Tuesday, April 26, 2011

சிறிலங்கா அரசவைக் கோமாளி, "சிங்கள வைகோ"!


[ஒரு போர்க்குற்றவாளி நீதிபதியாகிறார்]

(பகுதி : இரண்டு)


2008 ம் ஆண்டின் தொடக்கம், மன்னார் மாவட்டத்தை கைப்பற்றுவதற்காக சிறிலங்கா படைகள் போரிட்டுக் கொண்டிருந்த நேரம். இலங்கையில் பணியாற்றிக் கொண்டிருந்த, நெதர்லாந்தை சேர்ந்த தொண்டு நிறுவன முகாமையாளரை சந்தித்த போது, பல தகவல்களைக் கூறினார். தசாப்த காலமாக மேற்கத்திய நிதியுதவில் இயங்கி வரும் தொண்டு நிறுவனங்கள் ராஜபக்ச அரசினால் அவமானப் படுத்தப் பட்டனர். புலிகள் அமைப்பிற்கு நிதியளித்ததாக, ஆயுதங்களைக் கூட கடத்தி வந்ததாக, அந்த நிறுவனங்கள் மேல் குற்றம் சாட்டப்பட்டது. அரசின் விஷமத்தனமான பிரச்சாரம் காரணமாக, சிங்கள மக்கள் தொண்டு நிறுவனங்களை தேசத் துரோகிகளாக கருதினார்கள். இதனால் அவற்றில் வேலை செய்து வந்த பல வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்.

அரசு புரியும் மனித உரிமை மீறல்களை, இந்த நிறுவனங்களை சேர்ந்தோரே ஆவணப் படுத்திகின்றனர் என்று, ராஜபக்ச அரசு சந்தேகப் பட்டது. இதனால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வன்னி பெரு நிலப்பரப்பை விடுவிக்கும் போரின் தொடக்கத்திலேயே வெளியாருக்கு அனுமதி மறுக்கப் பட்டது. தொண்டு நிறுவனங்கள் மட்டுமல்ல, ஐ.நா. நிறுவனங்களைக் கூட போர்ப் பிரதேசத்தில் இயங்க அனுமதிக்கவில்லை. தவிர்க்கவியலாது, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மட்டும் இயங்க அனுமதி வழங்கப் பட்டது. பக்கச்சார்பற்ற தன்மையை உறுதிப் படுத்துவதற்காக செஞ்சிலுவைச் சங்கம் மிக அவதானமாக வேலை செய்ய வேண்டியிருந்தது. சிறிலங்கா அரசு நடத்தும் ஊடகத் துறையை சேர்ந்தவர்களை மட்டுமே, போர்ச் செய்திகளை வெளியிட அனுமதித்தார்கள். இறுதி யுத்தத்தில், போர்க்குற்றங்கள் நடைபெறப் போகின்றன என்பதை அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர். சிறிலங்கா அரசானது, தனது இராணுவத்தின் குற்றங்களுக்கான தடயங்கள் யாருக்கும் போகாத வண்ணம் பார்த்துக் கொண்டது. ஆனால், அதையும் மீறி பல குற்றங்கள் குறித்த விபரங்கள் வெளியுலகை சென்றடைந்தன.

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த தொண்டு நிறுவன ஊழியர், அன்று ஒரு விடயத்தை உறுதியாகச் சொன்னார். "ராஜபக்ச அரசை, இதற்கு முந்திய இலங்கை அரசுகள் போன்று குறைத்து மதிப்பிட முடியாது. ராஜபக்ச சகோதரர்கள், சொன்னதைச் செய்பவர்கள். முல்லைத்தீவில் சிங்கக்கொடி ஏற்றுவோம் என்று சொல்கிறார்கள். வெகுவிரைவில் அது நடக்கலாம்." ஆனால், இன்னொரு எதிர்வுகூறல் பிழைத்துப் போனது. கடந்த காலத்தைப் போன்று, புலிகள் காடுகளுக்குள் மறைந்திருந்து கெரில்லா யுத்தத்தை தொடர்வாகள், என்று அவர் எதிர்பார்த்தார். அதற்கு மாறாக, புலிகள் மூன்று லட்சம் போது மக்களையும் வைத்துக் கொண்டு, போர் நிறுத்தத்தை கோரினார்கள். வெற்றி நிச்சயம் என்று உறுதியாக இருந்த, சிறிலங்கா அரசு போர்நிறுத்தத்திற்கு சம்மதிக்கவில்லை. நாற்பதாயிரம் தமிழர்களை கொன்றாவது, புலிகளை அழித்து விட வேண்டும் என்று திடமான மனதுடன் இருந்தது.

இந்திய மத்திய அரசும் புலிகளின் அழிவை விரும்பியிருந்ததை, முன்னாள் ஐ.நா. அதிகாரி கோர்டன் வைஸ் தெரிவித்தார். சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில், புலிகள் மட்டுமே தீர்வுக்கு தடையாக இருக்கின்றனர் என்று, சிறிலங்கா அரசு சர்வதேச சமூகத்தை நம்ப வைத்திருந்தது. (ஸ்கண்டிநேவிய கண்காணிப்பாளர்கள் பதிவு செய்த யுத்த நிறுத்த மீறல்களில் அதிகமானவை புலிகளுடையவை.) சமாதானப் பேச்சுவார்த்தையில் எட்டப்படும் உடன்படிக்கையின் பிரகாரம், புலிகளும், அரசும் அதிகாரத்தை பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்த்தது. புலிகள் மீண்டும் போருக்கு தயாரானால், தாங்கள் சிறிலங்கா அரசுக்கு வேண்டிய உதவிகளை செய்யப் போவதாக அமெரிக்க தூதுவர் அறிவித்திருந்தார். "எத்தனை ஆயிரம் மக்கள் மடிந்தாலும் பரவாயில்லை. ஈழப்போர் இனிமேல் தொடரக் கூடாது." என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடாக இருந்தது. மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அதனை எதிர்பார்த்தன. உலகில் தீராத போர் நடக்கும் நாடுகளில் இருந்து அகதிகள் வந்து குவிவதை தடுப்பது, அவர்களது முக்கிய நோக்கமாக இருந்தது. ஏற்கனவே அதிக அகதிகளை உற்பத்தி செய்து அனுப்பிக் கொண்டிருந்த பொஸ்னியா, ஈராக், ஆப்கானிஸ்தான், சியாரா லியோன் போன்ற நாடுகளில் நடந்த போர்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

விடுதலைப் புலிகள் யாருடைய சொல்லுக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமான முடிவுகளை எடுக்கும் திறனைக் கொண்டிருந்தமை, மேற்கத்திய நாடுகளை எரிச்சலூட்டியது எனலாம். புலிகள் அமைப்பை வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் தூக்கிப் போட வேண்டும் என்று, அவை முடிவெடுத்தன. உலகில் எந்தவொரு நாடும் புலிகளை ஆதரிக்கவில்லை. ஆனால், அந்த அமைப்பின் உயிர்நாடியான நிதி சேகரிப்பு முதலாளித்துவ நாடுகளிலேயே இடம்பெற்றது. சர்வதேச மூலதனத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்காவுக்கு அதனை தடுப்பது மிகவும் இலகுவானது. மேற்குலக நாடுகள் எடுத்த புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் , சிங்கள பேரினவாத சக்திகளை உற்சாகப் படுத்தின. அதே சர்வதேச மூலதனத்துடன் பின்னிப் பிணைந்துள்ள சிறிலங்கா அரசின் மீது பொருளாதாரத் தடைகள் கொண்டு வருவதும் இலகுவானது என்பதை அவர்கள் அன்று உணரவில்லை. ஐ.நா. நிபுணர் குழு சமர்ப்பித்த போர்க்குற்ற அறிக்கை, அந்த சூட்டைக் கிளப்பியுள்ளது.

ராஜபக்சவின் அரசவைக் கோமாளியான, "சிங்கள வைகோ"விமல் வீரவன்ச: "ஐ.நா. நிபுணர் குழுவுக்கு புலி ஆதரவு அமைப்புகள் லஞ்சம் கொடுத்திருப்பதாக..." வாய்க்கு வந்த படி உளறுகிறார். பணக்கார நாடுகளே ஐ.நா.வுக்கு நிதியுதவியளிக்கின்றன என்பது ஆரம்ப பாடசாலை மாணவனுக்கே தெரிந்த விடயம். மேற்குலகை நேரடியாக எதிர்க்க திராணியற்ற சிங்களப் பேரினவாதிகளின் வாய்ச் சவடால்களுக்கு ஐ.நா. மிரண்டு விடப் போவதில்லை. சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் உண்மையான பிரச்சினையை மக்களுக்கு அறிய விடாமற் செய்வதில் வல்லவர்கள். "ஐ.நா. சபை தமிழர்கள் மீது இரக்கப்பட்டு போர்க்குற்ற விசாரணை நடத்தப் போவதாக", தமிழ் இனவாதிகள் பரப்புரை செய்கின்றனர். "ஐ.நா. விசாரணை, தேசத்திற்காக போராடி மரித்த இராணுவவீரர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்துவதாக", சிங்கள இனவாதிகள் பரப்புரை செய்கின்றனர். "அமெரிக்காவினால் கூட வெல்ல முடியாத பயங்கரவாதத்தை நாங்கள் அழித்து விட்டதால் பொறாமை கொண்ட நாடுகளின் செயல்", என்று இலங்கை அரசு விளக்கம் கொடுக்கின்றது. எல்லோருக்கும் அவரவர் நியாயம் மட்டுமே முக்கியமாகப் படுகின்றது.

உள்நாட்டுப் பிரச்சினையில் அந்நிய நாடுகளோ, ஐ.நா.வோ தலையிடுவதை விரும்பா விட்டால், முன் கூட்டியே அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். அரசு ஏற்படுத்திய நல்லிணக்க ஆணைக்குழுவின் மெத்தனப் போக்கையும், இயலாமையையும் ஐ.நா. சுட்டிக் காட்டியுள்ளமை குறிப்பிடத் தக்கது. தனது படையை சேர்ந்தவர்கள் ஆயினும், குற்றம் செய்தவர்களை தண்டிக்கும் பொறுப்பை இலங்கை அரசு ஏற்றிருக்க வேண்டும். வேடிக்கை என்னவென்றால், அரச படைகளால் கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர்கள் மீது கூட போர்க்குற்ற வழக்குகள் போடப்படவில்லை. ஏற்கனவே மேற்கத்திய நாடுகளில் அத்தகைய வழக்குகள் நடந்துள்ளன. அந்த நாடுகளில் அகதியாக தஞ்சம் கோரிய முன்னாள் புலிகள் உறுப்பினர்கள் சிலரும், சிங்கள இராணுவவீரர்கள் சிலரும், போர்க்குற்றவாளிகளாக இனங்காணப் பட்டுள்ளனர். அவர்களை குற்றவாளிகளாக கருதி, பிற அகதிகளிடமிருந்து வேறு படுத்தி சிறையில் அடைத்து வைத்துள்ளனர். குற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இலங்கையில் இன்னும் தோன்றவில்லை. சிறிலங்கா படையினரின் குற்றங்களை ஒப்புக் கொண்டால் அது புலி ஆதரவுப் பிரச்சாரமாக கருதப்படும். புலிகளின் குற்றங்களை ஒப்புக் கொண்டால் அது சிறிலங்கா அரசு ஆதரவுப் பிரச்சாரமாக கருதப்படும். இரண்டு தரப்பினரும் எதிரும் புதிருமாக நிற்கும் நிலையில், மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை.

ஐ.நா. அத்தகைய நல்லெண்ணத்துடன் நடவடிக்கை எடுத்து வருகின்றதா? தற்போது சமர்ப்பிக்கப் பட்டுள்ள நிபுணர் குழு அறிக்கை ஒரு ஆலோசனை மட்டுமே. போர்க்குற்ற விசாரணை குறித்த முடிவு இனிமேல் தான் எடுக்கப் பட வேண்டும். ஆனால் தன்னிடம் அதற்கான அதிகாரம் இல்லை என்கிறார், ஐ.நா. செயலாளர் பான் கி மூன். இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணையோ, குற்றவாளிகளுக்கான தண்டனையோ இன்னும் பல வருடங்கள் போனாலும் நிறைவேறுமா என்பது கேள்விக்குறி தான். அநேகமாக, அடுத்த தேர்தலில் மகிந்த ராஜபக்ச பதவி விலகும் வரையில் காத்திருக்கிறார்கள் போலும். ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அரை மனதுடன் சமர்ப்பிக்கப் படும் விசாரணைக்கான திட்டத்தை, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் எதிர்க்கலாம். அந்த எதிர்ப்பைக் காட்டியே, விசாரணை நடத்தப் படாமல் இழுத்தடிக்கப் பட்டு, இறுதியில் யோசனையை குப்பைக் கூடையில் வீசி விடலாம். யாராவது கேட்டால், ரஷ்யா, சீனா எதிர்த்தன என்று சாட்டுச் சொல்லலாம். ஐ.நா. இலங்கை போர்க்குற்றம் பற்றிய அறிக்கை தயாரிக்க வேண்டுமென, பிரிட்டனும், அமெரிக்காவும் வலியுறுத்தி வந்தன. உலகில் பலம் வாய்ந்த நாடுகளான, தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடிய பிரிட்டனும், அமெரிக்காவும் ஐ.நா. பாதுகாப்புச் சபையை மதிப்பதில்லை. ரஷ்யாவோ, சீனாவோ வீட்டோ அதிகாரம் பாவித்து தடுத்தாலும், திட்டத்தை நடைமுறைப் படுத்தும் வல்லமையைக் கொண்டுள்ளன.

சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களை தமிழ் மக்கள் மன்னித்து விடலாம், ஆனால் மறக்கப் போவதில்லை. போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப் படுவதால், தங்களுக்கு கிடைக்கப்போகும் நீதியை விட, இனப்பிரச்சினை தீர்க்கப் படுவதையே தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். அமெரிக்க அரசும், பிரிட்டனும் தமது நாடுகளில் வதியும் தமிழர் பிரதிநிதிகளை அழைத்துப் பேசியுள்ளது. புலிகளின் கொள்கைகளை புலத்தில் முன்னெடுக்கும் அமைப்புகளை சேர்ந்தவர்கள், சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களை காட்டும் ஆதாரங்களை வைத்திருப்பார்கள் என்ற எண்ணத்திலேயே அவ்வாறு நடந்து கொண்டுள்ளது. போர் நடந்த காலத்தில் சிறிலங்கா அரசுக்கு துணை நின்று புலிகளை அழித்த நாடுகளுக்கு, தமிழர்கள் மேல் திடீர் கரிசனை வந்து விட்டது, என்று சிலர் நினைக்கலாம். முன்னாள் ஆங்கிலேயக் காலனியான இலங்கையில், சிங்களத் தேசியத்தையும், தமிழ்த் தேசியத்தையும் அவர்களே வளர்த்து விட்டார்கள். இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் கொதிநிலைக்கு வந்து, யுத்தம் நடந்து கொண்டிருக்கையில் ஆயுதம் விற்று இலாபம் சம்பாதித்தார்கள். அமெரிக்காவும், பிரிட்டனும் தங்கள் நலன் சார்ந்தே சிந்திக்கின்றனர், செயற்படுகின்றனர். போர்க்குற்ற குற்றச்சாட்டில் சிறிலங்கா அரசை சிக்க வைப்பது கூட, தமிழர் நலன் சார்ந்தல்ல. நாம் எப்போதும் இனத்தை மையப் படுத்தியே சிந்தித்துக் கொண்டிருப்பதால், பொருளாதாரப் பிரச்சினைகளை புறக்கணிக்கின்றோம்.




(தொடரும்...)



தொடரின் முதலாவது பகுதியை வாசிக்க:
ஒரு போர்க்குற்றவாளி நீதிபதியாகிறார்

2 comments:

Mohamed Faaique said...

///புலிகள் மூன்று லட்சம் போது மக்களையும் வைத்துக் கொண்டு, போர் நிறுத்தத்தை கோரினார்கள். வெற்றி நிச்சயம் என்று உறுதியாக இருந்த, சிறிலங்கா அரசு போர்நிறுத்தத்திற்கு சம்மதிக்கவில்லை. நாற்பதாயிரம் தமிழர்களை கொன்றாவது, புலிகளை அழித்து விட வேண்டும் என்று திடமான மனதுடன் இருந்தது. ///

3 லட்சம் மக்களை வைத்துக் கொண்டல்ல, பிணைக் கைதிகளாக வைத்துக் கொண்டு...
போர் நிறுத்ததை கோறியது, இராணுவம் .5 கி.மி அருகில் வந்த போதுதான்..அதுவும் இலங்கையிடம் அல்ல. சர்வதேச சமூகத்திடம்
என்ன நடந்தாலும் போரை விடப்போவதில்லையென வெள்ளை கொடி ஏந்தி வந்த மகராசா இறப்பதற்கு 2 மாதத்துக்கு முன்னாடிதான் பேட்டி குடுத்ததை நானும் கேட்டேன்.

வெளியேறிய மக்களை வெளியேற விடாமல் துப்பாக்கி சூடு நடத்திய வீடியோவும் வெளியாகியதே!! இதை எல்லாஒரும் எப்படி மறந்தார்கள்?

தப்பி வரும் மக்கள் மத்தியில் மனித வெடி குண்டுகளை வெடிக்க செய்தது யார்?
மக்களுக்காக ஒதுக்கப்பட்ட வலய்த்துக்குள் புகுந்து கொண்டு, மக்களை கேடயமாக பாவித்து எதிரியை தாக்கி தன்னை நம்பிய இனத்துக்கே அழிவை தேடிக் கொடுத்தது யார்?
இன அழிவுக்க முக்கிய காரணம் புலிகளும், அவர்களை நம்பியதுமே!!!!1

செந்திலான் said...

சிங்கள வைகோ என்றெல்லாம் எழுதுவதை நிறுத்திக்கொள்ளவும். தேவையில்லாமல் வைகோவை இழுக்க வேண்டாம்.உங்கள் பிரச்சினைக்கு குரல் கொடுத்தால் வைகோ கேணயனா? இது போன்று முட்டாள் தனமாக எழுதுவதை கைவிடவும் நீங்கள் எகிப்து புரட்சியை கம்யுனிச புரட்சி பாட்டாளி வர்க்க புரட்சி என்று முட்டாள் தனமாக எழுதி அம்பலப் பட்டவர்தானே