ஈழத்து பெண்ணியக் கவிஞர் தில்லையின் விடாய் கவிதைத் தொகுப்பு நூல் தமிழகத்து புத்தகக் கண்காட்சியில், முற்போக்கு எழுத்துகளுக்கான பாரதி பதிப்பகத்தின் ஸ்டாலில் விற்பனையாகின்றது. தமிழ் தி இந்துவினால் கவனிக்கப் பட வேண்டிய சிறந்த நூல்களுக்கான பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது. குறிப்பு: பிரதேச மொழி வழக்கில் விடாய் என்றால் தாகம் என்று அர்த்தம்.
ஈழப்போரின் இறுதிக் காலங்களில் புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்தில் அங்கீகரிக்கப் பட்ட அகதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் கவிஞர் தில்லை வெளியிட்ட முதல் கவிதைத் தொகுப்பு இது. இந்த நூலில் உள்ள கவிதைகளை கீழ்க்கண்ட உப பிரிவுகளாக பிரிக்கலாம்:
- 1. உறவுச் சிக்கல்களால் பாதிக்கப் பட்ட ஒரு பெண்ணின் உள்மனக் குமுறல்கள்.
- 2. குழந்தைப் பராயத்தில் ஊர்ப் பெரியவர்களாலும் , நெருங்கிய உறவினர்களாலும் துஸ்பிரயோகம் செய்யப் பட்ட ஒரு சிறுமியின் அவலக் குரல்.
- 3. பிறந்த மண், அதன் தனித்துவமான கலாச்சாரத்தின் மீதான பற்று.
- 4. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் இயலாமையின் வெளிப்பாடு.
- 5. புலம்பெயர்ந்து சென்று, முற்றிலும் அந்நியத்தன்மை கொண்ட ஐரோப்பிய நாடொன்றில், ஒரு மாறுபட்ட புதிய வாழ்க்கையை தொடங்குதல்.
இந்தத் தொகுப்பில் சில கவிதைகள் காப்கா பாணியிலான உள்மனக் குமுறல்களின் வெளிப்படுத்தல்களாக உள்ளன. உண்மையில் ஓர் உளவியல் மருத்துவரிடம் ஆற்றுப்படுத்தல் தேடுவது மாதிரி, கதை, கவிதை போன்ற புனைவு இலக்கியங்களில் வெளிப்படுத்துவதற்கு ஒரு துணிச்சல் தேவை. அது தில்லையிடம் தாராளமாக இருக்கிறது.
தான் பிறந்தவுடனேயே தாயையும், தந்தையும் இழந்து அநாதரவாக கைவிடப்பட்ட வலிகளை, ஒடுக்கப்பட்ட உணர்வுகளை கவிதைகளில் வடித்திருக்கிறார். ஒரு பக்கம் தாய், தந்தையின் அரவணைப்பு கிடைக்காத ஏக்கம், மறுபக்கம் தத்தெடுத்த உறவினர்கள் இழைத்த கொடுமைகளால் ஏற்பட்ட வலி. குழந்தைப் பராயத்தில் ஏற்படும் இதுபோன்ற உளவியல் தாக்கங்கள் பெரியவர்களாக வளர்ந்த பின்னரும் மறைவதில்லை.
பிரான்ஸ் காப்கா என்ற செக்கோஸ்லாவாக்கிய எழுத்தாளர் தனது சொந்த வாழ்வியல் பிரச்சினைகள் பற்றி எழுதிய உளவியல் குறிப்புகள் உலகப் புகழ் பெற்ற இலக்கியமானது மாதிரி, ஈழத்து கவிஞர் தில்லையின் கவிதைகளும் எடுத்த எடுப்பிலேயே பலரால் விரும்பி வாசிக்கப் பட்ட இலக்கியமாகி விட்டது. காப்கா தனது தாய்நாடான செக்கோஸ்லாவாக்கியாவில் ஜெர்மன் மொழி பேசும் யூத சிறுபான்மை இனத்தை சேர்ந்திருந்த படியால் மேலதிகமாக சில துயர அனுபவங்களை பெற்றிருந்தார்.
தில்லையும் இலங்கையில் அதே நிலைமையில் இருந்தவர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. காப்காவின் எழுத்துக்கள் கவலை, வருத்தம், அச்சம், ஆத்திரம், ஆவேசம், ஆதரவின்மை போன்ற கலவைகளாலான சர்லியச இலக்கியப் போக்கை கொண்டிருந்த மாதிரி, தில்லையின் பல கவிதைகள் உள்ளன. இருப்பினும் மேற்குறிப்பிட்ட வகைக்குள் அடங்காத பிற கவிதைகள், வாசகர்களுக்கு இந்த தொகுப்பை வாசிக்கும் ஆர்வத்தை உண்டாக்குகின்றன.
எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்கு உரிய மண்வாசனை வீசும் கவிதைகள் தனித்துவமானவை. மேலும் அந்தப் பிரதேசத்தின் கலாச்சாரத்தை மட்டுமல்லாது, அரசியல், சமூக வேறுபாடுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் "பாரம்பரிய ஈழம்" என்று தற்காலத்தில் அரசியல்மயப் படுத்தப் பட்டிருந்தாலும், அதற்குள் பல முரண்பாடுகளை கொண்டுள்ளது. பேசும் தமிழும் மாறுபடுகின்றது. கிளை மொழிகளையும் வட்டார சொல் வழக்குகளையும் கொண்டுள்ளது.
தில்லை இந்தக் கவிதைத் தொகுப்பில் தான் பிறந்து வளர்ந்த படுவான்கரை பிரதேச வட்டார வழக்கு மொழியில் சில கவிதைகள் எழுதி இருப்பது, ஒரு பாராட்டத்தக்க துணிச்சலான விடயம். ஒரு கவிதை முழுவதும் வட்டார மொழியில் எழுதப் பட்டுள்ளது. பிற கவிதைகளில் அந்தப் பிரதேசத்திற்கு தனித்துவமான சொற்கள் கையாளப் பட்டுள்ளன. இந்தக் கவிதைகளில் ஒட்டுமொத்த படுவான்கரை மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமிதமும் தெரிகின்றது.
இங்கே மேலதிகமாக ஒரு சிறு சமூக- அரசியல் குறிப்பையும் இணைக்க விரும்புகிறேன். இலங்கையின் வட மாகாணத்தில் யாழ் குடாநாடு அபிவிருத்தி அடைந்த அளவிற்கு, வன்னிப் பிரதேசம் அபிவிருத்தி அடையவில்லை. அது எப்போதும் பொருளாதார வசதிகளில் பின்தங்கிய பிரதேசமாக இருந்தது. அதே மாதிரித் தான் கிழக்கு மாகாணத்து நிலைமையும். கிழக்கு கரையோரம் உள்ள எழுவான்கரை பிரதேசம் அபிவிருத்தி அடைந்து காணப்படுகையில், மேற்கில் உள்ள படுவான்கரை இன்றைக்கும் வளர்ச்சி அடையாமல் பின்தங்கிய பிரதேசமாக உள்ளது.
யாழ்ப்பாணம் - வன்னி, எழுவான்கரை - படுவான்கரை, இந்த பிரதேசங்களுக்கு இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வு பல மட்டங்களில் எதிரொலிக்கும். ஈழப்போர் காலகட்டத்தில் நடந்த பல குறிப்பிடத்தக்க இராணுவ, அரசியல் மாற்றங்களில், இந்த பிரதேச ஏற்றத்தாழ்வு மறைந்திருந்தது. ஆனால், அதை அன்றும் இன்றும் பலர் கவனிக்கத் தவறி விடுகின்றனர். அந்த வகையில் "படுவான்கரை இலக்கியம்" என்று அழைக்கப் படக் கூடிய தில்லையின் விடாய் கவிதைத் தொகுப்பு நூல் சமூகவியல் பார்வையிலும் முக்கியத்துவம் பெறுகின்றது.
No comments:
Post a Comment