Tuesday, April 19, 2011

ஈழப் பிரகடனமும், இந்தியாவின் குத்துக் கரணமும்


[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்]
(பகுதி - 17)


ஈழத்தில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த காலங்களில், இந்தியா பொதுத் தேர்தல்களும் தான் விரும்பிய படியே நடக்க வேண்டுமென எதிர்பார்த்தது. தமிழ் ஆயுதக் குழுக்களை விட, தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற மிதவாத தலைமையே தனக்கு என்றென்றும் விசுவாசமாக இருக்கும் என்று இந்தியா கருதியது. அதனால், ஈபிஆர்எல்எப் போன்ற புதிய விசுவாசிகளை, தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பழைய விசுவாசிகளின் சின்னத்தின் கீழ் போட்டியிடுமாறு வற்புறுத்தியது. அதற்கு மாற்றாக சுயேச்சையாக தேர்தலில் நின்ற ஈரோஸ் அமைப்பினரை, புலிகள் ஆதரித்தனர். பொதுவாகவே ஈரோஸ் அமைப்பிற்கு மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் இருந்ததால், தேர்தலில் அதிகப் படியான வாக்குகளில் வெற்றி பெற்றனர். வட-கிழக்கு மாகாணங்களில் அனைத்து தொகுதிகளிலும் வென்ற ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தை பகிஷ்கரித்தார்கள். பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் ஒருவர், "பிரிவினைக்கு எதிராக" சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டும். ஈரோஸ் உறுப்பினர்கள் அத்தகைய சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்ததால், பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தார்கள். மட்டக்களப்பை சேர்ந்த ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் அகதி தஞ்சம் கோரினார். சில வருடங்களின் பின்னர் ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்த நான், பத்திரிகைத் துறையில் பணியாற்றும் பொழுதே அவரின் அறிமுகம் கிடைத்தது.

கொழும்புக்கும், யாழ் நகருக்கும் இடையிலான போக்குவரத்து சீராக நடந்து கொண்டிருந்தது. இந்திய இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்த யாழ்ப்பாணம் இயல்பு நிலைக்கு திரும்ப போராடிக் கொண்டிருந்தது. மக்கள் வழமை போல அன்றாட அலுவல்களில் ஈடுபட்டனர். இது தான் சந்தர்ப்பம் என்று, இந்தியா மாகாண சபை நிர்வாகத்தை கொண்டு வர விரும்பியது. அதற்கான தேர்தல் தினமும் அறிவிக்கப் பட்டது. யாழ் கச்சேரியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு யாரும் முன்வரவில்லை. தலைமறைவாக இயங்கிய புலிகள் விடுத்த அச்சுறுத்தல் காரணமாக போட்டியிட முன் வந்த கட்சிகளும் ஒதுங்கிக் கொண்டன. இறுதியாக ஈபிஆர்எல்எப் வேட்பாளர்கள் மட்டும் இந்திய இராணுவ பாதுகாப்புடன் மனுப் போட்டனர். கிழக்கு மாகாணத்தில் வேறு சில கட்சிகளும் போட்டிக்கு வந்ததால், அங்கே மட்டும் தேர்தல் நடத்தப் பட்டது. வட மாகாண வேட்பாளர்கள் போட்டியின்றி தெரிவானார்கள். யாழ்ப்பாணத்தில் தெரிவான மாகாண சபை உறுப்பினர்கள் தொடர்ந்தும் இந்திய இராணுவ பாதுகாப்பில் இருந்தனர். ஊரில் இருந்த அவர்களின் குடும்பங்களை உடனடியாக வெளியேற வேண்டும் என்று புலிகள் உத்தரவு போட்டனர்.இணைக்கப்பட்ட வட-கிழக்கு மாகாணங்களின் தலைநகராக கருதப்பட்ட திருகோணமலையில் மாகாண சபை கூடியது. மாகாண சபை வந்த பின்னர், யாழ்ப்பாணம் எந்த மாற்றத்தையும் காணவில்லை. மாகாண சபையின் செலவுகளுக்கும், அபிவிருத்தி திட்டங்களுக்கும் இலங்கை அரசு நிதி ஒதுக்கி இருந்தது. இவை சரியான முறையில் பயன்படுத்தப் பட்டனவா?, என்று யாருக்கும் தெரியவில்லை. மாகாண சபை உறுப்பினர்கள், கொழும்புக்கும், திருகோணமலைக்கும் இடையில் அரசு வழங்கிய 'பஜெரோ' ஜீப்களில் ஓடித் திரிந்தனர். "நாங்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்திருக்கிறோம், என்று தெரிய வேண்டுமானால், திருகோணமலைக்கு வந்து பாருங்கள்..." என்றார் பஜெரோவில் கொழும்பு வந்த மாகாண சபை உறுப்பினர் ஒருவர். தங்களது சாதனைகளையும் பட்டியல் இட்டார். யாழ்ப்பாணத்தில் தான் சிறிது குழப்பம்...திருகோணமலை சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது..." என்றார். அவரது இடுப்பில் செருகி வைத்திருந்த பிஸ்டல், "அமைதியான திருகோணமலை" பற்றிய கூற்றை மறுப்பது போலத் தோன்றியது.

இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்னர் மாகாண சபை ஒரு நாள் கூட நிலைத்து நிற்குமா, என தமிழ் மக்கள் சந்தேகித்தனர். ஜேவிபியை அடக்கி விட்ட பெருமிதத்தில் இருந்த பிரேமதாச அரசு, இந்தியப் படைகளை வெளியேறுமாறு கேட்டுக் கொண்டது. ஜனாதிபதியின் வேண்டுகோளை ஏற்று இந்திய இராணுவம் படிப்படியாக வாபஸ் வாங்கப் பட்டது. மாகாண சபையின் முதலமைச்சரான வரதராஜப் பெருமாள், "ஈழம்" பிரகடனம் செய்தார். எமக்குத் தெரிந்த வரையில், ஈழ மண்ணில் இடம்பெற்ற முதலாவது ஈழப் பிரகடனம் அது தான். குறிப்பிட்ட சில காலம், வட-கிழக்கு மாகாணம் ஈபிஆர்எல்ப் ஆட்சியின் கீழ் இருந்தது எனலாம். "தமிழ் தேசிய இராணுவம்" (TNA) என்ற பெயரில் புதிய ஆயுதக் குழு தோன்றியது. இந்திய இராணுவம் வெளியேறிய இடங்கள், தமிழ் தேசிய இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. "புதிய தமிழ் இராணுவம்" ஈபிஆர்எல்ப் பின் தலைமையின் கீழ் செயற்பட்டது. தமிழ் இராணுவத்திற்கு ஆட்களை சேர்த்த முறை கொடூரமாக இருந்தது.

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்தவர்களை, சோதனைச் சாவடிகளில் மறித்து சோதிப்பது வழக்கம். அவ்வாறு சோதனை செய்யும் பொழுது, குறிப்பிட்ட பராயத்தை சேர்ந்த வாலிபர்களை தடுத்து வைத்தனர். ஈபிஆர்எல்ப், ஈஎன்டிஎல்எப் உறுப்பினர்கள், தடுத்து வைத்த இளைஞர்களை தம்முடன் கூட்டிச் சென்றனர். முதலில் அவர்களுக்கு மொட்டை அடிக்கப்படும். தப்பி ஓடினால் பிடிப்பதற்காக அந்த ஏற்பாடு. அதன் பின்னர் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கி, தம்முடன் சேர்த்துக் கொண்டனர். சோதனைச் சாவடியில் நின்ற இந்திய இராணுவத்தின் முன்னிலையில் தான் இவ்வளவும் நடந்தது. தமிழ் இளைஞர்கள் கட்டாய இராணுவப் பயிற்சிக்காக பிடித்துச் செல்லப்படும் செய்தி காட்டுத்தீயாக பரவியது. பல இளைஞர்கள் வெளியில் செல்ல அஞ்சினார்கள். பேரூந்து வண்டிகளில் தனியாக பயணம் செய்த இளைஞர்களை தான் பிடித்தார்கள். திருமணமானவர்களை விட்டார்கள். சில இளம் பெண்கள், தடுத்து வைக்கப்படும் இனந்தெரியாத இளைஞர்களுக்கு உதவ முன் வந்தார்கள். தனது கணவன் என்று பொய் கூறி விடுவித்தார்கள். இப்படியே பலரும் செய்ததால் சந்தேகம் எழுந்தது. அதனால் உண்மையிலேயே கணவன் என்றால் வாயில் முத்தமிடச் சொல்லி வற்புறுத்தினார்கள்.

தமிழ் தேசிய இராணுவத்திற்கான கட்டாய ஆட்சேர்ப்பு, தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்பை தோற்றுவித்தது. ஈபிஆர்எல்எப், ஈஎன்டிஎல்ப் ஆகியன முன்னரை விட அதிகமாக மக்களின் வெறுப்பை சம்பாதித்தன. அன்று சாமானியர்கள் போரில் எந்தப் பக்கமும் சார விரும்பவில்லை. அதை விட, கட்டாயமாக பிடித்துச் சென்ற இளைஞர்களின் பரிதாப நிலை, அனைத்து தமிழ் மக்களையும் உளவியல் ரீதியாக பாதித்தது. அந்த இளைஞர்கள் சுயவிருப்பின்றி கட்டாயமாக பிடித்துச் செல்லப் பட்டவர்கள். ஒரு தடவை அகப்பட்டுக் கொண்டால் தப்பிச் செல்வது முடியாத காரியம். தப்பிச் சென்றவர்களுக்கு வழங்கப் பட்ட கடுமையான தண்டனை மட்டும் காரணமல்ல, வெளியில் காத்திருந்த புலிகளும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கவில்லை. விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில், ஈபிஆர்எல்ப், ஈஎன்டிஎல்ப், தமிழ் தேசிய இராணுவம் எல்லாமே ஒன்று தான்.

இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர், வட-கிழக்கு மாகாணம் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வர வேண்டுமென புலிகள் விரும்பினார்கள். இலங்கை அரசும், இந்திய அரசும் கூட அவ்வாறு விரும்பியிருக்கலாம். ஈபிஆர்எல்ப் கேட்டுக் கொண்டும், இந்தியா தமிழ் தேசிய இராணுவத்திற்கு மேலதிக ஆயுத உதவி செய்யவில்லை. அப்படியே இந்தியா உதவியிருந்தாலும், வரதராஜப் பெருமாளின் ஈழமும், தமிழ் தேசிய இராணுவமும் நிலைத்து நின்றிருக்கும் என்று கூற முடியாது. புலிகளில் இருந்தளவு பயிற்சி பெற்ற, அர்ப்பணிப்பு உணர்வுள்ள வீரர்கள் தமிழ் தேசிய இராணுவத்தில் இருக்கவில்லை. ஈழத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய இராணுவம் ஒரு நாள் கூட, இலங்கை இராணுவத்தை எதிர்த்து சண்டையிடவில்லை. கிழக்கு மாகாணத்தில், தமிழ்-முஸ்லிம் கலவரத்தில் தமிழ் தேசிய இராணுவத்தை சேர்ந்தவர்களின் பங்களிப்பு இருந்ததாக, சில முஸ்லிம் நண்பர்கள் தெரிவித்தனர். தற்பாதுகாப்பு யுத்தத்திற்கு தள்ளப்பட்ட தமிழ் இராணுவத்தின் பிரதான எதிரி புலிகளாக இருந்தனர். புலிகள் தாக்குதல் நடத்த தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, அவர்கள் சரணடைந்து விட்டனர். வட-கிழக்கு மாகாணம் முழுவதும், தமிழ் தேசிய இராணுவத்தை சேர்ந்தவர்கள் புலிகளினால் கொல்லப் பட்டனர்.

வியட்நாமை விட்டு அமெரிக்க இராணுவம் வெளியேறிய பொழுது, அவர்களுடன் ஒத்துழைத்த தென் வியட்நாமிய ஆதரவாளர்களும் வெளியேறினார்கள். அதே போன்று, ஈழத்தை விட்டு இந்திய இராணுவம் வெளியேறியதும் நடந்தது. ஈபிஆர்எல்ப், ஈஎன்டிஎல்ப் உறுப்பினர்களும், அவர்களது உறவினர்களும் படகுகளில் தப்பியோடினார்கள். திருகோணமலைக்கு அண்மையான கடலில், புலிகள் சில படகுகளை வழிமறித்து சுட்டதில் பலர் பலியானார்கள். எஞ்சியோர் இந்தியா சென்று அங்கேயே தங்கி விட்டார்கள். தமிழ்நாட்டுக்கு சம்பந்தமில்லாத ஒரிசாவில் சில ஆயிரம் குடும்பங்கள் இந்திய மத்திய அரசினால் பராமரிக்கப் பட்டு வருகின்றன. இவர்களது எதிர்காலம் குறித்து எந்த தெளிவும் இல்லை. அரசியல் நோக்கங்கள் காலத்துக்கு காலம் மாறுபட்டு வந்தாலும், ஈழம் இந்தியாவின் சூழ்நிலைக் கைதியாக தொடரும். அதனால் இந்தியாவுக்கு விசுவாசமான குழு ஒன்றை எப்போதும் கைவசம் வைத்திருப்பது அவசியமானது.

உலகின் நான்காவது பெரிய இராணுவத்துடன் யுத்தம் செய்து விரட்டியடித்தோம் என்று புலிகள் கூறினார்கள். ஈழப் பிரச்சினையில் அரை குறைத் தீர்வைத் திணித்து, இந்திய இராணுவத்தை அனுப்பிய தவறை இந்தியா உணர்ந்து விட்டதாக மக்கள் நினைத்தார்கள். ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரையில், அதன் வெளிவிவகார கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தை பலர் கவனிக்கத் தவறி விட்டனர். இந்திய-இலங்கை ஒப்பந்தம் வரையில், ஈழத்தமிழரை மையமாக வைத்தே இந்தியாவின் கொள்கை வகுக்கப் பட்டது. தமிழ்நாட்டுடன் பாரம்பரிய தொடர்புகளை பேணிய ஈழ மேட்டுக்குடி, தொன்று தொட்டு இந்திய அரசுக்கு விசுவாசமாக இருந்து வந்துள்ளது. தென்னிலங்கையில் குடியேறிய இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்த முதலாளிகள், இலங்கையில் வாழ்ந்தாலும் இந்தியர்களாகவே இருந்தனர். இவர்களை விட, சிங்களவர்களை இந்தியாவுக்கு சார்பாக வென்றெடுப்பதன் அவசியத்தை இந்தியா பின்னர் உணர்ந்து கொண்டது.

ஈழத்தில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த இரண்டு, மூன்று வருடங்களில் கசப்பான பாடங்களை கற்றுக் கொண்டது. அடுத்து வந்த காலங்களில் இந்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கை, எப்போதும் இலங்கை அரசை திருப்திப் படுத்துவதாக மாறி விட்டது. இதனால் இந்தியாவுக்கு அதிக ஆதாயம் கிடைத்தது. சிங்களவர்கள் இந்திப் பட இரசிகர்களானார்கள். இலங்கையில் இந்திப் படத்தை திரையிட்டு வந்த இலாபம், தமிழ் படத்தினால் வரும் வருவாயை விட அதிகம். ஈழத்தமிழர்கள் மட்டுமே விரும்பியணிந்த தென்னிந்திய கலாச்சார உடைகள், சிங்களவர்கள் மத்தியில் பிரபலமாகியது. தாராள பொருளாதாரக் கொள்கை, இந்திய நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கியது. ஒரு காலத்தில் ஏகபோக உரிமை வைத்திருந்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பெரும்பாலான பங்குகள், இந்திய நிறுவனத்திற்கு விற்கப் பட்டன. கடந்த இருபதாண்டுகளில் இடம்பெற்ற பொருளாதார மாற்றங்கள், இந்தியாவின் அரசியல் போக்கையும் மாற்றியமைத்தன.

(முற்றும்)


தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
16.தென்னிலங்கையில் கொலையுதிர் காலம்
15.சிங்கள- தலித் ஜனாதிபதியின் திகில் ராஜாங்கம்
14. இலங்கையை உலுக்கிய "சேகுவேரா போராட்டம்"
13.தென்னிலங்கை கிளர்ச்சியில் சிங்கள தலித்- படுகொலை
12.ஈழ அகதிகளுக்கு தஞ்சம் அளித்த சிங்கள அரசு!
11.யாழ் குடாநாடெங்கும் ஆயுதப் புதையல்கள்
10.ஈழத் தமிழருக்கு இந்தியர்களும் அடக்குமுறையாளர்கள்
9.அந்நிய இராணுவத்தின் முற்றுகைக்குள் யாழ் குடாநாடு
8.ஆக்கிரமிப்புப் படையாக மாறிய அமைதிப் படை
7.ஆயுதக் குழுக்களுடன் அமைதி காத்த இந்திய இராணுவம்
6.இந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்
5.யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய இந்தியப் படைகள்
4.சென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்
3.தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை
2.ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா
1.இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்

2 comments:

எஸ் சக்திவேல் said...

கடைசிப் பந்தி ஒரு நுணுக்கமான அவதானிப்பு. நம்மவர்களில் பலர் இதனை சரியான காலத்தில் அவதானிக்கத் தவறிவிட்டோம்.

saarvaakan said...

அருமையான தொடர் நண்பரே,
ஈழப் பிரச்சினையின் பல பரிமாண்ங்களையும் விளக்கியது.

//அடுத்து வந்த காலங்களில் இந்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கை, எப்போதும் இலங்கை அரசை திருப்திப் படுத்துவதாக மாறி விட்டது.//

இந்த ஒருவரி இந்தியாவின் ஈழம் தொடர்பான அனைத்து செயல்களையும் எடுத்து சொல்கிறது.
போர்க்குற்றம் பற்றிய ஐ.நாவின் அறிக்கை பற்றி ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன்.நன்றி