Tuesday, January 24, 2017

தோழர் என்று சொல்! தலை நிமிர்ந்து நில்!!


//"உங்கள் பிள்ளைகளின் செல்போனை ஆய்வுசெய்து புதுநபர்களின் எண்கள் இருந்தால் டெலிட் செய்யுங்கள் யாராவது தோழர் என அழைத்தால் அவர்களின் தொடர்பை துண்டியுங்கள்”// - சைலேந்திரபாபு IPS, TN.

//மாணவர்களுடம் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து கொண்டனர். இவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்புகள் இல்லை. ஆனால் அரசியல் கட்சி வரக்கூடாது என சொன்ன மாணவர்கள், இந்த சிறிய சிறிய அமைப்புகள் சொல்வதை தான் கேட்கிறார்கள். மக்கள் அதிகாரம், நாம் தமிழர், மே 17, சிபிஐ (எம்.எல்), இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அகில இந்திய இளைஞர் பெருமன்றம் போன்ற அமைப்புகள் மாணவர்களுடன் ஊடுருவியுள்ளனர். தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் எல்லோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.// - கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ('மாணவர் போராட்டத்தில் நக்சல் ஆதரவாளர்கள்...' கோவை மாநகர காவல் ஆணையர்)

தமிழ்நாட்டில், "அரபு வசந்தம்" பாணியில் நடந்த "ஜல்லிக்கட்டு போராட்டம்" அதன் இறுதிக் கட்டத்தில் எதிர்பாராத திருப்புமுனையை உண்டாக்கி இருந்தது. ஆரம்பத்தில் சில நாட்கள் ஜல்லிக்கட்டு மாடுகளுக்கான போராட்டமாகவும், தமிழர் பாரம்பரிய மீட்புப் போராட்டமாகவும் தான் கருதப் பட்டது. பெரும்பாலான போராட்டக் காரர்கள், குறிப்பாக மாணவர்கள், "தமிழின உணர்வு" காரணமாகத் தான் போராட்டத்திற்கு வந்திருந்தனர். ஊடகங்களில் அதற்கு கிடைத்த முக்கியத்துவமும் பலரை அங்கு கொண்டு வந்து சேர்த்தது. குடும்பம் குடும்பமாக பெண்கள் குழந்தைகளாக வந்ததும் குறிப்பிடத் தக்கது.

போராட்டம் தொடங்கிய காலத்தில் அங்கு அரசியல் பேசப்படவில்லை. அது போராட்டத்தை ஒழுங்குபடுத்திய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் அறிவுறுத்தலாக இருந்தது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல ஒரு பிரிவினர் அரசியல் கோரிக்கைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். அப்போதே அது ஒரு ஜனநாயக போராட்டமாக மாறி விட்டது. வெறுமனே தமிழ் இனப்பற்று சார்ந்த விடயங்களுடன் அது நின்று விடவில்லை. அதனால், பல்வேறு கம்யூனிச, இடதுசாரி அமைப்புகள் அல்லது அவ்வாறான சிந்தனை கொண்டவர்களும் போராட்டக் களத்தை பயன்படுத்திக் கொண்டனர். அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாடினார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் இலகுவாக மக்களை அணுகலாம் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். ஆனால், இடதுசாரிகள் போராட்டம் முழுவதையும் கைப்பற்றும் அளவிற்கு அரசு எந்தக் காலத்திலும் விட்டுக் கொடுக்காது. அதுவரையும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில், மத்திய அரசின் மேல் பழி போட்டுக் கொண்டிருந்த மாநில அரசு, 180 பாகையில் திரும்பி ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று அவசர சட்டம் போட்டதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இது மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற போராட்டமாக இருந்தாலும், தீர்க்கமான அரசியலை பேசாத, அல்லது பலவீனமான நியாயப்பாடுகளை கொண்ட ஜனத்திரளுக்குள் ஊடுருவுவது எளிது. வலதுசாரி சக்திகளின் ஊடுருவல் பற்றி அரசு கவலைப் படப் போவதில்லை. அவர்கள் ஏற்கனவே "ஜல்லிக்கட்டு தமிழரின் பாரம்பரியம்" என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அது அரசுக்கு சாதகமான விடயம்.

