Monday, January 18, 2010

ஒபாமாவுக்கு ஒரு ஹைத்தி அகதியின் திறந்த மடல்


அன்புடன் ஒபாமாவுக்கு,

அமெரிக்கா உலகில் மிக முன்னேறிய ஜனநாயக நாடு என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஹைத்தியின் நிலநடுக்கத்தில் அந்த நம்பிக்கை நொறுங்கி விட்டது. நிலநடுக்கத்திற்கு மறு நாள், "நிவாரணப் பணிக்கென 2000 மரைன் துருப்புகளை இன்னும் சில நாட்களில் அனுப்புவதாக" புதன்கிழமை AP செய்தி தெரிவித்தது. "இன்னும் சில தினங்களில்?"திருவாளர் ஒபாமா அவர்களே, அமெரிக்காவில் இருந்து ரொம்ம்ம்ப தூரத்தில் இருக்கும் ஐஸ்லாந்து ஜனாதிபதி ஒலாபூர் கிராம்சொன் உங்களை முந்திக் கொண்டு உதவினார். உங்கள் அறிவிப்பை உலகத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதற்கு முன்னரே, 4000 மைல் தூரத்தில் உள்ள ஐஸ்லாந்தில் இருந்து உதவி வந்து சேர்ந்து விட்டிருந்தது. வெறும் 700 மைல் தூரத்தில் இருக்கும் அமெரிக்காவில் இருந்து உதவி கிடைப்பதற்கு "இன்னும் சில தினங்கள்" காத்திருக்க வேண்டும். 8000 மைல் தொலைவில் உள்ள சீனா 48 மணி நேரத்திற்குள் மோப்பம் பிடிக்கும் நாய்களையும், பிற உதவிப் பொருட்களையும் அனுப்பி வைத்தது. ஹைத்திக்கு மிக அருகாமையில் மியாமியிலும், புவேட்டோரீகொவிலும் (700 மைல்) அமெரிக்க தளங்கள் உள்ளன. அங்கிருந்து மரைன் துருப்புகளின் உதவியைப் பெறுவதற்கு நாம் இன்னும் சில தினங்கள் காத்திருக்க வேண்டும்.

ஒபாமா அவர்களே! ஹைத்தியின் மீட்பு பணிக்கும், நிவாரணத்துக்கும் எத்தனையோ மில்லியன் டாலர்கள் ஒதுக்கியிருப்பதாக அறிவித்தீர்கள். உண்மையிலேயே மிகப் பெரிய தொகை தான். ஆனால் அந்த தொகை கூட, நீங்கள் ஈராக்கில் ஒரு மாதத்திற்கு செலவிடும் தொகையின் சிறு பகுதி என அறியும் போது மனதை நெருடுகின்றது. யுத்தம் என்று வந்துவிட்டால், காற்றிலும் விரைவாக அமெரிக்க படையினர் அனுப்பப்படுவார்கள் என்பதை அறிந்திருக்கிறேன். ஹைத்திக்கு நீங்கள் அனுப்பிய உதவி மூன்று தினங்களில் வந்து சேர்ந்தது. அது ஒரு விமானம் தாங்கிக் கப்பல். (USS Carl Vinson) அந்தக் கப்பலில் எந்த வித அவசர கால உதவிப் பொருளையும் காணாதது ஏமாற்றமளித்தது. அதற்கு பதிலாக 19 ஹெலிகாப்டர்களும் ஏவுகணைகளும் இருந்தன.

ஒருவேளை நிவாரணப் பொருட்களை கப்பலில் அனுப்ப மறந்து விட்டீர்களா, ஒபாமா? கவலை வேண்டாம். ஏற்கனவே சர்வதேச மீட்புக் குழுக்கள் (அமெரிக்கர்களுக்கு முன்னர்)களத்தில் இறங்கி விட்டன. பத்து மெட்ரிக் தொன் உணவுப்பொருட்கள், குடிநீர், கூடாரங்கள், பிற மீட்பு உபகரணங்கள் எல்லாம் சின்னச்சிறு நாடான ஐஸ்லாந்தில் இருந்து வந்து சேர்ந்து விட்டன. உடனடியாக எமக்கு உதவிய ஐஸ்லாந்து, கடந்த வருட நிதி நெருக்கடியில் சிக்கி பொருளாதாரம் திவாலாகும் நிலையில் இருந்தது. "அமெரிக்கா உடனடியாக உதவி அனுப்பாததற்கு காரணம், ஹைத்தியில் நிலவிய பாதுகாப்புக் குறைபாடு..." உங்களது பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார். ஆமாம், ஏற்கனவே பஞ்சத்தில் அடிபட்ட ஹைத்தி ஏழைகள் நீங்கள் அனுப்பும் நிவாரணப் பொருட்களை கொள்ளையடித்தால் என்ன செய்வது? அதைத் தடுக்க ஆயுதந் தரித்த Blackwater கூலிப்படையினரை அனுப்பியிருக்கிறார். சபாஷ்! நாம் கேட்டது drinking water , கிடைத்ததோ Black water.

திரு. ஒபாமா அவர்களே ஹைத்தியின் அவலத்திற்கு நிலநடுக்கம் மட்டும் காரணமல்ல. எல்லாவற்றுக்கும் இயற்கை அன்னையை குறை கூறாதீர்கள். அமெரிக்க ஆசியுடன் ஹைத்தியை மூன்று சகாப்தங்களாக ஆட்சி செய்த கொடுங்கோலன் டுவாலியர் காலத்தில் தான் பெருமளவு கட்டடங்கள் கட்டப்பட்டன. எதிர்ப்பவர்களை எல்லாம் சுட்டுப் போட்ட சர்வாதிகாரியின் கீழ், ஊழல் செய்து கட்டிய தரங்குறைந்த கட்டிடங்கள், எவ்வாறு பூகம்பத்தை எதிர்த்து நிற்கும்? சர்வதேச நிதி உதவியில் என்பது சதவீதம் டுவாலியர் குடும்பத்தின் தனிப்பட்ட சொத்துகளாக மாறின. மிகுதியை ஐ.எம்.எப்.பின் சலுகைக் குறைப்பு திட்டம் செய்து முடித்தது. ஐ.எம்.எப். நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் கட்டப்பட்ட சேரி வீடுகள் இடிந்து விழுந்து லட்சக்கணக்கான மக்களை பலி எடுத்துள்ளன. சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஹைத்தி முழுவதற்கும் இரண்டே இரண்டு தீயணைப்பு நிலையங்கள் மட்டுமே இருந்தன. குடிநீர் விநியோகமோ, வைத்தியசாலைகளோ இன்றி அவதிப்பட்ட மக்களின் துன்பத்தை நிலநடுக்கம் முடித்து வைத்தது.

தசாப்த கால சர்வாதிகார ஆட்சியின் முடிவில் வந்த 1991 பொதுத் தேர்தலில் மக்கள் அரிஸ்டீட்டை தெரிவு செய்தார்கள். அவர் ஐ.எம்.எப். நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக, அமெரிக்க அரசு படை அனுப்பி ஆட்சியைக் கவிழ்த்தது. (அப்போது மட்டும் என்ன விரைவாக படைகள் வந்தன?) 2004 ம் ஆண்டு, அரிஸ்டீட்டை மக்கள் மீண்டும் ஜனாதிபதியாக்கினார்கள். இம்முறை உங்கள் படைகள் தலையிட்டு அவரை கடத்திச் சென்று விட்டன. அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த புஷ், இராணுவ நடவடிக்கையை நியாயப் படுத்தி என்னனவோ எல்லாம் பேசினார். எமது நாட்டின் ஜனநாயகத்தை முளையிலேயே கிள்ளி எறிந்த அமெரிக்கர்களின் கடமை உணர்ச்சி எம்மை புல்லரிக்க வைத்தது.

இராணுவத் தலையீடு என்று வந்து விட்டால் மட்டும் உங்கள் படைகள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வந்திறங்கி விட்டன. அப்போது மட்டும் உங்கள் அரசின் விரைவான நடவடிக்கை எம்மை வியப்பில் ஆழ்த்தின. ஆனால் இப்போது உங்கள் பாதுகாப்பு செயலாளர் கூறுகிறார்: "தவிர்க்கவியலாத காரணங்களால் மீட்புப் பணிகள் தாமதமடைகின்றன. இன்னும் ஒரு வாரத்தில் கடற்படையின் நடமாடும் மருத்துவமனை அனுப்பி வைக்கப்படும்." கடவுளே! அமெரிக்க மருந்துகள் வரும் வரையில் ஹைத்திய மக்கள் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்க வேண்டும்.

ஒபாமா அவர்களே! ஹைத்தி உலகில் மிகவும் வறிய நாடு என்று உங்கள் ஊடகங்கள் எம் மேல் அனுதாபப்படுகின்றன. அவர்களின் அனுதாபத்திற்கு நன்றி கூறும் தருணத்தில், அறியாமையையும் இடித்துக் கூற வேண்டியுள்ளது. ஒரு காலத்தில் எமது தாயகமான ஹைத்தி செல்வந்த நாடாக இருந்தது. 18 ம் நூற்றாண்டு பிரெஞ்சு சிந்தனாவாதி வோல்டேயர் ஹைத்தியின் செல்வம், "கறுப்புத் தங்கம்" என அழைக்கப்படும் அடிமைகள் தான் என்றார்.

அந்தோ பரிதாபம்! ஹைத்தியின் கறுப்பின அடிமைகள் பிரெஞ்சு காலனிய எஜமானுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தார்கள். அடிமைகளின் புரட்சி வென்றது. நவீன உலகின் முதலாவது அடிமைகளின் குடியரசு உருவானது. ஏதோ காரணத்தால், ஹைத்தியை விட்டோடிய பிரெஞ்சுப் படைகள் திரும்பி வரவேயில்லை. ஆனால் அதற்காக அவர்கள் ஹைத்தியின் சுதந்திரத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்று அர்த்தமா? இல்லை. இல்லவே இல்லை. 1825 முதல் 1947 வரை, ஹைத்தி பிரான்சுக்கு நஷ்டஈடு கட்டுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டது. எதற்காக அந்த நஷ்டஈடு? அடிமைகள் கிளர்ச்சி செய்து விடுதலை ஆனதால், எஜமானர்களுக்கு பெருந்தொகை நஷ்டம் ஏற்பட்டு விட்டதாம். அந்த நஷ்டத்தை அடிமைகள் சந்ததி சந்ததியாக அடைத்து வர வேண்டுமாம்.

மனிதர்களை தனித்தனியாக அடிமைகளாக வைத்திருப்பதை விட, முழு தேசத்தையுமே அடிமையாக வைத்திருப்பது லாபகரமானது. இதைத் தான் பிரான்ஸின் "நவ-காலனித்துவம்" என்கிறார்களா? எமது உழைப்பில் பிரெஞ்சு மக்கள் வசதியான வாழ்க்கை வாழ்கிறார்களா? அடியேனின் சிற்றறிவுக்கு எட்டிய அரசியல் அவ்வளவுதான். ஒரு வேளை எமது மக்களின் வறுமைக்கான காரணியை, 18 ம் நூற்றாண்டு காலனிய சரித்திரத்தில் தேட வேண்டுமா?

இப்படிக்கு,
ஒரு ஹைத்தி அகதி


Haiti needs a relief effort that doesn't continue oppression Carl Dix of the Revolutionary Communist Party says that US Haitian relations has influenced the way the relief efforts have unfolded in Haiti Is there

1 comment:

Unknown said...

தன் கையே தனுக்குதவி. சும்மா கிடைக்கும் உதவியை குறை கூறும் புத்தியை மாற்றுங்கள்.

அகதி அகதி என்று பிறரிடம் பரிதாபம் எதிர்பார்த்து வாழும் வாழ்வை விட்டு சொந்தக் காலில் நின்று பழகுங்கள். உங்கள் அறிவுக்கு ஏற்றபடி தான் உங்கள் அரசு மற்றும் உங்கள் வாழ்க்கை.