Showing posts with label தேசிய இனம். Show all posts
Showing posts with label தேசிய இனம். Show all posts

Friday, January 17, 2020

ஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான்


பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோன்றிய தேசியவாதக் கோட்பாடுகள் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளன. பண்டைய காலத்து பெருமை பேசுவதும், ஆயிரம் வருடங்களானாலும் இனம் மாறவில்லை என்று நம்புவதும் தேசியவாதத்தின் கொள்கைகள். தமிழ்த்தேசியம் என்றாலும், ஜெர்மன் தேசியம் என்றாலும் அதில் எந்தக் குறையும் இல்லை. எப்போதுமே மொழி அடிப்படையில் உருவாக்கப்படும் தேசியவாதம் ஒரு கற்பிதம் தான். ஜெர்மன் தேசியமும் அதற்கு விதிவிலக்கல்ல.

உண்மையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் ஜேர்மனியர்களுக்கு "இன உணர்வு" ஏற்பட்டது. அதற்கு முன்னர் யாருமே தம்மை ஜெர்மனியர் என்று அழைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் ஒன்றில் புரூசியர், ஆஸ்திரியர் என ராஜ்ஜியத்தின் பெயரால் அழைக்கப் பட்டனர். அல்லது அவரவர் வாழ்ந்த பிரதேசத்தின் பெயரால் அழைக்கப் பட்டனர். அல்லது கத்தோலிக்கர், புரட்டஸ்தாந்துக்காரர், யூதர்கள் என்று மதத்தின் பெயரால் அழைக்கப் பட்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் ஜெர்மன் இனத்தவர்கள் ஒற்றுமையில்லாமல்  தமக்குள் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டனர்.

ஜெர்மனியர்கள் என்றால் யார்? ஆங்கில மொழியில் ஜெர்மன் என்று அழைக்கப் பட்டாலும், ஜெர்மன்காரர்கள் தம்மை டொய்ச்சே என்று அழைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் பேசும் மொழி டொய்ச் என்றும், அவர்களது நாடு டொய்ச்லாந்து என்றும் அழைக்கப் படுகின்றது. பிரெஞ்சு, ஸ்பானிஷ் காரர்கள் தமது மொழியில் அலெமான் என்று அழைக்கிறார்கள். ஜெர்மன், அலெமான் என்பன பண்டைய காலத்தில் ஜெர்மனியர்களை குறிக்கப் பயன்படுத்தப் பட்ட பெயர்ச் சொற்கள் தான். அதே நேரம் டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர் என்பன கூட ஜெர்மன் இனத்தவரைக் குறிப்பிடும் சொற்கள் தான்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், ஐரோப்பாக் கண்டத்தில் ரோம சாம்ராஜ்யத்திற்கு வடக்கே வாழ்ந்த மக்கள் நாகரிகமடையாத காட்டுமிராண்டிகளாக கருதப் பட்டனர். ரோமர்கள் அந்த மக்களை "கெர்மானி" (Germani) எனும் பொதுப் பெயரில் அழைத்தனர். அதுவே பிற்காலத்தில் ஆங்கிலத்தில் ஜெர்மனி ஆகியது. ஆனால், கெர்மானி என்பது ஒரே மொழி பேசும், ஒரே இனத்தைக் குறிக்கும் சொல் அல்ல. இன்றைய ஜெர்மானியர்கள் மட்டுமல்லாது, டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள், சுவீடிஷ்காரர்கள், நோர்வீஜியர்கள் எல்லோரும் ரோமர்களின் பார்வையில் கெர்மானி தான்.

உண்மையில் அன்றிருந்த ஜெர்மன் இனத்தவர்கள் நாகரிக வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. அவர்கள் நகரங்களை கட்டவுமில்லை. அவர்களது மொழிக்கு எழுத்து வடிவம் இருக்கவில்லை. அவர்கள் இடி, மின்னல், மரங்கள் போன்றவற்றை வணங்கும் இயற்கை வழிபாட்டை பின்பற்றினார்கள். அத்துடன் ஜெர்மன் இனக்குழுக்கள் அடிக்கடி தமக்குள் ஒற்றுமை இல்லாமல் அடிக்கடி யுத்தம் செய்து கொண்டிருந்தன. அதனால் பெருந்தொகையிலான அகதிகள் ரோமர்களின் நாட்டுக்குள் தஞ்சம் கோரி இருந்தனர்.

இன்று ஆப்பிரிக்கா, ஆசியாவில் இருந்து புலம்பெயரும் அகதிகளை தடுப்பதற்காக, ஐரோப்பியக் கோட்டை எனும் பெயரில் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப் படுவது தெரிந்ததே. அதே மாதிரியான சூழ்நிலை தான் பண்டைய ரோம சாம்ராஜ்யத்திலும் நிலவியது. இருண்ட ஐரோப்பாவில் இருந்து ஜெர்மன் அகதிகள் வருவதைத் தடுப்பதற்காக ரோம சாம்ராஜ்யத்தின் வட புற எல்லைகள் பலப்படுத்தப் பட்டன. தெற்கே சுவிட்சர்லாந்தில் இருந்து வடக்கே நெதர்லாந்து வரை ஓடிக் கொண்டிருக்கும் ரைன் நதி தான், அன்று ரோமர்களின் நாகரிகமடைந்த ஐரோப்பாவையும், ஜெர்மனியர்களின் காட்டுமிராண்டி ஐரோப்பாவையும் பிரிக்கும் எல்லையாக தீர்மானிக்கப் பட்டது.

அதற்காக, ஜெர்மனியர்கள் எல்லோரும் ரோம ராஜ்ஜியத்தின் எல்லைக்கு வெளியே வாழ்ந்தார்கள் என்று அர்த்தமில்லை. கணிசமான அளவு ஜெர்மன் இனத்தவர்கள் ஏற்கனவே ரோமப் பேரரசின் குடிமக்களாக உள்வாங்கப் பட்டு விட்டனர். இதற்கு நாம் பெரியளவு யோசிக்கத் தேவையில்லை. ஐரோப்பிய வரைபடத்தில் ரைன் நதிக்கு தெற்கில் உள்ள பிரதேசங்களை பார்த்தாலே போதும். 

அதாவது, இன்றைய நெதர்லாந்தில் ரொட்டர்டாம் நகருக்குக் கீழே உள்ள பகுதியும், பெல்ஜியம் முழுவதும் ரோம நாட்டிற்குள் இருந்தன. அங்கு வாழ்ந்தவர்கள், இன்றைக்கும் கூட, டச்சு மொழி (தற்காலத்தில்: நெடர்லான்ட்ஸ் மற்றும் பிளாம்ஸ்) பேசும் ஜெர்மன் இனத்தவர்கள். அத்துடன் இன்றைக்கு தனிநாடாக உள்ள லக்சம்பேர்க், மற்றும் பிரான்சின் மாகாணமாக உள்ள அல்சாஸ், லோரேன் பிரதேசங்களில் வாழ்பவர்களும் ஜெர்மன் இனத்தவர்கள் தான். இன்றைக்கும் அவர்கள் பேசும் மொழிகள், உண்மையில் ஜெர்மனின் கிளை மொழிகளே!

மேற்குறிப்பிட்ட மக்கள் சமூகத்தினர், ரோம மயமாக்கப் பட்ட ஜெர்மனியர்கள் எனலாம். அவர்களில் படித்தவர்கள் லத்தீன் மொழி பேச, எழுதத் தெரிந்து வைத்திருந்தனர். இந்த "நாகரிக வளர்ச்சி" தான் பிற்காலத்தில், தனித்துவமான ஜெர்மன் மன்னராட்சி தோன்றுவதற்கு அடித்தளம் இட்டது. மத்திய கால ஐரோப்பாவில், அதாவது ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியின் பின்னர், ஒரு அசல் ஜெர்மனியரான கார்ல் சக்கரவர்த்தி கெல்ன் (ஆங்கிலத்தில்: கொலோன்) நகரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். கார்ல் மன்னரின் நிர்வாகம் முழுக்க முழுக்க லத்தீன் மொழியில் தான் நடந்தது. அப்போதும் படித்தவர்கள் லத்தீன் பேசினார்கள். ஜெர்மன் மொழி? அது படிப்பறிவில்லாத பாமரர்கள் பேசும் கீழ்த்தரமான மொழியாக கருதப் பட்டது.

ரோமர்கள் ஆட்சிக் காலத்தில், இருண்ட ஐரோப்பாவை அடிபணிய வைக்கும் இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்றன. அதற்கான போர்களில் ஈடுபட்ட ரோம இராணுவத்தில், கணிசமான அளவில் ஜெர்மன் மொழி பேசும் வீரர்களும் இருந்தனர். ரைன் நதிக்கு அப்பால் சுதந்திரமாக வாழ்ந்த ஜெர்மனியர்களின் பார்வையில், அந்த வீரர்கள் துரோகிகளாக, ஒட்டுக் குழுக்களாக தெரிந்ததில் வியப்பில்லை. இருப்பினும் காலப்போக்கில் "காட்டுமிராண்டி ஜெர்மனியர்களும்" ரோம இராணுவத்தின் கீழ் இயங்கிய கூலிப் படையில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர்.

"காட்டுமிராண்டி ஜெர்மனியர்கள்" எதற்கும் அஞ்சாத வீரர்களாக இருந்த படியால், அவர்கள் ரோமர்களால் பிரித்தானியா தீவு வரை கொண்டு செல்லப் பட்டனர். அதனால், ரோமர்கள் காலத்திலேயே பெருமளவு ஜெர்மானியர்கள் இன்றைய பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளில் சென்று குடியேறத் தொடங்கி விட்டனர். அவர்கள் பெரும்பாலும் ஆண்களாக இருந்த படியால், அடுத்த வந்த தலைமுறையினர் ஜெர்மன் மொழியை மறந்து விட்டனர். ஏனெனில் பொதுவாக தாய்மார் ஊடாகத் தான் மொழி கடத்தப் படுகின்றது.

மத்திய காலத்தில், கிறிஸ்தவ மத ஆட்சிக் காலத்தில் தான், இன்றைய ஐரோப்பிய மொழிகள் வளர்ச்சி அடைந்தன. சாதாரண பாமர மக்களுக்கும் கிறிஸ்தவ மதத்தை பரப்ப வேண்டிய கட்டாயம் இருந்தமை அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். தேவாலயங்களில் லத்தீன் மொழி பயன்படுத்தப் பட்டாலும், பொது மக்களுக்கு புரியும் மொழியிலும் செயலாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதனால் நடைமுறைக் காரணங்களுக்காக "மக்களின் மொழி" பயன்படுத்தப் பட்டது. அது லத்தீன் மொழியில் தெயோடிசே (Theodisce) என அழைக்கப் பட்டது. அது காலப்போக்கில் மருவி டொய்ச் (Deutsch) ஆனது. பிற்காலத்தில், ஜெர்மனியர்கள் அதையே தமது மொழியின் பெயராக ஏற்றுக் கொண்டு விட்டனர்!

தெயோடிசே தான் ஆங்கிலேயரால் டச்(Dutch) என்றும் அழைக்கப் பட்டது. டச் என்பது நெதர்லாந்து, பெல்ஜியத்தில் வாழும் மக்கள் பேசும் மொழியை குறிப்பிடும் ஆங்கில பெயர்ச் சொல். இன்றைய காலத்தில் டச், டொய்ச் (ஜெர்மன்) இரண்டும் வெவ்வேறு மொழிகளை குறிப்பிடும் சொற்கள். ஆனால் குறைந்தது ஐநூறு வருடங்களுக்கு முன்னராவது அது ஜெர்மனின் கிளை மொழியாக கருதப் பட்டு வந்தது.

பதினைந்தாம் நூற்றாண்டில், வட ஜெர்மனியில் லுய்பேக் நகரை மையமாகக் கொண்டு ஹான்சே எனும் வணிகர்களின் அமைப்பு இயங்கியது. மேற்கே அன்த்வேர்பன் (பெல்ஜியம்)முதல் கிழக்கே ரீகா (லாட்வியா) வரையில் ஹான்சே வணிகர்களின் பணத்தால் வளர்ந்த நகரங்கள் பல உண்டு. அன்று வர்த்தக நோக்கிற்காக ஒரு பொது மொழி தேவைப் பட்டது.

அப்போது தரப்படுத்தப் பட்ட ஜெர்மன் மொழி, பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் "நேடர் டொய்ச்"(தாழ்நில ஜெர்மன்) என்ற பெயரில் புழக்கத்தில் இருந்தது. இன்றைய ஜெர்மனியில் நேடர் டொய்ச் அழிந்து விட்டது. ஆனால் மத்திய காலத்து நேடர் டொய்ச் பிற்காலத்தில் "நெடர் லான்ட்ஸ்" (டச்) என்ற பெயரில் ஒரு தனியான மொழியாகி விட்டது. தென் ஆப்பிரிக்காவில் பேசப்படும் ஆப்பிரிகான்ஸ் மொழியும் அதிலிருந்து பிரிந்து சென்ற தனி மொழி தான்.

இதற்கிடையே மத்திய கால ஐரோப்பாவில் இன்னொரு அரசியல்- சமூக மாற்றம் ஏற்பட்டது. ஆயிரம் வருடங்களுக்கு முன்னரும் கிழக்கு ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றாத பல இனங்கள் வாழ்ந்தன. அன்றிருந்த போப்பாண்டவர் அங்கெல்லாம் வாள்முனையில் கிறிஸ்தவ மதத்தை பரப்ப வேண்டுமென்றார். அதற்காக தொய்ட்டன்ஸ் எனப்படும் ஜெர்மன் குதிரைப் படையினரை ஒரு சிலுவைப் போருக்கு அனுப்பினார். கிழக்கு ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதம் பரப்பச் சென்ற ஜெர்மன் படையினர், பெருமளவு நிலங்களை கைப்பற்றி காலனிப் படுத்தினார்கள். அங்கு பெருமளவு ஜெர்மன் இனத்தவரை குடியேற்றினார்கள். குறிப்பாக இன்றைய போலந்தின் வட மேற்குப் பகுதிகள் ஜெர்மன்மயமாகின.

இன்று போலந்துக்கும், லிதுவேனியாவுக்கும் இடையில் காலினின்கிராட் எனும் பெயரில் ஒரு சிறிய நிலப்பகுதி ரஷ்யாவுக்கு சொந்தமாக உள்ளது. அது ஒரு காலத்தில் கேனிங்க்ஸ்பேர்க் என்ற பெயரில் ஜெர்மனியர்களின் பிரதேசமாக இருந்தது. அன்றைய காலத்தில் வட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த இனத்தவர்கள் "நாகரிகமடையாத காட்டுமிராண்டிகளாக" கருதப் பட்டனர். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் ரோமர்கள் ஜெர்மனியர்களை பார்த்து நாகரிகமடையாத காட்டுமிராண்டிகள் என்றனர். அதே ஜெர்மனியர்கள் கிறிஸ்தவர்களாக மாறிய பின்னர், கிழக்கு ஐரோப்பாவில் இயற்கை வழிபாடு செய்த மக்களை நாகரிகமடையாத காட்டுமிராண்டிகள் என்றனர்.

காலனிய காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வாழ்ந்த மக்களை இந்துக்கள் என்ற பொதுப் பெயரில் அழைத்த மாதிரி, அன்றைய ஜெர்மனியர்கள் வட கிழக்கு பிராந்திய மக்களுக்கு "புரூசீ" என்று ஒரு பொதுப் பெயர் சூட்டி இருந்தனர். சில நூறாண்டுகளுக்கு பின்னர், அந்த இடங்கள் யாவும் ஜெர்மனியரின் முழுமையான கட்டுப்பாட்டில் வந்த பின்னர் "புரூசியா" (Prussia) என அழைக்கப் பட்டது. வெளியுலகில் இருந்தவர்களுக்கு, புரூசியா என்பது ஜெர்மனியை குறிக்கும் ஒத்த கருத்துச் சொல்லாக தென்பட்டது. அங்கிருந்த ஜெர்மனியர்களும் தம்மை புரூசியர்கள் என அழைத்துக் கொண்டனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏறக்குறைய இன்றுள்ள ஜெர்மனியின் நிலப்பரப்பை உள்ளடக்கிய புரூசிய சாம்ராஜ்யம் இருந்தது. அப்போது ஐரோப்பா முழுவதும் தேசியவாத கொள்கைகள் செல்வாக்குப் பெறத் தொடங்கி விட்டன. அதனால் ஜெர்மனியர்களின் தேசம் எனும் பொருள்படும் "டொய்ச்லாந்து" என்ற பெயர் சூட்டப் பட்டது. இருப்பினும் "ஜெர்மனியரின் தேசத்தில்" போலிஷ், லிதுவேனிய, இன்னும் பல மொழிகளைப் பேசும் சிறுபான்மையின மக்கள் வாழ்ந்தனர்.

அதைவிட கணிசமான அளவு ஜெர்மன் மொழி பேசும் மக்கள் ஆஸ்திரியா சாம்ராஜ்யத்தில் வாழ்ந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் புரூசியாவும், ஆஸ்திரியாவும் இடையறாது போரில் ஈடுபட்டிருந்தன. அதாவது இரண்டு ஜெர்மன் ராஜ்ஜியங்கள் நீண்ட காலம் பகைமை பாராட்டி வந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், அதுவும் ரஷ்யா, பிரித்தானியா ஆகிய வல்லரசுகளின் நெருக்குதல் காரணமாக ஒன்று சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அது வரைக்கும், புரூசியாவில், ஆஸ்திரியாவில் வாழ்ந்த யாருக்கும் ஜெர்மன் இன உணர்வு இருக்கவில்லை.

பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் புரூசியாவிலும், ஆஸ்திரியாவிலும் வாழ்ந்த ஜெர்மன் மேல்தட்டு வர்க்கத்தினர் பிரெஞ்சு மொழி பேசினார்கள். அந்தக் காலத்தில் அதுவே நாகரிகமடைந்த மொழியாக கருதப் பட்டது. இன்றைக்குப் பலர் ஆங்கிலம் பேசுவதில் பெருமை கொள்வது மாதிரி, அன்றைய ஐரோப்பிய மேட்டுக்குடியினர் பிரெஞ்சு பேசுவதில் பெருமைப் பட்டனர். இன்றைய ஜெர்மனியிலும், ஆஸ்திரியாவிலும் உத்தியோகபூர்வ ஜெர்மன் மொழியாக உள்ள ஹோக் டொய்ச் (உயர்ந்த ஜெர்மன்) பிரெஞ்சு மொழியின் நிழலில் வளர்ச்சி அடைந்தது.

"ஜெர்மன் ஷேக்ஸ்பியர்" என்று அழைக்கப் படக் கூடிய இலக்கிய மேதை கோதே கூட பிரெஞ்சு மொழியை உயர்வாகக் கருதினார். பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் நடந்த நெப்போலியன் போர்களின் போது ஜெர்மனி முழுமையாக ஆக்கிரமிக்கப் பட்டது. அதற்காக எல்லா ஜெர்மனியர்களும் நெப்போலியனை ஓர் அந்நிய ஆக்கிரமிப்பாளராக கருதவில்லை. உண்மையில் நவீன ஜெர்மனியின் அடித்தளம் நெப்போலியனால் (ஒரு பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளர்) இடப்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. நெப்போலியன் காலத்தில் இன்றைய ஜெர்மனியின் பெரும்பகுதியை உள்ளடக்கிய "ரைன் சமஷ்டிக் குடியரசு" உருவானது. அங்கு நிலப்பிரபுக்களின் அதிகாரம் பறிக்கப் பட்டது. சட்டத்தின் ஆட்சி ஏற்பட்டது. சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்ற நடைமுறை வந்தது.

1848 ம் ஆண்டு ஜெர்மனியில் ஒரு புரட்சி நடந்தது. அது பிரெஞ்சுப் புரட்சியின் கொள்கைகளை பின்பற்றிய ஜெர்மன் மத்தியதர வர்க்கத்தினரின் புரட்சி. அவர்கள் அமெரிக்கப் புரட்சியையும் முன்மாதிரியாகப் பார்த்தனர். அவர்களின் கோரிக்கைகள் பின்வருமாறு: 
- மக்கள் பிரதிநிதிகளுக்கான பாராளுமன்றம் ஒன்றை உருவாக்க வேண்டும். 
- அரசமைப்பு சட்டம் எழுதப்பட வேண்டும். 
-பிரஜைகளின் தனி மனித உரிமைகள் குறித்த சட்டம் கொண்டு வர வேண்டும். 
- தடையற்ற ஊடகச் சுதந்திரம் வேண்டும். 

பெர்லினில் நடந்த ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கான துப்பாக்கிப் பிரயோகத்தில் முன்னூறு பேரளவில் கொல்லப் பட்டனர். அதன் விளைவாக ஜெர்மன் புரட்சி தோல்வியுற்றது. இருப்பினும் அரசு முன்பு போல இயங்க முடியவில்லை. ஆர்ப்பாட்டக் காரர்களின் கோரிக்கைகளை ஓரளவிற்கேனும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. புதிதாக கொண்டு வரப்பட்ட பாராளுமன்ற அமைப்பில் ஆரம்பத்தில் பழமைவாதக் கட்சிப் பிரதிநிதிகள் மட்டுமே வீற்றிருந்தனர். சில வருடங்களுக்கு பின்னர் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக உருவாக்கப் பட்ட சோஷலிசக் கட்சியும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு போட்டியிட்டது.

இந்தக் காலகட்டத்தில் ஜெர்மன் தேசியவாதம் தோன்றியது. அது மொழி அடிப்படையிலான கொள்கையை முன்வைத்தது. வாரிசு உரிமை அடிப்படையில் ஆளும் மன்னர் பரம்பரைக்கு பதிலாக, ஜெர்மன் மக்களே ஜெர்மனியை ஆள வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தது. அந்தக் காலத்தில் தேசியவாதக் கொள்கை முற்போக்கானதாக கருதப்பட்டது. லிபரல் சித்தாந்தத்தை பின்பற்றியது. ஆனால் ஐரோப்பிய நாடுகளை ஆண்ட மன்னர்கள் தேசியவாதத்தை கண்டு அஞ்சினார்கள்.

தேசியவாதத்திற்கு இடம் கொடுத்தால் தமது அதிகாரம் முடிவுக்கு வந்து விடும் என்று மன்னர்கள் அஞ்சினார்கள். அடுத்து வந்த ஆண்டுகளில் அந்த அச்சத்தை நிரூபிக்கும் வகையில் பல சம்பவங்கள் நடந்தன. ஆனால் காலம் மாறிவிட்டிருந்தது. கிழக்கே ரஷ்ய சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காரணமாக, தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த புரூசிய, ஆஸ்திரிய மன்னர்கள் ஒன்று சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. வரலாற்றில் முதல் தடவையாக ஜெர்மன் பேசும் மக்கள் அனைவரும் ஒரே கூட்டமைப்பின் கீழ் ஒன்று சேர்ந்தனர். அது ஜெர்மன் தேசியவாதத்தின் எழுச்சிக்கு சாதகமாக அமைந்து விட்டது.

Monday, December 01, 2014

தேசிய இனம்: ஓர் இன அடையாளத்திற்கு அப்பாற்பட்ட அரசியல்


ஒரு தேசிய இனம் உருவாகுவதற்கு, எப்போதுமே ஒரு பொதுவான மொழி மட்டுமே அடிப்படையாக அமைந்திருக்கவில்லை. பல நாடுகளில் மதம் கூட தேசிய இனத்தை வரையறுக்கும் காரணியாக உள்ளது. ஒரே மதத்திற்குள்ளேயும், வித்தியாசமான மதப் பிரிவு சார்ந்த தேசியம் உருவாகலாம். ஐரோப்பாக் கண்டத்திலேயே அந்த நிலைமை இருந்தது.

உதாரணத்திற்கு பெல்ஜியத்தை எடுத்துக் கொள்வோம். பெல்ஜியத்தை தனியான தேசியமாக உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. பெல்ஜிய தேசியத்தை தீர்மானித்த காரணி எது? கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் மட்டும் தான்.

ஒரு காலத்தில், பெல்ஜியம் இன்றைய நெதர்லாந்து நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. புரட்டஸ்தாந்து - கத்தோலிக்க முரண்பாடு காரணமாக, கத்தோலிக்க பெல்ஜியர்கள் பேரழிவைத் தந்த போரை நடத்தி, தனி நாடாக பிரிந்து சென்றார்கள்.

நெதர்லாந்தில் பேசும் அதே டச்சு மொழி பேசும் மக்களுடன், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளை பேசும் மக்களும் பெல்ஜியத்தில் வாழ்கிறார்கள். மூன்று வேறு பட்ட மொழிகளை பேசும் மக்கள், பெல்ஜிய தேசிய இனமாக மாறுவதற்கு, அவர்களை ஒன்றிணைத்த கத்தோலிக்க மதம் தான் காரணமாக இருந்தது.

ஆகவே, தேசிய இனம் என்றால் அதற்கு பொதுவான மொழி இருக்க வேண்டும் என்று நினைப்பதும், உலகில் ஒரே மொழி பேசும் மக்கள் எல்லோரும் ஒரே தேசிய இனம் என்று வாதாடுவதும் தவறான கோட்பாடு ஆகும்.

"தமிழ் தேசியம் என்றால் என்னவென்று தெரியுமா?" என்று வரைவிலக்கணத்துடன் விரிவுரையாற்றும் அறிவுஜீவிகள், தேசிய இனம் பற்றி தவறான நிலைப்பாடுகளை கொண்டுள்ளனர். "மொழி சார்ந்த மரபினத்தைக் கொண்டது ஒரு தேசிய இனம்" என்பன போன்ற தவறான கருத்துக்களை கொண்டுள்ளனர்.

முதலில், "இனம்" என்ற சொல்லே தவறான அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகின்றது. தனது அடையாளத்தை முதன்மைப் படுத்துவது "இனங்கள்" மட்டுமல்ல. மதங்களும் தான். சில நேரம், மனிதர்கள் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே மரபினத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்குள்ளே வேறுபட்ட தேசிய இனங்கள் இருக்கலாம். இருந்து வருகின்றது என்பது தான் உலக யதார்த்தம்.

இஸ்ரேல் என்றொரு இனம் கிடையாது. யூத மதத்தை பின்பற்றுபவர்கள் தம்மை யூத தேசிய இனமாகக் கருதிக் கொள்கிறார்கள். யூதர்கள் ஒரே மொழி பேசுபவர்கள் அல்ல. இட்டிஷ், ஜெர்மன், பிரெஞ்சு, ரஷ்ய, அரபு மொழிகளை பேசிய யூதர்கள் எல்லோரும் தாமாக விரும்பி ஹீபுரு மொழி கற்றுக் கொண்டார்கள். அங்கே மொழி பின்னர் வந்தது. அப்படியானால், தமிழ் தேசியவாதிகளின் வரைவிலக்கணப் படி, "இஸ்ரேலியர்கள் ஒரு தேசிய இனம் இல்லையா?"

பாகிஸ்தானும் அப்படித் தான். அதாவது, "இன்னொரு இஸ்ரேல்" தான். முஸ்லிம் என்ற மத அடையாளத்தின் அடிப்படையில் தான் பாகிஸ்தானிய தேசிய இனம் உருவானது. அங்கே நான்கு வேறுபட்ட மொழிகள் பேசும், நான்கு வேறுபட்ட தேசிய இனங்கள் உள்ளன. பஞ்சாபி, சிந்தி, பலுசிஸ்தானி, பஷ்டூன், (பிற்காலத்தில் பிரிந்து சென்ற வங்காளி) ஆகியவற்றுடன், வேறு சில ஆதிவாசி மொழிகளும் பேசப் படுகின்றன. அதனால் தான், இந்திய அகதிகளினால் இறக்குமதி செய்யப்பட்ட உருது மொழியை, எல்லோரும் பொது மொழியாக கற்றுக் கொண்டார்கள்.

கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும், ஆங்கிலம் பேசும் பெரும்பான்மை மக்களுக்கு தேசியம் கிடையாதா? அவர்களை ஒரே ஆங்கில தேசிய இனம் என்று கூற வேண்டுமா? அவர்களது மரபினம் எதுவென  ஆராய்ந்தால், அவர்கள் பூர்வீகத்தில் "ஜெர்மனியர்களாக" இருந்திருப்பார்கள்! 

"அனைத்துலகிலும் வாழும் ஆங்கிலேயர்கள் ஒரே தேசிய இனம்" என்ற கருத்தியலை, எத்தனை அமெரிக்கர்கள் ஒப்புக் கொள்வார்கள்? நிச்சயமாக, ஆங்கிலம் பேசும் அமெரிக்கர்கள் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எதற்காக பிரிட்டிஷ் பேரரசிடம் இருந்து விடுதலை அடைவதற்காக இரத்தம் சிந்திப் போராடினார்கள்? இன்றைக்கும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக இருந்திருக்கலாமே?

"அமெரிக்கர்கள் ஒரு தேசிய இனமா?" முதலில் இதற்குப் பதிலைக் கூறுங்கள். அதற்குப் பிறகு தமிழ் தேசியம் பற்றிப் பேசலாம். ஏனென்றால், அமெரிக்க சுதந்திரப் போராட்டம் நடந்து, முன்னூறு வருடங்களுக்குப் பிறகு தான் தமிழ் தேசியம் உருவானது. "தமிழர்கள் ஒரே இனம்" எனும் இனத்துவ தேசியவாதக் கருத்தியல் அடிப்படையிலேயே தவறானது. 

தமிழர்கள் என்பது ஓர் இனம் அல்ல. அது ஒரு தேசிய இனம். தேசிய இனம் என்ற அரசியல் கலைச் சொல், அந்தக் கால கட்டத்திற்குரிய சமுதாய வகைப் பிரிப்பை பிரதிபலிக்கிறது. தேசியவாதம் என்பது, 19 நூற்றாண்டு ஐரோப்பாக் கண்டத்தில் உருவான அரசியல் கொள்கை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

இடதுசாரியத்தை, கம்யூனிசத்தை எதிர்ப்பதென்றால், பல (தமிழ்) தேசியவாதிகளுக்கு இனிப்பான விடயம். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து தர்ம அடி போடுவதற்கு வருவார்கள். பலருக்கு இடதுசாரியம், திரிபுவாதம், சோஷலிசம், கம்யூனிசம், ஸ்டாலினிசம், ட்ராஸ்கிசம், குருஷேவிசம், மாவோயிசம், போன்ற கொள்கை முரண்பாடுகள் பற்றி எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதும் இல்லை.

சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்னர், கம்யூனிசம் காலாவதியாகி விட்டது என்றும், இனிமேல் தேசியவாதமே நிலைத்து நிற்கும் நிரந்தர சித்தாந்தம் என்றும் முழங்கினார்கள். ஆனால், தேசியவாதம் என்றால் என்னவென்று அவர்களிடமே தெளிவில்லை. குறைந்த பட்சம், ஒரு தேசியவாத அரசில், மக்களுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகளைப் பற்றிக் கூட பேச மறுத்தார்கள்.

தேசியவாதத்தின் குறைபாடுகளை விமர்சித்தால் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எந்தவொரு (தமிழ்) தேசியவாதியிடமும் கிடையாது. அத்தகைய விமர்சனங்களை, ஒன்றில் "பிதற்றல்கள்" என்று ஒதுக்குவார்கள், அல்லது "தனி நபர்களின் தவறுகள்" என்று சித்தரிக்க முனைவார்கள். இதன் மூலம், தேசியவாத கருத்தியல் அப்பழுக்கற்றது என்று காட்ட முனைவார்கள். அப்படிக் கூறுவோர், சோவியத் யூனியனின் உடைவுக்கு காரணம், கோர்பசேவ் போன்ற தனி நபர்களின் துரோகச் செயல் என்பதை ஒத்துக் கொள்ள முன் வருவார்களா?

19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பாக் கண்டத்தில் தோன்றிய தேசியவாதம் எனும் அரசியல் சித்தாந்தம், இரண்டு உலகப் போர்களுக்கு இட்டுச் சென்றது. கவனிக்கவும்: "இரண்டு உலகப் போர்கள்"! அதனால், சொல்லொணா துன்பங்களை அனுபவித்த ஐரோப்பியர்கள், "தேசியவாதம்" என்ற சொல்லையே உச்சரிக்க விரும்பாத காலம் ஒன்றிருந்தது.

பெர்லின் மதிலின் வீழ்ச்சி, சோவியத் யூனியனின் உடைவு என்பன, மீண்டும் தேசியவாத சக்திகளின் எழுச்சிக்கு வழி திறந்து விட்டது. அதன் விளைவு? மீண்டும் போர்கள்... முன்னாள் சோவியத் யூனியனில், ஆர்மேனியா - அசர்பைஜான் போரில் ஆரம்பித்த தேசியவாதிகள், முன்னாள் யூகோஸ்லேவியாவில் நடந்த கொசோவோ போரில் தான் ஓய்வெடுத்தார்கள்.

ஐரோப்பாவில் தேசியவாதப் போர்கள் ஓய்ந்த பின்னர் என்ன நடந்தது? மேற்கே இருந்து விஸ்தரிக்கப் பட்ட, ஐரோப்பிய மூலதனத்தின் சாம்ராஜ்யமான, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் உள்வாங்கப் பட்டன. உலகின் மிகப் பெரிய இராணுவக் கூட்டமைப்பான நேட்டோவில் அங்கத்துவம் பெற்றுக் கொண்டன.

நேற்று வரையில், ஜென்மப் பகைவர்களாக, ஒருவரை ஒருவர் வெறுத்த, இரத்தம் குடித்துக் கொண்டிருந்த தேசியவாதிகள், இன்று ஒருவரோடொருவர் கை கோர்த்துக் கொள்கிறார்கள். இவர்களை நம்பி தேசியவாதப் போர்களில் இன்னுயிர் ஈந்த அப்பாவி மக்களின் முகத்தில் கரி பூசினார்கள்.

தமக்குள் மோதிக் கொண்ட ஐரோப்பிய நாடுகளின் தேசியவாதிகள், கடைசியில் சகோதரர்களாக ஒன்று சேர்ந்தது வரலாறு. நமக்கு நன்கு பரிச்சயமான, தமிழ் - சிங்கள - கன்னட - ஹிந்தி தேசியவாதிகளும், நாளைக்கு ஐரோப்பிய முன்மாதிரியை பின்பற்ற மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? நாளையே சார்க் நாடுகளின் கூட்டமைப்பில் ஐக்கியமாகி, தம்மை ஆதரித்த தமிழ் - சிங்கள - கன்னட - ஹிந்தி மக்களின் முகத்தில் கரி பூச மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

தேசியவாத கருத்தியல்கள், முதலாளித்துவ வர்க்க நலன் சார்ந்த அறிவுஜீவிகளின் குழாம் ஒன்றினாலேயே பரப்பப் படுகின்றன. தேசியவாதத்தின் பெயரில், சமூகத்தில் நிலவும் வர்க்கப் போராட்டத்தை மறுதலிப்பதும், போலியான வர்க்க சமத்துவத்தை கட்டிக் காப்பதும் அவர்களது நோக்கமாக உள்ளது. அந்த உண்மையை, காலப்போக்கில் அவர்களே நிரூபித்துக் காட்டுவார்கள்.

Friday, October 03, 2014

சொந்த இனத்தின் சுய நிர்ணய உரிமைக்கு எதிரான போலித் தேசியவாதிகள்




மகிந்த ராஜபக்ச, "காஸ்ட்ரோவுடன் கை கோர்த்தார், அப்பாஸுடன் கட்டிப் பிடித்தார்" என்று, ஆயிரம் தடவை வேண்டுமானாலும் சொன்னதையே திரும்பச் சொல்வார்கள்.
ஆனால்.... 
"ராஜபக்ச ஒபாமாவின் காலில் விழுந்தார்" என்பதைப் பற்றி மட்டும் வாயே திறக்க மாட்டார்கள். ஏனென்றால், போலி சிங்களத் தேசியவாதிகளான ராஜபக்ச கும்பலும், போலித் தமிழ் தேசியவாதிகளும், அமெரிக்க எஜமானுக்கு விசுவாசமான அடிமைகள் தான்.


உக்ரைன், கார்கிவ் நகரில் இருந்த மிகப் பெரிய லெனின் சிலை, பாசிஸ குண்டர்களினால் இடித்து விழுத்தப் பட்டது. சோவியத் யூனியன் மறைந்த பின்னரும், இருபதாண்டுகளாக, லெனின் சிலை அங்கே தான் இருந்தது. கார்கிவ் நகர மக்கள் அதை உடைக்க நினைக்கவில்லை. ஆனால், உக்ரைனில் நடந்த பாசிஸ சதிப்புரட்சிக்கு பின்னர் தான், நாடு முழுவதும் இது போன்ற சிலை உடைப்புகள் நடந்து வருகின்றன. 

தமிழர்களில் யாராவது, லெனின் சிலை உடைப்பை ஆதரித்து பேசினால், அவரை "சாமானிய மக்களில்" ஒருவராக கருத முடியாது. நிச்சயமாக, அவரும் ஒரு பாசிஸ்டாக அல்லது நவ நாஸியாகத் தான் இருப்பார். பெரியாரின் சிலை உடைப்பவர்களும் பாஸிஸ்டுகள் தான். தமிழ் தேசிய இனம் உருவாக பெரியாரும் காரணமாக இருந்தார்.

தனது சொந்த இனத்தின் சுய நிர்ணய உரிமையை மதிக்காமல், அதற்கு இனவாத விளக்கம் கொடுப்பவர்கள், தம்மைத் தாமே "தேசியவாதிகள்" என்று அழைத்துக் கொள்வது, அந்த இனத்தின் சாபக்கேடு. உக்ரைனில் லெனின் சிலைகளை இடித்து விழுத்தும் பாசிஸ காடையர்களை, "உக்ரைனிய தேசியவாதிகள்" என்று கூறுகின்றன, CNN மற்றும் பல மேற்கத்திய ஊடகங்கள். 

லெனின் தலைமையிலான போல்ஷெவிக் புரட்சிக்குப் பின்னர் தான், வரலாற்றில் முதல் தடவையாக உக்ரைனிய தேசிய இனம் அங்கீகரிக்கப் பட்டது. அதற்கு முன்பிருந்த சார் மன்னனின் ஆட்சிக் காலத்தில், உக்ரைனிய மொழி, ரஷ்ய மொழியின் கிளை மொழியாக கருதப் பட்டது. உக்ரைனிய மொழி மட்டுமல்லாது, தனியான உக்ரைனிய கலாச்சார அடையாளங்களும் நசுக்கப் பட்டன. 

போல்ஷெவிக் கம்யூனிஸ்டுகளின் ஆட்சிக் காலத்தில், உக்ரைன் என்ற தனியான சோவியத் குடியரசு உருவாக்கப் பட்டது. அதுவே, முதலாவது உக்ரைனிய தேசமாக இருந்தது. பாடசாலைகளில் உக்ரைனிய மொழி கற்பிக்கப் பட்டது. உக்ரைனிய மொழியில் இலக்கியங்கள் எழுதப் பட்டன. பத்திரிகைகள் வெளியாகின. 

ஸ்டாலின் காலத்தில் தான், இன்றுள்ள உக்ரைனிய தேசிய எல்லைகள் வரையறுக்கப் பட்டன. 2 ம் உலகப் போருக்கு முன்னர், போலந்தின் ஒரு பகுதியாக இருந்த, உக்ரைனிய சிறுபான்மையினரின் மாகாணம், உக்ரைன் சோவியத் குடியரசுடன் இணைக்கப் பட்டது. அது மட்டுமல்ல, உக்ரைன் ஐ.நா. மன்றத்தில் அங்கத்துவம் கோரி விண்ணப்பிக்கவும், ஸ்டாலின் ஊக்குவித்திருந்தார். 

உக்ரைனிய தேசிய இனத்தை அங்கீகரித்து, அதன் சுய நிர்ணய உரிமையினை வளர்த்து விட்ட தலைவர்களின் சிலைகளை உடைப்பவர்கள், எப்படி "தேசியவாதிகளாக" இருக்க முடியும்? பாசிஸ்டுகளும், நவ நாஸிகளும், தேசியவாத முகமூடி அணிந்து கொண்டு, தமது சொந்த மக்களை ஏமாற்றி வருகின்றனர். 

 ******* 

கம்யூனிச/இடதுசாரி எதிர்ப்புப் பிரச்சாரம் செய்வது அவரவர் கருத்துச் சுதந்திரம். ஆனால், ஈழத்தில் "என்னவோ முதலாளிகளும், வலதுசாரிகளும் மட்டுமே ஆயுதப் போராட்டம் நடத்தினார்கள்" என்பது போல, சிலர் அபத்தமான கட்டுக்கதைகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். உலகில் எந்தவொரு முதலாளியும் போராளியாக விரும்ப மாட்டான். தனது பிள்ளைகளையும் விட மாட்டான். தமிழீழப் போராட்டத்திலும் அது தான் நடந்தது. 

ஈழப் போராட்டம் நடந்த காலங்களில், தமிழ் முதலாளிகள், போரினால் கஷ்டப்படும் மக்களை ஈவிரக்கமின்றி சுரண்டிக் கொண்டிருந்தார்கள். பாரம்பரிய முதலாளிகள் மட்டுமல்லாது, திடீர் முதலாளிகளும் ஈழத் தமிழ் மக்களை வருத்தி பணம் சேர்த்து வந்தனர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு, சிறிலங்கா படையினர் விதித்த பொருளாதாரத் தடையை பயன்படுத்தி, நிறையப் பேர் கோடீஸ்வரர் ஆனார்கள். தடை செய்யப் பட்ட பொருட்களை கடத்திச் சென்று, பத்து அல்லது இருபது மடங்கு விலைக்கு விற்று கொள்ளை அடித்தவர்கள் பலர் உண்டு. இவை ஈழத்தில் வாழ்ந்த அனைவருக்கும் தெரிந்த உண்மைகள். 

எரிபொருள் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, மண்ணெண்ணெய் விற்று கோடீஸ்வரனான மகேஸ்வரனின் கதை, ஈழத் தமிழ் மக்கள் அத்தனை பேருக்கும் தெரியும். இராணுவத்துடனும், புலிகளுடனும் சினேகபூர்வமாக நடந்து கொண்டு, தமிழ் மக்களின் பணத்தை கொள்ளையடித்த மகேஸ்வரன், தன்னை ஒரு தீவிர சைவ மத பக்தராக வெளியில் காட்டிக் கொண்டார். வலதுசாரி சிங்கள இனவாதக் கட்சியான UNP சார்பில் போட்டியிட்டு, பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். 

வலதுசாரி முதலாளிய ஆதரவாளர்கள் பலர், தமது சொந்த நலன்களை மட்டுமே குறிக்கோளாக கொண்டவர்கள். தூரத்தில் துப்பாக்கி வெடிச் சத்தம் கேட்டவுடனே, அலறித் துடித்து வெளிநாடுகளுக்கு தப்பியோடியவர்கள். சமூகம் எக்கேடு கெட்டாலும், தனது படிப்பு முக்கியம் என்று பல்கலைக்கழகம் வரை சென்றவர்கள். இப்படியான சுயநலவாதிகள், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கம்யூனிஸ்டுகளையும், இடதுசாரிகளையும் திட்டுவதற்கு நேரத்தை செலவிடுகின்றனர். 

 ********

இலங்கையில் நடந்த பாசிஸ பொதுபல சேனாவின் உச்சி மகாநாட்டிற்கு, மியான்மர் பௌத்த பாசிஸ்ட் விராத்து வருகை தந்திருந்தார். மகாநாட்டின் முடிவில், இரண்டு பாசிஸ அமைப்புகளுக்கு இடையில் ஓர் ஒப்பந்தம் கைச் சாத்திடப் பட்டுள்ளது. "பயங்கரவாதத்தையும், மத மாற்றத்தையும் எதிர்த்து, பௌத்த கலாச்சாரத்தை பாதுகாக்கும் நோக்கில்" ஒன்றிணைவதாக அந்த ஒப்பந்தம் குறிப்பிடுகின்றது. மதச் சார்பின்மை, கலாச்சார பன்முகத் தன்மை என்பனவற்றை மேற்கத்திய லிபரல் கலாச்சார திணிப்பு என்று சாடியுள்ளனர்.

தெற்காசியாவில் கிறிஸ்தவ, இஸ்லாமிய சக்திகள் பௌத்தர்களை மதமாற்றம் செய்வதாகவும், அதை எதிர்த்துப் போரிடுவது தமது தலையாய கடமை என்றும் தெரிவித்துள்ளனர். இதற்காக பௌத்த மத சக்திகளை ஒன்று திரட்டுவதுடன், ஒரே கொள்கை கொண்ட இந்து மத அமைப்புகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதையும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கையில் இயங்கும் பௌத்த-சிங்கள பாசிஸ இயக்கமான பொதுபல சேனா, மியான்மரின் பௌத்த - பர்மிய பாசிஸ இயக்கமான 969 ஆகியவற்றை ஒன்றிணைக்கும் பணியில் இஸ்ரேல் ஈடுபட்டு வருவதாக, சில மாதங்களுக்கு முன்னர் ராவய எனும் சிங்கள சஞ்சிகை குறிப்பிட்டு எழுதி இருந்தது.

2 ம் உலகப்போருக்கு முன்னர், ஐரோப்பாவில் ஏற்பட்ட, ஹிட்லர் - முசோலினி ஒப்பந்தம் போன்று, பொதுபல சேனா - 969 ஒப்பந்தமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் மூலம், எதிர்காலத்தில் இலங்கையிலும், மியான்மரிலும் பாசிஸ சர்வாதிகார ஆட்சியை கட்டமைப்பதற்கான அத்திவாரம் இடப் பட்டுள்ளது.

பாசிஸ்டுகளின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முழுமையாக வாசிப்பதற்கு: 

Full Text: Wirathu And Gnanasara Sign Agreement  https://www.colombotelegraph.com/…/full-text-wirathu-and-g…/


சிங்கள - பௌத்த பேரினவாத பிக்குகள், தமிழர், முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேஷத்தை வெளிப்படுத்தும் நேரம், அந்தக் கருத்துக்களுக்கு ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆனால், அதே பேரினவாத பிக்குகள், சிங்கள உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராகத் திரும்பும் நேரம், யாருடைய கவனத்தையும் பெறுவதில்லை. 

பாசிஸ பொதுபல சேனா இயக்கம், தொழிற் சங்கங்களுக்குள் ஊடுருவப் போவதாக அறிவித்துள்ளது. இலங்கையில் உள்ள தொழிற்சங்கங்களை "புத்தரின் போதனைகளுக்கு" அமைய வழிநடத்தப் போகிறார்களாம். முதலில் சுகாதார, மருத்துவத்துறை ஊழியர்களின் தொழிற்சங்கங்களை கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம், இலங்கையில் இன்று வரையில், மருத்துவ வசதி அனைவருக்கும் இலவசமாக வழங்கப் படுகின்றது. சாதாரண வைத்திய ஆலோசனை முதல், அதிக செலவு பிடிக்கும் அறுவைச் சிகிச்சை வரையில் அனைத்தும் இலவசம். 

ராஜபக்ச அரசு, மருத்துவத் துறையை தனியார்மயப் படுத்துவதற்கு பல தடவைகள் முயற்சி எடுத்தது. ஆனால், மருத்துவ ஊழியர்களின் உறுதியான தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக பின்போடப் பட்டு வந்ததுள்ளது. அது என்ன "புத்தரின் போதனைகள்"? - வேலை நிறுத்தம் செய்யாதீர்கள். - சம்பள உயர்வு கோராதீர்கள். - தனியார்மயத்தை எதிர்க்காதீர்கள். இதை எல்லாம் புத்தர் எப்போது சொன்னார் என்று கேட்டு விடாதீர்கள். 

கடவுளும், மதமும் என்றைக்கும் முதலாளித்துவத்திற்கு சேவை செய்யும். அதற்கான வழி சமைத்துக் கொடுப்பது தான் பாசிஸ சக்திகளின் நோக்கம். அன்று இத்தாலியில் முசோலினியும், ஜெர்மனியில் ஹிட்லரும் நடைமுறைப் படுத்திய கொள்கைகளை, இலங்கையில் ஞானசார தேரோ அறிமுகப் படுத்துகிறார்.

********


ஏகாதிபத்திய கைக்கூலி நிறுவனமான ஐ.நா. மன்றம், இனப்படுகொலையாளி ராஜபக்சவை அழைத்துக் கௌரவித்துள்ளது. "ராஜபக்ச தலைமையில், இலங்கையில் போருக்கு பின்னர் வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக நடத்திருப்பதாக," ஐ.நா. செயலதிபர் பான் கி மூன் பாராட்டி உள்ளார்.

"போருக்குப் பின்னர் வடக்கில் நடந்துள்ள நிவாரணப் பணிகளின் விளைவாக, அந்தப் பகுதி மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக" ராஜபக்ச தெரிவித்தாராம். தமிழரின் பிரச்சினை பற்றி எதுவும் பேசாத பான் கி மூன், அண்மைக் கால மத வன்முறைகளைப் பற்றி மட்டும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஏகாதிபத்தியம், ஐ.நா. வின் கைக்கூலித்தனம், ராஜபக்ச கும்பலின் அமெரிக்க விசுவாசம், இலங்கையில் அமெரிக்கத் தலையீடு குறித்து எந்த வித அறிவும் இல்லாத வலதுசாரிகள், தமிழ் தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். "ஐ.நா. வில் முறையிட்டால் தமிழீழம் கிடைக்கும்..." என்று நம்புமாறு, அப்பாவித் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்கள் தான், அமெரிக்க அடிவருடிகளான "போலித் தமிழ் தேசியவாதிகள்" அல்லது "போலி தமிழ் உணர்வாளர்கள்."

Friday, February 04, 2011

இனப் பகையால் பிளவுண்ட சோவியத் ஒன்றியம்


[ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?]

(பகுதி : 5)

1917 ம் ஆண்டு, சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் போல்ஷெவிக் புரட்சியினால் சார் மன்னனின் சாம்ராஜ்யம் வீழ்ந்தது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பல சுதந்திர நாடுகள் தோன்றின. ஆர்மேனியா, அசர்பைசான், ஜோர்ஜியா போன்ற நாடுகளில் தேசியவாதிகள் ஆட்சியைப் பிடித்தனர். அந்த புதிய தேசங்களின் சுதந்திரம் அதிக பட்சம் ஒரு வருடம் நீடித்திருக்கும். கம்யூனிச போல்ஷெவிக் படைகள் தேவைப்பட்டால் வன்முறை பிரயோகித்து தேசியவாத அரசுகளை கலைத்து விட்டனர். அதற்கு இரண்டு காரணங்கள். தேசியவாதம் எப்போதும் பாட்டாளிவர்க்க ஒற்றுமையைக் குலைக்கும் சக்தியாகவே இருக்கும். மற்றது, பிரிட்டன் போன்ற அந்நிய நாட்டுப் படைகள் இத்தகைய சுதந்திர தேசங்களில் நிலை கொள்ளும். (ரஷ்யாவில் ஏற்கனவே பன்னாட்டுப் படைகள் குவிக்கப்பட்டிருந்தன.) சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்னர், பால்ட்டிக் நாடுகளிலும், ஜோர்ஜியாவிலும் நேட்டோப் படைகள் வந்து விட்டமை குறிப்பிடத் தக்கது. சில நேரம் சித்தாந்தத்தை விட, பூகோள அரசியல் ஒரு நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கின்றது.

சோவியத் யூனியன் ஒரே நாடாக ஐ.நா. சபையில் அங்கம் வகித்த காலத்தில், அதன் ஒரு பகுதியான பெலாரஸ் தனியான அங்கத்துவம் கொண்டிருந்தது. அதற்கு காரணம், ரஷ்யாவுக்கு அடுத்ததாக ரஷ்யர்கள் பெரும்பான்மையாக பெலாரஸ் குடியரசில் வசித்தனர். அங்கே தனியாக பெலாரஸ் எனப்படும் மொழியைப் பேசும் மக்கள் வாழ்கின்றனர். இன்றைக்கும் அரச எதிர்ப்பாளர்கள் அந்த இனத்தை சேர்ந்தவர்கள் தான். பெலாரஸ் மொழி கிட்டத்தட்ட போலிஷ் மொழி போன்றிருக்கும். இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், போலந்தின் மேற்குப் பகுதிகள் பெலாரசுடன் சேர்க்கப்பட்டன. பிற்காலத்தில் சோவியத் யூனியன் போலந்தின் பகுதிகளை விழுங்கி விட்டது என்று மேற்கில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அன்றைய நிலையில், இரண்டு உலகப்போர்களுக்கு காரணமான ஜெர்மனியின் மேலாதிக்கத்தை குறைப்பதற்கு அத்தகைய நடவடிக்கைகள் அவசியமாகக் கருதப்பட்டன.

எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா போன்ற பால்ட்டிக் நாடுகளில் ஜெர்மன் நாஜிகளுக்கு ஆதரவான சக்திகள் பலமாக இருந்தன. அதே போன்று உக்ரைனில் (ரஷ்ய மொழிக் குடும்பத்தை சேர்ந்த) உக்ரைன் மொழி பேசும் மக்கள் நாஜி ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைத்தனர். இத்தகைய காரணங்களால், இரண்டாம் உலகப்போரின் பின்னர் குடிசன பரம்பலில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மேற்குறிப்பிட்ட குடியரசுகளில் ரஷ்யர்களின் குடியேற்றம் அதிகரிக்கப்பட்டது. அதே நேரம் நாஜிகளுடன் ஒத்துழைத்த உள்ளூர்வாசிகள் சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இன்று சுதந்திரமடைந்த பால்ட்டிக் நாடுகளில் ரஷ்யர்களுக்கு குடியுரிமை வேண்டுமானால் உள்ளூர் மொழியில் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டுமென நிர்ப்பந்திக்கப் படுகின்றது. இன்றைய சுதந்திர உக்ரைனில், "ரஷ்ய- உக்ரைனிய இன மோதல்" கட்சி அரசியலில் எதிரொலிக்கின்றது.

முன்னர் ஒரு காலத்தில் இருந்த சாம்ராஜ்யங்கள் அழிந்து குறுகிய பிரதேசமாக இன்னொரு சாம்ராஜ்யத்தின் பகுதியாகி விடுகின்றன. ஒரு காலத்தில் ஆர்மேனியா கிழக்கு துருக்கி வரை பரவியிருந்தது. ஆர்மேனியர்களின் புனிதப் பிரதேசமான அராரட் மலை உட்பட பல பகுதிகள் துருக்கியர் வசமாகி விட்டன. அங்கு வாழ்ந்த ஆர்மேனியர்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, துருக்கிய மக்களை குடியேற்றி விட்டார்கள். ரஷ்யாவினால் கைப்பற்றப்பட்ட ஆர்மேனியா, சோவியத் குடியரசாகியது. தற்போது சுதந்திர ஆர்மேனிய தேசமாகவுள்ளது. அதே போல இஸ்லாமியரான, துருக்கி குடும்ப மொழிகளைப் பேசும் மத்திய ஆசிய நாடுளைச் சேர்ந்த மக்கள், ஒரு காலத்தில் மாபெரும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் பிரஜைகளாக வாழ்ந்தவர்கள். புக்காரா, சமர்கன்ட் போன்ற நகரங்கள் இன்றைக்கும் இஸ்லாமிய நாகரீகத்திற்கு பெருமை சேர்க்கின்றன.

ஒரு காலத்தில் "துருக்கேஸ்தான்" என அறியப்பட்ட மத்திய ஆசியப் பிரதேசம் ஸ்டாலினால் மொழிவாரி குடியரசுகளாக பிரிக்கப்பட்டன. காசக்ஸ்தான், கிரிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியன ஒன்றுக்கொன்று தொடர்புடைய துருக்கி மொழிகளைப் பேசும் நாடுகள். இவற்றில் தாஜிகிஸ்தான் மட்டும் பார்சி(ஈரான்) மொழி பேசும் நாடாகும்.
சாமர்கன்ட், புக்காரா போன்ற வரலாற்றுப் புகழ் பெற்ற நகரங்களிலும் தாஜிக் மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் ஸ்டாலின் அவற்றை உஸ்பெகிஸ்தானுக்கு கொடுத்து விட்டார். இன்றைக்கும் அது இனப்பிரச்சினையை தூண்டும் சச்சரவுக்குட்பட்ட பிரதேசமாகும். மத்திய ஆசியாவில் பெரும்பகுதி பாலைவனப் பிரதேசத்தைக் கொண்டது. பெர்கனா பள்ளத்தாக்கு மட்டும் செழிப்பான மண்வளத்தைக் கொண்டது. இயற்கை வளம் நிறைந்த பெர்கனா பள்ளத்தாக்கு உஸ்பெகிஸ்தானுக்கு சொந்தமானாலும், கிரிகிஸ்தான், தாஜிகிஸ்தான் போன்ற நாடுகள் அங்கிருந்து கிடைக்கும் வளத்தில் தங்கியுள்ளன. இது ஒரு வகையில், தமிழ் நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையில் நடக்கும் காவிரி நீர்ப் பிரச்சினை போன்றது. பெர்கனா வளங்கள் யாருக்கு சொந்தம் என்ற சச்சரவுகள் அடிக்கடி இனக்கலவரங்களில் முடிகின்றன. இன்று வரை தீர்த்து வைக்கப்படாத பிரச்சினை அது.

இரண்டு குடியரசுகளுக்கு இடையில் உருவான இனப்பகை, சோவியத் யூனியன் உடைவுக்கு வழிவகுத்தது மட்டுமல்லாது, பல உயிர்களைக் காவு கொண்ட போரில் சென்று முடிந்தது. ஐரோப்பாவின் முதலாவது கிறிஸ்தவ நாடான ஆர்மேனியாவும், இஸ்லாமிய-துருக்கி சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்த அசர்பைஜானும் ஜென்மப் பகைவர்கள்.
ஸ்டாலின் அவற்றை குடியரசுகளாக்கிய போது, ஒன்றில் மற்றொன்று தங்கியிருக்க வைத்தார். ஆர்மேனியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாகார்னோ-கரபாக் என்ற பிரதேசம் அசர்பைஜான் வசம் சென்றது. அதே போல, அசர்பைஜானியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாக்ஷிவன் பிரதேசம் ஆர்மேனியா வசம் சென்றது. பரம்பரைப் பகைவர்களான இரண்டு இனங்களும், ஒருவர் தேசத்தில் மற்றவர் சிறுபான்மை இனமாக வாழ்ந்தனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னர், "நாகார்னோ-கர்பக் ஆர்மேனியர்கள்" தனிநாடு கோரினார்கள். அசர்பைஜான் படைகள் அந்த எழுச்சியை அடக்கியது. சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த ஆர்மேனியப் படைகள், நாகர்னோ-கரபாக் பிரதேசத்தை ஆக்கிரமித்து ஆர்மேனியாவுடன் இணைத்தன.

இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை சுமுகமாக தீர்த்துக் கொண்டால், நாடு சுபீட்சமடையும் என்பதற்கு காசக்ஸ்தான் சிறந்த எடுத்துக்காட்டு. சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த குடியரசு என்ற போதிலும் உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்று. வளைகுடா நாடுகளில் காணப்படுவதை விட அதிக எண்ணெய் வளம் கொண்டது. துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த காசாக் மொழி பேசும் மக்கள் சொந்த நாட்டிலேயே சிறுபான்மையினர்! மொத்த மக்கட்தொகையில் ஐம்பது வீதம் ரஷ்யர்கள். பத்து வீதம் உக்ரைன், செச்சென், ஜெர்மன் போன்ற பிற இனங்களைச் சேர்ந்தவர்கள். காசாக்ஸ்தான் சுதந்திரமடைந்த பின்னர் நிறைய ரஷ்யர்களும், ஜெர்மனியர்களும் வெளியேறி விட்டனர். இதனால் காசாக் மக்கள் பெரும்பான்மையாகும் வாய்ப்புக் கிடைத்தது. இருப்பினும் அதிகளவு தொழிற்தேர்ச்சி பெற்றவர்களும், தொழில்நுட்ப அறிஞர்களும் ரஷ்யர்கள். இதனால் அவர்களின் சேவை நாட்டுக்கு தேவை என்பதை காசாக்ஸ்தான் ஆட்சியாளர்கள் உணர்ந்துள்ளனர். சரியான திட்டமிடல் காரணமாக இன்று காசக்ஸ்தான் பணக்கார நாடாக மாறி விட்டது. முன்னாள் சோவியத் குடியரசுகளில் இனப்பிரச்சினை அற்ற ஒரேயொரு நாடு அது மட்டும் தான்.

சோவியத் காலத்தில் ஒவ்வொரு குடியரசும் தனக்கென தனியான மொழியைக் கொண்டிருந்த போதிலும், ஆளும் வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தியவர்கள் ரஷ்ய மொழியில் பாண்டித்தியம் பெற்றிருந்தனர். ரஷ்ய மொழிப் பாடசாலைகளே சிறந்த கல்வி நிலையங்களாக இருந்ததமை ஒரு காரணம். ரஷ்ய மொழியில் பல துறை சார்ந்த வளர்ச்சி காணப்பட்டமை இன்னொரு காரணம். பலநூறு மொழிகளைப் பேசும் மக்கள் அனைவரும், பாட்டாளி வர்க்க கொள்கையின் கீழே கொண்டு வரப்பட்டார்கள். கூலித் தொழிலாளிகளின் பிள்ளைகள் கூட உயர்கல்வி கற்று முன்னுக்கு வந்தனர். எல்லோரும் சமமாக நடத்தப் பட்டதால், இன, மொழி ரீதியான முரண்பாடுகள் மிக அரிதாக காணப்பட்டன. முன்னாள் சோவியத் யூனியனில் சோஷலிசத்தில் பால் வெறுப்புக் கொண்டவர்கள் வாழ்ந்தனர். அப்படியானவர்கள் எல்லா இனத்தவர் மத்தியிலும் காணப்பட்டனர். புரட்சியின் ஆரம்ப காலங்களில் மதவாத சக்திகள் அடக்கப்பட்டன. பின்னர் அரச சார்பு மதகுருக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் மதத்தின் பெயரால் இனப்பிரச்சினை தலைதூக்க முடியவில்லை.

இன்று முதலாளித்துவப் பொருளாதாரத்தில், அரிதாகிப் போன இயற்கை வளங்களைப் பங்கிடுவதில் ஏற்படும் போட்டி இனப்பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது. வலியது பிழைக்கும் என்பது முதலாளித்துவ விதிகளில் ஒன்று. ஆட்சியாளர்கள் பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவைப் பெற விரும்புகின்றனர். அவர்களது பதவியை தக்க வைக்க அது உதவுகின்றது. முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பின்னர் தேசியவாதிகளாக மாறினார்கள். மத அனுஷ்டானங்களில் கலந்து கொண்டு தமது மத அடையாளங்களை உலகறியச் செய்தனர். இவர்கள் மதத்தை தழுவியமை, சுய விருப்புச் சார்ந்தன்று. கிறிஸ்தவ நாட்டை சேர்ந்த ஒரு தலைவர் இஸ்லாமிய மதத்தையோ, அல்லது முஸ்லிம் நாட்டைச் சேர்ந்த ஒரு தலைவர் கிறிஸ்தவ மதத்தையோ தழுவவில்லை. பெரும்பான்மை சமூகத்தின் இன,மத அடையாளத்தை பின்பற்றுவதே ஆள்பவருக்கு  நன்மை உண்டாக்கும்.

(முற்றும்)

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:

1.ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?
2.பேரினவாதத்திற்கு ஆதரவான மேலைத்தேய சுயநிர்ணய உரிமை
3.காலனிய எச்சங்களான தேசிய இனப்பிரச்சினைகள்
4.சோவியத் தேசிய இனங்களின் சத்திய சோதனை

Wednesday, January 12, 2011

சோவியத் தேசிய இனங்களின் சத்திய சோதனை


[ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?]
(பகுதி : 4)


எந்தவொரு மேலாதிக்க சக்தியும், தேசிய இனங்களை மோத வைக்கவோ அல்லது ஒற்றுமையாக வாழ வைக்கவோ தான் விரும்பும். சதுரங்கம் விளையாடுவது போல, "ஆண்டவர்கள்" எங்கோ இருந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். சிங்களவர்களை வெறுக்கும் தமிழர்கள். தமிழர்களை வெறுக்கும் சிங்களவர்கள். பாகிஸ்தானியர்களை வெறுக்கும் இந்தியர்கள். இந்தியர்களை வெறுக்கும் பாகிஸ்தானிகள். இவர்கள், தாம் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வல்லரசால் ஆட்டுவிக்கப்பட்ட பொம்மைகள், என்று உணர்வதில்லை. தங்களது கேவலமான நிலைமையை  உணராமல், மற்றவர்களை பரிகசித்துக் கொண்டிருப்பார்கள்.

சோவியத் யூனியன் குறித்து மத்திய தர வர்க்க அறிவுஜீவிகள் முன்வைக்கும் விமர்சனங்களில் ஒன்று, ரஷ்ய மொழியின் மேலாதிக்கம் பற்றியது. இதே அறிவுஜீவிகள் தமது தாய்மொழியை விட ஆங்கிலத்தை பேசுவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அதில் என்ன தவறு? என்றும் கேட்பார்கள். 19 ம் நூற்றாண்டில் தான் ஆங்கிலேயர்கள் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளை காலனிப் படுத்தினார்கள். அங்கே ஆங்கில மொழியின் மேலாதிக்கத்தை திணித்தார்கள். சாம்ராஜ்யத்தை நிர்வகிக்க அவர்களுக்கு ஒரு பொது மொழி தேவைப்பட்டது. 19 ம் நூற்றாண்டில் ரஷ்யர்களும் அதைத் தான் செய்தார்கள். இங்கிலாந்துக்கு போட்டியாக சார் மன்னனின் ரஷ்யா சாம்ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டிருந்தது. கொகேசிய ஐரோப்பிய பகுதிகள், சைபீரியா, மத்திய ஆசியப் பகுதிகள் எல்லாம் அப்போது ஆக்கிரமிக்கப்பட்டு காலனிப் படுத்தப்பட்டது. அங்கெல்லாம் ரஷ்ய மொழியே உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது.

1917 ல் போல்ஷெவிக் கம்யூனிஸ்ட்கள் ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றனர். கம்யூனிஸ்ட் கட்சியிலேயே பலர், சார் மன்னனின் ரஷ்ய மொழிக் கொள்கையை பின்பற்ற விரும்பினார்கள். "ரஷ்ய மொழியை ஒரே மொழிக் கொள்கையாக தொடர்வது, ரஷ்ய பேரினவாதத்தின் தொடர்ச்சியாக கருதப்படும்," என்று லெனின் கண்டித்திருந்தார். கம்யூனிஸ்ட்கள் புதிதாக தேசிய இனங்கள் பற்றிய கொள்கை வகுக்க வேண்டுமென்று, ஸ்டாலினை தேசிய இனங்களின் கமிசாராக நியமித்தார். ரஷ்ய மொழியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஜோர்ஜிய மொழியை தாய்மொழியாக கொண்ட ஸ்டாலின் அதற்கு ஏற்ற ஒருவராக கருதப்பட்டார். புதிய சோவியத் குடியரசுகளில் அந்தந்த மக்களின் மொழிகளை வளர்ப்பதற்கும், கல்வி கற்கவும் உரிமைகள் இருந்தன. அதே நேரம் ரஷ்ய மொழி கட்டாயமான இரண்டாவது மொழியாக பயின்றார்கள். நமது நாடுகளில் ஆங்கில வழிக் கல்வி போன்று, அங்கே தனியாக ரஷ்ய வழிக் கல்வி வழங்கும் பாடசாலைகளும் இருந்தன. சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஸ்டாலின் அதிபராக பதவியேற்ற பின்னர் கூட, ரஷ்ய மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. ரஷ்ய மொழி மேலாதிக்கத்தை எதிர்க்கும் நமது அறிவுஜீவிகள், அதற்கு பதிலாக வேறெந்த மொழியை, பொது மொழியாக பயன்படுத்த வேண்டும் என்று கூறினால் நல்லது. யாருமே பேசாத ஆங்கிலத்தையோ, பிரெஞ்சையோ எவ்வாறு பொது மொழியாக கொண்டு வர முடியும்?

இன்றைக்கு பல முன்னாள் சோவியத் பிரஜைகள் ஆங்கிலம் பேசுகின்றனர். ஆனால் ஆட்சியில் இருப்பவர்களின் அரசியல் சார்பு, பொருளாதார ஒத்துழைப்பு, மேற்குலகை நோக்கி இருப்பதே அதற்கு காரணம். சார் மன்னன் காலத்தில் மட்டுமல்ல, சோவியத் புரட்சியின் பின்னர் கூட பொருளாதார கட்டமைப்பு மொஸ்கோவை மையமாக கொண்டிருந்தது. ஆனால் சுற்றவரவிருந்த நாடுகளிடம் இருந்து துண்டிக்கப் பட்டிருந்தது. எல்லைக்கோடு பிரித்திருந்தாலும், அயல் நாடுகளில் சகோதர இனங்களைக் கொண்டிருந்த தேசிய இனங்கள் முதலில் பாதிக்கப்பட்டன. ஆர்மேனியாவின் அரைவாசிப் பகுதி ஏற்கனவே துருக்கியினால் விழுங்கப்பட்டிருந்தது. அங்கே தற்போது ஆர்மேனியர்கள் வாழ்ந்த சுவடே இல்லாமல், துருக்கிமயமாகி விட்டது. ரஷ்யாவின் பகுதியாக இருந்த ஆர்மேனியாவுக்கு போல்ஷேவிக்குகளால் குடியரசு அந்தஸ்து வழங்கப்பட்டது. சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர் நெதர்லாந்துக்கு பல ஆர்மேனிய அகதிகள் வந்திருந்தனர். அவர்கள் இன்றைக்கும் தமது மொழியை சரளமாக எழுதப், பேச தெரிந்து வைத்திருந்தனர். "சோவியத் சர்வாதிகாரம் பல மொழிகளை அழித்து விட்டதகாவும், சிறுபான்மை மொழியினத்தை சேர்ந்தவர்களுக்கு ரஷ்ய மொழி மட்டுமே தெரியும் என்றும்," மேற்குலகினால் பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேற்குலகைச் சேர்ந்த சிறுபான்மையினங்களைப் பொறுத்த வரை, அது உண்மை தான். நான் சந்தித்த ஐரிஷ்காரர்களுக்கு சிறிதளவேனும் ஐரிஷ் மொழி பேசத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் முன்னாள் சோவியத் குடியரசுகளான ஜோர்ஜியா, ஆர்மேனியா, அசர்பைசான், உக்ரைன், பெலாரஸ், மொல்டோவியா நாடுகளைச் சேர்ந்த மக்கள் பலரை சந்தித்திருக்கிறேன். அவர்கள் எல்லோருக்கும் தமது தாய்மொழி தெரிந்திருந்தது. அதே நேரம் ரஷ்ய மொழியும் சரளமாக பேசக் கூடிய அளவுக்கு இரு மொழிப் புலமை பெற்றிருந்தனர். எழுபதாண்டு கால சோவியத் சர்வாதிகாரம் இந்த மொழிகளை அழித்திருந்தால், எவ்வாறு இளைய தலைமுறை அந்த மொழிகளை கற்றுக் கொண்டது? நமது மக்களிலேயே தமிழ் மொழியை பேச விரும்பாமல், ஆங்கிலம் பேசுவதை பெருமையாகக் கருதும் பலர் உண்டு. அத்தகையவர்கள் சோவியத் காலத்திலும் இருந்திருக்கின்றனர். அந்தப் பிராந்தியத்தில் ரஷ்ய மொழியே அதிக வளர்ச்சியடைந்திருந்தது. உயர்கல்வி, உயர்பதவியை நாடுவோர் ரஷ்ய மொழிப் புலமை பெற விரும்பினார்கள். துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகளுக்கு எழுத்து வடிவம் இருக்கவில்லை. ரஷ்ய சிரிலிக் எழுத்துகளை கொண்டு எழுதும் முறை வந்த பின்னர் தான், அந்த மொழிகளில் நவீன கல்வி பெரும் வாய்ப்புக் கிட்டியது. அது வரை காலமும் இஸ்லாமிய மதகுருக்களால் நடத்தப் பட்ட மதராசாக்களில் திருக்குரான் மட்டுமே கற்பிக்கப்பட்டது. சுருக்கமாக, இன்றைய ஆப்கானிஸ்தான் போலத்தான் அன்றைய மத்திய ஆசிய சோவியத் குடியரசுகள் காணப்பட்டன.

1917 கம்யூனிஸ்ட் புரட்சியை பல வகையான சக்திகள் எதிர்த்துப் போரிட்டன. ஆர்மேனியா, ஜோர்ஜியாவில் தேசியவாத சக்திகள் பலமாக இருந்தன. அசர்பைசான், மற்றும் துருக்கெஸ்தான் (மத்திய ஆசிய குடியரசுகளின் பொதுவான பெயர்) ஆகிய நாடுகளில் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் "கடவுள் மறுப்பாளர்களுக்கு எதிரான ஜிகாத்" நடத்திக் கொண்டிருந்தார்கள். செம்படை முதலில் இவர்களை போரில் தோற்கடிக்க வேண்டியிருந்தது. ஸ்டாலின் தனது தாய் நாட்டின் (ஜோர்ஜியா) தேசியவாதிகளுக்கு கூட கருணை காட்டவில்லை. இரண்டாம் உலகப் போர் தொடங்கிய பொழுது, உக்ரைன் மற்றும் பால்ட்டிக் (எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா) நாடுகளை சேர்ந்த தேசியவாதிகள் நாஜி ஆக்கிரமிப்பளர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். ஹிட்லரும் அவர்களின் தனி நாடுகளை அங்கீகரித்து குஷிப் படுத்தியிருந்தார். ஹிட்லரின் வீழ்ச்சியுடன் பறி போன சுதந்திரத்தை, ஜனநாயக மேற்கு நாடுகள் வாங்கிக் கொடுத்தன. இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னரும், தேசிய இனங்களை மறு வார்ப்புச் செய்ய வேண்டியேற்பட்டது. எதிரிகளான ஜெர்மனியர்களுடன் ஒத்துழைத்த இனங்களின் பெரும்பான்மைப் பலத்தை குறைக்கும் முகமாக, ஆயிரம் மைல்களுக்கப்பால் கொண்டு சென்று மீள்குடியேற்றம் செய்யப்பட்டன.

ஆனால் அதற்கு முன்னரே, எல்லா சோவியத் குடியரசுகளிலும் குறிப்பிட்ட ஒரு இனத்தின் பெரும்பான்மைப் பலத்தை குறைப்பதற்காக, பிற சிறுபான்மை இனங்களின் பிரதேசங்கள் சேர்க்கப்பட்டன. (இது பற்றி விரிவாக அடுத்த பகுதியில் பார்க்கலாம்.) வருங்காலத்தில் இந்த குடியரசுகள் தனி நாடாக பிரிந்து சென்றாலும், இன முரண்பாடுகள் அவை தாம் விரும்பிய திசையில் செல்ல விடாது தடுக்கும். தேசிய இனங்களின் தலைவிதியை மாற்றியமைத்த ஸ்டாலினின் தொலைநோக்கு இன்று நிதர்சனமாகி வருகின்றது. லண்டனில் இருந்து கொண்டு, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் தேசிய இனங்களின் தலைவிதியை எழுதியவர்களுக்கும் அத்தகைய தொலைநோக்கு இருந்தது. பங்களாதேஷ், காஷ்மீர், ஈழப் பிரச்சினைகளை ஆங்கிலேயர்கள் முன் கூட்டியே அனுமானித்திருந்திருப்பார்கள். தமிழர்களும், சிங்களவர்களும் இன்னும் நூறு வருடங்களுக்கு சண்டை பிடித்தால் பார்த்து இரசித்துக் கொண்டிருப்பார்களே தவிர, தமிழீழத்தை பிரித்துக் கொடுக்க முன்வர மாட்டார்கள்.

(தொடரும்)


தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:

1.ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?
2.பேரினவாதத்திற்கு ஆதரவான மேலைத்தேய சுயநிர்ணய உரிமை
3.காலனிய எச்சங்களான தேசிய இனப்பிரச்சினைகள்

Saturday, January 08, 2011

காலனிய எச்சங்களான தேசிய இனப்பிரச்சினைகள்


[ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?] (பகுதி : 3)

2003 ம் ஆண்டளவில் என்று நினைக்கிறேன். அமெரிக்கா, ஈராக் போருக்கு தயார் படுத்திக் கொண்டிருந்த காலகட்டம். பெல்ஜியத்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடும் நாடுகளையும் அமைப்புகளையும் ஆதரிக்கும் கூட்டம் ஒன்று நடைபெற்றது. பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து வந்த, புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இன்று பனிப்போர் கிடையாது. அதனால் மார்க்சிய சித்தாந்தப் படி நடக்கும் தேசத்துடன், அல்லது அமைப்புடன் மட்டும் நட்பை பேணுவோம் என்று கூற முடியாது. ஆகையினால் காலத்திற்கேற்ப தந்திரோபாயங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும். பெல்ஜியத்தில் நடந்த கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள் நடந்தன. தமது கட்சியின் தலைமை சதாமின் ஈராக்கை ஆதரிப்பதையிட்டு கட்சி உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதைப் போன்றே, மத அடிப்படைவாத ஹமாஸ் பக்கம் நிற்பதையும் பலர் எதிர்த்தார்கள். இதை எல்லாம் ஏன் இங்கே கூறுகின்றேன் என்றால், "கம்யூனிஸ்ட்கள் கண்ணை மூடிக் கொண்டு, எந்த வித விமர்சனமுமின்றி பிற்போக்கு சக்திகளையும் தேசிய விடுதலையின் பேரில் ஆதரிப்பார்கள்," என்ற தவறான கருத்தை பலர் கொண்டிருக்கின்றனர். "கம்யூனிஸ்டுகள் உலகில் உள்ள அனைத்து தேசிய விடுதலைப் போராட்டங்களையும் ஆதரிக்க வேண்டும், அது அவர்கள் சித்தாந்தம்." என்றெல்லாம் பலர் தவறாக வியாக்கியானம் செய்கின்றனர். கேள்விச்செவியன் ஊரைக் கெடுப்பான் என்ற பழமொழிக்கேற்ப, ஒன்றை பற்றி அரைகுறையாக தெரிந்தவர்கள் மற்றவர்களின் மனதையும் கெடுக்கின்றனர்.

பெல்ஜியத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அறுபது வயதைக் கடந்த பேராளர் ஒருவர் குறிப்பிட்டார். "முன்னொரு காலத்தில் சைப்ரஸ் விடுதலைக்கு போராடிய கிரேக்க எயோகஸ் அமைப்பை ஆதரித்தோம். அது ஒரு பாஸிச அமைப்பு என்பதை பின்னர் தெரிந்து கொண்டோம். இருப்பினும் சைப்பிரசில் பிரிட்டிஷ் காலனியாத்திக்கத்திற்கு எதிரான போராட்டத்தை மட்டுமே ஏற்றுக் கொண்டு ஆதரித்தோம். பாலஸ்தீனர்களின் உரிமைகளுக்காக பேசினால், ஹமாஸ் ஆதரவு என்று பிரச்சாரம் செய்கின்றனர். மார்க்சிய PLFP குறைந்தளவு மக்களின் ஆதரவைக் கொண்டது. அதே நேரம் மத அடிப்படைவாத ஹமாஸ் பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெற்றுள்ளது. அந்த உண்மையை மறுக்க முடியாது." இந்திய இடதுசாரிகளும் இதே நிபந்தனையின் கீழ் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக கூறுகின்றனர். "பெரும்பான்மை தமிழர்கள் அவர்கள் பின்னால் நிற்கின்றனர்...." பெல்ஜியம் கூட்டத்தில் பிரிட்டனைச் சேர்ந்த மாணவர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு இலங்கைப் பிரச்சினை குறித்து ஆழமான ஈடுபாடு இருந்தது. புலிகள் மார்க்சிச- லெனினிச சித்தாந்த அடிப்படையில் இயங்கும் அமைப்பு என்று, தமக்கு சில ஈழத்தமிழர் கூறியதாக தெரிவித்தனர்.

"மார்க்சியவாதிகள் அனைத்து வகை தேசிய விடுதலைப் போராட்டங்களையும் நிபந்தனையின்றி ஆதரிக்க வேண்டும்." என்று எங்கே எழுதப் பட்டுள்ளது? அநேகமாக இவ்வாறு (விதண்டா) வாதம் செய்பவர்கள் வலதுசாரிகள் என்பது குறிப்பிடத் தக்கது. தாலிபான், ஹமாஸ், ஆகிய மத அடிப்படைவாத அமைப்புகளும் தேசிய விடுதலைப் போராட்டம் நடத்துகின்றன. மிக மிகக் குறைந்த அளவு வலதுசாரி அறிவுஜீவிகளே, அவற்றை தேசிய விடுதலை இயக்கங்களாக ஆதரிக்க முன்வருவார்கள் என்பது நிதர்சனம். ஐரோப்பாவில் மார்க்ஸியம் தோன்றிய காலத்தில் இருந்தே தேசிய இனப் பிரச்சினை சம்பந்தமாக கவனத்தில் எடுக்கப் பட்டு வந்துள்ளது. மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் அயர்லாந்து விடுதலையை ஆதரித்தனர். அயர்லாந்து சுதந்திரமடைந்தால், அது ஒரு முதலாளித்துவ நாடாகவே அமையும் என்பதை தெரிந்து தான் ஆதரித்தார்கள். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் இருந்து ஒரு நாடு விடுதலையடைவது முற்போக்கானது என்பதே அவர்கள் கூறிய நியாயம். அதே நேரம் பகுனின், புருடோ போன்ற அனார்கிசவாதிகள் எந்தவொரு தேசியமும் பிற்போக்கானது என்று வாதாடினார்கள். இன்றைக்கும் அனார்கிஸ்டுகள் தேசிய எல்லைகளை, தேசிய அரசுகளை, தேசிய இனங்களை ஏற்றுக் கொள்வதில்லை. இவை யாவும் பாட்டாளி வர்க்கத்தை பிரிக்கின்றன, என்று அவர்கள் கூறும் காரணத்தை உண்மையை மறுப்பதற்கில்லை.

மார்க்ஸ், எங்கெல்ஸ், பகுனின், புருடோ ஆகியோர், ஐரோப்பிய சோஷலிச முதலாம் அகிலத்தில் நன்கு அறியப்பட்டவர்கள். அவர்கள் காலத்தில் தான் ஏறக்குறைய இன்றுள்ள ஐரோப்பிய தேசிய அரசுகள் தோன்றியிருந்தன. (அது குறித்து ஏற்கனவே முதல் இரண்டு அத்தியாயங்களிலும் எழுதியிருக்கிறேன்.) அதனால் அவர்கள் சிந்தனை முழுவதும், தேசிய அரசுகளை நிராகரித்து, உழைக்கும் மக்களின் நலன் பேணும் சோஷலிச அரசு அமைப்பதிலேயே குவிந்திருந்தது. இருப்பினும் அவர்களிடம் இருந்து பிரிந்த சமூக-ஜனநாயகவாதிகள் தேசிய அரசில் பங்கெடுப்பதாக அறிவித்தன. அவர்கள் தமக்கென இரண்டாவது அகிலம் ஒன்றை உருவாக்கினர். முதலாவது அகிலம், பாட்டாளி மக்களின் அதிகாரத்தைக் கொண்ட தேசியத்தை மட்டும் ஏற்றுக் கொண்டது. இரண்டாவது அகிலம் அதற்கு மாறாக அனைத்து பிரஜைகளினதும் தேசத்தை ஏற்றுக் கொண்டது. "குறிப்பிட்ட பிரதேசத்தில் மட்டும் அது ஒரு தேசிய இனமாகும் என்ற வரையறை அவசியமில்லை." (யூத தேசியத்திற்கு பொருந்துவது) போன்ற கோட்பாடுகள் முன்மொழியப்பட்டன.
ஸ்டாலினின் "மார்க்சியமும் தேசிய இனப்பிரச்சினையும்" என்ற நூலிலும், சமூக ஜனநாயக அறிஞர்களின் தேசியம் குறித்து விமர்சிக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, "ஒவ்வொரு தேசிய இனத்தினதும் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சமூக-ஜனநாயகவாதிகள், அந்த தேசிய இனம் தனியாக பிரிந்து போகும் பொழுது அடக்க முனைவார்கள்...."

ஸ்டாலினின் தேசிய இனங்கள் குறித்த நூலில் இருந்து தான் பலர், "மார்க்சிய தேசியவாதத்தை" ஆராய்கின்றனர். ஸ்டாலின் வியனாவில் (அன்று ஆஸ்திரிய-ஹங்கேரிய ராஜ்ய தலைநகரம்) தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் தான் புதிய தேசிய அரசுகள் உருவாகியிருந்தன. அதனால் ஸ்டாலினுக்கு தேசிய இனம், தேசிய அரசு குறித்த அனுபவ அறிவு இருக்கும் என்று லெனின் நம்பினார். புரட்சிக்குப் பின்னர் அமையப்போகும் சோவியத் குடியரசில் தேசிய இனங்களை வகைப்படுத்தும் பொறுப்பு அவ்வாறு தான் ஸ்டாலின் கைக்கு வந்தது. புரட்சிக்கு முன்னர் ரஷ்ய சாம்ராஜ்யத்தில் 150 க்கும் குறையாத மொழிகளைப் பேசும் இனங்கள் வாழ்ந்தன. அந்த நாட்டின் எல்லைக்குள் பேசப்பட்ட 150 மொழிகளில் ஒன்று தான் ரஷ்ய மொழி. மேற்கில் இருக்கும் மின்ஸ்க் நகரில் இருந்து, கிழக்கில் உள்ள விலாடிவொஸ்டொக் வரை பிரயாணம் செய்தால், அரைவாசி உலகைச் சுற்றிப் பார்த்த உணர்வு தோன்றும்.

முதலாம் உலகப்போர் வரையில், சார் ரஷ்ய சாம்ராஜ்யமும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யமும் ஒன்றுடன் ஒன்று வல்லரசுப் போட்டியில் ஈடுபட்டிருந்தன. ஏட்டிக்குப் போட்டியாக நாடுகளை பிடித்து காலனியாக்கிக் கொண்டிருந்தன. ஒரு காலத்தில் ஆப்கானிஸ்தான் இரண்டு சாம்ராஜ்யங்களினதும் எல்லைக்கோடாக இருந்தது. ரஷ்யாவும், பிரிட்டனும் இரண்டு உலகப்போரில் பெருமளவு இழப்புகளை சந்தித்திருந்தன. இருப்பினும் ரஷ்ய சாம்ராஜத்தின் எல்லைக்குட்பட்ட நாடுகளை புதிய ஆட்சியாளர்களால் (போல்ஷெவிக் கம்யூனிஸ்டுகள்) தொடர்ந்து பராமரிக்க முடிந்தது. அந்தளவு வல்லமை பிரிட்டிஷாருக்கு இருக்கவில்லை. அதற்கு காரணம், இயற்கையான புவியியல் காரணிகள்.

பிரிட்டன் ஆயிரம் மைல்கள் கடல் கடந்து சென்று, காலனிகளை பராமரிக்க வேண்டியிருந்தது. அது நடைமுறைச் சாத்தியற்றது மட்டுமன்று, சாம்ராஜ்யத்தை கட்டியாள அதிக செலவு பிடித்தது. இதனால் காலனிகளுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டு, நவ காலனிய கட்டுப்பாட்டை வைத்திருப்பது இலகுவாகப் பட்டது. இந்தியாவும், இலங்கையும், இங்கிலாந்து எல்லையோரம் அமைந்திருந்தால், இன்றைக்கும் பிரிட்டன் என்ற ஒரே நாட்டின் மாநிலங்களாக இருந்திருக்கும். ஆகவே இத்தகைய வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்டு தான், இரண்டு சம்ராஜ்யங்களினதும் தேசிய இனங்களின் பிரச்சினையை புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு தனிதனி தேசங்களான முன்னாள் சோவியத் குடியரசுகளில் ரஷ்யாவின் தலையீடு அதிகரித்து வருகின்றதே தவிர குறையவில்லை. பிரிட்டனும் அதைத்தான் தனது முன்னாள் காலனிகளில் செய்து கொண்டிருக்கின்றது. இவர்கள் யாரும் நேரடியாக தங்கள் நோக்கத்தை தெரிவிப்பதில்லை. பிரான்ஸ் மட்டும் உள்ளதை உள்ளபடியே கூறி வருகின்றது. முன்னாள் ஆப்பிரிக்க காலனிகளில் தலையீடு செய்வது, தனது நலன் சார்ந்த விடயம் என்பதை, பிரான்ஸ் ஒரு நாளும் மறுக்கவில்லை.

(தொடரும்)


Friday, January 07, 2011

பேரினவாதத்திற்கு ஆதரவான மேலைத்தேய சுயநிர்ணய உரிமை


[ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?] 
(பகுதி : 2)

தேசியவாதம் எப்போதும் வலதுசாரிக் கருத்தியலாகவே பார்க்கப்பட்டது. "நாங்கள்", "அவர்கள்" என்று இனங்களை மோதல் நிலையில் வைத்திருப்பது, வலதுசாரித் தேசியவாதம் என்று பிரிக்கப்பட்டது. இதைவிட சமத்துவம், சுதந்திரம் என்பனவற்றிற்கு போராடுவது இடதுசாரித் தேசியம் என்று வகைப் படுத்தப்பட்டது. தேசியவாதத்தின் வளர்ச்சியை ஐந்து கட்டங்களாக பிரித்து புரிந்து கொள்ளலாம்.

முதலாவது கட்டம்: தேசியவாதத்தின் பிறப்பு. பிரெஞ்சுப் புரட்சியின் போது தான் முதன்முதலாக "தேசியம்" என்ற சொல் பாவிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அது முற்போக்கான பாத்திரத்தை வகித்தது. நிலவுடமையாளர்களுக்கு எதிராக சாதாரண மக்களை, தேசியம் என்ற பெயரில் முன்னிறுத்தியது. அன்று தேசியம் என்பது சாமானிய உழைக்கும் மக்களைக் குறிக்கும். நிலப்பிரபுக்கள் தேசியத்துக்குள் அடங்கவில்லை. புரட்சி நடந்த காலத்தில் பல மொழி பேசும் மக்களும் பிரஜைகள் என்று சமத்துவமாக பார்க்கப்பட்டனர்.

இரண்டாவது கட்டம்: 1870 ம் ஆண்டுக்குப் பின்னரும், முதலாம் உலகப்போர் வரையிலும். தேசியம் என்றால் இனம் என்று புரிந்து கொள்ளப்படுகின்றது. பல தேசிய அரசுகள் தமக்கென ஒரு மொழியை அரச கரும மொழியாக்கின. ஆதிக்கம் செலுத்திய மொழியைப் பேசும் மக்கள் தனி இனமாக கருதப்பட்டனர். சிறுபான்மை மொழிகள் அடக்கப்பட்டன. இந்தப் பிரிவினை ஏற்படுத்திய முறுகல் நிலை, முதலாம் உலக யுத்தத்தில் போய் முடிந்தது.

மூன்றாவது கட்டம்: முதலாம் உலகப்போர் முடிவில், மேற்குலகில் வில்சன் கோட்பாடு "தேசிய சுயநிர்ணயம்" என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது. ஐ.நா. சபையின் முன்னோடியான, தேசங்களின் கூட்டமைப்பிலும் அது அங்கீகாரம் பெற்றது. அதற்கு வேறொரு தூண்டுதலும் இருந்தது. ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சி வெற்றி பெற்றதும், 1918 ல் கம்யூனிஸ்ட்கள் சுயநிர்ணைய உரிமை அடிப்படையிலான சோவியத் குடியரசுகளை அறிவித்தனர். காலனிய நாடுகள் விடுதலையடைய உரிமையுடையவை என்று அறிவித்தனர். போல்ஷெவிக் பிரகடனத்தை சமன் செய்வது போல வில்சன் கோட்பாடு அமைந்திருந்தது. முதலாம் போரின் முடிவில் ஐரோப்பாவின் வரைபடம் மாறியிருந்தது. புதிதாக பல நாடுகள் சுதந்திரமடைந்தன. அவற்றின் சுயநிர்ணய உரிமையை வில்சன் கோட்பாடு அங்கீகரித்தது. ஆனால் அதற்காக ஒவ்வொரு இனமும் தனக்கான தேசிய அரசை பெற்றுக் கொண்டன என்று அர்த்தமில்லை. உதாரணத்திற்கு யூகோஸ்லேவியா என்ற சுயநிர்ணய உரிமை கொண்ட புதிய நாட்டில், செர்பியர்கள் பிற தேசிய இனங்கள் மீது ஆதிக்கம் செலுத்தினர். ஐரோப்பாவில் நிலவிய குழப்பகரமான சூழ்நிலை இரண்டாம் உலகப்போருக்கு வழி வகுத்தது.

நான்காவது கட்டம்: இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், உலகில் இடதுசாரிகளின் பலம் அதிகரித்தது. காலனியாதிக்கத்தை இல்லாதொழிப்பதற்கு தேசியவாதத்தின் அவசியத்தை இடதுசாரிகளும் உணர்ந்தனர். லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் பல காலனிகள் விடுதலையடைந்தன. முதலாம் உலகப்போர் காலத்தில், கனடா, நியூசிலாந்து போன்ற பிரிட்டிஷ் காலனிகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. "வெஸ்ட்மின்ஸ்டர் யாப்பு" அடிப்படையிலேயே அந்த சுதந்திரம் வழங்கப்பட்டது. இருப்பினும் ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்களை சேர்ந்த பிரிட்டிஷ் காலனிகள் இரண்டாம் உலகப்போர் வரையில் காத்திருக்க வேண்டியேற்பட்டது. சுயநிர்ணய உரிமையை முன்மொழிந்த வில்சன் கோட்பாட்டின் நீட்சியாகவே வெஸ்ட்மின்ஸ்டர் யாப்பு கருதப்படுகின்றது. பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலனிகள் அந்த யாப்பை அடிப்படையாக கொண்டிருந்தன. அண்மையில் சிம்பாப்வே வெஸ்ட்மின்ஸ்டர் யாப்புக்கு பதிலாக, புதிய யாப்பு எழுதக் கிளம்பிய பொழுது சர்வதேச நெருக்கடியை எதிர்கொண்டது. (1972 ல் குடியரசான இலங்கை அதே போன்ற நெருக்கடிக்கு உள்ளானது.) இன்று பல தமிழ் தேசியவாத அறிவுஜீவிகள் வில்சன் கோட்பாடு, வெஸ்ட்மின்ஸ்டர் யாப்பு போன்றன தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது போல பேசி வருகின்றனர். உண்மையில் வில்சன் கோட்பாடு ஐரோப்பாவை மட்டும் மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது. வெஸ்ட்மின்ஸ்டர் யாப்பு ஆங்கிலேயர் குடியேறிய காலனிகளுக்கு சுதந்திரம் வழங்கும் நோக்குடன் எழுதப்பட்டது. இரண்டுமே காலனிய அடிமைப்பட்ட நாடுகளின் விடுதலை குறித்து பேசவில்லை.

ஐந்தாவது கட்டம்: பெர்லின் மதில் இடிந்து, சோஷலிச நாடுகள் மறைந்து விட்ட காலகட்டம். தற்காலத்தில் நாம் வாழும் உலகில் பல மோதல்களுக்கு காரணமானது. வலதுசாரிகளும், இடதுசாரிகளும் தமக்கேற்ற தேசியவாதம் பேசிய காலம் மறைந்து விட்டது. மேற்குலகின் ஆதிக்கத்தின் கீழ் வலதுசாரி சக்திகள் தாம் விரும்பியவாறு தேசியவாதத்தை வரையறுக்கின்றனர். அது மேலும் புதிய நாடுகளின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. யூகோஸ்லேவியா உடைந்து செர்பியா, ஸ்லோவேனியா, குரோவேசியா, போஸ்னியா, மாசிடோனியா, மொண்டி நெக்ரோ, கொசோவோ போன்ற புதிய தேசங்கள் உருவாகின. இப்படி எந்த தேசம் புதிதாக உருவாக வேண்டும் என்று அவர்களே தீர்மானித்தார்கள். வேறு சில நாடுகளின் தேசிய சுயநிர்ணய உரிமையை அவர்கள் அங்கீகரிக்கவில்லை. உதாரணத்திற்கு அப்காசியா, ஒசேத்தியா.

இவ்விடத்தில் சில முக்கிய குறிப்புகளை மீளாய்வு செய்ய வேண்டும். இலங்கையில் ஒரு காலத்தில், தமிழ் தேசியம் பேசிய வலதுசாரிகள், "சிங்கள இனவாதம்" என்ற சொல்லை மட்டுமே பாவித்து வந்தனர். அதே நேரம், சிங்கள/தமிழ் இடதுசாரிகள் சிங்களப் பேரினவாதம் என்ற சொல்லை பாவித்தனர். தற்போது சிங்கள பேரினவாதம் என்ற சொல் பரவலாக எல்லோராலும் பயன்படுத்தப் படுகின்றது. மேற்குலக அரசியல் கோட்பாட்டாளர்கள் உருவாக்கிய "சுயநிர்ணய உரிமை" ஒவ்வொரு தேசிய இனத்துக்குமானது என்ற தவறான புரிதல் காணப்படுகின்றது. உண்மையில் மேற்குலக சுயநிர்ணய உரிமை தோன்றிய காலத்தில், அது ஐரோப்பாவில் பேரினவாத அரசுகளுக்கு ஆதரவாகவே எழுந்தது.

உதாரணத்திற்கு பிரான்ஸில் கோர்சிகா, ஒக்கிடண்டல், நோர்மாண்டி, அல்சாஸ், பாஸ்க் ஆகிய மாகாணங்களுக்கென தனியான மொழிகள் உள்ளன. இவை பிரெஞ்சு மொழிக்கு சம்பந்தமில்லாதவை. ஆனால் பிரெஞ்சு பேரினவாதம் அந்த சிறுபான்மை மொழிகளை அடக்கி அழித்தது. பொது இடங்களில், தெருவில் கூட பிரெஞ்சு மொழி தவிர்ந்த வேறு மொழிகள் பேசக் கூடாது என்று உத்தரவு போட்டது. மீறியோர் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். ஜெர்மனியிலும் அதே போல, டென்மார்க்கை அண்டிய பகுதியில் பிரீஸ் என்றொரு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். முதலாம், இரண்டாம் உலகப்போருக்கு இடைப்பட்ட ஜெர்மனியில் போலிஷ் மொழி பேசும் பிரதேசங்களும் அடங்கின. ஆனால் ஜெர்மன் பேரினவாதம் இவற்றை எல்லாம் அடக்கி, ஜெர்மன் மொழி மட்டுமே உத்தியோகபூர்வ மொழியாக்கியது. அதே போல நெதர்லாந்தில், பிரீஸ்லாந்து மாகாணத்தில் பேசப்படும் பிரீஸ் மொழி, மற்றும் மாகாணங்களுக்கு உரிய கிளை மொழிகள், எல்லாவற்றையும் ஹோலந்து மொழி ஆதிக்கம் செலுத்தியது. அதாவது ஹோலந்து என்ற மேற்கு மாகாணத்தில் மட்டுமே பேசப்பட்ட மொழி. அது பின்னர் நெதர்லாந்து (டச்சு) என்ற பெயரில் செம்மையான மொழியாக்கப்பட்டது. யூகோஸ்லேவியாவில் செர்பிய மொழி ஆதிக்கம் செலுத்தியது. இவ்வாறு கூறிக் கொண்டே போகலாம்.

நாம் இங்கே கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், மேற்குலக "சுயநிர்ணய உரிமை" கோட்பாட்டாளர்கள், அத்தகைய பேரினவாத அரசுகளுக்கு ஆதரவாகவே கொள்கை வகுத்தனர். அதே கொள்கையை பின்னர், ஐரோப்பிய காலனிகளிலும் நடைமுறைப் படுத்தினர். பிரிட்டிஷ் காலனிகளாக இருந்து சுதந்திரமடைந்த நாடுகளை உதாரணமாக எடுப்போம். இந்தியாவில் இந்தி மொழி, பாகிஸ்தானில் உருது மொழி, இலங்கையில் சிங்கள மொழி, பிற மொழிகளின் மீது ஆதிக்கம் செலுத்துவது, பிரிட்டிஷாருக்கு ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக, அத்தகைய ஆதிக்கம் தமது நிர்வாக பிரிவுகளை நிரந்தரமாக வைத்திருக்க உதவும் என்று நம்பினார்கள். அதாவது காலனிய காலத்தில் எவ்வாறு ஆங்கில மொழி ஆதிக்கம் செலுத்தியதோ, அதே இடத்தில் காலனிகளில் பெரும்பான்மை மொழிகள் உள்ளன. இது பிரிட்டிஷாரின் நவகாலனித்துவ கொள்கைக்கு ஏற்றதாகவே அமைந்துள்ளது. அன்று எஜமானர்கள் நேரடியாக ஆண்டார்கள். இன்று எஜமானர்களின் சுதேசிப் பிரதிநிதிகள் ஆள்கிறார்கள். அது மட்டும் தான் வித்தியாசம்.


(தொடரும்)


Thursday, January 06, 2011

ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?


"ஒரு தேசிய இனம் தேசியத்தை உருவாக்குவதில்லை. மாறாக, ஒரு தேசியமே தேசிய இனத்தை உருவாக்குகின்றது." - சரித்திரவியலாளர் Eric Hobsbawm

சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் வரை, "தேசிய இனம்" என்றால் என்னவென்று எவருக்கும் தெரியாத காலம் ஒன்றிருந்தது. ஒரே மொழி பேசும் மக்கள், இனம், தேசிய இனம் எல்லாம் பிற்காலத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டவை தான். முந்திய காலங்களில் மக்கள் தாம் சார்ந்த மதத்துடன், இனக்குழு, சாதி, பிரதேசம், குடும்பம் இவற்றுடன் சேர்த்து பார்க்கப்பட்டனர். அவற்றையே தமது அடையாளமாக காட்டிக் கொண்டனர். உலகில் எந்த மூலையிலும், "தேசிய இனம்" என்ற ஒரு பிரிவு இருக்கவில்லை. நூறு வருடங்களுக்கு முன்னர், "சிங்களவர்களும், தமிழர்களும் தனிதனி தேசிய இனங்கள்." என்று எவராவது கூறினால், எல்லோரும் அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைப்பார்கள். புராதன காலத்தில் பௌத்த, இந்து மதங்கள் மட்டுமே பிரதேசம் கடந்து, சாதிப் பாகுபாட்டைக் கடந்து மக்களை ஒன்றிணைத்தன.

"தேசியம்" என்றால் இப்படித்தான் இருக்கும் என்று வரையறுப்பது கடினம். அதன் அர்த்தம் காலத்துக்கு காலம் மாறிக் கொண்டு வந்துள்ளது. பிரெஞ்சுப் புரட்சியின் போது கூறப்பட்ட தேசியம், பிரான்சின் அதிகார எல்லைக்கு உட்பட்ட அனைத்து பிரஜைகளையும் குறித்தது. பிற்காலத்தில் "தேசியம்", "இனம்" இரண்டும் ஒன்றாக சேர்க்கப்பட்டது. ஒரே மொழி பேசும், ஒரே கலாச்சாரம் கொண்ட மக்களை தேசிய இனம் என்றார்கள். மேற்கொண்டு அந்த அர்த்தத்திலேயே தேசியத்தை ஆராய வேண்டியிருக்கின்றது. ஐரோப்பாவில் 18 ம் நூற்றாண்டின் இறுதியிலும், 19 ம் நூற்றாண்டு முழுவதும், இன்று நாம் காணும் அடிப்படையைக் கொண்ட நவீன தேசங்கள் உருவாகின. தொழிற்புரட்சி, பொருளாதார வளர்ச்சி என்பன, தேச பரிபாலனத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தன. புதிய ஆளும் வர்க்க பிரதிநிதிகளுக்கு, மக்களை ஆள்வது முன்னர் எப்போதும் இல்லாதவாறு கடினமாக இருந்தது. முன்பு மதமும், நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பும், இந்திய உபகண்டத்தில் சாதியமைப்பும் மக்களை ஒரு கட்டுக்கோப்புக்குள் அடக்கி வைத்திருந்தது. அத்தகைய சமூக அமைப்பு முதலாளித்துவ பொருளாதாரம் வளருவதற்கு தடைக்கல்லாக இருந்தது. மேலும் பிரெஞ்சுபுரட்சியின் பின்னர், ஐரோப்பிய நாடுகளின் ஆளும் வர்க்கம், தாராளவாத சித்தாந்தமே சிறந்தது என்று நம்பினார்கள்.

மக்களின் விசுவாசத்தைப் பெறுவதற்கு, மேலிருந்து அவர்களை ஆளுவதற்கு தேசியவாதம் சிறந்த தத்துவமாகப் பட்டது. தேச எல்லைக்குள் பொதுவான மொழி ஒன்று உருவாக்கப்பட்டது.பெரும்பான்மையான தேசிய அரசுகளில் ஆளும் வர்க்கம் எந்தப் பிரதேசத்தை சேர்ந்ததோ, அந்தப் பிரதேச மொழி பொது மொழியாகியது. ஒரு நாட்டின் எல்லைக்குள் வாழும் மக்கள் மத்தியில் ஒற்றுமையுணர்வை தோற்றுவிக்க பொது மொழி பயன்பட்டது. மேலும் பொதுவான பண்பாடு, வரலாறு என்பன உருவாக்கப்பட்டன. அதற்கு முன்னர், ஒவ்வொரு பிரதேச மக்களும் தமக்கென தனியான கலாச்சாரத்தை, வரலாற்றைக் கொண்டிருந்தனர். அவை சில நேரம் ஒன்றுக்கொன்று முரணானதாகவும் இருக்கலாம், அல்லது ஒரே மாதிரியாகவும் இருக்கலாம். தேசிய அரசு அவற்றை மேவிகொண்டு ஆதிக்க கலாச்சாரம் ஒன்றை தோற்றுவித்தது. தேசிய அரசு தோன்றின காலத்தில் இருந்து ஒரே மாதிரியானதாக வரலாறு மாற்றி எழுதப்பட்டது.

தேசியவாதம் எங்கே, எப்படித் தோன்றியது? பிரிட்டனும், பிரான்சும் நூறு ஆண்டுகளாக போரில் ஈடுபட்டிருந்தன. அந்தக் காலத்தில் ஐரோப்பிய நாடுகள் ஒன்றுக்கொன்று யுத்தம் செய்வது சர்வசாதாரணம். பிரிட்டனின் அரச பரம்பரையும், பிரெஞ்சு அரச பரம்பரையும் தமக்கிடையிலான முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ளத்தான் போரில் ஈடுபட்டார்கள். ஆனால் நூறாண்டு காலப் போர் நீடிப்பதற்கு ஏதாவதொரு சித்தாந்தம் தேவைப்பட்டது. அது "நாட்டுப்பற்று" என்ற வடிவம் எடுத்தது. நூறாண்டு காலப் போரின் முடிவில் பிரிட்டிஷ், பிரெஞ்சு "நாட்டுப் பற்றாளர்கள்" உருவாகியிருந்தனர். கிறிஸ்தவ நாடுகளில் தந்தை வழிக் கலாச்சாரம் வேரூன்றியிருந்தது. (கிறிஸ்தவ மதத்தில் கடவுள் ஒரு ஆணாக கருதப்படுகிறார்.) அதனால் ஒரு தேசிய அரசு "தந்தையர் நாடு" என்று அழைக்கப்பட்டது. தாய்வழிக் கலாச்சாரம் கொண்ட கீழைத்தேய நாடுகளில் அது "தாய் நாடு" என்று மொழிபெயர்க்கப்பட்டது.

19 ம் நூற்றாண்டில் "வெகுஜன தேசியவாதம்" தோன்றியது. அதாவது பொதுவான மொழி, கலாச்சாரம் என்பன மக்கள் மயப்பட்டன. அதன் அடிப்படையில், "தேசிய உணர்வு", "இனம்" என்பன மையப்படுத்தப் பட்டன. "இனம்" என்ற ஒன்று புதிதாக தோன்றிய பின்னர், ஒரு இனத்தை சேர்ந்த மக்கள், மற்ற இனத்தை சேர்ந்தவர்களை அன்னியர்களாகப் பார்த்தனர். அன்னியப்பட்ட இனங்கள் மத்தியில் அவநம்பிக்கையும், சந்தேகமும் தோன்றியது. ஒரு இனத்தின் அவலத்திற்கு, மற்ற இனம் மீது பழி போடப்பட்டது. பழிச் சொல்லுக்கு ஆளாகும் இனம் ஒரே நாட்டை சேர்ந்த சிறுபான்மையினமாக இருக்கலாம். அல்லது வேறொரு தேசத்தை சேர்ந்த இனமாக இருக்கலாம். ஒரே தேசத்திற்குள், உழைக்கும் வர்க்கம் முதலாளிகளுடன் சமரசத்தை பேண வேண்டும். (தேசிய ஒற்றுமைக்கு மிக அவசியம்) அதனால் பொருளாதார பிரச்சினைகளுக்கும் மற்ற இனத்தின் மீது பழி போடப்பட்டது. உதாரணத்திற்கு, ஜெர்மனியில் 20 ம் நூற்றாண்டு வரையில் அத்தகைய அந்நியர்களை வெறுக்கும் தேசியவாதம் நிலவியது. அதன் விளைவுகளும் உலகறிந்தவை தான்.

(தொடரும்)