Tuesday, September 23, 2014

வாக்கெடுப்பின் முடிவுகளை முதலாளிகளே தீர்மானிக்கிறார்கள்!


ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு, தமிழீழத்தில் சாத்தியமா?

ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு, சில தமிழீழவாதிகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் இணக்க அரசியல் செய்யும் மே 17 இயக்கம் அதிக அக்கறை காட்டியுள்ளது. எனது பார்வைக்கு எட்டிய வரையில், மே 17 அனுதாபி ஒருவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை மிகவும் ஆக்கபூர்வமாக அமைந்துள்ளது. (https://www.facebook.com/photo.php?fbid=858459330831945&set=a.254018564609361.72820.100000036593373&type=1) அதில், பின்னடைவுக்கு காரணமாக சில குறிப்புகளை எழுதியுள்ளார். அதிலிருந்து படிப்பினைகளை பெற்றால், தமிழீழம் கிடைப்பது சாத்தியமே என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதலில், மே 17 இயக்கத்தின் "சுதந்திர வேட்கை" எந்தளவு நேர்மையானது என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. அது தமிழ்நாடு பிரிவினையை ஆதரிக்கவில்லை. இந்தியாவில் இணக்க அரசியல் செய்யும் கொள்கை கொண்டது.

முதலாளித்துவ நாகரிகம் நிலவும் ஒற்றைத் துருவ உலகில், இப்படியான வலதுசாரி தேசியவாதிகளின் வெகுளித்தனம் பல உண்மைகளை காண மறுக்கிறது. ஸ்காட்லாந்திலும் அது தான் நடந்தது. ஸ்காட்லாந்து பிரிவினைக்கான இயக்கம் எப்படி ஆரம்பமாகியது?

ஸ்காட்லாந்து, ஐக்கிய இராச்சியத்தில் பொருளாதார வளர்ச்சி கண்டுள்ள மாநிலம் ஆகும். வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய பிற பகுதிகளுடன் ஒப்பிடும் பொழுது, ஸ்காட்லாந்து பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. பிரிட்டனில் எடுக்கப் படும் 90% எண்ணை, ஸ்காட்லாந்து கடல் எல்லைக்குள் உள்ளது. ஸ்காட்டிஷ் எண்ணையில் பெரும்பகுதி இங்கிலாந்திற்கு செல்கிறது. மேலும் உல்லாசப் பிரயாணத் தொழில் போன்ற சேவைத் துறையில் வேலை செய்வோர் தான் அங்கு அதிகம்.

இது போன்ற பொருளாதாரப் பின்புலத்தில் இருந்து தான் பிரிவினைக் கோரிக்கை தொடங்கியது. அதாவது, வசதியான ஸ்காட்டிஷ் மத்தியதர வர்க்கம், ஸ்காட்லாந்து சுதந்திர நாடனால், தாம் விரும்பிய படி அரசமைக்கலாம் என்று கனவு கண்டது. அது உண்மையில் ஒரு படித்த மத்தியதர வர்க்கத்தின் வெகுளித்தனம்.

வட அயர்லாந்து, தன்னை அயர்லாந்து குடியரசுடன் இணைக்குமாறு, அல்லது தனி நாடாக்குமாறு பல தசாப்த காலமாக போராடி வந்தது. வட அயர்லாந்து, மிக நீண்ட ஆயுதப்போராட்டம் நடந்த வரலாற்றைக் கொண்டது. அநீதியான முறையில் சிறையில் அடைக்கப் பட்டிருந்த பொபி சான்ட்ஸ், காந்தீய வழியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து தியாக மரணத்தை தழுவிக் கொண்டார்.

ஆயிரக் கணக்கானோர் உயிர்ப்பலி கொடுத்து, பல இன்னல்களை அனுபவித்த போதிலும், வட அயர்லாந்தினால் ஒரு பொது வாக்கெடுப்பின் மூலம் தனது தலைவிதியை தீர்மானிக்க முடியவில்லை. பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்திடம் அப்படி ஒரு யோசனை கூடக் கிடையாது.

வட அயர்லாந்து விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலத்தில், ஸ்காட்லாந்து ஒடுக்குமுறையாளர்களுடன் சேர்ந்து ஒத்துழைத்து வந்தது. இத்தனைக்கும், ஸ்காட்லாந்தின் கெயலிக் மொழியும், ஐரிஷ் மொழியும், ஒரே மாதிரியான கெல்டிக் மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. இரண்டுமே ஆங்கிலத்தில் இருந்து முற்றிலும் வேறு பட்ட அந்நிய மொழிகள். அப்படி இருந்தும், ஸ்காட்லாந்து, அயர்லாந்துக்கு இடையில், மொழி அடிப்படையிலான சகோதரத்துவ உணர்வு எந்தக் காலத்திலும் இருக்கவில்லை. அதற்குக் காரணம், இனம் அல்ல, வர்க்கம் தான் அரசியலை தீர்மானிக்கிறது.

ஐரிஷ் மக்களுடன் ஒப்பிடும் பொழுது, ஸ்காட்டிஷ் மக்கள் பொருளாதாரத்தில் முன்னேறி இருந்தனர். ஸ்காட்டிஷ் மேட்டுக்குடியினர், பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். ஸ்காட்லாந்து எப்போதும் தன்னை இங்கிலாந்தின் சம பங்காளியாக கருதி வந்தது. பல ஸ்காட்டிஷ்காரர்கள், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் காலனிய கால போர்களில் பங்கெடுத்துள்ளனர். காலனிய நிர்வாகத்தில் உயர் பதவி வகித்தனர். "நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து முதலாம், இரண்டாம் உலகப் போர்களில் பங்கெடுத்தோம்..." என்று, ஸ்காட்லாந்து பிரிவினைக்கு எதிரான அரசியல்வாதிகள் புலம்பியமை இங்கே குறிப்பிடத் தக்கது.

அதற்காக, ஸ்காட்டிஷ் மக்கள் எல்லோரும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை தாங்கிப் பிடித்தார்கள் என்று சொல்ல வரவில்லை. குறிப்பாக, ஸ்காட்டிஷ் மேட்டுக்குடி / மத்திய தர வர்க்கம் பிரிட்டிஷ் ஆதரவாளர்களாக இருந்தார்கள் என்று கூறலாம். தற்போது நடந்து முடிந்துள்ள பொது வாக்கெடுப்பில், எடின்பேர்க் போன்ற மத்தியதர வர்க்க பகுதிகளில் அதிகளவு பிரிவினைக்கு எதிரான ஓட்டுகள் விழுந்துள்ளமை இங்கே குறிப்பிடத் தக்கது. கிளாஸ்கவ் போன்ற ஏழை உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில், பிரிவினைக்கு ஆதரவான ஓட்டுகள் விழுந்துள்ளன.

தமிழீழமும் ஆரம்பத்தில் ஈழத் தமிழ் மத்திய தர வர்க்கத்தின் கோரிக்கையாகத் தான் எழுந்தது. (அது தவிர்க்க முடியாதது. உலகில் பெரும்பாலான தேசிய இன எழுச்சிகள், குறிப்பிட்ட இனத்தின் மத்தியதர வர்க்க நலன் சார்ந்ததாகவே இருக்கும்.) ஸ்காட்டிஷ் மேட்டுக்குடியினர், அரசியல் விழிப்புணர்வு பெற்ற பின்னர், ஆங்கிலேய அரசுடன் முரண்பட்டனர். தமது பகுதியில் தாமே ஆள முடியும் என்ற நம்பிக்கை பிறந்தவுடன் தனி நாடு கோரிக்கையை முன் வைத்தனர். ஈழத் தமிழ் மேட்டுக்குடியினரும், சிங்கள ஆளும்வர்க்கத்துடன் முரண்பட்ட பின்னர் தான், தமிழீழம் கேட்கத் தொடங்கினார்கள். ஆயினும், அதை நடைமுறைப் படுத்துவதற்கு உழைக்கும் வர்க்க மக்களின் ஆதரவு தேவை.

1976 ஆம் ஆண்டு எடுக்கப் பட்ட வட்டுக்கோட்டை தீர்மானமும், தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து கிடைத்த 1977 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியும், உழைக்கும் வர்க்க தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்கான அரசியல் நகர்வுகள் ஆகும். மேலும், அடுத்த முப்பதாண்டுகளாக நடந்த ஈழப் போர், கணிசமான அளவு உழைக்கும் வர்க்க மக்களின் ஆதரவை திரட்டிக் கொடுத்துள்ளது. (உண்மையில், அடித்தட்டு மக்கள் தான் போரினால் அதிகளவில் பாதிக்கப் பட்டனர்.)

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பின்னர், அதன் அடிப்படையில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்துவது தமிழர் விடுதலைக் கூட்டணியின் நோக்கமாக இருந்துள்ளது. வடக்கு, கிழக்கில் ஒன்றைத் தவிர எல்லாத் தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அது வாக்கெடுப்பிற்கான எதிர்பார்ப்பை மேலும் தூண்டி விட்டது.

உண்மையிலேயே, அன்று தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடந்திருந்தால், ஈழம் பிரிந்திருக்குமா? இந்த விஷயத்தில், கூட்டணியினரின் சந்தரப்பவாத அரசியலை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்ப்போம். அன்று, பெரும்பான்மை முஸ்லிம் மக்களும் தமிழீழத்திற்கு ஆதரவாக இருந்தனர்.

சிங்கள குடியேற்றங்களில் வாழ்ந்த மக்கள் பிரிவினையை எதிர்த்திருக்கலாம். ஆயினும், தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் தமிழீழ சுதந்திரத்திற்கு ஆதரவாக வாக்களித்து இருப்பார்கள். அந்தப் பொன்னான வாய்ப்பு, இனிமேல் எந்தக் காலத்திலும் திரும்பி வராது என்பது தான் யதார்த்தம். ஈழப்போரில் நடந்த ஆயிரக் கணக்கான உயிரிழப்புகள், சொத்து அழிவுகள், இடப்பெயர்வுகள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிப் போட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள், மூன்று திசைகளில் பிரிந்து சென்று விட்டனர். மேலும், தமிழ் மக்கள் மத்தியிலும், ஈழப் போரானது ஒற்றுமையை குலைத்துள்ளது. "புலி ஆதரவாளர்கள்", "புலி எதிர்ப்பாளர்கள்" என்று இரண்டு பிரிவுகள், போர்க் காலத்தில் நடந்த கொலைகள், பழிவாங்கல்களினால் இரண்டு துருவங்களாக உள்ளன. எல்லாவற்றிற்கும் பின்னால் ஏதாவது ஒரு சூழ்ச்சி பின்னப் பட்டிருக்கலாம்.

ஆயினும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், அதன் வாரிசான சிறிலங்கா அரசும் சிந்திக்கும் அளவிற்கு, நாங்கள் யாரும் சிந்திப்பது இல்லை என்பதும் உண்மை தான். முதலில், ஏகாதிபத்தியத்தின் தன்மை பற்றி அறிந்து கொண்டால் தானே, அதற்கு ஏற்றவாறு எமது அரசியலை தீர்மானிக்க முடியும்? "உலகில் ஏகாதிபத்தியம் என்ற ஒன்று இல்லை" என்று சாதிப்பவர்களினால், என்றைக்குமே தமிழ் மக்களை வழிநடத்த முடியாது.

தமிழீழத்தையும், ஸ்காட்லாந்தையும் ஒப்பிட முடியுமா? நாங்கள் சில ஒற்றுமைகளை சுட்டிக் காட்டி, ஒப்பிட்டு மகிழலாம். ஆனால், "ஸ்காட்லாந்தில் சாத்தியமான ஒன்று, ஏன் தமிழீழத்திற்கு பொருந்தாது?" என்று வாதிட முடியாது. ஏனென்றால், ஸ்காட்லாந்து முதலாம் உலகத்தை சேர்ந்தது. அது காலனியாதிக்க நாடாக இருந்தது.

தமிழீழம் மூன்றாமுலகத்தை சேர்ந்தது. அது காலனிய அடிமை நாடாக இருந்தது. அது ஒரு முக்கியமான வேறுபாடு தான். இரண்டாம் உலகப்போரில், ஜெர்மனியிடம் இருந்து விடுதலை பெற்ற நெதர்லாந்து, தனது ஆசியக் காலனியான இந்தோனேசியாவுக்கு சுதந்திரம் கொடுக்க மறுத்து வந்தது.

ஒரு பேச்சுக்கு, ஸ்காட்லாந்து சுதந்திரம் அடைந்திருந்தால், அது நாளைக்கு தமிழீழ சுதந்திரத்தை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அந்தத் தருணத்தில், அது பிரிட்டனின் அதே நிலைப்பாட்டை எடுக்கலாம். இது ஒரு வகையில், தேசியவாதத்தின் குறுகிய மனப்பான்மை என்றும் கூறலாம். தேசியவாத சித்தாந்தம், எப்போதும் உள்நோக்கிப் பார்க்கும் தன்மை கொண்டது. தனது பிரதேசத்தை தவிர, உலகின் பிற பகுதிகளில் என்ன பிரச்சினை இருக்கிறது என்று அறிவதில் அக்கறை காட்டுவதுமில்லை.

"ஸ்காட்லாந்து வாக்கெடுப்பின் பின்னடைவால், அதன் விடுதலை தற்காலிகமாக தள்ளிப்போயுள்ளது..." என்பது மே 17 காரர்களின் வாதம். அதாவது, சில தவறுகளை திருத்திக் கொண்டால், அடுத்த தடவை நடக்கவிருக்கும் பொது வாக்கெடுப்பில் எப்படியும் விடுதலை கிடைத்து விடுமாம். மேற்குலக நாடொன்றில், தனி நாடு பிரிவினைக்கான பொது வாக்கெடுப்பு நடப்பது இதுவே முதல் தடவை அல்ல.

1995 ஆம் ஆண்டு, கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் கெபெக் (ஆங்கிலத்தில் : கியூபெக்) மாநிலம் பிரிவதற்கான பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதிலேயும், பிரிவினைக்கு எதிரான வாக்குகள் அதிகளவில் விழுந்தன. (மிகச் சிறிய வித்தியாசம் தான். ஆம் 49.42%, இல்லை 50.58%) தற்போது, 14 வருடங்களுக்குப் பின்னரும், மீண்டும் ஒரு வாக்கெடுப்பு நடத்துவது பற்றிய கதையே இல்லை.

ஸ்காட்லாந்திலும், கெபெக்கிலும் பெருமளவு வெளிநாட்டுக் குடியேறிகள் சுதந்திரத்திற்கு எதிராக ஓட்டுப் போட்டதாக குற்றஞ்சாட்டப் பட்டது. மே 17 ஆய்வாளர், அந்தக் குறைபாட்டை தனது கட்டுரையில் குறிப்பிடாமல் விட்டது தற்செயலாக நடந்தது அல்ல. ஸ்காட்லாந்து, கெபெக் விடுதலைக்கு எதிராக ஓட்டுப் போட்டவர்களில், கணிசமான அளவு தமிழகத் தமிழர்கள், ஈழத் தமிழர்களும் அடங்குவார்கள். அந்த உண்மையை ஒத்துக் கொண்டால், தனது பிழைப்பில் தானே மண்ணள்ளிப் போட்டதாக முடிந்து விடும்.

வளர்ச்சி அடைந்த முதலாம் உலக நாடென்பதால், பிரிட்டனுக்கு சென்ற வந்த பன்னாட்டுக் குடியேறிகளும் ஸ்காட்லாந்திலும் வசிப்பது எதிர்பார்க்கத் தக்கதே. பவுன் பவுனாக அள்ளலாம் என்ற கனவில், பிரிட்டனில் குடியேறுவதற்கு அல்லது வேலை செய்வதற்கு விரும்புவோர் பலருண்டு. டாலர், யூரோவை விட, பவுனின் பெறுமதி அதிகம் என்பதால், பிரிட்டனில் வேலை செய்து பணம் அனுப்புவருக்கு இந்தியாவில் அதிக மதிப்புக் கிடைக்கிறது. பவுனின் மகாத்மியம் பற்றி இங்கே விபரிக்கத் தேவையில்லை. சாதாரண மக்கள் எல்லோருக்கும் தெரிந்த உண்மை இது.

ஸ்காட்லாந்து தனி நாடானால், அது பவுனை நாணயமாக பயன்படுத்த முடியாது என்று, பிரிட்டிஷ் அரசு திட்டவட்டமாக அறிவித்து விட்டது. சுதந்திரம் அடைந்த பின்னரும் பவுனை தொடர்ந்தும் பயன்படுத்த விரும்புவதாக ஸ்காட்டிஷ் தேசியவாதக் கட்சி அறிவித்திருந்தது. ஆயினும், பவுனை பயன்படுத்துவதற்கு பிரிட்டன் மறுக்கும் பட்சத்தில் அடுத்த ஏற்பாடு என்ன? ஸ்காட்லாந்து தனக்கென தனியான நாணயத்தை அறிமுகப் படுத்துமா? அதன் பெறுமதி என்னவாக இருக்கும்? இதை யாராலும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை.

பவுனை இழந்து விடுவோம் என்ற பயத்தில், ஸ்காட்லாந்தில் வாழும் தெற்காசிய நாட்டவர்கள், விடுதலையை எதிர்த்து ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். பவுன் பற்றிய அச்சத்தை, பல தமிழ் மக்கள் நேரடியாகவே தெரிவித்து இருக்கிறார்கள். சாதாரண தமிழ் மக்களுக்கு தெரிந்த காரணம், மே 17 ஆய்வாளரின் கண்களுக்கு மட்டும் தெரியவில்லை. அவர் ஸ்காட்லாந்தில் வாழும் "இங்கிலாந்துக்காரர்களை" பற்றி மட்டும் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இங்கிலாந்துகாரர்களின் வாக்குரிமையை தடுத்திருந்தால், ஸ்காட்லாந்து சுதந்திரம் அடைந்திருக்கும் என்று அடித்துக் கூறுகிறார். கொஞ்சம் பொது அறிவை பயன்படுத்தி சிந்திக்கக் கூடாதா? ஸ்காட்லாந்தில் இங்கிலாந்துக்காரர்கள் மட்டுமா குடியேறி இருப்பார்கள்? எத்தனை இலட்சம் வேல்ஸ் அல்லது ஐரிஷ்காரர்கள் வசிக்கிறார்கள்? வெறும் இனவாதக் கண்ணோட்டத்துடன் எழுதப் படும் ஆய்வுக் கட்டுரைகளினால் தமிழீழத்திற்கு எந்தப் படிப்பினையும் கிடைக்கப் போவதில்லை.

அது சரி, ஸ்காட்டிஷ் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பிரிவினைக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டார்களா? எத்தனை சதவீத ஸ்காட்டிஷ் வாக்காளர்கள் ஐக்கிய இராச்சியத்தோடு சேர்ந்திருக்க விரும்புகிறார்கள்? பொது வாக்கெடுப்பினால், ஸ்காட்லாந்தில் எத்தனை குடும்பங்கள், உறவினர்கள், நண்பர்கள் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தார்கள் என்பது தெரியுமா? ஆமாம், அவர்கள் எல்லாம் ஸ்காட்டிஷ் இனத்தவர்கள் தான். ஆனால், ஸ்காட்லாந்து பிரிவினை தொடர்பான அரசியல் கருத்து முரண்பாடு அவர்களைப் பிரித்துள்ளது.

அது போகட்டும். எத்தனை ஸ்காட்டிஷ் முதலாளிகள் சுதந்திரத்தை ஆதரித்தார்கள்? எதற்காக ஸ்காட்டிஷ் மேட்டுக்குடியினர் சுதந்திரத்திற்கு எதிராக ஓட்டுப் போட்டனர்? ஸ்காட்டிஷ் மேட்டுக்குடியினர் பெரும்பான்மையாக வாழும், எடின்பேர்க் போன்ற நகரங்களில் தான் பெருமளவு "இல்லை" ஓட்டுகள் கிடைத்துள்ளன. தேர்தல் முடிவுகள் தொடர்பான புள்ளிவிபரம் அதைக் காட்டுகின்றது.

ஸ்காட்டிஷ் ஊடகங்களின் நிலைப்பாடு என்னவாக இருந்தது? அரச ஊடகமான, பிபிசி யை மறந்து விடுவோம். ஸ்காட்லாந்தில் வெளியாகும் தினசரிப் பத்திரிகைகளில், ஒன்று மட்டும் தான் சுதந்திரத்தை ஆதரித்திருந்தது. மற்ற எல்லா பத்திரிகைகளும், பிரிட்டனுடன் சேர்ந்திருக்க விரும்பி, "இல்லை" ஓட்டுப் போடுமாறு, வாக்காளர்களுக்கு அறிவுறுத்தின. மேற்குலக நாடுகளில், பத்திரிகைகள், வெகுஜன ஊடகங்கள் பெரிய நிறுவனங்களின் கைகளில் உள்ளன.

ஸ்காட்லாந்து சுதந்திர நாடானால், அதன் தேசிய வங்கியாக வரும் வாய்ப்புப் பெற்ற Bank of Scotland, எதற்காக பிரிவினையை ஆதரிக்கவில்லை? உலகம் முழுவதும் ஸ்கொச் விஸ்கி ஏற்றுமதி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள், ஸ்காட்லாந்து சுதந்திரத்தை எதிர்த்த மர்மம் என்ன? விஸ்கி ஸ்காட்லாந்தின் பிரதானமான பொருளாதாரம் அல்லவா?

இதற்கெல்லாம் விடை ஒன்று தான். பெரும் மூலதனத்திற்கு தேசியம் கிடையாது. சர்வதேச சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதற்கு, ஸ்காட்லாந்தை விட பிரிட்டன் தான் சிறந்த நாடு. பிரிட்டன் தான் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கிறது, ஸ்காட்லாந்து அல்ல. அதனால் தான் ஸ்காட்டிஷ் முதலாளிகளும், மேட்டுக்குடியினரும் பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசமாக இருந்தார்கள்.

இதை அப்படியே, தமிழீழத்திற்குப் பொருத்திப் பாருங்கள். ஸ்காட்லாந்து விடுதலைக்கு எதிராக நின்ற பெரும் மூலதனம், தமிழீழ விடுதலையை ஆதரிக்குமா? அதனால் அதற்கு என்ன இலாபம்? ஐ.நா. கண்காணிப்பின் கீழ் பொது வாக்கெடுப்பு நடத்தி, கிழக்கு தீமோரை பிரித்தார்கள். எதற்காக? கிழக்கு தீமோர் மக்கள் மேல் பரிதாபப் பட்டு செய்தார்களா? இல்லை. அந்த நாட்டில் எண்ணை வளம் உள்ளது. அவற்றை மேற்குலக எண்ணை நிறுவனங்கள் ஆளுவது மட்டுமே ஏகாதிபத்தியத்தின் குறிக்கோளாக இருந்தது.

தமிழீழத்தில் எண்ணை வளம் இல்லை என்பதால், கிழக்கு தீமோரை பிரிக்க விரும்பிய பெரும் மூலதனம் தமிழீழ விடுதலையை ஆதரிக்காது. மே 17 ஆய்வாளரின் ஆலோசனைகளின் படி, தமிழீழத்தில் பொது வாக்கெடுப்பு நடந்தால், முதலில் எதிர்ப்பவர்கள் மிகப் பெரிய தமிழ் முதலாளிகளாக இருப்பார்கள். ஏனென்றால், கொழும்பு தான் சர்வதேச மூலதனத்துடன் தொடர்பு வைத்துள்ளது. யாழ்ப்பாணம் அல்ல. மேலும், ஸ்காட்லாந்து வாக்கெடுப்பில், பவுன் தொடர்பாக எழுந்த பிரச்சினை தமிழீழத்திலும் வரலாம். தமிழீழத்தின் நாணயம் எது? சிறிலங்கா ரூபாய் தொடர்ந்தும் பயன்படுத்தப் படுமா? அதற்கு சிறிலங்கா அரசு அனுமதிக்குமா?

தமிழீழம் சுதந்திர நாடானால், தமிழீழ ரூபாய் என்ற புதிய நாணயம் கொண்டு வருவார்களா? அதன் பெறுமதி என்னவாக இருக்கும்? புலிகள் இருந்த காலத்திலேயே, தமிழீழ ரூபாய் நோட்டுகளை பாவனைக்கு கொண்டு வருவதற்கு முயற்சி செய்தார்கள். ஆனால், மக்களின் ஆதரவு இல்லாத காரணத்தினால் கைவிடப் பட்டது. (100 சிறிலங்கா ரூபாய்கள்  = 120 தமிழீழ ரூபாய்கள் என்று பெறுமதி தீர்மானிக்கப் பட்டது. தமிழ்ப் பொது மக்கள், சந்தையினால் நிர்ணயிக்கப் படாத நாணயப் பெறுமதியை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்.)

தமிழ் பேசும் பாமர மக்களுக்கும் ஓரளவு பொருளாதாரம் தெரியும். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இயங்கிய தமிழீழ வங்கிகளில் கூட, பெருமளவு மக்கள் தங்கள் பணத்தை வைப்பிலிடவில்லை. அதற்குப் பதிலாக சிறிலங்கா அரச வங்கிகளிலேயே தொடர்ந்தும் வைப்பிலிட்டு வந்தார்கள். (சிறிலங்கா வங்கி நிறுவனங்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருந்தன. அரசு ஊழியர்களின் சம்பளங்களும், வர்த்தகத் தொடர்புகளும் சிறிலங்கா வங்கிகள் மூலமே பரிவர்த்தனை செய்யப் பட்டன.) 

உலகம் முழுவதும் வாழும் பெரும்பான்மையான மக்கள், தமது பொருளாதார நலன்களை மட்டுமே முக்கியமாகக் கருதுகின்றனர். தமிழ் மக்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல. பொது வாக்கெடுப்பு விஷயத்தில், ஏகாதிபத்தியமும், பெரும் மூலதனமும் எந்தப் பக்கம் நிற்கின்றதோ, அதற்கு சார்பாக முடிவுகள் எழுதப்படும்.

இந்த உண்மைகளைப் புரிந்து கொள்ளாத ஒரு தேசியவாத இயக்கம், அந்த இனத்தை சேர்ந்த நடுத்தர வர்க்கத்தின் வெகுளித்தனத்தை மட்டுமே பிரதிபலிக்கும். ஏகாதிபத்தியத்தையும், பெரும் மூலதனத்தையும் எதிர்த்துப் போராடாத தேசியவாத இயக்கத்தினால், தனது மக்களின் விடுதலையை வாங்கித் தர முடியாது.


  • பொது வாக்கெடுப்பின் முடிவுகளை முதலாளிகளே தீர்மானிக்கிறார்கள்!





ஸ்காட்லாந்து தொடர்பான முன்னைய பதிவுகள்:

Saturday, September 20, 2014

ஸ்காட்லாந்து வாக்கெடுப்பில் கள்ள ஒட்டு மோசடி! பிரிட்டனின் பித்தலாட்டம்!!


இலங்கை, இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளில் மட்டும் தான், தேர்தலில் கள்ள ஒட்டு போடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? "வளர்ச்சி அடைந்த", "ஜனநாயக" மேற்கத்திய நாடுகளிலும் அது தாராளமாக நடக்கிறது.  ஸ்காட்லாந்து பொது வாக்கெடுப்பில், பிரிட்டிஷ் அரசுக்கு சார்பான முடிவுகளைப் பெறுவதற்காக, கள்ள ஒட்டு போடப் பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. வாக்குச் சீட்டு எண்ணுபவர்களே கள்ள ஓட்டுப் போட்டுள்ளனர். ஆஹா! இதுவன்றோ ஜனநாயகம்!

ஸ்காட்லாந்து பிரிந்து தனி நாடாவதற்கான பொது வாக்கெடுப்பு, கடந்த 18 செப்டம்பர் இடம்பெற்றது. வாக்கெடுப்புக்கு முன்னர், பிரிவினைக்கு ஆதரவாக "ஆம்" என்று வாக்களிக்க விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப் பட்டது. பிரிந்து சென்றால் பொருளாதார ரீதியாக பல பின்னடைவுகள் ஏற்படும் என்று பயமுறுத்தல்கள் வந்த படியால், "இல்லை" என்று வாக்களிக்க விரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்தது. இறுதியில், ஸ்காட்லாந்து பிரிவினைக்கு எதிரானவர்கள் வென்றதாக அறிவிக்கப் பட்டது.

ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. பல முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வருகின்றன. பிரிவினைக்கு எதிரான, "இல்லை" ஓட்டுக்களில் பல, கள்ள ஓட்டுகளாக போடப் பட்டிருக்க வாய்ப்புண்டு. இங்கேயுள்ள வீடியோவில் அதற்கான ஆதாரங்கள் பதிவாகி உள்ளன. வாக்குச் சீட்டுகளை எண்ணுமிடத்தில், பல "ஆம்" ஓட்டுகள், "இல்லை" ஓட்டுகளுடன் சேர்த்து எண்ணப் பட்டுள்ளன. வாக்குச் சீட்டு எண்ணும் நிலையத்தில் இருந்தவர்களே கள்ள ஒட்டு போட்டுள்ளனர். அதுவும், இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. 


மேற்கத்திய நாடுகளில் ஜனநாயகம் என்பது, பொது மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு மோசடி நாடகம். அமெரிக்காவில் 2000 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில், நிறைய முறைகேடுகள் நடந்த படியால், உலகமே அமெரிக்காவின் ஜனநாயகத்தை பார்த்து கை கொட்டிச் சிரித்தது. கள்ள ஓட்டுகள் காரணமாக, புளோரிடா மாநிலத்தில் வாக்குகள் எண்ணும் பணி திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருந்த படியால், முடிவுகள் ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்கப் பட்டது. குடியரசுக் கட்சி சார்பில் ஜோர்ஜ் புஷ்ஷும், ஜனநாயகக் கட்சி சார்பில் அல் கோரும் போட்டியிட்டார்கள். தேர்தலில் பெரும்பான்மை வாக்காளர்கள் அல் கோருக்கு வாக்களித்திருந்த போதிலும், ஜோர்ஜ் புஷ் ஜனாதிபதியாக தெரிவானார். அமெரிக்க ஜனாதிபதி, மக்களால் தெரிவு செய்யப் படுவதில்லை என்ற உண்மையை, அன்று தான் உலகம் முழுவதும் அறிந்து கொண்டது.




உலகில் எந்தவொரு தேசிய இன விடுதலைக்கான இயக்கத்தினதும் பின்னால், ஏழை உழைக்கும் வர்க்க மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் மறைந்திருக்கும். ஈழம் மட்டுமல்ல, ஸ்காட்லாந்திலும் அது தான் உண்மை. ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பில், வர்க்க வேறுபாடு துலக்கமாகத் தெரிகின்றது. ஏழை மக்கள் வாழும் பிரதேசங்களில் பெரும்பான்மையினர் "ஆம்" என்றும், மத்தியதர, மேல்தட்டு வர்க்க மக்கள் வாழும் பிரதேசங்களில் பெரும்பான்மையினர் "இல்லை" என்றும் வாக்களித்துள்ளனர். குறிப்பாக, ஏழை உழைக்கும் வர்க்க மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட கிளாஸ்கவ் நகரில், கூடுதலான ஆதரவு வாக்குகள் கிடைத்துள்ளன.

மேற்கத்திய நாடுகள் தேர்தல் ஜனநாயகத்தை விரும்புவதற்கு காரணம், அதன் முடிவுகளை விரும்பியவாறு மாற்றிக் கொள்ளலாம். பெரும் மூலதனத்தை கொண்டுள்ள முதலாளிகளின் விசுவாசம் எந்தப் பக்கம் உள்ளது என்பது மட்டுமே முக்கியம். அது தான் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கிறது. மக்களின் கருத்துக்களை கட்டமைக்கும் வல்லமை பொருந்திய ஊடகங்கள் அவர்களின் கைகளில் இருக்கின்றன.

இந்த வாக்கெடுப்பின் முடிவில், ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கு ஆதரவான சக்திகள் தோல்வியடைந்து விட்டதாக கருதுவது அபத்தமானது. உண்மையில் அவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. "இல்லை" என்று வாக்களித்தால், மாநில சுயாட்சியும், அதிகாரப் பரவலாக்கலும் தருவதாக, பிரிட்டிஷ் அரசு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும். தனி அரசு அமைப்பது ஒரு தூர நோக்கிலான இலட்சியமாக இருக்கலாம். ஆனால், நிகழ்காலத்தில் நடைமுறைச் சாத்தியமான அதிகாரப் பகிர்வை ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கும். அனேகமாக, உலகில் உள்ள எல்லா தேசியவாத அமைப்புகளின் அரசியல் அது தான்.

சுயநிர்ணய உரிமை என்றால், பிரிந்து சென்று தனி அரசு அமைப்பது என்ற அர்த்தம் இல்லை. இந்த உண்மையை, புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த காலஞ்சென்ற அன்டன் பாலசிங்கம் உணர்ந்திருந்தார். "தமிழீழம் பிரிந்து செல்வதை, எந்தக் காலத்திலும் சிங்களவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாங்கள் பிரிவினையை உச்ச பட்ச கோரிக்கையாக வைத்திருப்போம். அதிக பட்சம் அதிகாரப் பரவலாக்கலுடன் மாநில சுயாட்சி பெற்றுக் கொள்ள முடியும்." புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவில் இருந்தவர்களிடம் அன்டன் பாலசிங்கம் அவ்வாறு கூறி இருந்தார். இறுதி யுத்தத்திற்கு முன்னர், தாய்லாந்தில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் அன்டன் பாலசிங்கம் அந்த உண்மையை ஏற்றுக் கொண்டிருந்தார்.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்;
ஸ்காட்லாந்து பிரிவினைக்கான வாக்கெடுப்பு, தமிழீழவாதிகள் நிராகரிப்பு

Thursday, September 18, 2014

இஸ்லாமிய தேசம் (IS) : காலனிய வரலாறு திரும்புகிறது


1917 ஆம் ஆண்டு, ரஷ்யாவில் போல்ஷெவிக் கம்யூனிஸ்ட் புரட்சி நடந்தது. ஆட்சி கவிழ்க்கப் பட்ட சார் மன்னனின் அலுவலக கோப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்த, போல்ஷெவிக் அமைச்சர் ட்ராஸ்கி, ஒரு இரகசிய ஆவணத்தை கண்டுபிடித்தார். மத்திய கிழக்கு அரபு நாடுகளை, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய சாம்ராஜ்யங்கள் தமக்குள் பங்கிட்டுக் கொள்வது சம்பந்தமான ஒப்பந்தம் அது. முதலாளித்துவ நாடுகளின் அயோக்கியத்தனத்தை உலகறியச் செய்யும் நோக்கில், ட்ராஸ்கி அந்த ஒப்பந்தத்தை சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கினார்.

 "Sykes-Picot ஒப்பந்தம்" என்று அழைக்கப் படும் அந்த உடன்படிக்கை, மிகவும் இரகசியமாக வைக்கப் பட்டிருந்தது. ஏனெனில், துருக்கியிடம் அடிமைப் பட்டிருந்த அரேபியர்களுக்கு ஒரு தாயகத்தை உருவாக்கித் தர விரும்புவதாக, பிரிட்டன் வாக்குறுதி அளித்திருந்தது. அரேபியரின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக, பிரிட்டன் லாரன்ஸ் எனும் உளவாளியை அனுப்பி, ஆயுதங்களும் கொடுத்து உதவி இருந்தது.

"நாகரிகமடைந்த மேன் மக்களின் நாடான" பிரிட்டன், தமது நலன் கருதி நடக்கிறது என்று, அரேபியர்களும் அப்பாவித்தனமாக நம்பினார்கள். ஆனால், துருக்கியின் பகுதியாக இருந்த அரேபிய நாடுகளை காலனிப் படுத்துவதே பிரிட்டனின் உண்மையான நோக்கமாக இருந்தது. அதற்காக, பிரிட்டனும், இன்னொரு ஐரோப்பிய காலனியாதிக்க நாடான பிரான்சும், "Sykes-Picot ஒப்பந்தம்" என்ற பெயரில், அரபு நாடுகளை தமக்குள் பங்கிட்டுக் கொண்டன.

பிரிட்டன் எதற்காக அரேபியர்களை ஏமாற்றி, அவர்களின் நாடுகளை காலனிப் படுத்த வேண்டும்? முதலாம் உலக யுத்தம் நடப்பதற்கு முன்னர், இந்தியா (பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளடங்கியது) பிரிட்டனின் ஒரு முக்கியமான "பணக்கார" காலனியாக இருந்தது. என்ன விலை கொடுத்தேனும், பிரிட்டன் இந்தியாவை தொடர்ந்தும் காலனியாக வைத்திருக்க விரும்பியது. ஆனால், இந்தியாவுக்கு வடக்குப் பகுதியில், ரஷ்ய சாம்ராஜ்யம் விரிவடைந்து கொண்டிருந்தது. ஆப்கானிஸ்தானை நடுவில் வைத்து, இரண்டு சாம்ராஜ்யங்களும் பரஸ்பரம் எல்லைகளை தீர்மானித்துக் கொண்டன.

எதிர்பாராத விதமாக முதலாம் உலகப்போர் வெடித்து விட்டது. இஸ்தான்புல் நகரை கைப்பற்றும் நோக்கில், துருக்கியில் கலிபொலி எனும் இடத்தில் பிரிட்டிஷ் படைகள் இறக்கப் பட்டன. ஆனால், கடுமையான இழப்புகளுக்குப் பின்னர் பின்வாங்கி விட்டன. இதற்கிடையே, பிரிட்டனுக்கு இன்னொரு பிரச்சினை எழுந்தது. துருக்கி சுல்தான் சர்வதேச இஸ்லாமிய அகிலத்திற்கு (கிலிபாத்) தலைமை தாங்கும் கலீபாவாக கருதப் பட்டார். முதலாம் உலகப்போரில் எதிரி நாடுகளான பிரிட்டன், பிரான்சுக்கு எதிராக, துருக்கி ஜிகாத் ஒன்றை அறிவித்து விட்டால் என்ன செய்வது?

அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த சனத்தொகையில் ஏறத்தாள அரைவாசிப் பேர் முஸ்லிம்கள். துருக்கி சுல்தானின் ஜிகாத்திற்கான அழைப்பை ஏற்று, இந்திய முஸ்லிம்கள் கிளர்ந்தெழுந்தால் என்ன செய்வது? அது இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் முடிவாக இருந்திருக்கும். ஆகவே, பிரிட்டனுக்கு எதிரான ஜிகாத் ஒன்றை தடுக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி முஸ்லிம்களை பிரித்து ஆள வேண்டும். அரேபியர்களை துருக்கியரிடம் இருந்து பிரித்து விட வேண்டும். பிரிட்டன் அரேபியரின் விடுதலைப் போராட்டத்திற்கு உதவிய நோக்கம் அது தான்.

உண்மையிலேயே, துருக்கி சுல்தான் ஜிகாத் அறிவிப்பு செய்திருந்தார். அது யாருடைய கவனத்தையும் பெறவில்லை. அதற்குக் காரணம், இளம் துருக்கியர்கள் எனும் தேசியவாத அமைப்பு, ஏற்கனவே சுல்தானின் அதிகாரங்களை கட்டுப்படுத்தி இருந்தது. மேலும் துருக்கி ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் அதிகார மையத்திலும், துருக்கி தேசியவாதிகள் ஊடுருவினார்கள்.

அரபு நாடுகளில் அதிகாரத்தில் இருந்த துருக்கி தேசியவாதிகள், அரேபியரை சிறுமைப் படுத்தினார்கள். இதனால், துருக்கி பேரினவாதத்திற்கு எதிரான அரேபிய தேசிய இன எழுச்சி ஒன்று உருவானது. பிரிட்டன் தன் பங்கிற்கு அதை எண்ணை ஊற்றி எரிய விட்டது. அரபு தேசியவாதிகளை ஆதரிப்பதாக காட்டிக் கொண்டது. ஆனால், அரேபியர்கள் துருக்கியரிடம் இருந்து விடுதலை பெற்றதும், அவர்களின் நாடுகளை துண்டு போட்டது. இன்றுள்ள அரபு நாடுகளின் எல்லைகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் தீர்மானிக்கப் பட்டவை ஆகும். துருக்கி, ரஷ்யா ஆகிய வல்லரசுகளிடம் இருந்து, பிரிட்டிஷ் இந்தியாவை பாதுகாக்கும் நோக்கத்திற்காக உருவாக்கப் பட்டவை தான், நவீன அரபு தேசங்கள்.

வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாதவர்கள், ஒரே தவறை மீண்டும் செய்வதற்கு சபிக்கப் பட்டவர்கள் ஆவார்கள். அரேபியர்கள் மட்டுமல்ல, பிரிட்டனை தமது நட்பு சக்தியாக நம்பிக் கொண்டிருக்கும், வலதுசாரி தமிழ் தேசியவாதிகளும், வரலாற்றில் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளவில்லை.

மேலதிக தகவல்களுக்கு: 
Setting desert on fire, T.E.Lawrence and Britain's secret war in Arabia; James Barr 
Lawrence In Arabia: War, Deceit, Imperial Folly, And The Making Of The Modern Middle East; Scott Anderson

Monday, September 15, 2014

தமிழரின் நிலங்களைப் பறித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கும் மகிந்த அரசு


ஆழிப் பேரலைகள் (சுனாமி) இலங்கையின் கிழக்குக் கரைகளை தாக்கிய 2005 ஆம் ஆண்டு, உலகின் கவனம் முழுவதும் இலங்கை மீது திரும்பி இருந்தது. சுனாமியால் ஏற்பட்ட அனர்த்தத்தை பார்வையிட, இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் வந்திருந்தனர். அப்போது, வடக்கிலும், கிழக்கிலும், விடுதலைப் புலிகளின் நடைமுறை தமிழீழ அரசு இயங்கிக் கொண்டிருந்தது.

புலிகளும், புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களும், அமெரிக்க ஜனாதிபதிகள் சுனாமியால் பாதிக்கப் பட்ட முல்லைத்தீவுக்கு வருவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், முன்னாள் ஜனாதிபதிகளான கிளிண்டனும், ஜோர்ஜ் புஷ்ஷும், மாத்தறை போன்ற சிங்களப் பிரதேசங்களை பார்வையிட்டு விட்டு நாடு திரும்பினார்கள்.

சுனாமி அனர்த்த நிவாரணமாக, USAID மூலமாக, அமெரிக்க அரசு ஏராளமான நிதி வழங்கி இருந்தது. USAID, தனது நடவடிக்கைகளை சுனாமியுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. எதிர்காலத்தில், இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை சுற்றுலாத் துறைக்கு சாதகமாக பயன்படுத்துவது எப்படி என்று ஆராய்ந்து, கள அறிக்கை ஒன்றை தயாரித்தது. திருகோணமலை முதல் அம்பாறை வரையிலான, தமிழ்ப் பிரதேசங்களில் எந்தெந்த இடங்கள் சுற்றுலாத் துறையை வளர்க்க உதவும் என்று ஆராய்ந்துள்ளனர்.

ஆழிப்பேரலை அனர்த்தத்தை அடுத்து வந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக, மகிந்த ராஜபக்ச, "மகிந்த சிந்தனை" என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்து வெளியிட்டார். அதிலும், USAID குறிப்பிட்ட கிழக்கு மாகாணப் பிரதேசங்களில், சுற்றுலாத் துறையை வளம் படுத்துவது பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. இதெல்லாம் தற்செயலாக நடந்திருக்குமா?

அமெரிக்க பின்னணியில், நோர்வே அனுசரணையில், சிறிலங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப் படாமல் காலம் கடந்து கொண்டிருந்தது. 2004 ஆம் ஆண்டு, சுனாமி அனர்த்தம் நடப்பதற்கு முன்னர், இரண்டு தரப்பினரும் எந்த விதமான சமரச உடன்படிக்கைக்கும் வரவில்லை.

சுனாமி ஏற்படுத்திய பேரழிவுகள் காரணமாக, அரசினதும், புலிகளினதும் போரிடும் ஆற்றல் வெகுவாகக் குறைத்திருந்தது. அந்தத் தருணத்தில், பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் P-TOMS எனும் உடன்படிக்கை எட்டப் பட்டது. சுனாமி நிவாரணத்தை நிர்வகிக்கும் பெயரில், சிறிலங்கா அரசும், புலிகளும் ஒரு சமரசத்திற்கு கொண்டு வரும் நோக்கிலான, அமெரிக்காவின் முயற்சியில் தான் அதுவும் சாத்தியமானது.

பேச்சுவார்த்தைகள் பல வருடங்களாக நடந்து கொண்டிருந்தாலும், அமெரிக்கா எதிர்பார்த்த சமாதானம் மட்டும் வரவில்லை. இதற்கிடையில், புலிகளும் போருக்கு தயாராவதற்காக, நான்கு ஆயுதக் கப்பல்களை தருவித்திருந்தனர். மட்டக்களப்பு கரையில் இருந்து, சுமார் ஆயிரம் கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடற்பரப்பில், சிறிலங்கா கடற்படையினரால் அந்தக் கப்பல்கள் தாக்கி அழிக்கப் பட்டன. புலிகளின் கப்பல்கள் பற்றிய தகவல்களையும், செய்மதிப் படங்களையும் கொடுத்துதவியது வேறு யாருமல்ல. அமெரிக்காவே தான்.

தற்போது ஈழப் போர் நடந்து முடிந்து ஐந்து வருடங்கள் கடந்து விட்டன. கிழக்கு மாகாண கரையோரத்தை சுற்றுலாத் துறைக்கு தாரை வார்க்கும் திட்டம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் நடைமுறைப் படுத்தப் படுகின்றது. புலிகள் இருந்த காலத்தில், அவர்கள் அமெரிக்காவையோ, அந்நிய மூலதனத்தையோ எதிர்க்கவில்லை. சுற்றுலாத்துறையை ஸ்தம்பிக்கும் வகையில் ஒரு குண்டு கூட வெடிக்க வைக்கவில்லை. ஏனெனில், புலிகள் மேற்கத்திய நாடுகளை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. 

நீண்ட காலமாக இழுபட்ட தமிழ் - சிங்கள இன முரண்பாடு, சுற்றுலா முதலாளிகளின் எண்ணம் ஈடேற விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. அதாவது, ஒரு தமிழ்க் கிராமத்தின் வாழ்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டு, நிலங்கள் அபகரிக்கப் பட்டாலும், அவற்றை பயன்படுத்த முடியாத அளவிற்கு யுத்தம் நடந்து கொண்டிருந்தது. பாதிக்கப் பட்ட தமிழ் மக்கள் புலிகளின் பிரதேசங்களுக்குள் தஞ்சம் கோருவதும், பின்னர் அந்த மக்கள் மத்தியில் இருந்து போராளிகள் உருவாவதும் தொடர்கதையாக நடந்து கொண்டிருந்தது.

புலிகளின் அழிவிற்குப் பின்னர், தமிழர்களின் நிலங்களை அபகரித்தால் கேட்பதற்கு யாரும் இல்லை. பாதிக்கப் பட்டவர்கள் பின்தங்கிய பகுதிகளை சேர்ந்த ஏழைத் தமிழர்கள் என்பதால், தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுக்கும் அக்கறை இல்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாசிக்குடா, அறுகம் குடா, அம்பாறை, பொத்துவில் போன்ற பிரதேசங்களில், தமிழருக்கு சொந்தமான நிலங்கள் அபகரிக்கப் பட்டுள்ளன. 

அம்பாறையில் சில தமிழ்க் கிராமங்களில், சீருடை அணிந்த நபர்கள் குடிசை வீடுகளை கொளுத்தி, மக்களை வெளியேற்றி உள்ளனர். சிங்கள ஊடகங்கள் மட்டுமல்ல, தமிழ் ஊடகங்களும் கூட இந்த தகவல்களை தெரிவிக்காமல் மறைத்துள்ளன. ஏனெனில், வர்க்க ஒற்றுமை, இன ஒற்றுமையை விட மிகவும் உறுதியானது. 

கிழக்கு மாகாணத்தில், சிறிலங்கா அரச படைகளின் நில அபகரிப்பினால் பாதிக்கப் பட்டவர்கள், தமிழர்கள் மட்டுமல்ல. வில்பத்து சரணாலயத்தை அண்டிய 900 ஏக்கர் நிலங்களை, கடற்படையினர் அடாத்தாக பறித்துள்ளனர். சில சிங்களக் கிராமங்களும் அதற்குள் அடங்குகின்றன. கிழக்கு மாகாணத்தில் நிலமற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 

முன்னொரு காலத்தில், சிங்கள இராணுவம் தமிழர்களுக்கு என்ன கொடுமை இழைத்ததுவோ, அதையே தற்போது சிங்களவர்களுக்கும் செய்கின்றது. ஏனெனில், சிறிலங்காவில் இருப்பது வெறுமனே சிங்கள பேரினவாத இராணுவம் மட்டுமல்ல. பெரும் முதலாளிகளின் நலன்களைப் பாதுகாப்பதும் அதன் முக்கிய கடமை தான். 

ஈழப்போர் நடந்த காலங்களில், தமிழர்கள் மட்டுமே பாதிக்கப் பட்டனர். பல தமிழ்க் கிராமங்களில் வாழ்ந்த மக்களை வெளியேற்றிய அரச படையினர், அவற்றை சிங்களக் கிராமங்களாக மாற்றினார்கள். பிற்காலத்தில் போர் நடந்த காலத்தில், புலிகள் பழிவாங்கும் நடவடிக்கையாக சிங்களக் கிராமங்களை தாக்கினார்கள். இதன் மூலம், அரசு சிங்களவர்களையும், தமிழர்களையும் நிரந்தரமாகப் பிரித்து வைக்க முடிந்தது. 

2014, மார்ச் மாதம், என்றுமில்லாத அதிசயமாக, நிலமிழந்த தமிழ், சிங்கள கிராமவாசிகளின் ஒன்று பட்ட எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது. அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பாணமை, சாஸ்திரவெல, ராகம்வெல, உல்லா ஆகிய கிராமங்களை சேர்ந்த சிங்கள, தமிழ் மக்கள் தான் பெருமளவில் பாதிக்கப் பட்டிருந்தனர். 

போர் முடிந்த அடுத்த வருடம், 2010 ஆம் ஆண்டு, அவர்கள் வாழ்ந்த கிராமங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப் பட்டனர். நிலமிழந்த கிராம மக்கள், கொழும்பில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஆனால், அரசு சார்பான மனித உரிமைகள் ஆணைக்குழு, நிலமிழந்த மக்களின் போராட்டத்தை கவனத்தில் எடுக்கவில்லை.

தமிழ் மக்கள் மட்டுமல்லாது, சிங்கள மக்களும், காலங்காலமாக வசித்து வந்த கிராமங்களில் இருந்து விரட்டப் படும் காரணம் என்ன? இங்கே தான், சிங்கள பேரினவாதம், அமெரிக்க ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு அம்பலமாகின்றது. இலங்கையை, தாய்லாந்து போன்று உல்லாசப் பிரயாணிகளின் சொர்க்கபுரியாக்குவது தான் அவர்களது குறிக்கோள்.

சுற்றுலா நிறுவனங்கள் எதிர்பார்க்கும் வளங்கள் அத்தனையும் இலங்கையில் உள்ளன. இலங்கையின் அழகான கடற்கரைகள் உலகப் புகழ் பெற்றவை. மேலைத்தேய உல்லாசப் பிரயாணிகள் பலருக்கு, இலங்கை ஒரு சொர்க்கபுரி. "கிழக்கு மாகாணக் கடற்கரைகள், அலை மேல் சறுக்கும் விளையாட்டிற்கு (surf) ஏற்ற இடம். உலகத் தரம் வாய்ந்தது." என்று USAID கூறுகின்றது. உள்ளூர் இளைஞர்களுக்கு சிறிது ஆங்கில மொழி அறிவைக் கொடுத்து, ஹோட்டல் பணியாளர்களாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறது.

அதாவது, நேரடியாகச் சொல்வதென்றால், சிறிலங்கா படையினரால் அபகரிக்கப் பட்ட நிலங்களில், சுற்றுலா விடுதிகள் கட்டப் படவுள்ளன. அவற்றில் வேலை செய்வதற்கு, நிலங்களை பறிகொடுத்த மக்களை பணியாளர்களாக பயன்படுத்திக் கொள்ளலாம். தாய்லாந்திலும், தென்னிலங்கையிலும் நடப்பதைப் போன்று, சுற்றுலாப் பயணிகள் அதிகரித்தால் பாலியல் தொழிலாளர்களும் பெருகி விடுவார்கள். முதலாளிகளின் இலாபவெறியை கருத்தில் கொண்டு, அது போன்ற தீய விளைவுகளை நாங்கள் கண்டுகொள்ளாமல் விட்டு விட வேண்டும்.

"மகிந்த ராஜபக்ச இனப் படுகொலையாளன். எப்படியும் அமெரிக்கா ஐ.நா.வில் தீர்மானம் போட்டு தண்டித்து விடும்..." என்று நாங்கள் வாய் கிழிய பேசிக் கொண்டிருந்தாலும், எதுவுமே நடக்காத காரணம் இது தான். மகிந்த சிந்தனையும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான். 

"புலிகள் இப்போதும் இருக்கிறார்கள். மீண்டும் போரிட வருவார்கள்..." என்றொரு பொய்யைக் கூறித் தான், பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய நில அபகரிப்புகளை நியாயப் படுத்துகிறார். ஆனால், அபகரிக்கப் பட்ட தமிழரின் நிலங்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கப் படுகின்றன என்ற உண்மையை மட்டும் கூற மாட்டார். மரத்தால் விழுந்தனை, மாடேறி மிதித்தது போல, தமிழர்களின் நிலங்களை அபகரிப்பதற்கு உலக வங்கியும் ஒத்துழைக்கிறது.

உலக வங்கி, அமெரிக்க அரசு, மகிந்த அரசு ஆகியன தமிழர்களை கூட்டாக சேர்ந்து ஒடுக்குகின்றன. இந்த நேரத்தில், நடுத்தர வர்க்க தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வலதுசாரி தமிழ்தேசியவாதிகள் சிலர், ஏகாதிபத்திய விசுவாசத்தை பின்வருமாறு தெளிவு படுத்துகின்றனர். அதாவது, "தமிழர்கள் நில உரிமைக்காக போராடவில்லையாம், தன்னைத் தானே ஆளும் அரசு அமைக்க போராடுகிறார்களாம்."

இதனால் அவர்கள் தெரிவிக்க விரும்பும் செய்தி இது தான்: "எங்களிடம் தமிழீழம் தந்திருந்தால், நாங்களே அந்த நிலங்களை அபகரித்துக் கொடுத்திருப்போம்!" அப்படி இல்லையென்றால், அபகரிக்கப் பட்ட தமிழரின் நிலங்களை சுற்றுலா ஸ்தலமாக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்பாக அவர்களது நிலைப்பாடு என்ன? 

"தமிழீழத்தை ஆளப் போகும் தமிழர்களும்", உலக வங்கியிடம் தானே கடனுதவி கேட்டு கையேந்தப் போகிறார்கள்? அப்போது இதே அம்பாறை நிலங்களை பறித்து பன்னாட்டு முதலாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, உலக வங்கி உத்தரவிட மாட்டாதா?

இங்கே கூறப்பட்டுள்ள விபரங்கள், மக்களிடம் இருந்து அந்நியப்பட்ட மேட்டுக்குடி பெரு மக்களுக்கு மட்டும் தான் புதினமாகத் தோன்றும். அம்பாறையில் வாழும் ஏழை உழைக்கும் வர்க்க தமிழர்கள், தமது  எதிரிகளை சரியாகவே எடை போட அறிந்து வைத்துள்ளனர். அதனால் தான் அவர்கள், நிலமிழந்த சிங்கள மக்களுடன் சேர்ந்து போராடினார்கள். 

அம்பாறையில் வாழும் உழைக்கும் வர்க்க தமிழ் மக்கள், தமது பொது எதிரியான, சிறிலங்கா தரகு முதலாளிய அரசுக்கு எதிராக மட்டுமல்லாது, உலகவங்கி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவ்வளவு காலமும், இனவாத சக்திகளின் சொல்லைக் கேட்டு, சிங்கள, தமிழ் உழைக்கும் வர்க்க மக்கள் பிரிந்து தான் வாழ்ந்து வந்தனர். அதனால் அவர்கள் இழந்தது அதிகம்.

இவ்வளவு காலமும் இனவாதக் குட்டையை கலக்கிக் கொண்டிருந்த முதலைகளான பன்னாட்டு முதலாளிகள், சிறிலங்கா அரசின் பாதுகாப்புடன் தைரியமாக திரிகின்றனர். அவர்களை எதிர்ப்பதற்கு யாருமில்லை. எல்லோரும் தமிழனா, சிங்களவனா என்ற கயிறிழுப்புப் போட்டியில் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையை மறுகாலனியாக்குவதற்கு இதுவே சரியான தருணம்.


மேலதிக தகவல்களுக்கு:

  • USAID: Sri Lanka connecting regional economies, Assesment of Tourism in Eastern, Uva, and North Central provinces of Sri Lanka; http://www.bpa-srilanka.com/files/USAID-CORE-Tourism-Assessment_1_.pdf
  • Illegal Land Grabs By Sri Lanka Navy Destroys Wilpattu National Park; https://www.colombotelegraph.com/index.php/illegal-land-grabs-by-sri-lanka-navy-destroys-wilpattu-national-park/
  • Human Rights Commission Is Inactive: Villagers Of Panama Protest Land Grabbing; https://www.colombotelegraph.com/index.php/human-rights-commission-is-inactive-villagers-of-panama-protest-land-grabbing/

Saturday, September 13, 2014

சினிமா, காசு, பணம், துட்டு... இது தான் போலித் தமிழ் இன உணர்வு!


பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர், மணிரத்தினம் இயக்கிய "கன்னத்தில் முத்தமிட்டால்" என்ற திரைப்படம் வெளியாகியது. அது, இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டிருந்த காலத்தில், புலிகளின் போராட்டத்தை மையப் படுத்தி எடுக்கப் பட்ட படமாகும். அதனை இயக்கிய மணிரத்தினம் ஓர் இந்திய தேசியவாதி, இந்திய அரச ஆதரவாளர் என்பது இரகசியம் அல்ல. கன்னத்தில் முத்தமிட்டால் படமும் ஓர் அப்பட்டமான புலி எதிர்ப்புப் படம் ஆகும். அந்தப் படத்தின் கடைசிக் காட்சியில் வருவது போன்றே, ஈழப் போரின் இறுதி யுத்தமும் அமைந்தது ஒரு தற்செயலாக இருக்கலாம்.

கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் வெளியான நேரம், அதனை எல்லாத் தமிழர்களும் பார்க்க வேண்டும் என்று, புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் கூட கூறி வந்தனர். கனடாவில், டொரோண்டோ திரைப்பட விழாவில் காட்டப் பட்ட பொழுது, "குட்டி யாழ்ப்பாணம்" என்று அழைக்கப் படும் டொரோண்டோ மாநகரில் இருந்து எந்த எதிர்ப்புக் குரலும் எழவில்லை.

கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம், கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள திரையரங்குகளில் "ஹவுஸ் புல்" காட்சிகளாக காண்பிக்கப் பட்டது. அதன் வீடியோ டிவிடிக்கள் அமோகமாக விற்பனையாகியது. ஐரோப்பா, கனடாவில் கன்னத்தை முத்தமிட்டால் படத்தை விநியோகம் செய்தவர்கள், விற்றவர்கள், அனேகமாக புலி ஆதரவாளர்கள் தான். இது குறித்து எந்தவொரு போலித் தமிழ் இன உணர்வாளரும் விமர்சிக்கவில்லை. எந்தவொரு "மாற்றுக்"கருத்தாளரும் எதிர்ப்புக் காட்டவில்லை. ஏனென்றால், நாய் விற்ற காசு குரைக்காது என்பது போல புலி விற்ற காசும் கடிக்காது.

தமிழ் சினிமா என்பது, தமிழ் நாட்டில் மட்டுமல்லாது, புலம்பெயர்ந்த நாடுகளிலும் வணிக ரீதியாக அதிக இலாபம் தரும் தொழிற் துறையாக கருதப் படுகின்றது. கடந்த இருபதாண்டு காலமாக, தமிழகத்தில் வெளியாகும் பிரபல நாயகர்களின் புதுப் படம், அதே காலத்தில் புலம்பெயர்ந்த நாடுகளிலும் திரையிடப் படும். அவை எல்லாம் வணிகப் படங்கள் தான்.

தமிழகத்தில் வெளியான ஒரு சில நல்ல தரமான படங்களை, புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் திரையரங்குகளில் கண்டு களிக்க முடியாது. எத்தனை வருடம் காத்திருந்தாலும், அதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால், எந்தவொரு விநியோகஸ்தருக்கும் அதிலே அக்கறை கிடையாது. என்ன செய்வது? தரமான தமிழ்ப் படங்களை, டிவிடியில் அல்லது இணையத்தில் மட்டுமே பார்க்க முடியும்.

மேற்கத்திய நாடுகளில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர்கள் பலர் ஈழத் தமிழர்கள் தான். அவர்கள் யாரும் அந்த நல்ல படங்களின் பெயர்களைக் கூட கேள்விப் பட்டிருக்கவில்லை என்பது கவலைக்குரியது. மேற்கத்திய நாடுகளில், தமிழகப் படங்களை காசு கொடுத்து பார்க்கும் இரசிகர்களில் பெரும்பான்மையானவர்களும் ஈழத் தமிழர்கள் தான்.

ஒரு தசாப்த காலமாகவே, புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத் தமிழ் செல்வந்தர்கள் பலர், தமிழ்ப் படத் தயாரிப்புகளில் முதலிட்டு வருகின்றனர். அவை எல்லாம் வணிகப் படங்கள் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. அந்த முதலீட்டாளர்கள் எவராவது, ஈழத் தமிழரின் அவலத்தை தத்ரூபமாக எடுத்துக் காட்டும் கலைப் படம் ஒன்றில் முதலிட்டிருக்க முடியும். ஆனால், செய்யவில்லை. அப்படிச் செய்ய வேண்டும் என்று, "மாற்றுக்" கருத்தாளர்களும், போலித் தமிழ் இன உணர்வாளர்களும் எதிர்பார்க்கவுமில்லை.

உலகம் முழுவதும் வாழும் பெரும்பாலான தமிழர்களால், ஒரு காலத்தில் "அடுத்த தேசியத் தலைவர்" ஸ்தானத்தில் வைத்து மதிக்கப்பட்ட சீமான் ஒரு பிரபலமான சினிமா இயக்குனர். அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னர், தமிழ் தேசிய அரசியலை மிகச் சரியாக சித்தரிக்கும் ஒரு திரைப்படத்தை தயாரித்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. சீமான் அப்படிச் செய்ய வேண்டும் என்று, "மாற்றுக்" கருத்தாளர்களும், போலித் தமிழ் இன உணர்வாளர்களும் எதிர்பார்க்கவுமில்லை.

ஒரு சிங்கள இயக்குனரான பிரசன்ன விதானகே, தமிழகத்தில் உள்ளவர்களுக்கு அறிமுகமில்லாதவராக இருக்கலாம். ஆனால், ஈழத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும், புலி ஆதரவு அரசியலை ஏற்றுக் கொண்ட பலருக்கு ஏற்கனவே அறிமுகமானவர். புலி ஆதரவு ஊடகங்களில் அவரது திரைப் படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விமர்சனங்கள் எழுதப் பட்டதும் ஒரு காரணம்.

பிரசன்ன விதானகே சிங்களத் திரைப்படங்களை மட்டும் தயாரிக்கும் ஒரு சிங்கள இயக்குனர் என்பதால், சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் தான் ஒரு திரைப் படத்தை தயாரிப்பார். அந்த உண்மையை புலிகளும் புரிந்து கொண்டிருந்தனர். அதனால், அவரிடம் இருந்து அதிகமாக எதையும் எதிர்பார்க்கவில்லை.

பிரசன்ன விதானகேயின் திரைப்படம் தமிழ்நாட்டில் காட்டப் பட்ட உடனே, போலித் தமிழ் தேசியர்கள் பலருக்கு திடீர் தமிழ் இன உணர்வு பொங்கி எழுந்தது. பிரசன்ன விதானகே இப்படித் தான் படம் எடுக்க வேண்டும் என்று, ஆளாளுக்கு அறிவுரை சொல்லத் தொடங்கி விட்டனர். இது, "ஒருவர் தனது அரசியல் கருத்துக்களை இன்னொருவரின் தலைக்குள் திணித்து, தன்னை மாதிரியே பேச வேண்டும் எனும் எதிர்பார்ப்பு" ஆகும். அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அவர்கள் சொல்வது போல யாருமே படம் எடுக்க முடியாது. குறிப்பாக சிங்களப் பிரதேசங்களில் அப்படி ஒரு படம் ஓட முடியாது.

சிறிலங்கா அரசு உடனே அதனை "புலி ஆதரவு படம்" என்று கூறி முத்திரை குத்தி தடை செய்து விடும். சுதந்திரமாக ஓட விட்டாலும், அது சிங்கள சினிமா இரசிகர்களினால் ஏற்றுக் கொள்ளப் படும் என்று கூற முடியாது. குறிப்பாக, புலிகளின் அரசியல் நிலைப்பாட்டை ஆதரிப்பதும், தமிழீழம் என்ற தனிநாடு பிரிவதை ஆதரிப்பதும், பெரும்பான்மை சிங்கள மக்களினால் இன்றைக்கும் நிராகரிக்கப் பட்டு வரும் கருத்துக்களாக உள்ளன. ஆகவே, அப்படி எந்த எண்ணமும் தோன்றாதவாறு திரைப் படம் தயாரிக்க வேண்டும். முடியுமா? இது கத்தி மேல் நடப்பதற்கு ஒப்பானது.

தமிழ் நாட்டில் நிறைய "தீவிரவாதிகள்" பற்றிய சினிமாக்கள் வெளியாகி உள்ளன. இன்று வரையில், ஏதாவது ஒரு திரைப் படத்திலாவது, "தீவிரவாதிகள்" பிரதிநிதித்துவப் படுத்தும் மக்களின் உணர்வுகள் வெளிப்படுத்தப் படவில்லை. அவர்களது அரசியல் அபிலாஷைகள் புறக்கணிக்கப் பட்டு வந்துள்ளது. அந்த சமூகத்தின் அரசியல் கோரிக்கைகள் கூட தெரிவிக்கப் படுவதில்லை. விஜயகாந்த், அர்ஜுனின் படங்கள் மட்டுமல்லாது, மணிரத்தினத்தின் ரோஜா, கமலின் விஸ்வரூபம் ஆகியன அரசுக்கு சார்பான பிரச்சாரப் படங்களாகவே வெளிவந்தன.

அரச படைகள் புரிந்த போர்க்குற்றங்களை மறைத்து, விடுதலைக்காக போராடுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து வந்தன. அந்த திரைப்படங்கள் வெளியான நேரம், இலட்சக் கணக்கான தமிழ் இரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர். போலித் தமிழ் இன உணர்வாளர் யாரும், அந்தத் திரைப்படங்கள் வெளியான நேரம் கண்டனம் தெரிவிக்கவில்லை. அது மட்டுமல்ல, அவர்களின் நண்பர்கள், உலகம் முழுவதும் அந்தத் திரைப்படங்களை விநியோகித்த போதிலும், ஒரு தடவையேனும் எதிர்ப்புக் காட்டவில்லை.

சினிமா என்பது பல கோடி பணம் புரளும் இலாபகரமான வியாபாரம். அதிலே போட்டி பொறாமைகளும் அதிகம். தமிழ்நாட்டில் தயாரிக்கப் படும் சினிமாக்கள் இலங்கையில் காண்பிக்கப் படும் அளவிற்கு, இலங்கையில் தயாரிக்கப் பட்ட சினிமா எதுவும் தமிழ்நாட்டில் ஓடவில்லை. ஈழத்துக் கலைஞர்கள் எந்தளவு திறமையானவர்களாக இருந்தாலும், தமிழ்நாட்டில் மதிக்கப் படுவதில்லை. இது போன்ற ஏராளமான குறைகள் ஈழத் தமிழர்கள் மத்தியில் உண்டு. புலம்பெயர்ந்த தமிழர்களில் வசதி படைத்த பிரிவினர், ஈழத்தில் வாழும் கலைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து திரைப் படம் தயாரிக்க முன்வரவில்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் மட்டுமே துணிந்து களத்தில் இறங்கினார்கள்.

பெரும்பாலான புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் முதலீட்டாளர்கள், திரும்பத் திரும்ப தமிழ் நாட்டில் தயாராகும் வணிகப் படங்களில் மட்டுமே முதலிட்டு வருகின்றனர். அதற்கு காரணம் பணம், பணம், பணம் மட்டுமே. தமிழக சினிமாத் தொழிற் துறையினுள் நடக்கும் வர்த்தகப் போட்டிகள், பொறாமைகள், காட்டிக் கொடுப்புகள், கவிழ்ப்புகள், சுத்துமாத்துகளை மறைப்பதற்காக, பலர் "தமிழ் தேசிய" அரசியல் பேசுகின்றார்கள். இது வணிகம் சார்ந்த அரசியல். தமிழ் இனத்தின் நலன்களை விட, தமது வணிக நலன்களே தமிழ் முதலாளிகளுக்கு முக்கியமானவை. போலித் தமிழ் இன உணர்வாளர்களுக்கும், பல "மாற்றுக்" கருத்தாளர்களுக்கும் இந்த உண்மை தெரியும். சமூகத்தில் பிழைக்கத் தெரிந்தவர்கள் அப்படித் தான் வாழ வேண்டும்.

ஒரு திரைப்படம் தயாரித்து தமிழீழப் புரட்சியை உண்டு பண்ணி விடலாம் என்ற நம்பிக்கை யாரிடமும் கிடையாது. பெரும்பாலான தமிழ் இரசிகர்களும் பொழுதுபோக்குக்காக மட்டுமே பார்த்து இரசிக்கிறார்கள். சினிமாவில் இருந்து வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொள்ளும் எண்ணமும் அவர்களிடம் கிடையாது. பிறகு எதற்காக, சில குறிப்பிட்ட சினிமாப் படங்களைப் பற்றி மயிர் பிளக்கும் விவாதம் நடத்துகிறார்கள்?

வேறொன்றுமில்லை. "இது நம்ம ஏரியா, இதற்குள் நுளையாதே!" என்பதை கொஞ்சம் "நாகரிகமாக" எடுத்துக் கூறுகிறார்கள். பல தசாப்தங்களாக, சினிமாத் தொழிற் துறை, தமிழ்நாட்டு மாநிலத்திற்கு அதிக வருமானம் ஈட்டித் தருகின்றது. பலருக்கு அதனால் ஆதாயம் கிடைப்பது புரிந்து கொள்ளத் தக்கது. வலதுசாரி தமிழ் தேசியவாதத்திற்கும், தமிழ் முதலாளியத்திற்கும் இடையிலான உறவு அந்த இடத்தில் மிகவும் இறுக்கமாக உள்ளது. அந்த உறவு தான், இன்று சமூகத்தில் பரப்பப் படும் பல அரசியல் கருத்துக்களின் ஊற்றுக்கண்.


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
1. "லைக்கா தமிழனை சுரண்டினால் குற்றமில்லை!" - போலித் தமிழ் இன உணர்வாளர்கள்
2. உழைக்கும் வர்க்கத்தின் உயர்வை மறுக்கும் தமிழ் தேசியம் போலியானது
3.அவர்கள் முள்ளிவாய்க்காலுக்காக அழவில்லை, இஸ்ரேலுக்காக அழுகிறார்கள்!