Monday, January 09, 2017

மரியாதைச் சொல்லான ஸார்/சேர் (Sir) வர்க்கப் போராட்டத்தை குறிக்கிறது!


ஸார்/சேர் (Sir) என்று சொல்வதே வர்க்கப் போராட்டத்தை நினைவுகூரும் சொல் தான்!

 மரியாதைச் சொல்லான "ஸார்"(இந்தியத் தமிழ்), அல்லது "சேர்" (இலங்கைத் தமிழ்) என்பது ஆங்கில Sir என்பதில் இருந்து வந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்த சொல்லுக்குப் பின்னால் உள்ள வர்க்கப் போராட்ட வரலாறு பலருக்குத் தெரியாது.

ஆங்கிலச் சொல்லான Sir, லத்தீன் மொழிச் சொல்லான Sire (ஸீரே) என்பதில் இருந்து வந்தது. மத்திய கால இங்கிலாந்தில், மன்னர்களை அல்லது பிரபுக் குலத்தில் பிறந்த வீரர்களை அழைப்பதற்கு பயன்பட்டது.

அதாவது, சமூகத்தில் மிகவும் உயர்ந்த அந்தஸ்தில் இருந்த மேட்டுக்குடியினரை மட்டுமே Sir என்று அழைக்க வேண்டும். நிலப்பிரபுத்துவ காலத்திய இலங்கை, இந்தியாவில், உயர் சாதியினரை ஐயா என்று அழைக்கும் வழக்கம் இருந்தது இங்கே குறிப்பிடத் தக்கது.

டச்சு மொழியில் தற்போதும் பாவனையில் உள்ள, பழைய ஜெர்மன் சொல்லான mijnheer என்பது, மத்திய காலத்தில் நிலப்பிரபுவை அழைக்கப் பயன்பட்டதால், அது இப்போது விரும்பப் படுவதில்லை. சிலநேரம் மிகவும் மரியாதைக்குரிய சொல்லாக உத்தியோகபூர்வ கடிதங்களில் குறிப்பிடுவார்கள்.

mijnheer (பழைய ஜெர்மன் : myn heer, நவீன ஜெர்மன்: mein herr) என்பது பிரெஞ்சு சொல்லான monsieur என்பதன் நேரடி மொழிபெயர்ப்பு. பிரெஞ்சு மொழியில் monsieur (உச்சரிப்பு: மெசியே) என்று சொல்வார்கள். அதை பிரித்தால் mon (மொ- என்னுடைய) sieur(சியே - ஐயா) என்று வரும்.

இந்திய/இலங்கை சாதிய சமூகத்தில், தாழ்த்தப் பட்ட சாதியினர், உயர்த்தப்பட்ட சாதியினரை ஐயா என்று அழைப்பார்கள். ஆனால், அவர்கள் இவர்களை பெயர் சொல்லி அழைப்பார்கள். பிரான்ஸ் நாட்டிலும் அப்படியான நிலைமை இருந்தது. பிரெஞ்சுப் புரட்சி எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றி அமைத்தது. நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு ஒழிக்கப் பட்டது. பிரஜைகளிடையே சமத்துவம் பேணப் பட்டது.

புரட்சியின் பின்னர் எல்லோரும் எல்லோரையும் ஐயா (monsieur) என்று அழைக்கத் தொடங்கினார்கள். குறிப்பாக முன்பின் தெரியாத ஒருவருடன் பேசும் பொழுது ஐயா (monsieur) அழைக்கும் பழக்கம் வந்தது. ஆங்கிலேயயர்களும் அதைப் பின்பற்றினார்கள். நமது நாடுகளில் அறிமுகப் படுத்தினார்கள்.

ஆகவே, நாம் இன்று ஒருவரை ஸார்/சேர் என்று அழைத்தாலும், ஐயா என்று சொன்னாலும், பிரெஞ்சுப் புரட்சிக் காலகட்டத்தில் நடந்த வர்க்கப் போராட்டத்தை நினைவுகூருகின்றோம். வர்க்கப்போராட்டம் எங்கும் உண்டு. அன்றாட மொழிப் பாவனையிலும் உண்டு. சில "படித்தவர்களுக்கு" கூட இந்த விடயம் தெரியாது.

No comments: