(பகுதி : ஒன்று)
சரியாக ஒன்பது வருடங்களுக்கு முன்னர், இதே ஜூலை மாதம் கொழும்பு விமான நிலையம் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானது. விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானங்கள் பல தற்கொலைக் குண்டுதாரிகளால் தாக்கி அழிக்கப்பட்டன. இலங்கை மட்டுமல்ல முழு உலகமும் அதிர்ச்சியில் உறைந்து போனது. நவீன உலக வரலாற்றில் நடந்த இதே மாதிரியான விமான நிலைய கெரில்லா தாக்குதலில் இது இரண்டாவது. முன்னர் எத்தியோப்பிய விமான நிலையத்தை தாக்கிய எரித்திரிய கெரில்லாக்கள் அங்கே இருந்த மிக் ரக போர் விமானங்களை அழித்திருந்தனர். கொழும்பு விமான நிலைய தாக்குதலுக்கு புலிகள் இயக்கம் உரிமை கோரியிருந்தது. அதற்குப் பின்னர் இலங்கையில் எந்தவொரு குறிப்பிடத் தக்க தாக்குதலும் நடக்கவில்லை. மாறாக நோர்வேயின் அனுசரணையில் பேச்சுவார்த்தை நடந்தது. அந்த தாக்குதல் நடந்து இரண்டு மாதங்கள் ஆகவில்லை. நான்கு விமானங்கள் அமெரிக்க இலக்குகளை தாக்கின. உலகின் ஒரேயொரு மேன் நிலை வல்லரசான அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிரான போரை அறிவித்தது.
காலம் மாறுகிறது. காட்சிகள் மாறுகின்றன. இன்றைய இலங்கை ஆட்சியாளர்கள் 30 வருட போரை முடிவுக்கு கொண்டு வந்தததற்காக நன்றி தெரிவிக்க கோருகின்றனர். அமெரிக்கா இன்றும் பயங்கரவாதத்துடன் மல்லுக் கட்டும் வேளை, தாம் அந்த தொற்று நோயை அடியோடு ஒழித்து விட்டதாக பெருமிதம் கொள்கின்றனர். நான் கொழும்பில் தங்கி நின்ற காலங்களில் அரசு டெங்கு என்ற நுளம்பால் தொற்றும் நோய்க்கு எதிரான போரை அறிவித்து விட்டிருந்தது. வீட்டுக்கருகில் அசுத்த நீர் தேங்கி நிற்கும் குட்டைகளை சுத்தப் படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்திக் கொண்டிருந்தது. நல்லது. பயங்கரவாதமும் ஒரு கொடிய சமூகத் தொற்று நோய் எனில், அது உற்பத்தியாகும் குட்டைகளும் சுத்தப் படுத்தப் பட வேண்டும். யுத்தத்திற்குப் பின்னர் சமுதாய அசுத்தங்கள் தேங்கும் குட்டைகள் சுத்தப் படுத்தப் படுகின்றனவா? என்று யாரும் கேட்டதாக தெரியவில்லை.
2010 ஜூலை மாதம். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஜூலை மாதத்தில் இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர், இப்போது தான் தாயக பூமியை தரிசிக்கிறேன். ஒரு மனிதனின் வரலாற்றில் இருபது வருடங்கள் என்பது ஒரு தலைமுறை இடைவெளியைக் குறிக்கும். அன்றைய நிலையை, இலகுவாக இன்றுள்ள இலங்கையோடு ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது. இது என்னைப் போல புலம்பெயர்ந்து விட்டு கூடு திரும்பும் பறவைகளுக்கு மட்டுமே கிடைக்கும் அரிய வரப்பிரசாதம். என்னைப் பொறுத்த வரையில், இலங்கை ஒன்றும் பெரிதாக மாறி விடவில்லை. நடுத்தர வர்க்கம் மட்டுமே அனுபவிக்கும் உலகத்தரம் வாய்ந்த வாழ்க்கை வசதிகளைத் தவிர, வேறெதுவும் புதிதாக இல்லை. இனங்களின் முரண்பாடுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பழகிய ஒரு தேசத்தில், வர்க்க இடைவெளி முன்னர் என்றுமில்லாதவாறு விரிவடைந்துள்ளது.
"இலங்கை வழமைக்கு திரும்பி விட்டது." சாமானியன் நம்பும் வழமை நிலை, ஆயுதமேந்திய கரங்களினால் நிலை நாட்டப் படுகின்றது. வீதியோர சோதனைச் சாவடிகள் இன்னும் அகலவில்லை. அங்கே கடமையில் ஈடுபடுத்தப்பட்ட பாதுகாப்புப் படையினர் சோதனைகளை நிறுத்தி விட்டார்கள். இருப்பினும் உயர் பாதுகாப்பு வலையங்களை அண்டிய பகுதிகளில் இப்போதும் அடையாள அட்டை வாங்கிப் பார்க்கிறார்கள். சில இடங்களில் பார ஊர்திகளை மறித்து சோதனை போடுவதைக் காணக் கூடியதாகவிருந்தது. யுத்த காலங்களில் இருந்த நிலைமையை விட இது பரவாயில்லைத் தான். இருப்பினும் நாட்டில் பாதுகாப்புக் கெடுபிடிகள் முற்றாக நீங்கி விடவில்லை. ஒரு வருடத்திற்கு முன்னர் அரசு போரில் புலிகளை வென்று விட்டதாக அறிவித்த பின்னர், நாட்டில் ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கூட கேட்கவில்லை. அப்படியான சூழலில் இறுக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதற்காக?
ஐ.நா. செயலாளர் நாயகம் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை விசாரிக்க நிபுணர் குழுவமைத்த செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. கொழும்பில் ஐ.நா. அலுவலகம் சுற்றி வளைக்கப்பட்டு ஊழியர்கள் பணயக் கைதிகளாக வைக்கப்படும் அபாயம் நிலவியது. இருப்பினும் போலிஸ் தலையீட்டால் அவர்கள் வெளியேற முடிந்தது. அப்போது தொடங்கியது தான் தேசிய விடுதலை முன்னணி தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்சவின் உண்ணாவிரதப் போராட்டம். நான் அங்கே சென்ற சமயம், பெருந்தொகை மக்கள் குழுமியிருந்தனர். பிரதான வீதியாக இருந்த போதிலும், வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. உண்ணாவிரதம் இருந்த இடத்தில் தேசபக்திப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. வீரவன்ச ஆதரவாளர்கள் உணர்வு பூர்வமாக போராட்டம் தொடரும் என நம்பியிருக்கலாம். ஆனால் எதிர்க்கட்சிகள் கூறிய ஜோசியமே பலித்தது. முடிவை மாற்றிக் கொள்ளாத ஐ.நா. மன்றம், மேற்குலகின் கண்டனம், இவற்றிற்கு மத்தியில் இரண்டு நாட்களில் வீரவன்சவின் உண்ணாவிரதம் முற்றுப் பெற்றது.
இலங்கை அரசுக்கும் ஐ.நா. மன்றத்திற்கும் இடையிலான உறவு பல தடவை சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரமடைந்த இலங்கையை ஐ.நா. மன்றத்தில் சேர்த்துக் கொள்ள அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் ஆர்வம் காட்டின. அன்று இலங்கையின் உறுப்புரிமையை சோவியத் யூனியன் (இன்று ரஷ்யா) வீட்டோ அதிகாரத்தை பாவித்து ரத்து செய்தது. இன்றோ நிலமை தலைகீழாகி விட்டது. மேற்குலக நாடுகள் ஐ.நா.மன்றத்தை பயன்படுத்தி இலங்கை மீது ராஜதந்திர அழுத்தங்களை பிரயோகிக்கின்றன. அதே நேரம் ரஷ்யா இலங்கை அரசு சார்பாக நிற்கின்றது. கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூட ரஷ்ய தூதுவராலயத்திற்கு சென்று நன்றி தெரிவித்தார்கள். இதனால் திரை மறைவில் வல்லரசுகளுக்கு இடையிலான பனிப்போர் நடப்பது தெளிவாகின்றது. பத்தாண்டுகளுக்கு முன்னராகவிருந்தால் கதை வேறாக இருந்திருக்கும். மேற்குலகின் நோக்கங்களுக்கு தடையாக வருவதற்கு எவருக்கும் துணிவிருந்திருக்காது.
மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்த வரை மேற்குலகின் அணுகுமுறை அன்றில் இருந்து இன்று வரை மாறவில்லை. ஒரு பக்கம் கிளர்ச்சியாளர்களையும், மறு பக்கம் அரசையும் ஆதரிப்பது. கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கும் பொழுது அரசுக்கு பக்கபலமாக நின்று அடக்குவது. பின்னர் அதே அரசின் மீது, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில், சர்வதேச சட்டங்களை பிரயோகித்து ஆட்சியை மாற்றுவது. இதையெல்லாம் கோர்வையாக புரிந்து கொள்ளுமளவிற்கு, மக்களுக்கு நினைவாற்றல் கிடையாது. போர்க்குற்றம் தொடர்பான விசாரணை தமிழர் நலன் சார்ந்தது என தமிழ் தேசியவாதிகள் நம்புகிறார்கள். அதை சிங்கள தேசியவாதிகள், ஐ.நா. மன்றம் புலி சார்பானதாக புரிந்து கொள்கின்றனர். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலே மேற்குலக நலன்கள் இருப்பதை யாரும் கவனிப்பதில்லை. நாளைக்கே மேற்குலகு விதிக்கும் நிபந்தனைகளுக்கு இலங்கை அரசு கட்டுப்பட்டால், போர்க்குற்ற விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டு விடும்.
இலங்கையில் இப்பொழுது தேசப் பற்றாளர்களின் காலம் நடக்கிறது. தேசப்பற்றுக்கும், தேசியவாதத்திற்கும் இடையில் என்ன வித்தியாசம் என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் அவர்களைப் பொறுத்தவரை அது இயற்கையான மனித குணாம்சம் என்று நம்புகின்றனர். ஒருவர் தமிழர் என்றால், அவர் தமிழ்த் தேசியத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சிங்களத் தேசியமும் அதையே எதிர்பார்க்கின்றது. மேற்குலக நாடுகள் இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டால், நாட்டுப்பற்று கோஷங்கள் மேலெழுகின்றன. அரசுத் தலைவர்கள் மேற்குலகிற்கு சவால் விடும் பேச்சுகளை நிகழ்த்துகின்றனர். இது ஒரு வகையில் இலங்கையில் முன்னொருபோதும் காணப்படாத தோற்றப்பாடு தான். இருப்பினும் இன்றைய இலங்கை அரசு உண்மையிலேயே மேற்குல விரோத நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதா? பல தடவை அது வெறும் மேடைப் பேச்சு என்பது நிரூபணமாகின்றது.
இலங்கையர் சமூகம் முன்னரை விட அதிகமாக மேற்குலக மயப்படுத்தப் பட்டுள்ளது. உலகமயமாக்கல், நுகர்பொருள் கலாச்சாரம் என்பன அடித்தட்டு இலங்கைப் பிரஜையையும் பாதிக்கின்றது. மேற்குலகில் அறிமுகமாகும் புதிய நாகரீகம் அடுத்த நாளே இலங்கையின் இளையோரால் பின்பற்றப்படுகின்றது. இலங்கையின் கல்வி முறை இன்றும் கூட ஐரோப்பிய மையவாதக் கருத்துகளில் இருந்து விடுபடவில்லை. பிரபல தினசரிகள் மாணவர்களுக்கு பொது அறிவைப் போதிக்கும் விசேட பதிப்புகளை வெளியிடுகின்றன. அதில் கூட விஞ்ஞான கண்டுபிடிப்புகள் யாவும் ஐரோப்பியரின் மூளையில் உதித்ததாகவே எழுதப்பட்டுள்ளது. இதனால் இளம் தலைமுறையினரிடையே, மேற்குலக மோகம் அதிகமாக காணப்படுகின்றது. ஆங்கில மொழியைக் கூட மேற்குலக வாழ்க்கை முறைக்கான கருவியாக கருதுகின்றனர். மேற்குலக செல்வாக்கை அரசு எதிர்க்கவில்லை. பல்கலைக்கழக கல்வியை தனியாரிடம் ஒப்படைக்க அரசே உத்தேசித்து வருகின்றது. வெகு விரைவில் அமெரிக்க, பிரிட்டிஷ் கல்லூரிகள் தமது கிளைகளை இலங்கையில் திறக்கவிருக்கின்றன.
ஒரு காலத்தில் இலங்கையின் மேல்தட்டு வர்க்கத்தினர் மட்டுமே ஆங்கிலம் பேசி வந்த காலம் மலையேறி விட்டது. உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த பலர் ஆங்கில மொழிப் புலமை கொண்டோராக காணப்படுகின்றனர். கொழும்பு போன்ற பெரு நகரங்களில் அந்த விகிதாசாரம் அதிகம். இருப்பினும் யாழ்ப்பாணம் போன்ற போரினால் பின்தங்கியிருந்த மாவட்டங்களை சேர்ந்த மக்களும் பின்தொடர்கின்றனர். இலங்கையில் மொழிப்பிரச்சினை யுத்தத்திற்கு காரணம் என்றும் பேசப்பட்டது. தமிழ் மொழி மீது சிங்கள மொழி ஆதிக்கம் செலுத்துகின்றது. அவை இரண்டின் மீதும் ஆங்கில மொழி ஆதிக்கம் செலுத்துகின்றது. இன்றைய இலங்கையின் சோகம் என்னவெனில், மொழிப்பிரச்சினை குறித்து பலரும் பாராமுகமாக இருப்பது தான். சிங்களவரும், தமிழரும் ஒருவரின் மொழியை மற்றவர் படிப்பதே இனப்பிரச்சினைக்கு தீர்வாக கருதப்பட்டது. ஆனால் இது காலம் பிந்தி வந்த ஞானம் போலத் தெரிகின்றது.
