Showing posts with label ஈழத் தமிழர்கள். Show all posts
Showing posts with label ஈழத் தமிழர்கள். Show all posts

Friday, September 29, 2023

ஏன் 80% ஈழத் தமிழர்கள் தூய தமிழ்ப் பெயர் வைக்கவில்லை?

 

"தாய் மொழியில் பெயர் வைக்க வேண்டும்"- சீமான்.

புலிகளின் காலத்திலும் அப்படி ஒரு சட்டம் இருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் பிறந்த நிறையப் பிள்ளைகளுக்கு 80% தமிழ்ப் பெயர் கிடையாது.

முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்த பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமக்கு பிறந்த குழந்தைகளுக்கு தூய தமிழ்ப் பெயர் சூட்டவில்லை. யாருக்காவது சந்தேகமிருந்தால் 90 களுக்கு பின்னர் பிறந்தவர்களின் பெயரைக் கேட்டுப் பாருங்கள். பெரும்பாலான பெயர்கள் "ஸ், ஷ்" போன்ற சத்தம் வரும் வகையில் எந்த அர்த்தமுமில்லாத பெயர்களாக இருக்கும். ஏனென்றால் 80 களில் அவ்வாறான பெயர்கள் வைப்பது ஒரு நாகரிகமாக கருதப் பட்டது. அந்தப் பழக்கம் இன்று வரை தொடர்கின்றது.

புலிகளின் ஆட்சிக் காலத்தில், அவர்களால் ஆளப்பட்ட தமிழ் மக்கள் தமது பிள்ளைகளுக்கு தூய தமிழ்ப் பெயர்களை வைக்க வேண்டுமென்பது அவர்களுடைய விருப்பமாக இருந்தது. அதற்காக தூய தமிழ்ப் பெயர்களின் பட்டியல் கொண்ட நூல்களும் வெளியிட்டனர். அது மட்டுமல்ல தமது தமிழீழ வைப்பகத்தில் குழந்தையின் பெயரில் கணக்குத் தொடங்கி 500 ரூபா வைப்பிலிடுவதாகவும் அறிவித்தனர்.

இருப்பினும் புலிகளின் வேண்டுகோளை (கட்டாயம் அல்ல) ஏற்றுக் கொண்டவர்கள் மிக மிகக் குறைவு. அநேகமாக புலிகள் மீது விசுவாசமான, அல்லது அடித்தட்டு வர்க்க குடும்பத்தினர் சிலர் தமிழ்ப் பெயர் வைத்தனர். ஆனால் பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை என்பது தான் உண்மை.

இதற்கு பின்வரும் 3 காரணங்களை குறிப்பிடலாம்:

1. முன்னர் சொன்ன மாதிரி தமிழ்ப் பெயர் வைப்பது "நாகரிகம் அல்ல" என நினைத்தனர். அதற்கு மாறாக எண் சாஸ்திரப் படி, சமஸ்கிருத ஒலியுடன் பெயர் வைப்பதே நாகரிகம் என நம்பினார்கள். இந்தப் போக்கு புலிகளின் கட்டுப்பாடு வருவதற்கு முன்னரே இருந்து வந்தது. இப்போதும் பரவலாக உள்ளது.

2. பலர் தவறாக நினைப்பது மாதிரி, அல்லது அரசியல்வாதிகள் சித்தரிப்பது மாதிரி, அரசியல்ரீதியாக பெரும்பாலான ஈழத் தமிழர்கள் "மொழிவெறியர்களோ" அல்லது "மொழிப் பற்றாளர்களோ" கிடையாது. ஆரம்ப காலத் தமிழ்த்தேசிய இயக்கத்தில் பிரிட்டிஷ் காலனிய விசுவாசம், அல்லது ஆங்கில மொழி மோகம் அதிகமாக இருந்தது. சுருக்கமாக, சிங்கள ஆளும் வர்க்கத்துடனான அதிகாரப் போட்டியின் விளைவாக எழுந்தது தான் ஈழத் தமிழ்த்தேசியம். புலம்பெயர்ந்த நாடுகளில் அடையாளம் தேடும் கலாச்சார மறுமலர்ச்சியுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. புலம்பெயர்ந்து தமிழ் வளர்ப்பவர்கள் கூட தமது பிள்ளைகளுக்கு தமிழ்ப்பெயர் வைப்பதில்லை. மிகத் தீவிரமாக புலிகளை ஆதரிக்கும் குடும்பங்களிலும் இது தான் நிலைமை. தமிழ்ப் பெயர் மிக அரிது.

3. ஈழத்தமிழ் சமூகத்தில் தமிழ்ப் பெயர்கள் வைப்பது திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட விளைவுகளில் ஒன்று. அநேகமாக தி.க., தி.மு.க. வினரின் கொள்கைகளால் கவரப்பட்டவர்கள் மட்டுமே தமது பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டினார்கள். அது வரையில் இந்து மத தெய்வங்களின் பெயரை சூட்டும் வழக்கம் பொதுவாக இருந்தது. யாழ்ப்பாணத் தமிழ் சமூகத்தில், குறிப்பாக ஆதிக்க சாதியினர் எந்தளவு தூரம் மிகத் தீவிரமாக திராவிட இயக்கத்தை எதிர்த்து வந்தனர் என்பதை நான் இங்கே விளக்கத் தேவையில்லை. அவர்களது வாரிசுகள் இப்போதும் திராவிட எதிர்ப்பு அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். அதனால், ஆதிக்க சாதி மனப்பான்மை கொண்டவர்கள் தமிழ்ப் பெயர் வைப்பதை ஒரு "திராவிட ஊடுருவலாக" கருதி நிராகரித்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

இப்போது வருவார்கள். "புலிகள் அது செய்தார்கள்... இது செய்தார்கள்..." என்று சொல்லிக் கொண்டு வருவார்கள். இயக்கத்தில் போராளிகளுக்கு தமிழ்ப் பெயர் வைத்ததை எடுத்துக் காட்டுவார்கள். அது பேச்சு மொழியில் "இயக்கப் பெயர்" (nom de guerre) என்று அழைக்கப் படும். அதாவது, உலகில் எந்த நாட்டிலும் தலைமறைவாக செயற்படும் ஆயுதமேந்திய அமைப்பினர் ஒரு மாற்றுப் பெயரை தேர்ந்தெடுப்பார்கள். அது முற்றிலும் வேறுபட்ட விடயம். அதைப் பற்றி நாங்கள் இங்கே பேசவில்லை. சாதாரண பொது மக்கள் தமக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு என்ன பெயர் வைத்தார்கள் என்பது தான் கேள்வி.

இதை நிரூபிக்க அதிக சிரமப் பட வேண்டியதில்லை. சமூக வலைத்தளங்களில் சொந்தப் பெயரில் கணக்கு வைத்துள்ள இளைய தலைமுறையினரில் எத்தனை பேருக்கு தமிழ்ப் பெயர் உள்ளது? விரல் விட்டு எண்ணலாம். இன்று முதல் அவதானித்துப் பாருங்கள்.

Monday, March 01, 2021

ஈழப்போர் காலத்திலும் சாதி பார்த்த பாதித் தமிழர்கள்

த‌மிழ‌ர் என்றொரு இன‌முண்டு. அவர்க‌ளுக்கு சாதி என்றொரு குண‌ம் உண்டு.

 "சிங்க‌ள‌வ‌ர் சாதி பார்த்து அடித்த‌ன‌ரா?" என்றெல்லாம் புத்திசாலித்த‌ன‌மாக‌ கேள்வி கேட்க‌லாம். ஆனால், ந‌டைமுறை வாழ்வில், எத்த‌னை பேர‌ழிவுக‌ள் வ‌ந்தாலும் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ த‌மிழ‌ர்க‌ள் சாதிவாரியாக‌த் தான் பிரிந்திருப்பார்க‌ள்.

கொழும்பில், இன‌க்க‌ல‌வ‌ர‌ம் ந‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில், அக‌திக‌ளான‌ கொழும்புத் த‌மிழ‌ர்க‌ள் த‌ங்கியிருந்த‌ முகாம்க‌ளில் சாதி வாரியாக‌ பிரிந்திருந்த‌னர். (1983 கலவரத்தில் அந்த நிலைமை இருக்கவில்லை. 1977 ம் ஆண்டு, பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி அகதி முகாமில் சாதி பார்த்த சம்பவம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.) ஈழ‌ப் போர் ந‌ட‌ந்த‌ கால‌த்தில், யாழ் குடாநாட்டில் உள்ள‌ வ‌லிகாம‌ம் பிர‌தேச‌த்தில் இருந்து இட‌ம்பெய‌ர்ந்து தென்ம‌ராட்சி சென்ற‌ அக‌திக‌ள் அங்கும் சாதிவாரியாக‌ பிரிந்து தான் த‌ங்கி இருந்த‌ன‌ர். இன்று போர் முடிந்த‌ பின்ன‌ரும் யாழ் குடாநாட்டில் மூட‌ப் ப‌டாத‌ முகாம் ஒன்றில் கணிச‌மான‌ அள‌வு அக‌திக‌ள் வாழ்வ‌த‌ற்கும் சாதி தான் கார‌ண‌ம்.

ஈழப்போரின் உச்சகட்டத்தில் கூட, யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருந்த ஈழத்தமிழர்கள் சாதிவாரியாக பிரிந்திருந்தனர். அங்கிருந்த ஆதிக்க சாதியினரான வெள்ளாளர்கள், சிங்கள இராணுவத்துடன் நட்பு பாராட்டி இணக்கமாக நடந்து கொண்டனர். அதே நேரம், தாழ்த்தப்பட்ட சாதியினர் பகைவர்களாக நடந்து கொண்டனர். பெரும்பாலான புலிப்போராளிகள் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். இந்தத் தகவல், யாழ் நகரை கைப்பற்றும் போரில் ஈடுபட்ட மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன எழுதிய "நந்திக்கடல் நோக்கிய பாதை" எனும் நூலில் எழுதப் பட்டுள்ளது.

1995 ம் ஆண்டு, அதற்கு முன்பு பல வருடங்களாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்த யாழ் குடாநாட்டை கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா இராணுவம் படையெடுத்தது. பலாலி முகாமில் இருந்து வெளியேறிய இராணுவம் புலிகளின் எதிர்த் தாக்குதல்களை சமாளித்து, உரும்பிராய், கோண்டாவில் வழியாக யாழ் நகரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. "ஒப்பெறேஷன் ரிவிரெச" எனப் பெயரிடப்பட்ட போர் நடவடிக்கை உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது.

அப்போது புலிகள், யாழ் குடாநாட்டின் மேற்குப் பகுதியான வலிகாமம் பிரதேசத்திலிருந்த மக்கள் அனைவரையும் வெளியேறி, குடாநாட்டின் கிழக்கே இருந்த புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்லுமாறு உத்தரவிட்டனர். அதற்கமையை 95% மக்கள் வெளியேறி விட்டனர். ஆனால், 5% மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டனர். அவர்கள் கோயில்கள், பாடசாலைகளில் தஞ்சம் புகுந்தனர். அவ்வாறு இடம்பெயர்ந்த அகதிகளுடனான தனது அனுபவம் பற்றி கமால் குணரட்ன இந்த நூலில் பின்வருமாறு எழுதி இருக்கிறார்:

//யாழ் நகர் சென். பற்றிக்ஸ் கல்லூரி இடம்பெயர்ந்தோர் முகாமாக இருந்தது. அங்கு தங்கியிருந்த சுமார் ஐநூறு பேர் மத்தியில் சாதிய பாகுபாடுகள் எழுந்தன. உயர்சாதி வெள்ளாளர்கள் தாழ்ந்த சாதியினராக கருதப்பட்ட கள்ளிறக்குவோர், மீனவர்கள், துணி துவைப்போர், முடி திருத்துவோர், சுத்திகரிப்போர் போன்றோருடன் ஒன்றாக சேர்ந்து சாப்பிட மறுத்தனர். அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து வீடியோவில் படம் பார்க்க கூட விரும்பாத அளவிற்கு தீவிரமாக இருந்தனர்!

இந்தப் பிரச்சினை எனது கவனத்திற்கு கொண்டுவரப் பட்ட நேரம் "நாசமாகப் போங்கள்!" என்று சொல்லத் தூண்டப் பட்டேன். இருப்பினும், உயர்சாதியினர் எமது நடவடிக்கைகளை பாராட்டி, எம்முடன் இணக்கமாக நடந்து கொண்ட படியால், கலாச்சார வித்தியாசங்களுக்கு மதிப்பளித்து இந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்க முடிவெடுத்தேன். தாழ்ந்த சாதியினராக கருதப் பட்டவர்களில் பெரும்பான்மையினர் எம்முடன் வெளிப்படையாகவே எதிரிகளாக நடந்து கொண்டனர். பெரும்பாலான தீவிரவாதிகள் (புலிப் போராளிகள்) அந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தமை ஒரு காரணமாக இருக்கலாம். அதனால், ஒரு தற்காலிக தீர்வாக, உயர்சாதியினரையும், தாழ்ந்த சாதியினரையும் வெவ்வேறு இடங்களில் தனித்தனியாகப் பிரித்து வைத்தோம்.//

- மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன (Road to Nandikadal, Page 366) 


இதைக் கண்டதும் சிலர் இப்படி ஒரு சாட்டுச் சொல்லி தப்பிக்கப் பார்ப்பார்கள்: //கமால் குணரட்ன ஒரு சிங்கள ராணுவத்தினை சேர்ந்த ஒரு சிங்களன் , ஆகவே இது தமிழர்களை பிரிக்கும் சூழ்ச்சிகளில் ஒன்றாகவும் இருக்கலாம்...// 

யாழ்ப்பாண தமிழர்கள் மத்தியில் நிலவும் மோசமான சாதிப் பாகுபாடு உலகறிந்த விடயம். அதை கமால் குணரட்ன சொல்லித்தான் எமக்கு தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர் பிறப்பதற்கு முன்பிருந்தே யாழ்ப்பாண சமூகம் இப்படித்தான் இருந்து வருகின்றது. சாதிவெறியன் ஆறுமுகநாவலருக்கு யாழ் நகரில் சிலை வைத்திருப்பதே ஒரு சிறந்த ஆதாரம்.

மேலும், இந்த நூல் வெளிவந்த காலத்தில்(2016), "புலிகளின் தலைவர் பிரபாகரனை மெச்சும் தகவல்கள்" இருந்ததாக சொல்லி, தமிழ் ஊடகங்கள், இணையத்தளங்கள் நந்திக்கடல் பாதை நூலுக்கு புகழாரம் சூட்டின. அன்று அவை பரப்பிய தகவல் இது:
//விடுதலைப் புலிகள் இயக்கம் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாக மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரிடம் எதிர்பார்க்கப்படாத அதிகபட்ச நேர்மையை வெளிப்படுத்தியிருக்கிறது....இராணுவத்தினருக்கு மூன்று தசாப்தங்களாக சவால் மிக்க எதிரியாக விளங்கியிருந்த போதிலும் பிரபாகரனின் பண்புகள் தொடர்பாக மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன நேர்மையாகவே கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.// (பார்க்க: எதிரியையும் மெச்ச வைத்த புலிகளின் தலைமைத்துவம்

அ.யேசுராசா போன்ற‌ மெத்த‌ப் ப‌டித்த‌ க‌ல்வியாள‌ர்க‌ள் கூட‌ இவ்வாறு அப‌த்த‌மாக‌ப் பேசுகின்ற‌ன‌ர்: //ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளுக்குள் சாதிப் பிரிவினை, வ‌ர்க்க‌ப் பிரிவினை உண்டாக்குவ‌து சிங்க‌ள‌வ‌னின் சூழ்ச்சி!//

மூளை இருந்தால் யோசித்துப் பார்க்க‌ வேண்டும். எவ‌னாவ‌து க‌ண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு க‌ல்லெறிவானா?

