Monday, January 30, 2017

இலங்கை அரசறிவியல் பாட நூலில் உள்ள கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம்


சி.அ.யோதிலிங்கம் எழுதிய "அரசறிவியல் - ஓர் அறிமுகம்" நூல், இலங்கையில் க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்கள் படிப்பதற்காக எழுதப் பட்டுள்ளது. "வினாத்தாளை மையமாக வைத்து" எழுதப் பட்டிருப்பதாக அந்த நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது. அவ்வாறான ஒரு பாட நூலில் சோஷலிச  நாடுகள் பற்றிய உண்மைக்கு புறம்பான, பிழையான கருத்துக்கள் எழுதப் பட்டுள்ளன. வழக்கமாக இதைப் படிக்கும் மாணவர்கள், பரீட்சையிலும் அதைத் தான் ஒப்புவிக்கப் போகிறார்கள். அதற்கு மாறாக சரியான தகவல்களை எழுதினால் அவர்களுக்கு புள்ளிகள் கிடைக்காது. தமிழ் மாணவர்களை கம்யூனிச எதிர்ப்புவாதிகளாக மூளைச் சலைவை செய்யவும் இது போன்ற பாட நூல்கள் உதவுகின்றன. இப்படியான பாடநூல்கள் சிறிலங்கா அரசின் முதலாளித்துவ சார்புக் கொள்கைக்கு ஏற்றவாறு எழுதப் படுகின்றன.

அரசறிவியல் நூலில், அரசு பற்றிய சோசலிசக் கொள்கையின் குறைபாடுகள் என்ற உபதலைப்பின் கீழ் எழுதப் பட்டுள்ள அபத்தமான கட்டுக்கதைகளையும், அதற்கான எனது விளக்கங்களையும் கீழே தருகின்றேன். 1.//காலச் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே கார்ல் மார்க்ஸ் இக்கொள்கையை முன்வைத்தார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பொருந்துகின்ற கொள்கை எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் என கூற முடியாது.// - யோதிலிங்கம்

அது என்ன "காலச் சூழ்நிலை"? கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த 19 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் முதலாளித்துவம் அதன் உயர்ந்த வளர்ச்சிக் கட்டத்தை கண்டிருந்தது. முதலாளித்துவ பொருளாதாரம் மீதான விமர்சனமாக மூலதனம் என்ற நூலை எழுதினார். முதலாளித்துவம் எவ்வாறு உழைப்பாளிகளின் உழைப்பை உபரி மதிப்பாக சுரண்டுகின்றது? அதை எவ்வாறு மூலதனமாக மாற்றிக் கொள்கிறது? செல்வம் எவ்வாறு ஒரு குறிப்பிட்ட சிலரின் கைகளில் மட்டும் குவிகின்றது? இதை விளக்குவது தான் "கார்ல் மார்க்ஸின் கொள்கை". இன்று உலகில் எங்குமே முதலாளித்துவம் இல்லையா? உழைப்பாளிகள் சுரண்டப் படுவதில்லையா? உபரிமதிப்பு மூலதனமாக மாறுவதில்லையா?

அது எப்படி இன்றைய உலகில் ஏழைகள் மென் மேலும் ஏழைகளாகவும்,பணக்காரர்கள் மென் மேலும் பணக்காரர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்? உலக சனத்தொகையில் அரைவாசிப் பேரிடம் உள்ள செல்வம் அளவிற்கு, எட்டுப் பணக்கார்களிடம் செல்வம் குவிந்துள்ளது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் முதலிட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்கள், உழைப்பாளிகளுக்கு சொற்பத் தொகையை கொடுத்து சுரண்டும் பணம் (மூலதனம்) மேலை நாடுகளுக்கு கடத்தப் படுகின்றது. அந்த இலாபப் பணத்திற்கு எந்த நாட்டிலும் வரி கட்டுவதில்லை. அது வரியில்லா சொர்க்கத் தீவுகளில் இரகசிய வங்கிக் கணக்கில் குவிக்கப் படுகின்றது. இதெல்லாம் கார்ல் மார்க்ஸின் கொள்கை இந்தக் காலத்திலும் சரியாகப் பொருந்துகின்றது என்பதை தானே நிரூபிக்கின்றது?

2.//இக் கொள்கை பொருளாதாரக் காரணிகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. வரலாற்றில் செல்வாக்கு செலுத்தும் மனிதர்கள், சமூகம், மதம், புவியியல் போன்ற காரணிகளை கவனத்தில் எடுக்கவில்லை.// - யோதிலிங்கம்

ஒன்றைப் பற்றி எழுதுவதற்கு முன்னர் அதைப் பற்றி ஓரளவுக்காவது அறிந்திருக்க வேண்டும். மார்க்சியத்தின் அரிச்சுவடி கூட தெரியாமல் நுனிப்புல் மேயக் கூடாது. கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் பொருளாதாரத்தை அலசுகின்றது. ஆனால், அவர் அதை மட்டும் எழுதவில்லையே? வேறு நூல்களும் இருக்கின்றன தானே? மார்க்ஸின் நண்பர் எங்கெல்ஸ் எழுதிய "குடும்பம், அரசு, தனிச் சொத்து ஆகியவற்றின் தோற்றம்" நூலில் மனித இனத்தின் வரலாறு, மானிடவியல், சமூகவியல் என்பன ஆராயப் படுகின்றன. பிரிட்டனில் உழைக்கும் வர்க்க மக்களின் அவலங்கள் பற்றிய நூல், அன்றைய காலத்து சமூகப் பிரச்சனைகளை விரிவாக விளக்குகின்றது. வரலாற்றில் கிறிஸ்தவ மதத்தின் பாத்திரம் பற்றி மார்க்ஸ் ஒரு நூல் எழுதி இருக்கிறார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். //வரலாற்றில் செல்வாக்கு செலுத்தும் மனிதர்கள்// வரலாறுகள் யாவும் மன்னர்களை புகழ்ந்து எழுதி இருப்பதாகவும், மக்களின் வரலாறு எழுதப் படுவதில்லை என்பதையும் மார்க்சியம் தான் எடுத்துக் காட்டியது.

3.//இன்றைய முதலாளித்துவம் நலன்புரி முதலாளித்துவமாக மாற்றமடைந்துள்ளது. இந்நிலையில் முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் புரட்சி செய்ய முன்வருவார்கள் என்பது சந்தேகமானதாகும்.// - யோதிலிங்கம்

மேற்கு ஐரோப்பிய நாடொன்றில் வாழும் ஒருவர் இப்படி எழுதி இருந்தால், அவரது குறுகிய சிந்தனைக்கு ஒரு நியாயம் இருக்கலாம். ஆனால், இன்றைக்கும் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர் இதை எழுதியிருப்பதை நம்ப முடியவில்லை. இலங்கையிலும் முதலாளித்துவம் இருக்கிறது. ஆனால் அங்குள்ள "நலன்புரி முதலாளித்துவம்" சிறப்பாக செயற்படுமானால், யாரும் வேலை தேடி வெளிநாடுகளுக்கு ஓட மாட்டார்கள். யாரும் வறுமையில் வாட மாட்டார்கள். வேலையில்லா விட்டால் ஒரு குடும்பமே பட்டினி கிடக்க வேண்டிய நிலைமை.

அது வந்து... மேற்கத்திய "நலன்புரி முதலாளித்துவம்" பற்றி சொன்னேன் என்று சப்பைக் கட்டு கட்டலாம். நீண்ட நெடுங்காலமாக நடந்த தொழிலாளர்களின் உரிமைப் போராட்டம் காரணமாகத் தான், மேற்கு ஐரோப்பாவில் நலன்புரி அரசுகள் உருவாகின. அதுவும் இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் தான். கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிச நாடுகள் உருவான பின்னர் தான். அதாவது, தாங்களும் அதே சோஷலிசக் கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதை சொல்லிக் கொள்ளாமல், நலன்புரி அரசு என்றார்கள். இல்லாவிட்டால் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் புரட்சிகள் நடந்திருக்கும் என்று அஞ்சினார்கள்.

மேற்கு ஐரோப்பிய நாடுகள் போன்ற மூலதன குவிப்புகளால் நன்மை அடைந்த முதலாளித்துவ நாடுகளில் தான், நலன்புரி அரசு இருக்கின்றது. பெரும்பாலான லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் இன்றைக்கும் முதலாளித்துவம் இருக்கிறது. ஆனால், அது எதுவுமே "நலன்புரி முதலாளித்துவம்" அல்ல. இன்றைக்கும் மார்க்ஸ் வாழ்ந்த காலத்து ஐரோப்பா மாதிரி, கஞ்சிக்கும் வழியில்லாத ஏழைகளும், மாட மாளிகைகளில் வாழும் பணக்காரர்களும் என சமூகம் இரண்டாகப் பிரிந்திருக்கிறது. அந்த நாடுகளில் ஏழைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்பதால், அவை இன்றைக்கும் வறிய நாடுகள் என்றே அழைக்கப் படுகின்றன.

4.// மக்கள் இருக்கின்ற வரை மக்களுக்கான பொதுத் தேவைகளும் இருக்கும். இப்பொதுத் தேவைகளை நிறைவேற்ற அரசு என்ற நிறுவனமும் எப்போதும் அவசியமாக இருக்கும். இந்நிலையில் அரசற்ற கம்யூனிச சமூகம் உருவாகும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.// - யோதிலிங்கம்

ஸ்பெயின் நாட்டில் மரினலேடா (Marinaleda)என்ற கிராமம் இருக்கிறது. அங்கே பல வருட காலமாக கம்யூனிச சமூகம் சிறப்பாக இயங்கி வருகின்றது. அரசு கட்டமைப்பின் எந்த அம்சமும் அங்கே இல்லை. அதாவது, நீதிமன்றம், பொலிஸ், சிறைச்சாலை எதுவும் இல்லை! அந்தளவுக்கு அங்கே எந்தக் குற்றச் செயலும் நடப்பதில்லை! வேலை செய்யும் எல்லோருக்கும் சமமான ஊதியம் வழங்கப் படுகின்றது. 

அருகில் உள்ள ஸ்பானிஷ் கிராமங்களை விட அங்கு கொடுக்கும் சம்பளம் அதிகம்! அதனால், அயல் கிராம கூலியாட்கள் அங்கு சென்று வேலை செய்கிறார்கள். குழந்தைகள் பராமரிப்பு, ஓய்வுநேர பொழுதுபோக்குகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் அனைவருக்கும் கிடைக்கும். அத்தோடு சொந்தமாக வீடு கட்டுவதற்கு உதவியும் கிடைக்கும். இப்படியான கம்யூனிச சமூகங்கள், இன்றைக்கும் ரஷ்யாவிலும், சீனாவிலும் சில இடங்களில் இருக்கின்றன. ஏன் அமெரிக்காவில் கூட இருக்கிறது!

அரசு என்பது ஒரு அடக்குமுறை இயந்திரம். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இலங்கையில் வாழும் தமிழர்களைக் கேட்டால் அரச அடக்குமுறைகள் பற்றிக் கதை கதையாக சொல்வார்கள். உலகில் எல்லா நாடுகளிலும் அரசு இருந்தால் அங்கு அடக்குமுறையும் இருக்கும். ஒரு நாட்டில் அதிகமாகவும், இன்னொரு நாட்டில் குறைவாகவும் இருக்கலாம். 

அரசு எப்போதும் மனிதர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும். உதாரணத்திற்கு, பாஸ்போர்ட் இல்லாமல் யாரும் இன்னொரு நாட்டிற்கு செல்ல முடியாது. அதாவது தேசம் என்ற சிறைச்சாலைக்குள் நாங்கள் எல்லோரும் கைதிகள் தான். இது உங்களுக்கு நகைப்புக்குரியதாக இருக்குமானால், நீங்கள் அரச அடக்குமுறைகளை ஒரு சாதாரணமான விடயமாக ஏற்றுக் கொள்ள பழகி விட்டீர்கள் என்று அர்த்தம்.

5.//மார்க்ஸ் வர்க்கங்களை கவனத்தில் எடுத்தாரே தவிர அண்மைக்காலத்தில் வளர்ச்சி அடைந்துள்ள தேசியவாதம் பற்றி கவனத்தில் எடுக்கவில்லை.// -யோதிலிங்கம்

இது சுத்த அபத்தமான கூற்று. உண்மைக்கு புறம்பான கட்டுக்கதை. மார்க்ஸ் பிறப்பதற்கு முன்பிருந்தே ஐரோப்பாவில் தேசியவாத கொள்கைகள் பின்பற்றப் பட்டு வந்துள்ளன. மிகச் சரியாக சொல்வதென்றால், பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர், நெப்போலியனின் நாடு பிடிக்கும் போர்கள் நடந்தன. முதலாளித்துவம், தாராண்மைவாதம் போன்ற கொள்கைகள் அப்போது தான் ஐரோப்பா முழுவதும் பரப்பப் பட்டன. நெப்போலியன் போரில் தோற்கடிக்கப் பட்ட பின்னர், அநேகமான ஐரோப்பிய நாடுகள் குடியரசுகளாக மாறின. அப்படித் தான் தேசிய அரசுகள் தோன்றின. ஐரோப்பாவில் தேசிய அரசுகள் உருவாகி பல தசாப்தங்களுக்குப் பின்னர் தான், கார்ல் மார்க்ஸ் தனது ஆய்வுநூல்களை எழுதினார்.

கார்ல் மார்க்ஸ் ஐரிஷ் தேசியவாதத்தை ஆதரித்தார். அதற்குக் காரணம், பிரிட்டனின் காலனிகளில் ஒன்று விடுதலை அடைவது ஒரு சாதகமான விடயம் என்பது தான். அதே மாதிரி, ரஷ்யாவில் நடந்த போல்ஷெவிக் புரட்சிக்குப் பின்னர், உலகின் தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவு வழங்குவதாக லெனின் அறிவித்தார். அப்போது பிரித்தானியா அதைக் கடுமையாக எதிர்த்து வந்தது. அதற்குக் காரணம், தேசிய விடுதலைக்காக போராடும் காலனிய நாடுகள் விடுதலை அடைந்தால், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உடைந்து நொறுங்கி விடும். கடைசியில் அது நடந்து விட்டது. 

பெரும்பாலான ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் தேசிய விடுதலைக்காக போராடியவர்கள் மார்க்சிஸ்டுகளாக இருந்தனர். இது தற்செயல் அல்ல. சில நாடுகள் சுதந்திரம் பெற்றதும் அங்கு கம்யூனிஸ்டுகள் ஆட்சி அமைத்தனர். உதாரணம்: வியட்நாம். வேறு சில நாடுகளில் தேசிய விடுதலைக்கான கம்யூனிஸ்டுகளின் போராட்டம் காலனியாதிக்கவாதிகளால் நசுக்கப் பட்டன. உதாரணம்: மலேசியா.

6.//உடைமையாளன் வர்க்கம், உழைக்கும் வர்க்கம் என்பனவற்றிற்கு புறம்பாக மத்தியதர வர்க்கம் எனும் ஒரு வர்க்கம் இன்று எழுச்சியடைந்துள்ளது. மார்க்ஸ் இது பற்றி எதுவும் கூறவில்லை.// - யோதிலிங்கம்

இது முழுக்க முழுக்க கற்பனையான வாதம். இவருக்கு மார்க்சியத்தில் அரிச்சுவடி கூடத் தெரியாது என்பதற்கு இந்த கூற்று ஒன்றே போதும். முதலாளிய வர்க்கம் உற்பத்தி சாதனங்கள் அனைத்தையும் தனது உடைமையாக வைத்திருக்கின்றது. ஏனையோர் முதலாளிகளுக்கு உழைப்பை விற்றுப் பிழைக்கும் உழைக்கும் வர்க்கத்தினர் என்பது மார்க்சிய அடிப்படைக் கோட்பாடு. 

இந்த நூலை எழுதிய யோதிலிங்கம் ஒரு முதலாளி அல்ல. அவர் ஓர் ஆசிரியராக வேலை செய்வதன் மூலம், தனது உழைப்பை தொழிற்சந்தையில் விற்று, அதற்கு ஈடாக சம்பளம் பெற்றுக் கொள்கிறார். ஆகவே அவரும் உழைக்கும் வர்க்கத்தில் ஒருவர் தான். ஆனால், அவரது பல்கலைக்கழக பட்டங்கள் தந்த தகைமை காரணமாக, சமூகத்தில் அந்தஸ்து கூடிய உத்தியோகம் ஒன்றை செய்கிறார்.

இப்படியானவர்களை திருப்திப் படுத்துவதற்காக, முதலாளிய வர்க்கம் அதிக சம்பளம் கொடுக்கிறது. காரணம், இவர்கள் "அறிவுஜீவிகள்" அல்லவா? இந்தப் பொருளாதார கட்டமைப்பு எப்படி இயங்குகின்றது என்ற இரகசியங்களை அறிந்து வைத்திருப்பார்கள். அந்த அறிவு காரணமாக, முதலாளிய வர்க்கத்தின் சுரண்டலை கேள்வி கேட்க வந்து விடுவார்கள். அதை தடுப்பது எப்படி? சம்பளத்தை கூட்டிக் கொடுத்து வாழ்க்கை வசதிகளை அனுபவிக்கும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். 

இந்தப் பிரிவினர் தான் மத்தியதர வர்க்கம். மார்க்ஸ் அவர்களை "குட்டி முதலாளிய வர்க்கம்" என்றார். அதாவது அவர்களது உயர்ந்த சமூக அந்தஸ்து, வாழ்க்கை வசதிகள் காரணமாக, முதலாளித்துவத்திற்கு விசுவாசமாக நடந்து கொள்வார்கள். இவ்வாறு இடையில் ஊசலாடும் குட்டி முதலாளிய வர்க்கத்தினரை (மத்திய தர வர்க்கம்) உழைக்கும் வர்க்கத்தின் பக்கம் வென்றெடுக்க வேண்டும். இதைத் தான் மார்க்ஸ் கூறினார்.

7.//நடைமுறையில் காணப்பட்ட சோஷலிச அரசுக்களிலும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் பல மறுக்கப் பட்டிருந்தன.// - யோதிலிங்கம்

இது மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளால் செய்யப்படும் ஒரு பக்கச் சார்பான பிரச்சாரம். "மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள்" என்று இவர் எதைக் கருதுகிறார்? மிகவும் வறுமையான ஆப்பிரிக்க நாடொன்றில், பட்டினி கிடக்கும் ஒருவனிடம் சென்று, "உனக்கு அடிப்படை ஜனநாயக உரிமை இருப்பதற்காக சந்தோஷப் படு" என்று சொன்னால், அவன் கொலைவெறியுடன் அடிக்க வருவான். ஒரு மனிதனுக்கு முதலில் உயிர் வாழ்வதற்கான உரிமை அல்லவா முக்கியம்? அதற்காக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். நிரந்தரமான வருமானம் வேண்டும். உணவு, உடை, உறையுள் மிக அவசியம். கல்வி, மருத்துவம், அத்தியாவசியம். இவை எல்லாம் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் இல்லையா?

பொதுவாக ஒரு நாட்டில் வாழும் மக்களுக்கு இருக்க வேண்டிய அனைத்து ஜனநாயக உரிமைகளும் சோஷலிச நாடுகளிலும் இருந்தன. ஆனால், இவர்கள் பல கட்சி அரசியல் உரிமையை பற்றி மட்டுமே, அதை மட்டுமே பேசுகின்றனர். உலகில் பொதுவான ஜனநாயக அமைப்பு எதுவும் இல்லை. பலகட்சி ஜனநாயகம் பற்றிப் பேசும் மேற்கத்திய நாடுகளில் கூட, 19 ம் நூற்றாண்டு வரையில் அதற்கான சுதந்திரம் மறுக்கப் பட்டு வந்தது. அப்போது எந்த நாட்டிலும் கருத்துச் சுதந்திரம் இருக்கவில்லை. பொதுத் தேர்தல்கள் நடக்கவில்லை. சர்வசன வாக்குரிமை இருக்கவில்லை. இவையெல்லாம், மேற்கத்திய நாடுகளில் உருவான கம்யூனிச, சோஷலிச கட்சிகளால், தொழிலாளர் வர்க்க நலன் சார்ந்து போராடிப் பெற்ற சலுகைகள் ஆகும்.

8.//சோஷலிச அரசில் அதிகாரம் ஓரிடத்தில் குவிகின்ற நிலைமை ஏற்படுகின்றது.// - யோதிலிங்கம்

இதுவும் முதலாளித்துவவாதிகளால் முன்னெடுக்கப் படும் எதிர்ப்புப் பிரச்சாரம் தான். "அனைத்து அதிகாரமும் மக்களுக்கே" என்பது கம்யூனிஸ்டுகளின் பிரதானமான கோஷம். ரஷ்ய மொழியில் "சோவியத்" என்றால், தொழிலாளர் மன்றம் என்று அர்த்தம். உண்மையில், தற்போது பல நாடுகளில் நடைமுறையில் பாராளுமன்ற அமைப்பில் தான் அதிகாரம் ஓரிடத்தில் குவிக்கப் படுகின்றது. அதற்குப் பதிலாக சோஷலிச நாடுகளில் அதிகாரம் பரவலாக்கப் படுகின்றது.

கிராமம், நகரம் பாகுபாடின்றி எல்லா இடங்களிலும் தொழிலாளர் மன்றங்கள் அமைக்கப் படும். அங்கு மக்கள் அனைவரும் ஒன்று கூடி விவாதித்து, வாக்கெடுப்புக்கு விடப் பட்டு, பெரும்பான்மை முடிவு ஏற்றுக் கொள்ள படும். இதை நேரடி ஜனநாயகம் என்று சொல்வார்கள். அதாவது மக்கள் நேரடியாகவே ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் ஜனநாயக அமைப்பு. தொழிற்சாலைகள், கல்லூரிகள், பாடசாலைகளிலும் இந்த ஜனநாயக அமைப்பு இயங்கும். ஒரு தொழிலகத்தின் நிர்வாகி நினைத்த நேரத்தில் ஒரு தொழிலாளியை வேலையை விட்டு தூக்க முடியாது. அதற்கு பிற தொழிலாளர்களும், தொழிற்சங்கமும் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.

9.//அரசின் பணிகள் அதிகரிப்பதால் ஊழல் போன்ற தீமைகள் ஏற்பட வாய்ப்புகளுண்டு.// - யோதிலிங்கம்

ஒரு நாட்டில் சோஷலிசப் புரட்சி நடந்து விட்டால், ஒரே இரவுக்குள் எல்லாம் மாறி விடுவதில்லை. முந்திய முதலாளித்துவ கட்டமைப்பில் இருந்த மாதிரியே அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கும். அதாவது, சிறிது காலத்திற்கு பெரும்பாலான நிறுவனங்களை ஒரே மாதிரித் தான் நிர்வகிக்க வேண்டி இருக்கும். அது தவிர்க்க முடியாதது. முந்திய முதலாளித்துவ கட்டமைப்பில் இருந்த அதே அதிகாரிகள், நிர்வாகிகள் தமது கடமையை செய்து கொண்டிருப்பார்கள். ஆகவே, முதலாளித்துவ ஆட்சிக் காலத்தில் இருந்த ஊழல், சோஷலிச ஆட்சிக் காலத்திலும் தொடர வாய்ப்புண்டு. இதைத் தடுப்பதற்கு ஒரு வர்க்கப் போராட்டம் அவசியம்.

ஸ்டாலின் காலத்தில் "கொடூரமான சர்வாதிகார ஆட்சி" நடந்ததாக இன்றைக்கும் பரப்புரை செய்யப் படுகின்றது. மாவோ காலத்து கலாச்சாரப் புரட்சி பற்றியும் எதிர்மறையான கதைகள் பரப்பப் படுகின்றன. உண்மையில் அப்போது நடந்தது வர்க்கப் போராட்டம். அந்தக் காலகட்டத்தில் ஊழல் முற்றாக ஒழிக்கப் பட்டிருந்தது! 

ஸ்டாலின் காலத்தில், ஒரு அதிகாரி ஊழல் செய்தால், இலஞ்சம் வாங்கினால், மக்கள் விழிப்புடன் இருந்து இரகசியப் பொலிசிற்கு அறிவித்தார்கள். அதற்குப் பிறகு அவர் சிறையில் தான் காலம் கழிக்க வேண்டியிருக்கும். சிலநேரம் மரணதண்டனையும் விதித்தார்கள். அதனால், ஊழல் செய்வதற்கு எல்லோரும் பயப்பட்டார்கள். அவர்களை காட்டிக் கொடுப்பது யார் வேண்டுமானாலும் இருக்கலாம். கூட வேலை செய்யும் பணியாளாக இருக்கலாம் அல்லது குடும்ப உறுப்பினராகக் கூட இருக்கலாம்.

சீனாவில், கலாச்சாரப் புரட்சி வித்தியாசமாக நடந்தது. அங்கு மக்கள் ஒன்றுசேர்ந்து, ஊழல் செய்த அதிகாரியை பிடித்து, சந்தியில் கட்டி வைத்து அவமானப் படுத்தினார்கள். அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப் பட்டனர். சிறை முகாம்களுக்கு அனுப்பப் பட்டனர். அதனால், கலாச்சாரப் புரட்சி நடந்த பத்து வருட காலத்தில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை. இதிலே முக்கியமான விடயம் என்னவென்றால், அதிகார கட்டமைப்பில் மேல் தட்டில் இருந்தவர்களும் ஊழல் செய்து பிடிபட்டால் மக்களினால் அவமானப் படுத்தப் பட்டனர். 

பிற்குறிப்பு: படித்த மத்தியதர வர்க்க தமிழர்கள் பலர் கம்யூனிச எதிர்ப்பாளர்களாக அல்லது வலதுசாரிகளாக இருப்பது தற்செயல் அல்ல. பாடசாலையில், பல்கலைக்கழகத்தில் அவர்கள் படிக்கும் காலத்திலேயே,  முதலாளித்துவவாதிகளால் மூளைச்சலவை செய்யப் படுகின்றனர். அதற்கு இந்த நூல் ஒரு சிறந்த உதாரணம்.


இது தொடர்பான முன்னைய பதிவு: 

No comments: