Saturday, May 01, 2010

சதுரங்க அரசியலில் சர்வதேச அகதிகள்

பகுதி 1. அரசியல் சகோதரத்துவம்

முதலில் மேற்குலக நாடுகள் அகதி தஞ்சம் கோருவோருக்கு புகலிடம் வழங்கும் அரசியலைப் பார்ப்போம். அந்த அடிப்படை அறிவு இருந்தால் தான், நாம் மேற்கில் தமிழ் அகதிகள் பிரச்சினைகளை பற்றி தெளிவாக புரிந்து கொள்ளலாம். "புகலிடம் வழங்கும் அரசியல்" என்று குறிப்பிட்டேன். ஆமாம், இது ஒரு அரசியல் கொள்கை தான். மேற்குலக நாடுகளில் எதற்கெடுத்தாலும், ஒரு கொள்கை வகுத்து விடுவார்கள். அதனை அடுத்து வரும் அரசாங்கங்களும் கச்சிதமாக பின்பற்றும். ஒரு கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வருவது பாராளுமன்ற பெரும்பான்மை, அமைச்சு அதிகாரிகள் ஆகியோரில் தங்கி உள்ளது. மேற்குலக நாடுகளில் ஆளும் கட்சிகள் ஒன்றில் முதலாளித்துவத்தை தீவிரமாக ஆதரிக்கும் கட்சிகளாக இருக்கும், அல்லது முதலாளித்துவ அமைப்பில் தமது சொந்த நாட்டு மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றனவா என்று பார்க்கும் கட்சியாக இருக்கும். ஆகவே கொள்கை ரீதியாக பெருமளவு உடன்படிக்கைகளை செய்து கொள்ளும் கட்சிகள் எதுவும், அகதிகளை தமது வாக்கு வங்கியாக கருதுவதில்லை.

மக்களால் தெரிவு செய்யப்படாத அமைச்சு அதிகாரிகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. மக்களிடமிருந்து அன்னியப்பட்ட இந்த அதிகாரிகள் பெருமளவு நேரம் புள்ளி விபரங்களையும், அறிக்கைகளையும் படிப்பதிலேயே நேரத்தை செலவிடுகின்றனர். இவர்களுக்கு அகதிகளின் மனவுணர்வை புரிந்து கொள்ளும் தன்மை கிடையாது. சுருக்கமாக சொன்னால், இந்த அதிகாரிகளின் கண்களுக்கு இலக்கங்கள் மட்டுமே தெரியும், மனிதர்கள் அல்ல. அகதிகளை விசாரணை செய்யும் அதிகாரி ஒருவராகவும், விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவெடுப்பது வேறு ஒருவராகவும் இருப்பர்.

நான் நீண்ட காலம் மேற்கு ஐரோப்பாவில் வாழ்வதால், பெருமளவு ஐரோப்பிய தகவல்களை விரிவாக என்னால் வழங்க முடியும். இருப்பினும் அவ்வப்போது பிற கண்டங்களைப் பற்றிய குறிப்புகளும் வரும். "ஐரோப்பா ஒரு குடியேற்ற நாடல்ல." என்று இன்றைய அரசியல்வாதிகள் கூறி வருகின்றனர். அது உண்மையா? நாம் ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், அவை காலத்திற்குக் காலம் வந்து சேர்ந்த குடிவரவாளர்களாலேயே வளம் பெற்றுள்ளன, என்பது தெரிய வரும். ரோமர்கள் காலத்தில், ஜெர்மனியில் இருந்து சென்று குடியேறிய ஆங்கிலோ-சாக்சன் இனங்களை சேர்ந்தவர்களே இன்றைய இங்கிலாந்தின் குடிமக்கள். அவர்களுடன் பிற்காலத்தில் வந்த நோர்வீஜியர்களும் கலந்தனர்.

நாம் தமிழில் பயன்படுத்தும் "ஆங்கிலேயர்" என்ற வார்த்தை போர்த்துகீசிய மூலத்தை கொண்டது. ரோமன் குடும்பத்தை சேர்ந்த மொழிகள் அந்தப் பதத்தை தற்போதும் பாவிக்கின்றன. பண்டைய ஐரோப்பா கண்டத்தில் அவர்கள் ஆங்கில இனம் என்றே அறியப்பட்டனர். அதே போல பிரான்ஸில் பிரிட்டன் என்ற மாகாணம் உள்ளது. அந்த மாகாணத்தை சேர்ந்தவர்கள் பிரித்தானிய மொழி (ஆங்கிலம் அல்ல) பேசுகின்றனர். பிரிட்டன் என்ற சொல் அங்கிருந்து தான் வந்தது. அவர்களின் மூதாதையர் பிரிட்டனில் இருந்து பிரான்சிற்கு குடிபெயர்ந்த கெல்ட்டிக் இன மக்கள். பிரான்ஸ் என்ற பெயர் ஜெர்மனியில் இருந்து வந்து குடியேறிய பிராங்கன் என்ற இனத்தில் இருந்து வந்தது. இவ்வாறு இன்றைய ஐரோப்பிய தேசங்களின் பெயர்களே, நாடுகளுக்கிடையிலான குடியேறிகளின் பெயராக உள்ளன.

சரி, பண்டைய சரித்திரம் மட்டும் தான் அப்படியா? ஒரு நூற்றாண்டுக்கு முந்திய நவீன வரலாறு என்ன சொல்கிறது? அகதிகள் என்ற நவீன கால தோற்றப்பாடு, மதங்களின் போருக்குப் பின்னர் தான் ஆரம்பமாகியது. ஒரு காலத்தில் கத்தோலிக்க மதம் மட்டுமே சர்வாதிகாரமாக ஐரோப்பா முழுவதும் ஆண்டு வந்தது. அதற்கு சவாலாக வரும் எந்த சக்தியும் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டது. ஆனால் ஜெர்மனியில் லுதேர்ன், பிரான்ஸில் கல்வின் ஆகிய மதகுருக்கள் புரட்டஸ்தாந்து பிரிவை வெற்றிகரமாக ஸ்தாபித்தனர். ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் அரசர்கள் லுதேர்னின் கொள்கைகளை அரசமதமாக அங்கீகரித்தனர். ஆனால் பிரான்ஸ், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் கல்வினை பின்பற்றியவர்கள் தேடித்தேடிக் கொல்லப்பட்டனர். அதனால் அவரை பின்பற்றிய பலர் (புரட்டஸ்தாந்து) நெதர்லாந்திற்கு தப்பி ஓடி தஞ்சம் புகுந்தனர்.

பிரெஞ்சுப் புரட்சிக் காலத்திலும் அதே மாதிரி நிகழ்ந்தது. அப்போது புரட்சி நடந்த பிரான்சை தவிர பிற நாடுகளில் மன்னராட்சி நிலவியது. மன்னரை எதிர்க்கும் குடியரசுவாதிகள் பலர் பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரினர். புதிய பிரெஞ்சுக் குடியரசில் ஆங்கிலேய, ஜேர்மனிய அரசியல் அகதிகள் தங்கி இருந்தனர். அங்கிருந்த படியே தமது நாட்டு குடியரசு இயக்கத்தை வழிநடத்தினர். மேற்குறிப்பிட்ட உதாரணங்களில் இருந்து ஒரு உண்மை புலனாகும். எப்போதும் தம்மைப் போல ஒரே அரசியல் கொள்கைகளை பின்பற்றுபவர்களுக்கே எந்த நாடும் அரசியல் தஞ்சம் வழங்க விரும்புகின்றது. இந்த "அரசியல் சகோதரத்துவம்" இன்று வரை ஐரோப்பிய நாடுகளின் எழுதப்படாத சட்டமாக உள்ளது.

(தொடரும்)

4 comments:

குறும்பன் said...

விரிவாக எழுதுங்கள் தெரிந்துகொள்கிறோம்.

ஜோதிஜி said...

மக்களால் தெரிவு செய்யப்படாத அமைச்சு அதிகாரிகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. மக்களிடமிருந்து அன்னியப்பட்ட இந்த அதிகாரிகள் பெருமளவு நேரம் புள்ளி விபரங்களையும், அறிக்கைகளையும் படிப்பதிலேயே நேரத்தை செலவிடுகின்றனர். இவர்களுக்கு அகதிகளின் மனவுணர்வை புரிந்து கொள்ளும் தன்மை கிடையாது. சுருக்கமாக சொன்னால், இந்த அதிகாரிகளின் கண்களுக்கு இலக்கங்கள் மட்டுமே தெரியும், மனிதர்கள் அல்ல. அகதிகளை விசாரணை செய்யும் அதிகாரி ஒருவராகவும், விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவெடுப்பது வேறு ஒருவராகவும் இருப்பர்..................


ஸ்ரீமாவோ ஆட்சிகாலத்தில் அழுகை கோச்சு மனதில் வந்து போகின்றது. இதற்காக நேரு காலத்தில் இருந்து பிடிவாத அதிகாரிகளை மாற்றி லால் பகதூர் சாஸ்திரி ஆட்சியில் மாறிய அதிகாரிகளும், தமிழ்நாட்டில் இருந்த முதல் அமைச்சர் நீங்கள் சொன்னபடி தான் புள்ளிவிபரத்தை எண்ணிக்கை வைத்துக்கொண்டு ஆடு புலி ஆட்டம் காட்டியது ஆடியது நிணைவுக்கு வந்து போகின்றது.

அன்றும் இன்றும் என்றென்றும்.....

Hai said...

அனைத்துப் பாகமும் முடித்த பின்னர் கருத்து சொல்கிறேன்.

Kalaiyarasan said...

நன்றி குறும்பன், ஜோதிஜி,அரைக்கிறுக்கன்
உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்