Sunday, January 15, 2017

தமிழர்கள் ஆப்பிரிக்க இனம்! தைப் பொங்கலே அதற்கு ஆதாரம்!!


தமிழரின் இனம் எது? ஆப்பிரிக்க இனம்!

வருடந்தோறும் தமிழர்களால் கொண்டாடப் படும் தைப் பொங்கலும், மாட்டுப் பொங்கலும், அவர்கள் ஆப்பிரிக்க இனம் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களாக உள்ளன.

அது மட்டுமல்ல, தமிழர்கள் தமது கலாச்சார பாரம்பரியம் என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் ஏறு தழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டு கூட ஆப்பிரிக்க தொடர்பை நிரூபிக்கின்றது.  தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, சில ஆப்பிரிக்க நாடுகளிலும் ஜல்லிக்கட்டு எனும் வீர விளையாட்டு விளையாடப் படுகின்றது. (பார்க்க: ஆப்ரிக்காவில் எருது தழுவுதல்)

ஜல்லிக்கட்டு எனும் மாடு பிடிக்கும் விளையாட்டு, ஒரு காலத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு வடக்கே உள்ள மத்தியதரைக் கடல் நாடுகளில் பரவி இருந்தது. இன்று கிரேக்க நாட்டிற்கு சொந்தமான கிரேட்டா தீவில் அது சம்பந்தமான பண்டைய ஓவியங்கள் கண்டெடுக்கப் பட்டன.

இன்றைக்கும் ஸ்பெயின் நாட்டில் விளையாடப் படும் மாடு அடக்கும் விளையாட்டு, அனேகமாக பினீசிய குடியேறிகளால் அங்கு பரவி இருக்கலாம். இன்றைய லெபனான் நாட்டில் இருந்து புலம்பெயர்ந்த பினீசியர்கள், ஒருகாலத்தில் ஸ்பெயின் உட்பட பல மத்திய தரைக் கடல் நாடுகளில் பரவி வாழ்ந்தனர்.

விவிலிய நூலில், பழைய ஏற்பாட்டில், யூதப் பழங்குடிகள் மாட்டை தெய்வமாக வழிபட்டதாக கூறுகின்றது. ஆண்டவரின் தூதுவர் மோசேஸ், எகிப்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை கானான் நாட்டிற்கு அழைத்துச் சென்றார்.

மோசேஸ் தலைமையில், யூதர்கள் தமக்கு வாக்களிக்கப் பட்ட பூமிக்கு செல்லும் வழியில், ஒரு சிலர் ஓரிறைக் கொள்கையை மறுதலித்து, தங்கத்தால் செய்த காளை மாட்டுக் கடவுளை வணங்கினார்கள். அதனால் ஆத்திரமுற்ற மோசேஸ் அந்த தெய்வச் சிலையை அடித்துடைத்து விட்டு அதை வணங்கியவர்களுக்கு சாபமிட்டார். 

அது விவிலிய நூல் கூறும் புராண கால "மாட்டுக் கதை". உண்மையிலேயே மாட்டை வழிபடும் மதம் பண்டைய எகிப்தில் இருந்தது. அதற்கான வரலாற்றுத் தகவல்கள், அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகள் ஏராளம் உள்ளன.

இன்றைய வடக்கு சூடான், தென் எகிப்துப் பகுதி ஒரு காலத்தில் நுபியா என்று அழைக்கப் பட்டது. அது எகிப்திய நாகரிகத்திற்கு முந்திய நாகரிகத்தைக் கொண்டிருந்தது. தற்போதும் அங்கு வாழும் மக்கள் தனித்துவமான நுபிய மொழி பேசுகின்றனர்.

பண்டைய ஆப்பிரிக்க நாகரிக காலகட்டத்தில் வாழ்ந்த நுபியர்கள், எருது மாட்டையும், சூரியனையும் கடவுளாக வழிபட்டனர். எருது மாட்டின் கொம்புகளுக்கு நடுவில் சூரிய வட்டத் தகடு பொறிக்கப் பட்ட தெய்வச் சிலைகள், இன்றைக்கும் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப் படுகின்றன. கெய்ரோ நகரில் உள்ள எகிப்திய மியூசியத்தில் இன்றைக்கும் அந்தச் சிற்பங்களை நீங்கள் பார்வையிடலாம்.

தைப்பொங்கல் ஏன் கொண்டாடப் படுகின்றது என்பதற்கு, ஒவ்வொரு தமிழனும் பின்வரும் விளக்கத்தை சொல்லத் தெரிந்து வைத்திருப்பான். முதலாவதாக, முற்றத்தில் பொங்கலிட்டு சூரியனுக்கு படைப்பார்கள். அதாவது பண்டைய கால சூரிய வழிபாட்டின் தொடர்ச்சியாக பொங்கல் கொண்டாடப் படுகின்றது. இரண்டாவதாக, மாட்டுப் பொங்கல் அன்று மாட்டுக்கு படைப்பார்கள். அதாவது, பண்டைய தமிழர் மரபில், அவர்களது மத நம்பிக்கைகளில் சூரியனும், மாடும் முக்கிய பங்காற்றி உள்ளது.

பிற்காலத்தில் தோன்றிய எகிப்திய நாகரிகத்தில், அது ஹாதொர் என்ற தெய்வமாக வழிபடப் பட்டது. எருது மாட்டை தெய்வமாக வழிபடும் மதம் மேற்கே கிரேக்கம் வரையில் பரவியிருந்தது. கிரீஸ் நாட்டின் பகுதியான கிரேட்டா தீவில் அதற்கான ஆதாரங்கள் உள்ளன.

அரேபிய தீபகற்பத்திலும் எருது மாட்டை வழிபடும் மதம் பரவி இருந்தது. இஸ்லாத்திற்கு முந்திய காலகட்டத்தில், இன்றைய பாஹ்ரைன் நகரில் பிரமாண்டமான கோயில் ஒன்று இருந்தது. ஆண்டுதோறும் அங்கு நடக்கும் திருவிழாவிற்கு இன்றைய ஈரான், ஈராக், மற்றும் அரேபியாவில் இருந்து பெருமளவு பக்தர்கள் யாத்திரை சென்றனர்.

பாஹ்ரைன் தீவின் பழைய பெயர் "அவ்வல்" ஆகும். அது அந்த எருது மாட்டுக் கடவுளின் பெயர் ஆகும். இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ள, அரபு மொழியில் அவ்வல் என்ற சொல்லுக்கு சிறப்பிடம் உண்டு. அந்தச் சொல்லுக்கு முதன்மையானது, முந்தியது, பண்டைய சிறப்பு வாய்ந்தது என்று பல பொருள்கள் உண்டு.

தமிழ் மொழியில் அவ்வை என்று குறிப்பிடும் சொல், ஔவையார் என்ற புலவரை மட்டும் குறிக்கவில்லை. பண்டைய சிறப்பு வாய்ந்தது என்ற அர்த்ததிலும் பயன்படுத்தப் பட்டது. மேலும், இந்து மதக் கோயில்களில் இன்றைக்கும் எருது மாட்டு தெய்வமான நந்திக்கு முதல் வணக்கம் செலுத்த வேண்டும்.

நந்தி வழிபாடு பண்டைய ஆப்பிரிக்க மதத்தின் எச்சமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஆரியமயமாக்கப் பட்ட இந்து மதம் தான், நந்தியை சிவபெருமானின் வாகனம் ஆக்கியது. இந்து மதம் வருவதற்கு முன்னர், இந்தியாவில் நந்தி தனியான கடவுளாக வழிபடப் பட்டது. அதை நிரூபிக்கும் வகையில் நந்திக் கடவுளின் மகிமைகளை கூறும் தனியான புராணக் கதைகள் உள்ளன. மேலும், நந்தி என்பது ஒரு சமஸ்கிருதச் சொல் ஆகும். அதன் பூர்வீகப் பெயர் என்னவென்பது யாருக்கும் தெரியாது.

"தைப்பொங்கல் தமிழர் திருநாள்" என்று நாங்கள் பெருமையாக சொல்லிக் கொள்ளும் ஒவ்வொரு நிமிடமும், எமது இனம் ஆப்பிரிக்க இனம் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழ் மொழியை பேசுவதால் தமிழர்கள் தனியான இனம் என்ற கருதுகோள், பிற்காலத்தில், இருபதாம் நூற்றாண்டில் உருவான தேசியவாதக் கருத்தியல் ஆகும். ஒரு குறிப்பிட்ட மொழியை பேசுகிறவர்கள், தனியான இனம் என்ற கற்பிதம், ஆங்கிலேய காலகட்டத்தில் எம் மீது திணிக்கப் பட்டது. இன்றைக்கும் சிலர் அதை உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 

1 comment:

Sakthi raj said...

காளைகள் எகிப்து கிரேக்கம் பினீசியர் ஆப்ரிக்கர் என வழிபடப்பட்டிருக்கும் போது ஆப்ரிக்காவை மட்டும் தமிழர் தொடர்பாக குறிப்பிடுவது ஏன்..??