சிங்க‌ள‌ ச‌மூக‌த்திற்குள் சாதிய‌/வ‌ர்க்க‌ முர‌ண்பாடுக‌ள் இல்லையா? அந்த‌ விட‌ய‌ம் இன்னும் தெரியாது என்றால், உங்க‌ளுக்கு இன‌ப்பிர‌ச்சினை ப‌ற்றிய‌ அடிப்ப‌டை அறிவு கூட‌ இல்லை என்று அர்த்த‌ம்.

ஒரு பேச்சுக்கு, இது சிங்க‌ள‌வ‌னின் சூழ்ச்சி என்றே வைத்துக் கொள்வோம். ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் செவ்வாய்க் கிர‌க‌த்தில் வாழ‌வில்லை. அவ‌ர்க‌ளும் இல‌ங்கை என்ற‌ சிறிய‌ தீவுக்குள் வாழ்கிறார்க‌ள்.

ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் சாதிக‌ளாக‌, வ‌ர்க்க‌ங்க‌ளாக‌ பிரிந்து அடிப‌ட்டால், அது சிங்க‌ள‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் எதிரொலிக்காதா? அங்கேயும் சாதிய‌, வ‌ர்க்க‌ பிரிவினைக‌ள் உண்டாகாதா?

சாதிய‌, வ‌ர்க்க‌ முர‌ண்பாடுக‌ள் தீவிர‌ம‌டைந்தால், இல‌ங்கை முழுவ‌தும் க‌ல‌க‌ங்க‌ள் வெடித்து அர‌சு க‌விழும் நிலைக்கு செல்லாதா? சிறில‌ங்கா அர‌சைக் க‌விழ்ப்ப‌த‌ற்கு உங்க‌ளுக்கு விருப்ப‌ம் இல்லையா?

"சிங்க‌ள‌வ‌ர்க‌ளும், த‌மிழ‌ர்க‌ளும் த‌ம‌க்குள் முர‌ண்பாடுக‌ளை கொண்டிராத‌ இன‌ங்கள்" என்று நினைத்துக் கொள்வ‌த‌ற்குப் பெய‌ர் இன‌வாத‌ம். அது எந்த‌க் கால‌த்திலும் அர‌சுக்கு எதிரான‌து அல்ல‌. மாறாக‌, அர‌சைப் பாதுகாக்கிற‌து.

Thursday, May 25, 2017

ஈழத் தமிழராக இனம் மாறிய யாழ்பாணத் தெலுங்கு, கன்னட குடியேறிகள்


யாழ்ப்பாண‌த்தில் குடியேறி, ஈழ‌த் த‌மிழ‌ராக‌ ஒன்று க‌ல‌ந்த‌ தெலுங்க‌ர்க‌ள், க‌ன்ன‌ட‌ர்க‌ள் ப‌ற்றிய‌ விப‌ர‌ம். ஈழ‌த்த‌மிழ் ச‌மூக‌ம் ஆயிர‌மாயிர‌ம் ஆண்டுக‌ளாக‌ இன‌த்தூய்மை பேணி வ‌ருவ‌தாக‌ நினைப்ப‌து அறியாமை.

யாழ்பாணத்தில் தெலுங்கர்க‌ள், க‌ன்ன‌ட‌ர்க‌ள் குடியேறிய‌ இடங்க‌ளின் பெயர்கள், ஆந்திரா, க‌ர்நாட‌காவில் உள்ள‌ ஊர்க‌ளின் பெய‌ர்க‌ளுட‌ன் ஒத்துப் போவ‌தை க‌வ‌னிக்க‌வும்.

யாழ்ப்பாணத்தில் குடியேறிய‌ தெலுங்க‌ர்க‌ள், (க‌ன்ன‌ட‌ர்க‌ளும்) வேளாளர் பட்டத்தை ஏற்றன‌ர். ஆகையினால் இன்றைய‌ வெள்ளாள‌ சாதியின‌ர் "தூய‌ த‌மிழ‌ர்க‌ள் அல்ல‌" என்ப‌து குறிப்பிட‌த் த‌க்க‌து! (அவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் தீவிர‌ த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளாக‌ இருப்ப‌தில் ஆச்ச‌ரிய‌ம் இல்லை.)

ஆந்திர தேசம்: 
1. கஞ்சாம் - கஞ்சாம்பத்தை (சுழிபுரம்).
2. கதிரி - கதிரிப்பாய்.
3. நக்கன் தொட்டி - நக்கட்டி உடையாபிட்டி
4. வடுகு - வடுகாவத்தை (சுன்னாகம், தெல்லிப்பழை)
5. அந்திரன் - அந்திரானை (தொல்புரம் வட்டுக்கோட்டை)
6. வேங்கடம் - வேங்கடன் (சங்கானை).

கன்னட தேசம்: 
1. கன்னடி - மாவிட்டபுரம்
2. குலபாளையம் - குலனை (அராலி)
 3. சாமண்டிமலை - சாமாண்டி (மாவிட்டபுரம்)
4. மாலூர் - மாலாவத்தை (புன்னாலைக் கட்டுவன்).
5. பச்சூர் - பச்சந்தை (கட்டுவன், தொல்புரம்).
6. மூடோடி - முட்டோடி (ஏழாலை).

துளுவம் (க‌ர்நாட‌கா மாநில‌ம்): 
1. துளு - அத்துளு (கரவெட்டி).
2. துளுவம் -துளுவன் குடி (அளவெட்டி)

தமிழர் குடியேற்றம் தொண்டைமண்டலம், வட தமிழகம். தொண்டநாட்டு ஊர்ப்பெயரோடு கூடிய குடியேற்றங்கள்:

1. கச்சி – கச்சினாவடலி (சுன்னாகம்).
2. கம்பாநதி –கம்பாமூலை, கம்பாக்கடவை (மல்லாகம்).
3. ஆலங்காடு – ஆலங்குழாய் (சண்டிலிப்பாய்)
4. காரைக்கால் - காரைதீவு. குதரைக்காடு (இணுவில்). 
5. உடுப்பூர் – உடுப்பிட்டி
6. காஞ்சி – காஞ்சிக்கோட்டம் (மானிப்பாய்).
7. சோழிங்கள் - சோழங்கள் (கரணவாய்)
8. தொண்டை – தொண்டைமானாறு, தொண்டைமான் தோட்டம் (வட்டுக்கோட்டை),
9. மயிலம் - மயிலங்காடு (ஏழாலை.)

(ஆதார‌ம்: யாழ்ப்பாணக் குடியேற்றம்)

(த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி: விஜ‌ய் ப‌ல்ல‌வ‌)

Monday, September 05, 2016

ஆலாலசுந்தரம் முதல் அமிர்தலிங்கம் வரை : அரசியல் படுகொலைகளின் மர்மம்


நான் அப்போது யாழ் இந்துக் கல்லூரியில் மாணவனாக படித்துக் கொண்டிருந்தேன். எனது வகுப்புத் தோழன் ஒருவன், அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் ஆலால்சுந்தரத்தின் மகன். கைத்தொலைபேசி தொழில்நுட்பம் வளர்ந்திராத காலகட்டம் அது. இருப்பினும் யாழ்ப்பாணத்தில் எந்த அரசியல் கொலை நடந்தாலும், எமது கல்லூரிக்கு தகவல் கிடைத்து விடும்.

ஆகவே, 3 செப்டம்பர் 1985 நடந்த ஆலாலசுந்தரம் கொலையும் எமது கல்லூரிக்கு முதலில் தெரிந்ததில் வியப்பில்லை. மேலும் ஓர் உறவினர் வந்து ஆலாலசுந்தரத்தின் மகனை அழைத்துக் சென்ற பொழுது, அன்று அங்கு என்ன நடந்தது என்பதையும் அறிவிக்கத் தயங்கவில்லை. அன்று ஆலாலசுந்தரத்துடன், இன்னொரு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கமும் (இன்றைய புளொட் தலைவர் சித்தார்த்தனின் தந்தை) சுட்டுக் கொல்லப் பட்டனர். அதனால் இருவரின் மரண ஊர்வலமும் ஒன்றாக நடந்தது. இறுதி ஊர்வலத்தில் திரண்ட ஆயிரக் கணக்கான மக்களுக்குள், எமது பாடசாலை மாணவர்களும் சங்கமாகினர்.

அன்று நடந்த அரசியல் கொலைகளுக்குப் பின்னர், யார் அதைச் செய்திருப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில், 1984 - 1985 காலப்பகுதியில், யாழ் குடாநாடு முழுவதும் ஈழ விடுதலை இயக்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அன்று செல்வாக்கு செலுத்தி வந்த ஐந்து பெரிய இயக்கங்களுக்கு தெரியாமல் எந்தவொரு கொலையும் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆரம்பத்தில் புலிகள் மீதே சந்தேகம் விழுந்தது. ஏனெனில் 1982 ம் ஆண்டில், புலிகள் தான் பல கூட்டணி உறுப்பினர்களை கொன்றிருந்தனர்.

இருப்பினும், அன்று வரையில் பாராளுமன்ற உறுப்பினர் யாரும் கொல்லப் படவில்லை. டெலோ இயக்கமே அந்த அரசியல் படுகொலைகளுக்கு காரணம் என்பது சில நாட்களின் பின்னர் தெரிய வந்தது. ஆலாலசுந்தரத்தின் வீடு கல்வியங்காட்டில் இருந்தது. கல்வியங்காடு முழுவதும் டெலோவின் கோட்டையாக கருதப் பட்டது. ஆகவே டெலோவிற்கு தெரியாமல் அந்தக் கொலைகள் நடந்திருக்க வாய்ப்பில்லை. அடுத்த கேள்வி, அவர்கள் என்ன காரணத்திற்காக கொல்லப் பட்டனர்?

இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாதிரி, அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியும் மக்கள் மத்தியில் நற்பெயரை இழந்திருந்தது. இருப்பினும், பொது மக்களால் "திருடர்கள்" என்று அழைக்கப் பட்ட (அன்றைய தேசியத் தலைவர்) அமிர்தலிங்கம் போன்றோர் இந்தியாவில் (தமிழ்நாட்டில்) பாதுகாப்பாக வாழ்ந்து வந்தனர். யாழ்ப்பாணத்தில் தங்கி விட்ட, ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் போன்றோர் ஆயுதபாணி இயக்கங்களுக்கு ஆதரவாகக் காட்டிக் கொண்டனர்.

கொலை செய்யப் பட்ட ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் ஆகியோர் புலிகளுடனும், டெலோவுடனும் (பெரும்பாலும் வலதுசாரிய கொள்கை காரணமாக) நெருங்கிய நட்புறவு பேணி வந்தனர். அந்தக் காலத்தில் அது பெருமைக்குரிய விடயம். மேலும் டெலோ மாதிரி, கூட்டணியும் இந்தியா ஆதரவுக் கட்சி தான். அதனால், கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்வதால், யாருக்கு என்ன என்ன நன்மை ஏற்பட முடியும்?

மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு விடை காண நீண்ட காலம் எடுத்தது. இன்று வரையில் யாரும், அன்று நடந்த கொலைகளுக்கு உரிமை கோரவில்லை. இன்றுள்ள, டெலோவின் எஞ்சிய தலைவர்கள் கூட மௌனம் சாதிக்கின்றனர். ஆயினும், அன்றைய படுகொலைகள் இந்திய உளவுத்துறை RAW வினுடைய உத்தரவின் பேரில் நடந்ததாக சொல்கிறார்கள். அதற்கு என்ன காரணம்?

அந்த அரசியல் படுகொலைகள் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் திம்புப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. இந்தியாவின் அனுசரணையில், பூட்டானில் நடந்த பேச்சுவார்த்தைகளில், ஐந்து ஆயுதபாணி இயக்கங்களுடன், கூட்டணியும் கலந்து கொண்டது. இந்திய அரசு, "மிதவாதிகளான" கூட்டணி பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதை ஆதரித்தது. இருப்பினும், அன்று ஈழத் தமிழர்களின் ஏகபோக பிரதிநிதிகளாக கருதப் பட்ட கூட்டணியினர் தான், பலமான கோரிக்கைகளை முன்வைப்பார்கள் என்று இந்தியா அஞ்சியது, ஈழப் போர் தொடங்கிய 1983 ம் ஆண்டு வரையில், தமிழ்ப் பிரதேசங்களில் கூட்டணி தான் மிகப் பலமான அரசியல் சக்தியாக விளங்கியது.

ஜனநாயக வழியில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட கூட்டணியை விட, ஆயுதபாணி இயக்கங்களை இலகுவாக கட்டுப்படுத்தலாம் என்று இந்தியா நம்பியது. பலமான கூட்டணியை விட, பலவீனமான கூட்டணி தனது சொல்லுக்கு அடிபணிந்து நடக்கும் என்று கணக்குப் போட்டது. கொலை நடந்த நேரம், யாழ்ப்பாணத்தில் இருந்த அத்தனை கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொல்வதற்கு திட்டம் தீட்டப் பட்டதாம். ஆயினும், டெலோவின் வடமராட்சிப் பொறுப்பாளர் தாஸ் மறுத்து விட்டதால், அங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உயிர் பிழைத்தனர்.

ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளை தனக்கு சாதகமாக வளைக்கும் நோக்கில், சிலரை பலப்படுத்துவதும், வேறு சிலரை பலவீனப் படுத்துவதுமாக, இந்தியா பல சூழ்ச்சிகளை செய்து வந்துள்ளது. அண்மையில், ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக வெளியான நூலில் கூட (The Assassination Of Rajiv Gandhi; Neena Gopal), RAW உளவாளிகள், விடுதலைப் புலிகளின் தலைமை வரையில் ஊடுருவி இருந்ததை நிச்சயப் படுத்துகின்றது. புலிகள் மட்டுமல்லாது, ஒவ்வொரு ஈழ விடுதலை இயக்கத்திலும், தலைமையில் ஒரு RAW உளவாளி இருந்துள்ளார்.

1987 ம் ஆண்டு, இந்திய இராணுவம் ஈழப் பகுதிகளை ஆக்கிரமித்திருந்த காலத்தில் கூட, தமிழர் விடுதலைக் கூட்டணியை தனியாக இயங்க அனுமதிக்கவில்லை. இந்தியா வெளிப்படையாகவே தனக்கு விசுவாசமாக இருந்த EPRLF, ENDLF ஆகியவற்றை ஆதரித்தது. இந்தியா புதிதாக உருவாக்கிய ENDLF, பகிரங்கமாகவே இந்திய இராணுவத்தின் துணைப் படையாக இயங்கியது. இருப்பினும், அவர்களுக்கு ஈழத் தமிழரின் ஆதரவு பூஜ்ஜியமாக இருந்தது. ஆகவே, இந்தியா ஆயுதங்களை வழங்கி, EPRLF இணை முன்னுக்கு கொண்டு வந்தது.

இந்திய- இலங்கை ஒப்பந்தம் உருவாக்கிய வடக்கு-கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலிலும், அதற்குப் பிறகான தேர்தல்களிலும், தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரின் கீழ், முன்னாள் ஆயுதபாணி இயக்கங்களை சேர்த்துக் கொள்ளப் பட்டனர். அதாவது, பிற்காலத்தில் புலிகள் உருவாக்கிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னோடியாக அது இருந்தது. இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்திய இராணுவக் காலத்தில் EPRLF இன் யாழ் பிரதேசத் தலைவராக பல அடாவடித்தனங்களை புரிந்தவர். மண்டையன் குழு என்ற பெயரில் பல புலி உறுப்பினர்களை கொன்றவர்.

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர பகைவனும் இல்லை. ஆரம்ப காலத்தில், விடுதலைப் புலிகள் இயக்கம், தம்மை கூட்டணியின் இராணுவப் பிரிவு மாதிரி காட்டிக் கொண்டனர். பிற்காலத்தில், அவர்களாகவே தமது "தமிழ்த் தேசிய தலைவர்களுக்கு" எதிராகத் துப்பாக்கியைத் திருப்பினார்கள். சிங்கள இராணுவத்திற்கு எதிராக போரிட்டு வந்த புலிகள், இந்திய இராணுவத்தை விரட்டுவதற்காக சிங்கள இராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்தனர்.

பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலம், புலிகளுக்கும், அரசுக்கும் இடையிலான தேனிலவுக் காலம் என்று அழைக்கப் படுகின்றது. ஒரு காலத்தில் "பயங்கரவாதிகளாக" கருதியவர்களை, சிறிலங்கா அரசே அழைத்து அரவணைத்தது. இந்திய இராணுவத்துடன் போரிட்டுக் கொண்டிருந்த புலிகளுக்கு, தென்னிலங்கையில் அடைக்கலம் கொடுத்தது. அந்த நேரத்தில் தான் தமிழர் விடுதலைக் கூட்டணி முற்றாக அழித்தொழிக்கப் பட்டது.

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்: முன்னொரு காலத்தில், ஈழத் தமிழ் தேசியவாதிகளின் தேசியத் தலைவராக போற்றப் பட்டவர். பின்னொரு காலத்தில், அதே தமிழ்த் தேசியவாதிகளால் துரோகியாக தூற்றப் பட்டவர்!

எண்பதுகளின் தொடக்கத்தில், தமிழ் தேசியர்கள் அனைவரும், மிதவாதிகள், தீவிரவாதிகள் என்று இரண்டாகப் பிளவு பட்டனர். அமிர்தலிங்கம் வெளியே தன்னை ஒரு மிதவாதத் தலைவராக காட்டிக் கொண்டாலும், அவரும் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தவர் தான். ஏற்கனவே ஒரு தடவை, தனது கட்டுப்பாட்டின் கீழ் தனியாக ஆயுதபாணி இயக்கம் வைத்திருக்கும் முயற்சி தோல்வியில் முடிந்திருந்தது.

ஈழப்போர் தொடங்கியதும், அமிர்தலிங்கம் தலைமை தாங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஆயுதபாணி இயக்கங்களால் துரோகிகளாக தூற்றப் பட்டனர். யாழ்ப்பாணத்தில் பல கூட்டணி உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப் பட்டதால், தலைவர்கள் கொழும்பில் இருந்து கொண்டு அரசியல் நடத்தி வந்தனர்.

1989 ம் ஆண்டு, பிரேமதாச ஆட்சிக் காலத்தில், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கொழும்பு வந்த புலிகள், அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகிய இரண்டு கூட்டணி தலைவர்களையும் சுட்டுக் கொன்றனர். இந்திய இராணுவம் இருந்த காலத்தில் நடந்த அந்தக் கொலைகளுக்கு அரசும் உடந்தையாக இருந்தது. ஏனெனில், தீர்வுத் திட்டங்களில் இந்தியாவின் நம்பிக்கைக்கு பாத்திரமான தலைவராக என்றென்றும் அமிர்தலிங்கமே இருந்தார்.

அந்தக் காலத்தில் கூட்டணி ஒரு "புலி எதிர்ப்புக் கட்சியாக" இயங்கி வந்தாலும், தமது தலைவரின் மரணத்தை நினைவுகூர முடியாத அளவிற்கு அடங்கிக் கிடந்தனர். 2001 ம் ஆண்டு, "புலி எதிர்ப்புக் கட்சிகளை" ஒன்று சேர்ந்த புலிகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற புதிய கட்சியை உருவாக்கினார்கள். அதற்குப் பிறகு, சம்பந்தன் போன்ற கூட்டணியினர், தமது தலைவர் அமிர்தலிங்கத்தின் பெயரையும் மறந்து விட்டனர்.

தற்போது புலிகள் இல்லாத வெற்றிடத்தில், கூட்டமைப்பு தன்னை பழைய கூட்டணியின் தொடர்ச்சியாக காட்டிக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது. அன்றைய கூட்டணி அரசியலுக்கும், இன்றைய கூட்டமைப்பு அரசியலுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை என்பது ஒரு காரணம். அதே நேரம், ஒரு காலத்தில் துரோகிகளாக தூற்றப் பட்ட மிதவாதிகள், தமிழர்களின் தலைமையை கைப்பற்றிக் கொண்டதை பிரகடனம் செய்ய வேண்டி இருப்பது இன்னொரு காரணம். 


Monday, February 08, 2016

புலம்பெயர்ந்த புலி விசுவாசிகளின் கதையைக் கூறும் "கொலம்பஸின் வரைபடங்கள்"


புலிகளின் de facto தமிழீழ ஆட்சி நடந்த வட இலங்கையில் இருந்து, பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தென்னிலங்கையில் கொழும்பு நகரிலும், இந்தியாவிலும், மேற்கத்திய நாடுகளிலும் தமது புதிய வசிப்பிடங்களை தேடிக் கொண்டனர். இதனை அடிப்படையாகக் கொண்டு யோ.கர்ணன் எழுதியுள்ள "கொலம்பஸின் வரைபடங்கள்" என்ற நூல் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது.

யோ.கர்ணன் புலிகள் இயக்கத்தில் போராளியாக அல்லது உறுப்பினராக இருந்தவர். அவர் தான் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வெளியேற எத்தனித்து, அது கைகூடாமல் திரும்பி வந்த அனுபவத்தை எழுதி உள்ளார். அது மட்டுமல்லாது, இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் வரை நடந்த சம்பவங்களை விலாவாரியாக எழுதியுள்ளார்.

உண்மையில், இந்த நூலானது ஒரு மேற்கத்திய நாட்டவரான கோர்டன் வைஸ் எழுதிய "கூண்டு" நூலை ஒத்திருக்கிறது. இரண்டிலும் ஒரே மாதிரியான சம்பவங்கள் வருகின்றன. ஆனால், கூண்டு நூலை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய தீவிர புலி ஆதரவாளர்கள், கொலம்பஸின் வரைபடங்கள் நூலை தூற்றிக் கொண்டிருந்தனர். இந்த இரட்டை வேடத்திற்கு காரணம், கோர்டன் வைஸ் ஒரு மேற்கத்திய நாட்டு வெள்ளையர், யோ.கர்ணன் ஒரு தமிழீழத்து கறுப்பர் என்பது மட்டும் தான்.

ஈழத் தமிழருக்கு வாக்களிக்கப் பட்ட புனித பூமியான தமிழீழத்தில் இருந்து பணக்காரர்கள் மெல்ல மெல்ல வெளியேறிக் கொண்டிருந்தார்கள். இது இறுதிப் போர்க் காலத்தில் மட்டும் நடக்கவில்லை. அதற்கு முன்னரே, காலங்காலமாக நடந்து கொண்டிருந்தது. அந்த உண்மையை யோ.கர்ணன் கூட காலந் தாமதித்து தான் அறிந்து கொண்டார். (அவர் வயதால் இளையவர், கொள்கைப் பற்றுடன் புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருந்தார் என்பது ஒரு முக்கிய காரணம்)

இங்கே இன்னொரு வேடிக்கையையும் அவதானிக்கலாம். யோ. கர்ணனையும் அவரது இந்த நூலையும் தூற்றிக் கொண்டிருக்கும் "புலி விசுவாசிகளில்" பெரும்பான்மையானோர், ஒரு காலத்தில் இதே மாதிரியான நிலைமையில் வாழ்ந்தவர்கள் தான். ஒரு வேளை, யோ. கர்ணனின் வெளியேறும் முயற்சியும் வெற்றியடைந்து, அவர் இன்றைக்கு ஒரு மேற்கத்திய நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தால், அவரும் புலம்பெயர்ந்த புலி விசுவாசிகளில் ஒருவராக இருந்திருக்கக் கூடும். யார் கண்டது?

1986 ம் ஆண்டுக்குப் பின்னர் தான், வட இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் உருவாகியது. அப்போதே இளம் வயதினர், அதாவது 16 க்கும் 40 வயதிற்கும் இடைப்பட்டோர் வெளியேற தடை விதித்திருந்தனர். அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த குடும்பங்களுக்கும் வெளியேற அனுமதி அளிக்கவில்லை. பலருக்கு அடிக்கடி கொழும்பு செல்ல வேண்டிய தேவை இருந்தது. அரசாங்க உத்தியோகஸ்தர்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டுப் பணம் பெறுபவர்களும், கொழும்புக்கு செல்ல வேண்டி இருந்தது. அப்போதெல்லாம் ஒரு குடும்ப உறுப்பினரை பணயம் வைத்து விட்டு செல்ல வேண்டும். திரும்பி வராவிட்டால் அவருக்கு நெருக்கடி கொடுப்பார்கள்.

இத்தனை தடைகளையும் தாண்டி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு வெளியேறி, மேற்கத்திய நாடுகளில் குடியேறியவர்கள் யாராக இருக்கும்? பணக்காரர்கள் மற்றும் வசதி படைத்த மத்திய தர வர்க்கத்தினர். புலிகளின் உத்தியோகபூர்வ பிரச்சார சாதனங்கள், இவர்களை துரோகிகள் என்று தூற்றிக் கொண்டிருந்தன.

உண்மையிலேயே, அன்றிருந்த மேட்டுக்குடியினரில் பெரும்பான்மையானோர், புலிகளை அல்லது தமிழீழத்தை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. யுத்தத்திற்குள் அகப்படாமல் தங்களது உயிரையும், வர்க்க நலன்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, "கொலம்பஸின் வரைபடங்களுடன்" உலகம் முழுவதும் அகதிகளாக சென்றார்கள். 

தஞ்சம் கோருவதற்கு வசதியாக புதிய புதிய நாடுகளை கண்டுபிடித்தார்கள். அங்கே தமது வாழ்க்கையை உறுதிப் படுத்திக் கொண்டதும் என்ன செய்தார்கள்? அப்படியே 360 பாகையில் சுழன்று கரணம் அடித்து, தீவிர புலி ஆதரவாளர்களாக காட்டிக் கொண்டார்கள். இது அவர்களது கதை.

யோ. கர்ணன் தனது நூலுக்கு கொலம்பஸின் வரைபடங்கள் என்று தலைப்பிட்டதற்கு ஒரு காரணம் இருந்தது. ஈழப்போர் நடந்து கொண்ட இடங்களில் இருந்து வெளியேறிய தமிழர்கள், உலகம் முழுவதும் அடைக்கலம் கோரியதை அது உவமைப் படுத்துகின்றது. தானும் ஒரு வரைபடம் தயாரித்து, அது கைகூடாமல் போன அனுபவத்தை இந்த நூலில் எழுதி உள்ளார். சரித்திர கால கொலம்பஸின் கப்பல் பயணத்திற்கு பெருமளவு பணம் செலவானது. அதே போன்று, "தமிழ்க் கொலம்பஸ்கள்" ஒழுங்கு படுத்தும் பயணத்திற்கும் பெருமளவு பணம் செலவாகின்றது. அண்மைக் காலத்தில் இருபதாயிரம் டாலர் அல்லது யூரோ கட்டிக் கூட வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள்.

பணக்கார மேற்கத்திய நாடுகளில் வாழும் சாதாரண மக்களிடம், ஆயிரம் டாலர்/யூரோ கூட சேமிப்பில் இல்லை. அப்படி இருக்கையில், வறிய நாடான இலங்கையில் இருந்து, பெருமளவு பணம் செலவழித்து வெளிநாடு செல்வதற்கு யாரால் முடியும்? வசதி படைத்தவர்களால் மட்டுமே அது முடிந்த காரியம். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், தமது காணிகளை புலிகளிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறியோர் ஏராளம் பேருண்டு. 

வெளிநாடுகளுக்கு சென்றவர்களின் வசதியான வீடுகளில் புலிகளின் அலுவலகங்கள் இயங்கின. இதை எல்லாம் ஆண்டு அனுபவித்து வந்த பணக்கார வர்க்கம், விருப்பத்துடன் கொடுத்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? சொத்துக்கு ஆசைப்பட்டு யுத்தத்திற்குள் அகப்பட்டு சாவதை விட, மேற்கத்திய நாடொன்றுக்கு சென்றால் இதை விட அதிகமான சொத்து சேர்க்கலாம் என்று கணக்குப் போட்டார்கள். உண்மையிலேயே வெறுங்கையுடன் வெளிநாடு சென்று பணக்காரர்களாக திரும்பி வந்தவர்கள் ஆயிரம் உண்டு.

இறுதிப்போர் வரையில், புலிகளின் de facto தமிழீழத்தில் இருந்து, வசதி படைத்தோர் வெளியேறுவதற்கு புலிகள் அனுமதித்துக் கொண்டிருந்தார்கள். "பணம் கொடுத்தால் எல்லா வழிகளும் திறந்தன" என்று யோ.கர்ணன் இந்த நூலில் எழுதி இருக்கிறார்.

புலிகள் இயக்கத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள், இலட்சக் கணக்கான பணத்தை (லஞ்சமாக) வாங்கிக் கொண்டு, குடும்பத்துடன் வெளியேறிச் செல்ல அனுமதித்தார்கள். சிலநேரம் அந்தப் பணம் இயக்க நிதி என்ற பெயரில் "விரும்பிக்" கொடுக்கப் பட்டது.

இறுதிப் போரில் இராணுவம் சுற்றி வளைத்ததும், கட்டுப்பாட்டுப் பகுதிகள் சுருங்கியதும், போரை நடத்துவதற்கு போதுமான போராளிகள் இருக்காமையும் வெளியேற்றத்தை முற்றாகத் துண்டித்தது. குடும்பத்திற்கு ஒரு பிள்ளை கட்டாய இராணுவப் பயிற்சிக்கு வர வேண்டும் என்று புலிகள் அறிவித்தனர். அது ஏழை, பணக்காரர் எல்லோரையும் பாதித்தது. அப்போதும் சில பணக்காரர்கள் புலிகளுக்கு பணம் கொடுத்து தமது பிள்ளைகளை மீட்டு வந்தனர்.

கொள்கை எல்லாம் குறிப்பிட்ட எல்லை வரைக்கும் தான். கட்டாய இராணுவ பயிற்சியை ஊக்குவித்த புலிகளின் முக்கியஸ்தர்கள் கூட, தமது பிள்ளைகளை சேவையில் ஈடுபடுத்த விரும்பி இருக்கவில்லை. தனது பிள்ளையும் படையில் இணைக்கப் பட்டதை அறிந்து கொண்ட கவிஞர் புதுவை இரத்தினதுரை (முக்கிய தலைவர்களில் ஒருவர்), சம்பந்தப் பட்ட பொறுப்பாளரின் சட்டையை பிடித்து உலுக்கி, பிள்ளையை மீட்டு வந்தார். இந்தச் சம்பவத்தை யோ. கர்ணன் தனது நூலில் பதிவு செய்துள்ளார். 

யோ. கர்ணன் தனது நூலுக்கு கொலம்பஸின் வரைபடங்கள் என்று பெயரிட்டாலும், அதை எவ்வாறு சரித்திர கால கொலம்பஸ் உடன் ஒப்பிடுவது என்பதில் தடுமாறி உள்ளார். கொலம்பஸ் ஸ்பானிஸ் சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்கும் நோக்கில் புதிய நாடுகளை கண்டுபிடித்தார். ஆனால், ஈழத் தமிழர்களோ மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத்தை வளம் படுத்த அகதிகளாக சென்றனர். இரண்டையும் ஒப்பிட முடியாது.

இருப்பினும், யோ. கர்ணன் எதிர்பாராத ஒற்றுமை ஒன்றை இங்கே குறிப்பிட வேண்டும். கொலம்பஸ் வாழ்ந்த காலத்தில், ஸ்பெயின் நாட்டில் நூறாண்டுகளாக இருந்த, அரபு பேசும் இஸ்லாமிய மூர்களின் இராச்சியம் சுருங்கிக் கொண்டிருந்தது. அதன் மீது கத்தோலிக்க ஸ்பானிஷ் படைகள் ஆக்கிரமிப்பு போரை நடத்திக் கொண்டிருந்தன. மூர்களின் இராச்சியத்தை புலிகளின் de facto தமிழீழத்துடன் ஒப்பிடலாம். அதே மாதிரி, கத்தோலிக்க ஸ்பானிஷ் படைகளை, பௌத்த சிங்கள படைகளுடன் ஒப்பிடலாம்.

அரேபியர் மட்டுமல்லாது, ஸ்பானிஷ் மொழி பேசும் முஸ்லிம்கள், மற்றும் யூதர்கள், என்று பெருந்தொகையான அகதிகள், அன்று மூர்களின் இழந்து கொண்டிருந்த இராச்சியத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தார்கள். பிற்காலத்தில் அவர்கள் எல்லோரும் மூர்கள் என்று பொதுப் பெயரில் அழைக்கப் படவிருந்தனர். 1492 ம் ஆண்டு நடந்த இறுதிப் போரின் முடிவில், ஸ்பெயின் நாடு முழுவதும் கத்தோலிக்க மன்னராட்சி நிறுவப் பட்டது. அத்துடன் ஸ்பெயினில் இருந்த "மூர் தேசியம்" அழிந்து விட்டது என்று கருத முடியாது.

புலம்பெயர்ந்த ஸ்பானிஷ் மூர்கள், அல்ஜீரியாவில் "நாடு கடந்த மூர் இராச்சியம்" அமைத்துக் கொண்டனர். அங்கிருந்த படியே, தமது தாயகத்தை ஆக்கிரமித்த "கத்தோலிக்க- ஸ்பானிஷ் பேரினவாத அரசுக்கு" எதிராக போர் தொடுத்தார்கள். இறுதிப்போரில் ஸ்பெயினில் நடந்த "மூர் இனப்படுகொலை", அவர்களது அரசியல் பிரச்சாரங்களில் முக்கியத்துவம் பெற்றது. அந்தக் காலங்களில் ஐ.நா. மன்றம் எதுவும் இருக்கவில்லை. இருந்திருந்தால் ஜெனீவா சென்று ஸ்பெயினில் நடந்த மூர் இனப்படுகொலைக்கு நீதி கேட்டிருப்பார்கள்.

கிட்டத்தட்ட அதே மாதிரியான வரலாறு, 2009 ம் ஆண்டுக்குப் பின்னரான தமிழ் தேசிய அரசியல் அரங்கில் உருவானது. அந்த வருடம், அது வரை காலமும் புலிகளின் ஆட்சியில் இருந்த de facto தமிழீழமான வன்னிப் பிரதேசம், சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப் பட்டது. அதற்குப் பின்னர், அமெரிக்காவில் "நாடு கடந்த தமிழீழம்" உருவானது. மேற்கத்திய நாடுகளில் இயங்கிய புலி ஆதரவு அமைப்புகள், வன்னியில் நடந்த தமிழ் இனப்படுகொலையை தமது முக்கியமான அரசியல் கோரிக்கையாக வரித்துக் கொண்டன. இஸ்லாமிய மூர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி, அதே பாணியில் புலம்பெயர் தமிழ் தேசிய அரசியலை மீளுருவாக்கம் செய்தனர்.

முன்னாள் புலிப் போராளியான யோ. கர்ணன் எழுதியுள்ள கொலம்பஸின் வரைபடங்கள் நூலானது, "புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களின்" கதைகளை கூறுகின்றது. இது அவர்களது சொந்தக் கதை. அதனால் தான், அதை மற்றவர்கள் அறிந்து கொள்வதை விரும்பவில்லை. கொலம்பஸின் வரைபடங்கள் இருப்பதை அறிந்து கொண்டவர்களும், அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர்களும் அவர்கள் தான். கொலம்பஸ் கண்டுபிடித்த அமெரிக்காவில் நாடு கடந்த தமிழீழம் உருவானது ஒரு தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது.


கொலம்பஸின் வரைபடங்கள் நூலை வாங்குவதற்கு:

Monday, September 15, 2014

தமிழரின் நிலங்களைப் பறித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கும் மகிந்த அரசு


ஆழிப் பேரலைகள் (சுனாமி) இலங்கையின் கிழக்குக் கரைகளை தாக்கிய 2005 ஆம் ஆண்டு, உலகின் கவனம் முழுவதும் இலங்கை மீது திரும்பி இருந்தது. சுனாமியால் ஏற்பட்ட அனர்த்தத்தை பார்வையிட, இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் வந்திருந்தனர். அப்போது, வடக்கிலும், கிழக்கிலும், விடுதலைப் புலிகளின் நடைமுறை தமிழீழ அரசு இயங்கிக் கொண்டிருந்தது.

புலிகளும், புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களும், அமெரிக்க ஜனாதிபதிகள் சுனாமியால் பாதிக்கப் பட்ட முல்லைத்தீவுக்கு வருவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், முன்னாள் ஜனாதிபதிகளான கிளிண்டனும், ஜோர்ஜ் புஷ்ஷும், மாத்தறை போன்ற சிங்களப் பிரதேசங்களை பார்வையிட்டு விட்டு நாடு திரும்பினார்கள்.

சுனாமி அனர்த்த நிவாரணமாக, USAID மூலமாக, அமெரிக்க அரசு ஏராளமான நிதி வழங்கி இருந்தது. USAID, தனது நடவடிக்கைகளை சுனாமியுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. எதிர்காலத்தில், இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை சுற்றுலாத் துறைக்கு சாதகமாக பயன்படுத்துவது எப்படி என்று ஆராய்ந்து, கள அறிக்கை ஒன்றை தயாரித்தது. திருகோணமலை முதல் அம்பாறை வரையிலான, தமிழ்ப் பிரதேசங்களில் எந்தெந்த இடங்கள் சுற்றுலாத் துறையை வளர்க்க உதவும் என்று ஆராய்ந்துள்ளனர்.

ஆழிப்பேரலை அனர்த்தத்தை அடுத்து வந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக, மகிந்த ராஜபக்ச, "மகிந்த சிந்தனை" என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்து வெளியிட்டார். அதிலும், USAID குறிப்பிட்ட கிழக்கு மாகாணப் பிரதேசங்களில், சுற்றுலாத் துறையை வளம் படுத்துவது பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. இதெல்லாம் தற்செயலாக நடந்திருக்குமா?

அமெரிக்க பின்னணியில், நோர்வே அனுசரணையில், சிறிலங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப் படாமல் காலம் கடந்து கொண்டிருந்தது. 2004 ஆம் ஆண்டு, சுனாமி அனர்த்தம் நடப்பதற்கு முன்னர், இரண்டு தரப்பினரும் எந்த விதமான சமரச உடன்படிக்கைக்கும் வரவில்லை.

சுனாமி ஏற்படுத்திய பேரழிவுகள் காரணமாக, அரசினதும், புலிகளினதும் போரிடும் ஆற்றல் வெகுவாகக் குறைத்திருந்தது. அந்தத் தருணத்தில், பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் P-TOMS எனும் உடன்படிக்கை எட்டப் பட்டது. சுனாமி நிவாரணத்தை நிர்வகிக்கும் பெயரில், சிறிலங்கா அரசும், புலிகளும் ஒரு சமரசத்திற்கு கொண்டு வரும் நோக்கிலான, அமெரிக்காவின் முயற்சியில் தான் அதுவும் சாத்தியமானது.

பேச்சுவார்த்தைகள் பல வருடங்களாக நடந்து கொண்டிருந்தாலும், அமெரிக்கா எதிர்பார்த்த சமாதானம் மட்டும் வரவில்லை. இதற்கிடையில், புலிகளும் போருக்கு தயாராவதற்காக, நான்கு ஆயுதக் கப்பல்களை தருவித்திருந்தனர். மட்டக்களப்பு கரையில் இருந்து, சுமார் ஆயிரம் கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடற்பரப்பில், சிறிலங்கா கடற்படையினரால் அந்தக் கப்பல்கள் தாக்கி அழிக்கப் பட்டன. புலிகளின் கப்பல்கள் பற்றிய தகவல்களையும், செய்மதிப் படங்களையும் கொடுத்துதவியது வேறு யாருமல்ல. அமெரிக்காவே தான்.

தற்போது ஈழப் போர் நடந்து முடிந்து ஐந்து வருடங்கள் கடந்து விட்டன. கிழக்கு மாகாண கரையோரத்தை சுற்றுலாத் துறைக்கு தாரை வார்க்கும் திட்டம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் நடைமுறைப் படுத்தப் படுகின்றது. புலிகள் இருந்த காலத்தில், அவர்கள் அமெரிக்காவையோ, அந்நிய மூலதனத்தையோ எதிர்க்கவில்லை. சுற்றுலாத்துறையை ஸ்தம்பிக்கும் வகையில் ஒரு குண்டு கூட வெடிக்க வைக்கவில்லை. ஏனெனில், புலிகள் மேற்கத்திய நாடுகளை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. 

நீண்ட காலமாக இழுபட்ட தமிழ் - சிங்கள இன முரண்பாடு, சுற்றுலா முதலாளிகளின் எண்ணம் ஈடேற விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. அதாவது, ஒரு தமிழ்க் கிராமத்தின் வாழ்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டு, நிலங்கள் அபகரிக்கப் பட்டாலும், அவற்றை பயன்படுத்த முடியாத அளவிற்கு யுத்தம் நடந்து கொண்டிருந்தது. பாதிக்கப் பட்ட தமிழ் மக்கள் புலிகளின் பிரதேசங்களுக்குள் தஞ்சம் கோருவதும், பின்னர் அந்த மக்கள் மத்தியில் இருந்து போராளிகள் உருவாவதும் தொடர்கதையாக நடந்து கொண்டிருந்தது.

புலிகளின் அழிவிற்குப் பின்னர், தமிழர்களின் நிலங்களை அபகரித்தால் கேட்பதற்கு யாரும் இல்லை. பாதிக்கப் பட்டவர்கள் பின்தங்கிய பகுதிகளை சேர்ந்த ஏழைத் தமிழர்கள் என்பதால், தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுக்கும் அக்கறை இல்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாசிக்குடா, அறுகம் குடா, அம்பாறை, பொத்துவில் போன்ற பிரதேசங்களில், தமிழருக்கு சொந்தமான நிலங்கள் அபகரிக்கப் பட்டுள்ளன. 

அம்பாறையில் சில தமிழ்க் கிராமங்களில், சீருடை அணிந்த நபர்கள் குடிசை வீடுகளை கொளுத்தி, மக்களை வெளியேற்றி உள்ளனர். சிங்கள ஊடகங்கள் மட்டுமல்ல, தமிழ் ஊடகங்களும் கூட இந்த தகவல்களை தெரிவிக்காமல் மறைத்துள்ளன. ஏனெனில், வர்க்க ஒற்றுமை, இன ஒற்றுமையை விட மிகவும் உறுதியானது. 

கிழக்கு மாகாணத்தில், சிறிலங்கா அரச படைகளின் நில அபகரிப்பினால் பாதிக்கப் பட்டவர்கள், தமிழர்கள் மட்டுமல்ல. வில்பத்து சரணாலயத்தை அண்டிய 900 ஏக்கர் நிலங்களை, கடற்படையினர் அடாத்தாக பறித்துள்ளனர். சில சிங்களக் கிராமங்களும் அதற்குள் அடங்குகின்றன. கிழக்கு மாகாணத்தில் நிலமற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 

முன்னொரு காலத்தில், சிங்கள இராணுவம் தமிழர்களுக்கு என்ன கொடுமை இழைத்ததுவோ, அதையே தற்போது சிங்களவர்களுக்கும் செய்கின்றது. ஏனெனில், சிறிலங்காவில் இருப்பது வெறுமனே சிங்கள பேரினவாத இராணுவம் மட்டுமல்ல. பெரும் முதலாளிகளின் நலன்களைப் பாதுகாப்பதும் அதன் முக்கிய கடமை தான். 

ஈழப்போர் நடந்த காலங்களில், தமிழர்கள் மட்டுமே பாதிக்கப் பட்டனர். பல தமிழ்க் கிராமங்களில் வாழ்ந்த மக்களை வெளியேற்றிய அரச படையினர், அவற்றை சிங்களக் கிராமங்களாக மாற்றினார்கள். பிற்காலத்தில் போர் நடந்த காலத்தில், புலிகள் பழிவாங்கும் நடவடிக்கையாக சிங்களக் கிராமங்களை தாக்கினார்கள். இதன் மூலம், அரசு சிங்களவர்களையும், தமிழர்களையும் நிரந்தரமாகப் பிரித்து வைக்க முடிந்தது. 

2014, மார்ச் மாதம், என்றுமில்லாத அதிசயமாக, நிலமிழந்த தமிழ், சிங்கள கிராமவாசிகளின் ஒன்று பட்ட எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது. அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பாணமை, சாஸ்திரவெல, ராகம்வெல, உல்லா ஆகிய கிராமங்களை சேர்ந்த சிங்கள, தமிழ் மக்கள் தான் பெருமளவில் பாதிக்கப் பட்டிருந்தனர். 

போர் முடிந்த அடுத்த வருடம், 2010 ஆம் ஆண்டு, அவர்கள் வாழ்ந்த கிராமங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப் பட்டனர். நிலமிழந்த கிராம மக்கள், கொழும்பில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஆனால், அரசு சார்பான மனித உரிமைகள் ஆணைக்குழு, நிலமிழந்த மக்களின் போராட்டத்தை கவனத்தில் எடுக்கவில்லை.

தமிழ் மக்கள் மட்டுமல்லாது, சிங்கள மக்களும், காலங்காலமாக வசித்து வந்த கிராமங்களில் இருந்து விரட்டப் படும் காரணம் என்ன? இங்கே தான், சிங்கள பேரினவாதம், அமெரிக்க ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு அம்பலமாகின்றது. இலங்கையை, தாய்லாந்து போன்று உல்லாசப் பிரயாணிகளின் சொர்க்கபுரியாக்குவது தான் அவர்களது குறிக்கோள்.

சுற்றுலா நிறுவனங்கள் எதிர்பார்க்கும் வளங்கள் அத்தனையும் இலங்கையில் உள்ளன. இலங்கையின் அழகான கடற்கரைகள் உலகப் புகழ் பெற்றவை. மேலைத்தேய உல்லாசப் பிரயாணிகள் பலருக்கு, இலங்கை ஒரு சொர்க்கபுரி. "கிழக்கு மாகாணக் கடற்கரைகள், அலை மேல் சறுக்கும் விளையாட்டிற்கு (surf) ஏற்ற இடம். உலகத் தரம் வாய்ந்தது." என்று USAID கூறுகின்றது. உள்ளூர் இளைஞர்களுக்கு சிறிது ஆங்கில மொழி அறிவைக் கொடுத்து, ஹோட்டல் பணியாளர்களாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறது.

அதாவது, நேரடியாகச் சொல்வதென்றால், சிறிலங்கா படையினரால் அபகரிக்கப் பட்ட நிலங்களில், சுற்றுலா விடுதிகள் கட்டப் படவுள்ளன. அவற்றில் வேலை செய்வதற்கு, நிலங்களை பறிகொடுத்த மக்களை பணியாளர்களாக பயன்படுத்திக் கொள்ளலாம். தாய்லாந்திலும், தென்னிலங்கையிலும் நடப்பதைப் போன்று, சுற்றுலாப் பயணிகள் அதிகரித்தால் பாலியல் தொழிலாளர்களும் பெருகி விடுவார்கள். முதலாளிகளின் இலாபவெறியை கருத்தில் கொண்டு, அது போன்ற தீய விளைவுகளை நாங்கள் கண்டுகொள்ளாமல் விட்டு விட வேண்டும்.

"மகிந்த ராஜபக்ச இனப் படுகொலையாளன். எப்படியும் அமெரிக்கா ஐ.நா.வில் தீர்மானம் போட்டு தண்டித்து விடும்..." என்று நாங்கள் வாய் கிழிய பேசிக் கொண்டிருந்தாலும், எதுவுமே நடக்காத காரணம் இது தான். மகிந்த சிந்தனையும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான். 

"புலிகள் இப்போதும் இருக்கிறார்கள். மீண்டும் போரிட வருவார்கள்..." என்றொரு பொய்யைக் கூறித் தான், பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய நில அபகரிப்புகளை நியாயப் படுத்துகிறார். ஆனால், அபகரிக்கப் பட்ட தமிழரின் நிலங்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கப் படுகின்றன என்ற உண்மையை மட்டும் கூற மாட்டார். மரத்தால் விழுந்தனை, மாடேறி மிதித்தது போல, தமிழர்களின் நிலங்களை அபகரிப்பதற்கு உலக வங்கியும் ஒத்துழைக்கிறது.

உலக வங்கி, அமெரிக்க அரசு, மகிந்த அரசு ஆகியன தமிழர்களை கூட்டாக சேர்ந்து ஒடுக்குகின்றன. இந்த நேரத்தில், நடுத்தர வர்க்க தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வலதுசாரி தமிழ்தேசியவாதிகள் சிலர், ஏகாதிபத்திய விசுவாசத்தை பின்வருமாறு தெளிவு படுத்துகின்றனர். அதாவது, "தமிழர்கள் நில உரிமைக்காக போராடவில்லையாம், தன்னைத் தானே ஆளும் அரசு அமைக்க போராடுகிறார்களாம்."

இதனால் அவர்கள் தெரிவிக்க விரும்பும் செய்தி இது தான்: "எங்களிடம் தமிழீழம் தந்திருந்தால், நாங்களே அந்த நிலங்களை அபகரித்துக் கொடுத்திருப்போம்!" அப்படி இல்லையென்றால், அபகரிக்கப் பட்ட தமிழரின் நிலங்களை சுற்றுலா ஸ்தலமாக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்பாக அவர்களது நிலைப்பாடு என்ன? 

"தமிழீழத்தை ஆளப் போகும் தமிழர்களும்", உலக வங்கியிடம் தானே கடனுதவி கேட்டு கையேந்தப் போகிறார்கள்? அப்போது இதே அம்பாறை நிலங்களை பறித்து பன்னாட்டு முதலாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, உலக வங்கி உத்தரவிட மாட்டாதா?

இங்கே கூறப்பட்டுள்ள விபரங்கள், மக்களிடம் இருந்து அந்நியப்பட்ட மேட்டுக்குடி பெரு மக்களுக்கு மட்டும் தான் புதினமாகத் தோன்றும். அம்பாறையில் வாழும் ஏழை உழைக்கும் வர்க்க தமிழர்கள், தமது  எதிரிகளை சரியாகவே எடை போட அறிந்து வைத்துள்ளனர். அதனால் தான் அவர்கள், நிலமிழந்த சிங்கள மக்களுடன் சேர்ந்து போராடினார்கள். 

அம்பாறையில் வாழும் உழைக்கும் வர்க்க தமிழ் மக்கள், தமது பொது எதிரியான, சிறிலங்கா தரகு முதலாளிய அரசுக்கு எதிராக மட்டுமல்லாது, உலகவங்கி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவ்வளவு காலமும், இனவாத சக்திகளின் சொல்லைக் கேட்டு, சிங்கள, தமிழ் உழைக்கும் வர்க்க மக்கள் பிரிந்து தான் வாழ்ந்து வந்தனர். அதனால் அவர்கள் இழந்தது அதிகம்.

இவ்வளவு காலமும் இனவாதக் குட்டையை கலக்கிக் கொண்டிருந்த முதலைகளான பன்னாட்டு முதலாளிகள், சிறிலங்கா அரசின் பாதுகாப்புடன் தைரியமாக திரிகின்றனர். அவர்களை எதிர்ப்பதற்கு யாருமில்லை. எல்லோரும் தமிழனா, சிங்களவனா என்ற கயிறிழுப்புப் போட்டியில் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையை மறுகாலனியாக்குவதற்கு இதுவே சரியான தருணம்.


மேலதிக தகவல்களுக்கு:

  • USAID: Sri Lanka connecting regional economies, Assesment of Tourism in Eastern, Uva, and North Central provinces of Sri Lanka; http://www.bpa-srilanka.com/files/USAID-CORE-Tourism-Assessment_1_.pdf
  • Illegal Land Grabs By Sri Lanka Navy Destroys Wilpattu National Park; https://www.colombotelegraph.com/index.php/illegal-land-grabs-by-sri-lanka-navy-destroys-wilpattu-national-park/
  • Human Rights Commission Is Inactive: Villagers Of Panama Protest Land Grabbing; https://www.colombotelegraph.com/index.php/human-rights-commission-is-inactive-villagers-of-panama-protest-land-grabbing/

Tuesday, August 05, 2014

தமிழீழ விடுதலைப் போராட்டமும், இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைத் தமிழர்களும்


இழப்பதற்கு எதுவுமற்ற ஏழை மக்கள் தான் போராட முன்வருவார்கள்." என்ற மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படையில் தான், தமிழீழத்திற்கான விடுதலைப் போராட்டமும் நடந்து முடிந்துள்ளது. "மார்க்சியம் ஒரு வரட்டு சூத்திரம்" என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், அந்த உண்மையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. தமது நடுத்தர வர்க்க நிலைப்பாட்டில் இருந்தே உலகைப் பார்க்கும், வலதுசாரி தமிழ் தேசியவாதிகள், பல்வேறு கருதுகோள்களை வைத்து தவறென நிறுவ முயற்சிக்கின்றனர். அவர்கள் யாரும், தமிழ் பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள் அல்ல.

வலதுசாரி தமிழ் தேசியவாதிகள், வசதியான நடுத்தர வர்க்க பின்னணி கொண்டவர்கள் என்பது ஒரு தற்செயல் அல்ல. வெளிநாடுகளில் வசதியாக வாழ்வோர், தமக்குத் தெரிந்த குடும்ப உறுப்பினர்கள் பலர், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இருந்த உதாரணங்களை கொண்டு வந்து காட்டுகிறார்கள். மேற்கத்திய நாடுகளில் வாழுவோர் எல்லோரும், "நடுத்தர வர்க்கம்" என்று எப்படி உறுதியாகக் கூற முடிகின்றது? இதே நிலைமை தான், பணக்கார வளைகுடா நாடுகளிலும் உள்ளது.

ஒரு நாட்டில் அனைவரினதும் வாழ்க்கை வசதி உயர்ந்திருக்கிறது என்பதாலேயே அவர்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களாக மாறி விடுவார்களா? "பணக்கார" நாடுகளில் நிலவும், பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றிய போதுமான அறிவு எம்மிடம் இருக்கிறதா? அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, சவூதி அரேபியாவில் எத்தனை இலட்சம் ஏழைகள் வாழ்கின்றனர் என்பதை அறிந்து வைத்திருக்கிறோமா?

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்த, வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்ந்த மக்கள் எத்தனை பேர் என்ற விபரம், அங்கு பணியாற்றிய அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடம் (NGO) உள்ளது. ஐ.நா.வின் நிறுவனங்கள், செஞ்சிலுவை சங்கம் ஆகியனவும் அந்த விபரங்களை வைத்திருந்தன.

மேலும், நிவாரணப் பொருட்கள் யாவும் புலிகளின் மேற்பார்வையின் கீழ் தான் வழங்கப் பட்டன. மாவீரர் குடும்பங்கள், போராளிக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கப் பட்டது. புலிகளின் கட்டுபபாட்டுப் பகுதியில் வாழ்ந்த பெரும்பான்மை தமிழ் மக்கள் இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைகள் என்பது ஒரு "வரட்டு சூத்திரம்" அல்ல. அது யதார்த்தம்.

வெளிநாடுகளில் வசதியாக வாழும் பலரின் உறவினர்களும், போராளிகளாக இருந்திருக்கிறார்கள் என்பது உண்மை தான். ஆனால், ஈழத்தில் வாழும் மொத்த தமிழ் சனத் தொகையில் வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அதிலும் மிகக் குறைந்தளவு சதவீதம் தான் போராளிக் குடும்பங்களாக இருந்துள்ளன. அனேகமாக, பெருமளவு வசதியான தமிழர்கள் வாழ்ந்த, யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து தான் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தார்கள்.

வன்னி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் வாழ்ந்த, தமிழ் மாவட்டங்களில் இருந்து, வெளிநாடுகளுக்கு சென்றோர் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. ஆனால், புலிகள் அமைப்பின் போராளிகளில் பெரும்பான்மையானோர், மேற்குறிப்பிட்ட பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

இந்த உண்மையை தெரிந்து கொள்வதற்கு, நாங்கள் அதிக சிரமப் படத் தேவையில்லை. புலிகளுக்காக வேலை செய்த சர்வதேசப் பொறுப்பாளர்களிடம், மாவீரரான போராளிகளின் பட்டியல் நிச்சயமாக இருக்கும். அதை எடுத்து ஆய்வு செய்தாலே தெரிந்து விடும்.

முன்பு ஆப்கானிஸ்தானிலும், இன்று சிரியாவிலும் நடக்கும் ஜிகாதிப் போராட்டங்களில், மேற்கத்திய நாடுகளில் வாழும் முஸ்லிம் இளைஞர்கள் பலர் ஈடுபடுகின்றனர். அதற்காக, அவர்கள் எல்லோரும் தமது வசதியான வாழ்க்கையை உதறித் தள்ளி விட்டு, உணர்வுபூர்வமாக போராளிகள் ஆனார்கள் என்று கருத முடியாது. அந்த இளைஞர்களின் இஸ்லாமிய மதப் பற்று மட்டுமே எங்கள் கண்களுக்கு தெரிகின்றது. ஆனால், அவர்களின் பொருளாதாரப் பின்னணி பற்றி நாங்கள் ஆராய்வதில்லை.

மேற்கத்திய நாடொன்றில், அல்லது வளைகுடா அரபு நாடொன்றில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதாலேயே, அவர்கள் எல்லோரும் மத்திய தர வர்க்கத்தினர் என்று நினைத்துக் கொள்வது தவறு. அந்த நாடுகளில் உள்ள பொருளாதார பிரச்சினைகள் வெளியே பேசப் படுவதில்லை. பணக்கார நாடுகளில் வாழுவோர் எல்லோரும் நடுத்தர வர்க்கத்தினர் அல்ல.

அமெரிக்காவில் மட்டும் இருபது மில்லியன் ஏழைகள் வாழ்கிறார்கள். மேற்கு ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால், அங்கேயும் இருபது மில்லியனுக்கும் குறையாத ஏழைகள் இருப்பார்கள். மேலைத்தேய நாடுகளில் வாழும், அரபு - இஸ்லாமிய சமூகப் பின்னணி கொண்ட மக்கள் பலர், பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளனர்.

அதற்காக, போராடச் சென்றவர்கள் "எல்லோரும்" ஏழைக் குடும்பங்களை சேர்ந்தவர்கள், வசதி வாய்ப்பற்றவர்கள் என்று கூறவில்லை. உயர்கல்வி கற்றவர்கள், நல்ல சம்பாத்தியம் தரும் வேலையில் இருந்தவர்கள் கூட போராடச் சென்றார்கள். ஆனால், அவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படியானவர்கள், அதிக பட்சம் ஒரு சதவீதம் கூட இல்லை. பெரும்பாலும் 0,01% ஆக இருக்கலாம்.

உலகில் உள்ள அத்தனை இயக்கங்களுக்கும் தலைமை தாங்குவது நடுத்தர வர்க்கமாக உள்ளது. இது தற்செயல் அல்ல. பல நூறு வருடங்களாக ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினர் தான் வசதி வாய்ப்புகளை அனுபவித்து வந்துள்ளனர். ஆகையினால், எத்தகைய சமூக மாற்றமும் அவர்கள் மத்தியில் இருந்து தான் உருவாகும். மார்க்சிய இயக்கமாக இருந்தாலும் அது தான் நிலைமை.

கார்ல்மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ, ஹோசிமின், பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா போன்று, அனேகமாக எல்லா மார்க்சிய தலைவர்களும் நடுத்தர வர்க்கத்தினர் தான். இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைகள் மட்டுமே போராடுவார்கள் என்று அவர்களும் தான் நம்பினார்கள். அவர்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். அதற்காக, தமது வர்க்கத்தின் நலன்களை பற்றி மட்டும் சிந்திக்கவில்லை. அதனால் தான், ஏழை உழைக்கும் மக்களின் தலைவர்களாக போற்றப் பட்டார்கள்.

நடுத்தர வர்க்க இளைஞர்கள் மட்டுமே போராடிய நாடுகளில், அந்தப் போராட்டம் இலகுவில் தோற்கடிக்கப் பட்டது. உதாரணத்திற்கு, உருகுவேயில் நடந்த கெரில்லாப் போராட்டம். 90% போராளிகள் நடுத்தர வர்க்க மாணவர்கள். பொலிவியாவில் போராடிய சேகுவேராவின் இயக்கத்தை சேர்ந்தவர்கள், நடுத்தர வர்க்க பிரதிநிதிகள்.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஆயுதப் போராட்டம் நடத்தியவர்கள், நடுத்தர வர்க்க மாணவர்கள். அவர்கள் எல்லோரும் மார்க்சியக் கொள்கைகளை பின்பற்றியவர்கள் தான். ஆனால், அவர்களது ஆயுதப் போராட்டங்கள் முளையிலேயே கிள்ளி எறியப் பட்டன. என்ன காரணம்? ஏனென்றால், அந்த இயக்கங்களினால், கடைசி வரையிலும் பெரும்பான்மை ஏழை உழைக்கும் மக்களை அணிதிரட்ட முடியவில்லை.

தேசியவாத, மதவாத இயக்கங்கள், வெகுஜன தளத்தில் பிரபலமான கருத்துக்களை பிரச்சாரம் செய்கின்றன. வளர்ந்து வரும் நாடுகளில், பெரும்பான்மையான ஏழை மக்கள் மத நம்பிக்கையாளர்களாக இருக்கின்றனர். அதற்குக் காரணம் அவர்களிடம் எதுவும் இல்லை. "பணம் இல்லை. படிப்பு இல்லை. வேலை இல்லை..." இவ்வாறு அவர்கள் வாழ்க்கை முழுவதும் குறை கூறுவதற்கு நிறைய "இல்லைகள்" உள்ளன. ஓர் இயக்கம் அவர்களிடம் சென்று, "நாங்கள் மதத்திற்காக போராடுகின்றோம்" என்றால் ஆதரிக்காமல் விடுவார்களா?

தேசியவாதமும் அப்படித் தான். "உங்களுடைய பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம், எமது இனத்திற்கு தனியான நாடு இல்லாதது தான்" என்று சொல்வார்கள். தனி நாடு கிடைத்து விட்டால், எமது வாழ்வு வளம் பெறும் என்று தான் சாதாரண ஏழை மக்கள் நம்புவார்கள். அந்த எதிர்பார்ப்பில் எந்தத் தவறும் இல்லை.

உண்மையில், ஈழத் தமிழ் நடுத்தர வர்க்கத்தை மட்டுமே நம்பி போராடத் தொடங்கி இருந்தால், விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப் பட்ட ஒரு சில வருடங்களிலேயே காணாமல் போயிருக்கும். எழுபதுகளில் அடித்தட்டு ஏழை மக்களையும் கவர வேண்டும் என்பதற்காக, புலிகளும் மார்க்சியம் பேசினார்கள். சோஷலிசத் தமிழீழத்திற்காக போராடுகிறோம் என்று சொல்லிக் கொண்டார்கள்.

எழுபதுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஸ்தாபிக்கப் பட்ட காலத்தில், நாட்டில் கடுமையான வரட்சி நிலவியது. மழை வீழ்ச்சி குறைவாக இருந்தது. வட மாகாணத்தில், மழையை நம்பி நடக்கும் பெரும்போக நெற் செய்கை தான் அந்தப் பிராந்தியத்தின் பொருளாதார முதுகெலும்பு. பரம்பரை பரம்பரையாக விவசாயப் பொருளாதாரத்தை நம்பியிருந்த மக்கள், பல வருடங்களாக தொடர்ந்த வரட்சி காரணமாக கடுமையாக பாதிக்கப் பட்டனர்.

