Showing posts with label தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Show all posts
Showing posts with label தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Show all posts

Thursday, August 25, 2016

அரசியல் சித்தாந்த தெளிவில்லாத தமிழ் தேசிய முதலாளிகளின் கூட்டமைப்பு


ஈழத்தில் தமிழ் தேசியம் பேசும் இன்றைய இளைஞர்களின், அரசியல் அறிவிலித்தனத்திற்கு இது ஓர் உதாரணம். "செந்தூர் தமிழ்" என்பவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (TNA) முகநூல் செயற்பாட்டாளர். யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் அவர், அநேகமாக கட்சியின் முழுநேரப் பணியாளராக இருக்கலாம். TNA தகவல்களை உடனுக்குடன் முகநூலில் பதிவு செய்து வருகின்றார்.

முகநூலில் நானிட்ட பின்வரும் பதிவுக்கு எதிர்வினையாற்றியதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் வங்குரோத்துத்தனம் தெரிய வந்தது. விவாதத்தை தொடக்கி வைத்த முகநூல் பதிவு: 
//த‌மிழ் நாட்டில் ம‌ட்டும‌ல்ல‌, ஈழ‌த்திலும் ஆர‌ம்ப‌ கால‌ சாதி ஒழிப்புப் போராளிக‌ள் க‌ம்யூனிஸ்டுக‌ளே!//

அதற்கு செந்தூரின் எதிர்வினை: //உழுத்து போன தத்துவங்களெல்லாம் இனி இங்க சரிவராது.//

ஆனால், அதே நபர் அதே நேரத்தில் பின்வரும் தகவலை தனது முகநூலில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்: //இலங்கையில், வடக்கு மாகாணத்தில் வறுமையால் அல்லலுறும் மக்கள்! ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டேவிட் டேலி தெரிவித்துள்ளார்.//


சிலருக்கு தாம் என்ன பேசுகின்றோம் என்பதே தெரிவதில்லை. அந்தளவுக்கு அறியாமை மேலோங்கிக் காணப் படுகின்றது. இலங்கை அன்றும் இன்றும் வறிய நாடாகத் தான் கணிக்கப் படுகின்றது. வடக்கில் வாழும் பெரும்பான்மையான தமிழ் மக்களும், காலங்காலமாக வறுமையில் அல்லலுறுகின்றனர். ஈழப்போர் நடந்த காலத்தில் வறுமை பல மடங்கு அதிகரித்ததே தவிரக் குறையவில்லை. இதை ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் தான் வந்து சொல்ல வேண்டுமா?

தமிழ் மக்களை வறுமையில் இருந்து விடுதலை செய்வதற்கு வழி சொன்ன கம்யூனிசத் தத்துவம் "உழுத்துப் போனது" என்றால், வேறெந்த தத்துவம் அவர்களுக்கு உதவியுள்ளது? இதுவரை காலமும் உழுத்துப் போகாமல் இருக்கும், தமிழ் தேசியம், முதலாளித்துவம், சந்தைப் பொருளாதாரம் என்பன, எந்தளவுக்கு தமிழ் மக்களின் வறுமையை போக்கியுள்ளன? இந்த விடயத்தில் நடைமுறையில் இருக்கும் எல்லாத் தத்துவங்களும் தோற்றுப் போய் விட்டன. அதைத் தான் ஐரோப்பிய ஒன்றிய தூதுவரின் வாக்குமூலம் நிரூபிக்கின்றது.

அதெல்லாம் போகட்டும். வறுமையை ஒழிப்பதற்கு தமிழ் தேசியவாதிகள் முன்வைக்கும் திட்டங்கள் எவை? நானறிந்த வரையில் தமிழர்களின் வறுமை பற்றி மட்டுமல்ல, குறைந்த பட்சம் பொருளாதாரம் பற்றிக் கூட எந்தவொரு தமிழ் தேசியவாதியும் பேசுவதில்லை. அந்த விடயத்தில் கள்ள மௌனம் சாதிப்பார்கள். நாமாக கேட்டாலும் பதில் வராது.

ஈழத் தமிழர்கள் மத்தியில் இன்னமும் அகலாத வறுமை பற்றிய கேள்வி எழுந்தது, அதற்கு செந்தூர் கூறிய பதில் இது:

//தமிழன் பட்டினியால் இறக்க வேண்டிய அவசியம் இல்லை நயினாதீவுக்கும் சன்னதிக்கும் போனா ஒவ்வொருநாளும் சாப்பாடு கிடைக்கும்// இதை அவர் நகைச்சுவையாக எழுதி இருக்கிறார் என்று நினைக்கலாம். உண்மையில், வறுமையை ஒழிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் எந்தவொரு திட்டமும் கிடையாது. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?

வறுமை என்றால் என்னவென்பதற்கு அவரது வரைவிலக்கணம் இது: //எமது மிகக்குறைந்த அளவுகோல் உணவு பட்டினி அற்று இருத்தல் தான். தமிழ்த்தேசியவாதம் முழுமையாக வலிமைபெற்றிருந்த வன்னி மண்ணில் புலிகளின் காலத்தில் யாராவது பட்டினியால் இறந்தார்களா இவ்வளவு பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் இதுவே நேரடிச் சான்று சாட்சி.//

புலிகளின் கட்டுப்பாடு இருந்த காலத்தில், போர் நடந்து கொண்டிருந்தது. இறுதிப்போர் வரையில், செஞ்சிலுவை சங்கம், ஐ.நா.வின் WFP, மற்றும் பல உள்நாட்டு, வெளிநாட்டு NGO க்கள், நிவாரணப் பொருட்களை வழங்கி வந்தன. குறிப்பிட்ட சிலருக்கு, வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களின் பணம் கிடைத்து வந்தது. அதனால் தான் அங்கு யாரும் பட்டினியால் சாகவில்லை. அப்படி இருந்தும் ஆயிரக் கணக்கான பிள்ளைகள் போஷாக்கின்மையால் வாடியதாக தொண்டு நிறுவனங்கள் தெரிவித்தன.

வறுமை என்பது பட்டினி அற்ற நிலைமை அல்ல. இலங்கையில் மொத்த சனத்தொகையில் 15% வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள். யுத்தம் நடந்த காலத்தில், வட மாகாணத்தில் புள்ளிவிபரம் எடுக்கப் படவில்லை. இருப்பினும் அங்கேயும் சனத்தொகையில் 15% ஏழைகளாக இருக்கலாம். இலங்கையில் பல தசாப்த காலமாகவே சமுர்த்தி என்ற பெயரில் அரச கொடுப்பனவு வழங்கப் பட்டு வருகின்றது. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் அனைவரும் அந்த நிவாரணத்தை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரர் நடத்தும் லங்காஸ்ரீ (தமிழ்வின்) இணையத் தளத்தில் வந்த தகவல் இது: 
//வடக்கு மாகாணத்தின் ஒட்டுமொத்த சனத்தொகையின் அரைவாசி சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தமக்கு சமுர்த்திக் கொடுப்பனவு வழங்கப்படவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர். வறுமைக்கு உட்பட்டோரின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகச் சமூர்த்திக் கொடுப்பனவு வழங்கப்படும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 3 ஆயிரத்து 500 ரூபாவுக்குக் குறைவான மாதாந்த வருமானம் உடைய குடும்பங்களே சமுர்த்தி நிவாரணம் பெற்றுக்கொள்வதற்கு தகுதியானவர்கள் என்று, சமூர்த்தி நிவாரணம் வழங்கல் தொடர்பான சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.// (http://www.tamilwin.com/show-RUmuyBQVSWhw1F.html)

இதற்கு மேலே நான் மேலும் விளக்கம் கொடுக்க வேண்டியதில்லை. இன்றைக்கும் நடைமுறையில் உள்ள தமிழ் தேசியம் "உழுத்துப் போகாத" சித்தாந்தம் ஏதாவது, இன்று வரையில் தமிழ் மக்களின் வறுமையை ஒழித்து விட்டனவா? அதற்கு பதில் தெரியாமல் முழித்த TNA ஆர்வலர் செந்தூர், எங்கேயோ தேடிப் பிடித்து வட மாகாண முதலைமைச்சர் விக்னேஸ்வரனின் கூற்றை கொண்டு வந்து காட்டினார்.


சித்தாந்த‌ம் ப‌ற்றிய வ‌ட‌ மாகாண‌ முத‌லமைச்ச‌ர் விக்கினேஸ்வ‌ர‌னின் பித்த‌லாட்ட‌ம் இது. விக்கினேஸ்வரனின் கூற்றில் இருந்து:
//சித்தாந்தம் என்ற சொல் ஆன்மீகத்தில் வேறு அர்த்தம். அரசியலில் வேறு அர்த்தம். மக்கள் மனதில் அரசியல் சம்பந்தமாக காலத்திற்கு காலம் எழுந்து அஸ்தமிக்கும் கருத்துரைகளை தான், சித்தாந்தம் என்கின்றார்கள்.//

சித்தாந்த‌ம் என்றால் முடிந்த‌ முடிவான‌ பூர‌ண‌மான‌ கொள்கை. (பார்க்க: சித்தாந்தம் - விக்சனரி) அது ஆன்மீக‌த்திலும், அர‌சிய‌லிலும் வேறு வேறு அர்த்த‌ம் த‌ரும் என்ப‌து உண்மைய‌ல்ல‌. இரண்டுக்கும் ஒரே அர்த்தம் தான். (சித்தாந்தம் பற்றி ஆங்கில அகராதி தரும் விளக்கம்: doctrine - A principle or body of principles presented for acceptance or belief, as by a religious, political, scientific, or philosophic group; dogma.)

ஆன்மீக‌ம் என்ப‌து க‌ட‌வுளின் பெய‌ரால் ந‌ட‌க்கும் அர‌சிய‌ல். அதே மாதிரி, அரசியல் என்பதும் கடவுள் இல்லாத ஆன்மீகம் தான். உல‌க‌ வ‌ர‌லாற்றில் ஆயிர‌க் க‌ண‌க்கான‌ வ‌ருட‌ங்க‌ளாக‌, ஆன்மீக‌மும், அர‌சிய‌லும் ஒன்றில் இருந்து ம‌ற்றொன்றை பிரிக்க‌ முடியாம‌ல் இருந்த‌து. பிரெஞ்சுப் புர‌ட்சிக்குப் பின்ன‌ர் தான், ஆன்மீக‌த்தில் இருந்து அர‌சிய‌ல் த‌னியாக‌ப் பிரிந்த‌து. இன்றைக்கு பல நாடுகளில் உள்ள "மதச்சார்பற்ற கொள்கை" யின் மூலம் அது தான்.

//ஒரு காலத்தில் மார்க்சிய சித்தாந்தத்திற்கு பலத்த ஆதரவு இருந்தது. முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு ஆதரவு இருந்தது.// (விக்கினேஸ்வரன்)

"ஒரு காலத்தில்" அல்ல, இப்போதும் எப்போதும் ஆதரவு இருந்து வந்துள்ளது. குறிப்பாக 2008 ம் ஆண்டில் இடம்பெற்ற நிதிநெருக்கடிக்கு பின்னர், மார்க்சியத்திற்கு ஆதரவு அதிகரித்து வருகின்றது. மறுபக்கத்தில் முதலாளித்துவத்திற்கு எதிர்ப்பு கூடி வருகின்றது. ஏனென்றால், உலகம் முழுவதும் இருப்பவருக்கும் இல்லாதவருக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகின்றது. இந்த உண்மை முதலமைச்சருக்கு தெரியாது என்று நான் நினைக்கவில்லை. அவர் தெரிந்தும் தெரியாத மாதிரி நடிக்கிறார்.

மேலும், முத‌லாளித்துவ‌ம் என்ப‌து ஒரு சித்தாந்தம் அல்ல, அது பொருளாதார‌ம்! அது அவர்  நினைப்பது மாதிரி "மக்கள் மனதில் அரசியல் சம்பந்தமாக காலத்திற்கு காலம் எழுந்து அஸ்தமிக்கும் கருத்து" அல்ல. வரலாற்றுப் போக்கில் இயல்பாக தோன்றிய பொருளாதார அமைப்பு வடிவம்.

முதலாளித்துவத்தை பாமரத்தனமாக "சித்தாந்த‌ம்" என்று நினைத்துக் கொண்டிருப்பது முத‌ல‌மைச்ச‌ரின் அறியாமை. ஒரு முன்னாள் நீதியரசரின் அறிவே இவ்வளவு தானென்றால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களின் அறிவைப் பற்றி பேசத் தேவையில்லை.

முதலாளித்துவ பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவது லிப‌ர‌லிச‌ம் என்ப‌து சித்தாந்த‌ம். அந்த‌ வார்த்தை அவ‌ர் வாயில் இருந்து வ‌ர‌ ம‌றுக்கிற‌து.

//இப்போது சித்தாந்தங்களின் அடிப்படையில் செல்வதை தவிர்த்து யதார்த்தத்தை உணர்ந்து செயற்படவே பல தலைவர்கள் முன்வந்துள்ளனர். கஸ்ரோ போய் சில வருடங்களில் கியூபாவும் சீனாவைப் போல் மார்க்சியத்தில் இருந்து விடுபட்டுச் செல்லவே தலைப்படும் என்பது எனது எதிர்பார்ப்பு.// (விக்கினேஸ்வரன்)

அது என்ன "யதார்த்தம்"? வெளிப்படையாக அதை முதலாளித்துவம் என்று சொல்லலாமே? என்ன தயக்கம்? அமெரிக்கா தலைமையிலான நியோ - லிபரலிச சித்தாந்தவாதிகள் சொல்லிக் கொடுத்த பாடம் அது. உலக மக்களை அரசியல் நீக்கம் செய்யப் பட்டவர்களாக வைத்திருப்பது அதன் நோக்கம். நடைமுறையில் உள்ள அரசியல் பொருளாதாரம் பற்றி யாருக்கும் எந்த அக்கறையும் இருக்கக் கூடாது. அப்போது தான் தீவிரமான முதலாளித்துவ சுரண்டலை மேற்கொள்ள முடியும். முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் இந்த மறைமுகமான சுரண்டலுக்கு, தெரிந்தோ தெரியாமலோ துணை போகின்றார்.

பிடல் காஸ்ட்ரோ போய் பல வருடங்களாகியும் கியூபா மார்க்சியத்தில் இருந்து விடுபடவில்லை. இப்போதும் அங்கே சோஷலிச கட்டுமானம் உள்ளது. இலவசக் கல்வி, இலவச மருத்துவம் போன்ற சிலவற்றைக் குறிப்பிடலாம். மேலும் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் இன்றைக்கும் மார்க்சிய - லெனினிசம் படித்திருக்க வேண்டும். சீனாவிலும் மார்க்சியத்தை யாரும் மறந்து விடவில்லை. பல்கலைக் கழகங்களில் மார்க்சிய- லெனினிசம் கற்பிக்கப் பட வேண்டும் என்று அரசு உத்தரவு போட்டுள்ளது.

நான் முன்னர் கூறிய படி, அரசியல் மட்டுமல்ல, மதம், விஞ்ஞானம் போன்றன கூட சித்தாந்தம் என்று அழைக்கப் படுகின்றன. உலகில் எந்த நாட்டு அரசும் சித்தாந்தம் இல்லாமல் இயங்கவில்லை. சீனா சந்தை - சோஷலிசம் என்ற புதிய‌தொரு சித்தாந்தத்தை உருவாக்கி அதை பின்பற்றி வருகின்றது. அது பெரும்பாலும் முதலாளித்துவம் போன்றிருக்கும். ஆனால், "சந்தை - சோஷலிசம்" என்ற பெயரில் அவர்களுக்கென்று ஒரு சித்தாந்தம் இருக்கின்றது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆகவே, விக்கினேஸ்வரன் சொல்வது மாதிரி, கியூபாவும் சீனா மாதிரி மாறுமாக இருந்தால், அதுவும் "சந்தை - சோஷலிசம்" சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டதாக அர்த்தப் படும்.

//ஆகவே எனது அரசியல் சித்தாந்தம் யதார்த்தமே. நடைமுறையில் இருக்கும் உண்மை நிலையே அது.// (விக்கினேஸ்வரன்)

எதற்காக ஐயா, "யதார்த்தம்" என்று   குழப்புகின்றீர்கள்? நேரடியாக அதை முதலாளித்துவம் என்று சொல்லலாமே? அது தான் "யதார்த்தம்", "நடைமுறையில் இருக்கும் உண்மை நிலை" என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியுமே?

இன்றைய‌ கால‌த்தில், இல‌ங்கை உட்ப‌ட‌ பெரும்பாலான‌ உல‌க‌ நாடுக‌ள் ந‌வ‌ தாராள‌வாத‌(லிப‌ர‌லிச‌ம்) சித்தாந்த‌த்தை பின்ப‌ற்றுகின்ற‌ன‌. இலங்கைக்கு கடன் வழங்கும் IMF, உலகவங்கி கூட, நவ தாராளவாத கொள்கைகளை பின்பற்றுமாறு வற்புறுத்தி வருகின்றன. இதை அறிந்து கொள்ள அதிகம் சிரமப் பட வேண்டாம். அன்றாட தினசரித் தாளை புரட்டிப் பாருங்கள்.

இல‌ங்கையில், 1977 ம் ஆண்டு, ஜே.ஆர். ஜெய‌வ‌ர்த்த‌ன‌ அறிமுகப் ப‌டுத்திய‌ நியோ லிப‌ர‌லிச‌ சித்தாந்த‌த்தை தான் விக்கினேஸ்வ‌ர‌ன் "ய‌தார்த்த‌ம்" என்று குறிப்பிடுகின்றார். 

முதலைமைச்சர் விக்கினேஸ்வரன்,  சிறுபிள்ளைத்தனமாக சுற்றி வ‌ளைத்து பேசாம‌ல், நேர‌டியாக‌ முதலாளித்துவத்தை அல்லது லிப‌ர‌லிச‌ சித்தாந்த‌த்தை ஏற்றுக் கொள்வ‌தாக‌ சொல்ல‌லாமே? அதெப்ப‌டி முடியும்? இல‌ங்கை அர‌சும், த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளும் ஒரே சித்தாந்த‌த்தை தான் பின்ப‌ற்றுகிறார்க‌ள் என்ப‌து எல்லோருக்கும் தெரிந்து விடாதா? ம‌ண்டையில் இருக்கும் கொண்டையை ம‌றைக்க‌ ப‌டாத‌ பாடுப‌டுகிறார்க‌ள். கட்சியின் பெயரை "தமிழ் தேசிய முதலாளிகளின் கூட்டமைப்பு" என்று மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அது தான் மிகவும் பொருத்தமான பெயர்.

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:


Thursday, August 18, 2016

அமெரிக்கா காலில் அடிபணிந்த "தமிழ் தேசிய துரோகிகளின் கூட்டமைப்பு"!

வ‌ர‌லாறு திரும்புகிற‌து. அன்று வ‌ர‌த‌ராஜ‌ப் பெருமாள், இன்று விக்கினேஸ்வ‌ர‌ன். அன்று EPRLF. இன்று TNA. அன்று இந்திய‌ இராணுவ‌ம், இன்று அமெரிக்க‌ இராணுவ‌ம். முப்ப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ர், அன்றைய‌ வ‌ட‌க்கு - கிழ‌க்கு மாகாண‌ முத‌ல‌மைச்ச‌ர் வ‌ர‌த‌ராஜ‌ப் பெருமாள், இந்திய‌ விமான‌ப் ப‌டை விமாத்தில் வ‌ந்திற‌ங்கினார். இன்று அதே ப‌லாலி விமான‌ நிலைய‌த்தில், இன்றைய‌ வ‌ட‌ மாகாண‌ முத‌ல‌மைச்ச‌ர் விக்கினேஸ்வ‌ர‌ன், அமெரிக்க‌ விமான‌ப் ப‌டை விமான‌த்தில் வ‌ந்திற‌ங்கி உள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தடம் மாறுகின்றதா? என்று ஓர் ஈழத் தமிழ் ஊடகவியலாளர் சந்தேகம் தெரிவித்திருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் ஒரே தடத்தில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. சேர். பொன் இராமநாதன், ஜி.ஜி.பொன்னம்பலம் காலத்திலிருந்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் எப்போதும், பூர்ஷுவா வர்க்க நலன் சார்ந்ததாக, வலதுசாரிய தடத்தில் ஓடிக் கொண்டிருக்கிறன. அதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பும்
விதிவிலக்கல்ல.

விடுதலைப் புலிகளும், மற்றும் பல ஆயுதபாணி இயக்கங்களும் தோன்றிய ஆரம்ப காலத்தில், அவை தீவிர இடதுசாரி அரசியல் நிலைப்பாட்டை எடுத்திருந்தன. ஆட்பலம், ஆயுதபலம் குன்றியிருந்த படியால், பொதுத் தேர்தல்களை நடக்க விடாமல் குழப்புவதன் மூலம் தமது அதிகாரத்தை நிலைநாட்ட நினைத்தன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சுட்டுக் கொன்றது. தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட பொலிசார் மீது தாக்குதல் நடத்தியது. இது போன்ற பல நடவடிக்கைகளை குறிப்பிடலாம். ஒரு காலத்தில் மிதவாத தமிழ் தேசிய அரசியல்வாதிகள் எல்லோரும் புலிகளின் கொலைப் பட்டியலில் இருந்தனர். இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் சம்பந்தர், மாவை சேனாதிராஜா ஆகியோரும் அவர்களில் சிலர்.

புலிகளைத் தவிர மற்றைய இயக்கங்கள் யாவும் இராணுவப் பிரிவு, அரசியல் பிரிவு என்ற கட்டமைப்பை கொண்டிருந்தன. புலிகள் அரசியலை புறக்கணித்து, இராணுவவாத கட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். இந்திய - இலங்கை சமாதான ஒப்பந்தம் வரையில் புலிகளுக்கு அரசியலில் ஈடுபடும் அக்கறை எதுவும் இருக்கவில்லை. அன்று இந்தியா மாகாண சபையை ஒரு தீர்வாக திணித்ததும், புலிகளால் மறுக்க முடியவில்லை. மாகாண சபைக்கு தமக்கு சார்பான அறிவுஜீவிகளின் பெயர்களை சிபாரிசு செய்தனர். இருப்பினும், இரண்டொரு மாதங்களில் புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் மூண்ட படியால், அரசியலில் ஈடுபடும் யோசனையையும் அத்துடன் கைவிட்டு விட்டனர்.

யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில் பொதுத் தேர்தல் வந்தது. இம்முறை புலிகள் தமக்கு ஆதரவான ஈரோஸ் கட்சியை ஆதரித்தனர். எதிர்பார்த்த படியே வடக்கு கிழக்கில் போட்டியிட்ட ஈரோஸ் அதிக ஆசனங்களை கைப்பற்றியது. ஆயினும், ஈரோஸ் இயக்கத்திற்கென தனியான அரசியல் கொள்கைகள் இருந்தன.

பாராளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்கள் "பிரிவினையை ஆதரிக்க மாட்டோம்" என்று உறுதிமொழி எடுக்க வேண்டும். ஈரோஸ் உறுப்பினர்கள் பிரிவினை எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க மறுத்து பாராளுமன்றத்தை பகிஷ்கரிப்பு செய்தனர். அதனால் அந்த இடங்கள் காலியாகக் கிடந்தன.

காலப்போக்கில் ஈரோஸ் தலைவர் பாலகுமார் உட்பட பெருமளவு உறுப்பினர்கள் புலிகள் இயக்கத்தில் ஒன்று சேர்ந்து விட்ட படியால், அரசியல் அபிலாஷைகளும் கைவிடப் பட்டன. சங்கர் ராஜி தலைமையில் ஒரு குழு தொடர்ந்தும் அரசியல் கட்சியாக இயங்கி வந்தது. ஆனால், அதற்கு போதிய அளவு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை.

ஈழப்போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலங்களில், தமிழ் மக்கள் மத்தியில் புலிகளுக்கு தார்மீக ஆதரவு கிடைத்து வந்தது. சமூகத்தில் உள்ள புலி ஆதரவாளர்கள் மிகக் குறைந்த சதவீதமாக இருந்தாலும், போர் நடக்கும் போது சிங்கள் ஆக்கிரமிப்பு இராணுவத்திடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று பெரும்பான்மையான தமிழ் மக்கள் கருதினார்கள். அதற்காக விரும்பியோ விரும்பாமலோ புலிகளை ஆதரிக்க வேண்டும் என்பது அவர்களது நிலைப்பாடு. புலிகளும் அதை இழக்க விரும்பவில்லை. அதனால் தொடர்ந்தும் யுத்தத்தில் கவனம் செலுத்தி வந்தனர்.

மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் வந்ததும், போர்நிறுத்தம் வருடக் கணக்காக நீடித்ததும், புலிகள் திரும்பவும் அரசியலுக்குள் நுழைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலத்தில், புலிகள் ஒரு அரசியல் கட்சியை தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்திருந்தனர். விடுதலைப் புலிகள் மக்கள் கட்சி என்ற பெயரில் மாத்தையா தலைமையில் சிறிது காலம் இயங்கியது. ஆனால், மீண்டும் போர் வெடித்த படியால் அந்தக் கட்சியும் செயலிழந்து போனது. சிறிலங்கா அரசும், போர்நிறுத்த கண்காணிப்பாளர்களும் அந்தக் கட்சியை மீண்டும் புதுப்பிக்கலாம் என ஆலோசனை கூறினார்கள். இருப்பினும் ஏதோ சில காரணங்களுக்காக அதை விரும்பாத புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) என்ற புதிய கட்சியை உருவாக்கினார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் ஒரு காலத்தில் தீவிர புலி எதிர்ப்பாளர்களாக இருந்தவர்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி சம்பந்தர், ஈபிஆர்எல்எப் சுரேஷ் பிரேமச் சந்திரன், டெலோ செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தலைமையில் புலிகளுக்கு ஆதரவாக மனம் மாறிய, முன்னாள் புலி எதிர்பாளர்களை கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப் பட்டது. அதில் பத்மினி, கஜேந்திரன் போன்ற சிலர் புலிகளால் நியமிக்கப் பட்டிருந்தனர். அதாவது, முன்னாள் புலி எதிர்ப்பாளர்களை கட்டுப்படுத்தும் கடிவாளம் புலிகள் நியமித்த முகவர்களின் கைகளில் இருந்தது.

2009 ம் ஆண்டு போர் முடிந்த பின்னர் ஏற்பட்ட அரசியல் காலமாற்றத்தினால் நிலைமை தலைகீழாக மாறியது. முன்னாள் புலி எதிர்பாளர்கள் கட்சியின் அதிகாரத்தை தமதாக்கிக் கொண்டனர். புலிகளின் முகவர்கள் ஓரங் கட்டப் பட்டனர். அவர்கள் பிரிந்து சென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்று தனிக் கட்சி ஆரம்பித்தனர். இருப்பினும் தமிழ் பூர்ஷுவா வர்க்கமும், தமிழ் முதலாளிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையே தங்களின் பிரதிநிதிகளாகக் கருதினார்கள். அதனால் அதற்கு தொடர்ந்தும் ஆதரவளித்து வந்தனர்.

பாராளுமன்ற அரசியல் களத்தில் நின்று பிடிப்பதற்கு தேவையான அனைத்து அம்சங்களும் TNA க்கு இருந்தன. அதாவது பண பலம், அடியாட்கள் படை, வணிக நிறுவனங்களின் ஒத்துழைப்பு, வணிக ஊடகங்களின் ஆதரவு இருந்தால் போதும். TNA மட்டுமல்ல, சிங்கள பெரும்பான்மைக் கட்சிகளான SLFP, UNP என்பனவும் அதே அடிப்படையில் இயங்கும் கட்சிகள் தாம். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக போன்றவற்றை ஒப்பிடலாம்.

மேற்குறிப்பிட்ட வரலாற்றுப் பின்னணியில் வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இன்று அமெரிக்காவின் காலில் அடிபணிந்ததில் எந்த அதிசயமும் இல்லை. அது அவர்களது வர்க்கக் குணாம்சம். இந்திய பிராந்திய வல்லரசையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் ஆதரிப்பதை அரசியல் கொள்கையாக வரித்துக் கொண்ட கட்சியிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்?

முள்ளிவாய்க்கால் பேர‌வ‌ல‌த்தின் போது பாராமுக‌மாக‌ இருந்த‌ அமெரிக்கா, இப்போது தான் நிவார‌ணப் பொருட்க‌ளுட‌ன் வ‌ந்திற‌ங்கியுள்ள‌து. யாழ்ப்பாண‌ ம‌க்க‌ளுக்கான‌ அமெரிக்க‌ நிவார‌ண‌ப் பொருட்க‌ளை ச‌ம்ப‌ந்த‌ரும், விக்கினேஸ்வ‌ர‌னும் பெற்றுக் கொண்ட‌ன‌ர். "இறுதி யுத்த‌த்தில் எங்க‌ள் ம‌க்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்டுக் கொண்டிருந்த நேரம்‌ இந்த‌ அமெரிக்கா எங்கே போன‌து?" இப்ப‌டிக் கேட்ப‌த‌ற்கு ஒரு த‌மிழ் தேசிய‌வாதிக்கும் தைரிய‌மில்லை. அடிமைக‌ளிட‌ம் த‌ன்மான‌ உண‌ர்வை எதிர்பார்க்க‌ முடியுமா?

தமிழினப் படுகொலையில் பங்காளியான அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து கூழைக் கும்பிடு போடும் "தமிழ்த் தேசிய துரோகிகளின் கூட்டமைப்பு"! இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னரே, "என்ன விலை கொடுத்தேனும் புலிகளை தோற்கடிப்போம்" என்று அன்றைய அமெரிக்க தூதுவர் சூளுரைத்தார்.  (http://tamilnation.co/intframe/us/060110ugly.htm)      இனப்படுகொலைக்கும் பச்சைக்கொடி காட்டினார்.

புலிகளின் ஆயுதக் கப்பல்களையும், புலிகளின் மறைவிடங்களையும் அமெரிக்க செய்மதிகள் தான் காட்டிக் கொடுத்தன. முள்ளிவாய்க்காலில் சிக்கிக் கொண்ட புலிகளையும், மக்களையும், காப்பாற்றுவதற்கு, அமெரிக்க மரைன் படைக் கப்பல் அனுப்புவதாக வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய துரோகத்தை தமிழர்கள் இன்னும் மறக்கவில்லை.

எல்லோரையும் எல்லாக் காலத்திலும் முட்டாளாக்க முடியாது. எதிர்காலத்தில், இலங்கையில் அமெரிக்கப் படைத் தளம் அமைக்கப் படும் பொழுது தமிழ் மக்கள் விழித்துக் கொள்வார்கள். அப்போது, "தமிழ் தேசிய துரோகிகளின் கூட்டமைப்பு", தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப் பட்டு ஒதுக்கப் படும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

Monday, July 13, 2015

பிரபாகரன் மீண்டும் வந்தால் "புலி ஆதரவாளர்களே" காட்டிக் கொடுப்பார்கள்!


தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு,

நீங்கள் எந்த நாட்டில் ஒளிந்திருந்தாலும் பரவாயில்லை. தமிழீழத்தில் மட்டும் காலடி எடுத்து வைத்து விடாதீர்கள்! "இந்த நன்றி மறந்த தமிழர்களுக்காகவா போராடினேன்" என்று, வருந்த வேண்டி இருக்கலாம்!

நீங்கள் மீண்டும் தமிழ் தேசிய அரசியலுக்கு வந்தால், உங்களுக்கும் "புலனாய்வுத் துறையின் கைக்கூலி" முத்திரை குத்துவார்கள். நீங்கள் மீண்டும் ஆயுதமேந்தினால், சிங்கள இராணுவத்திடம் பிடித்துக் கொடுக்கவும் தயங்க மாட்டார்கள்.

அவர்கள் வேறு யாருமல்ல. நீங்கள் நம்பிக் கெட்ட, அதே "புலி ஆதரவாளர்கள்" தான்! நீங்களே உருவாக்கி விட்ட, தமிழ் முதலாளிகளும், தமிழ் வலதுசாரிகளும், தற்போது சிறிலங்காவின் "ஜனநாயக நீரோட்டத்தில்" ஐக்கியமாகி விட்டார்கள்.

இந்தத் துணுக்கு சிரிப்பதற்கு மட்டுமல்ல, சிந்திப்பதற்கும் தான். இலங்கையில் இன்றைக்கு தமிழ் தேசிய அரசியலுக்குள் நடக்கும் கூத்துக்களைப் பார்க்கும் பொழுது இதெல்லாம் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளன.
(பார்க்கவும்: 1.தமிழ் வாக்குகள் சிதறுமா? திரளுமா?; 2.பாட்டாளி வர்க்க புலிப் போராளிகளை ஒதுக்கும் கூட்டமைப்பின் மேட்டுக்குடி அரசியல்)

தேர்தல் வரும் காலங்களில் தான், பல கட்சி ஜனநாயகம் பற்றிப் பீற்றிக் கொண்டிருக்கும், போலி ஜனநாயகவாதிகளின் முகமூடிகள் கிழிந்து தொங்குகின்றன. அவர்களது "ஜனநாயகம்" எப்போதும், இரண்டு கட்சிகளின் சர்வாதிகார ஆட்சி தான் என்பதை புரிந்து கொள்வது மிகவும் எளிது.

இலங்கை அரசியல் நிலவரத்தில், "தனித் தமிழீழத்திற்கான சுதந்திர தாகம்" கொண்ட, போலித் தமிழ் தேசியவாதிகள் கூட, சிங்களப் பேரினவாத SLFP க்கு எதிராக, இன்னொரு சிங்களப் பேரினவாத கட்சியான UNP யை ஆதரிப்பார்கள். காரணம் கேட்டால், "அது தாண்டா ஜனநாயகம்!" என்பார்கள்.

அதே நேரம், வடக்கு, கிழக்கு மாகாணங்களில், எப்போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே வெல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். காரணம் கேட்டால், "அது தாண்டா தமிழ் தேசியம்" என்பார்கள். எல்லாத் தேர்தல்களிலும் ஒரே கட்சி தான் வெல்ல வேண்டுமென்றால், அதற்குப் பெயர் ஜனநாயகமா? மெத்தப் படித்த அறிவாளிகளே பதில் கூறுங்கள்.

இலங்கையில் மீண்டும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் கூத்துக்கள் ஆரம்பமாகி விட்டன. முன்னர் ஒரு தடவை, ஜனாதிபதி தேர்தல் நடந்த நேரம், நான் பொதுத் தேர்தல்களின் ஜனநாயகமற்ற தன்மையை விமர்சித்து எழுதி இருந்தேன்.

அப்பொழுது, முன்னாள் போலித் தமிழ் தேசியவாதியும், இந்நாள் போலி ஜனநாயகவாதியுமான ஒருவர், பின்வருமாறு எதிர்வினையாற்றினார்:
  "மிஸ்டர் கலையரசன், இலங்கையில் ஒரு புரட்சி நடக்கும் என்று கனவு காணாதீர்கள்!"

இந்தப் போலி ஜனநாயகவாதி முன்னொருகாலத்தில் புலிகளை ஆதரித்தவர், அல்லது அப்படி பாசாங்கு செய்தவர். அந்தக் காலத்தில் புலிகள் நடத்தியது புரட்சி இல்லாமல், புடலங்காயா? உங்களது பாராளுமன்ற தேர்தல்களில் நம்பிக்கை இழந்த படியால் தானே புலிகள் ஆயுதமேந்தினார்கள்?

ஏற்கனவே இருக்கும் அரச கட்டமைப்பை மாற்றியமைப்பதற்குப் பெயர் தான் புரட்சி. அதைப் புலிகள் நடைமுறையில் செய்து காட்டினார்கள். நீங்கள் விரும்பினால் அதற்கு "தமிழ் தேசியப் புரட்சி" என்று பெயரிட்டுக் கொள்ளுங்கள்.

கம்யூனிஸ்டுகள் மட்டும் தான் புரட்சி நடத்த வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. ஈரானில் இஸ்லாமியப் புரட்சி நடக்கலாம் என்றால், இலங்கையில் தமிழ் தேசியப் புரட்சி நடக்க முடியாதா?

தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற வாக்குகளால் சாதிக்க முடியாத பல விடயங்களை, புலிகள் ஆயுத பலத்தால் செய்து காட்டினார்கள். சிறிலங்கா பாராளுமன்ற அதிகார மையத்தின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாத கட்டுப்பாட்டுப் பிரதேசம் ஒன்றை உருவாக்கி ஆட்சி நடத்தினார்கள்.

இறுதிப்போர் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் கூட, புலிகளை ஜனநாயக வழிக்கு திரும்புமாறு அமெரிக்கா வலியுறுத்தி இருந்தது. ஏன் அதை உதாசீனப் படுத்தினார்கள்? போலி ஜனநாயகவாதிகள் பெருமையுடன் பீற்றிக் கொள்ளும் பாராளுமன்ற ஜனநாயக அமைப்பு சிறந்தது என்றால், அதை அன்று ஏற்றுக் கொண்டிருக்கலாமே?

வசதி படைத்த தமிழ் மேட்டுக்குடியினருக்கு, பதவிகளை அமைத்துக் கொடுப்பதற்காக புலிகள் போராடவில்லை. தமிழ்ச்செல்வன் போன்ற அடித்தட்டு உழைக்கும் வர்க்க சமூகத்தை சேர்ந்த உறுப்பினர்களும் உயர்ந்த அந்தஸ்துக்கு வருவதற்கு உதவினார்கள். அந்த சமூகத்து மக்களைப் பொறுத்தவரையில், அது ஒரு புரட்சி தான்.

ஈழத் தமிழ் மேட்டுக்குடி வர்க்கமும், தமிழ் முதலாளிய வர்க்கமும், புலிகளை தமது கருவிகளாக நினைத்து பயன்படுத்தி வந்தனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உத்தரவை ஏற்று, சிங்களப் பேரினவாத அரசுடன் கூட்டுச் சேர்ந்தவுடன் புலிகளை கை கழுவி விட்டனர். அதன் விளைவாகத் தான், முன்னாள் புலிப் போராளிகள் தற்போது தீண்டத்தகாதவர்களாக சமூகத்தில் ஒதுக்கப் படுகின்றனர். இதே நிலைமை, புலிகளுக்கு தலைவராக இருந்த பிரபாகரனுக்கும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
பாட்டாளி வர்க்க புலிப் போராளிகளை ஒதுக்கும் கூட்டமைப்பின் மேட்டுக்குடி அரசியல்
தீவிர- மிதவாத ஈழத் தமிழ் தேசியவாதிகளுக்கு இடையிலான பனிப்போர்
தேர்தலில் மலர்ந்த "தமிழர் அரசு"! - ஓர் ஆய்வு

Saturday, July 11, 2015

பாட்டாளி வர்க்க புலிப் போராளிகளை ஒதுக்கும் கூட்டமைப்பின் மேட்டுக்குடி அரசியல்


முன்னாள் புலிப் போராளிகள் அரசியலில் ஈடுபடுவதை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் தடுக்கிறார்களா? இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்னாள் போராளிகள், தமிழ் தேசியத் தலைவர்கள் மீது சுமத்தியுள்ளனர். அது எந்தளவு தூரம் உண்மை என்பதை சம்பந்தப் பட்டவர்கள் தான் கூற வேண்டும்.

தற்போது பாராளுமன்ற பொதுத் தேர்தல் வரும் நேரம், எதிர்பாராத விதமாக முன்னாள் புலிப் போராளிகளின் விடயம் சூடு பிடித்துள்ளது. அவர்கள் தனிக் கட்சியாக பதிவு செய்தமை ஒரு முக்கிய காரணம். அரசின் ஆசீர்வாதத்துடன், கூட்டமைப்பு பிரமுகரான வித்தியாதரன் அவர்களை அணிசேர்த்து நிறுவனமயப் படுத்தி உள்ளார்.

யுத்தம் முடிந்த பின்னர், தமிழ் சமூகத்தால் இரக்கமற்று ஒதுக்கப் பட்டு, பல அவலங்களை சந்தித்துக் கொண்டிருக்கும் முன்னாள் போராளிகளின் அவலம் புறக்கணிக்கத் தக்கதல்ல. இதிலே வர்க்கம் சார்ந்த பிரச்சினை இருப்பதை நாங்கள் மறுக்க முடியாது. வசதியான குடும்பங்களை சேர்ந்த முன்னாள் போராளிகள், ஏதோ ஒரு வகையில் நன்றாக வாழ்கிறார்கள். ஒன்றில் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர், அல்லது உள்நாட்டில் ஏதாவது தொழிலை தேடிக் கொண்டுள்ளனர். அவர்களது பெற்றோர் வசதியாக இருந்த படியால் தான் அதெல்லாம் சாத்தியமானது.

இங்கே நாங்கள் கவனம் செலுத்த வேண்டிய முன்னாள் போராளிகள், வறுமையான குடும்பங்களை சேர்ந்தவர்கள். போராளியாவதற்கு முன்னரும், போர் முடிந்த பின்னரும், அவர்களது குடும்ப வறுமை மாறவில்லை. சிலநேரம், அவர்களது ஏழைப் பெற்றோர் தான் போரினால் அதிகளவில் பாதிக்கப் பட்டிருப்பார்கள். தமது பிள்ளைகளுக்கு உள்ளூரில் தொழில் வாய்ப்பை பெற்றுத் தரும் அளவு வசதியற்ற பெற்றோரால், வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க முடியுமா?

முன்னாள் புலிப் போராளிகளின் வர்க்கப் பிரச்சினை, எம்மில் பலரின் கவனத்தைப் பெறாமல் இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் அவர்களால் ஏற்படக் கூடிய ஆபத்தை, அரசு நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறது. எம்மில் பலர் தவறாக நினைப்பது போல, புலிகளின் முப்பதாண்டு கால ஆயுதப் போராட்டம் வெற்றிகரமாக நடந்ததற்கு காரணம், "தமிழ் இன உணர்வு" மட்டும் அல்ல. அதுவும் ஒரு காரணம் தான். ஆனால், அது மட்டுமே காரணம் அல்ல.

ஈழப் போராட்டத்திற்கு உந்துசக்தியாக இருந்த பொருளாதாரக் காரணிகளை பலர் கவனிப்பதில்லை. வடக்கு-கிழக்கு மாகாணங்களின் பின்தங்கிய நிலைமை. குறிப்பாக, வன்னியிலும், கிழக்கு மாகாணத்திலும் நிலவிய வறுமை. சிங்களம், தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான நிலத்திற்கான போராட்டம். இது போன்ற பல காரணங்கள் போராளிகளை உருவாக்கி விட்டிருந்தன.

மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் எதுவும் இன்று வரையில் தீர்க்கப் படவில்லை. முதலாளித்துவ நலன் சார்ந்த சிறிலங்கா அரசு, அவை குறித்து பாராமுகமாக இருக்கிறது. இனப்பிரச்சினை தீர்க்கப் பட வேண்டுமானால், பொருளாதாரப் பிரச்சினையையும் தீர்க்க வேண்டி இருக்கும். அது மறுபக்கத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் சுரண்டலையும் வெளிப்படுத்தி விடும். ஆகவே, இனப்பிரச்சினை தொடர்ந்திருக்க வேண்டுமென்று தான், முதலாளித்துவ- சிறிலங்கா அரசும் எதிர்பார்க்கும்.

இது போன்ற சூழ்நிலை, மீண்டும் ஒரு புலிகள் இயக்கத்தையும், ஆயுதப் போராட்டத்தையும் தூண்டி விடாதா? தமிழ் இன உணர்வாளர்கள் சொல்லிக் கொள்வதைப் போன்று, அந்தப் போராட்டம் புலிகளின் பெயரில் நடக்கப் போவதுமில்லை, பிரபாகரன் தலைமை தாங்கப் போவதுமில்லை. இனிவரப்போகும் ஆயுதப்போராட்டமானது, வேறொரு இயக்கத்தின் பெயரில், வேறொரு வடிவத்தில் நடக்கலாம்.

இலங்கையில் இனிமேல் ஒரு ஆயுதப்போராட்டம் நடக்கும் நிலைமை தோன்றினால், போர்க்கள அனுபவம் பெற்ற முன்னாள் போராளிகள் அதில் இணைந்து போராட மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? இந்த ஆபத்தை உணர்ந்து கொண்ட இலங்கை அரசு, தமிழ் தேசியப் பிரமுகர் வித்தியாதரனுடன் கூட்டுச் சேர்ந்து, அதைத் தடுப்பதற்காக "தமிழ் ஜேவிபி" ஒன்றை உருவாக்கி உள்ளது.

TNA பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இதனை கோடிட்டுக் காட்டி உள்ளார். முன்னொரு காலத்தில் ஆயுதமேந்திப் போரிட்ட ஜேவிபி உறுப்பினர்களை, "ஜனநாயக அரசியல் நீரோட்டத்தினுள்" இழுத்து வந்ததைப் போன்று, முன்னாள் புலிப் போராளிகளும் கொண்டு வரப் பட வேண்டும் என்று கூறினார். முதலாளித்துவ மேலாதிக்கத்திற்குட்பட்ட பாராளுமன்ற- ஜனநாயக சாக்கடைக்குள் இறங்கிய ஜேவிபி அதற்குள் அமிழ்ந்து போனது. 

பன்றியுடன் சேர்ந்த பசுக்கன்றும் மலம் தின்னும் என்பது ஒரு பழமொழி. ஆயினும், முதலாளித்துவ நலனைப் பாதுகாக்கும், சிறிலங்கா அரசும், தமிழ் தேசியவாதிகளும் அதையே "வெகுஜன அரசியல்" என்று காட்டி வருகின்றனர்.

முன்னாள் புலிப் போராளிகள் "ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்குள்" இழுத்து வரப் பட்ட பின்னணி அது தான். இந்த உண்மைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு தெரியாது என்று நினைக்கவில்லை. இருப்பினும்,  புலிப் போராளிகளின் அரசியல் பிரவேசத்தை ஒரு வித வன்மத்துடன் அணுகுகின்றனர்.

இவ்வளவு காலமும் புலிகளை ஆதரிப்பதாக நடித்துக் கொண்டிருந்த போலித் தமிழ் தேசியவாதிகள் பலர், முன்னாள் புலிப் போராளிகள் பற்றி காழ்ப்புணர்ச்சியுடன் பேசி வருகின்றனர். உதாரணத்திற்கு, பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் புலிப் போராளிகளைப் பற்றிய கூற்று, பலத்த சர்ச்சையை உருவாக்கி விட்டுள்ளது.(அதாவது உண்மையான போராளிகள் , முள்ளிவாய்க்காலிலேயே சயனைட் அடித்து இறந்துவிட்டதாக இவர் தெரிவித்திருந்தார்)

முன்னாள் புலிப் போராளிகள் அரசியலில் ஈடுபடுவதை, இனவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய உட்பட, சிங்களக் கட்சிகள் எதுவும் தடுக்கவில்லை. முன்பொரு தடவை, யாழ் மாவட்ட இராணுவ தளபதி, "முன்னாள் புலிப் போராளிகள், இடதுசாரிக் கட்சிகளைத் தவிர, வேறெந்தக் கட்சியிலும் சேர்ந்து அரசியல் நடத்துவதற்கு தடையில்லை...!" என்று தெரிவித்திருந்தார். 

அதாவது, இடதுசாரி அரசியல் தமது இருப்பிற்கு ஆபத்தானது என்பதை, இந்தக் கூற்றின் மூலம் அரசு நேரடியாகவே தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு "ஒரு பிரிவினைவாதக் கட்சியாக" இருந்தாலும், அது ஒரு வலதுசாரிக் கட்சி என்பதால், சிறிலங்கா அரசின் அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்றது. ஆகவே, முன்னாள் புலிப் போராளிகளை ஏதாவது ஒரு வலதுசாரிக் கட்சியில் சேருமாறு அரசே அறிவுறுத்தியுள்ளது. 

இயற்கையாகவே, முன்னாள் புலிப் போராளிகளின் தெரிவு தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருக்கும். TNA தான் நம்பகமான "ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள்", "தமிழ் தேசியத் தலைவர்கள்", இது போன்ற கருத்துக்கள் அவர்கள் மனதிலும் இருந்திருக்கலாம். அதனால், அரசியல் உணர்வு கொண்ட முன்னாள் போராளிகள் பலர், கூட்டமைப்பில் உறுப்பினராவதற்கும், வேட்பாளராக நிற்பதற்கும் விண்ணப்பித்ததாகவும், ஆனால் அவை நிராகரிக்கப் பட்டதாகவும் கூறுகின்றனர்.

முன்னாள் புலிப் போராளிகளின் விண்ணப்பங்களை நிராகரித்தமைக்கு கூட்டமைப்பு தகுந்த காரணம் எதையும் கூறவில்லை. ஆனால், "ஆயுதமேந்திய நபர்களை சேர்க்க விரும்பவில்லை" என்று ஒரு நொண்டிச்சாட்டு சொல்லப் படுகின்றது. "அப்படியானால், தமிழரசுக் கட்சியைத் தவிர, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிற மூன்று கட்சிகளும் ஒரு காலத்தில் ஆயுதபாணிகளாக இருந்தவை தானே?" என்று முன்னாள் புலிப் போராளிகள் கேட்பதிலும் நியாயமிருக்கிறது.

உண்மையில், தமிழ் தேசிய அரசியல் களத்தில் ஒரு சதிப்புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. கூட்டமைப்பின் முன்னோடிகளான கூட்டணியின் இடத்தைப் பிடிப்பதற்கு, தமிழரசுக் கட்சியினர் முயன்று வருகின்றனர். அன்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி, அனைத்துத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக காட்டிக் கொண்டாலும், அடிப்படையில் மேட்டுக்குடியினரின் கட்சியாக இருந்தது. அந்தக் கட்சியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்தரணிகள் என்பது தற்செயல் அல்ல.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, "சட்டத்தரணிகளின் கட்சியாக" மேட்டுக்குடி வர்க்க நலன்களை மட்டுமே பாதுகாக்க விரும்புகிறது. அது தேர்தலில் நிறுத்தும் வேட்பாளர்களின் விளம்பரங்களை எடுத்துப் பார்த்தாலே தெரியும். பெரும்பாலான வேட்பாளர்களின் பெயர்களுக்குப் பின்னால், ஆங்கில எழுத்துக்களில் உள்ள பட்டங்கள், சாமானிய மக்களைப் பயமுறுத்தும். படிக்க வேண்டிய வயதில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் புலிப் போராளிகள், அந்தப்  பட்டங்களுக்கு எங்கே போவார்கள்?

ஆகவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புறக்கணிப்பினால் தான், முன்னாள் புலிப் போராளிகள் தனிக் கட்சியாக பதிவு செய்து கொண்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. அது NGO பாணியில், ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரின் நலன்களை பேசுவதாக மட்டுமே இருக்கும். தமிழ் தேசிய அரசியலில் தலைமையை கைப்பற்றும் அளவுக்கு பலமானதாக இருக்காது. இருப்பினும், ஏதோ ஒரு வகை அச்சம் கூட்டமைப்பு தலைவர்கள் முகத்தில் தெரிகின்றது.

ஈழத் தமிழ் சமூகமும், தனக்குள்ளே வர்க்க முரண்பாடுகளைக் கொண்ட சமூகம் தான். போலித் தமிழ் தேசியவாதிகள் அதனை ஏற்றுக் கொள்ள மறுப்பதற்கு காரணம், அவர்களும் வர்க்க அரசியலில் பங்காளிகள் என்பதால் தான்.

கார்ல் மார்க்ஸ் பிரபலமான கூற்றான, "இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளி வர்க்கம்" தான் புலிகள் இயக்கத்தின் முதுகெலும்பாக இருந்தனர். பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த முன்னாள் புலிப் போராளிகள் பலர், ஈழப் போராட்டத்தின் ஊடாகத் தான் அரசியல் முனைப்புப் பெற்றனர். " அரசியல் என்பது இரத்தம் சிந்தாத போர். போர் என்பது இரத்தம் சிந்தும் அரசியல்" என்று மாவோ சொன்னதை நடைமுறை அனுபவத்தின் ஊடாக புரிந்து வைத்திருக்கின்றனர்.

முன்னாள் புலிப் போராளிகள் நம்பிக் கொண்டிருக்கும், தமிழ் தேசிய அரசியல், இன்று மேட்டுக்குடி வலதுசாரிகளால் அவர்களது வர்க்க நலன்களுக்காக நடத்தப் படுகின்றது என்ற உண்மை இப்போது தான் உறைக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்னணியில் தமிழ் முதலாளிகள் இருப்பது ஒன்றும் இரகசியமல்ல. வடக்கு- கிழக்கு மாகாணங்களில் பலருக்கும் தெரிந்த உண்மை அது.

கூட்டமைப்பின் பிரபல பாராளுமன்ற உறுப்பினரான சரவணபவன், உதயன் பத்திரிகை நிறுவனத்தின் முதலாளியாகவும் இருக்கிறார். அவரது உதயன் நிறுவனம் பத்திரிகை மட்டும் வெளியிடவில்லை. தங்குவிடுதிகள் போன்ற பிற துறைகளிலும் முதலிட்டுள்ளது. இது ஒரு உதாரணம் மட்டுமே. 

கூட்டமைப்பினர் தமது வர்த்தக, வர்க்க நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்காக, பின் கதவால் சிறிலங்கா அரசுடன் பேரம் பேசுவதும் அனைவருக்கும் தெரிந்த விடயம் தான். முதலாளித்துவ நலன்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட பாராளுமன்ற ஜனநாயக அரசியல் ஒரு சாக்கடை என்ற உண்மையை, முன்னாள் புலிப் போராளிகளும் உணர்ந்து கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை. 

அதற்குப் பிறகு... என்ன செய்ய வேண்டும்? அதற்கான பதிலை லெனின் நூறு வருடங்களுக்கு முன்னரே எழுதியிருக்கிறார். இன்றைய ஈழத் தமிழ் அரசியல் சூழ்நிலைக்கும் அது பொருந்தும். 

Sunday, March 01, 2015

தீவிர- மிதவாத ஈழத் தமிழ் தேசியவாதிகளுக்கு இடையிலான பனிப்போர்


ஈழத் தமிழ் தேசியவாதிகள் மத்தியில், கடந்த பல மாதங்களாக பனிப்போர் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. பொதுவாக மிதவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையிலான கொள்கை முரண்பாடு போன்று காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், பின்னணியில் நமக்குத் தெரியாத வேறு சில காரணிகளும் இருக்கலாம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தர், சுமந்திரன் அணி மிதவாதிகளாக அறியப் படுகின்றனர். அவர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் இருந்து மைத்திரி அரசை ஆதரிப்பது தெரிந்ததே. அதையே காரணமாகக் காட்டி, தீவிரவாதிகளின் அணி அவர்களுக்கு எதிராக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது.

ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு கோரிக்கை விடுத்த பிரிவினர் தான் இந்தத் தீவிரவாதிகள். ஆனால், தேர்தலில் பொது வேட்பாளரான மைத்திரிக்கு தமிழ் மக்களின் அமோக ஆதரவு இருந்த காரணத்தால் அடக்கி வாசித்தார்கள். பின்னர், பெப்ரவரி 4 சுதந்திர தின நிகழ்வில், சம்பந்தர், சுமந்திரன் கலந்து கொண்டதை சாட்டாக வைத்து, "கிளர்ச்சி அரசியல்" செய்து கொண்டிருக்கிறார்கள்.

லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில், சம்பந்தர், சுமந்திரன் உருவப் படங்களை எரித்த சம்பவத்தை, மேற்குறிப்பிட்ட பின்னணியில் தான் பார்க்க வேண்டும். புலம்பெயர்ந்த தமிழ் தேசிய அமைப்புகள், தீவிர தமிழ் தேசியத்தை முன்னெடுப்பது அனைவரும் அறிந்ததே. 

அவர்களுடன் தொடர்புடைய கஜேந்திரன் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஒரே குடையின் கீழ் ஒன்று சேர்ந்துள்ளன. பொதுவாகவே, கடந்த காலங்களிலும் இந்தக் குழுக்களுக்கு இடையில் ஒற்றுமை இருந்ததை, ஒரே மாதிரியான அறிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.

தீவிர தமிழ்த் தேசியவாதிகளின் அணி, புலிகளின் அரசியலுக்கு தாமே வாரிசு என்று காட்டிக் கொள்வார்கள். தமது பிடிவாதமான போக்குகள் மூலம் அதனை "நிரூபித்துக்" கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரு பெரிய முரண்நகை என்னவென்றால், ஒரு காலத்தில் ஈழத்தில் புலிகள் இருந்த இடத்தில் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு (சம்பந்தர் அணி) இருக்கின்றது. 

1986 ம் ஆண்டு, புலிகளுக்கும், TELO இயக்கத்திற்கும் இடையில் நடந்த சகோதர யத்தத்தின் முடிவில் புலிகளின் கை ஓங்கியது. அப்போது, தமிழீழ மக்கள் மத்தியில் தமது இயக்கத்திற்கு மட்டுமே ஆதரவு இருப்பதாக சொல்லிக் கொண்டார்கள். அதே நேரம், தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் தமக்கு மட்டுமே ஆதரவு இருப்பதாக TELO சொல்லிக் கொண்டது. 

இறுதியில் ஈழத்தில் காலூன்றிய புலிகள் தான் நிலைத்து நின்றனர். ஏனென்றால் அவர்களது ஆதரவுத் தளம், அந்த மண்ணில் வாழும் மக்களில் தங்கி இருந்தது. இன்றும் கூட, ஈழப் பிரதேசத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பை பெருமளவு தமிழ் மக்கள் ஆதரிக்கிறார்கள். புலிகளின் காலத்தில் இருந்ததைப் போன்று, இதுவும் ஒரு வகை தார்மீக ஆதரவு தான். கூட்டமைப்பு தலைவர்கள் அயோக்கியர்கள் என்று குற்றஞ்சாட்டிக் கொண்டே, தேர்தலில் அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடும் மக்கள் ஏராளம். 

இங்கே ஈழத் தமிழ் மக்களுக்கு முக்கியமானது கட்சித் தலைமையோ, அல்லது கட்சியோ அல்ல. சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக ஜனநாயக வழியில் எதிர்ப்புக் காட்டுவதற்கு, ஈழத் தமிழ் மக்களுக்கு ஒரு பலமான அரசியல் சக்தி தேவைப் படுகின்றது.

மேற்குறிப்பிட்ட காரணத்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர்ந்த தமிழர்களை விட, புலம்பெயராத தமிழர்களே தமது ஆதரவுத் தளம் என்பதை சரியாகக் கணிப்பிட்டிருந்தது. அதை அடிப்படையாகக் கொண்டு, புலம்பெயர்ந்த தமிழ் தேசியக் குழுக்களை கலந்தாலோசிக்காமல், சுயாதீனமாக முடிவுகளை எடுத்து வந்தது. 

இந்தியாவும், சர்வதேச சமூகமும், கூட்டமைப்பினர் இலங்கை அரசுடன் பேசித் தான், தமிழ் மக்களுக்கு தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று கறாராக சொல்லி விட்டனர். அதனால், இன்றைய மைத்திரி அரசுடன் இணக்க அரசியல் செய்யுமளவிற்கு சில விட்டுக் கொடுப்புகளை செய்துள்ளது. இது அவர்களது வர்க்க நிலைப்பாட்டில் இருந்து பார்த்தாலும் சரியான முடிவு தான். 

பொதுவாகவே, வலதுசாரி தமிழ்த் தேசியவாதிகள், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் அல்லது கொள்கை உடன்பாடு கொண்டவர்கள் என்பது இரகசியம் அல்ல. தற்போதைய மைத்திரி அரசை பின்னால் இருந்து இயக்குவதும் ஐ.தே.க. தான். அதனால், இனம் இனத்தோடு சேரும் என்பது போல, இதுவும் சிங்கள- தமிழ் மேட்டுக்குடி வர்க்க அரசியலின் ஓர் அங்கம் தான். அதில் ஆச்சரியப் பட எதுவும் இல்லை.

அநேகமாக, சம்பந்தர் அணி அரசுடன் சேர்ந்து இணக்க அரசியலை செய்யலாம் என்ற அச்சமே, தற்போதைய சலசலப்புகளுக்கும் காரணமாக உள்ளது. லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சம்பந்தர், சுமந்திரனுக்கு துரோகி முத்திரை குத்தப் பட்டது. அந்த ஆர்ப்பாட்டம் லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்னிலையில் நடந்துள்ளது. தமிழ் தேசியவாதிகளுக்குள் நடக்கும் பனிப்போருக்கும், அமெரிக்காவுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

இதே நேரம், யாழ் நகரில் பல்கலைக் கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த போதிலும், அரசியல் ஆர்வலர்களும், அரசியல்வாதிகளும், மக்களும் கலந்து கொண்டனர். போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. அறிக்கையை வெளியிடுவதை பின்போடக் கூடாது என்ற கோரிக்கையை ஐ.நா.விடம் சமர்ப்பிப்பதற்காக அந்த ஊர்வலம் நடைபெற்றது. 

ஊர்வலத்தின் முடிவில், இந்து, கிறிஸ்தவ, (இஸ்லாம் எங்கே?) மத குருக்களிடம் கோரிக்கை சமர்ப்பிக்கப் பட்டது. யாழ் நகரில், UNHCR, UNICEF, WHO என்று பல ஐ.நா. அமைப்புகளின் பிராந்திய அலுவலகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. போராட்டக்காரர்கள், அவற்றில் ஒன்றில் தமது கோரிக்கையை சமர்ப்பிக்காத காரணம் என்னவென்று தெரியவில்லை!

மேலும், யாழ் நகர் ஆர்ப்பாட்டத்திற்குள் நுளைந்த தீவிர தமிழ் தேசியவாதிகள், குறிப்பாக ஆனந்தி, கஜேந்திரன் குழு போன்றோர், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கோஷங்களை எழுப்பப் பயன்படுத்தினார்கள். அங்கே, சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப் பட்டதாகத் தெரிய வருகின்றது.

இதற்கிடையே, உதயன் பத்திரிகை நிறுவன முதலாளியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரமுகருமான வித்தியாதரன், முன்னாள் புலிப் போராளிகளை ஒன்று சேர்த்து ஒரு அரசியல் கட்சியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். உள்ளூர் மக்களாலும், புலம்பெயர் சமூகத்தாலும் புறக்கணிக்கப் பட்ட, அரச இயந்திரத்தினால் நசுக்கப்படும் பிரிவினரின் குறைபாடுகளை அரசியல்மயப் படுத்துவது நியாயமானது. 

தென்னிலங்கையில் நடந்த பெரும் இனப்படுகொலைப் போருக்குப் பின்னர், மீண்டும் உயிர்த்தெழுந்து மைய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொண்ட ஜேவிபியை வித்தியாதரன் உதாரணமாகக் காட்டுகின்றார். அதாவது, எவ்வாறு ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜேவிபியினர், அரசியல்வாதிகளாக மாற்றப் பட்டனரோ, அதே மாதிரி முன்னாள் புலிப் போராளிகளையும் கொண்டு வருவது தான் நோக்கம். 

புரட்சிகர அரசியலை கை கழுவி விட்டு, பாராளுமன்ற அரசியல் சாக்கடைக்குள் இறங்கிய ஜேவிபி, ஒரு காலத்தில் எதிரிகளாக இருந்த சிறிலங்கா அரசுடன் மட்டுமல்லாது, இந்தியா, அமெரிக்காவுடனும் சமரசம் செய்து கொண்டது. ஆகவே, வித்தியாதரன் முன்மொழியும் "தமிழ் ஜேவிபி", எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.  

ஆனால், முன்னாள் புலிப் போராளிகளைக் கொண்ட புதிய கட்சியின் இலக்கு என்ன, அரசியல் கொள்கை என்ன என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை. தாம் ஒரு கட்சியாக தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறுகின்றனர். உண்மையில் அது கட்சியாக இல்லாமல், ஒரு அரசு சார்பற்ற நிறுவனமாக இயங்குவது சிலநேரம் அதிக பலனைத் தரலாம்.

வித்தியாதரன் புதிய கட்சி தொடர்பாக இராணுவ தளபதிக்கு அறிவுறுத்தியதாகவும், அரசிடம் இருந்து எதிர்ப்பு எதுவும் வரவில்லை என்றும் உறுதிப் படுத்தி உள்ளார். ஏற்கனவே, வித்தியாதரன் ஐ.தே.க.வுக்கு நெருக்கமானவர். ஆகவே, உண்மையிலேயே புதிய கட்சி அமைக்கும் யோசனை, அரசிடம் இருந்து வந்திருக்கலாம். கட்சி தொடங்குவதற்கான நோக்கம் எதுவாக இருந்தாலும், காலம் முக்கியமானது. 

