Wednesday, November 25, 2009

ஆப்பிரிக்காவில் தமிழரின் வேர்கள்

ஆப்பிரிக்க கண்டம் பற்றிய எமது அறிவு மிகக் குறுகியது. பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் கற்பிக்கும் வரை, இந்து சமுத்திரத்திற்கு அப்பால் இருந்த பாரிய நிலப்பரப்பு எமது கண்ணிற்குப் புலப்படவில்லை. இன்றும் கூட ஆப்பிரிக்காவிற்கும் தமிழருக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். வெள்ளையினத்தவர்களும், சீனர்களும் தனித்தனியே தோன்றிய இனங்களாக கருதிக் கொள்வதைப் போல, திராவிடர் வரலாறும் தனித்துவமாக காட்டிக் கொள்கின்றது. அண்மையில் தான், சமூக விஞ்ஞானிகள் நீண்ட ஆராய்ச்சிக்குப் பின்னர், உலகின் அனைத்து இனங்களும் ஆப்பிரிக்க மூதாதையரைக் கொண்டிருப்பதை நிரூபித்தனர்.

தமிழரின் மூதாதையரை ஆப்பிரிக்காவில் தேடுவதா? சிலருக்கு இது அபத்தமாகப் படலாம். ஐரோப்பாவின் பழமை வாய்ந்த மொழியை பேசும் பாஸ்க் (ஸ்பெயின்) இனத்திற்கும், தமிழருக்கும் தொடர்பிருப்பதாக ஒரு தமிழறிஞர் "கண்டுபிடித்து" கட்டுரை வரைந்திருந்தார். தமிழர்கள் தொலைந்து போன யூத இனக்குழுக்களில் ஒன்று என்று நிறுவத் துடிக்கும் மேதாவிகளும் இருக்கின்றனர். இவையெல்லாம் பலருக்கு அபத்தமாக தோன்றுவதில்லை. அதற்குக் காரணம், ஒவ்வொரு பின்தங்கிய இனமும் தம்மை விட முன்னேற்றமடைந்த இனத்துக்கு நிகராக வர விரும்புகின்றன. உலகில் ஐரோப்பியர் வகிக்கும் மேலாண்மை பலருக்கு கடவுள் கொடுத்த வரமாகத் தெரிகின்றது. மேலாண்மை பெற ஐரோப்பியர் செய்த இனப்படுகொலைகள், கொள்ளைகள், பித்தலாட்டங்கள் என்பன பற்றி அறிந்தவர்கள் குறைவு.

எமது நாடுகளில் காலனிய காலத்தில் ஆதாயம் பெற்ற வர்க்கம் ஒன்று, பரம்பரை பரம்பரையாக விசுவாசம் காட்டத் தவறுவதில்லை. அரசியல் சித்தாந்தமும், அவர்கள் சார்ந்த வர்க்க நலன்களில் இருந்தே பிறக்கின்றது. இதனால் வளர்ச்சியடைந்த ஐரோப்பியருக்கும், நாகரீகமடையாத ஆப்பிரிக்கர்களுக்கும் நடுவில் தாம் நிற்பதாக ஒரு கற்பிதத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். பஞ்சமும், பிணியும் சூழ்ந்த இருண்ட கண்டமான ஆப்பிரிக்காவுடன் தம்மை இனம் காண யார் தான் விரும்புவர்? அதற்கு மாறாக செல்வச் செழிப்பு மிக்க அமெரிக்காவுடன் தம்மை இணைத்துக் கொள்ள போட்டி போடுகின்றனர். இந்த தாழ்வுச் சிக்கல் தமிழரை மட்டும் பாதிக்கவில்லை. அமெரிக்க கண்ட நாடுகளில் வாழும் ஆப்பிரிக்க வம்சாவழி கருப்பினத்தவரும், பசுபிக் பிராந்திய ஆதிவாசிகளும் தமது வேர்களை ஆப்பிரிகாவில் தேட விரும்புவதில்லை.

தமிழ் நாட்டில் வாழும் இருளர்கள், இலங்கையில் வாழும் வேடுவர்கள் ஆகியோர், இன்றும் ஆப்பிரிக்க அடையாளங்களை காவித் திரியும் ஆதிவாசி இனங்கள். இந்திய உபகண்டத்தில், ஆப்பிரிக்க ஆதிவாசிகள் வந்தேறு குடிகளுடன் கலந்து புதிய இனங்கள் உருவாகின என்ற வரலாற்று உண்மையை பலர் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. ஆயிரம் ஆண்டுகளாக தாம் இனத் தூய்மை பேணி வருவதாக, தமக்கு ஏற்றவாறு வரலாற்றை திருத்தி எழுதிக் கொள்கின்றனர். ஒரு காலத்தில் நில ஆதிக்கத்திற்காக இனக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட சச்சரவுகள், நாகரீகமடைந்த காலத்திலும் தொடர்கின்றன. கால்நடை மேய்த்த காலத்தில் இருந்து, கணணி வேலை செய்யும் காலம் வரை, மனிதன் தனக்குள்ளே பிரிவினைகளை வளர்த்துக் கொண்டே போகிறான்.

சாதி வேற்றுமைகள் இந்தியாவின் வளர்ச்சியை தடைப்படுத்தும், என்று பெரியார் தீர்க்கதரிசனத்துடன் கூறிச் சென்றார். ஆப்பிரிக்கா இனக்குரோதங்களை தீர்த்துக் கொள்ளாவிட்டால், சமூகப் புரட்சி இன்னும் நூறு வருடங்களுக்கு பின்தள்ளப்படும் என்று குறிப்பு எழுதிவைத்தார் சே குவேரா. இந்திய உப கண்டத்திற்கும், ஆப்பிரிக்க கண்டத்திற்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. சாதி அமைப்பு முறை இந்திய உபகண்டத்திற்கு மட்டுமே உரியது என்று பலர் தவறாக நினைத்துக் கொள்கிறனர். வர்ணாச்சிரம காலம் என்பது வேறு, சாதிகளின் மூலம் வேறு. ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டிருந்த பண்டைய இனங்கள், வெற்றி பெற்ற இனத்தின் அதிகார வலையத்திற்குள் வந்த போது சாதிகளாக உருமாறின. ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் இந்த சமூக மாற்றம் நடப்பதற்குள் ஐரோப்பியர் காலனிப்படுத்த தொடங்கி விட்டனர்.

சோமாலியா, மொரிட்டானியா, போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் இன்றும் சாதி அமைப்பு உள்ளது. இந்திய உபகண்டத்தில் நிலவும் அதே சாதி வேற்றுமை, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் கட்டிக் காக்கப்படுவது வியப்புக்குரியதாக தோன்றலாம். இந்தியாவில் ஆரியரின் வருகையும், சுதேசி இனங்களின் மீதான ஆதிக்கமும் சாதியத்தை நிறுவனப் படுத்தியது. அதே போல, அரேபியரின் வருகையுடன் தான், மொரிட்டானியா, சோமாலியா ஆகிய நாடுகளில் ஸ்தாபன மயப்பட்ட சாதியம் தோன்றியது. அரேபியரின் தாயகபூமியில் உள்ள ஏமனிலும் சாதி அமைப்பு உள்ளமை குறிப்பிடத் தக்கது. புதிய சமுதாய மாற்றம் வரும் போது, இனக்குழுக்கள் சாதிகளாக தொடர்கின்றன. ஆதிக்க இனத்தின் மொழியை சுவீகரித்த பின்னர் அவர்களது பாரம்பரிய வேர்கள் அழிகின்றன.

இந்தியாவில் நிலவும் சாதிப் பாகுபாட்டைப் பற்றி நான் ஐரோப்பியருக்கு விளக்கிய போது, அவர்களால் அதனை சரியாக கிரகித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் பல்வேறு ஆப்பிரிக்க நாட்டினருடன் உரையாடிய போது, அதிசயத்தக்க விதத்தில் பல ஒற்றுமைகளை கண்டுகொண்டேன். கிணற்றில் தண்ணீர் அள்ள உரிமையில்லாதது முதல், அகமண முறை வரை ஆப்பிரிக்க சமூகங்கள் இந்தியாவின் பிம்பமாக இருக்கின்றன. இன்றும் சில ஆப்பிரிக்க பகுதிகளில், ஒரு இனத்திற்கு(சாதிக்கு) சொந்தமான கிணற்றில் வேற்றினம் தண்ணீர் அள்ளிய குற்றத்திற்காக கொலைகள் நடக்கின்றன. சூடானின் டார்பூரில் நடந்த யுத்தம் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். ஆப்பிரிக்காவில் உள்ளதை இனம் என்றோ, குலம் என்றோ அல்லது வேறு எந்தப் பெயரிட்டு அழைத்தாலும், உள்நாட்டுப் பிரிவினை பல யுத்தங்களுக்கு வழி கோலியுள்ளதை மறுக்கமுடியாது.

இந்தியர்களும், ஆப்பிரிக்கர்களும் ஒரு காலத்திலும் முன்னேற முடியாது என்பதில் ஐரோப்பியர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். அதற்கு காரணம், அவர்களுக்கிடையே இருக்கும் தீர்க்க முடியாத பிரச்சினைகள். ஐரோப்பாவிலும் இனக்குரோதங்களும், சாதிப் பிரிவினைகளும் ஒரு காலத்தில் இருந்து வந்துள்ளன. இன்று அவையெல்லாம் சரித்திரமாகி விட்டன. ஆப்பிரிக்காவில் இனங்களை ஒன்றோடொன்று மோத விடுவதில், ஐரோப்பியர்களின் பங்கு குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. இடது கையால் அரசுக்கு உதவுவார்கள், வலது கையால் கிளர்ச்சிக் குழுவிற்கு உதவுவார்கள். அரசு ஒரு இனம் சார்ந்ததாகவும், யுத்த பிரபுக்கள் (அல்லது கிளர்ச்சியாளர்கள்) இன்னொரு இனம் சார்ந்தும் இருப்பதால் தான், அவர்களால் தொடர்ந்து யுத்தம் செய்ய முடிகிறது. சியாரா லியோன், லைபீரியா போன்ற நாடுகளில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர்களில் ஐரோப்பிய ஆயுத வியாபாரிகள் கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள். இந்த இரகசியங்கள் வெளியே வரும் போது, ஒரு சில தனியார் கம்பெனிகள் மட்டும் தண்டிக்கப்பட்டன.

ஆப்பிரிக்காவை பற்றி சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றன. இருப்பினும் "ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா" என்ற கட்டுரைத் தொடர் இத்துடன் முடிவுறுகின்றது.ஆப்பிரிக்க தொடர் கட்டுரைகள்:
12.அங்கோலாவின் அலங்கோலம் : பனிப்போரின் பதிலிப் போர்
11.நைல் நதி: ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு
10.லைபீரியா: ஐக்கிய அடிமைகளின் குடியரசு
9. சிம்பாப்வே: வெள்ளையனே வெளியேறு!
8. கறுப்பினப் பேரழகியின் கிறிஸ்தவ சாம்ராஜ்யம்
7. அகில ஆப்பிரிக்க ஆட்சிக்கவிழ்ப்பு நிறுவனம் (LTD)
6. ஐவரி கோஸ்ட்: சாக்லெட்டின் தாயகம் !
5. நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் !
4. கறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள்
3. ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை
2. காங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம்
1. ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 1

10 comments:

தர்ஷன் said...

என்ன கலையரசன் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி இதையெல்லாம் எப்படி ஏற்றுக் கொள்ளும். புதுமைப்பித்தன் சொன்னது போல உலகில் தோன்றிய முதற்குரங்கு தமிழ்க்குரங்குஇல்லையா?

Unknown said...

arumaiyana katurai. nandri

valai thedal said...

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா என்ற தலைப்பில் உள்ள உங்களின் எல்லா கட்டுரை பாகங்களையும் நான் படித்துள்ளேன். மேலும் என் நண்பர்களிடத்திலும் இது பற்றி பகிர்ந்து கொண்டேன். அவர்களுக்கும், எனக்கும் இச்செய்திகள் கேள்விப்படாத, புதிதான ஒன்றாக இருந்தது.

//ஆப்பிரிக்காவை பற்றி சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றன. இருப்பினும் "ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா" என்ற கட்டுரைத் தொடர் இத்துடன் முடிவுறுகின்றது.//

நீங்கள் கூறியது போல, ஆப்பிரிக்காவை பற்றி சொல்வதற்கு இன்னும் நிறைய இருந்தும் ஏன்?கட்டுரைத் தொடரை முடித்துக் கொண்டீர்கள் என்பதுதான் புரியவில்லை?

Kalaiyarasan said...

தர்ஷன், ஜெய்சங்கர், அஜிமூசா...நன்றிகள் பல.

ஆப்பிரிக்க தொடரை நிறுத்தியதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.
1. இதுவரை எழுதிய கட்டுரைகள் யாவும் கீழைக்காற்று பதிப்பகத்தால் நூலாக அச்சிட்டு வெளிவர இருக்கின்றன. ஜனவரி மாதம் கடைகளில் கிடைக்கும்.
2. அடுத்த வருடம் வினவு தளத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளின் தொடர் ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறேன். அதற்கான தரவுகளை சேகரிக்க நேரம் தேவை.
3. தனிப்பட்ட குடும்ப சூழ்நிலை காரணமாக நிறையக் கட்டுரைகள் எழுதுவதற்கு நேரமும், வசதியும் கிடைக்கவில்லை. மேலும் மாதமொரு தடவையாவது சிற்றிதழ்களுக்கு எழுதி வருகிறேன்.

விரைவில் ஆப்பிரிக்க தொடரின் இரண்டாவது பாகத்தை எழுதுவேன்.

valai thedal said...

நன்றி!நன்றி!நன்றி!

Unknown said...

why not you write about spritual life of africa

Anonymous said...

Thank you for the post.

//ஐரோப்பாவின் பழமை வாய்ந்த மொழியை பேசும் பாஸ்க் (ஸ்பெயின்) இனத்திற்கும், தமிழருக்கும் தொடர்பிருப்பதாக ஒரு தமிழறிஞர் "கண்டுபிடித்து" கட்டுரை வரைந்திருந்தார். தமிழர்கள் தொலைந்து போன யூத இனக்குழுக்களில் ஒன்று என்று நிறுவத் துடிக்கும் மேதாவிகளும் இருக்கின்றனர்.//


Could u share the link that where i can read about this 'new' study? i heard about this. unfortunately, couldnt find. Thanks.

Kalaiyarasan said...

//Could u share the link that where i can read about this 'new' study? i heard about this. unfortunately, couldnt find. Thanks.//

இந்தக் கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கின்றனவா என்று எனக்கு தெரியாது. சில தமிழ் தேசியத்தை வளர்க்கும் கட்டுரையாளர்கள் இது போன்ற ஊகங்களை பரப்புவது வழக்கம். அதில் எந்த உண்மையும் இல்லை. இன்றைய காலத்தில் முன்னேறிய ஐரோப்பியருடனும், யூதருடனும் சேர்த்துப் பார்த்து இன்பம் காணுகிறார்கள்.

எஸ் சக்திவேல் said...

> இன்றும் சில ஆப்பிரிக்க பகுதிகளில், ஒரு இனத்திற்கு(சாதிக்கு) சொந்தமான கிணற்றில் வேற்றினம் தண்ணீர் அள்ளிய குற்றத்திற்காக கொலைகள் நடக்கின்றன.

இந்தப் பழக்கம் மத்திய கிழக்கிலும் இருந்ததா? பார்க்க "Lawrrence of Arabia" . படம் ஆங்கிலேயரின் "மேன்மையை" உணர்த்திய எடுக்கப் பட்டிருந்தாலும் , அதில் கிணற்றில் தண்ணி அள்ளிய குற்றத்திற்காக ஒருவன் சுட்டுக் கொல்லப் படும் காட்சி வருகிறது.

Kalaiyarasan said...

ஆமாம், சக்திவேல்.
ஆப்பிரிக்காவில் தண்ணீர் என்ற வளத்திற்கான ஆதிக்க போட்டி அரேபியாவிலும் தொடர்ந்தது. எமது நாடுகளிலும் அதுவே சாத்திய சமூகத்திற்கான அடிப்படையாக இருந்து வருகின்றது.