Monday, October 05, 2026

பாலச்சந்திரன் கொலை தொடர்பாக பரப்பப் படும் அபத்தக் கதையாடல்


ரோகன விஜேவீரவின் மகன் உவிந்துவையும், பிரபாகரன் மகன் பாலச்சந்திரனையும் ஒப்பிட்டு பதிவு ஒன்று பரப்ப படுகின்றது. அதாவது சிங்களவர் என்ற ஒரே காரணத்திற்காக விஜேவீர மகனை உயிருடன் விட்டு வைத்ததாகவும், அதே நேரம் ஒரு தமிழர் என்பதால் பிரபாகரன் மகனை கொன்று விட்டதாகவும் அதில் சொல்லப்படுகிறது. அன்றைய சிறிலங்கா அரசு ரோகன விஜேவீர, பிரபாகரன் இருவரையும் பயங்கரவாத இயக்க தலைவர்கள் என்று கருதிய போதிலும், இருவரும் ஒரே சூழ்நிலையில் பிடிக்கப்படவில்லை. இந்த ஒப்பீடு முற்றிலும் அபத்தமானது.

குறிப்பாக, ரோகன விஜேவீரவும் அவரது குடும்பத்தினரும் ஒரு போர்க் களத்தில் பிடிக்கப்படவில்லை. 20 ஆண்டுகளுக்கும் மேலாக, JVP இலங்கையில் எந்த ஒரு பகுதியையும், ஒரு சில நாட்களுக்குக் கூட தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை. அவர்கள் எப்போதும் காடுகளுக்குள் மறைந்திருந்து ஒரு நீண்ட கொரில்லா போரை நடத்தி வந்தனர். அதனால், JVP யின் கட்டுப்பாட்டு பகுதியை கைப்பற்ற ஆயிரக்கணக்கான கனரக ஆயுதம் தாங்கிய படைகள், போர் விமானங்களின் ஆதரவு அரசுக்கு தேவைப்படவில்லை.

ரோகன விஜேவீரவும் அவரது குடும்பத்தினரும் போலி அடையாளங்களில், வசதியான மேட்டுக்குடி வர்க்கத்தினர் வாழும் ஒரு குடியிருப்பு பகுதியில் சாதாரண மக்களாக தலைமறைவாக வாழ்ந்தனர், இது பாதுகாப்புப் படைகளின் கவனத்தை திசைதிருப்ப உதவியது. அதே நேரம், அந்த மறைவிடம் ரோகனவை கைது செய்த படையினருக்கு இன்னொரு வகையில் ஒரு தர்ம சங்கடமான நிலைமையை உண்டாக்கி இருந்தது.

நீங்கள் எதிர்பார்ப்பது மாதிரி ரோகன விஜேவீரவின் மனைவி, பிள்ளைகளை சுட்டுக் கொன்று இருந்திருந்தால் அது அன்றைய அரசு இயந்திரம் பிரதிநிதித்துவ படுத்திய மேட்டுக்குடி வர்க்கத்தில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கும். ஒருவேளை, பிரபாகரன் குடும்பத்தினர் மாதிரி மக்களிடம் இருந்து அந்நிய பட்டு ஒரு காட்டுக்குள் மறைந்திருந்து பிடிபட்டு இருந்தால் கண்டுபிடித்த இடத்தில் என்கவுண்டரில் சுட்டுக் கொன்று விட்டு, துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டதாக அறிவித்து இருப்பார்கள். 

ஒரு குடியிருப்பு பகுதியில் ரோகன விஜேவீர பிடிக்கப்பட்டபோது, அவரிடம் எந்த ஆயுதமும் இருக்கவில்லை. இராணுவத்துடன் எந்த துப்பாக்கிச் சண்டையும் நடைபெறவில்லை. அவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். கைதின் போது வேறொரு நபர் மாதிரி காட்டிக் கொண்டார். தடுப்புக் காவலில் வைத்திருந்த நேரம், ஏற்கனவே பிடிபட்டு இருந்த JVP மத்திய குழு உறுப்பினர்கள், கடுமையான சித்திரவதை காரணமாக தனது அடையாளத்தை வெளிப்படுத்தி இருந்தமை பின்னர் தான் தெரிய வந்தது. 

வடக்கில் ஈழப்போர் முடிவில் இருந்த நிலைமை முற்றிலும் மாறுபட்டது. பிரபாகரன் இறுதியாக சிக்கியபோது, அவர் மரபு வழி போர் முறையில் ஒரு பலமான இராணுவத்தை வழிநடத்தினர். பிரபாகரன் முப்படைகள் வைத்து இருந்ததாக இன்றைக்கும் அவரது ஆதரவாளர்கள் சொல்லி திரிகின்றனர். வடக்கில் நடந்த போர், கனரக மல்ட்டி பரல் ராக்கெட் தாக்குதல்கள் மற்றும் ஆட்டிலறி குண்டு வீச்சுக்கள் நடைபெற்ற ஒரு பெரிய போர் களமாக இருந்தது.

LTTE கூட தாங்கள் கனரக ஆயுதங்களின் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்து எதிர்த்து போரிட்டதாக கூறினார்கள். மேலும் நூற்றுக்கணக்கான கனரக ஆயுதம் தாங்கிய LTTE உறுப்பினர்கள் தங்கள் தலைவரை தப்பிக்க வைக்க இராணுவத்தின் முற்றுகையை உடைக்க முயன்றனர். ஆனால் தலைவர் தப்பிக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. ஆயிரக்கணக்கான போராளிகள் தங்கள் தலைவரைப் பாதுகாக்கும் முயற்சியில் கொல்லப்பட்டனர். இறுதியாக, பிரபாகரன் முள்ளிவாய்க்கலில் இறந்து கிடக்க கண்டுபிடிக்கப்பட்டார்.

முந்தைய ரணில்–ராஜபக்சே அரசாங்கமும் வடக்கிலும் தெற்கிலும் இரண்டு பயங்கரவாதத் தலைவர்களை ஒரே முறையில் கொன்றதாக ஒரே கதையைப் பரப்பினாலும், உண்மை மிகவும் வேறுபட்டது. இரண்டு நிகழ்வுகளும் முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலைகளில் நடந்தன.

பிரபாகரன் ஒரு தமிழன் என்பதால் மட்டுமே அவரது மகன் கொலை செய்ய பட்டதாகவும், அதே நேரம் ரோகன ஒரு சிங்களவன் என்பதால் அவரது மகனை உயிருடன் விட்டு வைத்ததாகவும் இனவாத பிரச்சாரம் செய்பவர்களுக்கு குட்டிமணி, தங்கதுரை யார் என்று தெரியுமா?

LTTE மாதிரி TELO என்ற இன்னொரு தமிழ் ஆயுத பாணி இயக்கத் தலைவர்கள். அவர்கள் இருவரும் வல்வெட்டித்துறையில் கைது செய்யப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் கொல்லப்பட்டனர்.

ஆனால் அவர்களது மனைவி பிள்ளைகள் கைது செய்யப் படவில்லை, கொலை செய்யப் படவில்லை. இப்போதும் உயிருடன் இருக்கிறார்கள். இரண்டு மரபு வழி இராணுவங்கள் கனரக ஆயுதங்களுடன் மோதி கொள்ளும் போர் களத்தில் நடக்கும் சம்பவங்கள் போன்று, போர் சூழல் இல்லாத மக்கள் குடியிருப்பு பகுதியில் நடப்பதில்லை.