Monday, June 10, 2013

"தாக்சிம் மக்கள் குடியரசு" : துருக்கியில் தோன்றிய புரட்சி

"கல்லைக் கண்டால் பொலிசைக் காணோம்! பொலிசைக் கண்டால் கல்லைக் காணோம்!! " - புரட்சி மொழி 
("இஸ்லாமிய - முதலாளியத்திற்கு எதிரான துருக்கி மக்களின் எழுச்சி" -   இரண்டாம் பாகம்)

"துருக்கி என்று பெயரிடுவதன் மூலம், அந்த நாட்டை இதற்கு மேலும் அவமதிக்க முடியாது." துருக்கி மொழி பேசாத பிற சிறுபான்மை இனங்களின் மனக்குமுறல் இது. மகாகவி பாரதியார், இலங்கையை "சிங்களத் தீவு" என்று விளித்து பாடியதற்காக மனம் நொந்த தமிழர்கள் பலர் உண்டு. இலங்கையை சிங்களம் என்று அழைப்பதால் என்ன அரசியல் விளைவு ஏற்படுமோ, அதே போன்று தான் துருக்கி என்ற நாட்டின் பெயரும் உண்டாக்குகின்றது. 

ஓட்டோமான் சக்கரவர்த்தியின் ஆட்சிக் காலத்தில், "துருக்கியர்" என்று அழைப்பது ஒரு இழி சொல்லாக கருதப் பட்டது. பெரும்பான்மையினர் பேசிய மொழியாக இருந்த போதிலும், அதற்கு சமூக அந்தஸ்து இருக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டில், பல உலக நாடுகளிலும் பரவிய "தேசியவாதம்" என்ற தொற்று நோய் துருக்கியையும் பிடித்தாட்டியது. துருக்கி தேசியவாதிகள், அவர்களது தேசியத் தலைவர் அட்டாதுர்க் தலைமையில் ஒரு தேசிய அரசை உருவாக்கினார்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அங்கு வாழ்ந்த கிரேக்கர்களையும், ஆர்மேனியர்களையும் வெளியேற்றினார்கள். பிற சிறுபான்மை இனங்களான, அரபி, குர்து மக்கள் மேல், பலவந்தமாக துருக்கி மொழியை திணித்தார்கள்.

துருக்கியை ஒரு இஸ்லாமிய நாடாக பார்ப்பதும், யதார்த்தத்திற்கு முரணானது. கிரேக்கர்கள், ஆர்மேனியர்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றினார்கள். முஸ்லிம்களிலும் அலாவி பிரிவினர் ஒதுக்கப் பட்டனர். அவர்களை முஸ்லிம்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. அலாவி முஸ்லிம்கள் துருக்கியில் மட்டுமல்லாது, சிரியா, லெபனான், போன்ற நாடுகளிலும் கணிசமான தொகையில் வாழ்கின்றனர். அலாவி முஸ்லிம்களின் மதக் கொள்கைகள் பல, இருபதாம் நூற்றாண்டு சோஷலிச தத்துவத்துடன் பெருமளவு ஒத்துப் போகின்றன. அதனால், பெரும்பாலான துருக்கி கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள் அலாவி முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் என்பது தற்செயல் அல்ல.

அலாவி முஸ்லிம்களும், துருக்கி தேசியவாதிகளும் மேற்கத்திய கலாச்சார விழுமியங்களுடன் பெரிதும் ஒத்துப் போகக் கூடியவர்கள். இதைவிட பெரும்பாலான துருக்கியர்கள் மத்தியில், தாம் ஒரு ஐரோப்பிய நாட்டவர் என்ற எண்ணமும் நிலை கொண்டுள்ளது. துருக்கியின் வட - கிழக்கு எல்லையில் அமைந்திருக்கும் ஆர்மேனியாவை ஒரு ஐரோப்பிய நாடாக ஏற்றுக் கொள்ள முன்வருபவர்கள், துருக்கியை நிராகரிப்பது முரண்நகையானது. இதற்கு "கிறிஸ்தவம், இஸ்லாம்" என்ற மதப் பிரிவினையை தவிர வேறெந்த காரணத்தையும் சாட்டாக கூற முடியாது. எது எப்படி இருப்பினும், கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இருக்கும், இஸ்லாமியவாத AKP, மதம் காரணமாக அரபு-இஸ்லாமிய உலகுடன் தன்னை இனம் காட்டிக் கொள்ள விரும்புகின்றது.

AK கட்சி, "இஸ்லாமிய - முதலாளியம்" என்ற புதிய அரசியல் - பொருளாதார கொள்கையை நடைமுறைப் படுத்தி வருகின்றது. அதன் படி, நாடு முழுவதும் புதிய மசூதிகள் கட்டப் படுகின்றன. அதற்கு அருகில் புதிய கடைத் தொகுதிகள் கட்டப் படுகின்றன. AK கட்சியுடன் தொடர்புடைய வர்த்தகர்கள் இதனால் இலாபமடைந்துள்ளனர். இந்தப் புதிய அரசியல் - பொருளாதார கொள்கை, துருக்கியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றதை மறுக்க முடியாது. அயலில் உள்ள ஐரோப்பிய நாடுகள் எல்லாம், பொருளாதார தேக்கத்தால் கஷ்டப் படும் நேரம், துருக்கியின் பொருளாதாரம் வளர்ந்து வருகின்றது. ஆனால், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அந்த நாட்டின் மக்கள் அனைவருக்கும் பயனளிக்குமா? உதாரணத்திற்கு, சமீபத்திய இந்திய, இலங்கை பொருளாதார வளர்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது, ஒரு சிறிய மத்தியதர வர்க்கம் மட்டுமே நன்மை அடைந்தது, அல்லது அந்த வர்க்கத்தின் எண்ணிக்கை மட்டுமே பெருகியது. ஆனால், பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நிலைமை மாறாமல் அப்படியே உள்ளது.

AKP யின் பத்தாண்டு ஆட்சிக் காலத்தில், நாடு துரிதகதியில் இஸ்லாமிய மயமாகிக் கொண்டிருந்தது. பெண்கள் முக்காடு போடுவது ஊக்குவிக்கப் பட்டது. முக்காடு போடாத பெண்கள், பொது இடங்களில் பயமுறுத்தப் பட்டனர். காதலர்கள் கையோடு கை கோர்த்துக் கொண்டு திரிவதும், பொது இடங்களில் முத்தமிடுவதும் கலாச்சார சீர்கேடாக கருதப் பட்டது. தற்போது ஒரு சராசரி மேற்கு ஐரோப்பிய நாடு போன்று காட்சியளிக்கும் துருக்கி, வெகு விரைவில் சவூதி அரேபியா போன்று மாறிவிடும் என்ற அச்சம் பல மதச் சார்பற்ற துருக்கியர் மனதில் எழுந்தது. அவர்களின் உள்ளக் குமுறல், சமீபத்திய மக்கள் எழுச்சியில் எதிரொலித்தது. மேற்குக் கரையோரம் அமைந்திருக்கும் அழகிய இஸ்மீர் நகரம், பார்ப்பதற்கு பாரிஸ், லண்டன் போல மேற்குலகமயமாக காட்சியளிக்கும். வழமையாக அந்த இடத்தில் AKP க்கு ஓட்டுப் போடுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. மக்கள் எழுச்சி தொடங்கிய அடுத்த நாளே, இஸ்மீரில் இருந்த AKP கட்சி அலுவலகம் எரிக்கப் பட்டது.


உலகம் முழுவதும், புரட்சி என்றதும், பலர் கம்யூனிஸ்டுகளை தான் நினைப்பார்கள். கம்யூனிஸ்டுகள் மட்டுமே புரட்சிக்கு ஏகபோக உரிமை கோர முடியாது. அராஜகவாதிகள் (அனார்கிஸ்டுகள்), சோஷலிஸ்டுகள், இடதுசாரி லிபரல்கள் மட்டுமல்ல, இஸ்லாமியவாதிகள் கூட புரட்சிக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இதற்கு உலகில் பல உதாரணங்களை காட்டலாம். புரட்சி என்பதை "ஜனநாயகமயப்படுத்தல், மக்கள் மயப் படுத்தல்" என்றும் வேறுவிதமாக அழைக்கலாம். 

அறுபதுகளில், மேற்கு ஐரோப்பிய மாணவர்கள், புரட்சியில் புதியதொரு பரிமாணத்தை அறிமுகப் படுத்தினார்கள். ஆங்கிலத்தில் "Occupy" என்று அழைக்கப் படும், பொது இடங்களை ஆக்கிரமிக்கும் போராட்டம் அது. அது ஒரு மக்கள் அரசாங்கம். மாணவர்கள் கல்வி நிலையங்களை ஆக்கிரமித்து, கல்விக் கொள்கைகளை தீர்மானிப்பார்கள். தொழிலாளர்கள் தொழிற்சாலைகளை ஆக்கிரமித்து உற்பத்தியை தீர்மானிப்பார்கள். அது மக்கள் தங்களைத் தாங்களே ஆளும் உண்மையான ஜனநாயகம். அதனை மக்கள் கற்றுக் கொள்வதற்கு, பல நாடுகளில் நடக்கும் Occupy போராட்டம் உதவுகின்றது.

இஸ்தான்புல் நகரில், கேசி பூங்காவில் சுமார் நூற்றுக் கணக்கான ஆர்வலர்கள் Occupy பாணியில் ஒன்று கூடினார்கள். அங்கேயே கூடாரம் அடித்து தங்கினார்கள். ஒரு வகையில் அது விடுதலை செய்யப் பட்ட பிரதேசமாக இயங்கியது. ஆரம்பத்தில் காவல்துறையினர், கண்ணீர்புகைக் குண்டுகள், ஒரெஞ்ச் நச்சு வாயுக்களை அடித்து, போராடிய மக்களை கலைக்க முயற்சித்தனர். வெகுஜன ஊடகங்களும், பொலிஸ் அராஜகத்தை கண்டுகொள்ளவில்லை. துருக்கி மொழியில் ஒளிபரப்பாகும் அமெரிக்கர்களின் CNN கூட, அன்றைய தினம் பென்குயின்கள் பற்றிய விவரணப் படத்தை ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. அப்படியானால், பிற அரசு சார்பான ஊடகங்களை பற்றி இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

"இன்று பெரும்பாலான மக்கள், மரபு வழி ஊடகங்களில் நம்பிக்கை இழந்து விட்டனர். உண்மைத் தகவல்களை அறிந்து கொள்வதற்கு டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களை பயன்படுத்துகின்றனர்." - துருக்கி அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் ஆர்வலர்கள் பலர் தெரிவித்த கருத்து. துருக்கி ஊடகங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இஸ்தான்புல் நகரில் ஆர்ப்பாட்டம் செய்த மக்களை போலிஸ் ஒடுக்கிய சம்பவத்தை அறிவிக்காமல் அமைதி காத்தன. "தாங்கள் அறிவிக்கா விட்டால், நாட்டின் பிற பகுதிகளில் வாழும் மக்களுக்கு தகவல் போய்ச் சேராது, ஒரு சில நாட்களில் அப்படி ஒரு சம்பவம் நடந்த சுவடே இல்லாமல் மறக்கப் பட்டு விடும்..." என்று ஊடக நிறுவனங்கள் நினைத்திருந்தன. 

ஆனால், சமூக வலைத் தளங்களின் மூலம் தகவல்கள் நாடு முழுவதும் பரவியது. அதற்குப் பிறகு தமது தவறை உணர்ந்து கொண்ட ஊடகங்கள், போராட்டம் குறித்த செய்திகளை அறிவிக்கத் தொடங்கன. அரச சார்பு தொலைக்காட்சியான NTV யின் தலைமை நிர்வாகி, நடந்த தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார். அப்படி இருந்தும், போராடும் மக்களின் ஆத்திரம் அடங்கவில்லை. தங்களின் போராட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய வந்த NTV நிறுவனத்தின் வாகனத்தை அடித்து நொறுக்கினார்கள். டிவிட்டர், பேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்தும் சாதாரண மக்களின் சக்தி எத்தகைய தாக்கத்தை உண்டாக்க வல்லது என்பதை, இன்று அதிகார வர்க்கம் உணர்ந்துள்ளது.

ஆயுதம் வைத்திருப்பவர்கள் மட்டுமே போராளிகள் என்ற தவறான எண்ணம் கொண்டவர்கள், சமூக ஆர்வலர்களை "இணையப் போராளிகள்" என்று நையாண்டி செய்து வருகின்றனர். பெரும் முதலாளிகளின் நிதியில் இயங்கும் ஊடகங்கள், மக்களுக்கு தெரிவிக்காத செய்திகளை, சமூக வலைத்தளங்களை பாவிக்கும் இணையப் போராளிகள் தெரிவித்து வருகின்றனர். துருக்கி மக்கள் எழுச்சி பற்றி வெகுஜன ஊடகங்கள் செய்தி அறிவிக்காது புறக்கணித்து வந்தன. சமூக வலைத் தளங்களின் ஊடாக தகவல்கள் பரவிய பின்னர் தான், திடீரென விழித்துக் கொண்டது போல பாசாங்கு செய்தன. துருக்கியில் டிவிட்டர் பயன்படுத்திய 23 இளைஞர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர் என்பதில் இருந்தே, அரசாங்கம் எந்தளவு தூரம் "இணையப் போராளிகளை" நினைத்து அஞ்சுகின்றது என்பது தெரிய வரும். 

பெரும் முதலாளிகளிடம் சம்பளம் என்ற பெயரில் கையூட்டு வாங்கும் தொழில்முறை ஊடகவியலாளர்களை விட, மக்கள் மத்தியில் இருந்து தோன்றும் ஊடகவியலாளர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர். இஸ்தான்புல் நகரில் ஒரு தற்காலிக ஊடக மையத்தை உருவாக்கிய சமூக ஆர்வலர்கள், அங்கு நடக்கும் புரட்சியை உலகிற்கு அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். கணணியும், இணையமும், சமூக வலைத்தளங்களும் மட்டுமே அவர்கள் கையில் உள்ள ஆயுதங்கள். புரட்சி நடக்கும் களத்தில் நின்று பணியாற்ற வேண்டியிருப்பதால், கண்ணீர்ப் புகையில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு, பாதுகாப்பு முகமூடி அணிந்திருக்கின்றனர். புரட்சி என்பது இரண்டு ஆயுதக் குழுக்களின் மோதல் அல்ல. அது மக்கள் தாமாகவே உருவாக்கிக் கொள்ளும் சமுதாய மாற்றம்.

 "இவர்கள் புத்தகம் ஏந்திய பயங்கரவாதிகள்!" 
பொது மக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதும், இலக்கற்ற வன்முறையில் இறங்குவதும் புரட்சி அல்ல. தெருக்களை ஆக்கிரமிப்பதும், அங்கு புத்தகங்களை கொண்டு வந்து வாசிப்பதும், தான் கற்றவற்றை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதும் புரட்சியின் ஒரு அங்கம் தான். "இவர்கள் புத்தகம் ஏந்திய பயங்கரவாதிகள்!"

ஒரு மருத்துவரின் முன் முயற்சியினால், கேசி பூங்காவில் ஒரு நூலகம் கட்டப் பட்டது. செங்கற்களால் தூண்களைப் போல கட்டி, அவற்றின் நடுவில் பலகைகளை வைத்து, புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள். நிச்சயமாக, மார்க்ஸ் முதல் மாவோ வரை எழுதிய நூல்கள் அங்கே கிடைக்கும். அவற்றோடு பல இடதுசாரி எழுத்தாளர்கள் எழுதிய நூல்களும், நாவல்களும் வைக்கப் பட்டுள்ளன. அவற்றை இரவல் எடுத்து வாசிப்பதற்கு கட்டணம் கிடையாது. ஆனால், வாசித்து முடித்த பின்னர் நூலை திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.புரட்சியாளர்களின் "அதி பயங்கரமான ஆயுதக் களஞ்சியம்!" பூங்காவின் மத்தியில் இயங்கும் தற்காலிக நூலகம். மார்க்ஸ் முதல் மாவோ வரை அனைத்து இடதுசாரி இலக்கியங்களையும் இரவல் வாங்கலாம். 


கேசி பூங்காவில் தினசரி உடற்பயிற்சி அப்பியாசங்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள். யோகா பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு இலவச உணவு கிடைக்கிறது. பகலில் வேலை செய்து விட்டு வருபவர்கள், பூங்காவில் கிடைக்கும் உணவை சாப்பிட்டு விட்டு, அங்கே படுத்து உறங்குகிறார்கள். இலவச உணவு, எந்த வணிக நிறுவனமும் தனது பெயரில் கொடுத்த "நன்கொடை" அல்ல. மக்கள் தம்மிடம் உள்ள உணவை கொண்டு வந்து பகிர்ந்து உண்கிறார்கள். மக்கள் ஒருவருக்கொருவர் உதவுவதன் மூலம், புதிய உலகத்தையே உருவாக்கலாம் என்பதை புரிந்து கொள்கிறார்கள். பொலிஸ் படையுடன் மோதியதால் காயமுற்ற போராட்டக் காரர்களுக்கு இலவச மருத்துவம் செய்வதற்கு மருத்துவ மாணவர்கள் வருகிறார்கள். அதை விட, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் போராளிகளுக்கு இலவச சட்ட ஆலோசனை கிடைக்கிறது. அதற்கென வழக்கறிஞர்களின் குழு ஒன்று, அல்லும் பகலும் தயாராக இருக்கிறது.

இஸ்தான்புல் நகரின் மத்தியில் உள்ள Taksim சதுக்கத்தில் முதன் முதலாக மக்கள் எழுச்சி ஆரம்பமாகியது. அங்கு குழுமியிருந்த போராட்டக்காரர்களை பொலிஸ் கண்ணீர்ப்புகை குண்டு வீசி அடித்து விரட்டியது. அந்த பொலிஸ் வன்முறை, நாடு முழுவதும் மக்கள் எழுச்சி ஏற்படக் காரணமாக அமைந்தது. தற்போது தாக்சிம் சதுக்கத்தில் இருந்து பொலிஸ் வெளியேறி விட்டது. அந்த இடம் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அவர்கள் அதனை "தாக்சிம் மக்கள் குடியரசு" என்று அழைக்கின்றனர். அந்தப் பகுதியை சுற்றிலும், பொலிஸ் வர விடாமல் தடையரண்கள் போடப்பட்டுள்ளன. விடுதலை செய்யப் பட்ட "தாக்சிம் குடியரசில்" ஒரு மக்கள் அரசாங்கம் நடக்கின்றது. அதன் "பிரஜைகளின்" கடமைகள் என்னவென்று கூறும் அறிவிப்புகள் சுவர்களில் ஓட்டப் பட்டுள்ளன. எல்லோரும் சேர்ந்து, அங்கிருக்கும் குப்பை கூளங்களை அகற்றி சுத்தமாக வைத்திருக்கிறார்கள்.

போராட்டக் காரர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்ட போதிலும், பிரதமர் எர்டோகன் அவர்களை  "சூறையாடிகள்" என்று அழைத்தார். அதனைக் குறிக்கும் "çapulcu" (ஷப்புல்சு)  என்ற துருக்கிச் சொல், இன்று போராட்டக்காரர்களின் விருப்பத்திற்குரிய சொல்லாக மாறி விட்டது. போராட்ட செய்திகளை அறிவிக்கும் இணைய ஆர்வலர்கள், தமது பெயருடன் çapulcu என்று சேர்த்துக் கொள்கிறார்கள்.  இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யும் வலைத்தளத்திற்கு Çapul TV என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.  ஆங்கிலமயமாக்கப் பட்ட, Chapulling  என்ற சொல் கூட சர்வதேச அளவில் பிரபலமாகி விட்டது.  "Chapulling என்றால் உரிமைக்காக போராடுதல்" என்ற அர்த்தம் உருவாகி விட்டது. நாளை அந்தச் சொல் அகராதியில் சேர்க்கப் பட்டாலும் ஆச்சரியப் பட எதுவுமில்லை.

நாளை துருக்கி மக்களின் எழுச்சி நசுக்கப் படலாம், அல்லது இலக்கை எட்ட முடியாமல் தோற்றுப் போகலாம். ஆனால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் கலந்து கொண்ட திருப்தியை அது உண்டாக்கும். ஜனநாயகம் என்ற குழந்தையை பெற்றெடுத்த மகிழ்ச்சியில் அவர்கள் திளைக்கிறார்கள். அதனை வளர்த்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். அதிகாரவர்க்கத்திற்கு நாங்கள் அஞ்சத் தேவையில்லை என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். மக்கள் அரசாங்கத்திற்கு அஞ்சும் நிலைமை மாற வேண்டும். அரசாங்கம் மக்களுக்கு அஞ்சும் காலம் வர வேண்டும். அது தான் புரட்சி.

(முற்றும்)
**********


துருக்கி மக்கள் எழுச்சி தொடர்பான முன்னைய பதிவுகள்:


2. இஸ்லாமிய - முதலாளியத்திற்கு எதிரான துருக்கி மக்களின் எழுச்சி
1. "துருக்கி வசந்தம்" : முதலாளியத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி

மேலேயுள்ள படங்கள்: புரட்சியாளர்களின் அன்றாட செயற்பாடுகளை காட்டுகின்றன.
கீழேயுள்ள படங்கள் : அரச படைகளின் அடக்குமுறை 
இதிலே யார் வன்முறையாளர்கள் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

No comments: