Tuesday, March 01, 2011

இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்

[ஓர் ஈழ அகதியின் அனுபவத் தொடர்]
யாழ்நகரில் இருந்து சில மைல் தூர தொலைவில் உள்ள ஒரு மீனவர் கிராமம். நடுநிசியைக் கிழித்துக் கொண்டு கரையை விட்டு அகல்கின்றது ஒரு மீன்பிடிப் படகு. படகோட்டிகள் மட்டுமே வழக்கமாக கடற்தொழில் ஈடுபடுபடுவர்கள். சுமார் இருபது பேரளவில் இருந்த பிற பயணிகள் அனைவரும், இந்தியாவுக்கு தப்பிச் செல்லும் அகதிகள்.

1987 ம் ஆண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு சில மாதங்கள் முந்திய காலகட்டம். பருத்தித்துறை முகாமில் இருந்து புறபட்ட இலங்கை இராணுவம் வடமராட்சிப் பிரதேசத்தை முற்றாக கைப்பற்றி இருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஏனைய யாழ் குடாநாட்டின் பகுதிகளும் இராணுவம் வசம் வந்து விடும் என்ற அச்சம் நிலவியது. வடமராட்சியை தாண்டி இராணுவம் வராது என்று சிலர் அடித்துக் கூறினார்கள். இருப்பினும் போர் தீவிரமடைவதற்கு முன்னம், இந்தியா சென்று விடத் துடித்தார்கள் படகில் இருந்த அகதிகள்.

இதற்கு முன்னம் கிளம்பிய அகதிகளின் படகுகளை நோக்கி இலங்கை கடற்படையினர் சுட்டதாகவும், அகப்பட்ட அகதிகளை வெட்டியதாகவும் வதந்திகள் உலாவின. இருப்பினும் உயிரைக் கையில் பிடித்த படி, அபாயகரமான கடற்பயணத்திற்கு தயாரானவர்கள். அகதிகளாக வெளியேறத் துடித்தவர்கள் பெரும்பாலும், யாழ் குடாநாட்டின் மேற்குப் பகுதியை சேர்ந்தவர்கள். மீனவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் முதல், மத்திய தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் வரை பல தரப்பட்டவர்கள். வசதி குறைந்தவர்கள், போர்ச் சூழலில் இருந்து தப்பி இந்திய அகதி முகாமில் பாதுகாப்பாக வாழலாம் என நம்பினார்கள். வசதி படைத்தவர்கள், இந்தியாவில் இருந்து இலகுவாக வெளிநாட்டுக்குப் போகலாம், அல்லது படிப்பைத் தொடரலாம் என நம்பியவர்கள்.

அகதியாக சென்றாலும், சில காலம் சமாளிப்பதற்கு பணம் வைத்திருக்க வேண்டிய தேவையை எல்லோரும் உணர்ந்திருந்தனர். புகலிடம் கோருவது இந்தியாவில் அல்லவா? அதனால் வசதிக் குறைபாடுகளையும் முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தனர். இந்தியாவில் அப்போது ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தார். தாராளப் பொருளாதாரக் கொள்கை எட்டிப் பார்க்காத காலம் அது. இந்தியர்கள் உள் நாட்டு உற்பத்திகளையே பயன்படுத்த வேண்டிய நிலை. அதற்கு மாறாக, இலங்கையில் ஏற்கனவே சந்தை திறந்து விடப்பட்டிருந்தது. ஜப்பானியப் பொருட்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. இலங்கையில் சாதாரணமாகக் கிடைக்கும் ஜப்பானிய வீடியோ பிளேயர் சாதனத்தை இந்தியா கொண்டு சென்று இரு மடங்கு இலாபத்திற்கு விற்க முடிந்தது. இதனால் சில வசதியான அகதிகள், தம்முடன் ஜே.வி.சி. வீடியோ பிளேயர் எடுத்துச் சென்றனர். வசதியற்றவர்கள் ஆயத்த ஆடை உற்பத்திக்கு அவசியமான, YKK ஜிப் வாங்கிச் சென்றனர். இறுக்கமான இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக, மேற்குறிப்பிட்ட பொருட்களுக்கு இந்தியாவில் அதிக கிராக்கி இருந்தது. இவற்றை விட இலங்கை ரூபாய் தாள்களை மட்டும் எடுத்துச் சென்றவர்கள், அவற்றை மாற்றுவதற்கு சிரமப் பட்டனர். மாற்றினாலும், நாணயமாற்று விகிதம் நியாயமானதாக இருக்கவில்லை.

அகதிகளை ஏற்றிச் சென்ற படகோட்டிகளும், கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டதை அவர்களது கதைகளில் இருந்து அறியக் கூடியதாக இருந்தது. படகில் இருந்த பெரிய பொதிகள் அவர்களுடையதாகவே இருந்தன. அகதிகளை ஏற்றிச் செல்வதும் அவர்களுக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தரும் தொழிலாக இருந்தது. ஒரு அகதி, 600 - 1000 இலங்கை ரூபாய்கள் கொடுக்கத் தயாராக இருந்தால் மட்டுமே, அக்கரைக்கு ஏற்றிச் சென்றனர். அதே நேரம், சில அகதிகள் இந்தியாவில் இருந்து திரும்பி வந்து கொண்டுமிருந்தனர். திரும்பி வருவதற்கு 300 -400 ரூபாய்கள் மட்டுமே. திரும்பி வருவதற்கு பணம் இல்லா விட்டால், கடன் சொல்லலாம். ஆனால் இந்தியா போவதற்கு மட்டும், பணமில்லாத யாரையும் ஏற்றிச் சென்றதாக நான் அறியவில்லை.

நிலா வெளிச்சம் கூட இல்லாத கும்மிருட்டு. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடலைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை. கடலும் எப்போதும் அமைதியாக இருப்பதில்லை. கடல் கொந்தளிப்பும், ஆளுயர எழும் அலைகளும் சிறிய படகை கவித்து விடும். நாங்கள் சென்ற படகு ஆழ்கடலில் பயணம் செய்வதற்கு உகந்ததா, அன்றில் திருத்த வேலைகள் செய்யப்பட வேண்டியிருந்ததா தெரியவில்லை. திடீரென படகுக்குள் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. படகில் எங்கோ ஓட்டை, அல்லது வெடிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். எம்மைச் சுற்றி கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. மெல்ல மெல்ல ஊறிக் கொண்டிருந்த கடல் நீர், முழங்காலளவு மட்டத்திற்கு வந்து விட்டது. படகில் இருந்த இளம் வயது ஆண்கள் வாளிகளால் தண்ணீரை அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தனர். எவ்வளவு தண்ணீரை வாரி இறைத்தாலும், நீர் மட்டம் குறைவதாகத் தெரியவில்லை.

சுமார் மூன்று, நான்கு மணி நேரமாக கடலோடு போராடிக் கொண்டிருந்தோம். இது போன்ற அனுபவங்களைப் பெற்ற படகோட்டிகளும் அன்று நம்பிக்கை இழந்து விட்டார்கள். உதவிக்கு யாரும் வராவிட்டால், படகு மூழ்கிடும் அபாயம் காணப்பட்டது. பயணிகள் எல்லோரும் இஷ்ட தெய்வங்களை வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். நாங்கள் இன்னும் இலங்கை கடல் எல்லைக்குள்ளே சுற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதால் மேலதிக கிலி பிடித்தாட்டியது. ஒரு வேளை இலங்கை கடற்படை எம்மை கண்டு விட்டால், முதலில் சுட்டு விட்டுத் தான் விசாரிப்பார்கள். வெகு தூரத்தில் இலங்கைக் கடற்படைக் கப்பல்களின் வெளிச்சம் தெரிந்தது. இருப்பினும், தூரத்தில் இருட்டில் தத்தளிக்கும் சிறிய படகை அவர்களால் இலகுவாக அடையாளம் கண்டு கொள்ள முடியாது, என்று படகோட்டிகள் ஆறுதல் சொன்னார்கள்.

படகோட்டிகளும், பயணிகளும் நம்பிக்கை இழந்து கொண்டிருந்தார்கள். அன்று கடலில் ஜலசமாதியாகி விடுவோம் என்றே பலரும் நினைத்தார்கள். தண்ணீரை அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தவர்கள் மட்டும் விடா முயற்சியுடன் போராடிக் கொண்டிருந்தார்கள். இதற்கிடையே பொழுது விடிந்து விட்டது. ஒருவாறு இந்திய கடல் எல்லையை அண்மித்து விட்டோம். தூரத்தில் இந்திய மீனவர்களின் மிகப்பெரிய ட்ரோலர் படகுகள் தென்பட்டன. தூரத்தில் எமது சைகையை கண்ணுற்று ஒரு இந்தியப் படகு எம்மருகே வந்தது. இந்திய மீனவர்கள் எம்மை தமது படகில் ஏற்றிக் கொண்டனர். நாம் வந்த படகை ஒட்டி வந்த படகோட்டிகள், அதனை நடுக்கடலில் கைவிட வேண்டியேற்பட்டது. படகில் இருந்த தமிழக மீனவர்கள், தாம் பிடித்து வைத்திருந்த இறால்களை புகை போக்கியில் சுட்டு உண்ணத் தந்தார்கள். சில மணி நேரத்தில் இராமேஸ்வரம் கரையில் கொண்டு சென்று இறக்கி விட்டார்கள்.

இராமேஸ்வரம் கடற்கரையில் இறக்கியவுடன், அகதிகளை பதியும் காரியாலயம் உள்ள திசையைக் காட்டி நடக்கச் சொன்னார்கள். இலங்கையில் இருந்து எடுத்து வந்த உடமையை கையில் பிடித்துக் கொண்டு, வெறுங்காலுடன் கடற்கரை மணலில் ஓட்டமும், நடையுமாக சென்றோம். சில நிமிடங்களில், சேற்று மணலில் காலைப் புதைப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. கீழே குனிந்து பார்த்தால், பாதங்களில் மனித மலம் அப்பிக் கொண்டிருந்தது. அந்தக் கடற்கரையில் எந்தப் பக்கம் கால் வைத்தாலும், மலத்தில் மிதிக்காமல் போக முடியவில்லை. சுமார் இரண்டு கி.மி. தூரமாவது நடந்து சென்று, அகதிகளைப் பதியும் அலுவலகத்தினுள் நுழைந்த பின்னர் தான் நிம்மதிப் பெருமூச்சு வந்தது. அங்கிருந்த அதிகாரிகள் முதலில் எமது பெயர், விபரங்களை பதியும் வேலையில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருந்தனர். இலங்கைக் கடற்கரையில் இருந்து கிளம்பிய நேரம் முதல் எதுவும் சாப்பிடவில்லை. கடலில் போராடிக் கொண்டிருந்த நேரம் மறந்திருந்த பசி இப்போது வயிற்றைக் கிள்ளியது.

இராமேஸ்வரத்தில் யாத்திரீகர் மடம் ஒன்றில் தங்க வைத்தார்கள். அங்கேயே குளிக்கும் வசதியும், உணவும் கிடைத்தது. முதல் முழுவதும் கண் விழித்து பாக்கு நீரிணையை கடந்த களைப்பு, அன்றிரவு நிம்மதியாக உறங்க முடிந்தது. இருப்பினும் ஊரை விட்டு, உறவுகளை விட்டு வெகு தூரம் வந்து விட்ட உணர்வு, நெஞ்சை வருடியது. எல்லோர் மனதிலும் இனம் புரியாத சோகம் கவிந்து கொண்டிருந்தது. மறு பக்கம், இனி வரும் நாட்களை உயிரச்சம் இன்றி நிம்மதியாக கழிக்கலாம் என்றும் ஆறுதல் கூறிக் கொண்டனர். நாம் தங்கியிருந்த மடத்தில், வேறு படகுகளில் வந்த அகதிகளும் தங்கியிருந்தனர். எல்லோரையும் நாளை ரயிலில் ஏற்றி மண்டபம் முகாமுக்கு அனுப்புவார்கள் என்று பேசிக் கொண்டனர். மண்டபம் முகாமில் வைத்து தான், தமிழ் நாட்டில் எந்த மூலையில் குடியிருத்துவது என்று தீர்மானிக்கப்படும். ஒரே குடும்பமாக பதிந்து கொண்டவர்களை தவிர, பிறரை வெவ்வேறு இடங்களுக்கு பிரித்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

ராமேஸ்வரம் ரயில் நிலையம். மண்டபம் செல்லவிருக்கும் அகதிகள் அனைவரையும் ரயிலில் ஏற்றினார்கள். குறைந்தது ஒரு பெட்டியிலாவது இராமேஸ்வரத்தில் என்னோடு ஒன்றாக தங்கியிருந்த அகதிகள் ஏறிக்கொண்டனர். ரயில் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் மற்ற பெட்டிகளிலும் ஈழத்து அகதிகள் இருப்பதை தெரிந்து கொண்டோம். இராமேஸ்வரம் தீவு பெரியது என்பதால், ஒரு முனையில் இருந்து மறு முனை செல்வதற்குள் பல தரிப்பிடங்களில் ரயில் நின்றது. தங்கச்சி மடம் என்ற ரயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரத்தில் சிக்னல் கிடைக்காததால் ரயில் குறைந்தது ஒரு மணி நேரமாவது தாமதித்து. சில பயணிகள் வெளியே இறங்கி தண்டவாளத்திற்கு அருகில் ஓய்வெடுத்தார்கள். திடீரென சில இளைஞர்கள் இன்னொரு பெட்டியில் இருந்து எமது பெட்டிக்கு வந்து, எம்மோடு பேச்சுக் கொடுத்தார்கள். அவர்களைப் பார்த்தால், நீண்ட காலமாக இந்தியாவில் வாழும் ஈழத்து இளைஞர்கள் போலத் தோன்றியது. "நீங்கள் புதிதாக வந்த அகதிகளா? உங்கள் ஊரில் இப்போது என்ன நடக்கிறது?" சாதாரண சுகம் விசாரிப்புகளை தாண்டி, அரசியல் கேள்விகள் எழுந்தவுடன் எமது மனதுக்குள் எச்சரிக்கை மணி அடித்தது. யார் இவர்கள்? இவர்களுக்கு என்ன வேண்டும்?

(தொடரும்)

No comments: