Thursday, August 04, 2011

தேர்தலில் வென்றால் தமிழீழம் மலரலாம்

இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்களில், ஜூலை மாதம் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. தமிழ் வாக்காளர்கள் பெருமளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தமை, தமிழ் தேசிய முகாமில் பல எதிர்பார்ப்புகளை தோற்றுவித்துள்ளது. தமிழ் மக்கள் ஒட்டு மொத்தமாக, "தமிழ் தேசியத்திற்கு, அல்லது தமிழீழ தனியாட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததாக" பலர் பொழிப்புரை வழங்கி வருகின்றனர். இலங்கையிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும் தமிழ் தேசியவாதிகள் இது போன்ற பரப்புரைகளை, தம் வசம் உள்ள ஊடகங்களில் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, சிறிலங்கா அரசானது கூட்டமைப்பின் வெற்றியை சிறுமைப்படுத்தியுள்ளது. பாஸிச ஜாதிக ஹெல உறுமய ஒரு படி மேலே சென்று, "இந்த தேர்தல் வெற்றியைக் காட்டி, சமஷ்டி என்றெதுவும் கேட்டுக் கொண்டு வரக் கூடாது..." என்று மிரட்டியுள்ளது. தமிழர்களின் பிரச்சினை ஒருபுறம் இருக்கையில், தீவிர தமிழ் தேசியவாதிகளும், தீவிர சிங்கள தேசியவாதிகளும், ஒரே புள்ளியில் நின்று கொண்டு பேசுகின்றமை இங்கே புலனாகும். இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் நடைபெற்ற தேர்தல்களில், வட- கிழக்கு மாகாணங்களில், தமிழ் தேசியத்தை முன்னெடுக்கும் பிராந்தியக் கட்சி வெற்றி பெறுவது வழக்கமாக நடந்து வந்துள்ளது. மறு பக்கம், சிங்கள இனவாதக் கட்சிகளும், "தமிழர்கள் நாட்டை பிரிக்கப் போகும் அபாயத்திற்கு ஆதாரமாக" தமிழ் தேசியக் கட்சிகளின் வெற்றியை சுட்டிக் காட்டி ஓட்டு சேகரிப்பார்கள்.

1976 ம் ஆண்டு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் வட்டுக்கோட்டை மகாநாட்டில், தமிழரின் குறிக்கோள் தமிழீழம் என்ற தீர்மானம் எடுக்கப் பட்டது. 1977 நடந்த பொதுத் தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணி அமோக வெற்றி பெற்று, போட்டியிட்ட அனைத்து ஆசனங்களையும் கைப்பற்றியது. ஓரிரு வருடங்களுக்கு முன்னர் தான், வட-கிழக்கு மாகாணங்களில் எதிரும் புதிருமாக போட்டியிட்டு வந்த இரண்டு தமிழ்க் கட்சிகள் "தமிழர் விடுதலைக் கூட்டணி" என்ற பெயரில் ஒன்று சேர்ந்தன. அன்றைய நாட்களில், தமிழர்கள் அடைந்த உற்சாகத்தை சொல்லி மாளாது. "தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டார்கள். விரைவில் தமிழீழம் கிடைத்து விடும்." என்று நம்பினார்கள். தமிழ் தேசிய அரசியவாதிகளும், "அடுத்த வருடம் தமிழீழத்தில் தைப் பொங்கல் கொண்டாடுவோம்" என்று நம்பிக்கையை விதைத்து வந்தனர்.

பாராளுமன்றத்திற்கு தெரிவானதும், சிங்கள அரசு வழங்கும் சலுகைகளை பெற்றுக் கொண்டு, பதவி தந்த சுகத்தை அனுபவிப்பது, தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கு வாடிக்கை. கொழும்பு நகரில் அரசு கொடுத்த பங்களாவில் குடியிருந்து கொண்டு, தொகுதிப் பக்கம் எட்டியும் பார்க்க மாட்டார்கள். தங்கள் பிள்ளைகளைக் கூட "தமிழீழத்தில்" கல்வி கற்க விடாமல், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பார்கள். அன்றைய தமிழரசுக் கட்சி முதல், இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரையில், இந்த நிலையில் மாற்றமெதுவும் வந்து விடவில்லை. 1977 தேர்தல் வெற்றிக்குப் பின்னர், தமிழீழம் வராததைக் கண்ட இளைஞர்கள் பொறுமை இழந்தார்கள். அதற்குப் பிறகு நடந்த மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலில், பிரச்சாரம் செய்ய சென்ற வேட்பாளர்களை கேள்வி கேட்டார்கள். "தம்பி மாருக்கு இதெல்லாம் புரியாது. கத்தி முனையில் நடப்பதைப் போன்று அரசுடன் பேசிக் கொண்டிருக்கிறோம்..." என்று தமிழ் தேசிய அரசியல்வாதிகள் சமாளிப்பார்கள். உண்மையில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் நோக்கம், அரசுடன் பேரம் பேசி அதிக சலுகைகளை பெற்றுக் கொள்வது. பேரம்பேசல்களில் கிடைக்கும் ஆதாயங்கள், சிறு தொகையினரான தமிழ் மேட்டுக்குடிக்கு போய்ச் சேரும், என்ற விடயம் அப்பாவி வாக்காளர்களுக்கு தெரியாது. அவர்களைப் பொறுத்த வரையில், "தமிழீழம் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான சர்வரோக நிவாரணியாக" கருதப் பட்டது.

தமிழரின் அதிக பட்ச கோரிக்கையாக தமிழீழத்தை முன்மொழிந்த செயற்பாடானது, எதிர்காலத்தில் அவர்களுக்கே எமனாக அமைந்து விட்டது. தமிழ் தேசிய முகாமில், மிதவாதிகள், தீவிரவாதிகள் என்று இரண்டு பிரிவுகள் தோன்றின. தேர்தல்களில் போட்டியிட்ட வயதான அரசியல்வாதிகள் மிதவாதிகளாகவும், அடிமட்ட தொண்டர்களான இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் தீவிரவாதிகளாகவும் மாறினார்கள். தமிழ் தேசிய தீவிரவாதிகள், பாராளுமன்ற தேர்தல்களில் நம்பிக்கை இழந்திருந்தனர். ஆயுதப் போராட்டத்தை நாடினார்கள். அதற்கு மாறாக, காந்தீய வழியை கைவிடாத தமிழ் தேசிய மிதவாதிகள், இன்னமும் பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருந்தனர். இவ்வாறு இரு வேறுபட்ட திசைகளில் சென்ற தமிழ் தேசியவாதிகள், பிற்காலத்தில் ஒருவரை மற்றவர் எதிரியாக கருதும் சூழ்நிலை உருவாகியது. தமிழர் விடுதலைக் கூட்டணி தனக்கென சொந்தமாக ஆயுதக்குழுவை உருவாக்கும் முயற்சி தோல்வியுற்றது. அதனால், அவர்களின் கட்டுப்பாட்டை மீறி வளர்ந்த தமிழீழ ஆயுதபாணி இயக்கங்களின் வன்முறைக்கு இலக்காகினர். வளர்த்த கடா மார்பில் முட்டியது போல, தமிழ் அரசியல் தலைவர்கள், தாம் வளர்த்து விட்ட தமிழ்த் தேசியத்திற்கு பலியானார்கள்.

ஈழப்போராட்டத்தில் புலிகள் அமைப்பு தீர்மானகரமான சக்தியாக வளர்ந்து விட்ட காலங்களை, தமிழர் விடுதலைக் கூட்டணி கொழும்பில் இருந்து அரசியல் நடத்தியது. சிங்கள அரசு நடத்தும் தேர்தல்களை பகிஷ்கரிக்குமாறு, புலிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணி, புலிகளை எதிர்த்துக் கொண்டு தேர்தல்களில் போட்டியிட்டது. அந்த தேர்தல்களிலும் பெருமளவு தமிழ் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றனர். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் பலர், அன்று புலிகளின் நிலைப்பாட்டை ஆமோதித்திருந்தனர். தேர்தலில் போட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் துரோகிகள் என்று கூறினார்கள்.

இன்று இரு தசாப்தங்களுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வைத்துப் பார்க்கும் பொழுது, தமிழ் தேசியவாதிகள் மத்தியில் மிதவாதிகளின் கை ஓங்கியுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.
அதாவது முப்பது வருடங்களுக்கு முன்பிருந்த நிலைக்கு மீண்டும் வந்துள்ளோம். உண்மையில், சிங்கள அரசும், இந்திய அரசும், மற்றும் சர்வதேச நாடுகளும் இது போன்ற மாற்றத்தை விரும்பியிருக்கலாம். முன்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலங்களில், புலிகள் அமைப்பை அரசியல் கட்சியாக்குமாறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், புலிகள் அமைப்பினர் அந்த அழுத்தங்களுக்கு அடிபணியாததால் அழிக்கப்பட்டனர். பல இந்திய, மேற்கத்திய இராஜதந்திரிகள் அதனை உறுதிப் படுத்தியுள்ளனர்.

தொன்னூறுகளில் இந்திய இராணுவத்தை வெளியேற்றிய பின்னர், இலங்கை அரசுடன் பேசிய புலிகள், "விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி" என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை பதிவு செய்திருந்தனர். பிற்காலத்தில் பிரபாகரன்- மாத்தையா உள்முரண்பாடுகளால் கட்சி கலைக்கப்பட்டு விட்டது. நோர்வேயின் அனுசரணையுடன், இறுதியாக நடந்த பேச்சுவார்த்தைகளில் அந்தக் கட்சியை ஸ்தாபன மயப்படுத்துமாறு மத்தியஸ்தர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால், புலிகளின் நோக்கம் வேறாக இருந்தது. ஒரு காலத்தில் "புலி எதிர்ப்பாளர்களாக" கருதப்பட்ட, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈபிஆர்எல்ப், டெலோ போன்ற கட்சிகளில் இருந்து ஒரு சிலரை தேர்ந்தெடுத்து, "தமிழ் தேசியக் கூட்டமைப்பு" என்ற புதிய கட்சி உருவாக்கப்பட்டது.

அன்றிருந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு போன்று செயற்பட்டு வந்தது. அந்தக் கட்சியின் உறுப்பினர்கள், "புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்," என்று பகிரங்கமாக அறிவித்திருந்தனர். இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவம் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டது. உண்மையில், தமிழ்ப் பிரதேசங்களில் இடம்பெற்ற தேர்தல்களில், ஏற்கனவே போட்டியிட்டு வந்த மிதவாத தமிழ் அரசியல் தலைமையை, புலிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தினார்கள். கடந்த முப்பதாண்டு ஆயுதப்போராட்ட கால வரலாற்றில், புலிகள் தமக்கென அரசியல் கட்சியை உருவாக்காதது ஏன்? தேர்தல் என்று வந்து விட்டால், தமிழ் மக்கள் எப்போதும் மிதவாதிகளுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்ற புரிதலால் இருக்கலாம்.

வடக்கு- கிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், தேர்தல் என்று வந்து விட்டால், ஏதோ ஒரு வகையில் தமது எதிர்ப்பை பதிவு செய்யத் தயங்குவதில்லை. எண்பதுகளின் இறுதியில், இந்திய இராணுவத்தின் வருகையுடன் அந்தப் போக்கு ஆரம்பமாகியது. அதற்கு முன்னர் சுமார் ஐந்து வருடங்களாக நடந்த முதலாம் கட்ட ஈழப்போரின் முடிவில் நடந்த முதலாவது பாராளுமன்ற தேர்தலில் அது வெளிப்பட்டது. வடக்கு- கிழக்கில் நிலை கொண்டிருந்த இந்தியப் படைகள், ஈபிஆர்எல்ப், ஈஎன்டிஎல்ப் போன்ற கட்சிகளை ஆதரித்தன. அந்தக் கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆயுதங்களுடன் அடாவடித்தனம் செய்து திரிந்ததால், தமிழ் மக்கள் அதிருப்தியடைந்திருன்தனர். இதனால், அன்றைய காலத்தில் ஆயுத வன்முறையில் ஈடுபடாதிருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களுக்கு வாக்களித்தனர். அநேகமாக, வட- கிழக்கு மாகாணங்களில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் பாராளுமன்றத்திற்கு தேர்வானார்கள். தேர்தல்களுக்கு முந்திய காலங்களில், ஈரோஸ் தமிழ் தேசியத்தில் அதிக ஆர்வமற்ற மார்க்சிய இயக்கமாக அறியப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது. அன்று தலைமறைவு இயக்கமாக இருந்த புலிகளும், ஈரோஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவளித்திருந்தனர்.

இன்று, வட- கிழக்கு மாகாணங்களில் இராணுவமும், அரசுக்கு ஆதரவான கட்சிகளை சேர்ந்தவர்களும் தான், உண்மையான அதிகாரத்தை கையில் வைத்திருக்கின்றனர். வடக்கில் ஈபிடிபி, கிழக்கில் கருணா, பிள்ளையான் அணி என்பன தமிழ் மக்கள் மேல் அதிகாரம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் அரசுக்கு ஆதரவானவர்கள் என்பதால், அதிகார துஷ்பிரயோகம் குறித்து யாராலும் கேள்வி எழுப்ப முடியாத சூழ்நிலை அங்கு நிலவுகின்றது. தமிழ் மக்கள் தேர்தல் காலத்தில் மட்டுமே தமது அதிருப்தியை காட்ட முடியும். மக்கள் தினசரி நிஜத்தில் சந்திக்கும் அதிகாரத்தை அசைக்க முடியாததால், அரசு விரும்பாத எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கின்றனர். சுருக்கமாக, இது எதிர் வாக்குகள். தமிழகத்தில் திமுக வுக்கு எதிராக அதிமுக வுக்கு வாக்களிப்பது போன்றது. இது போன்ற தேர்தல் முடிவுகள் இதற்கு முன்னமும் கிடைத்துள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் வென்றாலும், அவர்கள் தமிழ் மக்களுக்காக எதையும் சாதிக்கப் போவதில்லை. அது அங்குள்ள மக்களுக்கும் தெரியும்.

தமிழ்ப் பிரதேசங்களில் நடந்த தேர்தல் முடிவுகளை வைத்து பார்க்கும் பொழுது, ஒரு உண்மை புலனாகின்றது. இன்று வரை, தமிழ்த் தேசிய அரசியல் மக்களை பார்வையாளர்களாக வைத்திருக்கவே விரும்புகின்றது. இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை தமிழ் மக்கள் எல்லோரும் உணர்ந்துள்ளனர். இருப்பினும், தீர்வை நோக்கிய பாதையில் மக்களை அணிதிரட்டி செல்லாத வரையில், அவர்களால் முடிந்ததெல்லாம் தேர்தலில் ஓட்டுப் போட்டு எதிர்ப்பை தெரிவிப்பது தான்.

பொருளாதார வளங்களை பங்கிடுவதில் காட்டப்படும் இனரீதியான பாரபட்சம் இன்னமும் தொடர்கின்றது. தனியார் நிறுவனங்களும், சந்தைப் பொருளாதாரமும் வளர்ச்சியடைந்த இந்தக் காலத்தில் கூட, சிங்களவர்களுக்கே அதிக வேலை வாய்ப்புகள் வழங்கப் படுகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இதற்கெதிரான போராட்டத்தை நடத்துவதில்லை. இனப்பாகுபாட்டிற்கு எதிரான வெகுஜன அமைப்பை கட்டவில்லை. மாறாக இந்திய அரசியல்வாதிகள் போன்று, அறிக்கைப் போர்களில் ஈடுபடுகின்றது. ஓரிரு தடவை பாராளுமன்றத்தில் பேசி விட்டால், அல்லது ஊடகத்திற்கு அறிவித்து விட்டால் போதும் என நினைத்துக் கொள்கின்றது. இந்த விடயம் தமிழ் மக்களுக்கு தெரியாததல்ல, அவர்களைப் பொறுத்த வரையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றீடான வேறு கட்சி எதையும் காணவில்லை.

12 comments:

Alivetamil said...

// "தமிழர் விடுதலைக் கூட்டணி" என்ற பெயரில் ஒன்று சேர்ந்தன. அன்றைய நாட்களில், தமிழர்கள் அடைந்த உற்சாகத்தை சொல்லி மாளாது. "தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டார்கள். விரைவில் தமிழீழம் கிடைத்து விடும்." என்று நம்பினார்கள். தமிழ் தேசிய அரசியவாதிகளும், "அடுத்த வருடம் தமிழீழத்தில் தைப் பொங்கல் கொண்டாடுவோம்" என்று நம்பிக்கையை விதைத்து வந்தனர். //

ஆனந்தசங்கரி எப்ப தமிழ் தேசியக்கூட்டணியோடு இணைந்து எப்ப தேர்தலில் போட்டியிட்டவர்?

-------

Alivetamil said...

// பாராளுமன்றத்திற்கு தெரிவானதும், சிங்கள அரசு வழங்கும் சலுகைகளை பெற்றுக் கொண்டு, பதவி தந்த சுகத்தை அனுபவிப்பது, தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கு வாடிக்கை. கொழும்பு நகரில் அரசு கொடுத்த பங்களாவில் குடியிருந்து கொண்டு, தொகுதிப் பக்கம் எட்டியும் பார்க்க மாட்டார்கள். தங்கள் பிள்ளைகளைக் கூட "தமிழீழத்தில்" கல்வி கற்க விடாமல், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பார்கள். அன்றைய தமிழரசுக் கட்சி முதல், இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரையில், இந்த நிலையில் மாற்றமெதுவும் வந்து விடவில்லை.//


தமிழ் தேசியம் என்று கூறுகிற‌ அணியில் இருந்து யார் இப்படி அரசின் சொகுசுகளை அனுபவித்து வாழ்ந்து வருகிறார்கள் தயவு செய்து கூறுங்கள்?
எத்தனையோ தமிழ் தேசிய பாரளமன்ற உறுப்பினர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் காரணமாக பதவியையும் துறந்துவிட்டு வெளினாடுகளில் தஞ்சம் புகுந்து வாழுகின்றார்கள். வாய்திறந்து மக்களின் உரிமைகளுக்காய் குரல் கொடுத்த தமிழ் தேசிய பாரளமன்ற உறுப்பினர்கள்(மக்களின் பிரதிநிதிகள்) எத்தனையோ பேர் கொல்லப்பட்டிருக்கிறார் குரல் உதாரணம் வேண்டுமால் சொல்லுகிறேன், ரவிராஜ் (2006 அம் ஆண்டு படுகொலை), யோசெப் பரராஜசிங்கம்(2005), சிவனேசன்(2008) எவர்கள் எந்த அரச சுகத்தையும் அனுபவிக்கவில்லை, தமிழர் பிரச்சனை தொடர்பாக தங்கள் குரல்களை ஓங்கி ஒலிக்கச்செய்தவர்கள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு பதிவை எழுதவும்,
தயவு செய்து வரலாற்றை திரிபு செய்து மக்களை பிளையாக வழி நடத்தவேண்டாம்.

நீங்கள் சென்னபடி அரச சுகங்களை அனுபவித்து கொண்டு வாழ்பவர்கள் இருக்கின்றார்கள், ஆனால் அவர்கள் அரசின் அடிவருடிகளாகவே அரசின் சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பவர்களாகவே இருக்கிறார்களேஒளிய தமிழர் விடுதலைக்காகவும் தமிழ் தேசியத்திற்காகவும் எக்காலத்திலும் குரல்கொடுக்கவில்லை. ஆகவே தமிழ் தேசிய அரசியல் சக்திகள் (தமிழ் தேசிய கூட்டமைப்பு) மீது வசை பாடுவதை நிறுத்துங்கள், இன்று அவர்க்ளின் உயிர் வாழ்க்கையே அச்சுறுத்தலாக, பாராளமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது அண்மையில் தாக்குதல் தாக்குதல் நடத்தப்பட்டது. இவர் யுத்ததின் பின்னரான தமிழரின் உரிமைகள் தொடர்பாக ஓர்மமாக குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்ற ஒரு உணர்வுள்ள தமிழன் என்பது எல்லா ஈழத்தமிழனுக்கும் நன்றாக தெரியும். ஆகவெ தமிழக அரசியல் வாதிகளை போல் ஈழத்து தமிழ் தேசிய அரசியல்வாதிகளை குறைத்து மதிப்பிடாதீர்கள்.

------

// சிங்கள அரசு நடத்தும் தேர்தல்களை பகிஷ்கரிக்குமாறு, புலிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணி, புலிகளை எதிர்த்துக் கொண்டு தேர்தல்களில் போட்டியிட்டது. அந்த தேர்தல்களிலும் பெருமளவு தமிழ் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றனர். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் பலர், அன்று புலிகளின் நிலைப்பாட்டை ஆமோதித்திருந்தனர். தேர்தலில் போட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் துரோகிகள் என்று கூறினார்கள். //

இந்தியன் இராணுவம் வந்த காலத்திற்கு பின் எப்பொழுத்து வடக்கிலே தேர்தல் நடைபேற்றது? எப்பொழுது புலிகள் பகிஷ்கரிக்க சொன்னார்கள்?
1995 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பிற்பாடு பாராளுமன்றத்தேர்தல் 10 ஆண்டு ஆண்டுகளுக்குப்பின் 1998 ஆண்டு நடைபேற்றது. அதன்பின்னர் 1999 ஆம் ஆண்டு சனாதிபதித்தேர்தல் நடைபேற்றது, அதன்பிற்பாடு 2002,2004 காலப்பகுதிகளிலே பாரளுமன்ரத்த்தேர்தல் நடைபேற்றது. இந்த தேர்தல்கள் எதையுமே புலிகள் பகிஷ்கரிக்க கூறவில்லை. 2006 ஆம் அண்டு சனாதிபதி தேர்தலையே பகிஷ்கரிக்க சொல்லி புலிகள் வலியுறுத்தினார்கள். அதற்கு காரணங்கள் நியாயமான காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது; பேச்சு வார்த்தை என்ற பெயரில் நிழல் யுத்தமொன்றை முன்னெடுத்து கட்டமைப்புக்களை சீரளிப்பதோடு நின்றுவிடாது, தீர்வேதும் முன்வைக்காது காலத்தை இழுத்தடித்தமை.


இந்த பதிவு தமிழ்தேசிய வாதிகள் மீது காழ்ப்புணர்வை ஏற்படுத்த்துவதோடு நின்றுவிடாது வரலாற்றுத்திரிபுகளையும் உள்ளடக்கியுள்ளது. இப்பத்திவின் ஒவ்வொரு பத்தியிலும் உள்ள வரலாற்று முரண்பாடுகளை என்னால் முவைக்க முடியும், ஆகவே இக்குழ‌ப்பங்களுக்கு சரியான விழக்கங்களை தரவேண்டும் அல்லது பதிவிலே திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றேன்

இங்கணம்
தமிழ்பிரியன்
tamilpriyaninfo@gmail.com

Kalaiyarasan said...

//ஆனந்தசங்கரி எப்ப தமிழ் தேசியக்கூட்டணியோடு இணைந்து எப்ப தேர்தலில் போட்டியிட்டவர்?//


நண்பரே, எழுதியுள்ளதை அந்த காலகட்டத்தோடு சேர்த்து வாசிக்க வேண்டும். முன்னுக்குப் பின் முரணாக புரிந்து கொள்ளக் கூடாது. 70 களில் இயங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி பற்றித் தான் இதிலே எழுதியிருக்கிறேன். 2000 வது ஆண்டுக்கு பின்னர் தோன்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஆனந்தசங்கரி பிளவை இதனோடு சேர்த்து குழப்பிக் கொள்ளக் கூடாது.

Kalaiyarasan said...

//தமிழ் தேசியம் என்று கூறுகிற‌ அணியில் இருந்து யார் இப்படி அரசின் சொகுசுகளை அனுபவித்து வாழ்ந்து வருகிறார்கள் தயவு செய்து கூறுங்கள்?//

நண்பரே, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தெரிவான அனைத்து உறுப்பினர்களும் பதவிசுகம் அனுபவிப்பவர்கள் தான். சிங்கள அரசு அவர்களுக்கு கொடுக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? புத்தம் புதிய பஜெரோ ஜீப், கொழும்பில் அரச செலவில் வசதியான வீடு, இவற்றை அனுபவித்துக் கொண்டு தொகுதிப் பக்கம் எட்டியும் பார்ப்பதில்லை. அவர்கள் தெரிவான தொகுதி மக்களைக் கேட்டுப் பாருங்கள். எப்போதாவது மக்களின் குறை கேட்க வந்திருக்கிறார்களா? சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகிய பல உறுப்பினர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் படிக்கின்றன. அவர்களது தொகுதிகளில் பாடசாலைகளின் தரம் உயரவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட யாழ் மாவட்டம், இன்றைய தரப்படுத்தலில் பின்தங்கிய மாவட்டமாக கணிக்கப்பட்டுள்ளது. தான் பிள்ளைகளையே வெளிநாடுகளில் படிக்க வைப்பவர்கள், தொகுதி மக்களின் கல்வியில் அக்கறை காட்டுவார்களா?

Kalaiyarasan said...

//எத்தனையோ தமிழ் தேசிய பாரளமன்ற உறுப்பினர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் காரணமாக பதவியையும் துறந்துவிட்டு வெளினாடுகளில் தஞ்சம் புகுந்து வாழுகின்றார்கள். வாய்திறந்து மக்களின் உரிமைகளுக்காய் குரல் கொடுத்த தமிழ் தேசிய பாரளமன்ற உறுப்பினர்கள்(மக்களின் பிரதிநிதிகள்) எத்தனையோ பேர் கொல்லப்பட்டிருக்கிறார் குரல் உதாரணம் வேண்டுமால் சொல்லுகிறேன், ரவிராஜ் (2006 அம் ஆண்டு படுகொலை), யோசெப் பரராஜசிங்கம்(2005), சிவனேசன்(2008) //


நிச்சயமாக, ஒரு சில கடமைவீரர்களின் தியாகத்தால் தான் ஒரு கட்சியோ, இயக்கமோ மக்கள் மத்தியில் மதிப்புடன் இருக்கிறது. ஆனால், அதை மூலதனமாக கொண்டு பிற பிழைப்புவாதிகள் தமது நலன்களைக் காப்பாற்றிக் கொள்கின்றனர். நேர்மையானவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள், அல்லது வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். போலிகள் இன்றைக்கும் இலங்கையில் தேர்தல் வியாபாரம் மூலம் பிழைத்துக் கொள்கிறார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள், இப்போதும் தேர்தல் மேடைகளில் இலங்கை அரசை எதிர்த்து பேசி வருகின்றனர். சில நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உதயன், சுடர் ஒளி போன்று தமிழ் தேசியத்தை உயர்த்திப் பிடிக்கும் பத்திரிகைகள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. உண்மையில் பொதுவாக தமிழ் தேசியம் பேசுவது, சிறிலங்கா அரசுக்கு எதிரான விடயம் அல்ல. அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுவோர், ஊழல்களை பகிரங்கப் படுத்துவோர் மாத்திரம் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழர்கள், அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் என்பதற்காக மட்டும் கொல்லப்படவில்லை. அது உங்கள் குறுகிய பார்வையை காட்டுகின்றது. எத்தனையோ சிங்கள அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதையும், இதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

Kalaiyarasan said...

//பாராளமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது அண்மையில் தாக்குதல் தாக்குதல் நடத்தப்பட்டது. இவர் யுத்ததின் பின்னரான தமிழரின் உரிமைகள் தொடர்பாக ஓர்மமாக குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்ற ஒரு உணர்வுள்ள தமிழன் என்பது எல்லா ஈழத்தமிழனுக்கும் நன்றாக தெரியும். //

முதலில் இத்தகைய தனிநபர் துதிபாடல்களை நிறுத்திக் கொள்கிறீர்களா? எதிர்காலத்தில் தமிழ் தேசிய தலைவராக வருவதற்கு சிறிதரன் கையாளும் அணுகுமுறைகள், உங்களைப் போன்ற துதிபாடிகளை உருவாக்கி விட்டுள்ளமை நன்றாகத் தெரிகின்றது. நீங்கள் அரசியலில் முன்னுக்கு வர வேண்டுமானால், உங்களுக்கு சார்பான ஊடக பலம் அவசியம். அது சிறிதரனிடம் உள்ளது, உங்களிடம் இல்லை.

Kalaiyarasan said...

//ஆகவெ தமிழக அரசியல் வாதிகளை போல் ஈழத்து தமிழ் தேசிய அரசியல்வாதிகளை குறைத்து மதிப்பிடாதீர்கள்.//

தமிழக/ஈழ தேசிய அரசியல்வாதிகள் மத்தியில் எந்தவித வித்தியாசமும் இல்லை. இந்திய மத்திய அரசுக்கு தமிழக அரசியல்வாதிகளால் பெரிய அச்சுறுத்தல் இல்லை. அதனால் அதிக பட்சம் தடா/போடா சட்டத்தில் சிறையில் தூக்கிப் போடுகிறார்கள். இலங்கையிலும் சம்பந்தன் போன்றவர்களுக்கு எது பேச வேண்டும், எது பேசக் கூடாது என்பது தெரியும். அதனால் தான் இன்று வரை பிழைத்துக் கொள்கிறார்கள். அது மட்டுமல்ல, தேர்தல் நடைபெறும் காலங்களில், தமிழகத்தைப் போல சாதி அரசியல் செய்வதைப் பற்றி இங்கே எழுதவில்லை. ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் எந்த சாதி ஆதிக்கத்தில் உள்ளதோ, அந்த சாதியை சேர்ந்த பிரமுகரை வேட்பாளராக நிறுத்தி விடுவார்கள். ஈழத்து வாக்காளர்கள் தமிழ் தேசியத்திற்கு மட்டும் ஓட்டுப் போடுவதாக நினைப்பது தவறு. குறிப்பிட்ட வேட்பாளரின் சாதிப் பின்னணி, சமூகத்தில் பிரமுகத் தன்மை, போன்ற பல காரணிகள் உள்ளன.

Kalaiyarasan said...

//இந்தியன் இராணுவம் வந்த காலத்திற்கு பின் எப்பொழுத்து வடக்கிலே தேர்தல் நடைபேற்றது? எப்பொழுது புலிகள் பகிஷ்கரிக்க சொன்னார்கள்?//

இந்திய இராணுவம் வந்த பின்னர், மாகாண சபைத் தேர்தலும், பொதுத் தேர்தலும் நடைபெற்றது. தெரியாவிட்டால் சரித்திரத்தை புரட்டிப் பார்க்கவும். அன்று புலிகள் பொதுத்தேர்தலில் ஈரோஸ் வேட்பாளர்களை ஆதரித்தார்கள். மாகாண சபைத் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு கோரினார்கள். கிழக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில், தமிழ் தேசியக் கட்சியான, தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்கள் மாகாண சபைக்கு தெரிவானார்கள். எழுபதுகளில் இருந்தே இலங்கையில் நடக்கும் தேர்தல்களை பகிஷ்கரிக்குமாறு புலிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து புலிகள் வெளியிட்ட துண்டுப்பிரசுரங்கள் உள்ளன. அந்தக் காலங்களில் நடந்த தேர்தல்களில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்கள் சிலரை புலிகள் சுட்டுக் கொன்றனர். மற்றவர்கள் மரண அச்சுறுத்தல் காரணமாக விலகிக் கொண்டனர்.

Kalaiyarasan said...

//1995 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பிற்பாடு பாராளுமன்றத்தேர்தல் 10 ஆண்டு ஆண்டுகளுக்குப்பின் 1998 ஆண்டு நடைபேற்றது. அதன்பின்னர் 1999 ஆம் ஆண்டு சனாதிபதித்தேர்தல் நடைபேற்றது, அதன்பிற்பாடு 2002,2004 காலப்பகுதிகளிலே பாரளுமன்ரத்த்தேர்தல் நடைபேற்றது. இந்த தேர்தல்கள் எதையுமே புலிகள் பகிஷ்கரிக்க கூறவில்லை.//

நண்பரே, இப்படித் தான் நீங்கள் வரலாற்றைத் திரிக்கிறீர்கள். அன்றைய காலங்களில் புலிகள் தேர்தல்களை பகிஷ்கரிப்பது வாடிக்கையான விஷயம். "தமிழ்ப் பகுதிகளில் நிலைமை வழமைக்கு திரும்பி விட்டது, இயல்பு வாழ்க்கை நடக்கின்றது" என்பதைக் காட்டத் தான் அரசு தேர்தல்களை நடத்துகின்றது என்பது புலிகளின் வாதம். ஈழத்திற்காக ஆயுதமேந்திப் போராடிக் கொண்டிருந்த இயக்கம் என்ற வகையில், அவர்களின் பார்வையில் அந்த வாதம் சரியானது. மேலும் சர்வதேசமும், நடைபெற்ற தேர்தல்களை உதாரணமாகக் காட்டி, புலிகளை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு செல்லுமாறு நெருக்கடி கொடுத்து வந்தது. உண்மையில் இந்த நெருக்கடியில் இருந்து தப்புவதற்காகவே, யாழ் மேயர் சரோஜினி போன்ற பலர் கொல்லப் பட்டனர்.

Kalaiyarasan said...

//2006 ஆம் அண்டு சனாதிபதி தேர்தலையே பகிஷ்கரிக்க சொல்லி புலிகள் வலியுறுத்தினார்கள். அதற்கு காரணங்கள் நியாயமான காரணங்கள் இருக்கின்றன.//

ஆமாம், புலிகள் பகிஷ்கரிக்க கோரியது அவர்களுக்கே எமனாக அமைந்த வரலாற்றுத் தவறை வசதியாக மறைக்கப் பார்கின்றீர்கள். ஜனாதிபதித் தேர்தலில் வட-கிழக்கு தமிழர்கள் வாக்களித்திருந்தால், ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றிருப்பார். புலிகளின் பகிஷ்கரிப்பை மீறி நடந்த வாக்குப்பதிவு இதனை எடுத்துக் காட்டுகின்றது. மகிந்த ராஜபக்சவை வெல்ல வைப்பதற்காக, புலிகள் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு கோரினார்கள். அப்படியே நடந்தது. குறைந்தளவு வாக்கு வித்தியாசத்தில் மகிந்த வென்றார். இதனால், வட-கிழக்கு மாகாணங்களில் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு, புலிகளுக்கு மகிந்த பணம் கொடுத்ததாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டி வந்தது. மகிந்த மட்டுமல்ல, புலிகளும் அந்த குற்றச்சாட்டை மறுத்து வந்தனர். இருப்பினும் தேர்தலை பகிஷ்கரிக்காமல் விட்டிருந்தால், பெருமளவு தமிழ் மக்கள் ரணிலுக்கு வாக்களித்திருப்பார்கள். தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று ரணில் ஜனாதிபதியாக வந்திருப்பார். இந்த உண்மையை நீங்கள் மறைக்க முடியாது.

Kalaiyarasan said...

//அவற்றுள் முக்கியமானது; பேச்சு வார்த்தை என்ற பெயரில் நிழல் யுத்தமொன்றை முன்னெடுத்து கட்டமைப்புக்களை சீரளிப்பதோடு நின்றுவிடாது, தீர்வேதும் முன்வைக்காது காலத்தை இழுத்தடித்தமை.//

பேச்சுவார்த்தை நடக்கும் காலங்களில் இரண்டு தரப்புமே யுத்தத்திற்கு தயார்படுத்துவது வாடிக்கை. இலங்கை அரசு மட்டுமல்ல, புலிகளும் நிழல் யுத்தம் நடத்திக் கொண்டிருந்தனர். அதற்கு ஆதாரம், கண்காணிப்புக் குழு சமர்ப்பித்த அறிக்கைகள். மேலும், முந்திய பேச்சுவார்த்தைகளைப் போலன்றி, சர்வதேச அழுத்தம் காரணமாக சில தீர்வுகள் எட்டப்பட்டிருந்தன. அதனை தாய்லாந்தில் வைத்து அன்டன் பாலசிங்கம் அறிவித்திருந்தார். ஆனால், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படுவதை புலிகள் அமைப்பில் இருந்த கடும்போக்குவாதிகள் விரும்பவில்லை. மறுபக்கத்தில் அரச தரப்பில் இருந்த கடும்போக்குவாதிகளும் தீர்வு எட்டப்படுவதை விரும்பவில்லை. அனால், சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளாததால் தமிழர்களுக்கே அதிக இழப்பு. முள்ளிவாய்க்கால் படுகொலைகளை ஒரு தடவை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். தாய்லாந்தில் அன்டன் பாலசிங்கம் அறிவித்த தீர்வுத் திட்டம் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தால், நாற்பதாயிரம் தமிழர்களை அழிவில் இருந்து காப்பாற்றி இருக்கலாம். இந்தக் கருத்துகளை நான் கூறவில்லை. இறுதிப்போரில் வன்னியில் அல்லல் பட்ட தமிழ்ப் பொதுமக்கள் கூறுகின்றனர். என்றைக்காவது தமிழ் மக்களின் குரல் உங்கள் காதுகளை எட்டியிருக்கிறதா? தமிழ் மக்களின் நலன்களை புறக்கணித்து விட்டு, நீங்களாகவே சில கற்பனைகளை தமிழ் மக்கள் மீது திணிக்கும் போக்கு மாற வேண்டும்.

Alivetamil said...

ஒரு பாராளமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டுள்ளார் என்கின்ற செய்தி எப்படி தனிமனித துதிபாடலாக வரும்?

என்னுடைய பிரதேசத்திற்கு எத்தனையோ பா.ம.உ எங்களுடைய தொகுதிக்காரர்கள் வந்து சென்றிருக்கிறார்கள். நீர் முதலில் எங்கள் தேசத்திற்கு வந்து பார்த்து விட்டு கதைக்க வேண்டும். எந்த வாக்குக்காகவும் அல்ல, பத்திரிகையில் பேர் வருவதற்காகவும் அல்ல; மக்கள் பிரச்சனைகளை அறிவதற்காக தீர்வொன்றினை எட்டுவதற்காக பா.ம.உ எங்கள் பிரிதேசங்களுக்கு வந்து எங்களோடு உரையாடி இருக்கிறார்கள்.

"அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என்றால் ஊடக பலம் தேவையாம்"

டேய் நீ தாண்டா அரசியல் ஆசையில் இருக்கிறாய்..
உயிரையும் உடலையும் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் எந்த வேளையிலும் கொடுப்பேன் என்கின்ற கொள்கை உறுதி தான் தேவை என்பதை உணர்த்திய மறவர்கள் பிறந்த தேசமடா இது.

தமிழ் தேசியம் என்கின்ற கட்சிகள் எப்படா சாதி அரசியல் நடத்தியது? தமிழ் தேசியம் என்ற கொள்கை என்று பிறந்ததோ அன்றே செத்து விட்டதடா சாதியியல். சாதி இல்லாத சமுகத்தை உருவாக்கி காட்டினான் எங்கள் அண்ணன்.

//புலிகள் பகிஷ்கரிக்க கோரியது அவர்களுக்கே எமனாக அமைந்த வரலாற்றுத் தவறை வசதியாக மறைக்கப் பார்கின்றீர்கள்//

எந்த சிங்கள ஆசியாளன் தமிழர்களூக்கு தமிழர்களுக்கு தீர்வு வைக்க முன்வந்துள்ளான் என்பதை நீங்கள் அறியாவிட்டாலும் வரலாறு அறியும். பழமை வாவாதத்திலே நீர் இருப்பது தெட்டத்தெளிவாகிறது தெளிவாககிறது. புலிகளின் வீழ்ச்சிக்கு தேர்தல் பகிஷ்கரிப்பு நிச்சயமாக ஒரு பிரதானகாரணமாக இருக்க முடியாது. ரணில் விக்கிரமசிங்கவினுடைய ஆட்சி காலத்திலேயே புலிகள் இயக்கம் பாரிய வீழ்ச்சி கண்டு விட்டது. இது எல்லாவற்றையும் விட பிரதான காரணம் தெற்காசிய பிராந்திய அரசியல் நிலமையே.

ஜெனிவா பேச்சு வார்த்தையின் போது என்ன தீர்வு எட்டப்பட்டது? புலிகள் அதை செய்யக்கூடாது இதை செய்யக்கூடாது என்று நிபந்தனைகளை அரசு முன்வைத்ததே ஒழிய தமிழர் பிரச்சனைக்கு தீர்வு எதனையும் முன் வைக்கவில்லை.

//எத்தனையோ சிங்கள அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதையும், இதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.//

ஒரே ஒரு சிங்கள‌ ஊடகவியலாளர் கொல்லப்பட்டார் மேலும் சிலர் தாக்கப்பட்டார்கள். இவர்களுக்கு ஏன் இந்த நிலமை ஏற்பட்டது? இவர்கள் தமிழர் பிரச்ச்னைக்ளுகாக குரல் கொடுத்தார்கள் தமிழர்களூக்கு நடைபெறுகின்ற கொடுமைகளை சிங்கள மக்களுக்கு எடுத்துரைக்கின்றார்கள் என்பதற்காகவே, சும்மா ஊழல் பிரச்சாரம் என்று ஒரு சாட்டு சொல்லவேண்டாம்.

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் யார் என்பதை மக்கள் நேற்றும் நிரூபித்துதான் இருக்கிறார்க்ள்.
வேறு கட்சியில்லாமல் மக்கள் வாக்கு போட்டார்கள் என்று கூறினாலும் கூறுவீர் நீர்.
தமிழ் தேசிய வாதிகள் மீது வசை பாடுகின்ற உம்மோடு நேரத்தை வீணடிக்க எனக்கு விருப்பமில்லை.
உம் வலைப்பூவில் இருந்து விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்