👇👇👇
1. தேசிய இனங்கள்:
இலங்கை/மலேசியா
72% பௌத்த சிங்களவர்/ இஸ்லாமிய மலேயர்.
12% இந்து தமிழர்/ பௌத்த சீனர்
7% முஸ்லிம்கள்/ இந்துக்கள் (தமிழர்கள்).
இரண்டு நாடுகளிலும் இரண்டாவது பெரும்பான்மை இனம் தான் பெரும்பான்மை இனத்தின் பேரினவாத அடக்குமுறையால் பாதிக்கப் பட்டது. அதாவது இலங்கையில் தமிழர்கள் மாதிரி மலேசியாவில் சீனர்கள். பெரும் நகரங்களில் அரசுத் துறைகளில், வணிகத்தில் சிறந்து விளங்கியதால் நாட்டுப் புறங்களில் வாழ்ந்த பெரும்பான்மை இனத்தவரின் பொறாமைக்கும், வெறுப்புக்கும் ஆளாகினர். எங்கேயும் இனப் பிரச்சினைக்கு பின்னால் இருப்பது பொருளாதார பிரச்சினை தான்.
2. ஆட்சி மொழி:
இலங்கையிலும், மலேசியாவிலும் ஆரம்பத்தில் ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருந்தது.
இலங்கையில் 1956 தேர்தலில் பெருமளவு சிங்கள வாக்குகளை வென்ற SLFP சிங்களத்தை ஆட்சி மொழி ஆக்கியது. அதே மாதிரி மலேசியாவில் 1967 தேர்தலில் பெருமளவு மலேயா வாக்குகளைப் வென்ற Pan- Malayan Islamic Party மலே மொழியை ஆட்சி மொழி ஆக்கியது.
3. இனக் கலவரம்:
இலங்கையில் 1956 தேர்தலுக்கு பின்னரான ஆட்சி மாற்றத்தின் விளைவாக கொழும்பு நகரில் தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரம் நடந்தது. அதே மாதிரி மலேசியாவில் 1967 தேர்தலுக்கு பின்னரான ஆட்சி மாற்றத்தின் விளைவாக கோலாலம்பூர் நகரில் சீனர்களுக்கு எதிரான இனக் கலவரம் நடந்தது. நூற்றுக்கணக்கான சீனர்கள் கொல்லப்பட்டனர். அது மலே- சீன இனங்களுக்கு இடையில் மிகப்பெரிய விரிசலை உண்டாக்கியது.
உண்மையில் இலங்கையை விட மலேசியாவில் தான் சிறுபான்மை இனத்தவர் மீதான ஒடுக்குமுறை மிகக் கடுமையாக உள்ளது.
குறிப்பாக, மலேசிய பிரஜைகள் அனைவரும் அரசமைப்பு சட்டத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும். (பெரும்பான்மை இனத்தவருக்கு சிறப்புரிமை வழங்குகிறது என்றெல்லாம் விமர்சிக்க முடியாது.) பிற மதத்தவர்களும்
இஸ்லாமிய மதத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும். (முன்னுரிமை அல்ல, அதற்கும் மேலே!)
அதை விட, "சர்ச்சைக்குரிய" விஷயங்களை பற்றி பேசுவதும், எழுதுவதும் தடைசெய்யப் பட்டுள்ளது. அதாவது மலே இனத்தவரின் உரிமைகள் தொடர்பாக யாரும் கேள்வி எழுப்ப முடியாது. மொழிப் பிரச்சினை பற்றி பேச முடியாது.
பிற்குறிப்பு:
இவ்வளவு அடக்குமுறை இருந்திருந்தால் ஏன் மலேசியாவில் சீனர்கள் தனி நாடு கேட்டு ஆயுத போராட்டம் நடத்தவில்லை என்று யாராவது கேட்கலாம். 2 ம் உலகப் போர் காலத்தில் இருந்து ஒரு தசாப்த காலமாக கம்யூனிஸ்டுகளின் ஆயுத போராட்டம் நடந்தது. கம்யூனிஸ்ட் கட்சியில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் சீனர்கள். கணிசமான அளவில் மலேயர், தமிழர்களும் உறுப்பினர்களாக இருந்தனர். இன வேற்றுமை கடந்த வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்பதில் மலேசிய அரசும், முன்னாள் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களும் உறுதியாக இருந்தனர். அயல் நாடுகளான வியட்நாம், லாவோஸ், கம்போடியாவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்த மாதிரி மலேசியாவில் நடக்கலாம் என்ற அச்சம் நிலவியது.
சீனர்களை பெரும்பான்மையாக கொண்ட சிங்கப்பூரில் நடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு காணப் பட்டதால் தான் சிங்கப்பூரை தனி நாடாக பிரித்து கம்யூனிச எதிர்ப்பாளர் லீ குவான் யூவிடம் கொடுத்தனர். மலேசிய அரசும் அதை தனக்கு சாதகமான விஷயமாக பார்த்தது. அப்போது தானே இஸ்லாமிய- மலே பேரினவாத கொள்கையை முழு வீச்சில் செயற்படுத்த முடியும்?
No comments:
Post a Comment