Sunday, April 12, 2009

கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏

"மோசெஸ் இஸ்ரேலியருக்கு செல்வத்தையும், அதிகாரத்தையும் வாக்களித்தார். ஆனால் இயேசு கிறிஸ்துவோ ஏழ்மையையும், அதிகாரத்திற்கு அடி பணிதலையும் போதித்தார். மோசெஸ் பழிக்குப் பழி, கண்ணுக்குக்கு கண் வாங்கு என்று சொன்னது இயேசுவிடம் எடுபடவில்லை. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு எனக் கூறினார்." ரோமர் காலத்தில் வாழ்ந்த செல்சுஸ் என்ற தத்துவஞானி, கிறிஸ்தவ மதம் பற்றி எழுதி வைத்துப் போன தத்துவக் குறிப்புகள் இவை. அவர் மேலும் குறிப்பிடுகையில், "கிறிஸ்தவ போதனைகளை நம்புபவர்கள் ஆளுபவர்களின் அதிகாரத்திற்கெதிராக கேள்வி எழுப்ப மாட்டார்கள். ஆனால் (மத)நம்பிக்கை தமக்கு இரட்சிப்பை வழங்கும் என்று காத்திருப்பார்கள்." என்று ரோம ஆட்சியாளருக்கு ஆலோசனை கூறுகின்றார்.

பாலஸ்தீனத்தில் வாழ்ந்த இயேசுவின் ("கிறிஸ்து" என்பது இரட்சகர் என்பதைக் குறிக்கும் கிரேக்க சொல்லாகும்) வரலாறு பற்றி எந்தவொரு ரோம சரித்திர ஆசிரியர்களும் எழுதி வைக்கவில்லை. இயேசுவின் சீடர்களும், நம்பிக்கையாளரும் பிற்காலத்தில் பரப்பிய சுவிசேஷ செய்திகளின் மூலமே இயேசுவின் கதை வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. நவீன உலகின் காலக் கணிப்பீடு தொடங்குவதற்கு சில வருடங்களுக்கு முன்னர் இயேசு வாழ்ந்திருக்கலாம். "கிறிஸ்துவுக்கு முன்/பின்" என்ற சொற்பதங்கள் கிறிஸ்தவ மத நம்பிக்கையை நிலை நாட்டும் யுக்தியாகவே கொண்டுவரப்பட்டன. ஐரோப்பிய மொழிகளில் கிறிஸ்துவுக்கு பின் என்பதைக் குறிக்க "Anno Domini (AD)" என்று சொல்வதன் அர்த்தம் "எமது கிறிஸ்துவின் ஆட்சிக்காலத்தில் வாழ்கிறோம்" என்பது தான்.

இயேசு பாலஸ்தீன யூத மதத்தை சேர்ந்த தாய்க்கும், தந்தைக்கும் மகனாகப் பிறந்தார். பிறப்பால் யூதரான இயேசு வாழ்ந்த சுற்றாடலிலும், யூதர்களே காணப்பட்டனர். அவரது போதனைகள் அவரது சமூகத்தை சேர்ந்த யூதர்களுக்கானதாகவே இருந்தன. அந்தக் காலத்தில் பல யூத மதப் பிரிவுகள் இருந்தன. அதனால் இயேசுவை பின்பற்றியவர்களும் அப்படி ஒரு பிரிவை சேர்ந்தவர்களாகவே கருதப்பட்டனர். இது பின்னர் மாற்றமடைந்தது. அது பற்றி பிறகு பார்ப்போம். "யூதேயா இராச்சியம்" வீழ்ச்சியடைந்த பின்னர், பர்சியர்கள் (ஈரான்), கிரேக்கர்கள், ரோமர்கள் ஆகியோர் நிர்மாணித்த சாம்ராஜ்யத்தின் பகுதியாக மாறி மாறி இருந்து வந்துள்ளது. எந்த சக்கரவர்த்த்யின் கீழ் வாழ்ந்தாலும் யூதர்கள் தமக்கென குறிப்பிட்ட சுயாட்சிப் பிரதேசத்தை (பாலஸ்தீன மாகாணத்தில் ஜெருசலேமை அண்டிய பகுதிகள்) கேட்டுப் பெற்று வந்துள்ளனர்.

கிரேக்க ஆட்சியின் போது, மத அடிப்படைவாத யூதர்களுக்கும், கிரேக்க கலாச்சாரத்தை பின்பற்றிய மிதவாத யூதர்களுக்குமிடையில் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டுள்ளன. (சிரியாவில் இருந்து வந்த) அசிரிய படைவீரர்கள் துணையுடன் மிதவாத யூதர்கள் தமது அரசியல் ஆதிக்கத்தை அவ்வப்போது நிலைநாட்டி வந்துள்ளனர். இதன் காரணமாகவும் இயேசுவும், அவரது சீடர்களும் அரேமிய மொழியை பேசியிருக்கலாம். ஏனெனில் பண்டைய சிரியர்கள், (ஹீப்ரு, அரபு மொழிகளை ஒத்த௦) அரேமிய மொழி பேசி வந்துள்ளனர். இருப்பினும் வேதாகமத்தில் பல சுவிசேஷங்களை எழுதிய இயேசுவின் சீடரான பவுல், அரேமிய மொழிக்குப் பதிலாக கிரேக்க மொழியை பயன்படுத்தினார். இதனால் தான் பைபிளின் மூல நூல் கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருந்தது. ஒரு பாலஸ்தீன யூதரான பவுல், கிரேக்க நகரமொன்றில் பிறந்து வளர்ந்தவர். அத்தோடு ரோம குடியுரிமை பெற்றிருந்தார். இதனால் பவுலின் வருகைக்கு பிறகு கிறிஸ்தவ கருத்துகள் பிற நாடுகளிலும் பரவ ஆரம்பித்தது. அன்றிலிருந்து கிறிஸ்தவம், யூத மதத்திலிருந்து தன்னை துண்டித்துக் கொண்டது.

ஆரம்பத்தில் துருக்கியில் வாழ்ந்த யூதர்கள் பலர் கிறிஸ்தவ மதத்தை தழுவிக் கொண்டனர். அன்று துருக்கி முழுவதும் கிரேக்க மொழி பேசப்பட்டது. "Helenized Jews" என அழைக்கப்பட்ட கிரேக்கர்களைப் போல வாழ்ந்த யூதர்கள் கிறிஸ்தவர்களாக மாறியது வியப்பிற்குரியதல்ல. அவர்களின் செல்வாக்கு கிழக்கு ரோம சாம்ராஜ்யத்தை ஆண்ட கொன்ஸ்டான்டின் சக்கரவர்த்தியையும் மதம் மாற்றும் வல்லமை பெற்றிருந்தது. அப்போது கிழக்கு ரோம சாம்ராஜ்யம், மேற்கு ரோம சாம்ராஜ்யத்துடன் போரில் ஈடுபட்டிருந்தது. இதனால் கொன்ஸ்டான்டின் சக்கரவர்த்திக்கு, போரில் வீரர்களை ஒருநிலைப் படுத்த புதிய மதம் பேருதவியாக இருந்தது. அதே நேரம் பல கடவுள் வழிபாட்டை கொண்டிருந்த ரோம மதத்தை விட, ஒரு கடவுட் கொள்கை கொண்ட கிறிஸ்தவ மதம் சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்த உதவும் என்றும் நினைத்திருக்கலாம். ஆனால் கொன்ஸ்டான்டின் வெற்றி கொண்ட மேற்கு ரோம சாம்ராஜ்யத்தில் (இத்தாலி) புதிய மதம் கடுமையான எதிர்ப்பிற்கு உள்ளானது. இதனால் கிரேக்க வழிபாட்டு முறைகளுக்குள் மட்டுப்படுத்திக் கொண்ட கிறிஸ்தவம் இன்றும் "பழமைவாத கிறிஸ்தவம்" என அழைக்கப்படுகின்றது. பின்னாளில் ரோம கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தான் அதனை "பழமைவாத..." என்ற அடைமொழியுடன் அழைத்தனர். மற்றும்படி கிரேக்கத்தில் இன்றும் அது தான் "உண்மையான கிறிஸ்தவ மதம்."

நமது வருடக் கணிப்பீடு ஆரம்பித்த காலத்தில் இருந்து (கிறிஸ்துவுக்குப் பின்), இத்தாலியில் கிறிஸ்தவ மதம் மெல்ல மெல்ல பரவியது. ஆரம்பத்தில் அடிமைகளும், அடித்தட்டு மக்களும் கிறிஸ்தவ இரட்சிப்பில் நம்பிக்கை வைத்தனர். கிறிஸ்தவ மதம் அடிமை முறையை நிராகரித்து அந்தக் காலத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனால் பிற்காலத்தில் கிறிஸ்தவ அரசர் காலத்தில், ரோம சாம்ராஜ்யத்தில் நிலவிய அடிமை முறை ஒழிக்கப்பட்டு நிலப்பிரபுத்துவ சமூகம் வந்தமை குறிப்பிடத்தக்கது. சில சரித்திர ஆசிரியர்கள் கிறிஸ்தவம் ஆரம்பத்தில் அடிமைகளின் மதமாக இருந்தது என குறிப்பிட்டாலும், வசதிபடைத்த குடும்பங்களை சேர்ந்த சிலரும் கிறிஸ்தவர்களாக மாறி இருந்தனர். இருப்பினும் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவதற்காக தண்டனை வழங்கப் பட்டவர்களில் பெரும்பான்மையானோர் அடிமைகளாக இருந்தனர். இது அன்றைக்கும் நிலவிய வர்க்க நீதியை எடுத்துக் காட்டுகின்றது.

"ரோம் நகரம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தான்." என்ற கதையை பின்னாளில் பரப்பியவர்கள் கிறிஸ்தவர்கள். அதற்கு காரணம் நீரோ மன்னன் ஆட்சிக் காலத்தில் தான் அதிகளவான கிறிஸ்தவர்கள் கொலை செய்யப்பட்டனர். ஏற்கனவே கிறிஸ்தவர்கள் மீது வெறுப்பில் இருந்த நீரோ மன்னன், ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்தததற்கு கிறிஸ்தவர்கள் மீது பழி சுமத்தினான். தமக்கு நடந்த கொடுமைக்கு பழிவாங்கும் பிரச்சாரமாகவே, நீரோ மன்னன் ரோமை கொளுத்தி விட்டு பிடில் வாசித்துக் கொண்டிருந்ததாக கதை கட்டினர். நீரோ மட்டுமல்ல, பிற ரோம ஆட்சியாளர்களும் கிறிஸ்தவர்களை தேடிப்பிடித்து கொலை செய்து வந்தனர். ரோம் நகரில் இருக்கும் கொலேசயும் என்ற விளையாட்டு அரங்கத்தில் வைத்து கிறிஸ்தவர்களை சிங்கத்திற்கு இரையாக்கி மகிழ்ந்தனர். பிற்காலத்தில் கிறிஸ்தவ ஆட்சி ஏற்பட்ட போது அந்த விளையாட்டு அரங்கத்தில் பெரியதொரு சிலுவை நாட்டப்பட்டது. அதனை இப்போதும் அங்கே செல்வபவர்கள் காணலாம்.

ஆரம்பத்தில் சிலுவை அடையாளம், ரோமர்கள் மத்தியில் அவமானப் படுத்தும் சின்னமாக கருதப்பட்டது. ரோமர்கள் தமது எதிரிகளை சிலுவையில் அறைந்து தண்டனை வழங்குவது வழக்கம். அந்தக் காலத்தில் யாராவது , கையால் சிலுவை அடையாளத்தை சைகை காட்டுவது, மற்றவர்களுக்கு கோபத்தை கிளறுவது போலாகும். ஏனெனில் "உன்னை சிலுவையில் அறைவேன்" என்று திட்டுவதாக பண்டைய ரோமர்கள் அர்த்தப்படுத்திக் கொண்டார்கள். ஒரு முறை ரோம இராணுவ முகாமில், கிறிஸ்தவ வீரர்கள் பிரார்த்தனை செய்யும் போது சிலுவை அடையாளம் இட்டமை, கைகலப்பில் முடிந்தது. ரோம மத அனுஷ்டானங்களில் கிறிஸ்தவர்கள் பங்குபற்றாமையும், கலவரங்களை ஏற்படுத்தியது. ஒரு முறை பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரத்தில் ரோம கடவுளருக்கு வழிபாடு நடந்த வேளை, கிறிஸ்தவர்கள் புறக்கணித்தமை மக்கள் மத்தியில் ஆட்சேபத்தை கிளப்பியது. அடுத்து நிகழ்ந்த மதக் கலவரத்தில் பல கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தோனேசியாவில் நடந்த "பாலி குண்டுவெடிப்பில்" குற்றவாளியாக காணப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிக்கு நீதிமன்றம் மரணதண்டனை வழங்கிய போது, அதனை அந்த குற்றவாளி அளவுகடந்த மகிழ்ச்சியோடு வரவேற்ற காட்சியை தொலைக்காட்சிகள் காட்டின. அந்த சம்பவம் மட்டுமல்ல, தியாக மரணத்தை விரும்பி ஏற்கும் இஸ்லாமிய தற்கொலைக் குண்டுதாரிகளை பற்றி விபரிக்கும் மேலைத்தேய ஊடகங்கள், இந்த மனப்பான்மை (பின்தங்கிய) மத்திய கிழக்கு நாடுகளுக்கு சொந்தமானது என்பது போல சித்தரிக்கின்றன. மேலைத்தேய மக்களும் தம்மால் அந்த மன நிலையை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதாக கூறுகின்றனர். இது போன்ற "தியாக மரணங்கள்" ஆரம்பகால கிறிஸ்தவர்கள் மத்தியிலும் காணப்பட்டது. மரணத்தை ஏற்றுக் கொண்டு சிலுவையில் இறந்த இயேசுவின் வழியை பின்பற்றி வாழ விரும்பிய கிறிஸ்தவர்கள் பலர். அதனால் ரோம ஆட்சியாளர்கள் தண்டனை கொடுப்பதற்கு முன்னரே தாம் தியாகியாக மரணிக்க விரும்புவதாக ஒப்புக் கொடுத்தனர். "அவர்களாகவே முன்வந்து சாகிறார்கள்", என்று ரோம அதிகாரிகள் ஆரம்பத்தில் திருப்திப்பட்டாலும், கிறிஸ்தவர்கள் தற்கொடையின் மூலம் ரோம ஆட்சியாளர் மேல் குற்ற உணர்வை ஏற்படுத்த பார்க்கின்றனர் என அறிந்து கொண்டனர். (அனேகமாக ரோமர்களின் வற்புறுத்தலால்) இரண்டு கிறிஸ்தவ மத போதகர்ககள் தியாக மரணத்தை நிராகரித்தனர். "முதற்பரிசுக்காக போட்டி போட்டு செத்து தியாகியாவது, பிற கிறிஸ்தவர்களையும் தீவிரவாதிகளாக்கும்" என்று இவர்கள் கண்டித்தார்கள்.

ரோம அதிகாரிகள் கிறிஸ்தவர்களை பிடித்து சித்திரவதை செய்யும் போது, "அவர்களது பெயர், பிறப்பிடம், அடிமையா? சுதந்திரப் பிரசையா?" போன்ற விபரங்களை பதிவு செய்ய எத்தனித்தார்கள். அப்போதெல்லாம் சித்திரவதைக்கு உள்ளாகுபவர்கள் "நான் ஒரு கிறிஸ்தவன்" என்று மட்டுமே பதில் சொல்வார்கள். எந்தக் கேள்விக்கும் அது ஒன்றே பதிலாக வரும். இன்றைய காலத்தில் பொலிஸ் சித்திரவதைக்குள்ளாகும் புரட்சியாளரின் நிலையிலேயே அன்றைய கிறிஸ்தவர்கள் இருந்தனர். அவர்களைப் பொறுத்தவரை "கிறிஸ்தவன் ஒரு புது மனிதன். இன, தேசிய, சமூக அடையாளங்களைக் கடந்தவன்." "புது மனிதனை உருவாக்குவோம்" என்று சேகுவேரா முன் வைத்த சோஷலிச கோஷம் இங்கே நினைவுகூரத்தக்கது. ரோம சாம்ராஜ்யத்தில் அடிமை சமுதாயம் நிலவிய அன்றைய காலத்தில், கிறிஸ்தவ மதம் பல முற்போக்கான கூறுகளை கொண்டிருந்தது. இதனை கார்ல் மார்க்ஸும் குறிப்பிட்டுள்ளார். இதனால் மார்க்ஸியம் கிறிஸ்தவ மதத்தில் இருந்து சில கருத்துகளை உள்வாங்கியுள்ளது என கூறப்படுவதையும் மறுக்கமுடியாது. ஒவ்வொரு இன சமூகமும் தனக்கென சொந்தமான மதத்தை கொண்டிருந்த பண்டைய ரோம சாம்ராஜ்யத்தில், கிறிஸ்தவ மதம் மட்டும் பல்வேறு இனங்களை சேர்ந்தவர்களை கொண்டிருந்தமை ஆட்சியாளருக்கு அச்சுறுத்தலாக இருந்தது.

உண்மையில் கொன்ஸ்டான்டின் ஆட்சிக் காலத்தில், பிற ரோம மதங்களுடன் கிறிஸ்தவ மதத்திற்கும் சம உரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் கிறிஸ்தவ வழிக் கல்வி கற்ற கொன்ஸ்டாண்டினின் புதல்வனின் ஆட்சியில் கிறிஸ்தவ மதம் மட்டுமே அரச மதமாகியது. பிற மத வழிபாடுகள் அடக்குமுறைக்கு உள்ளாகின. கிறிஸ்தவம் அரசமதமாக அரியணை ஏறியதும் அதற்குள்ளே பல பிரிவுகள் தோன்றவாரம்பித்தன. உதாரணத்திற்கு பிதாவான கர்த்தரின் கீழ்ப்படிவான மகன் இயேசு என்று எகிப்தில் இருந்த குழுவும், இருவருமே சமமானவர்கள் என்று கிரேக்கத்தில் இருந்த குழுவும் வாதாடின. இறுதியில் (பழமைவாத)கிரேக்க மதப்பிரிவு சக்கரவர்த்தியை தமக்கு சாதகமாக இணங்க வைத்தது. தத்துவ விசாரங்கள், அதற்கான விளக்கங்கள் என்பன போட்டிக் குழுக்களை உருவாக்கின. இவை பின்னர் அதிகாரத்திற்காக வன்முறையையும் நாடத் தயங்கவில்லை. மன்னனின் காவலர்களும் மாற்றுக் குழுக்களை அடக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆட்பலமற்ற மாற்றுக் குழுக்கள் அரசுக்கெதிராக தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபட்டும் தமது எதிர்ப்பைக் காட்டின. தம்மை கைது செய்யவரும் காவலர்களை கொலை செய்து, தாமும் தற்கொலை செய்துகொண்டனர்.

கொன்ஸ்டான்டின் சக்கரவர்த்திக்கு பின்னர் ஆட்சியில் அமர்ந்திருந்த ஜூலியானுஸ் (கி.பி.360) காலத்தில் ரோம மதம் மறுபடியும் அரசமதமாகியது. இதனால் தாம் மீண்டும் அடக்கி ஒடுக்கப் படுவோம் என்று கிறிஸ்தவர்கள் அஞ்சினர். ஆனால் ஜூலியனுஸ் முன்பு போல கிறிஸ்தவர்களை தேடிப்பிடித்து மரண தண்டனை வழங்கவில்லை. அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்து மறைமுகமாக நெருக்குவாரங்கள் செய்தான். அரசால் ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் தீவிரவாதத்தை நாடினர். இரவு வேளைகளில் ரோம ஆலயங்களினுள் நுழைந்து கடவுட்சிலைகளை அடித்துடைத்த சம்பவத்துடன் அது ஆரம்பாகியது. கைது செய்யப்பட்டவர்களை சித்திரவதை செய்த சேதி கேள்விப்பட்டு, மேலும் பல கிறிஸ்தவ இளைஞர்கள் தீவிரவாத செயல்களில் இறங்கினர்.

மேற்கு ரோம சாம்ராஜ்ய பகுதியில், குறிப்பாக இத்தாலியில் ஆரம்பத்தில் கிறிஸ்தவர்கள் தலைமறைவாகவே இயங்கி வர வேண்டி இருந்தது. தனி நபர்களின் வீடுகளில் மட்டுமே வழிபாடு செய்யப்பட்டது. அதேநேரம் இரகசியமாக "கதகொம்ப்"(Catacombe) என அழைக்கப்படும் நிலக்கீழ் சுரங்க அறைகள் கட்டப்பட்டன. கிறிஸ்தவர்கள் ஒன்று கூடி வழிபாடு செய்யும் இடமாகவும், அதே நேரம் இறந்தவர்களை புதைக்கும் இடுகாடாகவும் இந்த கதகொம்ப் சுரங்கங்கள் திகழ்ந்தன. அன்று ரோமர்கள் இறந்தவர்களை எரிக்கும் வழக்கத்தை கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிற்காலத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு அரச அங்கீகாரம் கிடைத்த பின்னர் அந்த தேவை மறைந்து விட்டது. அரச அங்கீகாரம் கிடைத்தாலும், கிறிஸ்தவ சபைகள் ஜெர்மனி, பிரான்ஸ் என்று பரவி இருந்தாலும், பெரும்பான்மை மக்கள் பிற மதங்களை பின்பற்றி வந்தனர். பிற மதத்தவர் வாழும் இடங்களுக்கு செல்லும் கிறிஸ்தவர்கள், அவர்களை பகிரங்க வாதத்திற்கு அழைப்பார்கள். நிலைமை மோசமாகி கைகலப்பில் முடியும் தருவாயில் அரச படைகளின் உதவியுடன் கிறிஸ்தவ ஆதிக்கம் நிலைநாட்டப்படும்.

ஒரு காலத்தில் அடக்கப்பட்டவர்கள், அதிகாரத்திற்கு வந்த பின்னர் அடக்குமுறையாளர்களாக மாறிய வரலாற்று முரண்நகை கிறிஸ்தவ மதத்திலும் காணக்கிடைக்கின்றது. "கடவுளருக்கு எதிரான கடவுளின் போர்" என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் அதனை குறிப்பிடுகின்றனர். ஒரு காலத்தில் ரோமர்கள், தமது ரோம மதத்தை மட்டுமே "மதம்" (Religio) என்று அழைத்தனர். மற்றைய மதங்களை மூட நம்பிக்கைகள் (Superstitio) என அழைத்தனர். அதன்படி அன்று கிறிஸ்தவமும் ரோமர்களால் "மூட நம்பிக்கை"யாக பார்க்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் கிரேக்கர்கள், கிறிஸ்தவர்களை கடவுள் நம்பிக்கையற்ற நாஸ்திகர்கள் என்றும் அழைத்தனர். ஆனால் ஒரு முறை அதிகாரம் கிறிஸ்தவர்களின் கைகளில் வந்த பின்னர், எல்லாம் தலை கீழாக மாறியது. கிறிஸ்தவம் மட்டுமே உண்மையான ஒரேயொரு மதம் என்றாகியது. பிற மதங்கள் எல்லாம் மூட நம்பிக்கைகளாக தடை செய்யப்பட்டன. அப்படி தடைசெய்யும் கடமையை அரச ஆதரவுடன் தீவிரவாத கிறிஸ்தவ ஆயுதக்குழுக்கள் செய்தன என்பது குறிப்பிடத்தக்கது. எகிப்தில் உள்ள அலெக்சாண்டிரியா நகரில் இந்த ஆயுதக் குழுக்களின் அட்டகாசம் எல்லை மீறியது. அங்கே கிடைத்தற்கரிய நூல்களை சேகரித்து வைத்திருந்த நூலகம் ஒன்று காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. கிறிஸ்தவத்திற்கு முந்திய இலக்கியங்கள் யாவும் அழிக்கப்பட வேண்டும் என்பது அந்த மத அடிப்படைவாதிகளின் கொள்கை. ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலையை தகர்த்த தாலிபானின் செயலுடன் கொஞ்சமும் குறைந்ததல்ல, இந்த கிறிஸ்தவ மத அடிப்படைவாத வன்முறை.

பாலைவனம், காடு ஆகிய மனித நடமாட்டமற்ற பகுதிகளுக்கு சென்று தவம் செய்த கிறிஸ்தவ துறவிகளும், நகரங்களுக்கு திரும்பி வந்து மத அடிப்படைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். லெபனானில் ரபுல்லா என்ற துறவியின் கதை பிரசித்தம். ரபுல்லாவும் இன்னொரு துறவியும் பால்பக் நகரில் உள்ள பிற மதத்தவரின் கோயிலினுள் புகுந்து, மூலஸ்தானத்தில் இருந்த கடவுள் சிலையை அடித்து நொறுக்கி விட்டு காத்திருந்தனர். எதிர்பார்த்தபடியே அங்கே குழுமிய மத நம்பிக்கையாளர்கள், துறவிகள் இருவரையும் நையப்புடைத்தனர். மதத்திற்காக மரிப்பதை அந்த கிறிஸ்தவ துறவிகள் மேலானதாக கருதினர். இவர் போன்ற தற்கொலைப் போராளிகளைத் தவிர, சில துறவிகளின் ஸ்தாபித்த ஆயுதக்குழுக்கள், மாற்றுக் கருத்தாளரை கொலை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

கிரேக்க நாகரீகம் நிலவிய காலத்தில் இருந்து, பல்வேறு துறைகளை சேர்ந்த புத்திஜீவிகள், தமது ஆராய்ச்சியின் பெறுபேறுகளை சுதந்திரமாக வெளியிட முடிந்தது. ஆனால் கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் மாற்றுக் கருத்துகளை சகித்துக் கொள்ள முடியாதவர்களாக இருந்தனர். அவர்களைப் பொறுத்தவரை கிறிஸ்தவமதம் சொல்வது தான் மெய்யான தத்துவம், விஞ்ஞானம் எல்லாம். மற்றவை எல்லாம் அழிக்கப்பட வேண்டும். பிற்காலத்தில் அவ்வாறான பாரம்பரியத்தில் வந்த கத்தோலிக்க திருச்சபை உலகம் உருண்டை என சொன்ன கலீலியோவை சிறையில் அடைத்து துன்புருத்தியமை எதிர்பார்க்கத்தக்கதே. ஐரோப்பியர்கள் ஆயிரம் வருட இருண்ட மதவாத ஆட்சியின் பின்னர், அரேபியரின் உதவியினால் தான் தொலைந்து போன கிரேக்க விஞ்ஞானக் குறிப்புகளை மீளக் கண்டுபிடித்தார்கள். கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் மாற்றுக் கருத்தாளரை எவ்வளவு கொடூரமாக ஒடுக்கினார்கள் என்பதை பின்வரும் சரித்திரக்கதை விளக்கும்.

எகிப்தில் அலெக்சாண்டிரியா நகர கிறிஸ்தவ தலைமை மதகுரு சிரிலுஸ் (கி.பி. 412) ஒரு காலத்தில் பாலைவனத்தில் ஏகாந்தியாக அலைந்து திரிந்த துறவி. நகரத்திற்கு திரும்பி வந்து தன்னைப் போல மதவெறி கொண்ட பிற துறவிகளையும் சேர்த்துக் கொண்டு "பரபலாணி" என்ற ஆயுதக் குழுவை அமைத்தார். பிற மதத்தை சேர்ந்தவர்களை கண்ட இடத்தில் அடித்து துன்புறுத்தி, சில சமயம் கொலையும் செய்து வந்த சிரிலுஸ் குழுவினரின் அடாவத்தனம், ஒரு கட்டத்தில் நகரபிதாவால் கூட பொறுக்க முடியாத அளவிற்கு எல்லை மீறியது. ஆயுதபாணிகள் 500 பேராக குறைக்கப்பட வேண்டும் என நகரபிதா உத்தரவு போட்டதால், பரபலாணிகள் அவரையும் தாக்கினர். அதிலிருந்து சிரிலுஸ் குழுவினர் அரச மட்டத்தில் இருந்த "துரோகிகளை" தீர்த்துக் கட்டும் நடவடிக்கைகளிலும் இறங்கினர்.

கொலைக் கலாச்சாரத்திற்கு பலியான ஹிபாதியா என்ற பெண் தத்துவ அறிஞரின் கதை பிரபலமானது. தனது மாணவர்களுக்கு தத்துவமும், கணிதமும் போதித்து வந்த அந்த ஆசிரியை, கிறிஸ்தவம் சொல்வது தான் முடிந்த முடிபு என்பதை எதிர்த்து வந்தார். "கண்ணை மூடிக் கொண்டு ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தில் குருட்டு நம்பிக்கை வைப்பதை, சுயமரியாதை உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்." என அவர் கூறி வந்தார். சிரிலுசிற்கு அந்தக் கருத்துகள் எரிச்சலை ஊட்டின. சிரிலுசின் கண்களுக்கு அழகும், அறிவும் இணைந்த ஹிபாதியா பிசாசின் உருவமாக தோன்றினார். ஒரு நாள் ஹிபாதியா வேலைக்குப் போகும் வழியில், ஆயுதபாணிகளால் தாக்கப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டார். உயிரற்ற அவரது சடலம் தெருத்தெருவாக இழுத்துச் செல்லப்பட்டு தீயில் இடப்பட்டது. அந்த சம்பவத்துடன் சுதந்திரமான கருத்துக் கூறும் காலகட்டம் முடிவுக்கு வந்தது. கிறிஸ்தவ மதம் சொல்வதை மட்டுமே உண்மையென நம்பும் புதிய தலைமுறை உருவாகியது.

இதற்கிடையே, தலைநகர் ரோமில் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்த செனட் சபையில் இருந்த செனட்டர்கள்(பிரபுக்கள்) பலர் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டிருந்தனர். தமது மதமாற்றத்தை உறுதிப்படுத்துவதற்காக பழைய ரோம கோவில்களை பூட்டினார்கள். அங்கிருந்த தெய்வச் சிலைகளை அப்புறப்படுத்தினார்கள். ரோம சாம்ராஜ்யம் முழுவதும் ரோம கோவில்கள் கிறிஸ்தவ தேவாலயங்களாக மாற்றப்பட்டன. (பண்டைய ரோம ஆலயம் எப்படி இருந்தது என்று பார்க்க விரும்புபவர்கள், மால்ட்டா தீவிலும், இத்தாலியின் சில இடங்களிலும் இப்போதும் சென்று பார்வையிடலாம்.) பல செனட்டர்கள் புதிய தேவாலயங்கள் கட்டுவதற்கு நன்கொடை வழங்கினர். இருப்பினும் பெரும்பான்மையான ரோம பிரசைகள் பெயரளவில் கிறிஸ்தவர்களாகவும், நடைமுறையில் ரோம மத சடங்குகளை பின்பற்றுபவர்களாகவும் இருந்தனர். பிற்காலத்தில் கத்தோலிக்க மதம் பல ரோம கலாச்சாரக் கூறுகளை, சடங்குகளை தன்னுள் உள்வாங்கிக் கொண்டது. சில கிறிஸ்தவத்திற்கு முந்திய ரோமரின் சடங்குகள் இன்று வரை நிலைத்து நிற்கின்றன. டிசம்பர் 25 ம திகதி கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் தினம் முதல், ஈஸ்டர் பண்டிகையில் வைக்கப்படும் முயல்,முட்டை வடிவ இனிப்புப் பண்டங்கள் வரை பல உதாரணங்களை கூறலாம்.

ரோம சாம்ராஜ்யம் அழிந்து, அதன் பிறகு கிறிஸ்தவ மத ராஜ்யம் தோன்றியதாக சொல்லப்படுவது உண்மையல்ல. ரோம சாம்ராஜ்யம் ஒரு போதும் அழியவில்லை. அதை கிறிஸ்தவ மத நிறுவனம் பொறுப்பேற்றுக் கொண்டது. ரோமா புரியில் இருந்த அதிகார மையம், அதிலிருந்து சில மைல் தூரத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வாட்டிக்கான் நகருக்கு மாறியது. புதிதாக உருவாக்கப்பட்ட "பாப்பரசர்" என்ற பதவியில் இருத்தப்பட்டவர், (கத்தோலிக்க கிறிஸ்தவ) மதத்திற்கு மட்டுமல்ல, அரசியலுக்கும் தலைவராக வீற்றிருந்தார். பிராந்திய அரசர்கள் யாவரும் பாப்பரசரின் சர்வ வல்லமை பொருந்திய அதிகாரத்திற்கு அடிபணிந்து ஆட்சி செய்தனர். ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் தோன்றிய புரட்டஸ்தாந்து பிரிவினரின் எழுச்சியானது, பாப்பரசரின் உலகளாவிய அரசியல் அதிகாரத்திற்கு சவாலாக விளங்கியது.

25 comments:

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

நீண்ட தேடுதலும், மாற்றுக் கருத்துக்களை முன் வைத்தலும் கொண்ட உங்கள் கட்டுரை சுவார்ஸமாகவும் உள்ளது.

கலையரசன் said...

டொக்டர்.எம்.கே.முருகானந்தன், தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
எனது கட்டுரைகள் வித்தியாசமாக இருப்பது அதன் தனியான சிறப்பம்சம். மீண்டும் வருக...

malar said...

////இயேசு பாலஸ்தீன யூத மதத்தை சேர்ந்த தாய்க்கும், தந்தைக்கும் மகனாகப் பிறந்தார்.////


நான் படித்த வரலாறுகளில் இப்படி இல்லை .
இயேசு கன்னி மரியாளுக்கு மகனாகப்பிறந்தார் என்று தானே படித்திருக்கிறோம் .

உங்களுடைய பதிவு படிக்க நல்ல சுவாரஸ்யமாக இருக்கிறது ....

VIKNESHWARAN said...

சுவாரசியமான தகவல். சற்றே நீளமாக இருக்கிறது. இரண்டு பாகமாகக் கொடுத்திருக்கலாம்.

இன்று மதத்தின் பெயரால் மனிதன் அடித்துக் கொண்டு சாவதை தடுபதற்கு ஆள் இல்லாமல் இருக்கிறது. மதம் மனிதனை மதம் பிடிக்கச் செய்யும் நிலையை இறை தூதர்கள் அறிந்திருக்க மாட்டார்களா? அப்படி அறிந்திருந்தால் மனிதனுக்கு மதம் அவசியமற்றது என்பதை அவர்கள் புரிந்திருக்கக் கூடும். மதத்தைக் கற்பவனுக்கு நன்னெறி பெருக வேண்டும். இன்றோ மதத்தின் பெயரால் வன்முறைகள் தான் அதிகரிக்கின்றன.

கலையரசன் said...

நன்றி, விக்னேஷ்.
நானும் முதலில் இரண்டு பகுதிகளாக பதிவிடலாம் என நினைத்தேன். இருப்பினும் வாசிப்பவர்களின் சுவாரஸ்யம் குன்றி விடாமல் இருக்க ஒரே பதிவில் இட்டிருக்கிறேன். மேலும் (கிறிஸ்தவ) மதம் பற்றியும், மத அடிப்படைவாதம் பற்றியும் எழுத இன்னும் நிறைய இருக்கின்றது. மதம் என்பது ஆரம்பிக்கும் போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் விடுதலைக்கான முற்போக்கு பாத்திரத்தை வகிக்கும் அதே நேரம், அதிகாரம் கிடைத்தவுடன் மற்றவர்களை அடக்க பின் நிற்க மாட்டார்கள் என்பதையும் குறிப்பிட்டுள்ளேன்.

Enathu Payanam said...

ஆரம்ப காலத்தில் கிறித்துவம் எப்படி வளர்ந்தது என "நிலமெல்லாம் ரத்தம்" புத்தகத்தில் படித்திருக்கிறேன். அவற்றிலிருந்து விடுபட்ட நிறைய விடயங்களை உங்கள் கட்டுரையில் படிக்க நேர்ந்தது. உங்களுடைய வரலாறு மற்றும் உலக அரசியல் சம்மந்தமான தேடலும் பகிர்தலும் எனக்கு வியப்பை அளிக்கிறது.

சரியான முறையில் தொகுத்து புத்தக வடிவில் கொண்டுவர முயற்சி செய்யுங்கள். பகிர்தலுக்கு நன்றி.

அன்புடன்,
கிருஷ்ணப் பிரபு.

கலையரசன் said...

நன்றி, கிருஷ்ண பிரபு.
கிறிஸ்தவத்தின் மறுபக்கம் பற்றி எழுத இன்னும் நிறைய இருக்கின்றன. தருணம் வரும் போது, நேரம் கிடைக்கும் போது, என்னிடம் இருந்து மேலும் விரிவான கட்டுரைகள் வரும்.
எனது ஆக்கங்கள் புத்தக வடிவில் வர வேண்டுமென்று உங்களைப் போலவே பல நண்பர்கள் விரும்புகின்றனர். அது பற்றி ஆலோசித்து வருகிறேன். கூடிய விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கிறேன்.

Enathu Payanam said...

உங்கள் படைப்புகளை அச்சிலேற்ற முயற்சிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அப்படி உங்கள் புத்தகம் வெளிவந்து சந்தையில் கிடைத்தால் எனக்கு தெரியப்படுத்தவும். நன்றி

செங்கொடி said...

"கிறிஸ்தவம் மட்டுமே உண்மையான ஒரேயொரு மதம் என்றாகியது" "கிறிஸ்தவமதம் சொல்வது தான் மெய்யான தத்துவம், விஞ்ஞானம் எல்லாம்"
தோழர் கலை, நீங்கள் கிறிஸ்துவத்திற்கு கூறும் அதே வரையரைகள் இன்று இஸ்லாமிற்கும் பொருந்துகின்றன. என்னுடன் பேசும் பல இஸ்லாமிய ந‌ண்பர்கள் இந்த வரையரையை விட்டு விலக மறுக்கிறார்கள். மதம் என்பது அபினியை போன்றது என்ற மார்க்சின் கூற்றுக்கு உயிருள்ள உதாரணமாகவே திகழ்கிறார்கள்.

கட்டுரை மிகச்சிறப்பாக வந்திருக்கிறது, தொடருங்கள். குறிப்பாக, இஸ்லாமிற்கு முந்திய காலகட்டங்களில் அரேபிய பாலை நிலங்களில் கிறிஸ்தவத்தின் தாக்கம் குறித்து எதிர்பார்க்கிறேன்.

தோழமையுடன்
செங்கொடி

கலையரசன் said...

உண்மை தான் செங்கொடி, மத நம்பிக்கையாளர்கள் பலர், தமது மதம் பற்றிய கடந்த காலத்தை மறைத்து விட்டு, தாம் சொல்வது படி தான் எப்போதும் இருந்தது என்ற கருத்தை நிலைநிறுத்த பார்க்கிறார்கள். எதற்கும் ஒரு மறு பக்கம் உண்டு, மதத்திற்கும் தான்.

கலையரசன் said...

//நான் படித்த வரலாறுகளில் இப்படி இல்லை .
இயேசு கன்னி மரியாளுக்கு மகனாகப்பிறந்தார் என்று தானே படித்திருக்கிறோம் .//

உண்மை தான், மலர்.
கிறிஸ்தவ மதம் அப்படித் தான் சொல்லிக் கொடுக்கிறது. அதற்கப்பால் ஆராய்வதற்கு விடவில்லை. எனது கட்டுரை புதிய சிந்தனைகளை கொடுக்கும் என எதிர்பார்க்கிறேன்.

Anonymous said...

NANBAREY UNGAL PATHUVGALIL KRITHUVA MATRUM ISULAAMIYA ETHIRPPUNARVEY NIRAMBI KAANABADUGIRATHU.NEENGAL PALA POIGALAI UNMAIYAI PONDRU KOORI THANGALIN PAASISA MUGATHAI THELIVU PADITHIYULEERGAL.COMMUNISA PORVAIYIL HINTHUTHUVAVATHIYAAGA IRUKKEREERGAL.

கலையரசன் said...

அனானி நண்பரே, கிறிஸ்தவ மத்தைதை நன்கு கற்ற அறிஞர்கள் எழுதிய நூல்களில் இருந்து தான் அந்த தகவல்கள் எடுக்கப்பட்டன. பல வரலாற்றில் பதியப்பட்டுள்ளன. அவற்றை தவறு என்று உங்களிடம் ஆதாரம் இருந்தால் நிரூபியுங்கள். இல்லாவிட்டால் இப்படி அவதூறு செய்வதை விட்டு விட்டு உங்கள் அறியாமையை ஒப்புக் கொள்ளுங்கள். நீங்கள் இதுவரை அறிந்து வைத்திருப்பவை ஏன் தவறாக இருக்க முடியாது? நீங்கள் அறிந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கின்றன.

Anonymous said...

// எந்தவொரு ரோம சரித்திர ஆசிரியர்களும் எழுதி வைக்கவில்லை.//

ரோம வரலாற்றாசிரியர் Tacitus இயேசு வாழ்ந்ததைப்ற்றியும் பிலாத்துவினால் தீர்ப்புக்குள்ளானதையும் எழுதியுள்ளார்.//இயேசு பாலஸ்தீன யூத மதத்தை சேர்ந்த தாய்க்கும், தந்தைக்கும் மகனாகப் பிறந்தார்.//

இது உங்கள் கூற்று, கிறிஸ்தவ விசுவாசம் அல்ல.


// வேதாகமத்தில் பல சுவிசேஷங்களை எழுதிய இயேசுவின் சீடரான பவுல்//

பவுல் சுவிசேஷங்கள் எழுதவில்லை. திருத்திக் கொள்ளுங்கள்.கிறிஸ்தவர்கள் இயேசுவாக கருதும் ஓர் படத்திற்கு (அது உண்மையில்லை என்பது வேறு) நீங்கள் துப்பாக்கி கொடுத்ததிலிருந்து உங்கள் குரூர சிந்தை தெளிவாகின்றது. நீங்களா சமூகத்தை திருத்த எழுதுகிறீர்கள்? உங்கள் கருத்துச் சுதந்திரம் மற்றவரை ஏளனம் செய்யக்கூடாது.

கலையரசன் said...

//ரோம வரலாற்றாசிரியர் Tacitus இயேசு வாழ்ந்ததைப்ற்றியும் பிலாத்துவினால் தீர்ப்புக்குள்ளானதையும் எழுதியுள்ளார்.//
Cornelius Tacitus (AD 56 – AD 117) ரோமில் கிறிஸ்தவ மதம் பரவிய ஆரம்ப காலங்களில் வாழ்ந்தவர். அதனால் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை குறித்து எழுதியிருப்பார். அதனை இயேசு கிறிஸ்து என்று ஒருவர் வாழ்ந்ததைக் குறிப்பிடுவதாக நீங்கள் திரிபு படுத்தக் கூடாது. இதன் மூலம் கிறிஸ்தவ விசுவாசிகளை நீங்கள் ஏமாற்றப் பார்க்கிறீர்கள்.

//இது உங்கள் கூற்று, கிறிஸ்தவ விசுவாசம் அல்ல.//
கிறிஸ்தவ விசுவாசம் சரித்திர சான்றாகாது.

//கிறிஸ்தவர்கள் இயேசுவாக கருதும் ஓர் படத்திற்கு (அது உண்மையில்லை என்பது வேறு) நீங்கள் துப்பாக்கி கொடுத்ததிலிருந்து உங்கள் குரூர சிந்தை தெளிவாகின்றது.//
ஒரு முறை இயேசு கிறிஸ்து ஆலயத்தில் இருந்த வியாபாரிகளை தடியெடுத்து அடித்து விரட்டியதாக விவிலிய நூலில் எழுதப் பட்டுள்ளது. (உங்களைப் பொறுத்த வரை அது விவிலியத்தின் குரூர சிந்தை) அந்தக் காலத்தில் துப்பாக்கி இருந்திருந்தால் இயேசு அதனைக் கையில் எடுத்திருப்பார்.

Anonymous said...

//Cornelius Tacitus (AD 56 – AD 117) ரோமில் கிறிஸ்தவ மதம் பரவிய ஆரம்ப காலங்களில் வாழ்ந்தவர். அதனால் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை குறித்து எழுதியிருப்பார். அதனை இயேசு கிறிஸ்து என்று ஒருவர் வாழ்ந்ததைக் குறிப்பிடுவதாக நீங்கள் திரிபு படுத்தக் கூடாது. இதன் மூலம் கிறிஸ்தவ விசுவாசிகளை நீங்கள் ஏமாற்றப் பார்க்கிறீர்கள்.//

அவர் எழுதியது கிறிஸ்தவ நம்பிக்கை பற்றியல்ல, சரித்திரம் பற்றியும் உரோம ஆட்சி பற்றியும்தான். அவர் எழுதியதை வாசித்துப்பாருங்கள் அப்போது உங்கள் திரிபுபடுத்தல்களும் கிறிஸ்தவ விசுவாசிகளை ஏமாற்றப் பார்ப்பதும் புரியும்.


//கிறிஸ்தவ விசுவாசம் சரித்திர சான்றாகாது.//

உண்மைதான். இயேசு பாலஸ்தீன யூத மதத்தை சேர்ந்த தாய்க்கும், தந்தைக்கும் மகனாகப் பிறந்தார் என்பதும் சரித்திர சான்று இல்லையே.


//ஒரு முறை இயேசு கிறிஸ்து ஆலயத்தில் இருந்த வியாபாரிகளை தடியெடுத்து அடித்து விரட்டியதாக விவிலிய நூலில் எழுதப் பட்டுள்ளது. (உங்களைப் பொறுத்த வரை அது விவிலியத்தின் குரூர சிந்தை) அந்தக் காலத்தில் துப்பாக்கி இருந்திருந்தால் இயேசு அதனைக் கையில் எடுத்திருப்பார்.//

அவர் தடி எடுக்கவில்லை. சவுக்கைத்தான் எடுத்தார். (கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு......)

அவர் அங்கு யாரையும் கொலை செய்யவில்லை. உங்கள் விருப்பத்திற்கு சவுக்கை தடியாகவும் துப்பாக்கியாகவும் மாற்றக் கூடாது. மற்றும் கிறிஸ்துவின் போதனைக்கு மாறாக உங்கள் கற்பனைகளையும் கலப்பது முறையல்லவே.

கலையரசன் said...

//அவர் எழுதியது கிறிஸ்தவ நம்பிக்கை பற்றியல்ல, சரித்திரம் பற்றியும் உரோம ஆட்சி பற்றியும்தான். அவர் எழுதியதை வாசித்துப்பாருங்கள் அப்போது உங்கள் திரிபுபடுத்தல்களும் கிறிஸ்தவ விசுவாசிகளை ஏமாற்றப் பார்ப்பதும் புரியும்.//
அவர் ஒரு சரித்திர ஆசிரியர் தான், ஆனால் கிறிஸ்துவின் சரித்திரத்தை எழுதியிருக்க வாய்ப்பேயில்லை. அப்படி எழுதி இருந்தால், ஆதாரத்தைக் காட்டுங்கள். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு பைபிளில் மட்டுமே வருகிறது.

//உண்மைதான். இயேசு பாலஸ்தீன யூத மதத்தை சேர்ந்த தாய்க்கும், தந்தைக்கும் மகனாகப் பிறந்தார் என்பதும் சரித்திர சான்று இல்லையே.//

அப்படிச் சொல்வது நானல்ல. விவிலிய நூல். இயேசுவின் தாயும், தகப்பனும் யூத குலத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்கிறது. ஒரு கிறிஸ்தவனுக்கு பிறந்தால் அந்தப் பிள்ளை கிறிஸ்தவன். ஒரு இந்துவுக்கு பிறந்தால் அந்தப் பிள்ளை இந்து. முஸ்லிமுக்கு பிறந்தால் முஸ்லிம். மதவாதிகள் ஒருவரின் மதத்தைப் பற்றி இப்படித் தான் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதைத் தானே நானும் சொன்னேன். இயேசு கடவுளின் குமாரனாக கன்னி மரியாளுக்கு பிறந்ததாக சொல்வது கிறிஸ்தவ விசுவாசிகளை ஏமாற்றக் கூறும் கட்டுக்கதை.

//அவர் தடி எடுக்கவில்லை. சவுக்கைத்தான் எடுத்தார். (கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு......)//

எப்படியோ... பைபிள் குரூர சிந்தை கொண்ட நூல் என்பதை ஒப்புக் கொள்கின்றீர்கள். பைபிளுடன் ஒப்பிடும் பொழுது எனது எழுத்துகள் மென்மையானவை. அந்த அளவுக்கு பைபிளின் குரூர சிந்தனை. இனப்படுகொலை, தகாத உறவுக்கு கல்லெறிந்து தண்டனை என்று சாதாரண மனிதநேயம் கொண்டவர்களை முகம் சுளிக்க வைக்கும்.

Anonymous said...

//அவர் ஒரு சரித்திர ஆசிரியர் தான், ஆனால் கிறிஸ்துவின் சரித்திரத்தை எழுதியிருக்க வாய்ப்பேயில்லை. அப்படி எழுதி இருந்தால், ஆதாரத்தைக் காட்டுங்கள். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு பைபிளில் மட்டுமே வருகிறது.//

இயேசுவை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஏன் இயேசுவின் சரித்திரத்தைப் பற்றி எழுத வேண்டும்? ஆனால், இயேசு சரித்திரத்தில் வாழ்ந்தவர் என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.

இந்த சுட்டிகளையும் அவற்றின் மூல நூல்களையும் படியுங்கள்.

http://en.wikipedia.org/wiki/Historicity_of_Jesus

http://www.religioustolerance.org/chr_jcno.htm

http://dmc.members.sonic.net/sentinel/naij3.html//அப்படிச் சொல்வது நானல்ல. விவிலிய நூல். //

எங்கே காட்டுங்கள் பார்க்கலாம்?

விவிலியம் இப்படித்தான் குறிப்பிடுகிறது, முடிந்தால் இந்தப் பகுதிகளை வாசித்துப் பாருங்கள்.
மத்தேயு 1: 18-25
லூக்கா 1: 34,35

//இயேசு கடவுளின் குமாரனாக கன்னி மரியாளுக்கு பிறந்ததாக சொல்வது கிறிஸ்தவ விசுவாசிகளை ஏமாற்றக் கூறும் கட்டுக்கதை.//


இது ஏமாற்று அல்ல. நீங்கள்தான் ஏமாற்றப் பார்க்கிறீர்கள். யூதர்களின் புனித நூலில் கி.மு. 440க்கு முன்பே சொல்லப்பட்டிருக்கிறது.

//எப்படியோ... பைபிள் குரூர சிந்தை கொண்ட நூல் என்பதை ஒப்புக் கொள்கின்றீர்கள்.//

நான் ஒப்புக் கொள்ளாததை நீங்கள் எப்படி ஒப்புக் கொண்டதாக எடுத்துக் கொள்வீர்கள்.


//பைபிளுடன் ஒப்பிடும் பொழுது எனது எழுத்துகள் மென்மையானவை. அந்த அளவுக்கு பைபிளின் குரூர சிந்தனை. இனப்படுகொலை, தகாத உறவுக்கு கல்லெறிந்து தண்டனை என்று சாதாரண மனிதநேயம் கொண்டவர்களை முகம் சுளிக்க வைக்கும்.//

இவை கிறிஸ்துவிற்கு முன் நடந்த சம்பவங்கள் அப்படியே பதியப்பட்டுள்ளன. இதை மாற்றவே இயேசு மனிதனாகப் பிறந்தார். இயேசுவின் பிறப்பிற்குப் பின் அன்பைப் பற்றியே விவிலியம் போதிக்கின்றது.

கலையரசன் said...

//இயேசுவை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஏன் இயேசுவின் சரித்திரத்தைப் பற்றி எழுத வேண்டும்? ஆனால், இயேசு சரித்திரத்தில் வாழ்ந்தவர் என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.//

சில சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிட்ட காலத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றி எழுதியுள்ளனர். அவற்றில் இயேசு போன்ற பல தீர்க்கதரிசிகள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. ஆனால் அவை பைபிளில் எழுதப்பட்டிருப்பதைப் போல இயேசுவின் கதையை முழுமையாக கூறவில்லை. நீங்கள் தரும் சுட்டிகள் எல்லாம் நான் ஏற்கனவே படித்தவை தான். அதற்குப் பிறகு தான் இந்தக் கட்டுரையை எழுதினேன்.

//எங்கே காட்டுங்கள் பார்க்கலாம்?

விவிலியம் இப்படித்தான் குறிப்பிடுகிறது, முடிந்தால் இந்தப் பகுதிகளை வாசித்துப் பாருங்கள்.
மத்தேயு 1: 18-25
லூக்கா 1: 34,35//

ஐயா, முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க முடியாது. இயேசுவின் தந்தை சூசையும், மரியாளும் யூதர்கள் இல்லாவிட்டால் அவர்கள் யார்? முஸ்லிம்களா? நிச்சயமாக கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது. ஏனெனில் இயேசுவின் போதனைகளை பின்பற்றியவர்கள் மட்டுமே கிறிஸ்தவர்கள்.

//இது ஏமாற்று அல்ல. நீங்கள்தான் ஏமாற்றப் பார்க்கிறீர்கள். யூதர்களின் புனித நூலில் கி.மு. 440க்கு முன்பே சொல்லப்பட்டிருக்கிறது.//


யூதர்களுடன் மோதலுக்கு தயாராகிறீர்களா? இன்று வரை யூதர்கள் ஒத்துக் கொள்ளாத ஒரு விடயத்தை நீங்கள் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு வருகின்றீர்கள். யூதர்கள் ஒரு காலத்திலும் இயேசுவை தமது மெசியாவாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்த வரை, இயேசு ஒரு யூத மதத் துரோகி, அல்லது போலிச் சாமியார்.

//நான் ஒப்புக் கொள்ளாததை நீங்கள் எப்படி ஒப்புக் கொண்டதாக எடுத்துக் கொள்வீர்கள்.//

நான் இயேசுவின் கையில் துப்பாக்கி வைத்திருக்கும் படத்தைப் போட்டால் அது எனது குரூர சிந்தையைக் காட்டுகின்றது என்கிறீர்கள். பைபிளில் (புதிய ஏற்பாடு) இயேசு சவுக்கால் அடித்தார் என்று எழுதியிருப்பதாக நீங்கள் கூறுகின்றீர்கள். உங்களது வாதப்படி பைபிள் குரூர சிந்தை கொண்ட நூல் என்பது தானே அர்த்தம்?

//இவை கிறிஸ்துவிற்கு முன் நடந்த சம்பவங்கள் அப்படியே பதியப்பட்டுள்ளன. இதை மாற்றவே இயேசு மனிதனாகப் பிறந்தார். இயேசுவின் பிறப்பிற்குப் பின் அன்பைப் பற்றியே விவிலியம் போதிக்கின்றது.//


உண்மை தான். அப்படியானால் பழைய ஏற்பாட்டை கிறிஸ்தவர்கள் நிராகரிக்க வேண்டும். எதற்காக அந்தப் பக்கங்களை இப்போதும் பைபிளில் வைத்திருக்கிறீர்கள்? பழைய ஏற்பாட்டில் உள்ள கொடூரங்களை இயேசு சுட்டிக் காட்டியதாக நான் அறியவில்லை. பழைய ஏற்பாட்டில் உள்ள இனப்படுகொலைகள், காட்டுமிராண்டித் தனமான தண்டனைகளை இயேசு எங்காவது விமர்சித்திருக்கிறாரா?

ஒரே ஒரு இடத்தில் ஒரு பெண்ணை கல்லால் அடிக்கும் பொழுது இயேசு குறுக்கிடுகிறார். உங்களில் பாவம் செய்யாதவர் கல் எடுத்து வீசட்டும் என்கிறார். ஆனால் அவரது காலத்தில் கல்லால் எறிந்து கொள்ளும் தண்டனை வழங்குவது சர்வசாதாரணம். (இயேசுவுக்கு தெரியாமல் இருக்க முடியாது.) அதனால் அந்த தண்டனை முறையை இரத்து செய்யும் படி அவர் போராடி இருக்க வேண்டும். குற்றம் செய்தவர்களை அன்பால் திருத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி இருக்க வேண்டும்.

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://thalaivan.com/page.php?page=blogger

THANKS

Regards,
Thalaivan Team FRANCE
thalaivaninfo@gmail.com

Anonymous said...

//சில சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிட்ட காலத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றி எழுதியுள்ளனர். அவற்றில் இயேசு போன்ற பல தீர்க்கதரிசிகள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. ஆனால் அவை பைபிளில் எழுதப்பட்டிருப்பதைப் போல இயேசுவின் கதையை முழுமையாக கூறவில்லை.//

இயேசு போன்ற பல தீர்க்கதரிசிகள் பற்றிய குறிப்புகள் அல்ல இயேசு மற்றும் கிறிஸ்தவர்கள் பற்றிய குறிப்புகள்தான் எழுதப்பட்டுள்ளன. மற்றும், கிறிஸ்துவில் விசுவாசம் அற்றவர்கள் இயேசுவின் கதையை முழுமையாக கூறுவார்களா?//ஐயா, முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க முடியாது. இயேசுவின் தந்தை சூசையும், மரியாளும் யூதர்கள் இல்லாவிட்டால் அவர்கள் யார்? முஸ்லிம்களா?//

'இயேசு பாலஸ்தீன யூத மதத்தை சேர்ந்த தாய்க்கும், தந்தைக்கும் மகனாகப் பிறந்தார்' என்ற பகுதியை உங்களால் விவிலியத்தில் ஆதாரப்படுத்த முடியுமா? 'அப்படிச் சொல்வது நானல்ல. விவிலிய நூல். இயேசுவின் தாயும், தகப்பனும் யூத குலத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்கிறது' என்று குறிப்பிட்டீர்கள். எங்கே காட்டுங்கள் பார்க்கலாம்.
வாசியுங்கள்: மத்தேயு 1: 18-25, லூக்கா 1: 34,35
இயேசு கன்னி மரியாளிடம்தான் பிறந்தார். அவர் மனிதனுக்கு பிறக்கவில்லை. சூசை என்பவர் வளர்ப்புத் தந்தை மாத்திரமே. அவர் யூதனா? கிறிஸ்தவனா? என்பது எனக்கு முக்கியமல்ல.


//யூதர்களுடன் மோதலுக்கு தயாராகிறீர்களா? இன்று வரை யூதர்கள் ஒத்துக் கொள்ளாத ஒரு விடயத்தை நீங்கள் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு வருகின்றீர்கள். யூதர்கள் ஒரு காலத்திலும் இயேசுவை தமது மெசியாவாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்த வரை, இயேசு ஒரு யூத மதத் துரோகி, அல்லது போலிச் சாமியார்.//

யூதர்களாலும் இயேசுவை மறுக்கமுடியாதபடி அவர்கள் புனித நூலே சாட்சியாக உள்ளது. அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அவர்கள் புனித நூலே கூறுகின்றது. யூதர்கள் சொல்கிறார்கள் என்றால் அதுதான் முடிவா? மெசியா பற்றிய தீர்க்கதரிசனங்களை யூதர்களிடம் கேட்டுப் பாருங்கள். அவர்களால் பதில் சொல்ல முடியாது.


//நான் இயேசுவின் கையில் துப்பாக்கி வைத்திருக்கும் படத்தைப் போட்டால் அது எனது குரூர சிந்தையைக் காட்டுகின்றது என்கிறீர்கள். பைபிளில் (புதிய ஏற்பாடு) இயேசு சவுக்கால் அடித்தார் என்று எழுதியிருப்பதாக நீங்கள் கூறுகின்றீர்கள். உங்களது வாதப்படி பைபிள் குரூர சிந்தை கொண்ட நூல் என்பது தானே அர்த்தம்?//

நான் இல்லை என்கிறேன். அதற்கு அர்த்தம் ஆம் அல்ல.

சவுக்கைத்தான் எடுத்தார் என்றுதானே குறிப்பிட்டேன். 'இயேசு சவுக்கால் அடித்தார்' என்று நான் குறிப்பிட்டதாக கூறுவது ஏன்? இதுதான் உங்கள் குழப்பம்.//உண்மை தான். அப்படியானால் பழைய ஏற்பாட்டை கிறிஸ்தவர்கள் நிராகரிக்க வேண்டும். எதற்காக அந்தப் பக்கங்களை இப்போதும் பைபிளில் வைத்திருக்கிறீர்கள்?//

கிறிஸ்தவம் பற்றி தெளிவற்ற உங்களுக்கு இந்த கேள்வி எழுவது நியாயாம்தான். பிழையையே மட்டும் தேடும் கிறிஸ்தவ எதிர்ப்பாளருக்கு “விளக்கமளித்து” என்ன பயன்? நேரம் கிடைத்தால் எழுத முயற்சிக்கிறேன். மனித வாழ்க்கையில் பழையவற்றை தவிர்த்து வாழ்வது கடினம் என்பது எல்லோருக்கும் புரியும்.

//பழைய ஏற்பாட்டில் உள்ள கொடூரங்களை இயேசு சுட்டிக் காட்டியதாக நான் அறியவில்லை. பழைய ஏற்பாட்டில் உள்ள இனப்படுகொலைகள், காட்டுமிராண்டித் தனமான தண்டனைகளை இயேசு எங்காவது விமர்சித்திருக்கிறாரா? //

உங்களுக்கு பைபிள் பற்றிய அறிவில்லை. மாறாக, பைபிளில் எங்கே பிழை இருக்கிறது என்பதைத்தான் தேடிப் படித்திருக்கிறீர்கள் என்பது உங்கள் கேள்விகளில் புரிகிறது. உதாரணத்திற்கு மத்தேயு 10:2-9 வாசித்துப்பாருங்கள்.

கலையரசன் said...

//வாசியுங்கள்: மத்தேயு 1: 18-25, லூக்கா 1: 34,35
இயேசு கன்னி மரியாளிடம்தான் பிறந்தார். //
ஐயா, மனிதனான இயேசுவை கடவுளாக்கி அவரது போதனைகளை மதமாக்கிய மத்தேயுவும், லூக்காவும் வேறு எப்படி பிரச்சாரம் செய்திருப்பார்கள்?

நான் ஒரு கிறிஸ்தவ எதிர்ப்பாளன் அல்ல. இயேசுவின் போதனைகளில் உள்ள பல நல்ல அம்சங்களை ஏற்றுக் கொள்கிறேன். (அதற்காக அவரை கடவுள் என்று கண்மூடித்தனமாக பின்பற்றவில்லை.) அதே நேரம் பைபிள் இனப்படுகொலை போன்ற மனிதத்திற்கு விரோதமான கொடுமைகளை ஆதரிப்பதை எதிர்க்கிறேன். (கிறிஸ்தவ மதவாதிகளைப் போல நாசூக்காக மறைக்கவில்லை.) ஒருவன் உண்மையை சொல்வதற்காக கிறிஸ்தவ எதிர்ப்பாளன் என்று அவதூறு செய்கின்றீர்கள். இதே போன்று தான் அன்று இயேசுவை எதிர்த்தவர்களும் செய்து கொண்டிருந்தார்கள். உங்களைப் போன்ற நபர்களுக்கு இயேசு அன்றே சரியான பதில் கூறி விட்டார். அதையே நான் இன்று உங்களுக்கும் கூற வேண்டியுள்ளது. "இந்த அனானி நண்பர் தான் என்ன பேசுகிறேன் என்று தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்."

Anonymous said...

//ஐயா, மனிதனான இயேசுவை கடவுளாக்கி அவரது போதனைகளை மதமாக்கிய மத்தேயுவும், லூக்காவும் வேறு எப்படி பிரச்சாரம் செய்திருப்பார்கள்? //

இயேசுவை கடவுளாக்கவில்லை. இயேசு கடவுளாகவே இருந்தார். மத்தேயுவும், லூக்காவும் அவரை கடவுளாக்க வேண்டிய அவசியமில்லை.


//அதற்காக அவரை கடவுள் என்று கண்மூடித்தனமாக பின்பற்றவில்லை.//

உங்கள் எல்லை இவ்வளவுதான்.


//ஒருவன் உண்மையை சொல்வதற்காக கிறிஸ்தவ எதிர்ப்பாளன் என்று அவதூறு செய்கின்றீர்கள்.//

கடவுள் பற்றி பேசினால் நீங்கள் கிறிஸ்தவ மதவாதி என்று அவதூறு செய்கின்றீர்கள்.


//இதே போன்று தான் அன்று இயேசுவை எதிர்த்தவர்களும் செய்து கொண்டிருந்தார்கள். உங்களைப் போன்ற நபர்களுக்கு இயேசு அன்றே சரியான பதில் கூறி விட்டார்.//

அவர்கள் கிறிஸ்துவை விசுவசிக்கவில்லை. நானோ விசுவசிக்கின்றேன். அவர்கள் கிறிஸ்துவிற்கு எதிராக பேசினார்கள். நானோ கிறிஸ்துவிற்காகப் பேசுகிறேன். ஆகவே உங்கள் கருத்து பிழையானது.

உங்களைப் போன்ற நபர்களுக்கும் இயேசு அன்றே சரியான பதில் கூறி விட்டார். என்னால் விவிலியத்திலிருந்து மேற்கோள் காட்ட முடியும் உங்களால் முடியுமா?


//"இந்த அனானி நண்பர் தான் என்ன பேசுகிறேன் என்று தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்."//

உங்கள் நாஸ்தீக, கிறிஸ்தவ எதிர்ப்பு என்ன பேசுவது என்று தெரியாமல் பேச வைக்கிறது.

J.P Josephine Baba said...

மிகவும் ஆழமான கட்டுரை. வாழ்த்துக்கள்.