Wednesday, September 27, 2017

"வெள்ளையாக இருந்தால் வெள்ளாளர்கள்": ஈழத்தின் சாதிய- நிறப் பாகுபாடு


அருளினியனும், அவர் எழுதிய கேரள டயரீஸ் நூலும் பற்றி சில குறிப்புகள்....

எனக்கும், அருளியனுக்கும் இடையில் நிறைய கொள்கை முரண்பாடுகள் உள்ளன. இருவரும் ஒத்த கருத்துடையவர்கள் அல்ல. கடந்த காலத்தில் அது தொடர்பாக வாதங்கள் செய்துள்ளோம். என்னைப் பொறுத்தவரையில், அவர் ஒரு லிபரல் ஜனநாயகவாதி. அதனால், கொள்கை ரீதியாக எதிராளி என்றாலும், தனிப்பட்ட ரீதியாக நட்புடன் பழகுவார். இந்தளவு புரிந்துணர்வு பலரிடம் காணக் கிடைப்பதில்லை.

அவர் "வேர்களைத் தேடி" என்ற பெயரில் கேரளா பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்த அனுபவங்களை, ஆரம்பித்தில் தனது முகநூலில் பதிவிட்டு வந்தார். பின்னர் நூல் வடிவில் கொண்டு வர விரும்பினார். ஒரு ஈழத் தமிழராக, ஈழத்திற்கும் கேரளாவுக்கும் என்ன தொடர்பு என்று ஆராய்ந்துள்ளார். அயல் மாநிலமான தமிழ்நாட்டில் இருப்பவர்கள் கூட அறிந்திராத பல உண்மைகளை கண்டுபிடித்திருக்கிறார். அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும். இது வருங்கால சந்ததிக்கும் உதவும்.

அருளினியன் முகநூலில் எழுதிய பதிவுகளில், யாழ்ப்பாண வெள்ளாளர் பற்றிய கட்டுரை, அன்று பலரால் பாராட்டப் பட்டது. அப்போதே நானும் அது குறித்த விமர்சனத்தையும் வைத்திருந்தேன்.

யாழ்ப்பாண சாதி அமைப்பின் யதார்த்தத்தை படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது. தகவல்கள் அனைத்தும் உண்மை தான். ஆனால், சாதியத்தை அழிப்பது எப்படி என்ற கேள்விக்கு அவரிடம் பதிலில்லை. சாதியக் கட்டமைப்பு இன்று வரைக்கும் நிலைத்திருப்பது எப்படி என்பதற்கும் காரணம் தெரிந்திருக்கவில்லை. "புலிகளின் காலம் பொற்காலம். பிராபாகரன் இன்றிருந்தால் சாதியம் மறைந்திருக்கும்..." என்பது போன்ற மேலோட்டாமான பார்வையை கொண்டிருந்தார்.

சுருக்கமாக: யாழ்ப்பாணத்தில் உயர்சாதியினராக கருதப்படும் வெள்ளாளர்களின் போலிக் கெளரவம், சாதி அபிமானம், பழமைவாதம் போன்றவற்றை தான் அருளினியன் விமர்சித்துள்ளார். உள்ளதை உள்ள படியே போட்டு உடைத்துள்ளார்.

வெள்ளாள ஆதிக்க சாதியினர் மீதான மென்மையான விமர்சனத்தைக் கூட, ஒரு சிலரால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு, யாழ்ப்பாணத்தில் இன்னமும் சாதிவெறி தாண்டவமாடுகின்றது. பலர் என்ன தான் வாய் கிழிய தமிழ்த் தேசியம் பேசினாலும், சந்தர்ப்பம் வரும் போது தாங்களும் சாதிமான்களே என்பதை நிரூபிக்கின்றனர்.

அருளினியன் தனது நூலை வெளியிட தேர்ந்தெடுத்த இடமும் குறிப்பிடத் தக்கது. அவர் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவராக இருப்பதால், தனது முதல் நூலை அங்கே வெளியிட விரும்பியதில் தவறில்லை. இருப்பினும், யாழ் இந்துக் கல்லூரி ஒரு காலத்தில் சாதிவெறியர்களின் கூடாரமாக இருந்ததை மறக்கக் கூடாது, மறுக்கவும் முடியாது.

முன்னொரு காலத்தில், யாழ் இந்துக் கல்லூரியில் வெள்ளாளர்கள் மட்டுமே படிக்கலாம் என்ற நிலைமை இருந்தது. அதிலும் இந்து மாணவர்கள் மட்டுமே படிக்கலாம். அப்போது அது தனியார் பாடசாலை. அதனால் (சைவ-வெள்ளாள) முதலாளிகள் வைத்ததே சட்டமாக இருந்தது. அது பின்னர் பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் அரசுடைமை ஆக்கப் பட்டது.

அதன் பிறகு அனைத்து சாதிகளை சேர்ந்த மாணவர்களும் ஏற்றுக் கொள்ளப் பட்டனர். அப்போதும் பழைய சாதிய சின்னங்கள் அகற்றப் படவில்லை. இப்போதும் அங்கே ஆறுமுக நாவலருக்கு சிலை உள்ளது. அத்துடன் தீய வழியில் பிரபலமான சாதிவெறியன் காசிப்பிள்ளை என்பவரின் பெயரில் இல்லமும் உள்ளது.

இதிலே வேடிக்கை என்னவென்றால், இந்துக் கல்லூரியின் பெயரைச் சொல்லித் தான் அருளினியன் மீது சேறடிக்கப் பட்டது! அருளினியனையும், அவரது நூலையும் எதிர்த்தவர்கள் 90% சாதி அபிமானிகள் தான். அதற்காக, எதிர்த்தவர்கள் எல்லோரும் வெள்ளாளர்கள் என்று அர்த்தம் அல்ல.

இந்தியாவில் பார்ப்பனீயம் போன்று, யாழ்ப்பாணத்தில் வெள்ளாளீயம் உள்ளது. அதன் அர்த்தம், பிற சாதிகளை சேர்ந்தவர்களும், தாழ்த்தப் பட்டவர்களும், அதே மனப்பான்மையுடன் இருப்பார்கள். இன்னொருவிதமாக சொன்னால், இது அடிப்படையில் பழமைவாதம் பேணுவோரின் நவீன அரசியல் அவதாரம்.

ஏற்கனவே ஈழத்து தமிழ்த் தேசியம் பழமைவாத பிற்போக்குத் தனங்களின் மீதே கட்டப் பட்டது. உலகில் உள்ள பிற தேசியங்கள் மாதிரி, தமிழ்த் தேசியமும் தனக்கென சில புனிதங்களை கட்டமைத்து வைத்துள்ளது. மூவாயிரம் வருடங்களாக, ஈழத் தமிழினம் ஒரு DNA கூட மாறாமல் அப்படியே "ஒரே" இனமாக இருந்து வருகின்றது என்று நம்புகிறார்கள். அல்லது நம்ப வைக்கப் பட்டிருக்கிறார்கள்.

இது தான் அவர்களது கொந்தளிப்புக்கு காரணம். காலங்காலமாக நம்பப் பட்டு வரும் புராணக் கதைகள் பொய்யாக்கப் படுமென்றால், பழமைவாதிகளுக்கு கோபம் வராதா? அருளினியனின் கேரள டைரீஸ் நூலில் தேசியத்தின் பெயரால் புனையப் பட்ட கற்பிதம் உடைகிறது. இதை அருளினியன் தனது தாராளவாத (லிபரல்) அரசியல் நிலைப்பாட்டில் இருந்து எழுதி இருக்கிறார்.

ஈழத் தமிழர் மத்தியில், ஒருவரது அரசியல் கொள்கைக்கும், கருத்துக்கும் மதிப்பளிக்கும் பக்குவம் இன்னமும் வரவில்லை. தனக்குப் பிடிக்காது என்றாலும் சகித்துக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களுக்கு மதம் என்றால், தமிழருக்கு இனம் இருக்கிறது. இரண்டு சமூகங்களிலும் அடிப்படைவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் பல கட்டுக்கதைகளை ஒன்று சேர்த்து கோட்பாடாக்கி வைத்திருக்கிறார்கள். அதன் அத்திவாரமே ஆட்டம் காணுகிறது என்றால் சும்மா இருப்பார்களா?

ஈழத்தின் ஆதிக்க சாதியாக உள்ள வெள்ளாளர்கள், ஒரு உள்நோக்கிய சிந்தனை (introvert) கொண்ட சமூகம். அவர்களுக்கென்று சில இரகசியங்கள் இருக்கும். அதை வெளியில் யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஒன்றில் அந்த சாதியை சேர்ந்தவர்கள் அல்லது நெருங்கிப் பழகியவர்கள் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.

அந்த இரகசியங்களை தமிழகத்து தொப்புள்கொடி உறவுகளுக்கும் சொல்ல மாட்டார்கள். இலக்கியங்களில் எழுத மாட்டார்கள். சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இந்த விடயத்தில் சாதிக்குள்ளே இருக்கும் தீவிரவாதிகள், மிதவாதிகள், பழமைவாதிகள், நவநாகரிகவாதிகள் எல்லோரும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வார்கள்.

ஈழத்து சாதிய சிந்தனைகளில் ஒன்று தோலின் நிறம். சிவப்பாக இருந்தால் வெள்ளாளர்கள், கறுப்பாக இருந்தால் தாழ்த்தப் பட்ட சாதியினர் என்பது ஒரு பொதுவான அபிப்பிராயம். சமூக விஞ்ஞானப் படி அது உண்மையல்ல. எல்லா வகையான நிறத்தவர்களும், எல்லா சாதிகளிலும் கலந்துள்ளனர். ஆனால், "வெள்ளையாக இருந்தால் வெள்ளாளர்" என்று நம்பும் பொதுப் புத்தி அந்த சாதியை சேர்ந்த பலரிடம் காணப் படுகின்றது.

இந்த கறுப்பு, வெள்ளை வேறுபாட்டை சிலர் "அறிவியல்" பூர்வமாக நிரூபிக்கக் கிளம்புவார்கள். அதற்கு அவர்கள் கண்டுபிடித்த கோட்பாடு "கேரளா தொடர்பு"! ஏனென்றால், "பொதுவாக மலையாளிகள் சிவப்பானாவர்கள்" என்ற பொதுப் புத்தியும் நிலவுகின்றது. தாம் மலையாளிகளின் வம்சாவளியினர் என்பதாலேயே சிவப்பாக இருப்பதாக பல வெள்ளாளர்கள் நம்புகிறார்கள். தமிழ்நாட்டு தொப்புள்கொடி உறவுகளே மன்னியுங்கள்.

இங்கே இதை மறுப்பதற்கு நிறையப் பேர் வருவார்கள் என்பது எனக்குத் தெரியும். இது நான் அனுபவத்தில் கண்ட உண்மைகள். தனிப்பட்ட முறையில் பலரிடம் அவதானித்த விடயம். கேரளா வம்சாவழித் தமிழர்கள் என்பதை தாமாகவே நேரடியாக தெரிவித்தவர்களும் உண்டு. எனது அனுபவத்தில் கண்ட ஒருவரைப் பற்றிக் கூறுகிறேன்.

எனக்குத் தெரிந்த கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிக்கிறார். அவருக்கு மலையகத்திலும் உறவினர்கள் உண்டு. "எங்கள் ஊர் மலையகம் என்று சொன்னால், எல்லோரும் குறைந்த சாதியினர் என்று பலர் தவறாக நினைக்கிறார்கள்..." என்று என்னிடம் சொல்லிக் குறைப்பட்டார்.

"கறுப்பர்களின் தேசத்தில் வாழ்வதற்காக வெட்கப்படும்", சிவந்த தோல் நிறம் கொண்ட அந்தப் பெண்மணி, தனது உயர்சாதிப் பெருமிதத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக, அந்த அரபு நாட்டில் தன்னுடன் கூட வேலை செய்த கேரளாக் காரரை பிடித்து மலையாளம் பேசக் கற்றுக் கொண்டார். அவர் மலையாளத்தில் சம்சாரிக்கும் பொழுது அடையும் பெருமையை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

இப்படி மலையாள மோகம் கொண்ட பலரை என் வாழ்க்கையில் சந்தித்து இருக்கிறேன். முகநூலில் அறிமுகமான, வன்னியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், இந்த "கேரளா தொடர்பை" பற்றி ஆராய வெளிக்கிட்டார். அவர் அரசியலில் குதிப்பதற்கு முந்திய முகநூல் பதிவுகளிலும் கேரளா தொடர்பு பற்றிய பிரமிப்புகள் இருக்கும்.

அது குறித்து என்னுடனும் உரையாடினார். முடிந்தால் ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதச் சொன்னார். இப்போது அந்த நண்பர் ஒரு தீவிர தமிழ்த் தேசியவாதி. வலதுசாரி தமிழ்த் தேசியக் கட்சி ஒன்றின் தீவிர செயற்பாட்டாளர். ஆகையினால், ஒரு காலத்தில் தன் மனதில் அப்படியான எண்ணம் இருந்தது என்பதையே மறுப்பார்.

நான் ஆரம்பத்தில் கூறிய மாதிரி, இந்த கேரளா கதையாடல் வெள்ளாளர் சமூகத்தினுள் ஆழமாக வேரூன்றி இருக்கும் நம்பிக்கை. அது உண்மையா, பொய்யா என்பதும் பெரும்பாலானோருக்கு தெரியாது. ஆனால், சிவப்பு நிறத் தோல் என்ற தொன்மத்தை (Myth) நிறுவுவதற்கு, அவர்களுக்கு கேரளாவை விட்டால் வேறு வழியும் தெரியாது.

உண்மையில் நானும் அந்தக் கதைகளுக்கு ஆதாரம் இல்லையென்று தான் நம்பினேன். நூலகத்தில் இருந்த இலங்கையின் பழைய ஆவணங்களை புரட்டிக் கொண்டிருந்த நேரம், அந்தத் தகவல் தற்செயலாக தென்பட்டது. ஒரு காலத்தில், யாழ் குடா நாட்டிற்கும் கேரளாவுக்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருந்துள்ளது. எழுபதுகளில், சிறிமாவோ ஆட்சிக் காலத்தில் தான் அந்தத் தொடர்பு அறுந்தது. அதாவது, இலங்கை அப்போது ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடைவிதித்து சுயசார்புப் பொருளாதாரத்தை முன்னெடுத்தது.

யாழ் குடாநாட்டின் மேற்குப் பகுதியை வலிகாமம் என்று அழைப்பார்கள். அந்தப் பிரதேசத்தில் தான் புகையிலை தோட்டங்களும் அதிகம். புகையிலை உற்பத்தியாளர்களில் 90% வெள்ளாள விவசாயிகள் தான். இது ஒன்றும் இரகசியம் அல்ல. அந்தப் பிரதேசத்தில் எல்லோருக்கும் தெரிந்த விடயம். இன்றைக்கும் யாழ் குடாநாட்டின் பெருமளவு விவசாய நிலங்கள் வெள்ளாளர்களுக்கு சொந்தமானவை.

நீண்ட காலமாக கேரளாவுடன் தொடர்பு வைத்திருந்த புகையிலை விவசாயிகள், இலங்கை அரசின் தேசியமயமாக்கல் காலகட்டத்தின் பின்னர், தென்னிலங்கையில் மட்டுமே சந்தைப் படுத்த முடிந்தது. அனேகமாக இதற்குப் பின்னர் தான், கேரளாவுடன் தொடர்பு வைத்திருந்த மலையாளிகளும், தம்மை யாழ்ப்பாணத் தமிழர்களாக மாற்றிக் கொண்டிருப்பார்கள். இது ஒரு சாதாரணமான சமுதாய மாற்றம்.

இப்போது எழும் பிரச்சினை என்னவென்றால், ஈழத் தமிழ்த் தேசிய அரசியல் தலைவர்கள், இனத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ்த் தேசியக் கோட்பாட்டை உருவாக்கி, அதை நடைமுறைக்கும் கொண்டு வந்து விட்டார்கள். "சிங்களவர்கள் எல்லோரும் ஓரினம், தமிழர்கள் எல்லோரும் ஓரினம். இரண்டும் மூவாயிரம் வருடங்களுக்கு மேலாக இனத் தூய்மை பேணி வருகின்றன." என்ற கற்பனையை போதித்து வந்தார்கள்.

இப்போது யாராவது வந்து, "சிங்களவர், தமிழர் தனித் தனி இனங்கள் அல்ல. இரண்டுமே கலப்பினங்கள் தான்" என்று உண்மையை சொல்லி விட்டால் என்ன செய்வது. தாங்கள் இவ்வளவு காலமும் கட்டிக் காத்து வந்த பொய் அம்பலமாகிறது என்ற ஆத்திரத்தில் துள்ள மாட்டார்களா?

நிச்சயமாக. அதை மறைப்பதற்காக, "ஈழத் தமிழரை பிரிக்க சதி நடக்கிறது" என்று கூப்பாடு போடுவார்கள். ஆனால், "சிவப்பு, கறுப்பு நிற வேறுபாடு" பார்க்கும் கதைகளை, தொடர்ந்தும் தமது சாதிக்குள்ளே மட்டும் இரகசியமாக வைத்திருப்பார்கள்.

1 comment:

aoouamma said...

மலையாளிகள் என்பது ஒரு தனி இனமல்ல. அவர்களிலும் தாழ்த்தப்பட்டவர், பிராமணர் மற்றும் இடைப்பட்ட நாயர், மேனன் போன்ற இனத்தவர்கள் கொண்ட ஒரு சமுதாயமே மலையாளிகள். தமிழரிலும் இப்படித்தானே. பொதுவாகத் தமிழர் என்றால் கறுப்பானவர்கள் என்று தான் மற்ற தென்னிந்திய மக்களின் கருத்து.

இந்த மலையாளிகளில் ஒரு பழக்கம் பல நூறாண்டுகளாக இருந்து வந்தது யாவரும் அறிந்த ஒரு சங்கதி. அதாவது, இடைப்பட்ட இன மக்கள் திருமணம் முடிக்கும் போது, மணப் பெண்ணை பிராமணர் வீட்டில் கொண்டு போய் விட வேண்டும், "சுத்திகரிப்புக்காக" என்ற மதச் சடங்குப் போர்வைக்குள். இடப்படியாகச் சுத்திகரிக்கப் பட்டவர்களுக்குப் பல கொடுமைகளும் நடந்தேறியதாகத் தான் நாம் அறிகிறோம். அப்படி வந்திருக்கலாமல்லவா அந்த வட நாட்டு வெள்ளை நிறம்.

வெள்ளையென்று பீத்திக்கொள்பவர்கள் தம் மூதாதையரை இழிவு படுத்துவதை தவிர்க்க முடியாது.