Showing posts with label ஜல்லிக்கட்டு. Show all posts
Showing posts with label ஜல்லிக்கட்டு. Show all posts

Friday, February 17, 2017

கேப்பாபுலவு, ஜல்லிக்கட்டு : இரண்டு போராட்டங்களின் கதை

ஈழத்தில் ஒரே காலகட்டத்தில் நடந்த இரண்டு போராட்டங்களின் கதை:
1. ஜல்லிக்கட்டு - ஈழத் தமிழ்த் தேசியவாதிகளின்  போராட்டம் 
2. கேப்பாபுலவு - ஈழத் தமிழ் மக்களின்  போராட்டம் 

இரண்டுக்கும் இடையில் என்ன வித்தியாசம்?

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில், யாழ் நகரிலும், பின்னர் கொழும்பு நகரிலும் ஆதரவுப் போராட்டம் நடந்தது. சமூக வலைத்தளம் மூலம் அழைப்பு விடுக்கப் பட்ட தன்னெழுச்சியான போராட்டம் என்று அறிவிக்கப் பட்டது. போருக்கு பின்னரான காலத்தில், முன்னர் எப்போதும் இல்லாதவாறு, பெருமளவு எண்ணிக்கையான ஈழத் தமிழர்கள் கலந்து கொண்டனர்.

ஈழத்து ஜல்லிக்கட்டு போராட்டங்களில், ஐநூறு, ஆயிரம், அல்லது ஐயாயிரம் பேர் வந்திருந்ததாக எடுத்துக் கொள்வோம். அதிலே பங்குபற்றியவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்க இளைஞர்களாக இருந்தனர். யாழ்நகரில் நடந்த போராட்டத்தில், "ஏன் சாதாரண மக்களை காணவில்லை?" என்று பிபிசி தமிழோசை நிருபர் கேட்ட பொழுது, "இனிமேல் தான் மக்கள் வருவார்கள்..." என்று பதிலளித்தனர். ஆனால், அந்த போராட்டம் தொடரவுமில்லை, தமிழ் மக்கள் வரவுமில்லை.

தமிழ்த் தேசியவாத, தமிழ் இன உணர்வு அரசியல், எப்போதுமே தமிழ் மத்தியதர வர்க்க அரசியலாகவே இருந்து வந்துள்ளது. இப்போதும் அது தான் உண்மை. "தமிழன்டா!", "தமிழன் என்று சொல்லடா!" போன்ற இனப்பெருமை பேசும் ஆணாதிக்க கோஷம் எதுவும் பெரும்பான்மை தமிழ் மக்களை கவரவில்லை. இது தமிழ்த் தேசியவாதிகள் எந்தளவுக்கு மக்களிடம் இருந்து அந்நியப் பட்டிருக்கின்றனர் எனக் காட்டுகின்றது.

ஈழத்திற்கான ஆயுதப் போராட்டம், மற்றும் கூட்டமைப்பு போன்ற கட்சிகளுக்கு ஆதரவளிப்பவர்கள் மக்கள் தானே என்று வாதாடலாம். உண்மையில் அதற்குக் காரணம் "தமிழ் இன உணர்வு" என்று நினைத்துக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றுவதற்கு சமமாகும். மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை தமக்குத் தெரிந்த வழிகளில் வெளிப்படுத்துவார்கள். ஜனாதிபதித் தேர்தலில், மகிந்த ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு ஓட்டுப் போட்டதும் அதனால் தான். அவ்வாறு தான் மக்கள் தமது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பெருமளவு மத்தியதர வர்க்க இளைஞர்கள் வந்ததற்கு வலுவான காரணம், அது எந்த வகையிலும் அரசுக்கு எதிரான போராட்டம் இல்லையென்பது தான். பலர் இதை நம்ப மறுப்பார்கள். "தமிழன்டா, தமிழன் என்று சொல்லடா" என்று ஒற்றுமையாக கோஷம் போடுவதால், சிறிலங்கா அரசு தமிழரின் சக்தி கண்டு அஞ்சி நடுங்கும் என்று எதிர்பார்ப்பது மடமைத்தனம். தமிழ்த் தேசியம் பேசுவதும், தமிழ் உணர்வு கொள்வதும் அரச கட்டமைப்பை பாதுகாக்கும் இன முரண்பாட்டு அரசியல் என்பதை பலர் அறிவதில்லை.

இழப்பதற்கு எதுவுமில்லாதவர்கள் தான் போராடுவார்கள். இழப்பதற்கு எல்லாம் இருப்பவர்கள் போராட வர மாட்டார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு சென்றவர்கள் பெரும்பாலும் உத்தியோகம் பார்க்கும் வசதியான இளைஞர்கள், அல்லது உயர்கல்வி கற்கும் மாணவர்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொள்வதால், தமது கல்விக்கோ, வேலைக்கோ எந்த ஆபத்தும் வராது என்பது அவர்களுக்குத் தெரியும். 

மேலும், அன்றாட வாழ்வில் வசதிகளை அனுபவிப்பவர்களுக்கு "தமிழ் உணர்வு இல்லாமை" மட்டுமே ஒரு குறைபாடாக தெரிவதில் வியப்பில்லை. அதற்காக போராடுவதன் மூலம் தாம் சமூகத்திற்கு தொண்டாற்றி விட்டதாக திருப்திப் படுகின்றனர். ஜல்லிக்கட்டுக்காக ஒரு நாள் கூடி, தமிழ் உணர்வுக் கோஷங்கள் போட்டு விட்டு தமது வேலையைப் பார்க்க சென்று விட்டார்கள்.

ஜல்லிக்கட்டுக்காக போராட வந்தவர்கள், மக்களின் பிற போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்று அப்போதே ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அந்த நேரம், "இப்போது தான் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது" என்றும், "இனிவருங்காலத்தில் இவ்வளவு பேரும் எல்லாப் போராட்டங்களிலும் கலந்து கொள்வார்கள்" என்றும் பதில் சொன்னார்கள். ஆனால், அந்த உறுதிமொழியை யாரும் காப்பாற்றவில்லை. இப்போதும் தமிழ் மக்களின் பிற போராட்டங்களை யாரும் கண்டுகொள்வதில்லை.

இது நடந்து ஓரிரு வாரங்கள் கூட ஆகியிருக்கவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாபுலவு கிராம மக்களின் மண்மீட்புப் போராட்டம் தொடங்கியது. இறுதிப் போரில், விமானப் படையினரால் அபகரிக்கப் பட்ட காணிகளை மீட்பதற்காக, பெண்களும், பிள்ளைகளும் போராடினார்கள். அது அவர்களது வாழ்வாதாரத்திற்கான போராட்டம். அவர்கள் இழப்பதற்கு எதுவுமற்ற ஏழை மக்கள். அதனால் எதற்கும் அஞ்சாமல் படையினரின் முகாமுக்கு முன்னால் அமர்ந்திருந்து போராடினார்கள்.

என்ன அதிசயம், ஜல்லிக்கட்டு போராளிகள் எவரையும் அங்கே காணவில்லை. ஜல்லிக்கட்டு காளைகளுக்காக பொங்கிய தமிழ் இன உணர்வு, கேப்பாபுலவு ஏழைகளுக்காக பொங்கவில்லை. ஒரு சில தமிழ்த் தேசியவாதிகள் சென்று பார்த்து விட்டு வந்தார்கள். தமிழ்த் தேசிய அரசியல்கட்சிகளை சேர்ந்தோரும் சென்றிருந்தனர். 

சில நாட்களுக்குப் பின்னர் மட்டக்களப்பில் நடந்த எழுக தமிழுக்கு சேர்ந்த கூட்டத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட கேப்பாபிலவுக்கு வரவில்லை. அந்தளவுக்கு தமிழ் இன உணர்வாளர் யாருக்கும் அதில் அக்கறை இருக்கவில்லை. "கேப்பாபிலவு கிராமம் எளிதில் செல்ல முடியாத ஒதுக்குப்புறமான இடத்தில் இருப்பதாகவும், அங்கு செல்வதற்கான போக்குவரத்து கஷ்டம் எனவும்", ஒரு தமிழ்த் தேசிய ஊடகவியலாளர் காரணம் கண்டுபிடித்தார்.

இருப்பினும் சாதாரண இளைஞர்கள் சிலர் கேப்பாபுலவுக்கு சென்று மக்களின் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பெரும்பாலும் இடதுசாரி சிந்தனை கொண்ட இளைஞர்களே அவர்கள். சாதாரண பொது மக்களின் நலன் சார்ந்து அவர்கள் பக்கம் நிற்பதே இடதுசாரியம் என்பதை அவர்கள் நிரூபித்தனர். அதனால், அது எங்கோ ஒரு மூலையில் நடக்கும் போராட்டமாக இருக்கவில்லை.

11.02.2017 அன்று யாழ்நகரில், மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில், கேப்பாபிலவு மக்களுக்கு ஆதரவான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரக் கணக்கான அரசியல் ஆர்வலர்கள், சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் என்ற பெயரில் கலந்து கொண்டனர். தமிழ், சிங்கள இடதுசாரிக் கட்சிகளை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். அங்கு எழுப்பப் பட்ட கோஷங்களில் தமிழர் என்பதை தவிர்த்து, மக்கள் என்று சொல்லப் பட்டது ஒரு முக்கியமான விடயம். "மக்களின் காணிகளை மக்களுக்கே திருப்பிக் கொடு" என்று தான் கோஷம் எழுப்பப் பட்டது.

இதே நேரத்தில், கேப்பாபிலவு கிராமம் மக்கள் போராட்டக் களமாக மாறிக் கொண்டிருந்தது. பாடசாலை செல்ல வேண்டிய சிறு பிள்ளைகள் போராட்டத்தில் ஈடுபடுவதால் அவர்களது கல்வி பாதிக்கப் படுகின்றது. அதனால் சமூக ஆர்வலர்கள் திறந்தவெளியில் இலவசப் பள்ளிக்கூடம் நடத்தினார்கள். கட்டாந்தரையில் அமர்ந்திருந்து பாடங்களை சொல்லிக் கொடுத்தார்கள்.

அங்கே ஒரு மக்கள் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. கேப்பாபிலவு மக்களின் மண்மீட்புப் போராட்டத்தை பற்றிக் கேள்விப் பட்டு, தென்னிலங்கையில் இருந்து சிங்கள இடதுசாரிகளும் வந்தனர். ஒரே உணர்வோடு மக்களோடு சேர்ந்து போராடினார்கள். அதன் மூலம், கேப்பாபிலவு மக்களின் பிரச்சினை சிங்கள மக்கள் மத்தியிலும் போய்ச் சேர்ந்தது. தமிழருக்காக தமிழர் மட்டுமே போராடுவார்கள் என்று நினைத்திருந்த அரசு இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை.

பதினைந்து நாட்களாக தொடர்ந்து நடந்த கேப்பாபிலவு மக்களின் போராட்டம், மெல்ல மெல்ல அரசு அதிகாரத்தை அசைக்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் புறக்கணித்த படைத் தலைமை, பின்னர் இறங்கி வந்து மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என்று அறிவித்தது. இருப்பினும் மக்கள் அங்கு சென்று குடியேறிய பின்னர் தான் எதுவும் நிச்சயமாகும். எது எப்படி இருப்பினும், கேப்பாபுலவு மக்களின் வெற்றி பெற்றால், அது இலங்கை அரசியலில் ஒரு திருப்புமுனையாக கருதப் படும். மக்கள் போராட்டம் மூலம் அரசை பணிய வைப்பதன் மூலம் மக்கள் அதிகாரத்தை வென்றெடுக்க முடியும்.

வரட்டுத் தமிழ்த் தேசியம் பேசும் வசதிபடைத்த தமிழ் மத்தியதர வர்க்க  இளைஞர்கள், இழப்பதற்கு எதுவுமற்ற கேப்பாபுலவு ஏழைத் தமிழ் மக்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். பொதுவுடைமைத் தத்துவ அறிஞர் கார்ல் மார்க்ஸ் 150 வருடங்களுக்கு முன்னர் சொன்ன மாதிரி, இழப்பதற்கு எதுவுமற்ற மக்களே போராடத் தயாராக இருப்பார்கள்.  இங்கிலாந்து முதல் ஈழம் வரை அது உண்மையென நிரூபிக்கப் பட்டு வந்துள்ளது.

தமிழ்த் தேசிய உணர்வு பொங்குவது இறுதியில் பேரினவாத அரசுக்கே சாதகமானது. இனப்பெருமை பேசும் "தமிழன்டா" கோஷம், வேற்றின மக்கள் எம்மை நெருங்க விடாமல் விரட்டுகிறது. அதனால் தமிழர்கள் தனிமைப் படுத்தப் படுகிறார்கள். நாம் தமிழர் என்று சொல்லாமல், மக்கள் என்று அரசியல் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் உலகம் முழுவதையும் திரும்பிப் பார்க்க வைக்கலாம்.

கேப்பாபிலவு போராட்டம் ஒரு மக்கள் புரட்சியின் ஆரம்பம். 

மேலதிக தகவல்களுக்கு: 

Tuesday, January 24, 2017

தோழர் என்று சொல்! தலை நிமிர்ந்து நில்!!


//"உங்கள் பிள்ளைகளின் செல்போனை ஆய்வுசெய்து புதுநபர்களின் எண்கள் இருந்தால் டெலிட் செய்யுங்கள் யாராவது தோழர் என அழைத்தால் அவர்களின் தொடர்பை துண்டியுங்கள்”// - சைலேந்திரபாபு IPS, TN.

//மாணவர்களுடம் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து கொண்டனர். இவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்புகள் இல்லை. ஆனால் அரசியல் கட்சி வரக்கூடாது என சொன்ன மாணவர்கள், இந்த சிறிய சிறிய அமைப்புகள் சொல்வதை தான் கேட்கிறார்கள். மக்கள் அதிகாரம், நாம் தமிழர், மே 17, சிபிஐ (எம்.எல்), இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அகில இந்திய இளைஞர் பெருமன்றம் போன்ற அமைப்புகள் மாணவர்களுடன் ஊடுருவியுள்ளனர். தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் எல்லோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.// - கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ('மாணவர் போராட்டத்தில் நக்சல் ஆதரவாளர்கள்...' கோவை மாநகர காவல் ஆணையர்)

தமிழ்நாட்டில், "அரபு வசந்தம்" பாணியில் நடந்த "ஜல்லிக்கட்டு போராட்டம்" அதன் இறுதிக் கட்டத்தில் எதிர்பாராத திருப்புமுனையை உண்டாக்கி இருந்தது. ஆரம்பத்தில் சில நாட்கள் ஜல்லிக்கட்டு மாடுகளுக்கான போராட்டமாகவும், தமிழர் பாரம்பரிய மீட்புப் போராட்டமாகவும் தான் கருதப் பட்டது. பெரும்பாலான போராட்டக் காரர்கள், குறிப்பாக மாணவர்கள், "தமிழின உணர்வு" காரணமாகத் தான் போராட்டத்திற்கு வந்திருந்தனர். ஊடகங்களில் அதற்கு கிடைத்த முக்கியத்துவமும் பலரை அங்கு கொண்டு வந்து சேர்த்தது. குடும்பம் குடும்பமாக பெண்கள் குழந்தைகளாக வந்ததும் குறிப்பிடத் தக்கது.

போராட்டம் தொடங்கிய காலத்தில் அங்கு அரசியல் பேசப்படவில்லை. அது போராட்டத்தை ஒழுங்குபடுத்திய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் அறிவுறுத்தலாக இருந்தது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல ஒரு பிரிவினர் அரசியல் கோரிக்கைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். அப்போதே அது ஒரு ஜனநாயக போராட்டமாக மாறி விட்டது. வெறுமனே தமிழ் இனப்பற்று சார்ந்த விடயங்களுடன் அது நின்று விடவில்லை. அதனால், பல்வேறு கம்யூனிச, இடதுசாரி அமைப்புகள் அல்லது அவ்வாறான சிந்தனை கொண்டவர்களும் போராட்டக் களத்தை பயன்படுத்திக் கொண்டனர். அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாடினார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் இலகுவாக மக்களை அணுகலாம் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். ஆனால், இடதுசாரிகள் போராட்டம் முழுவதையும் கைப்பற்றும் அளவிற்கு அரசு எந்தக் காலத்திலும் விட்டுக் கொடுக்காது. அதுவரையும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில், மத்திய அரசின் மேல் பழி போட்டுக் கொண்டிருந்த மாநில அரசு, 180 பாகையில் திரும்பி ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று அவசர சட்டம் போட்டதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இது மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற போராட்டமாக இருந்தாலும், தீர்க்கமான அரசியலை பேசாத, அல்லது பலவீனமான நியாயப்பாடுகளை கொண்ட ஜனத்திரளுக்குள் ஊடுருவுவது எளிது. வலதுசாரி சக்திகளின் ஊடுருவல் பற்றி அரசு கவலைப் படப் போவதில்லை. அவர்கள் ஏற்கனவே "ஜல்லிக்கட்டு தமிழரின் பாரம்பரியம்" என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அது அரசுக்கு சாதகமான விடயம்.

வணிக ஊடகங்களும் ஜல்லிக்கட்டை பற்றி மட்டுமே பேசி வந்தன. தமிழ் இன மான உணர்வுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தன. அதன் மூலம் பார்வையாளர் எண்ணிக்கையை கூட்டிக் கொண்டன. ஆனால், போராட்டக் களத்தில் பலதரப் பட்ட கருத்துக்களும் முட்டி மோதிக் கொண்டன என்ற உண்மையை வேண்டுமென்றே மறைத்தன.

அரசியல் கட்சிகளால் வழிநடத்தப் படாத ஜனத்திரள் எந்த அரசியலையும் உள்வாங்கும் தன்மை கொண்டிருக்கும். ஒரு வாரத்திற்கு மேல் போராட்டம் நீடித்தால் அது அரசுக்கு எதிராகவும் திசை திரும்பலாம். குறிப்பாக இடதுசாரிகளின் ஊடுருவல் அரச இயந்திரத்திற்கு சவாலாக இருக்கும். ஆரம்பத்தில் இருந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒழுங்குபடுத்தி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அதை விரும்பவில்லை.

ஆரம்பத்தில் ஜல்லிக்கட்டு, மாடுகள் என்று மட்டுமே பேசிக் கொண்டிருந்த இளைஞர்கள் மத்தியிலிருந்து, ஏற்கனவே சிலர் சசிகலா, பன்னீர்செல்வம் என்று விமர்சிக்க தொடங்கினார்கள். பிரதமர் மோடிக்கு எதிரான கோஷங்களும் கேட்டன. நிச்சயமாக, பெரியாரிய, இடதுசாரிய ஆர்வலர்கள் களத்தில் நின்றதன் விளைவு அது. அவர்கள் அங்கு வீதி நாடகங்கள், புரட்சிகர கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினார்கள்.

உண்மையில், த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் எழுச்சிப் போராட்ட‌ம் ஜனவரி 23 திங்கட்கிழமை தான் ஆர‌ம்பித்துள்ள‌து. சென்னை, மெரீனாவில் ஐயாயிர‌ம் போராட்ட‌க்கார‌ர்க‌ள் காவ‌ல்துறையின‌ரால் சுற்றி வ‌ளைக்க‌ப் பட்டனர். அவ‌ர்க‌ளுக்கு உண‌வும், த‌ண்ணீரும் எடுத்துச் செல்வ‌த‌ற்கு த‌டைவிதிக்க‌ப் பட்டது. மெரீனா அருகில் வாழ்ந்த மீனவர்கள் கடல் பக்கமாக படகுகளில் சென்று உதவினார்கள்.

ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்பான தற்காலிக சட்டத்தை ஏற்றுக் கொண்டு, பெருமளவிலான போராட்டக்காரர்கள் ஏற்கனவே கலைந்து சென்று விட்டனர். எஞ்சியிருந்த கடும்போக்காளர்கள் மீது பொலிஸ் தடியடிப் பிரயோகம் செய்து விரட்டியது. பெண்கள், கர்ப்பிணிகள் என்றும் பாராமல் குண்டாந் தடியால் அடித்தது. 

"பீட்டாவே த‌மிழ‌ர்க‌ளின் மிக‌ப் பெரிய‌ எதிரி" என்று ப‌ட‌ம் காட்டிய‌ த‌மிழ் இன‌ உண‌ர்வாள‌ர்க‌ளே! ஒரு க‌ண‌ம் சிந்திப்பீர். த‌மிழ‌ர்க‌ள் மீது தாக்குத‌ல் ந‌ட‌த்தி, வீடுக‌ளை எரித்த‌து, சொத்துக்க‌ளை நாச‌மாக்கிய‌து த‌மிழ‌க‌ காவ‌ல்துறை தான்.

த‌னித் த‌மிழ் நாடு க‌ண்டால் இத‌ற்கு தீர்வு வ‌ந்து விடுமா? அப்போதும் இதே "த‌மிழ‌ர்க‌ளின் காவ‌ல்துறை" தானே இருக்க‌ப் போகிற‌து? த‌னித் த‌மிழ் நாட்டில் த‌மிழ்ப் பொலிஸ் த‌மிழ‌ர்க‌ளை அடிக்காதா?

அர‌ச‌ இய‌ந்திர‌ம் என்றைக்கும், எப்போதும் ஒரு ஒடுக்கும் க‌ருவி தான். அது சிங்க‌ள‌ அர‌சாக‌ இருந்தால் என்ன‌, த‌மிழ் அர‌சாக‌ இருந்தால் என்ன‌, அட‌க்குமுறை ஒன்று தான். அட‌க்க‌ப் ப‌டும் ம‌க்க‌ளும் ஒன்று தான்.

இது அர‌சிய‌லில்‌ அடிப்ப‌டையான‌ பால‌ பாட‌ம். இந்த‌ நிலைமையை மாற்றுவ‌த‌ற்கு த‌னித் த‌மிழ் நாடு க‌ண்டால் ம‌ட்டும் போதாது. அத‌ற்கொரு ச‌மூக‌ப் புர‌ட்சி அவ‌சிய‌ம். அதைப் ப‌ற்றி சிந்தியுங்க‌ள்.

காந்தி பிறந்த இந்திய மண்ணில், காந்தியின் அறவழிப் போராட்டத்தை எள்ளிநகையாடும் வகையில், தமிழக பொலிஸ் வன்முறை அமைந்துள்ளது. "அறவழியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி!" என்று அரச கைக்கூலிகள் அறிவித்த பின்னர் தான், காவல்துறை தனது சுயரூபத்தை காட்டியது. மாணவர்கள் மீது தடியடி நடத்தி, குடிசைகள், வாகனங்களை எரித்து அடாவடித்தனம் புரிந்தது.

பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் மூலம் அரசு சொல்ல விரும்பிய சேதி இது தான். "மாட்டுக்காகவும், தமிழுக்காகவும் போராட்டம் நடத்துங்கள், அரசு அதைக் கண்டுகொள்ளாது. ஆனால், உங்கள் போராட்டம் அரசுக்கு எதிராக திரும்பக் கூடாது. அரசியல் பேசக் கூடாது." அப்படியான கட்டத்தில் அரசு தனது பொலிஸ் ஏவல் நாய்களை அனுப்பி ஒடுக்கும்.

இதன் மூலம், அரசு என்றால் என்ன என்பது, குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களுக்கு ஓரளவுக்காவது புரிந்திருக்கும். இது அவர்களுக்கு ஒரு நல்ல அரசியல் பாடம். மக்களை ஒடுக்குவதற்கான அரச இயந்திரத்தின் ஆயுதமே காவல்துறை என்பது தெரிந்திருக்கும். அதே நேரம், முதலாளித்துவ ஊடகங்களின் சுயரூபமும் தெரிந்திருக்கும். ஜல்லிக்கட்டு போராட்டக் காரர்களை பாராட்டி புகழ்ந்த அதே விபச்சார ஊடகங்கள், ஒரே நாளில் அவர்களை சமூகவிரோதிகள் என்று மாற்றிச் சொன்ன விந்தையை என்னவென்பது?

குறிப்பாக நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த போராட்டக்காரர்கள், "தேசியக் கொடி பிடித்தால், தேசியகீதம் பாடினால் பொலிஸ் அடிக்காது" என்று நம்புமளவிற்கு அப்பாவிகளாக இருந்திருக்கிறார்கள். "ஜனகண மண" பாடியவர்களுக்கும் அடிவிழுந்துள்ளது. தாம் கொடுத்த உணவை சாப்பிட்ட அதே பொலிஸ் தான் தடியடிப் பிரயோகம் நடத்தியது என்பதையும், மாணவர்கள் திருப்பித் தாக்கவில்லை என்றும் அவர்களே வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

தமிழக காவல்துறையினரின் வன்முறை வெறியாட்டம் நடந்த விதத்தை பார்க்கும் பொழுது, இது முன்கூட்டியே திட்டமிடப் பட்டுள்ளதாக தெரிகின்றது. பொலிஸ் குடிசை எரித்த காட்சிகள் வீடியோ பதிவாக இருந்தாலும், அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. நாளைக்கு அதைக் காட்டி யாராவது வழக்குப் போடுவார்களே என்ற பயம் கூட இல்லை. அதாவது, இனிமேல் காட்டாட்சி தான் என்ற நம்பிக்கையில் காவல்துறை உள்ளது.

ஓர் அதிர்ச்சி வைத்தியமாக, பொலிஸ் எடுத்த அதிரடி நடவடிக்கையானது, போராட்டத்தில் கலந்து கொண்ட மத்தியதர வர்க்கத்தினரை அச்சுறுத்தி, வீட்டில் முடங்கப் பண்ணும் நோக்கம் கொண்டது. உண்மையில், பொலிஸ் அடக்குமுறையால் பாதிக்கப் பட்டவர்கள் பெரும்பாலும் சேரிகளில் குடியிருக்கும் உழைக்கும் வர்க்க மக்கள்.

போராட்டக் களத்திற்குள் இடதுசாரிகள் ஊடுருவி இருந்தமை, அரசை பீதியுற வைத்துள்ளது. ஏனென்றால், பொதுவாக மத்தியதர வர்க்கத்தினர் அறவழிப் போராட்டத்துடன் நின்று விடுவார்கள். ஆனால், உழைக்கும் வர்க்க மக்கள் தான் உயிரைக் கொடுத்துப் போராடுவார்கள். இந்த உண்மை அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களுக்கும் தெரியும். அதனால் தான், உழைக்கும் வர்க்க மக்களை மிரட்டி வைப்பதற்காக, பொலிஸ் சேரிக்குள் புகுந்து அடாவடித்தனம் செய்தது.

இனிவரும் காலங்களில் இடதுசாரி அமைப்புகள் மீதான அடக்குமுறை அதிகரிக்கலாம். சிலநேரம் தடை செய்யப் படலாம். கைதுகள் தொடரலாம். "தமிழ்நாட்டுக்குள் நக்சலைட் ஊடுருவல்" என்று ஒரு சாட்டு சொல்லி, அரச பயங்கரவாதம் நியாயப் படுத்தப் படலாம். அதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படுகின்றன.

சென்னையில் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, CPML, மே 17 போன்ற இடதுசாரி அமைப்புகளே வன்முறையை தூண்டியதாக குற்றம் சாட்டியுள்ளார். (நாம் தமிழர் என்ற வலதுசாரி அமைப்பின் பெயரும் குறிப்பிடப் பட்டது.)

மேலும், "பெற்றோர் தமது பிள்ளைகளின் மொபைல் போன்களை எடுத்துப் பார்க்குமாறும், "தோழர்" என்று விளிக்கும் எண்களை அழித்து விடுமாறும்" சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார். அதன் அர்த்தம் என்ன? இடதுசாரி, அல்லது கம்யூனிசக் கருத்துக்கள் மத்தியதர வர்க்கப் பிள்ளைகள் மனதில் நுழைந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு தானே காரணம்?

"பெற்றோரே பிள்ளைகளை காட்டுக் கொடுக்க வேண்டும்" என்று அதிகார வர்க்கம் எதிர்பார்க்கிறது. அதனால் இதை முதலாளித்துவ வர்க்க குணாம்சம் கொண்ட அரசு என்கிறோம். முதலாளித்துவ கட்டமைப்பை எதிர்த்துப் போராடாமல், வெற்றியை நோக்கி ஓர் அடி கூட நகர முடியாது.
#தோழ‌ர் - அதிகார‌ வ‌ர்க்க‌த்தை அஞ்சி ந‌டுங்க‌ வைத்த‌‌ ஒரே சொல். த‌மிழ் நாட்டில் அது தான் எதிர்ப்பின் அடையாள‌ம். இனிமேல் தோழ‌ர் என்று சொல்ல‌ ம‌றுப்ப‌வ‌ர்க‌ள் அர‌ச‌ ஒத்தோடிக‌ளாக‌ க‌ருத‌ப் ப‌டுவ‌ர். அர‌ச‌ எதிர்ப்பாள‌ர்க‌ள் அனைவ‌ரும் எம‌க்கு தோழ‌ர்க‌ளே!

Saturday, January 21, 2017

தமிழன்டா! தமிழ் விவசாயிகள் தற்கொலைக்காக போராட வர மாட்டான்டா!!



த‌மிழ‌ன்டா! 
ஏறுத‌ழுவ‌ எதிரியும் வ‌ருவான்டா!! 
ஜ‌ல்லிக்க‌ட்டு போராட்ட‌ம், 
இந்திய‌ அர‌சுக்கு கொண்டாட்ட‌ம். 
த‌மிழ‌ர் பார‌ம்ப‌ரிய‌ம் பாதுகாப்போம், 
த‌மிழ் விவ‌சாயிகளை புற‌க்க‌ணிப்போம். 
பீட்சா, பேர்க‌ர் உண்போம், 
பீட்டா எம‌து எதிரி என்போம். 
த‌மிழ‌ன் என்று சொல்ல‌டா, 
த‌ன் ந‌ல‌ம் ம‌ட்டுமே நினைய‌டா!





அன்பான‌ த‌மிழ் இன‌ உண‌ர்வாள‌ர்க‌ளே! 

த‌ய‌வுசெய்து, இந்த‌ இட‌ம் எத்தியோப்பியாவில் இருக்கிற‌தா என்று கேட்டு விடாதீர்க‌ள். தஞ்சாவூரின் காவிரி நதியோர வயல்கள் காய்ந்து போய், அந்தப் பகுதிகள் வறண்ட பிரதேசமாக காணப் படுகின்றன. வரலாறு காணாத கடும் வரட்சி காரணமாக, த‌மிழ் நாட்டின் விவ‌சாய‌ நில‌ங்க‌ள் கடுமையாக பாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. அத‌னால், கடன்களை கட்ட முடியாமல் விவ‌சாயிக‌ள் த‌ற்கொலை செய்வ‌தும் அதிக‌ரித்துள்ள‌து.

த‌மிழ் நாட்டில் க‌ட‌ந்த‌ ஒரு வ‌ருட‌த்தில் ம‌ட்டும் 144 விவ‌சாயிக‌ள் அகால‌ ம‌ர‌ண‌ம் அடைந்துள்ள‌தாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது. இந்தியா முழுவதும் பார்த்தால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டும். (Tamil Nadu Farmer Suicide http://www.ndtv.com/topic/tamil-nadu-farmer-suicide)

பெரும்பாலான தமிழ் விவசாயிகள், எதிர்காலம் சூனியமான அதிர்ச்சி காரணமாக, மார‌டைப்பு க‌ண்டு, அல்ல‌து நோய் வாய்ப்ப‌ட்டு இற‌ந்துள்ள‌ன‌ர். குறைந்த‌து 50 பேராவது த‌ற்கொலை செய்து கொண்டுள்ள‌ன‌ர்.

வ‌ர‌ட்சி, நில‌த்த‌டி ம‌ற்றும் ந‌தி நீர் குறைந்த‌மை போன்ற‌ இயற்கை பேரிட‌ர் இன்றும் தொட‌ர்கின்ற‌து. அதே நேர‌ம், க‌ட‌ந்த‌ வ‌ருட‌ இறுதியில், த‌மிழ் நாட்டில் இடம்பெற்ற இர‌ண்டு பெரிய அர‌சிய‌ல் மாற்ற‌ங்க‌ளும் விவசாயிகளின்  த‌ற்கொலை சாவுக‌ளுக்கு கார‌ண‌மாக‌ இருந்துள்ள‌ன‌.

முதலாவதாக, மோடி கொண்டு வந்த க‌றுப்புப் ப‌ண‌ ஒழிப்பு என்ற பெயரிலான பண முடக்கம், விவ‌சாயிக‌ளை பெரும‌ள‌வு பாதித்துள்ள‌து. வங்கியில் பணம் இருந்தாலும் அதை தேவைக்கு எடுக்க முடியாத நிலை இருந்தது. அதனால் முந்திய கடன்களை கட்டுவதற்கு, அல்லது அவசர செலவுகளுக்கு, விவ‌சாயிக‌ள் க‌ந்துவ‌ட்டிக்கார‌ரிட‌ம் க‌ட‌ன் வாங்கினார்க‌ள். இறுதியில், அதையும் க‌ட்ட‌ முடியாம‌ல் உயிரை மாய்த்துக் கொண்ட‌ன‌ர்.

இரண்டாவதாக, முன்னாள் முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதாவின் மரணமும் விவசாயிகளை கடுமையாகப் பாதித்தது. அவர் சுகயீனமுற்று மாத‌க் க‌ண‌க்கில் ம‌ருத்துவ‌ம‌னையில் கிட‌ந்த‌தால், அர‌ச‌ நிதி ஒதுக்கீடுக‌ளை யாரும் க‌வ‌னிக்க‌வில்லை. அந்த வருட ப‌ட்ஜெட் கூட‌ இய‌ந்திர‌த் த‌ன‌மாக‌ நிறைவேற்ற‌ப் ப‌ட்ட‌து. அதிகார‌ ம‌ட்ட‌த்தில் உள்ள‌ ம‌னித‌ர்க‌ள் இழைத்த‌ த‌வ‌றுக‌ளுட‌ன், இய‌ற்கையும் ஏமாற்றிய‌தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் விவ‌சாயிக‌ள் தான்.

ஜ‌ல்லிக்க‌ட்டுக்கு ஆத‌ர‌வாக‌ போராடும் த‌மிழ‌ர்க‌ளே! இந்த‌ உண்மைக‌ள் உங்க‌ள் க‌ண்க‌ளுக்கு தெரிய‌ விடாம‌ல் ம‌றைப்ப‌த‌ற்குத் தான், அர‌சே திட்டமிட்டு உங்க‌ளுக்கு த‌மிழ் இன‌ உண‌ர்வை ஊட்டி வ‌ருகின்ற‌து. "த‌மிழ‌ன்டா" என்று நீங்க‌ள் பொங்கியெழும் ஒவ்வொரு த‌ட‌வையும் அர‌சு வெற்றிப் பெருமித‌த்தால் பூரித்துப் போகின்ற‌து.

இத‌ற்குப் பிற‌கும், இத்த‌னை இல‌ட்ச‌ம் ச‌ன‌ம் எப்ப‌டி சேர்ந்தார்க‌ள் என்று கேட்கிறீர்க‌ள். இப்போது இது மாதிரி வேறு க‌தை பேசினால், எதிரிக்கு வாய்ப்பாகி விடும் என்று த‌டுக்கிறீர்க‌ள். த‌மிழ‌ர்க‌ளின் உண‌ர்வை திசை திருப்புவ‌தாக‌ கொதிக்கிறீர்க‌ள். உங்களை விம‌ர்சிப்ப‌வ‌ர்க‌ள் நக்க‌ல், நையாண்டி செய்வ‌தாக‌ குமுறுகிறீர்க‌ள்.இந்த‌க் குற்ற‌ச்சாட்டுக‌ள் உங்க‌ளுக்கு பொருந்தாதா? 

அர‌சின் த‌வ‌றுக‌ளால் விவ‌சாயிக‌ள் த‌ற்கொலை செய்த‌ த‌க‌வ‌ல்க‌ள் வெளியே வ‌ர‌ விடாம‌ல் த‌டுத்து, ம‌றைமுக‌மாக‌ அர‌சுக்கு உத‌வுகிறீர்க‌ள். "தமிழராக ஒன்று சேரும் உணர்வு பூர்வ அரசியல்", உண்மையில் இலங்கை, இந்திய அரசுக்களின் நிகழ்ச்சி நிரலின் கீழ் நடக்கின்றது என்ற உண்மையை தாங்கள் அறியவில்லையா?

த‌மிழ்நாடு ம‌ட்டும‌ல்ல‌, இல‌ங்கையும் வரலாறு காணாத வ‌ற‌ட்சியால் பாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. அங்கும் மழை வீழ்ச்சி குறைவு காரணமாக, எரி, குளம் போன்ற நீர் நிலைகளில் தண்ணீர் வற்றி வருகின்றது. இதனால் இலட்சக் கணக்கான விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். (With drought looming, Sri Lanka tries something new: preparing)

ஜ‌ல்லிக்க‌ட்டு என்ற‌ ப‌ழ‌ந்த‌மிழ் பார‌ம்ப‌ரிய‌த்தையும், மாடுக‌ளையும் பாதுகாப்ப‌து ம‌ட்டுமே த‌மிழ‌ர்க‌ளின் க‌ட‌மையா? உங்க‌ளைப் போன்றே ஒரே மொழி பேசும், ஓரினத்தை சேர்ந்த, விவ‌சாயிக‌ளை ம‌ர‌ண‌த்தின் பிடியில் இருந்து பாதுகாப்ப‌து த‌மிழ‌ரின் க‌ட‌மை இல்லையா?

த‌மிழ் ம‌ர‌பை இழ‌ந்தால் த‌மிழ் இன‌மே அழிந்து விடும் என்று க‌வ‌லைப் ப‌டுகிறீர்க‌ள். த‌மிழ் விவ‌சாயிக‌ளை இழ‌ந்தால் ஒரு நேர‌ உண‌வு கூட‌க் கிடைக்காது என்று நீங்க‌ள் க‌வ‌லைப் பட்டதுண்டா? இப்போது உண‌வு வாங்க‌ எம்மிட‌ம் ப‌ண‌ம் இருக்கிற‌து தானே என்று மேட்டுக்குடித் திமிருட‌ன் பேச‌லாம்.  நாளைக்கு உண‌வுப் பொருட்க‌ளின் விலை உய‌ர்ந்தால், அது உங்க‌ள் மாத வ‌ருமான‌த்தை குறைக்கும். அதன் அர்த்தம், எதிர்காலத்தில் நீங்களும் ஏழைகளாகலாம் என்பதை எண்ணிப் பார்க்க‌வில்லையா?

பாலைவன‌மாகிப் போன‌ த‌ஞ்சாவூர் ம‌ண்ணில் செத்துக் கொண்டிருக்கும் விவ‌சாயிக‌ள் உங்க‌ளுக்கு உற‌வுக் கார‌ர்க‌ளாக‌ இல்லாம‌ல் இருக்க‌லாம். ஆனால் அவர்கள் த‌மிழ‌ர்கள் இல்லையா? இதை கேட்டால் திசை திருப்ப‌லாக‌ ப‌டுகின்ற‌தா? அப்ப‌டியானால், உங்க‌ளைப் பொருத்த‌வ‌ரையில் "யார் த‌மிழ‌ன்?" ஆங்கில‌ வ‌ழிக் க‌ல்வி க‌ற்று, அந்நிய‌ நாட்டு நிறுவ‌ன‌த்திற்கு சேவை செய்ப‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே த‌மிழ‌ர்க‌ளா?

உங்க‌ள் த‌மிழ் தேச‌ ம‌ண்ணில், உங்க‌ள் க‌ண் முன்னால் செத்துக் கொண்டிருக்கும் விவ‌சாயிக‌ளை க‌ண்டுகொள்ளாம‌ல், மாடு பிடிக்கும் விளையாட்டுக்கு அனும‌தி கேட்டு போராடுவ‌து எத்த‌னை பெரிய‌ மோச‌டி? இத‌ன் மூல‌ம் நீங்க‌ள் ம‌னித‌நேய‌த்தை நையாண்டி செய்கிறீர்க‌ள் என்ப‌தை உண‌ர‌வில்லையா?

இப்போதும் இந்த‌ உண்மைக‌ள் ம‌ண்டையில் ஏற‌வில்லை என்றால் எதிர்கால‌ம் சூனிய‌மாகும். ப‌ட்டினிச் சாவுக‌ள், எங்கேயோ இருக்கும் எத்தியோப்பாவின் அவ‌ல‌ம் அல்ல‌. அது நாளை த‌மிழ் நாட்டிலும், இல‌ங்கையிலும் ந‌ட‌க்க‌லாம். அப்போது இந்த‌ தமிழ் இன‌ உண‌ர்வுவாத‌ம் எத‌ற்குமே உத‌வ‌ப் போவ‌தில்லை.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Thursday, January 19, 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆந்திராவில் அனுமதி, தமிழ்நாட்டில் மட்டும் தடை ஏன்?


"த‌மிழ் நாட்டின் அர‌பு வ‌ச‌ந்த‌ம்" "TAMILS vs PETA" என்றெல்லாம் வ‌ட‌ இந்திய‌ ஊட‌க‌ங்க‌ள் ஜ‌ல்லிக்க‌ட்டு போராட்ட‌ங்க‌ளை சித்த‌ரிக்கின்ற‌ன‌.

ச‌ந்தேக‌த்திற்கிட‌மின்றி பீட்டா ஒரு என்.ஜி.ஓ. தான். ஆனால், பெரும் முத‌லாளிக‌ளுக்கு த‌லையிடியாக‌ இருந்த‌ என்.ஜி.ஓ. மேற்க‌த்திய‌ நாடுக‌ளில் அத‌ன் ந‌ட‌வ‌டிக்கைக‌ளால் ப‌ல‌ பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ன‌.

உதார‌ண‌த்திற்கு, முய‌ல், மான் போன்ற‌ வ‌ளர்ப்பு மிருக‌ங்க‌ளின் தோல்க‌ளில் இருந்து த‌யாரிக்க‌ப் ப‌டும் உடைக‌ளுக்கு எதிராக‌ பிர‌ச்சார‌ம் செய்த‌து. அத‌னால், ப‌ண‌க்கார‌ வீட்டுப் பெண்க‌ள் அணியும் விலை உய‌ர்ந்த‌ உடைக‌ளின் விற்ப‌னை வீழ்ச்சி க‌ண்ட‌து.

இத‌ற்கு முன்ன‌ர் ஸ்பெயின் நாட்டில் ந‌ட‌க்கும் மாடு பிடிக்கும் விளையாட்டை த‌டை செய்ய‌ வேண்டுமென‌ பீட்டா போராட்ட‌ம் ந‌ட‌த்திய‌து. ஸ்பெயினில் விளையாட்டின் முடிவில் மாட்டை விர‌ட்டி ஈட்டி எறிந்து கொல்வார்க‌ள். அத‌னோடு ஒப்பிடும் பொழுது த‌மிழ‌க‌ ஜ‌ல்லிக்க‌ட்டு குரூர‌மான‌து அல்ல‌.

இந்திய‌ பீட்டா அமைப்பில் இந்துத்துவா - பிராம‌ண‌ர்க‌ள் இருப்ப‌து ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌வாத‌ம். அதாவது, பிராம‌ண‌ர்க‌ளின் வ‌ழ‌க்க‌மான‌ மாமிச‌ உண‌வின் மீதான‌ வெறுப்புண‌ர்வு, கோமாதா வ‌ழிபாடு போன்ற‌ன‌ பீட்டாவின் கொள்கையுட‌ன் ஒத்துப் போகின்ற‌ன‌. ஆனால், ச‌ர்வ‌தேச‌ ம‌ட்ட‌த்தில் பீட்டாவின் அனைத்து ந‌ட‌வ‌டிக்கைக‌ளுட‌னும் ஒத்துப் போவார்க‌ள் என்று சொல்ல‌ முடியாது.

யாழ்ப்பாண‌த்தில் ந‌ட‌ந்த‌ ஜ‌ல்லிக்க‌ட்டு ஆத‌ர‌வுப் போராட்ட‌த்தில், "பீட்டாவின் பெய‌ரில் ப‌ன்னாட்டு வ‌ணிக‌ நிறுவ‌ன‌ங்க‌ள் த‌மிழின‌ ம‌ர‌புரிமையை அழிப்ப‌தாக‌" அறிக்கை வாசித்தார்க‌ள்.

ச‌ர்வ‌தேச‌ ம‌ட்ட‌த்தில், பீட்டா ப‌ன்னாட்டு வ‌ணிக‌ நிறுவ‌ன‌ங்க‌ளின் வெறுப்புக்கு ஆளாகி உள்ள‌து. இங்கே என்ன‌வென்றால் அதையே ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌மாக‌ காட்டும் அப‌த்த‌ம் ந‌ட‌க்கிற‌து.

இது அறியாமையில் நேர்ந்த‌ த‌வ‌றாக‌ தெரிய‌வில்லை. இந்துத்துவா பிராம‌ண‌ர்க‌ள் பீட்டாவுக்குள் ம‌றைந்து நிற்ப‌து அவ‌ர்க‌ள‌து சுய‌நல‌ம். அதே மாதிரி, பன்னாட்டு நிறுவ‌ன‌ங்க‌ள் ஜ‌ல்லிக்க‌ட்டு ஆத‌ர‌வாள‌ர்க‌ளின் பின்னால் ம‌றைந்து கொள்ள‌லாம்.

IT ஊழிய‌ர்க‌ள் போன்ற‌ ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌த்தின‌ரும் தெருவுக்கு வ‌ந்து போராடுகிறார்க‌ள் என்றால், அங்கே அவ‌ர்க‌ள‌து வ‌ர்க்க‌ ந‌ல‌ன்க‌ளும் பாதுகாக்க‌ப் ப‌டுகின்ற‌து என்று அர்த்த‌ம். அவ‌ர்க‌ள‌து வேலைக்கு உத்த‌ர‌வாத‌ம் உண்டு என்று அர்த்த‌ம்.

த‌மிழ‌க‌ விவ‌சாயிக‌ளின் த‌ற்கொலை மர‌ண‌த்திற்கு கார‌ண‌மான‌ மான்சாண்டோ போன்ற‌ ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளை எதிர்த்து இவ‌ர்க‌ள் போராட‌வில்லை. இனிமேலும் போராட‌ப் போவ‌தில்லை. "த‌மிழ‌ர்க‌ளை இன‌ப்ப‌டுகொலை செய்த‌ மான்சாண்டோ ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தை எதிர்ப்போம்" என்று வழ‌மையான‌ த‌மிழ்த் தேசிய‌ கோஷ‌த்தின் கீழ் போராட‌லாம். அதெல்லாம் ந‌ட‌க்க‌ப் போவ‌தில்லை.

இப்போதும் த‌மிழ் விவ‌சாயிக‌ளின் த‌ற்கொலை ப‌ற்றி எதுவும் அறிய‌ விரும்பாத‌வ‌ர்க‌ள் தான், ஜ‌ல்லிக்க‌ட்டுக்கு ஆத‌ர‌வாக‌ "த‌ன்னெழுச்சியாக‌" வ‌ந்து போராடினார்க‌ள். பீட்டாவை த‌மிழின‌ எதிரியாக‌ சித்த‌ரிப்ப‌து, உண்மையான‌ எதிரியின் திசைதிருப்பும் உத்தி. ப‌ல‌ த‌மிழ‌ர்க‌ள் அந்த‌ப் பொறிக்குள் விழுந்து கொண்டிருக்கிறார்க‌ள்.

பீட்டா த‌மிழின‌ எதிரி என்றால், மான்சாண்டோ த‌மிழின‌ ந‌ண்ப‌னாக இருக்க‌ முடியாது. முள்ளிவாய்க்கால் த‌மிழ் இனப்‌ப‌டுகொலையை ஆத‌ரித்த‌ IMF த‌மிழரின் ந‌ண்ப‌னாக‌ இருக்க‌ முடியாது. ‌ த‌ன‌து எதிரியை ச‌ரியாக‌ இன‌ம் காண‌ முடியாத‌ கும்ப‌லுக்குள், எதிரி இல‌குவாக‌ ஒளிந்து கொள்ள‌ முடியும். அது தான் ந‌ட‌க்கிற‌து.

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழ்நாடு கொந்தளித்துக் கொண்டிருக்கும், அதே நேரத்தில் ஆந்திரா மாநிலத்தில் வழமை போல இந்த வருடமும் ஜல்லிகட்டு நடத்தப் பட்டுள்ளது. (Jallikattu organised in Andhra Pradesh CM Chandrababu Naidu's home district Chittoor; Two bulls die in AP jallikattu)

ஆகவே, நீதிமன்றத் தடை தமிழ்நாட்டில் மட்டுமே, ஆந்திராவில் அல்ல!

தமிழ்த் தேசிய கருத்தியலை நம்புவோருக்கு இந்தத் தகவல் உவப்பானதாக இருக்கப் போவதில்லை. ஏனென்றால், அவர்கள் "இது தமிழருக்கு மட்டுமே உரிய வீர விளையாட்டு" என்று நம்புவதுடன், அதையே பரப்புரை செய்து வருகின்றனர். சிந்து வெளியில் வாழ்ந்த தமிழர்கள் ஜல்லிகட்டு விளையாடியதாக, இன வரலாறு பேசும் "மொழி ஆய்வாளர்கள்", வழமை போல இனத்தையும், மொழியையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள்.

முதலில் ஜல்லிக்கட்டு என்ற பெயர்ச் சொல் எப்படி வந்தது என்று யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. சல்லிக்கட்டு, அல்லது ஏறு தழுவுதல் என்று, தமிழினத்திற்கு மட்டுமே சொந்தமானது என்று காட்ட முனைகிறார்கள். தமிழரும், தெலுங்கரும் இனத்தால் ஒன்று தான். ஆனால், மொழியால் வேறு பட்டவர்கள். அதனால் தான் தமிழ்நாட்டில் விளையாடும் அதே ஜல்லிக்கட்டு, ஆந்திராவிலும் விளையாடப் படுகின்றது. 

ஜல்லிக்கட்டு என்ற சொல் கூட தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்திருக்கலாம். தமிழ்நாட்டில் மஞ்சு விரட்டு எனும் மாட்டை துன்புறுத்தாத விளையாட்டு மட்டுமே இருந்திருக்கிறது. 500 வருடங்களுக்கு முன்னர், தெலுங்கு நாயக்கர் மன்னர் ஆட்சிக் காலத்தில் தான், ஜல்லிக்கட்டு எனும் வீர விளையாட்டு தமிழ்நாட்டில் புகுத்தப் பட்டிருக்க வேண்டும். இலங்கையில், ஈழத்தமிழரின் பூர்வீகமான வடக்கு கிழக்கில், எந்தக் காலத்திலும் ஜல்லிக்கட்டு விளையாடப் பட்டிருக்கவில்லை.

தமிழருக்கும், தெலுங்கர்களுக்கும், பிற திராவிட மொழிப் பிரிவினருக்கும் இடையில், இது போன்ற பல ஒற்றுமைகள் உள்ளன. அப்படித் தான் சிந்துவெளி ஆதாரத்தையும் நாம் பார்க்க வேண்டும். ஆனால், நமது தமிழ்த் தேசியவாதிகள் அல்லது மொழி அடிப்படைவாதிகள் அவற்றை கண்டுகொள்ளப் போவதில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வாதாடிக் கொண்டிருப்பார்கள்.

தமிழ்நாட்டிலும் ஜல்லிக்கட்டு எல்லா இடங்களிலும் விளையாடப் படுவதில்லை. மதுரை போன்ற தென் பகுதி மாவட்டங்களில் மட்டுமே உள்ள பாரம்பரிய விளையாட்டு. சில குறிப்பிட்ட ஆதிக்க சாதி நிலவுடமையாளர்களின் ஆணவத்தை காட்டவும் விளையாடப் பட்டது. 2006 ம் ஆண்டு வரையில், ஜல்லிக்கட்டு காரணமாக சாதிக் கலவரங்கள் நடந்துள்ளன. ஆனால், அதற்காக அந்த விளையாட்டு தடைசெய்யப் படவில்லை.

மிருகவதைக்கு எதிராக போராடும் பீட்டா போட்ட வழக்கின் காரணமாக வந்த தடை என்றால், அது ஆந்திராவிலும் வந்திருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தடை போடக் காரணம் என்ன? இதற்குப் பின்னால் சில அரசியல் காய்நகர்த்தல்கள் இருந்திருக்க வாய்ப்புண்டு. தமிழ்நாட்டில் ஒரு குழப்பத்தை உண்டாக்கும் நோக்கம் இருக்கலாம்.

இந்திய பீட்டா அமைப்பின் தலைமையில் இருப்பவர்கள் பெரும்பாலும் இந்துத்துவா கொள்கையை கடைப்பிடிக்கும் பிராமணர்கள். பீட்டா ஒரு NGO எனப்படும் அரசு சாரா நிறுவனம். அதே நேரம், பீட்டாவை எதிர்த்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களத்தில் நின்று போராடும் BiCCI கூட ஒரு NGO தான். தமிழக வணிக ஊடகங்கள் மட்டுமல்ல, சினிமா நடிகர்கள், கிரிக்கட் வீரர் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறது.

நாளை ஒரு போராட்டம், வீதிக்கு வா தோழா என்றால், இளம் தலைமுறையினர் ஓடி வருவார்கள். இளங்கன்று பயமறியாது என்பது போல போராட்டத்திற்கு இளைஞர்கள் சேர்வது அதிசயமல்ல. ஆனால், அவர்களை வழிநடத்தும் அரசியல் சக்தி எதுவென்பது தான் பிரச்சினை.

போராட்டத்தில் கலந்து கொள்ளும் இந்து பாசிச சக்திகள், "ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்கள் மாட்டுக்கறி சாப்பிடாதீர்கள்" என்று பிரச்சாரம் செய்து தம் பக்கம் வென்றெடுக்க பார்க்கின்றன. அதற்கெதிராக இடதுசாரி சக்திகளும் களத்தில் நின்று போராடுகின்றன.

இந்து பாசிஸ்டுகளின் நோக்கம் நிறைவேறினால் தமிழ்நாடும் மதக் கலவரங்களால் பாதிக்கப்படும். இடதுசாரிகளின் நோக்கம் நிறைவேறினால் தமிழ்நாடு ஜனநாயக மயப் படும். தமிழ்நாட்டு மக்கள் இந்துமதவெறியர்களின் சூழ்ச்சிக்கு பலியாகினால், ஜனநாயகத்தை மீட்பதற்கு தசாப்த காலம் எடுக்கும்.