Saturday, January 08, 2011

காலனிய எச்சங்களான தேசிய இனப்பிரச்சினைகள்


[ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?] (பகுதி : 3)

2003 ம் ஆண்டளவில் என்று நினைக்கிறேன். அமெரிக்கா, ஈராக் போருக்கு தயார் படுத்திக் கொண்டிருந்த காலகட்டம். பெல்ஜியத்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடும் நாடுகளையும் அமைப்புகளையும் ஆதரிக்கும் கூட்டம் ஒன்று நடைபெற்றது. பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து வந்த, புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இன்று பனிப்போர் கிடையாது. அதனால் மார்க்சிய சித்தாந்தப் படி நடக்கும் தேசத்துடன், அல்லது அமைப்புடன் மட்டும் நட்பை பேணுவோம் என்று கூற முடியாது. ஆகையினால் காலத்திற்கேற்ப தந்திரோபாயங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும். பெல்ஜியத்தில் நடந்த கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள் நடந்தன. தமது கட்சியின் தலைமை சதாமின் ஈராக்கை ஆதரிப்பதையிட்டு கட்சி உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதைப் போன்றே, மத அடிப்படைவாத ஹமாஸ் பக்கம் நிற்பதையும் பலர் எதிர்த்தார்கள். இதை எல்லாம் ஏன் இங்கே கூறுகின்றேன் என்றால், "கம்யூனிஸ்ட்கள் கண்ணை மூடிக் கொண்டு, எந்த வித விமர்சனமுமின்றி பிற்போக்கு சக்திகளையும் தேசிய விடுதலையின் பேரில் ஆதரிப்பார்கள்," என்ற தவறான கருத்தை பலர் கொண்டிருக்கின்றனர். "கம்யூனிஸ்டுகள் உலகில் உள்ள அனைத்து தேசிய விடுதலைப் போராட்டங்களையும் ஆதரிக்க வேண்டும், அது அவர்கள் சித்தாந்தம்." என்றெல்லாம் பலர் தவறாக வியாக்கியானம் செய்கின்றனர். கேள்விச்செவியன் ஊரைக் கெடுப்பான் என்ற பழமொழிக்கேற்ப, ஒன்றை பற்றி அரைகுறையாக தெரிந்தவர்கள் மற்றவர்களின் மனதையும் கெடுக்கின்றனர்.

பெல்ஜியத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அறுபது வயதைக் கடந்த பேராளர் ஒருவர் குறிப்பிட்டார். "முன்னொரு காலத்தில் சைப்ரஸ் விடுதலைக்கு போராடிய கிரேக்க எயோகஸ் அமைப்பை ஆதரித்தோம். அது ஒரு பாஸிச அமைப்பு என்பதை பின்னர் தெரிந்து கொண்டோம். இருப்பினும் சைப்பிரசில் பிரிட்டிஷ் காலனியாத்திக்கத்திற்கு எதிரான போராட்டத்தை மட்டுமே ஏற்றுக் கொண்டு ஆதரித்தோம். பாலஸ்தீனர்களின் உரிமைகளுக்காக பேசினால், ஹமாஸ் ஆதரவு என்று பிரச்சாரம் செய்கின்றனர். மார்க்சிய PLFP குறைந்தளவு மக்களின் ஆதரவைக் கொண்டது. அதே நேரம் மத அடிப்படைவாத ஹமாஸ் பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெற்றுள்ளது. அந்த உண்மையை மறுக்க முடியாது." இந்திய இடதுசாரிகளும் இதே நிபந்தனையின் கீழ் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக கூறுகின்றனர். "பெரும்பான்மை தமிழர்கள் அவர்கள் பின்னால் நிற்கின்றனர்...." பெல்ஜியம் கூட்டத்தில் பிரிட்டனைச் சேர்ந்த மாணவர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு இலங்கைப் பிரச்சினை குறித்து ஆழமான ஈடுபாடு இருந்தது. புலிகள் மார்க்சிச- லெனினிச சித்தாந்த அடிப்படையில் இயங்கும் அமைப்பு என்று, தமக்கு சில ஈழத்தமிழர் கூறியதாக தெரிவித்தனர்.

