Monday, January 25, 2010

ஐக்கிய நாடுகள் சபை ஈழத்திற்கு ஆதரவளிக்குமா?

(பகுதி: ஒன்று)
ஈழ சுதந்திரப் போர் ஆரம்பமான காலந் தொட்டு இன்று வரை, ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டிலான சமாதானத்தை அங்கலாய்ப்போடு எதிர்பார்க்கும் பலர் உள்ளனர். ஐ.நா. சபையின் அரசியல் பின்னணி பற்றி தெளிவான அறிவிருந்தால், தாமே ஏமாந்து தலைவிதியை நொந்து கொள்ள வேண்டியிருக்காது. ஐ.நா.சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் இலங்கை தொடர்பாக வருடாவருடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கின்றது. இலங்கை அகதிகள் சம்பந்தமான தஞ்சக் கோரிக்கைகளை பரிசீலிக்கும் நாடுகள், அந்த அறிக்கையை ஆதாரமாகக் காட்டுகின்றன. "இலங்கை அரசு மனித உரிமைகளை மதித்து நடப்பதாகவும், நாடு திரும்பும் அகதிகளை எந்த தீங்கும் அணுகாது பாதுகாப்பதாகவும்..." ஐ.நா. அறிக்கை கூறிச் செல்கின்றது. ஐ.நா. அதிகாரிகள், இலங்கை அரசாங்கத்தின் பிரச்சாரத்தால் மதி மயங்கி அது போன்ற ஒரு தலைப் பட்சமான அறிக்கை தயாரிப்பதாக சிலர் கருதலாம். ஆனால் அறிக்கையின் கீழே உள்ள உசாத்துணை பகுதியை பார்க்கும் ஒருவர் அதிர்ச்சியடையலாம். அரச சார்பு ஊடகங்கள், புலிகள் சார்பு ஊடகங்கள், நடுநிலை ஊடகங்கள், பல்வேறு மனித உரிமை நிறுவனங்கள் ஆகிய அனைத்துப் பெயர்களும் குறிப்பிடப் பட்டிருக்கும். அதாவது இவற்றின் தரவுகளை ஆய்வு செய்த பின்னரே தாம் மேற்படி முடிவுக்கு வந்ததாக எழுதியிருப்பார்கள்.

எப்போதும் அரசாங்கங்களை குறை கூறும் மக்கள், ஒரு போதும் பெரு மதிப்புக்குரிய ஐ.நா.சபையை குறை சொல்லத் தயங்குவார்கள். பொது மக்களின் "தயக்கத்தை" மேற்குலக அரசுகள் தமக்கு சார்பாக பயன்படுத்திக் கொள்கின்றன. இரண்டாவது உலகப்போரினால் பல ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் சிதைவடைந்தது. மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று. 19 ம் நூற்றாண்டில் மிகப் பெரிய ஏகாதிபத்தியத்தை அமைத்த பிரித்தானியா, 20 ம் நூற்றாண்டில் தள்ளாடியது. ஒரு காலத்தில் லாபங்களை அள்ளிக் குவித்த காலனிகள், தற்போது நஷ்டங்களை கொடுத்தன. இதனால் பிரித்தானியா, தனது காலனிகளுக்கு சுதந்திரம் கொடுக்க முன்வந்தது. அவற்றில் இஸ்ரேலின் சுதந்திரம் முக்கியமானது.


அப்போது தான் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையில், இஸ்ரேலுக்கு சுதந்திரம் கொடுப்பதற்கான பிரேரணை அமெரிக்காவால் முன்மொழியப்பட்டது. இதற்கு இன்னொரு வல்லரசான சோவியத் யூனியனின் சம்மதம் கிடைக்கவே, பிரிட்டிஷ் பாதுகாப்பு பிரதேசமான பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் உருவானது. யூதர்களுக்கு என ஒதுக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் (இஸ்ரேல்) 51 % அரபுக்கள் வாழ்ந்தார்கள். இதனை பொறுக்க மாட்டாத சியோனிச அரசு, அந்த மக்கள் மீது வன்கொடுமைகளை கட்டவிழ்த்து விட்டது. அரபுக் கிராமங்களை சுற்றி வளைத்த ஆயுதபாணிக் குழுக்கள், நூற்றுக் கணக்கான மக்களை படுகொலை செய்தனர். இதைக் கேள்விப்பட்ட லட்சக்கணக்கான அரபுக்கள் இடம்பெயர்ந்து அயல் நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

இஸ்ரேலிய இனச் சுத்திகரிப்பில் தப்பிய பாலஸ்தீன அகதிகள், மேற்கு ஐரோப்பாவுக்கோ, அல்லது அமெரிக்காவுக்கோ அகதிகளாக வரலாம் என்ற "அச்சம்" நிலவியது. பாலஸ்தீன அகதிகள் தமது நாடுகளுக்குள் வந்து விடாமல் தடுப்பதற்காக, ஐ.நா. சபையின் உதவியை நாடின. அதன்படி ஜோர்டானிலும், லெபனானிலும் ஐ.நா. மேற்பார்வையின் கீழ் பல அகதி முகாம்கள் கட்டப்பட்டன. கடந்த அறுபது வருடங்களாக அந்த அகதி முகாம்களே, பாலஸ்தீனர்களின் நிரந்தர வதிவிடமாகி விட்டன. இன்று ஐ.நா. மன்றம் மட்டுமல்ல, எந்த ஒரு மேற்குலக நாடும் அகதிகளின் மீள்குடியேற்றம் பற்றி பேசுவதில்லை. இஸ்ரேலை பகைத்துக் கொள்ளக் கொட்டாது என்பதில் அவதானமாக உள்ளன.

முன்பெல்லாம் கடவுளின் பெயரால், அல்லது மதத்தின் பெயரால் யுத்தங்கள் நடத்தப்பட்டன. 20 ம் நூற்றாண்டில், ஐ.நா. சபை என்ற சர்வதேச நிறுவனத்தின் பெயரால் யுத்தங்கள் நடத்தப்பட்டன. அவ்வாறான தொடர் யுத்தங்களில் முதலாவது "கொரியாப் போர்." இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஆசியாவில் புதிய போர் முனையை தொடங்கிய சோவியத் செஞ்சேனை கொரியாவை மீட்டு, ஜப்பானை கைப்பற்ற திட்டமிட்டது. இதற்குள் முந்திக் கொண்ட அமெரிக்கா ஜப்பானில் அணு குண்டு போட்டு தடாலடியாக போரை முடிவுக்கு கொண்டு வந்தது. ஹிரோஷீமா, நாகசாகி நகரங்களில் பெரும் நாசத்தை விளைவித்த அணு குண்டு தாக்குதல், அமெரிக்கா தன்னை வல்லரசு ஆதிக்கத்தை நிலைநாட்டியது. தொடர்ந்து அமெரிக்கப் படைகள் ஜப்பானிலும், கொரியாவிலும் தரையிறங்கின.

இதற்கிடையே சோவியத் படைகள் வட கொரியாவை ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து விட்டிருந்தன. உலகப்போர் முடிவுற்ற உடனே, கொரியாவில் பொதுத் தேர்தல் நடத்தப் பட்டது. சோவியத் கட்டுப்பாட்டில் இருந்த வட கொரியாவிலும், அமெரிக்க கட்டுப்பாட்டில் இருந்த தென் கொரியாவிலும் ஒரே சமயத்தில் நடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெற்றனர். தேர்தல் முடிவுகள், அமெரிக்க எதிர்பார்ப்புகளுக்கு மாறாக அமைந்து விட்டதால், கொரிய இணைப்பு பின் போடப்பட்டது. தென் கொரியாவில் அமெரிக்க ஆசீர்வாதத்துடன் ஒரு இராணுவ சதிப்புரட்சி இடம்பெற்றது. சதியில் பங்குபற்றிய அதிகாரிகள் முன்னர் ஜப்பானிய ஆக்கிரமிப்பாளரின் கைக்கூலிகளாக இருந்தவர்கள். தற்போது அமெரிக்க விசுவாசிகளாக மாறி விட்டனர். இதே நேரம், வட கொரியாவில் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்த கிம் இல் சுங் புதிதாக உழைப்பாளர் கட்சி ஆரம்பித்தார். சோவியத் செஞ்சேனை உதவியுடன் கெரில்லாக் குழுக்களை அமைத்தார். "ஒருங்கிணைந்த கம்யூனிச கொரியா", கிம் இல் சுங்கின் லட்சியமாக இருந்தது. கிம் இல் சுங் தலைமையிலான கெரில்லாக்கள் கொரியா சுதந்திரப் போரை ஆரம்பித்தனர். ஆரம்பித்த சில மாதங்களிலேயே 90 % கொரியப் பகுதிகள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன.

கிம் இல் சுங்கின் படைகளின் முன்னேற்றம் அமெரிக்காவின் வயிற்றில் புளியைக் கரைத்தது. இப்படியே விட்டால், "கம்யூனிச அபாயம்" ஆசியாவில் பரவி விடும். "உலகம் எதிர்நோக்கும் அபாயத்தை முன்கூட்டியே தடுக்கும் பொருட்டு" ஐ.நா. மன்றம் கூட்டப்பட்டது. அன்று, வீட்டோ அதிகாரம் கொண்ட பாதுகாப்புச் சபையில் சீனா என்ற பெயரில் தைவான் அங்கம் வகித்தது. கம்யூனிச சீனாவுக்கு உறுப்புரிமை கொடுக்க வேண்டுமென கோரி, சோவியத் யூனியன் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தது. எஞ்சிய பிரிட்டனும், பிரான்சும் அமெரிக்காவின் நட்பு நாடுகள். இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாத அமெரிக்கா, கொரியாவுக்கு ஐ.நா. படை அனுப்பும் கோரிக்கையை முன்வைத்தது. அமெரிக்க சார்பு நாடுகளால் நிரம்பியிருந்த ஐ.நா. சபை அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக கை உயர்த்தின. அமெரிக்கா தலைமையிலான ஐ.நா. இராணுவம் கொரியா சென்றது. பெயர் மட்டும் தான் "ஐக்கிய நாடுகளின் சமாதானப் படை" என்றிருந்தது. 90 % இராணுவவீரர்கள் அமெரிக்கர்களாக இருந்தனர். இந்தியா போன்ற வேறு சில நாடுகளும் தம் பங்குக்கு சிறிய படையணிகளை அனுப்பி இருந்தன.