வணிக ஊடகங்களும் ஜல்லிக்கட்டை பற்றி மட்டுமே பேசி வந்தன. தமிழ் இன மான உணர்வுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தன. அதன் மூலம் பார்வையாளர் எண்ணிக்கையை கூட்டிக் கொண்டன. ஆனால், போராட்டக் களத்தில் பலதரப் பட்ட கருத்துக்களும் முட்டி மோதிக் கொண்டன என்ற உண்மையை வேண்டுமென்றே மறைத்தன.

அரசியல் கட்சிகளால் வழிநடத்தப் படாத ஜனத்திரள் எந்த அரசியலையும் உள்வாங்கும் தன்மை கொண்டிருக்கும். ஒரு வாரத்திற்கு மேல் போராட்டம் நீடித்தால் அது அரசுக்கு எதிராகவும் திசை திரும்பலாம். குறிப்பாக இடதுசாரிகளின் ஊடுருவல் அரச இயந்திரத்திற்கு சவாலாக இருக்கும். ஆரம்பத்தில் இருந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒழுங்குபடுத்தி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அதை விரும்பவில்லை.

ஆரம்பத்தில் ஜல்லிக்கட்டு, மாடுகள் என்று மட்டுமே பேசிக் கொண்டிருந்த இளைஞர்கள் மத்தியிலிருந்து, ஏற்கனவே சிலர் சசிகலா, பன்னீர்செல்வம் என்று விமர்சிக்க தொடங்கினார்கள். பிரதமர் மோடிக்கு எதிரான கோஷங்களும் கேட்டன. நிச்சயமாக, பெரியாரிய, இடதுசாரிய ஆர்வலர்கள் களத்தில் நின்றதன் விளைவு அது. அவர்கள் அங்கு வீதி நாடகங்கள், புரட்சிகர கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினார்கள்.

உண்மையில், த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் எழுச்சிப் போராட்ட‌ம் ஜனவரி 23 திங்கட்கிழமை தான் ஆர‌ம்பித்துள்ள‌து. சென்னை, மெரீனாவில் ஐயாயிர‌ம் போராட்ட‌க்கார‌ர்க‌ள் காவ‌ல்துறையின‌ரால் சுற்றி வ‌ளைக்க‌ப் பட்டனர். அவ‌ர்க‌ளுக்கு உண‌வும், த‌ண்ணீரும் எடுத்துச் செல்வ‌த‌ற்கு த‌டைவிதிக்க‌ப் பட்டது. மெரீனா அருகில் வாழ்ந்த மீனவர்கள் கடல் பக்கமாக படகுகளில் சென்று உதவினார்கள்.

ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்பான தற்காலிக சட்டத்தை ஏற்றுக் கொண்டு, பெருமளவிலான போராட்டக்காரர்கள் ஏற்கனவே கலைந்து சென்று விட்டனர். எஞ்சியிருந்த கடும்போக்காளர்கள் மீது பொலிஸ் தடியடிப் பிரயோகம் செய்து விரட்டியது. பெண்கள், கர்ப்பிணிகள் என்றும் பாராமல் குண்டாந் தடியால் அடித்தது. 

"பீட்டாவே த‌மிழ‌ர்க‌ளின் மிக‌ப் பெரிய‌ எதிரி" என்று ப‌ட‌ம் காட்டிய‌ த‌மிழ் இன‌ உண‌ர்வாள‌ர்க‌ளே! ஒரு க‌ண‌ம் சிந்திப்பீர். த‌மிழ‌ர்க‌ள் மீது தாக்குத‌ல் ந‌ட‌த்தி, வீடுக‌ளை எரித்த‌து, சொத்துக்க‌ளை நாச‌மாக்கிய‌து த‌மிழ‌க‌ காவ‌ல்துறை தான்.

த‌னித் த‌மிழ் நாடு க‌ண்டால் இத‌ற்கு தீர்வு வ‌ந்து விடுமா? அப்போதும் இதே "த‌மிழ‌ர்க‌ளின் காவ‌ல்துறை" தானே இருக்க‌ப் போகிற‌து? த‌னித் த‌மிழ் நாட்டில் த‌மிழ்ப் பொலிஸ் த‌மிழ‌ர்க‌ளை அடிக்காதா?

அர‌ச‌ இய‌ந்திர‌ம் என்றைக்கும், எப்போதும் ஒரு ஒடுக்கும் க‌ருவி தான். அது சிங்க‌ள‌ அர‌சாக‌ இருந்தால் என்ன‌, த‌மிழ் அர‌சாக‌ இருந்தால் என்ன‌, அட‌க்குமுறை ஒன்று தான். அட‌க்க‌ப் ப‌டும் ம‌க்க‌ளும் ஒன்று தான்.

இது அர‌சிய‌லில்‌ அடிப்ப‌டையான‌ பால‌ பாட‌ம். இந்த‌ நிலைமையை மாற்றுவ‌த‌ற்கு த‌னித் த‌மிழ் நாடு க‌ண்டால் ம‌ட்டும் போதாது. அத‌ற்கொரு ச‌மூக‌ப் புர‌ட்சி அவ‌சிய‌ம். அதைப் ப‌ற்றி சிந்தியுங்க‌ள்.

காந்தி பிறந்த இந்திய மண்ணில், காந்தியின் அறவழிப் போராட்டத்தை எள்ளிநகையாடும் வகையில், தமிழக பொலிஸ் வன்முறை அமைந்துள்ளது. "அறவழியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி!" என்று அரச கைக்கூலிகள் அறிவித்த பின்னர் தான், காவல்துறை தனது சுயரூபத்தை காட்டியது. மாணவர்கள் மீது தடியடி நடத்தி, குடிசைகள், வாகனங்களை எரித்து அடாவடித்தனம் புரிந்தது.

பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் மூலம் அரசு சொல்ல விரும்பிய சேதி இது தான். "மாட்டுக்காகவும், தமிழுக்காகவும் போராட்டம் நடத்துங்கள், அரசு அதைக் கண்டுகொள்ளாது. ஆனால், உங்கள் போராட்டம் அரசுக்கு எதிராக திரும்பக் கூடாது. அரசியல் பேசக் கூடாது." அப்படியான கட்டத்தில் அரசு தனது பொலிஸ் ஏவல் நாய்களை அனுப்பி ஒடுக்கும்.

இதன் மூலம், அரசு என்றால் என்ன என்பது, குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களுக்கு ஓரளவுக்காவது புரிந்திருக்கும். இது அவர்களுக்கு ஒரு நல்ல அரசியல் பாடம். மக்களை ஒடுக்குவதற்கான அரச இயந்திரத்தின் ஆயுதமே காவல்துறை என்பது தெரிந்திருக்கும். அதே நேரம், முதலாளித்துவ ஊடகங்களின் சுயரூபமும் தெரிந்திருக்கும். ஜல்லிக்கட்டு போராட்டக் காரர்களை பாராட்டி புகழ்ந்த அதே விபச்சார ஊடகங்கள், ஒரே நாளில் அவர்களை சமூகவிரோதிகள் என்று மாற்றிச் சொன்ன விந்தையை என்னவென்பது?

குறிப்பாக நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த போராட்டக்காரர்கள், "தேசியக் கொடி பிடித்தால், தேசியகீதம் பாடினால் பொலிஸ் அடிக்காது" என்று நம்புமளவிற்கு அப்பாவிகளாக இருந்திருக்கிறார்கள். "ஜனகண மண" பாடியவர்களுக்கும் அடிவிழுந்துள்ளது. தாம் கொடுத்த உணவை சாப்பிட்ட அதே பொலிஸ் தான் தடியடிப் பிரயோகம் நடத்தியது என்பதையும், மாணவர்கள் திருப்பித் தாக்கவில்லை என்றும் அவர்களே வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

தமிழக காவல்துறையினரின் வன்முறை வெறியாட்டம் நடந்த விதத்தை பார்க்கும் பொழுது, இது முன்கூட்டியே திட்டமிடப் பட்டுள்ளதாக தெரிகின்றது. பொலிஸ் குடிசை எரித்த காட்சிகள் வீடியோ பதிவாக இருந்தாலும், அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. நாளைக்கு அதைக் காட்டி யாராவது வழக்குப் போடுவார்களே என்ற பயம் கூட இல்லை. அதாவது, இனிமேல் காட்டாட்சி தான் என்ற நம்பிக்கையில் காவல்துறை உள்ளது.