அதாவது, மிதவாத, தீவிரவாத தமிழ் தேசியவாதிகளுக்குள் பனிப்போர் நடக்கும் காலகட்டத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. தீவிர தமிழ்தேசியவாதிகள், தாமே புலிகளின் வாரிசுகள் என்று உரிமை கோரி வருகின்றனர். அவர்களுக்கு போட்டியாக, உண்மையான புலிகளான, முன்னாள் போராளிகளை நிறுத்துவதன் மூலம், தீவிர தமிழ்தேசியவாதிகள் தமது இலக்கை அடைவதை தடுத்து நிறுத்தலாம். வருங்காலத்தில், ஈழத் தமிழ் தேசிய அரசியலில் பல சுவாரஸ்யமான மாற்றங்கள் நிகழலாம்.

Monday, September 23, 2013

தேர்தலில் மலர்ந்த "தமிழர் அரசு"! - ஓர் ஆய்வு



இலங்கையில் நடந்த முதலாவது வட மாகாண சபைக்கான தேர்தல், எதிர்பார்த்த படியே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அறுதிப் பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்துள்ளது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம், 13 ம் திருத்தச் சட்டம் மூலம் நடைபெற்று வரும் மாகாண சபைகளினால், இன்று வரையில் வடக்கு-கிழக்கை தவிர்ந்த பகுதிகளை சேர்ந்த மக்களே இலாபமடைந்துள்ளனர்.

எண்பதுகளின் இறுதியில், இந்திய இராணுவம் குவிக்கப் பட்டிருந்தும், அன்று வடக்கும் கிழக்கும் இணைந்திருந்த மாகாண சபைக்கு, வட மாகாணத்தில் தேர்தல் நடத்த முடியவில்லை. "ஒரு பிராந்திய வல்லரசான இந்தியாவால் முடியாத காரியத்தை தான் சாதித்துக் காட்டி விட்டதாகவும், ஜனநாயகத்தை மீட்டு விட்டதாகவும்," ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இனிமேல் பீற்றிக் கொள்ளலாம். உண்மையில் இந்தியாவும் இந்த தேர்தலை நடத்துவதில் தன்னாலான பங்களிப்பைச் செலுத்தியுள்ளது.

ஈழப்போர் முடிந்த பின்னர், கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் இரண்டு தடவைகள் நடத்தப் பட்டாலும், வட மாகாண சபைக்கான தேர்தல் காலவரையறை இன்றி பின்போடப் பட்டு வந்தது. இறுதியில் இந்தியா, மற்றும் சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக தேர்தல் நடத்தப் பட்டது. ஜனாதிபதியும், ஆளும் சுதந்திரக் கட்சியும் எந்தக் காரணத்திற்காக தேர்தலை பின்போட்டார்களோ, அது நடந்து விட்டது. இன்று தமிழ் தேசியத்தையும், புலிகளுக்கு பின்னான அரசியலையும் முன்னெடுப்பதாக கருதப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. 

மத்திய அரசில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, "அபிவிருத்திப் பணிகள்" என்ற மாயமானைக் காட்டி மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்து மண் கவ்வியுள்ளது. மிக முக்கியமான அபிவிருத்தித் திட்டங்கள், தேர்தலை ஒட்டியே பூர்த்தி செய்யப் பட்டன. தேர்தல் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான், புனரமைக்கப்பட்ட A - 9 சாலை திறந்து விடப் பட்டது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் இருப்பதைப் போல, "கார்பெட் சாலை" அமைக்கப் பட்டதினால் போக்குவரத்து இலகுவானது. அதே போன்று, கிளிநொச்சி வரையிலான ரயில் சேவை, தொண்டமானாறு பாலம் என்பனவும் பொது மக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்தன என்பதை மறுப்பதற்கில்லை. 

வட மாகாண சபை தேர்தல் நடப்பதற்கு முன்னர், சில தினங்களுக்கு முன்னர், யாழ்தேவி புகையிரதம் கிளிநொச்சி வரை வந்தது. அதற்காக கிளிநொச்சி வந்து திறந்து வைத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அப்போது நடந்த பொதுக் கூட்டத்தை, தேர்தல் பிரச்சார மேடையாக பாவித்தார். இதே போன்று, தொண்டமானாறு பாலம் திறப்புவிழாவும் தேர்தல் பிரச்சார உத்தியாகவே நடந்தது. A - 9 பாதையில் செல்லும் வாகனங்களின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக, சாவகச்சேரி நுணாவில் பகுதியில் பிரமாண்டமான எரிபொருள் நிரப்பு நிலையம் கட்டப்பட்டது. அமைச்சர் பசில் ராஜபக்ச அதனை திறந்து வைத்தார். 

மேற்குறிப்பிட்ட "அபிவிருத்திப் பணிகள்" மூலம், ஐ.ம.சு.கூ. வுக்கு தமிழ் மக்களை வாக்களிக்க வைக்கலாம் என்று ஆளும் கட்சியினர் கனவு கண்டிருக்கலாம். ஆனால், இது போன்ற தேர்தல் கால தந்திரம் எதுவும், தமிழ் மக்களை ஏமாற்றவில்லை. அபிவிருத்தி பற்றி ஒரு வார்த்தையேனும் பேசாத, திரும்பத் திரும்ப தமிழர் உரிமைப் பிரச்சனைகளை பற்றி மட்டுமே பேசும், த.தே.கூ. வுக்கு மக்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர். த.தே.கூ. தலைவர்கள், தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் அரசின் அபிவிருத்தித் திட்டங்களை விமர்சிக்கத் தயங்கவில்லை. "கார்பெட் வீதி போட்டிருக்கிறார்கள். யாருக்காக? எமக்காகவா? இல்லை. தென்னிலங்கை முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும், எமது வளங்களை சுரண்டிச் செல்வதற்காக போட்டார்கள்." என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் மேடை தோறும் முழங்கினார். அதிலே உண்மையில்லாமலில்லை. எங்கேயும் முதலாளித்துவத்தின் தேவைகளுக்காகவே நெடுஞ்சாலைகள் அமைக்கப் படுகின்றன.

நெடுஞ்சாலைகளும், வேறு சில அபிவிருத்திப் பணிகளும் வாக்குகளை அறுவடை செய்யாதற்கு காரணங்கள் இருக்கின்றன. யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையான A - 9 பாதையினால் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு பலனேதும் ஏற்படவில்லை. வசதியுள்ள மத்தியதர வர்க்கத் தமிழர்கள் அந்த அபிவிருத்தியால் பயனடைந்துள்ளனர். ஆனால், அவர்களது வர்க்க நலன்களை பிரதிநிதித்துவப் படுத்தும் த.தே.கூ. க்கு மட்டுமே வாக்களிப்பார்கள். A - 9 பாதையில் மாட்டு வண்டில்கள், டிராக்டர்கள் செல்வதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் அதிருப்தியை பெருமளவு சம்பாதித்துள்ளது. அன்றாடம் சைக்கிள்களில் வேலைக்கு சென்று வரும் உழைக்கும் மக்களும், கார்ப்பெட் சாலைகளை கூடுமான அளவு தவிர்த்துக் கொள்கின்றனர். 

பிரதானமான சாலைகளை தவிர, உள்வீதிகள் எல்லாம் குண்டும், குழியுமாக காணப் படுகின்றன. அவற்றை செப்பனிட யாரும் இல்லை. இதைத் தவிர, கிராமங்களை இணைக்கும் பாதைகளும் புழுதி மணலும், கற்களும் நிறைந்ததாக உள்ளன. சில கிராமங்கள் ஐம்பது, நூறு வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்தனவோ, அவ்வாறே இன்றும் உள்ளன. விவசாயம், வெளிநாட்டுப் பணம் போன்ற பொருளாதார வசதிகளால் தமது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டவர்கள் கிராமங்களில் உள்ளனர். ஆனால், அவர்களும் தமது கிராமத்தின் அபிவிருத்தியை விட, தமிழர் உரிமை முக்கியமானதாக கருதுகின்றனர். 

ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள், கிராமிய மட்டத்தில் சில அபிவிருத்திகளை மேற்கொண்டாலும், அவை எல்லாம் தம்மை ஏமாற்றுவதற்காக தேர்தலை முன்னிட்டு நடக்கின்றன என்பதை மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, தென்மராட்சியை சேர்ந்த, சுதந்திரக் கட்சியின் பிரதான வேட்பாளராக நிறுத்தப் பட்ட சர்வா, தனது தொகுதி மக்களுக்காக அவசர அவசரமாக மின் கம்பங்களை கொண்டு வந்து நாட்டினார்.

இருபத்தோராம் நூற்றாண்டிலும் தனது தொகுதி மக்கள் மின்சாரம் இன்றி வாழ்கின்றனர் என்பது, தேர்தல் நேரம் தான் அந்த வேட்பாளருக்கு ஞாபகம் வந்தது. (அவர் முந்திய தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட்டு வென்று, சுதந்திரக் கட்சிக்கு மாறியவர்.) அந்தக் கிராமங்களை சேர்ந்த மக்கள் ஏழைகளாக இருந்தாலும் புத்திசாலிகள். அதனால், அதிரடி அரசியல்வாதி சர்வாவை தேர்தலில் தோற்கடித்தார்கள். தேர்தல் முடிந்த பின்னர், மின் கம்பங்களை திரும்பக் கொண்டு சென்று விடுவார்கள் என்று மக்கள் நேரடியாகேவே பேசிக் கொண்டனர்.

யாழ் குடாநாட்டில் இனப்பிரச்சினையின் தாக்கமானது, ஈழப்போருக்கு முன்பிருந்ததை விட, இன்று அதிகமாகவே உணரப் படுகின்றது. காணுமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் படையினரின் பிரசன்னம் ஒரு முக்கியமான பிரச்சினை ஆகும். புலிகளை முற்றாக அழித்து விட்ட மகிழ்ச்சியில் திளைக்கும் ஸ்ரீலங்கா படையினர், தற்போது பொது மக்களை துன்புறுத்துவதில்லை. (அரசியல் பழிவாங்கல்கள் வேறு.) ஆனால், பொது மக்களின் காணிகளை அடாவடித் தனமாக பறித்து, அங்கே முகாம்களை அமைத்துள்ளனர். 

சில இராணுவ முகாம்கள் அமைந்துள்ள காணிகள், முன்பு "புலிகளின் சொத்துக்களாக" இருந்தவை. அவை அனைத்தும், புலிகளுக்குப் பின்னர் தனக்கே சொந்தமாகும் என்று, ஸ்ரீலங்கா இராணுவம்  உரிமை கோருகின்றது. ஆனால், முகாம்களை விரிவுபடுத்துவதற்காக அருகில் உள்ள பொதுமக்களின் காணிகளை கூட அபகரிக்கிறார்கள். சில இடங்களில், முன்பு குடியிருந்த பொது மக்களின் வீடுகள் தரைமட்டமாக்கப் பட்டு, வேலிகள் அகற்றப் பட்டுள்ளதால், நிலத்திற்கு உரிமை கோருவது கடினமாக்கப் பட்டுள்ளது.

இன்றைக்கும் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த தமிழ் மக்கள், தமது நிலங்களை திருப்பித் தருமாறு போராடிக் கொண்டிருக்கிறார்கள். இராணுவம் வாடகைப் பணம் தருவதாக சொல்லியும், அதை மறுத்து தமக்கு நிலம் மட்டுமே வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். யுத்தம் முடிந்த காலத்தில் இருந்த முகாம்கள் பல இன்று அகற்றப் பட்டு விட்டாலும், பல இடங்களில் இன்றைக்கும் நிலப்பிரச்சினை தொடர்கின்றது. நாவற்குழியில் அமைந்துள்ள சிங்களக் குடியேற்றம் காரணமாகவும், அங்கு வாழும் தமிழர்கள் பாதிக்கப் பட்டனர். அந்தப் பிரச்சினை தனியாக அலசப் பட வேண்டும். 

கிராமங்களில் வாழும் ஏழைக் குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் கூட, உயர்கல்வி கற்ற பின்னர் நகரங்களை நோக்கிச் செல்வது வழமை. இது ஒரு சமூகம் உழைக்கும் வர்க்கத்தில் இருந்து, கீழ் மத்தியதர வர்க்கத்திற்கு தன்னை உயர்த்திக் கொள்ளும் காலகட்டம் ஆகும். நகரங்களை நோக்கிச் செல்லும் படித்த தமிழ் இளைஞர்கள், அங்கே ஒரே தகைமை கொண்ட சிங்கள இளைஞர்களுடன் போட்டி போட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். இந்த இடத்தில், "சிங்கள இனத்தில் பிறந்தவர்களுக்கு எல்லாவற்றிலும் முன்னுரிமை கிடைப்பதாக" உணர்கின்றனர். அந்த உணர்வு பின்னர், "தமிழ் தேசிய உரிமைப் போராட்டமாக" மாறுகின்றது. த.தே.கூ. ஆல், இளைஞர்களின் ஏமாற்றத்தினை, தேர்தலில் வாக்குகளாக அறுவடை செய்ய முடிகின்றது.


ஈழத் தமிழ் சமூகத்தை புரிந்து கொள்வது இலகுவானதல்ல. சிங்கள அரசியல்வாதிகள் மட்டுமல்லாது, தமிழக அரசியல்வாதிகளும் அந்த விஷயத்தில் பலவீனமாக உள்ளனர். இனம், வர்க்கம், சாதி போன்ற அம்சங்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து அரசியல் களத்தை சிக்கலாக்குகின்றன. முன்பு நடந்த தேர்தல்களில் மேற்குறிப்பிட்ட அம்சங்கள் முக்கியமாக கவனிக்கப் பட்டாலும், கடந்த வட மாகாண சபைத் தேர்தலில் அவை புறக்கணிக்கப் பட்டுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பானது, இன்றைக்கும் தன்னை யாழ் சைவ - வேளாளர் மையவாத கட்சியாகவே தன்னைக் காட்டிக் கொள்கின்றது. ஆனால், பெரும்பாலான தமிழர்கள் அதனை அலட்சியப் படுத்தி வந்துள்ளனர்.

கூட்டமைப்பில் சில விதிவிலக்குகளை தவிர, அனேகமாக எல்லா வேட்பாளர்களும் உயர் சாதிகளை சேர்ந்தவர்கள் என்பது தற்செயலாக இருக்க முடியாது. மறுபக்கத்தில், ஆளும்கட்சியுடன் சேர்ந்தியங்கும் ஈபிடிபி, தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கு தாராளமாக இடமளித்து வந்துள்ளது. ஆயினும், தாழ்த்தப்பட்ட சாதியினர் பெரும்பான்மையாக கூட்டமைப்புக்கு ஓட்டுப் போட்டுள்ளனர். ஐ.ம.சு.கூ. ல் போட்டியிட்டு வென்ற, ஈபிடிபி யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலிற்கு மட்டும் அதிகப்படியான விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளன. அவர் ஒரு தலித் சமூகத்தவர் என்பதால், தாழ்த்தப்பட்ட சாதியினரின் ஓட்டுக்கள் விழுந்திருக்க வாய்ப்புண்டு. அதுவும் சாதி அபிமானம் காரணமாக விழுந்த வாக்குகள் என்று கருத முடியாது. ஏனெனில், ஐ.ம.சு.கூ. ல் இன்னொரு தலித் வேட்பாளர், தனது சாதியை பகிரங்கமாக வெளிப்படுத்தி பரப்புரை செய்து வந்தார். தேர்தலில் அவர் படு தோல்வி அடைந்தார்.

உலகமயமாக்கல் என்ற சூறாவளியினால் தாம் ஒதுக்கப் பட்டு விடுவோமோ என்ற அச்சம், நிறையத் தமிழர்கள் மத்தியில் காணப் படுகின்றது. உலகமயமாக்கலால், எதிர்காலம் பற்றிய கனவுகள் சிதைவதையும்,வாழ்க்கை குறித்த அவநம்பிக்கையையும், இலங்கைத் தீவுக்குள் தோற்றுப்போன சமுதாயமாக ஓரங்கட்டப் படுவதையும் உணர்கின்றனர். இதனை அவர்கள் தமக்குத் தெரிந்த வழியில் வெளிப்படுத்துகின்றனர். "தென்னிலங்கையில் இருந்து படையெடுக்கும் சிங்களவர்கள் மேலாதிக்கம் செலுத்துவதாக," அதனைப் புரிந்து கொள்கின்றனர். மேலாதிக்கம் செலுத்தும் சிங்களவர்கள், உலகமயமாக்கலின் தூதுவர்களாக வருகை தருகின்றனர், என்பதை யாரும் உணரவில்லை. 

இதனால் என்ன நடக்கிறது என்றால், தமிழ் மக்கள் மத்தியில் சிங்கள மேலாண்மை குறித்த அச்சத்தை பயன்படுத்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெறுகின்றது. வென்ற பின்னர், கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிங்கள மேலாண்மைக்கு அடிபணிந்தது நடக்கின்றனர். இதற்கு முன்னர் நடந்த, பாராளுமன்ற, பிரதேச சபைத் தேர்தல்களில் இருந்து அதனைப் புரிந்து கொள்ளலாம். வட மாகாணத்தில் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் எல்லோரும், அனேகமாக கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் தான். ஆனால், அவர்களால் மக்களுக்கு எதையும் செய்ய முடியவில்லை. 

பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் தமது தொகுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக, அரசு நிதி ஒதுக்குவது வழமை. ஆனால், அரசு ததேகூ உறுப்பினர்களுக்கு கொடுக்கும் நிதியின் அளவு மிகக் குறைவு என்பதை மறுப்பதற்கில்லை. மத்தியில் ஆளும் சுதந்திரக் கட்சி, கூட்டமைப்பின் பிரதிநிதிகளை வேண்டுமென்றே புறக்கணித்து வருகின்றது. ஆனால், கிடைக்கும் சொற்ப நிதியைக் கூட ததேகூ உறுப்பினர்கள் பயன்படுத்துவதில்லை. இதனால், தொகுதி மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளுக்காக அரச தரப்பினரை நாட வேண்டியுள்ளது.

சுதந்திரக் கட்சி, ஈபிடிபி அமைப்பாளர்கள் தேர்தலில் தெரிவாகாமல் தோல்வியடைந்து இருக்கலாம். ஆனால், அவர்கள் கைகளில் தான் அதிகாரம் உள்ளது. வட மாகாணத்தில், படையினர் சிவில் நிர்வாகத்தில் தலையிடுவது இரகசியமல்ல. ஊரில் நடக்கும் பகிரங்க ஒன்றுகூடல் எது என்றாலும், இராணுவத்திற்கு அறிவிக்காமல் நடத்த முடியாது. ததேகூ மாகாண சபையை பொறுப்பெடுத்த பின்னர், அந்த நிலையில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. அதற்கு மாறாக, ததேகூ வின் மாகாண சபை அரசாங்கம், இராணுவ ஆட்சிக்கு ஒரு ஜனநாயக முகமூடி போன்று செயற்பட வாய்ப்புண்டு. 

வட மாகாண சபைக்கு தேர்தல் நடத்தியதன் மூலம் "ஜனநாயகத்தை காப்பாற்றி விட்டதாக"(?) ராஜபக்ஷ அரசு பீற்றிக் கொள்ளும். அடுத்து நடக்கவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மகாநாட்டிலும் அது எதிரொலிக்கும். ஆனால், கூட்டமைப்புக்கு விழுந்த ஓட்டுகள் எல்லாம், அரசின் மீது அதிருப்தியுற்ற தமிழ் மக்களின் எதிர்ப்பு வாக்குகள் என்பதை, கொழும்பு புரிந்து கொள்ளுமா என்பது கேள்விக்குறி தான்.

தெற்கில் ஏற்கனவே, மாகாண சபை தேர்தல் முடிவுகளுக்கு எதிரான, கடும்போக்கு சிங்கள தேசியவாதிகளின் இயக்கம் ஆரம்பித்து விட்டது. கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியான நாளில் இருந்து, அதனை "பிரிவினைவாதம், இனவாதம்" என்று முத்திரை குத்தி பரப்புரை செய்து வருகின்றனர். தங்களது பிரிவினைவாத பரப்புரை  "மெய்ப்பிக்கப் பட்டு விட்டதாக" அவர்கள் இனி வாதாடலாம். வட மாகாண சபையை இயங்க விடாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கலாம்.

ஈழத்தமிழரின் அரசியல் நிலவரம், 77 ம் ஆண்டுக்கு திரும்பிச் சென்றுள்ளதை நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல் சுட்டிக் காட்டுகின்றது. வடக்கில் எழுந்த தமிழர் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையும், அதற்கு எதிர்வினையாக தெற்கில் எழுந்த பிரிவினை குறித்த அச்சமும் மீண்டும் எதிரொலிக்கின்றது. ஆனால், இந்த முறுகல் நிலை மீண்டும் ஒரு ஆயுத மோதலுக்கு இட்டுச் செல்லும் என்பது ஒரு மிகைப் படுத்தப் பட்ட கூற்றாகும். 

ஒரு பக்கம் சிங்கள இனவாதிகளும், மறுபக்கம் தமிழ் இனவாதிகளும் மீண்டும் ஒரு யுத்த சூழ்நிலை உருவாக வேண்டுமென்று விரும்பலாம். ஆனால், வெளியில் இருந்து இலங்கை அரசியலை தீர்மானிக்கும் வல்லமை பொருந்திய சக்திகளான, இந்தியாவும், மேற்குலக நாடுகளும் அதை எதிர்பார்க்கவில்லை. ஆகவே, சர்வதேச அழுத்தம் காரணமாக, ராஜபக்ஷ அரசும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வாய்ப்புண்டு. இந்தத் தேர்தலிலும், வழமையாக தமிழ் மக்கள் தான் தோற்கடிக்கப் பட்டுள்ளனர்.   


வட மாகாண சபைத் தேர்தல் குறித்த முன்னைய பதிவுகள்:

2.மாகாண சபைத் தேர்தல் : வடக்கே வீசும் புயல்
1.வட மாகாண சபைத் தேர்தல் - ஒரு முன்னோட்டம்

Tuesday, July 23, 2013

தமிழரின் தலைவிதியை தீர்மானிக்கும் 13 ம் இலக்கச் சட்டம்

இலங்கையில், வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் தருணத்தில், 13 ம் திருத்தச் சட்டம் பற்றிய சர்ச்சையும் சூடு பிடித்துள்ளது. 2009, ஈழப்போர் முடிவுக்கு முன்னர், 13 ம் திருத்தத்திற்கு அதிகமாகவே உரிமைகளை தருவதாக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வாக்குறுதி அளித்திருந்தார். தற்போது அவரே, ஏற்கனவே உள்ள 13 ம் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார். ஆனால், பொதுநல அமைப்பு நாடுகளின் உச்சி மகாநாடு நடக்க இருப்பதாலும், இந்திய அழுத்தம் காரணமாகவும் அந்த எண்ணம் கைவிடப் பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில், 13ம் திருத்தச் சட்டம் மட்டுமல்ல, "இந்திய-இலங்கை ஒப்பந்தம்" முழுமையாக நடைமுறைப் படுத்தப் பட வேண்டும் என்று அது விரும்புகின்றது.

இதற்கிடையில், தென்னிலங்கையில் 13 ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடுமையான பிரச்சாரம் நடக்கின்றது. சட்டத்தில் மிக முக்கியமான அம்சங்களான, காணி, பொலிஸ் அதிகாரம் கொடுக்க முடியாது என்று அரசு பிடிவாதமாக மறுத்து வருகின்றது. "இந்த நாட்டில் இரண்டு இராணுவங்கள் இருக்க முடியாது" என்று கோத்தபாய ராஜபக்ச கூறி வருகின்றார். ஏற்கனவே, புலிகளின் இராணுவம் இருந்த காலங்களை, சிங்கள மக்கள் நினைவுகூர வேண்டுமென்பதாக அந்தப் பேச்சுகள் அமைந்துள்ளன.

உண்மையில், பொலிஸ், காணி அதிகாரங்கள் அனைத்து மாகாண சபைகளுக்கும் பொதுவான சட்டமாக இருந்த போதிலும், வடக்கு, கிழக்கை தவிர்ந்த பிற மாகாண அரசுகள் அவற்றில் அக்கறை கொள்வதில்லை. குறிப்பாக, வடக்கு-கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அவை முக்கியமான பிரச்சினைகள். அரை நிலப்பிரபுத்துவ, அரை முதலாளித்துவ சமுதாயத்தை கொண்ட இலங்கையில், நில உரிமை மக்களின் வாழ்வாதாரமாக கருதப் பட வேண்டியது. இன்று நடைபெறும் இராணுவத்தினரின் நில அபகரிப்புகள், உயர் பாதுகாப்பு வலையம், இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் என்பன, காணி அதிகாரம் கொண்ட மாகாண சபையின் தேவையை தமிழ் மக்களுக்கு உணர்த்தி நிற்கின்றது. மேலும் பொலிஸ் அதிகாரமானது சிவில் சமூகத்தை நடைமுறைப் படுத்துவதுடன், இராணுவத்தையும் முகாம்களுக்குள் முடங்க வைக்கும்.

இது போன்ற பல காரணங்களால், மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரத்தை வாங்கிக் கொள்வதில், தமிழ் மக்கள் உறுதியாக நிற்கின்றனர். மத்திய அரசும், அதே காரணங்களுக்காக அதிகாரப் பரவலாக்கலுக்கு மறுத்து வருகின்றது. மத்திய அரசு, மறுப்பதற்கு சரியான காரணத்தை தெரிவிக்கவில்லை. இனவாதம், அதிலிருந்து எழும் ஐயப்பாடுகள் மட்டுமே மூல காரணமாக இருப்பதாக தெரிகின்றது. அது எவ்வாறு அமைப்பு வடிவமாகின்றது என்பதை, இந்தக் கட்டுரையின் இறுதியில் பார்ப்போம். தமிழ் தேசியக் கூட்டணி, மகிந்த அரசுக்கு "செக்" வைப்பதாக நினைத்துக் கொண்டு, முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரனை, வட மாகாண சபையின் முதல்வராக்க விரும்பியிருக்கிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன:

1. 2009 க்கு முன்பிருந்த தமிழ் தேசியக் கூட்டணி, புலிகளினால் உருவாக்கப் பட்டது. அவர்கள் சொல்லிக் கொடுப்பதை, இராஜதந்திர மொழியில் கூறுவதற்கு பழக்கி இருந்தனர். புலிகளின் அழிவுடன், சம்பந்தர் 180 பாகையில் திரும்பி, அதிகாரத்தை தனது கையில் எடுத்த போதிலும், ஸ்ரீலங்கா அரசு அவர்களை இன்றைக்கும் "புலிகளின் கைக்கூலிகள்" என்று கூறி வருகின்றது. உள்நாட்டில் புலிகள் இல்லாவிட்டாலும், வெளிநாடுகளில் இருந்து கொண்டு ஆட்டுவிக்கிறார்கள் என்று பயமுறுத்துகின்றது. இதனால், த.தே.கூ. விக்னேஸ்வரனை தெரிவு செய்ததன் மூலம், புலி முத்திரை குத்தப் படுவதில் இருந்து தப்பிக்க நினைக்கிறது. விக்னேஸ்வரன் ஸ்ரீலங்கா அரச கட்டமைப்பில் முக்கிய பதவி வகித்தவர் என்பதால், புலிகளின் அரசியலை ஏற்றுக் கொள்ளாத ஒருவராக இருந்தார்.

2. ஈழப்போரின் முடிவில், புலிகள் அழிந்த பின்னர், அவர்களின் ஜென்மப் பகைவர்களான PLOTE தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்துள்ளது. ஈழ அரசியல் வரலாற்றில் இது ஒன்றும் புதினமல்ல. புலிகள் காலத்தில் உருவாக்கப் பட்ட த.தே.கூட்டமைப்பில் முக்கிய தலைவராக இருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்பு இந்திய இராணுவ ஆட்சிக் காலத்தில் புலி வேட்டையாடிக் கொண்டிருந்தார். சம்பந்தர் கூட்டணியில் இருந்த காலத்தில், புலிகளின் கொலைப் பட்டியலில் இருந்தவர். அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நலன்கள் மட்டுமே உள்ளன. அந்த அடிப்படையில், இன்னொரு தமிழ் தேசிய இயக்கமான PLOTE, த.தே. கூட்டமைப்பில் இணைந்ததில் வியப்பில்லை. விக்னேஸ்வரனின் தெரிவானது, முன்பு த.தே. கூட்டமைப்பில் இருந்திராத PLOTE, மற்றும் சில உதிரிகளுக்கும் உவப்பான விடயம் தான்.

3. புலிகள் மற்றும் பல ஆயுதபாணி இயக்கங்கள் தமிழ் தேசிய அரசியல் களத்தில் இறங்குவதற்கு முன்னர், மேட்டுக்குடி அரசியல் கோலோச்சியது. "மெத்தப் படித்தவர்கள் அரசியலில் ஈடுபட்டால், நேர்மையாக நடந்து கொள்வார்கள், ஊழல் செய்ய மாட்டார்கள்..." என்ற மாயை, பாமர மக்கள் மத்தியில் பரவியிருந்தது. புலிகளின் ஆதிக்கம் நிலவிய காலத்தில், அதிகம் படித்திராத, தமிழ்ச்செல்வன் போன்ற சாதாரண பாட்டாளிவர்க்க புத்திஜீவிகள் முன்னுக்கு வரக் கூடிய வாய்ப்பிருந்தது. அவர்கள் சர்வதேச பேச்சுவார்த்தைகளிலும் பங்குபற்றினார்கள். வெளிப் பார்வைக்கு புலிகளை ஆதரிப்பதாக காட்டிக் கொண்டாலும், ஈழத் தமிழ் மேட்டுக்குடியினரால் இதனை ஜீரணிக்க முடியாதிருந்தது. தற்போது, சம்பந்தரின் காலத்தில், மேட்டுக்குடி அரசியல் மெல்ல மெல்ல தலையெடுகின்றது. கட்சிக்கு சம்பந்தமில்லாத அறிவுஜீவிகள் வளைத்துப் போடப் படுகின்றனர். முன்பொரு தடவை சுமேந்திரன் எம்.பி. ஆனதைப் போல, தற்போது விக்னேஸ்வரன் முதல்வராக்கப் படுகின்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் உட்கட்சி ஜனநாயகம் கிடையாது. கட்சி உறுப்பினர்களுக்கு வாக்குரிமை கிடையாது. அவர்கள் தமக்குப் பிடித்த பிரதிநிதியை ஒரு ஜனநாயக தேர்தல் மூலம் தெரிவு செய்ய முடியாது. எல்லாவற்றையும் தலைமையில் உள்ளவர்களே முடிவு செய்கின்றனர். இன்றைக்கு இருக்கும் தமிழ் தேசிய தலைமை என்ற அடிப்படையில், த.தே.கூட்டமைப்பிற்கு தமது தார்மீக ஆதரவை வழங்கும் வலதுசாரித் தமிழர்கள் கூட அதைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப் படுவதில்லை. (அதே நபர்கள், ஸ்டாலின், மாவோவின் "சர்வாதிகாரம்" பற்றி எமக்குப் பாடம் எடுப்பார்கள். அறிவுஜீவிகள் அல்லவா? நாங்களும் கேட்டுக் கொள்ள வேண்டும்.) உட்கட்சி ஜனநாயகமற்ற த.தே.கூ., விக்னேஸ்வரனை நியமிப்பதில் எந்தத் தடையும் இருக்கவில்லை. சம்பந்தர், சுரேஷ், மாவை போன்ற கட்சித் தலைவர்கள் வீட்டுக்கு வந்து கேட்டதால், தாம் தேர்தலில் நிற்க ஒப்புக் கொண்டதாக, விக்னேஸ்வரனே தெரிவித்திருக்கிறார். (பார்க்க: "வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பதே நல்லது: விக்னேஸ்வரன்", http://tamil.dailymirror.lk/2010-08-31-14-50-37/75405-2013-07-17-12-18-02.html)

 "ஒரு முன்னாள் நீதியரசர், மாகாண சபைக்கு வழங்கப் படாத அதிகாரங்கள் பற்றியும், 13ம் சட்டத் திருத்தத்தின் முக்கியத்துவம் குறித்தும், சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறும் பொழுது, அவர்கள் கேட்பார்கள்," என்று த.தே.கூ. தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றது. சர்வதேசம் எப்போதும் தமிழ் மக்களின் பிரதிநிதி யார், அவர் என்ன சொல்கிறார் என்று தான் பார்க்கிறார்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை, பல்கலைக்கழகத்தை எட்டியும் பார்த்திராத பிரபாகரன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும், சர்வதேசம் மதிப்புக் கொடுத்தது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சொல்வதற்கு அன்டன் பாலசிங்கம் இருந்த போதிலும், பிரபாகரன் தமிழில் சொன்னவற்றை எல்லாம், சர்வதேச சமூகம் தானாகவே மொழிபெயர்த்து அறிந்து கொண்டது. புலிகள் இயக்கத்தின் ஆயுத பலம் மட்டுமே அதற்கு காரணம் என்று கூற முடியாது. தமிழர்களின் இனப்பிரச்சினை குறித்த பிரக்ஞை எழுந்த காலத்தில், அந்த மக்களின் பிரதிநிதி ஒரு சிறு கிராமத்தில் நிகழ்த்திய உரை கூட சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இதனை நம்ப முடியாதவர்கள், விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதர கேபிள் ஆவணங்களை வாசித்துப் பார்க்கவும்.

ஆகவே, அறிவுஜீவிகளின் அரசியல் பிரவேசம், சமூகத்தில் அது குறித்த பிரமையில் உள்ள பிரிவினரை மட்டுமே கவரப் போகின்றது. ஏற்கனவே, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் மத்தியதர வர்க்கத்தினர் விக்னேஸ்வரனின் நியமனத்தை வரவேற்க ஆரம்பித்துள்ளனர். சிங்கள மத்தியதர வர்க்கமும் அதற்கு விதி விலக்கல்ல. இந்த சமூகத்தினர் மத்தியில் தான் அது பெரும் தாக்கத்தை உண்டாக்கப் போகின்றது. ஸ்ரீலங்காவில் உள்ளது, "பூர்ஷுவா வர்க்கத்தினரின் ஜனநாயகம்" என்பதைத் தான் மேற்படி சம்பவங்கள் கோடி காட்டுகின்றன. விக்னேஸ்வரனின் நியமனத்தின் மூலம், சம்பந்தர் மகிந்த ராஜபக்சவை மேற்கொண்டு நகர முடியாத அளவுக்கு செய்து விட்டதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், ராஜபக்ச அரசுக்கு, சிங்கள இனவாதம் என்றைக்கும் கைகொடுக்கும் சர்வரோக நிவாரணி ஆகும். அதனை மகிந்த செய்யத் தேவையில்லை. மகிந்த காலால் இட்ட பணியை தலையால் செய்து முடிப்பதற்கு, அவரது எடுபிடிகள் காத்திருக்கிறார்கள்.

வட மாகாண சபைத் தேர்தலில், த.தே. கூட்டமைப்பு வெற்றி பெற்றால், அதையே காட்டி இனவாத பிரச்சாரம் செய்வதற்கு அரசு தயாராகி வருகின்றது. த.தே.கூ. வின் வெற்றியை பிரிவினைவாதமாகவும், இன்னும் சொல்லப் போனால், இந்திய விஸ்தரிப்புவாதமாகவும் திரித்துக் கூறும். அதற்கான சமிக்ஞைகள் இப்போதே தெரிய ஆரம்பித்துள்ளன. அரச நாளேடான டெயிலி நியூஸ் பின்வருமாறு எழுதுகின்றது: "13 ம் திருத்தச் சட்டம், அகண்ட தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான முதல் படி!" அதற்கு சொல்லப்படும் காரணங்கள் முக்கியமானவை:
1. தமிழ்நாட்டில் உள்ளவர்கள்,(ஈழத்)தமிழர்களை இலங்கையின் பிரஜைகளாக அங்கீகரிக்க மறுக்கிறார்கள். தமிழர்கள் என்ற இன அடையாளத்தை வலியுறுத்துகிறார்கள்.
2. அவர்கள் புலிகளை ஆதரிக்கிறார்கள். புலிகளுக்கு நிதியும், பயிற்சியும் கொடுத்தார்கள்.
3. (ஈழத்) தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கையில் தலையீடு செய்யுமாறு, இந்திய மத்திய அரசை வற்புறுத்துகிறார்கள்.
4. அவர்கள் தங்களது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள, த.தே.கூ. இனை பயன்படுத்துகின்றனர்.
5. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களைக் கொண்டு, ஸ்ரீலங்கா அரசுக்கு எதிரான மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய பிரச்சாரம் செய்கின்றார்கள்.
(3 A WAS A MARKER FOR A LARGER TAMIL NADU, http://www.dailynews.lk/?q=features/13-was-marker-larger-tamil-nadu)
இந்தக் காரணங்கள் எல்லாம், எமக்கு வேடிக்கையாக தோன்றலாம். தமிழ் தேசிய அரசியலில் அவை விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட சர்வ சாதாரணமான விடயங்கள். ஆனால், சிங்கள இனவாத சக்திகள் அவற்றை தமது அரசியலுக்கு சார்பாக பயன்படுத்திக் கொள்கின்றன. மேற்குறிப்பிட்ட விடயங்கள் யாவும், சாதாரண சிங்கள மக்கள் மனதில் அச்சவுணர்வை உண்டாக்கும் வகையில் திரிபு படுத்தப் படலாம்.

மேலேயுள்ள குறிப்புகளில் இருந்து ஒரு விடயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இந்தியாவில் உள்ள தமிழ் தேசியவாத சக்திகள், ஈழத் தமிழர் நலன் சார்ந்து எடுக்கும் அரசியல் நகர்வுகள் யாவும், இலங்கையில் சிங்கள இனவாத தீயை மூட்டுவதற்கான விறகாக பயன்படுத்தப் படுகின்றன. அது ஒரு ஆங்கிலப் பத்திரிகை என்பதால், அந்தளவோடு நிறுத்திக் கொள்கிறார்கள். சிங்களப் பத்திரிகைகளில் இன்னும் சத்தமாகக் குலைப்பார்கள். சிங்கள இராணுவ வீரர்கள், விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனிதர்கள் போன்று எழுதுவார்கள். இராணுவத்தினர் புரிந்த படுகொலைகள் குறித்து, ஒரு சிங்களவர் மனித உரிமை மீறல் என்ற அடிப்படையில் விமர்சித்தாலும், அவரை தேசத் துரோகி அல்லது இனத் துரோகி என்று முத்திரை குத்தி, சமூகத்தில் இருந்து ஒதுக்கி விடுவார்கள். அதற்குப் பிறகு, நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் கூட அவரைத் தீண்ட மாட்டார்கள்.

சிங்கள இனவாதத்திற்கு எதிராக தமிழ் இனவாதத்தை வளர்ப்பது பிரச்சினைக்கு தீர்வாகாது. அது பிரச்சினையை இன்னும் சிக்கலாக்கவே பயன்படும். நாம் ஏன் வேறொரு பாதையை கண்டுபிடிக்கக் கூடாது? சர்வதேசத்திலோ, இந்தியாவிலோ, அல்லது தமிழ்நாட்டிலோ தங்கியிராத ஈழத் தமிழ் தேசியத்தை உருவாக்குவது அவசியம். சில நேரம், பெயர்கள் பிரச்சினையை கொடுக்கலாம். நாங்கள் தமிழீழம் என்று சொல்லாமல் விட்டால் கூட, தமிழ் தேசியம், சமஷ்டி, சுய நிர்ணய உரிமை போன்ற சொற்கள், சிங்கள மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி விட போதுமானதாக இருக்கின்றன. அதனால் தான், எந்த பெரும்பான்மையின (சிங்கள) கட்சியும் அந்தச் சொற்களை உச்சரிக்கவே அஞ்சுகின்றன. சிங்கள இடதுசாரிக் கட்சிகளும் அதற்கு விதிவிலக்கல்ல. அதற்காக, இடதுசாரிக் கட்சிகளையும் இனவாதிகள் என்று திட்டிக் கொண்டிருப்பதால் பிரச்சினை தீர்ந்து விடப் போவதில்லை.

இடதுசாரிக் கட்சிகள் அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும், 13 ம் திருத்தச் சட்டத்தை இரத்து செய்வதை கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதே போன்று, முஸ்லிம் காங்கிரஸ், ஈபிடிபி ஆகிய அரசை ஆதரிக்கும் சிறுபான்மையினக் கட்சிகளும் 13 ம் திருத்தச் சட்டத்தை ஆதரிக்கின்றன. அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு எதிரான ஒவ்வொரு அதிருப்தியாளரையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது தமிழர் தரப்பின் கடமை. மகிந்த அரசை கவிழ்ப்பதற்காக, தமிழர்களை கொன்ற சரத் பொன்சேகாவுக்கு ஓட்டுப் போட்டதில் குற்றமில்லை என்றால், 13 ம் திருத்தச் சட்டத்தை பாதுகாக்கும் ஐக்கிய முன்னணி ஒன்றை அமைப்பதிலும் தவறில்லை. இன்றுள்ள நிலையில், தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதை தவிர வேறு தெரிவும், தமிழ் மக்கள் முன்னால் இல்லை. அவற்றை தமிழரின் விருப்பு வாக்குகள் என்று அழைப்பதை விட, வெறுப்பு வாக்குகள் என்று சொல்வதே பொருத்தமானது. தேர்தல்களை பகிஷ்கரித்தால், தங்கள் பெயரில் கள்ள ஓட்டுக்கள் போடப்படும் என்ற பயத்திலேயே பலர் வாக்குச் சாவடிகளுக்கு செல்கின்றனர்.


இத்துடன் தொடர்பான முன்னைய பதிவுகள்:

வட மாகாண சபைத் தேர்தல் - ஒரு முன்னோட்டம்

Monday, July 15, 2013

வட மாகாண சபைத் தேர்தல் - ஒரு முன்னோட்டம்

இலங்கையில், செப்டம்பரில் நடக்கவிருக்கும் வட மாகாண சபைத் தேர்தல், பல விடயங்களில் முக்கியமானது. வட மாகாணத்தில் தான் பெரும்பான்மையான தமிழர்கள் வாழ்கின்றனர். அதனால், தவிர்க்கவியலாது வட மாகாண அரசியல் மாற்றங்கள், இலங்கைத் தமிழரின் பிரதிநிதித்துவத்தை தீர்மானிக்கும் வல்லமை பொருந்தியது.

25 வருடங்களுக்கு முன்னர், முதன் முதலாக நடத்தப் பட்ட, வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண சபைத் தேர்தலில், வட மாகாணத்தில் வாக்குப் பதிவு நடக்கவில்லை. புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக, யாரும் வேட்பு மனு போடவில்லை. அன்று, இந்திய இராணுவத்துடன் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். மட்டுமே, வேட்பு மனு தாக்கல் செய்திருந்தது. அதனால், ஈபிஆர்எல்எப் வேட்பாளர்கள் போட்டியின்றி தெரிவு செய்யப் பட்டார்கள்.

இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்துடன், வட-கிழக்கு மாகாண சபை கலைக்கப் பட்டது. அதற்குப் பிறகு, இலங்கையில் பிற மாகாண சபைகளுக்கு தேர்தல்கள் நடத்தப் பட்டாலும், வட-கிழக்கு மாகாண சபை கவனிப்பாரன்று இருந்தது. தற்போது, கிழக்கில் இருந்து பிரிக்கப் பட்ட, வட மாகாணத்தில் நடக்கும் தேர்தலில், முன்னாள் புலிப் பிரமுகர்கள், சுதந்திரக் கட்சி வேட்பாளர்களாக களமிறக்கி விடப் பட்டுள்ளனர். கேபி, தயா மாஸ்டர், தமிழினி, ராம், நகுலன் என்று ஒரு பெரிய பட்டாளமே, புலிகளை அழித்த மகிந்த ராஜபக்சவின் சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடுகின்றனர். இவர்கள், முன்னொரு காலத்தில், புலிகள் அமைப்பின் தலைவர்களாக இருந்த படியால் தான், செய்திகளில் அடிபடுகின்றனர். ஏற்கனவே, நூற்றுக் கணக்கான முன்னாள் புலி உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா இராணுவத்தில் சேர்ந்துள்ளனர். சுதந்திரக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கும் வகையில், அடி மட்டத்தில் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இதனால், நேர்மையான தேர்தல் நடப்பதும் சந்தேகமே.

வட மாகாண சபைத் தேர்தலில், இலகுவாகவே பெருமளவு வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப் படும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி வாய்ப்பை தடுப்பதற்காக, அரசு கடுமையாக முயற்சிக்கின்றது. அதற்காக பல தகிடுதத்த வேலைகளில் இறங்கியது. தனக்கேற்ற சந்தர்ப்பம் கனியும் வரையில், தேர்தலை பல வருடங்கள் தள்ளிப் போட்டது. இதிலிருந்து, சில உண்மைகள் புலனாகின்றன. புலிகள் போன்ற ஆயுதபாணி இயக்கங்கள், இலங்கை அரசிற்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்ததில்லை. அன்றிலிருந்து இன்று வரையில், இலங்கை அரசானது தமிழ் மக்களின் ஜனநாயகத் தலைமைக்கே பெரிதும் அஞ்சுகின்றது. ஒரு சிறுபான்மை இனத்தின் உரிமைகளுக்காக போராடும், ஆயுதபாணி அமைப்பை பயங்கரவாத இயக்கமாக காட்டுவதும், அதன் மூலம் சர்வதேச மட்டத்தில் ஒதுக்குவதும் அரசுக்கு இலகுவான விடயமாக இருந்தது. ஆனால், ஒரு ஜனநாயக தேர்தல் கட்சியை அவ்வாறு செய்ய முடியாது. இந்த உண்மை, ஏற்கனவே பாலஸ்தீன பிரச்சினையில் நிதர்சனமாகியது.

நடக்கவிருக்கும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுவதற்கு, முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவு செய்யப் பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, முதலமைச்சராக வருவார் என இப்போதே கருதப்படும் விக்னேஸ்வரனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, ஈழத் தமிழ் மத்தியதர வர்க்கத்தினர் மத்தியில் மகிழ்ச்சிப் பிரவாகம் கரை புரண்டு ஓடுகின்றது. சிங்கள பேரினவாத அரசில், நீதியரசர் பதவி வகித்த ஒருவர், அந்த அதிகாரக் கட்டமைப்பின் மீதான தனது விமர்சனங்களை எங்காவது பதிவு செய்துள்ளாரா என்று தெரியவில்லை. 

மேற்கத்திய முதலாளித்துவ நலன்களுக்கு சார்பான இலங்கை அரச கட்டமைப்பில், பாராளுமன்ற அமைச்சர்கள் மட்டுமல்லாது, நீதித் துறையினரும் கூட அரசின் அங்கமாக இருப்பார்கள். நாங்கள் "சிங்களப் பேரினவாதம்" என்று சொல்லும் பொழுது, ஒட்டுமொத்த அரச கட்டமைப்பையும் குற்றஞ் சாட்டுகின்றோம் என்பதை பலர் உணர்வதில்லை. அதனால் தான், தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடங்கிய ஆரம்ப காலங்களில் நீதிமன்றங்கள் எரிக்கப் பட்டன. நீதிபதிகளுக்கு கொலைப் பயமுறுத்தல்கள் விடுக்கப் பட்டன. ஆகவே, அத்தகைய பின்னணியை கொண்ட ஒருவர், எந்தளவுக்கு தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வார் என்பது கேள்விக்குறியே. மேலும், விக்னேஸ்வரன் தெரிவு தொடர்பாக, சம்பந்தரும், மகிந்த ராஜபக்சவும் ஒரு பொது உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிய வருகின்றது. 

மகிந்தவின் சுதந்திரக் கட்சி, முன்னாள் புலித் தலைவர்களை சேர்த்துக் கொண்டு, ஈபிடிபி யுடன் கூட்டணி வைத்துக் கொண்ட போதிலும், பெரும்பான்மை தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே வாக்களிப்பார்கள் என்று எல்லோரும் நம்புகின்றனர். முன்பு, 13 ம் திருத்தச் சட்டத்தின் படி வாக்குறுதி அளிக்கப்பட்ட காணி, பொலிஸ் உரிமைகள் பற்றி, சிறு முணுமுணுப்பு கூட தற்போது கிடையாது. தமிழ் மக்களின் முக்கிய கோரிக்கைகளான அந்த உரிமைகளையும் விட்டுக் கொடுத்தால், வடக்கு மாகாண சபை எந்த அதிகாரங்களை நடைமுறைப் படுத்தப் போகின்றது?

முன்பிருந்த வட- கிழக்கு மாகாண சபை கொண்டிருந்த குறைந்த பட்ச அதிகாரங்களை கூட இல்லாதொழித்து விட்டு நடைபெறும் வடக்கு மாகாண சபைத் தேர்தல், தமிழ் மக்களுக்கு பெரிய நம்பிக்கைகளை வழங்கப் போவதில்லை. ஆனால், மேற்பார்வைக்கு தெரியக் கூடிய மாகாண சபை கட்டமைப்பு இருப்பதை இந்தியாவும் விரும்புகின்றது. அண்மையில், த.தே.கூ., இந்திய அரசு, இலங்கை அரசு ஆகியவற்றுக்கு இடையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையின் விளைவாகவும், விக்னேஸ்வரனை வடக்கு மாகாண முதலமைச்சராக்கும் முடிவு அமைந்துள்ளது.

Thursday, August 04, 2011

தேர்தலில் வென்றால் தமிழீழம் மலரலாம்

இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்களில், ஜூலை மாதம் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. தமிழ் வாக்காளர்கள் பெருமளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தமை, தமிழ் தேசிய முகாமில் பல எதிர்பார்ப்புகளை தோற்றுவித்துள்ளது. தமிழ் மக்கள் ஒட்டு மொத்தமாக, "தமிழ் தேசியத்திற்கு, அல்லது தமிழீழ தனியாட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததாக" பலர் பொழிப்புரை வழங்கி வருகின்றனர். இலங்கையிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும் தமிழ் தேசியவாதிகள் இது போன்ற பரப்புரைகளை, தம் வசம் உள்ள ஊடகங்களில் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, சிறிலங்கா அரசானது கூட்டமைப்பின் வெற்றியை சிறுமைப்படுத்தியுள்ளது. பாஸிச ஜாதிக ஹெல உறுமய ஒரு படி மேலே சென்று, "இந்த தேர்தல் வெற்றியைக் காட்டி, சமஷ்டி என்றெதுவும் கேட்டுக் கொண்டு வரக் கூடாது..." என்று மிரட்டியுள்ளது. தமிழர்களின் பிரச்சினை ஒருபுறம் இருக்கையில், தீவிர தமிழ் தேசியவாதிகளும், தீவிர சிங்கள தேசியவாதிகளும், ஒரே புள்ளியில் நின்று கொண்டு பேசுகின்றமை இங்கே புலனாகும். இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் நடைபெற்ற தேர்தல்களில், வட- கிழக்கு மாகாணங்களில், தமிழ் தேசியத்தை முன்னெடுக்கும் பிராந்தியக் கட்சி வெற்றி பெறுவது வழக்கமாக நடந்து வந்துள்ளது. மறு பக்கம், சிங்கள இனவாதக் கட்சிகளும், "தமிழர்கள் நாட்டை பிரிக்கப் போகும் அபாயத்திற்கு ஆதாரமாக" தமிழ் தேசியக் கட்சிகளின் வெற்றியை சுட்டிக் காட்டி ஓட்டு சேகரிப்பார்கள்.

1976 ம் ஆண்டு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் வட்டுக்கோட்டை மகாநாட்டில், தமிழரின் குறிக்கோள் தமிழீழம் என்ற தீர்மானம் எடுக்கப் பட்டது. 1977 நடந்த பொதுத் தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணி அமோக வெற்றி பெற்று, போட்டியிட்ட அனைத்து ஆசனங்களையும் கைப்பற்றியது. ஓரிரு வருடங்களுக்கு முன்னர் தான், வட-கிழக்கு மாகாணங்களில் எதிரும் புதிருமாக போட்டியிட்டு வந்த இரண்டு தமிழ்க் கட்சிகள் "தமிழர் விடுதலைக் கூட்டணி" என்ற பெயரில் ஒன்று சேர்ந்தன. அன்றைய நாட்களில், தமிழர்கள் அடைந்த உற்சாகத்தை சொல்லி மாளாது. "தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டார்கள். விரைவில் தமிழீழம் கிடைத்து விடும்." என்று நம்பினார்கள். தமிழ் தேசிய அரசியவாதிகளும், "அடுத்த வருடம் தமிழீழத்தில் தைப் பொங்கல் கொண்டாடுவோம்" என்று நம்பிக்கையை விதைத்து வந்தனர்.

பாராளுமன்றத்திற்கு தெரிவானதும், சிங்கள அரசு வழங்கும் சலுகைகளை பெற்றுக் கொண்டு, பதவி தந்த சுகத்தை அனுபவிப்பது, தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கு வாடிக்கை. கொழும்பு நகரில் அரசு கொடுத்த பங்களாவில் குடியிருந்து கொண்டு, தொகுதிப் பக்கம் எட்டியும் பார்க்க மாட்டார்கள். தங்கள் பிள்ளைகளைக் கூட "தமிழீழத்தில்" கல்வி கற்க விடாமல், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பார்கள். அன்றைய தமிழரசுக் கட்சி முதல், இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரையில், இந்த நிலையில் மாற்றமெதுவும் வந்து விடவில்லை. 1977 தேர்தல் வெற்றிக்குப் பின்னர், தமிழீழம் வராததைக் கண்ட இளைஞர்கள் பொறுமை இழந்தார்கள். அதற்குப் பிறகு நடந்த மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலில், பிரச்சாரம் செய்ய சென்ற வேட்பாளர்களை கேள்வி கேட்டார்கள். "தம்பி மாருக்கு இதெல்லாம் புரியாது. கத்தி முனையில் நடப்பதைப் போன்று அரசுடன் பேசிக் கொண்டிருக்கிறோம்..." என்று தமிழ் தேசிய அரசியல்வாதிகள் சமாளிப்பார்கள். உண்மையில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் நோக்கம், அரசுடன் பேரம் பேசி அதிக சலுகைகளை பெற்றுக் கொள்வது. பேரம்பேசல்களில் கிடைக்கும் ஆதாயங்கள், சிறு தொகையினரான தமிழ் மேட்டுக்குடிக்கு போய்ச் சேரும், என்ற விடயம் அப்பாவி வாக்காளர்களுக்கு தெரியாது. அவர்களைப் பொறுத்த வரையில், "தமிழீழம் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான சர்வரோக நிவாரணியாக" கருதப் பட்டது.

தமிழரின் அதிக பட்ச கோரிக்கையாக தமிழீழத்தை முன்மொழிந்த செயற்பாடானது, எதிர்காலத்தில் அவர்களுக்கே எமனாக அமைந்து விட்டது. தமிழ் தேசிய முகாமில், மிதவாதிகள், தீவிரவாதிகள் என்று இரண்டு பிரிவுகள் தோன்றின. தேர்தல்களில் போட்டியிட்ட வயதான அரசியல்வாதிகள் மிதவாதிகளாகவும், அடிமட்ட தொண்டர்களான இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் தீவிரவாதிகளாகவும் மாறினார்கள். தமிழ் தேசிய தீவிரவாதிகள், பாராளுமன்ற தேர்தல்களில் நம்பிக்கை இழந்திருந்தனர். ஆயுதப் போராட்டத்தை நாடினார்கள். அதற்கு மாறாக, காந்தீய வழியை கைவிடாத தமிழ் தேசிய மிதவாதிகள், இன்னமும் பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருந்தனர். இவ்வாறு இரு வேறுபட்ட திசைகளில் சென்ற தமிழ் தேசியவாதிகள், பிற்காலத்தில் ஒருவரை மற்றவர் எதிரியாக கருதும் சூழ்நிலை உருவாகியது. தமிழர் விடுதலைக் கூட்டணி தனக்கென சொந்தமாக ஆயுதக்குழுவை உருவாக்கும் முயற்சி தோல்வியுற்றது. அதனால், அவர்களின் கட்டுப்பாட்டை மீறி வளர்ந்த தமிழீழ ஆயுதபாணி இயக்கங்களின் வன்முறைக்கு இலக்காகினர். வளர்த்த கடா மார்பில் முட்டியது போல, தமிழ் அரசியல் தலைவர்கள், தாம் வளர்த்து விட்ட தமிழ்த் தேசியத்திற்கு பலியானார்கள்.

ஈழப்போராட்டத்தில் புலிகள் அமைப்பு தீர்மானகரமான சக்தியாக வளர்ந்து விட்ட காலங்களை, தமிழர் விடுதலைக் கூட்டணி கொழும்பில் இருந்து அரசியல் நடத்தியது. சிங்கள அரசு நடத்தும் தேர்தல்களை பகிஷ்கரிக்குமாறு, புலிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணி, புலிகளை எதிர்த்துக் கொண்டு தேர்தல்களில் போட்டியிட்டது. அந்த தேர்தல்களிலும் பெருமளவு தமிழ் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றனர். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் பலர், அன்று புலிகளின் நிலைப்பாட்டை ஆமோதித்திருந்தனர். தேர்தலில் போட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் துரோகிகள் என்று கூறினார்கள்.

இன்று இரு தசாப்தங்களுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வைத்துப் பார்க்கும் பொழுது, தமிழ் தேசியவாதிகள் மத்தியில் மிதவாதிகளின் கை ஓங்கியுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.
அதாவது முப்பது வருடங்களுக்கு முன்பிருந்த நிலைக்கு மீண்டும் வந்துள்ளோம். உண்மையில், சிங்கள அரசும், இந்திய அரசும், மற்றும் சர்வதேச நாடுகளும் இது போன்ற மாற்றத்தை விரும்பியிருக்கலாம். முன்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலங்களில், புலிகள் அமைப்பை அரசியல் கட்சியாக்குமாறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், புலிகள் அமைப்பினர் அந்த அழுத்தங்களுக்கு அடிபணியாததால் அழிக்கப்பட்டனர். பல இந்திய, மேற்கத்திய இராஜதந்திரிகள் அதனை உறுதிப் படுத்தியுள்ளனர்.

தொன்னூறுகளில் இந்திய இராணுவத்தை வெளியேற்றிய பின்னர், இலங்கை அரசுடன் பேசிய புலிகள், "விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி" என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை பதிவு செய்திருந்தனர். பிற்காலத்தில் பிரபாகரன்- மாத்தையா உள்முரண்பாடுகளால் கட்சி கலைக்கப்பட்டு விட்டது. நோர்வேயின் அனுசரணையுடன், இறுதியாக நடந்த பேச்சுவார்த்தைகளில் அந்தக் கட்சியை ஸ்தாபன மயப்படுத்துமாறு மத்தியஸ்தர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால், புலிகளின் நோக்கம் வேறாக இருந்தது. ஒரு காலத்தில் "புலி எதிர்ப்பாளர்களாக" கருதப்பட்ட, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈபிஆர்எல்ப், டெலோ போன்ற கட்சிகளில் இருந்து ஒரு சிலரை தேர்ந்தெடுத்து, "தமிழ் தேசியக் கூட்டமைப்பு" என்ற புதிய கட்சி உருவாக்கப்பட்டது.

அன்றிருந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு போன்று செயற்பட்டு வந்தது. அந்தக் கட்சியின் உறுப்பினர்கள், "புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்," என்று பகிரங்கமாக அறிவித்திருந்தனர். இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவம் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டது. உண்மையில், தமிழ்ப் பிரதேசங்களில் இடம்பெற்ற தேர்தல்களில், ஏற்கனவே போட்டியிட்டு வந்த மிதவாத தமிழ் அரசியல் தலைமையை, புலிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தினார்கள். கடந்த முப்பதாண்டு ஆயுதப்போராட்ட கால வரலாற்றில், புலிகள் தமக்கென அரசியல் கட்சியை உருவாக்காதது ஏன்? தேர்தல் என்று வந்து விட்டால், தமிழ் மக்கள் எப்போதும் மிதவாதிகளுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்ற புரிதலால் இருக்கலாம்.

வடக்கு- கிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், தேர்தல் என்று வந்து விட்டால், ஏதோ ஒரு வகையில் தமது எதிர்ப்பை பதிவு செய்யத் தயங்குவதில்லை. எண்பதுகளின் இறுதியில், இந்திய இராணுவத்தின் வருகையுடன் அந்தப் போக்கு ஆரம்பமாகியது. அதற்கு முன்னர் சுமார் ஐந்து வருடங்களாக நடந்த முதலாம் கட்ட ஈழப்போரின் முடிவில் நடந்த முதலாவது பாராளுமன்ற தேர்தலில் அது வெளிப்பட்டது. வடக்கு- கிழக்கில் நிலை கொண்டிருந்த இந்தியப் படைகள், ஈபிஆர்எல்ப், ஈஎன்டிஎல்ப் போன்ற கட்சிகளை ஆதரித்தன. அந்தக் கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆயுதங்களுடன் அடாவடித்தனம் செய்து திரிந்ததால், தமிழ் மக்கள் அதிருப்தியடைந்திருன்தனர். இதனால், அன்றைய காலத்தில் ஆயுத வன்முறையில் ஈடுபடாதிருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களுக்கு வாக்களித்தனர். அநேகமாக, வட- கிழக்கு மாகாணங்களில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் பாராளுமன்றத்திற்கு தேர்வானார்கள். தேர்தல்களுக்கு முந்திய காலங்களில், ஈரோஸ் தமிழ் தேசியத்தில் அதிக ஆர்வமற்ற மார்க்சிய இயக்கமாக அறியப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது. அன்று தலைமறைவு இயக்கமாக இருந்த புலிகளும், ஈரோஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவளித்திருந்தனர்.

இன்று, வட- கிழக்கு மாகாணங்களில் இராணுவமும், அரசுக்கு ஆதரவான கட்சிகளை சேர்ந்தவர்களும் தான், உண்மையான அதிகாரத்தை கையில் வைத்திருக்கின்றனர். வடக்கில் ஈபிடிபி, கிழக்கில் கருணா, பிள்ளையான் அணி என்பன தமிழ் மக்கள் மேல் அதிகாரம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் அரசுக்கு ஆதரவானவர்கள் என்பதால், அதிகார துஷ்பிரயோகம் குறித்து யாராலும் கேள்வி எழுப்ப முடியாத சூழ்நிலை அங்கு நிலவுகின்றது. தமிழ் மக்கள் தேர்தல் காலத்தில் மட்டுமே தமது அதிருப்தியை காட்ட முடியும். மக்கள் தினசரி நிஜத்தில் சந்திக்கும் அதிகாரத்தை அசைக்க முடியாததால், அரசு விரும்பாத எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கின்றனர். சுருக்கமாக, இது எதிர் வாக்குகள். தமிழகத்தில் திமுக வுக்கு எதிராக அதிமுக வுக்கு வாக்களிப்பது போன்றது. இது போன்ற தேர்தல் முடிவுகள் இதற்கு முன்னமும் கிடைத்துள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் வென்றாலும், அவர்கள் தமிழ் மக்களுக்காக எதையும் சாதிக்கப் போவதில்லை. அது அங்குள்ள மக்களுக்கும் தெரியும்.

தமிழ்ப் பிரதேசங்களில் நடந்த தேர்தல் முடிவுகளை வைத்து பார்க்கும் பொழுது, ஒரு உண்மை புலனாகின்றது. இன்று வரை, தமிழ்த் தேசிய அரசியல் மக்களை பார்வையாளர்களாக வைத்திருக்கவே விரும்புகின்றது. இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை தமிழ் மக்கள் எல்லோரும் உணர்ந்துள்ளனர். இருப்பினும், தீர்வை நோக்கிய பாதையில் மக்களை அணிதிரட்டி செல்லாத வரையில், அவர்களால் முடிந்ததெல்லாம் தேர்தலில் ஓட்டுப் போட்டு எதிர்ப்பை தெரிவிப்பது தான்.

பொருளாதார வளங்களை பங்கிடுவதில் காட்டப்படும் இனரீதியான பாரபட்சம் இன்னமும் தொடர்கின்றது. தனியார் நிறுவனங்களும், சந்தைப் பொருளாதாரமும் வளர்ச்சியடைந்த இந்தக் காலத்தில் கூட, சிங்களவர்களுக்கே அதிக வேலை வாய்ப்புகள் வழங்கப் படுகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இதற்கெதிரான போராட்டத்தை நடத்துவதில்லை. இனப்பாகுபாட்டிற்கு எதிரான வெகுஜன அமைப்பை கட்டவில்லை. மாறாக இந்திய அரசியல்வாதிகள் போன்று, அறிக்கைப் போர்களில் ஈடுபடுகின்றது. ஓரிரு தடவை பாராளுமன்றத்தில் பேசி விட்டால், அல்லது ஊடகத்திற்கு அறிவித்து விட்டால் போதும் என நினைத்துக் கொள்கின்றது. இந்த விடயம் தமிழ் மக்களுக்கு தெரியாததல்ல, அவர்களைப் பொறுத்த வரையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றீடான வேறு கட்சி எதையும் காணவில்லை.