"மார்க்சியவாதிகள் அனைத்து வகை தேசிய விடுதலைப் போராட்டங்களையும் நிபந்தனையின்றி ஆதரிக்க வேண்டும்." என்று எங்கே எழுதப் பட்டுள்ளது? அநேகமாக இவ்வாறு (விதண்டா) வாதம் செய்பவர்கள் வலதுசாரிகள் என்பது குறிப்பிடத் தக்கது. தாலிபான், ஹமாஸ், ஆகிய மத அடிப்படைவாத அமைப்புகளும் தேசிய விடுதலைப் போராட்டம் நடத்துகின்றன. மிக மிகக் குறைந்த அளவு வலதுசாரி அறிவுஜீவிகளே, அவற்றை தேசிய விடுதலை இயக்கங்களாக ஆதரிக்க முன்வருவார்கள் என்பது நிதர்சனம். ஐரோப்பாவில் மார்க்ஸியம் தோன்றிய காலத்தில் இருந்தே தேசிய இனப் பிரச்சினை சம்பந்தமாக கவனத்தில் எடுக்கப் பட்டு வந்துள்ளது. மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் அயர்லாந்து விடுதலையை ஆதரித்தனர். அயர்லாந்து சுதந்திரமடைந்தால், அது ஒரு முதலாளித்துவ நாடாகவே அமையும் என்பதை தெரிந்து தான் ஆதரித்தார்கள். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் இருந்து ஒரு நாடு விடுதலையடைவது முற்போக்கானது என்பதே அவர்கள் கூறிய நியாயம். அதே நேரம் பகுனின், புருடோ போன்ற அனார்கிசவாதிகள் எந்தவொரு தேசியமும் பிற்போக்கானது என்று வாதாடினார்கள். இன்றைக்கும் அனார்கிஸ்டுகள் தேசிய எல்லைகளை, தேசிய அரசுகளை, தேசிய இனங்களை ஏற்றுக் கொள்வதில்லை. இவை யாவும் பாட்டாளி வர்க்கத்தை பிரிக்கின்றன, என்று அவர்கள் கூறும் காரணத்தை உண்மையை மறுப்பதற்கில்லை.

மார்க்ஸ், எங்கெல்ஸ், பகுனின், புருடோ ஆகியோர், ஐரோப்பிய சோஷலிச முதலாம் அகிலத்தில் நன்கு அறியப்பட்டவர்கள். அவர்கள் காலத்தில் தான் ஏறக்குறைய இன்றுள்ள ஐரோப்பிய தேசிய அரசுகள் தோன்றியிருந்தன. (அது குறித்து ஏற்கனவே முதல் இரண்டு அத்தியாயங்களிலும் எழுதியிருக்கிறேன்.) அதனால் அவர்கள் சிந்தனை முழுவதும், தேசிய அரசுகளை நிராகரித்து, உழைக்கும் மக்களின் நலன் பேணும் சோஷலிச அரசு அமைப்பதிலேயே குவிந்திருந்தது. இருப்பினும் அவர்களிடம் இருந்து பிரிந்த சமூக-ஜனநாயகவாதிகள் தேசிய அரசில் பங்கெடுப்பதாக அறிவித்தன. அவர்கள் தமக்கென இரண்டாவது அகிலம் ஒன்றை உருவாக்கினர். முதலாவது அகிலம், பாட்டாளி மக்களின் அதிகாரத்தைக் கொண்ட தேசியத்தை மட்டும் ஏற்றுக் கொண்டது. இரண்டாவது அகிலம் அதற்கு மாறாக அனைத்து பிரஜைகளினதும் தேசத்தை ஏற்றுக் கொண்டது. "குறிப்பிட்ட பிரதேசத்தில் மட்டும் அது ஒரு தேசிய இனமாகும் என்ற வரையறை அவசியமில்லை." (யூத தேசியத்திற்கு பொருந்துவது) போன்ற கோட்பாடுகள் முன்மொழியப்பட்டன.
ஸ்டாலினின் "மார்க்சியமும் தேசிய இனப்பிரச்சினையும்" என்ற நூலிலும், சமூக ஜனநாயக அறிஞர்களின் தேசியம் குறித்து விமர்சிக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, "ஒவ்வொரு தேசிய இனத்தினதும் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சமூக-ஜனநாயகவாதிகள், அந்த தேசிய இனம் தனியாக பிரிந்து போகும் பொழுது அடக்க முனைவார்கள்...."

ஸ்டாலினின் தேசிய இனங்கள் குறித்த நூலில் இருந்து தான் பலர், "மார்க்சிய தேசியவாதத்தை" ஆராய்கின்றனர். ஸ்டாலின் வியனாவில் (அன்று ஆஸ்திரிய-ஹங்கேரிய ராஜ்ய தலைநகரம்) தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் தான் புதிய தேசிய அரசுகள் உருவாகியிருந்தன. அதனால் ஸ்டாலினுக்கு தேசிய இனம், தேசிய அரசு குறித்த அனுபவ அறிவு இருக்கும் என்று லெனின் நம்பினார். புரட்சிக்குப் பின்னர் அமையப்போகும் சோவியத் குடியரசில் தேசிய இனங்களை வகைப்படுத்தும் பொறுப்பு அவ்வாறு தான் ஸ்டாலின் கைக்கு வந்தது. புரட்சிக்கு முன்னர் ரஷ்ய சாம்ராஜ்யத்தில் 150 க்கும் குறையாத மொழிகளைப் பேசும் இனங்கள் வாழ்ந்தன. அந்த நாட்டின் எல்லைக்குள் பேசப்பட்ட 150 மொழிகளில் ஒன்று தான் ரஷ்ய மொழி. மேற்கில் இருக்கும் மின்ஸ்க் நகரில் இருந்து, கிழக்கில் உள்ள விலாடிவொஸ்டொக் வரை பிரயாணம் செய்தால், அரைவாசி உலகைச் சுற்றிப் பார்த்த உணர்வு தோன்றும்.

முதலாம் உலகப்போர் வரையில், சார் ரஷ்ய சாம்ராஜ்யமும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யமும் ஒன்றுடன் ஒன்று வல்லரசுப் போட்டியில் ஈடுபட்டிருந்தன. ஏட்டிக்குப் போட்டியாக நாடுகளை பிடித்து காலனியாக்கிக் கொண்டிருந்தன. ஒரு காலத்தில் ஆப்கானிஸ்தான் இரண்டு சாம்ராஜ்யங்களினதும் எல்லைக்கோடாக இருந்தது. ரஷ்யாவும், பிரிட்டனும் இரண்டு உலகப்போரில் பெருமளவு இழப்புகளை சந்தித்திருந்தன. இருப்பினும் ரஷ்ய சாம்ராஜத்தின் எல்லைக்குட்பட்ட நாடுகளை புதிய ஆட்சியாளர்களால் (போல்ஷெவிக் கம்யூனிஸ்டுகள்) தொடர்ந்து பராமரிக்க முடிந்தது. அந்தளவு வல்லமை பிரிட்டிஷாருக்கு இருக்கவில்லை. அதற்கு காரணம், இயற்கையான புவியியல் காரணிகள்.

பிரிட்டன் ஆயிரம் மைல்கள் கடல் கடந்து சென்று, காலனிகளை பராமரிக்க வேண்டியிருந்தது. அது நடைமுறைச் சாத்தியற்றது மட்டுமன்று, சாம்ராஜ்யத்தை கட்டியாள அதிக செலவு பிடித்தது. இதனால் காலனிகளுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டு, நவ காலனிய கட்டுப்பாட்டை வைத்திருப்பது இலகுவாகப் பட்டது. இந்தியாவும், இலங்கையும், இங்கிலாந்து எல்லையோரம் அமைந்திருந்தால், இன்றைக்கும் பிரிட்டன் என்ற ஒரே நாட்டின் மாநிலங்களாக இருந்திருக்கும். ஆகவே இத்தகைய வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்டு தான், இரண்டு சம்ராஜ்யங்களினதும் தேசிய இனங்களின் பிரச்சினையை புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு தனிதனி தேசங்களான முன்னாள் சோவியத் குடியரசுகளில் ரஷ்யாவின் தலையீடு அதிகரித்து வருகின்றதே தவிர குறையவில்லை. பிரிட்டனும் அதைத்தான் தனது முன்னாள் காலனிகளில் செய்து கொண்டிருக்கின்றது. இவர்கள் யாரும் நேரடியாக தங்கள் நோக்கத்தை தெரிவிப்பதில்லை. பிரான்ஸ் மட்டும் உள்ளதை உள்ளபடியே கூறி வருகின்றது. முன்னாள் ஆப்பிரிக்க காலனிகளில் தலையீடு செய்வது, தனது நலன் சார்ந்த விடயம் என்பதை, பிரான்ஸ் ஒரு நாளும் மறுக்கவில்லை.

(தொடரும்)


No comments: