Friday, January 06, 2017

தமிழின விவசாய - முதலாளிகளை புரிந்து கொள்வதற்கான லெனினின் நூல்


லெனின் எழுதிய "குட்டி முதலாளித்துவ சோஷலிசமும் பாட்டாளி வர்க்க சோஷலிசமும்" நூலை வாசித்தல்.

சோஷலிசம் பேசுவோர் எல்லாம் மார்க்சியவாதிகளோ அல்லது பொதுவுடைமைவாதிகளோ அல்ல! படித்தவர்கள் பலருக்கும் இந்த உண்மை தெரிவதில்லை. மேற்கு ஐரோப்பாவில் உள்ள சமூக ஜனநாயகக் கட்சிகளும் சோஷலிசம் பேசின. ஆனால் அது முதலாளித்துவத்திற்கு கீழ் அடங்கியது. அதனால், அன்று சோஷலிசம் பேசிய இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சிகள், காலப்போக்கில் வலதுசாரி சந்தர்ப்பவாதக் கட்சிகளாக மாறிவிட்டன.

ஐரோப்பாவில் மார்க்சியவாதிகள் அல்லாத, சமூக ஜனநாயகவாதிகளும் இல்லாத சோஷலிஸ்டுகள் இருக்கின்றனர். பொதுவாக அனார்க்கிஸ்டுகள் என்றழைக்கப் படுகின்றனர். அதற்குள் பல தத்துவ ஆசிரியர்களை பின்பற்றும் சிறு குழுக்கள் உள்ளன. மார்க்சியத்தின் மூலவர்களாக கருதப்படும் கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் வாழ்ந்த காலத்தில், அவர்களுடன் முரண்பட்ட வேறு சில தத்துவ அறிஞர்களும் இருந்தனர்.

பிரான்ஸில் புருதோன், பிளாங்கி போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். பாரிஸ் கம்யூன் புரட்சியில் முக்கிய பங்காற்றியவர்கள். பிற ஐரோப்பிய நாடுகளிலும் அவர்களது ஆதரவாளர்கள் இருந்தனர். ரஷ்யாவை சேர்ந்த பகுனின் என்ற அனார்க்கிச தத்துவ அறிஞர், கார்ல் மார்சுடன் அடிக்கடி முரண்பட்டு வந்தார். அவருக்கும் பெருமளவு ஆதரவாளர்கள் இருந்தனர். நெதர்லாந்தை சேர்ந்த டொமேலா நியூவன்ஹைஸ் போன்றோர் தத்தம் நாட்டுக்குள் பிரபலமாக இருந்தனர்.

அராஜகம் என்ற சொல் அன்றாட மொழிப் பாவனையில் தவறான அர்த்தத்துடன் பிரயோகிக்கப் படுகின்றது. கிரேக்க மொழியில் "அனார்க்கி" என்றால் அரசு இன்மை என்று அர்த்தம் வரும். தமிழில் "அராஜகம்" (ராஜ்ஜியம் இல்லை) என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஆகையினால், அரசு என்ற அமைப்பை ஏற்றுக் கொள்ளாதவர்கள் "அராஜகவாதிகள்". (அந்த அர்த்தத்துடன் தான் மார்க்சிய நூல்களில் குறிப்பிடப் படுகின்றனர்.) பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் "அனார்க்கிஸ்டுகள்" என்று அழைக்கப் படுகின்றனர்.

ரஷ்யாவில் கம்யூனிஸ்டுகளின் புரட்சி நடப்பதற்கு பல வருடங்களுக்கு முன்னரே, அந்நாட்டில் அராஜகவாதிகள் செயற்பட்டு வந்தனர். "நரோட்னிக்குகள்" என்ற பெயரில் அமைப்பு வடிவம் பெற்றிருந்தனர். ரஷ்ய மொழியில் "நரோட்னி" என்றால் மக்கள் என்று அர்த்தம். 1880 ம் ஆண்டளவில் நரோட்னிக்குகளின் செயற்பாடுகள் உச்சத்தில் இருந்தன. ரஷ்ய சக்கரவர்த்தி சார் அலெக்சாண்டர் நரோட்னிக்குகளின் குண்டுவெடிப்பில் கொல்லப் பட்டார். அந்த சம்பவம் தொடர்பாக லெனினின் அண்ணனும் (ஒரு நரோட்னிக்) கைதாகி, சிறை வைக்கப் பட்டிருந்தார்.

நரோட்னிக்குகள் மார்க்சியவாதிகள் அல்லர். அவர்கள் அனார்க்கிஸ்டுகள். சார் மன்னனின் இரகசியப் பொலிஸ் அடக்குமுறை காரணமாக பலவீனப் பட்டிருந்தனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அதாவது 1901 ம் ஆண்டு, சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள் என்ற கட்சி தோன்றியது. ரஷ்யா முழுவதும் பரவியிருந்த சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள் கட்சி, பழைய நரோட்னிக்குகளின் கொள்கைகளை பெருமளவில் பின்பற்றி வந்தது.

சோஷலிஸ்ட் புரட்சியாளர் கட்சி, ஓரளவு மார்க்சிய சார்பானதாகவும் காட்டிக் கொண்டது. ஆனால், மார்க்சியத்தை திரிபு படுத்தி வந்தது. அதாவது, மார்க்ஸ் சொன்ன தொழிற்துறை பாட்டாளிவர்க்கத்தை புறக்கணித்தது. அதற்குப் பதிலாக விவசாயிகள் மத்தியில் வேலை செய்து, அவர்களை அணிதிரட்டியது. அவர்கள் ரஷ்யாவில் விவசாயிகளின் புரட்சியை உண்டாக்குவதை குறிக்கோளாக கொண்டிருந்தனர்.

இந்த வரலாற்றுப் பின்னனியில் தான், லெனின் எழுதிய "குட்டி முதலாளித்துவ சோஷலிசமும் பாட்டாளி வர்க்க சோஷலிசமும்" என்ற நூலை வாசித்து அறிய வேண்டும். ஆரம்ப கால மார்க்சிய மாணவர்கள் வாசிப்பதற்கு இலகுவான நூல் அது. இருபது பக்கங்கள் மட்டுமே. மேற்படி பின்னணி அறிவிருந்தால் இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.

//நரோடியவாதம் ஓரளவுக்கு ஒருங்கிணைப்பான, முரணில்லாத தத்துவமாகும். அது ரஷ்யாவில் முதலாளித்துவம் ஆதிக்கம் செலுத்தும் என்பதை மறுத்தது. மொத்த பாட்டாளி வர்க்கத்தின் முன்வரிசைப் போர்வீரர்களாக தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர்கள் வகிக்கும் பாத்திரத்தை அது மறுத்தது. அரசியல் புரட்சி மற்றும் முதலாளித்துவ  அரசியல் சுதந்திரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அது மறுத்தது. விவசாயக் கம்யூன், அதன் வேளாண்மையின் அற்பமான வடிவங்களிலிருந்து உடனடியான சோஷலிஸ்ட் புரட்சி ஏற்பட வேண்டும் என்று அது போதித்தது.// - லெனின், (குட்டி முதலாளித்துவ சோஷலிசமும் பாட்டாளி வர்க்க சோஷலிசமும் நூலில் இருந்து.)

இன்றைக்கும் மேற்கு ஐரோப்பாவில் வாழும் அனார்க்கிஸ்டுகள் அப்படித் தான் இருக்கிறார்கள். அதாவது, முதலாளித்துவ கட்டமைப்பை முழுவதுமாக நிராகரிக்கிறார்கள். சோஷலிச அரசு என்ற அமைப்பையும் எதிர்க்கிறார்கள். நேரடியாக கம்யூனிச காலகட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள். மக்கள் எல்லோரும் சிறு சிறு குழுக்களாக, விவசாயக் கம்யூன் அமைப்பில் சேர்ந்திருக்க வேண்டும். அன்றைய ரஷ்யாவில் விவசாயப் பொருளாதாரம் முக்கியமாக இருந்தது. அதனால், நரோட்னிக்குகள், அதற்குப் பின்னர் சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள் கட்சியும், விவசாயிகள் மத்தியில் ஆதரவை தேடிக் கொண்டதில் வியப்பில்லை.

இருப்பினும், மேற்கு ஐரோப்பாவில் உள்ள அனார்க்கிஸ்டுகள் தொழிலாளர் மத்தியில் வேலை செய்வதை, நாம் இந்த இடத்தில் மறுக்க முடியாது. ரஷ்யாவிலும் அந்த வேறுபாடு இறந்தது. ரஷ்யப் புரட்சியின் தொடக்கக் காலத்தில், சில சோவியத்துகள் அனார்க்கிச தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துள்ளன. லெனினின் இந்த நூலானது, அனார்க்கிஸ்டுகள் என்று பொத்தாம்பொதுவாக குறிப்பிடவில்லை. நரோட்னிக் அமைப்பு, மற்றும் சோஷலிஸ்ட் புரட்சியாளர் கட்சியை மட்டும் தனியாக விமர்சிக்கிறது.

அது சரி. லெனின் தலைமையிலான மார்க்சிஸ்டுகளுக்கும், நரோட்னிகளுக்கும் (அல்லது சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள்)என்ன வித்தியாசம்? 
//நரோட்னிக்குகள் விவசாயியை ரஷ்யாவின் எதிர்காலத்தை படைக்கப் போகும் மனிதனாக கருதினார்கள்.... மார்க்சியவாதிகள் தொழிலாளியை ரஷ்யாவின் எதிர்காலத்தை படைக்கப் போகும் மனிதனாக கருதினார்கள்....// - லெனின் (மேற்படி நூலில்)

அதாவது, தொழிலாளர் வர்க்கமே புரட்சியின் முன்னிலை போர்வீரர்கள் என்பது மார்க்சியம். கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில், ரஷ்யா ஒரு பின்தங்கிய விவசாய நாடாக இருந்தது. மேற்குடன் ஒப்பிடும் பொழுது, அங்கு முதலாளித்துவத்தின் வளர்ச்சி குறைவாக இருந்தது. அதனால், இப்போதைக்கு அந்த நாட்டில் புரட்சி நடக்காது என்று கார்ல் மார்க்ஸ் சொல்லி இருக்கிறார். ரஷ்யாவில் மார்க்சியத்தை விரிவு படுத்திய லெனின், விவசாயிகளின் போராட்டத்தையும் அத்துடன் இணைத்திருந்தார். (பிற்காலத்தில் லெனினிசம் என்ற கோட்பாடு உருவாக அதுவும் ஒரு காரணம்.) அது அனேகமாக லெனின் நரோட்னிக்குகளிடம் இருந்து கற்றுக் கொண்ட பாடமாக இருக்கலாம் என்று மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

விவசாயிகளின் பிரச்சினைக்கு தாம் முக்கியத்துவம் கொடுப்பதை, லெனினும் இந்த நூலில் உறுதிப் படுத்துகின்றார். மார்க்சிய நூல்களை ரஷ்யாவுக்கு அறிமுகப் படுத்திய பிலேக்கனோவ் (பிற்காலத்தில் லெனினுக்கு எதிராக மென்ஷெவிக் சமூக ஜனநாயக கட்சியில் இருந்தார்.) காலத்திய பிரசுரம் ஒன்றை லெனின் மேற்கோள் காட்டுகிறார். 

//பழைய முரணில்லாத நரோடியவாதக் கருத்துக்களை எடுத்துக் கூறி, நமக்கிடையே உள்ள உண்மையான வேறுபாடு, விவசாயப் பிரச்சினையை கணக்கிலெடுத்துக் கொள்வதில் விருப்பம் காட்டுவதிலோ, அல்லது விருப்பம் காட்டாதிருப்பதிலோ, அதை அங்கீகரிப்பதிலோ அல்லது அங்கீகரிக்கத் தவறுவதிலோ அடங்கியிருக்கவில்லை. ரஷ்யாவில் இன்றைய விவசாய இயக்கம் மற்றும் இன்றைய விவசாயப் பிரச்சினை பற்றிய வேறுபட்ட மதிப்பீடுகளில் தான் இருக்கிறது.... பிளேஹானவ் எழுதிய நமது வேறுபாடுகள் என்ற பிரசுரத்தில் இருந்து தொடங்கி ருஷ்ய மார்க்சியவாதிகளின் முக்கியமான எழுத்துக்கள் அனைத்துமே பிரதானமான ருஷ்ய விவசாயப் பிரச்சினையில் நரோடியவாதக் கருத்துக்களின் தவறுகளை விளக்குவதற்காகவே எழுதப் பட்டிருக்கின்றன.// - லெனின் (மேற்படி நூலில்)

அன்றிருந்த சோஷலிஸ்ட் புரட்சியாளர் கட்சி, விவசாய இயக்கத்தை முன்னெடுப்பதால் தாம் மட்டுமே உண்மையான சோஷலிஸ்டுகள் என்று சொல்லிக் கொண்டனர். ஆனால், லெனின் அது சோஷலிஸ்ட் இயக்கம் அல்ல, மாறாக ஒரு "ஜனநாயக - முதலாளித்துவ இயக்கம்" என்கிறார். அதற்கான காரணங்களை அடுக்குகிறார். 
//இன்றைய விவசாய இயக்கத்தை ஜனநாயக முதலாளித்துவ இயக்கம் என்று ஏன் சொல்கிறோம்? ஏனென்றால் அதிகார வர்க்கம் மற்றும் நிலப்பிரபுக்களின் ஆட்சியை ஒழித்த பிறகு அது சமூகத்தில் ஜனநாயக அமைப்பை ஏற்படுத்தும். ஆனால் அந்த ஜனநாயக சமூகத்தின் முதலாளித்துவ அடிப்படையை மாற்றாது. மூலதனத்தின் ஆதிக்கத்தை ஒழிக்காது.// - லெனின் (மேற்படி நூலில்)

இந்தக் கருதுகோள் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கும் முக்கியமானது. அவை இன்றைக்கும் விவசாய பொருளாதாரத்தை முக்கியமாகக் கொண்ட நாடுகளாக உள்ளன. பழைய நிலப்பிரபுத்துவத்தின் எச்சங்கள் இன்னமும் அங்கே காணப்படுகின்றன. அதே நேரம், பணக்கார விவசாயிகள் அல்லது விவசாய முதலாளிகள் என்ற புதிய வர்க்கமும் உருவாகி உள்ளது. அது நிலப்பிரபுத்துவத்தை அல்ல, முதலாளித்துவ பொருள் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டது. மேலும் பழைய நிலப்பிரபுக்களுக்கும், புதிய பணக்கார விவசாயிகளுக்கும் சம்பந்தம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

//ருஷ்யாவின் இன்றைய நிலப்பிரபுத்துவப் பொருளாதாரம் முதலாளித்துவம், பண்ணையடிமை முறை ஆகிய இரண்டின் கூறுகளையும் இணைத்துக் கொண்டிருக்கிறது.// - லெனின்

லெனினின் கூற்றை மெய்ப்பிப்பது போன்று, ஈழத்தமிழ் விவசாயிகளும் அவர்களது பிள்ளைகளும் இன்று தீவிர முதலாளித்துவ ஆதரவு சக்திகளாக வளர்ந்துள்ளதை கண்கூடாகக் காணலாம். எழுபதுகளில் கூட, நிலப்பிரபுத்துவத்தின் எச்சங்களை தன்னகத்தே கொண்டிருந்த யாழ்ப்பாண விவசாய சமூகத்தில், லெனின் கூறுவது போன்ற விவசாய - முதலாளிகள் பெருமளவில் தோன்றினார்கள். முதலாளித்துவ பொருளாதாரத்தால் நன்மை அடைந்த அவர்களது பிள்ளைகள், வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொண்ட பின்னர், கம்யூனிசத்தை வெறுப்பவர்களாக, இடதுசாரி எதிர்ப்பாளர்களாக காட்சியளிக்கின்றனர். இதனை நான் எனது சொந்த அனுபவத்தில் பல தடவைகள் கண்டிருக்கிறேன். கம்யூனிசத்தை எதிர்த்து என்னுடன் வாதம் செய்தவர்களின் சமூகப் பின்னணி, எப்போதும் விவசாய - முதலாளி வர்க்க குடும்பமாக இருப்பது ஒரு தற்செயல் அல்ல.

இந்தியா, மேற்கு வங்காளத்தில் நடந்த நக்சல்பாரி கிராம விவசாயிகளின் எழுச்சி பற்றி பலரும் அறிந்திருப்பார்கள். அங்கிருந்த நிலவுடையாளர்கள், பண்ணையார்களுக்கு எதிராக விவசாயிகள் கிளர்ந்தெழுந்து அவர்களை விரட்டி அடித்தார்கள். அந்த எழுச்சியானது பிற்காலத்தில் நக்சலைட் இயக்கம் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது. 

நாற்பது வருடங்களுக்குப் பின்னர் அங்கு சென்ற ஊடகவியலாளர் ஒருவர், நக்சல்பாரி கிராம மக்கள் இன்று முதலலாளித்துவ நுகர்பொருள் கலாச்சாரத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள் என்று எழுதி இருந்தார். நக்சல்பாரி இயக்கம் வெறுமனே விவசாயிகள் இயக்கம் அல்ல என்ற உண்மையை பலர் கவனிக்கத் தவறி விடுகின்றனர். நக்சலைட்டுகள் இன்று, இந்திய முதலாளித்துவத்திற்கு எதிராக, விவசாயிகளுடன், கிராமப் புற பாட்டாளி வர்க்கத்தையும் அணிதிரட்டி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

//அதிகார வர்க்கத்தினருக்கும் நிலப்பிரபுக்களுக்கும் எதிரான போராட்டத்தை, எல்லா விவசாயிகளையும் வசதியுள்ளவர்கள் மற்றும் நடுத்தர விவசாயிகளையும் கூடச் சேர்ந்து நடத்த முடியும், அவ்வாறு தான் நடத்த வேண்டும். மறு பக்கத்தில் முதலாளி வர்க்கத்திற்கு எதிரான, ஆகவே வசதியுள்ள விவசாயிகளுக்கும் எதிரான போராட்டத்தைக் கிராமப்புற பாட்டாளி வர்க்கத்தின் துணையோடு மட்டுமே சரிவர நடத்த முடியும்.// - லெனின் (மேற்படி நூலில்)

ஆகவே, விவசாயிகளின் போராட்டத்தையும், பாட்டாளிகளின் போராட்டத்தையும் ஒன்றிணைக்க வேண்டிய அவசியத்தை லெனின் வலியுறுத்துகிறார். தொழிற்சாலைகளில் வேலை செய்யும் நகர்ப்புற பாட்டாளிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, விவசாய பண்ணைகளில் வேலை செய்யும் கிராமப்புற பாட்டாளிகளுக்கும் கொடுக்க வேண்டும். அவர்களை ஒரே வர்க்கமாக நிறுவன மயப் படுத்த வேண்டும்.

நிலப்பிரபுக்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் ஒரு புரட்சிகரமான போராட்டம் தான். ஆனால், அது ஒரு ஜனநாயகப் (வெகுஜன) போராட்டம் மட்டுமே. அதுவே ஒரு வர்க்கப் போராட்டம் ஆகி விடாது. 


மார்க்சிய நூல்கள் பற்றிய அறிமுகக் கட்டுரைகள்: 

No comments: