Showing posts with label கிறிஸ்தவ மதம். Show all posts
Showing posts with label கிறிஸ்தவ மதம். Show all posts

Wednesday, July 02, 2014

அரபு - கிறிஸ்தவ இனச் சுத்திகரிப்பு : மேற்குலக "கிறிஸ்தவ" நாடுகள் பாராமுகம்


ஈராக் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில், அரபி மொழி பேசும் கிறிஸ்தவர்கள், இனப்படுகொலை அல்லது இனச் சுத்திகரிப்பு செய்யப் படுகின்றனர். ஆனால், அமெரிக்கா உட்பட எந்தவொரு மேலைத்தேய கிறிஸ்தவ நாடும், அது குறித்து அக்கறையற்று இருக்கின்றன. அரபு நாடுகளில் இருந்து, "கிறிஸ்தவர்களை ஒட்டுமொத்தமாக இனச்சுத்திகரிப்பு செய்வதற்கான சர்வதேச சதி வலை" பின்னப் பட்டுள்ளதாக, குறிப்பாக ஈராக் கிறிஸ்தவர்கள் அஞ்சுகின்றனர்.

ஈராக்கை சதாம் ஹுசைன் ஆண்ட காலத்தில், ஒவ்வொரு பிரஜையும் சர்வாதிகாரிக்கு விசுவாசமாக இருக்கிறார்களா என்பது மட்டுமே முக்கியமாக கருதப் பட்டது. அதனால் கிறிஸ்தவ சிறுபான்மையினர் எந்த தொந்தரவும் இன்றி வாழ அனுமதிக்கப் பட்டனர். 2003 ம் ஆண்டு, அமெரிக்கப் படையெடுப்புடன் நிலைமை தலைகீழாக மாறியது. அமெரிக்கா ஒரு "கிறிஸ்தவ நாடு" என்பதால், ஈராக் கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்புக் கொடுத்திருக்கும் என்று யாராவது அப்பாவித்தனமாக நம்பினால் அவர்கள் ஏமாந்து போவார்கள்.

ஈராக் அமெரிக்கப் படைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த காலத்தில், ஆயிரக் கணக்கான கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள். அந்த சமூகம் பெரும்பான்மையாக வாழ்ந்த இடங்களில், திட்டமிட்ட வகையில் இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டார்கள். உலகில் கிறிஸ்தவ மதம் தோன்றிய காலத்தில் இருந்து நிலைத்து நின்ற, ஆயிரமாண்டுகள் பழமை வாய்ந்த தேவாலயங்கள், குண்டு வைத்து தகர்க்கப் பட்டன. கிறிஸ்தவ பாதிரியார்கள் கொலை செய்யப் பட்டனர். இந்தக் கொடுமைகள் எல்லாம் நடக்கும் பொழுது, அமெரிக்க "கிறிஸ்தவப்" படைகள் என்ன செய்து கொண்டிருந்தன? ஒன்றுமேயில்லை. கையைக் கட்டிக் கொண்டு, நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.

சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில், ஈராக்கில் ஒன்றரை மில்லியன் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தனர். இன்று வெறும் மூன்று இலட்சம் கிறிஸ்தவர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்று விட்டனர். ஈராக் கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையானோர் புராதன கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த அசிரிய கிறிஸ்தவர்கள். சுமார் இரண்டாயிரம் வருடங்களாக, தொடர்ச்சியான வாழிடத்தை கொண்டவர்கள். இன்றைய ஈராக், சிரியாவில் மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த அசிரிய இனத்தவர்களின் வழித்தோன்றல்கள் என்று, ஈராக்கிய கிறிஸ்தவர்கள் தம்மை அழைத்துக் கொள்கின்றனர்.

ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதம் பரவுவதற்கு முன்னரே, ஈராக் ஒரு கிறிஸ்தவ நாடாக இருந்தது. இறைதூதர் முகமது காலத்தில் நடந்த அரேபியப் படையெடுப்புகளின் பின்னரும், கிறிஸ்தவர்கள் ஒரு குறிப்பிட்ட வரியை செலுத்தி விட்டு, அமைதியாக தங்கள் வேலையை பார்க்க முடிந்தது. அனேகமாக, அன்று ஈராக்கில் வாழ்ந்த பெரும்பான்மை கிரேக்க கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டனர்.  ஆனால், அசிரிய கிறிஸ்தவர்கள் தமது தனித் தன்மையை தொடர்ச்சியாக பேணி வருவதாக, இன்றைக்கும் பெருமையாக சொல்லிக் கொள்கின்றனர். 

சதாம் ஹுசைன், அவருக்கு முந்திய இராணுவ சர்வாதிகாரிகள் ஆண்ட காலகட்டத்தில், பாத் கட்சியின் அரபு தேசியவாத சித்தாந்தம் கோலோச்சியது. ஆகையினால், முஸ்லிம்களுடன், கிறிஸ்தவர்களும் ஒரே அரேபிய தேசிய இனத்தை சேர்ந்தவர்களாக கருதப் பட்டனர். பல கிறிஸ்தவர்கள், சதாம் அரசில் முக்கிய பதவிகளை வகிக்கும் அளவிற்கு சுதந்திரம் கிடைத்திருந்தது.

அமெரிக்கர்கள் ஈராக்கில் "ஜனநாயகத்தை கொண்டு வந்து நிலைநாட்டிய பின்னர் தான்", முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு நெருக்கடிகள் தோன்றியுள்ளன. இன, மத முரண்பாடுகள் கூர்மை அடைந்தன. இன்றைய ஈராக்கில் பெயரளவில் மட்டுமே ஒரு ஜனநாயக அரசு இருக்கிறது. ஆனால், ஜனநாயகம் வந்த பின்னர் தான், முஸ்லிம்-கிறிஸ்தவ பகை முரண்பாடுகள் தீவிரமடைந்தன. முஸ்லிம்களுக்கு இடையிலும் சுன்னி - ஷியா பகை முரண்பாடு சமூகத்தை பிளவு படுத்தியுள்ளது. 

மதத்தின் பெயரில், அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப் பட்டனர். அதை விட, ஒவ்வொரு இனக்குழுவும் ஆதிக்கம் செலுத்திய இடங்களில், பிரதேசவாதம் தலை தூக்கியுள்ளது. நிலப்பிரபுக்கள் தமக்கு விசுவாசமான கூலிப் படைகளை வைத்துக் கொண்டு அட்டகாசம் செய்தனர். இவை எல்லாம் அமெரிக்கா கொண்டு வந்த ஜனநாயகத்தின் தீய விளைவுகள். அமெரிக்க ஜனநாயகம், சாதாரண ஈராக் மக்களுக்கு எந்த விதமான நன்மையையும் கொண்டு வரவில்லை. 

ஈராக் போர் தொடங்கிய நாள் முதல், அங்கு வாழும் குர்து இனத்தவரை பாதுகாப்பதற்கு முன்வந்த அமெரிக்கா, எதற்காக கிறிஸ்தவ சமூகத்தை கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வந்தது? ஒவ்வொரு ஈராக்கிய கிறிஸ்தவரும் அன்றாடம் இந்தக் கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால், இது ஒரு சர்வதேச சதியாக இருக்கலாம் என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

மத்திய கிழக்கு அரபு நாடுகள் முன்னொரு காலத்தில் கிறிஸ்தவ நாடுகளாக இருந்த உண்மை வெளியுலகில் பலருக்குத் தெரியாது. இன்றைக்கும் அரபு நாடுகளில் கணிசமான அளவு கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருவது குறித்தும் அறியாமல் இருக்கின்றனர். மேலைத்தேய "கிறிஸ்தவ" நாடுகளில் வாழும் ஐரோப்பிய கிறிஸ்தவர்களுக்கே அந்த அறிவு கிடையாது என்றால், உலகின் பிற பாகங்களில் வாழும் மக்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

ஈராக்கில், சிரியாவில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போர்களில் கிறிஸ்தவர்கள் குறி வைத்து தாக்கப் படுவதும், படுகொலை செய்யப் படுவதும் அதிகரித்து வருகின்றது. இதனால், உயிரச்சம் காரணமாக எஞ்சிய கிறிஸ்தவர்களும் அகதியாக வெளியேறி வருகின்றனர். உண்மையில் அதுவொரு திட்டமிட்ட இனப் படுகொலை அல்லது இனச் சுத்திகரிப்பு. இது குறித்து மேற்குலகம் பாராமுகமாக இருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்க வேண்டும்.

மத்திய கிழக்கு அரபு நாடுகளில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்கள் அனைவரும் வெளியேற்றப் பட்டால், அங்கு ஒரு காலத்தில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்தார்கள் என்ற சுவடுகள் அழிக்கப் பட்டு விடும். பின்னர் அவை, சவூதி அரேபியா போன்று நூறு சதவீத முஸ்லிம் நாடுகளாக மாறி விடும். அதைத் தான், மேற்கத்திய நாடுகளும் எதிர்பார்க்கின்றன. ஏனென்றால், அப்போது தான் கிறிஸ்தவ மதத்தின் பூர்வீகம் ஐரோப்பா என்று உரிமை கோரலாம். இன்றைக்கும் பலர் அப்படித் தான் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Friday, May 10, 2013

கிறிஸ்தவ நாகரிக உலகை நாசமாக்கிய சிலுவைப் படைகள்


[சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்] 
(பாகம் : மூன்று)

அழிவை நோக்கிய போருக்கு ஆள் திரட்டும் பாப்பரசர்

சிலுவைப்போருக்கு ஆள் திரட்டுவதற்காக, பாப்பரசர் உர்பானுஸ் தனது பரிவாரங்களுடன் பிரான்சின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்தார். எதற்காக பிரான்சை தெரிவு செய்தார்கள்? பாப்பரசர்கள் உர்பானுசும், கிரகொரியும் பிராங் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஜெர்மன் சக்கரவர்த்தி காரல் காலத்தில், ஜெர்மனியில் இருந்து வந்து குடியேறி நவீன பிரெஞ்சு மொழி பேசுவோரே "பிராங்" (Frank) இனத்தவர்கள். (அவர்களிடம் இருந்து தான் பிரான்ஸ் என்ற சொல் வந்தது.) முதலாவது சிலுவைப்போரில் நிறைய பிராங் இன வீரர்கள் காணப்பட்டனர். அதனால் மத்திய கிழக்கில், சிலுவைப் போர்வீரர்களை "பிராங்கியர்கள்" என்றும் அழைத்தனர். 

பாப்பரசர் உர்பானுசின் கோரிக்கைக்கு, பலர் செவி சாய்த்தனர்.  அவர் சென்றவிடமெல்லாம், மக்கள் கூட்டம் வரிசையில் நின்று சிலுவைப்படைகளில் சேர்ந்தார்கள். அந்தக் காலத்தில் மன்னர்கள் அரண்மனையை விட்டு வெளியே வருவதில்லையாதலால், குடிமக்களுக்கும் மன்னனைத் தெரியாது. (இன்றிருப்பதைப் போல தொலைக்காட்சி ஊடகம் அன்றிருக்கவில்லை.)  அப்படியான காலத்தில் ஒரு மதத்தலைவர், அதுவும் "ஆண்டவரின் பூலோகப் பிரதிநிதி" பாப்பரசரே நேரில் வருகிறார் என்றால், யார் தான் போக மாட்டார்கள்? எது எப்படியோ, பாப்பரசருக்கு சிலுவைப்படைக்கு ஆள் திரட்டுவதில் சிரமம் இருக்கவில்லை.

சிலுவைப்போருக்கு ஆள் திரட்டும் பிரச்சாரத்தின் பொழுது முஸ்லிம்கள் பற்றிய தவறான கருத்துகள் பரப்பப்பட்டன. "முஸ்லிம் மன்னனின் அரசவையில், தங்கத்திலான கடவுள் சிலைக்கு முன்னால் கிறிஸ்தவர்களின் தலை வெட்டப் படுவதாக,"   அன்றைய  பிரச்சார ஓவியங்கள் தீட்டப்பட்டன. அவற்றை இன்றைக்கும் ஐரோப்பிய நூதனசாலைகளில் காணலாம். "முஸ்லிம்கள் சிலைகளை வணங்குவதில்லை." என்ற சாதாரண அடிப்படைத் தகவலை, ஐரோப்பாவில் அன்றிருந்த அரசியல் /மதத் தலைவர்கள்  அறிந்திருக்கவில்லை. 

சாதாரண கிறிஸ்தவ குடிமக்களின் சிந்தனைப் போக்கை, இங்கே விளக்கத் தேவையில்லை. அன்றைய சராசரி ஐரோப்பியனின் மனோநிலையானது, "கிறிஸ்தவர்கள் மட்டுமே உலகில் நாகரீகமடைந்தவர்கள்" என்று கருதியது. (அதுவே, காலனிய காலகட்டத்தில், "வெள்ளையினத்தவர் மட்டுமே உலகில் நாகரீகமடைந்த இனம்." என்ற கருத்தியலாக மாறியது.) அவர்களை சுற்றியிருந்த அனைத்து மக்களையும், முஸ்லிம்கள், யூதர்கள் போன்ற மதங்களை சேர்ந்தவர்களையும் நாகரீகமடையாத காட்டுமிராண்டிக் கூட்டங்களாக கருதினார்கள்.

ஆனால், உன்னத நாகரீகத்தைக் கொண்டதாக கருதிக் கொண்டவர்கள் தான், போர் விதிகளை மதிக்காது, காட்டுமிராண்டிகளாக நடந்து கொண்டார்கள். எதிரிகளைக் கொன்று, மனித மாமிசம் புசிக்குமளவிற்கு கொடூர மனம் கொண்டிருந்தனர். (அது பற்றிய தகவல்கள் பின்னால் வரும்) அன்றைய ஐரோப்பாவில், நாடாளும் மன்னர்களுக்கு, தமது சொந்த மொழிகளைக் கூட எழுதப் படிக்க தெரிந்திருக்கவில்லை. 

அன்று மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்தவர்களின் பொதுவான அபிப்பிராயத்திற்கு மாறாக, இஸ்லாமிய உலகம் திகழ்ந்தது. பாக்தாத்தில் பல்கலைக்கழகம் அமைத்து, தலைசிறந்த இலக்கியங்களை படைத்துக் கொண்டிருந்தார்கள். ஐரோப்பாவில் மதச்சார்பின்மை தத்துவம் வருவதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே, இஸ்லாமிய உலகில் நாஸ்திக அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள். சிரியாவை சேர்ந்த நாஸ்திக புலவர் அபூ அல் மாரி, சிலுவைப்படைகள் ஜெருசலேமை கைப்பற்றுவதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தான் காலமாகி இருந்தார்.

சிலுவைப்போருக்கு புறப்பட்ட வீரர்கள், ஆரம்பத்திலேயே தமது சுயரூபத்தைக் காட்டி விட்டனர்.முஸ்லிம்களை கொள்வதற்கு முன்னர் யூதர்களை கொன்று ஒத்திகை பார்த்தார்கள். ஜெர்மனியில் பல நகரங்களில் யூதர்களை தேடித்தேடி கொன்றார்கள். பிற்காலத்தில் கிழக்கு ஐரோப்பிய, முஸ்லிம் நாடுகளில் நடத்தவிருக்கும் படுகொலைகளுக்கு முன்னோடியாக, யூதர்களை கொன்று பயிற்சி எடுத்திருப்பார்கள் போலும். 

ஐரோப்பிய வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது யூத இனப்படுகொலைக்கு பின்வரும் காரணங்கள் இருந்திருக்கலாம். 
1. யூதர்கள் தான் இயேசு கிறிஸ்துவை கொன்றார்கள் என்ற மதவெறி. 
2. யூத வணிகர்கள் வசதியாக வாழ்ந்தனர். அவர்களைக் கொன்று பணத்தைக் கொள்ளையடித்து சிலுவைப்போருக்கு நிதி திரட்டினார்கள். சில நகரங்களில் இருந்த கிறிஸ்தவ மதகுருக்கள், யூத இனப்படுகொலையை ஆதரிக்கவில்லை. இருப்பினும் வெறி கொண்ட கூட்டம் அவர்களை ஒரு பக்கம் தள்ளி விட்டு, தனது நரவேட்டையை தொடர்ந்தது. 
(Chazan, Robert (1997). In the Year 1096: The First Crusade and the Jews. Jewish Publication Society)

சிலுவைப்படைகள் புறப்படுகின்றன

சிலுவைப்போருக்கு சென்ற படையினருடன், கூடவே அவர்களது குடும்பங்களும் சென்றன. தமது மதக் கடமையை நிறைவேற்ற விரும்பிய, கணிசமான அளவு யாத்ரீகர்களும் (இயேசு பிறந்த இடத்தை நோக்கி அல்லவா போகிறார்கள்?) சிலுவைப் படைகளுடன் சென்றனர். இதனால் பெருந்திரள் மக்கள் கூட்டத்திற்கு உணவு தேடுவது சிரமமாக இருந்தது. (இன்றைய செர்பிய தலைநகர்) பெல்கிரேட் நகரை அடைந்த பொழுது, அங்கிருந்த (கிறிஸ்தவ) ஆளுனருக்கு, பெரும்படை ஒன்று வரும் விடயம் முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை. அதனால் ஆளுநர், அவர்கள் கேட்ட உணவும், உறைவிடமும் தர மறுத்து விட்டார். அதனால் என்ன? இந்தப் பிரச்சினைக்கு சிலுவைப்படைகளிடம் தீர்வு இல்லையா? நகரம் முழுவதையும் சூறையாடி, வீடுகளுக்கும் நெருப்பு வைத்து விட்டுச் சென்றார்கள். கவனிக்கவும்:  பெல்கிரேட் நகரில் வசித்த குடிமக்களும் கிறிஸ்தவர்கள் தான்.

சிலுவைப் படைகள் கொன்ஸ்டாண்டின் (இன்று: இஸ்தான்புல்) நகரை வந்தடைந்த நேரம், இப்போது தான் வாழ்வில் முதல் தடவையாக, ஒரு நாகரிக உலகத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற விடயம், அன்று அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. கொன்ஸ்டாண்டின் நகரின் பிரமாண்டம் அவர்களை மலைக்க வைத்தது. முழு ஐரோப்பிய கண்டத்திலும், கொன்ஸ்டாண்டின் இரண்டரை லட்சம் மக்கட்தொகையை கொண்ட பெரிய நகரமாக விளங்கியது. அதனோடு ஒப்பிடும் பொழுது, ரோம் முப்பதாயிரம் மக்கட் தொகையையும், லண்டன் பத்தாயிரம் மக்கட் தொகையையும் மக்களையும் கொண்ட, மிகச் சிறிய நகரங்கள். 

சிலுவைப்படையினர் வரும் வழியில், பெல்கிரேட் நகரில் நடத்திய அட்டூழியங்கள், கொன்ஸ்டாண்டின் சக்கரவர்த்தியின் காதுகளை எட்டியிருக்கலாம். அடக்கமாக நடந்து கொள்ளும் படி அறிவுறுத்தி விட்டு, சிலுவைப் போர்வீரர்களை பொஸ்போருஸ் கடலுக்கு அப்பால் கொண்டு சென்று விட்டு விட்டார். பொஸ்போருஸ் கடலுக்கு அப்பால் இருந்த நிலப்பகுதி இன்று துருக்கி என அழைக்கப்படுகின்றது. அன்று அந்தப் பகுதி, இஸ்லாமிய-துருக்கி சக்கரவர்த்தியின் ஆளுமையின் கீழ் இருந்தது. மாலிக் ஷா (மாலிக் (அரபி), ஷா (பார்சி) இரண்டின் அர்த்தமும் மன்னன்.) என்று அழைத்துக் கொண்ட சக்கரவர்த்தியின் சாம்ராஜ்யம், துருக்கி முதல் வட இந்தியா வரை பரவியிருந்தது.

இன்றைய துருக்கியின் பகுதிகளை, மாலிக் ஷாவின் படைகள் கைப்பற்றிய ஆட்சி செய்த காலத்தில், பெரும்பான்மை மக்கள் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். அவர்கள், அக்கரையில் இருந்த கிறிஸ்தவ சக்கரவர்த்தியின் பாதுகாப்பைக் கோரவில்லை. கிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமிய சக்கரவர்த்தியின் ஆட்சியின் கீழ் வாழ்வதில் பெரிய பிரச்சினை எதுவும் இருக்கவில்லை. ஒரு சிறு தொகையை வரியாக செலுத்தி விட்டு மதச் சுதந்திரத்தை காப்பாற்றிக் கொண்டார்கள். அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்த போதிலும், கிரேக்க கிறிஸ்தவ சக்கரவர்த்திக்கு விசுவாசம் காட்டாமைக்கு,  முக்கிய காரணம் ஒன்றுண்டு.

கிறிஸ்தவ மதம் ஸ்தாபன மயப் படுத்தப் பட்ட ஆரம்ப காலங்களில், அது  பல்வேறு பிரிவுகளாக பிரிந்திருந்தது. இன்று நமக்கு எல்லாம் தெரிந்த விவிலிய நூலை ஏற்றுக்கொள்ளாத, தமக்கென சொந்தமாக ஒரு விவிலிய நூலை வைத்திருந்த மதப்பிரிவுகள் இருந்துள்ளன. "ஜாகொபியர்கள்", "நொஸ்தாரியர்கள்" இவ்வாறான பல பிரிவுகள் துருக்கியில் வாழ்ந்தன. அவர்கள் மீது கிரேக்க கிறிஸ்தவர்கள் வன்முறை பிரயோகித்து அடக்கப்பார்த்தார்கள். சக கிறிஸ்தவர்களாலே வேட்டையாடப்பட்டு அழிந்து  கொண்டிருந்த கிறிஸ்தவப் பிரிவுகள், இஸ்லாமிய ஆட்சியின் கீழ் பாதுகாப்பை உணர்ந்ததில் வியப்பில்லை. ஆகவே, மதவெறியோடு பாய்ந்து வந்துள்ள சிலுவைப்படைகளுக்கும் அவர்களது ஆதரவு கிட்டப்போவதில்லை.

இன்றைய இஸ்தான்புள் நகரில் இருந்து 150 கி.மி. தூரத்தில் உள்ளது "நிசெயா" (Nicea). கிளிஜ் அர்ஸ்லன் என்ற துருக்கிய குறுநில மன்னன் ஒருவனால் ஆளப்பட்டு வந்தது. சிலுவைப்படைகளின் முதலாவது தாக்குதல் அந்த இடத்தில் இடம்பெற்றது. செரிகொர்டன் (Xerigordon) என்ற கோட்டை, சிலுவைப்படைகளால் கைப்பற்றப் பட்ட போதிலும் சில நாட்களே அவர்களால் தாக்குப் பிடிக்க முடிந்தது. 

செரிகொர்டன் கோட்டைக்கு வரும் தண்ணீர், வெளியே இருந்து தான் கிடைக்கிறது. அந்த நீர்வழியை துருக்கியர்கள் தடுத்து விட்டனர். சிலுவைப் படைவீரர்கள் தண்ணீர் இன்றி விலங்குகளின் குருதியையும், சிறுநீரையும் குடித்து உயிர்பிழைக்க முயன்றார்கள். இறுதியில் இஸ்லாமியப் படைகளிடம் சரணடைந்தார்கள். மன்னன் அவர்கள் முன் இரண்டு தெரிவுகளை வைத்தான்.  முஸ்லிமாக மதம் மாறி உயிர் பிழைப்பது, அல்லது வீர மரணம். பெருந்தொகை சிலுவைப் படைவீரர்கள் இஸ்லாமிய மதத்தை தழுவினார்கள். கொள்கையில் உறுதியாக நின்ற மற்றவர்கள் வீர மரணத்தை தழுவினார்கள். 
(August. C. Krey, The First Crusade: The Accounts of Eyewitnesses and Participants,)

துருக்கியில் சிலுவைப்படையினருக்கு கிடைத்த அவமானகரமான தோல்வி, பாப்பரசரின் காதுகளை எட்டியது. பாப்பரசர் வேறு வழியின்றி தென் இத்தாலியை ஆண்ட மன்னரின் உதவியை நாடினார். ராபர்ட், தான்கிரெட் என்ற அரச குடும்ப வீரர்கள், சிலுவைப் படைகளை தலைமை தாங்கி வழி நடத்த முன்வந்தார்கள். இவர்கள் நோர்வீஜிய வம்சாவளியினர். அப்போது தென் இத்தாலியில் உள்ள சிசிலி தீவை நோர்மன்கள் எனப்படும் நோர்வீஜிய இனத்தை சேர்ந்தவர்கள் ஆண்டு வந்தனர். ஒரு காலத்தில் வட ஐரோப்பியாவில் இருந்து படையெடுத்த "காட்டுமிராண்டி வைகிங்" பரம்பரையினர். தென் ஐரோப்பாவில் குடியேறியதும் கிறிஸ்தவர்களாகி நாகரீகமடைந்த மனிதர்களாகி விட்டனர்.

சிசிலியை சேர்ந்த நோர்மன் வீரர்கள், சிலுவைப் படைகளுக்கு தலைமை தாங்க முன்வந்த பொழுது வெற்றி உறுதிப்படுத்தப் பட்டது. அதற்கு காரணம் அவர்களிடம், பிற ஐரோப்பியரைப் போல, முஸ்லிம்கள் குறித்த தப்பெண்ணங்கள் இருக்கவில்லை. இன்னும் கூறப்போனால், சிசிலியில் அந்தக் காலத்தில் மசூதிகள் இருந்தன, இஸ்லாமியர்கள் வாழ்ந்தார்கள். சிசிலியை, நோர்மன்கள் அரேபியரிடம் இருந்து கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத் தக்கது. சிறு வயதிலேயே அரேபியரின், முஸ்லிம்களின் கலாச்சாரத்தை அறிந்து வைத்திருந்த தான்கிரெட், அவர்களின் பலத்தையும், பலவீனத்தையும் தெரிந்து வைத்திருந்தான். தான்கிரெட் தலைமை தாங்கிய சிலுவைப் படைகள், அனைத்து தடைகளையும் தாண்டி ஜெருசலேம் வரை சென்றன. அங்கே 200 ஆண்டு காலம் நீடித்த கிறிஸ்தவ ராஜ்ஜியத்தை நிறுவின.

(தொடரும்)


இந்த தொடரின் முன்னைய பகுதிகள்:
1. சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்
2.போப்பாண்டவர் பிரகடனம் செய்த "கத்தோலிக்க புனிதப் போர்"

******************************

 சிலுவைப்போர், கிறிஸ்தவ மத வரலாறு தொடர்பான வேறு பதிவுகள்:
1.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்
2.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
3.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
4.கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...

Friday, April 26, 2013

போப்பாண்டவர் பிரகடனம் செய்த "கத்தோலிக்க புனிதப் போர்"

[சிலுவைப் போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்]

(பாகம் : இரண்டு)


கிறிஸ்தவ - ரோம சாம்ராஜ்யத்தின் புத்துயிப்பு

சிலுவைப்போர் எதற்காக நடந்தது? என்ற கேள்விக்கு விடை காண  வேண்டுமானால்,  நாங்கள்  பத்தாம் நூற்றாண்டிலிருந்த  இத்தாலிக்கு திரும்பிச் செல்ல வேண்டும். அங்கே தான், பல லட்சம் உயிர்களைக் காவு கொண்ட மாபெரும் உலகப்போர், (சிலுவைப் போர்) கருக் கொண்டது. அன்றிருந்த மக்களின், ஆட்சியாளர்களின் மன நிலையை புரிந்து கொள்வதற்கு, அன்றைய பூகோள அரசியலை ஆராய்ந்து பார்க்க வேண்டும். கிறிஸ்தவ மதம் எழுச்சி பெற்றதால், ரோம சாம்ராஜ்யம் அழிந்ததாக வரலாறு இன்று திரிக்கப்பட்டுள்ளது. ஆதி கிறிஸ்தவர்களை, ரோம சக்கரவர்த்திகள் அழிக்க நினைத்த செயலுக்கு எதிர்வினையாக, அந்தப் பிரச்சாரம் பரப்பப்பட்டது. உண்மையில் ரோம சாம்ராஜ்யத்தை கிறிஸ்தவ - வத்திகான் மடாதிபதிகள் நிர்வகித்து வந்தார்கள்.

வேறொரு வடிவத்தில், பாப்பரசர் (போப்பாண்டவர்) மதத் தலைவராகவும், அதே நேரம் பல்வேறாக பிரிந்திருந்த ஐரோப்பிய நாடுகளின் உத்தியோகபூர்வ அரசியல் தலைமைப் பதவியை வகித்து வந்தார். இங்கிலாந்து மன்னன் என்றாலும், ஜெர்மன் சக்கரவர்த்தி என்றாலும், பாப்பரசருக்கு விசுவாசமாக இருந்தனர். அல்லது அப்படிக் காட்டிக் கொண்டனர். அதிகாரப்போட்டியால் சில நேரம் பாப்பரசரும் சிறையில் அடைக்கப்படும் நிலை இருந்தது. இதைத் தவிர குறு நில மன்னர்கள் ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையில்லாமல் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். கிரேக்க மொழி பேசும் கீழைத்தேய கிறிஸ்தவ மரபைக் கொண்ட ராஜ்ஜியம் மட்டும் நிலையான அரசைக் கொண்டிருந்தது. ஆனால் அவர்களுக்கு கத்தோலிக்க வத்திகானுடன் கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருந்தன.

மன்னர்கள் மட்டுமல்ல, தேவாலயங்கள் கூட ஒரே நிலைப்பாட்டில் இருக்கவில்லை. கத்தோலிக்க மத நிறுவனத்தின் பிரதேசத் தலைவர்கள் தம் இஷ்டப்படி நடந்து கொண்டார்கள். ரோமாபுரியில் இருந்த பாப்பரசரால் அனைவரையும் தனது அதிகாரத்தின் கீழ் ஒன்று சேர்க்க முடியவில்லை. சுருக்கமாக சொன்னால், ஐரோப்பிய அரசியல் சக்திகள் அனைத்தும் பாப்பரசரின் தலைமையை வாயளவில் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அவர்களை உணர்வுபூர்வமாக ஒன்றிணைக்கும் கோட்பாடு எதுவும் இருக்கவில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு அன்றைய பாப்பரசர் கிரகொரியஸ் ஒரு திட்டம் வைத்திருந்தார். அந்தோ பரிதாபம், கிரகொரியசின் கனவு நிறைவேறுவதற்குள் அவர் மண்டையைப் போட்டு விட்டார்.

கிரகொரியசுக்கு அடுத்ததாக பதவிக்கு வந்த உர்பனுஸ் அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். 27 நவம்பர் 1095, பிரான்ஸ் நாட்டின் கிலேர்மொன்ட் நகரம். கிலேர்மொன்ட் நகரத்தில் அமைந்துள்ள கம்பீரமான தேவாலயத்தில் அன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தார்கள். மேடையில் முக்கியமான மதத் தலைவர்கள் அனைவரும் வீற்றிருந்தார்கள். அன்று அங்கு வருகை தந்துள்ள பாப்பரசர் உர்பானுஸ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரை நிகழ்த்தவுள்ளதாக வதந்தி பரவியிருந்தது.

உர்பனுஸ் பேச எழுந்தார்: "  மதிப்புக்குரிய கத்தோலிக்க மகாஜனங்களே! பிசாந்தின் (கிரேக்க ராஜ்ஜியம்) தலைநகர் கொன்ஸ்டான்டின் (இன்று: இஸ்தான்புல்) இலிருந்து எனக்கு ஒரு மடல் வந்துள்ளது. பிசாந்தின் சக்கரவர்த்தி என்னிடம் படை உதவி கேட்டு எழுதியுள்ளார். அவரது ராஜ்ஜியம் காட்டுமிராண்டி முஸ்லிம்களால் தாக்கப்பட்டு வருகின்றது. பிசாந்தின் சக்கரவர்த்திக்கு உதவுவதன் மூலம், முஸ்லிம்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள புனித மண்ணான ஜெருசலேமையும் மீட்டெடுக்கலாம்." 

அவரது உரையை ஆமோதித்த கூட்டம், "வேண்டும், வேண்டும்... எமக்கு புனிதப்போர் வேண்டும்!" என்று கோஷம் எழுப்பியிருக்குமா? என்று எமக்குத் தெரியாது. ஆனால், உர்பானுசின் உரை ஏறக்குறைய புனிதப் போரின் பிரகடனமாக அமைந்திருந்தது.

பாப்பரசரின் உரையின் பின்னணியை சற்று ஆராய்வோம். ஆரம்ப காலங்களில் கிறிஸ்தவ மத சபைகள்  அனைத்தையும் நிர்வகிக்கும், ஒரு பொதுவான தலைவர் இருக்கவில்லை. அந்தந்த பிரதேசங்களில் இருந்த தேவாலயங்கள், தமக்குள் ஒரு தலைவரை தெரிந்தெடுத்தார்கள். ரோமாபுரியில் பாப்பரசர் என்று ஒருவரின் தலைமையின் கீழ் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களையும் ஒன்றிணைக்கும் முயற்சிக்கு, கிழக்கே இருந்து எதிர்ப்பு கிளம்பியது. 

அரசியல் தலைமைத்துவ பிரச்சினை வலுக்கவே, கிறிஸ்தவ மதத்தினுள் இரண்டு பிரிவுகள் தோன்றின. மேற்கே ரோமாபுரியின் ஆட்சியின் கீழான கத்தோலிக்க பிரிவு. கிழக்கே மரபுவழி கிறிஸ்தவ பிரிவு. இரண்டுக்கும் இடையில் வழிபடும் முறை மட்டுமே வித்தியாசம். கத்தோலிக்கம் ரோமர்களின் மத வழிபாட்டை பின்பற்றியது. இதே நேரம் கிழக்கில், கிரேக்கர்களின் பண்டைய "கோயில் வழிபாட்டு முறை" பேணப்பட்டது. மற்றும் படி, இரண்டுக்கும் இடையில் பெரிதாக கோட்பாட்டு பிரச்சினை எதுவும் கிடையாது. இரண்டு பிரிவுகளும் இப்போதும் ஒரே பைபிளைத் தான் பயன்படுத்துகின்றன. (கி.பி. 100 - 200 காலகட்டத்தில் பல கோட்பாட்டு பிரச்சினைகள் உருவாகின. "பிதா, சுதன், பரிசுத்த ஆவி" குறித்த சர்ச்சைகள்,  "இயேசு கிறிஸ்து கடவுளா, மனிதனா?" என்பது குறித்த வாதங்கள் நடந்துள்ளன. இதனால் மூன்று குழுக்கள் பிரிந்து, உயிர் குடிக்கும் எதிரிகளாக மாறிய வரலாறு ஒன்றுண்டு.) 

இன்றுள்ள கிரீசும், துருக்கியும் சேர்ந்தது தான், "கிரேக்க - கிறிஸ்தவ ராஜ்ஜியம்" ஆகும். அந்த ராஜ்ஜியத்திற்கு, கிழக்கே இருந்து, படையெடுப்பு குறித்த அச்சுறுத்தல்கள் வந்த படி இருந்தன. மத்திய ஆசியாவில் இருந்து படையெடுத்து வந்த துருக்கி இன படையணிகள் போகுமிடமெல்லாம் அழிவை ஏற்படுத்தி வந்தன. அவர்களின் அசாதாரணமான, மூர்க்கமான படைநகர்வுகளால் ராஜ்யங்கள் மண்டியிட்டன. படையெடுத்து வரும் வரை காட்டுமிராண்டிக் குழுக்களாக இருந்த துருக்கி இனங்கள், தாம் அழித்த பாக்தாத் நகரின் சிறப்பை பின்னர் தான் உணர்ந்து கொண்டார்கள். அதிலிருந்து இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டனர்.

பிற்காலத்தில், செல்ஜுக் துருக்கி இன வீரர்கள் பாக்தாத் பேரரசரின் விசுவாசமான சிறப்புப் படையணியில் பணியாற்றினார்கள். புதிதாக இஸ்லாமியராக மாறிய துருக்கிய இனங்கள், இன்றைய துருக்கியின் பல பகுதிகளை கைப்பற்றியதுடன், கொன்ஸ்டாண்டின் நகருக்கு அச்சுறுத்தலாக விளங்கினார்கள். செல்ஜுக் துருக்கியர்கள் எந்த நேரம் படையெடுத்து வருவார்களோ என்ற கலக்கத்தில் இருந்த சக்கரவர்த்தி வத்திகானிடம் படை உதவி கேட்டு ஓலை அனுப்பியிருக்கிறார்.

அநேகமாக, கொன்ஸ்டாண்டின் சக்கரவர்த்தி தனது படைகளை வலுப்படுத்தும் முகமாக, மேற்கத்திய கூலிப்படை ஒன்றை எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் கிலேர்மொன்ட் பிரகடனத்தை வாசித்த பாப்பரசர் உர்பானுஸ் மனதில், பல சூழ்ச்சிகள் உருவாகின. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது அரசியல் அதிகாரத்தை ஸ்திரப்படுத்த விரும்பினார். சக்கரவர்த்தி கேட்ட துணைப்படை அனுப்புவதற்குப் பதிலாக, தன்னிச்சையாக செயற்படக் கூடிய, மதவெறியூட்டப்பட்ட படைகளை உருவாக்கினார். அந்தப் படைகளின் குறிக்கோள்,"முஸ்லிம்களிடம் இருந்து ஜெருசலேமை விடுதலை செய்வது" என்று தன்னை நம்பியவர்களை மூளைச்சலவை செய்தார்.

புனிதப்போருக்கு புறப்படும் படையில் யாரும் இணையலாம். இராணுவப் பயிற்சி பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டோரும் வந்து சேர்ந்தனர். தலைமைப் பொறுப்பில், சிறந்த இராணுவப் பயிற்சி பெற்ற குதிரைவீரர்கள் நிச்சயம் இருந்திருப்பார்கள்.  அவர்களில் பலர் அரச குடும்பங்களில் இருந்தும் வந்திருந்தார்கள். ஜெருசலேமை நோக்கிச் சென்ற படைகள் சிலுவைகளின் பின்னால் அணிவகுத்துச் சென்றனர். அவர்களின் சீருடைகளில் சிலுவைக்குறி பொறிக்கப்பட்டிருந்தது. பிற்காலத்தில் "சிலுவைப்போர்" என்ற சொற்பதம் தோன்றுவதற்கும் அதுவே காரணம்.

(தொடரும்)



இந்த தொடரின் முன்னைய பகுதிகள்:
1. சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல் 

******************************

 சிலுவைப்போர், கிறிஸ்தவ மத வரலாறு தொடர்பான வேறு பதிவுகள்:
1.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்
2.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
3.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
4.கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...

Tuesday, April 23, 2013

சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்


(பாகம் -1)

சிலுவைப்போரின் பூகோள அரசியல் பின்னணி

15 ஜூலை 1099, ஜெருசலேம் நகரம். மும் மதத்தவர்களுக்கும் புனித நகரமான ஜெருசலேம் அன்று பிண நகரமாக மாறியது. வரலாற்றில் இடம்பெற்ற மாபெரும் இனப்படுகொலைக்கு சாட்சி சொல்லப் பயந்து சூரியனும் அஸ்தமித்தது. பெண்களும், குழந்தைகளுமாக குறைந்தது ஏழாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். சரியான இறந்தவர் எண்ணிக்கை இன்று வரை யாருக்கும் தெரியாது. இரத்த ஆறு ஓடியது என்று சொல்வார்கள். அதை அங்கே நேரே கண்ட ஒருவரின் சாட்சியம் இது: "எங்கு பார்த்தாலும் பிணங்களின் குவியல். முழங்கால் அளவு இரத்த ஆற்றுக்குள் மிதந்து கொண்டிருந்த பிணங்களை அகற்றி விட்டு போவது சிரமமான காரியமாக இருந்தது."

அன்று பிணக்காடாக மாறிய அல் அக்சா மசூதி இன்றைக்கும் ஜெருசலேம் நகரில் உள்ளது. அந்த துன்பியல் சம்பவம் நடைபெற்ற அன்று, வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான முஸ்லிம்கள் தொழுகைக்காக வந்திருந்தார்கள். அன்று மதியமே ஐரோப்பாவில் இருந்து வந்த கிறிஸ்தவப் படைகள் ஜெருசலேம் நகரை கைப்பற்றி விட்டதால், பிற நகரவாசிகளும் மசூதிக்குள் அடைக்கலம் புகுந்திருந்தார்கள். முஸ்லிம்கள் மட்டுமல்ல, ஜெருசலேமில் வாழ்ந்த யூதர்களும், கிறிஸ்தவர்களும் அல் அக்சா மசூதியை பாதுகாப்பான புகலிடமாக கருதினார்கள். மசூதிக்குள் இருந்த ஜெருசலேம்வாசிகள் ஐரோப்பியப் படைகளின் முன்னால் உயிர்ப்பிச்சை கேட்டு மண்டியிட்டார்கள். 

அவர்கள் கேட்ட பொன்னும், பொருளும் கொடுத்து விட்டு, விடுதலைக்காக காத்திருந்தார்கள். விலைமதிப்பற்ற பொருட்களை வாங்கிக் கொண்ட கிறிஸ்தவப் படைகள், அதற்காகவேனும் மனம் இரங்கி அப்பாவிகளை வாழ விடவில்லை. பொழுது சாய்ந்ததும் மசூதியின் கதவுகளை மூடி விட்டு, அனைவரையும் கொன்று குவித்தார்கள். ஒரு மனிதப் பேரவலம் நடந்து முடிந்த அடுத்த கணமே, "லத்தீன் ஜெருசலேம் ராஜ்ஜியம்" பிரகடனம் செய்யப்பட்டது. இந்த "மகிழ்ச்சிகரமான செய்தியை" பாப்பரசருக்கு அறிவிக்க ஒரு தூதுவர் ரோமாபுரி நோக்கி பயணமானார். (The Damascus Chronicle of the Crusades: Extracted and Translated from the Chronicle of Ibn Al-Qalanisi. Dover Publications, 2003 )

சிலுவைப்போர் என்ற சொல், இன்றைக்கும் உணர்ச்சிகளை கிளறி விடுகின்றது. முன்னால் அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஒரு தடவை, "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை சிலுவைப்போர்" என்று வர்ணிக்க, உலகம் முழுவதும் கண்டனங்களை எதிர்கொண்டது. முஸ்லிம்களின் மனதை புண்படுத்தியதால், சிலுவைப்போர் என்று வாய்தவறி சொல்லி விட்டதாக, புஷ் வாபஸ் வாங்க வேண்டி நேரிட்டது. மேற்குலகில் சிலுவைப்போர் வெறும் மதம் சார்ந்த போராக மட்டுமே கருதப்படுகின்றது. ஆனால் மத்திய கிழக்கில் அது பழைய ரணங்களை கிளறி விடுகின்றது. 

நீண்டகாலமாக, சிலுவைப்போரில் ஈடுபட்டவர்களை மேற்குலகம் வீர புருஷர்களாக மதித்தது. ஆனால் மத்திய கிழக்கின் அபிப்பிராயம் முற்றிலும் மாறுபட்டது. "காட்டுமிராண்டிகள், கொடியவர்கள், கொலைபாதகர்கள், கொள்ளைக்காரர்கள், பெண்களின் கற்பை சூறையாடியவர்கள்."   இவ்வாறு தான், அரேபியர்கள் எழுதி வைத்துள்ள சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. ஜெருசலேமை மீட்பது என்ற பெயரில், பாப்பரசர் அனுப்பிய படைகள் கிறிஸ்தவ மதம் என்ற உன்னத குறிக்கோளுடன் சென்றதாக மேற்குலகில் பலர் நம்புகிறார்கள். ஆனால் அவர்கள் சென்ற வழியெங்கும் படுகொலைகளும், கொள்ளயிடலும் தாராளமாக இடம்பெற்றன. இன்றைக்கும் கிரேக்கம் முதல் பாலஸ்தீனம் வரையிலான பிரதேச மக்கள் இந்தக் கதைகளை தமது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்.

நான் இங்கே கூறப்போகும் தகவல்கள் பலரை முகம் சுளிக்க வைக்கலாம். "ஆதாரம் உண்டா?" என்று கேட்டு விதண்டாவாதம் செய்ய வருவார்கள். ஒரு மூடுண்ட சமூகத்திற்குள் வாழ்பவர்கள், "கிறிஸ்தவ எதிர்ப்பாளன்" என்று அவதூறு செய்யலாம். இவற்றிற்கு எல்லாம் காரணம், சிலுவைப்போர் பற்றிய ஆழமான பக்கச்சார்பற்ற ஆய்வு தமிழில் கிடைப்பது அரிது. கிறிஸ்தவ மதத்தின் இருண்ட பக்கமாக கருதப்படும் சிலுவைப்போர் பற்றிய எதிர்மறையான தகவல்கள், கிறிஸ்தவ சிறுபான்மையினரின் எதிர்ப்பை சம்பாதிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. 

சிலுவைப்போரின் பின் விளைவாகத் தான் இந்திய உப கண்டத்தில் கிறிஸ்தவ மதம் பரவியது. காலனிய ஆட்சியாளர்கள் கிறிஸ்தவ மதத்துடன், மேற்குலக அரசியல் கொள்கைகளை புகுத்தினார்கள். அந்த அரசியலின் பின்னணியில் இருந்து தான் எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றனவே அன்றி, கிறிஸ்தவ மத நம்பிக்கையினால் அல்ல. ஏனெனில், சிலுவைப்போர்களினால், முஸ்லிம்கள் மட்டுமல்ல, யூதர்களும், கிறிஸ்தவர்களும் கூட  பாதிக்கப்பட்டார்கள். இன்னும் சொல்லப் போனால், சிலுவைப் போர்வீரர்கள், முஸ்லிம்களை படுகொலை செய்வதற்கு முன்னர், (கிரேக்க) கிறிஸ்தவர்களை  படுகொலை செய்தார்கள்! அதற்கு முன்னர், ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களை படுகொலை செய்தார்கள்!! ஐரோப்பிய வரலாற்றில் இடம்பெற்ற, முதலாவது யூத இனப்படுகொலையை நடத்தியது ஹிட்லர் அல்ல! மாறாக, போப்பாண்டவருக்கும், சிலுவைப்போர்வீரர்களுக்கும், அந்தப் பெருமை போய்ச் சேருகின்றது!!!

சைப்ரஸ் தீவின் கேந்திர முக்கியத்துவம் சிலுவைப்போர் காலத்திலேயே அறியப்பட்டிருந்தது. வெனிஸ் நாட்டில் (இன்று இத்தாலியில் ஒரு நகரம்) இருந்து சென்ற சிலுவைப் படைகள் அந்த தீவை கைப்பற்றி கோட்டைகளை அமைத்திருந்தன. சைப்ரஸ் தீவில் இருந்து லெபனான், அல்லது இஸ்ரேல் கூப்பிடு தொலைவில் உள்ளன. இதனால் அங்கிருந்து தான் கடல்மார்க்கமாக சிலுவைப் படைகள் ஜெருசலேம் மீது படையெடுத்தன. சைப்ரசில், லிமாசொல் நகருக்கு அருகில் கொலோசி என்ற இடத்தில் சிறிய கோட்டை உள்ளது. இன்றைக்கும் நல்ல நிலையில் காணப்படும் அந்த பாதுகாப்பு அரணில் சிலுவைப்படைகள் தங்கியிருந்தன. 

நான் சைப்பிரசில் தங்கியிருந்த காலத்தில், கொலோசி கோட்டைக்கு சுற்றுலாப் பயணம் சென்றிருக்கிறேன். போகும் வழியில் சந்திக்கும் சைப்ரஸ்காரர்கள், அந்த இடத்தை பற்றிய சரித்திரக் கதைகளை கூறத் தொடங்கி விடுவார்கள். சாதாரண டாக்சி சாரதி முதல், கடைச் சிப்பந்தி வரை சிலுவைப்போர் கதைகளை வெளிநாட்டவர்களுக்கு கூறுவதற்கு விரும்புகின்றனர். லிமசோல் மாவட்டத்தில், அதாவது தென் சைப்ரசில் வாழும் மக்கள் அனைவரும் நூறு வீதம் (கிரேக்க) கிறிஸ்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நான் சந்தித்த யாருமே சிலுவைப்போர் குறித்து நல்ல வார்த்தை கூறவில்லை. "சிலுவைப் போர்வீரர்கள் உண்மையான கிறிஸ்தவர்கள் அல்ல. கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், மொத்தத்தில் காட்டுமிராண்டிகள்!" இது தான் அங்கு நிலவும் பொதுவான கருத்து.

சிலுவைப்போர் குறித்து இன்றைக்கும் போதுமான அளவு தகவல்கள் மக்களை போய்ச் சேரவில்லை. மேற்கு ஐரோப்பாவில் அறுபதுகளில் வீசிய மதச்சார்பற்ற அலை, கடந்த காலத்தை மீள் ஆய்வுக்குட்படுத்தியது. இரண்டாயிரம் வருட வரலாற்றில் ஐரோப்பியர்கள் தமது கிறிஸ்தவ பாரம்பரியத்தில் இருந்து விலகிச் சென்றனர். சுதந்திரமான தகவல் பரிமாற்றமே உண்மையை கண்டுபிடிக்க எதுவாக இருக்கும். ஆகவே மேற்கத்திய அறிஞர்கள் சிலுவைப்போர் குறித்த மத்திய கிழக்கு மக்களின் கருத்துகளை கேட்க ஆரம்பித்தார்கள். அது பற்றி எழுதப்பட்ட அரபி சரித்திர நூல்களை மொழிபெயர்த்தார்கள். 

தற்போது, மேற்கு ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் திருத்தப்பட்ட ஐரோப்பிய சரித்திரம் போதிக்கப்படுகின்றது. சிலுவைபோரின் விளைவாக ஏற்பட்ட அழிவுகள், வன்கொடுமைகளை பற்றி புதிய தலைமுறை படிக்கின்றது. இவற்றைப் படிப்பதாலோ, பேசுவதாலோ, இங்கே யாரும் "கிறிஸ்தவ எதிர்ப்பாளன்" என்று முத்திரை குத்தப்படுவதில்லை. மாறாக 2000 ம் ஆண்டு, சிலுவைப்போர் கால குற்றங்களுக்காக வத்திக்கான் பொறுப்பேற்றுக் கொண்டது. Mea Culpa (எனது குற்றம்) என்ற பெயரில் பாப்பரசர் பகிரங்கமாக பாவமன்னிப்புக் கேட்டார். ஆகவே இந்தக் கட்டுரைகளில் எழுதியிருப்பதை எல்லாம் உண்மை என்று வத்திகானே ஒப்புக் கொண்ட பிறகு, "ஆதாரம் உண்டா?" என்று என்னிடம் கேட்பதில் அர்த்தமில்லை.

(தொடரும்)


*********************************************

சிலுவைப்போர், கிறிஸ்தவ மத வரலாறு தொடர்பான வேறு பதிவுகள்:
1.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்
2.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
3.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
4.கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...

Sunday, March 31, 2013

ஏசு கிறிஸ்துவுக்கு சம்பந்தமில்லாத ஈஸ்டர் பண்டிகை!


இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப் பட்டு மரணிக்கவில்லை! சிலுவையில் அறைந்து சில மணிநேரங்களின் பின்னர், குற்றுயிராகக் கிடந்த இயேசு இறக்கி விடப் பட்டு, உயிர் பிழைத்து எழுந்தார். அதன் பிறகு நீண்ட காலம் உயிரோடு வாழ்ந்தார். இன்றைக்கும் பலர், இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப் படவில்லை என்று நம்புகின்றனர். அதற்கு, அவர்கள் நிறைய காரணங்களை கூறுகின்றனர். 

இயேசுவை ஆணியால் அறைந்த காரணத்தினால், இரத்தப் பெருக்கு ஏற்பட்டு, மூச்சடக்கி மரணமடைந்திருக்கலாம் என்று தான் பொதுவாக நம்பப் பட்டது. இன்று, பிலிப்பைன்ஸ், மெக்சிகோ ஆகிய நாடுகளில் உள்ள சில கிறிஸ்தவ பக்தர்கள், ஒவ்வொரு வருடமும் பெரிய வெள்ளி அன்று, தம்மை சிலுவையில் அறைந்து கொள்கின்றனர். சில மணி நேரங்களின் பின்னர், ஆணிகள் அகற்றப்பட்டு, சிலுவையில் இருந்து இறக்கி விடப் படுகின்றனர். இன்று வரையில் யாரும் சிலுவையில் சாகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
அதாவது, சிலுவையில் ஆணியால் அறையப் பட்டாலும், சில மணிநேரங்களில் மரணம் சம்பவிக்க வாய்ப்பில்லை. அதற்கு நாள் கணக்காகலாம். மேலும், இந்தியாவில் சில யோகிகள், இறந்தது போல மூச்சடக்கி வைத்திருக்கும் யோகா பயிற்சியை செய்து காட்டியுள்ளனர். 

இயேசு முப்பது வயதில் பிரசங்கம் செய்யத் தொடங்குவதற்கு முந்திய காலத்தை பற்றி, விவிலிய நூலில் எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால், இன்றுள்ள விவிலிய நூலில் சேர்த்துக் கொள்ளப் படாத சில நூல்கள் உள்ளன. "ஞானிகள்" (கிரேக்க மொழியில் ஞோஸ்தி, http://en.wikipedia.org/wiki/Gnosticism) என்ற கிறிஸ்தவ பிரிவினர், அந்த காலகட்டத்தில் இயேசு இந்தியா சென்றிருந்தார் என்றும், அங்கு இறையியல், யோகா போன்றவற்றை பல முனிவர்களிடம் இருந்து கற்றறிந்து கொண்டதாக நம்புகின்றனர்.

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவானவர், மரணிப்பதற்கு சில மணித் துளிகளுக்கு முன்னர், " என் இறைவா, என் இறைவா, என்னை ஏன் கைவிட்டீர்?" என்று தனது இயலாமையை ஆண்டவரிடம் முறையிட்டதாக விவிலிய நூலில் எழுதப் பட்டுள்ளது. இன்றைக்கும் கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள், இயேசுவின் கூற்றை மேற்கோள் காட்டி பேசுவது வழக்கம். அந்தப் பிரபலமான வாக்கியம், உண்மையில் (யூதர்களின் பைபிளான) பழைய ஏற்பாட்டில் எழுதப் பட்டுள்ளது. தாவீது மன்னன் எழுதிய, திருப்பாடல்கள் என்ற நூலில் உள்ளது. சிலுவையில் அறையப்பட்ட இயேசு, திருப்பாடல்களில் ஒன்றை பாடியிருக்க வேண்டும்.
" என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?"   (திருப்பாடல் 22-1, திருவிவிலியம்) 

பழைய ஏற்பாட்டில், திருப்பாடல்களில், தாவீது மன்னன் எழுதிய பாடல் வரிகள், இயேசு சிலுவையில் அறையப்பட்ட சம்பவத்தை எமக்கு நினைவு படுத்துகின்றன!  அப்படி  என்ன எழுதியிருக்கிறது என்பதை, நீங்களாகவே வாசித்து அறிந்து கொள்ளுங்கள்:

 " நானோ ஒரு புழு, மனிதனில்லை; 
மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்; 
மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்.
என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; 
உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து, 
" ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும், தாம் அன்பு கூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்","  என்கின்றனர். 
என்னைக் கருப்பையினின்று வெளிக் கொணர்ந்தவர் நீரே; 
என் தாயிடம் பால் குடிக்கையிலேயே என்னைப் பாதுகாத்தவரும் நீரே! 
கருப்பையிலிருந்தே உம்மைச் சார்ந்திருந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் என் இறைவன் நீரே! 
என்னை விட்டுத் தொலையில் போய் விடாதேயும்; 
ஏனெனில், ஆபத்து நெருங்கி விட்டது; 
மேலும், உதவி செய்வார் யாருமில்லை. 
காளைகள் பல என்னைச் சூழ்ந்து கொண்டுள்ளன; 
பாசானின் கொழுத்த எருதுகள் என்னை வளைத்துக் கொண்டன. 
அவர்கள் என்னை விழுங்கத் தங்கள் வாயை அகலத் திறக்கின்றார்கள்; 
இரை தேடிச் சீறி முழங்கும் சிங்கம்போல் பாய்கின்றார்கள். 
நான் கொட்டப்பட்ட நீர் போல் ஆனேன்; 
என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின; 
என் இதயம் மெழுகு போல் ஆயிற்று; 
என் உள்ளுறுப்புகளின் நடுவே உருகிப் போயிற்று. 
என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது; 
என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது; 
என்னைச் சாவின் புழுதியிலே போட்டுவிட்டீர். 
தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது; 
நாய்கள் என அவர்கள் என்னைச் சூழந்து கொண்டார்கள்; 
என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள். 
என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம்; 
அவர்கள் என்னை முறைத்துப் பார்க்கின்றார்கள். 
என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்; 
என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர். 
நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலைவில் போய் விடாதேயும்; 
என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். 
வாளுக்கு இரையாகாதபடி என் உயிரைக் காத்தருளும்; 
இந்த நாய்களின் வெறியினின்று என் ஆருயிரைக் காப்பாற்றும்;
இந்தச் சிங்கங்களின் வாயிலிருந்து என்னைக் காப்பாற்றும்; 
காட்டெருமைகளின் கொம்புகளில் சிக்கியுள்ள என்னைக் காத்தருளும்."   
(திருப்பாடல் 22:6-21, திருவிவிலியம்)


இயேசு இறந்த பின்னர், அவரை சிலுவையில் இருந்து இறக்கி கீழே வைத்ததாக, பைபிளில் எழுதப் பட்டுள்ளது. ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமான பாலஸ்தீனத்தில், யூதர்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்தனர்.  வெள்ளி மாலை, யூதர்களின் "சபாத்" (ஹீபுரு மொழியில்: சனிக்கிழமை) பண்டிகை நாள் ஆரம்பமாகின்றது. கிறிஸ்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை போன்று, முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை போன்று, யூதர்களுக்கு சனிக்கிழமை (சபாத்) புனித நாளாகும். 

அன்றைய காலங்களில், பாலஸ்தீனத்தை ஆண்ட ரோமர்கள், யூத மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்து, வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்ட கைதிகள் அனைவரையும் சபாத் வருவதற்கு முன்னர், சிலுவையில் இருந்து இறக்கி விடுவார்கள். ஆகவே, ஒரு வெள்ளிக்கிழமை பிற்பகல் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை, எப்படியும் அன்று மாலைக்குள் அவிழ்த்து விட்டிருப்பார்கள். 

அப்படிப் பார்த்தால், அன்று இயேசு சில மணி நேரங்களே சிலுவையில் தொங்கியிருப்பார். அதற்குள், ஒரு சராசரி மனிதனுக்கு மரணம் சம்பவிக்க வாய்ப்பில்லை. அன்றைய காலத்தில் இருந்த ரோமர்களின் தண்டனை முறைகளை வைத்துப் பார்க்கும் பொழுது, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப் பட்டிருக்க வாய்ப்பில்லை என்று, பல அறிஞர்களும் ஆய்வு செய்து கூறியுள்ளனர். (Jesus did not die on cross, says scholar, http://www.telegraph.co.uk/news/religion/7849852/Jesus-did-not-die-on-cross-says-scholar.html)  

ஆபிரஹாம் முதல் முகமது வரையிலான இறைதூதர்கள் வரிசையில், இயேசுவையும் ஏற்றுக் கொள்ளும் முஸ்லிம்களும், இயேசு சிலுவையில் கொல்லப் படவில்லை என்றே நம்புகின்றனர். திருக்குரானிலும் அதனை உறுதிப் படுத்தும் வாசகங்கள் உள்ளன.


"மரியாளின் புதல்வனும், இறைத்தூதருமான ஈசா (கிறிஸ்து)வை, அவர்கள் கொன்றதாக சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் அவரைக் கொல்லவில்லை, அவர்கள் சிலுவையில் அவரது மரணத்தை உண்டாக்கவில்லை..."  (திருக் குரான் 4:157)


குரானிலும், அரபு மொழியிலும் "ஈசா" என்ற சொல்லால், இயேசு கிறிஸ்துவை அழைக்கின்றனர். (ஈசா என்பது, ஈசன் என்ற சம்ஸ்கிருத/தமிழ்ச் சொல்லை ஒத்திருப்பதை கவனிக்கவும்.) பழைய ஹீபுரு அல்லது அராமி மொழியில், இயேசுவை யாசு (Yazu) என்று அழைப்பார்கள். (யேசுஸ் என்ற கிரேக்க சொல்லில் இருந்து தான், ஆங்கிலச் சொல்லான "ஜீசஸ்" வந்தது.) இதிலே சுவாரஸ்யமான விடயம் என்னவெனில், காஷ்மீரில், ஸ்ரீநகர் நகரத்திற்கு அருகில், இயேசுவின் சமாதி உள்ளதாக, அங்குள்ள மக்கள் நம்புகின்றனர். 

ஸ்ரீநகரில் உள்ள புனிதரின் சமாதியில் Yuz Asaf என்று எழுதப் பட்டுள்ளது. "யூசப், யாசு, இயேசு, ஈசா", எல்லாம் ஒரே மாதிரியான பெயர்களாக தோன்றவில்லையா? சிலுவையில் இருந்து உயிர் தப்பிய இயேசு, காஷ்மீர் வந்து சேர்ந்தார். அங்கு தனது மதப் பிரசங்கங்களை தொடர்ந்து நடத்தி வந்தார். இறுதிக் காலத்தையும் காஷ்மீரில் கழித்துள்ளார். இவ்வாறு, காஷ்மீர் மக்களில் ஒரு பகுதியினர் இன்னமும் நம்புகின்றனர்.  

காஷ்மீர் முஸ்லிம்களில்,  "அஹ்மதியா" என்ற ஒரு பிரிவினர், இயேசு கிறிஸ்துவையும் முக்கியமான இறைதூதராக நம்புவதால், பிற முஸ்லிம்களிடம் இருந்து அந்நியப் பட்டுள்ளனர். காஷ்மீர் செல்லும் சுற்றுலாப் பயணிகள், இன்னமும் அங்கேயுள்ள "இயேசுவின் சமாதியை" தரிசிக்கலாம். (Is the tomb of Jesus at Khanyar Rozabal in Kashmir?, http://www.youtube.com/watch?v=7aauXxuLHnQ


இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறைந்ததால் கொல்லப் படவில்லை. பெரிய வெள்ளி என்பது, இயேசு சிலுவையில் இறந்த நாளைக் குறிக்கவில்லை. ஈஸ்டர் என்பது, இயேசு கிறிஸ்து மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும்  உயிர்த்த ஞாயிறும் அல்ல. அப்படியானால், நாம் எதற்காக ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகின்றோம்? 


"ஈஸ்டர்" என்பது, கிறிஸ்துவுக்கு முந்திய ஐரோப்பியரின் மத நம்பிக்கையில் வரும் தேவதை ஒன்றின் பெயர். (Ēostre, http://en.wikipedia.org/wiki/%C4%92ostre) அந்த பெண் தெய்வத்தின் பண்டிகைக்  காலம், வசந்த காலத்தின் வருகையை கொண்டாடுவதற்காக ஏற்படுத்தப் பட்டது. அன்று இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த மக்கள், புல்வெளியில் முயல் துள்ளி விளையாடுவதைக் கண்டால், வசந்த காலம் வந்து விட்டது என்று புரிந்து கொண்டார்கள். அதனால் இன்றைக்கும் ஐரோப்பிய நாடுகளில், ஈஸ்டர் பண்டிகை அன்று, முயல் வடிவிலான சாக்லேட், பிஸ்கட் என்பன செய்து உண்கிறார்கள். 


ஈஸ்டர் பண்டிகையின் இன்னொரு சடங்காக முட்டை வைக்கப் படுகின்றது. வாழ்க்கையின் முடிவில்லாத சுழற்சியை, ஒரு தத்துவமாக உணர்த்தும் முட்டையும் கிறிஸ்துவுக்கு முந்திய, ஐரோப்பியரின் வேற்று மத நம்பிக்கை தான். இன்றைய மதச்சார்பற்ற ஐரோப்பிய நாடுகளில், ஈஸ்டர் ஒரு கிறிஸ்தவ மதப் பண்டிகையாக கருதப் படுவதில்லை. 

ஈஸ்டர் என்றால், முயல், முட்டை வடிவில் செய்யப்பட்ட தின்பண்டங்கள் தான் பலருக்கு நினைவுக்கு வரும். முன்னாள் ஐரோப்பிய காலனிகளில் வாழும் கிறிஸ்தவ மக்கள் மட்டுமே, பெரிய வெள்ளி, உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) என்பன கிறிஸ்தவ மதப் பண்டிகைகள் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.



கிறிஸ்தவ பண்டிகைகள் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.டிசம்பர் 25 : தேவகுமாரன் மித்ராவின் பிறந்த நாள்!
2.கிறிஸ்துமஸ் தாத்தாவின் நிறவாதம்

கிறிஸ்தவ மதம் பற்றிய வேறு பதிவுகள்:
1.அரசு, மத எதிர்ப்பாளர்களான போகொமில் கிறிஸ்தவர்கள்
2.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
3.கிறிஸ்தவம்: .அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏

Wednesday, January 16, 2013

இயேசுவின் தாகம் கம்யூனிச தாயகம்

"ஏழைகளான நீங்கள் இரட்சிக்கப் பட்டவர்கள். ஆண்டவரின் இராஜ்ஜியம் உங்களுக்காக காத்திருக்கிறது." (திரு விவிலியம், லூக்கா 6:20)

இங்கே குறிப்பிடப்படும் "ஆண்டவரின் இராஜ்ஜியம்" என்பது மனிதர்களால் பூமியில் உருவாக்கப்படும் புதிய அரசைக் குறித்தது. ஆனால், பிற்கால கிறிஸ்தவர்கள் அதனை "பரலோகத்தில் உள்ள ஆண்டவரின் ராஜ்ஜியம்" என்று வேண்டுமென்றே தவறாக மொழிபெயர்த்தார்கள்.

உலகிலேயே மிகவும் பழமையான கிறிஸ்தவர்கள் யார்? அநேகமானோர் கத்தோலிக்கர்ள் என்று பதில் சொல்வார்கள். கொஞ்சம் விஷயம் தெரிந்தவர் என்றால், கிரேக்க ஒர்தொடோக்ஸ் கிறிஸ்தவர்களை கைகாட்டுவார்கள். ஆனால், அவை இரண்டும் தவறானவை. வரலாற்றில் முதன் முறையாக இயேசு கிறிஸ்துவின் போதனைகளை ஏற்றுக் கொண்டு, அதன் படி வாழ்ந்தவர்கள் "எபியோனி" (Ebionites) என்றழைக்கப் பட்ட யூதர்கள். ஹீபுரு மொழியில் எபியோனி என்றால் ஏழைகள் என்று அர்த்தம். இயேசு கிறிஸ்து, தன்னை பின்பற்றுபவர்கள் ஏழ்மையான வாழ்க்கை வாழ வேண்டுமென போதித்ததாக, எபியோனி கிறிஸ்தவர்கள் நம்பினார்கள். உண்மையில், அது வரையில் கீழானவர்களாக இழிவு படுத்தப்பட்ட ஏழைகளை, இயேசுவின் போதனைகள் மகிமைப் படுத்தின. ஏழைகள் தமது நிலைமைக்காக வெட்கப் படத் தேவையில்லை. அவர்களே ஆண்டவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று இயேசு போதித்தார். "ஏழைகளான நீங்கள் இரட்சிக்கப் பட்டவர்கள். ஆண்டவரின் இராஜ்ஜியம் உங்களுக்காக காத்திருக்கிறது." என்று அவர்களை உற்சாகப் படுத்தினார்.

எபியோனி கிறிஸ்தவர்களின், சித்தாந்தத்தை புரிந்து கொள்ள முடியாத பிற யூதர்கள், அவர்களை "ஏழைகள்" என்று நினைத்து பரிதாபப் பட்டார்கள். அதனால், அந்தப் பெயரே சரித்திரத்தில் நிலைத்து விட்டது. அந்தக் காலத்தில், "கிறிஸ்தவர்" என்ற சொல் உருவாகி இருக்கவில்லை. அதனால், கிறிஸ்தவர்கள் எல்லோரும் "எபியோனிகள்" என்று அழைக்கப் பட்டனர். உண்மையில் ஆதி கிறிஸ்தவர்கள், ஒரு பொதுவுடைமை சமுதாயமாக வாழ்ந்தனர். பொருளாதார தேவைகளுக்காக பிறரிடம் தங்கியிராமல், தமக்கு தேவையான உணவை தாமே உற்பத்தி செய்து கொண்டனர். தம்மிடம் இருந்த சொத்துக்களை துறந்து, ஏழைகள் போன்று வாழ்ந்தார்கள். அது ஒரு கம்யூனிச சமுதாயமாக இருந்தது. சோவியத் யூனியன், செஞ் சீனாவில் உருவான நவீன கம்யூன் அமைப்பை பெருமளவு ஒத்திருந்தது.

லெனின் அல்லது ஸ்டாலின் காலத்தில், கூட்டுத்துவ (collective) சமூக அமைப்பின் கட்டுமானம் பற்றி அறிந்திருப்பீர்கள். தனித் தனியாக விவசாயம் செய்து வந்த மக்கள், தம்மிடமிருந்த மாடுகளையும், விவசாய உபகரணங்களையும் கூட்டுத்துவ பண்ணைகளிடம் ஒப்படைக்க நிர்ப்பந்திக்கப் பட்டார்கள் என்றும் படித்திருப்பீர்கள். உலகின் முதலாவது கிறிஸ்தவர்களும், அத்தகைய பொருளாதார அமைப்பை உருவாக்கினார்கள். ஒரு கிறிஸ்தவர் தன்னிடம் உள்ள சொத்துக்களை, கம்யூன் அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். அவை பின்னர், கம்யூன் உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவான சொத்துக்களாக மாற்றப்படும். வயல்களும், விவசாய உபகரணங்களும் கிறிஸ்தவ கம்யூனுக்கு பொதுவானவை. கம்யூன் உறுப்பினர்கள் வயலில் கூடி வேலை செய்து, விளைச்சலை சமமாக பகிர்ந்து கொண்டார்கள். ஆதி கிறிஸ்தவர்களின் கம்யூனிச சமுதாயம் பற்றி விபரமான தகவல்கள் கிடைக்கவில்லை. அவர்களுக்கு போட்டியாக உருவான, அப்போஸ்தலர் புனித பவுலை பின்பற்றிய கிறிஸ்தவர்கள், எபியோனி கிறிஸ்தவர்களை வேட்டையாடி கொன்றதுடன், அவர்களது நூல்களையும் ஒன்று விடாமல் எரித்து விட்டனர்.

எபியோனி கிறிஸ்தவர்கள் உண்மையில் யூதர்கள் ஆவர். இன்றைக்கும் யூதர்களில் ஒரு சிறு பிரிவினர், இயேசு கிறிஸ்துவை 'மேசியா'வாக ஏற்றுக் கொள்கின்றனர். அவர்கள் தம்மை பண்டைய எபியோனிகளின் வம்சாவளியினர் என அழைத்துக் கொள்கின்றனர். அதனை நிரூபிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இயேசு கிறிஸ்துவை, யூதர்கள் ஹீபுரு மொழியில் "யேஷுவா" என்று அழைப்பார்கள். இயேசு, அவரது தந்தை ஜோசெப், தாய் மரியாள் எல்லோரும் யூதர்கள் தான். இயேசுவும் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு யூதராகவே வாழ்ந்தார். அதனை எபியோனிகளும் வலியுறுத்தி வந்தனர். அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தாலும், யூத பண்டிகை தினங்களை கொண்டாடினார்கள். இயேசுவை பின்பற்றி, தாமும் சுன்னத்து செய்து கொண்டார்கள். வேறு மதங்களில் இருந்து கிறிஸ்தவராக மாறியவர்களையும் அவ்வாறு வாழ நிர்ப்பந்தித்தார்கள்.

அனேகமாக, எபியோனி கிறிஸ்தவர்களின் நம்பிக்கை பெருமளவில் பரவாமைக்கு, அவர்களின் யூத கலாச்சாரம் ஒரு காரணமாக இருக்கலாம். யூத மதமானது, இந்து மதம் போன்று பிறப்பினால் மட்டுமே தீர்மானிக்கப் படுகின்றது. ஆனால், கிறிஸ்தவம் அப்படி அல்ல. எந்த மதத்தை சேர்ந்தவரும், எந்த இனத்தை சேர்ந்தவரும், எந்த மொழியை பேசுபவரும் கிறிஸ்தவராக மதம் மாற முடியும். எபியோனி கிறிஸ்தவர்கள் அந்தக் கொள்கை கொண்டவர்கள் தான். ஆனால், அவர்களால் அப்போஸ்தலர் பவுலின் குழுவினருடன் போட்டி போட முடியவில்லை.

அந்தக் காலத்தில், இன்றைக்கு நாங்கள் வைத்திருக்கும் விவிலிய நூல் தோன்றி இருக்கவில்லை. மார்க்கு, மாத்தேயுஸ், லூக்கா, பவுல் போன்ற பல அப்போஸ்தலர்கள் எழுதிய சுவிசேஷங்கள் தனித் தனியாக இருந்தன. எபியோனி கிறிஸ்தவர்கள், மாத்தேயுஸ், மார்க்கு ஆகியோரின் சுவிசேஷங்களை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், சித்தாந்த எதிரியான பவுலின் சுவிசேஷத்தை நிராகரித்தார்கள். மிகவும் சுவாரஸ்யமான விடயம் என்னவெனில், "இயேசு கடவுளின் குமாரராக மரியாள் என்ற கன்னித் தாய்க்கு பிறந்தார்..." என்பதை எபியோனி கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இயேசு எல்லா மனிதர்களையும் போல, சாதாரண தாய், தந்தைக்கு மகனாக பிறந்தார் என்று நம்பினார்கள். அவர் வளர்ந்த பின்னர், ஆண்டவரால் தத்தெடுக்கப் பட்டார் என்று விளக்கம் கொடுக்கிறார்கள். "இயேசு மரியாள் என்ற கன்னித் தாய்க்கு மகனாக பிறந்த கதை", இகாரியுஸ் ஹீபுரு மொழியில் எழுதிய சுவிசேஷத்தை, கிரேக்க மொழியில் தவறாக மொழிபெயர்த்தமையினால் ஏற்பட்ட தவறு என்று கூறுகின்றனர்.

அப்போஸ்தலர் பவுல் இன்றைய துருக்கி நாட்டில் பிறந்தவர். கிரேக்க மொழியை தாய் மொழியாக கொண்டவர். அவர் கிறிஸ்துவின் போதனைகளை கிரேக்கத்திற்கு எடுத்துச் சென்றார். கிரேக்க மக்களுக்கு அதனை போதித்தார். கிறிஸ்தவராக மதம் மாறுவோர், சுன்னத்து செய்வது போன்ற யூத கலாச்சாரங்களை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று போதித்தார். அதனால், அவர் பின்னால் பெருமளவு கிரேக்க மக்கள் சேர்ந்தனர். எபியோனி கிறிஸ்தவர்களின் கொள்கைக்கு மாறாக, பணக்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்தார். இதனால், பவுலின் குழுவினருக்கு, கொரிந்தியாவில் வாழ்ந்த பெரிய வணிகர் போன்ற சில வர்த்தகர்களின் பணக் கொடை தாராளமாக கிடைத்தது.

புனித பவுல் தானாகவே பல சுவிஷேங்களை எழுதினார். அவற்றில் எபியோனிகளை சிறுமைப் படுத்தும் கருத்துக்களும், கூடவே சில பிற்போக்கான கருத்துக்களும் எழுதப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, பவுல் கொரிந்தியருக்கு எழுதிய கடிதத்தில், உயர்வு, தாழ்வான சமுதாய அமைப்பையும், பெண் அடக்குமுறையையும் ஏற்றுக் கொள்வது தெளிவாகும். "ஆண்டவர் கிறிஸ்துவின் தலைவராகவும், கிறிஸ்து ஆண்களின் தலைவராகவும், கணவன் மனைவின் தலைவனாகவும் இருக்கின்றான்..." என்று அந்தக் கடிதத்தில் எழுதப் பட்டிருந்தது. இஸ்ரேலில் வாழ்ந்த எபியோனி கிறிஸ்தவர்கள், இயேசுவின் பெயரால் வர்க்க பாகுபாடுகள் அற்ற, சமதர்ம சமுதாயத்தை உருவாக்கினார்கள். கிரேக்க நாட்டில் வாழ்ந்த, பவுலின் செயற்பாடு அதற்கு முற்றிலும் முரணாக அமைந்திருந்தது. கிரேக்க சமுதாயத்தில் நிலவிய வர்க்க ஏற்றத் தாழ்வை ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல, அடிமைகளின் விடுதலைக்காகவும் எதுவும் செய்யவில்லை.

உண்மையில் பிற்கால கிறிஸ்தவ சமூக-பொருளாதார கட்டமைப்பு பவுலின் காலத்திலேயே உருவாகி விட்டதெனலாம். பிஷப் என்ற பெயரைக் கொண்ட கிறிஸ்தவ மதகுருக்கள் அதிகார பலம் பெறத் தொங்கியதும் அந்தக் காலத்தில் தான். அந்தியோக்கியா நகர பிஷப் இக்னாத்தியுஸ் எழுதிய கடிதம் ஒன்றில், "கிறிஸ்தவர்களாக மாறிய அடிமைகள் எந்தவித சலுகையையும் எதிர்பார்க்கக் கூடாது, கிறிஸ்துவின் மகிமைக்குள் வாழ்வதை பெருமையாக நினைக்க வேண்டும்...." என்றெல்லாம் எழுதி இருக்கிறார். இயேசுவின் உதாரணத்தை பின்பற்றி, கிறிஸ்தவர்கள் எல்லோரும் சமபந்தி போஜனம் செய்ய வேண்டும் என பவுல் எதிர்பார்த்தார். ஆனால், வர்க்க வேறுபாடுகள் ஆழமாக வேரூன்றி இருந்த கிரேக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் அது எடுபடவில்லை.

நமது நாடுகளில், உயர் சாதியினர், தாழ்த்தப்பட்ட சாதியினருடன் சமமாக அமர்ந்து உணவருந்த மறுப்பதைப் போல, பணக்கார கிறிஸ்தவர்கள் தனியாக உணவருந்த சென்றார்கள். அப்போஸ்தலர் பவுலும், அவரது குழுவினரும், வழக்கத்தில் இருந்த சமூகக் கட்டமைப்பை மாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக கருதவில்லை. அதற்கு அவர்கள் கூறிய காரணம்: "உலகம் விரைவில் அழிந்து விடும்...கிறிஸ்துவின் வருகையினால் புதிய உலகம் தோன்றும்." நமது காலத்திலும், பல கிறிஸ்தவ மத அடிப்படைவாத சபைகள், "உலகம் அழியப் போகின்றது" என்று பயமுறுத்திக் கொண்டு திரிவது எமக்குத் தெரியும். அடிப்படையில் இது ஒரு சமூகப் புரட்சிக்கு எதிரான பிரச்சார நடவடிக்கையாகவே அமைந்துள்ளது. அதனால் தான், இன்றைய முதலாளித்துவ ஊடகங்களும் உலகம் அழியப் போகின்றது என்ற கட்டுக்கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பரப்பி வருகின்றன.

கம்யூனிசம் என்ற சொல்லைக் கேட்டவுடன், இன்று பலர் ரஷ்யாவையும், சீனாவையும் நினைக்கும் அளவுக்கு, முதலாளித்துவம் எமது மக்களை மூளைச்சலவை செய்து வைத்துள்ளது. மார்க்ஸ், லெனின் அல்லது மாவோ நடைமுறைப் படுத்த எண்ணிய கம்யூனிசம், நவீன காலத்திற்கேற்ப இயங்கியல்-பொருள்முதல்வாத கோட்பாட்டின் வழியே உருவாக்கப்பட்ட சித்தாந்தம் ஆகும். அதாவது முதலாளித்துவ பொருளாதாரத்தின் வீழ்ச்சியில், சோஷலிச சமுதாயமும், அதன் வீழ்ச்சியில் கம்யூனிச சமுதாயமும் தோன்றும் என்பது அவர்களது தத்துவார்த்த முடிவுகள். கார்ல் மார்க்ஸ் பிறப்பதற்கு முன்னரே, 18 ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு தத்துவஞானி François-Noël Babeuf கம்யூனிச கொள்கையை முன்மொழிந்தார். மேலும் அன்னார்கிச அமைப்புகளின் தத்துவ ஆசிரியர்களான பகுனின், புரூடொன் போன்றோரும் கம்யூனிச சமுதாயத்தை மனித குலத்தின் விடிவுக்காக தெரிவு செய்தார்கள்.

கம்யூனிச சித்தாந்தம் பற்றிய அறிவு, திடீரென வானத்தில் இருந்து விழவில்லை. பண்டைய கால சமுதாய அமைப்புகளை ஆராய்ந்து தான் அத்தகைய முடிவுக்கு வந்தனர். அந்த அறிஞர்கள் திரட்டிய தகவல்களில், ஆதி கால கிறிஸ்தவர்களான எபியோனிகள் பற்றிய ஆய்வும் அடங்குகின்றது. இந்த தகவல்கள் எமக்கு புதுசாக இருப்பதற்கு காரணம், அப்போஸ்தலர் பவுல் தோற்றுவித்த வர்க்க அடிப்படையிலான  கிறிஸ்தவ சமுதாயம். வெற்றி பெற்றவர்கள்  வரலாற்றை மாற்றி எழுதினார்கள். ரோம சாம்ராஜ்யத்தால் அடக்கியொடுக்கப் பட்ட, இஸ்ரேல் என்ற மாகாணத்தை சேர்ந்த யூத சிறுபான்மை இனத்துடனான பகை, புதிய மதத்தில் எதிரொலித்தது. கிரேக்க கிறிஸ்தவர்கள், யூதர்களுடனான தொடர்பை முற்றாக அறுத்தெறிய விரும்பினார்கள். அவர்கள் தமது இரட்சகரை யேஷுவா (இயேசு) என்ற யூதப் பெயரில் அழைப்பதை தவிர்ப்பதற்காக, "கிறிஸ்து" என்ற புதிய பெயரை அடிக்கடி உச்சரித்தார்கள். கிறிஸ்து என்பது, மேசியா என்ற யூதச் சொல்லின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். மேலும் அந்தச் சொல் ch (க்) என்ற லத்தீன் உச்சரிப்பில் எழுதப் பட்டது. ரோம சாம்ராஜ்யம், தன்னால் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட ஒருவரின் மதத்தை தனது ஏகாதிபத்திய நலன்களுக்கு சார்பாக மாற்றிக் கொண்டது. "வரலாறு நெடுகிலும் இருந்த அனைத்து சமுதாயங்களிலும், வர்க்கப் போராட்டம் நடந்துள்ளது," என்ற கார்ல் மார்க்சின் கூற்றை, கிறிஸ்தவ மதத்தின் வரலாறும் மெய்ப்பிக்கின்றது.

மேலதிக தகவல்களுக்கு:
Ebionites
EBIONITES (from = "the poor")
CATHOLIC ENCYCLOPEDIA

******************

கிறிஸ்தவ மதம் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
2. மாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுத்த இயேசு கிறிஸ்து
3.அரசு, மத எதிர்ப்பாளர்களான போகொமில் கிறிஸ்தவர்கள்
4.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!

Saturday, June 26, 2010

பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!


1.
"பைபிள் உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்." என்று பலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் என்றால் அதையே "தமது மதம் ஆண்டவரால் தெரிவு செய்யப்பட்டது" என்று நிரூபிக்க உதாரணமாக காட்டுவார்கள். 

இவர்கள் ஒன்றை மறந்து விட்டு பேசுகிறார்கள். உலக வரலாறு காலனிய காலகட்டம் என்ற ஒன்றைக் கண்டுள்ளது. பிரிட்டிஷ், ஒல்லாந்து, பிரெஞ்சு, ஸ்பானிய, போர்த்துகீச ஐரோப்பியர்கள் உலகம் முழுவதையும் ஒரு காலத்தில் ஆட்சி செய்தார்கள். அவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள். அவர்கள் கைப்பற்றிய புதிய பிரதேசங்களில் கிறிஸ்தவ மதத்தை பரப்பினார்கள். அதற்கு இலகுவாக பைபிளை பல உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்த்து போதித்தார்கள்.

பைபிள் என்பது ஆங்கில உச்சரிப்பு. பிபிலியோ (Biblio) என்றால் கிரேக்க மொழியில் புத்தகம் என்று அர்த்தம். போர்த்துகீச மொழிப் பெயரான பிபிலியா (Bíblia) என்ற சொல் தான் தமிழில் "விவிலியம்" என்று மாறியது. ஐரோப்பாவில் கிரேக்க, லத்தீன் மொழிகளைத் தவிர்ந்த பிற மொழிகள் பேச்சு வழக்கில் மட்டுமே இருந்தன. 

பல்வேறு இனங்களை சேர்ந்த மக்களுக்கு தெரிந்த முதலாவது நூலும் பைபிள் தான். தனது பெயரைக் கூட எழுதப், படிக்கத் தெரியாத மக்கள் தான் ஞாயிறு பூசைக்கு தேவாலயங்களுக்கு சமூகமளித்து வந்தார்கள். அவர்களுக்கு ஒரு புத்தகத்தை காட்டி, இது ஆண்டவர் எமக்கு வழங்கியது என்று சொன்னால், கண்ணை மூடிக் கொண்டு நம்புவார்கள்.

லத்தீன் மொழியில் கைகளால் எழுதப்பட்டிருந்த பைபிளை, லத்தீன் மொழி படித்த பாதிரிகள் மட்டுமே வாசிக்க முடிந்தது. பைபிள் எழுதும் அல்லது பிரதி பண்ணும் வேலையில் ஆயிரக்கணக்கான கத்தோலிக்க துறவிகள் ஈடுபட்டிருந்தார்கள். மடாலயத்தில் வசித்த அவர்களின் வேலை அது மட்டும் தான். 

அது ஒன்றும் இலகுவான காரியமல்ல. நாள் முழுக்க உட்கார்ந்து மையைத் தொட்டுத் தொட்டு எழுதிக் கொண்டிருக்க வேண்டும். இன்று நாம் கிறுக்குவது போல எழுத முடியாது. நுணுக்கமாக படம் வரைவது போன்ற, அழகான கையெழுத்தாக இருக்க வேண்டும். தாளுக்கு பதிலாக பதனிடப்பட்ட மாட்டுத் தோல் பயன்படுத்தப் பட்டது. நெதர்லாந்து மொழியில் Monniken werk (துறவியின் வேலை) என்று ஒரு சொல் வழக்கத்தில் உள்ளது. ஒரே இடத்தில் இருந்து செய்யும் நுணுக்கமான வேலையை அப்படி சொல்வார்கள்.

ஆனால் துறவிகள் எழுதும் பைபிளை வாசிப்பதற்கு பொது மக்களுக்கு அனுமதி இருக்கவில்லை. கத்தோலிக்க மதகுருக்களுக்கு மட்டுமே உள்ள விசேஷ உரிமை அது. அது மட்டுமல்ல, பைபிளை மொழிபெயர்ப்பது தடைசெய்யப்பட்டு இருந்தது. ஐரோப்பாவில் லத்தீன் மேட்டுக்குடியினர் பேசும் மொழியாக இருந்தது. சாதாரண மக்கள் வேறு மொழிகளைப் பேசினார்கள். ஆங்கிலம், பிரெஞ்சு எல்லாம் அந்தக் காலத்தில் "பட்டிக்காட்டான் பேசும் தாழ்ந்த பாஷைகளாக" இருந்தன. 

சாதாரண குடிமகனும் பைபிளை படித்து புரிந்து கொள்வதை வத்திகான் விரும்பவில்லை. கத்தோலிக்க தலைவர் பாப்பரசர் (போப்பாண்டவர்) "மொழிபெயர்ப்புத் தடை" உத்தரவைப் பிறப்பித்திருந்தார். பைபிள் லத்தீன் மொழியிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும். அதனை வேறு மொழிகளுக்கு மொழிபெயர்ப்பது ஆண்டவருக்கு எதிரான பாவகாரியம் என்று அறிவித்தார். பாப்பரசரின் உத்தரவை மீறி மொழிபெயர்க்க முனைந்தவர்கள் கிறிஸ்தவ மதத் துரோகிகளாக கருதப்பட்டனர். துரோகத்திற்கு தண்டனை மரணம். விவிலிய நூலில் எழுதியிருக்கும், கர்த்தரின் நற்செய்தியை வாசித்தவர்கள் அனைவரும், உயிரோடு கொளுத்தப்பட்டு பரலோகம் சென்றனர்.


2.
இன்று லத்தீன் மொழி வழக்கொழிந்து விட்டது. இதனால் லத்தீன் பைபிளை வாசித்து புரிந்து கொள்ளக் கூடியவர்கள் மிகக் குறைவாகவே இருப்பர். வத்திக்கானில் கடமையாற்றும் போப்பாண்டவர், கார்டினல்கள், மற்றும் உலகெங்கும் கிறிஸ்தவ இறையியல் கற்கும் மாணவர்கள் லத்தீன் மொழி படித்துள்ளனர். விரல் விட்டு எண்ணக் கூடிய இந்த சிறு கூட்டத்தை தவிர வேறு யாருக்கு லத்தீன் மொழி தெரியும்? பைபிளை மொழிபெயர்க்கக் கூடாது என்ற தடைச்சட்டம் இன்று வரை தொடர்ந்திருந்தால், இன்று நிலைமை எப்படி இருந்திருக்கும்? 

கிறிஸ்தவ மதத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட "நாஸ்திக" ஐரோப்பாவில், இன்று லத்தீன், கிரேக்க மொழிகள் அனைத்து பள்ளிப் பிள்ளைகளுக்கும் போதிக்கப்படுகின்றன. (முன்னாள் சோஷலிச நாடுகளிலும் அந்த பாடத்திட்டம் பின்பற்றப் பட்டது.)பலர் இவற்றை படிப்பதில் அக்கறை காட்டா விட்டாலும், குறைந்த பட்சம் விவிலிய நூலில் எழுதியுள்ள சொற்களின் அர்த்தங்களை புரிந்து கொள்ளவாவது உதவுகின்றது. நானும் தான் கிரேக்க, லத்தீன் மொழிகளைப் படித்திருக்கிறேன்.ஆனால் எனது கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகளை எதிர்க்கும் எத்தனை பேருக்கு இந்த மொழிகள் தெரியும்?

மொழிபெயர்க்கும் பொழுது தவிர்க்கவியலாது சில இடங்களில் அர்த்தம் மாறுபடுவதும் நடந்துள்ளது. இன்று ஆங்கிலத்தில் மட்டும் இரண்டு டசின் மொழிபெயர்ப்புகள் (
Timeline of Bible Translation History) வந்து விட்டன. (கர்த்தரே! எது சரியானது?) ஒவ்வொன்றும் எங்கோ ஒரு இடத்தில் வித்தியாசப்படும். 19 ம் நூற்றாண்டின் இறுதியில் இரண்டு அன்க்லிகன் திருச்சபையை சேர்ந்த இறையியல் அறிஞர்கள் (Brooke Foss Westcott; Fenton John Anthony Hort) பைபிளை கிரேக்க மொழியில் இருந்து நேரடியாக மொழிபெயர்த்தார்கள். அதுவே இன்று சிறந்த மொழிபெயர்ப்பாக (The New Testament In The Original Greek) கருதப்படுகின்றது. 

அனேகமாக தமிழ் விவிலிய நூலும் அதை தழுவியே மொழிபெயர்த்திருக்கலாம். இதில் வேடிக்கை என்னவென்றால், உலகில் மிகச் சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பை செய்த அறிஞர்கள் மத நம்பிக்கையற்றவர்கள்! டார்வினின் பகுத்தறிவுக் கொள்கையிலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு காட்டியவர்கள். பரிபூரணமான பைபிள் மொழிபெயர்ப்புக்காக, கிறிஸ்தவர்கள் இரண்டு நாஸ்திகர்களை நம்பியிருக்க வேண்டியிருந்தது.வெட்கக்கேடு.

பைபிள் ஆண்டவரால் அருளப்பட்ட நூல் என்பதால், எந்த மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் ஒன்றாகவே இருக்கும் என்று பல கிறிஸ்தவர்கள் அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்னர், ஒரு புரட்டஸ்தாந்து சபையினர் ஒழுங்கு செய்த பைபிள் வகுப்புகளில் பங்குபற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. 

அந்த இடம், நெதர்லாந்து நாட்டுப்புறக் கிராமம் என்பதால், அருகில் இருந்த அகதி முகாமை சேர்ந்த பன்னாட்டு அகதிகள் கலந்து கொண்டார்கள். அரபு, ரஷ்ய, ஜோர்ஜிய, தமிழ் மொழி பேசுவோர் தம்மோடு அந்தந்த மொழிகளில் இருந்த பைபிளையும் கையோடு எடுத்து வந்திருந்தார்கள். பைபிள் வகுப்பை ஒழுங்கு படுத்தியவர்கள், டச்சு, ஆங்கில மொழிப் பிரதிகளுடன் காத்திருந்தார்கள்.

பைபிளை வாசிக்கும் பொழுது, அது அங்கே பல மொழிகளிலும் புரிந்து கொள்ளப்பட்டது. ஆயினும் டச்சு, ஆங்கில மொழிகள் தொடர்பு கொள்ள பயன்படுத்தப்பட்டன. (நானே ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கில, டச்சு மொழி பைபிள்களை மாறி, மாறி வாசித்திருக்கிறேன்.) ஒரே அத்தியாயத்தை சேர்ந்த, ஒரே வரிகள் ஒவ்வொரு மொழியிலும் எவ்வாறு மாறுபடுகின்றது என்பதை அப்பொழுது புரிந்து கொள்ள முடிந்தது. வகுப்பை ஒழுங்கு படுத்திய கிறிஸ்தவ சபையை சேர்ந்த நெதர்லாந்துக்காரர்கள் சிறிது குழம்பிப்போனார்கள். 

"கர்த்தர் எதற்காக தனது சொந்த நூலிலேயே அடிக்கடி முரண்படுகிறார்?" எனப் புரிந்து கொள்ள முடியவில்லை. (பல அப்போஸ்தலர்கள் எழுதிய சுவிசேஷங்களுக்கிடையில் முரண்பாடுகள் காணப்படுவது வேறு விடயம்.)எல்லோருக்கும் பொதுவாகத் தெரிந்த பைபிளைத் தவிர, மோர்மன், ஜெஹோவா பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தமக்கென தனியான பைபிளை தயாரித்துள்ளார்கள். மோர்மன்களின் பைபிளில் மோர்மன் என்ற சொல்லும், ஜெஹோவாக்களின் பைபிளில் அடிக்கடி ஜெஹோவா என்ற சொல்லும் இடம்பெறும்.


3.
பைபிளின் மூல நூல் லத்தீன் மொழியில் மட்டும் எழுதப்படவில்லை. லத்தீன் பைபிள் கூட ஒரு மொழிபெயர்ப்பு தான். பழைய ஏற்பாடு ஹீபுரு (எபிரேய), அரமைக் மொழிகளில் எழுதப்பட்டது. புதிய ஏற்பாடு முழுக்க முழுக்க கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. இயேசுவின் பன்னிரு சீடர்களும் ஒன்றில் யூதர்களாக, அல்லது கிரேக்கர்களாக இருந்தனர். 

இயேசு என்பது அரமைக் பெயர், கிறிஸ்து என்பது கிரேக்கப் பெயர். இயேசுவின் போதனைகளை ஐரோப்பாவுக்கு பரப்பச் சென்றவர்கள் அனைவரும் கிரேக்க மொழி பேசினார்கள். அப்போஸ்தலர்கள் கிரேக்க மொழியில் எழுதிய சுவிசேஷங்களின் தொகுப்பு புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படுகின்றது. சில வருடங்களுக்கு முன்னர் யூதாஸ் எழுதிய சுவிசேஷம் எகிப்தில் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் அது பைபிளில் சேர்க்கப்படவில்லை.

இன்று பைபிளில் காணப்படும் சுவிசேஷங்கள் மட்டும் தான் எழுதப்பட்டன, என்று நம்புவது வரலாறு தெரியாதவர்களின் அறியாமை. கிறிஸ்தவ மதம் நிறுவனமயப்பட்ட காலங்களில் எத்தனையோ சுவிசேஷங்கள் அழிக்கப்பட்டு விட்டன.கிரேக்கத்தில் (இன்று துருக்கி இருக்கும் இடம்) ஞானவாத கிறிஸ்தவ பிரிவு (Gnosticism) பரவலான மக்கள் ஆதரவை பெற்றிருந்தது. "இனோசிஸ்" (ஆங்கிலத்தில் : knowledge)என்ற கிரேக்க சொல்லில் இருந்து அவர்களுக்கு அந்தப் பெயர் வந்தது. ஆனால் இன்றுள்ள கிரேக்க பழமைவாத (ஓர்தோடொக்ஸ்) கிறிஸ்தவ பிரிவு அரச ஆதரவைக் கொண்டிருந்தது. 

இரண்டு மதப் பிரிவினருக்கும் இடையில் அடிக்கடி தத்துவப் போர்கள் நடந்தன. ஞானவாத கிறிஸ்தவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். சபையை சேர்ந்த உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் எழுதி வைத்த தத்துவங்களும் அழிக்கப்பட்டன. "நன்மைகளின் உலகம், தீமைகளின் உலகம்" என்ற ஈருலகக் கோட்பாடு அவர்களுடையது. ஞானவாத கிறிஸ்தவர்கள் பொருளாயவாத உலகை சாத்தானின் படைப்பாக கருதினார்கள். தேவாலயம் கூட ஒரு பொருள் என்பதால், அதனை அவர்கள் எற்றுக் கொள்ளவில்லை.

ஏற்கனவே பைபிளில் சேர்க்கப்பட்டுள்ள "வெளிப்பாடு" (இறுதி அத்தியாயம்) என்ற சுவிசேஷத்தை என்ன காரணத்திற்காகவோ, கிறிஸ்தவர்கள் படிக்க விரும்புவதில்லை. "கத்தோலிக்க மடாதிபதி பாப்பரசர் சாத்தானின் அவதாரம்." என்ற அர்த்தம் வரும் சில வரிகள் அதிலே எழுதப்பட்டுள்ளன. (நேரடியாக குறிப்பிடவில்லை.) அதற்காக வத்திகான் அந்த இறுதி அத்தியாயத்தை மக்களின் கண்களில் இருந்து மறைத்து வைக்க விரும்பியதாக கூறப்படுகின்றது. 

"வெளிப்பாடு" எழுதிய அப்போஸ்தலர் யானிஸ் ("ஜோன்" என்று ஆங்கிலத்தில் சொன்னால் தான் உங்களுக்கு புரியும்) பட்மொஸ் தீவில் அந்த சுவிசேஷத்தை எழுதினார். அவர் அங்கே மறைந்து வாழ்ந்ததாக கருதப்படுகின்றது. துருக்கிக்கு அருகில் உள்ள அந்த சிறு தீவில் இருந்து கொண்டே, பல எதிர்காலக் காட்சிகளை மனக்கண்ணால் கண்டுள்ளார். ஊழிக்காலத்தை எதிர்வு கூறிய ஒரு தீர்க்கதரிசியின் வாசகங்களைப் படிப்பதற்கு பல கிறிஸ்தவர்கள் பயப்படுகிறார்கள்.


4.
மேற்கு ஐரோப்பாவில், லத்தீனை தவிர வேறு எந்த மொழியும் எழுத்து வடிவம் கொண்டிருக்கவில்லை. அனேகமாக மொழிபெயர்க்கப்பட்ட பைபிள் அந்த மொழிகளில் எழுதப்பட்ட முதலாவது நூலாக இருக்கும். கத்தோலிக்க அதிகாரத்திற்கு எதிராக, செல்வச் செழிப்பில் வாழ்ந்த ஊழல்மய மதகுருக்களுக்கு எதிராக மார்ட்டின் லூதர் போர்ப் பிரகடனம் செய்தார். 

ஜெர்மன் மொழியில் எதிர்ப்பு எனப் பொருள்படும் "Protest" என்ற பெயரில் புதிய இயக்கம் பைபிளை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தது. அதன் பின்னரே, டச்சு, பிரெஞ்சு, ஆங்கில மொழிபெயர்ப்புகள் துணிச்சலுடன் வெளிவந்தன. புரட்டஸ்தாந்து அமைப்பு தோன்றும் வரையில், மொழிபெயர்த்த பைபிளை வைத்திருப்பது பாரதூரமான குற்றமாக கருதப்பட்டது. 

1517 ம் ஆண்டு, அதாவது புரட்டஸ்தாந்து கிளர்ச்சி இடம்பெற்ற அதே காலப்பகுதியில், இங்கிலாந்தில் ஏழு பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். உள்ளூர் கத்தோலிக்க தேவாலயத்தால் மரண தண்டனை வழங்கப்படும் அளவிற்கு அவர்கள் செய்த குற்றம் என்ன? அந்த ஏழு குற்றவாளிகளும் யாரையாவது கொலை செய்தார்களா? இல்லை. தமது பிள்ளைகளுக்கு ஆங்கில மொழியில் ஜெபம் செய்ய சொல்லிக் கொடுத்தது தான் அவர்கள் செய்த மாபெரும் குற்றம்! ஆமாம், அந்தக் காலத்தில் ஜெபம் செய்வது கூட லத்தீன் மொழியில் தான்.

1380 ம் ஆண்டு, இங்கிலாந்தை சேர்ந்த
John Wycliffe, என்ற கிறிஸ்தவ இறையியல் பயின்ற அறிஞர் பைபிளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார். பாப்பரசர் எத்தனை தடை போட்டும், மிரட்டியும் அஞ்சாமல் தனது முயற்சியை தொடர்ந்தார். அவரும், அவரது ஆதரவாளர்களும் கையால் எழுதி பூர்த்தி செய்த பைபிளை மேலும் பல பிரதிகள் எடுத்தார்கள். முதன் முதலாக ஆங்கில மொழியில் வெளியான பைபிள் அது தான். John Wycliffe இறந்த பின்னரும் பாப்பரசரின் கோபம் அடங்கவில்லை. "கிறிஸ்தவ மதத்துரோகி" யின் புதைக்கப்பட்ட உடல் தோண்டியெடுக்கப்பட்டு எலும்புகள் பொடிப்பொடி ஆக்கப்பட்டன.

John Wycliffe பைபிளை படித்து மொழிபெயர்த்ததுடன் மட்டும் நிற்கவில்லை. கத்தோலிக்க தேவாலய மதகுருக்களின் ஊழலுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி போராடினார். உண்மையான கிறிஸ்தவன் ஏழ்மையில் வாழ வேண்டும் என நம்பியவர். ஒரு நேர்மையான கனவானின் பின்னால் மக்கள் அணிதிரண்டதில் வியப்பில்லை. 

அப்படியானால் அன்றைக்கு கத்தோலிக்க மதகுருக்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். இன்றைக்கு உள்ள அரசியல்வாதிகளை தன்னலம் கருதும் ஊழல் பெருச்சாளிகளாக நீங்கள் பார்க்கிறீர்கள். அதே போலத்தான், அன்றைக்கிருந்த ஐரோப்பிய மக்கள் கத்தோலிக்க மதகுருக்களை பார்த்தார்கள். ஆமாம், கத்தோலிக்க மதவாதிகள் ஆட்சி செய்த ஐரோப்பா, தேவகுமாரனின் பரிசுத்த ராஜ்ஜியமாக இருக்கவில்லை.


5.
இன்றைக்கு கத்தோலிக்க மதத்தை சேர்ந்த பிஷப், பாதிரிகள் துறவற வாழ்க்கை வாழ்கின்றனர். கர்த்தரின் திருப்பணிக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்று, நீங்கள் அவர்கள் மீது பெரு மதிப்பு வைத்திருக்கிறீர்கள். ஆனால் ஐரோப்பாவில் கத்தோலிக்க மதம் ஸ்தாபிக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் அவ்வாறான நிலை இருக்கவில்லை. வத்திகானில் முடிசூடா மன்னனாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த முதலாவது போப்பாண்டவர் பீட்டர் திருமணம் செய்தவர். அது வரலாற்றில் பதியப்படுமளவிற்கு, எல்லோருக்கும் தெரியும். 

பிஷப்கள் முதல் சாதாரண கிராமப்புற பாதிரி வரையில் திருமணம் செய்து குழந்தைகளை பெற்று குடும்ப வாழ்க்கை வாழ்ந்தார்கள். ஒரு காலத்தில் மதகுருக்கள் திருமணம் செய்யக் கூடாது என்று கத்தோலிக்க திருச்சபை சுற்றறிக்கை அனுப்பியது. அதற்குப் பிறகு ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை. சட்டப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்வதை விட, பல பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்வது அவர்களுக்கு இலகுவாக இருந்தது.

சுவிட்சர்லாந்துக்கு அருகில் உள்ள பிரான்சின் நகரமான லியோனில் இருந்து ஆட்சி செய்த கத்தோலிக்க மதகுரு, சினிமாவில் வரும் வில்லன் போல அனைத்து கெட்ட பழக்கங்களையும் கொண்டிருந்தார். அக்கம் பக்கம் இருந்த ஊரெல்லாம் அவரது அட்டகாசம் கொடி கட்டிப் பறந்தது. "லியோன் தாதா" வின் கொடுமை கண்டு பொங்கி எழுந்த வால்டோ
(Peter Waldo) என்ற வர்த்தகர், மக்களை திரட்டி சீர்திருத்த இயக்கம் ஒன்றை தொடங்கினார்(1170)தனது சொத்தை எல்லாம் தேவாலயத்திற்கு என எழுதிக் கொடுத்து விட்டு, களத்தில் இறங்கினார். 

ஆரம்பத்தில் வால்டோவின் சீர்திருத்த இயக்கத்திற்கு போப்பாண்டவர் அனுமதி வழங்கினார். (மதப் பிரசங்கம் செய்பவர் போப்பாண்டவரின்  அனுமதி பெற்றே செய்ய வேண்டும்.) ஆனால் வால்டோவின் போராட்டம் லியோன் ஊழல் பெருச்சாளிக்கு எதிராக திரும்பியதும் அனுமதியை ரத்து செய்து விட்டார்.

இதற்கிடையே வால்டோ பைபிளை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கும் வேலையிலும் ஈடுபட்டார். (அபச்சாரம்! அபச்சாரம்!!) அது மட்டுமல்ல வால்டோ குழுவினரின் தேவாலயங்களில் பெண்களும் மதகுருக்களாக பூசை செய்ய முடிந்தது. (தெய்வ குற்றம்! கர்த்தருக்கே பொறுக்காதே!!) வால்டோ குழுவினருக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க மேற்குறிப்பிட்ட இரண்டு காரணங்களும் போதுமானதாக இருந்தன. 

போப்பாண்டவர் அனுப்பிய சிறப்புப் படையணி வால்டோ குழுவினரின் இருப்பிடங்களை முற்றுகையிட்டு வேட்டையாடியது. வால்டோ குழு உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்ட போதிலும், மலைகளுக்குள் மறைந்து கொண்டனர். வால்டோ குழுவினர், சுவிட்சர்லாந்தின் வொட் (Vaud) என்ற மாநிலத்தில் நீண்டகாலம் தாக்குப் பிடித்தனர். பிரெஞ்சு மொழியில் வோடுவா (Vaudois) என்ற பெயரே பின்னர், (ஜெர்மன் மொழியில்) வல்டோ குழு என்று திரிபுற்றதாக சொல்லப்படுகின்றது.

கிறிஸ்தவ மதம் தோன்றி ஆயிரம் வருடங்கள் கழிந்த பின்னர் தான் பைபிளை மொழிபெயர்க்கும் முயற்சிகள் நடந்துள்ளன. அதற்கு என்ன காரணம்? அந்தக் காலகட்டத்தில் தான் ஐரோப்பாவில் புதிய நகரங்கள் உருவாகின. நகரமயமான சமுதாயத்தில் புதிய சிந்தனைகளுக்கான தேடல் ஏற்பட்டது. வர்த்தகர்கள் தொழில் நிமித்தம் உலக அறிவு கைவரப் பெற்றிருந்தனர். சிலர் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டனர். 

மறுபக்கத்தில் நிலப்பிரபுத்துவ பொருளாதார முறை தன்னை நிலைப்படுத்திக் கொண்டது. அரசியல் அதிகாரம் (கத்தோலிக்க) மதகுருக்களின் கைகளில் இருந்து, மன்னர்களின் கைகளுக்கு மாறிக் கொண்டிருந்தது. சுருக்கமாக, ஐரோப்பா ஒரு சமூகப் புரட்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. தவிர்க்கவியலாது மதம் குறித்த அறிவுத் தேடலும் அந்தப் புரட்சியின் ஒரு அங்கமாகியது. 

ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த கிறிஸ்தவர்களை விட, இன்றுள்ள கிறிஸ்தவர்கள் தமது மதத்தைப் பற்றி அதிகம் அறிந்து வைத்துள்ளனர். அதற்கு அவர்கள் தமது உயிரை துச்சமாக மதித்து போராடிய சில சமூக விடுதலைப் போராளிகளுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளனர்.


கிறிஸ்தவ மதம் குறித்த மேலதிக வாசிப்புக்கு உதவும் முன்னைய பதிவுகள்:
1.கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...
2.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
3.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்

Sunday, June 20, 2010

கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...


எனது வலைப்பூவில் கிறிஸ்தவ, யூத மதங்களை விமர்சிக்கும் கட்டுரைகளை அதிகம் எழுதுவதாக சில நண்பர்கள் என் மீது குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். சில விஷமிகள் இதனை "கிறிஸ்தவ/யூத எதிர்ப்பாக" திரிபு படுத்த பார்க்கின்றனர். இது அவர்களது குறுகிய மனப்பான்மையை காட்டுகின்றது. இதே போன்ற குற்றச்சாட்டுகள் இஸ்லாமிய, இந்து, (தலாய்லாமா) பௌத்த ஆதரவாளர்கள் மத்தியில் இருந்தும் எழுந்துள்ளன. பல முனைகளில் பிரிந்திருக்கும் அனைத்து மதவாதிகளும் சந்திக்கும் புள்ளியும் அது தான்.

மதச்சார்பின்மையை பற்றிய அவர்களின் புரிதலை "எம்மமதமும் சம்மதம்" என்ற சொற்பதத்திற்குள் அடக்கி விடலாம். "எல்லா மதத்திற்கும் சமமான ஜனநாயகம்" என்று இதற்கு பொழிப்புரை எழுதலாம். "மதம் ஒருவரின் அந்தரங்க விடயம்." என்ற அரச நிர்ணய சட்டத்தை நடைமுறைப் படுத்த கிளம்பினால் தான் பிரச்சினை கிளம்புகின்றது. இந்தியாவிலோ, இலங்கையிலோ அரசும் மதமும் இன்னமும் தனித்தனியாக பிரிக்கப்படவில்லை. இதனால் இணையம் என்ற பொதுத்தளத்தில் மதச்சார்பின்மையை வலியுறுத்தும் பதிவர்கள் மீது சேறு பூசப்படுகின்றது. மதக் கொள்கைகளை கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்களுக்கு, விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இன்னும் இல்லை.

இவர்கள் "கிறிஸ்தவ நாடுகள்" என புரிந்து கொள்ளும், மேற்குலகில் வாழும் மக்கள், தம்மை அப்படி அழைப்பதை விரும்புவதில்லை. இந்த நாடுகளில் வாழும் பெரும்பான்மையான மக்கள், தம்மை "எந்த மதத்தையும் சாராதவர்" (Agnostic) என்றே அழைத்துக் கொள்வார்கள். கிறிஸ்தவ பெற்றோருக்கு பிறந்தால் கிறிஸ்தவன் தானே, என்று கொடுக்கும் விளக்கம் எல்லாம் இங்கே செல்லுபடியாகாது. (அந்த விளக்கத்தின் படி பார்த்தால் இயேசு ஒரு கிறிஸ்தவன் அல்ல.) கிறிஸ்தவம் ஒரு உலகமயமாக்கப்பட்ட மதமாகி விட்டது. வறிய நாடுகளில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதே நேரம் செல்வந்த நாடுகளில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. மதத்திற்கும், வர்க்கத்திற்கும் இடையிலான தொடர்பை விளக்க இந்த ஒரு உதாரணம் போதும்.

மேற்குலக மதச்சார்பற்ற நாடுகளில், மதம் குறித்து எத்தகைய கருத்தையும் முன்வைக்கலாம். ஒருவர் எந்த மதத்தையும், கடவுளையும் பற்றி விரும்பிய படி கிண்டல் செய்யலாம், பரிகசிக்கலாம், கேலிச்சித்திரம் வரையலாம். அந்த உரிமையை அரசும், நீதிமன்றமும் உறுதிப்படுத்தி வருகின்றன. ஏதாவது ஒரு மதத்தை விமர்சித்ததற்காக "மத எதிர்ப்பாளன்" முத்திரை குத்த முடியாது. விமர்சகரை பாதுகாக்கும் சட்டம், முத்திரை குத்தியவரை ஆபத்தான பேர்வழியாக கருதுகின்றது. இவை "பரம்பரை கிறிஸ்தவ நாடுகள்" என்பதால், இங்கெல்லாம் கிறிஸ்தவ மதத்தை பற்றி அதிக விமர்சனங்கள் எழுவதில் வியப்பில்லை. அதனை இங்கே யாரும் கிறிஸ்தவ எதிர்ப்பு என்று பாமரத்தனமாக புரிந்து கொள்வதில்லை. "பாப்பரசர் ஒரு மாபியா கிரிமினல்" என்று கூறும் கத்தோலிக்கர்களை இங்கே காணலாம். உண்மையிலேயே வத்திக்கானுக்கும், மாபியாவுக்கும் இடையிலான தொடர்புகளை ஆய்வு செய்த நூல்கள் பல வெளியாகியுள்ளன.

ஒரு காலத்தில், ஐரோப்பா முழுவதும், கத்தோலிக்க மதம் மட்டுமே, ஒரேயொரு மதமாக ஆதிக்கம் செலுத்தியது. கத்தோலிக்க கிறிஸ்தவ சபை மக்களை சுரண்டி வாழும் ஒட்டுண்ணி நிறுவனமாகவே அவர்களுக்கு தெரிந்தது. கிராமத்தில் இருக்கும் சிறிய தேவாலயத்தின் பாதிரி கூட வரி வசூல் செய்யும் "கலக்டர்" போல நடந்து கொண்டார். ஒரு தேவாலயத்தின் உறுப்பினர் கொடுக்கும் பங்குப் பணம், ஒரு சாதாரண பக்தன் கொடுக்கும் காணிக்கை அல்ல. அதற்கும் மேலே. பாதிரிகள் அந்தப் பணத்தை வசூல் செய்து, பிராந்திய பிஷப்புக்கு அனுப்புவதும், அவர் அதை வத்திக்கானுக்கு அனுப்புவதும் இன்று வரை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இன்றைக்கும் கத்தோலிக்க திருச்சபை ஒரு சர்வதேச நிழல் அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இன்று பெருகி வரும் புரட்டஸ்தாந்து, பெந்தேகொஸ்தே சபைகளின் வியாபாரப் போட்டி வேறு.

ஐரோப்பாவில் இன்றைக்கும் கிறிஸ்தவர்களாக மத நம்பிக்கையுடன் வாழும் பலர் தேவாலயங்களுக்கு செல்வதில்லை. ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதம் மக்களின் மக்களின் மனங்களில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு கிராமங்களிலும், தேவாலயம் மக்களை கட்டுப்படுத்தும் அதிகார மையமாக இருந்துள்ளது. அந்த கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் தேவாலயத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். மாதாமாதம் வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை கொடுத்து விட வேண்டும். (குறைந்தது மொத்த வருமானத்தில் 10 %) அப்படி தனது பங்கை செலுத்தாதவர் கிறிஸ்தவனாக கருதப்பட மாட்டார். (தேவாலயம் அவரை கிறிஸ்தவன் அல்ல என்று பிரகடனம் செய்யும்). "ப்பூ... இதிலென்ன இருக்கிறது. நானும் தான் அடிக்கடி சர்ச்சுக்கு போவதில்லை. பணம் ஒன்றும் கொடுப்பதில்லை. என்னை யாரும் கிறிஸ்தவன் இல்லை என்று சொல்வதில்லையே..." என்று நீங்கள் வாதம் செய்யலாம். ஐயா, உங்களுடைய நிலைமை வேறு. அன்று ஐரோப்பிய மக்களின் நிலைமை வேறு. "கிறிஸ்தவன் இல்லை" என்று அறிவிப்பது, நமது காலத்தில் அரசாங்கம் ஒருவரது குடியுரிமையை பறிப்பதற்கு ஒப்பானது. அந்த நபரின் வாழ்வுரிமையே பறிக்கப்படுகின்றது.

தேவாலயம் எந்த அளவு பெரிய பணக்கார நிறுவனமாக இருந்திருக்கும் என்பதை நான் சொல்லத் தேவை இல்லை. (எனக்கு தெரிந்த, சிறிய தேவாலயம் ஒன்றின் கணக்கு வழக்குகளை பார்க்கும் நண்பர் ஒருவர், மாதம் 20000 யூரோ வருமானம் கிடைப்பதாக தெரிவித்தார்.) நிலப்பிரபுத்துவ காலத்தில், தேவாலயத்திற்கு என்று ஏக்கர் கணக்கில் நிலங்கள் சொந்தமாக இருக்கும். அவற்றில் விவசாயிகள் குடிமை வேலை செய்ய வேண்டும். (ஆண்டவன் பெயரில் அடிமை உழைப்பு). இதைத் தவிர தேவாலய கட்டிட தொழிலாளர்கள், சாமிப்படம் பொறித்த கண்ணாடிகள் செய்து கொடுப்பவர்கள், சிற்பக் கலைஞர்கள் கூலி கேட்டால், ஆண்டவனுக்கு செய்யும் கடமையாக கருதிக் கொள்ளுமாறு கூறி விடுவார்கள். கிறிஸ்தவ நிறுவனம் மெழுகுதிரி உற்பத்தி போன்ற பல தொழிற்துறைகளில் ஏகபோகம் கொண்டாடியது. சுருக்கமாக சொன்னால், மத்திய காலத்தில் கத்தோலிக்க திருச்சபை ஒரு தேசங்கடந்த பன்னாட்டு வர்த்தக கழகமாக இயங்கி வந்தது.

மதகுருக்களும், நிலப்பிரபுக்களும் சேர்ந்தே ஆட்சி நடத்தினார்கள். நிலப்பிரபுக்கள் செய்த அக்கிரமங்களை மதகுருக்கள் கண்டுகொள்ளவில்லை. அதே போல மதகுருக்கள் செய்த துஷ்பிரயோகங்களை நிலப்பிரபுக்கள் கண்டுகொள்ளவில்லை. அப்படித் தான் கத்தோலிக்க தேவாலயங்களை சேர்ந்த பாதிரிகளின் காம இச்சைக்கு அப்பாவி சிறுவர்கள் பாதிக்கப்பட்டனர். இப்போது கத்தோலிக்க நண்பர்கள் நியாயம் கற்பிப்பது போல போல "ஒரு சில கெட்ட பாதிரிகளின் செயல்" அல்ல. (பிடிபட்ட பின் தானே கள்வன்?) ஒரு இரகசிய நிறுவனம் இதையெல்லாம் தானே வெளிவிட்டிருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா? 20 ம் நூற்றாண்டிலும் வத்திகான் இரகசியங்களை வெளியே சொன்னவர்கள் மர்மமான முறையில் மரணமடைந்தார்கள். அது குறித்து இதுவரை எந்த விசாரணையும் இல்லை.

தேவாலய நிர்வாகத்தின் சர்வாதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்டவர்கள் கிறிஸ்தவ மதத்தில் இருந்து வெளியேற்றப் பட்டார்கள். "மதத்தில் இருந்து வெளியேற்றுவது" என்றால் எத்தகைய தீய விளைவுகள் ஏற்படும் என்று எல்லோருக்கும் தெரியும். தமிழ் சினிமாவில் எங்கோ ஒரு குக்கிராமத்தில், பஞ்சாயத்து கூடி ஊருக்கு உள்ளே வரக்கூடாது என்று தண்டனை கொடுப்பார்களே, அது போன்றது. தேவாலய உறுப்புரிமை நீக்கப்பட்டவர்களுடன் ஊர் மக்கள், உறவினர்கள் தொடர்பு வைக்க மாட்டார்கள். பட்டினி கிடந்தாலும் யாரும் உணவு கொடுக்க மாட்டார்கள். அவர்கள் ஊருக்கு வெளியே இரந்துண்ணும் பிச்சைக்காரர்களாக வாழ வேண்டும். இத்தகைய நடைமுறை 19 ம் நூற்றாண்டில் கூட சில இடங்களில் தொடர்ந்தது.

கத்தோலிக்க மதம் அதிகாரம் செலுத்திய நாடுகளில் எல்லாம் கைதிகளை சித்திரவதை செய்வது, சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருந்தது. உங்களது கற்பனைக்கு எட்டாத வழிகளில் எல்லாம் சித்திரவதை செய்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒன்று. கசாப்புக் கடையில் செய்வது போல தோலை உரித்து எடுப்பார்கள். அப்போதெல்லாம் ஆன்மிகம் போதிக்கும் மதத் தலைவர்கள் சித்திரவதையை பார்த்து ரசிப்பார்கள். (அவர்கள் தானே விசாரணை அதிகாரிகள் ) அந்தக் காலத்தில் சித்திரவதை செய்ய பயன்பட்ட உபகரணங்களை இன்றைக்கும் ஐரோப்பிய அருங்காட்சியகங்களில் காணலாம்.

எப்படியானவர்களை சித்திரவதை செய்தார்கள்? கொலைகாரர்களையும், கொள்ளைக்காரர்களையுமா? இல்லை சாதாரண அப்பாவி மக்களை. மத நிறுவனத்திற்குள் நடந்த முறைகேடுகளை எடுத்துச் சொன்னவர்கள். தேவாலயத்தில் போதிக்கப்படும் கருத்துகளை விமர்சித்தவர்கள். மாற்றுக் கருத்து கொண்டவர்கள். கத்தோலிக்க மதத்தில் இருந்து பிரிந்து செல்ல விரும்பியவர்கள். மதத் தலைவர்களின் வானளாவிய அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்தியவர்கள். மதகுருக்களின் (பாலியல்) துஷ்பிரயோகங்களை எதிர்த்தவர்கள். அவர்கள் மட்டுமல்ல, மூலிகைகளைப் பயன்படுத்தும் இயற்கை வைத்தியம் தெரிந்த மருத்துவர்கள் கூட கொல்லப்பட்டார்கள். (ஏனென்றால் அவர்கள் சூனியம் செய்பவர்களாம்.) கொடுமைக்குள்ளான அப்பாவிகளின் பட்டியல் நீண்டு செல்கின்றது.

மக்களும் எத்தனை காலத்துக்கு தான் கிறிஸ்தவ மதம் செய்த கொடுமைகளை பொறுத்துக் கொள்வார்கள்? மக்கள் விரோத மத நிறுவனத்தின் அநீதிக்கு எதிராக பொங்கி எழ மாட்டார்களா? பிரெஞ்சுப்புரட்சி வெடித்த பொழுது அரச குடும்பம் மட்டும் தாக்கப் படவில்லை. எத்தனையோ தேவாலயங்கள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டன. பாதிரிகள், கன்னியாஸ்திரிகள் பெருந்திரள் மக்கள் கூட்டத்தின் முன் சிரச்சேதம் செய்யப்பட்டார்கள். அன்று அந்த மக்களுக்கு, கிறிஸ்தவ மத நிறுவனம் மீது எவ்வளவு வெறுப்பு இருந்திருக்க வேண்டும் என்று உணர முடிகின்றதா? இங்கே இந்த உண்மைகளை எழுதும் என்னை "கிறிஸ்தவ மத எதிர்ப்பாளன்" என்று தூற்றுவீர்கள் என்றால், நீங்கள் கொடுமைக்காரர்களின் பாவகாரியங்களுக்கு துணை போகின்றீர்கள் என்று அர்த்தம்.

எமது நாடுகளில் கற்பிக்கப்படும் அறிவியல் பாடங்கள் எல்லாம் ஆங்கிலேயர் அறிமுகப் படுத்தியவை. அதனால் கிறிஸ்தவ ஐரோப்பிய நாடுகள் என்றென்றும் அறிவியலில் சிறந்து விளங்கியதாக கருதுவது தவறு. கிறிஸ்தவ மதம் ஒரு நாளும் அறிவியலை வளர்க்கவில்லை. தீராத தலைவலி என்று வைத்தியரிடம் போனால், அவர் தலையில் ஓட்டை போட்டு அசுத்த ஆவியை வெளியேற்றுவார். இது உயர்தர வகுப்பு மாணவர்களின் பாடப் புத்தகத்தில் இருந்து எடுத்துக் காட்டிய உதாரணம். பூமி உருண்டை என்று சொன்னதற்காக கலீலியோவுக்கு தண்டனை கொடுத்த கதை எல்லோருக்கும் தெரியும். உண்மையில் இன்று நீங்கள் கற்கும் அறிவியல் பாடங்கள் எல்லாம் கிரேக்க, அரேபிய மூல நூல்களில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை.

நூலகங்களில் கிறிஸ்தவ மதத்தை ஆய்வு செய்யும் ஆயிரக்கணக்கான நூல்கள் கிடைக்கின்றன. பல நூல்களில் பைபிளுக்கு அப்பால் கிறிஸ்தவ மத வரலாறு குறித்து ஆராய்ந்துள்ளன. ("பைபிளில் இவ்வாறு எழுதியுள்ளது ....." என்றெல்லாம் சொல்லி விட்டால் அது விஞ்ஞான விளக்கம் ஆகி விடாது.) எனது கட்டுரைகளின் உசாத்துணையாக அவற்றை பல இடங்களில் குறிப்பிட்டுளேன். அவையெல்லாம் ஆயிரம் ஆண்டு கால கிறிஸ்தவ பாரம்பரியம் கொண்ட அறிஞர்களால் எழுதப்பட்டவை. (அதே போல யூதர்கள் சம்பந்தமான தகவல்களை யூத ஆய்வாளர்களே எழுதியுள்ளனர்.) இவற்றை எனது கட்டுரைகளில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் என்னில் மட்டும் குற்றம் காண விளையும் நண்பர்களின் உள் நோக்கம் என்ன? அவர்கள் யாரும் எனது கட்டுரைகளில் எழுதியுள்ளவை தவறானது என்று நிரூபிக்கவில்லை. மதவாதிகளின் வழக்கமான பாணியிலேயே விமர்சனங்களை எதிர்கொள்ளுகின்றனர். விமர்சிப்பவர் மீது முத்திரை குத்துவது, மிரட்டுவது அல்லது தூற்றுவது. மதம் ஆட்சி செய்த காலங்களில் அது தானே நடந்தது.

பிரான்ஸில் கத்தோலிக்க மதத்தை சீர்திருத்தி, அடக்குமுறை செய்யும் அதிகார வர்க்கத்தை ஒழித்து, சமத்துவத்தையும், சகோதரத்தையும் வலியுறுத்தியவர்கள் அழிக்கப்பட்டார்கள். ஓடுகாலிகள், துரோகிகள் என்ற அர்த்தம் வரும் வண்ணம் "ஹெரதிக்" என்ற பட்டம் சூட்டி, அவர்கள் மீது போர் தொடுத்தார்கள். "அன்னை மரியாள் எனக்கு காட்சி தந்தாள்" என்று சொன்னதற்காக 16 வயது இளம் பெண்ணை கத்தோலிக்க மதகுருக்கள் சித்திரவதை செய்து கொன்றார்கள். ஏனென்றால் தங்கள் கண்ணுக்கு புலப்படாத கடவுள் எப்படி சாதாரண பட்டிக்கட்டுப் பெண்ணுக்கு தெரியவரும், என்ற வெறும் "ஈகோ" பிரச்சினை. (ஆமாம், இல்லாத கடவுளைக் கண்டேன் என்று சொன்னால் நம்புவார்களா?) அதுவும் எப்படிக் கொன்றார்கள்? உயிரோடு நெருப்பு மூட்டிக் கொன்றார்கள். ஐரோப்பாவில் கத்தோலிக்க மதம் கொன்று குவித்த மக்களின் தொகையை கணக்கிட்டால் கோடிக்கணக்கை தாண்டும். அதனை இனப்படுகொலை என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது? கத்தோலிக்க மதம் செய்த கொலைகளுக்காக 2000 ம் ஆண்டு பாப்பரசர் மன்னிப்புக் கேட்டார். கத்தோலிக்க மதவெறிக் கொலைஞர்களால் கொல்லப்பட்ட அப்பாவிகளின் ஆன்மா ஆயிரம் வருடங்களுக்கு பின்னர் தான் பரிசுத்தமானது. ஆனால் கொடூரமான கொலைகாரர்கள் எவராவது தண்டிக்கப்பட்டதாக வரலாற்றில் எங்கேயும் எழுதப்படவில்லை.

நான் கடந்த இருபது வருடங்களாக 100 % கிறிஸ்தவ நாட்டில் வாழ்ந்து வருகிறேன். கிறிஸ்தவ மதம் இந்த நாட்டின் வரலாற்றில் ஒரு பகுதி. இந்த நாட்டவர்களின் மொழி, பண்பாடு, வாழ்க்கை நெறி போன்றவற்றில் கிறிஸ்தவ மதம் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். கிறிஸ்தவ மதம் குறித்த அறிவு சிறிதளவேனும் இல்லாமல் பல சொற்களின், சொற்பதங்களின் அர்த்தங்களை கூட உங்களால் புரிந்து கொள்ள முடியாது. உள்நாட்டு மக்களின் கலாச்சாரத்தை புரிந்து கொள்ள முடியாது. மக்களின் மனோபாவம் கூட கிறிஸ்தவ சிந்தனையின் படி மாறியுள்ளது. இதிலிருந்து அவர்கள் மெல்ல மெல்லத் தான் மீள முடியும். (இன்றைய சராசரி ஐரோப்பியன் தன்னை மதச்சாற்பற்றவனாக காட்டிக் கொள்ள விரும்புகிறான்.)

இந்தியாவிலும், இலங்கையிலும் வரலாற்றுப் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால் குறுகிய வட்டத்திற்குள் வாழும் சிலர் என்னோடு விதண்டாவாதம் செய்ய விளைகின்றனர். கடந்த காலம் பற்றி அறிந்திராதவர்களுக்கு நிகழ்காலத்தை புரிந்து கொள்ள முடியாது. அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் வரலாறு ஒரு முக்கிய பாடம். வரலாற்றுப் பாடத்தில் சித்தியடையாத ஒரு மாணவன் பல்கலைக்கழகம் செல்ல முடியாது. பள்ளிகளில் கற்பிக்கப்படும் வரலாற்றுப் பாடத்தில் குறைந்தது இரண்டு அத்தியாயங்கள் ஆவது கிறிஸ்தவ மதம் குறித்து இருக்காதா? இரண்டாயிரம் ஆண்டுகள் ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்திய கிறிஸ்தவ மதத்தை ஒதுக்கி விட்டு வரலாற்றுப் பாடம் நடத்த முடியுமா? நண்பர்களே ஒரு கணம் சிந்திப்பீர்.

யூத மதமும் ஐரோப்பிய வரலாற்றில் தவிர்க்கவியலாத பகுதி தான். ஐரோப்பாக் கண்டத்தில் இரண்டாவதாக யூத மதமே இருந்தது. நீண்ட காலமாக கிறிஸ்தவ மதத்தால் அடக்கப்பட்டு வந்தது. ஐரோப்பிய நாடுகள் எங்கும் யூதர்கள் மதச் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். ஐரோப்பிய பொருளாதார வளர்ச்சியில் யூதர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. 20 நூற்றாண்டில் இஸ்ரேலை ஸ்தாபித்தவர்கள் ஐரோப்பாவில் இருந்து சென்ற யூதர்கள் தான். அதனால் ஐரோப்பாவில் யூத மதம் குறித்த தகவல்கள் அதிகமாக கிடைப்பதில் வியப்பில்லை. ஆம்ஸ்டர்டாம் நகரில் ஐரோப்பிய யூதர்களின் வரலாற்றை ஆவணப் படுத்தி வைத்திருக்கும் மியூசியம் ஒன்றுள்ளது. அப்படி இருக்கையில் யூதர்களைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது எனக் கூற முடியுமா? அதே நேரம் தமிழர்கள் மத்தியில் ஏற்கனவே யூதர்கள் குறித்து பரப்பப்பட்டுள்ள தவறான கருத்துகளை நானும் மறுபதிப்பு செய்ய முடியாது.

நண்பர்களே! ஒரு கிறிஸ்தவ நாட்டில் இருபதாண்டு கால வாழ்பனுபவம், எத்தனை பாடங்களை எனக்கு கற்பித்திருக்கும்? குறிப்பிட்ட கால உயர்தர பாடசாலைக் கல்வியை இங்கே தான் பெற்றேன். அதிலே தவிர்க்கவியலாத கிறிஸ்தவ வரலாற்றை படிக்காமல் கல்வியை பூர்த்தி செய்திருக்க முடியாது. அதைவிட நாள் தோறும் ஊடகங்கள் கிறிஸ்தவ மதம் குறித்து புதிது புதிதாக எதையாவது அறிவித்துக் கொண்டிருக்கின்றன. இன்றைய ஐரோப்பியர்கள் மதச்சார்பற்ற சமுதாயமாக மாறி விட்டதால், கிறிஸ்தவ மதத்தின் குறைகளை எடுத்துக் கூறும் செய்திகளும் அதிகம் வருகின்றன. ஒரு சில மத அடிப்படைவாதிகளைத் தவிர வேறு யாரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை.

இந்த நாடுகளில் பொது இடங்களில் மதச்சார்பற்ற கொள்கை கடைப்பிடிக்கப் படா விட்டால், அது குறித்து முறைப்பாடுகள் வந்து குவியும். ஆம்ஸ்டர்டாம் நகரில் பேரூந்து வண்டியோட்டும் (எகிப்தை சேர்ந்த) கிறிஸ்தவ சாரதி சிலுவை மாலை அணிந்து வேலைக்கு வருவதை நிர்வாகம் கண்டித்தது. அவர் அதற்கெதிராக நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால் தீர்ப்பு சொன்ன நீதிபதியோ, "பொதுப் போக்குவரத்து துறையை சேர்ந்த ஊழியர் மதச் சின்னம் அணிவது கூடாது" என்று தடை விதித்தார். இத்தாலி பாடசாலைகளில் சிலுவைகளும், இயேசு படங்களும் வைத்திருப்பதற்கு எதிராக சில பெற்றோர் முறைப்பாடு செய்தனர். நீதிமன்றம் அவர்களுக்கு சார்பாக தீர்ப்பு வழங்கினார். இது இப்படியிருக்க மதச்சார்பற்ற நாடென்று கூறிக் கொள்ளும் இந்தியாவில் பேரூந்து வண்டிகளில், அலுவலகங்களில், கல்வி நிலையங்களில் சாமிப்படங்கள் வைத்திருக்கிறார்கள்.

ஐரோப்பாவில் இன்று தேவாலயங்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் பல தேவாலயங்கள் பராமரிக்கப்படாமல் மூடப் பட்டு கிடக்கின்றன. நான் வாழும் ஆம்ஸ்டர்டாம் நகர மத்தியில் உள்ள தேவாலயங்கள் அருங்காகாட்சியகமாக மாற்றப்பட்டு விட்டன. எனது வீட்டின் அருகில் உள்ள தேவாலயம் ஒன்று வழக்கறிஞர்களின் அலுவலகமாக செயற்படுகின்றது. லண்டன் மாநகரில் சில தேவாலயங்களை இஸ்லாமியரும், இந்துக்களும் வாங்கி தமது வழிபாட்டுத்தலமாக மாற்றியுள்ளனர். வெள்ளையின ஐரோப்பியரை விட, வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறிய ஆசிய, ஆப்பிரிக்க கிறிஸ்தவர்களே இன்று தேவாலயங்களுக்கு அதிகம் செல்கின்றனர். இதனால் கிறிஸ்தவ சபைகளும் அவர்களை குறி வைத்தே பிரச்சாரம் செய்கின்றன. வீடு தேடி வந்து "எங்களுடைய சபைக்கு வாருங்கள், பைபிள் படியுங்கள்." என்று கூப்பிடுவார்கள். நான் அவதானித்த வரையில் அவர்கள் வெள்ளையர்களை அதிகம் நாடுவதில்லை. காரணம் அங்கே போனால் என்ன மரியாதை கிடைக்கும் என்று அவர்களுக்கே தெரியும்.

இருபதாண்டு காலம் கிறிஸ்தவ/யூத சமூக அமைப்பினுள் வாழும் நான், அந்த மதங்களைப் பற்றி அதிகம் எழுதுவது தானே முறை? எனக்கு அதிகம் தெரிந்த ஒன்றைப் பற்றி தானே நான் எழுத முடியும்? நான் வாழும் சுற்றாடலில் நடப்பதை அறிவிப்பது தானே ஒரு பதிவரின் கடமை? இதைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்? கார்ல் மார்க்ஸ், பகுனின், போன்ற தத்துவவியலாளர்கள் கிறிஸ்தவ மதத்தை கற்ற பின்னர் தான் அந்த மதத்தை கேள்விக்குட்படுத்தினர். பைபிளை மட்டும் படித்து விட்டு, கிறிஸ்தவ மதத்தை புரிந்து கொள்ள முடியாது. அடுத்த தடவை கிறிஸ்தவ இறையியல் குறித்து நான் படித்த ஐம்பதுக்கும் குறையாத நூல்களின் பட்டியலை தருகிறேன். நான் ஏட்டுப் படிப்புடன் மட்டும் நின்று விடவில்லை. நான் விஜயம் செய்த கிறிஸ்தவ மதம் சம்பந்தமான அருங்காட்சியங்களின் விபரங்களை தருகிறேன். பைபிளில் குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு சுற்றுலாப்பயணியாக சென்றிருக்கிறேன்.

நண்பர்களே! நீங்கள் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்பவராக இருந்தால், முதலில் அந்த மதத்தை பற்றி மேலும் அறிந்து கொள்ள முயற்சியுங்கள். மதங்களின் வரலாறு முழுவதையும் சீர் தூக்கிப் பார்த்தால், அவை மக்களுக்கு செய்த தீமைகளே அதிகமாக இருக்கும். எப்போதும் தமது மதத்தை பற்றி நல்ல அம்சங்களை மட்டுமே மதவாதிகளும் பிரச்சாரம் செய்வது, அவர்களை கடவுளிடம் இருந்து அந்நியப்படுத்துகின்றது. ஆன்மீகவாதிகளிடம் கடவுள் யார் என்று தத்துவ விளக்கம் கேட்டால், அது தான் உண்மை என்பார்கள். இங்கேயுள்ள மதவாதிகள் உண்மையைப் பார்த்து கண்களையும், காதுகளையும் மூடிக் கொள்கிறார்கள்.