ஒரு நாட்டின் விவசாயப் பொருளாதாரம் நலிவடைந்தால், அது விவசாயிகளை மட்டும் பாதிப்பதில்லை. அதை நம்பியிருக்கும் கூலித் தொழிலாளர்கள், வணிகர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் என்று ஏராளமானோர் பாதிக்கப் படுகின்றனர். வசதியானவர்களுக்கு வெளிநாடு சென்று பிழைக்கும் வாய்ப்புக் கிட்டியது. அது கூட முடியாதவர்களுக்கு?

எண்பதுகளில் போர் தீவிரமடைந்த காலத்தில், அதிகமாகப் பாதிக்கப் பட்டவர்கள் அடித்தட்டு ஈழத் தமிழர்கள் தான். போர் நடக்கும் நாடுகளில் எல்லாம், ஏழைகள் தான் அதிக விலை கொடுக்கிறார்கள். பாதுகாப்பான இடத்திற்கு, இடம்பெயர்ந்து செல்லும் அளவிற்கு கூட வசதி இல்லாதவர்கள். அப்படியானவர்கள் போராடுவதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது?

மார்க்சியம் என்பது இயங்கியல் தத்துவ அடிப்படை கொண்டது. அது ஒரு வரட்டு சூத்திரம் அல்ல. ஏற்கனவே, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மெய்ப்பிக்கப் பட்ட சமூக விஞ்ஞானம்.



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Wednesday, July 16, 2014

தமிழினப் படுகொலைக்கு கவலை தெரிவித்து ஓர் இஸ்ரேலியன் கூட அழவில்லை

பதினெட்டு வருடங்களுக்கு முன்னர், நான் நெதர்லாந்து வந்த புதிதில், ஆம்ஸ்டர்டாம் நகரின் மத்தியில் உள்ள தங்கு விடுதி (Hotel) ஒன்றில் சில மாதங்கள் வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த ஹோட்டலின் உரிமையாளர் ஓர் இஸ்ரேலிய யூதர். பணியாட்களில் பல தமிழர்களும் இருந்தனர். இஸ்ரேலில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தான், பெரும்பாலும் அந்த ஹோட்டலில் தங்குவார்கள். ஓய்வு நேரங்களில் அவர்களோடு உரையாடும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளும் சாதாரணமான அப்பாவி மக்கள் தான். தங்களுடைய நாட்டில் நடக்கும் உள்நாட்டுப் போர் மாதிரி, உலகில் வேறெந்த நாட்டிலாவது நடக்கிறதா என்று கேட்குமளவிற்கு அப்பாவிகள். அவர்களுக்கு பாலஸ்தீனர்களின் பிரச்சினை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. பலர் பாலஸ்தீனர்களை தமது வாழ்நாளில் கண்டிருக்கவில்லை. இஸ்ரேலிய அரசு வழங்கும் ஒரு பக்கச் சார்பான தகவல்களை உண்மை என்று நம்புகிறவர்கள். தங்களது பக்க இழப்புகளை பற்றி மட்டுமே மிகைப் படுத்தி பேசத் தெரிந்தவர்கள்.

இஸ்ரேலியர்கள் எங்களைப் பற்றியும் விசாரிப்பார்கள். எங்கள் எல்லோரையும் இந்தியர்கள் என்று நினைத்துக் கொண்டு பேசுவார்கள். இந்தியாவில் உள்ளவர்கள் ஹிந்தி (மட்டும்) பேசுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். (இஸ்ரேலில் சில நேரம் ஹிந்தி திரைப் படங்கள் திரையிடுவார்களாம்.) ஆனால், உலகில் தமிழ் என்ற மொழி இருப்பதே அவர்களுக்கு தெரியாது. ஸ்ரீலங்கா என்றால், அது எங்கே இருக்கிறது என்பது கூடத் தெரியாது. உலகில் அப்படி ஒரு நாடு இருப்பதையே அப்போது தான் கேள்விப் பட்டிருப்பார்கள். உலக வரை படத்தில் இலங்கையை தொட்டுக் காட்டினால்; "ஒ அதுவா! இவ்வளவு காலமும் அது இந்தியாவின் ஒரு பகுதி என்று நினைத்துக் கொண்டிருந்தேன்...." என்று சொல்வார்கள்.

அந்தளவு விடய ஞானம் கொண்ட அப்பாவி இஸ்ரேலிய யூதர்களிடம்: 
"முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலை நடந்து கொண்டிருந்த நேரத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? 
- "எங்களுக்காக குரல் கொடுத்தீர்களா?" 
- "தமிழினப் படுகொலையை நிறுத்த வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் செய்தீர்களா?" 
-  "ஐ.நா. வில் கதைத்தீர்களா?" 
இது போன்ற கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தால், எம்மைப் போன்ற முட்டாள்கள் உலகில் வேறு யாரும் இருக்க முடியாது. துரதிர்ஷ்டவசமாக இன்றைக்கும் பல தமிழ் அரசியல் ஆர்வலர்கள் பலர், குறிப்பாக வலதுசாரி குறுந் தேசியவாதிகள், அவ்வாறு தான் மடத் தனமாக வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் உயர்கல்வி கற்ற அறிவுஜீவிகள் என்பதும் ஆச்சரியத்திற்குரியது.

"ஈழத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப் பட்ட நேரத்தில், பாலஸ்தீனர்கள் எதுவும் செய்யவில்லை" என்று கூச்சலிடுபவர்கள், எத்தனை வருட காலம் பாலஸ்தீனத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்? அவர்களுக்கு எத்தனை பாலஸ்தீனர்களை தெரியும்? பாலஸ்தீனர்கள் அப்படிச் செய்யவில்லை, இப்படிச் செய்யவில்லை என்று எதை ஆதாரமாக வைத்துக் கொண்டு கதைக்கிறார்கள்?

பாலஸ்தீனர்களை குறை கூறும் பெரும்பாலானோரின் மனதில் மறைந்திருப்பது, இந்து அல்லது கிறிஸ்தவ மதவெறியும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்மமும் தான். பாலஸ்தீனம், மட்டுமல்ல காஷ்மீரில் கொல்லப் படும் மக்களும் அவர்கள் கண்களுக்கு முஸ்லிம்களாக மட்டும் தான் தெரிகின்றனர். "முள்ளிவாய்க்காலுக்கு பிறகு தான் நாங்கள் இப்படி மாறினோம்" என்று சொல்வது ஒரு மிகப் பெரிய பொய். அது வெறும் நொண்டிச் சாட்டு மட்டுமே. முள்ளிவாய்க்காலுக்கு முன்னரும், அவர்கள் பாலஸ்தீனர்களுக்கு எதிராகத் தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இருபது வருடங்களுக்கு முன்னரும், பாலஸ்தீனத்தில் மக்கள் கொல்லப் படும் சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன. பாலஸ்தீன பிரச்சினை பற்றிய தகவல்களுக்கு, தொலைக்காட்சி செய்திகளில் எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இன்று ஈழத் தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் பலர், அப்போதும் பாலஸ்தீனர்களுக்காக கவலைப் படவில்லை.

ஒவ்வொரு தடவையும் இஸ்ரேலில் நடக்கும் யுத்தம் காரணமாக பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப் பட்டால், அதன் எதிரொலியாக ஐரோப்பிய நகரங்களில் இடதுசாரி அமைப்புகள் ஒழுங்கு படுத்தும் ஆர்ப்பாட்டங்கள்  நடைபெறும். அந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள வருமாறு, எத்தனையோ தடவைகள், எனக்குத் தெரிந்த (ஈழத்) தமிழ் நண்பர்களிடம் கேட்டுள்ளேன். இடதுசாரி சார்புள்ள ஒன்றிரண்டு தமிழர்கள் மட்டுமே வருவார்கள். மற்றவர்கள் ஏதாவது நொண்டிச் சாட்டு சொல்லி வர மறுப்பார்கள். சிலர் தங்களுக்கு பிற நாட்டு பிரச்சினைகளில் ஆர்வம் இல்லை என்று நேரடியாகவே கூறுவார்கள்.

தமிழர்கள் மட்டும் தான் அப்படி என்று சொல்ல முடியாது. அனேகமாக, வேற்றின மக்களும் அப்படித் தான். பாலஸ்தீனம் அல்லது ஈராக் போர் தொடர்பான ஆர்ப்பாட்டங்களில் பெருமளவு அரபு- முஸ்லிம்கள் கலந்து கொள்வார்கள். ஆனால், நேட்டோ படைகள் செர்பியா மீது குண்டு போட்டதற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களில், அவர்களில் ஒருவர் கூட வரவில்லை. செர்பியா மீதான குண்டுவீச்சுக்கு எதிராக பெருமளவில் வந்த செர்பியர்கள், பாலஸ்தீன ஆர்ப்பாட்டத்திற்கு வர மாட்டார்கள்.

அதே மாதிரித் தான், குர்திஷ் பிரச்சினைக்கு நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் குர்திஷ் மக்கள் மட்டும் கலந்து கொள்வார்கள். இலங்கையில் நடந்த போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் தமிழர்கள் மட்டுமே வந்திருப்பார்கள். இவ்வாறு தான், எல்லா தேசிய இனங்களும், தத்தமது தேசிய கிணறுகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

பல நாடுகளை சேர்ந்த இடதுசாரி அரசியல் ஆர்வலர்கள் மட்டுமே, எல்லா ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொள்வார்கள். ஈராக், ஈழம், குர்திஸ்தான், பாலஸ்தீனம் என்று எங்கெல்லாம் ஒடுக்கப் படும் மக்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடக்கின்றதோ, அங்கெல்லாம் இடதுசாரி ஆர்வலர்களை நீங்கள் காணலாம். ஐரோப்பிய இடதுசாரிகள் மட்டுமல்ல, ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க இடதுசாரிகளும் பாரபட்சமின்றி எல்லா ஊர்வலங்களிலும் கலந்து கொள்வார்கள். 

தமிழர்களான நாங்கள், உலகில் எந்த இனம் படுகொலை செய்யப் பட்டாலும் அதற்காக கவலைப் பட மாட்டோம். ஆனால், உலகம் முழுவதும் எங்களுக்காக அழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையான அரசியல் தார்மீகம் என்பது தெரியவில்லை. தமிழர்கள் இது வரை காலமும் அமெரிக்காவை நம்பி ஏமாந்தார்கள். இனிமேலாவது சர்வதேச மட்டத்தில் தமது நட்புச் சக்திகள் யார் என்பதைக் கண்டுணர வேண்டும்.

Tuesday, December 24, 2013

ஈழத் தமிழர்களுக்கு சோஷலிசம் மீது கசப்பான அனுபவம் உள்ளதா?

//தமிழ் மக்களுக்கு சோஷலிசம் மேல் வரலாறு ரீதியாக ஒரு கசப்பான அனுபவமே இருக்கின்றது.// என்று தமது இடதுசாரி அல்லது கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் தமிழ் வலதுசாரிகள், அதற்கு பின்வரும் காரணங்களை அடிக்கடி மேற்கோள் காட்டுகின்றனர். //டட்லி வயிற்றில் மசாலா வடை என இனவாத கூச்சலிட்டவர்கள், இலங்கையில் கம்யுனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்கள். மேலும் சிங்கள மொழிக்கு மட்டும் அந்தஸ்த்து கொடுக்கும் இலங்கை யாப்பை எழுதியவரும் கொல்வின் ஆர் டி சில்வா என்னும் புகழ் பெற்ற கம்யுனிஸ்ட். // (குறிப்பு: கொல்வின் ஆர்.டி. சில்வா ஒரு கம்யூனிஸ்ட் அல்ல. ட்ராஸ்கிஸ்ட்)


மேற்குறிப்பிட்ட வாதம் வரலாற்று உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டிருந்தாலும், வரலாற்றை திரித்து, மறைமுகமாக தமிழ் மக்கள் மனதில் கம்யூனிச எதிர்ப்பு எனும் நஞ்சை ஊட்டும், விஷமத்தனத்தையும் கண்டுகொள்ளாமல் விட்டு விட முடியாது.

வலதுசாரிகளோ அல்லது இடதுசாரிகளோ அல்லது லிபரல் வாதிகளோ, எவையாயினும், அவை இறுதியில் தமிழ், சிங்களமென இரண்டாக பிளவுபட்டுச் சென்றுள்ளமையே, இலங்கையின் வரலாறாகக் காண முடிகிறது. இது தனி மனிதரில் இருந்து, கட்சிகள் வரை பொருந்தும்.

1956 ஆம் ஆண்டு ஐ.தே.க.வில் இருந்து தமிழ் அமைச்சர்கள், தமிழ் எம்.பி.க்கள், தமிழ் உறுப்பினர்கள் வெளியேறியது போல, 1976 ஆம் ஆண்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து தமிழ் தலைவர்கள் பிரிந்து சென்று, "செந்தமிழர் ஆயிடுவோம்" என்ற தமிழ் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினார்கள்.

இலங்கையில் இடதுசாரி இயக்கங்களை, குறிப்பாக சிங்கள-தமிழ் உழைக்கும் வர்க்கத்தை பிரிப்பதற்கு, பேரினவாத ஆட்சியாளர்கள் செய்த சூழ்ச்சிகளையும், இந்த இடத்தில் மறந்து விடக் கூடாது. இலங்கையின் முதலாவது பிரதமரும், மேற்கத்திய சார்பு லிபரல்வாதியுமான டி.எஸ். சேனநாயக்க, "ஐம்பதுக்கு ஐம்பது கோரிய" ஜி.ஜி. பொன்னம்பலத்தை தனது அரசாங்கத்தில் அமைச்சராக சேர்த்துக் கொண்டார். அன்று ஆட்சிக்கு வரக் கூடிய அளவு பலத்துடன் இருந்த இடதுசாரிக் கட்சிகளை தடுப்பதும், இடதுசாரி சிங்களவர்களை தமிழர்களுக்கு எதிராக திசை திருப்பி விடுவதுமே, டி.எஸ். சேனநாயக்கவின் நோக்கமாக இருந்தது.

சுருக்கமாக சொன்னால்: "இலங்கையில் இடதுசாரியத்திற்கு எதிராக, சிங்கள இனவாதமும், தமிழ் இனவாதமும் கூட்டுச் சேர்ந்தது." துரதிர்ஷ்டவசமாக, டி.எஸ்.சேனநாயக்கவின் தீர்க்கதரிசனம் கொண்ட சூழ்ச்சி பலித்து விட்டது. அதன் மூலம், இலங்கையில் உழைக்கும் வர்க்கத்தை பிரித்தாள நினைத்த, சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களின் எண்ணம் நிறைவேறியது. அதே நேரம், ஜி.ஜி. பொன்னம்பலம் என்ற தமிழரை அமைச்சராக வைத்துக் கொண்டே, டி.எஸ். சேனநாயக்க மலையகத் தமிழர்களின் வாக்குரிமையை பறித்தார்.

" 1965 ஆம் ஆண்டு டட்லி சேனநாயக்கா தலைமையிலான ஐக்கிய  தேசிய கட்சியுடன், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சி (இலங்கை சமஷ்டிக் கட்சி) பங்கெடுத்து கூட்டரசாங்கம் அமைத்துக் கொண்டது. 1965 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், இரு பெரும் சிங்களக் கட்சிகளும் அறுதிப் பெரும் பான்மை எட்டாத நிலையில், ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சியுடன் இடது சாரிகளும் தமிழரசுக் கட்சியும் இணைந்த ஒரு கூட்டரசாங்கத்தை உருவாக்க கலாநிதி என்.எம்.பெரேரா முயற்சித்தார். அதற்காக அவர் தமிழரசுக் கட்சியின் உதவியை நாடினார். தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த சூழலில் அப்போது யாழ்ப்பாணத்தில் நின்ற தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வாவுடன், என்.எம். பெரேரா தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது கூட்டரசாங்கம் அமைப்பது பற்றிய விடயங்களை கொழும்பில் உள்ள தனது நண்பரான திரு. மு.திருச்செல்வத்துடன் பேசுமாறு செல்வநாயகம் கூறினார். ஆனால் தமிழ் வலதுசாரியான திருச்செல்வம், சிங்கள தரகு முதலாளிய கட்சியான ஐ.தே.க.வுடன் உடன் பாட்டுக்கு வர விரும்பினார். அதனால், என்.எம். பெரேராவுடன் பேசாமலே, திருச்செல்வம் அவரை புறம்தள்ளினார் என்பது உண்மை."   (தகவலுக்கு நன்றி : www.nerudal.com)

இலங்கையின் சிக்கலான இனப் பிரச்சினையை, "சிங்களவர்+தமிழர்=எதிரிகள்" என்று இலகுவாக புரிந்து கொள்வது அபத்தமானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. சிங்கள வலதுசாரிகள் மட்டுமல்ல, தமிழ் வலதுசாரிகள் கூட ஆரம்பத்தில் இருந்தே, இடதுசாரி சக்திகளை தமது வர்க்க எதிரிகளாக கருதி வந்தனர். தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி ஆகிய இரண்டு தமிழ் தேசியக் கட்சிகளும், இடதுசாரிகளுடன் கூட்டணி அமைப்பதை விட, சிங்களப் பேரினவாதிகளுடன் கூட்டரசாங்கம் அமைப்பதையே பெரிதும் விரும்பினார்கள்.

பிரிட்டன் உருவாக்கிய பாராளுமன்ற ஜனநாயகம் என்ற பூர்ஷுவா அரசுக் கட்டமைப்பும் இனவாத அரசியலுக்கு தூபம் போட்டது. தேர்தல் அரசியல் சாக்கடையில் புரண்டெழும் எந்தப் பன்றியும் சுத்தமாக இருக்க முடியாது. வாக்காளர்களை இலகுவாக கவர முடியும் என்பதால், அனைத்து தேர்தல் கட்சிகளும் இனவாதத்தை மூலதனமாக கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றன. சிங்களப் பேரினவாத கட்சிகள் மட்டுமல்ல, தமிழ் தேசியக் கட்சிகள், இடதுசாரிக் கட்சிகள் எல்லாவற்றிற்கும் அது பொருந்தும்.

சமசமாஜக் கட்சி போன்ற ட்ராஸ்கிசவாதக் கட்சிகள் ஆரம்பித்த காலத்தில் இருந்தே சமூக ஜனநாயக அரசியலில் நம்பிக்கை கொண்டிருந்தன. அதாவது, தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் மாற்றத்தை கொண்டு வரலாம் என்பதே ட்ராஸ்கிசவாதிகளின் புரட்சிகர தத்துவம் ஆகும்.தமிழ் வலதுசாரிகள் பலருக்கு, கம்யூனிஸ்டுகளுக்கும், ட்ராஸ்கிஸ்டுகளுக்கும் இடையில் வித்தியாசம் தெரிவதில்லை. பாராளுமன்ற ஜனநாயகத்தை நிராகரித்து புரட்சியை நடத்துவது ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் குறிக்கோள். ஆனால், ட்ராஸ்கிச கட்சிகள், பாராளுமன்ற ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி, அரசாங்கத்தை மாற்றி சோஷலிச சீர்திருத்தங்களை (புரட்சி அல்ல) கொண்டு வரலாம் என்று நம்புகின்றனர். வட்டுக்கோட்டை தீர்மானத்தை எழுதிய ஆனந்த சங்கரி, விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் ஆகியோரும், முன்னாள் LSSP ட்ராஸ்கிஸ்டுகள் தான் .

ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர், சர்வதேச கம்யூனிஸ்ட் அகிலத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டன. குருஷேவ் முன்மொழிந்த "சமாதான சகவாழ்வு" கொள்கையின் அடிப்படையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு, பூர்ஷுவா அரசாங்கத்தில் பங்கெடுப்பது ஊக்குவிக்கப் பட்டது. ஸ்டாலின் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆயுதேமந்திய புரட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தன. குருஷேவ் அதைக் கைவிட்டு விட்டு, அமைதி வழியிலான ஆட்சி மாற்றத்தை முன்மொழிந்தார்.

சர்வதேச கம்யூனிச அகிலத்தில் ஏற்பட்ட கொள்கை மாற்றம், இலங்கை கம்யூனிஸ்ட் அரசியலிலும் எதிரொலித்தது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும், பெரும்பான்மை சிங்கள வாக்காளர்களை கவர்வதற்காக இனவாதம் பேசியது.  மே தின ஊர்வத்தில் "தோசை, மசால வடே அப்பிட்ட எபா" கோஷம் எழுப்பப் பட்டது. உண்மையில், அன்று ஐக்கிய தேசியக் கட்சி அரசில் அங்கம் வகித்த தமிழரசுக் கட்சிக்கு எதிராகவே அந்தக் கோஷம் எழுப்பப் பட்டது. ஆனால், அதன் இனவாத உள்ளடக்கம் காரணமாக தமிழ் மக்களை அன்னியப் படுத்தியது.

1972 ம் ஆண்டு, இலங்கை பிரிட்டிஷ் முடியாட்சியை துறந்து குடியரசு ஆனது. ட்ராஸ்கிச LSSP கட்சியை சேர்ந்த கொல்வின் ஆர்.டி. சில்வா புதிய அரசியல் யாப்பை எழுதுவதற்கு நியமிக்கப் பட்டார். "கொல்வின் ஆர்.டி. சில்வா என்ற ஒரு கம்யூனிஸ்ட் தமிழர் விரோத யாப்பு" எழுதியதற்காக, தமிழ் வலதுசாரிகள் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்கின்றனர். அவர் ட்ராஸ்கிச LSSP கட்சியை சேர்ந்தவர். பெரும்பாலான தமிழ் தேசியவாதிகளுக்கு, ட்ராஸ்கிசத்திற்கும், கம்யூனிசத்திற்கும் இடையில் வித்தியாசம் தெரிவதில்லை. "கொல்வின் ஆர்.டி. சில்வா என்ற ஒரு கம்யூனிஸ்ட் தமிழர் விரோத யாப்பு" எழுதியதற்காக, கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் தமிழ் வலதுசாரிகள், அந்த யாப்பு சிங்கள உழைக்கும் மக்களுக்கும் எதிரானது என்ற உண்மையை காண மறுக்கின்றனர். 

1971 ம் ஆண்டு, ஜேவிபி தலைமையில் நடந்த சிங்கள குட்டி முதலாளிய இளைஞர்களின் எழுச்சி, அந்த யாப்பை எழுதுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது. அதாவது, சிங்கள குட்டி முதலாளிய வர்க்கத்தின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்காக, அந்த யாப்பு அவர்களுக்கு சில சலுகைகளை வழங்கியது. இதன் மூலம், தமிழ் மக்களின் அபிலாஷைகள் மட்டுமல்ல, சிங்கள பாட்டாளி மக்களின் அபிலாஷைகளும் புறக்கணிக்கப் பட்டன. இதன் மூலம், கொல்வின் ஆர்.டி. சில்வா, தனது சோஷலிசக் கொள்கைக்கே துரோகம் இழைத்தார்.

"தமிழ் மக்களுக்கு சோஷலிசம் மேல் வரலாறு ரீதியாக ஒரு கசப்பான அனுபவமே இருக்கின்றது." என்பது தமிழ் வலதுசாரிகளின் கற்பனையான அனுமானம். தமிழ் மக்கள் அந்தளவுக்கு முட்டாள்கள் அல்ல. பாராளுமன்ற அரசியல்வாதிகளின் பித்தலாட்டங்களை தமிழ் மக்கள் நன்றாகவே அறிந்து வைத்திருந்தனர். அவர்கள் தங்களது சொந்த தமிழ் தேசிய அரசியல்வாதிகளையே நம்பவில்லை. அதனால் தான், எண்பதுகளுக்கு பின்னான காலங்களில் மிதவாத தமிழ் தேசிய அரசியல்வாதிகளை புறக்கணித்து விட்டு, புலிகள் போன்ற ஆயுதமேந்திய இளைஞர்களுக்கு ஆதரவளித்தனர். அந்தக் காலங்களில், மார்க்சிய லெனினிசக் கொள்கை கொண்ட விடுதலை இயக்கங்கள் கூட தோன்றின. பெருமளவு தமிழ் மக்கள் அவற்றையும் ஆதரித்தனர்.

தமிழ் மக்களுக்கு சோஷலிசத்தின் மேல் ஈர்ப்பு இருந்த காரணத்தால் தான், 1977 ம் ஆண்டு நிறைவேற்றப் பட்ட வட்டுகோட்டை தீர்மானத்தில் "சோஷலிசத் தமிழீழம்" உருவாக்கப் படும் என்ற கோரிக்கை முன் வைக்கப் பட்டது. விடுதலைப் புலிகள் கூட தமது பிரசுரங்களில் சோஷலிசத் தமிழீழத்திற்கு போராடுவதாக கூறி வந்தனர். தமிழ் மக்களுக்கு சோசலிசம் மேல் வரலாறு ரீதியாக ஒரு கசப்பான அனுபவம் இருந்தது உண்மையாக இருந்தால், அன்று யாருமே சோஷலிசத் தமிழீழத்திற்கு ஆதரவளித்திருக்க மாட்டார்கள்.

Monday, May 07, 2012

மொழியால் பிரிந்த இலங்கையின் கிறிஸ்தவ இனம்


[இலங்கை என்ற இழந்த சொர்க்கம்] (பகுதி - 3)

கொழும்பு நகரிற்கு வடக்கே, விமானநிலையம் போகும் வழியில் அமைந்துள்ளது வத்தளை. அது கொழும்பு மாநகர எல்லைக்கு வெளியே அமைந்துள்ளது. கொழும்பில் வீடு வாங்குவதோ, அன்றில் வாடகைக்கு எடுப்பதோ அதிக செலவு பிடிக்கும் விடயம். அதற்குப் பதிலாக வத்தளையில் பெரிய வீடு கட்டுவதற்கு போதுமான இடம் மலிவாகக் கிடைக்கும். 



போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், பெருமளவு யாழ்ப்பாணத் தமிழர்கள் வத்தளையில் வந்து குடியேறி விட்டார்கள். அவர்களின் உறவினர்கள் வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் பணத்தில் வசதியான வீடுகளைக் கட்டிக் கொண்டார்கள். இதனால் வத்தளை பிரதேசத்தின் சனத்தொகை ஐந்து மடங்காக உயர்ந்து விட்டது. கடந்த இருபாண்டுகளில் புதிதாக வந்து குடியேறிய தமிழர்களை விட, குறைந்தது நூறு வருடங்களாக வாழும் தமிழ்க் குடும்பங்களும் உண்டு. "வத்தளையின் பூர்வகுடிகளான" இவர்களில் ஒரு பகுதியினரும் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தவர்கள் தான். ஆனால், தமது பூர்வீகம் யாழ்ப்பாணம் என்று கூறத் தயங்குவார்கள். இந்தப் பிரிவைச் சேர்ந்த எல்லோரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். அவர்கள் தம்மை "கிறிஸ்தவ இனத்தவர்கள்" என்று அடையாளப் படுத்திக் கொள்கின்றனர்.

லண்டனிலும், கொழும்பிலும் "கிறிஸ்தவ இனத்தை" சேர்ந்த தமிழர்களை சந்தித்திருக்கிறேன். அவர்களுடனான உரையாடல், "வழக்கமான" தமிழர்களுடன் உரையாடுவதைப் போன்று அமைந்திருக்கவில்லை. லண்டனில் வதியும் கிறிஸ்தவ இனத்தவர்கள் எல்லோரும் வசதியானவர்கள். இலங்கையில் வாழ்ந்த காலத்தில் ஏதாவதொரு வியாபாரத்தை நடத்திக் கொண்டிருந்தனர். பௌத்த சிங்கள பேரினவாதத்தின் எழுச்சி காரணமாக, அவர்களது இருப்பு பாதிக்கப்பட்டது. குடும்பத்தோடு இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்து விட்டார்கள். "இலங்கை சிங்களவர்களுக்கான நாடாகி விட்டது. அதிலும் பௌத்த சிங்களவர்கள் மட்டுமே அங்கே வாழலாம்...." இவ்வாறு சொல்லிக் குறைப்பட்டுக் கொண்டார்கள். பௌத்த-சிங்கள பேரினவாதத்தை கடுமையாக எதிர்த்தாலும், அவர்கள் யாரும் தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கவில்லை என்பது வியப்பை அளித்தது. சிங்கள அரசை எதிரியாக பார்த்தார்கள், அதே நேரம் விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சித்தார்கள். அவர்களில் யாரும் பிரிவினையை ஆதரிக்கவில்லை.

பௌத்த சிங்கள பேரினவாதத்தை எதிர்க்கும், புலிகளையும் ஏற்காத, இந்த வகை தமிழர்களின் அரசியல் பின்னணி என்ன? கொழும்பில் வத்தளையில் இன்னமும் வாழ்ந்து வரும் கிறிஸ்தவ தமிழர்களிடம் அதற்கு விளக்கம் கிடைத்தது. "முதன்முதலாக 83 கலவரத்தின் போது எமது வீடும் எரிக்கப்பட்டது... வத்தளையில் கிறிஸ்தவ குடியிருப்புகளை காடையர்கள் தாக்க மாட்டார்கள் என்று நம்பியிருந்தோம்.... ஏனென்றால் நாங்கள் தமிழர்கள் என்று ஒரு போதும் காட்டிக் கொண்டதில்லை..." அவர்களுடன் உரையாடிய பொழுது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. 



ஆங்கிலேய காலனிய காலத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கொழும்பில் குடியேறியவர்கள். போர்த்துக்கேயர் காலத்தில் இருந்து பரம்பரை கிறிஸ்தவர்கள். அதனால் அவர்கள் தம்மை கிறிஸ்தவ இனம் என்று அழைப்பதையே விரும்புகின்றனர். அதாவது, இலங்கையில் முஸ்லிம்கள் தனியான இனமாக கருதலாம் என்றால், இதுவும் சாத்தியமே. இலங்கையில் கிறிஸ்தவ இன உருவாக்கத்திற்கு பல காரணிகள் உண்டு. காலனிய காலகட்டத்தில், சமூகப் படிநிலையில் வெள்ளையர்கள் மேலே இருந்தனர். அவர்களுக்கு அடுத்த நிலையில், கலப்பின பறங்கியரும், உள்ளூர் கிறிஸ்தவர்களும் இருந்தனர். அரச பதவிகளும், சலுகைகளும் அவர்களுக்கு கிடைத்து வந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில், இந்துக்களும், பௌத்தர்களும், முஸ்லிம்களும் முன்னுக்கு வருவது சிரமமமான விடயமாக இருந்தது. அந்த சமூகங்களில் நிலப்பிரபுக்களும், வியாபாரத்தில் ஈடுபட்டோரும் மட்டுமே செல்வந்தர்களாக இருந்தனர்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், கிறிஸ்தவ தமிழர்களின் செல்வாக்கு வெகுவாக குறைந்து விட்டது. இதனால், தற்போதும் ஆங்கிலேயரின் பொற்காலத்தை எண்ணி பெருமூச்சு விடுகின்றனர். அவர்களுக்கு இருக்கும் ஒரேயொரு நம்பிக்கை, ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே. முதலாளித்துவ, மேற்குலக சார்பு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வரும் காலங்களில் தமது நலன்கள் பாதுகாக்கப் படும் என்று நம்புகின்றனர். ஆனால், கொழும்பை அதிகம் பாதித்த, 77 அல்லது 83 கலவரங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் அனுசரணையில் நடத்தப்பட்டவை. நான் இது பற்றிய பேச்சை எடுத்த பொழுது, அதனை அவர்கள் கேட்க விரும்பவில்லை. கதையை வேறு திசைக்கு திருப்பினார்கள்.

நீர்கொழும்பில் இருந்து மொரட்டுவ வரையிலான, கொழும்பை உள்ளடக்கிய மேல்மாகாணம் "கிறிஸ்தவ பெல்ட்" என்று அழைக்கப் படுகின்றது. தேர்தல் வரும் காலங்களில், இந்தப் பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைக்கும். இலங்கையில் சனத்தொகை அடர்த்தி அதிகமாகவுள்ள மாகாணமும் அது தான். ஆகவே, தமிழ் கிறிஸ்தவர்களை விட, சிங்கள கிறிஸ்தவர்களே அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். இலங்கைக் கிறிஸ்தவர்கள், சிங்களவர், தமிழர், என்று மொழி அடிப்படையில் பிரிந்தனர். அதாவது சிங்கள-கிறிஸ்தவ மேட்டுக்குடியினர், பௌத்த சிங்களவர்களுடன் கூட்டுச் சேர்ந்து, சிங்கள பேரினவாத கருத்தியலை உருவாக்கினார்கள். தமிழ் கிறிஸ்தவர்கள் மேலைத்தேய விசுவாசம் காரணமாக தேசிய அரசியலை புறக்கணித்தார்கள். தமிழ்த் தேசியம், மிகத் தாமதாகத் தான், இலங்கை அரசியல் அரங்கில் நுழைந்தது.

வத்தளையில் "தமிழ் பேசும் கிறிஸ்தவ இனத்தை" சேர்ந்தவர்களின் வீட்டில் விருந்தாளியாக அழைக்கப் பட்டிருந்தேன். விருந்து முடிந்த பின்னர் சாவகாசமாக உரையாடும் பொழுது, இனப்பிரச்சினை குறித்து அவர்கள் கருத்தை அறிய விரும்பினேன்.
"வேலை வேண்டுமானால் கட்டாயம் சிங்களம் தெரிந்திருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தார்கள். அதுவே பிரச்சினையின் மூலகாரணம்." என்றார்கள்.
"சிங்களத்திற்கு பதிலாக, அல்லது ஈழப் பிரதேசத்திலாவது தமிழை ஆட்சி மொழியாக்கினால் பிரச்சினை தீர்ந்திருக்குமா?" என்று கேட்டேன்.
"இல்லை, இல்லை... முன்பிருந்ததைப் போல ஆங்கிலமே அரச கரும மொழியாக தொடர்ந்திருக்க வேண்டும்." என்று பதிலளித்தார்கள்.
ஈழம் கோரப்படும் பிரதேசங்களில், எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து தமிழே அலுவலக அல்லது கல்வி மொழியாக இருப்பதை சுட்டிக் காட்டினேன். தமிழில் படிப்பதையும், வேலை செய்வதையும் தரக்குறைவாக பார்ப்பது, அவர்களது பேச்சில் தெரிந்தது. இவர்கள் தமிழீழம் கேட்டால், ஆங்கிலத்தை உத்தியோகபூர்வ மொழியாக்கி இருப்பார்கள்.


குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் சரளமாக ஆங்கிலம் பேசினார்கள். "ஷேக்ஸ்பியரின் ஆங்கிலம்" என்று குறிப்பிடுமளவிற்கு இலக்கண சுத்தமானது. "சிறு வயதில் தப்பித் தவறி தமிழில் பேசினால் அம்மா அடிப்பார் ...." என்று கூறினார், தனியார் நிறுவனம் ஒன்றில் காரியதரிசியாக பணியாற்றும் பெண். ஐரோப்பாவில் எனது வேலை குறித்தும் விசாரித்தார்கள். "நெதர்லாந்திலும் அலுவலகங்களில் ஆங்கில மொழி தானே பாவிப்பார்கள்?" என்று அப்பாவித் தனமாக என்னைக் கேட்டார். அவர்களது அரசியல் பாதை தமிழ்த் தேசியமல்ல, மாறாக ஆங்கில சர்வதேசியம், என்பதை தெளிவு படுத்தினார்கள். அவர்களின் குடும்பத்தில் பலர் கலப்புத் திருமணம் செய்திருந்தனர். சிங்கள முதலியார்கள், இஸ்லாமிய மூர்கள் ஆகிய சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்களுடன் தான் உறவு கொண்டாடினார்கள். அவர்களுக்கு சாதியோ, அன்றில் இனமோ முக்கியமாகத் தெரியவில்லை. ஆனால் பூர்ஷுவாத் தன்மை கொண்ட வர்க்க மனப்பான்மை காணப்பட்டது. அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்ல, வர்க்கம் என்ற சொல்லையே கேள்விப் படாதது போல காட்டிக் கொண்டார்கள்.

கொழும்பின் மத்திய பகுதியை அண்மித்து தான் பணக்கார வட்டாரமான கறுவாத் தோட்டம் இருக்கிறது. இலங்கையின் பெரும்புள்ளிகளும், அரசியல் தலைவர்களும் தமது ஆடம்பர வாசஸ்தலங்களை அங்கே அமைத்துள்ளனர். மேட்டுக்குடியினர் வாழும் பிரதேசம் என்பதால், அதியுயர் பாதுகாப்பு வலையமாக, எப்போதும் போலிஸ் காவல் இருக்கும். இருபது வருடங்களுக்கு முன்பு, சில மாத காலம் அந்த பகுதிக்கு அருகில் வசித்திருக்கிறேன். "(காலஞ் சென்ற) ஜனாதிபதி ஜே.ஆரின் வாசஸ்தலம் அருகில் இருப்பதால், நாம் பாதுகாப்பாக வாழலாம்," என்று புதிதாக வருபவர்களிடம் கூறி தம்பட்டம் அடிப்போம். கறுவாத் தோட்டம் பகுதி முடியும் இடத்தில் பொரளை ஆரம்பமாகின்றது. பொரளை சந்தியை தொட்டுச் செல்லும் சாலையின் இரண்டு வர்க்கங்களை பிரிப்பதை நேரடியாகக் காணலாம். சாலையின் ஒரு பக்கம் மேட்டுக்குடியினரின் ஆடம்பர வீடுகள், மறுபக்கம் அடித்தட்டு மக்களின் சேரிகள். இரண்டுக்கும் இடையிலான தூரம் அதிகமில்லை. கொழும்பின் வேறு பிரதேசங்களை விட, பொரளையில் சிங்கள பேரினவாத சக்திகளுக்கு ஆதரவு அதிகம். அந்த வட்டாரத்தில் பெரும்பான்மையானோர் உழைக்கும் மக்கள். பொரளையில் தான் பிரசித்தி பெற்ற வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ளது. கொழும்பின் பெரிய சுடுகாடான "கனத்த மயானம்" இருப்பதும் அந்தப் பிரதேசத்தில் தான்.

உதாரணத்திற்கு, இலங்கை ஒரு லத்தீன் அமெரிக்க நாடாகவிருந்தால், ஏழைகளும், பணக்காரர்களும் இவ்வாறு அருகருகே வசிப்பது, வர்க்கப் போராட்டத்தை தூண்டி விட்டிருக்கும். இலங்கையில் அவ்வாறு எதுவும் நடக்காததற்கு காரணம், சிங்கள உழைக்கும் வர்க்க மக்கள் மனதில் ஊறியுள்ள இனவெறி. இலங்கை அரசியல்வாதிகள், தீர்க்கதரிசனத்துடன் இனவாதத் தீயை மூட்டி விட்டிருந்தார்கள். பொரளையில் வாழும் உழைக்கும் மக்களின் வழக்கமான மேட்டுக்குடியினர் மீதான கோபத்தை, தமிழர்கள் மீது திருப்பி விட்டார்கள். இனக்கலவரம் வெடிக்கும் காலங்களில், பொரளை சேரியை சேர்ந்த காடையர்கள் சில கிலோமீட்டர் தள்ளியிருக்கும் தமிழ்க் குடியிருப்புகளை தாக்குவார்கள். கலவரத்தை தூண்டி விடுவதற்கு காரணம் கிடைப்பது தான் கஷ்டம். அதனை வழிநடத்துவது இலகு.

கொழும்பு நகரில் எங்கெங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்ற விபரத்தை, தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரே எடுத்து தருவார். அந்தப் பட்டியல் கட்சிக்கு விசுவாசமான தாதாக்களுக்கு கைமாற்றப்படும். தாதாக்கள் தமது அடியாட்படையுடன் சென்று தமிழர்களைத் தாக்குவார்கள். கண்ணில் கண்ட தமிழர்களை வெட்டிக் கொன்று, பெண்களை மானபங்கப் படுத்தி, வீடுகளை சூறையாடும் படலம் ஒரு சில நாட்கள் நீடிக்கும். அந்தக் கொடுமைகளை போலிசும் கண்டு கொள்ளாது. இந்தியாவில், குஜராத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான கலவரமும் இதே பாணியில் தான் நடைபெற்றது. கொழும்பு கலவரத்திற்கும், குஜராத் கலவரத்திற்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை.

83 ம் ஆண்டு ஜூலை மாதம், கனத்த மயானத்தில் 13 இராணுவவீரர்களின் சடலங்கள் தகனம் செய்யப்பட்டன. முதல் நாள் யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவவீரர்கள் அவர்கள். அது ஒரு அரசுக்கெதிரான ஆயுதக்குழுவின் செயலாக இருந்த போதிலும், அனைத்து தமிழர்கள் மீதும் பழி விழுந்தது. சிங்களவர்களின் அனுதாபத்தை தமிழர்கள் மேலான துவேஷமாக மாற்றியதில், ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்கு கணிசமான பங்குண்டு. கனத்த மயானத்தில் இருந்து கிளம்பிய காடையர் கூட்டம், அருகில் இருந்த நாரஹென்பிட்டிய தொகுதியை முதலில் தாக்கியது. நாரஹென்பிட்டிய அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும், அருகிலும் நிறையத் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். சில அடுக்குமாடிக் குடியிருப்புகள் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு, அரசினால் ஒதுக்கப் பட்டிருந்தன.

அவ்வாறான இடத்தில் வாழ்ந்த தமிழர்கள் தாக்கப்பட்டனர் என்றால், மற்ற இடங்களைப் பற்றிக் கூறத் தேவையில்லை. பொரளையில் கடும்பாதுகாப்புக்கு பெயர் போன வெலிக்கடை சிறைச்சாலையில், தமிழ்க் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகை உலுக்கியது. தமிழ்த் தேசிய விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தில் சம்பந்தப்பட்ட, பல்வேறு இயக்கங்களை சேர்ந்த நபர்கள் அங்கே அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். ஒரு வகையில், அரசே அந்தக் கொலைகளை திட்டமிட்டிருக்க வாய்ப்புண்டு. மரணதண்டனை நிறைவேற்ற முடியாத "ஜனநாயக அரசு", சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தீர்த்துக் கட்டியிருக்கலாம். அர்ஜுனின் சினிமாப் படங்களில், தீவிரவாத வில்லன்களை நீதிக்கு புறம்பாக சுட்டுக் கொல்லும் தத்துவம், வெலிக்கடையில் நடைமுறைப் படுத்தப் பட்டிருக்கலாம்.

யாழ்ப்பாணத்தில், எனது பெற்றோரின் ஊரைச் சேர்ந்த பணக்கார குடும்பம் ஒன்றும் அந்தத் தொகுதியில் வசித்து வந்தது. கலவரத்தின் போது, அந்தக் குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டு, சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அதைச் செய்தது வேறு யாருமல்ல. அந்த வீட்டில் வேலை செய்த சிங்கள பணியாளும், அவனது நண்பர்களும். பல சிங்கள அடித்தட்டு வர்க்க மக்கள், தமிழர்களைக் கொன்று, அவர்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்து செல்வம் சேர்த்துள்ளனர். சிங்கள ஏழைகள் தமக்கெதிராக கிளர்ந்தெழும் அபாயத்தை, சிங்கள மேட்டுக்குடி வர்க்கம் சாதுர்யமாக தவிர்த்துக் கொண்டது. "தமிழர்கள் எல்லோரும் செல்வந்தர்கள். அதனால் தான் சிங்களவர்கள் ஏழைகளாக இருக்கின்றனர். தமிழர்கள் எல்லோரும் பதவிகளில் இருக்கின்றனர். அதனால் தான் சிங்களவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை." இத்தகைய தவறான பிரச்சாரங்கள், கல்வியறிவற்ற சிங்கள உழைக்கும் வர்க்க மக்கள் மத்தியில் இலகுவாக ஈடுபட்டது. தமிழ்ப் பிரதேசங்களிலும் அது போன்ற மனப்பான்மை நிலவுவதை பிற்காலத்தில் தேர்ந்து கொண்டேன். "அரசு சிங்களவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது... அவர்களில் ஏழைகளே கிடையாது...." என்பன போன்ற தவறான கருத்துகளை தமிழ்த் தேசியவாதிகள் பரப்பி விட்டிருந்தனர்.

கொழும்பு நகரில் தமிழ்த் தேசிய கருத்தியல் கருக் கொண்ட, "குட்டி யாழ்ப்பாணம்" என்று அழைக்கப்படும், கொழும்பு நகரின் வெள்ளவத்தை தொகுதிக்குள் அடுத்து நுழைவோம். வெள்ளவத்தையில் அழகிய கடற்கரையோரம், சொகுசு பங்களாவில் வாழும் பாக்கியம் கிட்டியவர்கள் வெளிநாடு செல்லத் தேவையில்லை. அனைத்து வசதிகளும் அங்கே கிடைக்கும். அந்தப் பகுதியில் வீடு வாடகைக்கு எடுப்பது அதிகம் சம்பாதிப்போருக்கு மட்டுமே இயலுமான ஒன்று. ஆரம்ப காலங்களில் "பரம்பரைப் பணக்காரர்கள்" மட்டுமே வாழ்ந்து வந்தனர். போருக்குப் பின்னரான இடப்பெயர்வு காரணமாக, வெளிநாட்டுக் காசில் திடீர்ப் பணக்காரர் ஆனவர்களும் அங்கே குடியேறினார்கள். தமிழ் மேட்டுக்குடியினர் மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தோரும் வெள்ளவத்தையை "இரண்டாவது தாயகமாக்கிக்" கொண்டுள்ளனர். அதனால் தான் அதற்கு குட்டி யாழ்ப்பாணம் என்று பெயரிட்டனர்.

யாழ்ப்பாணத் தமிழர்களுடன், அவர்களது தனித்துவமான கலாச்சாரமும் புலம்பெயர்ந்து விட்டது. யாழ் நகரில் தெரு மூலைக்கு ஒன்றாக காணப்படும் "டியூட்டரிகளும்" வெள்ளவத்தையில் பெருகி விட்டன. பனங்கள்ளில் இருந்து புழுக்கொடியல் வரை இறக்குமதியாகின. எனது வாழ்நாளில் கண்ட மாற்றங்கள் காரணமாக, ஒரு கேள்வி என் மனத்தைக் குடைந்து கொண்டிருந்தது. இனக்கலவரங்கள் யாவும் தென்னிலங்கையில் வாழும் தமிழர்களை இனச்சுத்திகரிப்பு செய்யும் நோக்கம் கொண்டவை. முப்பதாண்டுகளாக நடந்த ஈழப்போர், தமிழர்கள் பிரிந்து செல்வதை வலியுறுத்திக் கொண்டிருந்தது. முரண்நகையாக, ஈழப்போரின் பின்னர் பெருந்தொகையான தமிழர்கள் கொழும்பு நகரில் வந்து குடியேறிக் கொண்டிருந்தனர். ஆனால், அங்கிருந்த படியே "தமிழீழமே தீர்வு!" என்று முழங்கிக் கொண்டிருந்தார்கள். உண்மையில் அப்போதே நாடு கடந்த தமிழீழம் என்ற கருத்தியல் தோன்றி விட்டது!

(முற்றும்)


தொடரின் முன்னைய பதிவுகள்:

1 இலங்கை என்ற இழந்த சொர்க்கம்
2 இனம் மாறும் தமிழர்கள் !