ஓர் அதிர்ச்சி வைத்தியமாக, பொலிஸ் எடுத்த அதிரடி நடவடிக்கையானது, போராட்டத்தில் கலந்து கொண்ட மத்தியதர வர்க்கத்தினரை அச்சுறுத்தி, வீட்டில் முடங்கப் பண்ணும் நோக்கம் கொண்டது. உண்மையில், பொலிஸ் அடக்குமுறையால் பாதிக்கப் பட்டவர்கள் பெரும்பாலும் சேரிகளில் குடியிருக்கும் உழைக்கும் வர்க்க மக்கள்.

போராட்டக் களத்திற்குள் இடதுசாரிகள் ஊடுருவி இருந்தமை, அரசை பீதியுற வைத்துள்ளது. ஏனென்றால், பொதுவாக மத்தியதர வர்க்கத்தினர் அறவழிப் போராட்டத்துடன் நின்று விடுவார்கள். ஆனால், உழைக்கும் வர்க்க மக்கள் தான் உயிரைக் கொடுத்துப் போராடுவார்கள். இந்த உண்மை அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களுக்கும் தெரியும். அதனால் தான், உழைக்கும் வர்க்க மக்களை மிரட்டி வைப்பதற்காக, பொலிஸ் சேரிக்குள் புகுந்து அடாவடித்தனம் செய்தது.

இனிவரும் காலங்களில் இடதுசாரி அமைப்புகள் மீதான அடக்குமுறை அதிகரிக்கலாம். சிலநேரம் தடை செய்யப் படலாம். கைதுகள் தொடரலாம். "தமிழ்நாட்டுக்குள் நக்சலைட் ஊடுருவல்" என்று ஒரு சாட்டு சொல்லி, அரச பயங்கரவாதம் நியாயப் படுத்தப் படலாம். அதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படுகின்றன.

சென்னையில் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, CPML, மே 17 போன்ற இடதுசாரி அமைப்புகளே வன்முறையை தூண்டியதாக குற்றம் சாட்டியுள்ளார். (நாம் தமிழர் என்ற வலதுசாரி அமைப்பின் பெயரும் குறிப்பிடப் பட்டது.)

மேலும், "பெற்றோர் தமது பிள்ளைகளின் மொபைல் போன்களை எடுத்துப் பார்க்குமாறும், "தோழர்" என்று விளிக்கும் எண்களை அழித்து விடுமாறும்" சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார். அதன் அர்த்தம் என்ன? இடதுசாரி, அல்லது கம்யூனிசக் கருத்துக்கள் மத்தியதர வர்க்கப் பிள்ளைகள் மனதில் நுழைந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு தானே காரணம்?

"பெற்றோரே பிள்ளைகளை காட்டுக் கொடுக்க வேண்டும்" என்று அதிகார வர்க்கம் எதிர்பார்க்கிறது. அதனால் இதை முதலாளித்துவ வர்க்க குணாம்சம் கொண்ட அரசு என்கிறோம். முதலாளித்துவ கட்டமைப்பை எதிர்த்துப் போராடாமல், வெற்றியை நோக்கி ஓர் அடி கூட நகர முடியாது.
#தோழ‌ர் - அதிகார‌ வ‌ர்க்க‌த்தை அஞ்சி ந‌டுங்க‌ வைத்த‌‌ ஒரே சொல். த‌மிழ் நாட்டில் அது தான் எதிர்ப்பின் அடையாள‌ம். இனிமேல் தோழ‌ர் என்று சொல்ல‌ ம‌றுப்ப‌வ‌ர்க‌ள் அர‌ச‌ ஒத்தோடிக‌ளாக‌ க‌ருத‌ப் ப‌டுவ‌ர். அர‌ச‌ எதிர்ப்பாள‌ர்க‌ள் அனைவ‌ரும் எம‌க்கு தோழ‌ர்க‌ளே!

No comments: