Monday, March 14, 2011

யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய இந்தியப் படைகள்

[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்]
(பகுதி - 5)

மந்தமாருதம் வீசும் பிற்பகல் வேளை. நண்பர்களுடன் வயலோரம் பல்சுவைக் கதைகள் பேசிக் கொண்டிருந்த நேரம். மேற்குத் திசையில் இருந்து இரண்டு மிராஜ் விமானங்கள் மேகத்தைக் கிழித்துக் கொண்டு பறந்து வந்தன. உருவத்தையும், வேகத்தையும் பார்த்தால், அவை சிறிலங்கா விமானப் படைக்கு சொந்தமானதாக இருக்க வாய்ப்பில்லை. நிச்சயமாக வேற்று நாட்டு விமானங்கள் தான். ஏதோ ஒரு வல்லரசு நாடு, இலங்கையை கண்காணிக்கின்றது என நினைத்தோம். சில நிமிடங்களில் விமானத்தில் இருந்து பொதிகள் வீசப்பட்டன. தூரத்தில் என்ன பொதிகள் என்று தெரியவில்லை. குண்டுகளாக இருக்குமோ? அந்நிய படையெடுப்பா? ஆனால் விமானங்கள் மறைந்து அரை மனித்தியாலமானாலும் குண்டு ஏதும் வெடித்த சத்தம் கேட்கவில்லை. நாம் நின்ற இடத்தில் இருந்து பத்து மைல் தூரத்தில், சிறிலங்கா இராணுவம் நிலைகொண்டிருந்தது. சில வாரங்களுக்கு முன்னர் தான், அகோரமான ஷெல் வீச்சுடன் முன்னேறிக் கொண்டிருந்தது. இருப்பினும், நாட்கணக்காக யுத்தம் நடக்கும் அறிகுறியே இல்லை. என்ன நடக்கிறது? திடீர் அமைதிக்கு காரணம் என்ன?

இந்திய, இலங்கை அரசுகளுக்கு நடுவில் திரை மறைவில் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்ததும், அதனால் வடமராட்சி இராணுவ நடவடிக்கை இடைநிறுத்தப் பட்டதும் செய்திகளாக கசிய ஆரம்பித்தன. அப்போதெல்லாம், யாழ்ப்பாண மக்கள் இந்திய அரசின் தூர்தர்ஷன் வானொலியை செவி மடுப்பது வழக்கம். இலங்கை தேசிய வானொலி செய்தியை யாரும் நம்புவதில்லை. செய்தி சேகரிக்கும் "லங்கா புவத்" நிறுவனத்தை, "லங்கா பொறு" (சிங்களத்தில்: லங்கா பொய்) என்று கேலி செய்வது வழக்கம். இலங்கை வானொலி மறைக்கும் செய்திகளை இந்திய வானொலி தெரிவித்துக் கொண்டிருந்தது. ஒரு காலத்தில், போராளிக் குழுக்கள் கொடுக்கும் செய்திகளையும் ஒலிபரப்பியது. இன்னும் சில மாதங்களில், இந்த நிலைமை தலைகீழாக மாறப் போகின்றது.

தூர் தர்ஷன் செய்தியின் பிரகாரம், "யாழ் குடாநாடு இராணுவ முற்றுகைக்கு உள்ளாகியிருந்தது. சிறிலங்கா அரசின் பொருளாதாரத் தடை காரணமாக உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கியிருந்தனர். நிலைமை மோசமாக இருந்தது." இராணுவ முற்றுகை, பொருளாதாரத் தடை, உணவுத் தட்டுப்பாடு, எதுவும் அன்று மக்களை பட்டினிச் சாவுக்கு தள்ளுமளவு மோசமாக இருக்கவில்லை. ஆனையிறவு ஊடான வணிகப் போக்குவரத்து தடைப்படவில்லை. மின்சாரம் தடையின்றி வந்து கொண்டிருந்தது. வலிகாமம் வடக்கு, வடமராட்சிப் பகுதிகளில் மட்டும் இராணுவ நடவடிக்கை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இருப்பினும் கட்டுப்படுத்த முடியாத மனிதப் பேரவலம் என்று கூற முடியாது. இந்தியா அவ்வாறான செய்திகள் மூலம் உள்நாட்டு, சர்வதேச அனுதாபத்தை ஈழத்தின் மீது திருப்பியது. அல்லலுறும் ஈழத் தமிழருக்கு உதவுவது, தனது தார்மீகக் கடமை என்று இந்திய அரசு கூறியது.

இந்திய செஞ்சிலுவை சங்கம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவதற்கென நிவாரணப் பொருட்களை சேகரித்தது. இராமேஸ்வரத்தில் இருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு கிளம்பிய படகுகள் இலங்கை கடல் எல்லையை அடைந்தன. இந்திய-இலங்கை கடல் எல்லையில் வைத்து இடைமறித்த சிறிலங்கா கடற்படை, நிவாரணக் கப்பல்களை மேற்கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கவில்லை. "இந்தியாவில் அன்றாட உணவுக்கு வழியற்ற ஏழைகளுக்கு கொண்டு சென்று கொடுங்கள்." திமிராக பதிலளித்தார் கடற்படைத் தளபதி. வேறு வழியின்றி, நிவாரணக் கப்பல்கள் இந்தியாவை நோக்கி திரும்பிச் சென்றன. அடுத்த நாள், அதே நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து நான்கு மிராஜ் விமானங்கள் கிளம்பின. இம்முறை யாழ் குடாநாட்டின் மீது விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் வீசுவதை, சிறிலங்கா இராணுவத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எதிர்பாராத விதமாக, இலங்கை அரசை அடிபணிய வைக்க, அந்த ஒரு நடவடிக்கையே போதுமானதாக இருந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு அன்றே வித்திடப்பட்டது.


இந்திய- இலங்கை ஒப்பந்தப் பிரகாரம், வட-கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பை இந்திய அமைதிப் படை பொறுப்பேற்றது. பலாலி விமானப் படைத் தளத்தில் இந்திய இராணுவம் வந்திறங்கியது. அவர்கள் யாழ் குடாநாட்டினுள் போக முடியவில்லை. அங்கே ஒரு பிரச்சினை இருந்தது. இராணுவ முகாம்களும், போரில் கைப்பற்றிய சிறிய பிரதேசங்கள், ஆகியனவே சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. குடா நாட்டின் பிற பகுதிகளை விடுதலைப் புலிகள், தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். அவர்கள் இந்திய இராணுவத்தை வெளியேற அனுமதிக்கவில்லை. இந்தியா சிறிலங்கா அரசுடன் மட்டுமே ஒப்பந்தம் போட்டது, தங்களோடு அல்ல என்று வாதாடினார்கள். அதை விட, ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்ட நேரம், தலைவர் பிரபாகரன் இந்தியாவில் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டிருந்தார். தமது தலைவரை விடுதலை செய்தால் மட்டுமே, இந்தியப் படைகளை அனுமதிப்போம் என்றனர்.

புலிகள் பலாலி முகாமின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அறிவித்தனர். மினிவான் அனுப்பி ஊர் ஊராக மக்களை திரட்டி அழைத்துச் சென்றனர். அன்றிருந்த முறுகல் நிலை மக்கள் மத்தியில் பதற்றத்தையும் தோற்றுவித்தது. புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையில் சண்டை மூளுமோ என்று மக்கள் அஞ்சினார்கள். இருந்தாலும், புலிகளின் அழைப்பை ஏற்று பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சென்றனர். பெருமளவு இளம்பெண்களும் சென்றிருந்தமை குறிப்பிடத் தக்கது. ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் நடந்த உரையாடல்களில், பலர் இந்திய படையினரை விடுப்புப் பார்க்க வந்திருந்தமை புலனானது. குறிப்பாக இளம் பெண்கள் வட இந்திய படைவீரர்களின் அழகையும், உயரத்தையும் சிலாகித்துப் பேசினார்கள்.

முற்றுகை நீண்ட காலம் நீடிக்கவில்லை. இந்திய அரசு பிரபாகரனை விடுதலை செய்ததும் முற்றுகை விலத்திக் கொள்ளப்பட்டது. இந்திய படையினர் டிரக், ஜீப் வண்டிகளில் சிறிய முகாம்களுக்கும் சென்றனர். இந்திய இராணுவம் தனக்கென முகாம் அமைக்கவில்லை. ஏற்கனவே இருந்த இலங்கை இராணுவ முகாம்களில் அரைவாசி இடத்தை பங்கு போட்டது. பின்வரும் காலங்களில், மிகப்பெரிய பலாலி முகாம் தவிர பிற முகாம்களில் இருந்த சிங்களப் படையினர் வெளியேறினார்கள். சுருங்கக் கூறின், ஒரு காலத்தில் சிறிலங்கா இராணுவ முகாம்களாக இருந்தவை, தற்போது இந்திய இராணுவ முகாம்களாயின. ஈழப்போர் ஆரம்பித்த காலத்தில் சிறிலங்கா படையினர் ஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாமுக்கு ரோந்து செல்வது போல, இந்தியப் படையினரும் செய்தனர்.

இந்தியப் படைகள் சென்றவிடமெல்லாம், அவர்களைக் காண வீதிகளில் மக்கள் குழுமினார்கள். ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பேச்சுக் கொடுக்க விரும்பினார்கள். கடைக்காரர்கள் இலவச குளிர்பானம் அருந்தக் கொடுத்தனர். இந்திய அமைதிப் படையில் தமிழர்கள் மிக அருமையாகவே இருந்தனர். ஒரு சில மலையாளிகளும் தெலுங்கர்களும் தமிழ் பேசினார்கள். பிற மாநிலங்களை சேர்ந்த படையினரில் ஒரு சில ஆங்கிலம் தெரிந்தவர்களை தவிர, மற்றவர்களுக்கு மொழிப் பிரச்சினை ஒரு தடையாகவிருந்தது. அத்தகைய படைவீரர்களை கொண்ட இந்திய இராணுவம், சிங்கள இராணுவம் போன்று தமிழ் மக்களிடம் அந்நியப் பட்டு நின்றது. இருந்தாலும், இந்திய இராணுவத்தின் வருகையினால், தமிழ் மக்கள் தமக்கு விடிவு காலம் வந்து விட்டதாகவே நம்பினார்கள்.

சிங்கள பேரினவாத அரசின் அடக்குமுறையில் இருந்து காப்பாற்றுவதற்காக, இந்திய இராணுவத்தை அனுப்பி உதவும் என்று பல தமிழர்கள் நம்பினார்கள். பாமரர் முதல் படித்தவர் வரை அந்த நம்பிக்கை காணப்பட்டது. ஈழத்தமிழர்களில் பெரும்பான்மையானோர் இந்துக்கள் என்பதாலும், தென்னிந்தியாவுடனான கலாச்சார தொடர்பாலும், பலர் இந்தியாவை தமது தாயகமாக கருதினார்கள். தென்னிந்தியாவிலும் தமிழர்கள் வாழ்வதாலும், பெரும்பான்மை இந்தியர்கள் இந்துக்கள் என்பதாலும், இந்திய அரசு தம்மை கைவிடாது என்று நம்பினார்கள். அன்று தமிழகத்தில் இருந்த ஈழ ஆதரவு கட்சிகள், இந்தியா இராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழரை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக் கொண்டிருந்தனர். "அகில உலக தமிழினத் தலைவர்" கருணாநிதி முதல், "தூய தமிழ் தேசியவாதி" நெடுமாறன் ரை அவ்வாறு குரல் கொடுத்தவர்கள் தாம். இது போன்ற காரணங்களால், ஈழத்தமிழ் மக்கள் இந்தியப் படையினரை வரவேற்று மகிழ்ந்ததில் வியப்பில்லை. சில இடங்களில் இந்தியப் படைவீரர்கள் உள்ளூர்ப் பெண்களை திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்.

புலிகள் அமைப்பினரும், இந்தியப் படையினருடன் சினேகபூர்வமாக நடந்து கொண்டனர். இனி சமாதானம் வந்து விட்டது என்பது போல, புலிகளின் தலைவர்கள் பலர் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமண சடங்குகளில், இந்தியப் படை கொமான்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதற்கு முன்னர், ஆயுதங்களை ஒப்படைக்கும் வைபவம் நடந்தது. இந்தியாவில் இருந்து விடுதலையாகி, இந்திய விமானப்படை ஹெலிகொப்டரில் சுதுமலை வந்த பிரபாகரன் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அவரது உரையைக் கேட்க பெருந்திரளான மக்கள் குழுமியிருந்தனர். அமைதியாக உரையை செவிமடுத்த பார்வையாளர்கள், பிரபாகரன் ஆயுதங்களை ஒப்படைப்பதாக அறிவித்ததும் கரகோஷம் செய்தனர். அடுத்த சில நாட்களில், புலிகளின் ஆயுதங்கள் வண்டி வண்டியாக கொண்டு வரப்பட்டு ஒப்படைக்கப்பட்டன. புலிகளுக்கு முன்னரே, ஈரோஸ் இயக்கம் தம்மிடம் இருந்த ஆயுதங்களை ஒப்படைத்து விட்டனர். அன்று ஈழத்தில் இயங்காத, இந்தியாவில் இருந்து வந்திருந்த புளொட், ஈபிஆர்எல்ப் போன்ற அமைப்புகள், சம்பிரதாயத்திற்காக ஆயுதங்களை ஒப்படைந்திருந்தனர். இந்த நிகழ்வுகளை எல்லாம் தொலைக்காட்சி உடனுக்குடன் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

அன்றைய சூழ்நிலை ஈழத்தமிழ் மக்கள் மனதில் நிம்மதியை தோற்றுவித்திருந்தது. இனிமேல் யுத்தம் இல்லை, சமாதானமாக வாழலாம் என்று எல்லோரும் பெருமூச்சு விட்டார்கள். வட-கிழக்கு மாகாணங்களில் சமாதானம் நிலவிய நேரம், இலங்கையின் பிற பாகங்கள் கொந்தளித்துக் கொண்டிருந்தன. யுத்தம் தெற்கை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருந்தது. உண்மையில் வடக்கையும், தெற்கையும் ஒருசேர சமாளிக்க முடியாத காரணத்தினாலேயே, சிறிலங்கா அரசு, இந்திய- இலங்கை ஒப்பந்தத்திற்கு சம்மதித்தது. அதே நேரம், அரசு வட-கிழக்கு மாகாண நிர்வாகத்தை இந்தியாவிடம் ஒப்படைத்து விட்டதால், தென்னிலங்கையில் இந்தியாவுக்கு எதிரான அலை வீசியது. சிங்கள மக்கள் மத்தியிலும், அரசாங்கத்தின் ஒரு பகுதியிலும் இந்திய எதிர்ப்புணர்வு அதிகரித்தது. ஒரு நாள், பாதுகாப்பு அமைச்சரின் அலுவலகத்தினுள் கிரேனேட் குண்டு வீசப்பட்டது. அமைச்சர் படுகாயமுற்று மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். அந்த குண்டு வெடிப்பு சம்பவம், வரப்போகும் போருக்கு கட்டியம் கூறியது.
(தொடரும்)


தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
4.சென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்
3.
தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை
2.
ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா
1.
இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்

No comments: