Showing posts with label கனடா. Show all posts
Showing posts with label கனடா. Show all posts

Tuesday, May 02, 2017

2017 மேதினம் - மொன்றியல் முதல் மாத்தளை வரை


இவ் வருட மேதினமும் உலகம் முழுவதும் வாழும் உழைக்கும் மக்களை ஒன்று சேர்த்திருந்தது. பிரான்ஸில் ஜனாதிபதித் தேர்தல் நடக்க இருப்பதால், அங்கு இம்முறை நடந்த மேதின ஊர்வலத்தில் வன்முறைகள் வெடித்தன. பாரிஸ் மட்டுமல்ல ரோன் போன்ற பிற நகரங்களிலும் கடந்த சில நாட்களாக இனவாதக் கட்சியான FN தலைவி மாரின் லே பென் இன் தேர்தல் வெற்றிக்கு எதிரான வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நடந்து வந்துள்ளன.

பாரிஸ் மேதின‌க் க‌ல‌வ‌ர‌த்தில் பொலிசாரும், ஆர்ப்பாட்ட‌க்கார‌ரும் மோதிக் கொண்ட‌னர். பொலிஸ் க‌ண்ணீர்ப்புகை குண்டுக‌ளை வீசி பேர‌ணியை க‌லைக்க‌ முய‌ன்ற‌து. ஆர்ப்பாட்ட‌க்கார‌ர்க‌ள் பெட்ரோல் குண்டுக‌ளை வீசின‌ர். ஒரு பொலிஸ்கார‌ர் எரிகாய‌ங்க‌ளுக்கு உள்ளானார்.

பிரான்ஸில் முன்பு ந‌ட‌ந்த, தொழிலாள‌ர் ந‌ல உரிமைக்கான‌ தொழிற்ச‌ங்க‌ ந‌ட‌வ‌டிக்கையின் தோல்வி, பொதுத்தேர்த‌லில் வென்ற‌ இன‌வாத‌க் க‌ட்சிக்கு எதிரான‌ எதிர்ப்புண‌ர்வு போன்ற‌ன‌வே மேதின‌ வ‌ன்முறைக்கு கார‌ண‌ம். மேதின‌ பேர‌ணியில் க‌ல‌ந்து கொள்ளாம‌ல் த‌னித்து நின்ற‌ இட‌துசாரி இளைஞ‌ர்க‌ள் தான் வ‌ன்முறையில் ஈடுப‌ட்ட‌ன‌ர்.


கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் கியூபெக் மாநிலத் தலைநகர் மொன்றியலில் நடந்த மேதினப் பேரணியில் முதலாளித்துவத்திற்கு எதிராகவும், குறைந்த பட்ச கூலியை அதிகரிக்க வேண்டுமென்றும் கோஷங்கள் எழுப்பப் பட்டன. பல்வேறு கம்யூனிச, இடதுசாரிக் கட்சிகள் மட்டுமல்லாது, சாதாரண மக்களும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டதைக் காணக் கூடியதாக இருந்தது. (http://montrealgazette.com/news/local-news/montreal-may-day-rallies-call-for-a-minimum-wage-of-15-end-to-capitalism)

கனடாவில் தற்போது வழங்கும் சம்பளம் வறுமையில் இருந்து மீளப் போதுமானது அல்ல. பல உழைப்பாளிகள் கஞ்சித் தொட்டிகளை நம்பி வாழ்கிறார்கள். நாம் சம்பள உயர்வைக் கோராமல் பேசாமல் இருந்தால், அவர்களாக கூட்டப் போவதில்லை என்று பேரணியில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர். 


துருக்கி கம்யூனிஸ்ட் கட்சியின் மேதின ஊர்வலங்கள், அடானா, அங்காரா, இஸ்தான்புல், இஸ்மிர் ஆகிய துருக்கியின் பல நகரங்களிலும் இடம்பெற்றன. துருக்கியில் மனிதஉரிமைகளை நசுக்கி வரும், ஜனாதிபதி ஏர்டோகனின் சர்வாதிகார ஆட்சிக் காலத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டம் என்பதால் காவல்துறையினரின் விசேட கவனத்தைப் பெற்றிருந்தது. 

படத்திற்கு நன்றி: David Suren

இலங்கையில், புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சியினர் யாழ்ப்பாணம், வவுனியா, மாத்தளை ஆகிய நகரங்களில் நடத்திய மேதின ஊர்வலங்களில் தமிழ் பேசும் உழைக்கும் வர்க்க மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். மாத்தளை நகரில் நடந்த பேரணியில் சமூக நீதிக்கான மலையக வெகுசன அமைப்பு, புதிய ஜனநாயக இளைஞர் முன்னனி,பெண் விடுதலை சிந்தனை அமைப்பு, கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கம் போன்ற வெகுஜன அமைப்புகளும் பங்கு பற்றின. தென்னிலங்கையில் கூட ஜேவிபி, முன்னிலை சோஷலிசக் கட்சி, மற்றும் பல இடதுசாரிக் கட்சிகள் நடத்திய மேதினப் பேரணிகளில் இலட்சக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 

படத்திற்கு நன்றி: Seelan Saththiyaseelan

இருப்பினும், வழமை போல முதலாளித்துவ ஊடகங்கள், அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மறைத்தன. அதற்குப் பதிலாக காலிமுகத் திடலில் மகிந்த ராஜபக்சே நடத்திய மேதினக் கூட்டத்தில் திரண்ட மக்கள் வெள்ளத்தை காட்டி, அதை வைத்து அரசியல் நடத்திக் கொண்டிருந்தன. சிங்கள ஊடகங்கள் மட்டுமல்லாது, தமிழ் ஊடகங்கள் கூட ராஜபக்சவின் கூட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தன. இலங்கையிலும் உழைக்கும் வர்க்க மக்கள் மேதினத்தில் தமது உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கையில், முதலாளித்துவ கட்சிகள் அந்த உணர்வை மடைமாற்றும் வேலையில் ஈடுபட்டன.

தமிழ் முதலாளிகளின் கட்சியான, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதின கூட்ட வீடியோ பார்க்கக் கிடைத்தது. (https://www.facebook.com/vigneswaran.kajee/videos/1876412175950974/?hc_location=ufi) மேடையில் தொழிலாளர் தினம் என்று பேனர் வைத்திருந்தார்கள். ஆனால், உரையாற்றிவர்கள், தப்பித் தவறிக் கூட தொழிலாளர் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. ஒரு சம்பிரதாயத்திற்காக என்றாலும், மேதினம் எதற்காக கொண்டாடப் படுகின்றது என்ற தகவலைக் கூறவில்லை.

சிலருக்கு எங்காவது மேடை கிடைத்தால் போதும் போலிருக்கிறது. மேதினக் கூட்டத்திலும் "சம்பந்தன் ஐயா என்ன செய்தார்? யாருடைய வீட்டைக் கட்டினார்?" என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறிக் கொண்டிருந்தார்கள். மேடைக்கு கீழே நின்று கொண்டு அதற்கு கைதட்டி இரசிக்கும் தொழிலாளர்கள் எந்தளவு தூரம் அரசியலற்ற சமூகமாக மாறி உள்ளனர் என்பதைக் காட்டுகின்றனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் கூட ஒரு முதலாளி தான். அவரது குடும்பத்திற்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்கள் தென்னிலங்கையிலும், இரப்பர் தோட்டங்கள் மலேசியாவிலும் உள்ளன. அங்கெல்லாம் தொழிலாளர் உரிமைகள் மதிக்கப் படுவதில்லை. குறைந்த பட்சம் கூலி உயர்வு கூட வழங்குவதில்லை.

இந்த உண்மைகள் யாவும், கஜேந்திரகுமாரை பின்தொடரும் மத்தியதர வர்க்க ஆதரவாளர்களுக்கும் தெரியாமல் இல்லை. அதனால் தான் மேதினத்தில் தொழிலாளர் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதை தவிர்க்கிறார்கள். "தமிழ்த் தேச தொழிலாளர்கள்" என்று சொல்லித் தான் மேதினக் கூட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தனர்.

கஜேந்திரகுமாரின் மலையகத் தோட்டங்களில் வேலை செய்பவர்கள் தமிழ்த் தொழிலாளர்கள் இல்லையா? குறைந்த பட்சம், அவர்களில் ஒருவரை மேடையில் ஏற்றிப் பேச வைத்திருக்கலாமே? சும்மா பாசாங்குக்காவது தொழிலாளர் தினம் கொண்டாடுவதாகக் காட்ட வேண்டாமா? இது போன்ற முதலாளியக் கட்சிகள் அம்மணமாகத் திரிகின்றன. அந்த அம்மணம் தான் அழகு என்று மக்களை நம்ப வைத்திருகிறார்கள். 


Tuesday, April 14, 2015

நடமாடும் இரத்த வங்கியை கண்டுபிடித்த கனடிய கம்யூனிஸ்ட் மருத்துவர்


ஈழப்போர் நடந்த காலங்களில், போர்க்களங்களில் காயமடைந்த போராளிகளின் உயிரைப் பாதுகாக்கும் முதலுதவிச் சிகிச்சை செய்வதற்கு தயாரான நிலையில் சில மருத்துவ வாகனங்களை வைத்திருந்தார்கள். அதில் பணியாற்றிய மருத்துவர்கள், தாதியருக்கு ஓர் உண்மை தெரிந்திருக்காது. அதாவது, போர்க்களங்களில் நடமாடும் மருத்துவ சிகிச்சை வழங்கும் அமைப்பை உருவாக்கியவர் ஒரு கனடிய கம்யூனிஸ்ட் மருத்துவர். அவர் பெயர் Dr. நார்மன் பெதியூன் (Dr.Norman Bethune)

மருத்துவ வரலாற்றில் நீண்ட காலமாகவே, குருதி மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டு வந்துள்ளன. ஆயினும், போர்க்களத்தில் காயப்பட்ட வீரர்களை அயலில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது. 1935 ம் ஆண்டு, அதிலே ஒரு புரட்சிகர மாற்றம் நடைபெற்றது. காயமடைந்த வீரர்களை தேடி மருத்துவமனை வந்தது. அதாவது, குளிர்சாதனப் பெட்டியில் உறை நிலையில் வைக்கப்பட்ட குருதிகளை எடுத்துக் கொண்டு, ஒரு வாகனம் ஓடித் திரிந்தது. அந்த வாகனம் போர்க்களத்திற்கே சென்று சிகிச்சை அளித்தது.

அப்போது ஸ்பெயின் நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது. பிராங்கோவின் பாஸிசப் படைகளை எதிர்த்து, கம்யூனிஸ்டுகளும், சோஷலிஸ்டுகளும், குடியரசுவாதிகளும் தனித்தனி இராணுவங்களை அமைத்து போரிட்டுக் கொண்டிருந்தனர். குறிப்பாக, கம்யூனிஸ்டுகளின் படையணிக்கு உதவுவதற்காக, பன்னாட்டு தொண்டர்கள் வருகை தந்தனர். குறைந்தது 35000 தொண்டர்கள், 60 நாடுகளை சேர்ந்தவர்கள், அல்லது வெவ்வேறு பட்ட இனத்தவர்கள், அன்று ஸ்பெயினில் போரிட்டனர். அவ்வாறு கனடாவில் இருந்து சென்ற தொண்டர்களில் பெதியூனும் ஒருவர்.

கனடாவில் வாழ்ந்த காலங்களிலேயே, கம்யூனிச சித்தாந்தம் பால் கவரப் பட்ட பெதியூன் 1935 ம் ஆண்டு, கனடிய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அந்தக் கட்சியின் ஏற்பாட்டில் இயங்கிய தொண்டு நிறுவனமான Committee to Aid Spanish Democracy (CASD) பெதியூனை ஸ்பெயினுக்கு அனுப்பி வைத்தது. 

பெதியூன் மாட்ரிட் நகருக்கு வந்து சேர்ந்த பொழுது, வைத்தியசாலைகளில் எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு நிலவியது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்ததால், காயமடைந்தவர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கூட தங்க வைக்கப் பட்டனர். அங்குள்ள நிலைமைகளை பார்த்த பெதியூன், அதிகளவு இரத்தப் போக்கு காரணமாக இளம் வீரர்கள் பலியாகிக் கொண்டிருந்ததை கண்டார். அப்போது தான் அவர் மனதில் அந்த எண்ணம் உதயமானது.

பிரிட்டனில் இருந்து விசேடமான வேன் ஒன்றை தருவித்தார். அதற்குப் பின்னால் ஒரு குளிர்சாதனப் பெட்டியை இணைத்தார். அதில் குருதி எந்நேரமும் உறை நிலையில் வைக்கப் பட்டிருக்கும். மாட்ரிட் நகரில் குருதியை சேகரிப்பதற்காக ஓர் இரத்த வங்கியை நிறுவினார். 

அன்றிருந்த போர்ச் சூழலில் அனைவரும் ஊட்டச்சத்துள்ள உணவுப் பற்றாக்குறையினால் கஷ்டப் பட்டனர். அதனால், கொடையாளிகளின் இரத்தமும் தரம் குறைந்து காணப் பட்டது. பெதியூன் கொடையாளிகளுக்கு முதலில் நல்ல உணவு உண்ணக் கொடுத்து விட்டு தான், அவர்களிடம் இருந்து இரத்தம் சேகரித்தார்.

பார்சலோனா நகரில் ஏற்கனவே ஓர் இரத்த வங்கி இருந்த படியாலும், போர்க்களத்தில் இருந்து எட்டத்தில் இருந்த படியாலும், அந்த நகரை மையமாகக் கொண்டு செயற்படத் தொடங்கினார். பெதியூன் அனுப்பிய அம்புலன்ஸ் வண்டிகள், தினசரி பகலும் இரவுமாக ஓடிக் கொண்டிருந்தன. போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களுக்கு உடனடி இரத்தம் வழங்கி, அவர்களை சாக விடாமல் காப்பாற்றின. 

நடமாடும் இரத்த வங்கிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அவற்றை திறம்பட செயற்பட வைத்ததன் மூலம், கம்யூனிச/சோஷலிசப் படையினர் அனைவருக்கும் இரத்தம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார். ஆனால், சில காரணங்களுக்காக, ஸ்பெயின் அரச படைகளின் சுகாதார நிறுவனமான Sanidad Militair அதனைப் பொறுப்பெடுத்தது. 

ஸ்பெயினை விட்டுச் சென்ற பெதியூன் அதற்குப் பிறகு அந்த நாட்டில் காலடி எடுத்து வைக்கவில்லை. அதே நேரம், சீனாவில் மாவோவின் கம்யூனிசப் படைகள், ஜப்பானிய இராணுவத்தை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தன. பெதியூன் மாவோவின் அழைப்பை ஏற்று சீனா சென்றார். அங்கு அவர் மக்கள் விடுதலைப் படையின் தொண்டராக சேர்ந்தார். 

பெதியூனின் குருதி மாற்றுச் சிகிச்சை காரணமாக, ஏராளமான சீனர்கள் உயிர்ப் பிழைத்தனர். 12 நவம்பர் 1939 ல், பெதியூன் சீனாவில் காலமானார். துரதிர்ஷ்டவசமாக, மருத்துவ சிகிச்சைகள் காரணமாக, அவரது இரத்தத்தில் நஞ்சு ஏறியிருந்தது. நார்மன் பெதியூனின் சேவையை நினைவுகூரும் முகமாக, சீனா முழுவதும் நூற்றுக் கணக்கான சிலைகள் வைக்கப் பட்டன. இன்றைக்கும் அந்தச் சிலைகள் சீனாவில் உள்ளன.

பெதியூன் பற்றிய திரைப்படம் : Dr Bethune

Tuesday, March 31, 2015

ஹொண்டூரஸ் ஏழை மாணவர்களின் கல்வி உரிமைக்கான போராட்டம்



ஹொண்டூரஸ் நாட்டில், அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராடிய நான்கு பாடசாலை மாணவர் தலைவர்கள், கொடூரமான முறையில் கொலை செய்யப் பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அங்கு மக்கள் பெருமளவில் வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

புதிய கல்விக் கொள்கையின் படி, கல்விக்கான அரசு செலவினம் குறைக்கப் படுவதுடன், பாடசாலை முடியும் நேரமும் மாற்றப் பட்டுள்ளது. இதனால், மாலை நேரம் பாடசாலை முடிந்து வீட்டுக்கு செல்லும் ஏழை மாணவர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படும். 

பொதுப் போக்குவரத்து மிகவும் குறைவாக உள்ளது மட்டுமல்ல, குற்றச் செயல்கள் அதிகமாக நடக்கும் ஆபத்தான இடங்களுக்கு ஊடாக செல்ல வேண்டுமென அஞ்சுகின்றனர். ஏழை மாணவர்கள் படிக்க விடாமல் தடுக்கும் அரசின் திட்டமாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.

வெனிசுவேலாவில் ஆர்ப்பாட்டம் நடந்தால், அதனை தினந்தோறும் விரிவாக அறிவிக்கும் CNN போன்ற ஊடகங்கள், இன்னொரு லத்தீன் அமெரிக்க நாடான ஹொண்டூரஸ் பக்கம் திரும்பியும் பார்க்காத காரணம் என்னவோ?

Assassination of 4 Student Leaders in Honduras Prompts Protests

********


23 மார்ச், கனடாவில், பிரெஞ்சு பேசும் கியூபெக் நகரில், இலட்சக் கணக்கான மாணவர்கள் கலந்து கொண்ட பேரணி இடம்பெற்றது. கல்விக்கான செலவினத்தை குறைக்கும் அரசின் திட்டத்தை எதிர்த்து மாணவர்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். அன்றிலிருந்து 15 நாட்கள் வகுப்புகளை பகிஷ்கரிக்கும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த வருடம் வரும் மே தினத்தன்று, தொழிலாளர்களையும் இணைத்துக் கொண்டு, மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்துவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது.

Quebec City protesters shot directly with tear gas

Wednesday, June 04, 2014

கனடா வரலாற்றில் மறைக்கப் பட்ட இனவழிப்பு குற்றங்கள்

அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் இனவழிப்பு செய்யப்பட்ட வரலாறு வெளியுலகில் தெரிந்த அளவிற்கு, கனடாவில் நடந்த பூர்வ குடி மக்களின் இனவழிப்பு பற்றி யாருக்கும் தெரியாது. நீண்ட காலமாக, கனடிய அரசு தனது கடந்த கால இனவெறிக் கொள்கையை, மூடி மறைத்து வந்தது. 

கனடா ஒரு குடியேற்ற நாடு என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், தாம் குடியேறுவதற்கு முன்னர், அந்த மண் மனிதர்கள் வாழாத வனாந்தரமாக இருந்ததாக நினைத்துக் கொள்கின்றனர். அங்கு ஒரு காலத்தில், பல கோடி மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதையும், அவர்களில் பெரும்பான்மையானோர் இனவழிப்பு செய்யப் பட்டனர் என்பதையும், அறியாமல் இருக்கின்றனர்.


கனடாவின் பூர்வ குடி மக்கள் மூன்று வகையாக பிரிக்கப் பட்டுள்ளனர்:
1) First Nation : பல்வேறு செவ்விந்திய இனங்கள்.
2) Métis : கலப்பின வம்சாவளியினர்.
3) Inuït :  முன்பு எஸ்கிமோக்கள் என்று அழைக்கப் பட்ட துருவப் பகுதி மக்கள். 

மேற்குறிப்பிட்ட பூர்வகுடி மக்களைப் பாதுகாப்பதற்காக தனியான பிரதேசங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. ஆனால், இன்றைய கனடிய அரசு, அவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கி, மெல்ல மெல்ல ஒழித்துக் கட்டிக் கொண்டிருக்கிறது. வேலையற்றோர் எண்ணிக்கை பூர்வ குடியினர் மத்தியில் அதிகமாக காணப் படுகின்றது. அரச கொடுப்பனவுகளில் பெரும் பகுதி, மது பாவனைக்கு செலவாகின்றது. அவர்களது ஆயுட்காலமும் குறைவு. பருவ வயது இளைஞர்களில், பாடசாலைக்கு சென்று படிப்பவர்கள் குறைவு. ஏதாவது குற்றச் செயலில் ஈடுபட்டு ஜெயிலுக்குள் இருப்பவர்கள் தான் அதிகம். இது ஒரு வகையில், மிகவும் நுணுக்கமாக நடந்து கொண்டிருக்கும்  இனப்படுகொலை.

கனடிய பூர்வகுடிகளின் இனவழிப்பு, 1844 ம் ஆண்டே ஆரம்பமாகி விட்டது. அன்றிருந்த கனடிய அரசு ஆணைக்குழு, சிறு குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து, விடுதிப் பாடசாலைகளில் தங்க வைக்கும் திட்டம் ஒன்றை கொண்டு வந்தது.  நாடு முழுவதும், 139 விடுதிப் பாடசாலைகள் இயங்கத் தொடங்கின. பூர்வ குடிகளின் வாழிடங்களில் இருந்து, தொலைதூரத்தில் அமைந்திருந்த படியால், அவற்றை தடுப்பு முகாம்களாகவே கருத வேண்டும். 

சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் பூர்வகுடி குழந்தைகள், கதறக் கதற பெற்றோரிடம் இருந்து பிரித்தெடுத்து கொண்டு செல்லப் பட்டனர். அவர்களை தங்க வைத்த விடுதிப் பாடசாலைகளை, கத்தோலிக்க அல்லது புரட்டஸ்தாந்து திருச்சபைகள் நிர்வகித்து வந்தன என்பது தான் விசேஷம். கிறிஸ்தவ மதப் பாதிரிகளும், கன்னியாஸ்திரிகளும் பாடசாலை ஆசிரியர்களாக, ஆசிரியர்களாக இருந்தனர். 



கிறிஸ்தவ பாதிரிகள் நடத்திய பாடசாலைகள் என்பதால், அன்பாக கவனித்து இருப்பார்கள், என்று யாராவது நினைத்தால் ஏமாந்து போவீர்கள். விடுதிப் பாடசாலைகளுக்கு கொண்டு வரப் படும் குழந்தைகளை முதலில் குளிக்க வார்ப்பார்கள். அதற்குப் பிறகு பேன் தடுப்பு மருந்து போடுவார்கள். குழந்தைகளுக்கு புதிய ஆங்கில- கிறிஸ்தவ பெயர் சூட்டப் படும். அவர்கள் அங்கே ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும். பூர்வகுடிகளின் தாய்மொழியை பேசிய பிள்ளைகள் தண்டிக்கப் பட்டார்கள். "தாழ்வான" பூர்வக்குடிப் பிறப்பு குறித்த குற்றவுணர்வு, அவர்கள் மனதில் புகுத்தப் பட்டது. 

விடுதிப் பாடசாலைகளில் தங்கிப் படித்த பூர்வக்குடிப் பிள்ளைகளை, நிவாகிகளும், ஆசிரியர்களும், "குட்டிப் பிசாசுகள்" என்று ஏளனம் செய்தனர். அனாதரவான பிள்ளைகளை அடிப்பது, துன்புறுத்துவது மட்டுமல்ல, அவர்கள் மீதான பாலியல் பலாத்காரமும் தாராளமாக இடம்பெற்றது. பல குழந்தைகள், அங்கு நடந்த கொடுமை தாங்க முடியாமல், தப்பி ஓட முயன்றன. தப்பியோடும் முயற்சியில் ஆபத்திற்குள் மாட்டிக் கொண்டதால் பல குழந்தைகள் மரணத்தை தழுவியுள்ளன. பாலியல் அத்துமீறல்கள், சித்திரவதைகள் தாங்க முடியாமல் பல சிறுவர்கள் இறந்தனர், அல்லது கொலை செய்யப் பட்டனர்.  அந்தக் கணக்குகளில் சேர்க்கப் படாத, "வெளிப்படுத்த முடியாத" காரணங்களினால் இறந்து போன பிள்ளைகள், ஆயிரக் கணக்கில் இருக்கும். மொத்தமாக, திட்டமிட்ட வகையில் கொல்லப் பட்டவர்களையும் சேர்த்தால், எண்ணிக்கை ஐம்பதினாயிரத்தை தாண்டும். 

கடந்த நூற்றாண்டில், எண்பதுகளின் இறுதிக் காலத்திலும், இன ஒதுக்கல் கொள்கை கொண்ட விடுதிப் பாடசாலைகள் இயங்கி வந்துள்ளன என்பது ஒரு அதிர்ச்சியான செய்தி. கடைசிப் பாடசாலை 1996 ம் ஆண்டு மூடப் பட்டது. அந்தக் காலகட்டத்தில், கனடிய அரசும், கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து திருச்சபைகளும் நடந்த தவறை உணர்ந்து, பகிரங்கமாக மன்னிப்புக் கோரின. ஆயினும், அவர்கள் நடைமுறைப் படுத்திய இனவழிப்புத் திட்டங்கள், இன்று வரையும் ஆறாத வடுக்களாக காணப் படுகின்றன. 

விடுதிப் பாடசாலைகளில் தங்க வைக்கப் பட்ட பிள்ளைகள், தாய், தந்தை பாசத்தை அறியாமலே வளர்ந்து விட்டன. அவர்களது தாய், தந்தையர் யார்? எங்கே வசிக்கிறார்கள்? என்ற விபரம் எதுவுமே தெரியாது. அவர்களுக்கு "உயர்ந்த ஐரோப்பிய நாகரிகத்தை" கற்றுக் கொடுத்தாக, கனடிய அரசு நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால், அன்று பாதிக்கப்பட்ட பல பிள்ளைகளின் மனதில், அது வெறுப்பைத் தான் விதைத்து விட்டிருந்தது.    


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Monday, June 28, 2010

டொரான்டோ நகரில் கலவரம், கனடிய போலிஸின் காடைத்தனம்

டொரண்டோ நகரில் G20 உச்சி மகாநாட்டை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டம், போலிஸ் தலையீட்டால் கலவரமாக மாறிய காட்சிகள் கீழே. பூங்கா ஒன்றில் அமைதியான வழியில் ஆர்ப்பாட்டம் செய்யும் ஆர்வலர்கள் மீதும் போலிஸ் தடியடிப் பிரயோகம் செய்வதையும் இங்கே இணைக்கப்பட்ட வீடியோவில் காணலாம்.

கனடாவில், டொராண்டோ நகரில் ஆரம்பமாகியுள்ள G8 & G20(செல்வந்த நாடுகளும், அபிவிவிருத்தி அடைந்து வரும் நாடுகளும்) உச்சி மகாநாட்டை எதிர்த்து பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் ஆரப்பாட்டம் செய்தனர். மகாநாட்டு பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் போலிஸ் முன்கூட்டியே நூற்றுக்கணக்கானோரை கைது செய்திருந்தது.Pre-empting Dissent: Silencing opposition to G20 summit எந்த வித நீதிமன்ற உத்தரவுமின்றி, டொராண்டோ நகரில் திடீரென பல வீடுகள் சோதனையிடப்பட்டன. முதலாளித்துவ எதிர்ப்பு ஆர்வலர்கள் பலர், "அரசுக்கு எதிராக சதி செய்த குற்றச்சாட்டில்" கைது செய்யப்பட்டனர். ( House raids, warrants and arrests)இதற்கிடையே அமெரிக்க-கனடிய எல்லை மூடப்பட்டு பல ஊடகவியலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். டொராண்டோ நகரில் உச்சி மகாநாடு நடக்கும் இடத்தை சுற்றியுள்ள பிரதேசத்திற்குள் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முள்ளுக்கம்பி வேலியிடப்பட்ட அந்தப் பிரதேசம் திறந்தவெளி சிறைச்சாலை போல காணப்படுகின்றது.