Tuesday, January 05, 2010

சுவிஸ் மனுநீதி: கல்வி மறுக்கப்படும் அகதிகள்


ஐரோப்பிய நாடுகளின் சனத்தொகை சுருங்கி வருகின்றது. ஓய்வூதியம் பெறும் வயதாளிகள் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டிருக்க, பிறப்புவீதம் குறைந்து வருகின்றது. சமூகத்தில் தொழில் புரியும் வகுப்பினர், நலிவடைந்த பிரிவினருக்கான சமூக நலன் கொடுப்பனவுகளை வழங்கி வருகினறனர். சமூக கொடுப்பனவுகளில் தங்கியிருப்போர் தொகை அதிகரிக்கையில் அரச செலவினமும் அதிகரிக்கும். 

இதனை ஈடுகட்டுவதற்காக ஐரோப்பாவில் வசிக்கும் அகதிகள், சட்டபூர்வ அல்லது சட்டவிரோத குடியேறிகள், மாணவர்கள் என அனைத்து வகை வெளிநாட்டவரின் உழைப்பையும் அரசு பயன்படுத்திக் கொள்கின்றது. இவர்களில் அங்கீகரிக்கப்படாத அகதிகள், சட்டவிரோத குடியேறிகள், மாணவர்கள் ஆகியோரின் உழைப்பு முழுமையும் தங்கியிருக்கும் நாட்டிற்கே சொந்தமாகின்றது. 

ஏனென்றால் இவர்கள் அரசுக்கு நேர்முக, மறைமுக வரிகளை செலுத்தும் அதே நேரம், அரசின் சமூகநலக் கொடுப்பனவுகளை எதிர்பாராதவர்கள். சுருக்கமாக சொன்னால், இவர்களின் உழைப்பு ஐரோப்பிய சமூக நலத் திட்டங்களுக்கான செலவினங்களை ஈடுகட்டுகின்றது.

சுவீடனில் இருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில்,மேற்படி உண்மைகளை அடிப்படையாக வைத்து ஒரு செய்திக் கட்டுரை ( Sweden risks facing severe labour shortages)வெளியானது. அடுத்த பத்து வருடங்களுக்கு சுவீடனில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதாகவும், அதை நிவர்த்தி செய்ய வெளிநாட்டு குடியேறிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது. இன்று பல ஐரோப்பிய நாடுகளின் நிலைமை அது தான். 

அந்தக் கட்டுரைக்கு எதிர்வினையாற்றியவர்களில் பலர் வெளிநாட்டு மாணவர்கள். (மாணவர்களில் இந்தியர்களும் அடக்கம்). இந்த அரசு தங்களுக்கு என் நிரந்தர வதிவிட உரிமை கொடுப்பதில்லை? என்ற ஆதங்கம் அவர்களின் எழுத்துகளில் வெளிப்பட்டது. அதோடு நின்றால் கூடப் பரவாயில்லை. "படிப்பறிவில்லாத" அகதிகளுக்கு வதிவிட அனுமதியும், வேலை வாய்ப்பும் தாராளமாக வழங்கப் படுகிறது. அதே நேரம் இந்த நாட்டிற்கு தமது திறமைகளை அர்ப்பணிக்க காத்திருக்கும் "அதி புத்திசாலி" மாணவர்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள், என்று தமது வெறுப்பை கொட்டித் தீர்த்தனர். சந்தர்ப்பம் வழங்கினால் சேவை செய்வதற்காக எஜமான் காலடியில் காத்திருக்கும் மாணவர்கள். 

இவர்கள் தான், முன்பு கல்லூரி அனுமதி கிடைக்க வேண்டுமென்பதற்காக, தாய்நாடு திரும்பி தன் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று கூறி விசா பெற்றார்கள். தமது வர்க்க குணாம்சத்தை அத்தனை அழகாக காட்டியிருந்தார்கள். யுத்தங்களினால் மட்டுமல்ல, பொருளாதாரக் காரணங்களுக்காக ஆயினும் அகதிகளாக வருபவர்களை "படிப்பறியாத பாமரர்கள்" எனக் கருதிக்கொள்ளும் மேட்டுக்குடித் திமிர்த்தனம் அவர்களுக்கே உரியது.

அகதிகளாக வருபவர்களில் ஆரம்பக் கல்வியை முடிக்காத பலர் இருப்பதை யாரும் மறுக்கவில்லை. அதே நேரம், அதே அகதிகள் குழாமில், எத்தனை வைத்திய நிபுணர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், சட்ட வல்லுனர்கள் இருக்கிறார்கள் என்ற விபரம் அவர்களுக்கு தெரியாது. சொந்த நாட்டில் யுத்தம் காரணமாக உயர்கல்வி வாய்ப்பை பறிகொடுத்த எத்தனை பேர், ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடர்ந்தனர் என்பதை அறியவில்லை. 

இங்கே அந்த புள்ளிவிபரங்களை எடுத்துக் காட்டுவது எனது நோக்கமல்ல. ஆப்கானிஸ்தானை சேர்ந்த தூதுவர் ஒருவரின் குடும்பம் உட்பட, ஆப்பிரிக்காவில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு பலியான அரச அதிகாரிகள் என பலரை அகதி முகாமில் பார்த்திருக்கிறேன். அகதிகளாக வந்து அகிலம் அறிய வாழ்ந்தவர்கள் பலர் உண்டு. 

நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, பின்னர் புஷ்ஷின் அரசியல் ஆலோசகரான சோமாலிய அகதி, ஹிர்சி அலி. பிரான்ஸ் ஜனாதிபதியான ஹங்கேரிய அகதி, சார்கோசி. அயர்லாந்து லிஸ்பன் நகர மேயர் ஆகிய நைஜீரிய அகதி, அடெபாரி. இப்படி பல உதாரணங்களை அடுக்கலாம். "அடித்தட்டு மக்களின் கையறு நிலைக்கு காரணம் படிப்பறிவின்மை," என்று ஐரோப்பிய தீவிர வலதுசாரிகளும், ஆசிய "புத்திஜீவி" மாணவர்களும் ஒரே குரலில் பாடுவது எங்கோ நெருடுகின்றது.

அகதிகளை படிப்பறிவற்றவர்களாக வைத்திருக்கும் அநியாயம் ஐரோப்பாவில் சர்வசாதாரணம். பல நாடுகளில் அகதி என்றால் குறிப்பிட்ட வேலைகளை மட்டுமே செய்ய முடியும் என்று சட்டம் போட்டு தடுக்கிறார்கள். காய்கறித் தோட்டங்கள், உணவுவிடுதி சமையலறைகள் போன்ற இடங்களில் மட்டுமே அகதிகளை வேலைக்கு எடுப்பார்கள். ஐரோப்பாக் கண்டத்தில் பணக்கார நாடான சுவிட்சர்லாந்து அகதிகளை மனுநீதி கொண்டு அடக்கி வைக்கின்றது. "உணவுவிடுதிகளில் கோப்பை கழுவும் வேலைக்கு மட்டுமே அனுமதி" என்று அடையாள பத்திரத்தில் எழுதி விடுகின்றது. அகதி முகாம்களில் மொழியைப் போதிப்பது கூட, அவர்களை ரெஸ்டோரன்ட் வேலைக்கு தயார்படுத்துவதாக இருக்கும்.

சுவிட்சர்லாந்தின் உத்தியோகபூர்வ மொழிகளான ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலி கற்பிப்பது கூட சட்டபூர்வ அனுமதிப் பத்திரம் வைத்திருக்கும் அகதிகளுக்கு மட்டும் தான். அவர்களது தஞ்ச மனுக் கோரிக்கை மறுக்கப்பட்டால், அந்த உரிமையும் பறிக்கப்பட்டுவிடும். இந்த தடைகளை அறுத்தெறிய விரும்பிய சில அகதிகள் தமக்கென பாடசாலைகளை உருவாகிக் கொண்டனர். 

சூரிச் நகரில் சுவிஸ் இடதுசாரி இளைஞர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடம் ஒன்றில் இந்தப் பாடசாலை இயங்குகின்றது. அரசால் அங்கீகரிக்கப்படாத இலவசப் பாடசாலை, அகதிகளுக்காக அகதிகளாலேயே நடத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 150 மாணவர்கள் இங்கே கல்வி கற்கின்றனர். அனைவரும் சுவிட்சர்லாந்தில் விசா இன்றி தங்கியிருப்பவர்கள், அல்லது தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியரும் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அகதி தான்.

சுவிட்சர்லாந்தில் இரண்டு லட்சம் வரையிலான அகதிகள் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, எத்தனை வருடம் காத்திருந்தேனும் வதிவிட அனுமதியைப் பெறுவது. சுவிஸ் குடிவரவாளர் சட்டப்படி, குறைந்தது ஐந்து வருடங்கள் வசிப்பவர், அதே நேரம் சுவிஸ் சமூகத்தில் சிறப்பாக ஒத்திசைந்து வாழ்பவர் அனுமதிப் பத்திரம் பெற தகுதியுடையவர் ஆவார். ஆனால் சூரிச் போன்ற மாநிலங்கள், அவ்வாறு விண்ணப்பிப்பவர் ஜெர்மன் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றது. 

2008 ம் ஆண்டு, விசா அற்ற அகதிகள் சூரிச் நகர தேவாலயம் ஒன்றை ஆக்கிரமித்து மறியல் போராட்டம் நடத்தினார்கள். இரண்டு வாரங்கள் நீடித்த போராட்டத்தின் முடிவில், ஜெர்மன் மொழி கற்பிக்கும் பாடசாலை அமைக்கும் யோசனை தோன்றியது.

சட்டவிரோதமாக தங்கியிருந்த அகதிகள் பலர், மொழி அறிவு போதாமையால் விதிவிட உரிமையை இழந்தவர்கள். அகதிகளின் பாடசாலையில் சேர்ந்து ஜெர்மன் மொழி தேர்ச்சி பெற்ற பின்னர், வதிவிட அனுமதிப் பத்திரத்திற்காக மீண்டும் விண்ணப்பித்துள்ளனர். பாடசாலையில் கல்வி போதிக்கும் அகதி ஆசிரியர்களுக்கு, சில ஜெர்மன் மொழி பேசும் சுவிஸ் ஆர்வலர்கள் உதவுகின்றனர். அனைவரும் இங்கே தொண்டர் ஆசிரியராகவே பணியாற்றுகின்றனர்.

சுவிட்சர்லாந்தில் விசா இன்றி தங்கியிருக்கும் அகதிகளில் ஒரு பிரிவினருக்கு, அரசாங்கம் சிறிதளவு பணவுதவி செய்கின்றது. ஒவ்வொரு வாரமும் 70 டாலர் பெறுமதியான காசோலை வழங்கப்படும். இந்த காசோலையை சூப்பர் மார்க்கட்டில் மாத்திரமே மாற்றி தேவையான பொருட்களை வாங்க முடியும். எக்காரணம் கொண்டும் பணமாக கொடுக்கப்பட மாட்டாது. 

அரசின் திட்டத்தை செயலிழக்க செய்யும் நோக்கோடு, சுவிஸ் இடதுசாரிகள் அந்த காசோலைகளை வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தார்கள். அகதிகள் அந்தப் பணத்தை பிரயாணச் செலவுகளுக்கு பயன்படுத்த முடிந்தது. அவ்வாறு தான் தூர இடங்களில் வசிக்கும் அகதிகள், சூரிச் பாடசாலைக்கு வந்து படிக்க முடிந்தது.

வெளிநாட்டவர்கள் சுவிஸ் சமூகத்துடன் இசைவாக்கம் பெற வேண்டும் என்று, சுவிஸ் அரசியல்வாதிகள் மேடை தோறும் முழங்கி வருகின்றனர். ஆனால் இசைவாக்கத்திற்கான ஒரு அகதியின் தன் முனைப்பை தடுப்பவர்களும் அவர்களே. ஒரு அங்கீகரிக்கப்படாத அகதி பாடசாலையில் சேர முடியாது, சட்டப்படி வேலை செய்ய முடியாது, வசதியான வீட்டில் வாழ முடியாது. ஒரு அகதியின் முன்னேற்றத்திற்கான அனைத்து வழிகளையும் அடைத்து விட்டு, இவர்களால் நாட்டிற்கு எந்தப் பயனும் இல்லை என்று அடித்து விரட்டுகிறார்கள்.

6 comments:

தமிழ் உதயம் said...
This comment has been removed by the author.
சயந்தன் said...

தஞ்சக்கோரிக்கையின் முடிவெடுக்கப்படும் வரையிலான விசா வைத்திருப்பவர்களுக்கு (N) தற்போது post கணக்குக்கே மாதாமாதம் 280 பிராங்குகள் போட்டுவிடுகிறார்கள். (இது கன்ரோனுக்கு கன்ரோன் மாறுபடலாம்) அது நேரம் N விசா எந்தவேலையும் எடுக்க முடியாது என்றும் சில கன்ரோன்களின் சொல்லுகிறார்கள்.

18 களுக்கு முதல் வருவோருக்கு இடைநிலைப்பாடசாலைகளில் இடம்கொடுத்து அவர்களை ஏதோ ஒரு தொழில்கல்விக்குத் தயார்ப்படுத்துகிறார்கள். தாதிகளாக எலக்ரிசியன்களாக அவ்வாறு பலர் உருவாகியுள்ளனர்.

--------
சுவிற்சர்லாந்தின் தமிழ் முதலாளிகள் - விசா அற்ற தமிழ் பையனை வேலைக்கமர்த்தி சுரண்டு சுரண்டு எனச் சுரண்டி - ஒருநாளைக்கு 12 மணிநேர வேலை வாங்கி மாதம் 800 (இங்கே அடிப்படை சம்பளம் 3000 களைத் தாண்டுகிறது) பிராங்குகள் கொடுக்கிற கொடுமையைவிட சுவிஸ் அரசு வேலையே கொடுக்கமாட்டேன் என்பது பரவாயில்லைபோல இருக்கிறது.

Kalaiyarasan said...

tamiluthayam, கல்வி கூட அத்தியாவசிய தேவை தான். அதை மறுப்பது தான் மனு தர்மம் எனப்படுவது. ஐ.நா. மனித உரிமைகள் சாசனத்தில் அகதிகளுக்கு உள்ள உரிமைகளை வழங்குமாறு தான் கோருகிறோம். மிருகங்களுக்கு உரிமை வழங்கும் நாடுகள், புகலிடத்தில் அகதிகளுக்கு உரிமைகள் இல்லை எனக் கூறலாமா? சொந்த நாட்டில் அகதிகளின் மனித உரிமைகளை மதிக்காத அரசுகள், பிற நாடுகளுக்கு போதனை செய்யலாமா?

Kalaiyarasan said...

சயந்தன், சுவிட்சர்லாந்தின் தற்கால நிலைமைகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நீங்கள் சொல்வதன் படி கடந்த 20 வருடங்களாக, சுவிசில் அகதிகள் விஷயத்தில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை எனத் தெரிகின்றது. அன்று இருந்ததை விட, தமிழ் முதலாளிகளின் சுரண்டல் மட்டும் தான் அதிகரித்துள்ளது.

Henry J said...
This comment has been removed by the author.
Anonymous said...

அகதி என்னும் வலி தெரிந்தவன் நான்
சொந்த நாடு எம்மை ஒதுக்கி தள்ளியது என்றாலும் கனடா அகதிகளை
வாழ வைக்கும் நாடு . நான் கனடாவில் அகதியாக வந்த போது இங்கு என்னை ஏற்று கொண்டார்கள் .
இப்பொது நான் ஒரு நல்ல நிலையில் படித்து பட்டம் பெற்று நின்மதியான வாழ்வு வாழ்கிறேன் .உலகத்தில் அகதிகளை
மதிக்கும் ஒரே நாடு கனடா என்றால் வேறு கருத்து இல்லை. எந்த ஒரு இன மத நிற பாகுபாடும் இன்றி இங்கு வசிக்க முடிகிறது .சகலருக்கும்
சம உரிமை ஏன் அகதி கூட கனடாவின் சிடிசன்ஸ் ஆக முடியும் , படிக்க முடியும், வேலை செய்ய முடியும்,சொத்து வாங்க முடியும்.சொல்ல போனால் சொந்த நாடாகவே கருதலாம்.உலக அகதிகளின் அடைக்கல பீடம் கனடா.நான் இங்கு எந்த ஒரு பாகுபாடு பற்றி கேள்விப்படவே இல்லை .ஏனெனில் ஒருவரும் மட்டவரை அவமதிப்பதில்லை.ஒருவருடைய அகதி அந்தஸ்து ஏற்று கொள்ளப்பட்டால் அவர் ஒரு எதிர்கால கனேடிய பிரஜை .இப்போது நானும் ஒரு நாட்டின் குடிமகன் .எனக்கென்று ஒரு நாடு உண்டு. உலகமே அகதிகளை உங்கள் சமூகத்துடன் இணையுங்கள். அவர்களும் சக மனிதர்கள் .எல்லா உரிமையும் உடைய சாதாரண மனிதர்கள்