கொரியப் போரில், ஐக்கிய நாடுகளின் "அமைதிப் படை" நிகழ்த்திய அட்டூழியங்கள் அளவிட முடியாதவை. கண்மூடித்தனமான விமானக் குண்டு வீச்சுகளால், ஆயிரக்கணக்கான கொரியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் வீடுகளும், உடமைகளும் அழிந்தன. இவற்றிற்கு சிகரம் வைத்தது போல, அடைக்கலம் கோரி வந்த நூற்றுக்கணக்கான அகதிகளை அமெரிக்க இராணுவம் படுகொலை செய்தது. அந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோருமாறு, இன்றைய கொரிய அரசு கோரியது. ஆனால் அமெரிக்கா மறுத்து விட்டது. இரண்டாவது உலகப்போரில் ஐரோப்பாவில் விழுந்த குண்டுகளை விட, இரு மடங்கு அதிகமான குண்டுகள் சின்னச்சிறு கொரிய தேசத்தின் மீது வீசப்பட்டன. தற்காலிக யுத்த நிறுத்தத்துடன், கொரியப் போர் முடிவுக்கு வந்த போது, கோடிக்கணக்கான கொரியர்கள் ஐ.நா. சபையின் பெயரால் இனவழிப்புக்கு உள்ளாகினர். வட கொரியாவின் பொருளாதார கட்டுமானங்கள் யாவும் அழிக்கப்பட்டன. இனப்படுகொலைகளை செய்த ஐ.நா.மன்றத்திடமே, இனப்படுகொலை குறித்து விசாரிக்குமாறு கோரும் வேடிக்கையை நாம் இன்று காணலாம்.


(தொடரும்)
[பகுதி இரண்டு: ஐ.நா. அமைதிப் படையின் அட்டூழியங்கள்]


4 comments:

aambalsamkannan said...

தலைப்பு என்னவோ ஈழம் சார்ந்ததாக இருக்கின்றது ஆனால்...
காத்துருக்கின்றோம்.

'அங்குரார்ப்பணம்' தொடங்குதல் என்று புரிந்துக்கொள்ளமுடிகிறது,
ஆனால் புதியதாக கேள்விபடுகின்றேன்.

M.Thevesh said...

சரித்திரத்தை சரியாகப்படித்த பின்பு எழு
தத்துவங்குங்கள்.இரண்டாம் உலகப்போ
ரில் சரணடைய மறுத்து தொடர்ந்து போர் புரிந்து பேர்ள் துறைமுகத்தில் ஜப்பான் குண்டைவீசியதால்அமெரிகா
யுத்தத்தில் குதித்து ஜப்பான் நகர் மீது
அணுக்குண்டை வீசியது என்பது தான்
உண்மை.தயவு செய்து சரித்திரத்தை
மாற்றாதீர்கள்.

Kalaiyarasan said...

நன்றி, தேவேஷ்,
9/11 தாக்குதலை காரணமாக காட்டித் தான் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது. கொழும்பு குண்டுவெடிப்புகளை காரணமாகக் காட்டித்தான் சிறிலங்கா அரசு வன்னி மீது போர் தொடுத்தது. பெர்ள் துறைமுக தாக்குதலால் ஜப்பான் மீது அணு குண்டு வீசியதாக அமெரிக்க அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அரசுகள் சொல்வதை எல்லாம் அப்படியே நம்ப வேண்டுமா? அத்தகைய தாக்குதல்கள் நடந்திரா விட்டால் (அமெரிக்க) அரசு போரில் குதித்திருக்காதா? முன்கூட்டியே போருக்கான தயாரிப்புகளில் ஈடுபட்ட அரசுகளுக்கு, எதிர்பாராத தாக்குதல்கள் நியாயப்படுத்த பயன்படுகின்றது.

Kalaiyarasan said...

அமெரிக்கா அணு குண்டு வீசுவதற்கு முன்னரே ஜப்பான் சரணடைய தயாராகி விட்டது. தோல்வியடைந்த தேசத்தின் மீது அணு குண்டு வீசுவதற்கு வேறு காரணங்கள் இருக்க வேண்டும்.