கள் தான் இயக்கத்தின் அச்சாணியாக விளங்குகின்றனர். 1971 ல் ஒரு தடவை, 1989 ல் மறு தடவை, ஜேவிபி இயக்கம் அரச படைகளினால் அழிக்கப் பட்டது. அப்போது அரச ஒடுக்குமுறைக்கு தப்பிப் பிழைத்த உறுப்பினர்களை ஒன்று சேர்ந்தது, இயக்கத்தை மீளக் கட்டி எழுப்பினார்கள்.

குணரத்தினம் தலைமையில் இரகசியமாக இயங்கிய அமைப்பினால் தான், மிகக் குறுகிய காலத்தினுள் அந்த சாதனையை நிறைவேற்றினார்கள். அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த குணரத்தினம், சில வருடங்களுக்கு முன்னர், சமாதான பேச்சுவார்த்தை நடந்த காலத்தில், தாயகம் திரும்பினார். அவரது விஜயம் இரகசியமாக வைக்கப் பட்டிருந்த போதிலும், அரசு எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டது. குணரட்ணத்தின் அண்மைய புகைப்படங்கள் எதுவும் இல்லாத நிலையில், அவரின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கிடையே, கிழக்கிலங்கையில் இருந்து கிடைத்த தகவல்கள், அரசாங்கத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து, கருணா குழுவினர் பிரிந்திருந்த நேரம் அது. பிரபாகரன் தலைமையிலான புலிகளினால், கருணாவின் கிளர்ச்சி ஒடுக்கப் பட்டது. இதனால் அரசியல் வாழ்வை விட்டு ஒதுங்கிய கருணா ஆதரவுப் போராளிகள், பணத் தேவைக்காக தம்மிடமிருந்த இயந்திரத் துப்பாக்கிகளை விற்று விட்டனர். அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளை வாங்குவதில், ஜேவிபி ஆர்வம் காட்டியுள்ளது. இந்தச் செய்தி காதுக்கெட்டியவுடன், அரச மட்டத்தில் கலக்கம் ஏற்பட்டது. தேசிய நீரோட்டத்தில் இணைந்து, பாராளுமன்ற தேர்தல்களில் பங்கெடுக்கும் ஜேவிபிக்கு ஆயுதங்கள் எதற்கு? எதிர்காலத்தில் அரசை கவிழ்ப்பதற்காக, இரகசியமாக திட்டம் தீட்டுகிறார்களா?

(இன்னும் வரும்)



மேலதிக தகவல்களுக்கு :
1.‘Military abducted Lalith, Kugan’
2.Love of Democracy and Securing Human Rights, Are these an Offence in Sri Lanka?
3.Former Tigers 'threatened' in north
4.'Ex-LTTE cadres are with us' Jana Aragala Group

Monday, April 18, 2011

தென்னிலங்கையில் கொலையுதிர் காலம்


[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 16)


"நாடே சுடுகாடாகியது!" 1988, 1989 ஆண்டுகளில் தென்னிலங்கையில் வாழும் பாக்கியம் பெற்றவர்கள், அதனை நேரில் அனுபவித்திருப்பார்கள். பெருந்தெருக்களில் வாகனங்களில் பயணம் செய்வோர், எங்காவது ஒரு இடத்தில், பிணத்தை எரித்து எஞ்சிய சாம்பலை காணாமல் போக முடியாது. நாட்டில் சுடலைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டு விட்டது போலும். அதனால் தெருக்கள் எல்லாம் தற்காலிக சுடலைகளாகிக் கொண்டிருந்தன.

ஜேவிபி இயக்க உறுப்பினர்கள், அல்லது ஆதரவாளர்கள் ஆகியோர், பாதுகாப்புப் படையினரால் வேள்வித்தீயில் பலி கொடுக்கப்பட்டனர். வேள்விக்கடாவின் கழுத்தில் 'டயர்' போட்டு எரிப்பது, அரச கொலைப் படைகளுக்கு பிடித்தமான விளையாட்டு. ஜேவிபியினர் அழிந்த பின்னரும், அந்தக் கதைகள் திகிலை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. அரசாங்கத்தை விமர்சித்த பத்திரிகையாளர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இராணுவ அதிகாரி ஒருவர்; "கழுத்தில் டயர் மாலை போடுவோம், ஜாக்கிரதை." என்று பயமுறுத்தினார்.

கொழும்புக்கு அருகில் ஓடும் களனி ஆற்றில், மக்கள் இறங்கிக் குளிக்க அஞ்சினார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு இளம்பெண்ணின் சடலம் மிதந்து கொண்டிருந்தது. ஜேவிபி சந்தேகநபர்களாக பிடிக்கப்படும் பெண்களை சித்திரவதை செய்து, அவர்களின் உயிரற்ற நிர்வாண உடல்களை நகர மத்தியில் போடுவார்கள். அன்றைய நாட்களில், இவற்றைக் காண நேரும் பொது மக்கள் பீதியுற்றனர்.

சில வருடங்களுக்குப் பின்னர், அந்த அட்டூழியங்கள் எல்லாம் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தப் பட்டன. யுஎன்பி அரசை தேர்தலில் தோற்கடிப்பதற்காக, சந்திரிகாவின் ஐக்கிய முன்னணி கட்சியினர் அந்தக் காட்சிகளை போஸ்டராக அச்சடித்து ஒட்டினார்கள். (மலினமான தேர்தல் பிரச்சார உத்தியை பெண்கள் அமைப்புகள் கண்டித்திருந்தன.) அது போன்றே சூரியகந்த எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியும், ஐக்கிய முன்னணி வெற்றியை உறுதி செய்திருந்தது.

சூரிய கந்த புதைகுழியில் கொன்று புதைக்கப் பட்டவர்கள், விடலைப் பருவத்து பாடசாலை மாணவர்கள். ஜேவிபி ஆதரவுத் தளமாக திகழ்ந்த பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் என்பதால் அந்த கொடூரமான தண்டனை. பல வருடங்களாக அவர்கள் "காணாமல் போனோர்" பட்டியலில் சேர்க்கப் பட்டிருந்தனர். தென்னிலங்கையில் அந்த இரண்டு வருடங்களில் மட்டும் குறைந்தது இருபதாயிரம் பேராவது காணாமல் போயுள்ளனர். அவர்களும் எங்காவது இரகசிய புதைகுழிகளில் கொன்று புதைக்கப் பட்டிருக்கலாம். இலங்கையின் வட பகுதியிலும் இளைஞர்கள் காணாமல் போவதும், மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப் படுவதும் நடந்துள்ளன. ஆரம்பத்தில் சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில் தனித்தனியாக இயங்கி வந்த காணாமல் போனோர் அமைப்புகள், தற்போது ஐக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றாக செயற்படுகின்றன. "காணாமல் போவதற்கு எதிரான சர்வதேச கமிட்டி" யின் ஆதரவும் கிட்டியுள்ளது.

அன்றைய காலம், காணாமல் போகச் செய்வதிலும், கொலை செய்வதிலும் தேர்ச்சி பெற்ற கொலைப் படை ஒன்று இயங்கியது. அது தன்னை "பச்சைப் புலிகள்" என்று அழைத்துக் கொண்டது. அன்றைய ஆளும் கட்சியான யுன்பியின் வர்ணம் பச்சை என்பது குறிப்பிடத் தக்கது. அரச பாதுகாப்புப் படைகளை சேர்ந்தவர்களே, "பச்சைப் புலிகள்" என்ற பெயரில் அவதாரம் எடுத்திருந்தனர். அது ஒரு சட்டத்திற்கு புறம்பான, ஜனாதிபதியையும், பாதுகாப்பு அமைச்சரையும் தவிர வேறு யாருக்கும் பதில் கூற கடமைப் பட்டிராத அமைப்பு. சீருடை அணியாமல் சிவில் உடையுடன், இலக்கத் தகடு இல்லாத வாகனங்களில் திரிவார்கள். அவர்கள் யாரைக் கடத்திச் சென்றாலும், அல்லது கொலை செய்தாலும், பழி முழுவதும் "இனந்தெரியாதோர்" தலையில் விழுந்தது. அரச பாதுகாப்புப் படைகள் பொறுப்பில் இருந்து தப்பிக் கொண்டன.

ஜேவிபி ஒன்றும் புனிதமான இயக்கமல்ல. போலீஸ்காரர்களை இலக்கு வைத்து தாக்கி அழித்ததை விட, கொல்லப்பட்ட "துரோகிகளே" அதிகம். ஜேவிபி அகராதி படி, யாரும் துரோகி ஆகலாம். ஆளும் கட்சியான யுஎன்பி உறுப்பினர்கள், இந்திய-இலங்கை ஒப்பந்த ஆதரவாளர்கள், போலிசுக்கு காட்டிக் கொடுப்பவர்கள், மாற்றுக் கருத்தாளர்கள் அனைவரும் துரோகிகளாக அடையாளம் காணப்பட்டனர். ஜேவிபி ஆதரவாளர்கள், துரோகிகளுக்கு மரண தண்டனை வழங்குவதை நியாயம் என்று வாதாடினார்கள்.

இயக்கத்தை விட்டு பிரிந்து சென்றவர்களும் துரோகிகளாக கருதப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இதனால் ஜேவிபியுடன் முரண்பட்ட குழுவொன்று, அரசுடன் கூட்டுச் சேர்ந்தது. ஜேவிபி உறுப்பினர்களையும், மறைவிடங்களையும், போலிசுக்கு காட்டிக் கொடுத்தார்கள். "ஜேவிபி தான் எமது முதலாவது எதிரி. அரசு இரண்டாவது எதிரி. ஜேவிபி பாசிசத்தை அழிப்பது அவசரக் கடமை." என்று தமது செயலுக்கு நியாயம் கற்பித்தனர். ஜேவிபியில் இருந்த பிரிந்த எல்லோரும் அரசுடன் கூட்டுச் சேரவில்லை. சில ஆளுமையுள்ள நபர்கள் பத்திரிகைத் துறையில் ஈடுபட்டனர். இலங்கை அரசையும், ஜேவிபியையும் விமர்சித்து எழுதி வந்தனர்.

ஜேவிபி பிரகடனம் செய்த "துரோகிகள் பட்டியல்" நீண்டு கொண்டே சென்றது, அதன் அஸ்தமனத்திற்கு காரணமாயிற்று. அரசை விட ஜேவிபி தான், நாடளாவிய கொலைக் கலாச்சாரத்தால் அதிகம் பாதிக்கப் பட்டது. இறுதியில் ஜேவிபி உறுப்பினர்களும், அவர்களின் உறவினர்களையும் தவிர மற்றவர்களின் ஆதரவை இழக்க வேண்டியேற்பட்டது. குறிப்பாக இராணுவத்தை பகைத்துக் கொண்டமை, மனிதப் பேரழிவுக்கான பாதையை திறந்து விட்டது. சிறிலங்கா அரசு, பாதுகாப்புப் படைகள் முழுவதையும் ஜேவிபியுடன் போரிட பயன்படுத்தியது. இதனால், முன்னர் இராணுவத்தில் சேர்ந்திருந்த ஜேவிபி உறுப்பினர்களும் எதிரிகளானார்கள்.

"சேவையில் உள்ள ஜேவிபி உறுப்பினர்கள், உடனடியாக இராணுவத்தை விட்டு விலகி எம்முடன் இணைந்து கொள்ள வேண்டும்," என்று ஜேவிபி அறிவித்ததாக அன்று கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. "இராணுவத்தை விட்டு விலகாதவர்கள், எதிரிகளாக கருதப் படுவார்கள். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கொலை செய்யப் படுவார்கள்." இவ்வாறு ஜேவிபி அறிவித்திருந்தது. அப்படியான வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகள், "தேசப்பக்த விடுதலை முன்னணி" பெயரில் ஒட்டப் பட்டிருந்தன.

உண்மையிலேயே பல இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் கொலை செய்யப் பட்டனர். அதற்கு பழி வாங்கும் முகமாக, ஜேவிபி யை சேர்ந்தோரின் குடும்பத்தவர்கள் கொல்லப் பட்டனர். அரச படைகளால் படுகொலைக்கு ஆளாவோர் ஜேவிபி உறுப்பினர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. துரதிர்ஷ்டவசமாக ஜேவிபி காரர்களை நண்பர்களாக கொண்டிருந்தவர்களும் கொல்லப்பட்டனர். சிலநேரம் தனது நண்பன் ஒரு ஜேவிபி உறுப்பினர் என்று அவர்களே அறிந்திருக்க மாட்டார்கள். அந்தக் காலத்தில் நடந்த கொடூரங்கள் வார்த்தைகளால் வடிக்க முடியாதவை. அப்படியான சம்பவங்கள் நடந்ததாக நிரூபிக்கவும் முடியாது.

எனக்குத் தெரிந்த கதை ஒன்று இரத்தத்தை உறைய வைத்தது. தமது பிள்ளை காணாமல் போனதால் கவலையுடன் தேடிக் களைத்த குடும்பத்தினரிடம், ஒரு குழு ஆயுதபாணி இளைஞர்கள் தொடர்பு கொண்டனர். காணாமல்போன நபர் தம்மிடம் பத்திரமாக இருப்பதாகவும், கூட்டி வருவதாகவும் தெரிவித்தனர். அதனை கொண்டாடுவதற்காக இறைச்சி கொண்டு வந்து சமைக்க கொடுத்தனர். எல்லோரும் அமர்ந்து விருந்து சாப்பிட்ட முடிந்த பின்னர், அந்த அதிர்ச்சியான தகவலை தெரிவித்தனர். "நீங்கள் இப்போது சாப்பிட்டது உங்கள் மகனது இறைச்சி!" அந்தக் கதை வதந்தியாகவும் இருக்கலாம். ஆனால் மக்கள் எத்தகைய துன்பங்களை அனுபவித்தனர் என்பதற்கு வேறு உதாரணம் தேவையில்லை.

ஜேவிபி, "இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்யப் போவதாக" அறிவித்தது, அரசின் சூழ்ச்சி என்று சிலர் கூறுகிறார்கள். எது உண்மை, எது பொய் என்பது தெரியாமலே போகலாம். ஜேவிபியின் தலைவர்கள், உறுப்பினர்கள் பெருமளவில் கொல்லப்பட்டு விட்டனர். மேலும் ஜேவிபியுடன் தொடர்புடைய குடும்பங்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள் என்று பல நிராயுதபாணிகளும் கொல்லப்பட்டனர். இறுதிப் போரில் கொல்லப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை எழுபதாயிரமாக இருக்கலாம். ஜேவிபி பிற்போக்குவாத தலைமையின் தவறுகள் அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றதை மறுக்க முடியாது. அதே நேரம், இடது-தேசியவாத எழுச்சி கூட தனது நலன்களுக்கு விரோதமானது என்று சர்வதேச சமூகம் கருதியது. உழைக்கும் மக்களின் மனக்குறைகளை கணக்கில் எடுக்காததால், மக்கள் மீண்டும் மீண்டும் பிற்போக்கு சக்திகளையே நாடிச் செல்கின்றனர்.

யுஎன்பி ஆட்சியில் நடந்த படுகொலைகளுக்காகவும், மனித உரிமை மீறல்களுக்காகவும், அடுத்து வந்த பொதுத் தேர்தல்களில் அந்தக் கட்சி தோல்வியைத் தழுவியது. இருப்பினும் தேர்தலில் வென்ற எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்ததால் யாருக்கும் நீதி கிடைக்கவில்லை. யுஎன்பி அரசின் கொலைக் குழுக்கள் செய்த படுகொலைகளை பிரச்சாரம் செய்து, ஆட்சியைப் பிடித்த ஐக்கிய முன்னணி அரசு, எந்த விசாரணையும் செய்யவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், பாராளுமன்ற பாதைக்கு திரும்பிய மிதவாத ஜேவிபி கூட எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. தேர்தலில் கட்சிகள் மாறினாலும், அரசு இயந்திரம் ஒன்று தான். அரசுக்கு எதிராக கிளம்பும் சக்திகள், சிறுபான்மை இனமாக இருந்தாலும், சொந்த இனமாக இருந்தாலும், ஈவிரக்கமின்றி அடக்கப்பட்டு வந்துள்ளது. இதிலிருந்து பாடம் படிக்காதவர்கள், வரலாற்றை மறுபடியும் உற்பத்தி செய்கின்றனர்.

(தொடரும்...)

தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
15.சிங்கள- தலித் ஜனாதிபதியின் திகில் ராஜாங்கம்
14. இலங்கையை உலுக்கிய "சேகுவேரா போராட்டம்"
13.தென்னிலங்கை கிளர்ச்சியில் சிங்கள தலித்- படுகொலை
12.ஈழ அகதிகளுக்கு தஞ்சம் அளித்த சிங்கள அரசு!
11.யாழ் குடாநாடெங்கும் ஆயுதப் புதையல்கள்
10.ஈழத் தமிழருக்கு இந்தியர்களும் அடக்குமுறையாளர்கள்
9.அந்நிய இராணுவத்தின் முற்றுகைக்குள் யாழ் குடாநாடு
8.ஆக்கிரமிப்புப் படையாக மாறிய அமைதிப் படை
7.ஆயுதக் குழுக்களுடன் அமைதி காத்த இந்திய இராணுவம்
6.இந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்
5.யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய இந்தியப் படைகள்
4.சென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்
3.தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை
2.ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா
1.இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்