Friday, January 07, 2011

பேரினவாதத்திற்கு ஆதரவான மேலைத்தேய சுயநிர்ணய உரிமை


[ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?] 
(பகுதி : 2)

தேசியவாதம் எப்போதும் வலதுசாரிக் கருத்தியலாகவே பார்க்கப்பட்டது. "நாங்கள்", "அவர்கள்" என்று இனங்களை மோதல் நிலையில் வைத்திருப்பது, வலதுசாரித் தேசியவாதம் என்று பிரிக்கப்பட்டது. இதைவிட சமத்துவம், சுதந்திரம் என்பனவற்றிற்கு போராடுவது இடதுசாரித் தேசியம் என்று வகைப் படுத்தப்பட்டது. தேசியவாதத்தின் வளர்ச்சியை ஐந்து கட்டங்களாக பிரித்து புரிந்து கொள்ளலாம்.

முதலாவது கட்டம்: தேசியவாதத்தின் பிறப்பு. பிரெஞ்சுப் புரட்சியின் போது தான் முதன்முதலாக "தேசியம்" என்ற சொல் பாவிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அது முற்போக்கான பாத்திரத்தை வகித்தது. நிலவுடமையாளர்களுக்கு எதிராக சாதாரண மக்களை, தேசியம் என்ற பெயரில் முன்னிறுத்தியது. அன்று தேசியம் என்பது சாமானிய உழைக்கும் மக்களைக் குறிக்கும். நிலப்பிரபுக்கள் தேசியத்துக்குள் அடங்கவில்லை. புரட்சி நடந்த காலத்தில் பல மொழி பேசும் மக்களும் பிரஜைகள் என்று சமத்துவமாக பார்க்கப்பட்டனர்.

இரண்டாவது கட்டம்: 1870 ம் ஆண்டுக்குப் பின்னரும், முதலாம் உலகப்போர் வரையிலும். தேசியம் என்றால் இனம் என்று புரிந்து கொள்ளப்படுகின்றது. பல தேசிய அரசுகள் தமக்கென ஒரு மொழியை அரச கரும மொழியாக்கின. ஆதிக்கம் செலுத்திய மொழியைப் பேசும் மக்கள் தனி இனமாக கருதப்பட்டனர். சிறுபான்மை மொழிகள் அடக்கப்பட்டன. இந்தப் பிரிவினை ஏற்படுத்திய முறுகல் நிலை, முதலாம் உலக யுத்தத்தில் போய் முடிந்தது.

மூன்றாவது கட்டம்: முதலாம் உலகப்போர் முடிவில், மேற்குலகில் வில்சன் கோட்பாடு "தேசிய சுயநிர்ணயம்" என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது. ஐ.நா. சபையின் முன்னோடியான, தேசங்களின் கூட்டமைப்பிலும் அது அங்கீகாரம் பெற்றது. அதற்கு வேறொரு தூண்டுதலும் இருந்தது. ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சி வெற்றி பெற்றதும், 1918 ல் கம்யூனிஸ்ட்கள் சுயநிர்ணைய உரிமை அடிப்படையிலான சோவியத் குடியரசுகளை அறிவித்தனர். காலனிய நாடுகள் விடுதலையடைய உரிமையுடையவை என்று அறிவித்தனர். போல்ஷெவிக் பிரகடனத்தை சமன் செய்வது போல வில்சன் கோட்பாடு அமைந்திருந்தது. முதலாம் போரின் முடிவில் ஐரோப்பாவின் வரைபடம் மாறியிருந்தது. புதிதாக பல நாடுகள் சுதந்திரமடைந்தன. அவற்றின் சுயநிர்ணய உரிமையை வில்சன் கோட்பாடு அங்கீகரித்தது. ஆனால் அதற்காக ஒவ்வொரு இனமும் தனக்கான தேசிய அரசை பெற்றுக் கொண்டன என்று அர்த்தமில்லை. உதாரணத்திற்கு யூகோஸ்லேவியா என்ற சுயநிர்ணய உரிமை கொண்ட புதிய நாட்டில், செர்பியர்கள் பிற தேசிய இனங்கள் மீது ஆதிக்கம் செலுத்தினர். ஐரோப்பாவில் நிலவிய குழப்பகரமான சூழ்நிலை இரண்டாம் உலகப்போருக்கு வழி வகுத்தது.

நான்காவது கட்டம்: இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், உலகில் இடதுசாரிகளின் பலம் அதிகரித்தது. காலனியாதிக்கத்தை இல்லாதொழிப்பதற்கு தேசியவாதத்தின் அவசியத்தை இடதுசாரிகளும் உணர்ந்தனர். லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் பல காலனிகள் விடுதலையடைந்தன. முதலாம் உலகப்போர் காலத்தில், கனடா, நியூசிலாந்து போன்ற பிரிட்டிஷ் காலனிகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. "வெஸ்ட்மின்ஸ்டர் யாப்பு" அடிப்படையிலேயே அந்த சுதந்திரம் வழங்கப்பட்டது. இருப்பினும் ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்களை சேர்ந்த பிரிட்டிஷ் காலனிகள் இரண்டாம் உலகப்போர் வரையில் காத்திருக்க வேண்டியேற்பட்டது. சுயநிர்ணய உரிமையை முன்மொழிந்த வில்சன் கோட்பாட்டின் நீட்சியாகவே வெஸ்ட்மின்ஸ்டர் யாப்பு கருதப்படுகின்றது. பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலனிகள் அந்த யாப்பை அடிப்படையாக கொண்டிருந்தன. அண்மையில் சிம்பாப்வே வெஸ்ட்மின்ஸ்டர் யாப்புக்கு பதிலாக, புதிய யாப்பு எழுதக் கிளம்பிய பொழுது சர்வதேச நெருக்கடியை எதிர்கொண்டது. (1972 ல் குடியரசான இலங்கை அதே போன்ற நெருக்கடிக்கு உள்ளானது.) இன்று பல தமிழ் தேசியவாத அறிவுஜீவிகள் வில்சன் கோட்பாடு, வெஸ்ட்மின்ஸ்டர் யாப்பு போன்றன தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது போல பேசி வருகின்றனர். உண்மையில் வில்சன் கோட்பாடு ஐரோப்பாவை மட்டும் மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது. வெஸ்ட்மின்ஸ்டர் யாப்பு ஆங்கிலேயர் குடியேறிய காலனிகளுக்கு சுதந்திரம் வழங்கும் நோக்குடன் எழுதப்பட்டது. இரண்டுமே காலனிய அடிமைப்பட்ட நாடுகளின் விடுதலை குறித்து பேசவில்லை.

ஐந்தாவது கட்டம்: பெர்லின் மதில் இடிந்து, சோஷலிச நாடுகள் மறைந்து விட்ட காலகட்டம். தற்காலத்தில் நாம் வாழும் உலகில் பல மோதல்களுக்கு காரணமானது. வலதுசாரிகளும், இடதுசாரிகளும் தமக்கேற்ற தேசியவாதம் பேசிய காலம் மறைந்து விட்டது. மேற்குலகின் ஆதிக்கத்தின் கீழ் வலதுசாரி சக்திகள் தாம் விரும்பியவாறு தேசியவாதத்தை வரையறுக்கின்றனர். அது மேலும் புதிய நாடுகளின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. யூகோஸ்லேவியா உடைந்து செர்பியா, ஸ்லோவேனியா, குரோவேசியா, போஸ்னியா, மாசிடோனியா, மொண்டி நெக்ரோ, கொசோவோ போன்ற புதிய தேசங்கள் உருவாகின. இப்படி எந்த தேசம் புதிதாக உருவாக வேண்டும் என்று அவர்களே தீர்மானித்தார்கள். வேறு சில நாடுகளின் தேசிய சுயநிர்ணய உரிமையை அவர்கள் அங்கீகரிக்கவில்லை. உதாரணத்திற்கு அப்காசியா, ஒசேத்தியா.

இவ்விடத்தில் சில முக்கிய குறிப்புகளை மீளாய்வு செய்ய வேண்டும். இலங்கையில் ஒரு காலத்தில், தமிழ் தேசியம் பேசிய வலதுசாரிகள், "சிங்கள இனவாதம்" என்ற சொல்லை மட்டுமே பாவித்து வந்தனர். அதே நேரம், சிங்கள/தமிழ் இடதுசாரிகள் சிங்களப் பேரினவாதம் என்ற சொல்லை பாவித்தனர். தற்போது சிங்கள பேரினவாதம் என்ற சொல் பரவலாக எல்லோராலும் பயன்படுத்தப் படுகின்றது. மேற்குலக அரசியல் கோட்பாட்டாளர்கள் உருவாக்கிய "சுயநிர்ணய உரிமை" ஒவ்வொரு தேசிய இனத்துக்குமானது என்ற தவறான புரிதல் காணப்படுகின்றது. உண்மையில் மேற்குலக சுயநிர்ணய உரிமை தோன்றிய காலத்தில், அது ஐரோப்பாவில் பேரினவாத அரசுகளுக்கு ஆதரவாகவே எழுந்தது.

உதாரணத்திற்கு பிரான்ஸில் கோர்சிகா, ஒக்கிடண்டல், நோர்மாண்டி, அல்சாஸ், பாஸ்க் ஆகிய மாகாணங்களுக்கென தனியான மொழிகள் உள்ளன. இவை பிரெஞ்சு மொழிக்கு சம்பந்தமில்லாதவை. ஆனால் பிரெஞ்சு பேரினவாதம் அந்த சிறுபான்மை மொழிகளை அடக்கி அழித்தது. பொது இடங்களில், தெருவில் கூட பிரெஞ்சு மொழி தவிர்ந்த வேறு மொழிகள் பேசக் கூடாது என்று உத்தரவு போட்டது. மீறியோர் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். ஜெர்மனியிலும் அதே போல, டென்மார்க்கை அண்டிய பகுதியில் பிரீஸ் என்றொரு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். முதலாம், இரண்டாம் உலகப்போருக்கு இடைப்பட்ட ஜெர்மனியில் போலிஷ் மொழி பேசும் பிரதேசங்களும் அடங்கின. ஆனால் ஜெர்மன் பேரினவாதம் இவற்றை எல்லாம் அடக்கி, ஜெர்மன் மொழி மட்டுமே உத்தியோகபூர்வ மொழியாக்கியது. அதே போல நெதர்லாந்தில், பிரீஸ்லாந்து மாகாணத்தில் பேசப்படும் பிரீஸ் மொழி, மற்றும் மாகாணங்களுக்கு உரிய கிளை மொழிகள், எல்லாவற்றையும் ஹோலந்து மொழி ஆதிக்கம் செலுத்தியது. அதாவது ஹோலந்து என்ற மேற்கு மாகாணத்தில் மட்டுமே பேசப்பட்ட மொழி. அது பின்னர் நெதர்லாந்து (டச்சு) என்ற பெயரில் செம்மையான மொழியாக்கப்பட்டது. யூகோஸ்லேவியாவில் செர்பிய மொழி ஆதிக்கம் செலுத்தியது. இவ்வாறு கூறிக் கொண்டே போகலாம்.

நாம் இங்கே கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், மேற்குலக "சுயநிர்ணய உரிமை" கோட்பாட்டாளர்கள், அத்தகைய பேரினவாத அரசுகளுக்கு ஆதரவாகவே கொள்கை வகுத்தனர். அதே கொள்கையை பின்னர், ஐரோப்பிய காலனிகளிலும் நடைமுறைப் படுத்தினர். பிரிட்டிஷ் காலனிகளாக இருந்து சுதந்திரமடைந்த நாடுகளை உதாரணமாக எடுப்போம். இந்தியாவில் இந்தி மொழி, பாகிஸ்தானில் உருது மொழி, இலங்கையில் சிங்கள மொழி, பிற மொழிகளின் மீது ஆதிக்கம் செலுத்துவது, பிரிட்டிஷாருக்கு ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக, அத்தகைய ஆதிக்கம் தமது நிர்வாக பிரிவுகளை நிரந்தரமாக வைத்திருக்க உதவும் என்று நம்பினார்கள். அதாவது காலனிய காலத்தில் எவ்வாறு ஆங்கில மொழி ஆதிக்கம் செலுத்தியதோ, அதே இடத்தில் காலனிகளில் பெரும்பான்மை மொழிகள் உள்ளன. இது பிரிட்டிஷாரின் நவகாலனித்துவ கொள்கைக்கு ஏற்றதாகவே அமைந்துள்ளது. அன்று எஜமானர்கள் நேரடியாக ஆண்டார்கள். இன்று எஜமானர்களின் சுதேசிப் பிரதிநிதிகள் ஆள்கிறார்கள். அது மட்டும் தான் வித்தியாசம்.


(தொடரும்)


No comments: