Showing posts with label அரேபியா. Show all posts
Showing posts with label அரேபியா. Show all posts

Friday, December 30, 2011

விஷ்ணுவின் வாகனமான, "ஷாருக்கான்" என்ற கருடன்!

[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது! - 13]
(பதின்மூன்றாம் பாகம்)

இந்து மதத்தில் உள்ள கருட புராணம், வைஷ்ணவர்களுக்கு உரியது. இந்து மதத்தில் இரண்டு பிரிவினர் பெரும்பான்மையாக உள்ளனர். ஒரு பிரிவினர், சிவனை முழுமுதற் கடவுளாக வழிபடும் சைவர்கள். மற்ற பிரிவினர், விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் வைஷ்ணவர்கள். கருட புராணத்தில் விஷ்ணுவுக்கும், கருடனுக்கும் இடையில் நடைபெறும் ஆன்மீக உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

கருடன் விஷ்ணுவின் வாகனமாகும். இன்றுள்ள இந்துக்களுக்கு, கருடனைப் பற்றி மேலதிகமாக எதுவும் தெரியாது. மதத்தை அமைப்பாக்குவதில் பங்கெடுத்தவர்கள், தமது வருங்கால சந்ததி எதைப் படிக்க வேண்டும், எதைப் படிக்கக் கூடாது என்று, அன்றே முடிவெடுத்திருந்தனர். தகவலை தணிக்கை செய்வது, செய்தியை இருட்டடிப்பு செய்வது எல்லாம், நமது கால அரசுக்களுக்கு மட்டுமே பொதுவான ஒன்றல்ல. பண்டைய கால மதவாதிகள் அதைத் தான் செய்தனர். நிசெயா நகரில் (துருக்கி) கூடிய கிறிஸ்தவ துறவிகள், விவிலிய நூலில் எந்தக் கதைகள் இடம்பெற வேண்டும், எதை நீக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அவர்களின் தீர்மானத்தின் விளைவு தான், இன்று நாம் வாசிக்கும் பைபிள் நூல்.

இந்தியாவில் விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் வைஷ்ணவ மதம் அறியப் பட்ட காலத்திற்கு முன்பே கருட வழிபாடு இருந்துள்ளது. வேத கால ஆரியரின் தெய்வங்களில் ஒன்றாக ரிக் வேதத்தில் எழுதப் பட்டுள்ளது. இன்றைக்கு இஸ்லாமிய மயப்பட்டுள்ள நாடுகளிலும் கருட வழிபாடு நிலவியது. அரேபியர்கள், கருடனை "ரூக் (Rukh, Roc) பறவை" என்று அழைத்தனர். அரேபியரின் தேவதைக் கதைகளிலும் ரூக் பறவையின் சாகசங்கள் பற்றி கூறப் பட்டுள்ளது. பிரமாண்டமான ரூக் பறவை, யானையையும் தூக்கிச் செல்லும் வல்லமை பெற்றது. மகாபாரதத்தில் எழுதப்பட்ட கிளைக் கதைகளில், கருடனின் கதையும் ஒன்று.

மகாபாரதக் கருடனும், யானையை தூக்கிச் செல்லும். "இந்து இந்தியாவிலும்", "இஸ்லாமிய அரேபியாவிலும்" வாழும் மக்கள் ஒரே மாதிரியான புராணக் கதையை பகிர்ந்து கொண்டமை ஆச்சரியத்திற்கு உரியது. நமது நாட்டு இந்து மத அடிப்படைவாதிகள், "முஸ்லிம்கள் என்றால் வேற்றுக் கிரக வாசிகள்" என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு தெரியாத ஒன்றை, மற்றவர்கள் அறிய விடவும் மாட்டார்கள். ஆங்கிலேயர்கள், யூதர்களுடன் தம்மை இனங் காட்டிக் கொள்ள விரும்புவார்கள். அரேபியர், சீனர்களுடனான ஒற்றுமைகளை மூடி மறைக்கப் பார்ப்பார்கள்.

கருடனைப் பற்றிய புராணக் கதைகள் இந்தியாவுக்கு மட்டுமே உரிய சிறப்பம்சமல்ல. சீனா, தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும், கருடனைப் பற்றிய கதைகள், இன்றும் மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளன. மொங்கோலியாவில் குலத் தலைவர்களை கருடனின் பெயரால் அழைக்கும் வழக்கம் இருந்தது. மொங்கோலிய நாட்டு தேசிய விமான சேவையின் பெயர் "Khan Garid" (கருட ராஜா). பிரபல ஹிந்தி சினிமா நடிகர் ஷாருக்கானை தெரியாதவர் எவருமிருக்க முடியாது. ஆனால், ஷாருக்கான் என்ற பெயருக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் மிகச் சிலரே. அது ஒரு முஸ்லிம் பெயர் என்று பிழையாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

"ஷா" என்றால் ஈரானிய மொழியில் ராஜா என்று அர்த்தம். "ருக்" என்பது, புராண கால ராட்சதப் பறவையின் (கருடன்) பெயர். அதாவது, கருட ராஜா. கான், துருக்கி மொழியில் தலைவனைக் குறிக்கும். மொங்கோலியர்கள் "கான் கரிட்" என்று அழைக்கும் பாரம்பரியத்தை பின்பற்றி, ஈரானியர்கள் "ஷா-ருக்" என்ற பெயரிட்டனர். இந்திய இந்துக்களின் பூர்வீகம், ஈரான், சீனா, மொங்கோலியா போன்ற நாடுகளில் இருப்பதை நிரூபிக்க இத்தனை சான்றுகள் போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

இந்து மதம் கருடனைப் பற்றி வேறென்ன எல்லாம் சொல்கிறது? பறவைகளின் ராஜாவான கருடன், ஒரு யானையை தூக்கிச் செல்லுமளவு ராட்சதப் பறவை. அது எமது குடியிருப்புகளுக்கு மேலே பறக்கும் பொழுது, சூரியனின் வெளிச்சத்தை மறைத்து விடுவதால், நிலத்திலே பெரியதொரு நிழல் படரும். அரபு நாட்டு புராணக் கதையும் அவ்வாறு தான் கருடனை (ரூக்) விபரிக்கின்றது. சிந்துபாத்தின் கடல் பயணத்தின் போது, ரூக் பறவை இரண்டு தடவைகள், கப்பல்களை தாக்கி சேதப் படுத்தியது. மார்கோ போலோ தனது கடற் பயணங்களின் பொழுது, மடகஸ்கார் தீவில் இருந்த ராட்சதப் பறவைகள் குறித்து கேள்விப் பட்டுள்ளார். உள்ளூர் மக்கள் அதனை, "யானை காவிப் பறவை" என்றழைத்தனர்.

கருடன் (ரூக்), Qaf மலையில் வசிப்பதாக அரேபியர்கள் நம்பினார்கள். அதனை உறுதிப் படுத்துவது போல, மொங்கோலியாவில், கருடனை வழிபட்ட மக்கள், தமது தெய்வம் ஒரு புனித மலையில் வசிப்பதாக நம்பினார்கள். மொங்கோலியாவில் பௌத்த மதத்தின் வருகைக்கு பின்னர், கருட வழிபாடு ஏறத்தாள மறைந்து விட்டது. அகழ்வாராய்ச்சியாளர்கள், கருட தெய்வச் சிலைகளை மண்ணுக்குள் இருந்து தோண்டி எடுத்தனர். பாதி பறவை, பாதி மனிதனாக அந்தச் சிலைகள் காணப் பட்டன. இதே போன்ற கருடன் சிலைகள், துருக்கி இன மக்கள் பரவி வாழ்ந்த, ரஷ்யாவின் பிற பகுதிகளிலும் கண்டெடுக்கப் பட்டன.

புராண கால கதைகளுக்கு அப்பால், கருடனை விஞ்ஞான அடிப்படையில் விளக்க முடியுமா? உலகில் மனித இனம் தோன்றுவதற்கு முன்னர், டைனோசர்கள், டிராகன்கள் என பல ராட்சத விலங்கினங்கள் வாழ்ந்துள்ளன. கற்கால நியாண்டர்தால் மனிதன் கூட, எம்மை விட அளவிற் பெரிய ராட்சதனாகத் தான் இருந்திருப்பான். பல இலட்சம் வருடங்களாக நடந்து வரும் பரிணாம வளர்ச்சியின் காரணமாக, ராட்சத விலங்கினங்கள் அழிந்து விட்டன. இருப்பினும், மனித சமுதாயம் தோன்றிய காலத்திலும், எஞ்சிய உயிரினங்கள் சில அங்கும் இங்கும் வாழ்ந்திருக்கலாம்.

பண்டைய மக்கள், அந்தத் தகவல்களை புராணக் கதைகளாக பரம்பரை பரம்பரையாக சொல்லிக் கொண்டு வந்துள்ளானர். எங்கேயோ ஒரு புள்ளியில் தோன்றிய மனித இனம், வெவ்வேறு திசைகளில், ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் புலம்பெயர்ந்து செல்லும் பொழுது, கதைகள் மாற்றமடைவது இயல்பு. பெயர்கள், சம்பவங்கள் மாறினாலும், பெரும்பாலான மூலக் கதைகள் மாற்றமடைவதில்லை. கருடன் பற்றிய கதையும் அவ்வாறானது தான். கற்காலத்தில் வாழ்ந்த டைனோசர்களின் எலும்புக்கூடுகள் மொங்கோலியாவில் உள்ள கோபி பாலைவனத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. டைனோசர்களை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், ஒரு காலத்தில் இராட்சதப் பறவையினங்கள் வாழ்ந்திருக்கலாம் என நம்புகின்றனர்.

கருடனின் பூர்வீகத்தை பற்றி, இப்போது நாங்கள் அறிந்து கொண்டோம். அடுத்ததாக, கருடனுக்கும், பாம்புக்கும் இடையில் என்ன பகை என்று பார்ப்போம். கருடனின் இனத்தவருக்கும், பாம்பு இனத்தவர்களுக்கும் இடையில் நடந்த போரில், ஓரிடத்தில் சிவபெருமானும் சம்பந்தப் பட்டுள்ள விடயம் சுவாரஸ்யமானது. சிவனின் கழுத்தில் பாம்பு சுற்றி இருப்பதும் காரணத்தோடு தான். "பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது, கருடா சௌக்கியமா?" உண்மையில், கருடன் தான் பாம்பைப் பார்த்து அவ்வாறு கேட்டிருக்க வேண்டும். போரில் தோல்வியடைந்த ஒரு சிறுபான்மை சமூகத்தை இகழ்ச்சியுடன் பார்த்த பெரும்பான்மை சமூகத்தவரின் வன்மம், தற்கால சினிமாவிலும் எதிரொலித்தது.

(தொடரும்)


மேலதிக தகவல்களுக்கு:
Garuda
Roc (mythology)
Shahrokh (mythology)
The Search for Gold Guarding Griffins
-------------------------------------------------------

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்
6.தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்
7.பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !
8.கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?
9.தமிழர் தொலைத்த விமானம் செய்யும் தொழில்நுட்பம்
10.எல்லாளனை வீழ்த்திய, "தமிழ்த் துரோகக் கடவுள் கந்தன்!"
11. புத்தரின் பல்லுக்காக போரிட்ட, சிங்கள-தமிழ் மன்னர்கள்
12.நாக நாட்டு குகைக் கோயில் மர்மம்

Wednesday, January 20, 2010

இஸ்லாமுக்கு முந்திய அரேபிய நாகரீகங்கள்


உலகில் எந்தவொரு மதமும் இராணுவ பலமின்றி பரவவில்லை. இஸ்லாமும் அதற்கு விதிவிலக்கல்ல. இஸ்லாமியப் படையெடுப்புகள் பற்றிய சரித்திரக் குறிப்புகள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் அனைத்துப் போர்களிலும் வெற்றிவாகை சூடிய இஸ்லாமியப் படையணியின் பக்கம் நின்றவர்களால் எழுதப்பட்டுள்ளன. அவர்களை எதிர்த்து தோல்வியுற்ற கிறிஸ்தவ கிரேக்கர்களும் சில குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர். அதே போல பெர்சியப் பேரரசின் இறுதிக் காலத்தைப் பாடும் செய்யுள்கள் சில காலத்தால் அழியாமல் நிலைத்து நின்றுள்ளன. இவற்றைத் தவிர்ந்த பிற தரவுகளைக் காண்பதரிது. ஆகையினால் மத்திய கிழக்கில் இஸ்லாம் பரவுவதற்கு முன்பிருந்த நிலைமை குறித்து மட்டுப்படுத்தப் பட்ட தகவல்களே காணக் கிடைக்கின்றன.

மேற்கே ரோமப் பேரரசும், கிழக்கே பெர்சியப் பேரரசும் மத்திய கிழக்கை பங்கு போட்டுக் கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. அரேபியாவின் அரைவாசிப் பகுதி ரோமர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. இயேசு கிறிஸ்து அரேமிய மொழி பேசும் இனத்தை சேர்ந்தவர். அவர் பேசிய அரேமிய மொழி, கிட்டத்தட்ட அரபு போன்றிருக்கும். (இப்போதும் அந்த மொழி வழக்கில் உள்ளது.) அன்றிருந்த அரேபிய தீபகற்ப மக்கள் அனைவரும் ஒரே அரபு மொழி பேசியிருக்க வாய்ப்பில்லை. ஒன்றுக்கொன்று தொடர்புள்ள மொழி(களைப்) பேசியிருப்பார்கள். நமது காலத்தில் அவற்றை வட்டார மொழிகள் என அழைக்கின்றனர்.

அரேபிய தேசிய இனம் என்ற அரசியல் அறிவு தோன்றியிராத காலத்தில், இஸ்லாம் என்ற மதக் கலாச்சாரம் அவர்களை ஒன்றினைத்தது. ரோமப் பேரரசின் மாகாணமாக கருதப்பட்ட அரேபியாவைச் சேர்ந்த வீரர்கள், அரபு சாம்ராஜ்யம் ஒன்றை ஸ்தாபிப்பார்கள் என்று அன்று யாரும் கனவு கண்டிருக்க மாட்டார்கள். அரபு பாலைவனத்தில் வாழ்ந்த, தமக்குள்ளே ஒற்றுமையற்ற நாடோடிக் குழுக்கள், ஒழுங்கு படுத்தப்பட்ட இராணுவமாக மாறுவார்கள் என்று யாரும் கற்பனை செய்திருக்கவில்லை. அதனால் ரோமர்களும் அவர்களை அடக்கி ஆள வேண்டுமென்று நினைக்கவில்லை.

இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யேமன் நாட்டில் நாகரீகமடைந்த அரபு ராஜ்ஜியம் இருந்தது. ரோமர்களின் காலத்திலேயே யேமன் நாகரீகம் அதன் அழிவில் இருந்தது. பிற்காலத்தில் இஸ்லாம் பரவிய போது, பண்டைய அரபு நாகரீகம் முழுமையாக மறைந்து விட்டிருந்தது. யேமன் நாகரீகம் பற்றி பைபிளில் கூட சில குறிப்புகள் உள்ளன. அந்த நாட்டை சேர்ந்த இராணி ஷீபா,(ஆங்கிலத்தில் : Sheba, அரபியில்: Saba) இஸ்ரேலை ஆண்ட சொலமன் மன்னனை சந்திக்க வந்திருக்கிறாள். ஷீபா ராணி ஆப்பிரிக்க இனத்தவராக இருக்க வேண்டும். நவீன காலத்து நிறவாத கருத்துக்கு மாறாக, "ஷீபா உலகப் பேரழகி, புத்திக்கூர்மையுடைய பெண்." என்றெல்லாம் பைபிள் புகழ்கின்றது. அது மட்டுமல்ல, ஷீபாவின் வருகையின் போது கொண்டு வந்த பரிசுப் பொருட்களை வைத்து, அவளது ராஜ்ஜியத்தின் செல்வத்தை வியக்கின்றது.

ஆமாம், இன்று ஏழை நாடாக உள்ள யேமன், மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் பணக்கார நாடாக இருந்தது. அன்று "ஹிம்யர்"(Himyar ) என அழைக்கப்பட்ட நாட்டின் முக்கிய ஏற்றுமதி, சாம்பிராணித் துகள்கள். சாம்பிராணி, விஷேசமாக யேமன், ஓமான் போன்ற நாடுகளில் மட்டும் வளரும் மரங்களில் இருந்து கிடைக்கின்றது. அங்கிருந்து தான் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது. தினசரி ஆயிரக்கணக்கான ஒட்டகங்கள் சாம்பிராணி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு அரபி பாலைவனத்தை கடந்து செல்லும். ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து காஸா போன்ற துறைமுகங்களை அடையும். அங்கிருந்து கப்பல்கள் மூலம் ஐரோப்பாவிற்கு விநியோகிக்கப்படும். உலகம் முழுவதும் ஹிம்யர் சாம்பிராணிக்கு கிராக்கி இருந்தது. இன்றும் கூட கிரேக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பிராணிப் புகை போட்டு தான் வழிபாடு நடக்கின்றது. பிற்காலத்தில் கத்தோலிக்க திருச்சபை, அரேபியரின் வர்த்தக மேலாண்மையை உடைப்பதற்காக, மெழுகுதிரி பயன்படுத்த தொடங்கியது. இன்று கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் பிரிக்க முடியாத அம்சமான மெழுகுதிரியின் பயன்பாட்டுக்கு காரணம் வெறும் வர்த்தகப் போட்டி தான்.

இன்று எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், சில வளைகுடா அரபு நாடுகள் பணக்கார நாடுகளாகின. அதேபோல அன்றைய யேமன் (ஹிம்யர்) ஒரு பணக்கார நாடாக திகழ்ந்தது. யேமன் அரசு, சாம்பிராணி ஏற்றுமதியால் கிடைத்த லாபத்தை அபிவிருத்திப் பணிகளில் செலவிட்டது. யேமன் நாடு மலைகளையும், வளமான விவசாய நிலங்களையும், பருவகால மழை வீழ்ச்சியையும் கொண்டது. அந் நாட்டு பொறியியல் நிபுணர்கள், "மாரிப்" என்ற பெயரைக் கொண்ட ராட்சத அணைக்கட்டு ஒன்றை நிர்மாணித்தார்கள். அணை கட்டி சேமித்த தண்ணீர், வயல்களுக்கு பாசனம் செய்யப்பட்டது. மக்களுக்கான குடிநீர் தேவையையும் 'மாரிப்' அணை பூர்த்தி செய்தது. கி.பி. ஆறாம் நூற்றாண்டில், அதாவது இஸ்லாம் தோன்றிய காலத்தில், 'மாரிப்' அணை கைவிடப்பட்டது. அதனால் விவசாயமும் பாழானது. மக்கள் குடிபெயர ஆரம்பித்து விட்டனர்.

தென் அரேபியாவில் (யேமன்) இருந்த தொன்மையான நாகரீகம் தானாக மறைந்தது. ஆனால் சிரியாவில் இருந்த அரபு நாகரீகம், அந்நிய சக்திகளால் வெற்றி கொள்ளப்பட்டது. கி.பி. 3 ஆம் நூற்றாண்டில், செனோபியா என்ற அரசி தலைமையில் ஒரு அரபு ராஜ்ஜியம் நிறுவப்பட்டது. அனேகமாக எழுதப்பட்ட அரபுக்களின் வரலாற்றில் முதலாவது அரசாட்சி அதுவாகத் தானிருக்கும். சிரியாவில் உள்ள பால்மிரா (Palmyra என்ற சொல் அதிலிருந்து வந்தது) நகரை சுற்றி அமைந்திருந்தது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருந்ததால், சர்வதேச வர்த்தகத்தின் மையப்புள்ளியாக இருந்தது. பால்மிரா அரபு இராசதானி சிறிது காலமே நீடித்தது. இறுதியில் ரோமப் பேரரசின் படைகளால் வெற்றி கொள்ளப்பட்டது. இஸ்லாமிய-அரேபியப் படையெடுப்புகள் வரையில், அந்தப் பகுதியில் ரோமர்களின் காவல் அரண் மட்டுமே இருந்தது. அந்தக் காவலரண் பாலைவனத்தில் இருந்த நாடோடி அரேபியரைக் கண்காணித்துக் கொண்டிருந்தது.

இதற்கிடையே ரோமப் பேரரசில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டது. அதிகார மையம் ரோமாபுரியில் இருந்து கொன்ஸ்டான்டிநோபில் (இன்று இஸ்தான்புல்) நகருக்கு மாறியது. கொன்ஸ்டான்டிநோபில் நகரில் வீற்றிருந்த சக்கரவர்த்தியும், மேட்டுக்குடியினரும் கிரேக்க மொழி பேசினார்கள். கிறிஸ்தவ மதத்தை பின்பற்றினார்கள். அவர்களின் ஆட்சி எல்லைக்குள் அடங்கிய, மத்திய கிழக்கிலும், வட ஆப்பிரிக்காவிலும் கிரேக்க மொழி உத்தியோகபூர்வ மொழியாகியது. ஆயினும் அவர்கள் தம்மை ரோமர்கள் என்று அழைத்துக் கொண்டனர்.

மத்திய கிழக்கின் நகரங்களில் கிரேக்கர்கள் மட்டுமல்ல, அரேபியர்களும் வாழ்ந்தனர். கல்வி கற்ற, அரச பதவிகளை வகித்த அரேபியர்கள் கிரேக்க மொழி பேசினார்கள். (எமது நாடுகளில் ஆங்கிலம் பேசும் நடுத்தர வர்க்கத்தினருடன் ஒப்பிடத் தக்கது.) அன்று பாலஸ்தீனம், லெபனான், சிரியா, ஈராக்கின் ஒரு பகுதி (கிரேக்க) ரோமப் பேரரசால் ஆளப்பட்டன. அந்தப் பகுதிகளில் வாழ்ந்த பெரும்பான்மை மக்கள் அரபு இனத்தவர்கள். (அன்று பலர் தம்மை கிரேக்கர்களாக இனங்காட்டிக் கொள்ள விரும்பினர்.)

இன்று சிரியா, லெபனான், ஜோர்டான், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் வாழும் அரபு கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் ஒரு காலத்தில் காசானிய (Ghassanid ) நாட்டுப் பிரஜைகளாக இருந்தவர்கள். காசானிய அரச பரம்பரையும், பிரஜைகளும் யேமனில் இருந்து வந்து குடியேறி இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. காசானிய நாட்டை ஆண்ட அரசர்களின் பெயர்கள் எல்லாம் அரபு மொழிப் பெயர்களாக உள்ளன. அரபியில் "இன்னாரின் மகன்" எனக் குறிப்பிடும் "இபுன்" என்ற விகுதியைக் கொண்டிருப்பதும் கவனத்திற்குரியது.

இருப்பினும் காசானிய அரச பரம்பரையினர் தம்மை கிரேக்கர்களாக காட்டிக் கொண்டனர். கிரேக்கர்களுடனான திருமண பந்தம் அதற்கு காரணமாக இருக்கலாம். காசானிய இராசதானி, ரோமப் பேரரசிற்கு கப்பம் கட்டும் சிற்றரசாக இருந்தது. அரேபியப் பாலைவனத்தில் தொல்லை கொடுக்கும் நாடோடிக் கும்பலை அடக்குவதற்காக, ரோமர்கள் கசானிய பொம்மை அரசை பயன்படுத்திக் கொண்டார்கள். சுருக்கமாக சொன்னால், அரபுக்களை அரபுக்களை கொண்டே அடக்கினார்கள்.

தெற்கு ஈராக்கில் "லக்மிடியா"(Lakhmid ) என்ற இன்னொரு அரபு சிற்றரசு இருந்தது. லக்மிடியர்களின் மூதாதையரும் யேமனில் இருந்து குடிபெயர்ந்தவர்கள். லக்மிடிய பிரஜைகள் கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர். அக்காலத்தில் இரு பெரும் உலக வல்லரசுகளாக இருந்த பெர்சியப் பேரரசும், ரோமப் பேரரசும் லக்மிடிய நாட்டை யுத்த சூனியப் பிரதேசமாக்கினார்கள். காசானிய தேசமும் அது போன்றே இரு வல்லரசுகளுக்கு இடையிலான சூனியப் பிரதேசமாக இருந்தது. லக்மிடிய அரசவம்சமும் அரபிப் பெயர்களைக் கொண்டிருந்தது.

"ஹிரா" (Al Hira) வை தலைநகராகக் கொண்ட லக்மிடிய தேசம் அரபி இலக்கியங்களை வளர்த்தது. அனேகமாக அரபி மொழி எழுத்துகள், இலக்கணம் என்பன லக்மிடியர்களின் பெருமைக்குரிய கண்டுபிடிப்புகள். பல அரபுப் புலவர்கள் லக்மிடிய அரசவைக்கு சென்று இலக்கியம் படைத்தனர். லக்மிடிய தேசத்தின் வீழ்ச்சிக்கு அயலில் இருந்த பெர்சிய பேரரசு முதல் காரணம். இஸ்லாமியரின் படையெடுப்புகளின் போது, லக்மிடியா ஏற்கனவே பெர்சியாவின் மாகாணமாக இருந்தது.

அரேபிய தீபகற்பத்தின் மேற்குப் பகுதியில், "நாகரிக உலகின்" தொடர்பால் நகரங்கள் உருவாகின. குறிப்பாக சிரியாவுடன் (காசானிய நாடு) கொண்டிருந்த வர்த்தக தொடர்பால், ஹிஜாஸ், யமானா, மெக்கா, மெதீனா போன்ற நகரங்கள் வளர்ச்சியடைந்தன. அங்கிருந்த வணிகர்கள் கம்பளி, பதனிடப்பட்ட தோல் போன்ற பண்டங்களை சிரியாவில் விற்று வருவார்கள். சிரியாவில் இருந்து ஒலிவ் எண்ணை, தானியம், வைன் போன்ற பண்டங்களை வாங்கி வந்து தமது நகரங்களில் விற்பார்கள்.

வெளிநாட்டு வர்த்தகத்தால் வளர்ந்த நகர-தேசங்களில் மெக்கா பிரசித்தமானது. எப்போதோ அங்கு விண்வெளியில் இருந்து விழுந்த வால்வெள்ளிப் பாறை ஒன்றுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக மக்கள் நம்பினார்கள். அதை சுற்றி ஓர் ஆலயம் தோன்றியது. பகைமை கொண்ட அரபு இனக்குழுக்கள் அங்கே வந்து சமாதானமாக உரையாடுவது, அந்த ஆலயத்தின் சிறப்பம்சம். அரேபிய தீபகற்பத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் யாத்திரீகர்கள் மெக்கா ஆலயத்தின் மகிமையை கேள்விப்பட்டு வரத் தொடங்கினார்கள். பக்தர்கள் பெருகவே, ஆலயத்தின் அயலில் ஒரு வருடச் சந்தை தோன்றியது. ஆன்மீகமும், வியாபாரமும் ஒன்றுடன் ஒன்று கை கோர்த்துக் கொண்டு வளர்ந்தன.

மெக்கா ஆலயத்தை பராமரிப்பதும், அதை ஒட்டிய வணிக நடவடிக்கைகளும் "குறைஷி" என்ற அரபு இனக்குழுவின் பொறுப்பில் இருந்தன. குறைஷி குலத்தை சேர்ந்த பலர் ஏற்கனவே சிரியாவுடனான வணிகத் தொடர்புகளால் செல்வந்தர்களாக இருந்தனர். சிலருக்கு மெக்காவில் மட்டுமல்லாது, சிரியாவிலும் சொந்தமாக வீடு, காணி, சொத்துக்கள் இருந்தன. வடக்கே சிரியாவுக்கும், தெற்கே யேமனுக்கும் இடையே மெக்கா நகரம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மெக்காவின் பூகோள அமைவிடம், மெக்கா நகரவாசிகளான குறைஷிகளின் ஆதிக்கம், அவர்களின் சிரியாவுடனான வர்த்தக தொடர்பு போன்ற காரணிகள், இஸ்லாம் என்ற புதிய மதத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளன. இஸ்லாமிய இறைதூதர் முகமது நபி, 570 ம் ஆண்டு, ஒரு செல்வந்த குறைஷி குடும்பத்தில் பிறந்தார்.

(தொடரும்)

முதலாவது பகுதி:
இஸ்லாம் - ஓர் அரேபிய கலாச்சாரப் புரட்சி

மேலதிக தகவல்களுக்கு:
Himyarite Kingdom
Lakhmids
Ghassanids