Friday, June 25, 2010

McDonald's: பிள்ளை பிடிகாரர்களின் உணவகம்!


எங்காவது ஒரு மேற்குலக நகரத்தில் பொருளாதார உச்சி மகாநாடு நடைபெற்றால், அங்கே முதலில் தாக்கப் படுவது மக்டொனால்ட்ஸ் ரெஸ்டாரன்ட் ஆக இருக்கும். மகாநாட்டை எதிர்த்து தெருவில் ஊர்வலம் போகும் எதிர்ப்பாளர்கள் வழியில் மக்டோனால்ட்சை பார்த்தால் கல் எடுத்து வீசாமல் போக மாட்டார்கள். அனைவருக்கும் தெரிந்த உலகமயமாக்கலின் சின்னமான மக்டோனால்ட்சை அடித்து நொறுக்குவதில் அவர்களுக்கு அவ்வளவு குஷி. இதனால் மகாநாடு நடக்கும் சமயம், முதல் நாளே உணவு விடுதியை பூட்டி விட்டு, கண்ணாடிகளுக்கு மேலே பலகை அடித்து விட்டு போவார்கள்.

மக்டொனால்ட்ஸ் எந்த சத்துமற்ற சக்கையை விற்று காசாக்குகின்றது, என்ற விழிப்புணர்வு மெல்ல மெல்ல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டு வருகின்றது. அதனால் மக்டொனால்ட்ஸ் நிர்வாகம், "உள்நாட்டில் வாங்கிய தரமான உணவுப் பொருட்களை கொண்டு தயாரிப்பதாக" அடிக்கடி காதில் பூச் சுற்றும். மக்டொனால்ட்ஸ் உணவுப் பதார்த்தங்கள் தயாரிக்க பயன்படுத்தும் இரசாயனப் பொருட்கள் பல்வேறு வியாதிகளை உருவாக்குகின்றன. மக்டோனால்ட்சின் தாயகமான அமெரிக்காவில், "ஹம்பெர்கர்" தின்று கொழுத்த சிறுவர்கள் ராட்சதர்கள் போல காட்சி தருவார்கள். (உலகிலேயே பெரிய்ய்ய்ய நாடல்லவா. அங்கே எல்லாம் பெரிசு பெரிசாக தான் இருக்கும்.)

மக்டொனால்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்ட மேற்கு ஐரோப்பிய பொது மக்கள், அங்கே சாப்பிடுவதை தரக் குறைவாக கருதுகின்றனர். ஆனால் இந்தியாவிலோ நிலைமை தலை கீழ். வசதியான நடுத்தர வர்க்க இளைஞர்கள் மக்டோனால்ட்சை மொய்க்கிறார்கள். அங்கே சாப்பிடுவதில் ஒரு பெருமிதம். அமெரிக்காவில் இருந்து எந்த குப்பையை இறக்குமதி செய்தாலும் அவர்களுக்கு இனிக்கும். மேற்குலகில் தோன்றியுள்ள மக்டொனால்ட்ஸ் எதிர்ப்பு அலை பற்றி, இந்திய மேன் மக்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். (நீங்க எல்லாவற்றிலும் too late)

கடந்த பத்தாண்டுகளில் வணிகவியல் படித்த மாணவர்களுக்கு தெரிந்திருக்கும். அவர்களது மார்க்கெட்டிங் வகுப்பில் மக்டோனால்ட்சின் "வெற்றியின் இரகசியம்" பற்றி கற்பித்திருப்பார்கள். அது என்ன பெரிய "மார்கெட்டிங் புரட்சி"? குழந்தைகளை கவர்ந்திழுக்கும் அன்பளிப்புகளை, (மக்டொனால்ட்ஸ் சின்னம் பொறித்த) விளையாட்டுப் பொருட்களை கொடுக்கிறார்கள். அதனால் குழந்தைகளே பெரியவர்களை ரெஸ்டாரன்ட் பக்கம் இழுத்து வருகின்றன.

வழியில் மக்டோனால்ட்சை கண்டால் அங்கே போக வேண்டுமென்று அடம் பிடிக்கும் குழந்தைகள் எத்தனை? குழந்தைகள் வந்தால் கூடவே பணத்துடன் பெற்றோரும் வருவார்கள் என்று அவர்களுக்கு தெரியும். இது ஒன்றும் மகத்தான மார்க்கெட்டிங் கிடையாது. "பிள்ளைகளுக்கு இனிப்புக் கொடுத்து கடத்தும் பிள்ளை பிடிகாரர்களின் கயமைத்தனம்." இப்படிக் கூறுகிறது அமெரிக்காவில் ஆய்வு செய்த Centre for Science in the Public Interest (CSPI).

உணவு உற்பத்தி தொழிற்துறையை ஆய்வு செய்யும் அந்த வெகுஜன நிறுவனம், மக்டொனால்ட்ஸ் நீதியற்ற, ஏமாற்றும் மார்க்கெட்டிங் மூலம் பிள்ளைகளை கவருவதாக குற்றஞ் சாட்டியுள்ளது. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களைக் கொண்டு விளம்பரம் செய்வதானது, நுகர்வோர் பாதுகாப்பை மீறும் செயல் என்று எச்சரித்துள்ளது. பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு சத்தான உணவை சாப்பிட பழக்குவதற்கு மக்டொனால்ட்ஸ் தடையாக இருப்பதாக அது மேலும் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் அடங்கிய கடிதம் மக்டொனால்ட்ஸ் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. எண்ணி முப்பது நாட்களுக்குள் மக்டொனால்ட்ஸ் தனது "பிள்ளை பிடி மார்க்கெட்டிங்கை" நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் வழக்குத் தொடுக்கப்படும். நிச்சயமாக மக்டொனால்ட்ஸ் நிர்வாகம் இது குறித்து மகிழ்ச்சியடைந்திருக்காது. அவர்களைப் பொறுத்த வரையில் நமது குழந்தைகளின் நலன் முக்கியமல்ல, நமது பாக்கெட்டில் உள்ள பணம் தான் முக்கியம்.


References:
McDonald's Lawsuit: Using Toys to Sell Happy Meals
Centre for Science in the Public Interest
Jose Bove - the Man Who Dismantled a McDonalds
Super Size Me - anti McDonald's documentary

10 comments:

Anonymous said...

good work man,this is the only site i read every day.pls try to write one articale one day thanks.

Pragash said...

இந்தியா மட்டும் இல்லை பெரும்பாலான ஆசிய நாடுகளிலும் இதே நிலை தான். மலேசியாவில் கூட அமெரிக்க உணவகங்களில் வரிசை பிடித்து நிற்கிறார்கள்.

Anonymous said...

i have a personal experiance with vegi burgers .and fish burgers .always ive had allergy reactions aftereating them .now ive stopped going there.namma makkalukku veli poochai kandu mayakam. namma urulai podimasukku eedaaguma mc in french fries.

ILLUMINATI said...

நம்ம ஆளுங்க என்னைக்கு சாப்பாட சாப்பாடா பார்க்காம,prestige ஆ பார்க்க ஆரம்பிசானுங்களோ,அன்னிக்கு ஊத ஆரம்பிசானுங்க.இன்னும் நிக்கல.சீக்கிரத்துல நிக்கவும் நிக்காது.
வறட்டு கவரவத்துக்காக உடம்ப கெடுதுப்பேன்னு சொன்னா,கெடுத்துகிட்டு போறானுங்க.விடுங்க பாஸ்.நம்ம ஆளுங்க நெருப்ப தேடி போற பூச்சிங்க.

M. Azard (ADrockz) said...

அருமையான பதிவு, உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

கப்பலோட்டி said...

//நம்ம ஆளுங்க என்னைக்கு சாப்பாட சாப்பாடா பார்க்காம,prestige ஆ பார்க்க ஆரம்பிசானுங்களோ,அன்னிக்கு ஊத ஆரம்பிசானுங்க.இன்னும் நிக்கல.சீக்கிரத்துல நிக்கவும் நிக்காது//

நம்ம ஆட்கள் மேல் தட்டு மக்களை பார்த்து காப்பி அடிப்பதை நிறுத்தவேண்டும்.அவர்கள் செய்வதுதான் சரி என்று நினைக்கும் மனோபவத்தை விட வேண்டும்.

kumar said...

மெக்டோனால்ட் குழந்தைகளை வைத்து பெரியவர்களை காலி செய்கிறது.சரி.பெப்சி,கோக் ....., அமெரிக்கர்களின் மூத்திரத்தை அடைத்து பாட்டிலில் கொடுத்தாலும் இவர்கள் குடிப்பார்கள். இவர்களின் ஆக்டோபஸ்
கரங்கள் கிராமங்கள் வரை நீண்டுவிட்டது.

SAISAYAN said...

ஐரோப்பாவில் , அதிகமாக நமது நாட்டை சேர்ந்தவர்களே இதை தேடி செல்கின்றனர் ,

அது மட்டுமின்றி இவ உணவுகளில் தர குறைபாடு உள்ளது . அதெல்லாம் யாரும் கண்டுக்காதீங்க...!!


நல்லா ஒரு பதிவு ....

priyamudanprabu said...

நல்லா சொன்னீக

Sabarinathan Arthanari said...

புதிய தகவல்கள்

நன்றி