இன்றுள்ள அரசு சிங்களவர்கள் தமிழ் மொழி படிக்க ஊக்குவிக்கின்றது. ஆனால் அது கூட, மேற்குலக கலாச்சார ஆதிக்கத்தில் இருந்து தப்பும் தந்திரமாகவும் இருக்கலாம். ஏனெனில் உலகமயமாக்கலின் பயனாக தவிர்க்கவியலாது ஆங்கிலத்தின் ஆதிக்கம் பரவி வருகின்றது. ஐரோப்பிய நாடுகள் கூட ஒரு காலத்தில் அடக்கிய சிறுபான்மையின மொழிகளை ஊக்குவிக்கின்றன. தனியார் நிறுவனமொன்றில் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் எடுப்பது, சரளமாக ஆங்கிலம் பேசுபவர்களுக்கு மட்டுமே கிட்டும் பாக்கியம். சிங்களம் அல்லது தமிழ் மட்டுமே தெரிந்த பட்டதாரிகள், பல வருட சேவையின் பின்னரே நாற்பதாயிரம் ரூபாய் எடுக்கிறார்கள். அத்தகைய சூழலில் தமிழ் மட்டுமல்ல, பெரும்பான்மை மொழியான சிங்களம் கூட தனது இருப்புக்காக போராட வேண்டும்.
இருபது வருடங்களுக்கு முன்பு இருந்ததைப் போலவே, சிங்களம், தமிழ் மொழிகளில் கல்வி கற்றவர்கள் அரசாங்க உத்தியோகத்தை நம்பியிருக்க வேண்டிய நிலை. இலங்கையில் இன்றைக்கும் அரசாங்க தொழில் துறை இளம் பட்டதாரிகளை ஈர்க்கின்றது. பணி நிரந்தரம், வருடாந்த ஊதிய உயர்வு, நிச்சயிக்கப்பட்ட போனஸ், ஒழுங்கான ஓய்வூதியம், வேறு பல தொழிலாளர் நலன் பேணும் காப்புறுதிகள். அரசாங்க ஊழியருக்கு மட்டுமே கிட்டும் அதிர்ஷ்டம் அவை. இதையெல்லாம் தனியார் துறையில் எதிர்பார்க்க முடியாது. அரசு இன்றைக்கும் இலங்கையில் மிகப் பெரிய தொழில் வழங்குனர். இருப்பினும் இனப்பிரச்சினைக்கு மூல காரணமான "சிங்களவருக்கு முன்னுரிமை" கொடுக்கும் கொள்கை இன்றைக்கும் தொடர்கின்றது. அதன் அர்த்தம் தமிழர்களுக்கு அரசாங்க உத்தியோகம் கிடையாது என்பதல்ல. கொழும்பில் அரச திணைக்கள தலைமைக் காரியாலயங்களில் கூட தமிழ் மேலதிகாரிகள் பணி புரிகின்றனர். அதே பதவிக்கு பெரும்பான்மை இனத்தவருடன் போட்டி போடும் தமிழர் அதிக தகைமை கொண்டவராக இருப்பார். சில நேரம் பதவியை தக்க வைத்துக் கொள்வதே ஒரு போராட்டமாக இருக்கும். அதே நேரம் ஒரு சிங்கள அதிகாரி இலகுவாக அந்தப் பதவிக்கு வந்திருப்பார்.
முன்னொரு காலத்தில் அரசாங்க உத்தியோகத்திற்கு சிங்களம் படிக்க வேண்டிய கட்டாய சட்டம் வந்த பொழுது, தமிழர்கள் எதிர்த்தார்கள். குறிப்பாக நடுத்தர வர்க்க தமிழர்கள் இந்த சட்டத்தால் தமது உத்தியோகம் பறிபோவதை உணர்ந்தார்கள். ஐம்பதுகளில் மறைந்த பிரதமர் பண்டாரநாயக்க கொண்டு வந்த "சிங்களம் மட்டும்" சட்டம் இனப்பிரச்சினையின் மூலவேர் என்று பலர் கருதுகின்றனர். அன்று உத்தியோகம் பார்த்த தமிழர்கள் யாரும் தமிழ் மொழியை அரச கரும மொழியாக பயன்படுத்தவில்லை. அதற்கான கோரிக்கையையும் அவர்கள் முன்வைக்கவில்லை. மாறாக காலனியாதிக்க பிரிட்டிஷாரின் ஆங்கிலம் மட்டுமே அரச கரும மொழியாக இருந்தது. சிங்களம் மட்டும் சட்டம் பின்னர் வட கிழக்கு மாகாணங்களில் தமிழில் அரச கருமமாற்ற வழிவகுத்தது. அன்று சிங்களம் படிக்க மாட்டோம் என்று அடம் பிடித்த கொழும்பு வாழ் உத்தியோகத்தர்கள் பலர், அவுஸ்திரேலியா, அமெரிக்கா என்று புலம் பெயர்ந்து விட்டார்கள். இன்று கொழும்பில் மேலதிகாரிகளாக பணியாற்றும் தமிழர்கள் அனைவரும் மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே நேரம் தீவிரமாக தமிழ் தேசியம் பேசுவதையும் காணக் கூடியதாக உள்ளது.
ஒரு காலத்தில் சிங்களவர்கள் தமிழ் பேசப் பழகுவதும், தமிழர்கள் சிங்களம் கற்பதும் அரிதாக இருந்தது. அன்றிருந்த சிங்கள இனவாதிகள் தமிழை இரண்டாவது மொழியாக கற்பதை கற்பனை செய்து கூடப் பார்க்கவில்லை. தமிழ் இனவாதிகளும் இரண்டாவது மொழியாக ஆங்கிலம் இருக்கும் பொழுது எதற்கு சிங்களம் எனக் கருதினார்கள். இன்று நிலைமை சிறிது மாறியுள்ளது. தமிழருடன் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ள, அல்லது எல்லையோர கிராமங்களை சேர்ந்த சிங்களவர்கள் பலர் சரளமாக தமிழ் பேசுகின்றனர். நூறு வீத தமிழ் மாவட்டமான யாழ்ப்பாணத்திலும் சிங்களம் படிக்கிறார்கள். பிற தமிழ் மாவட்டங்களை சேர்ந்த தமிழர்கள் பலர் ஓரளவுக்கேனும் சிங்களம் பேசுகின்றனர். கொழும்பு வாழ் தமிழர்கள் பலர் சிங்களத்தை முதன் மொழியாக கொண்டு கல்வி கற்கின்றனர். அனேகமாக தொழில் வாய்ப்புகளுக்காக அப்படிச் செய்கின்றனர். அவர்களில் பலர் சிங்களத்தை தாய்மொழியாக கொண்டவர்களைப் போல சரளமாக பேசுகின்றனர். இருப்பினும் சிங்களவருக்கே முன்னுரிமை கொடுக்கும் அரசின் பாரபட்சமான நடவடிக்கை காரணமாக பாதிக்கப்படுகின்றனர். இன்று கொழும்பு வாழ் தமிழர்கள் மத்தியில் தமிழ் தேசியத்திற்கு ஆதரவான போக்கு காணப்படுகின்றது.
(தொடரும்)
(ஐரோப்பாவில் இருந்து வெளிவரும் சமூக- அரசியல் சஞ்சிகையான "முன்னணி" க்காக எழுதப்பட்ட கட்டுரை)
(ஐரோப்பாவில் இருந்து வெளிவரும் சமூக- அரசியல் சஞ்சிகையான "முன்னணி" க்காக எழுதப்பட்ட கட்டுரை)
1 comment:
///இன்றுள்ள அரசு சிங்களவர்கள் தமிழ் மொழி படிக்க ஊக்குவிக்கின்றது. /////
நான் சில காரியாலங்களுக்கு சென்ற போது, அங்குள்ள சிங்களப் பெண்கள் சரலமாக தமிழில் எழுதுவதை பார்த்டேன். அவர்கள் தமிழ் படிக்க ஊக்குவிக்கப் படுகிறார்கள்.அதை பார்த்து நம் மக்கள் பயப்படிகிறார்கள். தமிழை அடிப்படையாக வைத்துக் கிடைக்கும் ஒரு சில தொழிலிம் கூட அவர்களுக்கே போய் விடுமோ என......
Post a Comment