Saturday, January 21, 2017

தமிழன்டா! தமிழ் விவசாயிகள் தற்கொலைக்காக போராட வர மாட்டான்டா!!த‌மிழ‌ன்டா! 
ஏறுத‌ழுவ‌ எதிரியும் வ‌ருவான்டா!! 
ஜ‌ல்லிக்க‌ட்டு போராட்ட‌ம், 
இந்திய‌ அர‌சுக்கு கொண்டாட்ட‌ம். 
த‌மிழ‌ர் பார‌ம்ப‌ரிய‌ம் பாதுகாப்போம், 
த‌மிழ் விவ‌சாயிகளை புற‌க்க‌ணிப்போம். 
பீட்சா, பேர்க‌ர் உண்போம், 
பீட்டா எம‌து எதிரி என்போம். 
த‌மிழ‌ன் என்று சொல்ல‌டா, 
த‌ன் ந‌ல‌ம் ம‌ட்டுமே நினைய‌டா!

அன்பான‌ த‌மிழ் இன‌ உண‌ர்வாள‌ர்க‌ளே! 

த‌ய‌வுசெய்து, இந்த‌ இட‌ம் எத்தியோப்பியாவில் இருக்கிற‌தா என்று கேட்டு விடாதீர்க‌ள். தஞ்சாவூரின் காவிரி நதியோர வயல்கள் காய்ந்து போய், அந்தப் பகுதிகள் வறண்ட பிரதேசமாக காணப் படுகின்றன. வரலாறு காணாத கடும் வரட்சி காரணமாக, த‌மிழ் நாட்டின் விவ‌சாய‌ நில‌ங்க‌ள் கடுமையாக பாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. அத‌னால், கடன்களை கட்ட முடியாமல் விவ‌சாயிக‌ள் த‌ற்கொலை செய்வ‌தும் அதிக‌ரித்துள்ள‌து.

த‌மிழ் நாட்டில் க‌ட‌ந்த‌ ஒரு வ‌ருட‌த்தில் ம‌ட்டும் 144 விவ‌சாயிக‌ள் அகால‌ ம‌ர‌ண‌ம் அடைந்துள்ள‌தாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது. இந்தியா முழுவதும் பார்த்தால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டும். (Tamil Nadu Farmer Suicide http://www.ndtv.com/topic/tamil-nadu-farmer-suicide)

பெரும்பாலான தமிழ் விவசாயிகள், எதிர்காலம் சூனியமான அதிர்ச்சி காரணமாக, மார‌டைப்பு க‌ண்டு, அல்ல‌து நோய் வாய்ப்ப‌ட்டு இற‌ந்துள்ள‌ன‌ர். குறைந்த‌து 50 பேராவது த‌ற்கொலை செய்து கொண்டுள்ள‌ன‌ர்.

வ‌ர‌ட்சி, நில‌த்த‌டி ம‌ற்றும் ந‌தி நீர் குறைந்த‌மை போன்ற‌ இயற்கை பேரிட‌ர் இன்றும் தொட‌ர்கின்ற‌து. அதே நேர‌ம், க‌ட‌ந்த‌ வ‌ருட‌ இறுதியில், த‌மிழ் நாட்டில் இடம்பெற்ற இர‌ண்டு பெரிய அர‌சிய‌ல் மாற்ற‌ங்க‌ளும் விவசாயிகளின்  த‌ற்கொலை சாவுக‌ளுக்கு கார‌ண‌மாக‌ இருந்துள்ள‌ன‌.

முதலாவதாக, மோடி கொண்டு வந்த க‌றுப்புப் ப‌ண‌ ஒழிப்பு என்ற பெயரிலான பண முடக்கம், விவ‌சாயிக‌ளை பெரும‌ள‌வு பாதித்துள்ள‌து. வங்கியில் பணம் இருந்தாலும் அதை தேவைக்கு எடுக்க முடியாத நிலை இருந்தது. அதனால் முந்திய கடன்களை கட்டுவதற்கு, அல்லது அவசர செலவுகளுக்கு, விவ‌சாயிக‌ள் க‌ந்துவ‌ட்டிக்கார‌ரிட‌ம் க‌ட‌ன் வாங்கினார்க‌ள். இறுதியில், அதையும் க‌ட்ட‌ முடியாம‌ல் உயிரை மாய்த்துக் கொண்ட‌ன‌ர்.

இரண்டாவதாக, முன்னாள் முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதாவின் மரணமும் விவசாயிகளை கடுமையாகப் பாதித்தது. அவர் சுகயீனமுற்று மாத‌க் க‌ண‌க்கில் ம‌ருத்துவ‌ம‌னையில் கிட‌ந்த‌தால், அர‌ச‌ நிதி ஒதுக்கீடுக‌ளை யாரும் க‌வ‌னிக்க‌வில்லை. அந்த வருட ப‌ட்ஜெட் கூட‌ இய‌ந்திர‌த் த‌ன‌மாக‌ நிறைவேற்ற‌ப் ப‌ட்ட‌து. அதிகார‌ ம‌ட்ட‌த்தில் உள்ள‌ ம‌னித‌ர்க‌ள் இழைத்த‌ த‌வ‌றுக‌ளுட‌ன், இய‌ற்கையும் ஏமாற்றிய‌தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் விவ‌சாயிக‌ள் தான்.

ஜ‌ல்லிக்க‌ட்டுக்கு ஆத‌ர‌வாக‌ போராடும் த‌மிழ‌ர்க‌ளே! இந்த‌ உண்மைக‌ள் உங்க‌ள் க‌ண்க‌ளுக்கு தெரிய‌ விடாம‌ல் ம‌றைப்ப‌த‌ற்குத் தான், அர‌சே திட்டமிட்டு உங்க‌ளுக்கு த‌மிழ் இன‌ உண‌ர்வை ஊட்டி வ‌ருகின்ற‌து. "த‌மிழ‌ன்டா" என்று நீங்க‌ள் பொங்கியெழும் ஒவ்வொரு த‌ட‌வையும் அர‌சு வெற்றிப் பெருமித‌த்தால் பூரித்துப் போகின்ற‌து.

இத‌ற்குப் பிற‌கும், இத்த‌னை இல‌ட்ச‌ம் ச‌ன‌ம் எப்ப‌டி சேர்ந்தார்க‌ள் என்று கேட்கிறீர்க‌ள். இப்போது இது மாதிரி வேறு க‌தை பேசினால், எதிரிக்கு வாய்ப்பாகி விடும் என்று த‌டுக்கிறீர்க‌ள். த‌மிழ‌ர்க‌ளின் உண‌ர்வை திசை திருப்புவ‌தாக‌ கொதிக்கிறீர்க‌ள். உங்களை விம‌ர்சிப்ப‌வ‌ர்க‌ள் நக்க‌ல், நையாண்டி செய்வ‌தாக‌ குமுறுகிறீர்க‌ள்.இந்த‌க் குற்ற‌ச்சாட்டுக‌ள் உங்க‌ளுக்கு பொருந்தாதா? 

அர‌சின் த‌வ‌றுக‌ளால் விவ‌சாயிக‌ள் த‌ற்கொலை செய்த‌ த‌க‌வ‌ல்க‌ள் வெளியே வ‌ர‌ விடாம‌ல் த‌டுத்து, ம‌றைமுக‌மாக‌ அர‌சுக்கு உத‌வுகிறீர்க‌ள். "தமிழராக ஒன்று சேரும் உணர்வு பூர்வ அரசியல்", உண்மையில் இலங்கை, இந்திய அரசுக்களின் நிகழ்ச்சி நிரலின் கீழ் நடக்கின்றது என்ற உண்மையை தாங்கள் அறியவில்லையா?

த‌மிழ்நாடு ம‌ட்டும‌ல்ல‌, இல‌ங்கையும் வரலாறு காணாத வ‌ற‌ட்சியால் பாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. அங்கும் மழை வீழ்ச்சி குறைவு காரணமாக, எரி, குளம் போன்ற நீர் நிலைகளில் தண்ணீர் வற்றி வருகின்றது. இதனால் இலட்சக் கணக்கான விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். (With drought looming, Sri Lanka tries something new: preparing)

ஜ‌ல்லிக்க‌ட்டு என்ற‌ ப‌ழ‌ந்த‌மிழ் பார‌ம்ப‌ரிய‌த்தையும், மாடுக‌ளையும் பாதுகாப்ப‌து ம‌ட்டுமே த‌மிழ‌ர்க‌ளின் க‌ட‌மையா? உங்க‌ளைப் போன்றே ஒரே மொழி பேசும், ஓரினத்தை சேர்ந்த, விவ‌சாயிக‌ளை ம‌ர‌ண‌த்தின் பிடியில் இருந்து பாதுகாப்ப‌து த‌மிழ‌ரின் க‌ட‌மை இல்லையா?

த‌மிழ் ம‌ர‌பை இழ‌ந்தால் த‌மிழ் இன‌மே அழிந்து விடும் என்று க‌வ‌லைப் ப‌டுகிறீர்க‌ள். த‌மிழ் விவ‌சாயிக‌ளை இழ‌ந்தால் ஒரு நேர‌ உண‌வு கூட‌க் கிடைக்காது என்று நீங்க‌ள் க‌வ‌லைப் பட்டதுண்டா? இப்போது உண‌வு வாங்க‌ எம்மிட‌ம் ப‌ண‌ம் இருக்கிற‌து தானே என்று மேட்டுக்குடித் திமிருட‌ன் பேச‌லாம்.  நாளைக்கு உண‌வுப் பொருட்க‌ளின் விலை உய‌ர்ந்தால், அது உங்க‌ள் மாத வ‌ருமான‌த்தை குறைக்கும். அதன் அர்த்தம், எதிர்காலத்தில் நீங்களும் ஏழைகளாகலாம் என்பதை எண்ணிப் பார்க்க‌வில்லையா?

பாலைவன‌மாகிப் போன‌ த‌ஞ்சாவூர் ம‌ண்ணில் செத்துக் கொண்டிருக்கும் விவ‌சாயிக‌ள் உங்க‌ளுக்கு உற‌வுக் கார‌ர்க‌ளாக‌ இல்லாம‌ல் இருக்க‌லாம். ஆனால் அவர்கள் த‌மிழ‌ர்கள் இல்லையா? இதை கேட்டால் திசை திருப்ப‌லாக‌ ப‌டுகின்ற‌தா? அப்ப‌டியானால், உங்க‌ளைப் பொருத்த‌வ‌ரையில் "யார் த‌மிழ‌ன்?" ஆங்கில‌ வ‌ழிக் க‌ல்வி க‌ற்று, அந்நிய‌ நாட்டு நிறுவ‌ன‌த்திற்கு சேவை செய்ப‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே த‌மிழ‌ர்க‌ளா?

உங்க‌ள் த‌மிழ் தேச‌ ம‌ண்ணில், உங்க‌ள் க‌ண் முன்னால் செத்துக் கொண்டிருக்கும் விவ‌சாயிக‌ளை க‌ண்டுகொள்ளாம‌ல், மாடு பிடிக்கும் விளையாட்டுக்கு அனும‌தி கேட்டு போராடுவ‌து எத்த‌னை பெரிய‌ மோச‌டி? இத‌ன் மூல‌ம் நீங்க‌ள் ம‌னித‌நேய‌த்தை நையாண்டி செய்கிறீர்க‌ள் என்ப‌தை உண‌ர‌வில்லையா?

இப்போதும் இந்த‌ உண்மைக‌ள் ம‌ண்டையில் ஏற‌வில்லை என்றால் எதிர்கால‌ம் சூனிய‌மாகும். ப‌ட்டினிச் சாவுக‌ள், எங்கேயோ இருக்கும் எத்தியோப்பாவின் அவ‌ல‌ம் அல்ல‌. அது நாளை த‌மிழ் நாட்டிலும், இல‌ங்கையிலும் ந‌ட‌க்க‌லாம். அப்போது இந்த‌ தமிழ் இன‌ உண‌ர்வுவாத‌ம் எத‌ற்குமே உத‌வ‌ப் போவ‌தில்லை.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

No comments: