Tuesday, January 03, 2017

டார்வினின் பரிணாமக் கோட்பாடு பற்றிய மார்க்சிய கண்ணோட்டம்


மார்க்சியம் என்பது ஒரு விஞ்ஞானம். அது வழமையாக பாடசாலைகளில் கற்பிக்கப் படும் அதே விஞ்ஞான பாடம் என்ற உண்மையை பலர் உணர்வதில்லை. பிரிட்டனின் உயிரியல் விஞ்ஞானி சார்ல்ஸ்   டார்வின் எழுதிய மனிதனின்  பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு, எவ்வாறு மார்க்சியத்தின் அடிப்படைகளில் ஒன்றாக   அமைந்தது என்பதை இந்தக் கட்டுரையில்  பார்க்கலாம்.

குறைந்தது பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள், குரங்கில் இருந்து மனிதன் தோன்றியது பற்றிய கூர்ப்புக் கொள்கையை அறிவியல் பாடத்தில் கற்றிருப்பார்கள். மார்க்சிய ஆசான்களில் ஒருவரான பிரெடெரிக் எங்கெல்ஸ், பரிணாமக் கொள்கை தொடர்பாக மேலும் ஆய்வு செய்து, மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைக் காலத்தில், உழைப்பு வகித்த பாத்திரம் விடுபட்டிருப்பதைக் கண்டறிந்தார்.

பிரெடெரிக் எங்கெல்ஸ் அது பற்றிய நூலொன்றை எழுத விரும்பியிருந்தார். ஆயினும் அந்த முயற்சி கைகூடவில்லை. அதற்கென எழுதிய முன்னுரையை பின்னர் தனியாக வெளியிட்டார். அதுவே "மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்" என்ற சிறு பிரசுரம் ஆகும். மார்க்சியம் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் ஆரம்ப கட்ட மாணவர்களுக்கு மிகவும் பிரயோசனமானது. இலகுவான மொழிநடையில் எழுதப் பட்டுள்ள மிகச் சிறிய நூல்.

1859 ம் ஆண்டு, பிரிட்டிஷ் உயிரியல் விஞ்ஞானி சார்ல்ஸ் டார்வின் "இயற்கைத் தேர்வின் மூலம் வகையினங்களின் தோற்றம்" என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூலை வாசித்த எங்கெல்ஸ், தனது நண்பன் கார்ல் மார்க்சுக்கு எழுதிய கடிதத்தில் "இந்நூல் நமது கண்ணோட்டங்களுக்கு இயற்கை வரலாற்று அடிப்படையை தரும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

டார்வின் எழுதிய இன்னொரு நூலான "மனிதனின் தோற்றமும் பால் தேர்வும்" என்ற நூல், 1871 ம் ஆண்டு லண்டனில் வெளியானது. அது அன்றைய பழமைவாத பிரிட்டனில் அதிர்வலைகளை உண்டாக்கி இருந்தது. மேட்டுக்குடியினரும், கத்தோலிக்க திருச்சபையினரும் காழ்ப்புணர்வுடன் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். "மனித இனம் இயற்கையாக தோன்றியது. அது கடவுளால் படைக்கப் படவில்லை." என்பதை டார்வினின் விஞ்ஞான நூல்கள் ஆதாரத்துடன் நிறுவி இருந்தன. அது தான் கிறிஸ்தவ திருச் சபையினரின் எதிர்ப்புக்கு காரணம். மிக சமீபத்தில், 2016 ம் ஆண்டு தான், வத்திக்கான் திருச்சபை டார்வினின் பரிணாமக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்திருந்தது.

காலநிலையில் பெரிய மாற்றம் இல்லாத, வெப்ப வலையத்திற்குள் அடங்கிய இந்து சமுத்திர பிராந்தியம் ஒன்றில் மனிதக் குரங்குகள் மனிதனாக மாறிய பரிணாம வளர்ச்சி நிகழ்ந்திருக்கலாம். உரோமங்களால் மூடப்பட்ட, மரங்களின் மீது கூட்டங்களாக வாழ்ந்த நமது மூதாதையர் பற்றிய டார்வினின் வர்ணனை அவ்வாறு ஆரம்பிக்கிறது. இந்த இடத்தில் தனது அவதானிப்பை செலுத்திய எங்கெல்ஸ் "மரமேறுதல் என்பது கை,கால்களுக்கு வித்தியாசப் பட்ட தொழில்களை பகிர்ந்து விடுகிறது..." என்று குறிப்பிடுகின்றார். மேலும், அந்த மனிதக் குரங்குகள் தட்டையான நிலத்தில் இடம்பெயர்ந்து செல்லும் பொழுது படிப்படியாக கைகளை பயன்படுத்தும் பழக்கத்தை கைவிட்டு நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தன.

//உரோமம் படர்ந்த நமது மூதாதையரிடையே நிமிர்ந்த நடை என்பது முதலில் ஒரு விதியாகவும் பின்னர் கால அடைவில் அவசியமாகவும் ஆயிற்று. இதற்குள்ளாக, கைகளுக்கு பல்வேறு வகையான இதர வேலைகளின் பொறுப்பும் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது புரியும்.// - எங்கெல்ஸ், "மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்" நூலில்.

"கை உழைப்பிற்கான உறுப்பு என்பது மட்டுமல்ல, உழைப்பின் விளைபயனும் அதுவே." என்கிறார் எங்கெல்ஸ். காட்டுமிராண்டி கால ஆதி மனிதன் கூட கற்களையும், தடிகளையும் ஆயுதமாக பயன்படுத்தத் தெரிந்திருந்தான். கை சுதந்திரமடைந்ததன் மூலம் அது மேலும் மேலும் நுண் திறனை பெற்றது. அதற்கான தசைகளும், எலும்புகளும் பரிணாம வளர்ச்சி கண்டன.

இந்த மாற்றங்கள் பல இலட்சம் வருடங்களாக நடந்திருக்கலாம். மரமேறிகளான குரங்குகளின் கூட்டத்திலிருந்து மனித சமூகம் தோன்றுவதற்குள் இலட்சக் கணக்கான ஆண்டுகள் கடந்திருந்தன. முதலில் உழைப்பு, அதன் பிறகு அத்துடன் சேர்ந்த பேச்சு,முக்கியமாக இரண்டு கைகளின் செயற்பாடுகள் காரணமாக, மனிதக் குரங்கின் மூளை மனிதனின் மூளையாக மாறியது.

மிருகங்கள் தமது சுற்றாடலில் கிடைக்கும் உணவை மட்டும் தேடிக் கொள்வதுடன் நில்லாது, அவற்றை உணவை விரயம் செய்கின்றன. உதாரணத்திற்கு, பெண் மானை பிடித்து உண்ணும் ஓநாய், அதை விட்டு வைத்தால் அதன் குட்டிகள் தனக்கு உணவாகும் என்று நினைப்பதில்லை. புற்கள் முளைக்கும் போதே சாப்பிட்டு விடும் வெள்ளாடுகள், அந்தப் பிரதேசத்தை பசுமையின்றி வெறிச்சோட வைக்கின்றன. மிருகங்களின் இந்த "சூறையாடும் பொருளாதாரம்" காரணமாக பல இனங்கள் அழிந்து விட்டன.

மனிதக் குரங்கில் இருந்து மனிதனாக மாறிய எமது மூதாதையர், சூறையாடும் பொருளாதாரம் காரணமாக உணவு தேடி இடம்பெயர்ந்து சென்றதுடன், உணவுக்கான செடிகளை விட்டு வைக்கவும் அறிந்து கொண்டனர். ஆனால், இவை அத்தனையும் நடந்திருந்தும் அது உழைப்பு என்ற சொல்லுக்கான பொருளைப் பெற்று விடவில்லை. ஆதி மனிதன் தனக்குத் தேவையான உழைப்புக் கருவிகளை செய்யத் தொடங்கியதில் இருந்தே உழைப்பு ஆரம்பமாகின்றது.

மனிதன் சில கருவிகளைக் கொண்டு வேட்டையாடவும், மீன் பிடிக்கவும் அறிந்து கொண்டான். அதாவது, வேட்டையாடுதல், மீன்பிடித்தல் என்றால், மனிதன் தாவர உணவை உட்கொள்வதில் இருந்து விலகி இறைச்சியை உண்ணத் தொடங்கி இருந்தான் என்று பொருளாகும். இறைச்சி உணவு முக்கியமான இரண்டு புதிய முன்னேற்றங்களுக்கு இட்டுச் சென்றது. அதனால் தான் மனிதன் நெருப்பை பயன்படுத்தவும், மிருகங்களை பழக்கவும் கற்றுக் கொண்டான். மேலும் ஊட்டச் சத்து மிக்க பாலும் மனிதனின் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தது.

ஒரு மிருகம் தனது சுற்றாடலில் உள்ள இயற்கையை பயன்படுத்த மட்டுமே செய்கின்றது. ஆனால், மனிதன் அதற்கு எஜமான் ஆகிறான். இயற்கையை தனது குறிக்கோள்களுக்காக ஊழியம் செய்ய வைக்கிறான். சாராம்சத்தில், இதர மிருகங்களுக்கும், மனிதனுக்கும் இடையிலான வித்தியாசம் இதுவே. இந்த வித்தியாசத்தை நிகழ்த்துவது உழைப்பு என்பதை மீண்டும் ஒரு தடவை குறிப்பிட வேண்டும்.

இயற்கையை மனிதன் வெற்றி கொண்டாலும், ஒரு கட்டத்தில் இயற்கை மனிதனை பழிவாங்கி விடுகின்றது. காடுகளை அழிக்கும் மனிதன் அதனால் ஏற்படும் வரட்சி போன்ற தீய விளைவுகளை எண்ணிப் பார்ப்பதில்லை. கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த பின்னர் தான், உருளைக் கிழங்கு ஐரோப்பாவுக்கு அறிமுகமாகியது. அன்றில் இருந்து உருளைக்கிழங்கு ஐரோப்பியரின் முக்கியமான உணவுப் பொருளாகியது.

ஐரோப்பாவில் உருளைக் கிழங்கை பரவ வைத்தவர்கள் கண்டமாலை என்ற நோய் பரவவும் காரணமாக இருந்தனர். அயர்லாந்து மக்கள் உருளைக்கிழங்கை மட்டுமே அன்றாட உணவாக நம்பி இருந்தனர். அந்த நாட்டில் பஞ்சம் ஏற்படுவதற்கு உருளைக்கிழங்கு பயிரில் ஏற்பட்ட தொற்றுநோய் காரணமாக இருந்தது. அதன் விளைவாக, பத்து இலட்சம் பேரை புதைகுழிக்கு அனுப்பவும், இருபது இலட்சம் பேரை அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து செல்லவும் வைத்தது.

"இயற்கையில் எதுவும் தனிமைப் பட்ட நிலையில் நிகழ்வதில்லை. ஒவ்வொன்றும் மற்ற ஒவ்வொன்றையும் பாதிக்கிறது, பாதிக்கப் படவும் செய்கிறது." இவ்வாறு எங்கெல்ஸ் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் எழுதி இருக்கிறார். (மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம், பக்கம் 16) ஆனால், இன்றும் அதன் தாக்கம் பல இடங்களில் எதிரொலிக்கிறது. ஆப்பிரிக்காவில் வரட்சி நிலவினால், இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் வெள்ளம் வரக் காரணமாக அமைகின்றது.

இன்று உலக நாடுகள் ஒன்று கூடி சுற்றுச் சூழல் மாசடைதல் பற்றி விவாதிக்கின்றன. புவி வெப்பமடைதல், கரியமில வாயு (CO2) குறைப்பு பற்றி உச்சி மகாநாடுகள் நடக்கின்றன. இதையெல்லாம் நேரில் கண்ட பின்னரும், சில அரைவேக்காட்டு "அறிவுஜீவிகள்" மார்க்சிய "நமது காலத்திற்கு ஒத்து வராத வறட்டுவாதம்" என்று நிராகரிப்பதானது, அவர்களது அறியாமையை காட்டுகின்றது. அவர்கள் தமது வாழ்க்கையில் எதையும் கற்றிருக்கவில்லை, இனியும் படிக்கப் போவதுமில்லை.


எங்கெல்ஸ் எழுதிய பிற நூல்கள் பற்றிய அறிமுகம்:

No comments: